
மனிதன் என்பவன் தன்னை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவனல்ல;
மாறாக, தன் வழியே மெய்ம்மையை நிலை நாட்டுவதற்காகத்
தோன்றியவனாவான்!
சில சிந்தனையாளர்களும், தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல்
நேசர்களும் அனைத்து உயிரினங்களும் சமமான மதிப்புடையவை என்று
முழங்குகின்றனர். அதாவது, ஒரு புழுவும், ஒரு மனிதக் குரங்கும் சமமான
மதிப்புடையவை என்கின்றனர்! இன்னும் ஒரு புழுவும் மனிதனும் சமமான
மதிப்புடையவையே என்கின்றனர்! அதாவது, மனிதனுக்கு அதிகம் முக்கியத்
துவம் அளிப்பதையும், பிரபஞ்சத்தின் மையமான அம்சமாக மனிதனைக்
காண்பதையும் இச்சிந்தனையாளர்கள் சாடுகிறார்கள்! இவ்வாறு, மனிதனை
மையமாகக்கொண்டு உலகையும், அனைத்தையும் காணும் பார்வை, "மானுட
மையப்பார்வை" (Anthropocentric View) எனப்படுகிறது!
உயிருள்ள ஜீவிகள் என்கிற அடிப்படையில் காணும்போது, புழு-பூச்சிகள்,
ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள், எலிகள், தவளைகள், ஆடு-மாடுகள், மனிதக்
குரங்குகள், மற்றும் மனிதர்கள் யாவரும் சமமே எனலாம். ஆனால், மனிதன்
என்பவன் வெறுமனே ஒரு உயிருள்ள ஜீவி மாத்திரமல்ல! பிரதானமாக
அவன் ஒரு "சுய-உணர்வு" கொண்ட ஜீவியாவான்! "சுய-உணர்வு" என்பது
வேறு எவ்வொரு உயிர்-ஜீவியிடமும் இல்லாத ஒரு பிரத்யேக அம்சம் ஆகும்!
அதாவது, "தாம் இருக்கிறோம்!" என்பதை மனிதனைப்போல வேறு எவ்வொரு
ஜீவியும் உணர்வதில்லை! இன்னும் சொல்லப்போனால், எல்லா மனிதர்களும்
தமது இருப்பை அவ்வளவு நேரடியாகவும், தெளிவாகவும் உணர்வதில்லை
எனலாம்!
உண்மையில், பார்வை, எண்ணம், சிந்தனை, நோக்கம், சித்தம், கருத்து,
அறிவு, தன்மதிப்பு ஆகியவை மனிதஜீவிகளுக்கு மட்டுமே உரிய பிரத்யேக
அம்சங்களாகும்! ஆக, "மானுட-மையப்பார்வை" என்பது தவறானதோ, 'தீட்டு"
(Taboo)போன்ற விஷயமோ அல்ல! மாறாக, மிகவும் அவசியமான, தேவை
யான, தவிர்க்க இயலாத ஒன்றாகும்!
எலிக்கு எலிதான் அனைத்தின் அளவீடு! மேலும், எலியே இப்பிரபஞ்சத்தின்
மையம் ஆகும்; அதை நாம் "எலி-மைய விதி" (The Ratropic Principle)
என்று குறிப்பிடலாம்! தவளைக்கு, தவளைதான் இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆகும்! எலியோ, தவளையோ, மனிதனோ, ஒவ்வொரு ஜீவியும் தனக்காகத்
தான் இருக்கிறது, வாழ்கிறது! எலியோ, தவளையோ, அல்லது மனிதனோ
எவ்வொரு ஜீவியும் இருவித வாழ்க்கையை, பாத்திரத்தைக் கொண்டுள்ளது!
அதாவது, எவ்வொரு ஜீவியும் தமக்காகவே வாழ்கிறது; அதே நேரத்தில்,
அவ்வாறு தமக்காக வாழும் நிலையிலேயே ஒவ்வொரு ஜீவியும் அதனுடைய
வளர்ச்சி நிலைக்குரிய பரிணாமக் கடமையையும் தம்மையறியாமலேயே
நிறைவேற்றுவதாய் செயல்படுகிறது!
