இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவும் மானிட விஞ்ஞான அறிவும்
விஞ்ஞானம், விஞ்ஞான அறிவு என்பது மனிதனின் உருவாக்கம் அல்ல; அது மனிதனுக்கும் முந்தையது; அது இயற்கையில், இப்பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலேயே பின்னப்பட்டிருக்கிறது. இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அறிவுச் சுரங்கம். அது ஒரு வாழும் அறிவின்-அருங்காட்சியகம்! ( It is a living museum of Knowledge).
விஞ்ஞான அறிவானது மண்ணில் புதைந்துள்ளது, விண்ணில் விரவியுள்ளது, காற்றில் கலந்துள்ளது, நீரில் கரைந்துள்ளது! பௌதீகவியல், வேதியியல், உயிரியல்,... உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானத் துறைகளும் இயற்கையில் அல்லாமல் வேறெங்குள்ளன? இவையெதுவும் மானிட விஞ்ஞான மூளையின் உருவாக்கம் அல்ல!
இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவை அப்படியே நேரடியாக மண்ணைத்தோண்டி வெளியே எடுத்திட இயலாது; கொஞ்சம் தோண்டவும் அதிகம் சிந்திக்கவும் வேண்டும்! சிந்தித்தல் என்பது ஒருவன் தன்னிடம் ஏற்கனவே இருக்கும் (கொஞ்ச) அறிவைக்கொண்டு முழு-அறிவைத் தொடர்பு கொள்ளுதல் என்பதே ஆகும்!
இப்பிரபஞ்சம் என்பது அறிவைப் போர்த்தியுள்ள மேலோடு போன்றதே! இயற்கையில் அனைத்து அறிவும் பொதிந்துள்ளது! ஆம், ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு முழுப்பிரபஞ்சத்தையும் கொண்டு வரவேண்டுமா? சடப் பொருளிலிருந்து உயிரை (உயிர்-ஜீவியை)க் கொண்டுவர வேண்டுமா, அதற்கான அனைத்து அறிவும், தொழில்நுட்பங்களும் பரிணாம-நோக்கத்தின்படி வெளிப்பட்டு அதைக் கச்சிதமாகச் செயல்படுத்திவிடுகின்றன! ஓரறிவு கொண்ட புழுவை சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் அறிவுஜீவியாக, ஆறறிவுள்ள மனிதனாகப் பரிணமிக்கச் செய்யவேண்டுமா, அதையும் பரிணாம விதிகள் சாதித்து முடித்துள்ளன!
ஆனால், சடப்பொருள் ஏன், எதற்காக, உயிர்ப்பண்பாக, உயிர் ஜீவியாகப் பரிணமிக்க வேண்டும்? இக்கேள்வி எவ்வொரு விஞ்ஞானியின் மூளையிலும் உதிப்பதில்லை! அடுத்து, ஆக்ஸிஜன் அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களும் இணைந்து ஏன் தண்ணீர் எனும் திரவப்பொருள் உருவாக வேண்டும்? இது பற்றியும் எந்த விஞ்ஞானிக்கும் கேள்வி எழுவதேயில்லை! அவ்வாறு உருவான தண்ணீர் பயனற்றுப் போவதுமில்லை! பரிணாமத்தில் பின்னால் தோன்றவிருக்கக்கூடிய உயிர்த் தோற்றத்திற்கு மிகவும் அடிப்படையானதொரு கூறாக அமைகிறது. அதாவது, "நீரின்றி அமையாது உலகு" என்ற கூற்றுக்கிணங்க, தண்ணீரின் அவசியம் பரிணாமத்தால் முன்-யூகிக்கப்பட்டதாயுள்ளது!
விதிகளின் விதி!
முதலிடத்தில், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன், என பலவகைப்பட்ட தனிமங்கள் எதற்காக, எந்தக் கணக்கின் அடிப்படையில், நோக்கத்திற்காக, தோன்றி இருக்கின்றன? குறிப்பாக, ஆக்ஸிஜன் அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களும் இணைந்து தண்ணீர் எனும் கூட்டுப்பொருளாக மாறவேண்டும் என்பதை எந்த விதிகள் தீர்மானிக்கின்றன? இதுவரை வெவ்வேறு வேதியியல் பண்புகள் கொண்ட 118 வகை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 94 தனிமங்கள் மட்டுமே இயற்கையில் இருப்பவை; மீதம் 24 தனிமங்கள் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஆனால், இயற்கையில் ஏன் 94 தனிமங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும்?.....இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய விஞ்ஞானிகள் ஏதாவதொரு விளக்கத்தைத் தந்து எளியனவாகத் தோற்றம்தரும் இக்கேள்விகளைப் புறந்தள்ளிவிடுவர்!
நம்முடைய விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அது பிரபஞ்சத்தின் ஆதியையும் அந்தத்தையும் தவிர்த்து, இடையிலுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும் வெற்றிகரமாக விளக்கிச் சொல்லிவிடும்! ஆனால், முதலிடத்தில், ஏன், எதற்காக இங்கே ஒரு பிரபஞ்சம் இருக்கிறது? நாம் ஏன், எதற்காக அதில் இடம் பெற்றுள்ளோம்? நம் வாழ்க்கையின் அர்த்தம் குறிக்கோள் மற்றும் இலக்கு தான் என்ன? என்பவை பற்றியெல்லாம் அதனால் ஏதும் சொல்ல முடிவதில்லை!
பௌதீகவியல் விஞ்ஞானி அந்தோனி ஸீ (Anthony Zee)அவர்கள், "நாம் இயற்கையை தவணைமுறையில் அறிந்துகொள்ளலாம். நாம் அணுவை அதன் கருவை அறிந்துகொள்ளாமலேயே அறிந்துகொள்ளலாம். . . . . பௌதீக உலகமெய்ம்மை அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிந்தாக வேண்டுமென்பதில்லை. நன்றி, இயற்கையே" என்று நன்றியுணர்ச்சியுடன் கூறுகிறார்.
