Monday, 15 August 2016

விஞ்ஞானம் தோற்றுவிட்டது! (1)





இது போகிற போக்கில் விசிறியடிக்கப்படும்
மேலோட்டமான விமர்சனக்கட்டுரையோ,
அல்லது வெறுமனே புகார்களைக்கூறி, தூற்றிப்
பேசும் எழுத்தோ அல்ல. இது சிரத்தையுடன்
எழுதப்பட்ட ஆய்வுப்பூர்வமான கட்டுரையாகும்.

"விஞ்ஞானம் தோற்றுவிட்டது!" என்கிற தலைப்பு விஞ்ஞானத்தின்
மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்துக்
காட்டும் முயற்சிகளின் வெற்றி அடையாளமாக இடப்பட்டதாகும்.

விஞ்ஞானத்தின் மீதான குற்றச்சாட்டுகள் :
---------------------------------
1.  விஞ்ஞானப்பார்வை மனித இனத்தை தவறான திசையில்
     வழி நடத்திச் செல்கிறது.
2.  விஞ்ஞானம் என்பது இயற்கைவாதம் எனும் ஒருவகை மூட
     நம்பிக்கையை வளர்க்கிறது.
3.  விஞ்ஞானமானது அனைத்துக்கேள்விகளுக்கும் தன்னகத்தே
     பதில்களைக் கொண்டிருப்பதான ஒரு மாயையைத் தோற்று
     விக்கிறது.
4.  விஞ்ஞானம் என்றாலே "சுருக்கல்வாதம்"(Reductionism)
     என்று சொல்லும் அளவிற்கு , உலகையும், மனிதனையும், . . .
     அனைத்தையும் சுருக்கி எல்லாம் அடிப்படை(அணு)த்துகள்
     களின் திருவிளையாடலே என்கிறது.

விஞ்ஞானம் எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது?
------------------------------------
எவ்வொரு விஷயத்தையும் நாம் விஞ்ஞானபூர்வமாக  அணுக வேண்டும்;
அணுகி,   அறிந்து,    நிரூபணங்களைக்  கண்டுதான்  ஒன்றை   'உண்மை'
அல்லது 'நிஜம்' என ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால்,  விஞ்ஞானபூர்வம்,  விஞ்ஞானஅணுகுமுறை, அல்லது வழிமுறை
என்பது ஏதோ மாயமந்திரம் அல்ல. விஞ்ஞானவழிமுறை (The Scienti
fic Method) என்பதுஒரு குறிப்பிட்ட அம்சத்தை, பொருளை, நிகழ்வை
ஆராய்ந்தறியும் ஒரு முறை மட்டுமே என்பதை துல்லியமாக அறியாதவர்
கள்தான்,  எதற்கெடுத்தாலும் விஞ்ஞானபூர்வம், விஞ்ஞானஅணுகுமுறை,
விஞ்ஞான வழிமுறை என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்!

உண்மையில்,  விஞ்ஞானபூர்வமாக  அணுகுவதற்கென்று  உள்ள உலகின்
(பிரபஞ்சத்தின்)   ஒரு  சிறு  பகுதியைக்  கடந்து,  விஞ்ஞான அணுகுமுறை
சிறிதும் பயன்படாது.

மனிதன்,  வாழ்க்கை,  உண்மை,  மெய்ம்மை,  அன்பு,  அர்த்தம், ஆனந்தம்,
உணர்வு, . . . .   ஆகியவை  விஞ்ஞான  அணுகுமுறைக்கு   எட்டாதவை,
அப்பாற்பட்டவை.

விஞ்ஞானம்  என்றால் என்ன?
-----------------------
விஞ்ஞானம் என்றால் என்னவென்று, அடிப்படையில் மிகச்சரியாகவும்
மிகத்துல்லியமாகவும்,  தெளிவாகவும்  அறிந்துகொள்வது  மிகவும்
அவசியமாகும் :

        விஞ்ஞானம் என்பது பௌதீகச் சடப்பொருளாலான உலகை,
        அதாவது, துல்லியமாகச்சொன்னால் மொத்தப் பிரபஞ்சத்தின்
        ஒரு சிறு பகுதியைப் பற்றிய ஆய்வு என்பதற்கு மேல் வேறில்லை.

