Saturday, 22 July 2017

மரமானது அதன் கனியினால் அறியப்படும்!





    இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே
    வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனி கொடாத
    மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.      
                   - புதிய ஏற்பாடு (மத்தேயு 3:10)
                       -•-

  இரண்டுவகை மான்களும் ஒரே மாதிரியான புல்லை மேய்ந்தன.
  ஒரே நீர்த்துறையிலிருந்து தண்ணீர் அருந்தின. ஒன்றிலிருந்து சாணம்
  கிடைத்தது, மற்றொன்றிலிருந்து கஸ்தூரி.
                  - சூஃபி ஞானி ஜலாலுதின் ரூமி
                       -•-

நீங்கள் உண்ணும் உணவு எவற்றைச் செய்வதற்கு, அல்லது சாதிப்பதற்கு
உங்களைத் தகுதி யாக்குகிறது?

உங்கள்  தோட்டத்தில் பல மரங்கள் உள்ளன. மாமரம், பலாமரம், வேப்பமரம்,
எல்லாம் உள்ளன. அவையனைத்தும் ஒரே நிலத்தின் சத்துக்களைக்கொண்டும்,
யாவற்றுக்கும் பொதுவாகப்பெய்யும் மழைநீரைக்கொண்டும்தான் வளர்கின்றன,
அவைகளுக்குரிய காலத்தில் பூக்கின்றன,  பிஞ்சுகளை விடுகின்றன; பிஞ்சுகள்
காய்களாகி  முற்றிக் கனிகளாகின்றன.  ஆனால், மாங்கனிகளும், பலாச்சுளை
களும்  தேன் போல இனிக்கின்றன! ஆனால், வேப்பங்கனிகள் கொத்துக் கொத்
தாக  பழுத்துக்  குலுங்கினாலும்  கசக்கவே செய்கின்றன,  இந்த வித்தியாசம்
எவ்வாறு  சாத்தியமாகிறது?  தோட்டத்தில்  உள்ள  எல்லா மரங்களும் ஒரே
நிலத்தில் அடங்கியுள்ள சத்துக்களையும், பொதுவாகப்பெய்யும் மழைநீரையும்
உறிஞ்சி தான் வளர்கின்றன!  ஆனால்,  ஒரு மரம் இனிப்பான  கனிகளையும்,
இன்னொரு மரம் கசப்பான கனிகளையும் விளைவிப்பது எவ்வாறு?

"இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல!" என்று நம்மில் சில அதிபுத்திசாலிகள்
சொல்லக்கூடும்!   அதாவது,  "மாமரம்  மாங்கனிகளைத் தான்  தரும்,  அது
அவ்வாறு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது,  இனிய  மாங்கனிகளைத் தருவது  
மாமரத்தின் இயல்பு! மாமரத்தில், கசப்பான வேப்பங்கனிகள் தோன்றாது! அதே
போல,  வேப்பமரத்தில்  இனிப்பான  மாங்கனிகள் தோன்றாது!"    என்பதாகச்
சொல்லிவிட்டு அவர்கள் தங்கள் வழக்கமானச் சுற்றில் மூழ்கிவிடுவர்!

ஆனால்,  இங்கு நாம் அக்கறைப்படுவது மரங்களின் இயல்பு பற்றியல்லாமல்
மனிதர்களின் இயல்பு பற்றியே! நாம் ஒரு மரத்தை பார்த்த மாத்திரத்திலேயே
இது 'மாமரம்' எனச்சொல்லிவிடலாம்; அம்மரம் மாங்காய்களைக் கொண்டிருந்
தாலும்,அல்லது கொண்டிராவிட்டாலும். ஏனெனில், ஏற்கனவே நாம் மாங்காய்
களையும், மாங்கனிகளையும் அம்மரத்தில் பார்த்திருப்பதினால்,அக்கனிகளைக்
கொண்டு அதை மாமரம் என இனம் பிரித்து அறிந்துவைத்திருக்கிறோம்!

