
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.
இது தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் அவர்களின்
"கோட்ஸ்டாண்ட் கவிதைகள்' தொகுதியில் இடம்பெற்ற ஒரு கவிதை யாகும்.
'இக்கவிதையை பெரும்பாலான வாசகர்கள் நிலையாமையின் துக்கமாகவே வாசித்திருக்கிறார்கள். சில மரணங்களுக்கு உதாரணமாகவும் இந்தக்
கவிதை காட்டப்பட்டுள்ளது.' என்பதாக ஷங்கர்ராமசுப்ரமணியன்-ன்,
"இல்லாமல் இருப்பதன் இனிமை" என்ற தலைப்பில், தமிழ் இந்து நாளிதழ்,
12.02.2017, ஞாயிறு அன்று வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நாம் இக்கவிதையை, வெறும் கவிதையாகப் பார்க்காமல், தத்துவ
சிந்தனைக்கான ஒரு பயிற்சியாக விரித்துப் பார்க்கப்போகிறோம். ஆகவே,
இந்தக்கட்டுரை,நகுலனின் கவிதைமீதான விமர்சனமோ,பொழிப்புரையோ
அல்ல என்பதை நினைவில் கொண்டு மேலே செல்வோம்.
"இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்." எனும் இக்
கவிதை வரி ஒற்றை வாக்கியம்தான் என்றாலும், நமது சிந்தனை வெளியில்
அது ஒரு பெரும் பிரபஞ்சமாக விரிவடையக்கூடியதாக உள்ளது.
இக்கவிதை வரி, இரண்டு கூற்றுகளின் இணைவாக உள்ளது. முதல் கூற்று, "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்று சொல்கிறது. ஆனால்,உண்மை
யில், நாம் இங்கு பூமிக்கு 'இருப்பதற்கென்றுதான் வருகிறோமா?' என்றால்,
ஆம், இல்லை; இரண்டும் தான் என்று சொல்லவேண்டும்! ஆம், சில காலம்
மட்டுமே இருப்பதற்காக வருகிறோம்! இல்லை, சாசுவதமாகவோ, நிரந்தர
மாகவோ இருப்பதற்காக இங்கு வரவில்லை!
பொதுவாக, கவிதை வாசிப்பில் உள்ள பிரச்சினை, கவிஞன் கூறிய வரிகளை
சிந்திக்காமல் அப்படியே எடுத்துக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது என
லாம்! கவிஞன் தனக்கு ஏற்பட்ட தாக்கத்தை வாசகர்களுக்குத் தொற்ற
வைக்கும் வகையில், சில வரிகளைப்போடுகிறான்; அது பலரது விஷயங்க
ளில் ஏடாகூடமாக ஆகிவிடுகிறது! இதற்கு, ஒருவகையில், கவிஞனும்,
கவிதை பற்றிய பொதுவான கோட்பாட்டும், இன்னும் கவிதைப்பார்வையும்
தான் காரணம்!
அப்படியானால், "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்ற கூற்றை நாம்
அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், நாம் இங்கு வருவதற்கு
முன் எங்கிருந்தோம், எவ்வாறிருந்தோம், இங்கு எதற்காக வந்தோம் என்பன
போன்ற கேள்விகளைக்கேட்டு சிந்தித்து அவற்றுக்கான பதில்களைப்
பெற்றாக வேண்டும்! அதாவது, "எதற்காக நாம் பூமிக்கு வந்தோம்?" என்ற
கேள்வி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இக்கேள்விக்கான
சரியான பதிலைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும், அதன் அர்த்தமும்,
சிறப்பும், முக்கியத்துவமும்; நம்முடைய மரணத்தின் தன்மையும் அமையும்!
இப்போது, நாம் நகுலனின் கவிதை சுட்டிய அதே பிரச்சினையைச் சுட்டுகிற
வேறு சில சிந்தனை வரிகளை என்னுடைய "கடைசியாக நீங்கள் எப்போது
இறந்தீர்கள்?" எனும் தொகுப்பிலிருந்து எடுத்துக்காண்போம்.
இல்லாமலிருந்தோம்!
பிறப்பு எனும் கதவின் வழியாக
இருப்பு பெற்றோம்!
இறப்பு எனும் கதவின் வழியாக
மீண்டும் இல்லாமல் போகிறோம்!
அதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி?*
கவிதை வரிகளைப்போலத்தெரியும் இவை உண்மையில் கவிதைகள் அல்ல!
அதாவது இவ்வரிகளை கவிதை போல மட்டும் வாசிப்பது போதாது, இவ்வரி
களைக்கொண்டு சிந்திக்கவும், தியானிக்கவும்(Contemplation)வேண்டும்!
எவ்வொரு கூற்றையும், விஷயத்தையும், கருத்தையும், கோட்பாட்டையும்
சிந்திக்காமல் அப்படியே எடுத்துக் கொள்வது என்பது தவறான புரிதலுக்கும்,
முடிவுகளுக்கும் இட்டுச் செல்வதாக அமைந்துவிடும்.
