Wednesday, 27 November 2024

வாழ்க்கையின் அழைப்பு

 





 

 

 

 

 

கோடை வரும் முன்னேயே அதன் முதல் தொடக்கத்தினை அதன் மென்மையான ஸ்பரிசத்தை மிகத் தெளிவாக உணர முடிந்தது. அன்று அந்தப் பகல் சரியாக 11.30 மணிக்கு (சனவரி 1991) கோடைக்காலம் தொடங்கியதாகத் தெரிந்தது. இதமான வெயில், இனம் புரியாத மணம் ஒரு கணம் தோன்றி மறைந்ததைப் போல் தெரிந்தது. அப்போது காலம் அகன்று விட்டிருந்தது. (கோடையின் தன்மை, அதிகரிக்கும் வெப்பம் மட்டுமல்ல!) அது ஒரு மந்திரக் கணம் போல் தோன்றியது. சுற்றுப்புறம் முழுவதும் ஒரு மந்திரக் கட்டுக்குள் சிக்குண்டிருந்தாற் போலிருந்தது. கோடை தொடங்கி விட்டது.

ஆனால், இந்த அனுபவத்தைக் கடனாகக் கொடுக்க முடியாது. அதிக விலை கொடுத்தும் வாங்கிட முடியாது. வாழ்க்கையின் இனிமைகளை அனுபவிக்க எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஏனென்றால், உண்மையான மகிழ்ச்சியையும், நிறைவையும் பெற்றிட காசு-பணம் தேவையில்லை என்பதை எல்லோரும் அறியமாட்டார்கள். ஆகவேதான் எல்லோரும் பணத்தின் பின்னே அலைகின்றார்கள்.

"பிரச்சினையற்றது வாழ்க்கை!" என்றால் பலரும் நம்ப மறுக்கிறார்கள். பிரச்சினைக்கும் வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. 'பிரச்சினை' என்பது மனித சமுதாயத்தின் கண்டுபிடிப்பாகும். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் அதற்கு பலவித அர்த்தங்களை செயற்கையாகக் கற்பித்துக்கொண்டதன் விளைவே பிரச்சினைகள்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிரச்சினைகளே வாழ்க்கையாகி விடுகின்றன. பிரச்சினைகளை தோற்றுவிப்பதும் பிறகு அவைகளைத் தீர்ப்பதுவுமான விபரீத விளையாட்டே வாழ்க்கை என்றாகிவிட்டது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்வரை, பிரச்சினைகளுக்கு முடிவுமில்லை, தீர்வுமில்லை!

ஆனால், வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ வேண்டுமென தீவிர ஆர்வம் கொள்ளும்போது, ஒருவன் புதிதாக பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதைத் தவிர்த்துவிடுகிறான். புரிந்துகொண்ட பிறகு, ஏற்கனவே பிரச்சினைகளாகிவிட்ட விடயங்களை விட்டு விலகிவிடுகிறான். ஆனால், வழக்கமான, பாரம்பரியமான வாழ்க்கையை விட்டு விலகுவது என்பது எல்லோராலும் இயலாத காரியமாகவே தோன்றுகிறது.

அர்த்தமற்ற விடயங்களை உதறித் தள்ளிவிட, உருப்படியான ஒரு காரியத்தை மேற்கொண்டிட ஒருவன் அடுத்தவனுக்காகக் காத்திருப்பது என்பது முட்டாள்தனமானதாகும். முயற்சியும், ஆர்வமும், துணிவும் உடையவன் தனித்தியங்குவதே சிறந்தது.

தனித்தன்மையுடையவன், வித்தியாசமானவன் சமுதாயத்திற்கு பயப்படவோ, பதில்சொல்லிடவோ அவசியமில்லை. மேலும் சமுதாயத்தின் பாராட்டையும், ஆதரவையும் ஒருவன் தனது கருத்துக்கும், செயலுக்கும் தேடி நிற்கத் தேவையில்லை. தனியனான ஒருவனுக்கு தனித் தன்மையே வழிகாட்டி. வாழ்க்கையுடனும், உண்மையுடனும், ஆழமானதொரு தொடர்பை அளிக்கக்கூடிய சுயமான ஒரு கருத்து, ஒரு காட்சி, அல்லது ஒரு உணர்வுதான் மற்ற எல்லாவற்றையும்விட ஒருவனுக்கு மிக முக்கியமானதாகும்.

