Friday, 28 July 2017

ஒருவழிக்கதவு!




அந்த கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அதன் வழியே சென்றவர்கள் மிகச்சிலரே!
அக்கதவின் வழியாகச்செல்பவர் மரணமிலாப்
பெருவாழ்வு பெறுவர், அகலாத ஆனந்தம் அடைவர்!
நிரந்தர நிறைவு எய்துவர், பூரணத்துவம் பெறுவர்!
ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் அக்கதவைத்
திறந்து அந்தப்பக்கம் செல்வது மட்டுமே!
அக்கதவின் வழியாகச் செல்வதற்கு நிபந்தனை
ஏதுமில்லை- ஒருமுறை அக்கதவின் வழியாகச்
சென்றுவிட்டால், மீண்டும் இந்தப்பக்கம் வரமுடியாது
என்பதைத்தவிர! அக்கதவின் வழியாக அந்தப்பக்கம்
செல்லலாம், ஆனால் இந்தப்பக்கம் வரமுடியாது!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அக்கதவிற்கு இந்தப்பக்கம் செல்லுபடியாகும் விதிகள்
அந்தப்பக்கம் செல்லுபடியாகாது! அந்தப் பக்கத்தின்
விதிகள் முற்றிலும் வேறானவை!
மரணம் இந்தப்பக்கத்தின் விதியென்றால்,
நித்தியவாழ்வு அந்தப்பக்கத்தின் விதியாகும்!
நிச்சயமற்ற தன்மை இந்தப்பக்கத்தின் விதியென்றால்,
சர்வ நிச்சயம் அந்தப்பக்கத்தின் விதியாகும்!
அழிவு இந்தப்பக்கத்தின் விதியென்றால்,
ஆக்கம் அந்தப்பக்கத்தின் விதியாகும்!

ஆனாலும் எவரும் அக்கதவின் வழியாக அந்தப்பக்கம்
செல்ல விரும்புவதில்லை! மீண்டும் இந்தப்பக்கம்
வரமுடியாது என்பது அவர்களுக்கு மரணத்தை
நினைவுபடுத்துவதாயுள்ளது!
மேலும், இன்பமோ, துன்பமோ, இந்தப்பக்கத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒருவருக்கு வேறு எந்தப்பக்கமும்
பெரிதாகத்தெரிவதில்லை! மனிதர்கள், சொர்க்கத்தின்
கவர்ச்சிக்கும் ஆட்படுவதில்லை!
நரகத்தின் வலியைப் பற்றியும் அச்சம் கொள்வதில்லை!
இப்போதைக்கு இந்தப்பக்கத்து வாழ்க்கை மட்டுமே
அவர்களுக்கு முக்கியம்!
"செத்தபிறகு சொர்க்கம் சென்றால் என்ன, நரகம் சேர்ந்தால்
என்ன?" என்பதே அவர்களது கொள்கை!
எனவேதான் மனிதர்கள் அறம், தருமம் எதையும்
கடைபிடிப்பதில்லை!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அக்கதவின் வழியாகச் செல்லத்துணியும் ஒருவனுக்காக
அக்கதவு காத்திருக்கிறது எண்ணற்ற யுகங்களாக!
அக்கதவின் பெயர் "திவ்விய மாற்றம்"!
மனிதர்கள் உற்சாகமற்றவர்களாக, உத்வேகமற்றவர்களாக
சோகை பீடித்தவர்களாக வாழ்வதன் காரணம்
அதிகப்படியான உற்சாகமும், உத்வேகமும் அவர்களை
அக்கதவின் வழியாகச் செல்லும் துணிவைத் தந்திடலாம்!
பேரார்வமும், பெருமுயற்சியும் ஆபத்தானவை!
இப்பூமி, முட்டாள்கள் மற்றும் சோம்பேறிகளின் சொர்க்கமாய்
இருப்பதன் காரணம் இதுதான்!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
ஆர்வக்கோளாறுகொண்ட பலர் அக்கதவின் சிறப்புக்களையும்
அருமைபெருமைகளையும் பற்றிய கதைகளையும்,
விபரங்களையும் தயக்கத்துடன் குருமார்களிடம் சென்று
கேட்டுத்தெரிந்து கொண்டு பத்திரமாக தங்கள் வீடுகளுக்கு
திரும்பச் சென்றுவிடுகின்றனர்!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
அமைதியான மனம் ஆபத்தான புதைமணல்!
ஆகவேதான் மனிதர்களின் மனம் சதா அலைபாய்ந்து
கொண்டேயுள்ளது!
ஆழமாகச் சிந்திப்பதும் ஆபத்தானது!
அது ஒருவனை அடியாழமற்ற அதலபாதாளத்திற்கு
கொண்டு சேர்த்துவிடக்கூடும்!
ஆகவேதான் மனிதர்கள் தேவைகளைத்தாண்டி
வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை!
அர்த்தம் பற்றிய தேடல் ஆபத்தானது!
தற்போது வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றுப்
போய்விடலாம்!

அந்தக் கதவு இன்னும் அங்கேயே தான் உள்ளது!
இங்கே இந்தப்பக்கம் மனிதர்கள் வழக்கம் போல
வாழாமல் வாழ்ந்து செல்கின்றனர்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 28-07-2017
----------------------------------------------------------------------------

வண்ணத்துப்பூச்சியின் செய்தி!

























         வண்ணத்துப்பூச்சியின் செய்தி கம்பளிப்புழுக்களைப்
         பொறுத்தவரை மரணத்திற்கான அழைப்பே!
                                                -•-

பகிர்ந்து கொள்ள உங்கள் எல்லோரிடமும் எப்போதும்
ஏதாவதொரு செய்தி, தகவல் இருக்கவே செய்கிறது
என்பதுதான் உங்களுடைய துரதிருஷ்டம்!
ஏனெனில், நீங்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகள்
எத்தகையவை, எவற்றைப் பற்றியவை?
நீங்கள் விரும்புகிற 'நல்ல' செய்திகளைக்கேட்டு மகிழ்வீர்!
நீங்கள் விரும்பாத 'கெட்ட' செய்திகளைக்கேட்டு அழுவீர்!

உங்களுடைய இன்பங்களும் துன்பங்களும்
உங்களைப்போலவே மேலோட்டமானவை!
உங்களைப்போலவே உங்களது வாழ்க்கையும் ஆழமற்றதே!
நீங்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகள் அனைத்தும்
அன்றாடம் சேர்ந்தவை - அன்றாட அலுவல்கள்
அன்றாட விஷயங்கள், அன்றாட விவகாரங்கள், மற்றும்
அன்றாட சம்பவங்கள் ஆகியவை மட்டும் தானே?

அன்றாடம் கடந்த செய்திகளைப் பொறுத்தவரை
நீங்கள் செவிடர்களும், குருடர்களுமாக ஆகிவிடுகிறீர்!
பிறகு எனது செய்திக்கு பதிலளிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக
நீங்கள் ஊமைகளாக நடிக்கிறீர்! அல்லது மனத்தாங்கல்
கொண்டவராக என்னிடமிருந்து விலகிச் சென்றுவிடுகிறீர்!

உங்களில் சிலர் எப்போதாவது அன்றாடம் கடந்த செய்திகளைத்
தேடுகிறீர் என்பதை உமது கவிதை நாட்டத்திலிருந்து
நான் அறியாமலில்லை!
ஆனால், உமது கவிதா ரசனை என்பதென்ன,
பழைய கள்ளை புதுப்புது மொந்தைகளில் பருகுவது தானே!
மேலும், உமது ஆன்மீக ஈடுபாடு என்பதென்ன, உமது
அகந்தையின் இன்னொரு முகமூடி விளையாட்டு தானே!
உமது தத்துவ ஈடுபாடு என்பதென்ன, ஞானிகளின்
சிந்தனைகளை மனப்பாடம்செய்து ஒப்பிப்பது தானே!
பிறகு, தவளை குட்டை நீரைக் கண்டதும்  உடனே அதில்
தாவிக்குதிப்பதைப்போல உமது அன்றாடத்தில் மூழ்கிப்போவது
தானே உமது வாடிக்கையான வாழ்க்கை!
                                 
எனது செய்திகள் எப்போதும் உமக்கு ஏற்புடையதாய்
இருக்கவேண்டுமா என்ன?
உமக்கு ஏற்புடைய செய்தி என்பது உம்முடைய
அகந்தையை மகிழ்விக்கும் செய்தி தானே!
அச்செய்தி உம்மைப்போலவே பழசாகத்தானே இருக்கும்!

எனது செய்திகள் எல்லோருக்கும் ஏற்புடையதாய்
இருக்குமா என்ற சந்தேகம் உமக்கு இருக்கலாம்!
'எல்லோரும்' என்பது வெறும் எண்ணிக்கையல்லாமல்
வேறென்ன? அல்லது பெரும் எண்ணிக்கையாக
இருந்தாலும் தான் என்ன? அது வெறும் "பூச்சாண்டி"!
ஆயிரம் கம்பளிப்புழுக்கள் சேர்ந்தாலும் ஒரு
வண்ணத்துப்பூச்சிக்கு ஈடாகுமா?

நான் சொல்லும் செய்தியானது நீர் எப்போதும்
விரும்பி அசைபோடும் அதே பழைய வைக்கோல் அல்ல!
மாறாக, உமது ஆன்மாவைக் காண ஏக்கம் கொள்ளச்செய்யும்
தூண்டுகோல் ஆகும்!

எனது செய்தி உம்மை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்குவதாக
உணர்கிறீரா? உம்மை நிர்ப்பந்திக்காத, தொந்திரவு செய்யாத,
உமது திருப்தியை அழிக்காத, மன அமைதியைக்
குலைக்காத, உறக்கத்தை கெடுக்காத, கனவுகளைக்
கலைக்காத செய்தி ஒரு செய்தியே அல்ல!
உமது பழைய வார்ப்பை உடைக்காமல் உம்மைப் புதுப்பிக்க
இயலாது! உருக்குலைக்காமல் உம்மை
உருமாற்ற வியலாது!

எனது செய்தி உமது சுதந்திரத்தைப் பறிப்பதாகத் தெரிகிறதா?
தனது ஓட்டிற்குள் சுருங்கிக்கொள்ளும் ஆமையின் பாதுகாப்பு
தற்காலிகமானது! ஏனெனில், உமக்குள்ளிருந்தே உம்மை
அழிக்கும் விதி ஒன்றுள்ளதை மறந்திடாதீர்!
எனது செய்தி உண்மையான சுதந்திரத்தையும்
முழுமையான பாதுகாப்பையும் பற்றியது!

எனது செய்தி உமக்குக் கசப்பாகத் தெரியலாம்!
ஆனால், உமது பிறவி நோயை குணப்படுத்தும் மருந்து
எனது செய்தியில் அடங்கியுள்ளது!

எனது செய்தி உங்களுக்குத் தேவைப்படாது, பயன்படாது
என்றெண்ணி நீர் நகைக்கலாம்!
ஆனால், உமக்கு மிகவும் தேவைப்படுபவை, பயன்படுபவை
யாவும் ஒரு நாள் தேவைப்படாமல், பயன்படாமல் போகும்!
அப்போது உம்மை கரைசேர்க்கும் படகு இச்செய்தியே!

உம்மிடமும் இத்தகைய செய்தி உள்ளதெனில்
அதையும், அதற்காக உம்மையும் நான் வணங்குகிறேன்!
அவ்வாறே முந்தைய-கால செய்தியுடையோர், தூதுவர்,
தீர்க்கதரிசி என எல்லோரையும் அவர்களுடைய
செய்திகளையும் வணங்குகிறேன்!

எனது செய்தி இதுதான்: பேருணர்வு மட்டுமே முக்கியமானது,
நிஜத்திலும் நிஜமானது, இறுதியானது!
நான் பேருணர்வு என்றழைப்பதை சிலர் இறை என்பர்!
சிலர் கடவுள் என்பர்! சிலர் அன்பு என்பர்! சிலர் பிரம்மம் என்பர்!

உமது சக மனிதர்களை நீர் சந்திக்கும் போது அவர்களிடம்
பகிர்ந்து கொள்ள என்ன செய்தி வைத்திருக்கிறீர்?
குசல விசாரிப்பு, பொருட்களின் விலையேற்றம், வந்து சேராத
ஊக்கத்தொகை, ஊர்வம்பு, பயனற்ற அரசியல், அரட்டை
தற்பெருமைப் பேச்சு இவ்வளவு தானே!

உம்முடைய அனைத்து செய்திகளும் தகவல்களும்
முடிவுறும்போது எனது செய்தி தொடங்குகிறது!
ஆனால் உம்முடைய செய்திகளும் தகவல்களும் ஒருபோதும்
முடிவடைவதில்லை என்பதால்
அதிரடியாக நான் அவற்றை மறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு
எனது செய்தியைச் சொல்லத் தொடங்கிவிடுவதால்
மேலும் நீர் வாழ்ந்துவரும் வாழ்க்கையைப்பற்றிய யாதொரு
குறிப்பும் என்னுடைய செய்தியில் இடம்பெறாததால்
நீர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறீர்!

அசலான வாழ்க்கை பற்றியது எனது செய்தி, அதுவே எனது
செய்தியின் விசேடம்!
நீர் வாழும் வாழ்க்கை எலியின் வாழ்க்கையைவிட
மேலானதல்ல!
எலிக்கு எது அசலான வாழ்க்கையோ அது மனிதனுக்குக்
கீழானது!
வாழ்வின் அர்த்தமறியாத, நோக்கமறியாத, இலக்கற்ற
வாழ்க்கையும் மனிதனுக்குக் கீழானதே!

உம்மைப் பற்றிய உண்மையை எவ்வாறு நான்
கூறுகிறேன் என்றால், உம்மிடம் அன்றாடம் கடந்த எந்த
செய்தியும் இல்லை என்பதைக்கொண்டு!
உம்மைச் சந்திக்கும்போது எவ்வாறு நீர் பசப்புகிறீர்!
என்னைத் தவிர்ப்பதற்காக நீர் கையாளும் யுக்திகள் தான்
எத்தனையெத்தனை!
இவ்வாறே உம்மைப்பற்றிச் சொல்லிக்கொண்டே
போகலாம்!

நீர் எண்ணுகிறீர், நீர் நீராகவே இருக்கிறீர் என்பதாக!
கம்பளிப்புழு ஒரு கம்பளிப்புழுவாகவே இருப்பதில்
ஒரு மேன்மையும் இல்லை! ஏனெனில்,
கம்பளிப்புழுவின் முழுமை வண்ணத்துப்பூச்சியாக
மாறுவதிலேயே அடங்கியுள்ளது!
கம்பளிப்புழு தன் கம்பளிப்புழு இயல்புக்கு மரிக்காமல்
வண்ணத்துப்பூச்சியாக மாற இயலாது!  

மா.கணேசன்/ நெய்வேலி/ 26-07-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 25 July 2017

இவ்வளவு தானா?





மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
ஆனால் காலம் மாறுகிறது என்கிறோம்!
நமது சந்திப்புக்களின் உச்சம் தொடப்பட்டுவிட்டது!
நாம் அமர்ந்து அளவளாவிய சதுக்கங்களில்
யார் யாரோ அமர்ந்துள்ளனர்!
தேய் பிறைக்காலம் வெகு விரைவாகத் தொடங்கிவிட்டது!
நாம் தனிமைப் பயணியாகி விட்டோமோ?
காற்றுப்புகாத குறுகலான அறை காத்திருக்கிறது!
எங்கோ தொடங்கினோம், எங்கே போகிறோம்?
வாழ்வின் மிச்சமீதங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
சுற்றிலும் மனிதர்கள் ஆனால் பேச்சுத்துணை இல்லை!
இருந்தாலும் பகிர்ந்து கொள்ள ஏதுமில்லை!
தனக்குள்ளே பேசிக்கொள்ளும் காலம் வந்திட்டதோ?
காலம் கடந்த ஞானோதயம் காலத்தைக்கடன் கேட்கிறது!
காலமோ வட்டியைக்கொண்டு வாழ்ந்து கொள் என்கிறது!
ஓய்வில்லாத சம்பாத்தியம் ஒதுக்கித் தந்த ஓய்வூதியம்
ஓயாத தேவைகளுக்கு ஓய்வுகொடுக்கச் சொல்லுமோ?
*
நண்பர்களைப் பற்றிய செய்தி எதுவும் வராதவரை நல்லது!
என்னைப்பற்றிய செய்தி அவர்களை எட்டாத வகையிலமைந்த
ஒரு தீவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது மிச்ச மீதக்காலத்தை வாழ்ந்து முடிக்க!
*
நண்பர்களை நினைத்தாலே நயவஞ்சகமும்
நன்றிகெட்ட தனமும் தான் நினைவில் எஞ்சுகிறது!
கொஞ்ச காலம் ஆகலாம் எல்லோரையும் மறப்பதற்கு!
*
ஆர்மீனிய அவெட்டிக் இஸாஹாக்கியானின்
அபு அலா அல் மஹரி யைப் போல,
முன்பு நான் நேசித்தவர்களை, நேசித்தவைகளை எல்லாம்
தற்போது வெறுக்கத்தொடங்கிவிட்டேனோ!
ஒரு இரவு யாருக்கும் தெரியாமல் அபு அலா அல் மஹரி
பாக்தாத் நகரை விட்டு வெளியேறியது போல,
(சபிக்கப்பட்ட இந்த) நெய்வேலி நகரை விட்டு
நான் வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை!
எந்த பாக்தாத் நகரம் அபு அலா அல் மஹரியை மதிக்காது
விரட்டியதோ
நிச்சயம் அது சபிக்கப்பட்டதாகத்தான் இருக்கவேண்டும்!
இல்லாவிட்டால், அந்த அமெரிக்கப் பாவிகள் அதை
அழித்து நிர்மூலமாக்கியிருப்பார்களா?
எல்லா நகரங்களும், சாம்ராஜ்ஜியங்களும், நாகரிகங்களும்
சபிக்கப்பட்டவையே! ரோம சாம்ராஜ்ஜியம் என்னவாயிற்று?
ஆம், மனிதர்களும், மக்களும் சாபங்களைத் தம்மீது
தாமே வருவித்துக்கொள்கின்றனர்!
மனிதர்களாயினும், நாகரிகங்களாயினும் தம்மை
உள்ளிருந்தே புதுப்பித்துக் கொள்ளும் அந்த அம்சத்தை
கண்டடையவில்லையெனில், அவை அழிந்து போகும்!
நம்முடைய நவீன நாகரிகமும் அதற்கு விதிவிலக்கல்ல!
தாம் கொண்ட ஒரு மேலோங்கிய கருத்தை வாழ்ந்து
முடித்ததும் மனிதர்களும், சாம்ராஜ்ஜியங்களும்,
நாகரிகங்களும் வீழ்ச்சியடையத் தொடங்குகின்றன!
எதிர்கால அழிவுகளை ஆருடங்களாகச் சொல்லி நிகழ்கால
அழிவைத் தவிர்க்க முடிந்ததா, நாஸ்ட்ராடாமஸ்?
நாம் விதைத்ததை நாம் அறுவடை செய்தேயாக வேண்டும்!
*
(சபிக்கப்பட்ட அந்த நகரத்து)
நண்பர்களைப்பற்றி ஒரு நல்ல வார்த்தையாவது
சொல்லவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்!
ஆனால், எவ்வளவு யோசித்தாலும் எதுவும் சொல்லத்
தோன்றவில்லை!
அது போகட்டும், ஒரு கெட்ட வார்த்தையாவது
சொல்லவேண்டும் என்றாலும், அவர்களுக்கென்று புதிதாய்
ஒரு வார்த்தையை உருவாக்கினால் தான் உண்டு!
எல்லா தீய வார்த்தைகளையும் உள்ளடக்கிய அந்த
ஒற்றை வார்த்தையை தேடிக்கொண்டிருக்கிறேன்!
*
அவ்வளவு மோசமானவர்களா அவர்கள் என்று
கேட்காதீர்கள்; மோசம் என்பதற்கும் மேலே!
அவர்களை "மண்" என்று சொல்லலாம் என்றாலும்
மண்ணைவிட அவர்கள் மோசமானவர்களாக அல்லவா
இருக்கிறார்கள்!
மண் கடைசிவரை மண்ணாகவே இருந்தாலும்
அதில் எண்ணற்ற செடி கொடிகளும், மரங்களும்
வளர்கின்றனவே!
ஆனால், இவர்கள் மண்டையிலிருந்து புதிதாக
ஒரு சிந்தனையும் உட்-பார்வையும் எதுவும்
பிறந்ததில்லையே!
*
அவர்கள் என் பொறுமையை எவ்வளவோ சோதித்தார்கள்!
அவர்களை நேர்வழிக்குக் கொண்டுவரும்
என் முயற்சிகள் அனைத்தையும் தோற்கடித்தார்கள்!
என்னை தோல்வியுறச்செய்வதில் வெற்றி கண்டவர்கள்
தங்கள் இலக்கை அடைவதில் தோற்றுப்போயினர்!
என்னை வெற்றி பெறச்செய்திருந்தால் நிச்சயம் அவர்களும்
வெற்றி பெற்றிருப்பர்!
*
உயரிய நோக்கம் பற்றிய பேச்சு அவர்களைப் பொறுத்தவரை
சாதாரணமானதாகும்.  தானியக் கதிர்களை இழுத்து வந்து
தங்கள் வளைகளுக்குள் சேமிக்கும் எலிகளுடைய உன்னத
நோக்கத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல அவர்களுடையது!
*
எப்போதும் நான் ஏன் எதிர்மறையாகவே பேசுகிறேன்
என்று எண்ணுபவர்கள் தங்களது உயரிய நோக்கம் என்ன
என்பதை முதலில் கண்டுபிடித்துச் சொல்லட்டும்!
*
எனக்குப் பிடிக்காத யாரைப்பற்றியோ நான் பேசுகிறேன்,
நண்பர்களுடன் கொண்ட பிணக்குகளால் அவர்களைத்
தூற்றுகிறேன் என்பதாக வாசகர்கள் சிலர் நினைக்கலாம்!
ஆனால், இதை வாசிக்கும் ஒவ்வொருவரைப்
பற்றியும் தான் இப்படிப் பேசுகிறேன்!
ஏனெனில், பிறருடனான எனது நட்பில், பழகுதலில் எவ்வித
கொடுக்கல்-வாங்கலும்  கிடையாது; ஆகவே அதில்
சண்டை சச்சரவுகளுக்கு இடமேது?
மேலும் கொடுப்பது மட்டுமே என் பணி - இதோ
உங்கள் வாசிப்புக்கு கொடுக்கப்பட்ட இந்த எனது
செய்தியைப்போல!
எனது செய்தியை எவ்வாறு (உள்) வாங்கிக்கொள்கிறீர்
என்பதைப்பொறுத்தது உங்கள் மீதான எனது விமர்சனம்!
ஒருவேளை எனது இப்புலம்பல்களுக்கு கருத்து வேறுபாடு
காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் எண்ணலாம்!
ஆனால், பாருங்கள்!  எனக்கும் பிறர்க்கும் வேறுபாடு உள்ளது
என்பது உண்மையே! ஆனால், கருத்தே இல்லாதவர்களுடன்
எவ்வாறு கருத்து வேறுபாடு கொள்ள முடியும்?
*
கருத்துகள் இருக்கின்றன, ஆகவே கருத்து வேறுபாடுகளும்!
ஆனால், உண்மை என்பது ஒன்றே!

