Sunday, 18 August 2019

காதல் கண்ணில்லாதது! சாதி கண்மூடித்தனமானது!



காதலிக்க மறுத்தால் காதலிப்பவன் வெட்டுகிறான்! 
ஓடிப்போய் கல்யாணம் பண்ணினால் 
அப்பன், வெட்டுகிறான்!  
ஏன்! தம்பியும், தாத்தாவும் வெட்டுகிறான்கள்!
பாசம் கொட்டி வளர்த்த மீதச்சொந்தங்கள் எங்கே?
அந்த ஒருவனுக்காக அத்தனை பேர்களின் அன்பையும் 
நேசத்தையும் வெட்டிச் செல்ல துணிந்தவள் மீது 
வேண்டாமா ஆளுக்கு ஒரு வெட்டு!

அக்காள் ஓடிப்போனால் தங்கையின் திருமணம் பாழ்!
ஓடிப்போய் மணம்புரிந்த மகளை ஏற்கும் தந்தையை 
வெட்டியே ஒதுக்கும் மொத்த சாதியும்-சனமும் 
மகளை கொல்ல மனமில்லாத தந்தை தூக்கில் 
தொங்கிவிடுகிறான்! தாயோ விஷம் குடிக்கிறாள்!
கௌரவமும் இல்லை! ஆணவமும் இல்லை!
மூடர்காள்! பாசப்போட்டியில் தோற்றதன் விலை கொலை!

பெற்றவனுக்கு பெண் வெறும் உடமையா? 
அவள் பொக்கிஷம் - தன் உடமையின் உடமை தந்தை!
கிளியைப் பெற்று வளர்த்து திருட்டுப்பூனையிடம் 
கொடுக்க எந்தத் தகப்பன் சம்மதிப்பான்? 
திருடன் திருடன்தான் அவன் எச் சாதியாயினும்
தன் சாதியான் என்பதால் சும்மா விட்டுவிடுவோமா?
தன் கண்ணும், உயிருமான மகளைத் தான் 
உயிரோடிருக்கையில் தானமாகக் கொடுப்பானா?
காதல் என்பது தனதல்லாததை ஆசை கொண்டு 
தனதாக உடமை கொள்வதல்லாமல் வேறென்ன?

காதல் தன்னில் முதலும் முடிவுமானதா? 
இயற்கையான பருவக் கிளர்ச்சி காதல்
அதற்கு இணங்கிப்போவதும் இயற்கையே!
அதில் புதுமையும் இல்லை புனிதமும் இல்லை!
இயற்கையானது எதுவும் இறுதியானதல்ல!
நெறிப்படுத்தாத இயற்கை அநாகரிமானது!
சுதந்திரக் காதல் தறிகெட்டழியச் செய்யும்!
காதலிப்பதற்கு ஒரு தகுதியும் வேண்டாம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் போதுமென்றால்
மீண்டும் நாம் வனத்திற்கே திரும்பிடலாம்!
சமுதாயம், பண்பாடு, நாகரிகம் யாவும் எதற்கு?

                               ***

பொதுவாக, கலப்பு மணங்களுக்கும் சாதி மறுப்பு மணங்களுக்கும், குறிப்பாக காதல் திருமணங்களுக்கும், தடையாக நிற்பது வெறும் சாதி மட்டுமே அல்ல. பல்வேறு தகுதிகள் - கல்வித் தகுதி, உத்தியோக நிலை, சமூக அந்தஸ்து, சொத்து மற்றும் பொருளாதார நிலை போன்றவையும் அரிவாள்களுடன் வழி மறித்து குறுக்கே நிற்கின்றன. ஒரே சாதிக்குள்ளேயே என்றாலும் காதல் திருமணங்கள் மேற்சொன்ன தகுதி நிலைகளை வெற்றி கொள்ளாமல் சாத்தியமில்லை. 

