பிரபஞ்சவியல் என்பது பரந்த வெற்றுவெளியில் பரவிக்கிடக்கும் உயிரில்லாத நட்சத்திரப்
புழுதியைப் பற்றிய விஞ்ஞானம் அல்ல.
- மார்க்கோ ஊர்சாக் (Marko Uršič)
தத்துவஞானி, உளவியல் மேதை/யூகோஸ்லாவியா
மானிட-மைய விதி [The Anthropic Principle]
"நமது மனங்கள் நாம் வாழ்கின்ற நமது பிரபஞ்சத்தையடுத்து இரண்டாவது அல்லது மூன்றாவது ஒரு பிரபஞ்சம் பற்றிச் சிந்திக்கவிரும்புவதில்லை. சில மொழிகளில், பிரபஞ்சம் என்ற சொல்லுக்கு பன்மை கிடையாது. இது ஏனென்றால் நமது பிரபஞ்சத்திற்கு இணையாக, நம்மால் அறியமுடியாத பிற பிரபஞ்சங்களைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. ... வேண்டுமானால், நாம் பிற கிரகங்கள் பற்றிப்பேசலாம், ஏனென்றால், நாம் அவற்றை இங்கிருந்தவாறே கண்டு கவனிக்க முடியும்; நம்மால் பிற சூரியன்கள், சூரிய மண்டலங்கள் இன்னும் நமக்குப் பரிச்சயமற்ற பிற உயிர் வடிவங்களையும் பற்றியும் பேசலாம்..." என்பதாக ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி ரூடால்ப் கிப்பென்ஹான் (Rudolf Kippenhahn), "The Anthropic Principle -Man as the Focal Point of Nature" (1991) by Reinhard Breuer எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆம், கிப்பென்ஹான் அவர்களின் கூற்றில் நியாயம் உள்ளது. மேலும், உண்மை நிலவரம் என்னவென்றால், நம்முடைய பிரபஞ்சத்தையே நம்மால் முழுமையாகக் காணவும் அறியவும் வழியில்லாத அளவிற்கு அது பிரும்மாண்டமாய் எல்லையற்றதாக பரந்து விரிந்துகொண்டே போகிறது; இதில் இரண்டாவது பிரபஞ்சம் பற்றிப் பேசுவது என்பது அர்த்தமற்றது. இன்னும், சொல்லப்போனால், நம்முடைய பிரபஞ்சமும் கூட தேவையில்லாமல் அளவுகடந்து பெரிதாக உள்ளது! (அதற்கான காரணம் இல்லாமல் இல்லை!) அடுத்து, நமது பூமிக்கிரகத்தைச் சுற்றிலும், நமது சூரிய மண்டலத்தில் என்னென்ன அண்டவெளிப் பொருட்கள் உள்ளன என்பதை அறிவதென்பதுகூட ஒருவகையில் அவசியமானதே எனலாம். ஆனால், நமக்குச் பரிச்சயமில்லாத, நாம் அறிந்த உயிர்-ஜீவியைப் போலல்லாமல் அடிப்படையிலேயே வேறு வகைப்பட்ட, அல்லது வேற்றுலக ஜீவிகளைப் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்றுதான் நான் சொல்வேன். ஏனெனில், அத்தகைய உயிர்-ஜீவிகளுடன் ஒப்பிட்டுத்தான் நம்மை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.
மேலும், மானிட-மைய விதியைப் (Anthropic Principle) பொறுத்தவரையில், அதை ஒவ்வொரு தனிமனிதனையும் மையப்படுத்திடும் வகையிலும் நீட்டிக்க முடியும்; அதாவது, என்னைச் சுற்றிலும் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்; இருந்தாலும், என்னை இன்னொருவருக்கு பரிமாற்றம் செய்துகொள்ள இயலாது! நான் குறிப்பிடும் இந்த நீட்டிப்பு சிலருக்கு அதீதமான விடயமாகப் படலாம். இதையே நான் "அதீத மானிட-மைய விதி" (Extreme Anthropic Principle) என அறிவிக்கவும் விரும்புகிறேன்! யாருக்குத் தெரியும், இவ்விதி நாளை எனது பெயரைக்கொண்டே அழைக்கப்படலாம்! இக்கட்டுரையாசிரியரின் “அதீத மானிட-மைய விதி” இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் "மானிட மைய விதி" (Anthropic Principle) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
"மானிட-மைய விதி" முதன்முதலில் கோட்பாட்டியல் வானவியல் பௌதிகவிஞ்ஞானி, ப்ராண்டன் கார்ட்டெர் (Brandon Carter) அவர்களால், 1973-ல் கோப்பர்னிக்கஸ்-ன் 500-வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் ஒரு மாநாட்டில் அளித்த பங்களிப்பில் இடம்பெற்றது. கார்ட்டெர் தனது மானிட-மைய விதியை, கோப்பர்நிக்கஸ்-ன் விதியான ' மானிடஜீவிகள் இப்பிரபஞ்சத்தில் சிறப்புச் சலுகை கொண்ட இடத்தில் இல்லை' என்பதற்கு எதிர்வினையாக முன்வைத்தார். கார்ட்டெரின் முன்வைப்புக்கூற்று யாதெனில், "பிரபஞ்சத்தில் மானிடஜீவிகளின் இட-அமைவு மையத்துவ மானதாக இல்லையெனினும், ஓரளவிற்கு சிறப்புச் சலுகை பெற்றது" என்பதே ஆகும்.
அதாவது, இப்பிரபஞ்சத்தின் அடியோட்டமாகச் செயல்படும் இயற்கைவிதிகளானவை உயிர் தோன்றுவதற்கு ஏதுவான வகையில் அமைந்திருக்கவேண்டும்; அவ்வாறில்லையெனில், இங்கு நாம் தோன்றியிருக்க முடியாது! இதுதான் மானிட-மையத்துவ விதி பற்றிய சுருக்கமான பொருள் விளக்கம் ஆகும்.
இனி நாம் இந்த "மானிட மைய விதி" கிளப்பிய குழப்ப மேகங்களுக்குள் செல்வோம். இவ்விதியானது மிகவும் வெளிப்படையாகத்தெரியும் ஒரு உண்மை நிலை பற்றிய ஒரு கூற்றே ஆகும். ஆனால், மேற்குலக விஞ்ஞானிகள், எவ்வொரு விடயத்தையும் விதிகளின் சொற்களுக்கு மாற்றியும், கோட்பாடுகளின் வழியாகவும் தான் புரிந்துகொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள்!
ஆனால், இங்கே ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. அது கறாரான விதிகளைக்கொண்டு இயங்குகிறது. அதன் வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்தில் பூமிக்கிரகத்தில் உயிர்ஜீவிகள் தோன்றின. அதன் தொடர்ச்சியாக, பிறகொரு கட்டத்தில் சுய-உணர்வுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மானிட ஜீவிகளாகிய நாம் தோன்றி, இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு இயங்குகிறது; அதனுடைய விதிகள் என்ன, அதனுடைய முடிவு எத்தகையதாயிருக்கும்; அதில் நம்முடைய இடம் எது?..என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். ஆக, பிரபஞ்சமும் இருக்கிறது, அதில் நாமும் இருக்கிறோம்! பிறகு அதிலென்ன பிரச்சினை? அதில்தான் பிரச்சினை இருக்கிறது என்கிறார்கள் பல விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும்!
அதாவது, "உயிர் தோன்றியே ஆகவேண்டும் என்பதுபோல் இயற்கையின் விதிகள் அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது; ஆனால், பிரபஞ்சத்தின் அடிப்படையான, பொருண்மையான மாறாத-மதிப்புகளின் (universal constants) எண்ணில் சிறிது மாற்றம் இருப்பின், பிரபஞ்சமானது வேறுவகைப் பட்டதாக அமைந்திருக்கும்; அந்த வேறுவகைப்பட்ட பிரபஞ்சம் உயிர்த் தோற்றத்திற்கு ஏதுவாக அமையாது. மேலும், பெரும் எண்ணிக்கையிலான விபத்துக்கள் எல்லாம் கூட்டாகச்சேர்ந்து நாம் தோன்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதாகத் தோற்றம் தருகிறது" என்றெல்லாம் சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த விஞ்ஞானிகளின் தர்க்கம் ஏன் இவ்வாறு தலைகீழாக உள்ளது என்பதுதான் எனக்குப் புரியவில்லை! இப்பிரபஞ்சத்தில், உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் ஏற்கனவே தோன்றி வெற்றிகரமாக நிலைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பிரபஞ்சத்தின் பௌதிகவிதிகளும், மாறாத மதிப்புகளும் வேறுவிதமாக இருந்தால், இப்பிரபஞ்சமே நிலைத்திருக்காது, நட்சத்திரங்கள் தோன்றியிருக்காது, ஒரு புழு பூச்சியும் தோன்றியிருக்காது; அறிவுக்கூர்மையுள்ள மனிதஜீவியும் தோன்றியிருக்கமாட்டான், ..... என்பதுபோன்ற வாதங்களுக்களுக்கான அவசியம்தான் என்ன?
ஜெர்மானிய வானவியல் பௌதிகவியல் விஞ்ஞானி ரெய்ன்ஹார்ட் ப்ரூயர் (Reinhard Breuer) அவர்கள், உயிர் தோன்றுவதற்கு சாதகமாக அமைந்த பௌதிக காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார்; அப்பட்டியல் கவனத்திற்குரியவகையில் எண்ணிக்கையில் கணிசமானதாகும்; அத்தனை எண்ணிக்கையிலான விபத்துக்கள் விபத்துபூர்வமாக நிகழ்ந்திருக்கவியலாது என்ற உணர்வை நாம் பெறுகிறோம். கிட்டத்தட்ட நம்மை மனதில் கொண்டே இயற்கைவிதிகளானவை அமைந்தது போல் உள்ளது என்கிறார். பாவம், ரெய்ன்ஹார்ட் ப்ரூயர், அவர் மானிட-மைய விதிக்கு ஆதரவாகப் பேசுபவராக இருக்கிறார்; தனது பார்வையை எடுத்துச்சொல்ல அவர் ஒரு முழு நீளப் புத்தகத்தையே எழுதியுள்ளார்! (இக்கட்டுரையின் முதல் பத்தியில் அதன் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது).
