Thursday, 24 November 2016

நானின்றி அமையாது உலகு!


















"நான்" என இங்கு  நான் குறிப்பிடுவது என்னைத்தான்!
ஏனெனில், "நான்" என என்னை நான் உணர்வது போல
இங்கும், இப்பிரபஞ்சத்தில் வேறெங்கும் எவரும் எதுவும்
இல்லை!

"உலகம் தான் அனைத்தும் என்பதுதான் விஷயம்!"
என்றனர் அதிகம் சிந்தித்த அறிவுஜீவிகள் பலர்!
"நான் இருக்கையில் உலகம் இல்லை!" என்றேன் நான்.

உலகம் இல்லாத நிலையில் நீ எங்கிருக்கிறாய்? என்றனர்.
"முதன்முதலாக உலகம் இருந்த இடத்தில்!" என்றேன்.
"பாழாய்ப் போச்சு!" என்றனர்.

"ஆம், உடலும், உலகமும், உலகைச்சார்ந்த யாவும் முடிவில்
அப்படித்தான் போகும்; ஆனால் பேருணர்வைச் சேர்ந்த நான்
இருப்பேன் என்றென்றும்!" என்றேன்.

ஏனெனில், பேருணர்வு என்பது அழிவற்றதும் ஒருமையும்
முழுமையுமானதொரு தனி மெய்ம்மை!
நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது  என்பதைப்போல
நான் பேருணர்வைச் சேர்ந்தவன்!

நான் மிகவும் முக்கியமானவன் என்பது பிரபஞ்ச உண்மை!
அவ்வாறே நீங்கள் ஒவ்வொருவரும் ஆகலாம்!
என்னைப்போல உங்கள் உள்ளார்ந்த  ஒப்பிடவியலா மதிப்பை
நீங்களும் உணர்ந்தறியும் பொழுது!

அட, சிந்தித்தறியாமல் வேடிக்கை பார்க்கிறவர்களே, நான்
உணர்ந்தது போல நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால்
நீங்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் இருப்பீர்கள், பேசுவீர்கள்!
ஆகவே சிந்திக்கத்தொடங்குங்கள் உடனே!

திடீரென கண் விழித்துப்பார்த்த போது நான் ஒரு ஏணியின் மீது
உயரே இருக்கக்கண்டேன். ஆம், ஏணியின் பகுதியாய், அதன் ஒரு
படியாய்!  கீழே பார்த்தேன், பல படிகள், அடியற்ற ஆழத்திற்குச்
செல்வதாய்த் தெரிந்தன!

மேலே அடுத்த படியில் ஏறலாமெனப் பார்த்தேன் - வேறு
படிகள் ஏதும் இல்லை! நான் நிற்பதே உச்சிப் படியாகவும், நானே
அப்படியாகவும் இருப்பதை உணர்ந்தேன்!

பிறகு புரிந்துகொண்டேன், அந்த ஏணி என்னுடன் முடிந்துவிட
வில்லை; என்னைக்கடந்தும் செல்வதாயிருந்தது; அதாவது
நானே என்னைக்கடந்து வளர்ந்து சென்றிடவேண்டும்!
நானின்றி இறுதி-மெய்ம்மை எங்ஙணம் நிகழும்?

அது மட்டுமல்ல, என்னைச்சுற்றிலும், என்னைப்போலவே
பலரும் நிற்கக் கண்டேன்! இது, ஒரு மரத்தில் பல பிஞ்சுகள்
காய்த்திருப்பதைப்போல இருந்தது!

என்ன? திடீரென ஏணி மரமாக மாறிவிட்டது எனக் குழம்பாதீர்!
உவமைகள் மாறுவது உலகம் நேர்-கோட்டுத்தன்மையில்
இல்லை என்பதைக்குறிக்கிறது!

உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, உண்மையில்
நானின்றி அமையாது உலகு! நீங்கள் சொல்லலாம் எத்தனையோ
கோடானுகோடி பேர் பிறந்து வாழ்ந்து மாண்டுபோயினர் என்று!

'உலகம் மட்டுமே நிலையானது' எனவும் சொல்வீர்கள்! ஆனால்,
நிலையானது, நீடித்து நிலைப்பது என்பதை நீங்கள் காலத்தைக்
கொண்டு அளவிடுகிறீர்கள்! இது ஒரு மகா தவறு!

ஏனெனில், காலம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை
உங்களால் அறியமுடியுமா? காலம்  என்பதே ஒரு காலாதீதத்
தனி-நிலைப் புள்ளியில் தோன்றியது தானே!

