மானுட இனம் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குவதோ,
எதையும் உருவாக்குவதோ, எதையும் அழிப்பதோ இல்லை. மாறாக,
அது தன் மனம்போன போக்கில் மட்டுமே இயங்குகிறது.
உருவாக்குகிறது, அழிக்கிறது. அதை எவ்வொரு கோட்பாட்டைக்
கொண்டும் நெறிப்படுத்துவது கடினம்.
ஒட்டுமொத்த மனித சமூகமும் பல்வேறு அடிப்படைகளில் பிரிந்து கிடக்கிறது. அதில் சாதியும் ஒரு அடிப்படை என்று நாம் எளிதாக தலித் பிரச்சினையைக் கடந்து போகிறோம். ஏனென்றால், தலித்துகள் அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகளை, அநீதிகளை, அடக்குமுறைகளை நாம் அனுபவித்தது இல்லை. மேலும், தலித்துகள் நம்மைக் காண்பதுபோல, நாம் 'ஆதிக்க சாதிகள்' - நாம் நேரடியாக யார் மீதும் ஆதிக்கம் செய்வதில்லை, செய்ததும் இல்லை, இனியும் செய்யப் போவதும் இல்லை என்பதும் உண்மை. இன்னும், தலித்துகள் சுட்டுவதுபோல நாம் 'சாதி இந்துக்கள்' - நாம் பெயரளவில் தான் இந்துக்கள், நாம் வருணாசிரம தர்மம் உட்பட எந்த இந்து தர்மத்தையும் கடைப்பிடிப்பதும் இல்லை என்பதும் உண்மை.
ஆனால், பிரச்சினை என்னவெனில், நாம் பிராமணர்களும் அல்ல, தலித்துக்களும் அல்ல; இந்த இரண்டு எதிரெதிர் துருவங்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் இடைப்பட்ட சாதிகள் - அதாவது நம்முடைய பிறப்புச் சான்றிதழ்படி, ஆனால், நாம் உண்மையில் எந்த சாதியுமில்லை என்பதும் உண்மை. ஆனாலும் யாரும் அதை நம்பமாட்டார்கள். குறிப்பாக, தலித்துகள் நம்பத் தயாராக இல்லை! ஏனென்றால், அவர்கள் பிற எல்லோரையும் எதிரிகளாகவே, அதாவது, ஒடுக்குபவராகவும், அடக்குபவராகவும், ஆதிக்கம் செய்பவராகவும் தான் பார்க்கிறார்கள்.
நம்முடன் நெடுங்காலமாகப் பழகும் நம் தலித் நண்பர்களுக்கும் இந்த விபரங்கள் எல்லாம் தெரியும். நமக்கும் தெரியும் நாம் அன்றாடம் சந்தித்துப் பேசும் உள்ளூர் தலித் நண்பர்களும் நேரடியாக எந்த கொடுமைகளுக்கும் உட்பட்டதில்லை - ஏனெனில், நம்முடைய ஊரின் அமைப்பு அப்படி. ஆனால், நம் தலித் நண்பர்களுடைய பிறப்புச் சான்றிதழ் அவர்களைத் 'தாழ்ந்தவர்கள்' என்று பட்டியலிட்டுள்ளது. அது அவர்களுக்கு சொல்லொணா வலியைத் தருகிறது. அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்; ஆனால், 'அந்த வலியை' நம்மால் முழுமையாகத் துடைத்தெறிய இயலாது.
எப்போதும் போலவே விடியும் அடுத்த நாள் காலை நாளிதழில், வெமுலா என்ற தலித் மாணவன், அவன் படிக்கும் பல்கலைக்கழத்தில் ஏற்பட்ட சாதிய ஒதுக்குதல் விளைவாகத் தற்கொலை செய்துகொண்டான் என்ற செய்தி, நம் தலித் நண்பனிடம் 'அந்த வலியை' மீண்டும் ஏற்படுத்தி விடும். மீண்டும், நம்மால் நம் தலித் நண்பனுக்கு பெரிதாக உதவ இயலாத நிலையில் வேறு விசயங்களைப் பேசி அச்செய்தியை, அது தரும் வலியைக் கடந்து போகச்செய்கிறோம். அந்த வலி, நம் தலித் நண்பனின் நனவிலி மனத்திற்குள் புதைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அது எப்போது வேண்டுமானாலும் மேற்பரப்புக்கு வரக்கூடும்.
ஆனால், தலித்துகள் சொல்வது போல, "ஒரு தலித்தின் வலியை ஒரு தலித்தால் மட்டுமே
உணரமுடியும்!" என்பது முழு உண்மையல்ல; அதேநேரத்தில், அதில் உண்மையில்லாமலும்
இல்லை. சாதிப் பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதற்கான வழியும், உபாயமும் தலித்துக்களிடமும் இல்லை; தலித் அல்லாதவர்களிடமும் இல்லை! இந்தக் கையறு நிலையில், தலித்துக்கள் தலித் அல்லாதவர்கள் மீது அவநம்பிக்கை கொள்வதன் வெளிப்பாடுதான் "ஒரு தலித்தின் வலியை ஒரு தலித்தால் மட்டுமே உணரமுடியும்!" என்ற கூற்றாகும். முடிவில், தலித்துக்கள் தங்கள் வலியை தாங்களே தனியே சுமந்து கொண்டு வாழவேண்டியுள்ளது.
ஆனால், அடிப்படையில் நாம் எல்லோரும் மனிதஜீவிகளே என்பதால், பரஸ்பரம் நாம் பிறரது
வலியை உணரமுடியும். அதை நாம் அறிவார்ந்த ஒத்துணர்வு (Intellectual Empathy) என்று
பெயரிட்டுள்ளோம். அதற்கான உள்ளுறை ஆற்றல் எல்லோரிடத்திலும் உள்ளது; ஆனால், எல்லோரும் அதற்கு விழிப்பதில்லை. எல்லோரும் தம்தம் உள்ளுறை-ஆற்றல்களை உணர்ந்து வெளிக்கொணர்ந்து ஒரு முழு மனிதஜீவியாக மலர்வதோ, வாழ்வதோ இல்லை! மாறாக, நம்மில் பெரும்பாலானாவர்கள் சமூகம் கற்பிப்பவைகளையும், மரபான, பாரம்பரியமான வழிகளையும் பின்பற்றிச் சென்று செக்குமாடுகளைப் போல உழன்று கொண்டிருக்கிறோம்.
உண்மையிலேயே ஒரு மனிதனின் வலியை இன்னொருவனால் உணரவே முடியாதெனில், பின் தலித்தியம், தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் அன்பு, தலித் படைப்பாற்றல்.... இவற்றினால் யாதொரு பயனும் விளைவதற்கான வாய்ப்பே இல்லாமல் அர்த்தமற்றதாகப் போய்விட, தலித்துகள் மேலும் தனிமைப்பட்டுப் போய்விடக்கூடும்.
அதே நேரத்தில் தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.
அவர்களுடைய வலி அவர்களுடைய ஆழ்-மனத்தில் பதிந்துவிட்ட 'இருபது நூற்றாண்டு வலி' ஆகும். தலித் ஒருவன் வேறு ஒரு கிரகத்துக்கே போய் குடியேறினாலும் 'அந்த வலியின்' நினைவு அவனை துரத்திக்கொண்டே செல்லும். வீட்டில் 'அலமாரியில் ஒரு எலும்புக்கூடு' ('A skeleton in the
closet') இருப்பது போன்ற ஒரு உணர்வு அவனுள் எப்போதும் உறங்கிக்கொண்டிருக்கும். ஆனால்,
அலமாரியைத் திறந்துபார்த்தால், அங்கே எலும்புக்கூடு எதுவும் இல்லாதது போலத் தெரியும்,
ஆனால் இருக்கும் - நினைவடுக்கின் கீழ்த்தட்டில் பத்திரமாக இருக்கும்.
தலித் அல்லாதவர்களிடம் அலமாரிக்குள் அதே போன்றதொரு எலும்புக்கூடு எதுவும் இல்லை என்பதான ஒரு பிரமை இருக்கும். ஆனால், அவர்களின் அலமாரியில் எலும்புக்கூடு இருக்காது, அதற்குப் பதிலாக ஒரு மண்டை ஓடு இருக்கும். அது அவர்களை சாதியக் கொடுமைகளின் மிக மோசமான பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கும் மந்திர சக்தி கொண்டதாயிருக்கும்.
