Friday, 27 October 2017

எட்டாக்கனி (சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்)!



         "இருக்கிற வாழ்க்கையை விட்டுவிட்டு அறியாத, புரியாத,
          ஆகவே இல்லாத, வாழ்க்கையைத் தேடி, இருப்பதையும்
          இழந்துவிட நான் விரும்பவில்லை!"
                                               - (ஒரு தோழர்)

குளம், குட்டை, ஏரி போன்றவை தாமாகவே இயற்கையாக உருவாவதுண்டு!
ஆனால், நமது தோட்டத்தில், வீட்டைஒட்டி ஒரு கிணறு தாமாகவே உருவா
வதில்லை! மாறாக, நாம் தான் கிணற்றைத் தோண்டியாக வேண்டும்!
அவ்வாறே, ஞானத்தின் ஊற்றாக, கிணறாக விளங்கும் ஞானியர்கள் என்போர்
விபத்துக்களின் விளைவாகத் தோன்றியவர்களல்ல! மாறாக, அவர்கள் ஒவ்
வொருவரும் தம்மைத்தாமே தோண்டி ஞானத்தின் ஊற்றுக்களாக, கிணறு
களாகப் பரிணமித்தவர்கள் ஆவர்! தம்முடன் தாம் புரிந்த வினையாண்மை
யால் மலர்ந்தவர்கள் ஆவர்!

மனிதன் என்பவன் இயற்கையாகப் பிறப்பதில்லை! இயற்கையாகப் பிறப்பவன்
மனிதனுக்கான ஒரு அடிப்படை மாத்திரமே! அந்த அடிப்படையின் மீது உணர்
வைக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் அசல் மனிதனாக தன்னைத்தானே
எழுப்பிக்கொள்ளவேண்டும்!

உணர்வு கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமா? இல்லை! அது
கடினமான விஷயம் அல்ல! பிரச்சினை என்னவென்றால், நம்மைச்சுற்றியுள்ள
பல்வேறு விஷயங்களுடனும், பொருட்களுடனும், மதிப்பீடுகளுடனும் நாம்
மிக எளிதாக பழக்கப்பட்டுவிடுகிறோம்; பிறகு அவற்றைவிட்டு அகலாமல்
அவற்றுடனேயே தங்கித் தேங்கிவிடுகிறோம்! அதாவது, எளிதான, சுலபமான
விஷயங்களை வாழ்க்கையென வரித்துக்கொண்ட பிறகு, உணர்வு கொள்வது
என்பது மட்டுமல்ல, ஆழமாகச் சிந்திப்பது போன்ற எதுவுமே கடினமாகிவிடு
கிறது!

உணர்வு கொள்வது என்பது, சும்மா இருப்பது என்பதைக்குறிக்கிறது! அதாவது,
யாதொரு உணர்ச்சிக்கும், எண்ணத்திற்கும், உந்துதலுக்கும், தூண்டுதலுக்கும்,
ஆசைக்கும், விருப்பத்திற்கும் ஆட்படாமல், வசப்படாமல் இவற்றையெல்லாம்
கடந்து அறிநிலையில் இருப்பது, அல்லது நிலைப்பதுதான் உணர்வு கொள்வது
என்பதாகும்!

உணர்வு, கவனம், அறிநிலை, விழிப்பு எனப்படும் யாவும் உணர்வின் பண்புகள்
அல்லது செயல்பாடுகளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்களே ஆகும்!


மேலும், உணர்வோடிருப்பது, அல்லது, உணர்வுக்கு வருவது என்பது கடின
மான விஷயம் அல்ல! ஏனெனில், உணர்வு என்பது ஏற்கனவே இருக்கிறது;
அதை ஒவ்வொரு மனிதனும் தன்னுள் உணரவேண்டும் என்பதைத்தான்
"உணர்வுக்கு வருதல்" என்றும், "உணர்வை உணர்வுகொள்வது" என்றும் குறிப்
பிடப்படுகிறது! முக்கியமாக, உணர்வு என்பது மிகவும் நுண்மையானது, நுட்ப
மானது; அது தன்னை பெரிதாக முன்-துருத்திக்கொள்வதுமில்லை, ஆரவார
மாகத் தன்னை அறிவித்துக் கொள்வதுமில்லை!