முதல் உயிரி தோன்றும்வரை, இப்பிரபஞ்சம் பல நூறு கோடியாண்டுகளாக
மையமற்றதாகத்தான் சுழன்று வந்தது! பிறகு, முதல் உயிரியான அமீபா
தோன்றியபோதுதான் முதல்முதலாக இப்பிரபஞ்சத்திற்கு "மையம்" என்ற
ஒன்று உருவானது! ஆனால், அந்த அமீபாவானது அவ்வளவு பூரணமான,
பொருத்தமான மையமாக அமையவில்லை! ஆகவேதான், அமீபாவைக்கடந்த
வெவ்வேறு உயிர்-ஜீவிகள் அமீபாவிலிருந்து கிளைத்தெழுந்தன! ஆனால்,
எவ்வொரு ஜீவியும் இப்பிரபஞ்சத்தையும், அதன் உள்ளார்ந்த விழைவையும்
பூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான ஒரு மையமாக
உருவாகவில்லை! பிறகு, (உயிரியல் பரிணாமத்தின் இறுதியாக), மனிதன்
என்பவன் தோன்றினான்!
'அமீபா', அல்லது முதல் ஒரு-ஸெல் உயிரி என்பது உண்மையில் என்ன? இப்
பிரபஞ்சம் என்பது நுண்ணிய அணுத்துகள்களால் அமைந்த மாபெரும் ஒரு
அமைப்பாகும்! அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு அமைப்பே ஆகும்! ஒரு
கிரகம், அல்லது ஒரு நட்சத்திரம் (சூரியன்), ஒரு கேலக்ஸி (உடுமண்டலம்)
எனப்படும் ஒவ்வொன்றும் ஒரு அமைப்பு தான்! ஆனால், எல்லா அமைப்பு
களும் ஒரே தரத்திலானவையல்ல! ஒரு 'அமீபா' என்பதும் அணுத்துகள்களால்
ஆனதுதான்! ஆனால், 'அமீபா' என்பது, ஒரு கிரகம், அல்லது ஒரு சூரியனைப்
போன்ற வெறும் ஒரு பௌதீக-அமைப்பு அல்ல; மாறாக, ஒரு அமீபா என்பது
"உயிர்" பெற்ற ஒரு விசேட பௌதீக அமைப்பு ஆகும்! ஏனெனில், ஒரு அமீபா
வானது, பிற பௌதீக அமைப்புகளை (பொருட்களை)ப் போல புறத்தேயிருந்து
இயக்கப்படும், செலுத்தப்படும் ஒன்றல்ல! அமீபாவின் மீது சுற்றுச்சூழலின்,
புறவுலகின் தாக்கம் உள்ளது எனினும், ஒரு அமீபாவானது தனது உள்ளார்ந்த
சொந்தத் தேவைகளாலும் (இயல்பூக்கிகளாலும்), பரிணாம விதிகளாலும்
மட்டுமே இயக்கப்படுகிறது!
ஒரு அமீபாவிற்கு, பெரிதாக சுய-உணர்வு என்பது இல்லாவிட்டாலும், சுதந்திர
சித்தம் இல்லாவிட்டாலும் அதனளவில் அது ஒரு தனிஜீவி ஆகும்; அதாவது,
அது ஒரு தனி உலகம் (இப்பிரபஞ்சத்தினுள்ளே இயங்கும் இன்னொரு
பிரபஞ்சம் போன்றது) ஆகும்! அதாவது, ஒரு அமீபா என்பது தன்னை மைய
மாகக் கொண்டியங்கும் ஒரு உயிர்ஜீவி யாகும்! எவ்வொரு உயிர்ஜீவியும்
அத்தகையதே! ஆனால், ஒரு அமீபாவைப்போல ஒரு கூழாங்கல்லானது
தன்னில் ஒரு மையத்தைச் சுற்றி அமைந்த ஒன்றல்ல! அதாவது, கூழாங்கல்
லுக்கு உள்ளமைந்த மையம் என்பதில்லை! அதாவது, ஒரு கூழாங்கல்லை
வழிநடத்திச்செல்லக்கூடிய "அகம்" அல்லது "மனம்" என்பதில்லை! இவ்வாறே
எவ்வொரு சடப்பொருளுக்கும் மையம், அகம், மனம் என்பதில்லை!