மனிதனே பிரபஞ்சத்தின் மையம்
என்னைப்பொறுத்தவரையில், நானும் "மானிட-மைய விதி"யை ஆதரிப்பவனாகவே இருக்கிறேன். ஏனெனில், இப்போதைக்கு மனிதன்தான், ஒவ்வொரு தனிமனிதனும்தான், இப்பிரபஞ்சத்தின் மையம் ஆவான். ஆனால், இம்மையத்துவம் ஒருவகையில் முக்கியமானது; இன்னொரு வகையில், சற்று தற்காலிகமானது! எவ்வாறெனில், மனிதன் தோன்றுவதற்கும் நெடுங்காலத்திற்கு முன்னே, அதாவது, முதல் உயிர் தோன்றியபோது, அதை நாம் "அமீபா" என்று வைத்துக்கொள்வோம்; அந்த அமீபாதான் இப்பிரபஞ்சத்தின் மையமாகத்திகழ்ந்தது; அதாவது ஒட்டுமொத்தப் பிரபஞ்சப் பரிணாம இயக்கமும் அந்த அமீபாவை உருவாக்குவதில் தான் முனைப்பாகக் குவிந்திருந்தது எனலாம். அவ்வாறே, அமீபாவையடுத்து பரிணாமத்தில் வெளிப்பட்ட ஒவ்வொரு மேம்பட்ட உயிர்ஜீவியும் பிரபஞ்சத்தின் புதிய மேம்பட்ட மையமாக மாறிமாறி அமைந்தன.
பரிணாமத்தைப் பொறுத்தவரை, எவ்வொரு குறிப்பிட்ட உயிர்ஜீவியும், அது அறிவுக்கூர்மை கொண்ட ஜீவியாயினும், அல்லது மனிதனே ஆயினும், சிறப்புரிமை பெற்றதல்ல! மனிதன் உள்பட எல்லா ஜீவிகளுமே பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கை அடைவதற்கான கருவிகளே! ஆனால், மனிதஜீவியின் சிறப்பும், முக்கியத்துவமும், அவன் வழியாகத்தான், அவனைக்கொண்டுதான், அவனுள்ளேயும் ஊடேயுமாகத்தான் அந்த இறுதியான மையம், அல்லது அந்த ஒப்பற்ற இலக்கு அடையப்பட இருக்கிறது! ஏனெனில், மனிதனே உணர்வுப் பரிணாமத்தின் (Evolution of Consciousness) ஏகபோகக் களமாகத் திகழ்பவனாக அமைந்துள்ளான்! அதாவது, உணர்வுப் பரிணாமத்தின் உதயம் அவனுடன் அவனுள் தொடங்கி அவனுள்ளேயே முழுமையடைகிறது!
ஒரு குதர்க்கமான பார்வையில், “உயிர்-ஜீவிகள் எவ்வகைப்பட்ட பிரபஞ்சத்திற்கும் ஏற்றவகையில் தகவமைய முடியாதா என்ன, அதாவது, எவ்வாறு நாம் மாறி மாறி அமையும் இரவுக்கும் பகலுக்கும் தகவமைந்துள்ளோமோ அவ்வாறு? ஆக, இப்பார்வையின்படி நமது இருப்பு குறித்து ஆச்சரியப்பட ஒரு காரணமும், அடிப்படையும் இல்லை எனலாமா? ஒருவேளை எவ்வகைப்பட்ட பிரபஞ்சமாயினும் - மிகவும் தாறுமாறான விதிகள் மற்றும், மாறாத மதிப்புகளைக் கொண்டதொரு பிரபஞ்சத்திலும் - அதில் நமது இருப்பைப் பெற்றிருப்போமல்லவா!” இது வெறும் குதர்க்கமான பார்வை மட்டுமல்ல; மாறாக, படு அபத்தமானதாகும்; எவ்வகையிலென்றால், இது உயிர்-ஜீவி மற்றும் அதன் தோற்றம் பற்றிய மிகவும் மேலோட்டமான புரிதலை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது, உயிர்த்தோற்றம் என்பது வெறுமனே தகவமைதல் (Adaptation), மற்றும் உயிர்-பிழைத்திருத்தல் (Survival) ஆகியவற்றைச் சார்ந்தது என்பதாகக் காணும் மிகவும் மேம்போக்கான புரிதல்!
மானிட-மைய விதியை மறுப்பவர்களின் கூற்றின்படி, மானிட-மைய விதியின் வெவ்வேறுபட்ட எல்லாவகைப் பதிப்புகளும் (Versions) பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் தேடலை ஊக்கம் கெடுப்பதாய் உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மானிட-மைய விதியானது, பொய்ப்பிக்கத் தகுமையற்றதாக (Un-Falsifiable) உள்ளதென்றும், ஆதலால், அவ்விதி விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? இத்தகைய ஆக்கம்கெட்ட முனைப்புக்குச் சரியான பதிலடியாக, யூகோஸ்லாவிய தத்துவஞானியும், உளவியல் மேதையுமான மார்க்கோ ஊர்சாக் (Marko Uršič) அவர்கள், "பிரபஞ்சவியல் என்பது பரந்த வெற்றுவெளியில் பரவிக்கிடக்கும் உயிரில்லாத நட்சத்திரப் புழுதியைப் பற்றிய விஞ்ஞானம் அல்ல." ("Cosmology cannot be a science of dead stardust spread in the vast empty space") என்று கூறியுள்ளார்.
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, 'பிரபஞ்சமே பிரதானம்' எனும் கொடிய வாதத்தால் பீடிக்கப்பட்டவர்களாவர். பிரபஞ்சத்தை பிரதானப்படுத்தி, மனிதனை தேவையற்ற ஓரத்து நிகழ்வாகச் சுருக்கிக் காண்பதில் அவர்களுக்கு அப்படியொரு அலாதி ஆனந்தம்! இத்தகைய பார்வை பெரிதும் எந்திரத்தனமான, பொருண்மைவாதம் சார்ந்த மட்டுப்பாட்டின் வெளிப்பாடே ஆகும்! இம்மட்டுப்பாட்டை உதறிக்கடந்து முன்னோக்கிச்செல்லும்வரை விஞ்ஞானம் முழுமையாக விஞ்ஞானபூர்வமாக இருக்கப்போவதில்லை!
மானிட-மைய விதியின் ஒரு பதிப்பானது, "வலுவான மானிட-மைய விதி" (Strong Anthropic Principle, SAP) என வழங்கப்படுகிறது; அவ்விதி, "பிரபஞ்சமானது ஏதோவொருவகையில் அதன் வளர்ச்சிப் போக்கில் இறுதியாக உணர்வுள்ள, அறிவார்ந்த ஜீவிகளைக் கொணர்ந்திட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உட்பட்டதாயுள்ளது." என்று கூறுகிறது. மானிட-மைய விதியின் இன்னொரு பதிப்பு, "வலுவற்ற மானிட-மைய விதி" (Weak Anthropic Principle, WAP) என வழங்கப்படுகிறது; இவ்விதி, "இறுதியாக உயிர்த்தோற்றத்திற்கு உறுதுணையாக அமைகிற பிரபஞ்சத்தில் மட்டும்தான் பிரபஞ்சத்தை அறியும் திறன்கொண்ட உயிர்கள் தோன்றக்கூடும்." என்கிறது. ஆனால், இவ்விதிகள் யாவும் மிகைக்கூற்றுகள், அல்லது வெள்ளிடைமெய் என கருதப்படுகின்றன; இக்கூற்றுகள் வெளிப்படையான உண்மைகளையே பேசுகின்றன, அவை புதிதாக எதையும் சொல்வதில்லை; மேலும், அவற்றைப் பொய்ப்பிக்கவும் வழியில்லாததால், அவை விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகள் அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறான மிகைக்கூற்றுக்களும், வெள்ளிடைமலை போன்ற ஒன்றை விவரிக்கும் கோட்பாடுகளும் ஏன் முன்வைக்கப்படுகின்றன?
ஏனென்றால், நம் விஞ்ஞானிகள் எதையுமே சுற்றிவளைத்துத்தான் புரிந்துகொள்வோம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பருப்பொருள் மாத்திரமே; ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் பருப்பொருள் மற்றும் பௌதிகவிதிகளின் சொற்களிலேயே புரிந்துகொள்வோம் என அடம் பிடிக்கிறார்கள்! ஆகவேதான் நாம் மானிட-மைய விதி போன்ற மிகைக்கூற்றுக் கோட்பாடுகளை முன்வைப்பதும், அவற்றைக்கொண்டு எந்திரவாத விஞ்ஞானத்தின் மட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயற்சிப்பதும் அவசியமாகிறது!
விஞ்ஞானிகள் எவ்வளவு குதர்க்கமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றான, "பிரபஞ்சமானது உயிர்த் தோற்றத்திற்கு உறுதுணையாக இருந்தாக வேண்டும்" என்பதைச் சோதித்துக் காணவேண்டும் எனில், அதற்குச் சான்றாக நம்முடைய பிரபஞ்சமல்லாத வேறு பிரபஞ்சங்களில் உயிர் தோன்றியிருக்கவேண்டும் என்கிறார்கள்! ஆனால், பெரும்பான்மையான விளக்கத்தின்படி வேறு பிரபஞ்சங்களை நம்மால் கண்டுகவனிக்க இயலாது. ஆக, "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றைப் பொய்ப்பிக்க இயலாததால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது" என்கிறார்கள்!
அடுத்து, "நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாயிருந்தால், நாம் இப்போது இங்கிருக்கமுடியாது. ஆனால், நமது பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாக இல்லையாதலால், நாம் இங்கிருக்கிறோம்!" என்பது போன்ற தர்க்கங்களும் பயனற்றவையாகும்! ஏனென்றால், இங்கு ஒரு முழும்பிரபஞ்சமே இருப்பதால், அதன் பகுதியாக இருந்துகொண்டுதான் நாம் வேறுவகைப்பட்ட பிரபஞ்சங்களைப் பற்றியும்; இன்னும் சில சமயங்களில் ஒன்றுமில்லாத நிலை பற்றியும் பேசுகிறோம்! மேலும், நம்மையும் பிரபஞ்சத்தையும் பிரிக்கஇயலாது! இதன் அர்த்தம் நாம் இப்பிரபஞ்சத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையாகவும் இருக்கிறோம்; மேலும், நாம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையின், விதிமுறைகளின் பகுதியாகவும், தொடர்ச்சியாகவும் இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழிமுறைகளையும், விதிமுறைகளையும் கற்பனைசெய்வது பயனற்றது! அனந்த கோடி பிரபஞ்சங்களை நம் கற்பனைகளில் விரித்துக் காணலாம்; அதனால், நமது எதார்த்த நிலை ஒரு சிறு இம்மியளவும் மாறப்போவதில்லை!