அதாவது, "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்ற கூற்றை அப்படியே
எடுத்துக்கொண்டு, அடுத்த கூற்றான "இல்லாமல் போகிறோம்" என்பதை
இணைத்து வாசிக்கும் போது, ஷங்கர்ராமசுப்ரமணியன் குறிப்பிட்டவாறு,
'நிலையாமையின் துக்கம்' மட்டுமே நமது அனுபவமாக, வாழ்க்கை தரும்
பரிசாகத் தெரியும்!
"இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்பது நமது பிறப்பைக்குறிக்கிறது.
அதாவது, " பிறக்கிறோம்" என்ற சொல்லுக்குப் பதிலாக, "வருகிறோம்" என்ற
சொல் போடப்பட்டுள்ளது. பிரச்சினை இதில் இல்லை; மொத்தப்பிரச்சினை
யும் "இருப்பதற்கென்றுதான்" எனும் சொற்றொடரில் தான் அடங்கியுள்ளது!
இதில் மறைந்திருக்கும் பிரச்சினை, அல்லது, 'அபாயம்' என்னவென்றால்,
"எதற்காக வந்தோம்?" என்ற கேள்வியை இருட்டடிப்பு செய்ததோடல்லாமல்,
அது குறித்து ஆழமாகச் சிந்திப்பதன் அவசியம், முக்கியத்துவம் ஆகியவற்
றையும் காலிசெய்துவிடுவடுவது தானாகும்! நகுலனும் இவ்விஷயம் குறித்து
ஆழமாகச்சிந்தித்து எழுதியதாகத் தெரியவில்லை என்பதுதான் அவருடைய
வாழ்க்கைப் பார்வையில், புரிதலில் உள்ள பெரும் ஓட்டையாகும்!
இங்கே நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்,
நிச்சயமாக நாம் இங்கே "வருகிறோம்", சில காலம் இருக்கவும் செய்கிறோம்;
ஆனால், சாசுவதமாகவோ, நிரந்தரமாகவோ "இருப்பதற்கென்று" நாம் வர
வில்லை!அப்படியானால்,பிறகு "எதற்காக வந்தோம்?" என்பதற்கான பதிலை
பிறகு அதற்குரிய இடத்தில் பார்ப்போம்!
இப்போது, வாழ்க்கை குறித்த நமது பார்வை, அணுகுமுறை எப்படியுள்ளது
என்பதைப் பார்ப்போம். நாம் பிறப்பதற்கு முன்பு இல்லாமலிருந்தோம்! ஒரு
கட்டத்தில், பிறப்பு எனும் கதவின் வழியாக இருப்பு பெறுகிறோம்! ஆனால்,
நாம் பிறப்பதற்கு முன்பு இல்லாமலிருந்தது குறித்து நாம் எவருமே கவலைப்
படுவதோ, துக்கப்படுவதோ கிடையாது! ஆனால், சில காலத்திற்குப்பிறகு,
இறப்பு வரும்போது நாம் இல்லாமல் போகப்போகிறோம் என்பது குறித்து
மட்டும் அஞ்சுகிறோம், கவலைப்படுகிறோம்! இல்லாமலிருந்ததற்கும்,
மீண்டும் இல்லாமல் போவதற்கும், இந்த இரண்டு 'இன்மைக்கும்' உள்ள
வித்தியாசம் என்ன? ஏன் இந்த முரண்பாடு என்பது குறித்து நாம் யோசிப்ப
தில்லை! ஒருவேளை, சில காலம் நாம் இருந்து இருப்பின் ருசியைச் சுவைத்
ததனால் தான் இந்தத் தடுமாற்றமா?
இல்லாமலிருந்தோம், திடீரென இருப்புக்கு வருகிறோம், பிறகு மீண்டும்
இல்லாமல் போகப்போகிறோம் என்பதில் உள்ளடங்கியிருக்கும் புதிர் என்ன
என்பதை நாம் ஏன் ஆராய்ந்து கண்டுபிடிக்கக்கூடாது? கொஞ்சகாலம் தான்
நம் புவி வாழ்க்கை என்றாலும், நாம் எதற்காக இங்கே பூமிக்கு வருகிறோம்?
வெறுமனே உண்டு,உறங்கி,இனம்பெருக்கி விலங்கு ஜீவிகளைப்போல, ஏன்,
எதற்காக என்று தெரியாமல் உயிர்-பிழைத்திருந்து பிறகு ஒரு நாள் மாண்டு
போவதற்காகவா? இதன் அர்த்தம் என்ன? சிறிதாயிருந்தாலும், பெரிதாயி
ருந்தாலும் அர்த்தம் ஏதுமில்லாமலா இப்பிரபஞ்சமும், நாமும், எல்லாமும்
தோன்றியிருக்கின்றன?