*
"சத்தியத்தை செவியுறும் வல்லமை எல்லோருக்கும்
கிடைத்துவிடுவதில்லை. அத்திப்பழம் எல்லா
அற்பப் பறவைகளுக்கும் ஆகாரம் ஆகாது."
எனும் ரூமியின் வாசகத்தை மாற்றி எழுதிடமுயன்று
தோற்றுப்போனேன்!
ஆம், சத்தியத்தை செவியுறும் வல்லமையை எல்லோரும்
பெறவேண்டும் என விரும்பினேன்!
அத்திப்பழம் உன்னதமானது எனும்போது ஏன் எல்லா
பறவைகளும் அதை உண்ணக்கூடாது?
*
உங்களுடைய முதல் நாற்பதாண்டுகள் வாலிப அலட்சியத்திலும்
அக்கறையின்மையிலும், ஆணவத்திலும் கழிந்து போயிருக்கட்டும்!
இனியாவது உங்களுடைய பதினாறில் ஒரு பங்கு நேரத்தையும்,
கவனிப்பையும் ஆன்மீகத்தில் செலுத்துங்கள்!
இந்த பதினொன்றாம் மணியில் முயற்சித்தாலும் கூட
நீங்கள் முக்தியடையலாம்!
ஒவ்வொரு கணமும் விழிப்புக்குரிய கணமே!
*

மா.கணேசன்/ நெய்வேலி/ 23-07-2017
----------------------------------------------------------------------------

Sunday, 23 July 2017

"மது நம்மால் மயக்கமுற்றது!"



     இவை மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் மஸ்னவியிலிருந்து
     தேர்ந்தெடுத்த ஞானப்பொக்கிஷங்கள்!


6. ஒவ்வொருவரும் தத்தம் கூற்றுப்படி என்னுடன் நட்புறவாடினார்கள்,
  ஆனால் எனக்குள்ளிருக்கும் இரகசியத்தை யாருமே தேடவில்லை.

8. உடல், ஆன்மாவைக்கொண்டும், ஆன்மா, உடலைக்கொண்டும்
  மறைந்திருக்கவில்லை. ஆனால், யாருக்கும் ஆன்மாவைக்காணும்
  வழக்கம் கிடையாது.


9. புல்லாங்குழலின் இவ்வொலி காற்றல்ல, தீயாகும். எதில் இந்த தீ
  இல்லையோ அது இல்லாமைக்கு சமம்.


22. மீனைத் தவிர மற்றவர்களுக்கு தண்ணீர் திகட்டத்தான் செய்யும்.
   வேலையின்றி இருப்பவர்களுக்கு அவர்களது நாட்கள் வீணானதேயாகும்.


23. குறைபாடுள்ளவன் முழுமையானவனின் நிலையை அறிந்து கொள்ள
   முடியாது. எனவே பேச்சைக் குறைத்துக் கொள்.

25. மது நம்மால் மயக்கமுற்றது. நாம் மதுவால் அல்ல. உடல் நமக்காக
   உண்டானது நாம் அதற்காக அல்ல.


26. சத்தியத்தை செவியுறும் வல்லமை எல்லோருக்கும் கிடைத்துவிடுவ
   தில்லை. அத்திப்பழம் எல்லா அற்பப்பறவைகளுக்கும் ஆகாரம் ஆகாது.

27. மகனே, சிறையை உடைத்தெறி, விடுதலையை பெறு. பொன்னுக்கும்
   வெள்ளிக்கும் நீ எதுவரை அடைபட்டு கிடப்பாய்?

28. கடலை நீ ஒரு பாத்திரத்தில் பிடித்தால் எவ்வளவு வரும்? அது ஒரு
   நாளைக்கு போதுமானதாக இருக்குமா?

29. பேராசைக்காரர்களின் கண்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை.
   சிப்பி மன நிறைவு அடையாதவரை முத்தால் அது நிரம்புவதில்லை.

31. மகிழ்ச்சியாக இரு, நமது நல்ல கிறுக்கு பிடித்த காதலே! நமது அனைத்து
   நோய்களின் மருத்துவரே.


32. நமது அகந்தை மற்றும் பதவி மோகத்தின் மருந்தே! நீயே நமது
   பிளேட்டோ, நீயே நமது அரிஸ்டாடில்.
   

72. மரணம் வரும்போது மருத்துவன் முட்டாளாகி விடுகிறான். மருந்து பலன்
   அளிப்பதிலிருந்து வழி தவறி விடுகிறது.

272. மயிலின் இறகே அதற்கு விரோதியாகிவிடுகிறது.


303. பலவிதமான திறமைகள் பெற்றிருந்தும் கூட மூஸா நபிக்கு அந்த கருத்து
    புலப்படவில்லை.நீயும் சிறகின்றி பறக்க முயலாதே.    

தெளிவுரை: . . . ஆகவே எதுவும் அறிந்து கொள்ளாமலேயே, பறப்பதற்கு சிறகு
இல்லாமலேயே, பறக்க முயலாதே. அறிந்து கொள்ள முடியாத ஞானத்தை
மறுத்து பேசாதே.


304. அவன் ஒரு சிகப்பு ரோஜா, அதை நீ ரத்தம் என்று கூறி விடாதே. அவன்
    அறிவால் மயங்கியுள்ளான். அவனை நீ பைத்தியம் என்று கருதிவிடாதே.
   

     [ தாங்களும் அவர்களைப்போன்றவர்களே என்று நினைத்தல் ]

340. தவறான ஊகத்தால் அவர்கள் அன்பியாக்களுடனும் சரிசமமாகி நின்று
    விட்டுள்ளார்கள். அதேபோல இறைநேசர்களுடனும் சரிசமமாகி
    நிற்கிறார்கள்.


341. அவர்கள் சொல்கிறார்கள் - அவர்களும் (இறைநேசர்கள்) மனிதர்கள்,
    நாமும் மனிதர்கள். நாம் இருவருமே உறங்குவதற்கும் உண்ணுவதற்கும்
    கட்டுப்பட்டு இருக்கின்றோம்.


342. அவர்கள் இருவருக்கிடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதை
    அவர்களுடைய குருட்டுத்தனத்தால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.


343. தேனியும் குளவியும் ஒரே இடத்தில் புசித்தாலும் ஒன்று கொட்டுகிறது.
    ஒன்று தேனை சேகரிக்கிறது.
   

344. இரண்டுவகை மான்களும் ஒரே மாதிரியான புல்லை மேய்ந்தன. ஒரே
    நீர்த்துறையிலிருந்து தண்ணீர் அருந்தின. ஒன்றிலிருந்து சாணம்
    கிடைத்தது, மற்றொன்றிலிருந்து கஸ்தூரி.

348. இவன் சாப்பிட்டால் முற்றிலும் கருமித்தனமும் பொறாமையும் பிறக்கும்.
    அவர் ((இறைநேசர்) சாப்பிட்டால் அனைத்துமே இறையொளியாய்
    பரிணமிக்கும்.


472. எங்கள் இறைவா! உலகிலே லட்சக்கணக்கான வலைகளும்,
    தானியங்களும் இருக்கின்றன. நாங்களோ பேராசைப்பிடித்தவர்களாய்ப்
    பசி மிகுந்தவர்களாய் இருக்கின்றோம்.

473. நாம் ஒவ்வொரு விநாடியும் புதுப்புது வலையிலே சிக்குண்டு
    கிடக்கிறோம். நாம் வல்லூறாக அல்லது அதிசய பறவையான சீமூர்க்
    ஆகத்தான் மாற வேண்டும்.


480. எந்த எலியும் நமது கோணியிலிருந்து கோதுமையை திருடவில்லை
    என்றால் நாற்பதாண்டு கால நற்செயல்கள் என்ன ஆகிவிட்டன?

தெளிவுரை:                                                                  
   நாற்பதாண்டுகள் என்பது ஒரு காலத்தை ( கால அளவை)`குறிக்கும்.
   மனிதனின் நாற்பதாண்டுகள் வாலிப பருவத்திற்குடையது. அதில் தான்
   அலட்சியத்தன்மையும், அக்கறையின்மையும் குடி கொண்டு இருக்கும்.
   நாற்பதாண்டுகளுக்கு பின்னரே அவனுக்கு தன்னுணர்வு பிறக்கின்றது.
   அப்போது அவன் தன் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறான். அங்கே
   திருடன் ஒருவன் அமர்ந்து நன்னெறி சுவடுகளை எல்லாம் அழித்து
   வருவதைக் காண்கிறான்.

உறக்கம் என்பது மரணத்தின் சகோதரி - ஹதீஸ்

496. மெய்ஞானியர்களான அவர்கள் பேராசை, மனோ இச்சை, மனகலக்கம்
    ஆகியவற்றிலிருந்து விடுபட்டு விட்டவர்கள். வலையையும், கூண்டையும்
    விட்டு விடுதலையாகிவிட்ட பறவையை போல.


515. விழிப்புடன் (சாதாரண பகல் விழிப்பு} இருப்பவன் அதிக உறக்கத்தில்
    இருக்கின்றான். அவனுடைய விழிப்பு உறக்கத்தைவிட தாழ்ந்தது.

தெளிவுரை:
   உலக விவகாரங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருப்பவன் உலக
   ஆசாபாசங்களை மனதார ஆதரிப்பவன் உண்மையில் விழித்திருந்தாலும்
   அவன் இறைவனை மறந்து உழல்வதால் அவன் உறக்கத்தில் இருப்பவனே
   யாகும். அவனது அந்த விழிப்புநிலை உறக்கத்தைவிட கீழ்த்தரமானதாகும்.


517. நம் உயிர் இறைவனின் விஷயத்தில் விழிப்புடனில்லை என்றால் நமது
    விழிப்புநிலை சிறைக்கூட விழிப்பைப் போன்றது.

தெளிவுரை:
    இப்பிரபஞ்ச விழிப்புநிலை, இறைவனை தவிர்த்துவிட்டு, வெறும் உலகத்
    தொடர்பால் நிறைந்திருந்தால் உண்மையில் அது ஒரு சிறைக்கூடமாகும்,
    விழிப்பாகாது. உறவுகளும், தொடர்புகளும் உண்மையில் விலங்கு
    போன்றவை. நாம் அதில் கைதிகளே.


518. உயிரை நாள் முழுக்க எண்ணங்களின் நசிவும், லாப நஷ்டத்தின்
    கவலைகளும், இழத்தலின் பயமும் தான் ஆட்கொண்டிருக்கிறது.


539. வழியிலே (ஆன்மீகப் பாதையிலே) இதை விட கடினமான கணவாய்
    எதுவும் கிடையாது. பொறாமை இல்லாத மனிதன் பாக்கியவான்.

தெளிவுரை:
   ஆன்மீகப் பாதையிலே பொறாமையை விட கடினமான ஒரு கணவாய்
   எதுவுமே கிடையாது. யாருடன் பொறாமை இணையவில்லையோ அவன்
   மிகவும் பாக்கியசாலி என்றே கருத வேண்டும். ஏனெனில், இப்பாதையிலே
   பலவிதமான இடர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட ஆபத்தான,
   மிகவும் கடினமான ஒன்று இருக்கிறதென்றால் அது பொறாமை தான்.


641. உயிரிலும் மனதிலும் அந்த உற்சாகத்திற்குரிய ஆற்றல் இல்லை.யாரிடம்
    சொல்வேன்? உலகிலே யாரிடமும் செவி இல்லை.

தெளிவுரை:
    இறையாற்றலின் அறிகுறிகள் தென்பட்டதும் அதனை உற்சாகத்துடன்
    ஏற்றுக்கொண்டு தாங்கக்கூடிய ஆற்றல் யாரிடமும் கிடையாது. இதை
    யாரிடம் வெளிப்படுத்துவேன்? உலகிலே அதை செவியேற்றுக் கொள்ளக்
    கூடிய செவி யாரிடமும் இல்லையே!


642. எங்கே அதற்குரிய செவி இருந்ததோ உற்சாகத்தின் காரணத்தால்
    அது கண்களாகி விட்டன. எங்கே கற்கள் இருந்தனவோ அவை
    மாணிக்கக் கல்லாக மாறிவிட்டன.


652. இப்பிரபஞ்சம் உன் கண்ணெதிரே  மிகப்பெரியதாகவும் விசாலமான
    தாகவும் தென்பட்டாலும், இறை ஆற்றலுக்கு முன்னால் அது ஒரு
    அணுவுக்கும் சமமாகாது.

தெளிவுரை:
    இறைவனை அறியாதவன் , அறிந்து கொள்ள முயலாதவன் இந்த
    உலகத்தையே மிகப் பெரியது என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால்,
    இது இறைவனுக்கு முன்னால் ஒரு அணுவுக்கும் மிகச் சிறியது என்பதை
    அறிய மாட்டான்.
                           -•-
    இந்த ஞான மொழிகள் யாவும் மஸ்னவி ஷரீப் முதல் பாகத்திலிருந்து
    எடுக்கப்பட்டவை.
    ( மஸ்னவி ஷரீப் மொத்தம் நான்கு பாகங்கள்; விலை ரூ.1900/.)

                       மூலம்  :  மௌலானா ஜலாலுத்தீன் ரூமி
                   தமிழாக்கம்  :  நரியம்பட்டு M.A. ஸலாம்
                    வெளியீடு  :  ஃபஹீமிய்யா ட்ரஸ்ட்
                           -•-

வலைப்பதிவு வாசகர்களுக்கு வழங்குவது :மா.கணேசன்/ நெய்வேலி/ 23-07-2017
----------------------------------------------------------------------------

Saturday, 22 July 2017

மரமானது அதன் கனியினால் அறியப்படும்!





    இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே
    வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனி கொடாத
    மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.      
                   - புதிய ஏற்பாடு (மத்தேயு 3:10)
                       -•-

  இரண்டுவகை மான்களும் ஒரே மாதிரியான புல்லை மேய்ந்தன.
  ஒரே நீர்த்துறையிலிருந்து தண்ணீர் அருந்தின. ஒன்றிலிருந்து சாணம்
  கிடைத்தது, மற்றொன்றிலிருந்து கஸ்தூரி.
                  - சூஃபி ஞானி ஜலாலுதின் ரூமி
                       -•-

நீங்கள் உண்ணும் உணவு எவற்றைச் செய்வதற்கு, அல்லது சாதிப்பதற்கு
உங்களைத் தகுதி யாக்குகிறது?

உங்கள்  தோட்டத்தில் பல மரங்கள் உள்ளன. மாமரம், பலாமரம், வேப்பமரம்,
எல்லாம் உள்ளன. அவையனைத்தும் ஒரே நிலத்தின் சத்துக்களைக்கொண்டும்,
யாவற்றுக்கும் பொதுவாகப்பெய்யும் மழைநீரைக்கொண்டும்தான் வளர்கின்றன,
அவைகளுக்குரிய காலத்தில் பூக்கின்றன,  பிஞ்சுகளை விடுகின்றன; பிஞ்சுகள்
காய்களாகி  முற்றிக் கனிகளாகின்றன.  ஆனால், மாங்கனிகளும், பலாச்சுளை
களும்  தேன் போல இனிக்கின்றன! ஆனால், வேப்பங்கனிகள் கொத்துக் கொத்
தாக  பழுத்துக்  குலுங்கினாலும்  கசக்கவே செய்கின்றன,  இந்த வித்தியாசம்
எவ்வாறு  சாத்தியமாகிறது?  தோட்டத்தில்  உள்ள  எல்லா மரங்களும் ஒரே
நிலத்தில் அடங்கியுள்ள சத்துக்களையும், பொதுவாகப்பெய்யும் மழைநீரையும்
உறிஞ்சி தான் வளர்கின்றன!  ஆனால்,  ஒரு மரம் இனிப்பான  கனிகளையும்,
இன்னொரு மரம் கசப்பான கனிகளையும் விளைவிப்பது எவ்வாறு?

"இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல!" என்று நம்மில் சில அதிபுத்திசாலிகள்
சொல்லக்கூடும்!   அதாவது,  "மாமரம்  மாங்கனிகளைத் தான்  தரும்,  அது
அவ்வாறு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது,  இனிய  மாங்கனிகளைத் தருவது  
மாமரத்தின் இயல்பு! மாமரத்தில், கசப்பான வேப்பங்கனிகள் தோன்றாது! அதே
போல,  வேப்பமரத்தில்  இனிப்பான  மாங்கனிகள் தோன்றாது!"    என்பதாகச்
சொல்லிவிட்டு அவர்கள் தங்கள் வழக்கமானச் சுற்றில் மூழ்கிவிடுவர்!

ஆனால்,  இங்கு நாம் அக்கறைப்படுவது மரங்களின் இயல்பு பற்றியல்லாமல்
மனிதர்களின் இயல்பு பற்றியே! நாம் ஒரு மரத்தை பார்த்த மாத்திரத்திலேயே
இது 'மாமரம்' எனச்சொல்லிவிடலாம்; அம்மரம் மாங்காய்களைக் கொண்டிருந்
தாலும்,அல்லது கொண்டிராவிட்டாலும். ஏனெனில், ஏற்கனவே நாம் மாங்காய்
களையும், மாங்கனிகளையும் அம்மரத்தில் பார்த்திருப்பதினால்,அக்கனிகளைக்
கொண்டு அதை மாமரம் என இனம் பிரித்து அறிந்துவைத்திருக்கிறோம்!

இவ்வாறே,   மனிதர்களைப் பார்த்ததுமே  அவர்களின்  உருவத்தை  வைத்து
'மனிதர்கள்'  என நாம் இனம் கண்டுகொள்கிறோம்!  அவர்களுடைய  கனிகள்
எத்தகையவை? அதாவது, மனிதனுக்கேயுரிய இயல்பு அவர்களிடம் உள்ளதா?
அல்லது,  அவர்கள் மலட்டு மரங்களைப்போல் 'மலட்டு' மனிதர்களா? என்பது
போன்ற   மையமான  அம்சங்கள்   எதையும்   அறியாமலேயே  பொதுவாக
எல்லோரையும் நாம் மனிதர்கள் என கணக்கில் கொண்டுவிடுகிறோம்; அதில்
எவ்வித உறுத்தலுமின்றி,  நம்மையும் நாம் 'மனிதர்கள்' என்றே கருதிக்கொள்
கிறோம்! இன்னும் ஒரு படி மேலே சென்று மனிதர்களில் சிறந்த முன்-மாதிரி
யாகத்  திகழ்வதாக  நம்மை எண்ணிக்கொள்ளவும் செய்கிறோம்!  இத்தகைய
அணுகுமுறை மிகவும் மேலோட்டமானது மட்டுமல்ல,பெரிதும் ஆபத்தானதும்
ஆகும்!

நம்மையும்,  பிறரையும்  'மனிதர்கள்' என்று நாம் கருதிக்கொள்வதற்கு  சமூக,
கலாச்சார,  பொருளாதார,  அரசியல் ரீதியான பல அடிப்படைகளையும், மதிப்
பீடுகளையும்,  அளவுகோல்களையும்,  மரபுகளையும், நெடிய வரலாற்றையும்
நாம்  கொண்டிருக்கிறோம்.  ஆனால்,  அவையெதுவும்  உண்மையான மனித
இயல்பைத் தொடுவதுமில்லை,  எவ்வகையிலும்  அவை  மனித இயல்புடன்
தொடர்பு  கொண்டவையும் அல்ல!  உண்மையில்  "தான் யார்?",  "எத்தகைய
மெய்ம்மை?"   என்பது  பற்றிய   ஆழமான அறிவும்,   புரிதலும்  இல்லாமல்
மனிதனால் வாழப்படும் வாழ்க்கை எவ்வளவு மேலோட்டமானதாயும்,  அர்த்த
மற்றதாயும் இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மகிழ்ச்சி-
புள்ளி (Happiness- quotient) யைக் கொண்டு,  அதாவது  உண்மையில்
நாம்  எவ்வளவு  மகிழ்ச்சியாக  இருக்கிறோம்  என்பதைக் கொண்டு  அறிந்து
கொள்ளலாம்!

மனிதன்  தன்னைப்பற்றிச் சிறிதும்  அறியாதவனாய் வாழ்வானெனில், அவன்
ஒரு விலங்கைப் போலவே  வாழ்வான்!   மனிதன்   தன்னைப்பற்றித் தானே
அல்லது  சமூகத்துடன் சேர்ந்து  உருவாக்கிய புனைவுகளை, கற்பிதங்களைக்
கொண்டு  வாழ்வானெனில்,  அவன்  ஒரு விலங்கைப்போலவும் அல்லாமல்,
உண்மையான மனிதனைப்போலவும் அல்லாமல், மிகவும் பொய்யான இட்டுக்
கட்டிய  வாழ்க்கையையே வாழ்வான்!  மனிதன்  தன்னைப்பற்றிய  ஆழமான
புரிதலை அடைவானெனில்,  அதற்கேற்ப அவன் வாழ்க்கையை உண்மையாக
வும், முழு நிறைவோடும், குன்றாத மகிழ்ச்சியோடும் வாழ்வான்!

இதுதான் மனிதனையும் வாழ்க்கையையும் ஒன்றிணைக்கும் அல்லது சமப்
படுத்தும் சமன்பாடு:

                தன்னையறிதல் = வாழ்க்கை
         (மனிதனின் தன்னையறிதலுக்கு நேர்விகிதத்தில் வாழ்க்கையின்
         ஆழமும் முழுமையும் அமைகிறது)

ஆம்,வாழ்க்கை என்றாலே அது யாருடையது, எந்த ஜீவராசியுடையது என்பது
குறிப்பிடப்படாமல் அணுகவோ, பேசவோ இயலாது!  ஏனெனில், விலங்குஜீவி
களின்  வாழ்க்கை வேறு, சராசரி மனிதஜீவிகளின் வாழ்க்கை வேறு,  ஞானம்
அடைந்த மனிதஜீவிகளின் வாழ்க்கை வேறு! இம்மூன்று நிலைகளுக்குமுள்ள
வேறுபாடு முறையே உணர்வு நிலையிலுள்ள வித்தியாசமே ஆகும். விலங்கு
ஜீவிகள்  சுய-உணர்வற்றவை;  சராசரி மனிதஜீவிகள் சுய-உணர்வுடன் தேங்கி
விட்டவர்கள்; ஞானிகள் என்போர் முழு-உணர்வை அடைந்தவராவர்!

நாம்  உண்ணும் உணவு எதைச் செய்வதற்கு, அல்லது சாதிப்பதற்கு நம்மைத்
தகுதியாக்குகிறது?   இக்கேள்வி,  உணவைப் பற்றியதோ, அல்லது, உணவை
வைத்து மனிதர்களை விமர்சிப்பதோ அல்ல.  உணவு என்பது வெறும் கருவி,
அல்லது எரிபொருள் போன்றது மட்டுமே.  உடலின்  வளர்ச்சியும் ஆரோக்கிய
மும், முக்கியமாக நாம் காரியமாற்றுவதற்குத் தேவையானசக்தியும் உணவில்
தான் அடங்கியுள்ளது. ஆனால்,  நாம் அக்கருவியை, எரிபொருளை எவ்வாறு
பயன்படுத்துகிறோம்,    எத்தகைய  விளைபொருட்களை,  வெளிப்பாடுகளை
வெளிக் கொணரப்  பயன்படுத்துகிறோம்   என்பதையும்;  அவ்வெளிப்பாடுகள்,
விளைபொருட்கள்  நமக்கும், நம் சக-மனிதர்களுக்கும் நன்மைகளைத் தருகின்
றனவா,  அல்லது,   தீமைகளைச் செய்கின்றனவா   என்பதையும்  பற்றியதே
இக்கேள்வி!

மனிதர்கள்  ஒரேவித  உணவையே உண்டாலும், சிலரது வழியே நன்மைகள்
எனும்  கனிகளும், சிலரது வழியே தீமைகள் எனும் கனிகளும் விளைவதற்கு
உணவு  காரணம் அல்ல;  மாறாக,  அவரவரது  இயல்பே  காரணம்  ஆகும்!
மனிதர்களை  நல்லவர் எனவும், கெட்டவர் எனவும் இனம்பிரித்துக் காண்பது
எளிது;  பொதுவாக, பிறர்க்குத் தீமைகளைச் செய்யும் மனிதனை  கெட்டவன்
என்று சமுதாயம் அழைக்கிறது.  ஆனால்,  தன்னையறியாமலேயே  தனக்கே
தீமைகளைச் செய்துகொள்ளும் ஒருவனை என்னவென்று சொல்வது? ஆகவே,
செயல்களை வைத்து மனிதர்களை நல்லவர்,கெட்டவர் என்று இனம்காண்பது
மனிதனின் மையத்தைத் தொடாது!

இவ்வுலகம் தன்னையறியாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது!  மேற்புறத்தில்
நன்மைகள் எனத்தெரிவது ஆழத்தில் தீமையில், அஞ்ஞானத்தில், அறியாமை
யில்  வேர்கொண்டிருக்கலாம்;  ஆகவே, முடிவில் அவை தீமைக்கு ஏதுவாக
அமையக்கூடும்!   "நரகத்திற்கான பாதை நல்லெண்ணங்களால் அமைக்கப்படு
கிறது!" என்றொரு பழமொழி  உள்ளது! நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள்
இரண்டுமே எண்ணங்கள் தான்; எண்ணங்கள் சந்தர்ப்பவாதிகளைப்போன்றவை!
ஆகவே, எண்ணங்களுக்கு அடிப்படையான உணர்வு நிலைதான் உண்மையான
குற்றவாளி ஆகும்!  ஆகவே, மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற
அடிப்படையைக் கொண்டு  காண்பது தீர்வைத் தராது!  நல்லவன், கெட்டவன்
இருவரும்  ஒரே போலி நாணயத்தின்  இரண்டு பக்கங்களே ஆவர்!  மனிதன்
அசலானவனா,  போலியானவனா என்பதைக்கண்டுபிடிக்க முறையே அவனது
உணர்வின் தன்மையை,அதாவது ஒருவன் உணர்வுள்ளவனா,உணர்வற்றவனா
என்பதைக்  கொண்டு மட்டுமே முடிவு செய்யமுடியும்!  ஒருவனது  உணர்வு
நிலையில்  உள்ள குற்றம்,  அதாவது "உணர்வுக் குறைவு"  தான் அனைத்துத்
தீமைகளுக்கும் ஊற்றுக்கண் ஆகும்!

ஆம், இப்பூமி,  உணர்வு இருந்தும் உணர்வுகொள்ள விழையாத மனிதர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டு  அழிவின்  விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருகிறது! மனித
மனமானது  மாசுக்களால் நிறைந்திருப்பது போல புவியின் சூழலையும் மாசுக்
களால்  நிறைத்து விட்டனர்!  மனிதன் தனது உணர்வை அதற்குரிய அசலான
பணியில் பிரயோகிக்காவிடில் அவன் பிறவியெடுத்ததற்கான நற்கனியை ஒரு
போதும் ஈன்றெடுக்க மாட்டான்! மெய்ம்மையை அறிவதுதான் மனிதன்  மேற்
கொள்ளவேண்டிய ஒரே வாழ்க்கைப்பணியும், ஆன்மீகப்பணியுமாகும்! உயரிய
ஞானம் தான் அந்த நற்கனி!  ஆனால்,  மனிதர்களின்  பிரயாசை  முழுவதும்
உண்மையை, மெய்ம்மையைத் தவிர  உலகப் பொருட்களையும்,  விவகாரங்
களையும் பற்றியதாக மட்டுமே உள்ளது!

"என்ன செய்வது,  எங்களால் எங்களுடைய மட்டுப்பாடுகளைக் கடக்க முடிய
வில்லையே?  பாதை  இதுதான் என்று தெரிந்தாலும் அதில் பயணிக்க இயல
வில்லையே?"  என்பதாக பலர் ஒப்புக்காக ஒப்பாரி வைக்கின்றனர்! ஏனெனில்,
உண்மையிலேயே அவர்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின்
மட்டுப்பாட்டை உணர்ந்திருப்பின், அதைக்கடப்பதற்குரிய ஆர்வமும்,ஆற்றலும்
தங்களுக்குள்ளேயே இருப்பதை அவர்கள் பொக்கிஷப் புதையலை கண்டடைந்
தது போல  அதிசயித்து  அகமகிழ்வுடன் உணர்ந்திருப்பார்கள்! ஆனால், அவர்
களுடைய  துரதிருஷ்டம், அவர்கள் வாழ்க்கையை நேசிக்கவில்லை;  மாறாக,
அவர்கள்  தங்களையும்,  தங்களது விருப்பங்களையும் மட்டுமே நேசிக்கிறவர்
களாகச் சுருங்கிப் போயிருக்கிறார்கள்!

முழுமையாகத் தன்னை அர்ப்பணிப்பதற்கு
முழுமையாகத் தன்னை அளிப்பதற்கு
முழுமையாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு
உரிய ஒன்றை கண்டடையாதவனின் வாழ்வு
வீணிலும் வீணே வீணே வீணே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 19-07-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 19 July 2017

உள்ளதிலிருந்து உண்மைக்கு (A Metaphysical Odyssey!)




  உள்ளதை (உலகை)த் தழுவிக்கொண்டு உண்மை குறித்து வாளாவிருப்பவன்
  ஏற்கனவே மரணத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டவனாவான்!
                         -•-

எங்கிருந்து தொடங்குவது?
  உள்ளதிலிருந்து தான்!

எங்கே செல்வது?
  உண்மைக்கு!

உண்மை எங்கேயிருக்கிறது?
  உண்மை தனியே எங்குமில்லை! உள்ளதிலேயே
  உட்பொதிவாய் உள்ளடங்கியுள்ளது!

உள்ளது என்பது எது?
  இந்த உலகம், அதாவது பிரபஞ்சம், அதிலுள்ள அனைத்தும்,
  மனிதன் உள்பட!

உள்ளதை விட்டு உண்மைக்கு ஏன் செல்ல வேண்டும்?
  ஏனெனில், உள்ளதும் உண்மையும் ஒன்றல்ல!
  மேலும், உள்ளதை விட்டு உண்மைக்குச் செல்ல வேண்டாம்.
  உள்ளது தான் உண்மைக்கு செல்கிறது!

அப்படியானால், உள்ளது உண்மையில்லையா?
  உண்மையை நோக்கிய இயக்கம் என்கிற வகையில் மட்டுமே உண்மை!

அப்படியானால் உள்ளதற்கும் உண்மைக்கும் உள்ள தொடர்பு என்ன?
  உள்ளது (பிரபஞ்சம்) என்பது ஒரு விருட்சமெனில் உண்மை என்பது
  அவ்விருட்சத்தின் வித்து ஆகும்!  வித்து விருட்சமாக விரிந்து,
  மீண்டும் (தன் கனிக்குள் தோன்றும்) வித்தினுள் அடங்குகிறது!
  ஒரு வட்டம் பூர்த்தியாகிறது! வித்தில் தொடங்கியது வித்தில் முடிகிறது
  அதாவது முழுமையடைகிறது!

உண்மைக்கு ஏன் செல்ல வேண்டும், உள்ளது போதாதா?
  போதாது என்பதால் தானே அது தொடர்ந்து வளர்ந்து செல்லும்
  ஒரு (பரிணாம) இயக்கமாக இருக்கிறது! உள்ளது பூரணமாயிருந்தால்
  அது இயங்கவோ வளரவோ வேண்டியதில்லையே!
  உள்ளது பூரணமற்றது, முழுமையற்றது, ஆகவே நிலையற்றது. ஆகவே,
  நிரந்தரமற்றது! நதியின் உய்வும், நிறைவும் சமுத்திரம் சேருவதிலேயே
  அடங்கியுள்ளது!

உள்ளதற்கும், மனிதனுக்கும், உண்மைக்கும் உள்ள தொடர்பு என்ன?
  உள்ளதன் (உலகின்) பிரதிநிதி தான் மனிதன்; மனிதனின் மலர்ச்சியே
  உண்மை! உண்மையில், மனிதனானவன் உலகைவிட உண்மைக்குத்தான்
  அதிக அருகில் உள்ளான்! ஆனால், அவன் தனது தவறான விருப்பங்களின்
  அடிமையாகி உலகப்பொருட்களுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கிறான்!
  அதனால் அவன் உண்மையிலிருந்து வெகு தொலைவு விலகியிருக்கிறான்!

உள்ளதன், அதாவது உலகின் பகுதியாக விளங்கும் மனிதன் எவ்வாறு
உண்மைக்கு நெருக்கமாக இருப்பதாகக் காணமுடியும்?
  முதலிடத்தில், உலகம் என்பது தனக்குச் சொந்தமானதாக, தன்னைச் சேர்ந்த
  தாயிருக்கவில்லை! மேலும், மனிதன் ஏற்கனவே காக்கைக்கூட்டில் வாழும்
  குயில் குஞ்சுகளைப்போலத்தான் இவ்வுலகில் வாழ்ந்துவருகிறான்! உலகம்
  மொத்தமும் உண்மையைச் சேர்ந்ததும் உண்மைக்குச் சொந்தமானதுமாகும்!
  ஏனெனில், உண்மையின் விசேடமானதொரு வெளிப்பாடு, அல்லது
  உருமாற்றம் தான் உலகம் என்பதாகும்! உலகின் ஒரே மாபெரும் விழைவு
  உண்மையாக உருமாறுவது, அதாவது தனது உண்மையைத் தரிசிப்பதே!
  ஆனால், உலகம் நேரடியாக ஒரே முயற்சியில் அதைச் சாதித்து
  விட முடியாது! ஆகவேதான் உலகமானது முதலில் உயிர்ஜீவியாக
  அவதாரம் எடுத்தது! உயிர்ஜீவிகளின் வழியாக உலகமானது உயிர்-இருப்பு
  எனும் சுற்றுவட்டப்பாதையில் மட்டுமே தன்னை எய்துகொள்ள முடிந்தது!
  அடுத்ததாக, அது மனிதஜீவியாக அவதாரம் எடுத்ததில், உணர்வு-இருப்பின்
  தொடக்க நிலையைக்குறிக்கும் சுற்றுவட்டப்பாதையில் மட்டுமே தன்னை
  எய்துகொள்ள முடிந்தது! அதாவது, உயிரும், உணர்வுமற்ற சடப்பிரபஞ்ச
  மானது உயிர்-ஜீவியாக மாற்றமடைந்தாலும், உயிர்-ஜீவிகளில் எதுவும்
  பிரபஞ்சத்தினுடைய உண்மையை உணர்ந்தறிவதற்கு உதவிடவில்லை!
  மாறாக, உயிர்-ஜீவிகள் அனைத்தும் வெறுமனே உயிர்-பிழைப்பதை மட்டுமே
  தம் வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டுவிட்டன!
 
