
புறம் நிச்சயமாக இருக்கிறது!
மனித அகமே அதைக் கண்டு அறிந்து
அறிவிக்கிறது! ஆஹா!
அகம் எழாமல் புறத்திற்கு அர்த்தம்
யார் தருவது?
மூல -அகத்தின் அதிரடி உருமாற்றமே புறம்.
இது அதிகமானோருக்குப் புரியாது!
புறம் அகமாக மாறுவது தவிர்க்கவியலாத
பரிணாமம்!
இது ஒரு தொடர் சுழற்சியா?
அவசியமில்லை!
புறம் தோன்றுவதற்கு முன் இருந்தது
மூல -அகம்!
புறம் முடிவில் புகுவது மகா-அகம்.
இந்த முற்றுப்புள்ளி
முடிவைக் குறிக்கைவில்லை
முழுமையைக் கொண்டாடுகிறது!
*
அகமுகமாகத் திரும்புதல், அகத்தாய்வு, அகமுகப் பயணம், அகத் தகவமைதல் என்றெல்லாம் அகத்தின் முக்கியத்துவம் பற்றிக் கேள்வியுறும் போது, நம்மால் அகமுகமாகத் திரும்ப முடியாமால் தடுமாறுவது ஏன் ? மேலும், அது நம்மை அகமா? புறமா? என முடிவு செய்ய இயலாமல் பெரும் உளப்போராட்டத்தில் தள்ளி விடுவது எதனால்?
அல்லது, அகம் எனும் பரிமாணம் அவசியமற்றதா? நமது (அன்றாட) வாழ்க்கையுடன் அதற்கு யாதொரு தொடர்பும் இல்லையா?
அகம் என்பது நமக்கு அன்னியமானதா? அல்லது புறம் என்பதுதான் நமது பிறப்பிடம், புகலிடம், மற்றும் அனைத்துமா?
'அகம்' புறத்திற்கு எதிரானதா ? அல்லது,' புறம்' அகத்தைப் புறக்கணிக்கிறதா? புறம் என்பது என்ன, அது எதைக் குறிக்கிறது? அகம் என்பது என்ன, அது எதைக் குறிக்கிறது? முதலில் நாம் புறத்திலிருந்து தொடங்குவோம். ஏனெனில், நம்மை விட நமக்கு மிகவும் பரிச்சயமானது புறவுலகம் தான் - நெருங்கிய சொந்த பந்தங்களைக் கொண்ட குடும்பமும், அன்றாடச் சடங்குகளும், பொருட்களும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்களும்; ஆதரவும், வன்மமும், குரூரமும் நிறைந்த சமுதாயமும்; அழகு நிறைந்தததும், சில
சமயங்களில் சீற்றம் கொள்ளும் பூவுலகமும்; அதையும் கடந்து எல்லையற்றதாய்ப் பரந்து விரியும் - மிகச்சரியானதொரு தொடர்பு - கொள்ளல் இல்லாததினால்- இன்னும் புரிந்துகொள்ள இயலாத 'பிரபஞ்சம்' எனும் புதிருலகமும்தான்.
'பிரபஞ்சம்' குறித்து தனியே பிறிதொரு கட்டுரையில் காண்போம். நாம் பெரிதும் இயங்கும் புறவுலகம் என்பது அனைத்துக் குழப்பங்களுக்கும், பிரச்சனைகளுக்கும், முட்டாள்தனங்களுக்கும் , எல்லா அநீதிகளுக்கும் களமாக, காரணமாக விளங்குவதும், தனிமனிதர்களின் வாழ்க்கையைக் குலைக்கும் வகையில் துருத்திக் கொண்டிருப்பதுமான சமுதாயம் எனும் பாழுலகமே ஆகும். இச்சமுதாயம் குறித்தும் பிறகு பார்ப்போம். மொத்தத்தில், புறம் என்பது, பொதுவாக ஒருவருக்குப் புறத்தேயுள்ள புறவுலகமே எனலாம்.
அகம் என்பது அதன் மிகவும் சுருக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் ஒருவரது "மனம்" அல்லது அகந்தை உணர்வே எனலாம். அதன் மிக விரிவான, ஆழமான நிலையைக் குறிக்கும் வகையில் அகம் என்பது "ஆன்மா" அல்லது இறுதியும் முழுமையுமான "பேருணர்வே" எனலாம். மனம், அகந்தை, ஆன்மா, பேருணர்வு குறித்து விரிவாக பிறகு காண்போம்.
இப்போதைக்கு 'அகம்' என்பது ( நமது) மனதைக் குறிக்கிறது. அதே வேளையில், மனித மனங்கள் ஒரு படித்தானதல்ல என்பதும்; மனத்திற்கு மனம் கனபரிமாணத்தில் வேறுபடுவதாய் உள்ளது என்பதும் உண்மையே என்றபோதிலும் மேலோட்டமான தன்மையிலும், மட்டுப்பாடான தன்மையிலும் , சுய சிந்தனையற்ற பாங்கிலும் நம் பெரும்பாலான மனங்கள் சேர்ந்து செல்வதாயுள்ளன. . . .
மொத்தத்தில், அகம் என்பது அதிகம் அறியப்படாத பிரதேசமான, இன்னும் தன்னை, தனது வீச்சையும், தனது உள்ளுறையாற்றலையும் உணராத மனத்தையே குறிக்கிறது.
உண்மையில், புறம் அல்ல பெரிதும் பிரச்சினைக்குரியது ! மாறாக, தனது அசலான ஆற்றலையும் தனது ஆழத்தையும் அறியாத அகமே, மனமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.
நாம் புறத்தே பயணிப்பதாயினும் அல்லது அகத்தே பயணிப்பதாயினும் அது பிரதானமாக நமது விருப்பத்தை, நோக்கத்தை, தேவையை - நாம் முக்கியமெனக் கருதி எவையெவற்றைத் தேடிச்செல்கிறோம் என்பதைப் பொறுத்ததேயாகும்.
அகம் நம்மை உட்பிரவேசிக்க விடாமல் விரட்டியடிப்பதும் இல்லை. புறம் நம்மை கட்டிப் போடுவதும் இல்லை. நமது நோக்கங்களும், விருப்பங்களும், மதிப்பீடுகளும் தான் நம்மை புறத்தையோ அல்லது அகத்தையோ நோக்கிச் செலுத்துவதாயுள்ளன.
நாம் எதனுடன், எவ்வெவற்றுடன் நம்மைப் பிணைத்துக்கொள்கிறோம், அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நம்மை அடிமைப்படுத்தவோ, அல்லது விடுதலைப்படுத்தவோ செய்கின்றது!
புறம் என்பது தீமையானதோ, விலக்கப்பட வேண்டியதோ அல்ல. அதனளவில் அது மட்டுப்பானது, அவ்வளவே. புறம் என்பது தவிர்க்கமுடியாதது. அதே வேளையில், நாம் புறத்தை முற்றிலுமாகச் சார்ந்திருப்பதும் கூடாது. அது நமது உய்விற்கு உதவிடாது. புறம் என்னவோ நமது " பிறந்த வீடு" தான். எனினும் புறத்தை மட்டுமே சார்ந்திருப்போமெனில், அதுவே நாம் "இறக்கும் வீடாக"வும் ஆகி விடும்.
புறமும் அகமும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்றாலும், நாம் புறவுலகைச் சார்ந்திருப்பதை விடவும் புறவுலகம்தான் நம்மை, நமது அகத்தைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. புறத்தின் (புறவுலகின்) பரிணாம வளர்ச்சியின் தவிர்க்கவியலாத ஒரு முக்கிய கட்டமாக வெளிப்பட்டுள்ள மனிதனின் (ஒவ்வொரு மனிதனின்) வழியேதான் அதன் இறுதிப் பரிமாண உச்சமானது எட்டப்படவேண்டும். உண்மையில் நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. மாறாக, பிரபஞ்சம் தான் நம்முள் வாழ்கின்றது! உண்மையில், நாமும் பிரபஞ்சமும் வேறு வேறு அல்ல. கூர்மைப்பட்ட, நுட்பம்கூடிய, சூக்கும நிலையடைந்த புறத்தின் புதிய முகமே அகம் என்பதாகும்!