ஒரு கணக்குப்படி காலம் தோன்றி ஆயிரத்து ஐந்நூறு கோடி
ஆண்டுகள் ஆகின்றது! ஒரு வேளை இன்னும் ஆயிரத்து ஐந்நூறு
கோடி ஆண்டுகள்வரை காலம் நீடிக்கலாம்!

அதுவரை இந்த பூமி நிலைக்கவேண்டுமே? பூமி நிலைக்க
சூரியன் நிலைக்கவேண்டுமே! சூரியன் நிலைக்க பால்-வீதி
மண்டலமும் மொத்தப்பிரபஞ்சமும் நிலைக்கவேண்டுமே!

கவலை வேண்டாம்! நான் இப்போது இங்கு இருக்கிறேன்!
ஆகவே, நான் இருக்கும்வரை அனைத்தும் நிலைத்திருக்கும்!
நான் சென்றபிறகும், என்னைப்போன்ற பிற தனிமனிதர்களுக்காக
உலகம் இருக்கும்! காய்த்துக்குலுங்கும் மரம் உடனே பட்டுப்போகாது!

ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பும் என்னுள் குவிந்தது மையம் என!
ஏனெனில், நான் விசேடமானதொரு உணர்வாம்சம் என்பதால்
மட்டுமல்ல; என்னைக் குவியாடியாகக்கொண்டு என்வழியே
அந்த இறுதி  ஒருமையாம் பேருணர்வை அடைந்திடவே!

எனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்புறவு விசித்திரமானது!
நான் இல்லாமல் பிரபஞ்சம் இல்லை; பிரபஞ்சம் இல்லாமல்
நானில்லை! பிரபஞ்சம் விருட்சமானால் நான் அதன் கனி!
என்னுள்ளே விருட்சத்தின் மூலவித்து!

விருட்சத்தைப் பெரிதெனப் போற்றும் உணர்வுப் பிஞ்சுகளா!
வித்தைத் தன்னுள் கொண்ட கனியாக நீங்கள் மாறுவது எப்போது?
வித்தில்லாமல்  விருட்சம் இல்லை என்பது ஏன் புரியவில்லை ?
வித்திற்கும் வித்திற்கும் இடையே தோன்றும் நிகழ்வே விருட்சம்!
வித்துதான் மூலமும் முடிவுமான ஒரே நிஜம்!

பிரபஞ்சம் என்னைக்கொண்டுவந்தது; நான் பிரபஞ்சத்தை
முழுமையடையச் செய்கிறேன்! பிரபஞ்சம் எனக்காகவே
இருக்கிறது என்று சொல்வது படுஅபத்தமானது; நானும் அதற்காக
இல்லை; ஏனெனில் நாங்கள் இரண்டல்ல ஒன்றே!

நாங்கள் இருவரும் இணந்திருப்பது சாரமான வேறொன்றுக்காக!
வித்து விருட்சமாக விரிவதும், விரிந்தவிருட்சம் வித்தினுள்
அடங்குவதும், என்ன விநோதம், இதற்குப்பெயர்தான் பரிணாமம்!
ஆனால், வித்தின் மகத்துவம் விரித்துச் சொல்லவியலாதது!

நான் இப்பிரபஞ்சத்தினுள் இருப்பது எவ்வளவு உண்மையோ,
என்னுள் பிரபஞ்சம் இருப்பதும் அவ்வளவு உண்மையே!
நான் உதயமாகிய போது பிரபஞ்சத்தின் பகுதியாக இருந்தேன்!
நான் தலையெடுத்ததும் பிரபஞ்சம் எனது பகுதியாயிற்று!

பிரபஞ்சத்தின் பகுதியாக நீடிக்கும்வரை, மனிதா, உனக்குச்
சுதந்திரமில்லை! பிரபஞ்சத்தின் முழுமையாக மாறும் மனிதனே
சுதந்திரன்! பிரபஞ்சம் விருட்சமானால், மனிதா,  நீ அதில்
எத்தகைய பகுதி, என்பதைக் கண்டுபிடி!

நீ, அதன் ஒரு கிளையா? இலையா? பூவா? அல்லது பிஞ்சா?
பிரபஞ்சப்பிஞ்சு நீ எனில், உடனே காயாகி, முற்றிக் கனியாகிடு!
முழுமையாதல் மட்டுமே உனது முக்திக்கு ஒரே வழி!
நீ எங்கிருப்பினும், எதனுடைய பகுதியாகவும் இராதே!