வாழ்க்கையானது அகம், புறம் என இருமுகம் கொண்டது. சுற்றில் ( Routine)அமைந்த அன்றாட வாழ்க்கை ஆழமற்றது. காலையில் விழித்தெழுதல், உடற் தேவைகளை பூர்த்தி செய்தல், உத்தியோகத்திற்குச் செல்லுதல், அரசியல் பேசுதல், பொழுதுபோக்குதல், வீடு திரும்புதல், உணவு, உறக்கம், உறவுகொள்ளுதல் ஆகிய விடயங்களைச் சரிவரச் செய்து விட்டால்மட்டும் அது வாழ்க்கையாகிடாது. இவை புற அளவிலான விடயங்கள். இவை ஒரு நாளின் 24 மணி நேரத்தை உபயோகித்துக்கொள்கிற உத்திகள், அடிப்படையான ஆனால் மேலோட்டமான சடங்குகள்.

மனித சமுதாயத்தின் வரலாறு, நாகரீகம், பண்பாடு, விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் அனைத்து சாதனைகளும் புற அளவிலானவை. புற அளவிலான விடயங்களைக் கொண்டு வாழ்க்கையை நிரப்பிடும் முயற்சிகள் வீணானவை. அவை என்றுமே நிறைவை அளிக்கவியலாது. ஆனாலும், இந்த ஒரேவிதமான வாழ்க்கையை ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தும், இன்னமும் அதில் சலிப்பு தோன்றிடவில்லை நமது மனித சமுதாயத்திற்கு! இந்த சாதாரண, சராசரி வாழ்க்கை இன்னும் பிடிபடவில்லை. அதன் கரை காண முடியவில்லை!

ஆனால், இந்த நடைமுறை அல்லது அன்றாட வாழ்க்கை என்பதன் ஆழத்தைத் தொடாமல் அதை விரைவில் வாழ்ந்து அனுபவித்து அதை அதனுடைய தளத்தில், இடத்தில் வைத்துக் காணாமல் உண்மையான, கருவான வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்கவும் இயலாது. நடைமுறை அல்லது அன்றாட வாழ்க்கையானது அதனுடைய முறையான இடம், பங்கு, பாத்திரம்  ஆகியவைகளைக் கடந்து (மனித) வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திடும் அளவிற்கு அதை அனுமதித்தலாகாது,

நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதவிகிதத்தினர் புற அளவிலான விடயங்களில் சிக்குண்டுவிட்டனர். அந்த 99% சதவிகிதத்தினர் புதிய கருத்துக்களை, புதிய பார்வையுடைய  ஒரு (1 %) சதவிகிதத்தினருக்கு
பெரும் தலைவலியைக் கொடுப்பவர்களாக உள்ளனர். வித்தியாசமான, விதிவிலக்கான தனிமனிதர்கள் அன்னியர்களைப் போல இப்பூமிக்கிரகத்தில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள். அந்த ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான 'அன்னியர்கள்' எனப்படுபவர்கள் தான் உண்மையில் இப்பூமிக்கிரகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள், சொந்தமானவர்கள். இவர்கள்தான் இயற்கையுடனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும் இசைவுடன் இயங்குபவர்கள். ஏனென்றால், இந்த 'அன்னியர்கள்' மட்டுமே சமுதாய-பொருளாதார- அரசியல் களத்தினைக் கடந்ததான ஒரு பிரதேசத்தில் இயங்குபவர்களாக இருக்கிறார்கள். உண்மையான மனிதர்கள் இப்பூமியில் அன்னியர்களைப் போல வாழவேண்டியிருக்கிறது என்பது அவலமே.

ஆனால், உண்மையான அன்னியர்களான, அதாவது வாழ்க்கைக்கும், பூமிக்கும் தொடர்பில்லாதவர்களான அரசியல்வாதிகள், மதவாதிகள், அரசாங்க அதிகாரிகள், இன்னும் பலவிதமான எத்தர்கள், ஏமாற்றுக்காரர்கள், வீணர்கள், வியாபாரிகள், சமுதாயம் என்னும் பெயரில் மனித உறவுகளை ஏய்ப்பவர்கள், இன்னும் சாமானியர்கள் சராசரி மக்கள்..... ஆகியோர்கள் இப்பூமிக்கிரகத்திற்கு  மிகவும் நெருங்கியவர்களைப்போல சொந்தக்காரர்களைப்போல உலவிவருகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் எதிரிகள். ஆனால், இவர்கள் மத்தியில், தான் உண்மையான மனிதர்களும் தோன்றி வாழ்ந்திடவேண்டியுள்ளது. வாழ்க்கையை பிரச்சினையாக்கும் மனிதர்கள் தான் உண்மையான மனிதனுடைய ஒரே பிரச்சினை.