ஆக, 'புறம்' எனச் சுருக்கி அழைக்கப்படும் இப்பிரபஞ்சமானது அகவயப்படுதலையே தனது பிரதான உள்-நோக்கமாக, பரிணாம இலக்காகக் கொண்டு இயங்கி வந்துள்ளது. அகவயப்படுதல், அல்லது அக நிலையடைதல் என்பது உணர்வடைதல், மேன்மேலும் உணர்வில் வளர்தல், பெருகுதல் என்பதே.
புறம் ஒருபோதும் அகத்துடன் முரண்படுவதில்லை. ஏனெனில், புறம் என்பது தொடர்ந்து தன்னைக் கடந்து வளர்ந்து செல்லும் உள்ளார்ந்த உந்து விசையைக் கொண்டதோர் இயக்கமாகும். ஆக, புறத்தின் வளர்ச்சியும், பரிணாமமும் மேலும் மேலும் அகவயமாவதாய் அகத்தின் ஆழத்தைத் தேடிச்செல்வதாய் இருக்கும் பட்சத்தில் நாம் புறத்தையே நோக்கிக் கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருப்பது முறையன்று.
புறவுலகை விரிவாகவும் எவ்வளவு எட்டமுடியுமோ அவ்வளவு தொலவு வரையும் ஆராய்கிற நாம் ஏன் நமக்கு அருகில் மிக நெருக்கமாக உள்ள அகத்தை, அகவுலகை ஆராயப்புகுவதில்லை?
பலவிதமான தேவைகளின் பொருட்டும் பயன் பாட்டு நோக்கங்களுக்காகவும் தான் நாம் புறவுலகை ஆராய்கிறோமே தவிர புறவுலகிற்கும், அகவுலகிற்கும்( நமக்கும்) உள்ள தொடர்புறவை நாம் இன்னும் அறிந்தபாடில்லை! தனது உயிர்-பிழைத்தலுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் தனது வாழ்க்கை, குறிக்கோள், நிறைவு, முழுமை, இலக்கு, யாவும் எனக் கொண்டு தனது வாழ்க்கையை மிகவும் மேலோட்டமாகவும், மட்டுப்பாடான வகையிலும் மனிதன் வாழ்ந்து செல்கிறான்.
அதாவது, மிகப் பரிதாபகரமாக அவன் தனது மேற்புறச் சுயமான உடலின் தேவைகளை மட்டுமே உணர்ந்தவனாய், ஒரு விலங்காய் வெறுமனே உயிர்-பிழைத்துச்செல்கிறான். இதைத்தான் அவன் 'வாழ்க்கை' என்றழைக்கிறான். அவன் இன்னும் தனது உள்ளார்ந்த சுயத்தின் ஆழமான தேவையை உணர்ந்தவனாய், அசலான மனிதனாய் எழவில்லை!
மனிதனின் உண்மையான மகிழ்ச்சியும், நிரந்தர நிறைவும், அகலாத அர்த்தமும், முழுமையும், யாவும் அவனது உள்ளார்ந்த சுயத்தின் தேவையை நிறைவு செய்வதிலேதான் அடங்கியுள்ளது. ஆனால், இத்தகைய தேவையை நிறைவு செய்யக்கூடிய யாதொரு பொருளும், அம்சமும், கூறும், புறவுலகில் எங்கேயும் இல்லை! இதுதான் புறவுலகின் மட்டுப்பாடாகும்.
புறவுலகமானது நமது மேற்புறச் சுயமான உடலின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடும். ஏனெனில், நமது புறச்சுயமான உடலானது புறவுலகின் பௌதீகச் சடப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டதே யாகும். நமது உள்ளமைந்த அகச்சுயத்தின் தேவையை நாம் ஒவ்வொருவரும் நம்முள் ஆழ்ந்து செல்வதன் வழியாக மட்டுமே அடைய முடியும். நமது அகச்சுயத்தின் தேவையை அடைவது என்பது நமது அகச்சுயத்தை அதன் அடியாழத்திலிருந்து நேரடியாகக் கண்டடைவதே; நமது அகத்தில் மேன்மேலும் ஆழப்படுவதேயாகும்.
அதற்கு, முதலில் நாம் உண்மையில் ஒரு "அக ஜீவி" என்பதை உணர்ந்தறிய வேண்டும். இன்னும் உயிருள்ள எவ்வொரு சிறு புழு பூச்சியும் கூட அகஜீவிகளே. முதல் உயிரியான 'அமீபா' தான் முதன்முதலில் இப்பிரபஞ்சத்தில் அகம், புறம் எனும் பிரிவினையை தன்னுடன் கொண்டு வந்தது.
கற்பனை செய்து பாருங்கள் : இப்பிரபஞ்சத்தில் ஒரு புழு பூச்சியும் தோன்றிடவில்லை என்றால்; யாதொரு அவதானிக்கும் உணர்வுள்ள (மனித) ஜீவியும் இல்லை என்றால்; புறம் என்ற ஒன்றை உணர, காண, அறிய, அதைப்பற்றிப் பேச எதுவும், எவரும் இல்லையென்றால் புறத்தின்(புறவுலகின்) அர்த்தம் தான் என்ன?
உலகம், சடப்பிரபஞ்சம், தன்னைத்தானே பார்வை கொள்ளவும், உணரவும், அவதானிக்கவும் முடியாது! ஆனால், உலகிற்கு மாறான, அதன் பண்பிலிருந்து வேறான ஒன்று உலகை, புறத்தை, பார்வை கொள்ளவும், அவதானித்தறியவும் முடியும். ஆகவே தான், பிரபஞ்சம் எனும் சடத்துவம் உயிராகப் பரிணமித்தது.
உண்மையில், " உயிர்" என்பது எங்கோ கால-வெளி உலகிற்கு வெளியேயிருந்து வழி தெரியாமல் உலகிற்குள் வந்து சேர்ந்துவிடவில்லை. மாறாக, உயிர் என்பது பெளதீக(சட) பிரபஞ்சத்தின் மிக வித்தியாசமான, விசேடமான ஒரு வளர்ச்சி நிலையே, உலகின் நீட்சியே தவிர வேறில்லை!
உயிருள்ள ஜீவியாயினும், உணர்வுள்ள (மனித) ஜீவியாயினும் அவை பரந்து விரியும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் இடம் பெறுகின்ற முக்கியத்துவம் ஏதுமற்ற விஷயங்களல்ல. மாறாக, அவை பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிப் படிகள் மாத்திரமல்ல; அவை பிரபஞ்சத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றவையும் பிரபஞ்சத்தின் மிக அசலான, சாரமான, இறுதிப் பண்பினை, தன்மையை வெளிப்படுத்தும் கருவிகளும், பிரதிநிதிகளும் ஆகும்.
பிரபஞ்சத்தின் மிக அசலான, சாரமான பண்பு அதன் சடத்தன்மை அல்ல. இன்னும் சடத்தன்மை கடந்த உயிரும் அல்ல; இன்னும் உயிர்த்தன்மை கடந்த மனித உணர்வும் அல்ல. மாறாக, மனித உணர்வையும் கடந்த, மனித உணர்வின் உள்ளேயும் ஊடேயுமாகச் சென்றடைய வேண்டிய மாபெரும் இறுதிப்" பேருணர்வு" தானாகும். இதுவே அகத்தின் இறுதி ஆழம் ,எல்லை, இன்னும் அனைத்தின் (அகம், புறம் இரண்டின்) முடிவும் முழுமையும் ஆகும்.
முதன் முதலில், முதல் உயிரியான அமீபாவின் வருகை தான் புறத்தை புறம் எனவும், அகம் எனவும் இரண்டாகப் பிரித்தது. என்றாலும், தான் ஒரு "அக-ஜீவி" (அகத்தைக் கொண்ட ஜீவி) என்பதை உணரும் அளவிற்கு அது தன் அகத்தில் (உணர்வில்) ஆழப்படவில்லை. அதற்கு "சுய உணர்வு" எனும் அந்த அரிய அம்சம் இல்லை. ஆகவேதான், அந்த அமீபா தான், நெடிய பரிணாமப் பயணத்தின் வழியாக தற்போது சுயவுணர்வையுடைய மனித ஜீவியாக எழுந்துள்ளது. ஆம், அகம் என்பது அதற்குரிய உணர்வுப் பரிமாணத்துடன் முதன் முதலில் மனிதனுடன் மட்டுமே தொடங்குகிறது.
