1) விழிப்பு என்பது ஒருவன் தன்னுள்ளும், தன்னைச்சுற்றிலும் உள்ள இருப்பு எனும் அற்புதத்தைத் தரிசிப்பதாகும். ஒருவன் "இருக்கிறான்!" என்பது ஒரு அற்புதம் அல்லவா! (11.02.2005)
<<•>>
2) ஒருவன் உயிர்த்துடிப்புடன் இருக்கிறான் என்பதை அதனுடைய முழுமைக்கும் உணருவதற்கு வெறும் அன்றாட விழிப்புணர்வைக் கடந்த விழிப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால், அன்றாட விழிப்புணர்வுக்கு நாம் வெகுவாகப் பழகிப்போய்விட்டபடியால், அது ஒரு உறக்க நிலை போலாகிவிட்டது! ஆகவே, இப்போது ஒருவன் இந்த அன்றாட விழிப்புணர்விலிருந்தும் விழித்தெழ வேண்டியுள்ளது!
(இது எத்தகையது என்றால், ஒருவன் காலையில் கண்களைத் தேய்த்துக்கொண்டு இரவு உறக்கத்திலிருந்து விழித்தெழுவது போல, இவ்வாறு விழித்த பிறகு, மீண்டும் ஒரு முறை விழிப்பதைப் போன்றதாயிருக்கும். இதுதான் "இரண்டாவது விழிப்பு"!) (11.02.2005)
<<•>>
3)முதல் விழிப்பு என்பது ஒருவன் புறத்தேயுள்ள உலகை நோக்கி விழிப்பது. "இரண்டாவது விழிப்பு" என்பது ஒருவன் தன்னை நோக்கி, தனது அகத்திற்கு விழிப்பதாகும்!
<<•>>
4) விழிப்பு என்பது, இந்தக் கணத்தில், ஒருவன் உயிர்ப்புடன் இருக்கிறான், சிந்திக்கிறான் என்ற உண்மையை காணுதலும், உணருதலும் ஆகும். இந்தக் காணுதலும், உணருதலும் அவ்வளவு முழுமையாக இருப்பின், அது ஒரு பொங்கி வழியும் அனுபவமாக அமையும். அந்த அனுபவம் ஒருவனது மட்டுப்பாடான சுயத்தின் அனைத்து சுற்றுச் சுவர்களையும் தகர்த்துவிடும்; கிட்டத்தட்ட முதலும் முடிவாகவும். ஆனால், அந்த அனுபவத்தின் உண்மையை முழுத் தெளிவுடன் அவன் பிற்பாடு உணர்ந்தறியக்கூடும்.
5) சாதாரணமாக, நாம் நமது இருப்பை, முன்-அளிக்கப்பட்ட சுய- உணர்வின்* (pre-given state of Self-Consciousness) வழியாகத் தான் உணருகிறோம். ஆனால், இந்த உணர்வானது எவ்வளவு தானியங்கித்தனமானதோ அவ்வளவிற்கு உணர்வற்றதாகும்.
*இந்த சுய-உணர்வானது நமது செயல்படும் மனம் அல்லது மூளையிலிருந்து எழுவதாகும். மனித மனமானது இரண்டிலிருந்து நான்கு வயதின்போது செயல்படத் தொடங்குகிறது எனலாம். அது தானியங்கித்தனமான ஒரு உணர்வாகும். (08.01.2005)
<<•>>
6) விழிப்பு என்பது, இருப்பின் அனைத்து உணர்த்துகோல்களையும் காணுதல், கணக்கில் கொள்ளுதல், நிறைவேற்றுதல் ஆகும். வெறுமனே மேலோட்டமாகத் தெரிகின்ற பக்கங்களையும், விடயங்களையும், நிபந்தனைகளையும் மட்டுமே எடுத்துக்கொள்வதோ, தெரிவுசெய்வதோ அல்லது சூட்சுமமான, அல்லது மறைவான பக்கங்களையும், விடயங்களையும், நிபந்தனைகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பதோ, விட்டுவிடுவதோ அல்ல. (11.02.2005)
<<•>>
7) விழிப்பு என்பது, ஒருவன் தனது இருப்பையும், தன்னைச் சுற்றிலுமுள்ள அனைத்தின் இருப்பையும் உணருவது; அதே நேரத்தில், இருப்பைப்பற்றி உடனடியாக யாதொரு கருத்துகளையும், அபிப்பிராயங்களையும்; குறிப்பாக, குறை-முதிர்வு நிலையிலேயே கொள்கைகளையும், கோட்பாடுகளையும், முடிவுகளையும் பின்னுவது கூடாது. ஏனென்றால், இவையனைத்தும் இருப்பின் அர்த்தத்தை, தரத்தைக் குலைப்பதோடு, அதன் புதிரை சாதாரண ஒன்றாகவும், வெறும் நடைமுறை விவகாரமாகவும் குறைத்து சிறுமைப்படுத்தி விடக்கூடும். (11.02.2005)
<<•>>
8) இங்கு எவரும் இருப்பை ஒரு புதிர் என்று அழைப்பதன் வழியாக அதைப் புதிராக ஆக்கிவிடவில்லை.
