Tuesday, 11 June 2019

ஞானத்தின் பயன்


 
ஐந்தாறு வருடங்களாக நம்முடைய விசாரமார்க்கத்தில் இணைந்துள்ள நண்பர் ஒருவர் திடீரென்று “ஞானத்தின் பயன் என்ன?” என்று கேட்டது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. “ஞானத்தின் பயன் என்ன?”, “தத்துவத்தின் பயன் என்ன?”, “ஆன்மீகத்தின் பயன் என்ன?” எனும் இக்கேள்விகள் யாவும் ஒரே கேள்வியின் வெவ்வேறு வடிவங்களே.

“ஞானத்தின் பயன் என்ன?” என்ற கேள்விக்கான சுருக்கமான ஒரு பதில், பிறவிப்பயன் என்பது என்னவோ அதுதான் ஞானத்தின் பயன் ஆகும்!

ஆனால், இப்படிப்பட்ட பதிலுக்கு, உடனடியாக, “பிறவிப்பயன் என்பது எதைக்குறிக்கிறது?” என்ற கேள்வி நம் பலருக்கு எழலாம்! ஏனெனில், இவ்வாறாகத்தான் நாம் வாழ்க்கையை மேலோட்டமாக பார்க்குமாறு, வாழுமாறு பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்! எதையும் பயன் கருதாது நாம் அணுகுவதில்லை, பயன் கருதாது எதிலும் நாம் ஈடுபடுவதுமில்லை! இவர்களை நாம் ஒருவகை “அடிப்படைவாதிகள்” என வகைப்படுத்தலாம்!  இவர்களுக்கு, “வாழ்க்கை என்றால் என்ன?” என்ற கேள்வி எழாது! ஏனெனில், இவர்களுக்கு வாழ்க்கை என்பது அடிப்படைத் தேவைகளும் அத்தேவைகளின் நிறைவேற்றமும் மட்டுமே!

நம்மில் ஒரு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் பெரிதாக பயன் கருதி எதையும் செய்வதில்லை, பயன் கருதி எதிலும் ஈடுபடுவதில்லை! இவர்கள் ஒருவகை தப்பித்தல்வாதிகள்; வாழ்க்கையை இவர்கள், அனுபவித்தலுக்கான, கேளிக்கை கொண்டாட்டத்திற்கான களம் என்பதாகக் கொள்பவர்கள். இவர்களுக்கும், “வாழ்க்கை என்றால் என்ன?” என்ற கேள்வி எழுவதில்லை! இவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளை கேளிக்கை, கொண்டாட்டம் என்று சுருக்கிவிட்டவர்கள்!

அதே நேரத்தில், நம்மில் அனைவருக்குமே “வாழ்வின் பயன் என்ன?” என்ற கேள்வி மட்டும் ஒருபோதும் எழவே எழாது! ஏனெனில், அது தடுக்கப்பட்ட, அல்லது விலக்கப்பட்ட கேள்வி (Forbidden Question) ஆகும்! இக்கேள்வியைக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல! ஏனெனில், மரணம் நம்மை நெருங்கவிடாமல் சமாளிப்பது என்பதே வாழ்க்கை ஆகும்! இதையே வேறு சொற்களில் சொன்னால், வாழ்க்கை என்பது ஒரு கட்டாய பிழைப்பு முகாம் ஆகும்!

அதாவது, நாம் உயிரோடிருப்பதை உணர்கிறோம்,தொடர்ந்து உயிரோடிருப்பது கட்டாயம்! ஆகவே, ‘தொடர்ந்து உயிரோடிருப்பதற்கு எவையெல்லாம் தேவையோ, அவற்றையெல்லாம் பூர்த்தி செய்தாக வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன வேண்டும்’ என்பதே பரவலாக மனிதர்கள் கொண்டிருக்கும் வாழ்க்கை பற்றிய புரிதல் ஆகும். இந்த, அர்த்தமறியப்படாமல் வாழ்ந்து செல்லப்படும் அபத்த வாழ்க்கையை, இன்னும் பிறழ்ச்சியான வகையில் வாழ்ந்துசெல்லும் முறையே பணக்காரத்தனமான, அலங்காரமும், ஆடம்பரமுமான வாழ்க்கை எனும் கண்டுபிடிப்பு ஆகும்!

மேலும், “வாழ்க்கையின் பயன் என்ன?” என்ற கேள்வியை நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால், நாம் வாழ்ந்து பார்த்தவரை வாழ்க்கைக்கு யாதொரு பயனும், அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆகவேதான், வாழ்க்கைக்கு அவரவர்க்கு தோன்றியபடி,  ஒரு குறிக்கோள், இலட்சியம், இலக்கு என்று வகுத்துக் கொண்டுள்ளோம்!