பொதுவாக காதலுக்கும், காதல் திருமணங்களுக்கும் சாதிச் சமூகங்கள் மட்டுமல்ல, உலகளாவிய எல்லா சமூகங்களும் எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கின்றன. காதல்ஜோடிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் கடுமையான எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அதுவே, வெவ்வேறு சாதிகளாக இருப்பின், ஒருவேளை, அவர்களின் பெற்றோர்கள் அனுமதிக்கத் தயாராக இருந்தாலும் உறவினர்கள், சொந்த பந்தங்கள் அனுமதிப்பதில்லை. பெரும்பாலான காதல் திருமணங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல், அவர்களின் அனுமதியில்லாமல்தான் நடந்தேறுகின்றன. அதில், சாதி மாறித் திருமணம் செய்துகொள்வதென்பது முற்றிலுமாக தடுக்கப்பட்ட, தகாத விவகாராமாகவே கருதப்படுகின்றது. 

சில அறிவுஜீவிகள், கவிதை நேசர்கள், விடலைத் தனமான முற்போக்குச் சிந்தனயாளர்கள் "காதல் வலியது... சாதி கொடூரமானது!" என்றெல்லாம் பேசித் திரிகின்றனர். இவர்கள் சமூகத்தின் எதார்த்த நிலைகளையும், சாதி மாறி மணம்புரிவதனால் ஏற்படும் கொலை பாதாகமான பின்விளைவுகளையும் அறியாமல், அறிந்தும் கணக்கில் கொள்ளாமல், சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதாக எண்ணி காதல் திருமணங்களை ஆதரித்து மேடைகளில் முழங்கிவிட்டு இறங்கிப் போய்விடுகின்றனர். 

காதல் என்ற பெயரில் சாதி மீறி நிகழும் திருமணங்கள் சாதியின் பெயரால் எதிர்க்கப்படுவதும், சொந்த மகளே கொல்லப்படுவதும்; மகள் தேடிக்கொண்ட மணாளன் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதும் பெரும் சோக நிகழ்வுகளே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்நிகழ்வுகள் இரண்டு மரபுகளுக்கும் இடையே  நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தீராப் போரின் விளைவுகளே. ஒன்று சாதி மரபைக் காப்பாறும் மரபு. இன்னொன்று அம்மரபை மீறத் துடிக்கும் காதல் மரபு. இப்போர்களில், என்றுமே சமாதானத்திற்கு இடமில்லை என்ற நிலையே தொடர்வதாக உள்ளது. இவ்விரு மரபுகளும் எப்போதுமே எவ்வகைச் சட்டங்களையும், விதிமுறைகளையும், நியதிகளையும், கட்டுப்பாடுகளையும்  மதிப்பதில்லை. சாதி என்பது தன்னளவில் தானே விதியாக (A LAW UNTO ITSELF) உள்ளதாகும். சாதி எனும் விதி எப்போதும் தனி நபர்களை குழுவின் உறுப்புக்களாக மட்டுமே பாவிக்கும் தன்மை கொண்டது. அது தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, தனது பக்கத்திலிருந்து, அவ்வப்போது சில தனி நபர்களை போர்ப்பலியாக இழக்கத் தயங்குவதில்லை. சில சமயங்களில், அது தனது எதிரணியின் ஒரு ஊரையே எவ்வித உறுத்தலுமின்றி தீக்கிரையாக்கி விடுகிறது. இவை யாவும் போரின் இயல்பான நிகழ்வுகளாகக் கொள்ளப்படுகின்றன. 

மேலும், இவ்விசயத்தில், ஒரு சாரார் காதலின் பக்கம் நிற்பதாகவும், இன்னொரு சாரார் சாதியின் பக்கம் நிற்பதாகவும் தெரிந்தாலும், காதலின் பக்கம் நிற்பவர்கள் உண்மையில் அவர்களுடைய சாதியை முன்வைத்துத் தான் நிற்கிறார்கள். சாதியை ஒழிக்கவேண்டும் என்று தீவிரமாகப் போராடுபவர்கள் உண்மையில் தங்களுடைய சாதியின் (மற்றும் அதனுடைய உட்சாதிகளின்) பிரதிநிதிகளாகத்தான் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களை ‘சாதியற்றவர்கள்’ என்று அறிவித்துக்கொண்டாலும் தங்கள் சாதியின் பக்கமே நிற்கிறார்கள். காதலை அவர்கள் சாதி ஒழிப்புக்கான ஒரு ஆயுதமாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. ‘சாதி ஒழிப்பு’ என்பது வரலாற்றில் மறுக்கப்பட்ட அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் கைப்பற்று வதற்கான ஒரு போர் முழக்கமே. இந்த அதிகார-ஆதிக்கச் சமநிலையை அடைவதைத் தான் அவர்கள் ‘சமத்துவம்’ என்றழைக்கிறார்கள். இதைத்தான் அவர்கள் சாதி ஒழிப்புப் போராட்டம் என்கிறர்கள்.

