
தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்!
- பாரதி
பகட்டு நிறைந்த செல்வச்செழிப்பு என்பது அபத்தமான வகையில்
அலங்கரிக்கப்பட்ட அன்றாடம், பிறழ்ச்சியாக மதிப்பேற்றப்பட்ட
சாதாரணம், அதாவது வீண் ஆடம்பரமே தவிர வேறல்ல!
- அர்த்தமற்ற அரசியல்/மா.கணேசன்
பணக்காரர்களுடைய பொருளதார அந்தஸ்து என்பது வானளாவிய செல்வத்
திற்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதன் -- அதாவது அவர்களுடைய கடின
உழைப்பு, புத்திசாலித்தனம், மற்றும், சீரிய முயற்சியின் பிரதிபலிப்பு என்பதாக
பரவலாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்பவைக்கப்
பட்டிருக்கிறார்கள்! ஆனால், இது சிறிதும் பொருந்தாதக் கூற்றாகும்! ஏனெனில்,
வெறும் ஒரு சதவிகிதத்தினர் (அமெரிக்காவில்), அல்லது வெறும் 10% பேர்கள்
மட்டுமே (இந்தியாவில்) வானளாவிய செல்வத்திற்குத் தகுதியானவர்கள்;
அவர்கள் மட்டுமே கடினமாக உழைக்கிறார்கள், புத்திசாலிகள், சீரிய முயற்சி
யாளர்கள் என்பது எவ்வகையிலும் உண்மையல்ல!
"நான் பணக்காரனாக ஆகப்போகிறேன் என்பதை நான் எப்போதும் அறிந்திருந்
தேன். அது குறித்து எப்போதாகிலும் ஒரு நிமிடம் கூட நான் சந்தேகித்தேன்
என நான் எண்ணவில்லை!" என அமெரிக்காவின் பணக்காரர்களில் இரண்டாம்
இடத்தில் இருக்கும் வாரண் பஃபெட் (Warren Buffett)கூறுகிறார். ஆனால்,
அதேநேரத்தில், அவர் எப்போதாவது தான் ஒரு மனிதனாக இருப்பது என்றால்
என்ன என்பது பற்றியும், என்றாவது ஒரு நாள் மனிதனாக ஆவது பற்றியும்
சந்தேகம் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!
தற்போது 85 வயதாகும் வாரண் பஃபெட், தனது மொத்த சொத்துக்களில்
பாதியை தானமாகத் தருவதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகச்
சொல்லப்படுகிறது! இது தேவையற்ற வேலை; முதலிடத்தில் தனது உண்மை
யான தேவைகளை உணர்ந்து அதற்குரிய அளவிற்கு பணம் சம்பாதித்து
வாழாமல், எதற்காக அளவிற்கு மீறி பணம் சம்பாதிக்கவேண்டும், பிறகு அதி
லிருந்து தானமாக அளித்திடுகிறேன் பேர்வழி என்று விளம்பரப்படுத்த
வேண்டும்?
இக்கட்டுரை பணக்காரர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியினால் எழுதப்பட்டதல்ல;
மாறாக, அவர்களுடைய அதீதமான பிறழ்ச்சி மனப்பான்மை, குறிப்பாகச்சொன்
னால், அவர்களுடைய தகுதியற்ற உயர்வு மனப்பான்மையைச் சகிக்க முடியா
மையால் எழுதப்பட்டதாகும்! அதாவது, வானளாவிய பெரும் செல்வத்திற்கு
அவர்கள் மட்டுமல்ல, எவருமே தகுதியானவர்கள் அல்ல! செல்வம் என்பது
ஒருவருக்கோ, அல்லது, குறிப்பிட்ட ஒரு சிலருக்கோ சொந்தமானதல்ல!
செல்வம் என்பது ஒரு ஆற்றைப் போல, அல்லது சமுத்திரத்தைப் போல
யாவருக்கும் பொதுவானதாகும்! ஒரு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை
எவரும் தமக்குத் தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ளலாமே தவிர,
மொத்த ஆற்றையோ, சமுத்திரத்தையோ எவரும் சொந்தம் கொண்டாட முடி
யாது! செல்வம் என்பதும் ஆற்றையும், சமுத்திரத்தையும் போலத்தான்!