உண்மையான வாழ்க்கை என்பது சமுதாய - பொருளாதார -அரசியல் உலகைக் கடந்ததொரு பிரதேசத்தில்தான் மலரவேண்டியுள்ளது. சமுதாம், பொருளாதாரம், அரசியல் ஆகிய இம்மூன்று விடயங்களும் வாழ்க்கைக்கு பாலமாக அமையாமல் பெருந்தடைகளாக அமைந்துவிட்டன. ஆனால், இவை தாமாக அமைந்துவிடவில்லை. மாறாக, மனிதர்களின் வாழ்க்கை (அணுகு) முறையே இவைகளை அமைத்தது. ஆனால், மனிதர்கள் உண்மையான வாழ்க்கை வாழ விரும்பினால் இம்மூன்று விடயங்களையும் உடைத்து (அதாவது, முறையே அவற்றுக்குரிய அளவான இடங்களைக் கொடுத்து) வெளியே வந்திடவேண்டும்.

இன்றுவரை மனிதர்களுக்கு வாழ்க்கையின் ஒரு முகம் மட்டுமே பரிச்சயமாகி இருக்கிறது. அதிலும் கூட ஒரு ஒழுங்கை, இசைவைக் காண முடியவில்லை. ஓரிருவர் தவிர்த்து வாழ்க்கையின் இன்னொரு முகத்தை மனித சமுதாயம் இன்றளவும் கண்டறியவில்லை. ஆனால், வரலாறு நீண்டு கொண்டே செல்கிறது. அது எங்கு செல்கிறது என்று எவரும் கேள்வி எழுப்பியதில்லை. வரலாற்றுக்கு முடிவு உண்டா? பல்லாயிரம் தலைமுறைகள் பூமியில் தோன்றி மறைந்துவிட்டன, பல நூற்றாண்டுகள் ஓடிச் சென்றுவிட்டன. வரலாற்றின் முடிவைக் காண்பவர் யார்? அப்போது நிகழக் காத்திருப்பது என்ன? வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உள்ள தொடர்புதான் என்ன? எவ்விதத்தொடர்பும் இல்லை! வரலாறு, காலம் இவையுடன் தொடர்புடைய அனைத்தும் புறவயமானவைகள்.

ஆனால், வாழ்க்கை அகமயமானதும் கூட. அதற்குக் கால நிர்ணயம் ஏதுமில்லை. இந்தக் கணத்திலும் வாழ்க்கை முழுமையாகப் பொங்கி வழிகின்றது. வாழ்க்கையின் தரிசனம் காலத்தைப் போக்குவதில் இல்லை. காலத்தைக் கடப்பதில் தான் உள்ளது. வாழ்க்கையின் தரிசனத்தை காண்கையில் இந்தக்கணமும் இல்லாமல் போய்விடுவிடுகிறது. ஆனால், காலத்தைக்கடப்பதற்கு கால-எந்திரம் எதுவும் தேவையில்லை. ஒளியின் வேகமும் (3,00,000 கி.மீ/வினாடி) தேவையில்லை. உண்மையில் மனிதன் ஒரு கால -எந்திரமே. எண்ணங்கள் ஓய்ந்திடும் போது, மனம் அலைகளற்ற கடல் போல அமைதியுறுகிறது. அதற்குமேல் அல்லது கீழ் ஒன்றும் இல்லை. காலத்தைக் கடந்திட்ட நிலையில் இடம், அல்லது வெளி (Space)அல்லது உலகம் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மனிதனும் மறைந்து விடுகிறான். உண்மை (யாகிய வாழ்க்கை) மட்டுமே இருக்கிறது.

ஆகவே, நாளின் 24 மணி நேரத்தில், ஒரு மணி நேரமாவது, ஒருவன் அன்றாட வாழ்க்கை விவகாரங்களை கழற்றி வைத்துவிட்டு ஓய்வாக இருத்தல் அவசியமாகும். கூடவே, நாளைய தினத்தைப் பற்றிய ஆதங்கத்தையும், நேற்றைய தினங்களுடைய அவலங்களையும், களைந்தெறிந்து விடுவது நல்லது. மேலும் உள்ளூர் நடப்புகளையும், உலக நடப்புகளையும் மறந்திருத்தல் நல்லது.  ஏனென்றால், ஒருவனைச்சுற்றிலும் நடக்கின்ற விடயங்களனைத்தும் அப்படியொன்றும் உண்மையான வாழ்க்கையுடன் தொடர்புடையவைகள் அல்ல.