நாம் நம்முள் எப்போதோ, யாராலோ விதைக்கப்பட்ட ஒரே கருத்தியலின் கருவிகளாக, ஒருவன்
ஒடுக்குபவனாகவும், இன்னொருவன் ஒடுக்கப்படுபவனாகவும் மாற்றப்பட்டுள்ளோம்! நம்மில்
ஒருவன் தன் அருகில் உள்ள இன்னொருவனிடம் தீர்வு வேண்டுகிறான்! ஏதோ அந்த இன்னொருவன் அந்தத் தீமையை, அக் கொடிய நோயை உருவாக்கியவன் என்பதுபோல! தீர்வு உன்னிடமும் இல்லை; அவனிடமும் இல்லை! நம் இருவருக்குமே அந்த சாதி எனும் விடம் ஊட்டப்பட்டுள்ளது; அந்த விடம் நம் இருவரிடமும் வெவ்வேறு வகை பாதிப்புக்களை விளைவித்துள்ளது, இன்றளவும் விளைவித்து வருகிறது! நாம் அனைவரும் கண்ணுக்குத் தெரியாத நம்முள் பதிக்கப்பட்ட நிரலமைப்பு (Programme) தொகுப்பிலிருந்து வரும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுபவர்களாக ஆட்டுவிக்கப்படுகிறோம்.
ஆகவேதான், தலித் பிரச்சினை என்பது தலித்துக்களின் தனிப்பிரச்சினை அல்ல என்பதை நாம் அனைவருமே புரிந்துகொண்டாக வேண்டும். ஒரே சமூகத்தின் மக்களில் - 'தாழ்ந்தவர்கள்' என்று ஒட்டுச்சீட்டு ஒட்டப்பட்டு - ஒருசாராரை சாதி, மரபு, பாரம்பரியம் என்ற காரணிகளைத் தவிர
வேறு யாதொரு இயற்கையானதும், முறையானதுமான காரணமும் இன்றி கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை எவ்வாறு நாம் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு சேர்ந்து வாழ்ந்துசெல்ல முடியும்? எனும் இக்கேள்விக்கு, குறைந்தபட்சம் சிந்திக்கின்ற மனிதர்களாகிய நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
இருவர் சேர்ந்து நடைப்பயணம் செல்லுகையில், ஒருவன் காலில் முள் தைத்துவிட்டால், இன்னொருவனுக்கு நிச்சயம் வலிக்காது தான். ஆனால், அவன் ஏன் காலை நொண்டிக்கொண்டு பின்தங்கி நிற்கிறான் என்பதையாவது கவனித்து திரும்பிப் பார்க்க வேண்டாமா? காலில் தைத்த முள் சிறியதெனில், அவனே பிடுங்கி எறிந்துவிடுவானல்லவா. அதுவே தைத்த முள் பெரியதெனில், அம்முள்ளை வெளியே எடுக்க நாமும் அவனுக்கு உதவத்தானே வேண்டும்?
அதே நேரத்தில், தலித் பிரச்சினை என்பது தலித்துக்களின் தனிப் பிரச்சினை அல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையே என்ற புரிதலுக்கு தலித் அல்லாதவர்கள் வந்தாலும் தலித்துக்களுடன் இணைந்து செயல்படுவதில் பல சிக்கல்கள் எழும். அதாவது, ஆணாதிக்க சமுதாயம் பெண் விடுதலையை ஆதரித்துப் பேசினாலும், முழுமையான விடுதலையை அது பெற்றுத் தராது என்ற அவ நம்பிக்கை பெண்ணியவாதிகளிடம் இருப்பது போன்ற ஒரு அவ நம்பிக்கையும், சந்தேகக் கண்ணும் தலித்தியவாதிகளிடமும் இருக்கும். ஏனென்றால், தலித்தியவாதிகள் எதிர்பார்க்கும் தீர்வுக்கும், தலித் அல்லாதவர்கள் முன் வைக்கும் தீர்வுக்கும் இடையே இடைவெளி ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்க இயலாது.
கடினமான உண்மைகள்
போரில்லா உலகைச் சமைக்க, உலகளாவிய சமாதானத்தை அடைய எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றையும் எது தோற்கடித்திருக்கிறது? இதற்கான ஒரு முக்கிய காரணம் மனித குடும்பம் பிளவுபட்டிருப்பதேயாகும். ஒன்றுக்கொன்று அவநம்பிக்கை, வெறுப்பு அல்லது பயம் போன்றவற்றை கொண்டிருக்கும் தேசங்களும் பண்பாடுகளுமாக மனிதகுலம் சுக்கு நூறாகச் சிதறிக்கிடக்கிறது. ஒன்றோடொன்று ஒத்துப்போகாத பண்புகளும் உள்ளுணர்வுகளும் சுயநல நோக்கங்களும், பொருளாசையும், உடமை மனோபாவமும் மனிதர்களின் இயல்பிலேயே ஆதியிலிருந்தே இருந்து வந்திருக்கின்றன. இக்கூறுகளனைத்தையும் தன்னுள் சேர்த்துக்கொண்டு, அவற்றின் ஒற்றை வடிவமாக உருவான ஒன்றுதான் சாதி எனும் சழக்கு எனலாம். அதாவது, பழைய அடிமை முறையையே படிநிலை அமைப்பில் அமைத்துக் கண்ட புதுமைதான் சாதி.
ஆக, சாதியை அழிக்க வேண்டுமாயின், மனிதனின் அனைத்துக் குணக்கேடுகளையும், மனக் கோணல்களையும், கீழியல்புகளையும் அழித்தாக வேண்டும். சாதி என்பது வெறுமனே ஒரு சொல்லோ, பெயரோ, அடையாளமோ மட்டுமல்ல. சாதியை இழப்பதென்பது எவ்வெவற்றின் குறியீடாக சாதி இருக்கிறதோ, அவை எல்லாவற்றையும் அழித்தாகவேண்டும். ஆகவேதான், சாதி ஒழிப்பு என்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை.
ஒரு அடையாளம் என்ற அளவிலேயேகூட சாதி என்பது மிகவும் வலிமையானது. அந்த அளவிற்கு மனிதர்கள் சாதியில் முதலீடு செய்துள்ளனர். எல்லாவற்றையும் இழக்கத் துணிந்தாலும் எவரும் தம் சாதியை இழக்கத் துணிவதில்லை. சாதியற்ற சமூகத்தைச் சமைக்க வேண்டும் என்ற புரட்சிகர, முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் முதலில் சாதி பற்றிய அனைத்து அம்சங்களையும் சாதியின் பல பரிமாணங்களையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
அடையாளம் பற்றிய உளவியல்
மனிதர்கள் தனித்தனியே தங்களது உண்மையான அடையாளத்தைக் கண்டடைவதற்கு முன் தாம் சார்ந்திருக்கும் குழுவின் அடையாளத்தைத் தழுவிக்கொள்வது என்பது இயல்பானதும், தவிர்க்க முடியாததுமான ஒரு இடை நிலைக் கட்டமாகும். இந்த அடையாளம் தான் சாதியின் மிக
எளிமையான அவசியமான இயல்பான ஆரம்பம் ஆகும். இந்த அடையாளம் பற்றிய உளவியல் (The Psychology of Identity)தான் சாதியை அழிக்கும் எல்லாவித முயற்சிகளையும் முறியடித்துவிடும் தகர்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்கிறது.
இந்த உளவியலை உடைப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது, அது சாதியை அழிப்பதல்ல; மாறாக, சாதியைக் கடந்து செல்லுதல் என்பதுதான்! அதாவது, குழு-அடையாள உளவியல் தொட்டிலில் இருந்து விடுபட்டு, ஒவ்வொரு மனிதனும் தனது உள்ளார்ந்த தனி-அடையாளத்தை கண்டடைந்திடும் உயர் - உளவியலைத் தழுவிக்கொள்வது என்பதே அது.
அதே நேரத்தில், சாதியை வெற்றிகரமாகக் கடந்து சென்றுவிட்ட பிறகும் ஒருவன் அதே சாதிய சமூகத்தில், தனது அதே சாதிய குடும்பத்தில் தான் இருந்து வாழவேண்டியிருக்கிறது. அவன் வேறொரு கிரகத்திற்குச் சென்று வாழ முடியாது. ஞான விழிப்படைந்த பிறகு புத்தர் தனது குடும்பத்திற்கு திரும்பிச் செல்லவில்லை. மாறாக, தன்னைச் சுற்றிச் சேர்ந்த சீடர்கள் குழுதான் புத்தரின் புதிய குடும்பம். அவரை மையமாகக் கொண்டு உருவான குழு அல்லது சங்கத்தின் அடையாளம், அது ஒரு "புதிய மானுடம்" என்பதுதான். இதே போல, இயேசுவும் தன் தாயார், மற்றும் சகோதரர் யார் என்ற கேள்விக்கு, "தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி இதோ, என் தாயும், சகோதரர்களும் இவர்களே" (மத்தேயு 12:46-49) என்றார்.