அதேநேரத்தில், ஒரு அமீபாவைவிட ஒரு மனிதனின் மையம், அல்லது அகம்,
அல்லது மனம் என்பது பெரிதும் வளர்ச்சியடைந்த நிலையை எட்டியுள்ளது;
அதாவது, ஒரு மனிதனின் மையம் என்பது உணர்வுள்ளதாக, தனிச்சிறப்பு
வாய்ந்த ஒன்றாக உள்ளது! ஆகவேதான் மனிதன் என்பவன் அமீபாவைவிட,
இன்னும் வேறு எவ்வொரு உயிர்ஜீவியையும் விடவும் மேலானவனாகவும்,
முக்கியத்துவம் வாய்ந்தவனாகவும் உள்ளான்! அதே நேரத்தில், பெரும்பாலான
மனிதர்கள் தம்மை, அதாவது, தம் மையத்தில் தாம் எத்தகைய மெய்ம்மை
யாக இருக்கிறோம் என்பதை உணராதிருப்பதால், அவர்கள் இன்னும் அமீபாக்
களைப்போல உணர்வற்றவர்களாக வாழ்ந்துசெல்பவர்களாகவே உள்ளனர்!
தொடர்ந்து நாம் மேலே செல்வதற்கு முன், பரிணாம வழிமுறை பற்றியும்,
பரிணாமத்திற்கும், "சுய-அமைப்பாக்கம்" (Self-Organization) என்பதற்கு
மான தொடர்பு பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும்! ஆம், இப்பிரபஞ்சம்
ஒரு பெரு-வெடிப்பில் (Big Bang)தொடங்கிய கணத்திலிருந்தே "சுய-அமைப்
பாக்கம்" எனும் வழிமுறையும் தொடங்கிவிட்டது! "சுய-அமைப்பாக்கம்" என்பது
பரிணாமத்தின் பிரதான கருவியும், வழிமுறையுமாகும்! அணுத்துகள்கள் தான்
இப்பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் ஆகும்!
அணுத்துகள்கள் தாமே ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளில்
அமைந்து, அவ்வமைப்புகளின் நுட்பச்செறிவுக்கேற்ப (Complexity)பல்வேறு
பண்புகளைக் கொண்ட பொருட்கள் உருவாகின்றன! அணுத்துகள்கள் சுயமாக,
தாமே ஒன்றோடொன்று இணைவதையே "சுய-அமைப்பாக்கம்" என்கிறோம்.
இவ்வாறு இணைவது இயல்பானது, இயற்கையானது, எதேச்சையானது,
விபத்துபோன்றது, அல்லது சந்தர்ப்பவசமானது என்றெல்லாம் காண இடமுள்
ளது! ஆனால், இவ்வாறு தோற்றமளிக்கும் வழிமுறையின் பின்னால் விதி
களும் (Laws),நோக்கமும், திட்டமும், இலக்கும் உள்ளன! அதாவது, அணுத்
துகள்கள் எவ்வெவ்வாறெல்லாம் இணைந்தால், எவ்வெவ்வாறான விளைவு
கள், விளைபொருட்கள், அம்சங்கள், பண்புகள் எல்லாம் உருவாகும் என்பது
தொலை நோக்குடன் ஊகிக்கப்பட்டே நிகழ்கின்றன! அதே நேரத்தில், அவ்வழி
முறையில், பரீட்சார்த்தம் அல்லது, பரிசோதனை அணுகுமுறையும்; அதாவது
தொடர்ந்து தவறுகளை உணர்ந்து களைந்து திருத்தியமைத்து முன்னேறிச்
செல்லும் (Trial and Error)பாங்கும் அதில் இணைந்துள்ளது!
உதாரணத்திற்கு, ஹைட்ரஜன் அணுக்களும், ஆக்ஸிஜன் அணுக்களும் ஒரு
குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்தால் தண்ணீர் எனும் திரவப்பொருள் வெளிப்
படும் என்பதும், அந்த தண்ணீர் எவ்வாறெல்லாம், எதற்கெல்லாம் பயன்படக்
கூடும் என்பதும் முன்-ஊகிக்கப்படுகிறது! இவ்வாறெல்லாம் "யார்", அல்லது,
எந்த "சக்தி", அல்லது, எத்தகைய "உணர்வு" முன்-ஊகிக்கிறது, திட்டமிடுகிறது
என்பதைக் கண்டுபிடிப்பது தான் மனிதஜீவிகளுக்கான "வாழ்க்கைச் சவால்"
மற்றும் வாழ்க்கையின் இலக்கும் ஆகும்!