எவரும் ஏற்கனவே புதிராகத் திகழும் ஒன்றை இன்னும் புதிராக ஆக்க இயலாது. ஆகவே , புதிரை புதிராக்குவதனாலோ, அல்லது புதிரற்றதாகக் குறைப்பதனாலோ தீர்வு காண இயலாது. வழிபாடோ (மதம் ), அல்லது தருக்க விளக்கங்களோ (விஞ்ஞானம்) அதைத் தொடவோ, கிரகிக்கவோ இயலாது. மாறாக, இருப்பு எனும் புதிர் கூரறிவையும், மனித உணர்வின் மலர்வையும் கோருகின்றது - அம்மலர்வு தான் ஒரே நேரத்தில் அப்புதிரின் புரிதலும், முழுமையடைதலும் ஆகும். (18.02.2005)
<<•>>
9) எது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் மகோன்னதப் புதிரை நோக்கி மனதைத் திறக்கச்செய்கிறதோ அது "வியப்புணர்வு" என்பதுதானாகும். ஆனால், எந்த மனம் எளிமையாகவும், கூருணர்ச்சியுடனும் (sensitive) இருக்கின்றதோ - எந்த மனம் சமுதாயத்தின் கருத்துக்களாலும், அபிப்பிராயங்களாலும், முடிவுகளாலும் கறைப் படுத்தப்படாமலும், கட்டுப்படுத்தப்படாமலும்; மேலும், இரண்டாம்-கை அறிவின் சுமையால் தாழ்ந்து, மந்தமாகாமலும் உள்ளதோ அந்த மனம்தான் வியப்பதற்கும், ஆச்சரியம் கொள்வதற்குமான ஆற்றலைக் கொண்டிருக்கும்.
<<•>>
10) விழிப்பு என்பது, சாதாரண உடல் ரீதியான உறக்கத்திலிருந்து எழுவது அல்ல. மாறாக, விலங்கியல்பிலிருந்து மனித இயல்பிற்கு விழித்தெழுவதாகும்.
<<•>>
11) விழிப்பு என்பது, பரிணாமத் திட்டத்தின் உள்ளார்ந்த அவசியத் தேவையாகும். ஆனால், அது தாமே இயற்கையாக நிகழ்வதில்லை. ஏனென்றால், மனிதனாயிருத்தல் என்பது இயற்கையானதல்ல. ஆகவே, ஒருவன் என்ன விலையானாலும், எவ்வளவு முரண்பாடாயினும், என்ன நிகழ்ந்தாலும் விழித்தேயாக வேண்டும். (16.02.2005)
<<•>>
12) விழிப்புக்கு மாற்றீடாக எதுவுமே இல்லை. அதனுடைய இல்லாமையை எதைக் கொண்டும் ஈடுசெய்திட இயலாது.
13) விழிப்பானது மனித சுயத்தின் தானியங்கித்தனமான இயக்கத்தின் தொடர்ச்சியில் ஒரு உடைப்பை ஏற்படுத்துவதைக் கோருகின்றது.
14) விழிப்படைதல் என்றால், புலன்களின் அனைத்து ஜன்னல்களையும் ; மனதின் அனைத்துக் கதவுகளையும் அகலத் திறந்து வைத்தல் ஆகும்.
<<•>>
15) விழிப்பானது மனதின் கதவுகளை இயற்கையுலகின் அழகு மற்றும் புதிரை நோக்கித் திறக்கவைக்கிறது. அத்துடன், இயற்கையுலகின் போதாமையைக் காண வைத்து அதன் புதிர் முடிச்சை ஆய்ந்தவிழ்க்கும்படி மனதைச் செலுத்துகிறது.
16) ஆனால், இயற்கையின் அழகைத் தரிசிப்பது அதனளவில் ஒரு முடிவு அல்ல. மாறாக, அந்த தரிசனம், ஐக்கியம் என்பது தொடக்கம்தான்- அதைத் தொடர்ந்து புரிந்துகொள்ளுதல் என்பது பின் தொடரவேண்டும். இயற்கையுடனான ஐக்கியம், இயற்கை அழகினைத் தரிசித்தல் என்பது இயற்கை உலகைப் புரிந்துகொள்வதற்கான கதவு போன்றதாகும்.
<<•>>
17) இயற்கையுலகின் அழகு என்பது விண்ணளவு ஆழம் மட்டுமே; அதோடு அதுவும் அதன் ஒரு பக்கம் அல்லது முகப்பு மட்டுமே.