அதே நேரத்தில், புத்தரும், இயேசுவும் தமக்கான சீடர் குழுவை, குடும்பத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், இன்றைய நவீன காலத்தில், ஞானமடைந்த ஒருவன் தனக்கான தனிக் குழுவை உருவாக்கிக் கொள்வதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். (அதற்கு விசார மையமே சான்று ஆகும்.!) ஆகவே, அவன் தான் பிறந்த குடும்பத்திலேயே வாழ்பவனாகத் தொடர்கிறான். ஆனால், அவனது குடும்பத்தாரை, உறவினர்களை சீர் திருத்தி சாதியச் சழக்கிலிருந்து வெளிக்கொணர முயன்றாலும், அவனால் அவர்களுடைய சாதி அடையாளத்திலிருந்து அவர்களை விடுவிக்க இயலாது. ஏனெனில், சாதி என்பது அவனுடைய குடும்பத்தில் தொடங்கி, அக்குடும்பத்திலேயே முடிவடையும் ஒன்றல்ல. மாறாக, அவனது நெருங்கிய மற்றும் தூரத்துச் சொந்தபந்தங்கள், என்று பரவி சாதி-சனம் என்ற பெரும் வலைப்பின்னலாக விரிந்த ஒன்றாகும்.
ஆக சாதி அடையாளத்தை மீறுவது அல்லது கைவிடுவது என்பது ஒருவன் தனது சாதி-சனத்தைப் பகைத்துக்கொள்ளாமல் இயலாது. அவ்வாறு பகைத்துக்கொள்வதன் விளைவு சாதிப் பிரஷ்டம், அதாவது சாதியிலிருந்து விலக்கிவைக்கப்படுதல் ஆகும். சாதியைக் கைவிடுவது என்பது தனது
வேர்களைத் தானே பிடுங்கிக்கொள்வதற்குச் சமமானதாகும். ஒருவன் தனது சாதி சனங்களைப் பகைத்துக் கொள்ளத் துணிந்தாலும், தன் தாய் தந்தையரை தூற்றுதலுக்கு உட்படுத்தத் துணியான்.
குழு அடையாளம் என்பது மிகவும் தொன்மையானது. அது மனிதர்கள் சிறு சிறு குழுவாக வாழத்தொடங்கிய, வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. இந்தக் குழு அடையாளம்தான் பிறகு சாதியாகவும், சாதிய அமைப்பாகவும் மாற்றப்பட்டுள்ளது. இங்கு நாம் குழு-அடையாளம்
பற்றியே பேசுகிறோம். சாதி அடையாளத்திற்கு முந்தையதும், அடிப்படையானதும் குழு-அடையாளமே. ஆக, இக் குழு-அடையாளம் என்பது தொல் மனத்தின் வெறும் எச்ச சொச்சம் அல்ல. மாறாக, அது இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளது. மனிதர்கள் இன்று நவீன நாகரிக நிலையை அடைந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஒரு தொல் மனிதன் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். ஆக, சாதி அடையாளத்தைத் துறப்பது கடினம், ஏனென்றால், குழு-அடையாளத்தை துறப்பது கடினம்.
ஒரு குழுவாக இருப்பதும், அக்குழுவின் அங்கத்தினராக இருப்பதும் தான் சாதியாகும். அதாவது எத்தனை குழுக்கள் உள்ளனவோ - அவை தொழில் அடிப்படையில் அமைந்தாலும், வேறு எந்த அடிப்படையில் அமைந்தாலும் - அத்தனை சாதிகள் உள்ளன எனலாம்.
சாதி ஒழிப்புக்கான ஒரு பிரதான வழியாக புறமண முறையை, அதாவது கலப்பு மணம், சாதி மறுப்பு மணம், காதல் மணம் பற்றியெல்லாம் கோட்பாடு ரீதியாக நாம் பேசுகிறோம். ஆனால், சாதிக் கலப்புக்கு தனிநபர்கள் சிலர் தயாராக இருந்தாலும் சாதியச் சமூகம் அதற்குத் தயாரில்லை.
ஏனெனில், சாதிக் கலப்பு என்பது இந்த சாதியுமல்லாத, அந்த சாதியுமல்லாத இரண்டுங்கெட்டான் சாதியைக் குறிப்பதாக இருக்கிறது. அதாவது, அடையாளக் குலைவைக் குறிக்கிறது. ஆக, சாதி ஒழிப்புக்கு சாதிக் கலப்பு என்பது ஒரு தீர்வாக அமையாத வழியாகவே தெரிகிறது. அப்படியானால், சாதி ஒழிப்புக்கு மாற்றாக, சாதியைக் கடந்து செல்லுதல் என்பது ஒரு தீர்வாக அமையுமா?
சாதியைக் கடந்த ஒருவனுக்கு சாதியும் இருக்காது, அவனால் சாதியப் பாகுபாட்டினால் விளையும் உயர்வு-தாழ்வு பிரச்சினையும், தீண்டாமை முதலிய பிற கொடுமைகளும் இருக்காது. ஏனெனில், சாதியைக் கடந்தவன் என்பவன் உளவியல் ரீதியான ஒரு உண்மையான தனிமனிதன் ஆவான்.
அவன் குழு-அடையாளத்தைக் கடந்தவன், ஆகவே கூட்டு-வாழ்க்கை என்பதையும் கடந்தவன் ஆவான். அதே நேரத்தில், அவன் ஒரு குடும்பத்திலும் இருப்பான், இதே சமூகத்திலும் இருப்பான்; எங்கிருந்தாலும் அவன் தனித்தே இருப்பான். அவனுக்கு இந்த சமுதாயத்துடன் எவ்வித வியாபார
பரிவர்த்தனை உறவும் இருக்காது. ஆனால், இந்த சாதியச் சமூகத்தின் கடைசி மனிதனும் சாதியைக் கடந்து செல்லும்வரை சாதி இருக்கும், சாதியப் பிரச்சினைகளும் தொடரும்.
சாதியும் சாதியமும்
அப்படியானால், சாதியை ஒழிக்க வேறு வழி எதுவும் இல்லையா? உண்மையில், ஒரு குழு-அடையாளம் என்ற அளவில் சாதி என்பது தீமையானதோ கேடானதோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாதி என்பது ஒரு குழு-அடையாளம் மட்டுமல்ல; அது ஒரு கட்டுக்கோப்பு ஆகும். ஒவ்வொரு இனக்குழுவும் தமது பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், பண்பாடுகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப்பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன. இவ்விடத்தில் சாதி என்பது ஒரு குடும்பத்தின், சமூகக்குழுவின் கட்டுக்கோப்பைக் குறிப்பதாகும்.
ஆனால், சாதி எனும் இந்த கட்டுக்கோப்பானது ஒரு குடும்பத்திற்குள், அல்லது ஒரே குழுவிற்குள் இயங்கும்வரை அது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகச் செயல்படுகிறது. ஆனால், இன்னொரு குடும்பம், அல்லது இன்னொரு சமூகக்குழுவுடன் உறவோ, கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங் களைச் செய்யும்போதோ பிரச்சினைகள் எழுகின்றன. அதாவது, ஒரு குடும்பம் அல்லது சமூகக்குழுவின் கட்டுக்கோப்பிற்கும், இன்னொரு குடும்பம் அல்லது சமூகக்குழுவின் கட்டுக்கோப்பிற்கும் இடையே தவிர்க்க இயலாமல் முரண்பாடுகள் முளைத்து மோதல்களாக மாறுகின்றன. இவ்விடத்தில், நல்லெண்ணம் கொண்ட, பகுத்தறிவு பேசுகிற, மனித நேயமிக்க, புரட்சிகர, முற்போக்குவாதிகளான நாம், சாதிகளுக்கிடையே (அதாவது, வெவ்வேறு கட்டுக்கோப்புகளுக்கிடையே) சமத்துவம் வேண்டும் என்று பேசலாம். ஆனால், நடைமுறையும், யதார்த்தமும் சமத்துவத்திற்கு இடமளிக்காத தனித்துவங்களாகவே சாதிகள் பிரிந்து நிற்கின்றன!