உண்மையிலேயே இது ஒரு போர்தான். ஒருதரப்பு தங்களுடையதை “சாதி ஒழிப்புப் போராட்டம்” என்கிறது. இன்னொரு தரப்பு தங்களுடையதை “சாதி காப்பாற்றும் போராட்டம்” எனக் காண்கிறது. இது ஒரு முடிவேயில்லா போராகவே தெரிகிறது!

ஆகவே, காதல் என்பது  எப்போதும் ஒரு தனி நிகழ்வாக, ஏதோ கல் மீது கால் தடுக்கி கீழே விழுவதைப்போன்ற சாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படாமல், அது எங்கே எவ்விடத்தில் எவர் எவருக்கிடையே நிகழ்கிறது என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. சாதியானது மேலோட்டமான பரஸ்பர பரிவர்த்தனைகளுக்கும், பரிமாற்றங்களுக்கும், நட்புக்கும் இடையெ குறுக்கிடுவதில்லை. மாறாக, திருமணம் போன்ற ஒன்றுகலக்கும் விசயத்தை மட்டுமே அது தீவிரமாக எதிர்க்கிறது. ஏனெனில், சாதியை இழப்பது என்பது தற்கொலைக்குச் சமமானதாகக் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் கொலைகள் இங்கு தற்கொலைக்கு மாற்றாக, சாதியைக் காப்பாற்றுவதற்கான காவுகொடுக்கும் சடங்காக மேற்கொள்ளப்படுகின்றன. இக்கொலைகளை ஆணவக்கொலைகள், கௌரவக்கொலைகள் என்றழைப்பது சாதியப் பார்வையில் பொருத்தமற்ற பெயர்களாகும்.  

காதல் திருமணங்கள், கலப்பு மற்றும் சாதிமறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றை ஏற்கும் முதிர்ச்சியும், மனப்பக்குவமும் சாதியில் ஊறிய இந்திய மற்றும் தமிழகச் சமூகங்களுக்கு உள்ளனவா என்பவற்றையெல்லாம் ஆராயாமல், கவனத்தில் கொள்ளாமல், அத்தகைய திருமணங்களை ஆதரித்துப் பேசுவதும், ஊக்குவிப்பதும் ஆபத்தான விவகாரம் என்பதை சாதி மறுப்பாளர்கள் அறிந்தும் அறியாதவர்களாக நடந்துகொள்வது சமூகப் பொறுப்பற்ற செயலாகும். சமூக மாற்றம், புரட்சி எல்லாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் வேண்டுமானால் இனிமையாக இருக்கும். ஆம், காதலும் அப்படித்தான்; கவிதைகளிலும், கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டுமே கொண்டாடப்படும். நிஜ வாழ்க்கையில், சமூகக் களத்தில் காதல் என்பது விலக்கப்பட்ட விஷக்கனியாகவே இன்றும் பார்க்கப்படுகின்றது! அதற்கான காரணங்களும் இல்லாமலில்லை.

காதல் புனிதமானது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அத்தகைய காதல் கவிதைக்கும், கதைக்கும், காவியத்துக்கும் மட்டுமே சொந்தமாகும். காதல் என்பது எல்லோரையும் அசைவிக்கும் ஒரு ரகசிய உணர்ச்சி (Secret Feeling) ஆகும். ஆகவேதான், என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததுமாக காதல் கதைகள் விளங்குகின்றன. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. ஆனால், அக்காதலை கதைக் களத்திலிருந்து சமூகக் களத்திற்கு கொண்டுவருவது என்பது ஆபத்தானது.