விஞ்ஞானி அந்தோனி ஸீ அவர்களின் கூற்று அவ்வளவு அபத்தமானதல்ல. ஏனென்றால், விஞ்ஞானத்தின் தற்போது வரையிலான எதார்த்த நிலையும், அவலமும் அதுதான்! முதலிடத்தில், பிரபஞ்சம் ஏன், எதற்காக, எவ்வாறு தோன்றியது என்பதை அறியாமலேயே, பிரபஞ்சத்திலுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும் பற்றி விஞ்ஞானிகள் நிறைய பேசுகிறார்கள். பருப்பொருளிலிருந்து உயிர்ஜீவி ஏன், எவ்வாறு தோன்றியது என்பதை அறியாமலேயே, உயிரினங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைப் பற்றியும், 'இயற்கைத் தேர்வு' பற்றியும் விஞ்ஞானிகள் நிறைய கதைக்கிறார்கள். அடுத்து சிந்திக்கும் திறனுள்ள மனித-உணர்வு எவ்வாறு, ஏன் தோன்றியது என்பதை அறியாமலேயே, மனிதனை இன்னுமொரு விலங்கு என்று கூறிவருகிறார்கள்! அடுத்து, பிரபஞ்சத்தின் வருங்காலம், அதன் முடிவு எத்தகையது என்பதை அதனுடைய அடியோட்டமான பரிணாமத் திட்டத்தையும், குறிக்கோளையும் கொண்டு உய்த்துணராமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி-மதிப்பைக் கொண்டு பிரபஞ்சத்தின் தலைவிதியை தாறுமாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!
இயற்கைத் தேர்வு அல்ல "இலக்குநிலைத் தேர்வு"
ஆனால், பரிணாமம் எல்லாவற்றையும் முன்-யூகித்தே செயல்படுகிறது? பரிணாமத்தின் இறுதிச் சொல் (அதாவது இலக்கு) எது என்பதும் தீர்மானிக்கப்பட்ட ஒன்று ஆகும்! அதாவது, நதியின் இலக்கு முன்-தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருப்பது போலவே, பரிணாமத்தின் இலக்கும் முன்-தீர்மானிக்கப்பட்ட ஒன்றே ஆகும்! ஆனால், நதியின் தோற்றுவாய்க்கும், முடிவிடமாகிய சமுத்திரத்திற்கும் இடையே அமையும் நதியின் வழித்தடங்கள் முன்-தீர்மானிக்கப்படுவது இல்லை. இதைப்போலவே, பரிணாமத்தின் தொடங்கு புள்ளிக்கும், இறுதிப்புள்ளிக்கும் இடையே தோன்றவிருக்கும் நிலைகளும், இறுதி இலக்கை எட்டும் வழிமுறைகளும் முன்-தீர்மானிக்கப்பட வில்லை. ஆகவே தான், பரிணாமத்தில் "சோதனை-தவறு-திருத்தம்" (Trial and Error) எனும் பரீட்சார்த்தமுறை மையமாக அமைந்துள்ளது.
அதேவேளையில், பரிணாமத்தில் வெளிப்படும் ஒரு அம்சம் சரியானது என்று எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்றால், டார்வினின் "இயற்கைத் தேர்வு" (Natural Selection) எனும் வழிமுறையினால் என்று உயிரியலாளர்கள் நம்பிவருகின்றனர். ஆனால், பரிணாமத்தில் இயற்கையே மாற்றத்திற்கு உட்படும் பொருளாக இருக்கையில், எந்த இயற்கை எந்த இயற்கையைத் தேர்வு செய்திட இயலும்? டார்வினின் 'இயற்கைத் தேர்வு'க்கு மாறாக, இயற்கையில் உண்மையில் செயல்படுவது, "இலக்குநிலைத் தேர்வு" (Teleological Selection) எனும் விதிமுறையே ஆகும்! அதாவது, பரிணாமத்தின் மிகத் தொலைவான இலக்குநிலையை எட்டும்விதமான படிக்கற்களாகச் சேவைபுரியக்கூடிய வகையிலான பொருத்தமான இடைநிலை அம்சங்களே தேர்வுசெய்யப்படுகின்றன. அவ்வாறு தெரிவு செய்வது அந்த இலக்கு நிலையே தான்! அதாவது, உணர்வு தான் (Consciousness) பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்காகும்! பரிணாமம் என்பது உணர்வின் பரிணாமமே, பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வே!
எவ்வாறு ஒரு இசைக்கோவையானது ஒரு ஒற்றை ஸ்வரத்தில் தொடங்கப்பட்டு அடுத்தடுத்து பல ஸ்வரங்களுடன் இணைத்து ஒரு முழு கோவையாக உருவாக்கப்படுகிறதோ; அதாவது, ஒரு இசைக்கோவையின் முழுமையானது அந்த இசைக் கோவையை தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு ஸ்வரத்தையும் கட்டுப்படுத்தி அதனதன் இடத்தில் அமையச் செய்வதைப்போலவே, பரிணாமமும் இறுதியாக விளையவிருக்கும் முழுமைக்கேற்றவாறே, தொடக்கமும், இடைநிலைகளும் உருவாகின்றன! டார்வினிய கொள்கை முழங்குவதுபோல, பரிணாமம் என்பது குறிக்கோளற்ற, இலக்கற்ற, ஒரு குருட்டாம் போக்கு நிகழ்வு அல்ல!
விஞ்ஞான அறிவு என்பது விஞ்ஞானிகளின் மூளைகளில் உற்பத்தியாவதில்லை! ஆயினும் இயற்கையிலிருந்து அந்த அறிவை வெளிக்கொணர்வதற்கு அவர்களது மூளைகள் மிக மிக மிகக் கூர்மையாகச் சிந்திக்கவேண்டும்.
அதே நேரத்தில், மானிட விஞ்ஞான அறிவுக்கும் இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவிற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. ஏனெனில், மானிட விஞ்ஞான அறிவு என்பது இயற்கையிலிருந்து பெறப்படும் போதே ஒரு குறிப்பிட்ட வகையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு குறுக்கப்பட்டும், வெட்டிக்கழிக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் உருவாக்கப்படும் ஒன்றாகும்.
இவ்வகையில், விஞ்ஞான அறிவு என்பது கரு முழுவளர்ச்சியடைவதற்கு முன்பாகப் பிறந்திட்ட ஒரு குறைப்பிறவி [In this way, scientific knowledge is a monster(a congenitally malformed or mutant entity)] ஆகும்!
இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவும் இயற்கையினுடையது அல்ல; மாறாக, அறிவு, அறிவாக தனித்தே இருக்கிறது! இயற்கை/உலகம் என்பது அறிவுக்கு வடிவம் கொடுக்கும் வெறும் ஒரு ஊடகம் (Medium),அல்லது கருவி மாத்திரமே! உலகம் என்பது பேரறிவின் உடல்!
இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னரே அறிவு ஏற்கனவே தனித்து இருந்தது, பிரபஞ்சம் தோன்றிய வுடன் சிறிது சிறிதாக பிரபஞ்சத்திற்குள் பிரவேசித்தது. பிரபஞ்சம் வளர வளர அறிவும் வளர்கிறது. பிரபஞ்சம் என்பது குறை-அறிவிலிருந்து நிறை-அறிவை நோக்கிச் செல்லும் இயக்கமேயன்றி வேறில்லை!
நம்மில் சிலருக்கு அறிவு எவ்வாறு பிரபஞ்சத்திலிருந்து தனித்து இருக்கமுடியும் என்ற சந்தேகம் எழலாம். குவாண்டம் தகவல் விஞ்ஞானப் பேராசியர் விளாட்கோ விட்ரல் (Vlatko Vedral) அவர்கள், "தகவல் (அறிவு) என்பது வெற்றிடத்திலிருந்து தன்னெழுச்சியாக தாமே வெளிப்படுகிறது" எனவும்; தகவலின் இருப்புக்கு அதற்கு முற்பட்ட யாதொரு தகவலும் தேவையற்றது" எனவும்; "தகவலானது வெற்றிடத்திலிருந்து உருவாக்கப்பட முடியும்" எனவும் கூறுகிறார். விளாட்கோ விட்ரல் அவர்களைப் பொறுத்தவரையில், வெற்றிடம் தான் பிரதானம் என்று சொல்லாமல் சொல்கிறார். ஆனால், "அறிவே பிரதானம், எல்லாமே அறிவுதான்!" என்பதுதான் இக்கட்டுரை முன்வைக்கும் அறிவு!
மேலும் நம்முடைய விஞ்ஞான அறிவு எப்போதும், குறைபாடுடையதாயும், முழுமையற்றதாயும்தான் இருக்கும்! ஒருபோதும் நாம் நம்முடைய விஞ்ஞான அணுகுமுறையின் மூலமாக முழு-அறிவையும் பெற இயலாது; அதாவது விஞ்ஞான அணுகுமுறையின் உள்ளார்ந்த குறைபாடுகளினால் அதன் மூலமாக ஒட்டுமொத்தத்தின் (பிரபஞ்சத்தின்) சாரமான உண்மையை ஒருபோதும் அறிய இயலாது! முதல் கோணல் முற்றும் கோணல்!
இதன் அர்த்தம், பிரபஞ்சத்தை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியாது என்பதல்ல; மாறாக, குறைபாடுடைய விஞ்ஞான அணுகுமுறையின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிறோம்! ஏனெனில், நம்முடைய விஞ்ஞானம் அவ்வளவு விஞ்ஞானப்பூர்வமாக இருக்கவில்லை! இப்பிரபஞ்சத்தையும் அதில் நம்மையும், நமது வாழ்க்கையையும் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியும்! அதற்கு, பருப்பொருளை மையப்படுத்தாத, பிரதானப்படுத்தாத; மாறாக, அறிவை மையப்படுத்தும், முழு-அறிவைப் பிரதானப்படுத்தும் மெய்ஞான அணுகுமுறை வேண்டும் என்கிறோம்!
"இயற்கையை முழுமையாக விவரித்து முடித்துவிட முடியாது, ஏனென்றால், அத்தகைய விவரிப்பு இயற்கையை பிரதியெடுப்பதாக ஆகும்." என தத்துவவாதி ஆர்ச்சி பாம் (Archie Bahm)கூறினார். அதாவது, ஒருவகையில், "இயற்கை அல்லது பிரபஞ்சம் பற்றிய முழுமையான விவரிப்பு என்பது இப்பிரபஞ்சத்திலிருந்து பிரித்தறியவியலாத ஒன்றாய் இருக்கும்" எனும் விஞ்ஞானி ஸெத் லாய்டு (Seth Lloyd)அவர்களின் கூற்றும் சரியே! அதாவது, பிரபஞ்சம், அல்லது, இயற்கையைப் பற்றிய முழுமையான புரிதல், அல்லது அறிவு என்பது இப்பிரபஞ்சத்திற்குச் சமமானது ஆகும்! ஏனெனில், முழு-அறிவுதான் பிரபஞ்சம், அதாவது பிரபஞ்சமாக மாறியுள்ளது! இவ்விடத்தில், நாம் இயற்கையையோ, பிரபஞ்சத்தையோ அல்லாமல், அறிவைப் பிரதானப்படுத்த வேண்டும்; அதுவே அறிவுள்ள மனிதனுக்கு அழகு!
1500 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பிரபஞ்சம் தோன்றிய அந்த "பெரு வெடிப்பு" எனும் கணத்திற்கு முன்னேயே அனைத்து அறிவும் இருந்தது! பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் பௌதீக அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் பரிணாம இயக்கமும் ஆகும்! அந்த ஆதி-அறிவு அல்லது பேரறிவு, சக்தியையும் ஆற்றலையும் உருவாக்க வல்லது! அவ்வறிவை சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை (A State of Infinite Possibilities) எனவும் கொள்ளலாம். அதுவே பெருவெடிப்பு எனும் நிகழ்வின் மூலமாக (இதை நாம் சுரிணாமம், Involution என அழைக்கலாம்) முதலில் சக்திப்பொழிவாகவும், அதையடுத்து அடிப்படை அணுத்துகள்களாகவும், பிறகு படிப்படியாக வளர்ந்து விரிந்து இப்பிரபஞ்சமாகவும் எழுந்தது. ஆக சடப்பொருளின் நிலைக்கு (கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகச்) சுருங்கிய அறிவு, அதனுடைய பரிணாம வழிமுறையில் படிப்படியாக அறிவில் உயர்ந்தெழுந்து இறுதியில் மீண்டும் பேரறிவு நிலையை எட்டுகிறது. இவ்வாறு சுருங்கிய நிலையிலிருந்து மீண்டும் விரிந்த தனது அசலான நிலைக்குத் திரும்பும் வழிமுறையைத் தான் பரிணாமம் (Evolution)என்று அழைக்கிறோம்.
இடைவெளிகள் அல்ல "பரிணாமத் தாவல்கள்"
இயற்கையில் பொதிந்துள்ள விஞ்ஞான அறிவானது பொருண்மைவாதம் (Materialistic) சார்ந்ததுமல்ல; எந்திரத்தனமானதும் (Machanistic) அல்ல. இன்னும் அது பகுத்தறிவு எனும் கூண்டுக்குள்ளும் அடைபடுவதில்லை!
முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை ஒருபோதும் பகுத்தறிவாலும், விஞ்ஞானத்தாலும் கண்டறிய இயலாது. அதாவது, பெருவெடிப்புக்கு முந்தைய நிலைக்கும், பிந்தைய நிலைக்கும் உள்ள இடைவெளியை ஒருபோதும் விஞ்ஞானத்தால் நிரப்பிடஇயலாது! பெருவெடிப்புக்கு பிந்தைய நிலை பொருண்மை மயமானது என்பதை நாம் அறிவோம்; ஆனால், பெருவெடிப்புக்கு முந்தைய நிலை எத்தகையது என்பதை என்றாவதொரு நாள் விஞ்ஞானம் கண்டு சொல்லும் என நாம் காத்திருப்பதில் ஒரு அர்த்தமுமில்லை! ஏனெனில் விஞ்ஞானத்தின் பொருண்மைவாத அணுகுமுறையின் மூலம் அதை அறிவதற்குச் சாத்தியமில்லை என்று நாம் உறுதியாகக் கூறிடலாம்!
மனிதனிடமிருந்து உணர்வைக் கழித்துவிட்டால், மீதமிருப்பது உயிருள்ள ஒரு விலங்கு மட்டுமே.
ஒரு விலங்கு ஜீவியிடமிருந்து உயிரைக் கழித்துவிட்டால் மீதமிருப்பது சடப்பொருள் மட்டுமே.
ஆனால் சடப்பொருளிலிருந்து சடப்பொருளைக் கழித்தால் என்ன கிடைக்கும்? "சூன்யம்" என்று சொல்லலாமா? அப்படியெனில், அது எத்தகைய தன்மையிலானது, அதன் பண்பு என்ன? 'சூன்யம்' எனும் வெறுமையிலிருந்து பொருண்மையான இந்த பிரபஞ்சம் எவ்வாறு பிறந்தது? ஆனால், பௌதீகவியல் விஞ்ஞானிகள் சாதுரியமாக அவ்வெறுமையையும் பொருண்மையின் ஒரு வடிவம் அல்லது நிலை என்பதாக விளக்கி மகிழ்கிறார்கள்! இது போகட்டும் என்று விட்டுவிடலாம்; ஆனால், பரிணாமத்தில் வெளிப்படும் ஒவ்வொரு புதிய பண்பையும், அம்சத்தையும் அவர்கள் பொருண்மையின் வெவ்வேறு வடிவங்களாக, நிலைகளாகச் சுருக்கிவிடுவது தான் படு அபத்தமான சுருக்கல்வாதம் ஆகும்!
விஞ்ஞானத்தால், அல்லது பகுத்தறிவால் விளக்கமுடியாத இடைவெளிகள் என நாம் மூன்றைக் குறிப்பிடலாம். முதலாவது, பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் குறிக்கும் 'பெருவெடிப்பு' எனும் நிகழ்வுக்கு முந்தைய நிலைக்கும், பிந்தைய நிலைக்கும் உள்ள இடைவெளி. இரண்டாவது, பொருளுக்கும், அதிலிருந்து பரிணமித்த உயிர் எனும் பண்புக்கும் உள்ள இடைவெளி. மூன்றாவது, சடப்பொருளுக்கும், உணர்வுக்கும் (Consciousness)உள்ள இடைவெளி.
விஞ்ஞான அறிவாலும், பகுத்தறிவாலும் விளக்கவியலாத இந்த இடைவெளிகளில் கடவுளைச்
சிக்க வைப்பது சற்றும் அறிவார்ந்த செயலல்ல! ஏனெனில், இடைவெளிகளாகத் தெரிபவை உண்மையில் இடைவெளிகள் அல்ல; அவை "பரிணாமத் தாவல்கள்" (Evolutionary Leaps)ஆகும்! அவை இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவில் உள்ள இடைவெளிகள் அல்ல. மாறாக, அவை மானிட விஞ்ஞானத்தால், பகுத்தறிவினால் கடக்கமுடியாத இடைவெளிகள் ஆகும்! அதற்குக்காரணம், விஞ்ஞானத்தின் நெகிழ்வுத்தன்மையற்ற பொருண்மைவாத அணுகுமுறையில் அடங்கியிருக்கும் மட்டுப்பாடே ஆகும்!
வழிமுறையுடன் கூடிய மந்திரவாதம்!
இயற்கைக்கும், பரிணாமத்திற்கும் அடியோட்டமாக அமைந்திருக்கும் பேரறிவை மனிதனின் பகுத்தறிவு கொண்டு அளவிடவோ, ஆழங்காணவோ இயலாது! ஆம், இணைக்க இயலாதது என நாம் காண்பதை இணைக்கவும், சாத்தியமில்லாதது என நாம் எண்ணி மலைப்பதைச் சாத்தியமாக்கிடவும் வல்லது தான் பேரறிவு! இயற்கையிலும், அதனுள்ளார்ந்திருக்கும் அறிவிலும் யாதொரு இடைவெளியும் இல்லை! மாறாக, மனிதனின் விஞ்ஞான அறிவில்தான் இடைவெளிகள் உள்ளன.
விஞ்ஞானமானது இயற்கையில் பொதிந்துள்ள பல பிரமிப்புமிக்க ரகசியங்களைக் கற்றுத் தெரிந்துள்ளது, அதனாலேயே அது அனைத்து நிகழ்வுகளையும் புதிர்களையும் விளக்கிச் சொல்லிவிடும் என்ற முடிவிற்கு வந்துவிடலாகாது. அர்த்தம், சாரம், உணர்வு, வாழ்க்கை ஆகிய அம்சங்கள் பௌதீக-வேதியியல் மூலம் விளக்கம் பெறவோ, அல்லது உருவாக்கம் பெறவோ இயலாது! ஏனெனில், இப்பிரபஞ்சம் வெறும் விஞ்ஞான அறிவினால் மட்டுமே உருவானதல்ல; அதில் மந்திர வித்தையின் தொடுதலும் (A Touch of Magic!) இணைந்துள்ளது. அதனால்தான் அது மானிட விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் வசப்படாத முழுமையான அறிவாக, பேரறிவாகத் திகழ்கிறது! அப்பேரறிவை நாம் 'கடவுள்' எனக் குறிப்பிடலாமெனில், அவர் வெறும் ஒரு விஞ்ஞானி மாத்திரமல்ல, அவர் ஒரு மாயாவி (மந்திரவாதி) யும் ஆவார்! ஆம் அவருடையது வழிமுறையுடன் கூடிய மந்திரவாதம் (Magic with a Method) ஆகும்!
இயற்கையின் ஒழுங்கமைப்பில் சில பண்புகளை விஞ்ஞானத்தின் வழியாகப் புரிந்துகொள்வதில் இடைவெளி ஏற்படுகிறது என்பது உண்மையே; ஆகவே, அந்த இடைவெளிக்கான காரணம் 'இயற்கை கடந்த ஒன்று' (Supernatural) என்று காண்பது பொருத்தமானதே!
