Wednesday, 13 September 2017

பன்மையின் உலகமா? அல்லது உலகம் கடந்த ஒருமையா?





         நான் இவ்வுலகைவிட ஐந்தரை அடி உயரமானவன்!
         ஏனெனில், நான் இவ்வுலகின் உச்சியில் நிற்கிறேன்!

இவ்வுலகில். பெரும்பான்மையானோர் பன்மையின் உலகில் விழுந்து புரண்டு
உழல்வதை வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! மிகச்சிறுபான்மை
யானோர் இவ்வுலகைக் கடந்த ஒருமையை அடைவதையே தமது வாழ்வின்
இலக்காகக்கொண்டு வாழ்கின்றனர்! முதல் வகையினர் படைப்பைத் தழுவிக்
கொண்டு, படைத்தவனை, அதாவது மெய்ம்மையைக் கண்டுகொள்வதில்லை!
இரண்டாவது வகையினர், படைப்பைக் கைவிட்டு படைத்தவனைக்கைப்பற்று
வதையே இலக்காகக் கொண்டுள்ளனர்!  இவ்விரு வழிகளில் எது சரியானது?
அல்லது, இரண்டையும் ஒன்றிணைக்க அடிப்படையேதும் உள்ளதா?

'இவ்விரு பார்வைகளுமே ஒருபக்கச் சாய்வானவை, ஏனெனில், முறையான
ஒரு புரிதலானது இரண்டையும் "ஒரு, தொடர்ந்து செல்லும், என்றென்றைக்கு
மான, உயிர்த்துடிப்புமிக்க ஆனந்தமான தழுவலில் இணைக்கிறது!" என்பதாக
உளவியலாளர் கென் வில்பர் (Ken Wilber)கூறுகிறார்.' சில ஆன்மீக மார்க்
கங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ மனிதனுக்கு லௌகீகம், ஆன்மீகம்
என இரண்டு இறக்கைகள் அவசியம் என்கின்றன!

ஆனால், லௌகீகத்தை ஒரு இறக்கையாகவும், ஆன்மீகத்தை இன்னொரு
இறக்கையாகவும் கொண்டு வாழும் ஒருவன் எந்த இலக்கை நோக்கிப் பறந்து
செல்வான்? லௌகீகம் ஒரு திசையில் கொண்டு செல்லும், ஆன்மீகம் அதற்கு
எதிர் திசையில் கொண்டு செல்லும்! எதிரெதிர் திசைகளை நோக்கி இழுக்கும்
காளைகளைப் பூட்டிய வண்டியில் பயணித்து ஒருவன் தனது இலக்கை
அடைவது எவ்வாறு சாத்தியம்? லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்துசெல்லாது!
ஆன்மீகம் என்பது நாம் வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒரு போதும்
அமையமுடியாது; ஏனெனில், ஆன்மீகம் தான் நம் வாழ்வின் இலக்கு ஆகும்!
இலக்கு ஒரு போதும் வழியின் ஒரு பகுதியாக அமையமுடியாது; மாறாக,
இலக்கு என்பது அனைத்து வழிகளின் முடிவிடம் ஆகும்!

லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்து செல்லாது என்பது மட்டுமல்ல; கென்
வில்பர் அவர்களின் கூற்றுக்கு மாறாக, லௌகீகமும், ஆன்மீகமும் ஒன்றை
யொன்று தழுவிக்கொள்ளவும் செய்யாது! பரந்து விரிந்து அனைத்தையும்
தழுவிக்கொள்ள வேண்டும், அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் எனும்
ஆர்வக்கோளாறின் விளைவாக கென் வில்பரின் புரிதல் தனது நங்கூரத்தை
தொலைத்துவிட்டு ஆழ்கடலில் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறது!
அவருடைய மேற்கத்திய கட்டுப்படுத்துதலின் (Western Conditioning)
விளைவாக அவர் லௌகீகத்திற்கு நியாயம் வழங்குவதற்காக ஆன்மீகத்தைக்

கொச்சைப்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்!