ஏனெனில், எல்லா வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் கதைகளும் சுபமாக முடிவடைந்தவை அல்ல. பெரும்பாலான காதல் கதைகள் சோகத்தில் முடிவடைந்தவையே; அதனால்தான் என்னவோ, காதல் என்பது எப்போதும் - வெற்றி, தோல்வி  என்பதைக் கடந்த - ஈர்ப்புமிக்க ஒரு சொல்லாகவும், தீவிர உணர்ச்சியாகவும் விளங்குகிறது. 

காதல் மலினமானது. ‘கண்டவுடன் காதல்!’ என்றொரு வகை உள்ளது; அதாவது, கண் உள்ள எவருக்கும் காதல் வரும் எனும் வகை இது! அடுத்து, வெளித்தோற்றத்தை வைத்து  வரும் காதல்! அடுத்து, ‘இந்த வயதில் மட்டும் தான் காதல் வரும் என்பதில்லை!’ எனும் வகை! அடுத்து, ‘எந்த நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும் காதல்!’ அதாவது, ஷாஜஹானுக்கு ஏற்பட்டதுபோல அடுத்தவனின் மனைவி மீது கொள்ளும் காதல்! இவை யாவும் மலினத்தின் வகைப்பட்டவையே. 

நமது ஊர்த் தெருக்கள் ரோமியோக்களாலும், ஜூலியட்களாலும் நிரம்பி வழிகிறது! இதற்கு நாம், காதலைப் போதிக்கின்ற திரைப்படங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். மேலோட்டமான பார்வையில், காதலுக்கு யாதொரு அடிப்படையும், தகுதியும்  தேவைப்படுவதில்லை என்பதாகத் தெரியும். ஆனால், அது உண்மையல்ல! பொதுவாக, காதல் என்பது மனம் சார்ந்தது என்று சொல்வர். அது எத்தகைய மனம், அதாவது அந்த மனம் எதைச் சார்ந்து, அல்லது தழுவி நிற்கிறது என்பதை எல்லோரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. மனம் என்பது ஒரு புதிர் என்று சொல்லலாம்; ஆனால், விடுவிக்கமுடியாத புதிர் அல்ல. மனம் இருவகை நிலைகளில் இயங்குகிறது. முதலாவது வகை விழிப்படையாத, அதாவது, முழுமையாக உருப்பெறாத மனம். இரண்டாவது, விழிப்படைந்த மனம். 

‘விழிப்படையாத மனம்’ பெரிதும் உடலை (உடலின் இயல்பூக்கிகளை, இச்சைகளைத்) தழுவி நிற்பதாகும். இதற்கு மாறாக, ‘விழிப்படைந்த மனம்’ என்பது உடலையோ, உலகையோ, உலகப் பொருட்களையோ சார்ந்திராமல், அதாவது அவற்றுடன் ( அல்லது எவற்றுடனும்) தன்னை 
அடையாளப்படுத்திக் கொள்ளாமல், தனது சொந்த, அசலான தன்மையை உணர்ந்தறியும் வழியைத் தழுவிக்கொள்வதும், அவ்வழியே மெய்ம்மையை அடைவதுமே ஆகும். மெய்ம்மைக்குக் குறைவான எதுவும் மனித வாழ்வை முழுமைப் படுத்தாது, மனிதனை விடுதலைப் படுத்தாது!

விழிப்படையாத மனத்தைக் கொண்டவனும், மனமற்ற எலியும் ஒன்றுதான்! எலிக்குக் காதல் ஏற்படுகிறது என்பதில் எவ்வொரு விசேடமும் இல்லை, அது வழக்கமானது, இயல்பானது, படு சாதாரணமானது, ஆகவே, மலினமானது! ஆக, இவ்வகைக் காதலைப் போற்றுவதும், கொண்டாடுவதும் அர்த்தமற்றது! 