ஆயினும், 'Supernatural' என்பது பொருத்தமற்ற பதப்பிரயோகம் ஆகும். சரியான பொருத்தமான பதப்பிரயோகம், 'Meta-Natural', 'அதி-இயற்கை', அல்லது 'பேரியற்கை' என்பதே. ஏனெனில், மூல-மெய்ம்மையின் குறியீடாகக் கொள்ளப்படும் 'கடவுளை' எவ்வழியிலும் இயற்கையுடன் இணைத்துச் சொல்லமுடியாது; ஆனால் இயற்கையை பேரியற்கை எனும் கடவுளின் சுருங்கிய நிலையாக, ஒரு விபரீத (இயல்புக்கு மாறான, முரண்பாடான) நிலையாகச் சொல்லலாம்.
இயற்கையின் பெரும்பாலான விதிகள் (குறிப்பாக பௌதீகவியல் விதிகள்) குருட்டுத்தனமானவை, அதாவது எந்திரத்தனமானவை எனலாம். ஆனால், அவ்விதிகளை இயக்கும் பரிணாம விதிகள் முழுப் பார்வையும், தொலை நோக்கும், முற்-சிந்தனையும், துல்லியமும், தெளிவும் கொண்டவையாகும்!
ஆனால், விஞ்ஞானிகள் யாவரும் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் பௌதீக விதிகளால் செலுத்தப்படுவதாகவும், அனைத்தையும் பௌதீக விதிகளுக்குச் சுருக்கிப் புரிந்து கொள்ளமுடியும் எனவும், யாவற்றுக்கும் அடிப்படையானவை பௌதீக விதிகளே என்பதாகவும் நெடுங்காலமாக நம்பியும் அந்த நம்பிக்கையையே விஞ்ஞானத்தின் அதிகாரப்பூர்வ கொள்கைப் பிரகடனமாகவும் கொண்டுள்ளனர். உண்மை என்னவெனில், பௌதீக விதிகள் என்பவை பரிணாம விதிகளின் வெறும் கருவிகள் போன்றவையே தவிர அவை அடிப்படையானவையோ, முதன்மையானவையோ அல்ல!
அப்படியானால் பரிணாம விதிகள் என்பவை யாவை? மூல-மெய்ம்மையின் திரிபுதான் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும், பரிணாமத்திற்கும் காரணமாகியுள்ளது! நம்முன்னேயுள்ள ஒரே சவால், "எது மூலமெய்ம்மை" என்பதைக் கண்டுபிடிப்பது தானாகும்! உலக-மெய்ம்மையாகச் சுருங்கிப்போன மூல-மெய்ம்மை மீண்டும் பரிணாம வழிமுறை மூலமாக, தனது அசலான நிலைக்குத் திரும்புவதற்கு உரிய விழைவின் விதிகளே பரிணாம விதிகள் என இங்கு குறிப்பிடப்படுகிறது. அவற்றைக் கணிதக் குறியீடுகளாலும், சமன்பாடுகளாலும் விளக்குவது கடினம்!
அளவீடு (Quantification) செய்யப்படும் வகையிலமைந்த பருப்பொருள் போன்றல்லாமல், உயிர், உணர்வு ஆகிய அளவீடு செய்யவியலாத பண்புகள் பரிணாமத்தில் விளைந்துள்ளமையால் கணிதக் குறியீடுகளில் அல்லது சமன்பாடுகளில் பரிணாம விதிகளைக் குறிப்பிடுவது கடினமாகும். முக்கியமாக, உயிர், உணர்வு, வாழ்க்கை, அன்பு, நட்பு,... போன்ற அம்சங்களை பௌதீக-வேதியியல் சொற்களில் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது! மேலும் புரிதல் என்பது சொற்களையும், மொழிகளையும் தாண்டிய விசேடக் குறியீடுகளால் ஆனது என்பதால், பொதுவாக நம் எல்லோர் கைகளிலும் உள்ள கருவியான மொழியையும், சொற்களையும் கொண்டுதான் நாம் அறிவைப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்! இதைவிட்டால் வேறு வழியில்லை!
ஈர்ப்புவிசை என்றால் என்ன என்று விளக்கிச் சொன்னால் நாம் புரிந்துகொள்ள முடியும்; அதையே விஞ்ஞானக் கணிதக் குறியீட்டு மொழியிலும் குறிப்பிடலாம். ஆனால் நாமனைவரும் தொழில் முறை விஞ்ஞானிகள் அல்ல; ஆகவே, சமன்பாடுகளையும், சூத்திரங்களையும் கொண்டுதான் நாம் உலகைப் புரிந்துகொண்டாக வேண்டுமென்கிற கட்டாயம் ஏதுமில்லை!
அடியும் முடியும் உணர்வே!
நாம் இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள அதில் எத்தனை அடிப்படை அணுத்துகள்கள் உள்ளன என்பதை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை! மாறாக, பிரபஞ்சம் என்பது அதன் சாரத்தில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் போதுமானது! பிரபஞ்சம் என்பது ஒரு அமைப்பு என்கிற வகையில், அது ஒரு பரிணாமக் களம் (Evolutionary Field) ஆகும்! ஒரு இயக்கம் என்கிற வகையில், அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கிச்செல்லும் பரிணாம இயக்கம் (Evolutionary Movement) ஆகும்! அதாவது, பொருண்மைத் தன்மையிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுத் தன்மையை (Consciousness) நோக்கி வளர்ந்து சென்று முடிவில், முழு-அறிவைப் பெறுகிறவகையிலான முழுமையான உணர்வுத் தன்மையை அடையும் ஒரு இயக்கம் ஆகும்!
அவ்வியக்கத்தில் நாம் சிற்றுணர்வு அல்லது அரை-உணர்வு பெற்ற ஒரு உணர்வு ஜீவி என்ற நிலையில் உள்ளோம்; அதிலிருந்து உயர்ந்து முழு-உணர்வு அல்லது பேருணர்வு நிலையை அடைவதுதான் நம்முடைய, நம் ஒவ்வொருவருடைய பரிணாம இலக்கும், நம்முடைய வீடுபேறு, முக்தி, மோட்சம், ஞானமடைதல், முழுமையடைதல்,... என்றெல்லாம் குறிப்பிடப்படுகிற ஒப்பற்ற நிலையாகும்!