ஆம், விஞ்ஞானம் என்பது பௌதீகச்சடப்பொருளாலான உலகைப்பற்றிய
ஆய்வு மாத்திரமேதவிர அதற்குமேல் அது வேறுஎதற்கும் உதவாது.    அதே
வேளையில், விஞ்ஞான அணுகுமுறையைக்கொண்டு சடப்பொருளாலான
உலகையும்கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

ஏனெனில்,  உலகம்,  பிரபஞ்சம்  என்பது வெறுமனே சடப்பொருளாலானது
மட்டுமல்ல, வெறும் பௌதீகப்பண்புகளை மட்டுமே கணக்கில்  கொண்டு
புரிந்துகொள்வதற்கு.  ஏதோ,  பௌதீகப்  பண்பைத்தவிர  வேறு பண்புகள்
எதுவுமே  பிரபஞ்சத்தில்  இடம்பெறாதது போல  விஞ்ஞானிகள்  பேசுவதும்
கருத்து சொல்வதும்,  அவர்களது  விஞ்ஞான- மூளைகளின்   ஆரோக்கியம்
குறித்து  சந்தேகிக்கச்  செய்வதாயுள்ளது.  மனித -மூளையைப்   பொறுத்த
வரை,  அது  சடப்பொருளாலானதுதான்  என்பதில்  எவ்வித  ஐயமுமில்லை.
ஆனால், மூளையின் இயக்கத்தின் விளைவாகத்தோன்றும் மனம் அல்லது
உணர்வு என்பது நிச்சயம்  சடப்பண்பு கொண்டதல்ல.

இன்னும், ஒரு புழு, அல்லது, பூச்சி, அல்லது,  மனிதன்  என  உயிருள்ள  ஜீவி
எதுவாயினும்  அது சில  இரசாயணப்பொருட்களாலும்,  அடிப்படை அணுத்
துகள்களாலும்   தான்  கட்டமைக்கப்பட்டவை  என்றாலும்,  அதன்   "உயிர்"
எனும்  தன்மை அல்லது பண்பு என்பது  பொருண்மையானதல்ல, அதாவது
சடப்பண்பு  கொண்டதல்ல.    ஆம்,   பௌதீகச்  சடப்பண்பை  மீறிய பண்பு
களான உயிரும், உணர்வும் இப்பிரபஞ்சத்தில் உள்ளன என்பதுமட்டுமல்ல,
அவையும்   இதே  பிரபஞ்சத்தின்  பிரிக்கவியலா  பகுதிகளே, அம்சங்களே.
இன்னும்சொல்லப்போனால், சடப்பொருளைவிட, உயிரும், உணர்வும்தான்
முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் ஆகும்.

நோபல் பரிசு  பெற்ற  அமெரிக்க  பௌதீகவியல்   விஞ்ஞானி    ஸ்டீவென்
வெய்ன்பெர்க்  (Steven Weinberg)  அவர்களின் இரண்டு 'புகழ் பெற்ற
வாக்கியங்களாவன :

      "எல்லா விளக்கபூர்வமான அம்புகள் யாவும் எப்போதும் கீழ் நோக்கி
        பௌதீகவியலையே குறிக்கின்றன."  
 
      "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்கிறோமோ
       அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது."

மேலேயுள்ள  முதல்  வாக்கியத்தை   ஒட்டுமொத்த    சுருக்கல்  வாதத்தின்
தலைமைப் பிரகடனம்   என்றே  சொல்லலாம்!   சுருக்கல் வாதம்  என்றால்
என்னவென்பதை  நாம்  ஒரு  உதாரணத்தைக்கொண்டு   புரிந்து கொள்ள
லாம். அதாவது, சமூகம் என்பதற்கான விளக்கமானது மக்களைக் குறிக்கி
றது; மக்கள் என்பது, தனி நபர்களையும், தனி நபர்கள் உடல்உறுப்புகளை
யும்,   உடல் உறுப்புகள்   ஸெல்களையும்,   ஸெல்கள்   உயிரியல்-ரசாயண
விஞ்ஞானத்தையும்,  உயிரியல்-ரசாயணம்,  ரசாயண விஞ்ஞானத்தையும்,
ரசாயண விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானத்தையும் பௌதீக விஞ்ஞானம்
அணுக்கருவியல் விஞ்ஞானத்தையும் சுட்டுகின்றன.     அதாவது,       இதன்
முடிவு  என்னவென்றால், அனைத்தும் - நாற்காலி, புழு, பூச்சி, எலி, தவளை,
மனிதன் என எல்லாவற்றையும் அடிப்படை அணுத்துகள்களுக்குச்சுருக்கி
விடலாம் என்பதே.