அடுத்து, சாதியை ஒரு “கட்டுக்கோப்பு” என்ற அர்த்தத்தில் இங்கு நாம் பேசுகையில், ஒரு கட்டுக்கோப்பைவிட இன்னொரு கட்டுக்கோப்பு மேலானதோ, கீழானதோ கிடையாது என்ற உண்மையையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனால், எவ்வாறோ, இவ்வுண்மையைப்
புறந்தள்ளிவிட்டு, ஒரு கட்டுக்கோப்பு (சாதி), இன்னொரு கட்டுக்கோப்பை (சாதியை) விட மேலானது, உயர்வானது என்று சுயபெருமை பேசுவது என்ற போக்கு பரஸ்பரம் இரு கட்டுக்கோப்புகளையும் குலைப்பதாக, இரத்தக்களறிகளை கட்டவிழ்த்துவிடுகிறது. இந்த பேரவலம் தான் நாட்டில் நெடுங்காலமாக தொடர்ந்து அவ்வப்போது அரங்கேறி வருகின்றது!
அதாவது, கட்டுக்கோப்புகளுக்கு இடையே உயர்ந்தது, தாழ்ந்தது; பெரியது, சிறியது, என்பது போன்ற ஏற்றத்தாழ்வுகள் எவ்வொரு கட்டுக்கோப்புக்குள்ளும் உள்-அமைந்த முரண்பாட்டின் விளைவுகள் அல்ல (இது குறித்து பிறகு ஆராய்வோம்!); மாறாக, அவை வெவ்வேறு கட்டுக்கோப்புகளுக்கும் இடையே எழும் முரண்பாடுகள், மற்றும் வேறு சில புறக் காரணிகள் சேர்க்கப்படும்போது ஏற்படும் தீய விளைவுகளே ஆகும்! அந்த புறக் காரணிகள் வரலாற்றின் போக்கில் உள்ளே நுழைக்கப்பட்டவை ஆகும். ஆக, சாதிகளுக்கிடையே உயர்வு-தாழ்வு, மேல்-கீழ் என்றெல்லாம் பார்ப்பதும், அதற்கேற்ப ஒழுகுவதற்கும் பெயர் தான் சாதியம் என்பதாகும்.
கட்டுக்கோப்பு எனப்படும் சாதி அல்ல ஏற்றத்தாழ்வுகளுக்கான ஊற்றுக்கண், அல்லது, அடிப்படை. மாறாக, சாதியுடன் வெறு சில காரணிகள், பிரதானமாக பொருளாதார நிலை, அல்லது பொருளாயத மதிப்புகளை அளவீடாகச் சேர்க்கும்போதே சாதி எனும் கட்டுக்கோப்பு ஏற்றத் தாழ்வுகளுக்கான ஊற்றுக்கண் என்பதாகத் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது!
சாதி எனும் கட்டுக்கோப்பு ஏற்கனவே குறிப்பிட்டபடி, தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள் போன்ற அம்சங்களின் தொகுப்பாய் அமைந்த, மனிதர்களின் உள்ளத்தில் ஊறிய ஒரு
அடையாளம் ஆகும்! குறிப்பாக மனிதர்கள் அவர்கள் செய்கின்ற தொழில்களைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இன்றைய அளவிலும், தொழில்முறையில், பொறியியலாளர்கள் (குறிப்பாக மென்பொருள் பொறியியலாளர்கள்), மற்றும் ஆங்கில மருத்துவர்கள் ஏன் பெரிதாக மதிக்கப்படுகின்றனர்? இன்று எல்லா தொழில்களும் சமமாக மதிக்கப்படுவதில்லை; எல்லா தொழில்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை; ஒரு சில தொழில்களுக்கு மட்டுமே அதிக மதிப்பும், சம்பளமும் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன. இத்தகைய தொழில், மற்றும் பதவி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் இனி எப்போதுமே சமப்படுத்தமுடியாத நிலையை எட்டியுள்ளன.
இந்த 21-ம் நூற்றாண்டில், எவ்வொரு தொழிற்சாலையிலும், அலுவலகத்திலும் பல சாதியினர் வெவ்வேறு பதவி நிலைகளில் பணிபுரிபவர்களாக இருக்கின்றனர். “இனம் இனத்தோடு சேரும், சாதி சாதியோடு சேரும்!” என்பதற்கிணங்க, தலைமை அதிகாரிகள் பிற தலைமை அதிகாரி களுடனும், இரண்டாம் நிலை அதிகாரிகள் தங்களைப் போன்றவர்களுடனும், அலுவலக ஊழியர்கள் அவரவர்களுடைய பதவி நிலைகளுக்கேற்ப சக ஊழியர்களுடனும், தொழிலாளர்கள் முறையே தத்தம் பதவி நிலைகளில் உள்ளவர்களுடனும், கடை நிலை ஊழியர்கள் தங்கள் சக
ஊழியர்களுடனும், வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய சக ஓட்டுனர்களுடனும் மட்டுமே பழகுகின்றனர், நட்பு வைத்துக் கொள்கின்றனர், கொடுக்கல்-வாங்கல் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதன் பொருள் என்ன? ஆம், தொழில்கள், பதவி நிலைகள் ஒவ்வொன்றும் ஒரு சாதியாகவே மாறிவிடுகின்றது. இதை மறுக்கமுடியாதென்றால், ஆதியில், தொழில்களின்
அடிப்படையிலேயே சாதிகள் உருவாயின என்பதையும் மறுக்க முடியாது!
ஆக, சாதி அல்ல, சாதியம் தான் பிரச்சினைக்கு உரியதாகும். சாதிக்கு இரு முகங்கள் உள்ளன. ஒன்று அது ஓர் மரபடையாளம். இரண்டு, அது சமூக அதிகாரஅடுக்கில் ஓர் இடம். இந்த இரு முகங்களில் இரண்டாவதுதான் நாம் முழுமையாக நிராகரிக்க வேண்டிய பெரும்தீமை ஆகும். ஆக, சாதியை அழிக்கவேண்டும் என்று முழுமூச்சாக களத்தில் இறங்குவதற்கு முன் நாம் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி, “சாதியை ஒழிக்கவேண்டுமா? அல்லது தீண்டாமை உள்பட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நொறுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட நிலைமையை, ஏற்றத் தாழ்வுகளை (மொத்தத்தில், சாதியத்தின் தீய விளைவுகளை) நீக்கவேண்டுமா?” என்பதுதான்.
ஒரு மரபடையாளம் என்ற அளவில் சாதியை சட்டம் போட்டும் அழிக்க முடியாது!வன்முறைகொண்டும் அழிக்க முடியாது! சாத்விக முறையாலும் அழிக்க முடியாது! பின் எப்படி சாதியை அழிப்பது? சாதி என்பது தூலமான ஒன்றல்ல; அது ஒரு அடையாளம், ஒரு கருத்தியல். ஆகவேதான் அதை அழிப்பது கடினம். மேலும், சாதியின் தோற்றுவாய் மிக எளிமையானது. ஆனால், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட கற்பிதங்கள், புனைவுகள் இன்று எட்டியுள்ள நிலை மிகவும் சிக்கலானது, மிகவும் ஆபத்தானது.
சாதியை நாம் அழிக்க வேண்டாம். மாறாக, அழிக்க வேண்டியது சாதியத்தைத் தான். சாதியத்தை அழிப்பதன் மூலம் சாதியத்தில் மறைந்துள்ள சாதியை நாம் அழிக்க முடியும். சாதியத்தை அழித்தே ஆக வேண்டும்; இல்லையேல், அது சாதி வித்தியாசம் இன்றி நம் அனைவரையும் அழித்துவிடும். ஆகவே, சாதி ஒழிப்பு என்பது சாதி ஆதிக்க ஒழிப்பு என்று மாற்றியமைக்கப்பட வேண்டும்.