ஒருவகையில், இயற்கை விதிகள் என்பவை பரிணாம விதிகளின் கருவிகள் என்பதால், அவற்றையும் நாம் பரிணாம விதிகளின் கருவிப் பூர்வமான விதிகளாகக் கொள்ளலாம். இவ்விடத்தில் நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ளவேண்டியது பரிணாமம் தன் இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நிகழ்வுமுறையில் ஒவ்வொரு கட்டத்திலும் புதுவகையான விதிகள் தோன்றிச் செயல்பட்டு பரிணாம வளர்ச்சியை நிகழ்த்துகின்றன. பௌதீகத் தளத்தில் பௌதீகவியல் விதிகளும், உயிரியல் தளத்தில் உயிரியல் விதிகளும், உணர்வியல் தளத்தில் உணர்வியல் விதிகளும் தோன்றிச் செயல்படுகின்றன. உயர்-தளத்து வெளிப்பாடுகளை கீழ்த் தளத்து விதிகளைக் கொண்டு புரிந்து கொள்ள இயலாது.
வெறுமனே பிரபஞ்சத்தின் பொருண்மையான பௌதீக இயக்க விதிகளையும் (Laws Of Motion), வெப்பவியக்கவிசையியல் விதிகளையும் (Laws Of Thermodynamics), வெறும் 12 அடிப்படைத் துகள்களையும், 4 அடிப்படை விசைகளையும் கொண்டு இந்தப் பௌதீகப் பிரபஞ்சத்தையும்கூட புரிந்து கொள்ள இயலாது! பிறகெப்படி, உயிரியல் பிரபஞ்சத்தையும், உணர்வியல் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்வது? வெறும் ஒரு ஸெல் உயிரியான அமீபா என்பது இப்பௌதீகப் பிரபஞ்சத்தினுள் எழுந்த இன்னொரு பிரபஞ்சம் என்பதையோ, அல்லது அது இப்பௌதீகப் பிரபஞ்சத்தின் ஒரு உயர் நிலை அவதாரம் என்பதையோ, நம் விஞ்ஞானிகள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்? இல்லை, அவர்களுடைய விஞ்ஞான சட்டகத்திற்குள் (Paradigm) அதற்கு இடமில்லை!
தமிழின் 12 உயிரெழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்களைத் தெரிந்துகொண்டால் போதும், அவற்றைக் கொண்டு திருக்குறள் உணர்த்துகிற மெய்ப்பொருளை அறிந்துகொள்ளலாம் எனும் வீண் நம்பிக்கையைப் போலவே இப்பிரபஞ்சத்தை வெறும் 12 அடிப்படைத் துகள்களையும், 4 அடிப்படை விசைகளையும் கொண்டு புரிந்து கொள்ள இயலும் என்பதும் பயனற்ற முயற்சியே! ஏனெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் வெறும் பருப்பொருளால் ஆனது மட்டுமல்ல; மாறாக, பருப்பொருள், உயிர், உணர்வு எனும் மூன்று தனித்துவமான பண்புகளைக் கொண்ட மூன்றடுக்கு பிரபஞ்சமாகும்! ஆக, பருப்பொருளின் பௌதீகவியல் விதிகளைக்கொண்டு, பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி நிலைகளான உயிர், உணர்வு ஆகிய பண்புகளைப் புரிந்துகொள்வது சாத்தியமற்றதாகும்!
இப்பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான அம்சம் உணர்வு தானே தவிர, நம் பௌதீகவியல் விஞ்ஞானிகள் சொல்வது போல பருப்பொருள் (அதாவது, அடிப்படை அணுத்துகள்கள்) அல்ல! இன்னும் பிரபஞ்சத்தின் இறுதியான அம்சமும் உணர்வுதான்! ஆம், அடியும், முடியும் உணர்வு தானாகும்! பருப்பொருள் என்பது வெறுமனே அடியோட்டமான உணர்வுப் பரிணாமத்திற்கு வடிவம் தருகின்ற, சேவை புரிகின்ற ஊடகம் (Medium) மாத்திரமே!
பௌதீக விஞ்ஞானமானது (Physics)அனைத்தின் ஒருமையை பிரபஞ்சத்தின் பிறப்புக் கணத்தில் பருப்பொருளின் அடியாழத்தில், அடிப்படை விசைகளின் ஒருங்கிணப்பில் காண முயல்கிறது. ஆனால், மெய்யியல் தத்துவமானது (Metaphysics)அனைத்தின் ஒருமையை மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில், அதாவது முழு-அறிவில் காண்கிறது! ஆம், பிரபஞ்சத்தின் ஒருமையானது அதன் பொருண்மையில் (Materiality) அடங்கியிருக்கவில்லை! மாறாக, பிரபஞ்ச பரிணாம இயக்கம் மனித உணர்வின் வழியாக எட்டவிருக்கும் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் அடையவிருக்கும் முழு-அறிவு நிலையில்தான் அடங்கியிருக்கிறது!
அறிவே பிரதானம்
விஞ்ஞானிகள் நம்மை நம்பவைத்துக் கொண்டிருப்பதுபோல, நிறையும், சக்தியும் மட்டுமே இப்பிரபஞ்சத்தின் அடிப்படை அம்சங்கள் அல்ல; மாறாக, தகவல் (Information) எனும் அம்சமும் மிக அடிப்படையானதே. தகவல் என்பதை நாம் அறிவின் கூறுகளாகவும், அறிவு என்பதை உணர்வின் கூறுகள் அல்லது வெளிப்பாடாகவும் புரிந்துகொள்ளவேண்டும். ஆம், தகவல் என்பதை உணர்வு எனவும், அல்லது அறிவு எனவும், இடத்திற்குத் தகுந்தாற்போல் கொள்ளவேண்டும். தகவல் என்பது அடிப்படையானது என்று சொல்வதைக் காட்டிலும், அறிவு, மற்றும் உணர்வின் கூறுகளாக அது தொடக்கத்திலிருந்தே இப்பிரபஞ்சத்திற்கு இணையானதொரு கண்ணுக்குத்தெரியாத ஒரு பிரபஞ்சமாகத் திகழ்கிறது எனலாம். உணர்வு (Consciousness) என்பது அதன் அடிமட்டத்தில், தகவல்-முறைப்படுத்துதல் (Information- Processing) என்பதேயாகும்!