ஒரு பார்வையில், பிரபஞ்சத்திற்கு உயிருள்ள ஜீவிகளையும், உணர்வுள்ள மனிதஜீவிகளையும் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயமோ, அல்லது அவை தோன்றுவதற்கு உறுதுணையாக அமைந்தாக வேண்டிய அவசியமோ இல்லை எனக்காண இடமுண்டு எனலாம். ஆனால், ஒரு கட்டத்தில், பிரபஞ்சமானது தன்னைத்தானே அறியும்வகையில் உணர்வு பெறவில்லை எனில், அதன் இருப்பிற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆக, பிரபஞ்சமானது பரிணாமம் எனும் சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையில் உணர்வுபெறும் வகையில், முதலில் உயிர்-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, புலன் உணர்வு நிலையை எட்டியது, அதையடுத்து மேற்கொண்ட பரிணாம முயற்சியின் விளைவாக, அது மனித-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, சுய-உணர்வு நிலையை வந்தடைந்தது! இவ்வாறு வந்தடைவது என்பது தவிர்க்கவியலாததாகும்.
அதேவேளையில், உயிர்-ஜீவி, மற்றும், மனிதஜீவியை அடைவது பிரபஞ்சத்தின் பிரதான நோக்கமோ, இறுதி இலக்கோ அல்ல! மாறாக, அதன் ஒரே பிரதான இலக்கு முழுமையான உணர்வுநிலையை அடைவதே! மேலும், மனிதனின் வழியாக தற்போது எட்டப்பட்டுள்ள உணர்வு நிலை இறுதியானதோ, முழுமையானதோ அல்ல! ஆயினும், உணர்வின் உச்ச நிலையான முழு-உணர்வுநிலையும் மனிதனைக்கொண்டே, மனிதனின் வழியாகவே சாதிக்கப்பட இருக்கிறது! இதுவே பிரபஞ்சப் பரிணாம வழிமுறையின் அடியோட்டமான திட்டம் ஆகும். இவ்வகையில், மானிட-மைய விதி மட்டுமல்ல, டார்வினின் 'இயற்கைத்தேர்வுக்கு' மாற்றாகக் கொள்ளப்பட வேண்டிய "இலக்கு நிலைத் தேர்வு" (Teleological Selection) முறையும் பொருத்தமானதே ஆகும்.
மானிட-மைய விதியின் வலுவான பதிப்போ(SAP), வலுவற்ற பதிப்போ(WAP), இன்னும் அதன் பல்வேறுபட்ட பதிப்புக்களின் அடிப்படை அம்சம் என்னவென்றால், அவை பிரபஞ்சத்தில் மனிதனின் மையத்துவத்தையும், அவனது முக்கியத்துவத்தையும் சுட்டுகிறது என்பதொன்றே ஆகும்! ஆனால், சிலர், "மானிட இருப்பு என்பது விளக்கம் அளிக்கப்படவேண்டிய பலவகைப்பட்ட அம்சங்களின். பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்ற ஒன்றுதான்!" என்கிறார்கள்.
ஆனால், மானிட இருப்பு என்பது பிற பலவகைப்பட்ட அம்சங்களின், பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்றதல்ல. மேலும், மானிட இருப்பு என்பது எத்தகையது என்பதைக் கொண்டே மானிடனின் முக்கியத்துவம் கணிக்கப்படவேண்டும்; ஆக, மானிட இருப்பானது பலவகைப்பட்ட அம்சங்களில் அதுவும் ஒன்று என்பதாக இருக்கமுடியாது! ஏனெனில், இருப்பு (Existence) என்பது ஒருபடித்தானதல்ல. இருப்பு என்பதை இருக்கின்ற பொருட்களின், பண்புகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்திக் காண முடியும். இருப்பதெல்லாம் இருப்புதான் என பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது! அனைத்துப் பொருட்களையும், அம்சங்களையும் அவற்றின் பண்புகளுக்கு ஏற்ப கிட்டத்தட்ட மூன்று வகையினங்களில் அடக்கிவிடலாம். ஒன்று, சட-இருப்பு (Inorganic Existence); இரண்டாவது, உயிர்-இருப்பு (Organic Existence); மூன்றாவது, உணர்வு-இருப்பு (Psychic Existence). இம்மூன்று வகைகளும் வெறும் இருப்பு நிலைகள் மட்டும் அல்ல; மாறாக, இவை பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளும், வெவ்வேறு தளங்களும் ஆகும். ஒன்றிலிருந்து மற்றொன்று பண்பிலும், தரத்திலும் உயர்வானது, மேலானது.
ஒரு கட்டம்வரை இம்மூன்று இருப்புநிலைகளும், தளங்களும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையே எனக்காண இடமுண்டு என்றாலும், ஒவ்வொரு உயர்-வளர்ச்சி நிலைக்குள்ளும் அதற்கு முந்தைய நிலைகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும். அதாவது உள்ளடக்கப்பட்டதாகவும்; முந்தைய நிலைகளை அடுத்தடுத்த உயர்-நிலைகள் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அமைந்ததாகும். இதன் அர்த்தம் பரிணாமத் தொடரில் இறுதியாக எட்டப்படும் நிலையில் முந்தைய நிலைகள் யாவும் உள்ளடக்கப்பட்டு பிரபஞ்சத்தின் ஒருமையும் முழுமையும் அந்த ஒற்றை இறுதி நிலையில், அந்த ஒற்றைப் புள்ளியில் எட்டப்படும்! எந்தப் புள்ளியிலிருந்து இப்பிரபஞ்சம் வெடித்துத் தோன்றியதோ அந்தப்புள்ளி!
அப்புள்ளியைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் வெறும் குறியீடு (Symbol) மாத்திரமே! பிரபஞ்சத்தின் சாரமான (விதை போன்ற) அந்தப்புள்ளியில், நாம் காணும் பிரபஞ்சம் இடம்பெறாது! இப்புரிதலிலிருந்து காணும்போது, இறுதியில் அப்புள்ளி மட்டுமே முக்கியமானது; அப்புள்ளியை நோக்கிய நிகழ்வுமுறையே பிரபஞ்சம் என்பது. நாம் அந்த வழிமுறையின் உணர்வுப் பூர்வமான பிரதிநிதிகள் ஆவோம்.
முதலிடத்தில் நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்? அதற்கான அடிப்படை அவசியம் என்ன? நாம் இருக்கிறோம்! ஆகவேதான் பிரபஞ்சத்தைப்பற்றி நாம் ஆராய்ந்து அறிந்திட விழைகிறோம்! நாம் இல்லாத நிலையில் பிரபஞ்சத்தைப்பற்றி நமக்குக் கவலையில்லை! அதேவேளையில், நாம் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. இரண்டையும் வேறுவேறாகப் பார்ப்பது என்பது, ஒரே நிகழ்வுமுறையின் வெவ்வேறு கட்டங்களை, வளர்ச்சி நிலைகளைத் தனித்தனியே காண்பதன் வழியாக மட்டுமே எழுகிறது.
பரிணாமம் என்றால் என்ன, பரிணாமத்தில் பரிணமிப்பது எது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாதவரை, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில், உயிர்-ஜீவிகளைப் பற்றியும், இன்னும் அறிவுக்கூர்மையுள்ள ஜீவிகளான நம்மைப்பற்றியும், இன்னும் எதைப்பற்றியுமே நாம் உருப்படியாகப் புரிந்துகொள்ள இயலாது! பிரபஞ்சம் என்பது ஒரு பொதுவான சொல் ஆகும். பிரபஞ்சம் என்றாலே உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள், கிரகங்கள்; இன்னும் பலவகைப்பட்ட பருப்பொருளாலான பொருட்கள், மற்றும் நிகழ்வுகள்தான் என்பதாகப் பார்க்கும் பார்வை பழமையானதாகும். இப்பார்வை, பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரமாகவும், பருப்பொருளின் பிரும்மாண்டமான அமைப்பாகவும் காண்கிற மட்டுப்பாட்டினால் விளைந்ததாகும்! இவ்வாறு காண்பதற்கான ஒரு பக்கத்தையும், தேவையையும் பிரபஞ்சம் கொண்டிருக்கிறது என்ற போதிலும், பிரபஞ்சம் என்பது பிரதானமாக ஒரு பரிணாம இயக்கமே, நிகழ்வுமுறையே ஆகும்.
பிரபஞ்சத்தைப்பற்றி ஆராயும் விஞ்ஞானிகள், வெளி-காலம் (Space-Time), முப்பரிமாணம், நாற்பரிமாணம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், புறத்தே வியாபித்திருக்கும்
பிரபஞ்சத்தின் வெளி-காலமானது, உணர்வுள்ள மனிதஜீவிகள் தோன்றியபிறகு, உணர்வார்ந்த மனிதனின் உணர்வில் (Consciousness) குவிந்து, மேன்மேலும் குறுகி, வெளியும், காலமும் அற்ற தனி நிலைப்பாடு (Singularity) எனும் புள்ளியில் அடர்ந்து ஐக்கியமாகிவிடுகிறது! இதை நாம் பிரபஞ்சத்தின் செறிவடைவுக் கட்டம் (Conflationary Stage) என்றழைக்கலாம்.
இறுதி மானிட-மைய விதி
மானிட-மைய விதியின் மற்றுமொரு பதிப்பு, இறுதி மானிட-மைய விதி (Final Anthropic Principle) என வழங்கப்படுகிறது. பேர்ரோ & டிப்லர் (Barrow & Tipler) அவர்கள் முன்வைத்த மிகவும் அதீதமான இவ்விதியானது, அறிவுள்ள உயிர்கள் பிரபஞ்சத்தின் மிக அவசியமான ஒரு பண்புக்கூறு என்கிறது. மேலும் ஒருமுறை அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் பிறகு ஒருபோதும் இற்றழியாது என்கிறது. மேலும், மானிட-மைய விதியின் இப்பதிப்பானது, பிரபஞ்சத்தின் ஒரே குறிக்கோள் அறிவுள்ள உயிர்களை உருவாக்குவதும், அவற்றைப் பேணிக்காப்பதும் தான் எனச் சொல்லாமல் சொல்கிறது.