நதியாக நீ இருந்தால் உடனே சமுத்திரம் சென்று சேர்ந்திடு!
ஏணியின் படியாக நீ இருந்தால் ஏறிக்கடந்து விண்ணில் தாவிடு!
வட்டத்தினுள் நீ ஒரு புள்ளியாக இருந்தால் அதன் மையமாகிடு!
அரை-உணர்வாய் நீ இருந்தால் முழு-உணர்வாகிடு!

நானின்றி அமையாது உலகு; எனது அறிதலுக்கும் அனுபவத்திற்கும்
வெளியே உலகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்!
அறிபவன்  நானின்றி சட-உலகம் தன்னைத் தானே அறியுமோ?
தன்னையறியாத இருப்பு இருந்தென்ன பயன்?

அட மனிதா!  பேரண்டம் பெரிது என்று சொல்லாதே!
அளவற்றதை அளக்கும் அளவுகோல் எது?
ஏனெனில், உலகை உணர்வு கொள்ளும் மனித-உணர்வே
உலகை, இப்பேரண்டத்தை விடப் பெரியது!

உலகம் என்பதென்ன? பௌதீக விஞ்ஞானிகளது பார்வையில்
அது வெறும் அணுத்துகள்களின் தொகுப்பே, இயக்கத்திலுள்ள
சடப்பொருளே! ஆனால், அவர்கள் அறிந்தது உயிரற்ற வெறும்
சடப்பிரபஞ்சத்தை மட்டுமே! பாவம், அவர்களது பார்வை
(பௌதீக) உலகை மையமாகக்கொண்டது!

ஆனால், எனது பார்வை என்னை மையமாகக் கொண்டது!
பிரபஞ்சம் கனபரிமாணத்தில் பெரிதாக இருப்பதில் எனக்கு
ஆட்சேபனையில்லை! இருந்துவிட்டுப்போகட்டும்! இன்னும்
அது என்றென்றும் நீடித்து நிலைப்பதாகவும் இருக்கட்டும்!
அது என்னுடைய பிரச்சினை அல்ல!

எனது வாழ்-காலம் ஒப்பீட்டளவில் மட்டுமே குறுகியது;
எனக்கு அதுவே போதுமானதிற்கும் அதிகமானது!
எவ்வளவு வருடங்கள் உயிரோடிருக்கிறேன் என்பதல்ல
எவ்வளவு விரைவாக எனதிலக்கை, முழு-உணர்வை
அடைகிறேன் என்பது மட்டுமே முக்கியமானது!

எல்லோரும் உலகைப் பிரதானப்படுத்துகிறார்கள்!
நான் என்னைப் பிரதானப்படுத்துகிறேன்!
என்வழியாக அடையப்படவேண்டிய உன்னத இலக்கிற்காக!
ஏனெனில், உலகின் உட்கிடக்கையை புரிந்தவன் நான்!

காலம், விரிவடையும் வெளி, அணுத்துகள்கள், நிறை, ஈர்ப்புவிசை
மின்காந்தவிசை, பொருள், எதிர்ப்பொருள், பல-பிரபஞ்சம்,
பத்துக்கும் மேற்பட்ட பரிமாணங்கள், மாறாமதிப்பளவை,வெற்றிடம்
ஒளி-வேகம், கருந்துளை, வெடித்துச் சிதறும் நட்சத்திரங்கள்
என விஞ்ஞானிகள் எதையாவது கதைக்கட்டும்!

ஒன்றுமில்லாததிலிருந்து வந்தது உலகம் என்பார் - ஒன்றையும்
அறியார்! பருப்பொருளே பரம்பொருள் என்பார்- பொருளின் பொருள்
அறியார்! கடவுள் படைத்தார் என்பார்- கடவுளைக்கண்டாரில்லை!
உலகம் மாயை என்பார்- உலகில் இருந்துகொண்டே!
உலகம் மட்டுமே நிஜம் என்பார்- தன் நிஜம் அறியாதார்!

அவர்கள் போகாத ஊருக்கு வழி தேடுகிறார்கள்! ஊழிக்காலம்வரை
தேடிக்கொண்டேயிருப்பார்கள்! அவர்கள் உலகையும் அறியார்,
மனிதனையும் அறியார், வாழ்க்கையையும் அறியார்!
நான் நேர்வழியைச் சொல்கிறேன்! மனிதா, நீ உன்னையறிவதே
அனைத்தையும் அறிவதாகும்!

மனிதா! உலகம் உன்னை வந்தடைந்ததும் அதன் பணி முடிந்தது!
இனி உலகம் உனது நிழல்! நீயே உலகின் புதிய பரிமாணம்!
உன்னுடன் தொடங்குகிறது புதியதொரு பரிணாமம்!
உலகம் தனக்காக இல்லை; மனிதா! நீயும் உனக்காக இல்லை!
பின் எதற்காக நீ இருக்கிறாய் என்பதன் உண்மையைக்
கண்டுபிடித்திடவே நீ  இருக்கிறாய்!