ஆனால், மனித ஜீவிகளோ உணர்வு இருந்தும் தாம் ஒரு அக-ஜீவியே என்பதை உணராத அமீபாக்களாகத் தான் இன்னும் விளங்குகிறார்கள்! அதனால் தானே அவர்கள் அகம், புறம் எனும் பிரிவினையின் ஏற்பாட்டை , அதன் உள் நோக்கத்தை, புரிந்து கொள்ளாமல் அப்பிரிவினையை பிரச்சினையாக மாற்றிவிட்டதோடு அப்பிரச்சினையின் தாக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்.
உண்மையில், அகம் x புறம் பற்றிய பிரச்சினையை எழுப்புவதும், அதற்கான தீர்வைத் தேடுவதும் மனிதனின் சுருங்கிய ஆழமற்ற (இன்னும் ஆழப்படாத) அகமே; தன்னை நோக்கி விழிப்படையாத மனமே யாகும்.
இப்பிரச்சினைக்கான தீர்வென்பது, மனிதன் மேன்மேலும் தன் அகத்தே ஆழப்படுவதொன்றே; மேன்மேலும் தன் உணர்வில் வளர்வதொன்றே, பெருகுவதொன்றே ஆகும்.
ஆனால், மனித ஜீவிகளுக்கு அவர்களது இயல்பிலேயே "சுயவுணர்வு" கொடுக்கப்பட்டிருந்தும் அவர்களில் விதிவிலக்கான ஒரு சிலரைத்தவிர ஏணைய பிறர் அவ்வுணர்வைத் தழுவிக் கொள்ளவில்லை. சிறு துளி அளவும் அவர்கள் தம் உணர்வில் தோயவில்லை. சிறிதளவும் அவர்கள் தம் உணர்வில் வளரவும் இல்லை.
விலங்குகளின் ஒரு பொதுப்பண்பு அவை பகலிலும் இரவிலும் எப்போதும் புறத்தையே - புற அசைவுகளை, நிகழ்வுகளை, பொருட்களை, பிற விலங்குகளையே கவனித்திருக்கும், கண்காணித்திருக்கும். அவற்றிற்கு அகப்பார்வை கிடையாது. உறங்கும் நேரம் தவிர விலங்குகள் தம்முள் அமிழ்வதில்லை!
இவ்வாறே மனித ஜீவிகளாகிய நாமும் எப்போதும் புறத்தையே, புற நிகழ்வுகளையே, புற விஷயங்களையே; பிற மனிதர்களின் சொற்களை,செயல்களை, நடவடிக்கைகளையே கண்காணித்திருக்கிறோம். நமக்கும் பெரிதாக அகப்பார்வை எதுவும் கிடையாது. உறக்கத்தைத்தவிர நாமும் நம் அகத்துள் அமிழ்வதில்லை. நமது பெரிய, பெரிய கனவுகளும், கற்பனைகளும், நமது 'ஆழமான' சிந்தனைகளும் கூட, புற விடயங்களைப் பற்றிய அசைபோடுதலே தவிர, நாம் எண்ணுவது போல அவை "அகமுக யாத்திரை" களல்ல! ஆம், 'புறம்' பற்றிய குறிப்பு ஏதும் இல்லாத பிரயாசையோ, அகப்பார்வையோ, உள்-ஆழ்தலோ நம்மிடம் துளிர்க்கவேயில்லை! இன்னும் சொல்லப்போனால், நமது புறப்பார்வையும் கூட மட்டுப்பாடான, ஆழம் செல்லாத நமது அகத்தின் (மனத்தின்) குறுகிய நுகர்வுத் தேவைகளால் கட்டுப்படுத்தப்பட்டதேயாகும்.
உண்மையில் புறம் என்பது எதைக்குறிக்கிறது? அது எதற்காக இருக்கிறது? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு, உறவு என்ன? என்பன போன்ற கேள்வி எதுவும் நம்மிடம் எழுவதில்லை. நமது உடல் - மைய வாழ்க்கையின் நுகர்வுத் தேவைகளுக்கான வளங்களை, பொருட்களைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கிடங்கு என்பதற்கு மேல் நாம் புறவுலகைக் காண்பதில்லை, புரிந்துகொள்வதில்லை.
நம்மைப் பொறுத்தவரை புறம், புறவுலகம் என்பது நமது நுகர்வுத் தேவைகளைத்தான் பிரதிபலிக்கிறது, குறிக்கிறது. புறம் பற்றிய நமது பார்வையும், புரிதலும் பெரிதும் நமது ஆழமற்ற அகத்தினால் விகாரப் படுத்தப்பட்ட (குறுக்கப்பட்ட) ஒன்றாகவே உள்ளது. புறவுலகில் நாம் விழுந்து புரண்டு காரியமாற்றுவதாகத் தெரிந்தாலும், நாம் அதில் புழங்குகிறோமே தவிர, அதனுடன் ஒன்றி, ஐக்கியம் கொண்டு வாழ்வதில்லை. மாறாக, நாம் நமது ஆழமில்லாத (ஆகவே மன நோய் பீடித்த) அகத்தில்தான் வாழ்கிறோம்!
நாம் இயற்கையை இயற்கையாகவே பார்ப்பதில்லை. நமது குறுகிய நோக்கங்களுக்கேற்ப இயற்கையுலகை வளைத்து நெளித்து மாற்றியமைத்துக் கெடுத்து நமது பொருளாதாரத் தேவைகளின் நிமித்தம் அதை மிகவும் கொச்சைப் படுத்தியே காண்கிறோம். நாம் இயற்கைக்காக (அதன் அழகுக்காக, அது நமக்கு உயிர் தந்து நம்மைப் பேணிப் பராமரித்திடும் " உயிர்க்கோளம்" என்பதற்காக) இயற்கையிடம் செல்வதில்லை!
மாறாக, அதனகத்தே மறைந்துள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற படிவ எரிபொருட்களுக்காகவும், உலோக மூலப்பொருட்களுக்காகவும், பசுங்காட்டு மரங்களை வெட்டிக் கொள்ளையிடவும், இன்னும் பிற வளங்களைச் சுரண்டவும், மொத்தத்தில் பொருளாதார பயன்களுக்காகவும் தான் இயற்கையிடம் செல்கிறோம். இல்லையென்றால், "சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல 'விலையுயர்ந்த' மரங்கள் எரிந்து போயின!" என்பதாக நாம் சொல்வோமா? காட்டிலுள்ள தொன்மையான அரியவகை மரங்களுக்கு விலை குறிக்கும் முட்டாள்தனம் மனநோய் பீடித்த மனிதர்களின் சமுதாயத்திலிருந்தல்லாமல் வேறெங்கிருந்து வரும்.
புறம் பற்றிய நமது பார்வையைப் போலவே நமது அகம் பற்றிய பார்வையும் புரிதலும் மிகவும் குறுகியதே, மட்டுப்பாடானதே! உண்மையைச் சொன்னால், எந்தப் புள்ளியிலிருந்து அகம் தொடங்க வேண்டுமோ அந்தப் புள்ளியிலேயே நாம் தங்கித் தேங்கிக் கிடக்கிறோம். அப்புள்ளியிலிருந்து உள்முகமாக ஒரு சிறு அடியையும் நாம் இன்னும் எடுத்து வைக்கைவில்லை!
நமது அகம் மிகவும் சராசரியானது, சாமானியமானது, நமக்குப் பிடித்தவை, பிடிக்காதவை, விருப்பு, வெறுப்பு, பொறாமை, பேராசை, தன்னலம், தற்பெருமை, கீழ்மை ஆகிய உள்ளடக்கங்களால் கட்டமைக்கப் பட்டதாகும். உடலின் நச்சரிப்பான தேவைகளைத் தாண்டி உள்ளத்தின் உயர் தேவையை நாம் அறிந்ததில்லை, உணர்ந்ததில்லை.