இவ்வாறே,   மனிதர்களைப் பார்த்ததுமே  அவர்களின்  உருவத்தை  வைத்து
'மனிதர்கள்'  என நாம் இனம் கண்டுகொள்கிறோம்!  அவர்களுடைய  கனிகள்
எத்தகையவை? அதாவது, மனிதனுக்கேயுரிய இயல்பு அவர்களிடம் உள்ளதா?
அல்லது,  அவர்கள் மலட்டு மரங்களைப்போல் 'மலட்டு' மனிதர்களா? என்பது
போன்ற   மையமான  அம்சங்கள்   எதையும்   அறியாமலேயே  பொதுவாக
எல்லோரையும் நாம் மனிதர்கள் என கணக்கில் கொண்டுவிடுகிறோம்; அதில்
எவ்வித உறுத்தலுமின்றி,  நம்மையும் நாம் 'மனிதர்கள்' என்றே கருதிக்கொள்
கிறோம்! இன்னும் ஒரு படி மேலே சென்று மனிதர்களில் சிறந்த முன்-மாதிரி
யாகத்  திகழ்வதாக  நம்மை எண்ணிக்கொள்ளவும் செய்கிறோம்!  இத்தகைய
அணுகுமுறை மிகவும் மேலோட்டமானது மட்டுமல்ல,பெரிதும் ஆபத்தானதும்
ஆகும்!

நம்மையும்,  பிறரையும்  'மனிதர்கள்' என்று நாம் கருதிக்கொள்வதற்கு  சமூக,
கலாச்சார,  பொருளாதார,  அரசியல் ரீதியான பல அடிப்படைகளையும், மதிப்
பீடுகளையும்,  அளவுகோல்களையும்,  மரபுகளையும், நெடிய வரலாற்றையும்
நாம்  கொண்டிருக்கிறோம்.  ஆனால்,  அவையெதுவும்  உண்மையான மனித
இயல்பைத் தொடுவதுமில்லை,  எவ்வகையிலும்  அவை  மனித இயல்புடன்
தொடர்பு  கொண்டவையும் அல்ல!  உண்மையில்  "தான் யார்?",  "எத்தகைய
மெய்ம்மை?"   என்பது  பற்றிய   ஆழமான அறிவும்,   புரிதலும்  இல்லாமல்
மனிதனால் வாழப்படும் வாழ்க்கை எவ்வளவு மேலோட்டமானதாயும்,  அர்த்த
மற்றதாயும் இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மகிழ்ச்சி-
புள்ளி (Happiness- quotient) யைக் கொண்டு,  அதாவது  உண்மையில்
நாம்  எவ்வளவு  மகிழ்ச்சியாக  இருக்கிறோம்  என்பதைக் கொண்டு  அறிந்து
கொள்ளலாம்!

மனிதன்  தன்னைப்பற்றிச் சிறிதும்  அறியாதவனாய் வாழ்வானெனில், அவன்
ஒரு விலங்கைப் போலவே  வாழ்வான்!   மனிதன்   தன்னைப்பற்றித் தானே
அல்லது  சமூகத்துடன் சேர்ந்து  உருவாக்கிய புனைவுகளை, கற்பிதங்களைக்
கொண்டு  வாழ்வானெனில்,  அவன்  ஒரு விலங்கைப்போலவும் அல்லாமல்,
உண்மையான மனிதனைப்போலவும் அல்லாமல், மிகவும் பொய்யான இட்டுக்
கட்டிய  வாழ்க்கையையே வாழ்வான்!  மனிதன்  தன்னைப்பற்றிய  ஆழமான
புரிதலை அடைவானெனில்,  அதற்கேற்ப அவன் வாழ்க்கையை உண்மையாக
வும், முழு நிறைவோடும், குன்றாத மகிழ்ச்சியோடும் வாழ்வான்!