மேலும், மனிதஜீவிகளாகிய நம்மால் எவர்க்கும், எதற்கும், இப்பிரபஞ்சத்திற்கும் யாதொரு பயனும் இல்லை! சாதாரணாமாக நம் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தினால் அதிக பயன்கள் உண்டு; அதன் கனியிலிருந்து இலை, தண்டு, பூ என ஒவ்வொரு பாகமும் பயன் தருபவை! ஆனால், ஆக உயர்ந்த படைப்பு என்று சொல்லிக்கொள்ளும் மனிதனால் ஒரு பயனும் இல்லை! மனிதன் என்பவன் தனக்கு மட்டுமே சேவை செய்துகொள்ளும் ஒரு சுயநல ஜந்துவாகச் சுருங்கிக் கிடக்கிறான்!  இவ்வாறு அவன் இருப்பதற்குக் காரணம் அவனுக்குத் தன்னைப்பற்றிய பார்வையும் கிடையாது, வாழ்க்கை பற்றிய பார்வையும் கிடையாது!

மீண்டும் நாம் ஞானத்தின் பயன் பற்றிய பிரச்சினைக்கு வருவோம். ஆம், உலகியல் நோக்குப்படி, ஞானத்திற்கு யாதொரு பயனும், மதிப்பும் கிடையாது! ஆகவேதான், அசலான ஆன்மீக  ஈடுபாடு கொண்டவர்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். அதே நேரத்தில், லட்சக்கணக்கானவர்கள் ஆன்மீகமல்லாத நோக்கங்களுக்காக ஆன்மீகத்தை நாடி பல்வேறு ஆன்மீக மையங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர்! அம்மையங்களில் அவர்களுக்கு  தேக்கரண்டியால் ஆன்மீகம் ஊட்டப்படுகிறது! அங்கே அவர்களுக்கு அந்தந்த மையங்களுக்குரிய தயார் நிலை (Ready-made) வாழ்க்கைப் பார்வையும் உலகப் பார்வையும் வழங்கப்பட்டு ஏற்குமாறு செய்யப்படுகிறது! அவர்களும் சந்தோஷமாக ஒரு புதிய மதத்திற்கு மாறுவதுபோல, அப்புதியபார்வைக்கு மாறிவிடுகின்றனர்! அதன்பிறகு அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீகவாதிகளாகத் தங்களைப் பாவித்துக்கொள்கின்றனர்! அதாவது, அவர்கள் இனியும் சாதாரண மக்கள் திரளைச் சேர்ந்தவர்களல்ல! தாங்கள் இன்ன ஆன்மீக மையத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளமே அவர்களுக்கு ஆன்மீக இலக்கை அடைந்துவிட்டாற்போன்ற திருப்தியைத் தந்துவிடுகிறது!

ஆனால், ஆன்மீகத்தை தேக்கரண்டியால் ஊட்டமுடியாது! மேலும், வாழ்க்கைப்பார்வையும், உலகப்பார்வையும் தத்தெடுத்துக்கொள்ளக்கூடிய விஷயங்களல்ல! மாறாக, அவை நம் ஒவ்வொருவராலும் நேரடியாக தன்னுள் கருவுற்று, கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுக்கப்பட வேண்டும்! அதாவது, உணர்ந்தறியப்பட வேண்டியவைகளாகும்! அறிவை நாம் கடனாகப் பெறவும், கொடுக்கவும் முடியும்; ஆனால், புரிதலையும், ஞானத்தையும் கடனாகப் பெறவோ, கொடுக்கவோ இயலாது! அத்தகைய ஞானத்தைப் பெற்றெடுக்க, ஒட்டுமொத்த இருப்பு மீது அளவற்ற காதல் வேண்டும்! இத்தகைய ஆழமான காதல் விவகாரத்திற்குப் பெயர்தான் வாழ்க்கை என்பதாகும்! தன்னை மையமாகக் கொண்ட சுயநலத்தில் தோய்ந்த சிறு விவகாரம் அல்ல வாழ்க்கை! மாறாக, தன்னை மையமாகக் கொண்ட நிலையைக் கடந்து வளர்ந்து மெய்ம்மையை மையமாகக் கொள்வதுதான் மனிதத் தரத்துக்குரிய  வாழ்க்கையாகும்! மெய்ம்மைக்குக் குறைவான இலக்கைக் கொள்வது எலியின் வாழ்க்கையை ஒத்தது ஆகும்!