ஒரு உணர்வற்ற விலங்கிற்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரு விலங்கு தன்னைத்தானே பிரதி நிதித்துவம் செய்யாமல் (அதற்கான வழிவகை இல்லாததால்) அது நேரடியாக முண்டுகிறது, முனைந்து நிற்கிறது. மனித ஜீவிகளாகிய நாமோ நமது முண்டுதலுக்கு முன்புறமாக "நான்" என்கிற ஒரு ஒட்டுச்சீட்டை ஒட்டியுள்ளோம் என்பதுதான் அந்த வித்தியாசம்! அந்த ஒட்டுச் சீட்டிற்குப் பின்னால் இருப்பது 'மனிதன்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு விலங்குதான். அரிஸ்டாட்டில் சொல்லியது போல ஒரு 'சமூக விலங்கு'. அதிலும் கூட மனிதன் தனியே தன்னில் தானே ஒரு சுதந்திரமான விலங்காகவும் இல்லை!
அகத்திற்குள் செல்வதற்கான வழிவகையும் வாய்ப்பும் இருந்தும் மனிதர்கள் அகம் புகுவதில்லை. அகத்தின் ஆழத்தில் ஞானப்பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், அதில் எவருக்கும் நாட்டமில்லை! ஆதலால் அகத்தின் வாயிற்படியிலேயே நாம் தங்கி விட்டோம். இந்தத் தேக்கத்திற்குக் காரணம் புறவுலகமோ, அதன் கவர்ச்சிமிகு அம்சங்களோ அல்ல. மாறாக, நமது உடலின் மீது நாம் கொண்டிருக்கும் அதீதப் பற்றுதலே. அதே வேளையில் உடலும் அதனுடைய அடிப்படையான உயிர்- பிழைத்தலுக்கான தேவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவைகளோ, துறக்கப்பட வேண்டியவைகளோ அல்ல! மாறாக, தவிர்க்கப்பட வேண்டியது நம் உடலுடன் நாம் கொள்ளும் அதீதப் பிணைப்பைத் தான்!
ஏனென்றால், மிக எளிமையானதொரு உண்மை என்னவென்றால் மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல. உடல் அவனது உடமை போன்றதே, அதைப் பேணிப் பராமரிப்பது அவனது கடமைகளில் ஒன்றே தவிர உடலின் ஊழியக்காரனாக அவன் மாறுவது முறையற்றதாகும்.
ஏனெனில், மனிதன் அடிப்படையில் ஒரு அக ஜீவியாவான். அவன் ஒரு உடலைக் கொண்டிருக்கிறான் என்பதைப்போல, சிந்திக்கும் மனத்தையும், தனது இருப்பை நேரே உணரும் சுய-உணர்வையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, சிந்திக்கும் மனம் தான் மனிதன்; சுய-உணர்வு தான் மனிதன்.
"நான்" என்று கூறும் அகந்தை உணர்வானது உண்மையில், தன்னைத்தான் குறிப்பிடுகிறது (குறிப்பிட வேண்டும்) . ஆனால், முற்றிலும் தவறாக இடம் மாற்றி (அல்லது ஆள் மாற்றி) தனது உடலைச் சுட்டுவதான பிறழ்ச்சி தொடக்க நிலையிலேயே துரதிருஷ்டவசமாக நிகழ்ந்து விடுகிறது.
இந்த துரதிருஷ்டத்தின் விளைவாக, நம்மைப்பற்றி நமக்குத் தெரிவதெல்லாம் நமது உடல் மட்டுமே. அதில், நமது உட்புறம் பற்றி நாம் அறிந்ததெல்லாம் பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்பூக்கிகளும், வேறு சில அடிமனத் தூண்டுதல்களும், அவற்றை நிறைவேற்றிக்கொள்வது குறித்து நம்முள் எழும் விருப்பங்களும் மட்டுமே! இவைதான் நம்மைச் செலுத்தி வருகின்றன பகலிலும், இரவிலும்.
மனம் என்பது உடலுடன் சேரவில்லை எனில், உடல் என்பது அதனளவில் ஒரு விலங்கு தான். அவ்வுடலின் ஒரே பிரதானமான, மையமான முனைப்பான நோக்கம், குறிக்கோள், இலக்கு யாவும் 'சுய-பாதுகாப்பு', 'சுய-பாதுகாப்பு', 'சுய-பாதுகாப்பு', என்பதாக மட்டுமே அமையும்!
ஆனால், உடல் என்பது எத்தகைய "சுயம்"? அது ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? சரி, உடலானது எப்பாடுபட்டாயினும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகவே வைத்துக்கொள்வோம்! ஆதலால்தான் மனித மனமும் உடலின் பாதுகாப்பை சிரமேற்கொண்டு உடலின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது எனக் கொள்வோம். ஆனால், உடலுக்கு வேளை தவறாது உணவளித்து குளிப்பாட்டி சுத்தப்படுத்தி, ஆரோக்கியம் பேணி, எல்லாம் செய்தும் நோயிலிருந்தும், மூப்பிலிருந்தும், முடிவான மரணத்திலிருந்தும் காப்பாற்ற முடியாதெனும் பட்சத்தில், அது எவ்வகையில் உண்மையான, முழுமையான "சுய-பாதுகாப்பு" என்பதாக விளங்க முடியும்? இது ஒரு சுய- தோற்கடிப்பான பிரயத்தனமாகத் தெரியவில்லையா?
உயிருள்ள உடல் அது ஒரு புழுவினுடைய தாயினும், அல்லது ஒரு மனிதனுடையதாயினும், அதை ஏன் பெரு முயற்சி எடுத்துப் பாதுகாக்க வேண்டும்? ஒரு புழுவின் உடலைவிட ஒரு மனிதனின் உடல் சிறப்புடையதா, மேலானதா, மதிப்புடையதா? உடலின் பாதுகாப்பு என்பது மரணம் வரைக்கும் மட்டும்தான் சாத்தியம் என்றால் அது மிகவும் தற்காலிகமானது தானல்லவா? இந்த குறுகிய காலத்திற்கு பாதுகாக்கப்படுவதால் சாதிக்கப்படும் இலக்குதான் என்ன?
உண்மையில் "சுய-பாதுகாப்பு" என்றால் என்ன? எழுபது அல்லது என்பது ஆண்டுகளாக உடலைப்பேணி உயிரைக் காத்து முடிவில் மரணத்திடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் "சுய-பாதுகாப்பு" என்பதா? உடலுக்கு உணவளித்துப் பேணுவதோ, நோய் நொடிகளிலிருந்து காப்பதோ, ஆயுளை நீட்டிக்க பெருமுயற்சி செய்வதோ அல்ல "சுய-பாதுகாப்பு" என்பது!
உயிருள்ள எவ்வொரு ஜீவியின் பிரதான உந்துதல், உத்வேகம், ஊக்கம், யாவும் "சுய-பாதுகாப்பு" அல்லது சுய-தக்கவைப்பு என்கிற ஒன்று மட்டுமே. பிற தேவைகள், ஈடுபாடுகள், செயல்பாடுகள் யாவும் பிரதானமாக இந்த உந்துதலுக்குச் சேவை செய்யும் விதத்திலானவை மட்டுமே. ஒரு புழுவோ, எலியோ, தன்னில் எதை பாதுகாத்திட, தக்கவைத்திட முயல்கிறது? ஒரு புழுவின் 'சுயம்' என்பது அதன் மெல்லுடலா, அல்லது புழுவிற்கும் உணர்வு, ஆன்மா எதுவும் உள்ளதா? தனது எந்தச் சுயத்தைக் காத்திட அப்புழு துடிக்கிறது? தன்னில் எந்தச் சுயத்தைக் காத்திட மனிதனும் துடிக்கிறான்? அதே நேரத்தில், "மரணம்" என்பது நிச்சயம் எனும் நியதி இருக்கும்போது "சுய-பாதுகாப்பு" எனும் உந்துதலும் இருப்பது முரண்பாடில்லையா?