"அறிவுள்ள உயிர்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் அண்டவெளி முழுவதும் பரவிச் சென்று பிரபஞ்சத்தையே மாற்றியமைத்திடும்; அவ்வழியே, மானிடகுல மதிப்புகளை மிகத்தொலைவான எதிர்காலத்திற்கு ........ஓமேகா புள்ளி (Omega Point) எனப்படும் இறுதி ஒருமை நிலைக்குக் கடத்திச்செல்லும்.... .......அந்நிலையில், அறிவுள்ள உயிர்கள் அனைத்து பருப்பொருளையும், ஆற்றல்களையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்திடும்..." என்றெல்லாம் 'இறுதி மானிட-மைய விதி' விரிகிறது.
ஆனால், நாம் 'பிரபஞ்சம்' எனும் ஒரு பிரும்மாண்டமான மரத்தின் பகுதியாக - துல்லியமாகச் சொன்னால், அம்மரத்தின் பிஞ்சுகளாகவும், காய்களாகவும் - இருந்துகொண்டு, அம்மரத்தின் மூலத்தை அறியும் நோக்கில் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நம்மில் சிலர், அம்மரத்தின் வேர்களைத் தேடிச்சென்று, வேர்களிலிருந்துதான் அம்மரம் தோன்றியது என்கிறோம்! இன்னும் சிலர், இல்லை, இல்லை, 'கடவுள்'தான் அம்மரத்தைத் தோற்றுவித்தவர் என்கிறோம்! ஆனால், இந்த இரண்டு பார்வைகளும் தவறானவை; மாறாக, அம்மரமானது ஒரு வித்திலிருந்துதான் தோன்றியது; அந்த வித்தை - பிஞ்சுகளாகவும், காய்களாகவும் விளங்கும் நாம் ஒவ்வொருவரும் முற்றிக் கனியாவதன் வழியாக, நம்முள்ளேதான் கண்டடைய முடியும் என்கிறோம்! இந்த உவமையில் இடம்பெறும் பிஞ்சு, காய், கனி, வித்து என்பவை உணர்வின் வளர்-முகமான உயர் நிலைகளைக் குறிக்கின்றன!
ஒருவகையில், இந்த ‘இறுதி மானிட-மைய விதி’ யானது மானிடர்களின் மையத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது என்றாலும், அதன் கூற்றுக்கள் அதீதக் கற்பனை சார்ந்ததாக உள்ளன. மேலும், அவை பெரிதும், பிரபஞ்சத்தின் பொருண்மையான பண்புகளையும், பௌதிக விதிகளையும் அடிப்படையாகக் கொண்டமைந்தவையாக உள்ளதாலேயே மிகவும் தவறான கருதுகோள்களுக்கும், கற்பனையான முடிவுகளுக்கும் இட்டுச்சென்றுள்ளன. குறிப்பாக, ஒருமுறை தோன்றிய அறிவுள்ள உயிர்கள், அதாவது அவற்றின் சந்ததிகள் பிறகு எல்லாக் காலத்திற்கும், பிரபஞ்சம் முடியும் வரையிலும் நீடித்து நிலைத்திருக்கும் எனப்படுகிறது! இத்தகைய கூற்று, அறிவுள்ள உயிர்களின், குறிப்பாக மனிதஜீவிகளின் தனித்துவமிக்க தன்மையை அறியாததன் விளைவாகவும்; முக்கியமாக, பரிணாமம் பற்றிய ஆழமான புரிதலின்மையின் விளைவாகவும் எழுந்த கற்பனைக் கோளாறு ஆகும். ஒரு தனிமனிதனை எடுத்துக் கொண்டால், அவன் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள், அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே இப்பூமியில் உயிர்வாழ்பவனாக இருக்கிறான்; ஆயினும், அவன் அக்குறுகிய வாழ்காலத்திற்குள்ளாகவே தனது பரிணாம முழுமையை அடைவதற்கான உட்பொதிவை, உள்ளுறையாற்றலைக் கொண்டவனாகத் திகழ்கிறான்!
பிரபஞ்சம் என்பது அடிப்படையில் ஒரு பரிணாம இயக்கம் என்று நாம் குறிப்பிட்டுள்ளோம். அதில் மனிதன் என்பவன் அப்பரிணாம வழிமுறையின் உணர்வுப்பூர்வ பிரதிநிதியாவான்! துல்லியமாகச் சொன்னால், மனிதனின் வழியாக, இன்னும் ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகத்தான் பிரபஞ்சமானது தனது ஒப்பற்ற பரிணாம முழுமையை எட்டுகிறது. அதாவது, பருப்பொருளாலான பிரபஞ்சத்தின் இறுதி முடிவு, எவ்வாறு அமையும் - ஒரு மாபெரும் உள்ளடர்தலில் (Big Crunch) முடிவடையுமா, அல்லது முற்றிலும் தனது வெப்ப ஆற்றலை இழந்து வெப்பச்சாவில் (Heat Death) முடிவடையுமா என்பது போன்ற அனுமானங்கள் தேவையற்றவையாகும்! ஏனெனில், இத்தகைய அனுமானங்கள் பருப்பொருளின் அடர்த்தி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுபவையாகும். அதாவது, பிரபஞ்சத்தை முழுக்க முழுக்க பருப்பொருளின் பண்புகள் மற்றும் பௌதிக விதிகளுக்குச் சுருக்கிக் காணும் மாபெரும் மட்டுப்பாட்டின் மயக்கத்திலிருந்து இன்னமும் விஞ்ஞானம் விடுதலையாகவில்லை!
பருப்பொருள் என்பது பிரபஞ்சத்தின் ஒரேயொரு பண்பு மட்டும்தானே தவிர அதுவே ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அல்ல! இன்னும் சொல்லப்போனால், பருப்பொருளை ஒரு பண்பாகவே கணக்கில் கொள்ள இயலாது. சரியாகச் சொன்னால், அது வெறும் ஒரு கட்டுமானப் பொருள் மாத்திரமே; அதைக்கொண்டு அமையும் கட்டுமானங்களின் மூலம் வெளிப்படக் கூடியவற்றையே (Emergent properties) -உயிர், உணர்வு (Consciousness) ஆகியவற்றையே- முறையான பண்புகளாகக் கொள்ளவேண்டும். இவ்வழிமுறையின் மூலமாக இறுதியாக எட்டப்படும் ‘வெளிப்படு-பண்பு’ தான் “இறுதி மெய்ம்மை” (Ultimate Reality) ஆகும்! அதுவே “மூல மெய்ம்மை”யும் (Source Reality) ஆகும்!
'பிரபஞ்சம்' என்பது பரிணாம வழிமுறையில் ஏற்கனவே உருப்பெற்றவை அனைத்தையும், இன்னும் உருப்பெறாத அம்சங்களையும், பண்புகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தத்தையும் குறிக்கும் பொதுவான ஒரு ஒற்றைச் சொல் ஆகும். பிரபஞ்சம் என்பது பல்வேறுவகைப்பட்ட அண்டவெளிப் பொருட்களும், நிகழ்வுகளும் மட்டுமே அல்ல. மாறாக, அத்தனை அண்ட வெளிப்பொருட்களும், நிகழ்வுகளும் சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் வழிமுறையின் வாயிலாக உருவானவையே என்பதால், அடிப்படையில் பிரபஞ்சம் என்பதை ஒரு பரிணாம இயக்கமாகக் காண்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி, நெடிய இடைப்பட்ட நிலைகளின் வழியாக வளர்ந்து, ஒரு முடிவான இலக்கு அல்லது முழுமை நிலையை அடையும் நிகழ்வுமுறை தான் பிரபஞ்சம் ஆகும்! ஒரு நெடிய சங்கிலித்தொடர் போன்ற நிகழ்வுமுறையில் குறிப்பிட்ட எவ்வொரு கண்ணியை, அல்லது, நிலையை; அல்லது எவ்வொரு பண்பையும், இதுதான் பிரபஞ்சம் என அடையாளப்படுத்திட முடியாது - அந்நிகழ்வுமுறையின் இறுதியான இலக்கு நிலையைத் தவிர! மரமானது அதன் கனியைக்கொண்டே அறியப்படும் என்பதுபோலத்தான் பிரபஞ்சமும். சிலர் காய்க்காத மரங்களும் உள்ளனவே என வாதம் செய்யலாம். ஆனால், காய்க்காத மரங்களைப் பற்றி அதன் காய்கள் எவ்வாறு பேசமுடியும்?
பிரபஞ்சத்தின் பிறப்பைப்போலவே, அதன் இறப்பும் பூடகமானதாகும்! அவ்வாறானதே மனிதனின் பிறப்பும், இறப்பும்! மனிதன் பிறக்கும்போது தனது உண்மையான (தன்னை உணரக்கூடிய முழுமையான) நிலையில் இருப்பதில்லை! அவ்வாறே மனிதன் இறக்கும்போதும் உணர்வுடன் இரு(ற)ப்பதில்லை! உண்மையான முழு-உணர்வுகொண்ட மனிதன் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு உச்சக்கட்டத்தில்தான் தோன்றுகிறான்; அல்லது பலரது விடயத்தில் அத்தகைய உச்சக்கட்டம் தோன்றுவதேயில்லை! இவ்வாறே, பிரபஞ்சத்தின் உச்சக்கட்டமும் அதனுடைய பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே முறையே தனது உச்சக்கட்டத்தை எட்டுகின்ற ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும்தான் நிகழ்கிறது! ஆக, பிரபஞ்சமானது இறுதியில் எவ்வாறு அழியும், அல்லது முடிவுக்கு வரும் என்பது குறித்த பருப்பொருள்சார்ந்த விஞ்ஞானக் கற்பனைகளில் நேரத்தை விரயமாக்குவது பயனற்றதாகும்!