காதல் குருடானது, காதலுக்குக் கண்ணில்லை என்பதை நிஜமாக்கிடும் வகையில், காதலிப்பவர்களும் தங்கள் குடும்ப நிலவரங்களையும், பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களையும், சுற்றியுள்ள சமூகத்தின் மரபார்ந்த பிற்போக்குத் தனங்களையும் மறந்து, அல்லது மதியாது (பெற்றோர்கள், மற்றும் உறவினர்களின் பார்வையில்)  காதல்வயப்பட்டு விளக்கில் வீழ்ந்த விட்டில் பூச்சிகளாக உயிரை விட்டுவிடத் துணிகின்றனர். 

காதல் நிதானமற்றது. காதல் வயப்பட்ட அந்த தருணத்தில், ஒரு பெண்ணிற்கு ஒரு கரடியின் மீது கூட காதல் பிறந்துவிடும், அது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்பது உளவியலாளர் கூற்று. இலக்கியத்தில் போற்றப்படக்கூடிய காதல் நிஜத்தில் பின்பற்றப்படுவதாக அமைவதில்லை. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதற்கு காதல் மட்டுமே வழி என்பதில்லை; அவ்வாறே சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கும் சாதி மறுக்கும் காதல் திருமணங்கள் மட்டுமே வழி என்பதுமில்லை.  காதலுடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தொடக்கத்தில் இனிக்கும் காதல், திருமணத்தில் முடிந்த பிறகு வழக்கமான குடும்ப வாழ்க்கையில் மறைந்து போகிறது. “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” ஆக மொத்தம் (60+30=) 90 நாட்களுக்குப்பிறகு காதல் மோதலாகிக் கசந்து போகக்கூடும்! 

காதல் குறுகிய நோக்கம் கொண்டது. “பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்” என்பது பழமொழி. ஆனால், காதல் வந்தால், தாய் தந்தை, சாதி, மதம், குடும்ப நிலைமை,  எல்லாமே பறந்துவிடும் என்பது விபரீதமானது! காதல் சாதி பார்த்துவருவதில்லை, மதம் பார்த்து வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் காதலுக்கு ஒரே ஒரு ஒற்றை நோக்கம் மட்டுமேயுள்ளது; அது காமம் என்பதே! ஆகவேதான் காதல் குருடானது, கண்ணில்லாதது என்கிற உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டியதாகிறது. மேலும், காதலுக்கு சாதியும் கிடையாது, மதமும் கிடையாது, கலாச்சாரமும், பண்பாடும் கிடையாது; அது எவ்வொரு கட்டுப்பாட்டையும் மதியாது என்பதற்கான பிரதான காரணம், அது ஒரு அடிப்படையான பாலியல் இயல்பூக்கி (INSTINCT) என்பதே. இந்த இயல்பூக்கியை நாம் பண்படுத்தவில்லை, கட்டுப்படுத்தவில்லை எனில் மீண்டும் நாம் விலங்கு நிலைக்குத் திரும்பிவிடுவோம்.

தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விசயத்தில், 18 வயதை எட்டிய ஒரு பெண்ணும், 21 வயதை எட்டிய ஒரு ஆணும் தாமே முடிவு செய்துகொள்ளலாம்; அதற்கு சட்டம் இடமளிக்கிறது  என்பதே போதுமானது என்று கொள்வதற்கு அந்த ஆணும், பெண்ணும் தான்தோன்றியாக, அதாவது தாமாகவே உருவாகியிருக்கும் பட்சத்தில் மட்டுமே சரியாக இருக்கும்! ஆனால், எங்கேயும் குழந்தைகள் மரங்களில் காய்ப்பதில்லை; அல்லது எங்கிருந்தோ கொக்குகள் தூக்கிவந்து போடுவதுமில்லை! மாறாக, எங்கும் குழந்தைகள் பெற்றோர்கள் வழியாகவே பிறக்கிறார்கள். பெற்றோர்களும் தனியே எங்கோ எவருமில்லாத தீவினில் வாழ்வதில்லை; அவர்கள் எப்போதுமே ஒரு சமூகக் குழுவில், ஒரு இனக்குழுவின் பகுதியாகவே இருக்கிறார்கள். ஆக, குழந்தைகள்,  வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் விசயங்களிலும், பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் (விருப்பத்தின்படி அல்ல) எதையும் மேற்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக விளங்குகிறது. மணவாழ்க்கை தொடர்பான விசயத்திலும் அதே நியதியைத்தான் பின்பற்றியாக வேண்டும். 

காதல் என்பது தன்னளவிலேயே எல்லாத் தகுதிகளையும் கொண்டதல்ல. அதில் யாதொரு உன்னதமும் இல்லை! அது பருவத்தே தோன்றி கடந்துபோகும் இயற்கையான கிளர்ச்சி. அவ்வளவே. அதற்கு உள்ளாகாதவர் எவருமில்லை. மேலும், காதல் என்பது எல்லா மரபுகளையும், முறைமைகளையும், வழக்கங்களையும் தகர்த்தெறிவதற்கான உரிமம் (LICENCE) பெற்றதல்ல! ஆக, கடந்து போகக்கூடிய உணர்ச்சியில் தங்கி நிலைப்பது தேக்கம்.  கடந்து போக விடுவது பக்குவம், வளர்ச்சி!  

காதல் வயப்படுபவர்களை காதலானது தானாகவே (AUTOMATICALLY) புனிதப்படுத்தி விடுவதில்லை. ஒரு முட்டாளை காதல் ஓரிரவிற்குள் அறிவாளியாக்கிவிடுவதில்லை. காதல் நோய்க்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்துவிட்ட "மஜ்னூன்" என்றழைக்கப்பட்ட கைஸ் இப்னுல் முலவ்வா, கடைசியில் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப்  போல் ஆகிவிட்டான். மக்கள் அவனை "மஜ்னூன்" என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகி விடுகிறது. ஜுனூன் என்னும் அரபிச் சொல் "வெறி கொண்ட பித்து நிலை"யைக் குறிக்கும். மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். 

மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்துவிடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான். இராக் நாட்டிற்குத் தன் கணவனுடன் அனுப்பப்பட்ட லைலா அவனுடன் இணைய மறுத்துவிடுகிறாள். மஜ்னூனின் நினைவில் நோய்ப்பட்டு இறந்துபோகிறாள். இந்தச் செய்தியை அறிந்த மஜ்னூன் பாலைவனத்தில் உயிர் துறக்கிறான். உண்மையில், ஒரு பெண் மீது கொண்ட காதலுக்காக மகத்துவம் வாய்ந்த தனது மனிதப் பிறவியை உணராமலேயே இழந்துபோனவன் மஜ்னூன்.

எவ்வொரு உரிமையும், சுதந்திரமும் முறையான முழுமையான வாழ்க்கைக்கு, முக்கியமாக வாழ்க்கையின் ஒப்பற்ற இலக்கினை அடைவதற்குச் சேவை புரியும் வகையில் அமைந்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒருவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கான சுதந்திரமும், உரிமையும் தனக்கிருப்பதாக வாதிடலாம். ஆனால், சமூகம் அவனை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க பலவழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஒரு வகையில், காதலும் ஒரு போதைதான். ஏன், சாதியும் ஒருவகைப் போதைப் பழக்கம் போன்றதே. அதாவது , சாதி என்பது ஒவ்வொரு இனக்குழுவுக்குமான மரபான அடையாளம் என்ற வகையில் தீங்கற்றதாக கடைப்பிடிக்கப்படும் வரை அனுமதிக்கப்படலாம். 

