Saturday, 30 July 2016

பெரிதினும் பெரிது தேடு!



 

சந்தேகத்திற்கிடமில்லாமல் சந்தோஷம்
என்பது வாழ்வில் மிக மையமானது!
வெயில் உணர்ந்து நிழல் தேடும் புழுவிற்கும்
சந்தோஷம் இன்றியமையாதது!

மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும்
சந்தோஷம் தான் ஒற்றை இலக்கு!
ஆனால் அந்த இலக்கை மனிதன் அடைந்தானா
என்பது சந்தேகமே!

காரணம் சந்தோஷம் தரும் பொருட்களின்
இல்லாமையோ, போதாமையோ அல்ல!
அனைத்து சௌகரிய சம்பத்துக்களுக்கும்
சுகபோகங்களுக்கும், சாதனங்களுக்கும்
மத்தியில் மனிதன் சந்தோஷமாக இல்லை!

ஏனெனில், மனிதனுக்கு சௌகரியம்
சுகபோகம் என்பவற்றிற்கும் சந்தோஷம்
என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை!

மேலும், தேவைகளின் பூர்த்தி சந்தோஷத்தை
இலக்காகக் கொண்டதல்ல!
அவை அவ்வப்போதைய தொல்லைகளை
குறைபாடுகளைக் களைபவை மட்டுமே!

பசி ஒரு தொல்லைதரும் சக்திக்குறைபாடு!
உணவு பசியைப் போக்கும், அதில் ருசியைப்
புகுத்துவது செயற்கையானது!
மாங்கனிக்கு ருசி கூட்ட நினைப்பது
மடமையாகும்!

ருசியான உணவை சந்தோஷத்திற்குரிய
ஒன்றாகக் கொள்வது பிறழ்ச்சியானது!
திருப்தியாக விருந்துணவு உண்டாயிற்று
அடுத்தது என்ன?

உணவைப்போலத்தான் உடையும்,
உறைவிடமும்!
நேர்த்தியாக உடுத்தியாயிற்று
அடுத்தது என்ன?

அடிப்படைத்தேவைகளை அடைந்தாயிற்று
அடுத்தது என்ன?
ஒரு பெரிய வீடு கட்டி அதில் வசிப்பது
வழியே நான் சந்தோஷமடைவேன்
என எண்ணுபவன் தனது சந்தோஷத்தை
அடமானம் வைத்து வீடு கட்டி
கடன் காரனாகி அல்லலுறுகிறான்!

தனது சந்தோஷத்தை பண்டமாற்று
செய்யாதவன், குடிசையிலும்
சந்தோஷமாயிருக்கிறான்!
அடுக்கு மாளிகை கட்டினாலும் அதிலும்
சந்தோஷமாயிருக்கிறான்!

சந்தோஷத்திற்காக உருவாக்கப்படும்
பொருட்கள் மனிதனை சந்தோஷப்
படுத்துவதில்லை, நிறைவு செய்வதில்லை!

சந்தோஷமான மனிதன் தனது
சந்தோஷத்திலிருந்து அனைத்தையும்
செய்கிறான், உருவாக்குகிறான்!
அவனது சந்தோஷம் எச்சூழ் நிலைமையிலும்
குறைவதில்லை!

ஏனெனில்,  சந்தோஷம் மொத்தத்தையும்
அவன் புறத்தே எவ்வொரு
பொருளிலும், எதிலும் அல்லாமல்
தன்னுள் முதலீடு செய்துள்ளவனாய்
இருக்கிறான்!

   *

வாழ்க்கையில் இது இருந்தால்
சந்தோஷமடைவேன்,அல்லது
அது இருந்தால் சந்தோஷமடைவேன்
என்பவன் சந்தோஷத்தை அறியாதவன்!
ஏனெனில், சந்தோஷம் இதில்
அடங்கியிருக்கிறது, அல்லது அதில்
அடங்கியிருக்கிறது என்பது அவனது
எண்ணத்தின் முடிவும் முதலீடும் தானே
தவிர அப்பொருட்களுக்கும்
சந்தோஷத்திற்கும் எவ்வொரு
சம்பந்தமும் கிடையாது!

இச் சிறுபிள்ளைத்தனமான எண்ணம்
இறுதிவரை மாறாதிருப்பது தான் பெரும்
துரதிருஷ்டம்!

   *

பொருட்கள், எல்லாப்பொருட்களும்
ஒரு சிறு குண்டூசி முதல் விலையுயர்ந்த
மோட்டார் வாகனம் வரை ஒவ்வொன்றும்
பயன்பாட்டுக்குரியதே, ஒரு குறிப்பிட்ட
தேவைக்குச் சேவை புரிவதே!

ஒரு குண்டூசியின்  பயன் நாம் அறிந்ததே!
ஆனால், ஒரு குண்டூசியிடமிருந்து நாம்
சந்தோஷத்தை எதிர்பார்ப்பதில்லை!
அவ்வாறே விலையுயர்ந்த ஒரு
மோட்டார் வாகனத்திடமிருந்தும் அதனுடைய
பயன்பாட்டு எல்லையைத் தாண்டி, நாம்
சந்தோஷத்தை எதிர்பார்க்க முடியாது!