கென் வில்பரின் பார்வை ஆன்மீகப் பரிணாமத்திற்கு விரோதமானது ஆகும்!
எவ்வாறேனும் லௌகீகத்தை ஆன்மீகத்துடன் இணைக்கவேண்டும் எனும்
ஆதங்கத்தினால், அதாவது, லௌகீகத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக
ஆன்மீகத்தை அவர் லௌகீகத்தின் உயரத்திற்கேற்ப குறைத்துவிட்டார்! சில
ஆன்மீக மார்க்கங்கள், பரவலாக மனிதர்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தும்
முகமாக, "ஆன்மீகம் லௌகீகத்திற்கு எதிரானதல்ல!" எனவும்; "ஆன்மீகத்தில்
ஈடுபடுவதற்காக ஒருவர் லௌகீகத்தைத் தியாகம் செய்யத்தேவையில்லை!"
எனவும் சொல்கின்றன! ஆனால், இவ்வழிகளிலெல்லாம் ஆன்மீகத்தை ஊக்கு
விக்கவோ,வளர்க்கவோ இயலாது! ஏனெனில், ஆன்மீகம் என்பது தூங்குமூஞ்சி
களுக்கும், சுகபோகிகளுக்கும் உரியதல்ல! ஆன்மீகம் எதற்கும் எதிரானதல்ல!
ஆனால், பிரத்யேக அக்கறையும், சிதறாத முழுகவனமும் செலுத்தாமல்
ஒருவனுள் ஆன்மீகம் துளிர்க்கவோ, வளரவோ செய்யாது! ஆன்மீகம் என்பது
இப்பன்மை உலகில் காணப்படும் பலவகைப்பட்ட பொருட்களுள், விஷயங்
களுள் அதுவும் ஒன்றல்ல, அதையும் ஒருவர் தம்முடன் வரித்துக்கொள்ள!

ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் கடந்தது, ஏனெனில், அதுவே அனைத்
திலும் இறுதியானது, அனைத்தின் சாரமானது! ஆகவே, அதற்கு நிகராக வேறு
எதுவும் இல்லை! அது ஒரு தனித்தீவு போன்றதாகும்! ஆக, ஆன்மீகத்தை
ஒருவர் நாடுகிறார் என்பதன் அர்த்தம் அவர் வாழ்வின் மிக முக்கியமானதும்,
இறுதியானதுமான அம்சத்திற்கு தயாராகிவிட்டார் என்பதையே குறிக்கிறது!
மனிதவாழ்வின் முக்கியமான, இறுதியான அம்சம் என்பது கடைசியில் இடம்
பெறும் அம்சம் என்று அர்த்தமல்ல; நம்மில் பலர், மிகவும் தவறாக,ஆன்மீகம்
என்பது வயதானவர்களுக்கானது எனவும், வாழ்வின் கடைசிக்காலக்கட்டத்திற்
குரியது எனவும் கருதுகின்றனர்! மாறாக, அனைத்திலும் முதலாவதாக
கவனிக்கப்படவேண்டியது வாழ்வின் மிகவும் மையமான, முக்கியமான,
இறுதியான அம்சமான ஆன்மீக உண்மையைத்தான்! ஏனெனில்,அது மட்டுமே
நம்மையும், நம் வாழ்வையும் முழுமைப்படுத்தும் அம்சமாகும்!

லௌகீகம் என்பது உயிர்-வாழ்தலின் (அர்த்தத்தை அறியத்தவறியதால் மேற்
கொள்ளப்படும்) அர்த்தமற்ற வீண் விரிவாக்கம் ஆகும்! ஏனெனில், உயிர்-வாழ்
தல் என்பதே உயிர்-வாழ்தலின் இலக்காக ஆகவியலாது! அவ்வாறு ஆகவிய
லுமெனில், மனிதவாழ்வு என்பது, உணவு, உடை, உறைவிடம், உறவுகள்
ஆகியவற்றைச் சுற்றிச்சுழலும் விவகாரமாகச் சுருங்கிப்போகும்! மேலும்,உயிர்
வாழ்தலை எவ்வளவு அலங்காரமாகவும், பகட்டாகவும், ஆடம்பரமாகவும்
மேற்கொண்டாலும் அது அர்த்தமற்ற வெறும் உயிர்-வாழ்தல் மட்டுமேயாகும்!