அப்படியானால், "சுய-பாதுகாப்பு" எனும் உந்துதலின் உண்மையான இலக்குதான் என்ன? உண்மையில், இந்த உந்துதலின் நோக்கமானது எவ்வொரு குறிப்பிட்ட ஜீவியையும் ( அது அமீபாவையோ, எலியையோ, தவளையையோ, இன்னும் மனிதனையோ ) பற்றியதல்ல. மாறாக, அது ஒட்டு மொத்தமாக அனைத்து ஜீவிகளுக்கும், இன்னும் உயிரற்ற சடப் பொருளையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கும் பொதுவானதாகும்.
ஒரு அமீபாவிற்கு, அதன் ஒற்றைச் செல் (Single Cell) உடல் தான் அதன் உடனடிச் சுயம். அதனுடைய உண்மையான இறுதியான சுயம் மிகத் தொலைவான பரிணாம வருங்காலத்தில் உள்ளது!
அந்த இறுதிச் சுயத்தை ஒரு குறிப்பிட்ட அமீபாவால் எட்டமுடியாமல் போகலாம். அவ்வாறு நேரடியாக எட்டுவதற்கு அதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் பரிணாம வரலாறு காட்டும் உண்மை. ஆனால், மறைமுகமாக அதனால் எட்ட முடியும் என்பதும் அதே பரிணாம வரலாற்றின் உண்மையே! பரிணாமம் என்பது ஒரு "தொடர்- ஓட்டம்" (Relay Race) போன்றது. ஒரு ஜீவி விட்ட இடத்திலிருந்து இன்னொரு ஜீவி அவ்வோட்டத்தை தொடர்கிறது. இன்னொரு ஜீவியாக மாறியது அந்த அமீபா தான்! இவ்வாறு அமீபாவானது தற்போது மனித ஜீவியாக மாறியுள்ளது (அதாவது பரிணாம அவதாரம் எடுத்துள்ளது! ) ஆம், மனிதன் என்பவன், நெடிய பரிணாம ஏணியில் தோன்றிய அனைத்து ஜீவிகளின் ஏகப் பிரதிநிதியாவான்!
ஆக, அமீபாவினால் நேரடியாகவும், உடனடியாகவும் எட்ட முடியாத அதன் மிகத் தொலைவில் அமைந்த இறுதிச் சுயத்தை மறைமுகமாக எட்டும் வகையில் அப்பரிணாமத் தொடர் ஓட்டத்தில் தனது பங்கிற்கான பணியை நிறைவேற்ற வேண்டுமென்றால் அந்த அமீபா தனது உடனடிச் சுயமான ஒற்றைச் செல் உடலை பேணிப் பாதுகாத்திடத்தான் வேண்டும்.
ஏனெனில், படிகள் ஏதுமில்லாத ஏணி என்று ஒன்றிருக்க முடியாது. உயரத்தில் உள்ள ஒரு இலக்கை எட்ட வேண்டுமெனில் அதற்கு ஒரு ஏணி வேண்டும். அதற்கு படிகளும் இருக்க வேண்டும். அத்தகைய பரிணாமப் படிகள்தான் அமீபா, பாரமீசியம், யூக்ளினா, . . . .. புழு, பூச்சிகள், எறும்புகள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என எல்லாமும். ஏன், மனிதனும் அந்த ஏணியின் ஒரு படிதான்; மிகவும் முக்கியமான இறுதிப்படி! ஒப்பற்ற அந்த இறுதி மகா-சுயத்தை அடையும் வழிமுறையில் உதவுவதற்காக மனிதனும், முதலில் தனது மேற்புறச் சுயமான உடலை பேணிப் பாதுகாத்திடத் தான் வேண்டும். அதைவிட அவன் தனது உள்ளார்ந்த அகச் சுயத்தின் நலனைத் தான், பெரிதெனக் கொண்டு, அதை அடைந்திட வேண்டியே அவன் தன் குறுகிய வாழ்காலம் முழுவதும் (அதை அடைந்திடும் வரை) சிரத்தையுடன் உழைத்தாக வேண்டும். ஏனெனில், மரணத்தைக் கடக்கும் ஒரே வழி உயிரோடிருக்கும் போதே, அழிவில்லாச் சுயமான "ஆன்மா" எனும் தூயப் பேருணர்வை அடைவதொன்றே யாகும்.
மிகவும் விசித்திரமான ஒரு உண்மை என்னவெனில், அழிவிலா ஆன்மா எனும் பேருணர்வுக்கு இட்டுச் செல்லும் ஒரே கதவு, "நான்" எனும் சிற்றுணர்வாகிய நம் அகந்தை-உணர்வு தான். அதுதான் உணர்வின் தொடக்கமும், தலைவாயிலும் ஆகும். அகந்தை மீதான அனைத்துப் பழிகளுக்கும், அவதூறுகளுக்கும் காரணம், அது 'நான்' எனும் மந்திரச்சொல்லைக் கொண்டு, தன்னை முன்னிலைப்படுத்தி, தனது சிற்றுணர்வைக் கடந்து வேறு "மெய்ம்மை" எதுவும் இல்லை என்பது போல, 'தான்-தோன்றித்' தனமாக நடந்து கொள்ளும் மட்டுப்பாடே ஆகும்.
மேலும், அகந்தை-உணர்வு என்பது உணர்வின் ஒரு தொடக்கப் புள்ளியே. உணர்வு-மாளிகையின் மிக இடுக்கமான முன்வாயில் மட்டுமே. அதன் வழியே உட்பிரவேசித்து மேன்மேலும், உணர்வு பெறுவதற்காகத்தான் ( மேன்மேலும் உணர்வில் பெருகி உயர்வதற்காகத்தான்), முதலிடத்தில் உணர்வு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, உணர்வு-மாளிகையின் வாயிற்படியிலேயே தங்கி வசிப்பதற்காக அல்ல.
அதே வேளையில், அனைத்துப் பழிகளையும், அவதூறுகளையும், ஒதுக்கிவிட்டுக் காணும்போது "நான்" எனும் அகந்தை உணர்வின் தனிச் சிறப்பான தன்மைக்கு ஈடாகவோ, மாற்றாகவோ, இப்பிரபஞ்சத்தில் வேறெதுவுமில்லை! உணர்வற்ற, எங்கும் பரந்து சூழ்ந்திருக்கும் அந்தகாரப் பிரபஞ்சத்தில் முளைத்த உணர்வின் ஒளிப்புள்ளியே அகந்தை என்பதாகும். அது இல்லையெனில், நாமும் தவளைகளைப் போலத்தான் இருப்போம்! மேலும், நாம் "பேருணர்வு" , "பிரபஞ்ச உணர்வு", "பேரான்மா", "கடவுள்" என்றெல்லாம் பிரமாதமாகப் பேசலாம். ஆனால், நமக்கு எளிதில் எட்டக்கூடியதும், நெருக்கமானதும் அகந்தையுணர்வு மட்டுமே. அது இல்லாமல், ஒரு போதும் நாம் பேருணர்வு பற்றியும், கடவுள் பற்றியும் பேசவும் முடியாது. அதில் பேருணர்வை எட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை!
அதே நேரத்தில், அகந்தை உணர்வின் ஒரே பிரச்சினை, பெருங்குற்றம், அது முதலில் தன்னையும், அடுத்து தன்னைக் கடந்த பேருணர்வு நிலையையும் பிரதிநிதித்துவம் செய்வதை விடுத்து, தன்னை புறந்தள்ளி தனது கருவியான உடலை பிரதிநிதித்துவம் செய்திடும் தற்கொலைக்கு ஒப்பான செய்கையே ஆகும்.