உண்மையில், உணர்வைப் பயன்படுத்தாமல், உணர்வின் உதவியில்லாமல்
எவ்வொரு எண்ணமும், சிந்தனையும், விருப்பும், வெறுப்பும், சொல்லும்,
செயலும், எதுவும் நிகழ்வதில்லை! ஆனால், அவை உணர்வு கொண்டு
பரிசீலிக்கப்படாமல் தானியங்கித்தனமாக நிகழ்கிறது! ஆக, உணர்வைப் பிற
எதற்கும் பயன்படுத்தாமல் இருக்கும்போது "உணர்வை உணர்வுகொள்வது"
என்பது தாமே நிகழ்வதாகிறது! ஆம், அர்த்தமற்ற விஷயங்களில், செயல்பாடு
களில் உணர்வைச் செலவழிக்காமல் இருப்பது உணர்வோடிருப்பதற்கு உதவும்
வழிகளில் ஒன்று எனலாம்! ஆனால்,உணர்வோடிருப்பதற்கு இட்டுச்செல்வதா
கக் கருதப்படும் சுற்றுவழிகள் எதுவும் பெரிதாக உதவுவதில்லை என்பதுதான்
உண்மை! ஏனெனில், "உணர்வை உணர்வுகொள்வது", "உணர்வுக்கு வருதல்",
"விழிப்படைதல்" ஆகியவை ஒவ்வொருவராலும் நேரடியாகச் செய்யப்பட
(உணரப்பட) வேண்டியவையாகும்! அவற்றை எவரும் கற்றுத்தரவோ, எவரிட
மிருந்தும் கற்றுக்கொள்ளவோ கூடிய அம்சங்கள் அல்ல!

ஒவ்வொரு மனிதனும், எவ்வெவ்விஷயங்கள் தம்மை எவ்வெவ்வாறெல்லாம்
செலுத்துகின்றன என்பதை அறிவது அதிமுக்கியமானது! அவ்வாறு அறிவதற்கு
அதீத கவனம் வேண்டும்! கவனநிலையால் பரிசீலிக்கப்படாத வாழ்க்கை உணர்
வற்ற விலங்கினத்திற்கு உரியதாகும்!

"இருக்கிற வாழ்க்கை", "இயற்கையான வாழ்க்கை", "கொடுக்கப்பட்ட வாழ்க்கை"
என்று அதை எப்படி அழைத்தாலும், அது வாழ்க்கைக்கான வெறும் ஒரு அடிப்
படை மாத்திரமே! மனிதன் என்பவன் ஒரு விலங்கைப்போல, உயிருள்ள ஒரு
எந்திரம் அல்ல! வெறுமனே உயிர்-வாழ்வதற்குப் பெரிதாக உணர்வு எதுவும்
தேவையில்லை! ஒரு விலங்குஜீவி என்பது  விசேடமான ஒரு உயிருள்ள
பொறியமைப்பு (அல்லது எந்திரம்) போன்றதாகும்! அதற்கு சில உள்ளமைந்த
இயல்பூக்கிகள் போதுமானது; அவற்றின் தூண்டுதல்களால் ஒரு விலங்குஜீவி
உயிர்-வாழ்ந்திடும்! பசி தோன்றும் போது அது உணவைத் தேடும், தாகம் ஏற்
பட்டால் அது தண்ணீரைத்தேடும்; பாலுணர்வு தோன்றினால் அது ஒரு
இணையைத்தேடும்; அவ்வளவு தான், அதன் ஒட்டுமொத்த ஜீவிதமும்,
வாழ்க்கையும், யாவும்! அவ்வாறு உணர்வுள்ள மனிதன் வாழமுடியாது!