சாதிப்பெருமையும் புனிதமும்
சாதி பிரதிநிதித்துவம் செய்யும் விசயம் வேறு; சாதி அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டு சாதியம் பிரதிநிதித்துவம் செய்யும் விசயங்கள் முற்றிலும் வேறாக, நேர்மாறானவையாக உள்ளன. சாதி என்பது ஒரு குழுவைக் குறிக்கிறது, அக்குழுவின் உறுப்பினர்களைக் குறிக்கிறது. ஒரு சாதியின் பெருமையானது அக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களின், குறிப்பாக சிறந்த விதிவிலக்கான தனிமனிதர்களின் அரும்பெரும் பங்களிப்பினால் விளைவதாகும். அவர்களால்தான் அந்த குறிப்பிட்ட சாதிக்குப் பெருமையே தவிர, தனியே சாதிப் பெருமை என்று ஏதுமில்லை. ஒரு சாதியைச் சேர்ந்த தனிமனிதர்களின் பங்களிப்பினால் அந்த சாதிக்குப் பெருமை சேருகிறது என்றே வைத்துக் கொண்டாலும், அந்த சாதியில் பிறந்ததன் காரணத்தினாலேயே ஒவ்வொருவருக்கும் அப்பெருமை தானாகவே சேர்ந்து கொள்ளாது; ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பைச் செய்வதன் மூலம் மட்டுமே ஒவ்வொருவரும் அப்பெருமைக்குத் தகுதியானவராக ஆகிறார், ஆகமுடியும்.
ஆக, மனிதர்களால் தான் சாதிக்குப் பெருமையே தவிர சாதியினால் மனிதர்களுக்குப் பெருமை இல்லை. அப்படியே ஒரு குறிப்பிட்ட இனக்குழு, அல்லது சாதியின் பண்பாடு (கட்டுக்கோப்பு) சிறந்ததாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், அது எவ்வகையில் இன்னொரு இனக்குழு அல்லது சாதிக்கு எதிராகவோ, உயர்ந்ததாகவோ அமையமுடியும்? அவரவர்க்கு அவரவர் சாதிப் பண்பாடு உயர்ந்ததே! உயர்வு, மேன்மை, சிறப்பு போன்றவை ஒப்பீட்டளவில் தீர்மானிக்கப்படுவது அல்ல. ஏனெனில், இவ்வம்சங்களுக்கு எல்லை என்பதில்லை. ஒருவன் தான் அடைந்த மேன்மையைவிட இன்னும் மேன்மையான நிலையை அடைய முடியும் எனில், அவன் தன்னுடன் தான் போட்டியிடவும் தன்னைக் கடந்து வளரவும் வேண்டுமே தவிர இன்னொருவனுடன் ஒப்பிடுவது, போட்டியிடுவது என்பது அர்த்தமற்றதாகும்.
அடுத்து, தனது சக மனிதர்கள், அதாவது, பிற சாதிகள் யாதொரு காரணமுமின்றி சாக்கடையில் தள்ளப்பட்டு உழன்று கொண்டிருப்பதை சகித்துக்கொண்டிருப்பவர் எவரும் மனிதனாகவே இருக்கமுடியாது எனும்போது, உயர்சாதிப் பெருமை என்பதன் அர்த்தம் என்ன? அதில் என்ன புனிதம் இருக்க முடியும்?
தலித் பிரச்சினையைத் தீர்ப்பதில் தலித் அல்லாதவர்களின் பங்கு
பிரதானமாக தலித் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் தலித் அல்லாதவர்களின் பங்கு என்பது பெரிதும் தலித்துக்களின் நிலைபாடுகளைப் பொறுத்தே அமையும். தலித்துகள் தங்களது விடுதலையை எவ்வாறு உருவகித்துள்ளனரோ அதற்கேற்பவே அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வும் அமையும். தலித் பிரச்சினை என்பது பிரதானமாக சாதியக் கட்டமைப்பில் தலித்துக்கள் வைக்கப்பட்டுள்ள இடமும் கீழ்மையான நிலையுமே ஆகும். ஆக, தலித் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்படுவது "சாதி ஒழிப்பு" என்பதேயாகும். ஆனால், "சாதி ஒழிப்பு" என்றால் என்ன என்பதை தலித்துக்கள் துல்லியமாக வரையறுத்துள்ளார்களா என்பது முக்கியமானதாகும்.
நாம் ஒரு விசயத்தை நினைவில் கொள்ளவேண்டும். நம் சமூகமானது வெறும் சாதி ரீதியாக மட்டுமே பிரிந்துகிடக்கவில்லை. சமூகம், பொருளாதாரம், வர்க்கம் என்கிற அடிப்படையிலும், மதம், இனம், மொழி, பிராந்தியம் என்கிற அடிப்படைகளிலும் பிரிந்துகிடக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு போராட்டமாக உள்ளது; சமுதாயம் என்பது பெரும் போட்டிக் களமாக உள்ளது. இங்கு ஒவ்வொருவருக்கும், எல்லோருக்குமே பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், தலித்துகளுக்கு கூடுதலாக அமைந்திருப்பது சாதி ரீதியான துவேசம், பாகுபாடு என்பதாகும்.
ஆகவே, தலித் அல்லாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை முன்னிறுத்தி தங்களுடைய மனிதாபிமானமற்ற செயல்களைத் தொடர்வதை தாங்களே விட்டொழிப்பார்களேயானால், அது வரவேற்கத் தக்கதே. அது பெருமளவு பிரச்சினையைத் தீர்ப்பதில் உதவுவதாக அமையும். தலித் அல்லாதவர்கள் தங்களது சாதிய ஆணவப் போக்குகளையும், மனிதாபிமானமற்ற செய்கைகளையும் துறப்பது என்பது தோல்விகரமான விசயமோ, அல்லது பெரும் தியாகமோ அல்ல. மாறாக, அது மனிதத்தைத் தழுவிக்கொள்ளுகிற மிக உயர்ந்த வெற்றியாகும். இந்த வெற்றியைக் கைக்கொள்ள அதிகம் யோசிக்கவோ, தங்களது முட்டாள்தனத்தைத் தவிர பெரிதாக இழக்கவோ வேறு ஒன்றுமேயில்லை. ………...
சாதியற்றவனும் சாதியைக் கடந்தவனும்
‘சாதியற்றவன்’ என்று எவரும் இருக்கமுடியாது. ஏனென்றால், மீன் தண்ணீரில் பிறந்து தண்ணீரிலேயே வாழ்வது என்பது எவ்வளவு இயற்கையானதோ, அதைப்போல, எல்லா மனிதர்களும் ஏதாவதொரு சாதியை, மதத்தை, மொழியினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், அல்லது சமூகக்குழுவிற்குள் தான் பிறக்கிறார்கள். ‘சாதியற்றவன்’ என்று எவரும் இருக்கமுடியாது. மாறாக, சாதியைக் கடந்தவன் என்ற நிலையை ஒவ்வொருவரும் முயன்று அடையமுடியும்; ஆனால், வெகு சிலரே சாதியை கடந்தவராக ஆகின்றனர். ஏனெனில், அதற்கு அசாதாரணமான அறிவுத் தெளிவு அவசியமாகிறது. ஆம், ஞானமடைந்த சமூகம் மட்டுமே சாதி கடந்த, வர்க்கம் கடந்த சமூகமாக எழும்!
குறிப்பிட்ட ஒரு சாதியை பிரதிநிதித்துவம் செய்துகொண்டே சாதியை அழித்தொழிக்க முடியுமா? அனைத்து சாதிகளுக்கும் வெளியேயுள்ள ஒரு புள்ளியிலிருந்து தான் சாதியத்தை அழிக்க முடியும், அது மட்டுமே முறையாக இருக்கும். சிலர், 'தலித்' என்றால் 'சாதியற்றவன்' என்பதாக பொருள் கூறுகின்றனர். அப்படியானால், 'சாதியற்றவன்' என்பதே ஒரு சாதியாக உருவாவதைத் தவிர்க்க இயலாது. அடுத்து, சாதி அழிப்பு விவகாரம் பல நிபந்தனைகளுடன் கூடியதாக முன்வைக்கப்படும் எனில், அது ஏற்கனவே உள்ள சிக்கலான நிலைமைகளுடன் மேலும் சிக்கல்களைச் சேர்ப்பதாகவே அமையும்.