ஏனெனில், எந்த உடலும் ஒரு போதும் "நான்" என்று சொல்வதில்லை. ஆனால், மனித அகந்தையோ "நான்" என்று மார்தட்டி அறிவிக்கும் வழியில் தலைகீழாக தனது உடலை முன்னிறுத்தி தன்னை பின்புலத்தில் மறைத்துக் கொள்கிறது. இந்த தவறான அடையாளம் தான் அகந்தையின் பெரும் மட்டுப்பாட்டிற்கும், அதன் அழிவிற்கும் காரணமாகும். இந்த அடையாள மாறாட்டம் தான் அதன் மரணத்திற்கும் ஏதுவாகிறது. உடலின் (தவிர்க்க இயலாத) மரணத்தை அகந்தை மனமானது தனது மரணமாகப் பாவித்துக்கொண்டு அல்லலுற்று தனது உணர்வை இழந்து உடலுடன் சேர்ந்து தானும் மாண்டுபோகிறது.
இந்த சாக்காட்டிலிருந்து விடுபடவேண்டுமெனில், அகந்தையானது "உண்மையில் 'தான்' யார்"? என்ற விசாரத்தை யாவற்றுக்கும் மேலாக முதலில் மேற்கொண்டாக வேண்டும்.
அதாவது, அகந்தையானது முதலில் தன்னை (தனது ஆற்றல்களையும், மிக முக்கியமாக தனது மட்டுப்பாடுகளையும்) புரிந்து கொள்ளவேண்டும். உடலுடன், தான் பிணைக்கப் பட்டிருப்பினும், தன்னளவில் தான் ஒரு தனிச்சுயமே என்கிற விசித்திரமான உண்மையை உணர்ந்திட வேண்டும்.
அகந்தை மனம், அல்லது அகந்தை உணர்வானது முதலில் தான் வேறு, தனது உடல் வேறு என்பதை தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டு விழிப்படைதல் வேண்டும். அகந்தை மனம் விழிப்படைய முனையாமல் மேற்சொன்ன வித்தியாசத்தை புரிந்து கொள்ள அதனால் இயலாது. அதாவது அவ்வாறு புரிந்து கொள்வதும் விழிப்படைதலும் ஒரு சேர நிகழ்ந்தாக வேண்டும். அதனையடுத்து அகந்தையுணர்வு தன்னைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபடல் வேண்டும்.
அகந்தை மனம் தான் பயணிக்கும் ஊர்தியான உடலின் உயிர்பிழைத்தலுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் ஒரு புறமிருக்க, அது பிரதானமாக தன்னைப் பற்றிய விசாரத்தில் ஆழ்ந்திட வேண்டும்.
அகந்தையானது வெறுமனே 'நான்', 'நான்' என்று மார் தட்டிக் கொண்டு புறத்தே வலம்வருவதை விடுத்து உண்மையில் "தான் யார்?" என வினவுவதன் வழியாகவும் அல்லது "உணர்வு என்றால் என்ன?" என்ற கேள்வியைக் கேட்பதன் வழியாகவும் ஏற்படுகிற பதிலற்ற "மௌனம்" அல்லது "வெறுமை" போன்றதொரு நிலை தான் உணர்வு ஆகும். அந்த மௌனத்தில், அமைதியில் நிலைத்து ஆழ்ந்திடல் வேண்டும். இவ்வாறு ஒருவர் தன்னுள் ஆழ்ந்திடும் போது அதனால் விளையக்கூடிய அற்புத அக-மாற்றங்களை, விவரிக்கவியலாத அனுகூலங்களை, தனது பிறவியின் இறுதிப் பயனை அடைந்திடுவார்.
அகந்தை மனம் அல்லது உணர்வானது தன்னில் மிக அடிப்படையானதொரு முழுமையான மாற்றத்திற்கு உட்படாமல் அது பேருணர்வை எட்டுவதோ, கடவுளை தரிசிப்பதோ, அல்லது 'இறைவனடி சேருவதோ' எதுவும் இயலாது. பேருணர்வு, பேரான்மா, அல்லது கடவுள் என்பது மனிதனின் அகந்தை உணர்வுக்கு புறத்தே வெளியே எங்கேயும் இல்லை. மாறாக, அகந்தை உணர்வு உட்பட்டாக வேண்டிய முழு மாற்றத்தினால் விளையும் மலர்ச்சியே பேருணர்வு அல்லது கடவுள் என்பதாகும். இந்த முழு-மாற்றம் என்பது, ஒரு கம்பளிப்புழுவானது அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாற்றமடைவதை ஒத்ததாகும்.
மனித உணர்வானது தன்னை முழுவதுமாக புறத்திற்குக் கொடுத்திடாமல், தன்முகமாக, அதாவது உள்முகமாகத் திரும்பி ஆழமடைவதன் வழியே மட்டுமே மேன்மேலும் உணர்வில் வளர்ந்து தனது உய்வை, மீட்சியை, முழுமையை எட்டவியலும்.
எந்த மனிதன் தன் உடலைக் கடந்து தன்னை ஒரு உணர்வாய் உணர்கிறானோ, அதன் தொடர்ச்சியாக அவ்வுணர்வின் உச்சத்திற்கு எழுகிறானோ, அம்மனிதனால் மட்டுமே அகம், புறம் எனும் பிளவை, பிரச்சினையைக் கடக்க இயலும்.
உண்மையில் அகம், புறம் என இரண்டு மெய்ம்மைகள் இல்லை. பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிராகவும் அவை இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போன்று ஒரே மெய்ம்மையின் இரண்டு பக்கங்கள் தான் அகமும் புறமும். அதே வேளையில், ஒரு நாணயத்தின் பக்கங்களைப் போல ஒன்றுக்கொன்று தம் முதுகைக் காட்டியபடி அவை அமைந்திருக்கவில்லை. மேலும், அவை எதிரெதிர் துருவங்களாக நித்திய காலத்திற்கும் அப்படியே தத்தம் நிலையில் நீடிப்பவையும் அல்ல. அவை வெவ்வேறு நிலைகளாகத் தோற்றம் தந்தாலும், உண்மையில் அவை ஒன்று இன்னொன்றாக மாற்றமடைந்திடும் பரிணாமச்சுற்றில் அமைந்த நிலைகளாகும். புறம் புறமாகவும், அகம் அகமாகவும் என்றென்றும் அவை நிலைபெறுபவை அல்ல!
ஆதியும் அந்தமுமான ஒரே மெய்ம்மை தான், ஒரு விசேட மாற்றத்தினால் புறமாகி; அடுத்து புறம் பிரிந்து அதில் ஒரு பகுதி இன்னொரு பகுதியை உணர்வு கொள்ளும் அகமாகி; அடுத்து அகம் தன்னைத்தானே உணர்வு கொள்ளும் சுய- உணர்வாகி, சுய-உணர்வு மேன்மேலும் தன்னுள் ஆழ்ந்து முடிவில் அகம், புறம் எனும் இரு நிலைகளிலிருந்தும் தன்னை முழுமையாக மீட்டுக் கொள்ளும் பேருணர்வாகி, தான் தொடங்கி வைத்த சுற்றை தானே முடித்து வைக்கிறது!
ஆதியும் அந்தமுமான மெய்ம்மையான பேருணர்வு என்பது அகம், புறம் இரண்டையும் கடந்த இரண்டுமல்லாத ஒருமையாகும்.
புறம் மற்றும் அகம் பற்றிய நமது வழக்கமான பார்வையை, புரிதலை உடனடியாக நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தியாக வேண்டும்.
நமக்குப் புறத்தே ஒரு உலகம், ஒரு மாபெரும் பிரபஞ்சம் உள்ளது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால், அது நமக்குப் புறம்பானதாக, தொடர்பற்றதாக உள்ளதா?
அதற்கும், நமக்கும் (அகத்திற்கும்) உள்ள தொடர்பு எத்தகையது?
நாம் புறத்தை (புறவுலகை) சார்ந்திருக்கிறோமா அல்லது புறம் நம்மைச் சார்ந்திருக்கிறதா? அல்லது, அகமும், புறமும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா?
அகம் என்பது எத்தகைய தன்மையிலானது? புறம் என்பது எத்தகைய தன்மையிலானது?
அகம், புறம் முறையே அவற்றின் பணி, பாத்திரம் என்ன?