சில விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும், இயற்கைவாதிகளும், உள்ளது இந்த
இயற்கையுலகம் மட்டும்தான் என்பதாக மிகத்திடமாக நம்புகின்றனர்.குறிப்பாக,
தத்துவவாதி பால் டிரேப்பர் (Paul Draper),"இயற்கை என்பது ஒரு மூடிய
அமைப்பு, அதில்,இயற்கையுலகின் பகுதியாக இல்லாத எதுவும் இவ்வுலகைப்
பாதிக்கமுடியாது, (இவ்வுலகின் மீது செயல்படமுடியாது)" என்கிறார். அதாவது
இக்கூற்று, இயற்கை நிகழ்வுகளுக்கு இயற்கையை மீறிய காரணங்கள் இருக்
கக்கூடும் என்பதை மறுக்கிறது! இத்தகைய 'பார்வையை' நாம் "உலக-மையப்
பார்வை" (World-centric)என்றழைக்கலாம்! அதாவது, இயற்கை, அல்லது
உலகமே பிரதானம்; பிரும்மாண்டமான இவ்வுலகில், மனிதன் என்பவன் ஒரு
தூசு, அவனது இருப்பு ஒரு விபத்து! ஆகவே, மனிதன் என்பவன் இப்பிரபஞ்சத்
தின் மையமுமல்ல, அவனுக்கு பெரிதாக யாதொரு முக்கியத்துவமும் கிடை
யாது என்பதே இப்பார்வையின் முடிவான புரிதல் ஆகும்!
ஆனால், உலகை மையமாகக் கொண்ட இப்பார்வையை ஒரு முறையான,
முழுமையான பார்வை என்று நாம் கொள்ளமுடியாது! பொதுவாக, சிந்தனை
உலகில் "உலகப்பார்வை" (World view)என்று ஒரு துல்லியமற்ற, குழப்பம்
மிகுந்த கோட்பாடு ஒன்று நிலவுகிறது! அதாவது, மனிதவாழ்வு, உலகம் என
அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பார்வையை, வாழ்க்கைத்
தத்துவத்தைக் குறிக்கும் வகையிலான் ஒரு கோட்பாட்டை "உலகப்பார்வை"
என்ற சொற்-சேர்க்கையைக்கொண்டு குறிப்பிடுவது சற்றும் பொருத்தமற்றது
ஆகும்! நாம் வாழும் இந்த உலகைப் புரிந்துகொள்வதும், உலகைப் பற்றிய
அறிவும் அவசியமே; ஏனெனில், மனிதனின் வாழ்வில் இவ்வுலகமும் இடம்
பெறுகிறது என்பது மட்டுமல்லாமல், பங்குபெறவும் செய்கிறது! இன்னும்
மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்தே இப்பிரபஞ்சமானது பல நூறு கோடி
ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளது! இன்னொரு வகையிலும் உலகைப்புரிந்து
கொள்வது மிகவும் முக்கியமாகும்! அதாவது, நாம் இவ்வுலகை, பிரபஞ்சத்தை
முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ளாவிடில் தேவையில்லாமல்,
அது துருத்திக்கொண்டும், நமது கவனத்தை சிதறடித்துக்கொண்டும் இருக்கும்!
ஆக, உலகைப் பற்றிய பார்வையை நாம் "உலகப்பார்வை" என்றழைப்பதில்
எவ்விதத் தடையும் இருக்கமுடியாது! ஆனால், அனைத்தையும் உள்ளடக்கிய
மனிதவாழ்க்கை பற்றிய பார்வையை நாம் ""உலகப்பார்வை" என்றழைப்பது
பொருத்தமற்றது, ஆகவே தவறானது! மாறாக, வாழ்க்கை பற்றிய பார்வையை
நாம் நேரடியாக "வாழ்க்கைப் பார்வை" (Life View)என்றே அழைக்கலாமே;
அதுதானே முறையாகவும் பொருத்தமாகவும் இருக்க முடியும்! அதாவது இவ்
வாறான குழப்பங்களுக்குக் காரணம் எதை மையமாகக்கொண்டு மனிதர்கள்
தம்முடைய பார்வையைக் கட்டமைப்பது என்பது குறித்த தெளிவின்மையே
ஆகும்! அப்படியானால், இக்குழப்பத்தை எவ்வாறு களைவது?
ஒருவகையில், உலகம் எனும் மாபெரும் வீட்டினுள்தான் நாம் வாழ்கிறோம்!
