
இவை மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் மஸ்னவியிலிருந்து
தேர்ந்தெடுத்த ஞானப்பொக்கிஷங்கள்!
•
6. ஒவ்வொருவரும் தத்தம் கூற்றுப்படி என்னுடன் நட்புறவாடினார்கள்,
ஆனால் எனக்குள்ளிருக்கும் இரகசியத்தை யாருமே தேடவில்லை.
•
8. உடல், ஆன்மாவைக்கொண்டும், ஆன்மா, உடலைக்கொண்டும்
மறைந்திருக்கவில்லை. ஆனால், யாருக்கும் ஆன்மாவைக்காணும்
வழக்கம் கிடையாது.
•
9. புல்லாங்குழலின் இவ்வொலி காற்றல்ல, தீயாகும். எதில் இந்த தீ
இல்லையோ அது இல்லாமைக்கு சமம்.
•
22. மீனைத் தவிர மற்றவர்களுக்கு தண்ணீர் திகட்டத்தான் செய்யும்.
வேலையின்றி இருப்பவர்களுக்கு அவர்களது நாட்கள் வீணானதேயாகும்.
•
23. குறைபாடுள்ளவன் முழுமையானவனின் நிலையை அறிந்து கொள்ள
முடியாது. எனவே பேச்சைக் குறைத்துக் கொள்.
•
25. மது நம்மால் மயக்கமுற்றது. நாம் மதுவால் அல்ல. உடல் நமக்காக
உண்டானது நாம் அதற்காக அல்ல.
•
26. சத்தியத்தை செவியுறும் வல்லமை எல்லோருக்கும் கிடைத்துவிடுவ
தில்லை. அத்திப்பழம் எல்லா அற்பப்பறவைகளுக்கும் ஆகாரம் ஆகாது.
•
27. மகனே, சிறையை உடைத்தெறி, விடுதலையை பெறு. பொன்னுக்கும்
வெள்ளிக்கும் நீ எதுவரை அடைபட்டு கிடப்பாய்?
•
28. கடலை நீ ஒரு பாத்திரத்தில் பிடித்தால் எவ்வளவு வரும்? அது ஒரு
நாளைக்கு போதுமானதாக இருக்குமா?
•
29. பேராசைக்காரர்களின் கண்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை.
சிப்பி மன நிறைவு அடையாதவரை முத்தால் அது நிரம்புவதில்லை.
•
31. மகிழ்ச்சியாக இரு, நமது நல்ல கிறுக்கு பிடித்த காதலே! நமது அனைத்து
நோய்களின் மருத்துவரே.
•
32. நமது அகந்தை மற்றும் பதவி மோகத்தின் மருந்தே! நீயே நமது
பிளேட்டோ, நீயே நமது அரிஸ்டாடில்.
•
72. மரணம் வரும்போது மருத்துவன் முட்டாளாகி விடுகிறான். மருந்து பலன்
அளிப்பதிலிருந்து வழி தவறி விடுகிறது.
•
272. மயிலின் இறகே அதற்கு விரோதியாகிவிடுகிறது.
•
303. பலவிதமான திறமைகள் பெற்றிருந்தும் கூட மூஸா நபிக்கு அந்த கருத்து
புலப்படவில்லை.நீயும் சிறகின்றி பறக்க முயலாதே.
தெளிவுரை: . . . ஆகவே எதுவும் அறிந்து கொள்ளாமலேயே, பறப்பதற்கு சிறகு
இல்லாமலேயே, பறக்க முயலாதே. அறிந்து கொள்ள முடியாத ஞானத்தை
மறுத்து பேசாதே.
•
304. அவன் ஒரு சிகப்பு ரோஜா, அதை நீ ரத்தம் என்று கூறி விடாதே. அவன்
அறிவால் மயங்கியுள்ளான். அவனை நீ பைத்தியம் என்று கருதிவிடாதே.
•
[ தாங்களும் அவர்களைப்போன்றவர்களே என்று நினைத்தல் ]
340. தவறான ஊகத்தால் அவர்கள் அன்பியாக்களுடனும் சரிசமமாகி நின்று
விட்டுள்ளார்கள். அதேபோல இறைநேசர்களுடனும் சரிசமமாகி
நிற்கிறார்கள்.