செல்வம் என்பது முற்றிலும் ஒரு சில பணக்காரர்களின் உருவாக்கமோ,
படைப்போ அல்ல!
செல்வம், அல்லது, பொருள்-வளங்களுக்கான அடிப்படை, பணம் படைத்தவர்
களின் முதலீடு மட்டுமே அல்ல! அதாவது செல்வத்தின் அடிப்படைகளில்
ஒரே ஒரு காரணி மட்டுமே பணம், அல்லது, முதலீடு என்பதாகும்! மிகவும்
அடிப்படையான காரணிகளானவை பூமி, பூமியின் இயற்கை வளங்கள், நிலம்,
நீர், காற்று, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளங்கள், முக்கியமாக சக மனிதர்கள்,
அதாவது, மக்கள் சமுதாயம், மற்றும் அவர்களது உழைப்பும், யாவற்றுக்கும்
மேலாக அனைவருக்கும் பொதுவான வாழ்க்கைத் தேவைகளும்தான் பொருள்
வளங்களின் (செல்வத்தின்) உருவாக்கத்திற்கும், உற்பத்திக்குமான அடிப்படை
களாகும்!
பொருளாதார நடவடிக்கைகள் என்ற போர்வையில், நாம் சுரண்டி கொள்ளை
யடிக்கும் இயற்கை வளங்களுக்கு, அதாவது, நாம் உருவாக்கும் பொருள்
வளங்கள், அல்லது, செல்வத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும், டாலருக்கும் நாம்
இப்பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும், உழப்பைத்தரும் ஒவ்வொரு மனிதருக்
கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு,
"நான்தான் முதலீடு செய்தேன், ஆகவே, ஒட்டுமொத்த செல்வத்தையும் நானே
எடுத்துக்கொள்வேன், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், என உரிமை கொண்
டாடுவதற்கு இப்பூமியில் எவருக்கும் உரிமை கிடையாது! அவ்வாறு உரிமை
கோருபவன் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும், முட்டாளாகவும்,
பேராசை பிடித்த மிருகமாகவும்தான் இருக்க முடியும்! அத்தகைய தொரு
முட்டாளின் பெயர் தான் "பெரும்பணக்காரன்" (மில்லியினர், பில்லியினர்)
என்றால், இனியும் அத்தகைய நடைமுறையை நாம் அனுமதிக்கலாகாது!
உலகின் ஒட்டுமொத்த 760,00,00,000 (760 கோடி) மக்கள்தொகையில், மிகவும்
வறுமையிலுள்ள பாதி மக்கள், அதாவது, 360,00,00,000 (360 கோடி) மக்களின்
சொத்துக்களுக்குச் சமமான சொத்துக்களை, வெறும் 62 பேர்கள் (உலகின்
பெரும் பணக்காரர்கள்) வைத்திருக்கிறார்கள்! அதாவது, 360,00,00,000 பேர்கள்
கூட்டாக பகிர்ந்து அனுபவிக்கும் மொத்த சொத்து சுகங்களை வெறும் 62 பேர்
கள் மட்டுமே உடமையாகக் கொண்டிருக்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்!
அதாவது, 62 = 360,00,00,000 (வெறும் 62 பேர்கள் 360,00,00,000 பேர்களுக்குச்சமம்!)
எனும் இச் சமன்பாட்டை அறிவார்ந்த எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்
வானா?
பணக்காரர்களிடமுள்ள செல்வம் அவர்களைப் போலவே பயனற்றதாகும்!
மண்ணிற்குள் புதைக்கப்பட்டு மறைந்துகிடக்கும் புதையலைப் போன்றதே
பணக்காரர்களிடம் சிக்கிய செல்வம்!
ஆகவே, செல்வம் சேர்ப்பதற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும்!
ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வளவு தான் நிலம், மனை, பிற ஏணைய
சொத்துக்கள் உடமையாக இருக்கவேண்டும்; ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல்
சொத்துக்களைச் சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்கான வாய்ப்புக்களைப்
பறிப்பதாகும் எனக் கருதப்படவேண்டும்! ஒருவர் எத்தனை தொழிற்சாலை
களை அமைக்கலாம், பராமரிக்கலாம் என்பதற்கும் ஓர் உச்சவரம்பு வேண்டும்!
ஒரு 'தொழிலதிபர்' என்பவர், எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருந்
தாலும், சங்கிலித்தொடர் போன்ற வியாபார நிறுவனங்களைக் கொண்டிருந்
தாலும், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட படி, அவருடைய தொழிற்சாலைகளில்
பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த லாபத்திலிருந்து
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படவேண்டும்;
அதே போல, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும்
(உயிரியல் மண்டலத்திற்கு ஏற்படும் பாதகங்களைச் சரிகட்டுவதற்கும்), இயற்
கையிடமிருந்து எடுக்கப்பட்ட வளங்களைச் சரிகட்டுவதற்கும், அல்லது புதுப்
பிப்பதற்குமான தொழில் நுட்பங்களுக்குச் செலவிடவேண்டும்! அனைத்து
லாபங்களையும் தொழிலதிபதிரே சுருட்டிக்கொண்டு போய்விடுவதை இனியும்
அனுமதிக்கலாகாது! அவர் போட்ட முதலீட்டிற்குரிய நியாயமான சதவிகிதம்
மட்டுமே அவருக்குச் செல்லவேண்டும்! அந்த சதவிகிதமும் ஒரு குறிப்பிட்ட
அளவைத் தாண்டுமானல், அதற்கும் அவர் வரி கட்டவேண்டும்!
இத்தகைய யோசனைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் சிலருக்கு
கிறுக்குத்தனமாகத் தோன்றினால், அவர்கள் முன்வந்து பொருளாதார ஏற்றத்
தாழ்வை சரி செய்வதற்கான சரியான யோசனைகளைக் கூறட்டும்! அல்லது
உலக மக்களின் கூட்டுழைப்பினால் உருவாக்கப்பட்ட செல்வம் மற்றும்
பொருள் வளங்களில் ஐந்தில் நான்கு பகுதியானது எவ்வாறு மொத்த உலக
மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவிகிதம் பேர்களின் உடமையாக ஆனது
என்பதற்கான நியாயத்தை சொல்லட்டும்!
பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையிலான இடைவெளியானது கடந்த
பத்தாண்டில் மலைக்கும் மடுவுக்குமான அளவு அதிகரித்துள்ளது. பணக்காரர்
கள் தொடர்ந்து மேன்மேலும் செல்வங்களையும், சொத்துக்களையும் அடையப்
பெறுகிறார்கள்! ஏழைகளோ ஏழைகளாகவே தங்கிவிடுகின்றனர். இருவருக்கு
மான இந்த இடைவெளியானது வருமானப்பங்கீட்டில் உள்ள சமமின்மையைச்
சுட்டுவதாயுள்ளது! இதற்கான காரணங்கள் யாவை! எவ்வாறு இந்த பெரும்
இடைவெளியைப் போக்குவது? கல்வி வாய்ப்புக்கள் பணம் படைத்தவர்களுக்கு
மட்டுமே கிடைப்பதாயுள்ளது; ஆகவே, அவர்கள் மட்டுமே குறிப்பிட்ட துறை
களில் முதலிடமும், தலைமையும் பெறுவதற்கான தளத்தை எட்டுகிறார்கள்!
சிலர், கல்வி எனும் ஆசிர்வாதம் ஏழைகளுக்கும் எளிதாக, அல்லது இலவச
மாகக் கிட்டும் வகையில் அரசு ஆவன செய்யவேண்டும், அவ்வழியே, ஏழைக்
கும், பணக்காரனுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முடியும்
என்கிறார்கள்!