பிரபஞ்சத்திற்கும், அறிவுள்ள ஜீவிகளுக்கும் (மனிதஜீவிகளுக்கும்) உள்ள தொடர்புகுறித்த விடயத்தில், அறிவுள்ள ஜீவிகள் பரந்த இப்பிரபஞ்சத்தின் மீது எவ்விதமான தாக்கத்தையும் செலுத்துவதான தடயம் எதுவும் இல்லை என விஞ்ஞானிகள் பேர்ரோ & டிப்ளர் இருவரும் தங்கள் நூலில் போகிறபோக்கில் ஒரு கருத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். ஆனால், இக்கூற்று மேலோட்டமான ஒன்றாகும். ஒரு மரத்தில் விளையும் ஒவ்வொரு கனியும் மறைமுகமாக பெரும் தாக்கத்தை அம்மரத்திற்குச் செய்கின்றது; அதாவது ஒவ்வொரு கனியும் அம்மரத்தின் முழுமையைச் சாத்தியமாக்குகின்றது! அவ்வாறே, பிரபஞ்சத்தின் மீதான அறிவுள்ள ஜீவிகளாகிய மனிதர்களின் தாக்கமும் மறைமுகமானதாகும்! மனிதஜீவிகள் தங்கள் தாக்கத்தை நேரடியாக பருண்மையாக பரந்த பிரபஞ்சத்தின் மீது செய்யத்தேவையில்லை. ஏற்கனவே இங்கு பூமிக்கிரகத்தின்மீது விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு நாம் செலுத்தியுள்ள பெரும்தாக்கங்கள் நமக்கும் பிறஜீவிகளுக்கும் மிகக்கேடான சுற்றுச்சூழல்சார்ந்த விளைவுகளை உருவாக்கியுள்ளன. கிட்டத்தட்ட நாமும், பிற உயிர்ஜீவிகளும் இற்றழியும் நிலைக்கு நாம் காரணமாகியுள்ளோம்! இந்நிலையில் நாம் பிற கேலக்ஸிகளையும் காலனியாக்குவது என்பதும் பிரபஞ்சம் முழுவதும் பரவி பருப்பொருளையும் பிற இயற்கை ஆற்றல்களையும் நம்முடைய முழுக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவது என்பதும் கற்பனைக் கோளாறாகும்! இது அறிவுள்ள ஜீவிகளுக்கு அழகல்ல!
ஆக, மேற்காணும் விளக்கங்களின்படி, ‘இறுதி மானிட-மைய விதி’யின் பிரதான கருதுகோளான 'அறிவுள்ள தகவல்-முறைப்படுத்தும் (Intelligent information-processing) ஜீவிகள் பிரபஞ்சத்தில் தோன்றுவது கட்டாயம்; அவ்வாறு அவை ஒருமுறை தோன்றிடும் பட்சத்தில், அவை ஒருபோதும் மரிப்பதில்லை' என்பது மிகவும் அதீதமானதொரு நிலையாகும்; ஆகவே, அதற்கு அவசியமில்லை என்றாகிறது. ஏனெனில், முடிவேயில்லாமல், தகவல்-முறைப்படுத்துதல் என்பது தேவையற்றதாகும். அதாவது, தகவல்-முறைப்படுத்துதலுக்காக தகவல்- முறைப் படுத்துதல் (Information-processing for the sake of itself) என்பது அபத்தமானதாகும். தகவல்-முறைப்படுத்துதலின் நோக்கம் அறிவைப் பெறுவதற்காகத்தான். எதைப்பற்றிய அறிவு என்றால், இறுதி மெய்ம்மை பற்றிய அறிவுதான் - பிரபஞ்சம், மனிதன், வாழ்க்கை என ஒட்டுமொத்தத்தின் அர்த்தம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை அறிவதுதான்! அதற்காக ஒருவன் அனந்த காலம் வாழ்ந்துகொண்டிருப்பது என்பது சாபக்கேடான நிலையாகும்! ஆம், இறுதி மெய்ம்மையை, அர்த்தத்தை ஒவ்வொருவனும் தன் வாழ்-காலத்திற்குள்ளாகவே உணர்ந்தறிந்து தன் பரிணாம முழுமையை அடைந்திட முடியும்!
துல்லிய-மதிப்பமைவு (Fine-Tuning)
மானிட-மைய விதி மனிதனை பிரபஞ்சப் (பரிணாம) இயக்கத்தின் பிரதான இலக்காகக் காண்கின்றது என்றால், மனிதஜீவியை உருவாக்கிடும் வகையில், பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளும் (Initial conditions), சில மாறாத பொருளியல் மதிப்புகளும் (Physical Constants) துல்லியமாக அமைக்கப்பட்டதாக "துல்லிய-மதிப்பமைவுக் கோட்பாடு" (Fine-Tuning) சொல்கிறது! இவ்விரு கோட்பாடுகளின் ஊடாக, இறையிலாளர்கள் கடவுளை உள்ளே கொண்டு வந்துவிடுகின்றனர்; அதாவது, கடவுள்தான் இப்பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் துல்லியமாக அமைத்தவர் என்கின்றனர்! ஆகவே, நாத்திகர்களும், பொருள்முதல்வாதிகள், இயற்கைவாதிகள், மற்றும் சில விஞ்ஞானிகளும் இவ்விரு கோட்பாடுகளையும் எதிர்த்து வருகின்றனர். இவர்களின் கேள்வி என்னவென்றால், கடவுள் ஏன் பெருவெடிப்பை உருவாக்கவேண்டும், பிறகு மனிதனின் வரவுக்காக பல நூறு கோடியாண்டுகள் காத்திருக்கவேண்டும்?" என்கின்றனர். மேலும், பிரபஞ்சமானது நமக்காக துல்லியமாக மதிப்பமைவு செய்யப்படவில்லை, நாம்தான் அதற்கேற்றவாறு தகவமைந்து இருக்கிறோம் என்று விக்டர் ஸ்டெஞ்செர் (Victor Stenger) போன்ற விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
ஆனால், இந்த தர்க்கம் பிரபஞ்சம் பற்றிய மிகவும் மேலோட்டமான, ஆகவே தவறான புரிதலின் வெளிப்பாடே ஆகும்! மானிட-மைய விதி பற்றிய விவாதத்தில், மனிதன் உருவாகும்வகையில் பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் துல்லியமாக அமையச்செய்தது யார் அல்லது எது ; அதாவது கடவுளா, அல்லது இயற்கையா என்பது இப்போதைக்கு முக்கியமல்ல! ஏனெனில், தெளிவான நோக்கத்துடன் முன்-யோசித்து, திட்டமிட்டு, கடவுள், அல்லது வேறு சக்தியினால் மதிப்பமைவு செய்யப்பட்டதோ, அல்லது, விபத்துபூர்வமாக எல்லா நிலைமைகளும், மதிப்புகளும் கூடி அமைந்ததோ; உயிர்-ஜீவிகளும், உணர்வுள்ள மானிடஜீவிகளும் உருவாகும் வகையில் பிரபஞ்சமானது துல்லிய மதிப்பமைவு (fine-tuning) செய்யப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்!
துல்லியமாக மதிப்பமைவு பெற்ற சில காரணிகள் என இதுவரை அறியப்பட்ட நான்கு அடிப்படை விசைகளைக் கூறலாம். அவற்றில் ஒன்றான வலுவான அணுக்கருவியல் விசையானது (Strong nuclear force) கொஞ்சம் அதிக ஆற்றல் கொண்டதாயிருந்தால், உயிர்த் தோன்றுவதற்கு மிகவும் இன்றியமையாத ‘ஹைட்ரஜன்’ தோன்றியிருக்காது போயிருக்கும். அது கொஞ்சம் வலுக்குறைவாக இருந்திருந்தால், ஹைட்ரஜன் மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே தனிமமாக அமைந்திருக்கும்.
நான்கு அடிப்படைவிசைகளுள் இன்னொன்றான வலுக்குறைவான அணுக்கருவியல் விசையானது (Weak nuclear force), அதன் மதிப்பில் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும், நட்சத்திரங்களில் கனமான தனிமங்களை உருவாக்குவதற்குத் தேவையான "ஹீலியம்" எனும் தனிமம் போதுமான அளவிற்கு அமைந்திருக்காது போயிருக்கும். அல்லது, நட்சத்திரங்கள் வெகு சீக்கிரமாக எரிந்து தீர்ந்துவிடும்; அதனால், கனமான தனிமங்களை அண்டவெளியெங்கும் பரவச்செய்யும் சூப்பர் நோவா' (Supernova) என்று குறிப்பிடப்படும் "நட்சத்திர வெடிப்பு" நிகழ்வுகள் நிகழாமல் போயிருக்கும். அதாவது, உயிர் தோன்றுவதற்கு மிகவும் அடிப்படையான கனமான தனிமங்கள் ஆற்றல் உலைகளான நட்சத்திரங்களின் மையங்களில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நான்கு அடிப்படை விசைகள் என அறியப்பட்டவைகளுள் ஒன்றான, மின்காந்த விசையானது
(Electromagnetic force), அறியப்பட்ட அதன் மதிப்பைவிட சிறிது வலுவாகவோ, அல்லது சிறிது வலுக்குறைந்தோ இருக்குமானால், அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளும், சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகியிருக்காது.
அதேபோல், நான்கு அடிப்படை விசைகளில் மற்றொன்றான ஈர்ப்பு விசை (Gravity) யானது , அதன் மதிப்பில் கொஞ்சம் பெரிதாயிருந்தால்கூட, அதன் ஒரு விளைவு என்னவாக இருக்கும் என்றால், நட்சத்திரங்கள் மிகு கொதிப்பாகவும், விரைவாக தன் எரிபொருளை எரித்துத் தீர்த்துவிடுவதாயும் அமைந்திருக்கும். ஈர்ப்பு விசையானது கொஞ்சம் சிறிதாயிருந்தால்கூட, நட்சத்திரங்கள் ஆற்றலை உமிழும்வகையில் எரியாமல் போயிருக்கும்; அதனால் கனமான- தனிமங்கள் உருவாக முடியாது. இவ்வாறு உயிர் தோன்றுவதற்கு இயைபாக அமைந்தவையாக, 25 -க்கும் மேற்பட்ட காரணிகள் துல்லியமாக மதிப்பமைவு பெற்று அமைந்துள்ளதாக இனம் கண்டறியப்பட்டுள்ளன. …..