  ஆகவே பிரபஞ்சமானது உயிர்-ஜீவி என்ற நிலையிலிருந்து 'மனிதன்' எனும்
  அடுத்த நிலைக்கு பரிணமித்தது! ஆனால், மனிதஜீவிகளும் உயிர்-பிழைத்தல்
  என்பதிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர்! அதாவது,
  மிகவும் பிறழ்ச்சியான வகையில், உயிர்-பிழைப்பதை எவ்வளவு அலங்கார
  மாகவும், ஆடம்பரமாகவும், பகட்டாகவும் செய்யவியலும் என்பதையே தம்
  ஒரே பிரதான குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டுவிட்டனர்!
  எனினும், மிக அரிதாக கோடியில் ஓரிருவர், பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த
  விழைவைத் தம்முள் உணர்ந்தவராக உண்மை மீது பெருநாட்டம் கொண்டு
  உண்மையைக் கண்டடைதலுக்காக தம் வாழ்க்கையை முழுமையாக
  அர்ப்பணித்துவிடுவதுடன், உண்மையைத் தம் வாழ்-காலத்திற்குள்ளாகவே
  கண்டடைந்தும் விடுகிறார்கள்! ஏனெனில், "உண்மை" தான் பிரபஞ்சம்
  மற்றும் மனிதனின் உள்ளார்ந்த விழைவு ஆகும்!

  மேலும், ஒருவகையில் மனிதன் உலகின் ஒருபகுதியே என்றாலும் அதுவே
  அவனைப்பற்றிய முழுமையான, இறுதியான உண்மையல்ல! இதை நாம்
  தெளிவாகப்  புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் மனிதன் என்பவன்
  உலகின், பிரபஞ்சத்தின் எத்தகைய பகுதி என்பதைப் புரிந்து கொண்டாக
  வேண்டும்! அதாவது, பிரபஞ்சம் என்பது ஒரு விருட்சம் எனில், நாம் அதன்
  கிளைகளா, இலைகளா, பூக்களா, அல்லது பிஞ்சுகளா, காய்களா, அல்லது
  அப்பிரபஞ்ச விருட்சத்தின் கனிகளா என்பதை உடனடியாக அறிந்தாக
  வேண்டியது முக்கியமாகும்! பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த பரிணாமவளர்ச்சிக்
  கிரமத்தின்படி பார்க்கும் போது, மனிதர்கள் பிரபஞ்ச விருட்சத்தின்
  பிஞ்சுகளும், காய்களுமாகவே இருக்கிறார்கள்! ஏற்கனவே சொல்லியவாறு
  கோடியில் ஓரிருவர் மட்டுமே பிரபஞ்ச விருட்சத்தின் ஒப்பற்ற கனிகளாக
  மாறி பிரபஞ்சத்தை முழுமைப்படுத்துகின்றனர்! அதாவது அவர்கள்
  இப்பிரபஞ்சத்தின் பகுதியாக இல்லாமல், உண்மையின் பகுதியாக விளங்கு
  கின்றனர்! மிக அரிதான இத் தனிமனிதர்கள் உள்ளதற்கும், உண்மைக்குமான
  இடைவெளியை தங்களைக்கொண்டு நீக்கிவிடுகின்றனர்!

  அதாவது, மனிதர்கள் பிரபஞ்சத்தின் பகுதியாக அமைந்திருப்பது அவர்களைப்
  பற்றிய தொடக்க நிலை நிலவரம் ஆகும்! அதாவது, அவர்கள் முழுமையாக
  ஒரு உணர்வாகத் தங்களை உணராத பருவத்தின் நிலையாகும்! மேலும்,
  விருட்சத்தின் உவமையைக்கொண்டு சொன்னால், விருட்சத்தின் பிஞ்சுகள்
  முற்றிக் கனியாதவரை தான் அவை விருட்சத்தின் பகுதிகளாக நீடிக்கின்றன!
  நன்கு முற்றிக்கனிந்ததும் அவை விருட்சத்தை விட்டு நீங்கிவிடுகின்றன!
  உண்மையைச் சொன்னால், வித்தினால் தான் விருட்சத்தின் பிறப்பும்,
  இருப்பும், முடிவும், முழுமையும், அர்த்தமும் யாவும் அமைகின்றன!
  இந்த விளக்கத்தையே ஒரு சூத்திரமாகச் சொன்னால் :

                   வித்து தான் விருட்சமாகிறது!
                   விருட்சம் மீண்டும் வித்தினுள் அடங்குகிறது!
                   விருட்சம் மாயை!
                   வித்து மட்டுமே நிஜம்!
                 
உண்மையில், "உண்மை" என்பதுதான் என்ன?
  உண்மை என்பது ஒருமையும் முழுமையுமான மெய்ம்மை! அதுவே
  உள்ளதனைத்தின் சாரம் - மூலமும், முடிவும்! மனிதனைப்பொறுத்தவரை,
  உண்மை என்பது அவனை முழுமைப்படுத்தி உய்விக்கும் உயிரின் உயிர்!
  மரணம் கடந்த பேரிருப்பு! உலக இயற்கையைக் கடந்த பேரியற்கை!
  அவனது ஆன்மாவின் ஆன்மா!
 
உண்மை என்பது எத்தகைய மெய்ம்மை? அது ஒரு பொருளா, அல்லது
பொருள் தன்மைக்கு மாறானதா?
  உண்மையானது அதன் ஆகச்சுருங்கிய அடிமட்ட நிலையில் வெறும் சடப்
  பொருளே! அதன் அசலான உச்ச மட்ட நிலையில் அது ஒரு பேருணர்வு!
  இவ்விரண்டு எல்லைகளுக்கிடையே அது உயிர்-ஜீவிகளில் உயிராகவும்,
  மனிதனுள் சிற்றுணர்வாகவும் உள்ளது! அதே வேளையில், உண்மைக்குச்
  சமமான அல்லது நிகரான எதுவும் உலகில் இல்லை! அதோடு, கால-வெளிச்
  சட்டகத்தினுள் ஒருபோதும் உண்மை என்பது வெளிப்படப்போவதுமில்லை!
  ஏனெனில், "காலாதீதம்" தான் உண்மையின் வீடு ஆகும்!

"காலாதீதம் தான் உண்மையின் வீடு!" என்றால் கால-வெளி உலகில் வாழும்
மனிதன் எவ்வாறு உண்மையை உணரமுடியும்?
  உணர்வை (அதாவது மனிதன் தன்னை) காலத்திலிருந்து விடுவித்துக்கொள்
  வதன் மூலம் உடனடியாக காலாதீதத்தை உணரலாம்! காலத்திலிருந்து
  எவ்வாறு விடுவித்துக்கொள்வது என்றால், கடந்த காலம், வருங்காலம்
  இரண்டையும் அவ்வப்போது தற்காலிகமாக மறந்து இப்போதில் வாழ்வதன்
  மூலம் ஒருவன் தன்னை மிக எளிதாக காலத்திலிருந்து விடுவித்துக்
  கொள்ள இயலும்! அல்லது கால-உணர்வின்றி எல்லா விஷயங்களையும்
  தற்காலிகமாக மறந்து இருப்பதன் மூலமும் எளிதாக இதைச் சாதிக்கலாம்!
  அதே நேரத்தில், இவற்றை ஒருவன் வெறும் தந்திரோபாயமாகக் கடைபிடிப்
  பதன் வழியாக எதையும் சாதிக்க இயலாது! மாறாக, எவனொருவன் தீவிர
  மாக உண்மையை நேசிக்கிறானோ அவனால் மட்டுமே உண்மையை அறிய
  இயலும்! உலகம் ஏன் எதற்காக உள்ளது? அதில் தாம் ஏன், எதற்காக இருக்
  கிறோம்; தனது இருப்பின், வாழ்வின் உண்மையான நோக்கம், குறிக்கோள்,
  மற்றும் அர்த்தம் அல்லது இலக்கு தான் என்ன? என்றெல்லாம் ஆழமாக
  விசாரம் செய்யாமல், வெறுமனே சில ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதன்
  மூலம் எவ்வொரு ஆன்மீக வளர்ச்சியும், மாற்றமும் ஏற்படாது!

மனிதனின் பகுத்தறிவு "பருப்பொருளாலான உலகம் மட்டுமே நிஜம்"
என்கிறதே?
  மனிதன் பகுத்தறிவுடன் நின்றுவிடுவது மிகவும் ஆபத்தான
  மட்டுப்பாடாகும்! ஏனெனில், பகுத்தறிவு என்பது இறுதியான அறிவு அல்ல!
  அனைத்தையும் பகுத்தறியும் மனிதன் தொகுத்தறியத் தவறுவது ஏன்?
  பகுத்தறிவைத் தாண்டிய மனிதனின்  "தொகுத்தறிவு" சொல்கிறது:
  "மனித உணர்வைக் கடந்த ஒரு பேருணர்வு தான் இறுதி நிஜம்!"

பருப்பொருளல்லாத நிஜங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளனவா?
  இக்கேள்வியை பருப்பொருளாலான மனித-உடல் கேட்பதாகத்
  தெரியவில்லை! மாறாக, மனிதமனம், அல்லது மனிதஉணர்வு தான்
  கேட்கிறது! ஆம், உணர்வாகிய மனிதன் ஒரு பருப்பொருளல்லாத
  நிஜமே ஆவான்! இன்னும், ஒவ்வொரு புழு, பூச்சியின் உயிர் எனும்
  அம்சமும் பருப்பொருளல்லாத நிஜமே!
  மேலும், பிரபஞ்சம் என்பது கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், கோள்களைக்
  கொண்ட  வெறும் சடப் பொருட்களின் மாபெரும் அமைப்பு மட்டுமல்ல!
  இதையடுத்து எழுந்த இரண்டாவது பிரபஞ்சம் ஒன்றும் உள்ளது. ஆம்,
  உயிர்-ஜீவிகளின் கோளம் தான் அது! இதையடுத்து எழுந்த மூன்றாவது
  பிரபஞ்சம் உணர்வு-ஜீவிகளான மனிதர்களின் உணர்வுக்கோளம்!

புழு, பூச்சிகள், விலங்குஜீவிகள் யாவும் பருப்பொருளாலானவை தானே?
  ஆம்! அதே நேரத்தில் கூழாங்கற்களும் பருப்பொருளாலானவை தான்;
  ஆனால், அவை உயிரற்றவையாக உள்ளனவே! அப்படியானால், பருப்
  பொருளில், 'உயிரற்ற', உயிருள்ள' என இரண்டு வகைகள் உள்ளனவா?
  இன்னும், இவ்விரண்டையும் கடந்து உணர்வுள்ள பருப்பொருள் என
  மூன்றாவது வகையும் உள்ளதா என்ன? ஒரு புழு என்பது பருப்பொருளால்
  போர்த்தப்பட்ட, அல்லது வடிவமைக்கப்பட்ட "உயிர்" ஆகும்! அல்லது உயிர்
  என்பது ஒரு "இருப்பு நிலை", அந்த நிலையை எட்டித் தொடர்பு கொள்ளும்
  வகையில் சுய-அமைப்பாக்கம் பெற்ற ஒரு ஜீவியே புழு என்பதாகும். ஒட்டு
  மொத்த சடப் பிரபஞ்சத்தைக்காட்டிலும் உயிருள்ள ஒரு புழு உயர்வானது!

அப்படியானால், மனிதன் எத்தகையவன்?
  சடம், உயிர், உணர்வு ஆகிய இம்மூன்று பண்புகளின் சங்கமம் தான்
  மனிதன்! மனிதன் உணர்வுள்ளவன் என்பது தான் அவனைப்பற்றிய தனிச்
  சிறப்பு! இன்னும் துல்லியமாகச் சொன்னால், மனிதன் உணர்வைக்
  கொண்டவன் அல்ல; மனிதனும் உணர்வும் வேறு வேறல்ல! உணர்வு தான்
  மனிதன்! இவ்வளவு துல்லியமாக தன்னை உணரும் அளவிற்கு எல்லா
  மனிதர்களும் இன்னும் வளரவில்லை! "தான் ஒரு உணர்வே!" என்பதை
  உணரும் போதுதான் உண்மையில் மனிதன் பிறக்கிறான்! இதற்கு முந்தைய
  அவனது நிலைகள் யாவும் வெறும் முன்னேற்பாடுகளே! இறுதியாக அவன்
  பேருணர்வுடன் சங்கமிக்கும் போதுதான் முழுமையடைகிறான்!

ஆனால், உள்ளது (அதாவது உலகம்) மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக்
கொள்கிறதே? மேலும், அது, உண்மையைச் சுட்டும் வகையிலான  யாதொரு
குறிப்பையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லையே
  இல்லை! உண்மையில், உலகம் மனிதனை ஆக்கிரமித்துக்கொள்வதில்லை!
  மாறாக, மனிதன் தான், "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்!" என்பதாக
  தன்னுணர்வற்றவனாக முழுமையாக உலகைச் சார்ந்தே வாழ்ந்துகொண்டு
  இருக்கிறான்! உணர்வுக்கொழுந்தான மனிதனுக்கே "தான் ஏன் இந்த உலகில்
  வாழ்ந்த்து கொண்டிருக்கிறோம்?", "உலகம் ஏன் எதற்காக இருக்கிறது?"
  என்பது போன்ற கேள்விகள் தோன்றாதபோது, உயிரும் உணர்வுமற்ற
  சட- உலகம் எவ்வாறு உண்மையைப் பற்றிய குறிப்பை நேர்முகமாக வழங்க
  இயலும்? அதே நேரத்தில், உண்மையின் நிறம், மணம், மற்றும் சுவை
  என்னவென்று அறியாவிட்டாலும், அவற்றையெல்லாம் அறியக்கூடிய வகை
  யிலான உயிருள்ள உணர்வுள்ள மனிதஜீவியாக உலகம் பரிணமித்தது! ஆம்,
  உண்மையில் ஒவ்வொரு மனிதஜீவியும் ஒரு குறும் பிரபஞ்சமே ஆவான்!
  அதாவது, பிரபஞ்சத்தின் சார்பாக உண்மையை அறிவதற்கான உணர்வுப்
  பூர்வமான பிரதிநிதியே ஒவ்வொரு மனிதனும் ஆவான்! ஆம், பிரபஞ்சத்தின்
  ஒரு விசேட வடிவம் அல்லது அவதாரம் தான் மனிதன்! ஆகவே,
  உண்மையை அறியும் பொறுப்பு முழுக்கமுழுக்க ஒவ்வொரு மனிதனையும்
  சார்ந்ததே!

உள்ளது(உலகம்), உண்மை இவ்விரண்டில் எது முக்கியம்? அல்லது மனிதனின்
வழியாக உலகமானது உண்மையை அறிந்த பிறகு, இவ்வுலகம் என்னாகிறது?
மனிதன் என்னாகிறான்,
  சந்தேகத்திற்கிடமில்லாமல் "உண்மை" மட்டுமே முக்கியமானது!
  உண்மையை அறிந்த பிறகு, உள்ளது, உண்மை எனும் பிளவு அல்லது
  இருமை நீக்கப்பட்டு பிரபஞ்சம், மனிதன், யாவும் ஒருமையில் கலந்து
  விடுகின்றன! இதற்கான நிரூபணம் உண்மையை நேரடியாகத் தம்முள்
  உணர்பவருக்கு மட்டுமே புலனாகும்!  ஏனெனில், உண்மை என்பது உணர்வு
  மயமானதொரு மெய்ம்மையாகும்; அதாவது, அதுவே உணர்வின் உச்சமும்,
  முழுமையும், இறுதிச் சொல்லும் ஆகும்!

  மேலும், எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் எதுவென்றால்,
  எந்த உலகைச் சார்ந்து நாம் வாழ்கிறோமோ அந்த உலகம் அநித்தியமானது
  என்பதைவிட, மனிதஜீவிகளாகிய நாம் எவ்வளவு தற்காலிகமானவர்கள்
  என்பதே நமது சீரிய கவனத்திற்குரிய விஷயமாகும். நாம் வாழ்ந்துகொண்டு
  இருக்கும் இந்த உலகம் நம்மை அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு
  மேல் உயிருடன் வைத்திருப்பதில்லை! இதில், எவ்வளவு குறுகியது நமது
  'வாழ்-காலம்' எனக் குறைபட்டுக்கொள்வது அல்ல நாம் ஒவ்வொருவரும்
  செய்யக்கூடிய பெரிய சாதனை! மேலும், அதிக பட்சம் ஒருவர் எவ்வளவு
  ஆண்டுகள் உயிருடன் இருக்கப்போகிறார் என்பது  எவருக்கும் தெரியாது!
  ஆக, எது முக்கியம் எனில், உயிருடன் இருக்கும் இந்தக்கணம் மட்டுமே!
  இவ்வாறு சொல்வதன் நோக்கம், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை பெரிது
  படுத்துவதோ, அல்லது, நம்பிக்கை கொள்வதை வலியுறுத்துவதோ அல்ல!
  மாறாக, இந்தக்கணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை முழுமையாகவும்,
  ஆழமாகவும், தீவிரமாகவும், வாழ்வது, அதாவது, உணர்வுகொள்வது
  மட்டுமே முக்கியமாகும்! அதாவது, ஒருவரது வாழ்-காலம் நாற்பது, ஐம்பது
  ஆண்டுகளோ, அல்லது அறுபது, எழுபது ஆண்டுகளோ, எவ்வளவாயினும்
  அக்காலப்பகுதி மட்டுமே இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில்
  அதிமுக்கியத்துவம் வாய்ந்த அம்சமும்; ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ள
  "அரிய வாய்ப்பும்" ஆகும்!

  ஒருவனது வாழ்-காலம் எனும் அரிய வாய்ப்பு குறுகியதோ, அல்லது
  நெடியதோ, அது தன்னுள் கொண்டிருக்கும் சாத்தியம் அளவற்றதாகும்!
  அதாவது, மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் சாதித்தாக வேண்டிய
  அந்த ஒப்பற்ற  இலக்கு எதுவோ அதை இக்கணத்திலேயே ஒவ்வொரு
  வராலும் சாதிக்க முடியும்!

  ஆகவே, ஒவ்வொரு மனிதனும் "வாழ்க்கை" எனும் இந்த அரிய வாய்ப்பை
  தன்னுடைய உண்மையான ஆதாரத்தைக் கண்டடைவதற்கான வழியில்
  முறையாகப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்! ஏனெனில்,
  இந்த உலகம் மனிதனைக் கைவிட்டுவிடும்! ஆகவே, மனிதன் இவ்வுலகைச்
  சார்ந்திருப்பதில் அர்த்தமில்லை! அவ்வாறே அவனது உடலும், இன்னரும்
  உயிரும் அவனைக் கைவிட்டுவிடும்! கடவுள் நம்பிக்கை என்பது வெறும்
  ஆறுதலை மட்டுமே அளிக்கக்கூடிய சுய-மனோவசியம் ஆகும்!  கடவுள்,
  உண்மை, அல்லது இறுதி மெய்ம்மை என எதுவாயினும் அது மனிதனின்
  உணர்வில் ஏற்படக்கூடிய மாபெரும் மாற்றத்தினால் மெய்ப்பட வேண்டும்!
  இல்லாவிடில், கடவுள், உண்மை, மெய்ம்மை, அர்த்தம் என்று
  சொல்லப்படும் யாவும் வெறும் கோட்பாடுகள் மாத்திரமேயாகும்!