ஒரு ஆய்வறிக்கையானது, இந்த இடைவெளிக்குக் காரணம், கலாச்சாரம்,
உள்ளார்ந்த திறன், உலகமயமாதல், கல்வி, தொழில் சந்தைகள், வரி விதிப்பு
திருத்தங்கள், அரசுக்கொள்கைகள், தொழில் நுட்ப மாற்றங்கள், பாலினம்,
இனவாதம், சம்பள வித்தியாசங்கள் போன்றவை பிரதானமானவை என்கிறது!
ஆனால், மேற்குறிப்பிட்ட காரணிகளில், "உள்ளார்ந்த திறன்" எனும் விஷயம்
உண்மையில் விஷமத்தனமானதாகும்! ஏனெனில், மனிதஜீவிகள் இப்பூமியில்
உயிர்-வாழ்வதற்கு, தனித்திறன், அல்லது விசேடத் திறன் ஏதும் வேண்டுமா?
திறன் குறைந்தவர்கள், அல்லது, விசேடத் திறமையற்றவர்கள் கௌரவமான
வகையில் வாழ்வதற்கான உரிமை இல்லையா? அல்லது, ஏழைகள், வறிய
வர்கள், எனப்படுவோர், புழு பூச்சிகளைப் போல் வெறுமனே உயிர்-பிழைப்
பதற்கு மட்டும்தான் தகுதியானவர்களா? அப்படித்தானே இப்பூமியின் மீது
360,00,00,000 (அதாவது,360 கோடி) மக்கள் உயிர்-பிழைத்துக்கொண்டிருக்கிறார்
கள்! இந்த ஈனப் பிழைப்பிற்காக அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கவும்
வேண்டும், அதனுடன், உயிர்- பிழைத்திருப்பதற்கு அரசுக்கு வரியும் கட்ட
வேண்டும்! ஆனால், வெறும் 62 பேர்கள், பெரும் பணக்காரர்கள், அவர்கள்
மட்டும்தான் அபரிமிதமான செல்வங்களோடு ஆடம்பரமாகவும், ஊதாரித்தன
மாகவும் வாழ்வதற்கான தகுதியுடையவர்களா? அவர்கள் வாழ்கிற விதத்தை
"ஆடம்பரம்" என்கிற சொல்லைக்கொண்டு குறிப்பிட முடியுமா என்று தெரிய
வில்லை! அதாவது, அளவுகடந்த ஆடம்பரத்தை "அபத்தம்" என்றுதான் கூற
முடியும்!
மனிதர்கள் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஏழைகளாகவும்
இருக்க மாட்டார்கள், பணக்காரர்களாகவும் இருக்க மாட்டார்கள்! ஏனெனில்,
'ஏழை', 'பணக்காரன்' எனும் பட்டங்கள் மனிதனை இழிவு படுத்துபவை! ஏழை
கள் என்போர் தங்களுடைய விருப்பத்தினால் ஏழைகளாக இருப்பதில்லை;
மாறாக, சமுதாயத்தால் கொண்டாடப்படும் தவறான, தலைகீழான மதிப்பீடு
களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவற்றை அடைவதற்காக சமுதாயத்தின்
"எலிப்பந்தயத்தில்" எல்லோரும் கலந்துகொள்வதன் தவிர்க்கவியலாத விளை
வாகவே ஏழைகள், 'இல்லாதவர்கள்' என்போர் உருவாகிறார்கள்! பணக்காரர்கள்
தங்கள் விருப்பத்தினால், பெரு முயற்சியினால், திறமைகளால், புத்திசாலித்
தனத்தினால் பணக்காரர்களாக ஆனவர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்
ளலாம்! ஆனால், பணக்காரராக ஆவது, அல்லது, ஆகவிரும்புவது என்பது
மதிக்கத்தக்க, அல்லது, அர்த்தமுள்ள, வாழ்வின் இலக்கு நிலை அல்ல!
பலர், "பொருளாதார சமத்துவம்" பற்றிப் பேசுகிறார்கள். "பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லை!" என்று சொல்லப்பட்டது! ஆனால், இவ்வுலகிலேயே
நாம் எவரும் நிரந்தரமாக என்றென்றுமாய் தங்கி வாழப்போவதில்லை!