18) ஆனால், மனிதனின் உள்ளிருந்து எது புறத்தேயுள்ள அழகைக் காணும்படி ஆர்வமூட்டுகிறதோ அழகுக்கு பதிலளிக்கிறதோ, அது அழகினின்றும் வேறானதல்ல! ஒருவன் அந்த ஆர்வ- உந்துதலின் மூலத்தை, அதன் ஊற்றுக்கண்ணை அடையும்படி தனது உள்ளாழத்திற்குச் செல்ல வேண்டும். புறத்தேயுள்ள அழகு என்பது கண்ணுக்குத் தெரிகின்ற வெறும் ஒரு நினைவூட்டல் மாத்திரமே, அது அனைத்து-அழகின் ஊற்றை ஒருவன் அடைந்தாக வேண்டும் எனும் தேவையைத் தூண்டுவதற்கானது. அனைத்து-அழகு என்பது இந்த உலகின் மறுபுறத்தில் உள்ளது, அதுதான் உண்மை!
19) இயற்கையின் உலகம், பிரபஞ்சம், எந்த போதாமையைக் கொண்டிருக்கிறதோ, மனிதன் தன்னுள்ளேயும் ஊடாகவும் அதை நீக்கி நிறைவேற்றியாக வேண்டும்! (19.02.2005)
<<•>>
20) விழிப்பு என்பது, அற ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை அல்ல. விழிப்புக்கு யாதொரு முன்-நிபந்தனையை நிறைவேற்றிட வேண்டிய தேவையில்லை, எந்த சுத்திகரிப்பும் தேவைப்படுவதில்லை, யாதொரு நம்பிக்கையும், சாதனாக்களும் (பயிற்சிகளும்) தேவைப்படுவதில்லை - விழிப்புக்கு முன்னேயும் சரி பின்னேயும் சரி. ஏனென்றால், விழிப்புதான் அனைத்தும்.
21) ஒருவன் செய்யவேண்டியது அனைத்தும் - எவ்வாறு அவன் வாழ்கிறான், என்ன செய்கிறான், எத்தகைய குளறுபடியில் அவன் ஆழ்ந்திருக்கிறான், எத்தகைய அசிங்கத்தின் மீது நின்றுகொண்டிருக்கிறான்; இவ்வாறு தான் மேற்கொண்டிருக்கின்ற மேலோட்டமான, அர்த்தமற்ற வாழ்வின் அபாயங்களைக் காணுதல் மட்டுமே போதும்.
22) எப்போது ஒருவன் தான் வாழ்கின்ற வாழ்முறைகளில் அடங்கியிருக்கும் அபாயங்களைக் காண்கின்றானோ, அதுவே போதும்! விழிப்படைய வேண்டியது புத்தர்களல்ல; பாவிகள் என்று சொல்லப்படுபவர்கள், சாதாரண மனிதர்கள், விபரமில்லாதவர்கள், வீணில் வாழும் பணக்காரர்கள், பணக்காரனாக ஆக ஏங்குபவர்கள், ஆக இவர்கள் தான் விழிப்படைய வேண்டியவர்கள். (20.02.2005)
<<•>>
23) விழிப்பு என்பது, ஒருவகை இருப்பிலிருந்து வேறுவகை இருப்பிற்குத் தாவுதல் போன்றது; விருப்பத்துடன் ஒரு வகையை முடிவுக்கொண்டு வந்து இன்னொரு வகையினுள் பிரவேசித்தெழுதல்; பெரிதும் அறியப்படாத உலகிற்காக அறிந்த உலகைத் தியாகம் செய்தல் - இவ்வாறு செய்தல் தற்கொலைக்கு ஒப்பானதும், உணர்வற்ற வகையிலான இருப்பைக் கொண்ட மனித ஜந்துவின் இயல்புக்கு எதிரானதுமாகும்.
24) ஆக, இவ்வகையான, அதாவது இருளுக்குப் பழகி தகவமைந்து போன ஒரு ஜந்துவிற்கு விழிப்பு என்பது தேவைப்படாதுதான். (21.02.2005)
<<•>>
25) அன்றாட உடனடித் தேவைகளைத் தாண்டி, மனிதக் கும்பலின் பார்வைகளையும், வழக்கங்களையும் மீறி வாழ்க்கையைப் பார்ப்பதற்கு அக்கறை கொள்ளாதவர்கள் விரக்தியிலாழ்ந்த நிலையில் விழிப்படைவதற்கான நெம்புகோல்கள், அதாவது, துன்பம், துயரம் போன்ற, அதிர்ச்சியூட்டி அவர்களுடைய ஆதி- உறக்கத்திலிருந்து அவர்களை உலுக்கிடும் வகையிலான தூண்டுகோல்கள் பற்றி பேசிக்கொண்டும் அவற்றைத் தேடிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால், அத்தகைய நெம்புகோல்கள் அவர்களது வாழ்வில் நிரம்பவேயிருந்தும் அவற்றால் ஒரு பயனுமில்லை.