ஆனால், நம் சக-மனிதர்கள் சிலர்
மோட்டார் வாகனம், பெரிய ஆடம்பர வீடு,
இன்னும் பிற பகட்டான பொருட்களை
உடமையாகக் கொண்டிருப்பதால்
அந்தஸ்தில் உயர்ந்துவிட்டதாக அதனால்
அதிகம் சந்தோஷப்படுவதாக நடித்து
தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள்!

சௌகரிய நிலையில், கூட, குறைய
என்பதற்கு இடமுண்டு
ஆனால், சந்தோஷம் என்பது சந்தோஷம்
தான், அதில் அதிகம், கொஞ்சம்
என்பதில்லை!

சௌகரியக்குறைச்சல் உண்மையான
சந்தோஷத்திற்கு ஒருபோதும் தடையாக
இருப்பதில்லை!

ஏனெனில், சந்தோஷம் என்பது புறத்தைச்
சார்ந்த ஒன்றல்ல!

மேலும் உண்மையான சந்தோஷம் தருகின்ற
சௌகரிய உணர்வுக்கு ஈடாக இவ்வுலகில்
வேறெதுவும் இல்லை!

   *

புழுவின் சந்தோஷமும் மனிதனின்
சந்தோஷமும் ஒன்றல்ல!
ஒரு புழு என்பது வெறும் உயிருள்ள உடல்
மாத்திரமேயாதலால், அது தன் உடலின்
பசிகளை தீர்த்துக்கொள்வதுடன் மிக எளிதாக
திருப்தியடைந்து விடுகிறது!

புழுவிற்கு உடல் ரீதியான திருப்தி தான்
அர்த்தமும், சந்தோஷமும், அனைத்தும்!
புழுவிற்கு வாழ்க்கையைப் புரிந்து கொள்ள
வேண்டிய அவசியம் அது ஒரு புழுவாக
இருக்கும் நிலையில் இல்லை!
ஆகவேதான் புழு பரிணமித்து மனிதனாகியது!

ஆனால், மனிதன் தனது உடலின் பசிகளை
தீர்த்துக்கொள்வதுடன் ஒரு புழுவைப்போல
திருப்தியடையலாம், ஆனால்,
சந்தோஷமடைய இயலாது!
ஏனெனில், சந்தோஷம் என்பது உடல்
ரீதியானதல்ல!

உடலையடுத்து மனிதனுக்கு மனம் என்று
ஒன்றுள்ளது!
ஆனால், மனித-மனம் மிக எளிதாக
பிரமைகளுக்கு ஆட்படக்கூடியது!
ஆகவேதான், பலர் அதிகப்பணம் இருந்தால்
எல்லாப் பொருட்களையும், சௌகரியங்களையும்
விலைக்கு வாங்கிவிடலாம்,  சந்தோஷமாக
வாழலாம் என்று எண்ணி ஏமாந்து போகின்றனர்!

ஏனெனில், சந்தோஷம் என்பது மன-ரீதியானதல்ல!
மாறாக மனதையும் கடந்தது!
மனிதன் தனது மனதின் அசலான பணியைக்
கண்டுபிடித்து நிறைவேற்றும் வரை அவன்
உண்மையான சந்தோஷத்தை
ருசிப்பதில்லை!

மனதின் அசலான பணி வாழ்க்கையைப்
புரிந்து கொள்வதே!
மனம் என்பது அறிதல் மற்றும் புரிதலுக்கான
கருவியே, அவ்வாறு இல்லையெனில்
மனிதனுக்கு மனம் எதற்கு?

சந்தோஷம் என்பது வாழ்க்கையைப்
புரிந்து கொள்வதைச் சார்ந்தது!
புரிதல் என்பது ஆழமாக ஊடுருவிக்
காணும் உட்-பார்வையைச்
சார்ந்தது!
உட்-பார்வை என்பது  ஒருவனது
பேரார்வத்தைச் சார்ந்தது!

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்
வழிமுறையில் மனித-மனம் மலர்ந்து
ஆன்மாவாகிறது!
அதுவே சந்தோஷத்தின்
ஊற்று!

  *

மா.கணேசன்/30.06.2016




2 comments:

  1. ஆசை சந்தோஷத்தின் ஞாபகம், பயம் வலியின் ஞாபகம். இரண்டுமே மனதை அமைதியற்று இருக்கச் செய்கின்றன.சந்தோஷமான கனங்கள் வலியின் ஓட்டத்தில் வெறும் இடைவெளிகளே.மனம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
    வலி என்னும் பின்புலத்தைக் கொண்டிருந்தால்தான் மகிழ்சி என்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வலி,சுகம் இரண்டையும் கடந்திடும் போது உண்மையான மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் வெளிப்படும் அப்போது யாதொரு பின்புலமும் தேவைப்படாது.ஒருவன் உண்மையை (அணுக)விரும்புகிறான் என்பதன் அர்த்தம் அவன் அனைத்துப் பின்புலங்களையும் விட்டு விட விரும்புகிறான் என்பதே!

      Delete

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...