ஒன்று மட்டும் நிச்சயம், நிச்சயமாக, நாம் இங்கே நிரந்தரமாக இருப்பதற்
கென்று வரவில்லை!அப்படியானால், எதற்காக,எந்த நோக்கத்திற்காக, எந்த
குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக,எந்த இலக்கை அடைவதற்காக நாம்
இங்கு வருகிறோம்? உய்த்துணர்ந்து பார்க்கும் போது, இன்னொன்றும் நிச்ச
யம், அது என்னவென்றால், இறுதியாக இல்லாமல் போவதற்காகவும் நாம்
இங்கே வரவில்லை!
ஆக, நகுலனுடைய கவிதையில் இடம்பெறும் இரண்டு கூற்றுகளில் இரண்
டாவது கூற்றான "இல்லாமல் போகிறோம்" என்பதும் தவறானதே! ஏனெனில்,
வழக்கமாக, நாம் எண்ணுவது போல :
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்
அடைபட்ட இருப்பு அல்ல வாழ்க்கை!
இருப்பை எவ்வாறு உணர்வு கொண்டு
முழுமைப்படுத்துகிறோம் என்பதே வாழ்க்கை!*
அதாவது, நாம் இங்கு பூமிக்கு வருவது என்பது, கொஞ்ச காலம் இங்கிருந்து
விட்டு பிறகு மாண்டு மறைந்து போவதற்காக அல்ல! பிரபஞ்சத்தின் படைப்
புத்திட்டம் இதுவல்ல! மாறாக, நாம் இருப்பு பெறுவதென்பது இருப்பிலிருந்து,
மேலுயர்ந்து பேரிருப்புக்குச் செல்வதற்காகத்தான்! எவ்வாறு, "இன்மை",
"இருப்பு" என்பவை புதிரானவையோ அவ்வாறே "பேரிருப்பு" என்பதும்
புதிரானதே! சில காலம் நாம் இங்கு இருப்பது பேரிருப்புக்குச் செல்வதற்கு
நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வதற்காகத்தானே தவிர, யாதொரு குறிப்
பிட்ட இலக்கும் இல்லாமல், உயிர்-பிழைத்திருப்பதற்காகவோ,உயிர்-பிழைப்
புக்குரிய பொருட்களை, சொத்துக்களாக எண்ணிக் குவிப்பதற்காகவோ,
சொந்த சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்காகவோ அல்ல! ஏனெனில், பேரிருப்பு,
அல்லது முழுமையான இருப்பு தான் உண்மையான, அழிவில்லாத நிரந்தர
மான சாம்ராஜ்யமாகும்! தேவனின் ராஜ்ஜியம், இரட்சிப்பு, விடுதலை, முக்தி,
மோட்சம், வீடுபேறு, மரணம்கடந்த பெருவாழ்வு,ஞானமடைதல்,நிர்வாணம்
என்று குறிப்பிடப்படுபவையும் இதுவே!
"பேரிருப்பு" என்பது 'இருப்பு', 'இன்மை' இவ்விரண்டையும் கடந்த மெய்ம்மை
யாகும்! இவற்றை சொற்களைக்கொண்டு விளக்குவது கடினம், விளக்கிச்
சொல்ல முடிந்தாலும் அதனால் யாதொரு பயனும் விளையாது! ஏனெனில்,
இவை உணர்வுப்பூர்வமாக நேரடியாக ஒவ்வொருவராலும் உணர்ந்தறியப்பட
வேண்டிய மெய்ம்மை நிலைகளாகும்! இந்நிலைகள் உணர்வு நிலைகளுடன்
சம்பந்தப்பட்டவை என்பதால், 'இன்மை' என்பது முற்றான உணர்வின்மை
யையும், 'இருப்பு' என்பது அரைகுறை உணர்வையும், 'பேரிருப்பு' என்பது
முழுமையான உணர்வு நிலையையும் குறிக்கும் அம்சங்களே எனலாம்!
உணர்வின் சொற்களில் சொன்னால்,முற்றிலும் உணர்வற்ற இன்மை நிலை
யிலிருந்து அரைகுறையாக உணர்வு பெற்ற இருப்பு நிலைக்குள் பிரவேசித்
துள்ள நாம் ஒவ்வொருவரும் உணர்வில் பெருகி உயர்ந்து முழு-உணர்வு
எனும் பேரிருப்பை அடைந்திடும் உணர்வுப்பயணமே "வாழ்க்கை" என்ப
தாகும்!
*காண்க: "கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" முழுதொகுப்பு
வலைத்தளம் vicharamarg.blogspot.in
மா.கணேசன்/ நெய்வேலி/ 14.02.2017
----------------------------------------------------------------------------
உணர்வுபூர்வமான நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள், Dear Mr.Unknown
Delete