ஒரு குறிப்பிட்ட சாதியை, வரலாற்றுக் காரணங்களுக்காக பிரதிநிதித்துவம் செய்துகொண்டே சாதியை அழிக்கவேண்டும் என்று முனைவது என்பது தொடர்ந்து சாதிய அமைப்பை தக்கவைப்பதிலேயே முடிவடையும். ஏனெனில், ஒடுக்கப்பட்ட சாதிகளின் சிறப்பு உரிமைகள் (அவை சலுகைகள் அல்ல) குறித்த கோரிக்கைகள் இருக்கும்வரை, ஒடுக்கும் சாதிகள் தக்கவைக்கப்பட்டாக வேண்டும் அல்லவா! அதாவது, சாதிய ரீதியான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் வரலாற்றின் போக்கில் குறைந்து கொண்டே வந்தாலும், ஒடுக்குபவர்கள் என்ற வர்க்கமும், சாதியும் தொடர்ந்து அப்பட்டத்தை ஏந்திக் கொண்டிருக்க வேண்டியுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, ஒடுக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்து ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் முழுமையாக விடுதலை அடையும் வரை ஒடுக்குபவர்கள் (ஆதிக்க சாதிகள்) தங்கள் சாதிகளை மனமுவந்து துறப்பதென்பது பிரதான முன் -நிபந்தனையாக தலித்தியம் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. இவ்வாறில்லையெனில், பின் 'சாதி அழிப்பு' என்பதன் அர்த்தம்தான் என்ன? இவ்வழியிலல்லாது வேறு எவ்வழிகளில் சாதி அழிப்பைச் செய்வது என்ற கேள்வி மீண்டும் மீண்டும் நம்முன்னே விசுவரூபம் எடுத்து நிற்கிறது!
முதலிடத்தில் சாதியை முன்வைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட தீமைகள் எவையெவை என்பது குறித்த தெளிவு வேண்டும். அதாவது, சாதி விளைவித்த தீமை, அல்லது தீமைகள் என்னென்ன? சாதியை வைத்து சாதிய படிநிலை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அவ்வமைப்பைக் கொண்டு பிரதானமாக என்ன சாதிக்கப்பட்டது? அதாவது, சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரமானது, மேலிருந்து கீழாக படிப்படியாக குறைக்கப்பட்டு, கீழ்ப்படியில் உள்ளவர்கள் முற்றிலுமாக அதிகாரமற்றவர்களாக ஆக்கப்பட்டனர், என்பதுதானே? அதாவது, பிரதானமாக பொருளாதார நலன்கள் தானே மறுக்கப்பட்டன?
அதாவது, உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும், பூசல்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், ரத்தக் களறியான போர்களுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும், சுரண்டலுக்கும், அடிமைத்தனங்களுக்கும், அடக்குதலுக்கும், ஒடுக்குதலுக்கும் காரணம் பொருளாதாரம் தான். பொருளாதாரப் பயன் கருதாமல், வெறுமனே சாதிப்பெருமை பேசிப் பீற்றிக்கொள்வதனால் ஆதிக்க சாதிகளுக்கு என்ன லாபம்? இந்நிலையில், சாதியை அழிப்பது என்றால் என்ன? சாதியை அழித்துவிட்டு அந்த இடத்தில் எதை வைப்பது? சாதியை அழித்துவிட்டால், அவ்விடத்தில் ஒற்றுமையும், சமத்துவமும் தாமாகவே வந்துவிடுமா என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
130 கோடி சாதிகள்
இந்தியச் சமூகம் 46,73,034 சாதிகளாகவும் உட்சாதிகளாகவும் பிரிந்திருக்கிறது (புள்ளி விபரம்: நிதி ஆயோக்). தமிழ் நாட்டில் பட்டியல் சாதிகள்- 76, பட்டியல் பழங்குடியினர்-36, பிற்படுத்தப்பட்ட சாதிகள்-136, (இஸ்லாமியரில்) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள்- 7, மிகவும் பிற்பட்ட சாதிகள் 41, சீர்மரபினர்-68, முற்பட்ட சாதிகள்- 79 என 443 சாதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பல
உட்சாதிகளாக மேலும் பிரிந்துள்ளன. இவற்றில் எந்தவொரு சாதியோ உட்சாதியோ இன்னொன்றை தனக்குச் சமமானதாகக் கருதுவதில்லை. இவை தத்தமது சாதிக்கென தனித்துவமும் பெருமையும் இருப்பதாக நம்புகின்றன. அதற்கேற்ற தோற்ற வரலாற்றுக் கதைகளையும் தொன்மங்களையும் புனைந்து கொண்டுள்ளன. இந்த விபரங்கள் எதைக் காட்டுகின்றன? சாதிகள் ஏன் மேன்மேலும் சாதிகளைப் பிறப்பித்துக்கொண்டே போகின்றன? சாதிகள் ஏன் உட்சாதிகள், இன்னும் உட்சாதிகளுக்கு உட்சாதிகள் என்று பிரிந்துகொண்டே போகின்றன? அதற்கான தேவையும் அவசியமும் என்ன? அதன் உளவியல் என்ன?
கட்டுக்கோப்பு என்ற அர்த்தத்தில் சாதிகளுக்கு இடையே உயர்ந்தது, தாழ்ந்தது; பெரியது, சிறியது, என்பது போன்ற ஏற்றத்தாழ்வுகள் எவ்வொரு கட்டுக்கோப்புக்குள்ளும் (சாதிக்குள்ளும்) உள்-அமைந்த முரண்பாட்டின் விளைவுகள் அல்ல; மாறாக, அவை வெவ்வேறு கட்டுக்கோப்புகளுக்கும் (சாதிகளுக்கு) இடையே எழும் முரண்பாடுகள் என்பதாக ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால், ஒவ்வொரு சாதிக்குள்ளும் தம்மை வேறுபடுத்திக்கொண்டு பிரிந்து சென்று தனித்து இயங்கத் துடிக்கும் ஒரு கூறு அல்லது உளவியல் போக்கு ஒன்று செயல்படுகிறது எனலாம். ஆகவேதான் சாதிகள் மேன்மேலும் உட்சாதிகள், உட்சாதிகளுக்கு உட்சாதிகள் என்று பிரிந்துகொண்டே போகின்றன? ஏனெனில், மனித இனம் மொத்தத்தையும் ஒரே பட்டியில் அடைத்துவைக்க முடியாது!
தமிழ் நாட்டில் பட்டியல் சாதிகள்- 76, பட்டியல் பழங்குடியினர்-36, ஆக மொத்தம் 112 ஒடுக்கப்பட்ட சாதிகள் உள்ளன. தமிழக தலித் வரலாற்றைப் பார்த்தால் தொடர்ந்து தலித் உட்சாதிகளுக் கிடையே, குறிப்பாக அதன் உட்பிரிவுகளுக்கிடையே ஒரு பகை முரணே இருந்து வந்துள்ளது. தலித் ஒற்றுமை என்பது தமிழகத்தைப் பொருத்தமட்டில் இன்றும் ஒரு கனவாகவே உள்ளது. இந்நிலையில், சாதியை அழித்து ஆதிக்க சாதிகளுடன் ஒற்றுமையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவது என்பது எத்தகைய தீங்கனவாக விளையும் என்பது கற்பனைக்கு எட்டாததாகவே உள்ளது. அதாவது, பட்டியல் சாதிகளுக்கிடையே ஏற்படுத்த இயலாத, அல்லது ஏற்படுத்த விரும்பாத ஒற்றுமையையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், கலப்பு மண உறவையும் எவ்வாறு தலித்தியம் பேசுபவர்கள் பிற்படுத்தப்பட்ட, மற்றும் ஏணைய பிற ‘ஆதிக்க’ ‘உயர்’-சாதிகளுக்கிடையே ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது ஒரு முக்கிய கேள்வியாகும்.
ஆக, 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் வெறும் 46,73,034 சாதிகள் இருப்பது போதாது. மாறாக, 130 கோடி தனித்தனி சாதிகள் வேண்டும். ஆம், ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு சாதியாக ஒட்டுமொத்த மனித இனத்தையும் தன்னில் பிரதிபலிக்கிற உளவியல் முதிர்ச்சி பெற்றவனாக மலர்தல் வேண்டும்.
பொதுவாக இரண்டு மனிதர்கள் தங்களுக்கிடையே பூசல்களின்றி, இணக்கமாகவும், நட்பாகவும் இருப்பதென்பது கடினமான விசயமாகும். அதே போக்கு தான், இரண்டு சாதிகளுக்கிடையேயும், இரு குழுக்களிடையேயும், இரு நாடுகளுக்கிடையேயும் நிலவுகின்றன. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பது, கூட்டமாக, கும்பலாக பெரிதாக வேறுபாடு இன்றி வாழ்ந்த நிலையிலிருந்து, சிறு சிறு இனக் குழுக்களாக இணைந்து, பிறகு அமைப்பாக்கப்பட்ட சமுதாயமாக பல்வேறு வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கற்பித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய நிலையைக் கடந்து, தனித்துவமிக்க, சுதந்திரமான, உளவியல் ரீதியாக ஒவ்வொருவரும் தன்னில் முழுமையான தனிமனிதனாக மலர்ந்து உய்வடைவதை இலக்காகக் கொண்டதாகும்.
மானுட வாழ்வின் அசலான மதிப்பீடுகள் பற்றியும், வாழ்வின் உண்மையான குறிக்கோள் மற்றும் இலக்கு பற்றியுமான புரிதல் இல்லாத காரணத்தினால் உலகெங்கும் மனிதர்கள் செயற்கையும் போலியுமான, அதாவது, அசலான வாழ்வியல் மதிப்பீடுகளுக்குப் புறம்பான, பொருளியல் மதிப்பீடுகளை அடையும்பொருட்டு பேராசை கொண்டு ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போட்டியிட்டுக் கொண்டு பூமியின் மீது நரகத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறோம். மானுட வாழ்வின் அசலான குறிக்கோள் மற்றும் இலக்கு பற்றிய புரிதலில் இருந்து நோக்குங்கால், மனிதனானவன் வெறுமனே இங்கு சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், சகோதரத்துவத்துடனும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் கூடி வாழ்வதற்காகத் தோன்றியவனாகத் தெரியவில்லை.
தலித் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகள்
தலித் பிரச்சினைக்கான தீர்வாக 'சாதி ஒழிப்பு' முன்வைக்கப்படுகிறது. அதற்கான வழிகளென மூன்று அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை : 1. மதமாற்றம் 2. புறமண முறை 3. சமூகநீதி ஆகியவையே.ஆனால், இவ்வழிகளில் இதுவரை ஓரளவிற்கேனும் சாதி ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்றால் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே பதிலாகும். அதே நேரத்தில், சாதியரீதியான தீண்டாமைக் கொடுமைகள், பாகுபாடுகள், அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் ஆகியவை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு குறைந்துள்ளது எனலாம். இந்த மாற்றம் வேறு வழிகளில் - பாட்டாளி வர்க்கப் போராட்டங்கள், சாதியத்திற்கு எதிரான தொடர் போராட்டங்கள், மற்றும் சட்டங்கள், கல்வி, விஞ்ஞானத் தொழில்நுட்பம், மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகியவற்றின் வாயிலாக நிகழ்ந்தவையே ஆகும்.
மதமாற்றத்தைப் பொறுத்தவரை அது சாதி ஒழிப்புக்கு மட்டுமல்ல, அறியாமை, சுயநலம், பொறாமை, பேராசை, .. போன்ற எவ்வகைக் குணக்கேடுகள் ஒழிப்புக்கும் உதவாது. மதமாற்றம் என்பது வெறும் அடையாள மாற்றமே. மதம் மாறிக்கொள்ளலாம்; ஆனால் சாதி மாறமுடியாது. அதற்கு சாதியச் சமூகம் இடம்தராது. மத அடையாளத்திற்கு முந்தையது குழு-அடையாளம் எனும் சாதி அடையாளம். எவ்வொரு இனக்குழுவிற்குள்ளும் தொழில் பிரிவினைகள் கறாராக உருவானபோதே சாதிகளும் உருவாகிவிட்டதாகத் தெரிகிறது. எவ்வொரு இனக்குழுவும் ஒருபடித்தானதாக (Homogeneous) என்றுமே இருந்ததில்லை. ஒரு இனக்குழுவுக்கான தலைமை தோன்றியபோதே அதிகாரம் என்பதும் தோன்றிவிட்டது; அதைத் தொடர்ந்து படிநிலையும் (Hierarchy) உருவாகத் தொடங்கிவிட்டது எனலாம். பொதுச்சமூகம் என்பது பல சாதிகளின் கூட்டிணைவே. இன்றைய அளவில் சமூகம் என்பது பல சாதிகளைக் கொண்ட பல்வேறு இனக்குழுக்களின் கூட்டிணைவு ஆகும். சமரசம் உலாவும் பொதுச் சமூகம் என்று ஒன்று என்றுமே இருந்ததில்லை; மாறாக, சாதிகளின் அசமத்துவச் சமூகம்தான் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.
மத அடையாளத்தை போலவே, மொழியின அடையாளத்துக்கும் முந்தையது சாதி. ஒரு மொழியினம் என்பது பல்வேறு சாதிகளைக் கொண்ட ஒரு சமூகத்தின் கருத்து மற்றும் செய்திப் பரிமாற்றத்திற்கான பொதுச் சாதனமாகும். தமிழ் மொழி என்பது எவ்வொரு குறிப்பிட்ட (ஆதிக்க) -
சாதிக்கான சொத்து அல்ல. அவ்வாறே தமிழ்த் தேசியம் என்பதும் எவ்வொரு குறிப்பிட்ட சாதிகளின் தேசியம் அல்ல. ஆகவே, 'சாதியை ஒழித்தால் தான் தமிழ்த்தேசியம் சாத்தியம்' என்று சொல்வது நடைமுறைச் சாத்தியமற்றது. "தமிழால் இணைவோம்!" என்ற அறைகூவல், நாம் சாதிகளாகப் பிரிந்து கிடக்கிறோம் என்கிற எதார்த்தத்திற்கு எதிராகவும், வேறொரு தேசியத்திற்கு எதிராகவும் ஒருங்கிணைவதன் அவசியத்தின்பால் எழுகிறது. ஏனெனில், நாம் தமிழால் பிரிந்திருக்கவில்லை. இந்த உரையாடலும்கூட நம் அனைவருக்கும் பொதுவான தமிழால்தான் சாத்தியமாகியுள்ளது. இந்த உரையாடலின் விளைவாக நாம் தொடர்ந்து பிரிந்திருக்கத்தான் போகிறோமா, அல்லது இணைவதற்கு இசைகிறோமா என்பதற்கு தமிழ் பொறுப்பாகாது. தமிழைப் பேசிக்கொண்டே நாம் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கலாம், அல்லது சமாதானமாகவும் போகலாம். ஏனெனில், மனிதனுடைய அறியாமையும், இச்சை நாட்டங்களும், விருப்பத் தெரிவுகளும், கீழியல்புகளும் மொழியறியாது. அவை எவ்வகை நெறிகளுக்கும் கட்டுப்படாது.
அடுத்து, சாதி ஒழிப்புக்கான இன்னொரு வழியாக புறமண முறை (கலப்புத் திருமணங்கள்) உதவுமா, இதுவரை உதவியிருக்கிறதா, இனியும் சாத்தியமா என்பதை ஆராய்வோம். இதுவரை நிகழ்ந்த கலப்புத் திருமணங்கள் என்னக் காரணங்களால், எவ்வகைச் சூழ்நிலைமைகளால் நிகழ்ந்தேறின என்பது ஆய்வுக்கும் விவாதத்துக்கும் உரியதாகும். கலப்புத் திருமணம் என்பது ஒரு கோட்பாடு ஆகும். கலப்பற்ற தூய சாதி, தூய இனம் என்று எவ்வொரு சாதியும், இனமும் இல்லை என்பது உண்மையே. ஆனால், சாதிக்கலப்பும், இனக்கலப்பும் எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நிகழ்ந்தன? சாதியும், சாதிக்கலப்பும் எவ்வகைக் கோட்பாட்டின் அடிப்படையிலும் தோன்றுவதில்லை என்பதுதான் உண்மை. ஆகவே அவற்றை எவ்வொரு கோட்பாட்டைக் கொண்டும் கட்டுப்படுத்தவோ, உருவாக்கவோ, அழிக்கவோ இயலாது. இந்த வினாடியில் தமிழ் நாட்டில், அல்லது இந்தியாவில் எங்காவதொரு மூலையில் புதிதாக ஒரு சாதி முளைத்தெழக் கூடும்.
அடுத்து, சமூக நீதியை சாதி ஒழிப்புக்கான ஒரு வழியாகக் காண இயலுமா? சமூக நீதி சாதியை ஒழித்ததா, அல்லது வளர்த்ததா? இக்கேள்விகள் சற்று சிக்கலானவை. நீண்ட நெடுங்காலமாக சமவாய்ப்பு மறுக்கப்பட்டு சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியமே, ஆனால், சாதி அடிப்படையில் அமைந்த இட ஒதுக்கீடு எவ்வாறு சாதியை ஒழிப்பதாக அமையக்கூடும்? மேலும், கடந்த காலங்களில் சம வாய்ப்பு மறுக்கப்பட்ட சாதிகளுக்கு இன்று இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்றால், இன்று நிகழ் காலத்தில் போட்டியிடுவதற்கான சமவாய்ப்பு திறந்திருந்தாலும், அதில் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போகின்ற எல்லா சாதிகளுக்கும் நாளை, வருங்காலத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படுமா?