ஆனால், ஒரு இனக்குழு தனது சாதி அடையாளத்தை முன்வைத்து ஆதிக்க போதையில் பிற குழுக்களை, சமூகங்களை, சாதிகளை அடக்குவது, ஒடுக்குவது, சுரண்டுவது என்பதாக ஆட்டம் போடுவதை அடக்கித்தான் ஆகவேண்டும். அதே நேரத்தில், சாதிய ஆதிக்கத்தை அழிப்பது, அடக்குவது என்பது வேறு; சாதியை அழிப்பது என்பது வேறு. வானளாவிய அதிகாரம், கட்டற்ற சுதந்திரம் என்பது இலக்கற்றது. கடமைகளும், பொறுப்புக்களும் இல்லாமல் சுதந்திரம் என்பது அர்த்தம் பெறுவதில்லை! அதேவேளையில், வாழ்க்கை விதிகளை முழுமையாக நிறைவேற்றும் வழியில் அடையக்கூடிய எல்லையில்லா சுதந்திரம், ஆன்ம சுதந்திரம் என்று ஒன்று உள்ளது. ஆனால், மனிதர்களில் வெகு அரிதாக, வெகுசிலரே மெய்ம்மை மீது காதல் கொண்டு அந்நிலையை எட்டுகின்றனர்.

பலர், உலகெங்கும் ஆணாதிக்கமே நிலவுகிறது. பெண்ணுக்கு சுதந்திரமே இல்லை என்று முழங்கி போராடி வருகின்றனர். உலகில் ஆணாதிக்கம் இல்லையென்றால், பெண்ணாதிக்கம் நிலவும். பெண்ணாதிக்கம் என்ற எதிரிணை (COUNTERPART) இல்லாமல் ஆணாதிக்கம் இருக்கமுடியாது. பெண்ணாதிக்கத்துக்கான எதிர்வினையே (REACTION) ஆணாதிக்கம். ஏதாவதொரு ஆதிக்கம் எப்போதும் இருக்கும். ஆதிக்கம், அதிகாரம் அவற்றுக்கெதிரான போராட்டம் வாயிலாக ஒரு சமநிலை உருவாக்கப்படுவது அவசியம். இல்லாவிடில் வளர்ச்சிக்கான உந்துதல் இல்லாமல் தேக்கம் நிரந்தரமாகத் தங்கிவிடும். தேக்கம் வாழ்வை சுவாரசியமற்றதாக்கிடும். ‘எல்லாப் பிரச்சினைகளையும் ஒழித்துவிட்டு மக்கள் இனிதே வாழ்கின்றனர்’ என்ற நிலை விரும்பத் தக்கதாக இருக்காது! ஆதிக்கம், அதிகாரம் போலவே சுதந்திரம் என்பதும் தம்மளவிலேயே இலக்காக இருக்கவியலாது. சுதந்திரத்திற்காக சுதந்திரம் என்பது மொண்ணையானது! 

குறிப்பு :

இக்கட்டுரை நிலவுகின்ற சமூக எதார்த்தத்தை, அதன் உளவியலை அப்படியே பிரதிபலிக்கிறது. அதில் கட்டுரையாளரின் தனி  நியாயம் எதுவும் முன்வைக்கப்பட்டவில்லை! ஏனெனில், இப்பெரும் தேசத்தில் உள்ள எல்லா சமூகங்களின், அல்லது சாதிகளின் எல்லா தரப்பு நியாயங்களும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். வரலாற்றில் விளைந்த சமூகப் பிரச்சினைகளை, குறைகளை, அநியாயங்களை, அநீதிகளை, நோய்களை வரலாற்றின் போக்கிலேயே தான் களையமுடியும். அதிரடியான, புரட்சிகரமான, சாகச (‘ரொமாண்டிக்’) பூர்வமான தீர்வுகள் மோசமான பின்னீட்டில் (BACKLASH) முடியக்கூடும். 

இக்கட்டுரை, தொடரும் ஆய்வுப்பூர்வமான கண்டுபிடிப்புகளின் ஒரு சிறு பகுதியாகும். அதேநேரத்தில், இக்கட்டுரை யாதொரு சார்புநிலையிலிருந்தும் எழுதப்படவில்லை; இதில் சொல்லப்பட்ட எதுவும் முடிந்த முடிவானவை என்று கருதக்கூடியதும் இல்லை. இது நம்முள்ளே கனன்று கொண்டிருக்கின்ற ஒரு தீராப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான வழிகளைக் கண்டடைவதற்கான ஒரு உரையாடலின் சிறு தொடக்கமே.

*

மா.கணேசன்/ நெய்வேலி/ 15-08-2019 - 18.08.2019
<.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.>< .><.><.>

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...