சிறப்புரை
புதிய மானுடத்திற்கான புதிய ஆன்மீகம்
(விசார மார்க்கம் பற்றிய அறிமுகம்)
பத்துக் கட்டளைகள்-அவை
பழசாய்ப் போனாலும்
பத்திரமாக உள்ளன!
புதிய கட்டளைகள்-அவற்றை
யாரும் தொடாததால்
அவை புத்தம் புதிதாகவே உள்ளன!
அற நெறி போதனைகள் யாவும்
அஞ்ஞானிகளுக்கு!
ஆன்மீகப் பயிற்சிகள் யாவும்
குரங்குகளுக்கு!
ஏனெனில் இவை எதுவும்
உங்களை உணர்வுக்கு
கொண்டு வராது!
உங்களது உறக்கத்தை
உங்களைத் தவிர
வேறு யாரும் களைந்திட
முடியாது!
முதலாவதாகவும் முடிவாகவும்
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்:
இந்தப் பக்கத்தைப்
புரட்டுவதற்குள்
விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த நூற்றாண்டின் தலையாய கேள்வி, எது உண்மையான ஆன்மீகம்? என்பதாகத் தான் இருக்க முடியும். ஏனெனில், இன்றைய உலகில் ஆன்மீகம் என்ற பெயரில் மாபெரும் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்மீகம் என்பதும் ஒருவகை நுகர்வாக மாறிவிட்டுள்ளது.
தமது இதய பூர்வமான ஆர்வத்திற்கு வடிவம் கொடுத்திடும் செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து ஏதாவதொரு ஆன்மீக மார்க்கத்தில் சேர்ந்து கொண்டு அங்கு சொல்லப்படும் வேலைகளில்
ஈடுபடுவதன் வழியே மனிதர்கள் தங்கள் அகத்தின் உள்ளீடற்ற தன்மையை தற்காலிகமாக மறந்திருப்பதை ஆன்மீக நிலை எனக் காண்கின்றனர். மேலும், சக ஆன்மீக அங்கத்தினர்களுடன் இணைந்து சமூக சேவை செய்வது, மரக்கன்று நடுவது போன்றவை இந்த நூற்றாண்டின் ஆன்மீகச் செயல்பாடுகளாக ஆகியுள்ளன.
ஒரு குறிப்பிட்ட வகையில் மூச்சை உள்ளிழுப்பது, தேக்கி வைப்பது, பிறகு வெளியே விடுவது, அடுத்ததாக கண்களை மூடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரம் அப்படியே அமர்ந்திருப்பது எண்ணங்களை கவனிப்பது அல்லது விரட்டிக் காலி செய்வது ஆகிய மூச்சுப் பயிற்சி, தியானம், யோகம் போன்ற பயிற்சிகளை ஆன்மீகம் எனும் பெயரில் மேற்கொள்வது எதுவும் உண்மையான ஆன்மீகத்தில் சேராது. ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருவர் மூச்சுப் பயிற்சி செய்திடலாம். பிறகு, ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு கண்களை மூடிக் கொண்டோ, திறந்து கொண்டோ தியானம் செய்திடலாம். இன்னும் நவீன கால குருமார்கள் சொல்லிக் கொடுக்கும் அதி நவீன ‘விஞ்ஞானபூர்வமான’ பலவித பயிற்சிகளையும், ஒருவர் செய்திடலாம். ஆனால், ஆன்மீக ரீதியாக ஒரு சிறு மாற்றமும் விளையாது. ஏனெனில், ஆன்மீகம் என்பது யாதொரு பயிற்சிக்கும் வசப்படுகிற விஷயமல்ல.
மேலும், மனிதனிடமுள்ள உடல், மனம், எண்ணம்.... போன்ற எந்தக் கருவியும் ஆன்மீகத்திற்கு உதவிடாது. இக் கருவிகளைக் கொண்டு செய்யப்படும் காரியங்களை இக்கருவிகள் தமக்குத் தாமே சேவை செய்து கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டு விடும். ஆன்மீகத்திற்குரிய ஒரே கருவியும், அதைக் கொண்டு அடையக் கூடிய இலக்கும் ஆன்மா என்ற ஒன்று தானே தவிர வேறெதுவும் அல்ல.
ஆன்மீகம் என்பது ஆன்மாவைச் சார்ந்திருப்பது, ஆன்மாவைச் சேருவது, ஆன்மாவாய் மாறுவது என்பது தவிர வேறெதுவுமில்லை. ஆன்மாவை ஒருவர் அடையவேண்டுமெனில் உடல் மற்றும் மனம் ஆகியவற்றைக் கடந்து சென்றாக வேண்டும். கடந்து செல்லுதல் என்பது உடலின் தேவைகளால் ஆளப்படும் வாழ்க்கை மற்றும் மனதிற்கே உரிய புனைவு பூர்வமான வாழ்க்கை ஆகிய புதை சேற்றில் சிக்கிக் கொள்ளாமல் தனது சாரத்தை நோக்கிய தாவல் அல்லது பாய்ச்சலுக்கான சுருள்-பலகை (நல்ழ்ண்ய்ஞ்-ஆர்ஹழ்க்)யாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதைக் குறிக்கிறது.
முதலிடத்தில், ஆன்மா பற்றிய தவறான கோட்பாடுகளைக் களைவது அவசியம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்மா உள்ளது.
http://vichara.tk/
http://vichara.tk/