செய்தித் தாள்கள் தரும் செய்திகளில் மனிதர்களை உடனே மாற்றிவிடுகிற அம்சம் ஏதும் இல்லை. ஆகவே அவை தேவையில்லை. அனைத்து தொடர்பு ஊடகங்களும் அப்படித்தான். ஆகவே, அனைத்து உலக விடயங்களையும் எண்ணத்திலிருந்து உதறி எறிந்துவிட்டு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது அமைதியாய் இருப்பது அவசியம். ஆனால், இவ்விடயத்தை ஒரு பயிற்சியாக மேற்கொள்வதில் பயனில்லை. ஒருவன் உண்மையிலேயே உலக விடயங்களிலிருந்து சிறிது நேரமாவது விடுபட்டு இருப்பது தான் முக்கியமான விடயம். அநாவசியமாக ஒருவன் எப்போதும் உலக விடயங்களைத் தலையில் தாங்கிக் கொண்டிருப்பது அர்த்தமற்றதாகும். உலக விடயங்கள் என்றால், மனித சமுதாயத்தின் இன்றுவரையிலான கண்டுபிடிப்புகள், ஈடுபாடுகள், படைப்புகள் ஆகியவை. இவைகள் மனிதர்களது மேலோட்டமான தேவைகள் மற்றும் ஆசாபாசங்களின் தூண்டுதல்களினால் அம்மேலோட்டமான தேவைகளையும், ஆசாபாசங்களையும் திருப்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டவைகள்.

ஆனால், மனிதர்கள் தங்களுக்கு மிக மிக முக்கியமாக எது தேவை என்பதைப்பற்றி எண்ணிப்பார்த்தது கிடையாது. மேலும், வாழ்க்கையானது ஏதாவதொரு குறிக்கோளைக் கொண்டிருக்கக்கூடும் என்று சிந்தித்ததும் இல்லை. ஆனால், மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்த இலட்சியங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மனிதர்களது சொந்த இலட்சியங்களைப் பற்றி அதற்கு சிறிதும் அக்கறை கிடையாது. மேலும், அவைகளுக்கு வாழ்க்கையில் இடமும் இல்லை. ஏனென்றால், மனிதர்களது சொந்த இலட்சியங்கள்  வாழ்க்கையின் இலட்சியத்திற்கு முரணானதாகவே இருக்கும். அதாவது வாழ்க்கையின் இலட்சியத்தைத் தவிர்த்து மனிதர்கள் வேறெந்த  இலட்சியத்தையும் பிரதானமாகக் கொள்ள முடியாது.

இவ்வாறு உலக விடயங்களிலிருந்து விடுபட்டு தான் வாழ்ந்து வரும் விதத்தினை திரும்பிப்பார்த்து, அலசி, ஆராய்ந்து அவதானித்துப் பார்த்திடும் வேளையில், ஒருவன் உண்மையில் வாழ்க்கையுடன் சற்று தொடர்பு கொள்பவனாக ஆகிறான். உண்மையில், தான் வாழ்ந்து வருகின்ற வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து பார்த்தால்தான் ஒருவனுக்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது விளங்கும். இல்லாவிட்டால் தனது வழக்கமான வாழ்க்கையின் மட்டுப்படான தன்மை அறியாது ஒருவன் அதிலேயே அமிழ்ந்து வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்து போவான்.