அதாவது, உலகம் என்பது மிகவும் அடிப்படையான ஒரு அம்சமே! ஆனால்,
வீடு என்பது மனிதனுக்காக இருக்கிறதேதவிர, வீட்டிற்காக மனிதன் இல்லை
என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியம்! ஒரு அழகிய சிற்பத்தை வைக்க
பொருத்தமானதொரு பீடம், அல்லது மேடை அவசியமே; அதற்காக, பீடத்தை
பிரதானப்படுத்தி சிற்பத்தை சிறுமைப்படுத்தமுடியாதல்லவா? ஆக, நாம் நமது
வாழ்க்கைப் பார்வையைக் கட்டமைக்க உலகை மையமாகக் கொள்ளலாகாது!
பிறகு எதை மையமாகக் கொள்வது? மிக எளிய தர்க்கம் என்னவென்றால்,
வாழ்க்கைப்பார்வைக்கு "வாழ்க்கை" தான் மையமாக இருக்கமுடியும்! ஆனால்,
வாழ்க்கையை வாழ்வது யார்? அதாவது, வாழ்க்கையின் மையம் எது,அல்லது
யார் என்ற கேள்விக்கான பதில் மனிதன் என்பதேயாதலால், மனிதன் தான்
வாழ்க்கைப் பார்வையின் மையமாக அமையவேண்டும்! உலகம், பிரபஞ்சம்
என்பது வாழ்க்கையை செயல்படுத்துவதற்கான ஒரு களம் மாத்திரமே!
ஆனால், 'மனிதன்' என்றால் என்ன? அவன் எத்தகைய மெய்ம்மை? அதாவது
மனிதனின் மையம் எது? ஆம், உணர்வு (Consciousness)தான் மனிதனின்
மையம் மற்றும் சாரம் ஆகும்! மேலும் துல்லியமாகச் சொன்னால், உணர்வு
தான் மனிதன்! உண்மையில், மனிதனுக்கு உணர்வு என்பது இல்லையேல்,
அவனும் ஒரு எலி, அல்லது தவளையைப் போலவே இருப்பான்; யாதொரு
பார்வையும், அறிதலும், புரிதலும் இருக்காது! ஆகவே, அனைத்துவகைப்பட்ட
பார்வைகளும், அவை சரியாக இருந்தாலும், அல்லது, தவறாக இருந்தாலும்
உணர்வு-மையப் பார்வைகளே எனலாம்!
தத்துவவாதிகள், சிந்தனையாளர்களைப்பொறுத்தவரை, எது இறுதி மெய்ம்மை
என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னேயே, முன் முடிவாக, சிலர் இயற்கை,
அல்லது, உலகையும்; சிலர் இறையையும் பிரதானப்படுத்தும் போக்கைத்
தேர்வு செய்துகொண்டுவிடுகின்றனர்! இத்தகைய தவறுக்குக்காரணம் அவர்கள்
எது முதல் (மூலம்) என்பதை ஊகித்து அதிலிருந்து தங்களது சிந்தனையை,
பார்வையை கட்டமைப்பதே ஆகும்! இதற்குக்காரணம், அவர்கள் உலகை ஒரு
மாபெரும் அமைப்பாக மட்டுமே காண்கின்றனர் என்பதுதான்! ஆனால், உலகம்
என்பது ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல; அது ஓர் மாபெரும் இயக்கமும்
கூட என்பதை அவர்களால் காண இயலவில்லை! உலகை ஒரு அமைப்பாகக்
காண்பதால், "உலகம் எவ்வாறு தோன்றியது?" என்ற கேள்வி முதலும் முடிவு
மான கேள்வியாகி விடுகின்றது! அதாவது, மூலத்தை முடிவு செய்துவிட்டால்
எல்லாம் முடிந்து விடுகிறது! ஏனென்றால், "படைப்பு" எனும் அமைப்பு, இவ்
வுலகம் நம் கண் முன்னே இருக்கிறது; அதன் ஏதோவொரு பகுதியாக நாம்
இருக்கிறோம் என்பதுடன் நம் ஆய்வு முடிவிற்கு வந்துவிடுகிறது!
ஒரு சாரார், அதாவது, இயற்கைவாதிகள். பகுத்தறிவுவாதிகள், பொருள்-முதல்
வாதிகள், மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர், இவ்வுலகம் எப்போதும் இருந்து
வந்துள்ளது, இன்றும் இருக்கிறது, நாளையும், என்றென்றைக்கும் இருக்கும்;
அது இயற்கையாகத் தோன்றியது; இயற்கையைத்தவிர, இயற்கையை மீறிய
வேறு சக்தி எதுவும், எவரும் இல்லை என்பதாகக் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இயற்கை அல்லது உலக-மையப்பார்வை" என்று அழைக்
கலாம்! இவர்களைப்பொறுத்தவரை, இயற்கை, அல்லது உலகமே பிரதானம்!