26) உண்மையில், விழிப்படைவதற்கு யாதொரு நெம்புகோலும் தேவையில்லை - ஒருவன் இருக்கிறான், உயிர்ப்புடன் இருக்கிறான், சிந்திக்கிறான் என்ற உண்மையைத் தவிர. ஆம், மனித ஜீவியானவன் விழிப்படைவதற்குரிய முழு உள்ளுறையாற்றலையும் கச்சிதமாக தன்னகத்தே கொண்டுள்ளான், விழிப்படைவதற்கு யாதொரு நெம்புகோலும், சவாலும் தேவையில்லை. ஆம், விழிப்படைதல் ஒன்றுதான் சவால். (21.02.2005)
<<•>>
27) எது விழிப்படைதலைத் தடுக்கிறதென்றால், அது தொடக்க-கால வாழ்வின் நிலைமைகள், நெடுங்காலமாக வாழ்ந்து வந்த வாழ்முறைகள் மற்றும் தன்னைச்சுற்றியுள்ள மனிதக்கூட்டம் ஆகியவற்றுடன் ஒருவன் கொண்டுள்ள அடையாளப்படுத்துதலே.
<<•>>
28) ஆகவே, அனைத்து அடையாளப் படுத்திக்கொள்ளுதலும் - நனவிலி ரீதியாகவும், நனவு பூர்வமாகவும் கடந்த காலத்துடன் கொள்ளும் அனைத்து அடையாளப் படுத்திக்கொள்ளுதலும் முடிவுற வேண்டும். அப்போதுதான் விழிப்படைதல் சாத்தியமாகும். ஏனென்றால், (பிறிதொன்றுடன்) அடையாளப் படுத்திக்கொள்ளுதல் என்பது தனது உண்மையான சுயத்தைக் காணவிடாமல் ஒருவனை மட்டுப்படுத்திவிடும்.
29) விழிப்படைதலைத் தடுக்கின்ற காரணிகள் புறத்தே உலகில், இயற்கையில் இல்லை; மாறாக அவை ஒருவனது அகத்தே தான் உள்ளன.
<<•>>
30) ஒருவனுடைய அனைத்துக் குறைபாடுகளுக்கும் சமுதாயத்தைக் குறைகூறுவது சுலபமானது. ஆனால், சமுதாயத்தின் மீது பழி கூறுவது என்பது ஒருவன் தன்மீதே பழி கூறுவதற்குச் சமமானதே. ஏனென்றால், தனி நபரிலிருந்து வேறானதல்ல சமுதாயம். தனிமனித நிலைமை புறவயமாக்கப்பட்டதும், பெருக்கப்பட்டதும் (The individual condition externalised and multiplied is society) தான் சமுதாயம். தனி மனிதன் என்பவன் சமுதாயத்திலிருந்து வேறுபட்டனல்ல - அவன் விழிப்படையும் வரை. உண்மையான ஆழமான வாழ்க்கையைப் பொறுத்தவரை ஒருவன் சமுதாயத்தை ஒரு நல்ல வழிகாட்டியாகவோ, நம்பகமான மாதிரியாகவோ கொள்ள முடியாது.
<<•>>
31) ஆகவே, ஒருவன் சமுதாயத்தின் ஆணைகளையும் (dictates) வழிகளையும் தாண்டி வாழ்க்கையைக் காணவும் வாழவும் வேண்டும். மேலும், ஒருவன் தனது மட்டுப்பாடான சுயத்தின் (அகந்தையின்) தெரிவுகளையும் கடந்து செல்லவேண்டும். ஒருவன் தனது அகத்தின் ஆழத்திலிருந்து அந்த "வழிகாட்டும் -ஒளி" எழுவதற்காக வழிவிட்டு தன்னிலிருந்து தான் சற்று பின் தள்ளி நிற்பது அவசியம். அதாவது ஒருவன் தனக்குத்தானே "ஒளி" யாக மாறவேண்டும். பிறகு உரிய விழிப்பை அடைந்ததும் ஒருவன் தனக்குத்தானே "விதி"யாக மாறுகிறான் (one becomes a LAW unto oneself).(23.02.2005)
<<•>>
32) விழிப்பு என்பது வெற்றிடத்தில் ஏற்பட இயலாது. அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒரு ஜீவியினுள் தான் ஏற்பட்டாக வேண்டும். ஆனால், அந்த ஜீவியின் இச்சைகள், பசிகள், தூண்டுதல்கள், கவர்ச்சி நாட்டங்கள் யாவும் அகல விழித்திருக்கும்பட்சத்தில் அது ஏற்பட வாய்ப்பில்லை.
33) இயல்பூக்கிகளின் நச்சரிப்புகள், ஆசைகள், இன்பம் துய்ப்பதற்கான தேடல்கள் ஆகியவை மேலோங்கியிருக்கின்ற ஒரு ஜீவியினுள் விழிப்பு ஒருபோதும் நிகழாது. இவ்வனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு கடக்கப்பட்டாக வேண்டும். (24.02.2005)
<<•>>
34) ஒருவனுள் விழிப்பு ஏற்படாத நிலையில் அவன் என்ன செய்தாக வேண்டும்?