இது எத்தைகைய பார்வை என்றால், அனைத்தும் அணுத்துகள்களால் ஆன
வையே,  அவற்றுக்கிடையேயான பரஸ்பர வினையாற்றல்களே!     ஆகவே,
"யுரேகா! யுரேகா!" அனைத்தையும் அணுத்துகள்பௌதீகத்தைக்கொண்டே
விளக்கிப் புரிந்து  கொள்ளலாம்  என்பதே! அனைத்தும் அணுத்துகள் மயம்!

பௌதீக விஞ்ஞானி,  லீ ஸ்மோலின் (Lee Smolin)அவர்கள்,   இத்தகைய
பார்வையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறார்:

     "நாம் அறிந்த இந்த பிரபஞ்சம் மொத்தத்தையும்  விளக்கிப் புரிந்து
      கொள்ள நமக்குத் தேவைப்படுவதெல்லாம், பன்னிரண்டு அணுத்
      துகள்களும், நான்கு விசைகள் (மின்காந்த விசை, ஈர்ப்பு விசை,
      அணுக்கருவின் வலுக்குறைந்த விசை, மற்றும் வலுமிக்க விசை)
      மாத்திரமே."

ஆனால்,   "எல்லா    விளக்கபூர்வமான  அம்புகள்   யாவும்  எப்போதும்   கீழ்
நோக்கி  பௌதீகவியலையே  குறிக்கின்றன."  எனும்   ஸ்டீவென்  வெய்ன்
பெர்க் அவர்களின் கூற்று,  பிரபஞ்சத்தின்  பொருளாலான பகுதியே ஒட்டு
மொத்தப் பிரபஞ்சமும் என்பதான தவறான புரிதலின், அல்லது   துவக்கப்
புள்ளியின் வெளிப்பாடாகும்.

சந்தேகத்திற்கிடமில்லாமல்,   இப்பிரபஞ்சத்தில்  உள்ள  அனைத்தும்  சடப்
பொருளால்,  குறிப்பாக, அணுத்துகள்களால்   ஆனவையே.   ஆயினும், ஒரு
உயிரற்ற     கூழாங்கல்லுக்கும்,     ஒரு    சிட்டுக்குருவிக்கும்  இடையேயான
வித்தியாசம் எவ்வகையிலும் சரிக்கட்டமுடியாததாகும். இன்னும் உயிரற்ற
இரண்டு பொருட்களுக்குமான,  உதாரணத்திற்கு,  ஒரு  கூழாங்கல்லுக்கும்
ஒரு  லட்டுவுக்கும்  உள்ள   வித்தியாசமும்  சமப்படுத்தவே முடியாததாகும்.
இரண்டும் அணுத்துகள்களால்  ஆனவையே. ஆனால், கூழாங்கல்லை நாம்
சாப்பிடமுடியாது;  லட்டுவை நாம் ருசித்துச் சாப்பிடமுடியும்.  ஆக, பொருட்
களின் அடியோட்டமான நிஜம், அவை அணுத்துகள்களால் ஆனவை எனும்
விபர உண்மை,  பொருட்களுக்கிடையே   நிலவும்    வித்தியாசங்களையும்,
விஷேடத் தன்மைகளையும் விளக்குவதில்லை!   ஆக,   ஸ்டீவென்  வெய்ன்
பெர்க் அவர்களின் கூற்று முற்றிலும் தவறானதுமட்டுமல்ல, அபத்தமானது.

முக்கியமாக,    அவரது  கூற்று  பரிணாம-விரோதமானது.  எந்தப் பரிணாம
நிகழ்வுமுறையானது  உயிரும், உணர்வும் அற்ற  அடிப்படை( அணு)த்துகள்
களை,  1500 கோடி ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களினூடாகச்
செலுத்தி,  தற்போது உணர்வுள்ள  சிந்திக்கும்  திறனுள்ள    ஒரு  விஞ்ஞானி
யாக, அவரை உருவாக்கியதோ அந்தப் பரிணாம நிகழ்வுமுறையை முற்றி
லுமாக மறுப்பவராக ஸ்டீவென் வெய்ன்பெர்க் விளங்குகிறார்.