தொடர்ந்து பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பின் தன்மை குறித்துக் காண்பதற்கு முன், முதலிடத்தில், பிரபஞ்சம் என்று எதை நாம் குறிப்பிடுகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுப்பது மிகவும் முக்கியமாகும். விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகிய அண்டவெளிப் பொருட்கள் மற்றும் கருந்துளைகள் (Black holes), ‘சூப்பர் நோவா’ (Super nova) போன்ற வினோத நிகழ்வுகளையும்; காலம், வெளி, நிறை, அணுத்துகள்கள்; ஈர்ப்பு (Gravity), மின்காந்த விசை ஆகிய விசைகளையும் உள்ளடக்கிய, பரந்துவிரியும் பிரும்மாண்டமான பருப்பொருள் தொகுதியைத்தான் பிரபஞ்சம் எனக் காண்கின்றனர். ஆனால், இவ்வாறு அவர்கள் காண்பது மூன்றில் ஒரு பகுதி பிரபஞ்சத்தை மட்டுமே ஆகும்! அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளத்தையே அவர்கள் ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் கண்டு மயங்கித் தடுமாறிக் கொண்டுள்ளனர்.
ஆனால், பருப்பொருளின் தளத்தையடுத்து பருப்பொருள் தன்மையை மீறிய பரிணாம வளர்ச்சி நிலையாகத் திகழும் உயிர்ஜீவிகளின் தொகுதியும் இப்பிரபஞ்சத்தின் சட்ட முறைப் படியான (Legitimate Part) பகுதிதான். இதை நாம் பிரபஞ்சத்தின் இடைத்தளம் அல்லது உயிரியல் தளம் என்றழைக்கலாம்; அல்லது இரண்டாம் பிரபஞ்சம் எனவும் இதை அழைக்கலாம். இந்த தளத்தையடுத்து, பிரபஞ்சத்திற்கு அடுத்த மூன்றாவது ஒரு தளமும் உள்ளது. அதுதான் சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் திறன்பெற்ற மானிட ஜீவிகளின் தொகுதியாகும். இத்தளத்தை நாம் உணர்வியல் தளம் அல்லது மூன்றாம் பிரபஞ்சம் என்றும் அழைக்கலாம்.
இப்போது நாம் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பின் தன்மை குறித்துக் காண்போம். வலுவற்ற மானிடமைய விதியின் உட்கோள் என்னசொல்கிறது என்றால், மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறான் என்கிறது. அதாவது, பிரபஞ்சத்தையும், மனிதனையும் தனித்தனி அம்சங்களாகப் பார்க்கும்போது தவறான புரிதலுக்கு அது இட்டுச் செல்வதாய் அமைந்திடும். ஒருவகையில், அதாவது, பிரபஞ்சத்தின் பருப்பொருளாலான அடித்தளத்திlல் இருந்துதான் உயிரியல்தளம் எழமுடியும்; இவ்வகையில், உயிரியல்தளம் பருப்பொருள் தளத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்வது நியாயமானதே. அடுத்து, உணர்வுள்ள மனிதஜீவிகளைக்கொண்ட உணர்வியல்தளமானது அதற்கு முந்தைய இடைத்தளமான உயிரியல் தளத்தையும், அடித்தளமான பருப்பொருள் தளத்தையும் சாந்திருக்கிறது என்பதும் சரியானதே. அதே நேரத்தில், ஒரே பரிணாம வழிமுறையின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களான இம்மூன்று தளங்களையும் பண்பினடிப்படையில் நாம் வேறுவேறாக பிறித்தறிவது தவிர்க்கமுடியாதது என்றாலும், பரஸ்பரம் ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்துவது முறையாகாது.
மேலும், வலுவான மானிடமைய விதியின் உட்கோளானது, பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறது என்கிறது. இப்பார்வையிலும் தவறில்லை! பரிணாம வழிமுறையானது படிப்படியாக அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டும்வகையில் முன்னேறிச் சென்று அதன் ஒப்பற்ற இலக்கு நிலையை அடைந்தாகவேண்டும் என்றவகையில் பிரபஞ்சம் எனும் பரிணாம இயக்கமானது அடுத்தடுத்த உயர்-வளர்ச்சி நிலைகளை சார்ந்திருக்கிறது என்று சொல்வது பொருத்தமானதே! ஆக இவ்விரு உட்கோள்களின்படி, பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ளது இருவழிப் பிணைப்பு என்பது உறுதியாகிறது. ஆக, பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறதா? அல்லது மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறானா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை, இறுதியாக, பிரபஞ்சமும் நாமும் இணைந்து பரிணாம நிகழ்வுமுறையின் முடிவான இலக்கு நிலையைச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான் அறுதி உண்மையாகும்!
முடிவாக, நாம் வாழும் இந்த பூமிக்கிரகம் பரந்த விண்வெளியில் (Spatially) பிரபஞ்சத்தின் மையத்தில் இருக்கிறதோ, இல்லையோ; மனிதஜீவிகளாகிய நாம் இப்பிரபஞ்சத்திற்கு முக்கியமானவர்களோ, இல்லையோ; பூமியில் உயிர் தோன்றியது விபத்தோ, அல்லது திட்டமிடப்பட்ட உருவாக்கமோ; உயிரியல் பரிணாமத்தின் உச்சக்கட்டமாக சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் திறன்பெற்ற மானிட இனம் தோன்றியது என்பதும் விபத்து பூர்வமானதோ, இல்லையோ; நாம் இங்கு இருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத நிஜமாகும்! அந்த நிஜத்தின் உணர்த்துகோள்களை (Implications) நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும். ஆக, மானிட-மைய விதியானது, மனிதனையும், பிரபஞ்சத்தையும், அதன் பௌதிக விதிகளையும்; அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் மறுபரிசீலனை செய்யுமாறும்; அவ்வழியே பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவை உணர்வுப்பூர்வமாகப் புதுப்பித்துக்கொண்டு, பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் பொதுவான பரிணாம இலக்கை அடையும்வகையில் முன்னேறிச்செல்ல அழைப்பு விடுக்கிறது!
மானிட-மைய விதி தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் :
1. மானிட-மைய விதி மற்றும் துல்லிய-மதிப்பமைவு (Fine-Tuning) கோட்பாட்டின் மீது தொற்றிக்கொண்டு கடவுளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாகச் சொல்வது சரியா?
ஒருவகையில் சரிதான்; ஆனால், கடவுள் என்பது எத்தகைய மெய்ம்மை என்பதை அவர்கள் (இறையியல்வாதிகள்) விளக்கியாக வேண்டும்! மேலும், பிரபஞ்சத்தின் மூலகாரணமாக அமைந்த கடவுளைவிட பிரபஞ்சத்தின் முடிவான (பரிணாம) விளைவாக எழும் கடவுள்தான் முக்கியம்! ஏனெனில், கடவுளை நாம் பரிணாமத்தின் முழுமையில் மட்டுமே கண்டறிய முடியும்!
2. பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டதா?
இது சற்று சிக்கலான கேள்வியாகும்! பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்படவில்லை என்றால், வேறு எதற்காகப் படைக்கப்பட்டது? மனிதன் இல்லாத பிரபஞ்சத்தைப்பற்றி யார் அல்லது எது ஆராயவும், அறியவும் கூடும்? உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள், கிரகங்கள்… போன்ற இவை மட்டும்தான் பிரபஞ்சமா? கல், மண், புல், பூண்டு, மரம், புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள், மனித ஜீவிகள்… இவையெல்லாம் பிரபஞ்சம் இல்லையா? ஒருவகையில், மனிதனைப்போல் வேறெதுவும் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்பதால், மனிதனுக்குத் தனிச்சிறப்பான ஒரு இடம் உள்ளது எனலாம்! அதே நேரத்தில், அவனுக்கு தனித்துவமான பெரும் பொறுப்பும், பரிணாமப் பணியும் உள்ளன! உண்மையில், இப்பிரபஞ்சம் தனக்காக இல்லை; மனிதனும் தனக்காக இல்லை! பிரபஞ்சம் என்பது பல கண்ணிகளைக்கொண்ட ஒரு நெடிய சங்கிலி போன்றதாகும்; அதில் ஒவ்வொரு கண்ணியும் வித்தியாசமானதாகும்; அவற்றுள் மனிதனும் ஒரு கண்ணி ஆவான், ஆனால், மிகவும் முக்கியமான ஒரு கண்ணியாவான். அது அவனது விசேடமான பரிணாமப் பாத்திரத்தினால் (Evolutionary Role) அமைந்ததாகும்.
பிரபஞ்சம் என்பது காலம்,வெளி, பருப்பொருளாலான ஒரு ஊடகம் (Medium) ஆகும். பருப்பொருள் என்பது சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையிலமைந்த பரிணாமத்தின் கட்டுமானப்பொருள் ஆகும். பிரபஞ்சம் என்பது ஒரு பிரும்மாண்டமான அமைப்பு மட்டுமல்ல. அது ஒப்பற்றதொரு இலக்கை நோக்கிச் செல்லும் மாபெரும் இயக்கமும் ஆகும். ……
பிரபஞ்சம் என்பது ஒரு நெடிய நிகழ்வுமுறையானால், அதை அடிப்படை அணுத்துகள்களுடன் இவ்வளவுதான் பிரபஞ்சம் என்று நிறுத்திக்கொள்ளமுடியாது! அல்லது,உடுமண்டலங்களுடனோ, நட்சத்திரங்களுடனோ, கிரகங்களுடனோ, அல்லது முதல் உயிரியுடனோ, அல்லது டார்வினின் வானரத்துடனோ, அல்லது, அந்த வானரத்தின் வழித்தோன்றிய மனிதனுடனோ, ‘இவ்வளவு தான் பிரபஞ்சம்’ என்று முடித்துக்கொள்ள முடியுமா? பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில், மனிதன் எதற்காகப்படைக்கப்பட்டிருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்காமல் சாத்தியமில்லை! அதாவது, மனிதனின் வழியாக, மனிதனைக்கடந்த இறுதிப் பரிணாம இலக்கு ஒன்று இருப்பதால்; மேலும், அந்த இலக்கானது உணர்வார்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும் அடையப்பட இருப்பதால், இப்பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது என்று கொள்வதிலும் தவறில்லை!