அகம் அதன் சாரத்தில் எதைக்குறிக்கிறது? புறம் அதன் சாரத்தில் எதைக்குறிக்கிறது? . . . . . என்பன போன்ற கேள்விகள் அனைத்திற்கும் நாம் பதில்களைக் கண்டுபிடிப்பது அவசியமாகும்.
சந்தேகத்திற்கு இடமின்றி புறம், புறவுலகம் என்பது உள்ளது. அதே போல, மறுக்கவியலாத வகையில் அகம் என்பதும் உள்ளது. எவ்வாறெனில், புறம் உள்ளதென நமக்கு அறிவிப்பது நமது அகமே! அகம் என்பது உணர்வே (Consciousness). ஆம், அகத்தின் சாரம் உணர்வே. அகத்தின் பணியும், பாத்திரமும் அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவற்றின் வழியாக முதலில் புறத்தையும், அடுத்து பிரதானமாக தன்னையும் அறிந்து கொள்வதே.
முதலில், புறத்தை ஏன் அறிந்து கொள்ளவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும் என்றால், புறத்தை முதலில் புரிந்து கொள்ளவில்லை எனில், அது நம்மை அகம் நோக்கிச் செல்லவிடாமல் நமது கவனத்தைச் சிதறடித்த வண்ணம் பெரும் தடையாக நிற்கும்! உண்மையைச் சொன்னால், புறமல்ல தடையாக நிற்பது, மாறாக நாம் தான் புறத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லாததுபோல் எதையெதையோ தேடிக்கொண்டு புறத்திலேயே சுற்றித் திரிந்து, தொலைந்து, முடிவில், புறத்திலேயே புதைந்து போகிறோம்!
புறத்தைப் பற்றியதொரு அரிய உண்மை என்னவெனில், அது புறத்திலேயே தங்கியிருக்கவில்லை! புறம் என்பது முற்றிலும் புறமாகவேயில்லை! ஏனெனில், புறமல்ல புறத்தின் உண்மையான முகம். அதன் ஒரு முனை புறத்தே புறமாக உள்ளது; அதனுடைய இன்னொரு முனை மிகவும் முனைப்பாக முன்னேறி, அகமாக மாறி, அகமுகமாகி வெகு காலம் ஆகிறது! நாம் தான் புறத்தின் புதிய முகமான அந்த அகமுகம்! ஒன்றல்ல, இரண்டல்ல, 825 கோடி அகமுகங்கள்! ஆனால் நாமோ இன்னும் நம்மைப் பற்றிய உணர்வுக்கு வராமல், புறத்தையே நோக்கிக் கொண்டும், புறத்திலேயே சுற்றித் திரிந்து கொண்டும் இருக்கிறோம்.
புறத்தின் சாரமான தன்மை "பொருண்மை"யே (சடத் தன்மையே) ஆகும். ஆனால், சடத் தன்மை, பொருண்மை என்பது மிகத் திடமாகவும், நமது புலன்களுக்குத் தட்டுப் படுவதாகவும் தெரிந்தாலும் அது ஒரு "மாய வஸ்து "வே ஆகும். ஏனெனில், அது வேறொரு நிரந்தரமான, மாறாத, நிலைபேறுடைய மெய்ம்மையின் நிலைகுலைவான மாற்றத்தின் விளைவாக வெளிப்பட்ட நிலையாகும். அதனால்தான், பொருண்மை (சடத் தன்மை) தொடர்ந்து தன்னைக்கடந்து வளர்ந்து செல்வதாக, பரிணமிப்பதாக உள்ளது. பொருண்மையானது தனது சடத் தன்மையிலேயே நிலைத்திருக்கவில்லை; அது ஒரு கட்டத்தில் "உயிர்" எனும் தன்மைக்குள் பிரவேசித்தது! பிறகு ஒரு கட்டத்தில் மனிதனுள் "உணர்வு" எனும் மிக நுட்பமான பரிமாணத்திற்குள் பிரவேசித்துள்ளது. தொடர்ந்து அது உணர்வின் மிகச் செறிவான "முழு-உணர்வு" நிலையை, தனது பொருண்மையை முற்றிலும் கடந்த நிலையை, புத்தர் போன்ற மனிதர்கள் வழியாக அது பல தடவை எட்டியுள்ளது!
புறத்தின் ஒரே நாட்டம், உந்துதல், தேடல் என்பது தனது அசலான முகத்தை, முடிவான அர்த்தத்தை, தனது மூலத்தைத் தேடியடைவதே! துல்லியமாகச் சொன்னால், புறத்தின் ஒரே நாட்டம், இலக்கு, அகமுகமாதல், அகவயமாதல், அதாவது உணர்வுமயமாதலே!
புறத்தின் பணி, பாத்திரம், அதன் இருப்பிற்கான ஒரே நியாயம் அகமயமாதல், உணர்வைத் தேடிச் செல்லுதல் என்பதே தவிர, புறத்திற்கு புறத்தே வேறு வேலை, செயல் நோக்கம் எதுவுமில்லை! (ஆதி )அகத்தின் அதிரடியான "சுய- மாற்றம்" தான் புறம்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, "புறம்" என்பது உள்ளது. அது போல, மறுக்கவியலாத வகையில், "அகம்" என்பதும் உள்ளது. அதாவது புறம் உள்ளதென அறிவது, அறியப்படுத்துவது (நமது) அகமே, மனமே, உணர்வே!
அகத்தின் தொடக்கமும், முடிவும், அதன் சாரமும் உணர்வு தான். மனிதனைப் பொறுத்தவரை, மிகக் குறைவான உணர்வு நிலையான அகந்தை உணர்வில் தொடங்கி, முழு-நிறைவான உணர்வு நிலையை அடைவதொன்றே அகத்தின் ஒரே நாட்டம், தேடல், குறிக்கோள், இலக்கு யாவும். அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவைதான் உணர்வின் செயல்பாடுகள். ஆனால், அகத்தின் இந்த பிரதான நாட்டத்தை, மனிதர்கள் அனைவரின் அகமும் தவறாமல் பின்பற்றிச்செல்வதில்லை!
ஏராளமானோர், கிட்டத்தட்ட 99% பேர் தாம் ஒரு அக ஜீவி என்கிற உணர்வுக்கே வருவதில்லை. இதற்குக்காரணம், வாழ்க்கையுடன் அவர்கள் மிகவும் மேலோட்டமானதொரு தொடர்பில், உறவில் பொருந்தியிருப்பதே! மனித ஜீவிகள் தாம் உயிரோடிருப்பதை மட்டுமே உணர்கிறார்கள். ஆகவே தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு "உயிர் பிழைத்தல்" மட்டுமே "வாழ்க்கை" என்பதாக வாழ்ந்து செல்கிறார்கள்! தமது உடலின் உள்ளமைந்த இயல்பூக்கிகளான பசி, தாகம், பாலுணர்வு, . . . . ஆகியவற்றின் மூலம் மட்டுமே அவர்கள் வாழ்க்கையுடன் தொடர்பு கொள்கிறார்கள். இன்னும் அவர்கள் உடலின் ஜீவியாக மட்டுமே விளங்குகிறார்கள்; மனதின் உணர்வின் ஜீவியாக எழவில்லை!
ஆனால், அசலான மனித வாழ்க்கை, உயிர்-பிழைத்தலை (Survival) உள்ளடக்கியதே எனினும், அதைக் கடந்தும் செல்கிறது. மனிதர்கள் தங்கள் கைகள், கால்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ, அவ்வாறே மனத்தையும் இன்னொரு உறுப்பாகவே பாவிக்கிறார்கள். ஆகையால், தங்கள் மனத்திற்கு, ( அதாவது தங்களுக்கு) அகப் பரிமாணம் என்ற ஒன்று உள்ளது என்பதை அவர்கள் அறிவதே இல்லை. மேலும், மனத்தின் ஆற்றல்களான சிந்தனை, அறிவு ஆகியவற்றை உயிர்- பிழைத்தலின் தளத்தில் பிரயோகிப்பதற்கு மேல் வேறு எது குறித்தும் அவர்கள் நாட்டம் கொள்வதில்லை, ஆராய்வதில்லை. அவர்களது மனம் இயல்பூக்கிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப் படுவதாகவும், செலுத்தப்படுவதாகவும் மட்டுமே நிரலமைப்பு (Programme)செய்யப்பட்டதாய் விளங்குகிறது. சில சமயங்களில், அவர்களது மனம் ஒரு தானியங்கி எந்திரம் போல இயங்கி, எண்ணிச் சலித்து, அவர்களை அலைக்கழிப்பதாய் உள்ளது. மேலும், அவர்களது உயிர்- பிழைத்தல் தேவைகளுக்கான பொருட்கள் யாவும், புறத்தே உலகில் இருப்பதால், உறங்கும் நேரம் தவிர, அவர்கள் எப்போதும் புறத்தை நோக்கியவாறே, கண்காணித்தவாறே உள்ளனர்.