முதலிடத்தில், அணுத்துகள்கள் என்பவை எக்காலத்திற்கும்  அணுத்துகள்க
ளாகவே இருப்பதற்காக உருவானவையல்ல. அவ்வாறிருந்தால்,பரிணாமம்
என்ற  வழிமுறை  தோன்றியிருக்காது;  நாமும் தோன்றியிருக்க மாட்டோம்;
இது போன்ற சர்ச்சைகளும் எழாது.   ஆனால்,   பரிணாமம்  என்பது   மறுக்க
வியலாத உண்மையாகும். இன்னும் பொருளும் பரிணாம நிகழ்வுமுறையும்
பிரிக்க முடியாதது.  பொருள்  என்பது  ஒரு  பரிணமிக்கும் பொருளே யாகும்.
அதாவது,   பொருள் ( அணுத்துகள்கள் ) தான்   பிரபஞ்சத்தின்   அடிப்படைக்
கட்டுமானப்பொருளாகும். அப்பொருளைக் கொண்டு என்னென்ன அமைப்
புகள், வடிவங்கள்(பரிணாம வழிமுறை மூலமாகக்) கட்டியெழுப்பப்படுகின்
றன;அவ்வமைப்புகள்,அல்லது வடிவங்களிலிருந்து என்னென்ன அம்சங்கள்  
புதிது புதிதாக வெளிப்படுகின்றன,அவ்வழிமுறையில் இறுதியாக  வெளிப்
படக் கூடிய  அம்சம்  எதுவாக  இருக்கும்  என்பது தான்  அனைத்தையும்விட
முக்கியமானது.

எல்லாம்  அணுத்துகள்களால் ஆனவை என்பது  ஒரு அடிப்படை   (தொடக்க
நிலை)உண்மை மட்டுமே,அதுவே இறுதி உண்மை அல்ல. ஒரு செங்கல் குவி
யலுக்கும், செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு மாளிகைக்கும் உள்ள  வித்தியா-
சத்தை எவ்வாறு ஸ்டீவென் வெய்ன்பெர்க் காணத்தவறினார்? ஒரு கட்டடம்
செங்கற்களால்  அமைக்கப்பட்டது எனும்பட்சத்தில், அவ்வுண்மை மறுக்கப்
படமுடியாது   என்பதைப்போலவே,  அச்செங்கற்களைக்கொண்டு  எழுப்பப்
பட்ட கட்டடம் எனும் புதிய பண்பையும், உண்மையையும் நாம்  மறுக்க முடி
யாது. ஆனால், ஒரு கட்டடம்  என்பது   வெறும்  செங்கல் குவியல் அல்ல, அது
ஒரு புதிய வடிவம்,  ஒரு புதிய உண்மை! மேலும்,  செங்கற்களைக் கொண்டு
எண்ணற்ற    வடிவமைப்புகளைக் கொண்ட  கட்டடங்களை எழுப்ப முடியும்.
அவ்வடிவமைப்புகளை   செங்கல்லின் பண்புகளைக் கொண்டு முன் அறிய
முடியாது.  கட்டுமானப்பொருள் என்பது  செங்கற்களோ அல்லது அடிப்படை
அணுத்துகள்களோ, அவை எவ்வகையிலும் இறுதியானவையல்ல.

ஸ்டீவென் வெய்ன்பெர்க்   போன்ற   விஞ்ஞானிகளும்,  பொருள்முதல்வாதி
களும், பௌதீகஅணுத்துகள்களை பிரபஞ்சத்தின் அடிப்படைப்பொருளாக
காண்பதில்   தவறேதுமில்லை.      ஆனால்,     பிரச்சினை   என்னவென்றால்,
அவர்கள்  பொருளுக்குத்தருகின்ற முக்கியத்துவத்தை பரிணாமம் என்கிற
அம்சத்திற்கு அளிக்கத்தவறிவிட்டதுதான்!ஆம், பரிணாமம் என்பதை நீக்கி
விட்டால்,  பொருளுக்கு யாதொரு அர்த்தமும், முக்கியத்துவமும் இல்லாமல்
போய்விடும்  என்கிற உண்மையை அவர்கள் எவ்வாறோ அறியத் தவறினர்
என்பது பேரவலமே.  ஏனெனில்,  பரிணாமம் என்பதற்கு வெளியே  பொருள்
என்பது இருந்தாலும்,  இல்லாவிட்டாலும்  ஒன்றுதான்! பொருளும் பரிணாம
மும் பிரிக்கமுடியாதது;   பரிணாமத்தின்   கருவி    அல்லது    ஊடகம்   தான்
பொருள்  என்பது.  பொருள்   என்றாலே  அது  பரிணமிக்கும்  பொருள் தான்.
முதலிடத்தில்,      பொருள்  ஏன்  பரிணமிப்பதாக   இருக்கிறது?     ஏனெனில்
உண்மையில்,    பொருள்  அல்லது  அதன்   பொருண்மைத் தன்மை  என்பது
இன்னதென்று  வரையறுக்கப்படாத, எவ்வித உள்ளார்ந்த அர்த்தமும் அற்ற
ஒரு   ஆற்றல்   மட்டுமேயாகும்.     முக்கியமாக,     பொருளானது   எத்தகைய
ஒப்பற்ற   இலக்கை   அடைவதற்கான   கருவியாக,  ஊடகமாகச் செயல்படு
கிறது என்றால், அது தனது அசலான பண்பை (தனது மூலத்தை)அடைவதற்
கான பரிணாமவழிமுறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