தனது பரிணாம வளர்ச்சியின் எவ்வொரு கட்டத்திலும், பிரபஞ்சம் என்பது பிரபஞ்ச-அறிவுத் தொகுப்பிலிருந்து (Universal Knowledge-Pool)தகவல்களையும், அறிவையும் பெறக்கூடிய, பெற்று மேன்மேலும் பரிணாம வளர்ச்சி காணக்கூடிய, தொடர்ந்து வளர்கின்ற ஓர் அமைப்பே (System), அதாவது, கடினப் பொருள் (Hardware) போன்றது ஆகும்! வளர்ந்து, இறுதியில் முழு-அறிவை அடைந்து முழுமையடைவதே அவ்வமைப்பின் இலக்கு ஆகும்! பரிணாம ரீதியாக இறுதியில் எட்டப்படவிருக்கும் முழு-அறிவுதான் தொடக்கத்திலிருந்தே பரிணாமத்தை வழிநடத்தி வந்துகொண்டிருக்கிறது!
அறிவு என்பது, பிரபஞ்ச-அறிவுத் தொகுப்பிலிருந்து (Universal Knowledge-Pool), பரிணமிக்கும் பிரபஞ்சத்தின் சுய-அமைப்பாக்கக் கட்டமைப்புகளின் சக்திக்கும், கிரகிக்கும் தன்மைக்கும், தேவைக்கும் ஏற்ப நேர்விகிதத்தில் அடையக்கூடியதாக அமைந்ததாகும்! பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒரே ஒரு மூல அணு (பரமாணு) தான் தோன்றியது என்றால், அதனால் கிரகிக்கக்கூடிய திறனுக்கும், உடனடியான அதன் பரிணாம வளர்ச்சிக்கும், அதாவது, மடிப்பவிழ்தலுக்கும் (Unfolding) உரிய சொற்ப அளவு தகவல் (=அறிவு=உணர்வு) மட்டுமே அது கொண்டிருக்கும்! அதே நேரத்தில், அந்த முதல் அணுவானது தொடக்கத்தில் எவ்வளவு சிறியதாயிருப்பினும், மிகவும் குறைந்த அளவே பொருண்மையை (நிறையும், சக்தியும்) கொண்டிருப்பினும்; அந்த நிலைக்கேயுரிய தகவல் கூறுகளைக் குறைவாகக் கொண்டிருப்பினும், அந்த மூல அணுவால் அளவில்லா சக்தியையும் நிறையையும்; அளவில்லா தகவல்களை (அறிவையும், உணர்வையும்) அடையப்பெறுவதற்குரிய (To Access) உட்பொதிவை (Potential), உள்ளுறையாற்றலைக் கொண்டதாகும்!
தகவல் என்றால் என்ன? தகவல் என்பது மனித ஜீவியைப் பொறுத்தவரையில், உயிர்-வாழ்தலின் பொருட்டு, தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் வகையில், புற உலகுடன் (இயற்கையுடன்) மேற்கொள்ளும் பரஸ்பர வினையாற்றுதல் மற்றும் பரிமாற்றத்திற்கு உதவும் அறிபொருள் கூறுகள் (செய்திக்கூறுகள்) ஆகும். தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பிறகு, தனது வாழ்வை அர்த்தப்படுத்தும் பொருட்டு, தன்னை உணர்ந்து முழுமைப்படுத்திக் கொள்வதற்கான, அதாவது உண்மையை அறிவதற்காக, உயர்-உணர்வுத் தளங்களுடன் தான் மேற்கொள்ளும் பரிமாற்றத்திற்கான புரிதல் கூறுகள்தான் தகவல் என்பதாகும்!
தகவல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, நிகழ்வைப் பற்றிய விபரங்கள் மட்டுமல்ல; மாறாக, அது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் (பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சி நிலைகளையும்) பற்றிய விபரங்களையும், அதாவது, முழு-அறிவையும் சுட்டுகின்றது. ஏனெனில், முழு-அறிவுதான் பிரபஞ்சத்தின் இலக்கு! முழு-அறிவை எட்டிப் பிடிக்கும் வழிமுறையே பரிணாமம்! இறுதி மெய்ம்மை என்பது முழு-அறிவு அன்றி வேறில்லை! முழு-அறிவு தனக்குத்தானே ஒளிந்து தன்னையே மீள் கண்டுபிடிப்பு செய்யும் விளையாட்டுக்கான கருவி, அல்லது உபாயம் தான் பிரபஞ்சம்! முழு-அறிவு அல்லது பேரறிவு தன்னை ஒளித்துக் கொண்டதால் இந்த உலகம், பிரபஞ்சம் தோன்றியது! பிரபஞ்சம் என்பது அடிப்படையில் அணுத்துகள்கள் தான், அதாவது, தகவல் கூறுகள்தான்!
தகவல் கூறுகள் இருந்தால் அவ்விடத்தில் கணக்கிடுதல் (computation) இருக்கும். அடுத்து ஒரு பிரபஞ்சம் நிறைய அணுத்துகள்கள்/தகவல் கூறுகள் இருந்தால் அவை தகவல்-முறைப்படுத்துதலில்
(information-processing)ஆழ்வது தவிர்க்க இயலாது! ஆக, ஒரு கணக்கிடும் பிரபஞ்சம் (computational universe) தவிர்க்க முடியாத அவசியமாக மிகு-சிக்கல் அமைப்புகளை (complexity)உருவாக்கிடும். அதே வேளையில், வெறும் கணக்கிடுதலோ, அல்லது, தகவல்-முறைப்படுத்துதலோ, உயிர்-ஜீவி போன்ற மிகு-சிக்கல் அமைப்பை உருவாக்கிடாது! இவையெல்லாமே வெறும் பரிணாமக் கருவிகள் மாத்திரமே!
மேலும், தகவல், அல்லது அறிவு என்பது சில விஞ்ஞானிகள் கூறுவதற்கு மாறாக, அது பருப்பொருள் சார்ந்தது ( physical) மட்டுமல்ல; மாறாக, அது பருப்பொருளையும் கடந்தது, அதாவது அதன் அசலான இருப்பிடம் பேரியற்கையே (Meta-physicical)ஆகும். ஆம், தகவல் அல்லது அறிவு என்பது வெளி-காலத்தின் உலகிலும், காலமில்லா உலகிலும் செயல்படக்கூடியதாகும்!