  "உண்மை" என்பது தத்துவவாதிகளின் கற்பனைக் கண்டுபிடிப்போ, அல்லது
  அறிவுஜீவிகளின் கோட்பாடோ அல்ல! மாறாக, மிகுந்த பசியோடிருக்கும்
  ஒருவனுக்கு உணவு எவ்வாறு ஆருயிர் மருந்தாக அமைகிறதோ, அவ்வாறே
  "உண்மை" என்பது உணவை விட அனந்த அளவு மெய்ம்மைத்தன்மை
  உடையதாகும்! மேலும், உணவு வயிற்றை நிரப்பி பசியை மட்டுமே நீக்கும்!
  உணவு, வாழ்வின் அர்த்தத்திற்கான பசியைப் போக்காது!
  ஆனால், உண்மையோ, மனிதனுக்கு வாழ்வின் அர்த்தத்தை அளிப்பதுடன்,
  முழு நிறைவையும், அகலாத ஆனந்தத்தையும் தந்து இறவாத்தன்மையை
  யும் அளிக்கும் அமிர்தம் ஆகும்!

  ஆனால், சாதாரண, சராசரி மனிதர்களுக்கு கண்களுக்குப் புலப்படாத
  உண்மையைவிட, கண்முன்னே தெரியும் உலகம் மட்டுமே நிஜமானதாகவும்,
  நிரந்தரமானதாகவும் படுகிறது! ஆகவே, பொதுவாக மனிதர்கள் உலகத்திற்கு
  மாற்றாக, ஈடாக வேறு எத்தகைய மகா-மெய்ம்மையையும் ஏற்றுக்கொள்ள
  மாட்டார்கள்! ஒரு தவளையைப் பொறுத்தவரை, அதற்கு தன்னைச் சுற்றி
  ஒரு மாபெரும் உலகம் இருப்பதே தெரியாது! மாறாக, தவளைக்கு அதன்
  இரையும், இணையும், பகை-விலங்கும் மட்டுமே தெரியும்! தவளையின்
  இந்த மட்டுப்பாட்டுடன் ஒப்பிடுகையில் மட்டுமே சராசரி மனிதர்கள்
  தவளையைவிட மேலானவர்கள் எனலாம்! அதாவது, மனிதர்களுக்கு உலகம்
  என்று ஒன்று உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், உலகம் ஏன்,
  எதற்காக இருக்கிறது? அதில் நாம் ஏன் இருக்கிறோம்? நம்முடைய
  வாழ்வின் குறிக்கோள் என்ன? என்பதெதுவும் மனிதர்களுக்குத் தெரியாது!
  ஏனெனில், இவற்றைப் பற்றியெல்லாம் புரிந்துகொள்வதன் அவசியத்தையும்,
  முக்கியத்துவத்தையும் உணரும் அளவிற்கு இன்னும் அவர்கள்
  'உணர்வு-வளர்ச்சி' பெறாதவர்களாக இருக்கிறார்கள்!

  உண்மையை அறிந்த பிறகு, இவ்வுலகம் என்னாகிறது? மனிதன்
  என்னாகிறான்? எனும் இக்கேள்வி பாமரத்தனமானது! உலகின் இருப்பு
  அவர்களுடைய பார்வையை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளுமாறு
  விட்டுவிட்ட அவர்களால் வேறு எதைப்பற்றியும் கவனம் கொள்ளவும்,
  சிந்திக்கவும் இயலுவதில்லை! அவர்களும் தங்களது அன்றாடத்
  தேவைகளைத் தாண்டி வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதும் இல்லை!
  "உண்மை" என்பது உலகின் ஏதோவொரு சிறு பகுதியைப் பற்றிய விபரம்
  அல்ல; மாறாக ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் சாரத்தைப் பற்றிய உண்மை!
  ஒரு விருட்சத்தின் உண்மை என்பது அவ்விருட்சத்தின் கனிகளுக்குள்
  இருக்கும் வித்து ஆகும்! வித்து என்பது விருட்சத்தின் சாரம் மட்டுமல்ல,
  அதுவே அதன் மூலமும், முடிவும் (முழுமையும்) ஆகும்! ஒரு வித்தினுள்
  ஒரு முழு விருட்சமே அடங்கியுள்ளது; ஆனால், அவ்வித்தினுள்
  விருட்சத்தின் எவ்வித சாயலும், அதாவது, விருட்சத்தின் கிளை, இலை, பூ,
  பிஞ்சு, காய் போன்ற எவ்வொரு பகுதியின் சாயலும் காணப்படுவதில்லை!
  அவ்வாறே, இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உள்ளடங்குகிற ஒரு வித்து
  தான் "உண்மை" எனப்படுவதாகும்! அந்த "உண்மை" தான் பிரபஞ்சத்தின்
  ஆதாரமாகும்!

  இவ்விடத்தில், பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு
  எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்! ஒரு விருட்சத்திற்கும்
  (மரத்திற்கும்) அதன் காய்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ
  அத்தகையதே பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பும் ஆகும்!
  ஆம், மனிதர்கள் பிரபஞ்ச விருட்சத்தின் பிஞ்சுகளும் காய்களும் ஆவர்!
  இந்த உவமை சற்று கற்பனைக்கு எட்டாததாய்த் தெரியலாம்; ஆனால்,
  இது தான் மனிதனைப் பற்றிய உண்மை! அதாவது, பிரபஞ்ச விருட்சத்தின்
  பிஞ்சுகளும் காய்களுமான மனிதர்கள் தங்கள் உணர்வில் முற்றிக் கனியும்
  போது, கனியினுள் இருக்கும் வித்தில் விருட்சம் அடங்குவது போலவே
  உணர்வில் நன்கு கனிந்த மனிதனுள் இப்பிரபஞ்சம் அடங்கிப்போகும்! ஆம்,
  உணர்வில் கனிந்த நிலை தான் "உண்மை" என்பதாகும்! ஆக, உண்மையை
  உணர்ந்த பிறகு உலகமும், மனிதனும், உணர்வு கனிந்த "முழு-உணர்வு"
  நிலையில் அடங்கிப்போவார்கள்!

  அதே நேரத்தில், ஒரு விருட்சத்தில் கனிகள் தோன்றிய பிறகும் கூட
  இதன் அர்த்தம் ஒரு விருட்சத்தில் கனிகள் தோன்றியவுடன் அவ்விருட்சம்
  காணாமல் போய்விடும் என்பதல்ல! நன்கு கனிந்த கனியானது
  விருட்சத்திலிருந்து விடுபட்டுவிடும் என்பதும் உண்மையே! அதேநேரத்தில்,
  நன்கு கனிந்திருந்தாலும் கனிகள் கீழே விழாமல் விருட்சத்திலேயே சிறிது
  காலம் இருப்பதும் உண்டு! அவ்வாறே, உண்மையை உணர்ந்த பிறகும்
  மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதுண்டு! நன்கு கனிந்ததும், விருட்சத்தின்
  கனி கீழே தரையில் விழுந்துவிடும். ஆனால், உணர்வில் முழுமையாகக்
  கனிந்த மனிதன் காலாதீதத்துள் ( நித்தியத்துள்) ஐக்கியமாகிறான்!
  உண்மையை உணர்ந்த மனிதன் காலத்தின் உலகில் கால்பதித்திருந்தாலும்,
  அதேசமயம் அவனது இதயமும், தலையும் காலாதீதத்தினுள்
  அடைக்கலம் அடைந்திருக்கும்!
 
  அதேநேரத்தில், ஒரு விருட்சத்தில் தோன்றும் பிஞ்சுகள் எல்லாமும்
  காய்களாகி முற்றிக் கனிந்துவிடுவதில்லை என்பதைப்போலவே, பிரபஞ்ச
  விருட்சத்தின் பிஞ்சுகளான மனிதர்கள் எல்லாருமே தம் உணர்வில் கனிந்து
  விடுவதில்லை! சொல்லப்போனால், பெரும்பாலான மனிதர்கள் பிஞ்சு
  நிலையிலேயே உதிர்ந்து போய்விடுகின்றனர்! கொஞ்சம் பேர்கள் மட்டுமே
  சிறிது முற்றிய காய்களாக ஆகின்றனர்! அரிதிலும் அரிதாக மிகச் சிலரே
  கனிகளாகின்றனர்!

  ஆம், "உண்மை" என்பது பிரபஞ்சம் மற்றும் அனைத்தின் முடிவு ஆகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 14-07-2017
----------------------------------------------------------------------------
  

Wednesday, 12 July 2017

வாழ்க்கை நமக்குத் தொழில்!




     மனிதன் என்பவன் தன்னில் தானே தோன்றினவனல்ல!
       ஆனால், அவன் தன்னில் தானே முடிவானவன்!
     அதற்கு அவன் தன் எல்லைகளை அறிந்திடல் வேண்டும்!
       உடலைப் போர்த்திய தோல் அல்ல மனிதனின் எல்லை!
     அது பிரபஞ்சப் பெருவெளியையும் உள்ளடக்கியது!
       பிரபஞ்சம் தன் மையம் அடையும் நெடிய முயற்சியில்
     உருமாற்றம் பெற்ற தற்காலிக மையம் தான் மனிதன்!
       மனிதனின் மையமோ அவனது அகம் கடந்த புள்ளியில்!
     மனிதனே! நீ உன் உண்மை மையம் அறிவதெப்போது?

     மனிதன் வாழப்பிறந்தவன், எம்மனிதனும் எவ்வொரு குறிப்பிட்ட
       பணிக்காகவும், தொழிலுக்காகவும் உருவாக்கப்பட்டவனல்ல!
     ஆனால், அவனவன் தன் விருப்பப்படியும், திறமைக்கேற்பவும்
       எப்பணியையும், தொழிலையும் தேர்ந்து மேற்கொள்ளலாம்!
     பணியையும், தொழிலையும் ஒருவன் மீது திணிப்பதும்
       தொழிலை வைத்து மனிதனை இனம்பிரிப்பதும் மடமையாகும்!
     மனிதன் வாழப்பிறந்தவன், வாழ்தலே அவனது முதல்தொழில்!
       வாழ்வின் உண்மையை அறிதலே உண்மையான வாழ்தல்!
     பிறயாவும் முதல்தொழிலுக்குச் சேவை புரியும் உபதொழில்களே!

     முதல் தொழிலுக்கு மனமுவந்து வாய்ப்பு வழங்காத சமுதாயம்
       மனிதர்களைப் பிரித்தாளும் நயவஞ்சகர்களின் கூடாரம்!
     அவனவன் தன் தரம் அறிந்து தன் இடம் வகிப்பது இசைவு!
       மனிதன் ஒருவனுக்கு இன்னொருவன் மாற்று அல்ல!
     சமமற்றவர்களை சமப்படுத்துவது சமத்துவ விரோதமாகும்!
       ஏற்றம் இறக்கம் இரண்டுக்கும் இடமளிப்பதே சமத்துவம்!
     குள்ளமானவன் உயரமானவனுக்கு எதிராகச் சுருங்கியவனல்ல!
       உயரமானவன் குள்ளமானவனுக்கு எதிராக வளர்ந்தவனல்ல!
     மனிதர்கள் அனைவரும் தம் உச்சத்தில் மட்டுமே சமமானவர்கள்!
         
     அளப்பவன் இல்லையேல் அளக்கப்படுபவனும் இல்லை!
       வளர்ச்சியை வாழ்பவனுக்கு அளவுகோல் எதற்கு?
     மனிதர்கள் உருவத்தில் ஒன்றானவர்கள் உள்ளீட்டில் வேறானவர்கள்!
       உருவ ஒற்றுமை சமத்துவத்திற்கு அடிப்படையாகாது!
     உயிர் - வாழ்தலில்  ஏற்றத்தாழ்வுகளுக்கு  இடமில்லை
       புல்,பூண்டு; புழு,பூச்சி; விலங்கு, மனிதன் யாவரும் சமமே!
     அ,ஆ, இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையேல் மொழியில்லை!
       மல்லிகையும், ரோஜாவும் மலர்களே - ஆயின் வாசம் வேறுவேறு!
     சமத்துவம்பேசும் மனிதர்கள் மலர்வதுமில்லை, மணம்வீசுவதுமில்லை!

     ஒப்பிடுதல் பொறாமையை வளர்த்து வளர்ச்சியைக் கெடுக்கும்!
       பொறாமை வெறுப்பை விதைத்து மனஅமைதியைக் குலைக்கும்!
     தேவைகளின் அளவை அறியாதிருப்பது மகிழ்ச்சியை அழிக்கும்!
       பேராசை உள்ளதையும் துய்க்கவிடாது தடுத்து ஏழையாக்கிவிடும்!
     உடமை-பாவம் அற்றவன்- பொருளென்ன, உயிரை இழக்கவும் அஞ்சான்!
       தான் தனக்குச் சொந்தமில்லை என அறிந்தவன் கவலையில்லான்!
     பொறாமை பேராசை சுயநலச்சுமைகள் இல்லையேல் அச்சமில்லை!
       வாழ்க்கைநேசனுக்கு நற்குணம் தீக்குணம் இரண்டும் சுமைகளே!
     முதல்தொழிலில் மூழ்கித்திளைப்பவனுக்கு ஊரும் உலகமுமில்லை!    

     உலக வழக்கில் உழலும்வரை உண்மை மீது ஆர்வம் எழுவதில்லை!
       மனிதனே! உண்மை அறியாதவரை உனக்கில்லை விடுவிப்பு!
     உள்ளதற்கும் உண்மைக்கும் இடைவெளியுள்ளவரை ஒருமையில்லை!
       மனிதனே! ஒருமையடையும் வரை  உனக்கில்லை முழுமை!
     மனிதனே! முழுமையடையும் வரை உனக்கில்லை நிறைவு!
       மாறாத மாற்றத்தை தன்னுள் மாற்றியமைப்பவனே முழு மனிதன்!
     மனிதனே! இலக்கை அடையும்வரை உனக்கில்லை இரட்சிப்பு!
       தம்மைக் கண்டடைந்து மனிதரானவர் அரிதிலும் அரிதான சிலரே!
     
     மனிதனே! வாழ்க்கையே நம் அனைவருக்குமான ஒரே குலத்தொழில்!
       எத்தொழிலைச் செய்யினும் முதல்தொழிலில் மூழ்கியவாறே செய்!
     பிழைப்புக்கான தொழிலில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்திடாதே!
       பிழைப்புக்காக அல்ல வாழ்க்கை, வாழ்க்கைக்காகவே பிழைப்பு!
     பிழைப்புக்கும் வாழ்க்கைக்குமான பெரும் வித்தியாசம் அறிவாய் நீ
       பிழைப்பு விலங்கிற்குரியது, வாழ்க்கை  மனிதனுக்குரியது!
     வாழ்வின் அர்த்தம் அறிதலே வாழ்தல்,மனிதனின் ஒரே சீரியதொழில்!
       அர்த்தமறியப்படாத வாழ்க்கை வெறும் பகட்டுப் பிழைப்பே!
     அரிய மானிடப்பிறவியை அறியாமையில் வாழ்ந்து அழிந்திடாதே!

     சர்ச்சை, விவாதம், விமர்சனம், தூற்றுதல், இடித்துரைத்தல்
       ஏதுமின்றி  நல்லவிதமாக எடுத்துச்சொல்லவே விரும்புகிறேன்!
     என்ன செய்வது, நிலத்தைப் பண்படுத்தாமல் விதைப்பது கூடாதே!
       பிழைப்புக்கும் வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை வாழ்வதும்
     போதிப்பதுமே எனது வாழ்க்கைப்பணியும், ஆன்மீகப்பணியும்!
       மனிதனே! வாழ்க்கை என்றால் என்ன என்று நீ நினைக்கிறாய்?
     வயிற்றுப்பிழைப்பல்ல வாழ்க்கை என்பதை உடனே உணர்ந்திடு!
       பிழைப்பின் ஆதார மந்திரம் உணவு, உடை, உறையுள்!
     வாழ்வின் மந்திரம் அர்த்தமறிதல், தன்னையறிதல், உண்மையறிதல்!

     உன்னையறியும் உன்னுடனான உன் பணியை நன்கு நீ செய்தால்
       பிறருடன் உனக்கேது சண்டை, சச்சரவு, ஒப்பீடு, முரண்பாடு?
     பிழைப்புக்காக பிறருடன் நீ சேர்ந்துழைக்கும் களம் சமூகம்!
       பிழைப்பை போட்டியும் போராட்டமுமாக நடத்துவது ஏன்?
     எத்தனை மடங்கு பிழைத்தாலும் பிழைப்பு வாழ்க்கையாகாது!
       வாழ்க்கைக்காக உன்னுடன் நீ தனியே உழைக்கும் களம் அகம்!
     உன்னைக் கண்டடையும்வரை இடைவிடாது உன்னைத் தோண்டு!
       "மறைத்துவைக்கப்பட்ட பொக்கிஷம்" மட்டுமே தரும் மகா சுகம்!
     வாழ்க்கையே முதலும் முடிவுமான முழுமையான தொழில்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 09-07-2017
----------------------------------------------------------------------------

Sunday, 9 July 2017

உத்தியோகம், உணவு, உல்லாசம்





தற்கால மனிதர்களின் வாழ்க்கையை உத்தியோகம், உணவு, உல்லாசம் என்ற
இந்த மூன்று சொற்களுக்குள் அடக்கிவிடலாம்! இத்தகைய வாழ்க்கை கற்கால
மனிதர்களின்  வாழ்க்கையிலிருந்து பெரிதாக  வேறுபட்டதல்ல என்பதை நாம்
வெகு சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும்! கற்கால மனிதனுக்கு வேட்டையா
டுதல் தான் உத்தியோகம், தொழில், வேலை எல்லாம் ஆகும்! நாம் உத்தியோ
கத்திற்குச்செல்கிறோம் என்பது உணவு,மற்றும் பிற அடிப்படைத்தேவைகளைப்
பெறுவதற்காக வேட்டைக்குச் செல்கிறோம் என்பதல்லாமல் வேறென்ன?

'உணவு'  என்று இங்கு நாம் குறிப்பிடுவது உணவை மட்டுமல்லாமல் உணவு,
உடை,  உறையுள்  மற்றும்  பிறவனைத்துத் தேவைகளையும் குறிக்கும் ஒரு
ஒற்றைச் சொல் ஆகும்.

'உல்லாசம்' என்பது உள்ளக்களிப்பு தரும் கேளிக்கை, பொழுதுபோக்கு,  விளை
யாட்டு,  மது, மாது, ஆடல், பாடல், தொலைகாட்சி, 'ஆண்ட்ராய்ட்' கைப்பேசி,
கலை, இலக்கியம், பக்தி, கோயில், குளம், தலயாத்திரை, சுற்றுலா, அரசியல்,
சினிமா, அரட்டை, ஆன்மீகம், சத்சங்கம், சும்மா சோம்பியிருத்தல்....இன்னபிற
வற்றையும் உள்ளடக்கியதாகும்!  உல்லாசம் என்பது வாழ்வின் அர்த்தத்தைத்
தேடும் தன்னைக் கடந்து செல்லும் உணர்வார்ந்த முயற்சிக்கு மாற்றாக  மேற்
கொள்ளப்படும் தன்னை மறந்திருப்பதற்கான உணர்விழக்கும் உபாயங்களாகும்!