நாம் இப்பன்மையின் உலகை, அதாவது, படைப்பைத் தழுவிக்கொண்டு, அதே
நேரத்தில் ஆன்மீகச் சிகரத்தையும் தழுவிக்கொள்ள இயலாது! முதலில் இவ்
வுலகம், அல்லது பிரபஞ்சம் என்பது பரந்து விரிந்த ஒரு இடம் மட்டுமன்று;
அது ஒரு மாபெரும் இயக்கமும் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும்
முக்கியம் ஆகும்! அதைவிட முக்கியம் அவ்வியக்கம் எந்த இலக்கை நோக்கிச்
செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதேயாகும்!

"பன்மையின் உலகம்" என்பது ஒரு பரிசோதனைக்களம் ஆகும்! இன்னும்
"உலகம்" என்பதும் ஒரு பரிசோதனைப்பொருளே ஆகும்! அதில் விளையும்
ஒவ்வொரு அம்சமும் உலகின் ஒரு அவதாரம் ஆகும்! உலகின் பலவகை
அவதாரங்களில் மனிதன் ஒரு விசேட அவதாரம் ஆவான்! அதாவது, அவனே
மாற்றங்களுக்குட்பட்ட இவ்வுலகை முழுமைப்படுத்தி மாற்றங்கள் அனைத்
தையும் முடிவிற்குக்கொண்டுவரும் இறுதி அவதாரம் ஆவான்! ஆம், மனிதன்
தன்னுள் கொணர்ந்திடும் ஒரு முடிவான மாற்றத்திலேயே உலகின் முழுமை
அடங்கியுள்ளது! பரிணாமத்தின் அடியோட்டமான நோக்கம் பலவகைப்பட்ட
பொருட்களை, உயிர்ஜீவிகளை உருவாக்கிக் கொண்டே செல்வதல்ல; மாறாக,
தமது உள்ளார்ந்த நோக்கத்தையுணர்ந்து நிறைவேற்றும் ஒரு பரிபூரணமான
பிரதிநிதியை உருவாக்குவதே (அதாவது, ஒரு பரிபூரணமான அவதாரமாக
உருவெடுப்பதே) ஆகும்! அத்தகையதொரு பரிபூரணமான பிரதிநிதி, அவதாரம்
மனிதனே யாவான்! மனிதன் வெறுமனே உண்டு களிப்பதற்காகப் பிறந்தவன்
அல்ல!

"பன்மைத்தன்மை" என்பதே ஒரு முரண்பாடு ஆகும்! உலகம் பலவகைப்பட்ட
பொருட்களையும், அம்சங்களையும் கொண்டுள்ள காரணத்தினாலேயே
அவற்றையெல்லாம் நாம் தழுவிக்கொள்ளவேண்டுமென்பதில்லை! அதனால்
ஒரு பயனும் இல்லை! நாம் தழுவிக்கொள்ளவேண்டியது முழுமைக்குறை
வான இந்தப் பன்முகத்தன்மை கொண்ட உலகையல்ல; மாறாக, இவ்வுலகம்
எனும் பரிணாம இயக்கத்தின் முடிவும், முழுமையுமான ஒருமைநிலையைத்
தான்! ஏனெனில், அவ்வொருமைநிலை உடைந்து சிதறியதனால் உருவானதே
இப் பன்மையின் உலகம்! ஒருமை நிலையே இவ்வுலகின் மூலம் ஆகும்!
மீண்டும் அவ்வொருமை நிலையைக் கட்டமைப்பதே உலகின், ஒட்டுமொத்த
பரிணாம இயக்கத்தின் ஒரே விழைவும், இலக்கும் ஆகும்! மலையின்
அடிவாரத்தைத் தழுவிக்கொண்டிருந்தால் சிகரத்தை எவ்வாறு நாம் அடைய
இயலும்! சிகரம் தான் நம்முடைய இலக்கு எனும்பட்சத்தில் அடிவாரத்தை
விட்டு நாம் அகன்றுதானே ஆகவேண்டும்!