மேலும், இவ்வுலகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல; வருங்காலச் சந்ததி
யினருக்கும் சொந்தமானதாகும்; இன்னும் பிறவனைத்து உயிரினங்களுக்கும்
சொந்தமானதாகும்! உயிர்-வாழ்க்கைக்கு பொருள் மிகவும் அவசியமே! ஆனால்,
வாழ்க்கைக்கு பொருள் என்பது ஒரு ஆதாரம் மட்டுமே தவிர அதுவே வாழ்
வின் ஒட்டுமொத்தமும் அல்ல! இதன் அர்த்தம், வாழ்க்கை என்பது "உயிர் -
வாழ்தல்" என்பதுடன் முடிந்துவிடுவதோ முழுமையடைவதோ கிடையாது!
ஏனெனில் நாம் எலிகளோ, தவளைகளோ அல்ல, வெறுமனே உயிர்-வாழ்ந்து
செல்வதற்கு! நாம் மனித ஜீவிகள்! நம்முடைய வாழ்க்கை பிற விலங்குஜீவி
களுடையதைப் போன்றதல்ல! "மேன்மைபடுத்தப்பட்ட எலியின் வாழ்க்கை"
(A Glorified Rat Life)ஒருபோதும் மனித வாழ்க்கையாகிடாது!
செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கை என்பது என்ன? 'உயிர்-வாழ்தலை' மிகச்
சௌகரியமாகவும், அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும், பகட்டாகவும் மேற்
கொள்ளுதல் என்பதற்குமேல், அதாவது, "மேன்மைபடுத்தப்பட்ட ஒரு எலியின்
வாழ்க்கை" என்பதற்குமேலாக, அதில் வேறென்ன தனிச்சிறப்பு உள்ளது?
உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது; ஏழைக்கும், பணக்காரனுக்
கும் உள்ள இடைவெளி விரிந்துகொண்டே போகிறது என்பதால், உடனே
"பொருளாதார சமத்துவம்" பற்றிப் பேசுவது பொருத்தமாகப் படலாம்! ஆனால்,
அவர்கள் எண்ணுகிற பொருளாதாரச் சமத்துவம் என்பது எத்தகையது?
அதாவது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயரிய "வாழ்க்கைத் தரத்தை"
சாத்தியப்படுத்துவது என்பதுதானே! ஆனால், வாழ்க்கைத்தரம் என்பது என்ன?
உண்மையில் அது எதைக்குறிக்கிறது, அல்லது எதைப் பற்றியது? வாழ்க்கைத்
தரம் என்பது "வாழ்க்கை" யைப் பற்றியதா என்றால் இல்லை என்பதுதான்
அதற்கான சரியான பதிலாகும்!
ஆம், வாழ்க்கைத்தரம் என்பது பிரதானமாக பொருட்களின் (பல்வேறுபட்ட
கருவிகள், பயன்பாட்டுச் சாதனங்களின்) தரத்தையும், எண்ணிக்கையையும்
பற்றியதாகும்! இப்பொருட்களும், அவற்றின் தரமும், எண்ணிக்கையும்
இவற்றைப் பெறுவதற்கான அடையாளச் சீட்டான பணமும் சேர்ந்து தான்
செல்வமாகவும், சொத்தாகவும் கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது! ஆனால்,
இந்த பொருட்களின் தரம் ( பணம், சொத்து, செல்வம்) எதுவும், எவ்வகை
யிலும் வாழ்க்கையை, வாழ்க்கையின் தரத்தை அளப்பதற்கான பொருத்தமான
அளவுகோல் அல்ல! ஆகவேதான், இத்தகைய செல்வச்செழிப்பால் அலங்கரிக்
கப்பட்ட, சௌகரியம் மிக்க, உயிர்- பிழைத்தல் எனும் விவகாரத்தை நாம்
"மேன்மைபடுத்தப்பட்ட எலியின் வாழ்க்கை" என்று இங்கு குறிப்பிடுகிறோம்!