மேலும், மானிட-மைய விதியானது, ஒரு மனிதனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பொருந்துவதுபோல், மனித இனத்தை ஒத்த, உணர்வில் வளர்ந்த அனைத்து இனங்களுக்கும், வேற்றுக்கிரக ஜீவிகளுக்கும் பொருந்தும்!
3.பிரபஞ்சம் ஒன்றா, பலவா?
பௌதிகவியல் விஞ்ஞானி விக்டர் ஸ்டெஞ்செர் (Victor Stenger) அவர்களின் வாதத்தின்படி, நவீன பிரபஞ்சவியல் கோட்பாடுகள் கூறுவதுபோல வெவ்வேறு மாறா-மதிப்புகளையும், பௌதிகவிதிகளையும் கொண்ட பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும். ஆக, அதில் நமக்குப் பொருத்தமான ஒரு பிரபஞ்சத்தில் நாம் தோன்றியிருக்கிறோம் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளுக்காக துல்லிய- மதிப்பமைவு செய்யப்பட வில்லை; மாறாக, உயிர்ஜீவிகள்தான் பிரபஞ்சத்திற்கேற்ப தகவமைவமைந்துள்ளன என்கிறார். நமது பிரபஞ்சம் உயிர்ஜீவிகளுக்கு இயைபாக இருக்கிறது என்பதற்கு நிரூபணம் தேவையா என்ன? அதற்காக நாம் வெவ்வேறு மாறா-மதிப்புகளும், வேறுபட்ட பௌதிக விதிகளையும் கொண்ட எண்ணற்ற பல பிரபஞ்சங்களைக் கற்பனையில் உருவாக்கி அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமா? அவ்வாறு பல பிரபஞ்சங்கள் இருப்பதற்கான யாதொரு சான்றும், தடயமும் இல்லை; அப்படியே இருந்தாலும் அவற்றை கண்டுகவனிப்பதற்கான வழியும் இல்லை.
ஒருவகையில், பல்வேறு தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் கொண்ட எண்ணற்ற பல பிரபஞ்சங்கள் நிஜத்தில் இருக்கமுடியாது என்பதற்கு, இத்தகைய பல்வேறு பிரபஞ்சங்களின் சாத்தியப்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து பொருத்தமான ஒரு பிரபஞ்சமாக, நாம் வாழ்கின்ற இப்பிரபஞ்சமானது தொடக்கத்திலேயே தெரிவு செய்யப்பட்டு விட்டதே காரணம் எனலாம்!
சொல்லப்போனால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இப்பிரபஞ்சத்தையே ஒரு எல்லைக்கு மேல் நம்மால் காணவும், ஆராயவும் வழியில்லை. மேலும், நம் பிரபஞ்சத்தை முழுமையாக கண்டுகவனிக்கும் சாத்தியம் ஒருபோதும் ஏற்படப்போவதுமில்லை! நாம் வாழ்ந்துவரும் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சம் உயிர்பெற்று, உணர்வும் பெற்றெழுந்தால் எப்படியிருக்கும்? சந்தேகமில்லாமல், அவ்வாறு உயிர்பெற்று, உணர்வும் பெற்றெழுந்த பிரபஞ்சம்தான் மனிதன்! ஒருவகையில் ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறும்-பிரபஞ்சம் (Miniature Universe) எனவும் கொள்ளலாம். எவ்வாறெனில், இப்பிரபஞ்சத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பிரதான அம்சங்கள் அல்லது பண்புகளான பருப்பொருள் (Matter), உயிர் (Life), உணர்வு (Consciousness) ஆகிய இம்மூன்றும் ஒருங்கே மனிதனுள்ளும் இடம்பெற்றுள்ளன!
4. வேற்று கிரகங்களில் அறிவுள்ள உயிர்ஜீவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், "மானிட-மைய விதி"யின் கதி என்னவாகும்?
ஒன்றும் ஆகாது! வேற்று கிரகங்களில் உயிர்ஜீவிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும்; கண்டுபிடிக்கப்பட்டாலும், கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும், மனிதனின் மையத்துவம் சிறிதும் மாறாது! இன்னும், நமது பூமிக்கிரகத்திலேயே எண்ணற்ற உயிரினங்கள், அதாவது கிட்டதட்ட 87,00,000 உயிரினங்கள் உள்ளன. மனித இனத்திலும் 7,70,00,00,000 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் மானிட-மைய விதி பொதுவானதே என்றாலும், பிரபஞ்சப் பரிணாம இயக்கத்தில் தனது இடம், பங்கு, பாத்திரம், தனது பரிணாம இலக்கு ஆகியவற்றை உணர்ந்த தனிமனிதர்களுக்கு மட்டுமே அவ்விதி முழுமையாகப் பொருந்தும். மனிதனின் மையத்துவமும், முக்கியத்துவமும் விசேடமான அவனது பரிணாமப் பாத்திரத்தினால் அடையப்பட்டதாகும். வேற்றுக்கிரகங்களில் உயிர்ஜீவிகளும், மனிதனை ஒத்த அறிவுள்ள ஜீவிகளும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், எவ்வகையிலும் அது மனிதனின் மையத்துவத்தைக் குறைத்துவிடவோ, விலக்கிவிடவோ செய்யாது! உங்களுக்கு ஒரு அண்டை வீட்டுக்காரர் இருக்கிறார் என்பதால், மானிட-மைய விதி உங்களுக்குப் பொருந்தாமல் போய்விடாது! உயிர்ஜீவிகளும், அறிவார்ந்த ஜீவிகளும் பிரபஞ்சம் முழுவதிலும் அவற்றுக்கு இயைபாக அமைந்த எல்லா இடங்களிலும் இருந்தாலும்; பிரபஞ்சத்திற்கும், அறிவார்ந்த ஜீவிகளுக்கும் இடையிலான ஒரு பொதுவிதி என்னவென்றால், முறையே அந்தந்த ஜீவிகள் பெற்றுள்ள உணர்வின் தன்மை, மற்றும் வீச்சுக்கு ( The Degrees of Consciousness) ஏற்ப அவை தம்மையும் பிரபஞ்சத்தையும் உணர்வுகொள்வதாக, ஆராய்ந்தறிவதாக இருக்கும்!
5. மானிட-மைய விதி என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்ல என்று சொல்லப்படுகிறதே, அவ்விதியின் தற்போதைய நிலை என்ன?
மானிட-மைய விதி என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்ல என்றால், எத்தனையோ விஞ்ஞானிகள் அதைப் பொய்ப்பிக்க முயற்சித்தும் இதுவரை யாதொரு தெளிவான முடிவையும் எட்ட இயலாதிருப்பதன் அர்த்தம் என்ன? மாபெரும் விஞ்ஞானிகள் எனப் போற்றப்படும் ஜான் எ.வீலர்( John A. Wheeler), ஸ்டீஃபென் ஹாக்கிங் (Stephen Hawking), ஸ்டீவென் வெயின்பெர்க் (Steven Weinberg ) போன்ற பலர் அதன் ஈர்ப்புக்கு இணங்காதிருக்க இயலாமல் போனது ஏன்? மானிட-மைய விதியின் மீதான விவாதம் இன்றளவும் தொடர்ந்துகொண்டே உள்ளது. முதலிடத்தில், மானிட-மைய விதி என்பது ஒரு கோட்பாடு அல்ல; அது வெளிப்படையாகத் தெரிகின்ற, இன்னும் அதன் ஆழம் அறியப்படாத ஒரு உண்மையைப் பற்றிய குறிப்பு ஆகும்.
அடுத்து, எல்லாவற்றையும் நாம் விஞ்ஞானப்பூர்வமான கோட்பாடுகளைக் கொண்டுதான் அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு வாழ்கிறோம் என்பதில்லை! முக்கியமாக, விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வுமட்டுமே என்பதை நாம் மறந்துவிடலாகாது.
மேலும் எல்லா அம்சங்களும் விஞ்ஞான அணுகுமுறைக்கு உட்படுபவையாகவும் இல்லை. ஆக, “மானிட-மைய விதி” என்பது அடிப்படையில், ஒரு விஞ்ஞானப் பிரச்சினையல்ல; அவ்வாறு அதை ஒரு விஞ்ஞானப் பிரச்சினையாகக் காண்பதற்கான பக்குவம் பொருண்மைவாதத்தினால் (Materialism) பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட விஞ்ஞானத்திடம் இல்லை! அடிப்படையில் அதை ஒரு தத்துவப் பிரச்சினை எனக்கொள்ளலாம்; அதைவிட, அதை ஒரு ஆன்மீகப் பிரச்சினையாகக் காண்பதுதான் பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால், மானிட-மைய விதியை விஞ்ஞானப் பூர்வமான கோட்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்; அதற்குமுன், விஞ்ஞான அணுகுமுறையின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை விரிவுபடுத்தியாக வேண்டும்!
6. விஞ்ஞானி கோப்பர்நிக்கஸ்-ன் கூற்றுப்படியும், நவீன பிரபஞ்சவியலின் புரிதலின்படியும்
பிரபஞ்சத்திற்கு மையம் என்பது கிடையாது என்ற நிலையில், பிரபஞ்சத்தின் மையம் பற்றிப் பேசும் 'மானிட-மைய விதி' யின் பொருத்தப்பாடு என்ன?
ஆம், 'பிரபஞ்சத்திற்கு யாதொரு மையமும் கிடையாது!' எனும் விஞ்ஞானிகளின் கூற்று சரியானதே! ஆனால், அவர்கள் பிரபஞ்சத்தை பருப்பொருளின் ஒரு மாபெரும் அமைப்பாக (Structure) மட்டுமே காண்கிறார்கள். ஆனால், நானோ பிரபஞ்சத்தை ஒரு பரிணாம இயக்கமாகக் (Evolutionary Movement) காண்பதன் அவசியத்தை முன்வைக்கிறேன், வலியுறுத்துகிறேன். இந்த அடிப்படை வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால் இரண்டு பார்வைக்கும் இடையே முரண்பாடு எழாது!