"சமுசாரம் (உலக வாழ்க்கை) தான் நிர்வாணம், அதாவது, விழிப்படைந்த
மனதைக்கொண்டு காணும்பட்சத்தில், துன்பமிகு இவ்வுலகம்தான் பூரணமான
உலகம்" எனும் மஹாயானா பௌத்தக் கூற்றை கென் வில்பர் உறுதிப்படுத்து
வதாகக் கூறப்படுகிறது. ஆனால், இக்கூற்று மிகவும் தவறாகப் புரிந்துகொள்
ளப்பட்ட ஒன்றாகத்தான் தெரிகிறது! எவ்வளவு உயரிய, அற்புத ஆன்மீக
அனுபவங்களைப் பெற்றாலும், கென் வில்பர் போன்றவர்களால் இவ்வுலகை
விட்டுக்கொடுக்க இயலவில்லை என்பதாகவே தெரிகிறது! ஆனால், அதே
நேரத்தில், எவரும் இவ்வுலகை விட்டுக்கொடுக்கவோ, தவிர்க்கவோ தேவை
யில்லை! அதாவது ஒருவர் ஞானமடைந்த பிறகும் இவ்வுலகில் தான் வாழ்ந்
தாகவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், உலகிற்கு ஏற்கனவே
ஒருவர் கொடுத்து வந்த பழைய முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிடும்!
அதாவது, ஞானமடைந்தவர், (அவரது உடல் இறப்பில் முடிவுறும் வரை) இவ்
வுலகில் தொடர்ந்து இருக்கவே செய்வார்; ஆனால், அவர் தனது ஞானம்
எனும் வீட்டில் தான் பிரதானமாகத் தங்கி வாழ்வார்!

ஏனெனில், இவ்வுலகம் எவ்வகையிலும் பூரணமானதல்ல! அதேநேரத்தில்,
நாம் வைக்கப்பட்டிருப்பது இவ்வுலகில்தான், இவ்வுலகிலிருந்து தான் நாம்
நம் வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டும், புரிந்து கொண்டாகவேண்டும், நமது
மீட்சியை செயல்படுத்தியாக வேண்டும்! மேலும், சமுசாரமும், நிர்வாணமும்
ஒன்றல்ல; ஒரு போதும், ஒன்றாகிடுவதற்கான வாய்ப்பும் இல்லை!

அதாவது, விழிப்படைந்த மனத்தைக்கொண்டு காணும் போது, 'துன்பமிகு இவ்
வுலகம்தான் பூரணமான உலகம்' என்பதாகத் தெரிகிறது என்பதன் அர்த்தம்
என்ன? விழிப்படையாத மனத்தைக்கொண்டு காணும் போது இவ்வுலகமும்,
இவ்வாழ்க்கையும் துன்பமயமாக, நரகமாகத் தெரிவதன் அர்த்தம் என்ன? ஆம்,
"விழிப்படைந்த மனம்" தான் அனைத்து வித்தியாசத்தையும் செய்கிறது!
அதாவது, எது முக்கியமானது எனில், இவ்வுலகம் துன்பமயமானதா? அல்லது
பூரணமானதா? என்பது அல்ல! மாறாக, மனம் (மனிதன்) விழிப்படைவது
மட்டுமே முக்கியம்!

ஏனெனில், "விழிப்பு" தான் இவ்வுலகின் மலர்ச்சியும், முழுமையும் ஆகும்!
மனிதனே தன் விழிப்பினால் இவ்வுலகை முழுமைப்படுத்தும் இறுதி அம்சம்
ஆவான்!

         வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
         பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
         சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
         அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
         மறுப்பது தான் உயரிய ஞானம்!
         ஏனெனில், எல்லா உலகங்களும்
         இவ்வுலகம் போலவே மனிதனது உணர்வைச்
         சார்ந்திருப்பவையே!
         உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
         உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
         முழு-உணர்வே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07-09-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...