இன்னொரு சாரார், அதாவது, சமயவாதிகள், கருத்து-முதல்வாதிகள், மற்றும்
பாமரர்கள் இவ்வுலகம் ஒரு படைப்பு, அது இறைவனால் படைக்கப்பட்டது;
கடவுள் உலகைப்படைத்து அதில் உயிரினங்களையும் மனிதஜீவிகளையும்
படைத்து காத்துவருகிறார் என்பதாக இவர்கள் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இறை- மையப்பார்வை" என்றழைக்கலாம்! இவர்களைப்
பொறுத்தவரை, இறை அல்லது கடவுளே பிரதானம்!
பொதுவாக, சாதாரணர்கள், பாமரர்கள், பண்டிதர்கள், படித்தவர்கள், படிக்காத
வர்கள் என்ற வித்தியாசமின்றி, பெரும்பாலானவர்களுக்கு யாதொரு உலகப்
பார்வையும் கிடையாது, குறிப்பாக, யாதொரு "வாழ்க்கைப்பார்வை" யும் கிடை
யாது! இவர்களில் பலருக்கு சுயமான சிந்தனை, பார்வை ஏதுமில்லை என்றா
லும், ஏதாவதொரு தத்துவப்பள்ளி, அல்லது, சிந்தனைப்பள்ளியின் அரைகுறை
யான பார்வையைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போக்கை கொண்டு
விடுகின்றனர்!
இத்தகைய 'உலகப்பார்வைகள்', அதாவது, மூலத்தை ஊகித்து, முடிவு செய்து
கொண்டு, அதை மையமாகக்கொண்டு கட்டமைக்கப்படும் அரைப் - பார்வை
களுக்கு மாறாக, அதாவது, உலகை ஒரு அமைப்பாக மட்டும் கொள்ளாமல்,
அது ஒரு இயக்கம் என்பதையும் கணக்கில் கொண்டு, அவ்வியக்கம் எங்கு
முடிகிறது, அதன் நோக்கம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றையெல்லாம்
அறிவதன் வழியாக ஒரு முழுமையான பார்வையை நாம் பெற முடியும்!
ஏற்கனவே நாம் இங்கு குறிப்பிட்டபடி, உணர்வு இல்லையேல் எவ்வொரு
சிந்தனையும், பார்வையும் சாத்தியமில்லை! இவ்வகையில், எல்லாவகைப்
பார்வைகளுமே உணர்வு-மையப்பார்வைகள் தான் எனலாம்! அதே நேரத்தில்,
உணர்வு-மையப் பார்வைகளும் பிரதானமாக இருவகைப்பட்டவைகளாக
அமைகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியது முக்கியம்!
ஏனெனில், மனித-உணர்வு என்பது உணர்வின் இறுதிச்சொல் அல்ல; மேலும்
மனிதர்களின் உணர்வும் ஒரேபடித்தானதல்ல, அதாவது, உணர்வு வளர்ச்சிக்கு
ஏற்ப மனிதர்கள் வெவ்வேறு உணர்வு நிலைகளில் உள்ளனர்! மனிதர்களின்
உணர்வு வளர்ச்சிக்கேற்ப அவர்களுடைய சிந்தனையும், பார்வையும் வேறுபடு
கின்றன! அவையாவன :
1. சிற்றுணர்வு (அல்லது அகந்தை) - மையப்பார்வை = அகந்தையே பிரதானம்.
(உ-ம்) : சராசரி மனிதர்கள், உணர்வு-வளர்ச்சி குன்றியவர்கள், அதாவது
'அகந்தை' எனும் தொடக்க நிலை உணர்வில் தேங்கிப்போனவர்கள், "தாம்
கண்டதே காட்சி, தாம் கருதியதே தத்துவம்" எனக்கொள்பவர்கள். அதாவது,
விஞ்ஞானவாதம், பொருள்முதல்வாதம், பகுத்தறிவுவாதம், இயற்கைவாதம்;
அதாவது, மனிதனை இயற்கை, அல்லது, உலகின் முக்கியத்துவமற்ற ஒரு
பகுதியாகக்கருதும் அனைத்துப்பார்வைகளும், தத்துவங்களும் இந்த
"சிற்றுணர்வு-மையப்பார்வை" யைச் சேர்ந்தவையே!