மேலும், நான் குறிப்பிடும் பரிணாமம் என்பது வெறும் உயிரியல் பரிணாமம் மட்டும் அல்ல; மாறாக, பரிணாமம் என்பது பிரபஞ்சத்தின் தொடக்கப்புள்ளியான பெரு-வெடிப்பு நிகழ்வுடனேயே தொடங்கி அறுபடாமல் பொருளியல், உயிரியல், உணர்வியல் என பண்புரீதியாக வெவ்வேறு தளங்களின் வழியாக இன்றளவும் தொடர்ந்து முன்னேறி தனது ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்வதாயுள்ளது.
ஒரு மரமானது விதையிலிருந்து முளைத்து சிறு செடியாக உயர்ந்து கிளைகள் விட்டு, படிப்படியாக உயர்ந்து வளர்ந்து மேன்மேலும் கிளைகள் பரப்பி விரிந்து வளர்ந்து பெரிய மரமாக எழுகிறது. ஆனால், ஒரு மரம் என்பது அதன் வேர்கள், அடிமரம், கிளைகள், இலைகள் மட்டுமேயல்ல! மாறாக, அம்மரமானது ஒரு கட்டத்தில், பூக்கின்றது, பூக்கள் பிஞ்சுகளாக மாறுகின்றன, பிஞ்சுகள் காய்களாகி, பிறகு காய்கள் முற்றிக் கனிகளாகின்றன.
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, வேர்கள், அடிமரம், கிளைகள், இலைகள் ஆகியவை உள்ளடங்கிய அமைப்பை மட்டுமே மரம் எனக் கணக்கில் கொள்கிறார்கள். இத்தொகுதியும் மரம் தான்; அதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இவ்வமைப்பின் நீட்சியாகவும், உயர் வளர்ச்ச்சி நிலைகளாகவும் தோன்றுபவைதான் பூக்கள், பிஞ்சுகள், காய்கள் மற்றும் கனிகள். இவையே ஒரு மரத்தின் மிக முக்கியமான பகுதிகள் ஆகும். ஆக, விதையிலிருந்து முளைத்து, சிறு செடியாக எழுந்து, தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து பல கிளைகள் பரப்பி, ஓங்கி உயர்ந்து எழும் மரமானது ஒருகட்டத்தில் பூக்கள்விட்டு, பிஞ்சுகளாகி, காய்களாகி, கடைசியாகக் கனிகளாகும் வரையிலான இந்த வழிமுறையைத்தான் நான் பரிணாம இயக்கம் என்றழைக்கிறேன்.
ஒரு மரத்தைப்பொறுத்தவரை, அதன் பூக்கள் தான் அம்மரத்தின் முதல் கட்ட மையம் ஆகும்! அடுத்து, பூக்கள் பிஞ்சுகளாக மாறியதும் அப்பிஞ்சுகள்தான் அம்மரத்தின் இரண்டாம் கட்ட மையம் ஆகும்! அடுத்து, பிஞ்சுகள் காய்களாகி நன்கு முற்றிக்கனிந்து கனிகளானதும் அக்கனிகள்தான் அம்மரத்தின் மூன்றாம் கட்ட மையம் ஆகும். இறுதி மையம் என்பது அக்கனிகளுக்குள் தோன்றும் விதைகளே ஆகும். வித்திலிருந்து எழும் மரம் மீண்டும் வித்தினுள் அடங்குகிறது. ஆக, வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளே மரத்தின் மையமும், இலக்கும் ஆகும்.
ஒரு மரத்தைப்போன்றதே பிரபஞ்சமும். ஒரே நேரத்தில், பிரபஞ்சமானது ஒரு மாபெரும் அமைப்பாகவும், ஒரு தனித்துவமான இயக்கமாகவும் விளங்குகிறது. பிரபஞ்சத்தை அதனுடைய பல்வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு அமைப்புரீதியாக மட்டுமே ஆராய்ந்து அதை முறையாகப் புரிந்துகொள்ள முடியாது. மாறாக, அது எத்தகைய இயக்கம் என்பதையும், அதன் இலக்கையும் புரிந்துகொள்வதன்மூலம் மட்டுமே முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியும்.
மேலும், மரமானது அதன் இலக்கு நிலையால் கட்டுப்படுத்தப்பட்டதாகும்; அதாவது அதனுடைய வளர்ச்சி நிலைகளின் ஒவ்வொரு கட்டமும், விதை எனும் இலக்கு நிலையை அடைவதற்கு ஏதுவாக, “இலக்கு நிலைத் தேர்வு” (Teleological Selection) மூலம் தீர்மானிக்கப் படுவதாகும். ஆக, இதே விதி பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். ஒரு மரமானது ஒருகட்டத்தில், பூக்களை உருவாக்குவதைப்போல, பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளைத் தோற்றுவித்துள்ளது. மனிதஜீவி என்பவனே பிரபஞ்ச விருட்சத்தின் பிஞ்சுகளும், காய்களும், கனிகளும் ஆவான்! ஆனால், பிரபஞ்சத்தின் ஒப்பற்ற இலக்கு நிலையை எட்டும் விடயத்தில், எல்லா மனிதர்களும் தங்களை இன்னும் ஆயத்தப்படுத்திக் கொள்ளவில்லை! இதற்குக் காரணம் மனிதர்கள் தங்களுக்கென சொந்த இலக்குகளையும், இலட்சியங்களையும், ஆசைகளையும் கொண்ட மிகவும் மட்டுப்பாடான ஜீவிகளாக உழன்றுகொண்டுள்ளனர்! பரந்த உலகு பற்றியும், வாழ்வின் இலக்கு பற்றியும் சிந்திக்கும் அளவிற்கு மனிதர்கள் இன்னமும் உணர்வு பெறவில்லை!
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தை அவர்கள் விந்தையான பல பொருட்களையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கிய உயிரற்ற, உணர்வற்ற, யாதொரு குறிக்கோளும், இலக்கும் அற்ற ஒரு மாபெரும் பௌதிக அமைப்பாகவும், வினோதமான ஒரு எந்திரமாகவும் பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்! பிரபஞ்சம் பற்றி அறியவேண்டுமென்ற உணர்வில் ஒரு சதவிகிதம் கூட பிரபஞ்சத்தின் அதிமுக்கியமான பகுதியும், பரிணாம இயக்கத்தின் உணர்வுபூர்வ பிரதிநிதியுமான மனிதனை(அதாவது,தங்களைப்பற்றி) ஆராய்ந்தறிய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணராதவர்களாக இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்!
அதீத மானிட-மைய விதி (The Extreme Anthropic Principle)
(இது இக்கட்டுரையாளரால் முன்வைக்கப்படும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட மானிட-மைய விதி)
1. பருப்பொருளாலான பிரபஞ்சமானது தன் வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்தில் உணர்வுபெற்றதாக மாறியாக வேண்டியது கட்டாயத்தேவையாகும்; இல்லாவிடில், அதன் இருப்பிற்கு யாதொரு அர்த்தமும் இருக்கமுடியாது. நல்ல வேளையாக, அதாவது தவிர்க்க இயலாத வகையிம் நாம் இங்கு இருக்கிறோம், நமது இருப்பே இந்த விதியின் நிரூபணம் ஆகும்.
2. பிரபஞ்சத்தின் பௌதிகவிதிகள் என்பவை அடிப்படையானவையோ, பிரதானமானவையோ அல்ல. உயிர்ஜீவிகளையும், அறிவுள்ள மானிட ஜீவிகளையும் அவை தோற்றுவிக்கவில்லை. மாறாக, பிரபஞ்சமானது உணர்வுபெற்றாக வேண்டுமென்ற உள்ளார்ந்த தேவையினை நிறைவேற்றும் பொருட்டு அமைந்த பரிணாமக் கருவிகளே பௌதிகவிதிகள்.
3. அதீத மானிட-மைய விதி யின் சிறப்பு என்னவென்றால், ‘பிரபஞ்சமே பிரதானம்’ எனும் தவறான விஞ்ஞானப் பார்வையை மாற்றி, மனிதனைப் பிரபஞ்சத்தின் மையமாகக் கொள்வதோடு, மனிதனின் வழியாக அடையப்படவேண்டிய இறுதி இலக்கு நிலையைப் பிரதானப்படுத்துகிறது என்பதேயாகும். ஆம், மனிதனே பிரபஞ்சத்தின் மையம் ஆவான்; ஆனால், மனிதனின் மையம் பிரபஞ்சத்தைக் கடந்த பரிமாணத்தில் உள்ளது! பிரபஞ்சத்தின் பரிணாம இலக்கு உயிர்ஜீவிகளை உருவாக்குவதோ, அல்லது, அறிவுள்ள ஜீவிகளை, அதாவது மனிதஜீவிகளை உருவாக்குவதோ அல்ல; மாறாக, தனது அசலான இயல்பை, தனது உண்மையான மெய்ம்மை நிலையைச் சென்றடைவது மட்டுமேயாகும். ஆக, பிரபஞ்சத்தின் இந்த இலக்கை அடைவதற்கான விசேட ஊடகங்கள் அல்லது பிரதிநிதிகள்தான் உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் ஆவர்!
4. "மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறானா?" அல்லது "பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறதா?" என்று கேட்டால், இறுதியாக, பிரபஞ்சமும் நாமும் இணைந்து பரிணாம நிகழ்வுமுறையின் முடிவான இலக்கு நிலையைச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான் அறுதியான உண்மையாகும்!
[ குறிப்பு : இந்த “அதீத மானிட-மைய விதி” யானது மேலும் விரிவாக்கத்திற்குட்பட்டதாகும்.
- கட்டுரையாசிரியர் ]
-----------------------------------------------------------------------------------------
ஆராய்ச்சிக்கு உதவிய நூல்கள்
The Anthropic Principle -Man as the Focal Point of Nature (1991) by Reinhard Breuer
Anthropic Cosmological Principle by John D. Barrow and Frank J. Tipler, 1986
ஆராய்ச்சித் தாள்கள்
Marko Uršič /University of Ljubljana/Slovenia
"Cogito ergo mundus talis est" On some metaphysical and epistemological aspects
of the Anthropic Cosmological Principle
-----------------------------------------------------------------------------------------
■
மா.கணேசன் / நெய்வேலி / 16-10-2018 - 14.11.2018
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE