Wednesday, 6 September 2017

மனிதன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்?




ஒருமுறை விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் மிகவும் நோய்வாய்ப்
பட்டிருந்த போது, "மரணம் குறித்து நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என அவரிடம்
கேட்கப்பட்டதற்கு, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான் மிகவும்
நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே தொடங்கி
எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!" என்று
சொன்னதாக,  லேர்ரி டோஸ்ஸே (Larry Dossey) எனும் மருத்துவர்
தனது "ஆன்மாவைத் திரும்ப அடைதல்" (Recovering the Soul)எனும்
நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், "மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இந்தக்
கேள்வி மிகவும் அற்புதமான ஒன்றாகும்! விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மதிநுட்பம்
அவரது விஞ்ஞானக் கோட்பாடுகளில்  வெளிப்பட்டதைவிட இவ்வாறு
எப்போதாவது எவராவது கேட்கும் விஞ்ஞானத்துறைக்குத் தொடர்பில்லாத
கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலேயே அதிகம் வெளிப்பட்டுள்ளன
எனலாம்!

"மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இக்கேள்வி
மிகவும் முக்கியமானதாகும்! ஏனெனில், இக்கேள்வி மனிதனுக்கும் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை உணர்வுபூர்வமாக அறியச் செய்
வதற்கான ஒரு தூண்டுகோல் போன்றதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன்
பிரபஞ்சத்திலிருந்து வேறான, தனித்த ஒரு அம்சம் அல்ல! அதே நேரத்தில்,
அவன் பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முக்கியத்துவமற்ற
ஏதோ ஒரு பகுதியும் அல்ல! மாறாக, அவனே பிரபஞ்சத்தின் மிகமுக்கியமான
தலைப்பகுதி போன்றவன்! ஆனால், மனிதன் தன் முக்கியத்துவத்தை உணர்வு
கொண்டு நேரடியாகக் கண்டடையவில்லை, உணரவில்லையென்றால்,அவன்
வெறுமனே இப்பிரபஞ்சத்திலுள்ள பலவகைப்பட்ட பொருட்களுள் ஒன்றாக;
தாம் ஏன் தோன்றினோம், எதற்காக இருக்கிறோம் என்பதெதையும் அறியாத
வனாய், ஒரு பிராணியைப் போல வாழ்ந்து மாண்டுபோவான்!

மனிதனின் முக்கியத்துவம் என்பது அவனுடைய இயற்கையான பிறப்பால்
கொடுக்கப்பட்ட ஒன்றல்ல; மாறாக, ஒவ்வொரு மனிதனும் தனது விழிப்பால்
ஈட்டப்படவேண்டிய ஒன்றாகும்! மனிதனின் இயற்கையான பிறப்பு என்பது
பிறவிலங்குகளை ஒத்ததேயாகும்! ஆனால், மனிதனுக்கும், விலங்குகளுக்கும்
உள்ள ஒரு வித்தியாசம், அவனுள் அடங்கியிருக்கும் உள்ளுறையாற்றல்
அல்லது உட்பொதிவே ஆகும்! அதாவது, அவன் தன் உணர்வில் மேன்மேலும்
வளர்ந்து உயர்வதற்கான உட்பொதிவு!

ஐன்ஸ்டீனைப்பொறுத்தவரை, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான்
மிகவும் நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே
தொடங்கி எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!"
என்றார். அது அவருடைய உணர்வுப்பூர்வ அனுபவம். அவரைப்பொறுத்தவரை
தனிமனிதனின் எல்லைகள் மிகப் பரந்ததாக இருப்பதாக அவர் உணர்ந்தார்!
ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை நம் உடலைப்
போர்த்தியுள்ள தோல்தான் நமது எல்லைகளாயுள்ளன! அதுவும் உடலின் மீது
நாம் கொண்ட ஒரு விபரீதப் பிணைப்பினால், அதாவது, உடலை நாமாகப்
பாவிக்கும் தவறான அடையாளப்படுத்துதலினால் விளைந்ததாகும்! மற்றபடி
"நாம்" என்பது நம் ஒவ்வொருவரின் "நான்" எனும் அகந்தை உணர்வேயாகும்!

ஆனால், 'நான்' எனும் உணர்வு, அல்லது, அகந்தையுணர்வு என்பது என்ன?
அது எதைப்பற்றிய உணர்வு? அகந்தைக்கு தன்னையும், தனது உடமைகளை
யும்  (அதில் ஒருவனுடைய நெருங்கிய உறவுகளும் அடங்கும்) தவிர, வேறு
எதனுடனும் (சகமனிதர்கள், பிற உயிரினங்கள், இயற்கை, பிரபஞ்சம் ஆகிய
எதனுடனும், எவ்வித ஒருமைப்பாடும், அக்கறையும், பொறுப்பும், எதுவும்
கிடையாது! உண்மையில், 'நான்' எனும் உணர்வுக்கு தனித் தன்மையான
யாதொரு உள்ளீடும் கிடையாது! அது 'தான்' எனவும், 'தனது' எனவும்
வரித்துக்கொண்ட அம்சங்களை, பொருட்களை சார்ந்திருக்கும் ஒரு கட்டுக்
கதையே ஆகும்! அகந்தையின் இத்தகைய புனைதிறனும், கற்பனைச்சக்தியும்
தான் எலிகளுக்கும், தவளைகளுக்கும், பிற விலங்குகளுக்கும் இல்லாத
தனிச்சிறப்பு (?) ஆகும்! அகந்தையானது தன்னைப்பற்றியும், தன்னைச்சுற்றியும்
வரித்துகொண்ட அம்சங்களை விலக்கிவிடும் பட்சத்தில் அது ஒன்றுமில்லாத
வெறும் ஒரு சூன்யப்புள்ளியே!

தன்னை நோக்கி விழிக்காத, தனது உண்மையை அறிய விழையாத அகந்தை
யானது தன்னில் தானே தோன்றியதாக எண்ணிக்கொள்கிறது! தானே
வட்டத்தின் பரிதியும், மையமும் என்பதான பிரமையில் ஆழ்ந்து தேக்கமுற்று
உடலுடன் சேர்ந்து அழுகிப்போகிறது! ஆம், நோய்க்கூறு கொண்ட அகந்தை
யானது தொடக்கமும் முடிவும் இல்லாத மூலமும் முடிவுமான மெய்ம்மை
யாகத் தன்னைப் பாவித்துக்கொள்கிறது!

நதியானது மலையில் தோன்றி கடலில் கலக்கிறது; மலைக்கும், கடலுக்கும்
இடைவழி நெடுகிலுமுள்ள எதனுடனும் நதி தன்னைப் பிணைத்துக்கொள்
வதோ, அடையாளப்படுத்திக்கொள்வதோ கூடாது! ஏனெனில், நதியின்
அசலான அடையாளம் முடிவில் அது சென்று சேரும் கடலே ஆகும்!

அவ்வாறே மனிதனின் அகந்தை உணர்வும் இந்த உலகில், (பிரபஞ்சத்தில்)
தோன்றினாலும், இவ்வுலகைக்கடந்த முழு-உணர்வே அதனுடைய அசலான
அடையாளம் ஆகும்! ஆக, ஐன்ஸ்டீனின் அனுபவமான, அதாவது, "உயிருள்ள
அனைத்து பொருட்களுடனும் கொள்ளும் நெருக்கமான ஒருமைப்பாட்டுணர்வு
(Solidarity)" என்பதும் கூட இறுதியானதல்ல! ஏனெனில், இவ்வுலகம்
என்பது முற்றிலுமாகவும் முழுமையாகவும் கடக்கப்படவேண்டியதொரு
குறைவுபட்ட, தற்காலிக நிஜமே! பலர் எண்ணுவதுபோல பிரபஞ்சம் என்பது
ஒரு முழுமையல்ல; மாறாக, முழுமையை நோக்கிய ஒரு இயக்கமாகும்,
அந்த இயக்கத்தின் அம்புத்தலையே (Arrowhead) மனிதன்! அவன் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாடு கொள்வது அவசியமே;எவ்வாறெனில்,
பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விழைவினைச் செயல்படுத்தத் தோன்றிய ஒப்பற்ற
கருவியே, பிரதிநிதியே மனிதன்! ஆகவே, ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடன்
ஒருமைப்பாட்டுணர்வு கொள்வது அவசியமாகும்; இவ்வாறு ஒருமைப்பாடு
கொள்ளாமல் மனிதனால் இப்பிரபஞ்சத்தைக் கடக்க முடியாது! எவ்வொரு
பொருளுடனும், விஷயத்துடனும் எவ்விதத் தொடர்பும், பிணைப்பும் இல்லாத
நிலையில், ஒருபொருளை, அல்லது விஷயத்தை கடப்பது என்பது அடிப்படை
யற்றதாகும்!

ஆனால், உலகெங்கிலும் மனிதர்கள் உலகம், பிரபஞ்சம் பற்றிய யாதொரு
விசேட உணர்வும், உறவும், பிணைப்பும் இன்றி வாழ்ந்து செல்கிறார்கள்! பூமி
என்பது மனிதர்களுக்கு, அவர்களுடைய நுகர்வுத்தேவைகளுக்குரிய பொருட்
களைக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பொருட்கிடங்கு என்பதற்குமேல்
வேறெதுவுமல்ல! சிலர் இயற்கை, ஆன்மீக சூழலியம் என்றெல்லாம் பேசியும்
இயக்கம் நடத்தியும் வருகிறார்கள்! ஆனால், இத்தகைய இயற்கை தழுவிய
இயக்கங்கள், இஸங்கள் இயற்கையைப்பற்றியும், பூமியின் புனிதத்தன்மை
யைப்பற்றியும் பெரிதாகப் பேசினாலும், அவை மனிதனின் ஆன்மீக முக்கியத்
துவத்தை உணர்ந்தறியத் தவறிவிட்ட, உணர்ச்சிப்பெருக்கின் வயப்பட்ட,
முதிர்ச்சியற்ற மட்டுப்பாடுகளேயாகும்!

புனிதம், இறைமை பற்றிய உணர்வு முக்கியமே; ஆனால், அவை புறத்தே
எங்கேயுமில்லை! அப்படி எதுவும் இருக்கமுடியுமெனில், அவை அவற்றைச்
சுட்டும் வெறும் குறியீடுகளாக மட்டுமே விளங்கமுடியும்! மேலும்,மனிதனின்
ஆன்மீக முக்கியத்துவம் என்று இங்கு சொல்லப்படுவது மனிதனின் சொந்த
முக்கியத்துவம் அன்று! அப்படி எதுவும் இருக்கவில்லை! மனிதன் முக்கியத்
துவம் பெறுவது என்பது, அவனே இறுதியான ஆன்மீக மெய்ம்மையை
நோக்கிய பிரதான வாயிலாகவும்,அதன் வழியாகக்கடந்து செல்பவனுமாகவும்
இருக்கிறான் என்பதாலேயே ஆகும்!

நதியானது மலையில் உற்பத்தியாவது போலத் தெரிகிறதே தவிர அது
கடலில் தோன்றி மீண்டும் கடலிலேயே முடிவடைகிறது! அதுபோலவே,
மனிதனும் இவ்வுலகில் தோன்றுவதாகத் தெரிகிறானே தவிர உண்மையில்
அவன் மூலமெய்ம்மையிலிருந்து தொடங்கி மீண்டும் அம்மெய்ம்மையிலேயே
முடிவடைகிறான்!

உண்மையில், "தன்னையறிதல்" என்பது ஒருவன் தன்னைப்பற்றி அறிவதோ,
அல்லது, சமூகம் எனும் களத்தில் பிறருடன் ஒப்பிட்டு  தனது நிலையை
அறிவதோ அல்ல; மாறாக, பிரபஞ்சம் எனும் களத்துடன் தன்னை தொடர்பு
படுத்தி, பிரபஞ்ச விழைவை உணர்ந்து அந்த ஒப்பற்ற இலக்கை நிறைவேற்று
வதே "தன்னையறிதல்" என்பதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன் பிரபஞ்ச
இயக்கத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையும் ஆவான்! முதலில் மனிதன்
தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை (தனது பிரபஞ்சமளாவிய
தன்மையை) அறிந்திடவேண்டும், அடுத்ததாக, பிரபஞ்சத்தின் உண்மையான
மையம் எது என்பதை உணர்ந்தறிந்திடவேண்டும்!

உண்மையில், உணர்வுக்கு விழித்த (அதாவது உணர்வாகத் தன்னை உணர்ந்த)
ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையமே ஆவான்! எவ்வாறு ஒரு
மரத்தின் ஒவ்வொரு கனியும் அம்மரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம்
செய்கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆவான்! ஆனால், பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதும்,
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணர்வதும், இறுதியானதல்ல! அதாவது
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணரும் ஒருவன், அடுத்து தனது
மையத்தை உணர்ந்தாக வேண்டும்! ஏனெனில், பிரபஞ்சத்தின் உண்மையான
மையத்தை அறிவதற்கான ஒரு தற்காலிக மையமே மனிதன்! அதாவது
மனிதனின் மையம் மனிதனிடம் இல்லை! அது மனிதனின் (அகந்தை) உணர்
வைக் கடந்த ஒரு பேருணர்வு ஆகும்! தன் மையத்தைக் கண்டடைந்தவனே
மனிதன்! மற்றெல்லோரும் மையமறியாத விலங்குகளே!

விலங்கு ஜீவிகளைப்பொறுத்தவரை, அடிப்படைத்தேவைகளைச் சுட்டுகின்ற
உடலின் இயல்பூக்கிகள் தான் அவற்றுக்கான மையம் ஆகும்! அவற்றின்
அடிப்படைத் தேவைகளுக்குரிய பொருட்களைக்கொண்ட உலகை அவை
சார்ந்துள்ளன. உணர்வுக்கு விழித்த மனிதஜீவியைப் பொறுத்தவரை, உடலின்

அடிப்படைத்தேவைகளைக் கடந்த உயர்-தேவைகளான அர்த்தம், உண்மை,
மெய்ம்மை ஆகியவற்றைக்கோரும் ஆன்மாவே மையமும், அவன் சார்ந்திருக்
கும் ஒரே மெய்ம்மையும் ஆகும்!


மா.கணேசன்/நெய்வேலி/ 25-08-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...