எவ்வொரு குழந்தையும் வயிற்றுப் பிழைப்பின் வாழ்க்கையை எதிர் நோக்கிப்
பிறப்பதில்லை! மாறாக, அத்தகைய வாழ்க்கையுடன் அடையாளப்படுத்திக்
கொள்ளும் வகையில் பழக்கப்படுத்தப்படுகிறது! குழந்தை பசியினால், பாலுக்
காக அழுகிறது என்கிறோம்; ஆனால், குழந்தைக்குத் தாம் எதற்காக அழுகி
றோம் என்பது தெரியாது! இடை-விடாது கிடைத்துக்கொண்டிருந்த ஊட்டம்
திடீரென தடைப்பட்டுவிடும் போது அது உடலை வருத்துகிறது; ஆகவே
குழந்தை அழுகிறது! அதாவது, குழந்தை தாயின் வயிற்றிலிருந்த போதிருந்த
தனது இயல்பான நிலை குலைக்கப்பட்ட புதிய சூழலினால் விளைவதே பசி
என்பதாகும்! குழந்தைக்கு பசியும் தெரியாது, உணவின் தேவையும் தெரியாது,
விலைவாசி விபரமும் தெரியாது! மாறாக, ஏதோவொன்று தன்னை வருத்து
கின்றது என்பதை மட்டுமே அது உணர்கிறது! பிறகு அது வளரும்போது, பசி,
தாகம், வலி, துன்பம், இழப்பு, கஷ்டம், நஷ்டம் போன்ற அனைத்துடனும்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளச் சுற்றியுள்ள நம்மால், சமூகத்தால்
கற்றுத்தரப்படுகிறது! அதன்பிறகு, எவ்வொரு குழந்தையும் தாம் உண்மையில்
எதற்காகப்பிறந்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பை முற்றாக இழந்து
விடுகிறது! கோடியில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே 'வாழ்க்கை'யின் அசலான
குறிக்கோளை அறிந்து அசலான மனிதவாழ்க்கையை வாழ்கிறது!  பிறக்கும்
ஒவ்வொரு குழந்தையும், திசைகளற்ற முனைப்புடனும், வகைப்படுத்தவிய
லாத ஊக்கத்துடனும் தான் பிறக்கிறது! ஆனால், எல்லாக் குழந்தைகளும்
விரைவாகவோ, அல்லது தாமதமாகவோ, நமது கல்வி, மதிப்பீட்டு-அமைப்பு,
மற்றும், வாழ்முறைகளினால் தவறான இலக்குகளை நோக்கி திசைப்படுத்தப்
பட்டு விடுகிறது!

அந்த நரிக்கு அது எட்டாக்கனியாக இருந்தாலும், அது கனிதான் என்பதை
எவ்வாறோ அறிந்திருக்கிறது! ஆகவே தான் அது தாவித்தாவிக் குதித்துப்பார்த்
தது! மேலும், அது வேறு சில தந்திரங்களையும் கையாண்டு பார்த்திருக்கலாம்!
ஆனாலும், அந்தக்கனி அதற்கு எட்டவில்லை! ஆகவே, அது ஒரு தவறான
முடிவிற்கு வந்தது; அதாவது, "சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்!" என்று தனக்குத்
தானே சொல்லிக்கொண்டு ஏமாற்றத்துடன் காட்டிற்குள் சென்றுவிட்டது! அது
தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் விதத்தில், "அட, அந்தக்கனி
கிடைக்காவிட்டால் என்ன? தனக்கு எளிதாகக் கிடைக்கும் வேறு பல கனிகள்
உள்ளனவே!" என்று எண்ணிக்கொள்ளலாம்!