ஒரு காலத்தில், அதாவது மனிதன் தோன்றிய போது அவனுக்கு கொஞ்சம் உணர்வு (Consciousness) உண்டான போது, அவனுக்கு இந்த பூமிக்கிரகமானது புதியதாகக் காட்சியளித்திருக்கக்கூடும். தன்னையும் புதியவனாகக் கண்டிருக்கக்கூடும். ஆனால், அந்த புதுத்தன்மையை மனிதன் மறந்தே போய்விட்டான். தான் படைப்பின் ஒரு அங்கம், அல்லது நீட்சி, அல்லது தொடர்ச்சி எனும் விடயம் இன்றைய மனிதனுக்கு அறவே தோன்றுவதில்லை. சமுதாய அமைப்புக்களை மனிதர்கள் உருவாக்கியதிலிருந்து, ஒருவித கூட்டு வாழ்க்கையைத் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு பூமியை ஒரு கிரகமாக, இயற்கையின் அங்கமாகக் காண்பதை அடியோடு நிறுத்திக்கொண்டுவிட்டனர். இன்று பூமியானது இயற்கையுடன் தொடர்புடையதாக, இயற்கைக்கு சொந்தமானதாக படைப்பின் விளைபொருளாக இல்லை. மாறாக, வல்லரசுகளுக்கும், இன்னும் பல பெயர்களைக்கொண்ட நாடுகளுக்கும் , அரசுகளுக்கும் சொந்தமாகவே உள்ளது. பூமியில், இன்று எந்தவொரு சிறு இடமும் இயற்கைக்குச் சொந்தமானதாக இல்லை; காடுகளும், மலைகளும், சமுத்திரங்களும், துருவப்பிரதேசங்களும்கூட - ஒவ்வொரு சதுர அடியும்- ஏதாவதொரு அரசுக்குச் சொந்தமானதாக இருக்கிறது. பூமியின் பரப்பானது நாடுகளுக்கிடையே அரசுகளுக்கிடையே பங்கு போடப்பட்டுவிட்டது. பூமியே ஒரு பெரிய மனைக்கட்டு வியாபாரம் (Real-estate)போலாகிவிட்டது. மனிதர்களுக்கு பூமியானது இன்றளவும் தட்டையாகவே தான் காட்சியளிக்கிறது! ஆனால், பூமியானது எந்தவொரு நாட்டிற்கும், அரசுக்கும் சொந்தமானதல்ல.

ஒருவன் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், மனிதர்களின் கட்டுக்கதையினின்றும் விடுபடவேண்டும் என்பதே. மனிதர்களின் இட்டுக்கட்டியதோர் உலகிலிருந்து ஒருவன் விடுபட்டு இயற்கையின், படைப்பின் உலகில் வாழ்ந்திடவேண்டும். இவ்வாறு மனிதர்களையும், சுற்றுப்புறத்தையும் மறந்து இருக்கும் வேளையில் ஒருவன் இயற்கையினுடைய பூமியின் மீது வாழ்பவனாக தன்னைக் காண்பான். தான் வேறு, பூமி, இயற்கை, பிரபஞ்சம் வேறு என்றில்லாமல் எல்லாவற்றுடனும் ஒன்றிப்போவான். இந்த அனுபவம் மிகவும் அடிப்படையானது, முக்கியமானது, இறுதியானது.

ஆனால், மனிதன்  இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்விற்கு சமுதாயத்தின் வாழ்க்கை (அணுகு) முறைகளில், அன்றாட கால அட்டவணையில் இடம் இல்லை. இயற்கையுடன் தனித்திருப்பதற்கு அவகாசமேயில்லாத வகையில் சமுதாய அலுவல்கள் மனிதனை சிதறடித்து விடுகிறது. ஆனால், மனிதன் வாழ்க்கையின் அழைப்பை கேட்பதற்கு இயற்கையுடன் தனித்திருக்க வேண்டும். இதற்கு முக்கியமாக ஒருவன் கூட்டத்திலிருந்து, அதன் கூச்சலிலிருந்து சிறிது நேரமாவது விலகியிருத்தல் அவசியம். இல்லாவிடில், ஒருவனைச்சுற்றியுள்ள கூட்டமானது அதனுடைய முட்டாள்தனமான கருத்துகளால் அவனை மூழ்கடித்துவிடும்.

* * *
உண்மையான முழுமையான வாழ்க்கையை எந்தவொரு பல்கலைக்கழகமோ, மத நிறுவனமோ, சமுதாய அமைப்போ, அரசோ ஒருவனுக்குப் போதிப்பதில்லை, போதிக்கவும் இயலாது. தனிமனிதன் ஒவ்வொருவனும் தானே, நேரே வாழ்க்கையுடன் தொடர்புகொண்டிடவேண்டும். உண்மையான வாழ்க்கையின் மீது ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், காலம் காலமாக தொடர்ந்திடுகிற, வரலாற்றின் வழி செல்கிற வாழ்க்கையின் மீது ஒவ்வொருவனும் சலிப்படைந்திருத்தல் வேண்டும். அதன் வெறுமையையும், அர்த்தமற்ற தன்மையையும் சகித்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருத்தல் வேண்டும். அதன் ஒரே விதமான மேலோட்டமான இன்பங்களுடன் திருப்தியடைந்து தேங்கிவிடாமல் இருத்தல் வேண்டும்.