ஆம், அர்த்தம் தேடலுக்கு அர்ப்பணிக்கப்படவேண்டிய காலத்தையும், சக்தியை
யும், சிந்தனையையும் தான் நாம் எதைத்தேடுகிறோம் எனும் புரிதலில்லாமல்
பல வழிகளிலும் 'உல்லாசம்' தேடி பொழுதைக்கழித்து வாழ்க்கையை விரயம்
செய்கிறோம்! ஆனால், அர்த்தத்தின் இடத்தை வேறெதையும்கொண்டு பதிலீடு
செய்ய இயலாது என்பதன் நிரூபணமாக விளைவதுதான் வாழ்வில் அலுப்பும்,
சலிப்பும், நீங்காத வெறுமையும், நிறைவின்மையும், விரக்தியுணர்வும் ஆகும்!

ஆம்,  அனைத்து உல்லாசங்களும், பொழுதுபோக்குகளும், ஆர்வக்கோளாறான
ஈடுபாடுகளும்  மிகத் தற்காலிக  விடுவிப்பையும்,  மகிழ்ச்சியையும் மட்டுமே
அளிக்கும்! ஆக,அர்த்தமறியும் செயல்பாட்டைத் தவிர்த்து வேறு ஈடுபாடுகளை
நாடுபவன் தற்கொலைவாதியே ஆவான்!

தற்கால மனிதர்களின்  சுருங்கிய  மனங்களுக்கேற்ப  அவர்களது  உலகமும்
சுருங்கியதாகவே உள்ளது.  அல்லது,  அவர்கள் புழங்குகிற இடங்களுக்கேற்ப
அவர்களுடைய மனமும், சிந்தனையும் சுருங்கிவிட்டன எனலாம்.பெயரளவில்
தான்  நாம் பரந்த இப்பூமியின் மீது வாழ்கிறோம்; ஆனால், உண்மையில் நாம்
வாழ்வது  கருத்தியலான,  நம்  வாட்டத்திற்கேற்ப  வடித்தெடுக்கப்பட்ட  ஒரு
செயற்கை உலகில் ( Abstracted world) தான் வாழ்கிறோம்!  அதை நாம்
நுணுக்கச் சொற்களில்  சொன்னால்,  'சமூக- பொருளாதார- அரசியல்'  உலகம்
எனலாம். இதை ஒரு சிறு உலகம் என்றுகூட சொல்லமுடியாது; மாறாக, அது
ஒரு சிறு தீவு போன்றதே ஆகும்!

நாம் அன்றாடம் புழங்குகிற இடங்களான வீடு,  அலுவலகம்,  தொழிற்சாலை,
கடை வீதி,  பொழுதுபோக்கு விடுதி,  மதுவிடுதி,  கோயில்  ஆகியவற்றுக்கு
அப்பால் யாதொரு உலகமும் இல்லை  என்பதுபோல  வாழ்ந்து கொண்டிருக்
கிறோம்.   நம்முடைய சிந்தனைகள், நாம் அன்றாடம் புழங்குகிற இடங்களுக்
குரியவைகளாகவும்,  அவ்விடங்களுடன்   தொடர்பு  கொண்டவைகளாகவும்
மட்டுமே விளங்குகின்றன! வீடு, குடும்பம், பலவகைப்பட்ட வீட்டுத்தேவைகள்,
உத்தியோகம்,  பதவி உயர்வுக்கான  போட்டி,   அதிகாரிகளின்  விரட்டல்கள்,
அவர்களைச் சமாளித்தல், சக-பணியாளர்கள், கொடுக்கல்-வாங்கல்,விலைவாசி,
கடன் பெறுதல், வீடு கட்டுதல், பிள்ளைகளைப் படிக்கவைத்தல், போன்றவைத்
தவிர  வேறு  எதைப்பற்றியும் நாம் சிந்திப்பதில்லை;  அவ்வாறு சிந்திப்பதற்கு
ஆர்வமும் இல்லை,  நேரமும் இல்லை, சக்தியும் இல்லை! அவ்வாறு சிந்திப்
பதற்கான  அவசியத்தை  எல்லா  வகைகளிலும்,  வழிகளிலும்  தவிர்ப்பதை
ஊக்குவிக்கும் சூழலுக்குப் பெயர் தான் சமூகம்!

இத்தகைய  சமூகத்தில்,  'பொருள்' தான்  ஆதாரமும்,  எல்லாமும்.  ஆகவே,
பொருளாதாரம், சந்தை ஆகியவை மனிதர்களின் வாழ்வினைத் தீர்மானிக்கும்
மையச் சக்திகளாகிவிட்டன!  "பொருள்  இல்லார்க்கு  இவ்வுலகம்  இல்லை!"
ஆகவே,  இவ்வுலகில்  இடம் பிடிக்க,  அல்லது,  இருக்கும் இடத்தைத் தக்க
வைத்துக்கொள்ள பொருள் வேண்டும்,  பணம் சம்பாதிக்க வேண்டும், அதிகதி
மாகப் பணம் சம்பாதிக்க வேண்டும்!  அப்போதுதான்  வாழ்க்கையை மகிழ்ச்சி
யாகவும், நிறைவாகவும் வாழமுடியும் என்று குருட்டுத்தனமாக நம்புகிறோம்!

சனநாயகம் என்பது குதிரைப் பந்தய சூதாட்டம் போலாகிவிட்டது! 'எல்லாரும்
இந்நாட்டு மன்னர்'   என்பது  சனநாயகத்தின்  சாபக்கேடாகிப்  போய்விட்டது!
ஆள்பவர் ஆளப்படுபவர் என்ற பிரிவினை இல்லாத ஆட்சி மட்டுமே உண்மை
யான  சனநாயகம்,  அல்லது  மக்களாட்சி ஆகும்!  ஆள்பவரை  நெறிப்படுத்த
வழியில்லாத  ஆட்சிமுறை மக்களாட்சியாக இருக்கவியலாது! தகுதியற்றவர்
முதல்-மந்திரியாக மட்டுமல்ல  கடைசி-மந்திரியாகவும் கூட ஆக அனுமதிக்க
லாகாது! பெரியளவில் தொண்டர்-படையைக்கொண்ட ஒருவரை, பிரபலமான
ஒருவரை,  தகுதியுள்ளவர் என்று கூறிட முடியாது!  "எது  தங்களை  ஆட்சி
செய்யவேண்டும்?" என்பதை மக்கள் துல்லியமாகவும்,தெளிவாகவும் அறியாத
வரை உண்மையான மக்களாட்சி என்பது ஒருபோதும் மலராது!

அரசியல்வாதி என தன்னை அறிவித்துக்கொள்பவன் முதலீடு செய்யாமலேயே
லாபம்  தேடும் வியாபாரி! அரசியல்-ஞானம், அரசியல்-அனுபவம், ராஜதந்திரம்
என்று  எதுவும்  அரசியலில் கிடையாது!  முதலில், 'அரசியல்' என்று எதுவும்
தனியே இல்லை! இருப்பது, அனைத்தையும் உள்ளடக்கிய "வாழ்க்கை" என்பது
மட்டுமே!  வாழ்க்கை  பற்றிய  ஆழமான  புரிதல், அல்லது ஞானம் மட்டுமே
நம்மை ஆள முடியும்!  தன்னையும்,  வாழ்க்கையையும் நன்கு புரிந்தவனால்
மட்டுமே தன்னையும், தன்னையறியாத பிறரையும் ஆள முடியும்! ஏனெனில்,
வாழ்க்கையைப்  புரிந்தவனுக்கு  அரசியலும்  புரியும்!   தன்னையறியாதவன்
ஆள்பவனாக,  தலைவனாக அமைவது என்பது குருடன் ஒருவன் பிற குருடர்
களை வழி நடத்துவது போன்றதாகும்!

முதன்மையாக மனிதன் வாழ்க்கைக்கு (முழுமைக்கு)அர்ப்பணிக்கப்பட்டவனாக
இருக்கவேண்டும், அடுத்ததாகத்தான் தொழில், அல்லது பகுதியம்சமான வேறு
எதற்கும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்!

வாழ்க்கை என்பது பிரதானமாக இரண்டே இரண்டு அம்சங்களைக் கொண்டது
மட்டுமேயாகும்!  ஒன்று : உயிர்-பிழைத்தல்  எனும்  அடிப்படையான அம்சம்.
இரண்டு :  உயிர்-பிழைத்தலின்  அர்த்தத்தை அறிதல்  எனும்  உச்சம்!  இந்த
இரண்டில் நாம் முதலாவதை  மட்டுமே நிறைவேற்றுகிறோம்.  இரண்டாவது
அம்சத்தை   நாம்  தொடுவதேயில்லை!  அப்படியொரு  அம்சம்  இருக்கிறது
என்பதே   நம்மில்  அநேகருக்குத் தெரிய வாய்ப்பில்லை!  தெரிய  வாய்ப்புக்
கிடைத்தாலும் அதைப்பயன்படுத்திக்கொள்ளும் மனப்பக்குவம் நம் அநேகரிடம்
இல்லை! ஆனால், இரண்டாவது  அம்சமான  வாழ்வின் அர்த்தத்தை அறிதல்
என்பதை   நிறைவேற்றாமல்  முதல் அம்சமான  உயிர்-பிழைத்தல்  என்பது
அர்த்தம் பெறாது! ஏனெனில், "அர்த்தம்" தான் மனிதனின் உயிரின் உயிர்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 07-07-2017
----------------------------------------------------------------------------

Thursday, 6 July 2017

தன்னம்பிக்கையைத் தாண்டிய பெருவிழைவு!




   "இந்த சந்திரசூரியர், நட்சத்திரங்கள் முழுதுக்கும், பூமண்டலத்துச்சாமான்கள்,
   பிரபஞ்சம் முழுதுக்கும் அடிப்படையான மூலவஸ்துவை விசாரிக்கிறாய்.
   இதுதான் கடைசி விஷயம். இதுதான் மற்ற எதையும் செய்யுமுன் நீ
   செய்யவேண்டிய முதல் காரியமும்.
                            - சாது அப்பாதுரை / தியானதாரா
                                                                   -•-

இக்கட்டுரை  எழுதுவதற்குத்  தூண்டுதலாக அமைந்தது டாக்டர் நாகூர் ரூமி
அவர்களால் எழுதப்பட்டு,சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் இரண்டாம்பதிப்பாக
2017-ல் வெளியிட்ட 'சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்-ஸ்டீஃபன் ஹாகிங்
- சரித்திரம் படைக்கும் தன்னம்பிக்கை மனிதர்' எனும் நூல் ஆகும்.

டாக்டர் நாகூர் ரூமி அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் மிகச்
சிறப்பான நூல் என நான் அவருடைய "சூஃபி வழி" நூலையே கூறுவேன். அந்
நூலில்,  சூஃபித் தத்துவம் பற்றியும், சூஃபிக்கள் பற்றியும் தமிழ் வாசக உலகத்
திற்கு அறிமுகப்படுத்தியதற்காக நான் அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்
துக்கொள்கிறேன்.

அதேவேளையில், 2015-ல் முதல் பதிப்பாகவும்,2017-ல் இரண்டாம் பதிப்பாகவும்
வெளிவந்த, விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங் பற்றி 'சக்கர நாற்காலியில் சிக்கிய
பிரபஞ்சம்'  எனும் தலைப்பில் டாக்டர் நாகூர் ரூமி அவர்கள் எழுதிய நூலில்
காணப்படும் ஒரு சில பலவீனமான அம்சங்களை இங்கே குறிப்பிடுவது அவசி
யமெனப்படுகிறது.  முதலில், பாராட்டுக்குரிய ஒரு அம்சம்,  அதாவது,  'சக்கர
நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்' எனும் தலைப்புப்பற்றிச் சொல்லியாக வேண்
டும். இத்தலைப்பு மிகவும் பொருத்தமானதும் கவிதைப் பூர்வமானதுமாகும்!

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குறும்பிரபஞ்சமே ஆவான்; ஆனால்,
இவ்வுண்மை வெறும் கவிதைப்பூர்வமானது அல்ல!  நிச்சயம் பிரபஞ்சத்தைப்
பற்றி மிக ஆழமாகவும், விரிவாகவும் ஆராய்ந்து வரும் விஞ்ஞானி ஸ்டீஃபன்
ஹாக்கிங்  அவர்களுக்கேகூட  இவ்வுண்மை  தெரியுமா  என்பது சந்தேகமே.
ஏனெனில்,   மனிதன் வேறு,   பிரபஞ்சம் வேறு  என்று காணும் பிளவு பட்ட
பார்வையைத் தொடக்கப்புள்ளியாகக்கொண்டே ஹாக்கிங் போன்ற விஞ்ஞானி
கள் தங்கள் ஆய்வுகளைச் செய்துவருகிறார்கள்! [மனிதன் ஒரு குறும்பிரபஞ்சம்
என்பது குறித்து விரிவாக "கடவுள்புதிர்" (2014) எனும் எனது நூலில் எழுதியுள்
ளேன்]

அடுத்து,  டாக்டர் நாகூர் ரூமியின்  நூலின் அட்டையில் மூன்றாவதாக ஒரு
தலைப்பும் உள்ளது!  அதாவது, 'சரித்திரம் படைக்கும் தன்னம்பிக்கை மனிதர்'
என்பதுதான்  அது.  ஆனால்,  உண்மையில், ஸ்டீஃபன் ஹாகிங் எனும் நபர்,
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி, பிரபஞ்சவியல் கோட்பாட்டியலாளர், என்றெல்
லாம்  போற்றப்படக்கூடிய  அவர்  ஒரு அதிசயம் அல்ல! அவர் ஒரு விபத்து!
அவர் மிகவும் வித்தியாசமான நிலைமைகளின் சேர்க்கை ஆவார். ஹாகிங்கை
பீடித்தது போன்ற பல வித்தியாசமான, விநோதமான நோய்கள் பலரைப் பாதித்
துள்ளன;  பலர் தங்களது துறைகளில் சிறந்துவிளங்கியவர்களாகவும் சாதனை
படைத்தவர்களாகவும்  வாழ்ந்துள்ளனர்.  ஹாக்கிங்-கைப்  பொறுத்தவரையில்
அவர்  ஒரு பிரபஞ்சவியல் விஞ்ஞானியாக அறியப்பட்டது தான்  அவர் இந்த
அளவிற்கு  வெளிச்சத்திற்கு  வருவதற்கு உதவியுள்ளது!  மேலும், அந்நோய்
பீடிப்பதற்கு  முன்னேயே  அவரது  ஆர்வம்  பிரபஞ்சம் பற்றியதாக இருந்தது.
அதோடு.  அவரது  ஆர்வம் அவரைச் சிறந்த  மாணவனாகவும்,  பின்னர் பல
விருதுகளைப்  பெறத்தக்க கோட்பாட்டுரீதியான கண்டுபிடிப்புகளைச் செய்யும்
விஞ்ஞானியாகவும் மாற்றியது எனலாம்.

விஞ்ஞானி  ஸ்டீஃபன் ஹாகிங்-கைப் பாதித்த நோய்,  எல்லோரையும் போல்
அவரைச் சாதாரணமாக இயங்கவிடாது அவரது உடலியக்கத்தை முடக்கிவிட்
டது;  இதன் விளைவாக அவரது அன்றாட வாழ்க்கை சிரமம் மிகுந்ததாகியது;
யாவற்றுக்கும் மேலாக,  அவரது விஞ்ஞானக் கோட்பாடுகளை வெளிப்படுத்து
வதற்கு அது பெரும்தடையாக அமைந்துவிட்டது! ஆனால், நிலைமைகள் பல
வகைகளிலும்  அவருக்குச்  சாதகமாகவே  அமைந்து  வந்துள்ளன!  மற்றபடி
அவர் ஒரு அதிசயமுமல்ல! அவரது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கோட்பாடு
களும் பெரும்சாதனையும் அல்ல! அவரது கண்டுபிடிப்புகள் நியூட்டன், ஐன்ஸ்
டீன்  போன்றவர்கள்  ஏற்கனவே  கண்டுபிடித்தவைகளின்  தர்க்கரீதியிலான
வளர்ச்சி நிலைகளே தவிர வேறல்ல!

இப்பிரபஞ்சம் எப்போது எப்படித் தோன்றியது? அது இன்னும் எவ்வளவு காலத்
திற்கு இருக்கும்? எப்போது, எவ்வாறு முடிவிற்கு வரும்? இப்பிரபஞ்சம் தோன்
றியதில் கடவுளுக்கு ஏதேனும் பங்கிருக்கிறதா?  இப்பிரபஞ்சம் ஏன் ஒழுங்கில்
விதிகளுக்குட்பட்டதாக அமைந்துள்ளது?  இவைபோன்ற  பல கேள்விகளுக்கு
விடை காண்பதுதான் சிந்தனை துளிர்த்த காலத்திலிருந்து  தத்துவச் சிந்தனை
யாளர்கள்,  விஞ்ஞானிகள்,  சில கவிஞர்கள் ஆகியோரது பிரதான விசாரமாக
இருந்து வந்துள்ளது, அதன் தொடர்ச்சியில் வந்த ஒருவர்தான் ஹாக்கிங்.

ஆனால்,  ஹாக்கிங்-ன் கண்டுபிடிப்புகள் யாவும் அவரது துறைக்குள் மட்டுமே
பிரமாதமானவை,  பெருமைக்குரியவை;  மற்றபடி  அக்கண்டுபிடிப்புகளினால்
மனிதகுலத்திற்கு எவ்வொரு உதவியும்,பயனும் கிடையாது! இதற்குக்காரணம்
பிரபஞ்சம் தொடர்பான எல்லா கேள்விகளையும் அவர் கேட்கவில்லை, கணக்
கில் கொள்ளவில்லை.  குறிப்பாக, பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும், அதாவது,
உணர்வு (Consciousness)க்கும், உள்ள தொடர்பு பற்றியுமான கேள்விகளை
அவர் கேள்விப்பட்டதாகவோ, கணக்கில்கொண்டதாகவோ தெரியவில்லை!

ஆனால்,  டாக்டர் நாகூர் ரூமி,  தனது நூலில்,  ஹாகிங் கிட்டதட்ட எல்லாக்
கேள்விகளுக்குமான விடைகளைக் கண்டுபிடித்துவிட்டார் என எழுதியுள்ளார்!
அதேநேரத்தில்,அவை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா? அல்லது
மனிதகுலத்தின்  ஒட்டு மொத்த  நம்பிக்கைகளையும்  தகர்க்கக்கூடியவையா?
என்று கேள்விகளை எழுப்பிவிட்டு,  உடனே,  இக்கேள்விகளுக்கான பதில்கள்
நமக்கு  இப்போது முக்கியமல்ல என்று சொல்லி  தான் ஒளியூட்டவிரும்பிய
அம்சத்திற்குச் சென்று விட்டார்!  அதாவது,  ஹாகிங்-கை  புகழ்பாடச் சென்று
விட்டார்! உடல் முழுக்க இயங்க முடியாத நிலையில்,மனம்,மூளை மட்டுமே
தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு மனிதன், தன் சிந்தனைகளின் மூலம்
இந்த நூற்றாண்டின்  தலை சிறந்த விஞ்ஞானியாக  விளங்க முடியும் என்பது
ஒரு மனிதனால் செய்ய முடிந்த உச்சகட்ட சாதனை என்று சொல்கிறார்!