"ஞானம்" என்பதும் ஒரு கனிதான்! ஆனால், ஞானக்கனியை அடைவதற்கு
எவ்வொரு தந்திரமும், உபாயமும் இல்லை! மேலும், "பத்தோடு இன்னொன்று,
பதினொன்று!" என ஆசைப்படுவதன் மூலமும் அதை அடையமுடியாது!
மேலும், "ஆஹா, எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது; நான் அடைந்துவிட்டேன்!"
என்ற பிரமையில் ஆழ்ந்துவிடுவது இன்னும் ஆபத்தானதாகும்! அதேநேரத்தில்,
"நான் என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்தேன், ஆனால், ஞானம்
கிடைக்கவில்லை!" என்கிற பேச்சு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுதலாகும்!
ஏனெனில், ஒருவர் தன்னால் முடிந்தவரை முயற்சிப்பது என்பது போதாது;
எடுத்த காரியம் முடியும்வரை, பூரணமடையும்வரை முயற்சிக்க வேண்டும்!
மேலும், 'முயற்சி' என்ற சொல் இவ்விஷயத்தில் பொருத்தமற்றதாகப்படுகிறது;
வேறு பொருத்தமான சொல் கிடைக்கும்வரை, "முழு-முயற்சி" எனும் சொற்
றொடரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்! மேலே குறிப்பிடப்பட்ட எல்லா
மட்டுப்பாடுகளையும் விட மோசமானது எதுவென்றால், "ஞானம்" கிடைக்கா
விட்டால் என்ன, "ஜீவனம்" கிடைத்தால் போதும்!" என்ற நிலையைத் தேர்ந்து
கொள்ளும் அவலம் தானாகும்!

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!" என்பது நூற்றுக்கு நூறு
உண்மையே! ஆனால், பெரும்பாலும் இந்த ஞானமொழியைப் பலரும் தலை
கீழாய்ப் புரிந்து கொள்கிறார்கள்! ஒருவன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த மட்டுப்பாடான, அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தவரை போதும் என்ற
பக்குவத்திற்கு உயர்ந்து, "அர்த்தம்" பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து செல்வதற்
குப்பதிலாக, உயர்-பேரறிவு நிலையை எட்டமுடியாவிட்டாலென்ன? தன்னிடம்
இருக்கிற அறிவே போதும் என்ற முடிவிற்கு வருவது, தான் மனிதப்பிறவி
பெற்றதைக் கொச்சைப்படுத்துகிற சுய-அவமதிப்பு ஆகும்! ஒருவன் தன்னிடம்
அதிகம் பணம் இல்லை, பொருள் இல்லை, சொத்து சுகம் இல்லை என்கிற
நிலையில் வாழ்ந்திட முடியும்! இம்மனிதன் பொருளியல்தளத்தில் தன்னிடம்
இருப்பதைக்கொண்டு திருப்தியடைவது என்பது அருமையான விஷயமாகும்!
ஆனால், எம்மனிதனும் அர்த்தமில்லாமல், அதாவது, வாழ்வின் அர்த்தம்
அறியாமல் வாழ்வது கூடாது!

ஒரு மிகப்பெரிய விஷயம், அதாவது, கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்
களுடைய கிட்டத்தட்ட எல்லா மட்டுப்பாடுகளும் தமக்குத்தாமே தேர்ந்து
கொள்ளும் சுய-மட்டுப்பாடுகளே என்பதுதான்!

உண்மையில், ஞானம் என்பது புறத்தே எங்கோ இருந்து அதிர்ஷ்டவசமாக

ஒருவனுக்குக்கிடைக்கக்கூடிய கனி அல்ல! மாறாக, ஒவ்வொரு மனிதனும்
உண்மையில் ஞானப்பிஞ்சாகத்தான் அதாவது, சிற்றுணர்வுடன் தான் பிறக்கி
றான்; தன்னில், தனது உணர்வில் ஒவ்வொருவனும் முற்றிக் கனிவது
மட்டுமே வேண்டும்!