'பெரு-வெடிப்பு' எனும் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தில் தோன்றிய அணுத்
துகள்கள் பல்வேறு அமைப்புகளில் அமைந்து,  கேலக்ஸி எனப்படும் நட்சத்
திர   மண்டலங்களாகவும்,   சூரிய மண்டலங்களாகவும்,    கிரகங்களாகவும்
ஆனதோடு, ஒரு கட்டத்தில் உயிருள்ள ஜீவிகளாகவும், பிறகொரு மாபெரும்
பரிணாமத் தாவலில்,   உணர்வுபெற்ற,    சிந்திக்கும்  திறனுள்ள  மனித ஜீவி
களாகவும் அவதாரம் எடுத்துள்ளன. அதாவது, இன்றைய அளவில், பௌதீக
சடப்பண்பையடுத்து,  உயிர்,  மற்றும், உணர்வு எனும் பண்புகளையும் நமது
பிரபஞ்சம் கொண்டுள்ளது.

அதாவது,  பிரபஞ்சத்தை முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள
வேண்டுமானால்,  பொருண்மை,  உயிர்,  மற்றும் உணர்வு ஆகிய இம்மூன்று
பண்புகளின் சொற்கள் வழியாகப் புரிந்து கொண்டாகவேண்டும்.  இன்னும்
இறுதியான  புரிதலுக்கு,   பரிணாமத்தில்   இறுதியாக வெளிப்படவிருக்கும்
அப்பண்பையும்  கண்டறிந்து கணக்கில் கொண்டாக வேண்டும்.  எல்லாவற்
றுக்கும்  மேலாக,  பரிணாம வழிமுறையை, அதன் அடியோட்டமான திட்டத்
தையும்;  குறிப்பாக, பரிணாமத்தில் பரிணமிக்கும் அம்சம் எது என்பதையும்
முழுமையாகப்  புரிந்து  கொண்டாக வேண்டும்.  ஆம்,  பரிணாம  வழிமுறை
யைப் புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளமுடியாது.

ஏனெனில், ஒரு இறுதியும் முழுமையுமான புரிதலின்படி,  ஒரு அமைப்பு என்
கிறவகையில் பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் பரிணாமக்களமாகும். ஒரு
இயக்கம் என்கிறவகையில், அது ஒரு பரிணாமஇயக்கமாகும். இதைத்தவிர
அது வேறெதுவுமல்ல!

முதலிடத்தில்,   பிரபஞ்சத்தை  எதற்காக  நாம்  புரிந்து  கொள்ள வேண்டும்?
அதற்கான அடிப்படை, நோக்கம், பயன்பாடு என்ன என்பவற்றையெல்லாம்
நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும். முதலில், மனிதஜீவியா
கிய நமக்கும், இந்த மாபெரும் பிரபஞ்ச அமைப்புக்கும்  உள்ள தொடர்புறவு
என்ன,  எந்த அடிப்படையில்  நாம் பிரபஞ்சத்துடன்   பிணைக்கப்பட்டிருக்கி
றோம்?  நமக்கும், பிரபஞ்சத்திற்கும் பொதுவாக உள்ளது எது?   என்பவற்றை
யெல்லாம்   புரிந்து  கொள்ளாமல்;   அதாவது    பிரபஞ்சத்துடன்   நம்மையும்
இணைத்துக்கணக்கில்கொள்ளாமல், தனியே பிரபஞ்சத்தைமட்டும் புரிந்து
கொள்வது என்பது ஒரு விலங்கின் தலையைப் புரிந்து கொள்ளாமல்,  அதன்
வாலை மட்டும் புரிந்து கொள்வது போன்று அரைகுறையானதாகும்!

நம்மையும்,   பிரபஞ்சத்தையும்   இணைப்பதும்,    இருவருக்கும்  பொதுவாக
இருப்பதும் பரிணாமம் என்கிற வழிமுறையேயாகும்.பிரபஞ்சம் என்பது பிர
தானமாக ஒரு பரிணாமநிகழ்வுமுறையாகும். அதில் முதலாவதாக விளைந்
தது 'பொருள்' எனும் சடப்பண்பு ; இரண்டாவதாக விளைந்தது  'உயிர்' எனும்
பண்பு;  மூன்றாவதாக  விளைந்தது  ' உணர்வு'   எனும் பண்பு.  இந்த  மூன்றா
வது  பண்பைத் தாங்கியுள்ளவர்கள்  என்கிற   வகையில்தான்    மனிதஜீவிக
ளாகிய  நாம்  இப்பிரபஞ்சப் பரிணாம  இயக்கத்தில்  புகுத்தப்பட்டுள்ளோம்.  
பரிணாம  வழிமுறையைப்  பொறுத்தவரை,   முதலில்   வந்த   பண்பு  அல்ல
முக்கியமானது; மாறாக, அடுத்தடுத்து தோன்றிடும் பண்புகள்தான் முக்கிய
மானவை!    இவ்வகையில்,   இதுவரையில்  தோன்றியவற்றில் கடைசியாகத்
தோன்றிய  மனித-உணர்வும் கூட  இறுதியான  முக்கியத்துவத்தைப்  பெற்ற
தல்ல.

ஏனெனில்,  மனித - உணர்வைப் பற்றிய  ஒரு  உண்மை என்னவெனில்,  அது
உணர்வுநிலையின் உதயம்,  அதாவது,   உணர்வின்  தொடக்க நிலை  தானே
தவிர,   அதுவே  உணர்வின் முழுமையோ  அல்லது   இறுதி நிலையோ  அல்ல.
அதே நேரத்தில்,  மனித - உணர்வையடுத்து வெளிப்படவேண்டிய பண்பைக்
கொண்டு  வருகின்ற பெரும்  பரிணாமப் பணியில்  மனிதஜீவிகளின்   பங்கு
மிகவும் மையமானது என்கிற வகையில், மனிதஜீவிகளுக்கு ஒரு தனி முக்கி
யத்துவம் உள்ளது.

மனித உணர்வையடுத்து வெளிப்படவிருக்கும் அந்த அம்சம், அதுவே இறுதி
யான  அம்சமும்  ஆகும்;  அதுவும் உணர்வுதான்,  ஆனால்  அது மனித உணர்
வைப்போல சிற்றுணர்வு அல்ல, அதுவே உணர்வின் (தர்க்க ரீதியான) இறுதி
யும் முழுமையுமான நிலை. அதுதான் "முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு"!
அந்தப்  பேருணர்வு  நிலைதான்  உணர்வின்  உதயமாக   எழுந்த  ஒவ்வொரு
மனிதஜீவியும்   அடைந்தாக  வேண்டிய   பரிணாம   இலக்கும்,  முழுமையும்;
அதுவே பிரபஞ்சத்தின் இலக்கும் முழுமையும்!

'பிரபஞ்சம்  என்பது  அடிப்படையில்  வெறும்  அணுத்துகள்களே'    என்பதும்,
இன்னும் அனைத்தையும் அணுத்துகள்களுக்குச் சுருக்கி  எல்லாவற்றையும்
பௌதீக விஞ்ஞானம்  கொண்டு  விளக்கம்  காண்பதும்  யாதொரு உருப்படி
யான புரிதலையும் தராது.   அதே நேரத்தில்,  எல்லாவற்றையும் அணுத்துகள்
களுக்குச் சுருக்கிக் காணும் விஞ்ஞானிகள், அணுத்துகள்களை மட்டும் எந்த
அடிப்படையில்  சுருக்காமல்   அப்படியே  வைத்துக்  கொண்டாடுகிறார்கள்?
அணுத்துகள்களை மட்டும் சுருக்க முடியாதா என்ன? ஒரு வகையில் அணுத்
துகள்களைச் சுருக்க முடியாதுதான்!    ஏனெனில்,  அவை     உருவானவிதமே
புதிரானது என்பதால்மட்டுமல்ல; முக்கியமாக அவை சுருக்கப்படுவதற்காக
உருவானவையல்ல,  மாறாக,   விரித்துப்  பெருக்கப்படுவதற்காக   உருவான
வையாகும்!

ஆகவே,  அனைத்தையும் அணுத்துகள்களுக்குச் சுருக்கிக்காண்பது என்பது
தவிர்க்கப்படவேண்டிய தவறாகும். அவ்வாறு சுருக்கிக் காண்பதால் எவ்வித
மேலதிகப்   புரிதலையும்   நாம்  பெறப்போவதில்லை.   அவ்வாறு    சுருக்கிக்
காண்பது  பெரும் சாதனையும் அல்ல!அணுத்துகள்கள் தான் பிரபஞ்சத்தின்
அடியும்  முடியுமான  உண்மை  என்பதாயிருந்தால்,   அவை  ஏன்  நெடிய  பரி
ணாமப்  பிரயத்தனத்தை  மேற்கொண்டு  உயிராகவும்  உணர்வாகவும்  உரு
மாற்றம் பெற்றாகவேண்டும்? பரிணாமத்தின் அனைத்து விளைவுகளையும்
அணுத்துகள்களுக்குச்  சுருக்கித்தான்  காண்போமெனில், பரிணாமத்திற்கு
என்ன தான் அர்த்தம் உள்ளது? அல்லது,  மனிதஜீவிக்குத்தான் என்ன மதிப்பு,
அர்த்தம் உள்ளது?

விஞ்ஞானி,   ஸ்டூவர்ட் எ. காப்மேன் (Stuart A. Kauffman, Complexity
Theorist), தனது  "புனிதத்துவத்தை மறுகண்டுபிடிப்புசெய்தல்"  (Rein-
venting The Sacred,2008) எனும் நூலில், விஞ்ஞான அணுகுமுறையில்
வேரோடிப்போன சுருக்கல்வாதம் பற்றிச் சொல்லும் போது:

    "  .... காதல் கொண்ட இருவர், ஒரு நதிக்கரையின் ஓரமாக நடந்து செல்கி
      றார்கள் என்பது, உண்மையில்,  காதல் கொண்ட இருவர், ஒரு நதிக்கரை
      யின் ஓரமாக நடந்து செல்கிறார்கள் என்பதைத்தான் குறிக்கிறதே, தவிர,
      இயக்கத்திலுள்ள வெறும் அணுத்துகள்களைக் குறிப்பதில்லை...."
   
என்பதாகச் சொல்லுகிறார். ஆம், விஞ்ஞானத்தைப் பீடித்திருக்கும்  சுருக்கல்
வாதம், மனித இருப்பின், வாழ்வின் கொஞ்சநஞ்சம் அர்த்தத்தையும்,  மகிழ்ச்
சியையும் அழித்துவிடக்கூடும்.

ஒருவகையில்,மனிதஜீவிகளும் அவர்களது உடலைப்பொறுத்தவரை அணுத்
துகள்களால் ஆனவர்களே. ஆனால், ஆதிஅணுத்துகள்கள் நெடியபரிணாமத்
தின் மூலமாக மனிதஜீவிகளாயிற்று; அதில் சிலர்,  ஸ்டீவென் வெய்ன்பெர்க்
போல பௌதீக விஞ்ஞானிகளாகவும் ஆனதிலும் பெரிதாகப்பிரச்சினை ஏது
மில்லை. பிறகு எதுதான் பிரச்சினைஎன்றால், விஞ்ஞானியாக மாறிய அணுத்
துகள்கள்  மீண்டும்  அணுத்துகள்களைப் பற்றியே  ஆராய்ந்து   கொண்டிருக்
கின்றன என்கிற விபரீதம் தான்!

அடுத்து, ஸ்டீவென் வெய்ன்பெர்க் அவர்களின் இரண்டாவது வாக்கியத்தை
ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்:

       "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்கிறோமோ
        அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது."

என்பதாக, ஸ்டீவென் வெய்ன்பெர்க் சொல்லியுள்ளார், இந்த அபத்தத்திற்கு
காரணம்  பிரபஞ்சம் அல்ல.  மாறாக,   பிரபஞ்சத்தை      அணுத்துகள்களின்
நிலைக்குச்சுருக்கிவிட்டபிறகு, அணுத்துகளின் பண்புகளான நிறை( mass)
மின்னூட்டம் ( charge),சுழற்சி(spin),அதிர்வு (resonance); துகள்கள்
இயங்கும் வெளி(space);அதனுடன்இணைந்த காலம்(time),ஈர்ப்பு விசை
(gravity),அணுக்கருவை நிலைக்கச்செய்யும் வலுமிக்கவிசை( nuclear
Strong force),துகள்களுக்கிடையேயான  பரிமாற்றத்திற்குதவும் வலுக்
குறைந்தவிசை (nuclear Weak force)ஆகிய பண்புகளின்  சொற்களில்
மட்டுமே  புரிந்து கொள்வேன் என்று அடம்பிடிக்கும் சிறுபிள்ளைத்தனமான
அவர்களது அணுகுமுறையில் அபத்தத்தைத் தவிர வேறு என்ன மிஞ்சும்?

பிரபஞ்சத்தைப் பற்றிய  இறுதியான உண்மை என்பது உண்மையில் பிரபஞ்
சத்தைக் கடந்த மெய்ம்மை பற்றியதாகும். அந்த மெய்ம்மையை அடைவதற்
கான  ஒரு  உபாயமே  பிரபஞ்சம் ஆகும்.  அந்த  (இறுதி) மெய்ம்மையின்  ஒரு
உள்-வெளியாக்கப்பட்ட(Turned Inside out)வடிவமே பிரபஞ்சம்.  பிரபஞ்
சத்தின்  வெளி-உள்ளாக்கப்பட்ட (Turned Outside in)மலர்ச்சி நிலையே
அந்த ஆதியும் அந்தமுமான  மெய்ம்மையாகும்.

திரு. ஸ்டீவென் வெய்ன்பெர்க் போன்ற சில பௌதீகவியல் விஞ்ஞானிகளின்
ஒரு பிரச்சினை என்னவென்றால்,  அவர்கள் அனைத்தையும் பௌதீக விதிக
ளுக்குள் அடக்கிவிட விரும்புவதுதான். சில கணிதவியலாளர்களின் நோயும்
இதுதான். மாபெரும் விஞ்ஞானி என பெயர்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்
கள்,   பிரபஞ்சத்தின் ஆற்றல் விசைகளை  ஒருங்கிணைத்திட  விரும்பி தனது
வாழ்க்கையின் கடைசி முப்பது ஆண்டுகளை அதற்கான ஆராய்ச்சியில் ஈடு
பட்டு முடிவில் தோல்வியைத்தழுவினார்.  இயற்கை முழுவதையும்  ஒற்றைக்
கோட்பாட்டின் வழியே விளக்கிவிட வேண்டும் எனத் தீவிரமாக விரும்பினார்.

ஆனால், நம் காலத்திலேயே வாழ்ந்துவரும் இன்னொரு மாபெரும் விஞ்ஞானி
யான, ஸ்டீபன் ஹாக்கிங்(Stephen Hawking)தனது  A Brief History of
Timeஎனும் நூலில், மிகவும் அரிய நுண்ணறிவுடன் கூறிய ஒரு முக்கியத்துவம்
வாய்ந்த கருத்தை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாயிருக்கும் :

    "அனைத்தையும் ஒருங்கிணைத்திடும் (ஒரே) ஒரு கோட்பாடு(தான்)
     சாத்தியம் என்றாலும், அது வெறும் விதிகளாகவும், சமன்பாடுகளாகவும்
     மட்டுமே விளங்கிடும். எது அந்த சமன்பாடுகளுக்குள் நெருப்பை ஊதி
     அச்சமன்பாடுகளால் விளக்கிடும் வகையில் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்
     கிடும்? பிரபஞ்சத்தை விளக்கிட ஒரு கணிதவியல் மாதிரியை
     உருவாக்கிடும்  வழக்கமான விஞ்ஞான அணுகுமுறையால்  ஏன் இங்கே
     ஒரு பிரபஞ்சம் இருக்கவேண்டும் எனும் கேள்விக்கு பதிலளிக்க இயலாது.."

விஞ்ஞானி   ஸ்டீபன் ஹாக்கிங்-ன்   இந்தக்கருத்து  மிகவும்   சிந்தனைபூர்வ
மானதாகும்! அதே நேரத்தில் அவர் எல்லா நேரத்திலும், எல்லா விஷயங்களி
லும் இவ்வாறு சிந்தனைபூர்வமாகவும்,தர்க்க பூர்வமாகவும்,பொறுப்பாகவும்
இருப்பதில்லை என்பது வேறு விஷயம்! ஏனெனில், அடிப்படையில்அவர் ஒரு
விஞ்ஞானி, அதுவும் ஒரு பௌதீகவியல் விஞ்ஞானி!

           [இக்கட்டுரையுடன் இதற்கு முந்தைய , "பிரபஞ்சம் குறித்த
            இறுதிச்சமன்பாடு" எனும் கட்டுரையையும் சேர்த்து வாசிக்கவும்]

(தொடரும்)

மா.கணேசன்/ 11.08.2016
---------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...