மனித ஜீவிகளான நாம் புறத்தை தவிர்க்கவியலாது. மேலும், புறத்துடன் (சமூகம், இயற்கையுலகத்துடன்) முறையாக தகவமைதல் என்பதும் அவசியமே. ஆனால், ஒரு விடயம் "தவிர்க்கவியலாதது" என்பதற்கும், அவ்விடயத்திற்குள்ளேயே 'சிக்குண்டு உழல்வது' என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது!
உண்மையில், நம்முடைய உயிர்-பிழைத்தலின் (உடலின் தேவைகள், அவற்றிற்கான) பொருட்கள் தான், அவற்றுடன் நாம் கொள்ளும் அளவு மீறிய பிணைப்புத் தான் நம்மை புறத்துடன் கட்டிப்போடுவதாக உள்ளது. நமது சிந்தனையும், ஈடுபாடும் எப்போதும் புற விடயங்களையே, புற விவகாரங்களையே சுற்றிச் சுழல்வதாயுள்ளது.
இந்நிலைமைகளில், மனிதர்கள் தம் உடலையும், அதன் தேவைகளையும் தாண்டி தமது அகத்தையும் மனத்தையும் அதன் தேவைகளையும் உணர்வதில்லையாதலால் அவர்கள் தமது அகம் நோக்கி விழிப்பதில்லை, அகத்துடன் தகவமைதலின் முக்கியத்துவத்தையும் உணர்வதில்லை!
அகத்தின் சாரமான உணர்வின் செயல்பாடுகளான அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவற்றை புறத்தை நோக்கியதாய், புறம் பற்றியதாய் மட்டுமே குறுக்கிவிட முடியாது, கூடவும் கூடாது. ஏனெனில், உணர்வின் முதன்மையான குறிக்கோள், இலக்கு, லட்சியம், யாவும் அதனுடைய முழுமை பற்றியதே. ஏனெனில், அகத்தின், உணர்வின் உய்வு, மீட்சி, அதன் முழுமையடைதலில் தான் அடங்கியுள்ளதே தவிர புறத்தில் அல்ல!
நாம் நமது உயிர்-பிழைத்தலுக்காக மட்டுமே புறத்தைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நமது உய்விற்காக நாம் பிரதானமாக நம் அகத்தையே சார்ந்திருக்க வேண்டும். அகம் என்பது குறுகியதாக, அதன் தொடக்க நிலையில் சிற்றுணர்வாக விளங்கிடும் வரையில் மட்டுமே அது "நமது அகம்" அல்லது நமது "சொந்த சுயம்", "நான்" எனும் அகந்தை என்பதாய் அமையும். அகத்தின் ஆழம் கூடக்கூட, உணர்வு வளர, வளர, அது "நான்" எனும் வரையறைகளைக் கடந்து செல்லச் செல்ல, அது நமது சொந்த அகமாகவோ, உணர்வாகவோ, சுயமாகவோ நீடிக்க இயலாது! காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை மட்டுமே அதன் அடையாளம் "காவிரி" என்பதாய் விளங்கும்; கடலில் கலந்த பிறகு, அது காவிரி அல்ல 'கடல்' என்பது தான் அதன் புதிய அடையாளம்.
தன்னை உண்மையிலேயே அறிகிற, உணருகிற ஒரு மனிதனுக்கு அன்னியமாக, புறத்தே யாதொரு பிரபஞ்சமும் இல்லை! பிரபஞ்சம் என்பது அவனைப் பொறுத்தவரை அவனது 'முதுகுப்பகுதி' யாக மாறிவிடுகிறது. பிறரைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் என்பது அவர்களுக்கு ஒரு பெரும் சிறையே!
தன்னையறிதல், தன்னை உணர்தல் என்பது பிரபஞ்சத்தையும், அனைத்தையும் உள்ளடக்கியதொரு முழுமையாக தன்னை உணர்வதே!
இத்தகைய பார்வையும், புரிதலும் பலருக்கு அறிவு கலங்கிய பைத்திய நிலையாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் தோன்றலாம்.
ஆனால், "அணுத்துகள்களின் தொகுப்பே மனிதனும் யாவும்!""உலகம், பிரபஞ்சம் என்பது பொருண்மையின் (சடப் பொருளின்) மாபெரும் கட்டமைப்பே, வெளிப்பாடே!". "மனிதன் என்பவன் உயர் வளர்ச்சியடைந்த ஒரு விலங்கே!". "மனிதனது உணர்வு என்பது அவனது மூளையில் நிகழ்ந்திடும் மின்-ரசாயண வினையின் ஒரு விளைவே!" என்றெல்லாம் காணும் தங்களின் மூளையின் பகுத்தறியும் திறனையும், இன்னும் காரண காரியத் தொடர்புபடுத்தி, அறிகிற கூர்மையும் கொண்ட பகுத்தறிவுவாதிகள், பொருள்முதல்வாதிகள், விஞ்ஞான வாதிகள் யாவரும் உண்மையில் தங்கள் வாதங்களை, புரிதல்களை தங்கள் கால் கட்டைவிரல்கள் மூலம் தரையைக் கீறிக் கிளரி அகழ்ந்தெடுப்பதில்லை! மாறாக, தங்களது மூளையில் வெளிப்படும் - சோதனைக் குழாயில் இட்டு பரிசோதிக்க இயலாத; இருந்தும் இல்லாதது போலத் தெரிகிற, விளங்கியும் விளங்காப் புதிராகத் திகழும் அவர்களது சிற்றுணர்வின் உதவியினால் எட்டப்பட்ட தவறான, மட்டுப்பாடான கருத்துக்களே!
இந்நிலையில், தங்களது பகுத்தறிவுப் பூர்வமான கூற்றுக்களே, கண்டுபிடிப்புக்களே உண்மையானது, சரியானது என்று நம்பிக்கொண்டிருப்பதற்கும், மற்றவர்களையும் நம்பச் சொல்வதற்கும் யாதொரு அடிப்படையும் இல்லை!
பௌதீகச் சடப் பொருளை "கடவுளாக" வும், "பரம்பொருளாக"வும் பாவித்திடும் இவர்களுக்கு உணர்வின் மகத்துவத்தைப் புரியவைப்பது இயலாத காரியமே! உலகம், பிரபஞ்சம் இருக்கலாம், ஆனால், உணர்வு இல்லையேல், எதுவும் இல்லை! உலகம் இருக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியது - எப்போதெனில், அதை ஆச்சரியத்துடன் நோக்குகிற மனித உணர்வு இருக்கும்போது தான்! அதைவிட ஆச்சரியமானது ஒரு ஜீவி "நான் இருக்கிறேன்!" என்று தன்னைத்தானே உணர்ந்தறியும் போதுதான் நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக "தானே இப்பிரபஞ்சமும் எல்லாமும்!" என்று நேரடியாக உணர்ந்தறிவதே இறுதி ஆச்சரியமும், அற்புதமும்! (இதையெல்லாம் சொல்லக் கேட்பதும், வாசித்தறிவதும் அற்புதத்தின் தொடக்கம் ஆகும்!).
மா.கணேசன்/ நெய்வேலி
Conceived earlier and completed on 13.01.2016 and Uploaded on 05-10-2024.
*
////////\\\\\\\\////////\\\\\\\////////\\\\\\\\////////\\\\\\\////////\\\\\\\\////////\\