மனிதன் என்பவன் தனக்குத்தானே ஒரு பரிசுப்பொதியாக அமைந்தவனாவான்!
அரிதாக ஒரு சிலரே தமது பொதியைப் பிரித்து உள்ளே என்ன உள்ளது என்று
காண்பதற்கான பிரயாசத்தை மேற்கொள்கிறார்கள்; அவர்கள் மட்டுமே ஞானப்
பொக்கிஷங்களை அடைகிறார்கள்! பலர் தம்மைப் பிரித்துப்பார்ப்பதே இல்லை!
சிலர் அரைகுறையாகப் பார்த்துவிட்டு, மேலடுக்கிலுள்ள சில திறமைகளைக்
கண்டு, கொண்டு, அவற்றுடன் திருப்தியடைந்து விடுகின்றனர்!

ஆனால், வீடுபேறு வேண்டும் என்று விரும்புபவன் தனக்கான வீட்டை, தான்
உயிர்-வாழும் காலத்திற்குள்ளேயே தானே கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும்!
அந்த வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை!

தமிழ்ச்சித்தர்கள் மனித வாழ்வை அறம், பொருள், இன்பம், வீடு என்று பகுத்
துப்பிரித்துப் புரிந்துகொண்டவர்களாவர்! பகுத்துப்பார்த்துப் புரிந்துகொண்டதால்
அவர்களைப் பகுத்தறிவாளர்கள் எனச் சுருக்கிவிடமுடியாது! மாறாக, பகுத்துப்
பார்த்ததுடன் நில்லாமல் யாவற்றையும் அவர்கள் மிகச்சிறப்பாகத் தொகுத்தும்
புரிந்துகொண்ட பேரறிவாளர்களாவர்! ஆனால்,நாமோ, அறம், பொருள், இன்பம்,
வீடு எனப்படும் நான்கில் முதலாவதான "அறம்" எனும் அம்சத்தையும், முடி
வான "வீடு" எனும் அம்சத்தையும் தவிர்த்துவிட்டு, பொருளையும், இன்பத்தை
யும் மட்டுமே அடைய விழைகிறோம்; அவற்றை அடைந்தும் நிறைவுறாமல்
அல்லலுறுகிறோம்! காரணம், நாம் அறத்தைக் கடைபிடிக்கத் தவறிவிட்டோம்!
அறம் என்பது வெறும் ஒழுக்க நெறிமுறைகள் மட்டுமல்ல! அறம் எனப்படு
வது விழிப்பையும், ஞானத்தையும், வாழ்க்கைக்குத் தன்னைத்தகுதியாக்கிக்
கொள்ளுதலையும் குறிப்பதாகும்!

"அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்படாதவன்,
வாசித்தறியாதவன் வாழும்வழி தேடாத சாமானியன்! தனது சொந்த சிந்தனை
யின் மூலம் அவற்றை நேரே கண்டறியாதவன் தன் நோக்கத்தை இழந்து
விட்ட சிந்தனைச்சோம்பேறி! "அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்லப்
பட்டதைக் கேள்விப்பட்டும், வாசித்தறிந்தும், அவற்றைத் தம் வாழ்வில் கடை
பிடிக்காதவன் மூடன்! கண்களிருந்தும் குருடன்! உணர்விருந்தும் உணர்வற்ற
பிராணியே அவன்!

"ஞானம் எனக்குச் சாத்தியமில்லை!" ஆகவே, "சீவனம்" எனக்குப்போதும்!" என
ஒருவன் தெரிவு செய்வானெனில், அவன் தான் பெற்ற மனிதப்பிறப்பை தனது
மதியீனத்தினால் துறந்துவிடும், தன்னைத்தானே அவமதிப்பு செய்துகொள்ளும்
செயலைச் செய்பவனாகிறான்! "ஞானம்" என்பது எட்டாக்கனியான விஷயமாக
இருக்குமானால், மனித இனம் முதலிடத்தில் தோன்றியிருக்காது!


மா.கணேசன் / நெய்வேலி / 25-10-2017
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...