ஆக, “ஞானத்தைப் பெற்றெடுக்க, ஒட்டுமொத்த இருப்பு மீது அளவற்ற காதல் வேண்டும்” என்றோம். அக்காதலின் வெளிப்பாடாகத்தான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல் எனும் விசார ஈடுபாடு பிறக்கிறது! நம்மில் பலர், ஞானம் என்பது வெறும் அறிவுப்பூர்வமாக அணுகக்கூடிய நுட்பப் பிரச்சினையாக (Technical Problem) எடுத்துக்கொள்கின்றனர்! அதே நேரத்தில், ஞானத்தை அடைய கூரறிவு, அல்லது நுண்ணறிவு அவசியமே; ஆனால் அறிவு மட்டும் போதாது, ஆழ்ந்த காதலும் வேண்டும்! அதாவது மூளையுடன் இதயமும் சேர வேண்டும்! “ஞானம் தானே, அதை நான் சாதித்துக் காட்டுகிறேன்!” என்பதாக சிலர் சவால் விட்டு, ஆழம் தெரியாமல் ஆன்மீகத்தில் இறங்குகின்றனர்! இவர்கள் தங்கள் அகந்தைக் குட்டைக்குள் மூழ்கி களிமண் கட்டியை எடுக்கட்டும், அது அவர்கள் பிரச்சினை!

நாம் இப்போது, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் விசாரம் குறித்துப் பார்ப்போம். ஏனெனில், அனைத்தையும் பற்றிய சாரமான புரிதல்தான் ஞானம்! விசாரம் கருக்கொள்ள கேள்வி அவசியம். கௌதம சித்தார்த்தனை புத்தனாக ஆக்கியது அடிப்படையான கேள்விகள்தான்! அக்கேள்விகள் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு அதன் திசையையே மாற்றிவிட்டன! வாழ்க்கை குறித்த ஆழமான கேள்விகள் ஒருவனிடம் தோன்றவேண்டுமாயின், அதற்கு அசாதாரணமான விழிப்பு தேவைப்படுகிறது! ஆன்மீகம் என்பது சிந்தனைச் சோம்பேறிகளுக்கும், பகல்கனவு காண்பவர்களுக்கும் உரியதல்ல!

விசாரம் என்பது அறிவுச்சேகரம் அல்ல; அது உணர்வு நிலை மாற்றத்தை இலக்காகக் கொண்டதாகும். எந்த உணர்வுக்குக் கேள்வி தோன்றுகிறதோ, அந்த உணர்வு வாழ்க்கை பற்றிய விசாரத்தைச் பற்றிச் செல்லும் வழிமுறையில் மாபெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வேறொரு உணர்வாக, உயர்-நிலை உணர்வாக மலர்கிறது! அதாவது, “வாழ்க்கை என்றால் என்ன?”, “நான் யார்?” என்பது போன்ற கேள்விகளுக்கான பதில் என்பது சொற்களால் அமைந்தவை அல்ல;  மாறாக, உயர்-நிலை உணர்வாக மலர்வதுதான் அவற்றுக்கான (அனைத்துக் கேள்விகளுக்குமான) பதிலாகும்! ஏனெனில், அடிப்படையில் இருப்பு, வாழ்க்கை என்பது ஒரு புதிராகும்! அப்புதிரை விடுவிப்பதற்கான திறவுகோலானது உணர்வு எனும் மாபெரும் புதிராகும்!

உணர்வின் வளர்ச்சி அல்லது பரிணாமம் என்பது பல படிநிலைகளைக் கொண்டதாகும்! அப் படிநிலைகளில் உயர உயர ஒருவரது அறிவும், பார்வையும், புரிதலும் உயர்கிறது! உயர் படியை எட்டிய ஒருவர், வாழ்க்கை பற்றிய தனது பார்வையை, புரிதலை எடுத்துச் சொல்லலாம்; அவற்றை உணர்வின் கீழ்ப்படிகளில் உள்ளவர்கள் ஒருவாறு அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ள இயலும் என்றாலும், அப்புரிதலுக்கு அடிப்படையாக அமைந்த உணர்வு-நிலையை, அனுபவத்தைப் பெற இயலாது!  

பொதுவாக, ஞானமடைதல் என்பது கடினம் எனப்படுகிறது; ஆனால், சுலபம், கடினம் என்கிற சொற்களின் வழியாக ஞானத்தை அணுகுவது முறையல்ல. வயிற்றுப்பசிக்கு உணவை அடைவது கடினம் என்றால் உணவைத்தேடாமல் விட்டுவிடுகிறோமா? அவ்வாறானதுதான் ஞானத்திற்கான பசியும்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் வேறு எதை அடைந்தாலும், அடையாவிட்டாலும், ஞானமடைவது என்பது கட்டாய அவசியமாகும். ஏனெனில், ஞானம் தான் ஒவ்வொரு மனிதனும் அடைந்தாக வேண்டிய முழுமை ஆகும். முழுமையில் எல்லாமும் அடங்கிவிடுகின்றன; அதுவே ஞானத்தின் பயன் ஆகும்!