2. பேருணர்வு, அல்லது மெய்ம்மை-மையப்பார்வை = இறுதி - உணர்வே
பிரதானம்! அதாவது, பேருணர்வே ஆதியும், அந்தமும்!
(உ-ம்) : புத்தர்கள், சித்தர்கள், ஞானிகள், ஆகியோர்.
இவ்விரு நிலைகளுக்கும் இடையே சில இடைநிலைகளும், பார்வைகளும்
உள்ளனவென்றாலும், அவையும் வளர்ந்து கடக்கப்பட வேண்டியவையே என்
பதால் அவை இங்கு விவரிக்கப்படவில்லை! அதாவது, மனிதஉணர்வு என்பது
மேன்மேலும் பரிணமிக்கக்கூடியதொரு அம்சமாகும்! மனிதர்கள் ஒரு இறுதி
யான உயர்-உணர்வு நிலையை அடையும் வரை அவர்களது பார்வையும்,
புரிதலும் மட்டுப்பாடானதாகவே இருக்கும்! ஆனால், வெகுசொற்பமான சிலரே
தமது அகந்தை உணர்வையைக் கடந்து வளர்ந்து உணர்வின் உச்சத்தை எட்டு
கின்றனர்! இந்நிலையில்,எது முழுமையான சரியான பார்வை என்பது குறித்து
கருத்தொற்றுமை ஏற்படுவது சாத்தியமில்லை! ஒருவகையில் அத்தகைய
கருத்தொற்றுமை தேவையுமில்லை! ஏனெனில், உணர்வின் உச்சத்தைத்
தொடும் ஒவ்வொரு மனிதனும், எது உண்மை என்பதை தனக்குத் தானே சுய-
சாட்சியாக நேரடியாக அறிந்துகொள்வான்!
முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!
முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!
கோப்பர் நிக்கஸின் புரட்சியானது, உண்மையில் டாலமியின் பூமி-மையப்
பார்வையைத்தான் அகற்றியது; அகற்றி அவ்விடத்தில் சூரிய-மையப்பார்வை
யை இட்டுநிரப்பியது! ஆனால் அதனால், மானுட-மையப்பார்வையை ஒன்றும்
செய்ய இயலவில்லை! கோப்பர் நிக்கஸ் மட்டுமல்ல, அவருக்குப் பிறகு வந்த
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்- உடைய சார்பியல்
புரட்சியினாலும் மானுட- மையப்பார்வையை ஒன்றும் செய்ய இயலவில்லை!
ஐன்ஸ்டீன் மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகியும் இன்னும் உலகம் ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது! ஐன்ஸ்டீனிய சார்பியல்புரட்சியை
வேறு எவரேனும் வந்து முறியடிக்கும் பட்சத்தில் அவருடைய புகழை இவ்
வுலகம் பாடிக்கொண்டிருக்கும்! டாலமியாகட்டும், அல்லது, கோப்பர் நிக்கஸ்,
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகட்டும், பார்வைகள்
மாறலாம், கோட்பாடுகள் மாறலாம்; ஆனால், "பார்வை" என்பது எப்போதும்
"மானுட-மையப்பார்வை" யாக மட்டுமே தொடரும்!
பூமி இப்பிரபஞ்சத்தின் மையமாக இல்லாவிட்டால் என்ன, அது மனிதனின்
மையத்துவத்தை ஒருபோதும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது! ஏனெனில்,
ஒரு மரத்தில் பிஞ்சுகள், காய்கள் எந்தக்கிளையில் காய்த்தால் என்ன? அவை
மரத்தின் மையத்தில் தான் காய்க்கவேண்டும் என்பதில்லையே! அவை ஒரு
மரத்தின் நுனிக்கிளையில் காய்த்தாலும், ஒவ்வொரு பிஞ்சும், காயும் தான்
அம்மரத்தின் மையமும், இலக்கும், முழுமையும் ஆகும்! அதே வேளையில்,
ஒவ்வொரு பிஞ்சின், காயின் முக்கியத்துவம்,முழுமை என்பது, அது மரத்தின்
மையத்தில் தோன்றுகிறதா, அல்லது ஓரத்தில் தோன்றுகிறதா என்பதில்
அடங்கியிருக்கவில்லை; மாறாக, அது நன்கு முற்றிக் "கனி" யாக ஆகிறதா,
இல்லையா என்பதிலேயே அடங்கியிருக்கிறது! இவ்வாறே, பிரபஞ்ச விருட்சத்
தின் பிஞ்சுகளும், காய்களுமான மனிதஜீவிகள் ஒவ்வொருவரும் தம் உணர்
வில் முற்றிக் கனிவதிலேயே (அதாவது, உணர்வின் உச்ச நிலையை அடைவ
திலேயே) ஒவ்வொரு மனிதனின் முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!