மனிதா! கல், மண், மற்றும் நீரால் ஆன உலகில் அல்ல நீ வாழ்வது!
மாபெரும் புதிருக்குள் அல்லவா நீ வாழ்கிறாய்!
ஆகவே அனைத்தையும் புதிரின் சொற்களுக்கு மாற்றிக்காண்!
இதுவே புதிரை விடுவிக்கும் எளிய வழி!

அழியும் சதையும் எலும்பும் ரத்தமும் சேர்ந்த உடலல்ல நீ!
அனைத்தையும் ஊடுருவி உய்த்துணரும் உணர்வு நீ!
ஆகவே அனைத்தையும் உணர்வின் சொற்களுக்கு மாற்றிடு!
அனைத்தையும் உணர்வு வயப்படுத்திச் செரித்துவிடு!

இதுவே உலகைக் கடந்திட உதவும் உன்னத உபாயம்!
பிரபஞ்சம் அது நீ பிறந்த கூடு, அது உனது அசலான வீடு அல்ல!
ஆகவே நீ உணர்வுச் சிறகுகளை விரித்துப் பறந்து வீடடைந்திடு!

நானின்றி அமையாது உலகு! நான் தோன்றியதும் பின்தங்கிற்று
உலகு! ஏனெனில், நானே உலகின் உயர் அவதாரம்!
நானின்றி அமையாது மானிடம்! நானே பிறர்க்கு ஆதாரம்!

என்னைப்பொறுத்தவரை உலகா? நானா? என்றால்
சந்தேகமின்றி நானே முக்கியமானவன்!
உலகைப்பொறுத்தவரையிலும் நானே முக்கியமானவன்!
இல்லாவிடில், உலகம் நானாக ஆகியிருக்காது!

பிரபஞ்சத்திற்கு நான் மிகவும் முக்கியமானவன், ஏனெனில்
அதன் உள்ளார்ந்த விழைவையுணர்ந்து நிறைவேற்றுபவன் நானே!
உயிரும் உணர்ச்சியுமற்ற சடமாகப்பிறந்த உலகின் உணர்வு நான்!

பிரபஞ்சத்துடன்  உணர்வுபூர்வமாகத் தொடர்புகொள்பவனே மனிதன்!
மற்றெல்லோரும் கூண்டுக்குள் அடைபட்ட பயனில் ஜந்துக்களே!
நான் தோன்றும்வரை எல்லாம் உலகைப்பொறுத்ததாயிருந்தது!
நான் தோன்றியபிறகு  எல்லாம் எனது பொறுப்பாயிற்று!

உலகம், இயற்கை பருப்பொருள் என்று போற்றிப்பாடுபவர்கள்
உலகின் உட்கிடக்கையைப் புரிந்துகொண்டாரில்லை!
உலகைச் சடமாகக்கொள்பவர்கள் தாமும் சடமாய்ச் சமைந்தனர்!
அல்லது ஒருபடி மேலேறி விலங்கோடு விலங்காயினர்!

நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்கள் உணர்வும்
குழந்தையாக, அதாவது அகந்தையாக இருந்தது நியாயம்!
நீங்கள் வாலிபனாகி, வளர்ந்தமனிதனாகி, வயோதிகனாகியும்
உணர்வில்  நீங்கள் வளரவேயில்லை! உடலின் வளர்ச்சிக்கேற்ப
ஊதிப்பெருத்ததென்னவோ உங்கள் அகந்தை மட்டுமே!

உலகின் பகுதியாக எங்கோ ஒரு ஓரமாக இருக்காதீர்!
உலகின் சாரமாக அதன் கனியாக மாறுங்கள்!
உலகை விலங்குகள் சரணாலயமாக எண்ணி வாழாதீர்!
உயர் பேரறிவாலயமாக மாற்றிடுங்கள்!

பின்னிட்டுப் பார்க்காத பிரபஞ்ச இயக்கத்தின் நீட்சி நான்!
நானும் பின்னிட்டுப்பார்ப்பதில்லை! எதனுடனும் தேங்குவதில்லை!
எனது ஒரே நோக்கம், குறிக்கோள், இலக்கு,  இறுதி-ஒருமையே!

நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் உய்வு!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் மகிழ்வு!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் முழுமை!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் உண்மை!

மா.கணேசன் / நெய்வேலி / 11.11.2016
---------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...