35) எவ்வழியிலும் விழிப்பைத் தூண்டவோ, ஏற்படச் செய்யவோ இயலாது. அதோடு அது தானேயும் நிகழாது, ஒருவனுடைய மனவுறுதிச் செயல்பாட்டினாலும் (by the action of will) அது நிகழாது. விழிப்படைவதைத் தடுக்கும் அனைத்துக் காரணிகள் - விருப்பச் சார்புகள், முன்-தீர்மானங்கள், முன்கணிப்புகள் ஆகியவை யாவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும், அவைகளை முடிவுறச்செய்ய.
<<•>>
36) தெரிவற்ற, குறிப்பான நோக்கமில்லாத, திசைப்படுத்தப்படாத பேரார்வ நிலையில் ஒருவன் நிலைக்கும் பட்சத்தில் ஒருவன் மிகுந்த கூருணர்ச்சியுடனும், திறந்த-ஏற்புடைமையுடனும் திகழ்வான்.
<<•>>
37) விழிப்பிற்குத் தடையாக விளங்கும் பிரதான காரணிகள் - மந்தத் தன்மை, தானியங்கித் தனத்தில் சிக்கிய மனம், மனிதனுள் இருக்கும் விலங்கின் ஆதி-நனவிலித் தன்மை, கும்பலுடன் சேர்ந்து செல்லும் மந்தைத் தனம் ஆகியவையே.
<<•>>
38) ஆகவே, ஒருவன் தானியங்கித் தனமாக இயங்குவதை, உணர்வற்ற ரீதியில் தொடர்வதை, பிராணித் தனமான இச்சைகளாலும் இயல்பூக்கிகளாலும் செலுத்தப்படுவதை நிறுத்தியாக வேண்டும். கட்டாயமாக பழைய, பழக்கத்திற்கு அடிமைப்பட்ட போக்கின் தொடர்ச்சியில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியாக வேண்டும்.
39) விசார ஆர்வம்கொண்ட, அதாவது, கேள்வி கேட்கும் மனதை ஒருவன் கொண்டிருப்பானேயானால், பெரிதும் அது அவனது தானியங்கித் தனமான இயல்பிலிருந்து அவனை விடுவித்திடும். ஆனால், ஏற்கனவே தனது சொந்த விருப்பு-வெறுப்புக்களிலும், சமுதாயத்தினால் கட்டுப்படுத்தப்பட்டும், சமுதாய நியதிகளுக்கு இணங்கிப் போவதிலும் தங்கி விட்ட சௌகரியமாக மரத்துப் போன ஒரு மனத்தினாலும், தனது அறிவுஜீவியச் செயல்பாட்டிலும், அறிவுச் சேகரத்திலும், அற்ப-திருப்தியிலாழ்ந்த ஒரு மனத்தினாலும் கேள்வி கேட்கவோ, மெய்ம்மைத் தேடலில் ஈடுபடவோ இயலாது.
40) ஆழமாகக் கேள்வி கேட்பது, அடிப்படையான கேள்விகளைக் கேட்பது என்பது ஏற்கனவே நிலை பெற்ற மட்டுப்பாடுகளை நிலைகுலையச் செய்வதாகும், கட்டுத்தளைகளை அகற்றுவதாகும் - இவ்வழியே, பாதுகாப்பானதாகத் தோற்றம் தரும் நங்கூரம் மற்றும் சங்கிலிப் பிணைப்புகளை விட்டு ஒருவனை தனது
அசலான நிலைக்கு திரும்பச் செய்து மனதை விழிக்கச்செய்யும். (24.02.2005)
<<•>>
41) விழிப்பை தன்னுள் கொண்டு வருவதற்காக ஒருவன் முற்றிலுமாக எதையுமே செய்ய இயலாது. யாதொரு வழிமுறைகளும், பயிற்சிகளும், யோக முறைகளும், தியானங்களும் எதுவும் பயனளிக்காது. இத்தகைய தந்திரங்களில் ஈடுபடும் ஒருவன் தொலைந்து போவான், அல்லது என்றென்றைக்குமாக வழிதவறிப் போவான். ஏனென்றால், ஏற்கனவே ஒருவனது செயல்படு மூளையில் உதித்த மனத்தின் தானியங்கித்தனமான அறிநிலை கொண்ட, பாதி-விழிப்பு பெற்ற சுய-உணர்வினால் திசை-திருப்பப்பட்டு வழிதவறிய நிலையில்தான் இருக்கிறான். இந்த அரைச் சுய-உணர்வினைக் கொண்டுதான் நாம் "இருக்கிறோம்!" என்பதை அறிகிறோம். ஆனால், அதைக்கடந்து, அது, " நாம் ஏன் இருக்கிறோம்?" என்பது குறித்தும் அல்லது இருப்பின் அர்த்தம் பற்றியும் யாதொரு அறிவூட்டலையும் செய்வதில்லை.