•
341. அவர்கள் சொல்கிறார்கள் - அவர்களும் (இறைநேசர்கள்) மனிதர்கள்,
நாமும் மனிதர்கள். நாம் இருவருமே உறங்குவதற்கும் உண்ணுவதற்கும்
கட்டுப்பட்டு இருக்கின்றோம்.
•
342. அவர்கள் இருவருக்கிடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதை
அவர்களுடைய குருட்டுத்தனத்தால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
•
343. தேனியும் குளவியும் ஒரே இடத்தில் புசித்தாலும் ஒன்று கொட்டுகிறது.
ஒன்று தேனை சேகரிக்கிறது.
•
344. இரண்டுவகை மான்களும் ஒரே மாதிரியான புல்லை மேய்ந்தன. ஒரே
நீர்த்துறையிலிருந்து தண்ணீர் அருந்தின. ஒன்றிலிருந்து சாணம்
கிடைத்தது, மற்றொன்றிலிருந்து கஸ்தூரி.
348. இவன் சாப்பிட்டால் முற்றிலும் கருமித்தனமும் பொறாமையும் பிறக்கும்.
அவர் ((இறைநேசர்) சாப்பிட்டால் அனைத்துமே இறையொளியாய்
பரிணமிக்கும்.
•
472. எங்கள் இறைவா! உலகிலே லட்சக்கணக்கான வலைகளும்,
தானியங்களும் இருக்கின்றன. நாங்களோ பேராசைப்பிடித்தவர்களாய்ப்
பசி மிகுந்தவர்களாய் இருக்கின்றோம்.
473. நாம் ஒவ்வொரு விநாடியும் புதுப்புது வலையிலே சிக்குண்டு
கிடக்கிறோம். நாம் வல்லூறாக அல்லது அதிசய பறவையான சீமூர்க்
ஆகத்தான் மாற வேண்டும்.
•
480. எந்த எலியும் நமது கோணியிலிருந்து கோதுமையை திருடவில்லை
என்றால் நாற்பதாண்டு கால நற்செயல்கள் என்ன ஆகிவிட்டன?
தெளிவுரை:
நாற்பதாண்டுகள் என்பது ஒரு காலத்தை ( கால அளவை)`குறிக்கும்.
மனிதனின் நாற்பதாண்டுகள் வாலிப பருவத்திற்குடையது. அதில் தான்
அலட்சியத்தன்மையும், அக்கறையின்மையும் குடி கொண்டு இருக்கும்.
நாற்பதாண்டுகளுக்கு பின்னரே அவனுக்கு தன்னுணர்வு பிறக்கின்றது.
அப்போது அவன் தன் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறான். அங்கே
திருடன் ஒருவன் அமர்ந்து நன்னெறி சுவடுகளை எல்லாம் அழித்து
வருவதைக் காண்கிறான்.
•
உறக்கம் என்பது மரணத்தின் சகோதரி - ஹதீஸ்
•
496. மெய்ஞானியர்களான அவர்கள் பேராசை, மனோ இச்சை, மனகலக்கம்
ஆகியவற்றிலிருந்து விடுபட்டு விட்டவர்கள். வலையையும், கூண்டையும்
விட்டு விடுதலையாகிவிட்ட பறவையை போல.
•
515. விழிப்புடன் (சாதாரண பகல் விழிப்பு} இருப்பவன் அதிக உறக்கத்தில்
இருக்கின்றான். அவனுடைய விழிப்பு உறக்கத்தைவிட தாழ்ந்தது.
தெளிவுரை:
உலக விவகாரங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருப்பவன் உலக
ஆசாபாசங்களை மனதார ஆதரிப்பவன் உண்மையில் விழித்திருந்தாலும்
அவன் இறைவனை மறந்து உழல்வதால் அவன் உறக்கத்தில் இருப்பவனே
யாகும். அவனது அந்த விழிப்புநிலை உறக்கத்தைவிட கீழ்த்தரமானதாகும்.