இதுதான் மனிதனையும் வாழ்க்கையையும் ஒன்றிணைக்கும் அல்லது சமப்
படுத்தும் சமன்பாடு:

                தன்னையறிதல் = வாழ்க்கை
         (மனிதனின் தன்னையறிதலுக்கு நேர்விகிதத்தில் வாழ்க்கையின்
         ஆழமும் முழுமையும் அமைகிறது)

ஆம்,வாழ்க்கை என்றாலே அது யாருடையது, எந்த ஜீவராசியுடையது என்பது
குறிப்பிடப்படாமல் அணுகவோ, பேசவோ இயலாது!  ஏனெனில், விலங்குஜீவி
களின்  வாழ்க்கை வேறு, சராசரி மனிதஜீவிகளின் வாழ்க்கை வேறு,  ஞானம்
அடைந்த மனிதஜீவிகளின் வாழ்க்கை வேறு! இம்மூன்று நிலைகளுக்குமுள்ள
வேறுபாடு முறையே உணர்வு நிலையிலுள்ள வித்தியாசமே ஆகும். விலங்கு
ஜீவிகள்  சுய-உணர்வற்றவை;  சராசரி மனிதஜீவிகள் சுய-உணர்வுடன் தேங்கி
விட்டவர்கள்; ஞானிகள் என்போர் முழு-உணர்வை அடைந்தவராவர்!

நாம்  உண்ணும் உணவு எதைச் செய்வதற்கு, அல்லது சாதிப்பதற்கு நம்மைத்
தகுதியாக்குகிறது?   இக்கேள்வி,  உணவைப் பற்றியதோ, அல்லது, உணவை
வைத்து மனிதர்களை விமர்சிப்பதோ அல்ல.  உணவு என்பது வெறும் கருவி,
அல்லது எரிபொருள் போன்றது மட்டுமே.  உடலின்  வளர்ச்சியும் ஆரோக்கிய
மும், முக்கியமாக நாம் காரியமாற்றுவதற்குத் தேவையானசக்தியும் உணவில்
தான் அடங்கியுள்ளது. ஆனால்,  நாம் அக்கருவியை, எரிபொருளை எவ்வாறு
பயன்படுத்துகிறோம்,    எத்தகைய  விளைபொருட்களை,  வெளிப்பாடுகளை
வெளிக் கொணரப்  பயன்படுத்துகிறோம்   என்பதையும்;  அவ்வெளிப்பாடுகள்,
விளைபொருட்கள்  நமக்கும், நம் சக-மனிதர்களுக்கும் நன்மைகளைத் தருகின்
றனவா,  அல்லது,   தீமைகளைச் செய்கின்றனவா   என்பதையும்  பற்றியதே
இக்கேள்வி!

மனிதர்கள்  ஒரேவித  உணவையே உண்டாலும், சிலரது வழியே நன்மைகள்
எனும்  கனிகளும், சிலரது வழியே தீமைகள் எனும் கனிகளும் விளைவதற்கு
உணவு  காரணம் அல்ல;  மாறாக,  அவரவரது  இயல்பே  காரணம்  ஆகும்!
மனிதர்களை  நல்லவர் எனவும், கெட்டவர் எனவும் இனம்பிரித்துக் காண்பது
எளிது;  பொதுவாக, பிறர்க்குத் தீமைகளைச் செய்யும் மனிதனை  கெட்டவன்
என்று சமுதாயம் அழைக்கிறது.  ஆனால்,  தன்னையறியாமலேயே  தனக்கே
தீமைகளைச் செய்துகொள்ளும் ஒருவனை என்னவென்று சொல்வது? ஆகவே,
செயல்களை வைத்து மனிதர்களை நல்லவர்,கெட்டவர் என்று இனம்காண்பது
மனிதனின் மையத்தைத் தொடாது!

இவ்வுலகம் தன்னையறியாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது!  மேற்புறத்தில்
நன்மைகள் எனத்தெரிவது ஆழத்தில் தீமையில், அஞ்ஞானத்தில், அறியாமை
யில்  வேர்கொண்டிருக்கலாம்;  ஆகவே, முடிவில் அவை தீமைக்கு ஏதுவாக
அமையக்கூடும்!   "நரகத்திற்கான பாதை நல்லெண்ணங்களால் அமைக்கப்படு
கிறது!" என்றொரு பழமொழி  உள்ளது! நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள்
இரண்டுமே எண்ணங்கள் தான்; எண்ணங்கள் சந்தர்ப்பவாதிகளைப்போன்றவை!
ஆகவே, எண்ணங்களுக்கு அடிப்படையான உணர்வு நிலைதான் உண்மையான
குற்றவாளி ஆகும்!  ஆகவே, மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற
அடிப்படையைக் கொண்டு  காண்பது தீர்வைத் தராது!  நல்லவன், கெட்டவன்
இருவரும்  ஒரே போலி நாணயத்தின்  இரண்டு பக்கங்களே ஆவர்!  மனிதன்
அசலானவனா,  போலியானவனா என்பதைக்கண்டுபிடிக்க முறையே அவனது
உணர்வின் தன்மையை,அதாவது ஒருவன் உணர்வுள்ளவனா,உணர்வற்றவனா
என்பதைக்  கொண்டு மட்டுமே முடிவு செய்யமுடியும்!  ஒருவனது  உணர்வு
நிலையில்  உள்ள குற்றம்,  அதாவது "உணர்வுக் குறைவு"  தான் அனைத்துத்
தீமைகளுக்கும் ஊற்றுக்கண் ஆகும்!

ஆம், இப்பூமி,  உணர்வு இருந்தும் உணர்வுகொள்ள விழையாத மனிதர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டு  அழிவின்  விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருகிறது! மனித
மனமானது  மாசுக்களால் நிறைந்திருப்பது போல புவியின் சூழலையும் மாசுக்
களால்  நிறைத்து விட்டனர்!  மனிதன் தனது உணர்வை அதற்குரிய அசலான
பணியில் பிரயோகிக்காவிடில் அவன் பிறவியெடுத்ததற்கான நற்கனியை ஒரு
போதும் ஈன்றெடுக்க மாட்டான்! மெய்ம்மையை அறிவதுதான் மனிதன்  மேற்
கொள்ளவேண்டிய ஒரே வாழ்க்கைப்பணியும், ஆன்மீகப்பணியுமாகும்! உயரிய
ஞானம் தான் அந்த நற்கனி!  ஆனால்,  மனிதர்களின்  பிரயாசை  முழுவதும்
உண்மையை, மெய்ம்மையைத் தவிர  உலகப் பொருட்களையும்,  விவகாரங்
களையும் பற்றியதாக மட்டுமே உள்ளது!

"என்ன செய்வது,  எங்களால் எங்களுடைய மட்டுப்பாடுகளைக் கடக்க முடிய
வில்லையே?  பாதை  இதுதான் என்று தெரிந்தாலும் அதில் பயணிக்க இயல
வில்லையே?"  என்பதாக பலர் ஒப்புக்காக ஒப்பாரி வைக்கின்றனர்! ஏனெனில்,
உண்மையிலேயே அவர்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின்
மட்டுப்பாட்டை உணர்ந்திருப்பின், அதைக்கடப்பதற்குரிய ஆர்வமும்,ஆற்றலும்
தங்களுக்குள்ளேயே இருப்பதை அவர்கள் பொக்கிஷப் புதையலை கண்டடைந்
தது போல  அதிசயித்து  அகமகிழ்வுடன் உணர்ந்திருப்பார்கள்! ஆனால், அவர்
களுடைய  துரதிருஷ்டம், அவர்கள் வாழ்க்கையை நேசிக்கவில்லை;  மாறாக,
அவர்கள்  தங்களையும்,  தங்களது விருப்பங்களையும் மட்டுமே நேசிக்கிறவர்
களாகச் சுருங்கிப் போயிருக்கிறார்கள்!

முழுமையாகத் தன்னை அர்ப்பணிப்பதற்கு
முழுமையாகத் தன்னை அளிப்பதற்கு
முழுமையாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு
உரிய ஒன்றை கண்டடையாதவனின் வாழ்வு
வீணிலும் வீணே வீணே வீணே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 19-07-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...