42) ஆக, இந்தக் கேள்விகளைப் பின்தொடர்வதற்கும், அவிழ்ப்பதற்கும் முன்பே (இக்கேள்விகள் மிகவும் தொலைவிலமைந்தவையாகவும், உடனடி இருப்பிற்குத் தொடர்பற்றதாகவும் தோன்றுபவைதானே!) நாம் உடனடி உயிர்-வாழ்தலின் உடனடித் தேவைகளினால் இழுத்துச் செல்லப்பட்டும், இன்னும் உயிர்-பிழைத்தலோடு தொடர்புகொண்ட பல்வேறு பிரச்சினைகளினால் உறிஞ்சப்பட்டும் அலைக்கழிக்கப் பட்டுள்ளோம். மொத்தத்தில், உயிர்-பிழைத்தலின் பிரச்சினைகளினால் நிரந்தரமாக நாம் சிதறடிக்கப்பட்டுள்ளோம்.
<<•>>
43) மனித மனமானது, எந்திரத் தனமாக, அதனுடைய நினைவாற்றல், எண்ணம் ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட ஒருவன் 4 வயதை எட்டும் போது செயல்படத் தொடங்குகிறது. எது இச்செயல்பாட்டைத் தொடங்கி வைக்கிறது என்றால், "தேவை" என்பது தான் - உயிர் பிழைத்திருத்தலின் உடனடித் தேவைகளும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் தான். மனச்செயல்பாட்டின் பெருக்கம் நிறைந்த ( exponential), பகுத்தறிவார்ந்த வகையிலான வளர்ச்சியினால், விஞ்ஞான ரீதியிலான மனம் தோன்றுகிறது. - ஆனால், அதில் விழிப்பு இல்லை! மனித மனமானது, ஒருபோதும் தனிச்சுதந்திரமான, தனித்துவமான ஒரு வியக்தியாக (entity) விழித்தெழாமலேயே, திறன்மிக்க தொரு அறிவு மற்றும் பயன்பாட்டு தொடர்பான ஒரு பொறியாகச் (faculty) செயல்பட இயலும்.
44) மனித மனமானது, விழிப்படையாவிட்டால், அது உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, உடலைப் பிரதிநிதித்துவம் செய்வதாயும், அதற்குச் சேவை புரிந்து கொண்டு மொத்தத்தில் உடலின் வாழ்க்கையை தனது வாழ்க்கையாக வாழ்ந்து செல்லும். அது எத்தகைய வாழ்க்கை என்றால், பிரதானமாக உடலின் இயல்பூக்கிகளினுடைய பசிகளை நிறைவேற்றிக் கொள்வதுதான். மனித உடல் என்பது அதனளவில் அது ஒரு விலங்கு போன்றதே, ஏனென்றால், பரிணாம ரீதியாக உடல் என்பது மனம் தோன்றுவதற்கு முந்தையது ஆகும்.
45) ஆனால், மனித மனமானது விழிப்படையும் போது அது தனது இருப்பிற்கு உடலைச் சார்ந்திருப்பினும், அதனால் தன்னை உடலிடமிருந்து வேறுபட்ட ஒரு தனித்துவமான அம்சமாகக் காணமுடியும். அதன் தொடர்ச்சியாக மனமானது தன்னை உடலுடன் அடையாளப் படுத்திக்கொள்வதிலிருந்தும், உடலின் தாக்கத்திலிருந்தும், மெதுவாக விடுவித்துகொண்டு தனது தன்னாட்சி உரிமையைப் பெறும். அதையடுத்து, மனமானது - பரிணாமத்திட்டத்தினால் உத்தேசிக்கப்பட்ட - தனது அசலான செயற்பாட்டைக் கண்டடையும். அச் செயற்பாடு என்பது மெய்ம்மையை ஆய்ந்தவிழ்ப்பதே ஆகும். (28.02.2005)
<<•>>
46) நம்மில் பெரும்பாலானவர்கள், கிட்டத்தட்ட 99% பேர்கள், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம்; அந்நிலையிலேயே, அதாவது தூக்கத்தில் நடக்கும் நோயில் வீழ்ந்தவர்களைப்போல எல்லாவற்றையும் தூக்கத்திலேயே செய்கிறோம், வாழ்கிறோம். விழிப்பு பற்றிய, உணர்வில் வளர்வது பற்றிய, அகத்தில் மலர்வதைப் பற்றிய யாதொரு உணர்வும் இன்றி.
47) நம்மில் சிலர், வெறும் 0.99 % பேர்கள், எவ்வாறோ நம்முடைய தூக்கத்தில் தொந்திரவு ஏற்பட்டு, இவ்விடயங்களைப் பற்றி கற்பனை செய்யத் தொடங்கியுள்ளோம். அதாவது, விழிப்படைதல் என்றால் என்ன என்றும், ஞானமடைதல் என்ன நன்மைகளைக் கொண்டுவரும் என்றும், இந்த அரிய நிகழ்வுகளின் விளைவுகள் அல்லது பரிசளிப்புகள் பற்றி கற்பனை செய்யத் தொடங்கியுள்ளோம்.
48) நம்மில் வெகு சிலர், வெறும் ஒரு கையளவு, 0.001 % பேர், விழிப்படைந்தவர்கள் இந்த விடயங்களைப் பற்றிப் பேசியும், எழுதியும் வருகிறார்கள். ஆனால், அவர்கள் முற்றிலுமாக (பிறரை) வழிதவறச் செய்யாவிட்டாலும், விஷயங்களை சிக்கலாக்கும் வேலையை செய்கின்றனர். ஏனென்றால், முதலிடத்தில் எந்த ஞானமடைந்த மனிதருக்கும் தான் விழிப்படைந்தது எவ்வாறு என்பது தெரிய வாய்ப்பில்லை. அவர்களுடைய மனித நேயமிக்க பேச்சுக்களும், கருணை வழியும் போதனைகளும் வெறும் மறு -உருவாக்க (reconstructive) வகையிலமைந்த கதைகளே!
49) ஆனால், எது மிகவும் அவசரமானதும் அதி முக்கியமானதும் என்றால், நமக்கு நாமே சிந்திப்பதற்கும், உண்மைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் உடனடியாக இப்போதே தொடங்குவதுதான் ஆகும்.
50) அதே நேரத்தில், எது உள்ளத்திற்கு உற்சாகமளிக்கும் விடயம் என்றால், இன்றைய வினோத, நவீனத்துவ அல்லது பின் நவீனத்துவ காலங்களில், அதிகமதிகமான தனிமனிதர்கள் விழிப்படையவும், பரிணாம வளச்சியில் உயரவும் தொடங்கியுள்ளனர். இதை ஒருவர் தம்மைச் சுற்றியுள்ள காற்றிலேயே உணரமுடியும்
(02.03.2005)
<<•>>
51) எவர்களெல்லாம் விழிப்படையவில்லையோ, தொன்மைப்பண்புகெடாத, அந்த மாசற்ற வாய்ப்பைத் (pristine chance) தவறவிட்டவர்களோ, அவர்கள் எப்படியோ அந்த தன்னெழுச்சியாக அடையப்படும் சுய- உள்ளக்களிப்பின் (Self Delight) கதவை தவறவிட்டுவிட்டார்கள். விழிப்படைவதற்கான அந்த பரவசம்-பொங்கும் வழியினை இழந்துவிட்டதால், இனி சுற்றிவளைத்துச் செல்லும் வழியில், சுய- அதிருப்தி அல்லது சுய -வெறுப்பு (Self-Disgust) எனும் கதவின் வழியாகச் சென்று விழிப்படைதலைச் சந்தித்தாக வேண்டும். அதற்கு அதிருப்தியின் நெருப்பு ஊடாக ஒருவன் சென்றாக வேண்டும்.
52) நீங்கள் விழிப்பதற்கான அந்த முதல் பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டீர்களென்றால், உங்களுக்கு எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு என்பது உள்ளது. நீங்கள் ஆன்மீக வளர்ச்சியில் எந்த மட்டத்தில் இருந்தாலும், எந்த வயதில் இருந்தாலும் - உங்களது 30 களில், 40 களில், 50 களில் . . . இருந்தாலும்; உங்களால் புத்தம் புதிதாகத் தொடங்க முடியும்.
53) தனிமனிதச் சுயம் தன்னுடனும், இயற்கையுலகுடனும் கொள்ளும் ஐக்கியத்தினாலும் பெறும் தன்னெழுச்சியான சுய- உள்ளக்களிப்பின் (Self- Delight) கதவின் வழியாக அவர்கள் வந்திருப்பினும், அவர்கள் மீண்டும், "சுய- அதிருப்தி" (Self-Disgust) எனும் இரண்டாவது கதவின் வழியாகவும் செல்லவேண்டியுள்ளது. ஏனென்றால், அவர்கள் பெற்ற சுய- உள்ளக்களிப்பானது (தற்போது வைகறையின் மங்கிய ஒளியாகத் (Twilight Zone) தெரிய அல்லது மாறிவிட) விரைவில் தொலைக்கப்பட்டுவிட்டது. அதாவது, சுற்றியுள்ள மக்களின் உலகமானது தனது முடமாக்கும் பாரம்பரியம், அறிவு, வழக்கங்கள், வாழ் முறைகள் மூலமாக தனிமனிதர்களின் வழியில் குறுக்கிடுவதனால்.