•
517. நம் உயிர் இறைவனின் விஷயத்தில் விழிப்புடனில்லை என்றால் நமது
விழிப்புநிலை சிறைக்கூட விழிப்பைப் போன்றது.
தெளிவுரை:
இப்பிரபஞ்ச விழிப்புநிலை, இறைவனை தவிர்த்துவிட்டு, வெறும் உலகத்
தொடர்பால் நிறைந்திருந்தால் உண்மையில் அது ஒரு சிறைக்கூடமாகும்,
விழிப்பாகாது. உறவுகளும், தொடர்புகளும் உண்மையில் விலங்கு
போன்றவை. நாம் அதில் கைதிகளே.
•
518. உயிரை நாள் முழுக்க எண்ணங்களின் நசிவும், லாப நஷ்டத்தின்
கவலைகளும், இழத்தலின் பயமும் தான் ஆட்கொண்டிருக்கிறது.
•
539. வழியிலே (ஆன்மீகப் பாதையிலே) இதை விட கடினமான கணவாய்
எதுவும் கிடையாது. பொறாமை இல்லாத மனிதன் பாக்கியவான்.
தெளிவுரை:
ஆன்மீகப் பாதையிலே பொறாமையை விட கடினமான ஒரு கணவாய்
எதுவுமே கிடையாது. யாருடன் பொறாமை இணையவில்லையோ அவன்
மிகவும் பாக்கியசாலி என்றே கருத வேண்டும். ஏனெனில், இப்பாதையிலே
பலவிதமான இடர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட ஆபத்தான,
மிகவும் கடினமான ஒன்று இருக்கிறதென்றால் அது பொறாமை தான்.
•
641. உயிரிலும் மனதிலும் அந்த உற்சாகத்திற்குரிய ஆற்றல் இல்லை.யாரிடம்
சொல்வேன்? உலகிலே யாரிடமும் செவி இல்லை.
தெளிவுரை:
இறையாற்றலின் அறிகுறிகள் தென்பட்டதும் அதனை உற்சாகத்துடன்
ஏற்றுக்கொண்டு தாங்கக்கூடிய ஆற்றல் யாரிடமும் கிடையாது. இதை
யாரிடம் வெளிப்படுத்துவேன்? உலகிலே அதை செவியேற்றுக் கொள்ளக்
கூடிய செவி யாரிடமும் இல்லையே!
•
642. எங்கே அதற்குரிய செவி இருந்ததோ உற்சாகத்தின் காரணத்தால்
அது கண்களாகி விட்டன. எங்கே கற்கள் இருந்தனவோ அவை
மாணிக்கக் கல்லாக மாறிவிட்டன.
•
652. இப்பிரபஞ்சம் உன் கண்ணெதிரே மிகப்பெரியதாகவும் விசாலமான
தாகவும் தென்பட்டாலும், இறை ஆற்றலுக்கு முன்னால் அது ஒரு
அணுவுக்கும் சமமாகாது.
தெளிவுரை:
இறைவனை அறியாதவன் , அறிந்து கொள்ள முயலாதவன் இந்த
உலகத்தையே மிகப் பெரியது என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால்,
இது இறைவனுக்கு முன்னால் ஒரு அணுவுக்கும் மிகச் சிறியது என்பதை
அறிய மாட்டான்.
-•-
இந்த ஞான மொழிகள் யாவும் மஸ்னவி ஷரீப் முதல் பாகத்திலிருந்து
எடுக்கப்பட்டவை.
( மஸ்னவி ஷரீப் மொத்தம் நான்கு பாகங்கள்; விலை ரூ.1900/.)
மூலம் : மௌலானா ஜலாலுத்தீன் ரூமி
தமிழாக்கம் : நரியம்பட்டு M.A. ஸலாம்
வெளியீடு : ஃபஹீமிய்யா ட்ரஸ்ட்
-•-
வலைப்பதிவு வாசகர்களுக்கு வழங்குவது :மா.கணேசன்/ நெய்வேலி/ 23-07-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment