Sunday, 11 February 2018

தமிழ்நாடு திறந்துகிடக்கும் வீடல்ல!



(கமல ஹாசனின் உண்மையான நிறம்!)


   "தமிழ் என்பது உங்கள் விலாசம், அது உங்கள் தகுதியல்ல! .....
   நான் தமிழன் அதன்னால எனக்கு இதக் கொடுங்கன்னு கேட்க
   முடியாது! நான் இந்த வீட்ல குடியிருக்கறன் என்பது உங்க விலாசம்;
   அது இருக்கட்டும் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு அடுத்தது 
   உடனே கேட்பாங்க!...."             
                                         -- கமல ஹாசன்
                           ✦
                   

இனியும் தமிழ் நாட்டு மக்களை அடுக்கு மொழியில் பேசிக்கொண்டு, கவிதை
கலந்த பூடகமான தமிழில் பேசிக்கொண்டு ஏமாற்றமுடியாது எனும் கட்டத்தை
நாம் அடைந்துள்ளோம்! தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய மிகவும்
சோதனையான காலம் இது! இப்போதும்கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை
யென்றால் நமக்கு விடிவுகாலம் என்பதே இல்லாமல் போய்விடும்! நம் வீட்டை
கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள் அந்நியர்கள்!

என்னை அறிந்தவர்களுக்கு என்னை நன்றாகத்தெரியும், நான் ஒரு குறுங்குழு
வாதியல்ல என்பது! நான் பிரபஞ்சமளாவிய பார்வை கொண்டவன்! நான்
காலம், இடம், தேசம், வர்த்தமானம், இனம், மொழி, மதம், கலாச்சாரம், கடந்த
வனாகத்தான் நேற்றுவரை வாழ்ந்துவந்திருக்கிறேன்!

   இந்தியாவில் பிறந்ததால் நான் ஒரு இந்தியன்; ஆப்பிரிக்காவில்
   பிறந்திருந்தால் நான் ஒரு ஆப்பிரிக்கன்! எங்கே பிறந்தாலும் நான்
   நான் தான்! என்று பேசி வந்தேன்.

"மனிதன்" என்பதுதான் எனது முதல் அடையாளம்!  நேற்றுவரை நான் ஊமை
யாக இருந்துவிட்டேன்; இப்போது நான் பேசவேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டுள்ளேன்! அப்படியானால் ஒரு மனிதன் எந்த மொழியில் பேசுவான்?
எனது தாய்மொழி தமிழ், நான் தமிழில் தானே பேசவேண்டும்? இது நாள்வரை
ஒரு மனிதனாகத் தமிழில் பேசிவந்த என்னை இன்று ஒரு தமிழனாகப் பேச
வைத்து விட்டார் கமலஹாசன்!

இது கெட்ட நேரத்திலும், ஒரு நல்ல நேரம்! இல்லையென்றால், கமலஹாசன்
இப்படிச் சொல்லி யிருப்பாரா? அதுவும் அவர் புதிதாக அரசியல்கட்சி ஆரம்பிக்
கப்போகும் இந்த தொடக்கக் கட்டத் திலேயே அவர் இப்படிப்பேசியிருப்பது
அவரது உண்மையான நிறத்தை நமக்குக் காட்டியிருக்கிறது என்றுதான்
சொல்லவேண்டும்! அதற்காக நான் அவருக்கு என் நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்!

நான் தமிழன் அதனால, எனக்கு இதக்குடுங்க, அதக்குடுங்கன்னு நான் பிச்சை
கேட்கவில்லை! எந்தத் தமிழனும் அவ்வாறு கேட்கமாட்டான்! நான் இந்த
வீட்டுல வெறுமனே குடியிருக்கவில்லை; நான் இந்த வீட்டுல பிறந்தவன்,
இது என் வீடு, இது என் நாடு, என் தமிழ்த்திருநாடு! ஆக, நான் கேட்பது
ஒன்றே ஒன்று தான் : தமிழர்களாகிய எங்களுக்குத்தகுதி இருக்கிறதோ,
இல்லையோ; எங்களை இனி நாங்களே ஆண்டு கொள்கிறோம்! தமிழர்களல்
லாத பிறருக்கு வேறு எல்லா தகுதிகளும் இருந்தாலும், தமிழன் எனும் தகுதி
இல்லாத எவரும் எங்களை ஆளத்தகுதியற்றவரே!

தமிழனுக்கு தமிழன் எனும் தகுதியைத்தாண்டி அவனிடம் வேறு என்ன தகுதி
இல்லை? எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் தகுதி தமிழனுக்கு உண்டு!

தமிழ் கற்றுக்கொண்டவர்கள், தமிழ் பேசுபவர்கள், தமிழில் கவிதை எழுதுப
வர்கள், பிழைப்புத் தேடி தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள், வியாபாரம் செய்ய
வந்தவர்கள், இங்கேயே தங்கிவிட்டவர்கள், இங்கே  பிறந்தவர்கள், வளர்ந்த
வர்கள், ..... என எல்லோரும் தமிழர்களாக ஆகிவிடமுடியாது! 

தமிழ் என்பது எனது தாய் மொழி மட்டுமல்ல, அது எனது அடையாளம் மட்டு
மல்ல; தமிழ் எனது தகுதியும் தான்! தமிழனல்லாதவனுக்கு அது புரியாது!
தமிழ் என்றால் இனிமை மட்டுமல்ல; அறம், மறம், திறம் யாவுமாகும்!

"வந்தாரை வாழ்விக்கும் தமிழகம்!" என்பதற்கிணங்க தமிழை, தமிழ் நாட்டை
புகலிடமெனத் தேடிவருபவர்கள் வாருங்கள், வந்து வாழுங்கள்! ஆனால்,
எங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை, கூடாரத்திற்குள் கொஞ்சம் இடம் கேட்ட
ஒட்டகம் போல, உள்ளே புகுந்த பிறகு எங்களை எங்கள் வீட்டிலிருந்து
வெளியே தள்ளிவிடும் எண்ணத்தை மறந்துவிடுங்கள்! இனி எவ்வகை சூழ்ச்
சிக்கும் தமிழன் பலியாகமாட்டான்!

எவ்விடத்தில் புல் முளைக்கிறதோ அவ்விடத்திலேயே வாழ்வதற்குரிய முழு
சுதந்திரமும் அதற்கு உள்ளது! இதற்குப் பெயர்தான் "இயற்கைச் சுதந்திரம்".
இதுதான் "மண்ணின் மைந்தன்" என்பதற்கும், "தமிழ்த்தேசியம்" என்பதற்குமான
அடிப்படையும் ஆகும்! இவ்வாறு மொழி அடிப்படையிலான பல தேசியங்களின்
கூட்டமைப்பு தான் இந்திய தேசியம் என்பது!

நான் சொல்கிறது கமலஹாசனுக்கு எட்டுகிறதோ இல்லையோ, என் தமிழ்ச்
சொந்தங்களுக்கு எட்டினால் சரி!

(தொடரும்)
மா.கணேசன்/15:55 11-02-2018
----------------------------------------------------------------------------

Monday, 5 February 2018

நிறைவான சந்தோஷத்துடன் வாழ எவ்வளவு பணம் வேண்டும்?



   அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
   என்னுடைய ரேனும் இலர்.


"நிறைவான சந்தோஷத்துடன் வாழ ஒருவருக்கு, அல்லது ஒரு குடும்பத்துக்கு
எவ்வளவு பணம் வேண்டும்?" என்பதுதான் கேள்வியானால், முதலிடத்தில்,
அடிப்படையிலேயே இந்தக்கேள்வி தவறானது! ஆம், "நிறைவான சந்தோஷத்
துடன் வாழ ஒருவருக்கு, அல்லது ஒரு குடும்பத்துக்கு என்ன வேண்டும்
என்பது தான் சரியான கேள்வியாக இருக்க முடியுமே தவிர எவ்வளவு பணம்
வேண்டும், பொருள் வேண்டும், தங்கம் வேண்டும் என்ற கேள்வி தவறானது,
தலைகீழானது, ஆகவே அர்த்தமற்றது!

அடுத்து, இப்போது நாம் சரியான கேள்வியைக் கேட்போம். ஆம், "நிறைவான
சந்தோஷத்துடன் வாழ ஒருவருக்கு, அல்லது ஒரு குடும்பத்துக்கு என்ன
வேண்டும்?" இக்கேள்வியில், மிக மையமான அம்சம் வாழ, வாழ்வதற்கு,
வாழ்க்கை என்பவை தான்! மிக எளிமையாக இக்கேள்வியை நாம் கேட்போ
மெனில், அதாவது, வாழ்க்கையை வாழ்வதற்கு என்ன, (அல்லது, பன்மையில்)
என்னென்ன தேவை என்று கேட்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்!
ஆம், என்ன, அல்லது, என்னென்ன என்பது வாழ்க்கைத்தேவைகளையே குறிக்
கிறது. ஆம், வாழ்க்கை என்றதுமே பிரதானமாக "வாழ்க்கைத்தேவைகள்"
உள்ளே வந்துவிடும்! ஏனெனில், தேவைகளை எடுத்துவிட்டால், வாழ்க்கையே
நமக்கு சூன்யமாகிவிடும்; அதோடு, தேவைகளைக்கடந்து வாழ்க்கையைப்
பார்க்கும், அணுகும், பக்குவமும் அறிவார்ந்த தன்மையும் நம்மிடம் இன்னும்
துளிர்த்திடவில்லை!

உண்மையில், வாழ்க்கைக்கு "தேவைகள்" என்பவை இருக்கின்றன; ஆனால்,
தேவைகளே வாழ்க்கை அல்ல! நல்லது, தேவைகளைக்கடந்து வாழ்க்கையைப்
பார்க்கும் விஷயத்தை நாம் பிறகு பார்ப்போம்; இப்போதைக்கு, வாழ்க்கைத்
தேவைகள் என்பவை எவையெவை என்பது குறித்துப் பார்ப்போம்.

மிகவும் அடிப்படையான தேவைகள் எவை என்பதை நாம் அனைவருமே
அறிவோம்! "உணவு", "உடை", உறைவிடம்" ஆகியவையே அவை. இவற்றை
நாம் "அடிப்படைத்தேவைகள்" என்கிறோம்; ஆனால், எந்தவகையில் இவை
அடிப்படையானவை என்பதை நம்மில் அநேகர் (99% பேர்) அறிய மாட்டோம்!
அடிப்படைத்தேவைகள் என்பவை அடிப்படைத் தேவைகள் தான், ஆனால்,
அவையே அனைத்தும் அல்ல, அதாவது ஒட்டுமொத்த வாழ்க்கையும் அல்ல!

அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றாமல், பூர்த்தி செய்யாமல் நாம் உயிர்
வாழ முடியாது என்கிற வகையில் மட்டுமே அவை அடிப்படையானவை!
ஐயா! அடிப்படைத்தேவைகளை நாம் நிறைவேற்றிடுகிறோம், அடுத்தது என்ன?
இக்கேள்விக்கு பதில் கண்டறியாமல் ஒருபோதும் நாம் நம் வாழ்க்கையை
முழுமையாக, அர்த்தபூர்வமாக வாழவோ, அல்லது சந்தோஷமாக வாழவோ
முடியாது!

ஏனெனில், தேவைகளின் நிறைவேற்றமே சந்தோஷத்தைத் தந்திடுவதில்லை!
நமக்குப் பசிக்கிறது, உணவு உட்கொள்கிறோம், பசி அடங்கிப்போவதனால்
ஒருவகை நிறைவு ஏற்படுகிறது, அந்த நிறைவை, ஒருவகையான சந்தோஷம்
என்று கூட வைத்துக்கொள்ளலாம்! ஆனால், பசியாறிய நிலை ஒருபோதும்
வாழ்வின் அர்த்தத்தை அளிப்பதில்லை! உணவு இல்லாமல் நாம் உயிர் வாழ
இயலாது என்பது உண்மையே, உணவு தான் அடிப்படைத்தேவைகளில் மிக
அடிப்படையான தேவையாகும்!

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்!" என்று நாம் தத்துவம் பேசு
கிறோம்; ஆனால், சுவர் இருக்கிறது, சித்திரம் நம்மிடம் இல்லை என்பது தான்
நமது வாழ்வின் பெரும் துரதிருஷ்டம்! உணவு உட்கொண்டுவிட்டோம்;
அடுத்தது என்ன? நன்றாக உடுத்திக்கொண்டோம்; அடுத்தது என்ன? உறைவிட
மும் அமைத்துக்கொண்டோம்; அடுத்தது என்ன? "இந்த அடுத்தது என்ன?"
என்ற கேள்வி நம்மில் அநேகருக்குத் தோன்றுவதேயில்லை! ஆயினும், நாம்
உணவு உட்கொண்ட பிறகு சும்மா இருப்பதில்லை; மாறாக, அடுத்தடுத்த
வேளைகளுக்கான உணவைப் பெறுவதற்கான உழைப்பில், பணியில், உத்தி
யோகத்தில் ஈடுபடுகிறோம்!

உயிர்-வாழ்வதற்கு அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதன் அவ
சியம் மறுக்கமுடியாதது! அதேவேளையில், அடிப்படைத் தேவைகளின் நிறை
வேற்றம், நம்மை, நமது வாழ்வை நிறைவுசெய்யவில்லை, என்பதை ஏதோ
ஒருவகையில் உணர்வதன் விளைவாகவே நாம், அடிப்படைத்தேவைகளைத்
தாண்டிய வேறு பல தேவைகளை, அதாவது, தேவையற்ற தேவைகளை,
அந்தஸ்து, மரியாதை, செல்வாக்கு ஆகியவற்றின் பெயர்களில், அலங்கார
ஆடம்பரத்தேவைகளைத் துரத்திச் செல்கிறவர்களாக இருக்கிறோம்!

அதாவது, நிறைவு தராத உயிர்-வாழ்தலை பலவகைகளிலும் அலங்கரித்துக்
காண்பதன் வழியாக நிறைவையும், அர்த்தத்தையும் பெற்றுவிடலாம் எனும்
தவறான நம்பிக்கையில், பொருளாதார ரீதியாக, முன்னேற வேண்டும் என்ப
தற்காக சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லும் வகையில் போட்டி
போட்டுக்கொண்டு வாழ்க்கையை ஒரு பெரும் பொருளாதாரப் பந்தயமாகவும்,
சமுதாயத்தை பெரும் போட்டிக்களமாகவும் மாற்றியுள்ளோம்! இந்த அர்த்த
மற்ற பந்தயத்தினால், மேன்மேலும் நாம் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிக்
கொள்வதுடன், பெருவாரியான சகமனிதர்களை வறுமையிலும் ஏழ்மையிலும்
தள்ளிவிட்டுள்ளோம்!

ஏதோ வாழ்க்கை என்றாலே அது, ஒவ்வொருவரும் தமது உயர் பொருளாதார
நிலையை, செல்வ நிலையை, அந்தஸ்தை, பிறருக்கு நிரூபித்துக்காட்டுவதில்
தான் அடங்கியுள்ளது என்பது போல கருதிக்கொண்டிருக்கிறோம்! ஆகவேதான்,
நாம் ஒவ்வொருவரும் மேன்மேலும், பணம் சம்பாதிக்கவும், சொத்து, செல்வம்
சேர்க்கவும் பெரிதும் விரும்புகிறோம்! ஆனால், இன்றைய அளவில், சொத்து,
சுகம், செல்வாக்கு, செல்வம் என அனைத்தையும் பணத்தைக் கொண்டே
அளவிடுகிறோம்! ஏனென்றால், பணம், ஏராளமான பணம் இருந்தால் அது
அனைத்தையும் வாங்கித் தந்துவிடும் எனக்கருதப்படுகிறது! அதாவது,
வாழ்க்கை பற்றிய இன்றைய சமுதாயத்தின் பொதுவான எழுதப்படாத ஒரு
சமன்பாடு என்னவெனில்:

   குறைவான பணம் = குறைவான, (நிறைவற்ற, சந்தோஷமற்ற) வாழ்க்கை
   அதிக பணம்       = அதிகமான, (நிறைவான, சந்தோஷமான) வாழ்க்கை

என்பதே அந்த வாழ்க்கைச் சமன்பாடு, அல்லது வாழ்க்கை விதி ஆகும்!
ஆனால், இது தவறானது, தாறுமாறானது, தலைகீழானது, ஆகவே சிறிதும்
அர்த்தமற்றது! முக்கியமாக, வாழ்க்கையையும், அனைத்தையும் பணம் எனும்
ஒற்றைக் குறியீட்டின் வழியாகக் காண்பது; அதாவது, பணத்தின் அளவைக்
கொண்டு அனைத்தையும் மதிப்பிடுவது என்பது பிறழ்ச்சியின் உச்சமாகும்!
இதுவே மானிட குலத்தின் வீழ்ச்சியுமாகும்!

உண்மையில், அசலான வாழ்க்கைத்தேவைகள் என்பவை குறைவானவை,
அளவிற்கு உட்பட்டவை; அவை எதுவும் விலை குறிக்கப்பட்டவையல்ல!
நெல் விளையும் வயல்களுக்கு விலை குறித்தது யார்? விளையும் நெல்லும்,
காய்கறிகளும், எதுவும் விலைச்சீட்டுடன் விளைவதில்லை! யாவற்றையும்
விளைவிக்கும் விவசாயியின் உழைப்புக்கு எவ்வளவு விலை குறிக்கலாம்?
உலகின் பொருள் வளங்கள் அனைத்தையும் உற்பத்தி செய்துதரும் உழைப்
பாளிகள், தொழிலாளர்களின் உழைப்புக்கு என்ன விலை? தொழிலாளர்கள்,
உழைப்பாளர்களின் பெரும்பகுதி உழைப்பு சேராத எவ்வொரு பொருளாதாரச்
செயல்பாடும் இருக்கிறதா என்றால் அப்படி எதுவுமே இல்லை! ஆனால்,
அவர்கள் அனைவருமே ஏழைகளாகவே இருப்பதன் காரணம் என்ன? பொருட்
செல்வங்களை, வளங்களை உருவாக்கவும், உற்பத்திசெய்வதற்காகவும்;
மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளா அவர்கள்? வெறுமனே உயிர்-பிழைத்
திருக்கப் போதுமான கூலியைப் பெற்றுக்கொண்டு உழைத்துத்தேய்ந்து மாயும்
எந்திரங்களா அவர்கள்?

இப்பூமியில் தோன்றியுள்ள எல்லா உயிரினங்களும், தாவரங்களும், விலங்கு
களும், மனிதஜீவிகளும் வாழ்ந்திட வேண்டும். அந்தந்த உயிர் ஜீவிக்கான

வாழ்க்கைத்தேவைகளுக்குரிய உணவும், இருப்பிடமும் பிற பொருட்களும்
இயற்கையிலேயே இருக்கின்றன! ஆனால், மனித இனத்திற்கு மட்டும்தான்
வாழ்க்கை என்பது கட்டாய உழைப்பு முகாம் என்பதாக மாற்றப்படுள்ளது!
 
வாழ்க்கையை வாழ்வதற்கு, அடிப்படையான வாழ்க்கைத் தேவைகளை
அனைவரும் கூடவும் இல்லாமல், குறையவும் இல்லாமல் பெறுவதற்கும்
நிறைவேற்றிக் கொள்வதற்குமான உரிமை அனைவருக்கும் சமமாக உள்ளது!

ஆனால், நடைமுறை எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது!

உலக வங்கியின் புதிதாகத் திருத்தப்பட்ட வறுமைக்கோட்டின் படி ( $1.90 ஒரு
நாளுக்கு, அதாவது ரூ.122/-க்குக் கீழ் அமைந்த சம்பாத்தியம்) உலகில் வறுமை
யில் வாடுவோரின் எண்ணிக்கையானது 800 மில்லியன், அதாவது, என்பது
கோடியை (80,00,00,000), எட்டியுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள்
தொகையில் 10 % (2015-ல்). உழைக்கும் ஏழைகள், உழைத்தும் ஒரு நாளைக்கு
122 ரூபாய்க்கும் குறைவான கூலியைக் கொண்டு வாழ்பவர்கள் உலகின்
உழைக்கும் மக்களில் 10% எனப்படுகிறது. அதாவது, ஒன்பதில் ஒருவர் பசியில்
வாடுகிறார். கிட்டத்தட்ட இந்தியாவிலும், சீனாவிலும் மக்கள் தொகையில்
பாதிக்கும் மேற்பட்டவர் ஏழைகளாக இருக்கிறார்கள். மேலும், 20 நாடுகளில்,
85% பேர்கள் ஏழைகளாக உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 132 கோடி மொத்த மக்கள் தொகையில், தற்
போது 77% மக்கள், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்
கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது. ஆனால்,
இன்னொரு பக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளதாக ஆட்சி
யாளர்கள் பெருமை பேசுகிறார்கள்! அதேவேளையில், நாட்டில் ஏராளமானோர்
பசியும் பட்டினியோடும், கந்தைகளைச் சுற்றிக்கொண்டு, வீடின்றி நடைபாதை
களில் படுத்துறங்குகிறார்கள்! இத்தகைய அவல நிலை எத்தகைய தர்க்கத்துட
னும் பொருந்துவதில்லை!

நமக்குத்தெரிந்தே, நமக்கு அருகிலோ, அல்லது தொலைவிலோ, மக்கள் பலர்
பட்டினியில் வாடுகின்றனர்; ஆனால், மழை பொய்த்துப்போனதால், அறுவடை
குறைந்துவிட்டது என்பதால் அல்ல! நாட்டில், வறட்சியோ, பஞ்சமோ கூட
இல்லை! நாட்டின் தானிய சேமிப்பு நிறையவே உள்ளது. எல்லா உணவுப்
பொருட்களும் ஏராளமாக உள்ளன! ஆனால், ஏராளமானோர் பட்டினியில்
வாடிக்கொண்டிருக்கின்றனர். நமக்குத்தெரிந்தே மக்கள் பலர் தெருவில், நடை
பாதைகளில் வசித்து வருகின்றனர். நாட்டில் கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி
செய்யப்படாமல் இல்லை! மக்கள் கந்தையைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்;
நாட்டில், நூற்பாலைகள் இல்லாமலில்லை! எல்லாக்கடைகளிலும், எல்லாப்
பொருட்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன! எல்லாப்பொருட்களும்,
எல்லாமக்களுக்கும் அன்றாடம் தேவையான பொருட்களே! மக்கள் யாவருமே
ஒரே மானிட இனத்தின் மக்களேயாவர்!

உணவுப்பொருட்கள், துணிமணிகள், தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாமே
கடைகளில் வீற்றிருக்கின்றன! ஆனால், ஏராளமானோர் உண்ண உணவின்றி,
உடுக்க உடையின்றி, இருக்க வீடின்றி இருக்கிறார்கள் என்பது எதை உணர்த்
துகிறது? நாம் எத்தகைய மனித ஜீவிகள்? நாம் மனிதஜீவிகளா அல்லது,
குரூரமான சுயநல விலங்குகளா?

எல்லாப்பொருட்களும், எல்லாக்கடைகளிலும் இருக்கின்றன. ஆனால், அவை
மக்களின் பயன்பாட்டிற்காக, அன்றாட உபயோகத்திற்காக அங்கே அடுக்கி
வைக்கப்பட்டிருக்கவில்லை! மக்களின் தேவைகளோ, பொருட்களின் பயன்
பாடோ நமக்கு முக்கியமில்லை! பொருட்கள் யாவும் வியாபாரத்திற்காக
வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் உரிய குறிக்கப்பட்ட
விலையைக் கொடுத்து வாங்க முடிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள்
உள்ளன!

ஆம், நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட சமூக அமைப்பு, மதிப்பீட்டு-அமைப்பு,
சட்ட திட்டங்கள், விதிகள், நடைமுறைகள், வழக்கங்கள், படிமுறை அமைப்பு
கள், சமூக-பொருளாதார-அரசியல் நிறுவனங்கள், இன்னபிற யாவும் வாழ்க்கை-
-விரோதமானவையாகும்! ஏனெனில், நம்மிடம் யாதொரு வாழ்க்கைப்பார்வை
யும் கிடையாது. அல்லது நமது வாழ்க்கைப்பார்வை தலைகீழானது! இதுதான்
நடைமுறை உலகம்! கடைகளில் மக்களுக்குத்தேவையான எல்லாப் பொருட்
களும் இருந்தாலும், அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாது! மக்களின்
தேவைகளுக்கு மதிப்பில்லை, பொருட்களின் பயன்பாடு முக்கியமல்ல! பணம்
இல்லையென்றால், மக்களின் வாழ்க்கைக்கும் மதிப்பில்லை! ஆக, நிலவுகிற
நடைமுறை மாற்றமுடியாதது! சட்டத்தில் இடமில்லை! புதிய பொருளாதாரக்
கொள்கைகள் இயற்றப்படவேண்டும், எவ்வாறேனும் வறுமை ஒழிக்கப்பட
வேண்டும்! எங்கள் கட்சியைத்தேர்ந்தெடுங்கள்! நாங்கள் வறுமையை ஒழித்து
நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம்! நாங்கள் நாட்டை
ஒளிரச்செய்வோம்! இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நம்நாடு வல்லரசாகிவிடும்
என முழங்குகின்றன அரசியல் கட்சிகள்!

உண்மையிலேயே, நாம் சித்த சுவாதீனமுள்ள ஜீவிகளாயிருந்தால், வாழ்க்
கையை நாம் வேறுவகையில், முறையாக அணுகியிருப்போம்! அதாவது,
வாழ்க்கைத்தேவைகளை பணத்தைக்கொண்டு அளக்க மாட்டோம்! உயிர்-வாழ்
வதற்கு உணவு அவசியமானது; ஆகவே நாம் உணவின் தேவையைத்தான்
பிரதானமாகக் கருதவேண்டுமே தவிர, அதாவது, நமக்குப் பசிக்கும் போது,
"உணவு வேண்டும்!" என்று சொல்லாமல், "பணம் வேண்டும்!" என்று சொல்
வது தலைகீழானது, அபத்தமானது! 'பணம்' என்பது பரிவர்த்தனைக்கான
அடையாளச்சீட்டாக, பின்னால் வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள
முடியும்! இவ்வாறே வாழ்க்கைத் தேவைகள் கோரும் ஒவ்வொரு பொருளின்
பயன்பாடு மட்டுமே முக்கியமானதே தவிர, அப்பொருளின் மீது குறிக்கப்பட்ட
விலைமதிப்பு அல்ல!

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!" என்று சொல்லப்பட்டது! ஆனால், மனித
சமுதாயமானது கூடிச் செயல்படுகிறது, எவ்வொரு பொருளாதாரச் செயல்
பாட்டிலும் உழைக்கு மக்களின் பங்கேற்பு இல்லாமல், ஒரு சிறு குண்டூசியை
யும் கூட உற்பத்திசெய்யமுடியாது! ஆனால், அக்கூட்டு உழைப்பின் பலன்கள்
என்று வரும்போது, 90% -த்தை, முதலாளிகள் அள்ளிக்கொண்டு போய்விடுகின்
றனர்! ஆக, நாம் கூடிச் செயல்படுகிறோம், உழைக்கிறோம்; ஆனால், உழைப்
பின் பலன்களை நியாயமாகப்பகிர்ந்து கொண்டு வாழ்வதில்லை! அதாவது,
நாம் கூடி உழைக்கிறோம், ஆனால், கூடி வாழ்வதில்லை!

மானிட வாழ்க்கைக்குரிய எல்லாப்பொருட்களையும், அம்சங்களையும், மதிப்பு
களையும் நாம் பணத்தைக்கொண்டே அளப்பதால், "பணம்" என்பது பிரதான
மாக்கப்பட்டு பிறவனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன! பணம், ஏராள
மான பணம் இருந்தால், எதையும் வாங்கலாம், எல்லாவற்றையும் வாங்
கலாம் எனும் கணக்கு மனித ஜீவிகளை பணத்தை வழிபடும் பிறழ்ச்சியான
ஜந்துக்களாக மாற்றிவிட்டது! பணத்தின் முன்னே, மனிதஜீவிகளும், வாழ்க்
கையும், எல்லாமும் மதிப்பற்றுப்போயின!

"பணம் என்பது அச்சடிக்கப்பட்ட சுதந்திரம்!" என்று கார்ல் மார்க்ஸ் கூறினார்.
ஆனால், இன்றைய அளவில், பணம் என்பது "அச்சடிக்கப்பட்ட வாழ்க்கை
நலம்!" என்பதாகவும், "அச்சடிக்கப்பட்ட சந்தோஷம்!" என்பதாகவும், "அச்சடிக்
கப்பட்ட ஆரோக்கியம்!" என்பதாகவும், "அச்சடிக்கப்பட்ட பாதுகாப்பு!" என்பதாக
வும், இன்னும், அச்சடிக்கப்பட்ட அனைத்துமாகவும் கருதும் கீழ்மையுள் மனித
இனம் ஆழ்ந்துள்ளது!

பணம், ஏராளமான பணம் இருந்தால் எல்லாவற்றையும், இந்த பூமியையே
வாங்கிட முடியும்! ஆனால், நிறைவான சந்தோஷத்துடன் வாழ எவ்வளவு
பணம் வேண்டும்? எவ்வளவு பணம் இருந்தாலும் போதாது! பணத்தைக்
கொண்டு பொருட்களை வாங்கலாம், ஆட்களை, அடிமைகளை, வேலைக்
காரர்களை வாங்கலாம், ஆனால், உண்மையான உறவுகளை வாங்கமுடியாது;
இன்னும் வாழ்க்கையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் விலைக்கு
வாங்க முடியாது!

அடுத்து ஒருவன் தன் வாழ் நாளில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
பணம் சம்பாதிப்பதற்கு ஒரு எல்லை எதுவும் இல்லை? ஒரு ரூபாய், இரண்டு
ரூபாய்கள், மூன்று, .... பத்து, நூறு, ஆயிரம், என அனந்தம்வரை அது போய்க்
கொண்டேயிருக்கும்! கீழே பாருங்கள்:

ஒன்று, one(1)
பத்து, ten (10)
நூறு, hundred (100)
ஆயிரம், thousand (1,000)
பத்தாயிரம், ten thousand (10,000)
லட்சம், one lakh (1,00,000 )
பத்து லட்சம், மில்லியன், one million (1,000,000)
கோடி,  one crore, ten million (10,000,000)
பத்துகோடி, one hundred million  (100,000,000)
நூறு கோடி,  பில்லியன் one billion (1,000,000,000)
டிரில்லியன், trillion (1,000,000,000,000)
குவாட்ரில்லியன், quadrillion  (1,000,000,000,000,000)
க்விண்டில்லியன், quintillion (1,000,000,000,000,000,000)
செக்ஸ்டில்லியன், sextillion (1,000,000,000,000,000,000,000)
செப்டில்லியன், septillion (1,000,000,000,000,000,000,000,000)
ஆக்டில்லியன், octillion (ஒன்றையடுத்து  27  பூஜ்ஜியங்கள்)
நானில்லியன், nonillion (ஒன்றையடுத்து  30 பூஜ்ஜியங்கள்)
டெஸில்லியன், decillion (ஒன்றையடுத்து  33  பூஜ்ஜியங்கள்)
அண்டெஸில்லியன், undecillion (ஒன்றையடுத்து 36 பூஜ்ஜியங்கள்)
டுவோடெஸில்லியன், duodecillion(ஒன்றையடுத்து 39 பூஜ்ஜியங்கள்)
ட்ரெடெஸில்லியன், tredecillion (ஒன்றையடுத்து 42 பூஜ்ஜியங்கள்)
க்வாட்யோர்டெஸில்லியன், quattuordecillion
                                          (ஒன்றையடுத்து 45 பூஜ்ஜியங்கள்)
க்வின்டெஸில்லியன், quindecillion (ஒன்றையடுத்து 48 பூஜ்ஜியங்கள்)
செக்ஸ்டெஸில்லியன்,,sexdecillion   (ஒன்றையடுத்து 51 பூஜ்ஜியங்கள்)
ஸெப்டென்டெஸில்லியன், septendecillion
                                          (ஒன்றையடுத்து 54 பூஜ்ஜியங்கள்)
ஆக்டோடெஸில்லியன், octodecillion (ஒன்றையடுத்து 57 பூஜ்ஜியங்கள்)
நோவெம்டெஸில்லியன், novemdecillion (ஒன்றையடுத்து 60 பூஜ்ஜியங்கள்)

உலகில் பணக்காரர்கள் -- லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் அழைக்
கப்பட்டார்கள்; இன்றோ, மில்லியனர், பில்லியனர் என்று அழைக்கப்படுகின்
றனர்! ஒரு பில்லியன் என்பது நூறு கோடியாகும், 1,000,000,000, அதாவது,
ஒன்றையடுத்து ஒன்பது பூஜ்ஜியங்களைக் கொண்ட ஒரு பெரிய எண்! இன்
றைய அளவில், உலகின் முதல் பணக்காரர் என பொறாமையுடன் பாராட்டப்
படும் நபர், அமெரிக்க நாட்டைச்சேர்ந்த பில் கேட்ஸ் என்பவராவார்; அவருக்கு
வயது 60, அவர் தான் மைக்ரோஸாஃப்ட் கணினி நிறுவனத்தின் சக நிறுவனர்
ஆவார்; அவரிடம் தற்போது, 86 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு
கொண்ட சொத்துக்கள் உள்ளன! ஆனால், அவர் ஒப்பீட்டு ரீதியில் மட்டுமே
பெரும் பணக்காரர்! அவர் ஒரு பில்லியனர் மட்டுமே; அவர் ஒரு டிரில்லியனர்
என்கிற இலக்கைத் தொடுவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம் என
நிதி நிலை முன்னறிவிப்பாளர்கள் 2014-ம் ஆண்டில் கணக்கிட்டுச் சொல்லியுள்
ளனர்!

ஆனால், எண்கள், டிரில்லியன், அதாவது, ஆயிரம் கோடி என்பதுடன் முடிந்து
விடுவதில்லை! அது டிரில்லியனைத்தாண்டி, குவாட்ரில்லியன், க்விண்டில்லி
யன், செக்ஸ்டில்லியன், செப்டில்லியன், ஆக்டில்லியன்,.... என நீண்டு போய்க்
கொண்டேயிருக்கிறது! ஆக, பணம் சம்பாதிக்க, அல்லது சேர்க்க ஒரு எல்லை
என்பது இல்லை! இதன் அர்த்தம், ஒருவர் முடிவேயில்லாமல் பணம் சேர்க்க
வேண்டும், சம்பாதிக்க முடியும் என்பதல்ல! அதாவது, நம்மைச்சுற்றி, காற்று
மண்டலம் காற்றினால் நிரம்பியுள்ளது என்பதால், அனைத்துக் காற்றையும்
சுவாசித்தாக வேண்டும் எனும் எண்ணம் எவ்வளவு முட்டாள் தனமானதோ
அவ்வளவு முட்டாள் தனமானது ஒருவன் முடிவேயில்லாமல் பணத்தைச்
சம்பாதிக்க வேண்டும் என்பது! இதே போல, ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு
ஓடுகிறது, குளம், ஏரி எல்லாமும் நீரால் நிரம்பியுள்ளது என்பதால், எல்லாத்
தண்ணீரையும் ஒருவன் குடித்தாக வேண்டும் எனும் எண்ணம் எவ்வளவு

பைத்தியக்காரத்தனமானதோ, அவ்வளவு பைத்தியக்காரத்தனமானது முடிவே
யில்லாமல், பணத்திற்காக பணத்தைச் சம்பாதிப்பது என்பது!

தேவைகளுக்கு மேலாக பணம் சம்பாதிப்பது ஒருவகை முட்டாள்தனம், பைத்
தியக்காரத்தனம் என்றால், அவ்வாறு பணம் சம்பாதித்த பணக்காரர்களைப்
பார்த்து பல் இளிப்பதும், பொறாமைப்படுவதும், வியந்துபேசுவதும் அதைவிடப்
பெரிய முட்டாள்தனமும், பைத்தியக்காரத்தனமும் ஆகும்!

"அறிவுடையார் எல்லாம் உடையார்!" என்று சொல்லப்பட்டது! ஆம், ஒருவன்,
அசலான வாழ்க்கைத்தேவைகளை உணர்ந்தறிந்து அவைகளை நிறைவேற்றிக்
கொள்ளத்தேவையான பணத்தை ஈட்டி, புறப்பொருட்களை, சம்பத்துக்களைப்
பெற்று வாழ்வதும், யாவற்றுக்கும் மேலாக, வாழ்வின் உட்பொருளை ஆழ்ந்
தாராய்ந்துணர்ந்தறிவதும் மட்டுமே நிறைவான நீங்காத சந்தோஷம் நிறைந்த
வாழ்க்கையாக அமையும், வாழும் போதும், மரணத்திற்குப்பிறகும்!

மா.கணேசன்/ 28-01-2018
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...