ஒவ்வொரு மனிதனும் அடையக்கூடிய முழுமையில் தான் இப்பிரபஞ்சத்தின்
முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!
இப்பிரபஞ்சம் ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும்
பரிணாம இயக்கம் என்றோம்! "சுய-அமைப்பாக்கம்" என்பதே அதன் பிரதான
வழிமுறை யாகும்! "சுய-அமைப்பாக்கம்" என்பது வெறுமனே அணுத்துகள்கள்
ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளாக உருவாவது மட்டும்
அல்ல! மாறாக, பண்புரீதியான மாற்றங்களைப் பெற்று மேன்மேலும் உயர்
நிலைகளை எட்டுவதும், முடிவில் பூரணமான தொரு மெய்ம்மையாக உரு
வெடுப்பதே அதன் இலக்கு ஆகும்! அதாவது, உயிரற்ற பௌதீகச் சடப்பொரு
ளான அணுத்துகள்கள் ஒரு கட்டத்தில் உயிர்பெற்றெழுவதும் (உயிர்-ஜீவிகள்);
பிறகொரு கட்டத்தில் உணர்வு பெற்றெழுவதும் (மனிதஜீவிகள்); முடிவாக,
ஒவ்வொரு மனிதனின் உணர்வுப்பரிணாமத்தின் மூலம் இறுதிப்பேருணர்வாக
எழுவதும்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சப்பரிணாம இயக்கத்தின் இலக்கு ஆகும்!
சுய-அமைப்பாக்க வழிமுறையில் அணுத்துகள்கள் ஒன்றோடொன்றிணைந்து
முதலில் அணுக்களாகவும், மூலக்கூறுகளாகவும், மூலகங்களாகவும், சிக்கல்
அற்ற அமைப்புக்களாகவும்,பிறகு சிக்கலான (நுட்பமிக்க),அதாவது, தனி-மையப்
படுதல் (Individualization),மற்றும் ஒருமைப்படுதல் (Unification)
ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சம் தனது ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்வதா
யுள்ளது! இவ்வழிமுறையில், முதன்முதலாக இப்பிரபஞ்சத்தின் மையமாக
உயிர்-ஜீவிகள் தோன்றின! அடுத்த உயர்-நிலையாக மனிதஜீவியானவன் இப்
பிரபஞ்சத்தின் உணர்வுள்ள மையமாக உருப்பெற்றான்!
பிரபஞ்சத்தை ஒரு அமைப்பாகக் காண்கையில், பரந்த இப்பிரபஞ்ச வெளியில்
பூமிக்கிரகமானது எங்கோ ஒரு மூலையில் இருக்குமிடம் தெரியாதவகையில்
சுழன்றுகொண்டுள்ளது; அதில் மனிதன் ஒரு தூசு போல ஒட்டிக்கொண்டிருக்
கிறான் என்பதாகவே தெரியும்! ஆனால், பிரபஞ்சத்தை ஒரு (பரிணாம) இயக்க
மாகக் காண்கையில், அவனே பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ளான் என்பது
தெரிய வரும்! ஆம், உணர்வுக்கு விழிக்கும் ஒவ்வொரு மனிதனும் இப்பிரபஞ்
சத்தின் மையமே ஆவான்! மனிதன் பிரபஞ்சத்தின் மையமாக இருக்கிறான்
என்பது பிரபஞ்சத்தின் பெருமை ஆகும்! அதற்காக அவன் தற்பெருமை கொள்
வது அழகல்ல! ஏனென்றால், பிரபஞ்சத்தின் உண்மையான, இறுதியான அந்த
ஒப்பற்ற மையத்தை அறிந்தடைவதற்கான ஒரு மையமாக மட்டுமே மனிதன்
விளங்குகிறான்! அவன் தன் முழுமையை அடைவதற்கு அவன் எடுத்து
வைக்க வேண்டிய இன்னும் ஒரு அடி (one more step) மீதமுள்ளது!
மா.கணேசன்/ நெய்வேலி/ 14-09-2017
----------------------------------------------------------------------------