முக்கியமாக ஒருவன் சமுதாயத்தின் வழிகளிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், வரலாறு என்பது வாழ்க்கையின் பாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டதொரு வழியாகும்.  வாழ்க்கையினை முழுமையாக அணுக இயலாமையினால் வாழ்க்கையின் நேர் பாதையில் மேலே செல்ல முடியாமல் தேங்கிப்போன மனிதக் கூட்டத்தின் வெளிப்பாடே வரலாறு. மனித சமுதாயம் தோற்றுவித்த தவறே வரலாறு. அது இன்றளவும் தொடருகிறது. ஆம், தவறுகளுக்கு மேல் தவறுகள், இவையே வரலாற்றை வழி நடத்திச் செல்கின்றன. ஆனால், வரலாறானது தவிர்க்க இய்லாத கதியில் அவ்வப்போது அதனுடைய இலக்கான போருக்கும், அழிவிற்குமே மனித சமுதயத்தை இட்டுச் செல்லும். உண்மையில் போர்கள் வரலாற்றை முடிவிற்கு கொண்டுவரவே முயற்சிக்கின்றன. வரலாற்றிற்கு இறுதி முடிவு என ஒன்றிருந்தால் அது மனித குலத்தின் ஒட்டுமொத்தமான இறுதியான அழிவாகவே அமையும்.

வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்யாமல் அதை மேலோட்டமாக வரையறை செய்தது சமுதாயத்தின் முதல் பெருந்தவறு. மேன்மேலும் செயற்கையான மதிப்பீடுகளை உருவாக்கியது முதல் தவற்றின் தொடர்ச்சி. . . . . ஆனால், வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து வாழ்ந்திடும் போது சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட செயற்கையான மதிப்பீடுகளுக்கு இடமில்லாமல் போய்விடும். செயற்கையும், போலியுமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், முரண்பாடுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும்.

உண்மையான, முழுமையான வாழ்க்கையில் எவ்வித போட்டிக்கும், இடமிருக்காது. போட்டிகள் இல்லையென்றால், வரலாறும் இல்லை. உண்மையான வாழ்க்கை காலமற்றது. ஆகவே என்றென்றும் அது ஒன்றானது. காலம் அற்ற நிலையில் வரலாற்றுக்கு இடமில்லை. வாழ்க்கை மட்டுமே இயங்கும். வாழ்க்கையானது அனாதியில் தொடங்கி அனாதியில் முடிகிறது.

உயிருடன் இருப்பதென்பதே ஒரு அதியற்புதமான விடயம்! வாழ்க்கையில், அதற்கு மேல் என்ன வேண்டும்? ஆனால், இந்த அதியற்புத அனுபவம் எத்தனை பேருக்குக் கிட்டுகிறது? ஒருவனைச் சுற்றி படைப்பு பொங்கி வழிகின்றது! சாலையில் செல்லும் போது இன்னொரு மனிதனைச் சந்திப்பது இன்னும் அற்புதமானது! ஆனால், நாம் சாலையில் சென்று கொண்டிருக்கையில் இன்னொரு அற்புதத்தைச் சந்திப்பதில்லை! மாறாக, நமது எதிரியை, உத்தியோகத்தில், வியாபாரத்தில், பொருளாதாரத்தில், அந்தஸ்தில் நம்முடன் போட்டியிடுகின்ற ஒரு எதிரியைத்தான் நாம் சாலையில் எதிர்கொள்கிறோம்! வாழ்க்கையிலிருந்து நாம் வெகுதொலைவு விலகிச் சென்றுவிட்டோம்! நாம் கண்டுபிடித்த மதிப்பீடுகள் நம்மை எங்கோ இழுத்துச்செல்கின்றன! நம்மிடையே பகைமையை, வெறுப்பை, பொறாமையை உருவாக்கி, நம்மைச் சிதறடித்து விட்டன நமது மதிப்பீடுகள்! நாம் அதியற்புதமான வாழ்க்கையை நழுவ விட்டுவிட்டு, வெற்று மதிப்பீடுகளைத் தழுவிக்கொண்டிருக்கிறோம்!