ஆனால், உடல் முழுக்க இயங்கினாலும், இயங்காமல் போனாலும்,மனிதனின்
மூளையும்,  மனமும்  வேறொரு பரிமாணத்துடன் தொடர்பு கொண்டிருப்பதற்
காக மட்டுமே உருவாக்கப்பட்டவையாகும்!  எத்தனையோ யோகிகள், வலியத்
தாங்களே தங்களது உடலை சலனமற்ற நிலையில் ஒரே இருப்பாக இருத்திக்
கொண்டு  சமாதி நிலையில் ஆழ்ந்து போயுள்ளனர். ஏன், டாக்டர் நாகூர் ரூமி
யின் குருநாதரான ஜலாலுதீன் ரூமியும் இவ்வாறு சமாதி நிலையில் (ஸமாஃ)
ஆழ்ந்து போனதும்,  ஒருமுறை ஷம்ஸ் தப்ரேஸ் அவர்களுடன் கூடி நாற்பது
நாட்கள் வரை உண்ணுதலும், பருகுதலும் முற்றிலுமாகத்துறந்து சில்லாவிலே
அமர்ந்திருந்ததும் பதிவுசெய்யப்பட்டுள்ளனவே!

அடுத்து, ஹாகிங் அவர்கள் தன்னம்பிக்கை கொண்ட மனிதரும் அல்ல! அவர்
செய்ததெல்லாம், வேறுவழியில்லாமல், நிகழ்வுகளின் போக்கிலேயே சென்றது
மட்டுமே! உண்மையில், ஹாகிங்கை நிலை நிறுத்தியது எதுவெனில், டாக்டர்
நாகூர் ரூமியின் குருநாதர் சொல்லிய அந்த விஷயம் தான். அதாவது, 'வாழ்க்
கையில்  நமக்கு  ஒரு தீவிரமான நோக்கமிருக்குமானால், அந்த நோக்கத்தை,
லட்சியத்தை  அடையவேண்டும்  என்பதற்காகப் போராட நாம் முயற்சி செய்
வோமானால், அந்த லட்சியத்தை அடையும்வரை நம் உடல் ஆரோக்கியமான
தாக இருக்கும், அதுவரை இறப்பும் வராது' எனும் இந்த உண்மை மட்டுமே!

விஞ்ஞானி  ஸ்டீஃபன் ஹாகிங்-கைப் பொறுத்தவரையில்,  பிரபஞ்சம் பற்றிய
கேள்விகளில் அவருக்கிருந்த தீவிர ஆர்வமே அவரை இவ்வளவு தூரம் நிலை
நிறுத்தி வருகிறது! அதேவேளையில், பிரபஞ்சம் பற்றிய அவரது ஆராய்ச்சிகள்
பெரிதும் பிரபஞ்சவியல் எனும் விஞ்ஞானத்துறையின் மரபுகளை ஒட்டி மேற்
கொள்ளப்படுபவையே, அதாவது அவை பெரிதும் எந்திரத்தனமானதும்,வெறும்
பொருண்மைவாத  (Materialistic) அடிப்படையைக்  கொண்டவையுமே
ஆகும்! அதாவது பௌதீகச் சடப்பொருளைத் தவிர வேறு மெய்ம்மை எதுவும்
இல்லை  என்பதே  அதன் சாரம்  ஆகும்!  இதன் அர்த்தம்,  இப்பிரபஞ்சத்தில்
கடவுளுக்கு மட்டுமல்ல,  மனிதப் பிரக்ஞைக்கும் (Human Consciousness)
கூட இடமில்லை என்பதே! ஆக,விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங்-ன் விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகள்  மகத்தானவையோ,  பிரபஞ்சத்தைப் பற்றிய  முழுமையான,
ஒருங்கிணைவு கொண்ட புரிதலை  (Integral Understanding) அளிப்ப
வையோ அல்ல!

சொல்லப்போனால்,  நியூட்டன், ஐன்ஸ்டீன், ஹாக்கிங் ஆகியோரைவிட ஆன்
மீகச்  சிந்தனையாளரும்,  நூலாசிரியருமான எக்ஹார்ட் டாலியின் பிரபஞ்சம்
பற்றிய  உட்-பார்வைகளும் (Insights),  வெளிப்பாடுகளும்  மேலானவை,
கிட்டத்தட்ட  முழுமையானவை எனலாம்.  [ காண்க:   எக்ஹார்ட் டாலியின்
நூல்கள், "இப்பொழுதின் சக்தி" (The Power of Now), மற்றும் "ஒரு புதிய
பூமி" (A New Earth)]

அடுத்து, டாக்டர் நாகூர் ரூமி தனது நூலில், பால் உணர்வு பற்றி எழுதியுள்ள
ஒரு  கருத்துரை  பெரிதும்  பொருத்தமற்றதாக (Out of Place)  உள்ளது.
அதாவது,  ஹாக்கிங்-ன்  மனைவி  ஜேன் இரண்டாவது முறையாக கர்ப்பிணி
யானார்   எனும்  செய்தியைத் தன் நூலில்  குறிப்பிடுகையில் ( ஹாக்கிங்-ன்
முற்றிலும்  செயலிழந்த உடலை மனதிற்கொண்டவராக)   "ஒரு  மனிதனின்
உடல் நிலை என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கு ஆளான போதும் அவனது
பால்உணர்வுகள் மட்டும் சதாகாலமும் ஒரே மாதிரியான வீச்சு கொண்டதாகத்
தான் இருக்கும் போலுள்ளது!  எதில்  பிரச்சினை இருந்தாலும் அதில் மட்டும்
பிரச்சினை இருப்பதில்லை!"  எனக் கூறியுள்ளார்.  இத்தகைய குறிப்பை அவர்
எத்தகைய வாசகர்களை மனதிற்கொண்டு எழுதினார் என்று தெரியவில்லை!

ஆனால், பால் உணர்வைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எல்லாவகை
உயிர்-ஜீவிகளுக்கும்  அடிப்படையான அம்சம் ஆகும்!  பால் உணர்வு  என்பது
இனத்தக்கவைப்பு  என்பதன் பிரதான கருவியாகும். இனத்தக்கவைப்பு என்பது
மிகத்தொலைவான பரிணாமஇலக்கை அடையும்பொருட்டு ஒரு இனம் இற்று
அழிந்து  போகாதிருப்பதை உறுதிசெய்வதற்கானதாகும்! அதாவது, ஒரு உயிரி
யின் உடல்நிலை என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கு ஆளானபோதும் அதன்
பால் உணர்வுகள்  முறையாகச் செயல்படும்வகையில் அமைந்திருப்பது இயற்
கையானதாகும்!  இவ்விதிக்கு மனிதஜீவி விலக்கு அல்ல!  ஆகவே, ஹாக்கிங்
அவர்களும் விலக்கு அல்ல!  ஹாக்கிங்  என்னதான் பெரிய விஞ்ஞானி என்று
சொல்லப்பட்டாலும், அவர் அடிப்படையில் ஒரு உடல்-ஜீவியே எனும் அம்சம்
அவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து அவரைப் பயன்படுத்திக்கொண்டு வாரிசு
களை உருவாக்கும்படிச் செய்வித்துவிட்டது! அதாவது, ஒட்டுமொத்த பரிணாம
வழிமுறையின்  உச்ச இலக்கான  ஆன்மீக உண்மையை  ஹாக்கிங் அவர்கள்
தமது பிரபஞ்ச ஆராய்ச்சிகளின் மூலம் கண்டடையாவிட்டாலும், மனித இனத்
தின்  ஒரு கிளையான அவர் வழியாக  மேலும் சில கிளைகளைத் துளிர்க்கச்
செய்யும் இனத்தக்கவைப்பு எனும் உயிரியல் கடமை அவரால் நிறைவேறியது!

விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்- ன் உதாரணத்திலிருந்து நாம் அறிந்து கொள்
ளக்கூடிய முக்கிய விஷயம் அவரது தன்னம்பிக்கை அல்ல, ஏனெனில், அப்படி
எதுவும் அவரிடம் தனிச்சிறப்பாக இருந்ததாகத்தெரியவில்லை! கடந்த வருடம்
அவர் BBC யிடம் சொல்லிய செய்தியின்படி,1980 களின் மத்தியில் மூச்சு விடு
வதற்காக கழுத்தில் ஒரு குழாய் பொருத்துவதற்காக அவருக்குச் செய்யப்பட்ட
ஒரு அறுவைச் சிகிச்சைக்குப்பிறகு அவர் மூச்சு விடாதிருந்து தற்கொலைக்கு
முயன்றதாகவும், ஆனால்,சுவாசித்திட வேண்டுமெனும் இயல்புணர்ச்சியானது
மிக வலுவாக  இருந்ததால்  அவரது  முயற்சி தோற்றுவிட்டது என்பதாகவும்
கூறியுள்ளார். ஆக அவர் தன்னம்பிக்கை கொண்ட மனிதர் அல்ல. அவர் ஒரு
விஞ்ஞானி தான் என்றாலும் சாதாரண மனிதரே, மகான் அல்ல!

மேலும்,  உயிர்-பிழைத்திருக்க வேண்டும்  எனும்  உந்துதல்,  தன்னம்பிக்கை
என்பதைவிட  ஆழமானதும்,  அதிகத்தொலைவிற்கு வீச்சு கொண்டதுமாகும்!
முக்கியமாக, 'உயிர்-பிழைத்திருக்க வேண்டும்' என்பது வெறும் உந்துதல் மட்டு
மல்ல, அது ஒரு உயரிய, ஒப்பற்ற இலக்கைக்கொண்ட பெருவிழைவு ஆகும்!
ஆனால்,  அந்தப் பெருவிழைவு ஹாக்கிங் எனும் நபரின் உள்ளமைந்ததாயுள்
ளதா  அல்லது படைப்பின், முழுமையின், அல்லது, ஒவ்வொரு அணுவினுள்
ளும் அமைந்த உள்ளார்ந்த அம்சமா? என்பது அதிமுக்கியமான கேள்வியாகும்.

ஹாக்கிங்  பதிமூன்று வயதாயிருக்கும் போது  வெளிப்படத்தொடங்கிய  ALS
என்று சொல்லப்படும் விநோத நோயின் தாக்கத்தினால் அவரது உடலியக்கம்
அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயலற்றுப்போன நிலையில், எவ்வொரு விஷ
யத்திற்கும் அவர் பிறரைச் சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும்; அவரால் பேச
முடியாது, எழுதமுடியாது; வேறு எதுவுமே செய்யமுடியாது - சிந்திப்பது என்ற
ஒன்றைத்தவிர எனும் நிலையில், அவரது விருப்பமான பிரபஞ்சவியல் துறை
சார்ந்த சவால்களைப்பற்றிச் சிந்திப்பது, ஆராய்வது என்பதை அவர் தன் வாழ்க்
கையாகக் கொண்டுவிட்டார். பிரபஞ்சம் குறித்த விஞ்ஞானப் பிரச்சினைகளைத்
தீர்த்து புதிய கோட்பாடுகளை உருவாக்கிடவேண்டும் என்ற உத்வேகத்தீ தான்
அவரை நிலை நிறுத்தி வருவதுடன், அவரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக
வும் பேணிவருகிறது!  அவரது  கோட்பாட்டியல்  கண்டுபிடிப்புகள் விஞ்ஞான
உலகைத்  திரும்பிப் பார்க்கச் செய்தது,  தொடர்ந்து  உலகம் முழுவதையுமே
திரும்பிப் பார்க்கவைத்துள்ளது!

அடுத்து,  ஹாக்கிங்-ன் A Brief History of Time எனும் நூலைப்பற்றிச்
சொல்லியாக வேண்டும். ஹாக்கிங்-ன் இப்புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள்
விற்றுத்  தீர்ந்த,  ஆனால்  அதிகம்பேர் படிக்காத  சாதனையைப் புரிந்ததாகச்
சொல்லப்படுகிறது. சாதாரண வாசகர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம்தான் இது
என்றபோதிலும், வாசகர்களுக்கு கொஞ்சமாவது பிரபஞ்சத்தைப்பற்றித் தெரிந்து
கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இருக்க வேண்டும், அது பற்றிய வேறு சில
சிறு புத்தகங்களை அவர்கள் வாசித்து விஞ்ஞானப்பிரபஞ்சவியலின் அடிப்படை
களை அறிந்திருக்கவேண்டும்; முக்கியமாக, பிரபஞ்சம் என்றால் என்ன என்று
வியந்து  அது குறித்து  முடிந்தவரை  சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்த்திருக்க
வேண்டும்!  எதுவுமில்லாமல்  ஹாக்கிங்-ன் புத்தகம் மட்டுமல்ல,  ஃப்ராய்டின்
உளவியல் பகுப்பாய்வு  பற்றிய நூல்களையும்,  அல்லது, அரிஸ்ட்டாட்டிலின்
தத்துவம்  என  எந்தத் துறை சார்ந்த  புத்தகத்தையும்,  சிந்தனைப்பயிற்சியும்,
கேள்வியும் விசாரமும் இன்றி படித்துப்புரிந்து கொள்வது சாத்தியமில்லை!

அதேவேளையில், சாரமான (Essential) பிரபஞ்சவியலுக்கும், விஞ்ஞானத்
துறை சார்ந்த பிரபஞ்சவியலுக்கும்  வித்தியாசம் உள்ளது.  சாரமான பிரபஞ்ச
வியலில், ஆர்வமிருந்தால் எவ்வொரு சிந்திக்கும் மனிதனும்  ஈடுபடவியலும்;
அதற்கு தொலை நோக்கிகளும்,  கடினமான,  மண்டையைப் பிளக்கும் கணித
அறிவும் தேவையில்லை! முக்கியமாக, பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்து
கொள்வதற்கு  அண்டவெளியில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன
என்று எண்ணிப் பட்டியலிடவும் தேவையில்லை! அதாவது எவ்வொரு மனித
னும் புரிந்துகொள்ளவேண்டிய பிரபஞ்சம் தழுவிய பிரதான கேள்விகள் எவை
யென்றால், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? பிரபஞ்சம்
ஏன் இருக்கிறது,  அல்லது ஏன் தோன்றியது?  பிரபஞ்சத்தின் நெடிய பரிணாம
வரலாற்றில்  ஒரு கட்டத்தில் உயிர் ஏன் தோன்றியது,  பிறகு  மனிதன்  ஏன்,
எதற்காகத் தோன்றினான்?  பிரபஞ்சத்தின் மூலம் எது? அல்லது அது தன்னில்
தானே தோன்றியதா?  என்பன போன்ற அடிப்படையான கேள்விகள் மட்டுமே
முக்கியமானவையாகும்.  இவை  துறை சாராத  தத்துவம் மற்றும் ஆன்மீகப்
பூர்வமானவையாகும்!

ஆனால், விஞ்ஞானத்துறை சார்ந்த பிரபஞ்சவியலின் கேள்விகளும்,பிரச்சினை
களும் வேறானவையாகும்!  அவை விரிவானவை, விலாவாரியானவை! ஆம்,
விஞ்ஞானிகளின் கேள்விகள் எண்ணிறந்தவை;  அவற்றிற்கு  முடிவு என்பதே
இல்லை எனலாம்! ஆகவே அவை ஒரு கட்டத்திற்கு மேல் தேவையற்றவை!
ஏனெனில்,  "அணு"  என்றால் என்ன என்பது குறித்து மட்டுமே முடிவுக்காலம்
வரை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டேயிருப்பர்! அப்படியானால், பிரபஞ்சம்
குறித்த ஆராய்ச்சிகளுக்கு அனந்த காலமும் போதாது! ஆக, ஹாகிங்-ன் நூலை
சாதாரண  வாசகர்கள்  படிக்க  முடியாததில்  ஆச்சரியப்பட  ஒன்றுமில்லை!
நானும் ஒரு சாதாரண வாசகன் ( A Lay Reader)தான்;  ஆனால், நான் அவ
ருடைய A Brief History of Time எனும் புத்தகம் மட்டுமல்ல, அவரும்
Leonard Mlodinow-ம்  இணைந்து எழுதிய  The Grand Design  எனும்
நூலையும்  முழுவதுமாகப் படித்தேன்;  அதாவது  எனக்குத் தேவையில்லாத
அம்சங்களை,விபரங்களை ஒதுக்கிவிட்டுப் படித்துமுடித்தேன். எனக்கு மிகவும்
வியப்பாக இருந்த விஷயம் எதுவென்றால்,தேவையில்லாத கேள்விகளையும்
பிரச்சினைகளையும் எழுப்பி, அவற்றைத்  துரத்திக்கொண்டு  எவ்வ்வ்வ்வளவு
தொலைவு அவர்கள் செல்கிறார்கள்!

ஆனால், இத்தகைய நீண்ட நெடிய அணுகுமுறை அடிப்படையிலேயே தவறா
னது என்று மனிதனின்  "வாழ்-கால வரையறை விதி"  சொல்கிறது! அதாவது,
ஒரு மனிதஜீவியானவன் அர்த்தபூர்வமான  வாழ்க்கையை  வாழ வேண்டுமா
னால்,  அவன்   தனது  குறுகிய  வாழ்-காலத்திற்குள்ளாகவே வாழ்க்கையை
யும், அதன் பகுதியான பிரபஞ்சத்தையும், மையமான தன்னையும்,அனைத்திற்
கும் ஆதாரமான மெய்ம்மையையும் புரிந்து கொண்டாகவேண்டும்!  இப்புரிதல்
ஒருவன் தனது பசிக்கு உணவு உண்பதைப் போன்று, ஒவ்வொருவரும் நேரடி
யாக தாமே முயன்று அடையப்படவேண்டிய ஒன்றாகும்! பிரபஞ்சத்தைப்பற்றி
நியூட்டன்  கண்டுபிடித்துச் சொல்லாதவற்றை,  ஐன்ஸ்டீன் வந்து சொல்வார்
எனவும், ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கத் தவறியவற்றை, ஹாக்கிங் கண்டுபிடித்துச்
சொல்வார் எனவும் காத்திருப்பது அர்த்தமற்றதாகும்!

மேலும்,  பிரபஞ்சம் குறித்த  விஞ்ஞான அணுகுமுறை,  "எப்படி",  "எவ்வாறு"
எனும் கேள்விகளை அடிப்படையாகக்கொண்டது.  ஆனால்,  முறையான சார
மான - இதை நாம் தத்துவ அணுகுமுறை எனக் கொள்வோமெனில் -  இதில்
"ஏன்" எனும் கேள்வியே மையமானது.  விஞ்ஞானிகளுக்கு  பிரபஞ்சம் என்பது
ஒரு 'பொருள்', அல்லது 'இயக்கத்திலுள்ள பொருள்' மட்டுமே! ஆனால்,தத்துவ
சிந்தனையாளனுக்கு பிரபஞ்சம் என்பது ஒரு அற்புதப் "புதிர்" ஆகும்!