சமூக நீதி என்பது குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமானதா, அல்லது எல்லா சமூகங்களுக்கும் சமநீதி வழங்கக்கூடியதா? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிப்பதற்கும், அனைவருக்கும் சம நீதி கிட்டுவதற்குமான வழிகளைக் கண்டடைவதற்கும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
பொதுமணம், அகமணம், புறமணம்
ஆதியில் மனித இனமானது பொது மண முறையிலேயே இனப்பெருக்கம் செய்திருக்க முடியும். அதாவது, பெண், அல்லது மணைவி என்பவள் பொதுவானவளாக இருந்திருக்கவேண்டும். ஏனெனில், திருமணம் எனும் சடங்கு அல்லது நிறுவனம் அப்போது தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, ஆதியில், புறமண முறையே இருந்தது என்று ஊகிப்பது பொருத்தமற்றது. பிறகு, மனிதர்கள் சிறு சிறு குழுக்களாக, சமூகங்களாக வாழத்தொடங்கிய போதிலிருந்து தான், அதிலும் முக்கியமாக, தொழில் பிரிவுகள் ஏற்பட்டு ஒரு குழுவிற்குள்ளாகவே உருவான பல சிறுசிறு குழுக்களாக, சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட போதே, அகமண முறையும் தோன்றியிருக்க முடியும். இதற்கு மாறாக, அகமணமுறையால்தான் சாதிகள் தோன்றின என்று சொல்வது பொருத்தமற்றது. ஒரு குலம் அல்லது சாதிக்குள்ளாகவே திருமணம் செய்துகொள்ள முதலிடத்தில் குலமும், சாதியும் தோன்றியிருக்க வேண்டும். ஆக, சாதி முதலில், பிறகு அதைத் தொடர்ந்து அகமணமுறை என்பது மட்டுமே தர்க்கப் பொருத்தமுள்ளதாக இருக்கமுடியும்.
புறமணமுறை பற்றி பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. ஏனெனில், அது ஒரு திறந்த நிலை விருப்பத் தெரிவு (An Open Option) என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல. புறமணமுறை வழியாக நாம் சாதியை ஒழிக்க முடியும் என்பது ஒரு கோட்பாடு, ஒரு சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமென்ற ஒரு கனவு, அவ்வளவே. ஒருவேளை, புறமணமுறையானது பரவலாக பின்பற்றப்பட்டு ஒரு கட்டத்தில் சாதி முற்றாகவே அழிந்துபோகலாம்! ஆனால், வேறு வகை ஏற்றத்தாழ்வு முறைகளை மனித இனம் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடும், அல்லது புதிதாகக் கண்டுபிடித்திடக்கூடும்.
அடுத்து, காதல் மணம் குறித்து நாம் தனியே ஒரு கட்டுரையில் விலாவாரியாக விவாதித்தாக வேண்டும். காதல் புனிதமானதா, அல்லது மலினமானதா என்பதை வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் கதைகளிலிருந்து இன்றைய தெருமுனைக் காதல் விவகாரங்கள் வரை நுணுகி ஆராய்ந்து விடை காணப்பட வேண்டும்.
முக்கியமாக, தலித் பிரச்சினைக்கு யாதொரு மந்திரத்தீர்வையும் எதார்த்தபூர்வமற்ற சாகசத் (ரொமாண்டிக்) தீர்வையும் தேடுவது பலனளிக்காது. சாதி ஒழிப்பு என்பது ஒரு லட்சியத் தீர்வு என்கிற அளவில் கொண்டாடித் தீர்க்கலாம். சாதி என்பது மனிதர்களுக்கு வெளியே இருப்பதல்ல; அது மனிதர்களுக்குள்ளே ஊறிக் கலந்த ஒன்று. ஆக, சாதியை அழிப்பது என்பது ஒருவகையில், மனிதர்களை அழிப்பது என்றே பொருள்படும். அப்படியானால், மனிதர்கள் ஏன் தன் சகமனிதர்களை அடக்கவும், ஒடுக்கவும் அடிமைப்படுத்தவும் சுரண்டவும், மனிதாபிமானமற்ற வகையில் நடத்துவதும் நிகழ்கிறது, இவை எப்படிச் சாத்தியமானது என்று கேட்பதில் நியாயம் உள்ளது. நாம் அழிக்க வேண்டியது மனிதர்களிடமுள்ள மனிதாபிமானமற்ற தன்மையைத் தானே தவிர மனிதர்களை அல்ல.
தலித் பிரச்சினையைத் தீர்ப்பதில் தலித்துக்களின் பங்கு
தலித் பிரச்சினையை தீர்ப்பதில் தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர்களின் பங்கும் சமமானது! ஒரு முறையான, முழுமையான தீர்வுக்கு இரு தரப்பினரும் முன்வரவேண்டியது அவசியமாகும். பரஸ்பரம் குற்றச்சாட்டுகளோ, நிபந்தனைகளோ, பாரபட்சமான முடிவுகளோ, பேரம் பேசுதலோ இல்லாமல், நீதியின் அடிப்படையிலும், வாழ்வியல் விதிகளின்படியும் தீர்வு காண்பது முக்கியமாகும்.
முதலிடத்தில், தலித்துகள் தங்கள் பிரச்சினை குறித்த தெளிவான பார்வையின் மீது தங்களது நிலைபாடுகளை எழுப்புவது அவசியமாகும். நாம் ஒரு சமத்துவ சமுதாயத்தை எதிர் நோக்கும் அதே நேரத்தில், தமிழ் நாட்டில் பட்டியல் சாதிகள்- 76, பட்டியல் பழங்குடியினர்-36, ஆக மொத்தம் 112 ஒடுக்கப்பட்ட சாதிகள் உள்ளன. தமிழக தலித் வரலாற்றைப் பார்த்தால் தொடர்ந்து தலித் உட்சாதிகளுக்கு இடையே, குறிப்பாக அதன் உட்பிரிவுகளுக்கிடையே ஒரு பகை முரணே இருந்து வந்துள்ளது. அவர்களை ஏன் ஒருங்கிணைக்க முடியவில்லை? தலித் ஒற்றுமை என்பது தமிழகத்தைப் பொருத்தமட்டில் இன்றும் ஒரு கனவாகவே உள்ளது. சாதிய அடுக்குமுறையைத் தலித்துகளாலும் மீற முடியாத சூழல் இருக்கிறதே ஏன்? ஆக, பட்டியல் சாதிகளுக்கிடையே ஏற்படுத்த இயலாத, அல்லது ஏற்படுத்த விரும்பாத ஒற்றுமையையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், கலப்பு மண உறவையும் எவ்வாறு தலித்தியம் பேசுபவர்கள் பிற்படுத்தப்பட்ட, மற்றும் ஏணைய பிற உயர்-சாதிகளுக்கு இடையே ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது ஒரு முக்கிய கேள்வியாகும். ……..
*
குறிப்புகள்:
இக்கட்டுரை, தொடரும் ஆய்வுப்பூர்வமான கண்டுபிடிப்புகளின் ஒரு சிறு பகுதியாகும். அதேநேரத்தில், இக்கட்டுரை யாதொரு கோட்பாட்டையும் முன்வைக்கவில்லை; இதில் சொல்லப்பட்ட எதுவும் முடிந்த முடிவானவை என்று கருதக்கூடியதும் இல்லை. இது நம்முன் உள்ள எரிகின்ற பிரச்சினையைப் புரிந்துகொள்ளுவதற்கான ஒரு உரையாடலின் சிறு தொடக்கமே.
இக்கட்டுரையில் 'நான்' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சில இடங்களில், 'நாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் பிரதானமாக, அவசர அவசியம் கருதி இக்கட்டுரை தலித் அல்லாதவர்களிடம் பேசுகிறது. அதேவேளையில், அந்த 'நாம்' என்ற குடைக்குள் புரிதலுள்ள, அதாவது, சரியான கருத்துள்ள ( Right- Minded persons) எவரும் இணைந்து கொள்ளலாம்!
மா.கணேசன்/ நெய்வேலி / (28-07-2019 - 04.06.2019)
<.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.>< .><.><.><.><.><.><.><.><.><.>