ஒரு மரபணு (DNA) என்பது இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் மிகு-சிக்கலான அமைப்பு ஆகும். ஆனால், பரிணாமம் ஏன் குறை-சிக்கலான நிலைகள்/அமைப்புகளிலிருந்து மிகு-சிக்கலான நிலைகள்/அமைப்புகளை நோக்கிச் செல்லவேண்டும்? பருப்பொருளின் பிரபஞ்சத்தில் உயிர்ஜீவிக்கு என்ன வேலை இருக்க முடியும்? அடுத்து ஒரு மரபணுவைவிட பெரிதும் மிகு-சிக்கலான ஒரு அமைப்பு என்றால் அது மனித மூளையாகத்தான் இருக்க முடியும். பிரபஞ்சம் ஏன் எளிய அமைப்புகளிலிருந்து, மிகு-சிக்கலான அமைப்புகளாக வளர்ந்தெழ வேண்டும்? அவ்வழியாக பிரத்யேகமாக என்ன சாதிக்கப்படுகிறது? ஆம், மிகு-சிக்கலான அமைப்புகள் வழியாக இப்பிரபஞ்சம் மேன்மேலும் அறிவைப் பெறவும், அறிவில் உயரவுமே பிரயத்தனப்படுகிறது!
அறிவு என்பது முழுமையாக இப்பிரபஞ்சத்திற்கு இணையான கண்ணுக்குப் புலப்படாத (Invisible) ஒரு பிரபஞ்சமாகத் திகழ்கிறது என்றாலும், பருப்பொருளாலான வெளி-காலத்தின் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை அறிவு என்பது ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையாகவே விளங்குகிறது.
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் வெவ்வேறு அறிவு மட்டத்தின் நிலைகளே, வடிவங்களே. ஒரு அணுத்துகள் என்பது அறிவின் மிக மிக மிகச் சிறிய கூறினை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு அமீபா (ஒரு செல் உயிரி) புலன்வழி வெறும் அறிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதனைத்தவிர பிற அனைத்து உயிரினங்களும் புலனறிவின் ஜீவிகளே! மனிதஜீவியானவன் சுய-உணர்வின் முலம் பகுத்தறிந்து பெறும் அறிவைப் பிரதிநிதித்துவம் செய்பவனாகவும், முடிவில் அனைத்தையும் தொகுத்தறியும் முழு-உணர்விற்கு உயர்ந்து அனைத்தறிவையும் தொகுத்தறிந்து முழு-அறிவில் முழுமையடைபவனாவான்!
ஆகவேதான், பெருவெடிப்பில் தொடங்கிய பிரபஞ்சமானது, 1500 கோடி ஆண்டுகள் நெடிய பரிணாமப் பிரயத்தனத்தின் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி நிலையாக, மிகு-சிக்கல் அமைப்பான மனித-மூளையை வந்தடைந்துள்ளது. மூளையின் ஒரு தனிச் சிறப்பான இயக்கம் என்னவெனில், அது சுய-உணர்வின் இருக்கையாகச் (Seat of Self-Consciousness)செயல்படுவதுதான்! அதாவது, மனித-மூளை என்பது ஒரு கணினியைப் போலவோ, அல்லது இப்பிரபஞ்சத்திலுள்ள வேறு எவ்வொரு பருப்பொருள்-அமைப்பைப் போலவோ உணர்வற்ற நிலையில் தகவல் முறைப்படுத்துதலை (Information Processing) மேற்கொள்வதில்லை; மாறாக, உணர்வுடன், உணர்வின் மேற்பார்வையில் வெறும் தகவல் கூறுகளை மட்டுமல்லாமல், நேரடியாக அறிவு-முறைப்படுத்துதலை (Knowledge-Processing)மேற்கொள்கிறது!
அறிவு இல்லாமல் எதுவுமில்லை!
அறிவு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை! அறிவு இல்லாமல் எதுவும், ஒரு அணுவும் கூடத் தோன்றமுடியாது! வெற்றிடத்திலிருந்து இப்பிரபஞ்சம் தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது; அந்த வெற்றிடத்தையும் அறிவு தான் தோற்றுவித்திருக்க வேண்டும்! ஆம், சூன்யத்திற்கும் முந்தையது அறிவு!
அறிவை புதிதாக நாம் வளர்க்கவோ, உருவாக்கவோ முடியாது! அனைத்து அறிவும் ஏற்கனவே பிரபஞ்ச அறிவுத் தொகுப்பில் உள்ளது; அத்தொகுப்பிலிருந்து அறிவை அடையப்பெறுவதொன்றே நமது சவால் ஆகும். விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் புதிதாக ஒரு சிறுதுளி அறிவையும்கூட இப்பிரபஞ்சத்துடன் சேர்க்கப்போவதில்லை!
ஆனால், இயற்கையில், பிரபஞ்சத்தில் ஏற்கனவே பொதிந்திருக்கும் அறிவைத் தோண்டி எடுக்கவே எண்ணற்ற விஞ்ஞானிகளும், எண்ணற்ற விஞ்ஞானத் துறைகளும் தடுமாறிக் கொண்டிருக்கையில், இவ்வளவு அறிவும் இயற்கையில், இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு எங்கிருந்து வந்தது?
பிரபஞ்சத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு அதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம்! ஏனெனில், 'பிரபஞ்சம்' என்பது அதனைக் கடந்த வேறொன்றின் குறியீடு ஆகும். அந்த வேறொன்று முழு-அறிவு ஆகும்; அதை நாம் பேரறிவு, பேரிருப்பு அல்லது பேருணர்வு எனவும் காணலாம்! முழு-அறிவு என்பது முழுமையானதொரு இறுதி உணர்வு நிலையே ஆகும்! பிரபஞ்சம் என்பது வாலிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்ந்து தலையில் முடியும் ஒரு வினோத விலங்கு ஆகும்! தன் நிஜத்தைத் தேடும் நிழல் இப்பிரபஞ்சம்!
இப்பிரபஞ்சத்திலேயே மிக முக்கியமான அம்சம் என்பது பௌதீக விதிகளோ, சக்தியோ, ஆற்றலோ, ஏன் இப்பிரபஞ்சமோகூட அல்ல! மாறாக, அறிவு, முழுமையான அறிவு மட்டுமே அதிமுக்கியமான அம்சம் ஆகும்! ஏனெனில், பௌதீக விதிகள், சக்தி, ஆற்றல், இன்னபிற அம்சங்களனைத்தையும், இன்னும் மனிதனையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அறிவை அடைவதற்கான கருவிகள் மாத்திரமே ஆகும்! ஆம், மனிதனும், அவனது உணர்வும் இறுதியானதல்ல; மனிதன் அடையக் கூடிய, ஒவ்வொரு மனிதனும் எவ்வாறேனும் அடைந்திட வேண்டிய முழு-அறிவு, அல்லது, பேரறிவு மட்டுமே இறுதியானது!
■
மா.கணேசன் / நெய்வேலி / 21-09-2018
------------------------------------------------------------------------------------------------------------------------