அதே வேளையில்,  விஞ்ஞானத்துறை சார்ந்த  வானவியல்,  பிரபஞ்சவியல்
நூல்களிலிருந்து பௌதீகத்தனமான பிரபஞ்சம் பற்றிய பல ஆர்வமூட்டக்கூடிய
விபர  உண்மைகளை  நாம் தெரிந்து கொள்ளலாம்!  ஆனால்,  பிரபஞ்சத்தின்
பௌதீகத் தளம்  என்பது  ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில்  மூன்றில்  ஒரு பகுதி
மாத்திரமேயாகும்!  பிரபஞ்சத்திற்கு  ஒரு  உயிரியல்  தளமும்,  உணர்வியல்
தளமும் உள்ளது!  மேலும்,  பிரபஞ்சம் பற்றிய, பலராலும் நம்பமுடியாத ஒரு
உண்மை என்னவெனில், பிரபஞ்சத்தின் ஒருமையும் முழுமையும்  பிரபஞ்சத்
திற்கு ( வெளி-காலத்திற்கு) வெளியே உள்ளது என்பதுதான்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 05-07-2017
----------------------------------------------------------------------------


Monday, 3 July 2017

குற்றவுணர்வும் தண்டனையும்





குற்றங்களுக்குரிய தண்டனைகள் உள்ளன! ஆனால்,குற்றவுணர்வுக்கு தனியே
தண்டனை ஏதுமில்லை!  ஏனெனில்,  குற்றவுணர்வே  குற்றமும்,  அதற்கான
தண்டனையும் ஆகும்! ஆகவே ஒருவன் குற்றவுணர்வு கொள்ளாத வகையில்
வாழ்வது மிக மிக முக்கியம்!  இதன் அர்த்தம்,  தவறே செய்யாமல் வாழ்வது
என்பது அல்ல! மாறாக,  மிக முக்கியமானதை,  அடிப்படையானதைச் செய்து
முடிக்கத் தவறாமல்  இருப்பதும்;  தவறு எனத் தெரிந்ததை மீண்டும் செய்யா
திருப்பதும் ஆகும்!

குற்றவுணர்வு என்பது இருத்தலியல் உண்மை (Existential fact)எனவும்
அதை  நாம் அங்கீகரித்து  ஏற்றுக்கொள்வதில் எவ்விதத் தெரிவுசெய்தலுக்கும்
(choice) இடமில்லை எனவும் சொல்லப்படுகிறது.

வாழ்வில் முக்கியமானது எது,  மையமானது எது என்பவை குறித்து ஒருவன்
சிந்திக்கவில்லை; அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்று சொல்பவன் ஒரு
நாகரிக விலங்கு,  அவன் மனிதன் அல்ல!  வாழ்க்கையின் அர்த்தம் பற்றியும்,
குறிக்கோள்,  மற்றும் இலக்கு பற்றியும் சிந்தித்தறியாமல் வாழ்வது மனிதனுக்
குரிய வாழ்க்கையாகாது!

குற்றவுணர்வு என்பது பலவகைப்பட்டதாகும், அவை பலவழிகளிலும் ஏற்படக்
கூடும்!

ஒருவன் தனது உள்ளார்ந்த அசலான தன்மைக்கு உண்மையாக இல்லாததும்,
தனது  உட்பொதிவை  வெளிக்கொணரும் வகையில் வாழாததும் ஒருவனுள்
குற்றவுணர்வை ஏற்படுத்தக்கூடும்!

மேலும், 'வாழ்க்கைச் சவாலை'  சிரமேற்கொள்ள விரும்பாத சோம்பேறித்தனத்
தினால், ஒருவன்  தனது வாழ்க்கைச் சவாலை நிறைவேற்றத் தவறியதற்காக
குற்றவுணர்வு கொள்வதுடன், தன்னையே நொந்துகொள்ளும் 'சுய-வெறுப்பிலும்
வீழ்கிறான்!

குற்றவுணர்வுக்கான காரணத்தை ஒவ்வொருவரும் நேரடியாகத் தாமே கண்டு
பிடித்தால் மட்டுமே  அதைக் களைய முடியும்! ஏனெனில், குற்றவுணர்வு நம்
முடைய  தவறான செய்கைகளினால் ஏற்படுகிறது; தவறான செய்கைகள் நம்
முடைய  தவறான எண்ணங்கள், மற்றும் குறைபாடுடைய சிந்தனைகளினால்
நிகழ்த்தப்படுகின்றன! குறைபாடுடைய சிந்தனைகள் நம்முடைய பொறாமைக்
குணத்தினாலும்,  தகாத ஆசைகள்,  அல்லது பேராசைகளினாலும், சுயநலத்தி
னாலும் தோன்றுகின்றன; இவை யாவும், நம்முடைய  உணர்வுக் குறைபாட்டி
னால் விளைகின்றன! ஆம்,உணர்வுக்குறைபாடு,அல்லது உணர்வின்மை தான்
அனைத்துவிதக்  குற்றங்களுக்கும், தீமைகளுக்கும், குற்றவுணர்வு ஏற்படுவதற்
கும்  காரணமாயுள்ளது!  ஆக, உணர்வுள்ள மனிதனானவன் மிக்க கவனத்துட
னும்,  பொறுப்புடனும் சிந்தித்துச் செயல்படுவானேயானால், குற்றங்களும் நிக
ழாது, குற்றவுணர்வுக்கும் இடமிராது!

ஆம்,  மனிதவாழ்வில்  எது முக்கியமானது,  மையமானது என்பதையும்; எது
உண்மையான  சந்தோஷம்,  மற்றும்  நிறைவு என்பதையும் அவை எவற்றில்
அடங்கியுள்ளன என்பதையும்;  வாழ்வின்  மிக அசலான குறிக்கோள், இலக்கு
எது என்பதையும்  ஒருவன் கண்டுபிடித்து  ( இவை அனைத்தும் ஒரே மெய்ம்
மையைத்தான் சுட்டுகின்றன!)  அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து
வாழும்  ஒருவனுக்கு குற்றங்கள் புரிவதற்கோ, அவை குறித்து குற்றவுணர்வு
கொள்வதற்கோ, கலக்கமடைவதற்கோ, மனம் வருந்துவதற்கோ நேரமிராது!

எனினும்,  வாழ்க்கை  என்பது  கத்தி  முனையில்  நடப்பது  போன்றதாகும்!
எவ்வொரு சிறு உணர்வுக்குறைவும், எண்ணமும், சொல்லும், செயலும் சற்று
பிசகினாலும்  போதும்  அது  ஒருவனுள்  குற்றவுணர்வை ஏற்படுத்தக்கூடும்!
அதே நேரத்தில்,  குற்றவுணர்வு   இல்லாமலும்   ஒருவன்   வாழமுடியாது,
சமநிலையையையும்,  சமநிலை தவறுவதையும்  காட்டும் தராசு முள் போல
குற்றவுணர்வு ஒருவனை நெறிப்படுத்தும் விதி (Principle) போன்றதாகும்!
அச்சவுணர்வு  எவ்வாறு  ஒரு உயிரியின் உடலிலேயே பின்னப்பட்டுள்ளதோ
அவ்வாறு குற்றவுணர்வு என்பது, நன்மை தீமை உணர்த்தும் உணர்வான மன
சாட்சி போல,  மனத்தின் அடிப்படையிலேயே  பின்னப்பட்டதாக உள்ளது என
லாம்!  ஆக,  குற்றவுணர்விலிருந்து முற்றிலுமாக,  ஒரேயடியாக விடுபடுவது
என்பது இயலாது! அதாவது, குற்றவுணர்வு எழும் போதெல்லாம்,  நாம் செய்த
தவறென்ன, அல்லது, செய்யத்தவறியதென்ன என்பதை இனம்கண்டு நம்மைச்
சரிப்படுத்திக்கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடியதாகும்!

மேலும்,  எல்லாப் பிரச்சினைகளும்,  குற்றங்களும்,  தீமைகளும்  மனிதனின்
உணர்வின்மையால்,  அல்லது,  உணர்வுக்குறைவினால் தான் விளைகின்றன
என்பதால்,  உணர்வார்ந்த தன்மையையும்,  உணர்வுக்குறைவையும் எவ்வாறு
சமநிலைப்படுத்துவது  என்பதை  ஒவ்வொருவரும்  அனுபவரீதியாக  கற்றுக்
கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து செல்லவேண்டும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 14-06-2017
----------------------------------------------------------------------------

"வீட்டின் மையத்தில் ஒரு படிப்பறை!"





உங்கள்வீட்டில் தான் எத்தனை அறைகள்! ஒரு நாளில் நீங்கள் எந்தெந்த
அறைக்குள் எத்தனையெத்தனை முறை சென்று புழங்கி வருகிறீர் என்பது
உங்களுக்குத்தெரியுமா? படுக்கையறையில் உங்களது நாள் தொடங்குகிறது!
குளியலறையில் பல்தேய்த்து உடலைச்சுத்தம் செய்கிறீர்! கழிப்பறையில்
உங்களது குடலைக் காலிசெய்கிறீர்! சமையல் அறையில் உங்கள் மனைவி
சிற்றுண்டி செய்கிறாள்! உணவு-அறைக்குச்சென்று சாப்பிடுகிறீர்!

அந்தந்த அறைக்கு உரியதை தவறாமல் அன்றாடம் செய்கிறீர், அவற்றையே
உங்கள் ஆயுட்காலம் முழுவதும் செய்வீர்! இதைத்தானே நீங்கள் வாழ்க்கை
என்கிறீர்? ஒரு நாளுக்கு உரியவற்றையெல்லாம் செய்து முடித்து  மீண்டும்
படுக்கை அறைக்கு  உறங்கச்செல்கிறீர்!

உண்மையில் நீங்கள் ஒரு நாளுக்கு உரிய எல்லாவற்றையும், எதுவுமே விடு
படாமல் செய்து முடித்துவிட்டதாக நம்புகிறீரா?

உங்களது ஒவ்வொரு நாளும் படுக்கை அறையில் தொடங்கி  படுக்கையறை
யில் முடிவடைகிறதையாவது நீங்கள் கவனித்திருக்கிறீரா? கடைசியில் கதவு
கள், சன்னல்கள் இல்லாத காற்றோட்டமில்லாத அறைக்குள் கொண்டு வைக்
கப்படுகிறீர்! இவ்வளவுதான் வாழ்க்கையா?

ஒரு வீட்டிலுள்ள அறைகள் வெறும் சுவர்களைக்கொண்டு தடுக்கப்பட்ட வெளி
அல்ல; அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை அம்சத்தை, மிகவும்
அடிப்படையான பகுதியை நிறைவேற்றுவதற்கான இடங்களாகும்.

வீட்டின் மத்தியில், ஒரு பெரிய கூடம், அதை வாழும் அறை (Living Room)
என்கிறீர்!  ஆனால், அங்கு நீங்கள் வாழ்கிறீர்களோ இல்லையோ அங்கேதான்
குடும்பப் பிரச்சினைகள், சண்டைகள் யாவும் அரங்கேற்றப்படுகின்றன!

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை உள்ளது! அங்கே குடும்பத்தினருக்கான
உணவு மட்டுமல்லாமல், குடும்பத்தை நிர்வகிப்பதற்கான சர்வ அதிகாரமும்
சமைக்கப்படுகின்றன! உணவு மிகவும் அடிப்படையானது, உணவுதான் ஒரு
நாள் முழுவதும் இயங்குவற்கான செயல்படுவதற்கான சக்தியை, ஆற்றலைத்
தருகின்றது!

சாப்பாட்டு அறை, அங்கே தான் நீங்களும், உமது குடும்பத்தாரும் உண்கிறீர்.
சில குடும்பச் சண்டைகள் இங்கே தான் தொடங்குகின்றன!

படுக்கை அறை, இங்குதான் நீங்கள் ஒய்வு கொள்கிறீர், உறங்குகிறீர், வாரிசு
களை உருவாக்குகிறீர்! சில சண்டைகள் இங்கே தீர்வுகாண்கின்றன, ஆனால்,
சில பெரும் பிரச்சினைகளும்,மண-முறிவுகளும் இங்குதான் ஆரம்பமாகின்றன!

அடுத்து, குளியலறை இங்கு நீங்கள் பல்தேய்த்து உடலைக்குளிப்பாட்டி சுத்தம்
செய்கிறீர்! கழிப்பறையில் உங்களது குடல்களைக் காலிசெய்கிறீர்! மீண்டும்
உணவைக்கொண்டு வயிற்றை நிரப்புவதற்கு முன்னேற்பாடாக!

ஆம், உண்டு, உறங்கி, இனம்பெருக்கி வாழும் வாழ்க்கையின் பிரதான அம்சங்
களை நிறைவேற்றுவதற்கான அறைகளுடன் நம் ஒவ்வொருவரின் வீடும் நம்
முடைய பொருளாதார நிலைக்கேற்ப சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ
அமைத்துக்கொள்கிறோம்! ஆனால், ஒரு வீடு என்பது எதுவும் விடுபடாமல்
வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டதாக  பெரும்
பாலும் அமைக்கப்படுவதில்லை! ஒரு வீடு என்பது நாம் வாழும் வாழ்க்கை
யைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை!

நம்மில் பலர் நம் வீட்டில் இறைவழிபாட்டிற்கென பூஜை அறை ஒன்றையும்
அமைக்கத்தான் செய்கிறோம்! அங்கே நாம் பலவித கோரிக்கை மனுக்களை
பிரார்த்தனை என்ற பெயரில் சமர்ப்பிக்கிறோம்! மொத்தத்தில், பூஜை அறை
என்பது இறைவனுக்கு நாம் அளிக்கும் உதட்டளவு உபசரிப்புக்கான ஒருஅறை
என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல!

நம்மில் சாதாரணமாக வாழப்பிடிக்காத சிலர், தங்கள் பொருளாதார அந்தஸ்து
வெளியே தெரியும்படி வீட்டை பெரிதாக, பகட்டாக மாளிகை போல
அமைத்துக்கொள்கிறோம்! பெரிய பெரிய 'பங்களாக்கள்', மாளிகைகள், அரண்
மனை போன்ற வீடுகளை எழுப்புபவர்கள் அவற்றில் வசிக்கிறார்களே தவிர
வாழ்வதில்லை! ஒருவனுடைய வீடு பெரிதாக பெரிதாக அவனது இதயம்
சிறுத்துவிடுகிறது! அவன் மனித சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு
விடுகிறான்! வீடு, வாசல், வாழ்க்கை குறித்த விஷயத்தில் எவ்வகையிலும்
இவர்களை, இந்த பணக்காரர்களை, சிறந்த உதாரணமாக, பின்பற்றத்தக்க முன்-
மாதிரியாகக் கொள்ளவியலாது என்கிற எச்சரிக்கையுடன் நாம் இவர்களை
இப்போதைக்கு விட்டு விலகிச் செல்வோமாக!

பொதுவாக,  வீடுகள்,  அவை சிறிதோ, பெரிதோ அவை உடலை மையமாகக்
கொண்ட  வாழ்க்கைக்கு மட்டுமே  இடமளிப்பதாக  அமைந்துள்ளன, அல்லது
அமைக்கப்படுகின்றன!  உயிர்-வாழ்தல்  என்பது  அடிப்படையானது,  ஆனால்,
அதைவிட உயிர்-வாழ்வதன் நோக்கமும், குறிக்கோளும் அதிமுக்கியமானவை;
ஏனெனில், அதில்தான் உயிர்-வாழ்வதன் அர்த்தம் அடங்கியுள்ளது! ஆக,அர்த்த
முள்ள  மனித வாழ்க்கையை,  அதாவது,  உள்ளத்தை மையமாகக் கொண்ட
உயர்-வாழ்க்கையை வாழ்வதற்கு இடமளிப்பதாக, வீடானது அமைக்கப்படுவது,
குறைந்த பட்சம் ஒரு அறையாவது அமைக்கப்படுவது மிகவும் முக்கியமாகும்!
அத்தகைய ஒரு அறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம்மில் வெகு சிலர்
ஏற்கனவே தங்கள் வீடுகளில் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள், அல்லது,அதிகப்
படியாக  இருக்கும் ஒரு அறையை ஒதுக்கியுள்ளார்கள்.  அதற்குப்பெயர் தான்
"படிப்பறை" என்பதாகும்!

ஆனால், படிப்பறை என்றவுடன் அது பள்ளிக்குழந்தைகள் படிப்பதற்கும்,வீட்டுப்
பாடங்களை எழுதுவதற்குமான அறை என்று கருதிட வேண்டாம்! ஏனெனில்,
படிப்பு, கல்வி, கற்றல், அறிவு என்பவை பள்ளிக்குச்செல்லும் சிறுவர்களுக்கும்,
கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்களுக்கும் மட்டுமேயுரியது அல்ல! மாறாக,
படிப்பு, கல்வி, கற்றல், அறிவு, ஞானம் ஆகியவை சிறுவர்களைவிட வளர்ந்த
பெரியவர்களுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது!  தற்காலப் பள்ளி, மற்றும்,
பல்கலைக்கழகக் கல்வி என்பது பெரிதும் பிழைப்புக்கான கல்வியாக மட்டுமே
யுள்ளன; வாழ்க்கைக்கான கல்வியாக இல்லை! நாம் தான் பிழைப்புக்கான
கல்வியை கற்று முடித்து நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து விட்டோமே இனி
எதற்கு நமக்குப் படிப்பு, கல்வி, கற்றல், அறிவு என்றெண்ணுவது பெருந்தவறு
ஆகும்!

மேலும், படிப்பறை என்பது படிப்புக்கானது மட்டுமல்ல; மாறாக, ஒருவன் தன்
னுடன் தனித்திருக்க, தன்னுள் ஆழமாகச்செல்ல உதவும் வகையிலானதொரு
இடமாகும்! அங்கே ஒருவன் அமர்ந்து ஆழமாகச் சிந்திக்கவும், தியானிக்கவும்,
தன்னை ஆட்கொண்ட இசைப்பாடல்களைக் கேட்கவும், இசைக்கருவியின்
துணையுடன் தன்னுடைய ஆன்மாவின் பாடல்களை இசைக்கவும், ஓவியம்
தீட்டவும், சிறிய அளவிலான சிற்பங்களைச் செதுக்கவும், கைவினைப்பொருட்
களை வடிவமைக்கவும், சுருக்கமாகச் சொன்னால், உடல், நாடிநரம்புகள்,மனம்,
இதயம் யாவும் ஒத்திசைவுடன் இயங்குவதன் உச்சமாக ஆன்மாவின் தரிசனத்
தைப் பெறுவதற்கான ஒரு ஆரவாரமற்ற வெளிதான் படிப்பறை என்பதாகும்!

ஆக, ஒவ்வொரு வீட்டிலும் படிப்பறை என்பது மிகவும் அவசியமாகத்தேவை!
ஆனால், அதற்காக படிப்பறை என்பது வீட்டின் மையத்தில்தான் அமைக்கப்பட
வேண்டும் என்பதில்லை! மனித வாழ்வின் மிக மையத்துவமான அம்சமான
உள்ளத்தின் (ஆன்மீக) வாழ்க்கைக்கு உதவும் வகையிலான படிப்பறை என்பது
ஒவ்வொரு வீட்டிற்கும் மையமாக விளங்கவேண்டும் என்பதைக் குறிப்பதற்கா
கவே "வீட்டின் மையத்தில் ஒரு படிப்பறை!" என்று இக்கட்டுரைக்குத் தலைப்
பிடப்பட்டுள்ளது! ஆம், வீடு சிறியதோ, பெரியதோ அதில் ஒரு படிப்பறையும்
இடம் பெறவேண்டும், அந்த அறை ஓரத்தில் இருந்தாலும்,வீட்டின் மையத்தில்
இருந்தாலும்  அவ்வீட்டின்  ஈர்ப்பு-மையம் (Center of Gravity)படிப்பறை
யில் அமையுமாறு ஒருவர் தன் வாழ்க்கையை வாழ்ந்திடவேண்டும்!

ஒருவரது  படிப்பறையானது வீட்டினுள் (ஏதோவொரு பகுதியில்) தான் இருக்
கிறது என்றாலும், அதை இப்பிரபஞ்சத்திற்கு வெளியே திறக்கும் ஒரு கதவாக
மாற்றுவது அவரது உணர்வார்ந்த முயற்சியில் தான் உள்ளது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 02-07-2017
----------------------------------------------------------------------------

  

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...