<<•>>
54) ஆகவே, உங்கள் மீதே நீங்கள் எரிச்சலடையுங்கள் (be disgusted with yourself), உங்களுடைய வெற்றிகள், தோல்விகள்; உங்களுடைய பூரணத்துவம் மற்றும் முழுமைக்குறைவின் மீது அதிருப்தி கொள்ளுங்கள். உங்களுடைய மேலோட்டமான சந்தோஷங்கள், மற்றும் உங்களுடைய அற்ப துன்பங்கள் மீது அருவருப்பு கொள்ளுங்கள். சமுதாயத்தின் வழிகள் மீதும், அதன் அற்பத்தனம், மற்றும் மேலோட்டமான தனம் மீதும் ; அதனுடைய முட்டாள் தனமான மதிப்புகள் பற்றியும் அருவருப்படையுங்கள். அன்றாட வாழ்வின் அர்த்தமற்ற சுற்று குறித்து சலிப்படையுங்கள். அறியப்பட்ட வாழ்வின் அனைத்து கோளங்கள் மீதும் அதிருப்தி யடையுங்கள்.
55) முழுவதுமாக (அரைகுறையாக அல்ல), மிக ஆழமாக, அடித்தளத்திலிருந்து உங்கள் மீதும், எல்லாவற்றின் மீதும் அதிருப்தி கொள்ளுங்கள். அனைத்து ஆன்மீகப் பள்ளிகள், பாதைகள், வழிகாட்டிகள், குருமார்கள், போதனைகள் எனப்படும் எல்லாவற்றின் மீதும் வெறுப்படையுங்கள் - இவற்றுடன் நீங்கள் தற்போது வாசித்துக்கொண்டிருக்கிற இந்த "தீவிரமிக்க போதனை" யையும் (Radical Teachings) சேர்த்தே எரிச்சலடையுங்கள். இந்த போதனையின் ஒரு நோக்கம் என்னவெனில், ஆர்வமிக்க ஆன்மீக அன்பர்களின் இதயங்களிலும், மனங்களிலும் வெறுப்பு அல்லது அதிருப்தியின் விதைகளை விதைப்பதே.
56) ஆகவே, இன்றே, நாளை அல்ல, வெறுப்படையுங்கள். ஆழமாகவும், முற்றாகவும் -அதாவது, மரணம் எனும் புள்ளியை எட்டும் வகையில், ஆமாம், உங்களுடைய பழைய மனத்தின், பழக்கத்து அடிமையாகிப்போன உங்கள் சுயத்தின் மரணம். அப்போது நீங்கள் விழிப்படைவீர்கள். (03.03.2005)
<<•>>
57) விழிப்பு என்பது உங்களுடைய சொந்த வரலாற்றையும், கதையையும் முடிவுக்குக் கொண்டுவந்திடுகிறது. ஏனென்றால், விழிப்பு தான் உங்களுடைய அசலான அடைவிடம் ஆகும்.
<<•>>
58) விழிப்பு என்பது இக்கரையைச் (இந்த உலகை) சேர்ந்ததல்ல; அது மறுகரையைச் சேர்ந்தது.
<<•>>
59) விழிப்படைவதற்கு முன்னர் ஒருவன் அவனுடைய உடலையும், மனதையும் சேர்ந்தவனாக இருக்கிறான். விழிப்படைந்த பின்னர் அவன் விழிப்பைச் சேர்ந்தவனாகிறான் - விழிப்புற்ற நிலை - அது நித்தியம் ஆகும் - உடல், மனம், காலம், வெளி ஆகியவற்றுக்கு அப்பால் அமைந்த உலகம்.
<<•>>
60) மனிதனின் மட்டுப்பாடான சிற்றுணர்வானது விழிப்படையும் பட்சத்தில், அவ்விழிப்பு வெளி-காலத்தின் விலங்குகளை உடைத்தெறிந்துவிட, உடனடியாக மனிதனின் மட்டுப்பாடான சிற்றுணர்வானது மட்டுப்பாடற்ற அகண்ட பிரபஞ்சமளாவிய பேருணர்வாக ஆகிவிடுகிறது.
<<•>>
61) விழிப்பு என்பது, புற-அளவிலும் சரி, அக -அளவிலும் சரி, யாதொரு ஆகுதலும் (becoming)அதாவது, மாற்றமும் தேவைப்படுவதில்லை என்ற ஆழமான உண்மைக்கு விழிப்பதாகும். மாற்றம் அனைத்தும் முடிவுற்ற முழுமை நிலையே விழிப்பு!
62) ஆம், விழிப்பானது அனைத்து ஆகுதலையும் (becoming) தேவையற்றதாக்கிவிடுகிறது! (08.10.2005)
<<•>>
மா.கணேசன்/ நெய்வேலி
■
The Second Awakening
(These entries were originally recorded/written
between 11.02.2005 and 08.10.2005)
■
Originally written in English and Translated into Tamil by the Author
Translated and Typed between 08-10-2024 & 14-10-2024
and Uploaded onto the Blog on 14-10-2024
<<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>