இப்போது நாம் ஞானமடைதலுக்கான வழிகள், வழிமுறைகள் பற்றிய பிரச்சினைக்கு வருவோம்! இக்கட்டுரையாளர் சார்ந்திருக்கும் விசார மார்க்கம் முன்வைக்கும் வழி என்பது விசாரம் மட்டுமே ஆகும்! ஏனெனில், அறிதல், தெளிதல், புரிதல் ஆகியவற்றுக்கெல்லாம் ஒரே அடிப்படையாக விளங்குவதும்; இன்னும் சாதாரண அன்றாட விவகாரமாயினும், தத்துவமாயினும், விஞ்ஞானமாயினும், இன்னும் ஆன்மீகமாயினும் யாவற்றுக்கும் பொதுவான அடிப்படையாக அமைந்திருப்பதும்,  விசாரம் மட்டுமே! ஆகவே இம்மார்க்கமானது விசாரத்தை நேர்வழியாகக் கொண்டு, அதையே அறிவிக்கிறது.

முக்கியமாக, ஞானமடைதலுக்கு விசாரத்தை விட்டால், வேறு பயிற்சிகள் எதுவும் உதவாது! அதே நேரத்தில், விசாரத்தை ஒருவர் முறையாக மேற்கொள்வாரெனில், வேறு பயிற்சிகள் எதுவும் தேவைப்படாது! ஏனெனில், விசாரமே தியானமாக, யோகமாக, அனைத்துமாக அமைந்ததாகும்! ஆனால், விசாரத்தை எந்திரத்தனமான ஒரு பயிற்சியாக, ஒரு சடங்காக மேற்கொள்ள இயலாது. ஒருவகையில், விசாரம் என்பதை சிந்தனையோடு இணைந்த தியானம் எனலாம்!

எதுவொன்றைப் புரிந்துகொள்ளவும் அது குறித்துச் சிந்தித்தாக வேண்டும் அல்லவா? சிந்தனை என்பதென்ன? ஒன்றைக்குறித்த கேள்விகளை - அது என்ன? ஏன்? எதற்கு? எவ்வாறு? என்றெல்லாம் கேட்டு அவற்றுக்கான பதில்களைக் கண்டடைவதுதானே! இதைத்தான் விசாரம் என்கிறோம். ஆனால், கேள்விகளைக் கேட்டு பதில்களைக் கண்டுபிடிப்பது என்பதுதான் விசாரத்தின் அடிப்படை என்றாலும்; அவ்விசாரத்தின் தன்மை மிக மேலோட்டமானதிலிருந்து மிகமிக ஆழமானது வரை பல நிலைகளையும்; சாதாரணம், தீவிரம், அதிதீவிரம் என பல ஆர்வ நிலைகளையும் கொண்டதாகும்!

சாதாரணமாக நாம் கடையில் ஒரு பொருளை வாங்குவதற்குமுன் பல கேள்விகளைக் கேட்கிறோம்.  அப்பொருளின் விலை, தயாரிக்கப்பட்ட தேதி, அதன் மூலம், அதாவது அப்பொருள் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு; அதன் முடிவு, அதாவது அது எவ்வளவு காலம் நீடித்து உழைக்கும், அப்பொருளுக்கான உத்திரவாதம், அதன் முழுமையான பயன்பாடு…. என பல கேள்விகளைக் கேட்கிறோம்! ஆனால், வாழ்க்கை என்று வரும்போது, கேள்வியின்றி, யாதொரு புரிதலும் இன்றி, அர்த்தமறியாமலேயே வாழ்ந்து செல்கிறோம் என்பது எவ்வளவு துரதிருஷ்டவசமானது என்பதை நாம் உணர்வதேயில்லை!

ஆகவே, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுங்கள்! “வாழ்க்கை என்றால் என்ன?” என்று உங்களிடம் கேளுங்கள். “இதுதான் வாழ்க்கை!” என்று யாராவது எதையாவது சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிடமே கேட்டு, உங்கள் வழியாகவே அதற்கான பதிலைப் பெறுங்கள்! “வாழ்க்கை” பற்றிய கேள்வி உங்களிடம் இல்லாதபோது, தோன்றாதபோது, துளிர்க்காதபோது, அதற்கான பதிலைப்பெற உங்களிடம் யாதொரு அடிப்படையும் இல்லாது போகிறது!

விசாரமே வழியும், துணையும், இலக்கும், யாவும்!



மா.கணேசன்/ நெய்வேலி/ 05.06.2019 - 11.06.2019
******************************************************************************************************


ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...