சீவித்தல் (உயிர்பிழைத்தல்), வாழ்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இன்னும் நாம் சீவித்தலைக் கடந்து வாழ்க்கை எனும் பிரதேசத்தில் நுழைந்திடவேயில்லை. இன்றுவரை நாம் உண்மையில் வாழ்ந்திடவேயில்லை என்பதே இதன் அர்த்தம். வெறுமனே சீவித்தல், அதாவது உடல், உயிர் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது மட்டுமே வாழ்க்கை ஆகிடாது. சீவித்தல் என்பது அனைத்துவிதமான உயிர்களுக்கும் பொதுவானது. மனிதனைத் தவிர்த்து மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் சீவித்தல் மட்டுமே முழு வாழ்க்கையாக இருக்கின்றது. மனிதன் மட்டுமே சீவித்தலைக் கடந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்திட பரிணாம ரீதியாக விதிக்கப்பட்டுள்ளான். உண்மையில் வெறும் சீவித்தலுடன் மனிதர்கள் திருப்தியடைந்திட இயலாது, நிறைவு பெற்றிட இயலாது. ஏனென்றால், மனிதன் என்பவன் ஒரு விலங்கைப்போன்றவனல்ல; மேலோட்டமான வகையில் உடல் பசிகளை தீர்த்துக்கொண்டு திருப்தியடைவதற்கு!

மனிதர்கள் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதுடன் நிற்பதில்லை. அதற்கு மேலாக அவர்கள் பலவித விளையாட்டுக்களில், போட்டிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். பெயர், புகழ், பணம், பலம், பட்டம், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகிய விளையாட்டுகள், போட்டிகள். மனிதர்கள் வெறுமனே சீவித்தலில் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் காண இயலாது. அதனால் அவர்கள் மேற்கூறிய விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி-தோல்வி முடிவுகளின் வழியே தங்களுக்கு அர்த்தம் தேடிக்கொள்ள முயல்கின்றனர். இவ்வழியே மனிதர்கள் முற்றிலும் தவறானதொரு திசையில் சென்றுவிட்டனர். ஏனென்றால், சீவித்தலைக் கடந்த வாழ்க்கையை - புறத்தே, சமுதாயத்தின் விளையாட்டுக்களத்தில், போட்டிக்களத்தில், மதிப்பீடுகளின் களத்தில் ஒருபோதும் காண இயலாது. பின்னர் வாழ்க்கையை எங்கே காண்பது? மனிதர்களுடைய அளவீடுகள், மதிப்பீடுகள் இல்லாத இடத்தில், இயற்கையின் அழகில், படைப்பின் உலகில், வாழ்க்கை மீதான மனிதனின் தீவிர காதலில் வாழ்க்கையைக் காணலாம். அப்போது சீவித்தலானது வாழ்தலின் அங்கமாக அமையும், அர்த்தம் பெறும். நாம் வாழ்வதற்காக சீவிக்கிறோம்; வெறுமனே சீவிப்பதற்காக ( = உயிர் வாழ்வதற்குகாக) அல்ல மனிதப் பிறப்பும், வாழ்க்கையும்.

உண்மையான வாழ்க்கையின் தரிசனத்தைப் பெறும்போது மனிதன் நிறைவு பெற்றவனாக வாழ்க்கையைத் தொடங்குகிறான். நிறைவு என்பது வாழ்க்கையின் முடிவில் வருவதல்ல! தொடக்கத்திலிருந்தே நிறைவு என்பது இருக்கின்றது! மனிதன் மட்டும் தன் இதயத்தை அகலத் திறந்தானெனில் வாழ்க்கை அவனுள் பொங்கி வழியும். வாழ்க்கையைத் தவிர வேறெதுவும் மனிதனை நிறைவு செய்திடாது. ஆனால், மனிதன் தன் இதயத்தை அகலத் திறந்திடும் வரையில் அவன் வாழ்க்கைக்கு அன்னியனாகவே இருப்பான்!

மேலும், சீவித்தலுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதுடன் நில்லாமல், மேற்கொண்டு சமுதாயத்தின் முட்டாள்தனமான பெயர், புகழ், பணம், பலம், பட்டம், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகிய போட்டிகளில் ஈடுபடாமல், இனியாவது இவற்றைக்கடந்து மனிதர்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பார்களாக!
*
மா.கணேசன்/ 02.02.1991/நெய்வேலி

<<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>>

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...