ஆனால், இந்த உயர் வாழ்க்கைத்தரம் என்று சொல்லப்படுகின்ற, மேன்மை
படுத்தப்பட்ட எலியின் வாழ்க்கையை, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்
கும்படிச் செய்யவியலாது! இதன் அர்த்தம், வெறும் ஒரு சதவிகித பெரும்
பணக்காரர்களுக்கு மட்டுமே இத்தகைய வாழ்க்கை கிடைக்கமுடியும், அவர்கள்
மட்டுமே அதற்குரிய தகுதிபடைத்தவர்கள் என்பது அல்ல!
ஏனெனில், அளவில்லா மக்கள் தொகைப் பெருக்கம், அதற்கிணையான பொரு
ளாதார நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்கிறது! பெருகிடும் நுகர்வுத்தேவை
களுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில், இயற்கை வளங்கள்
குன்றுதல், நீர் வளம் குறைவுபடுதல், நிலவளம் குன்றுதல் உடன்விளைவாக
நிகழ்கிறது; இவற்றினால் பூமியின் சுற்றுச்சூழல் மாசடைந்து புவிக்கோளம்
சூடேறுதலில் முடிவடைகிறது! மனித இனம் தொடர்ந்து இப்பூமியில் வாழ்
வதற்குரிய அனைத்து ஆதார வளங்களையும் பெருநிறுவன முதலாளிகள்
தங்களது லாப வெறிக்கு இலக்காக்கிடும்வகையில், அதாவது, சுரண்டிக்
கொள்ளையடிப்பதனால் மனித இனத்தின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறி
யாகிக் கொண்டிருக்கிறது! முதலில், இம்மாபெரும் சுரண்டலையும், பொருளா
தாரச் செயல்பாடுகளினூடே மக்களிடமிருந்து உறிஞ்சப்படும் மாபெரும்
உழைப்புச் சுரண்டலையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
முடிவில்லாத வளர்ச்சி, முன்னேற்றம், வாழ்க்கைத்தரம் என்பவை வெறும்
மாயையே தவிர வேறல்ல!
வறுமை (ஏழ்மை) என்பது நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டியதே என்பதில்
துளியும் சந்தேகம் இல்லை! அதேபோல, வளமை (செல்வம்) என்பதும் ஒழிக்
கப்பட வேண்டியதே! ஏனெனில், வளமை, அதாவது, செல்வச்செழிப்பு மிக்க
வாழ்க்கை பற்றிய கற்பனைகளும், கற்பிதங்களும், கனவுகளும்தான் வறுமை
யைத் தோற்றுவித்தன!
'வறுமை' ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்றால், அது உயிர்-வாழ்தல் எனும்
அடிப்படையையே குலைப்பதாகிறது; மனித ஜீவிகள் உயிர்-பிழைப்பதற்காக
பிற சகமனிதர்களுடன் போட்டியிடவும் போரடவும் வேண்டும் என்பது மிகவும்
அவமானகரமானதாகும்! அது மனித குலத்திற்கே பெரும் இழுக்கு ஆகும்!
அடுத்து, 'வளமை' ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்றால், வளமை என்பது
மனித வாழ்க்கைக்கு போலியான இலக்கையும், பொய்யான அர்த்தத்தையும்
அளிப்பதாகிறது! ஆக, வளமை, வறுமை இவ்விரண்டும் அசலான மானிட
வாழ்க்கைக்கு எதிராகச் செயல்படும் இரட்டைத் தீமைகள் ஆகும்!
ஏழைக்கும், பணக்காரனுக்கும் இடையேயுள்ள பெரும் இடைவெளிக்கு ஒரு
பிரதான காரணமாக இருப்பது வருமான ஏற்றத்தாழ்வே ஆகும்! அதாவது,
ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய சேவை அல்லது உழைப்புக்குப் பெறக்கூடிய
சம்பளம் மற்றும் கூலிகளில் உள்ள பெரும் வித்தியாசம் தான் பொருளாதார
ஏற்றத்தாழ்வுக்கான பிரதான காரணமாக உள்ளது! அதாவது, ஒருவருடைய
உழைப்புக்கான (அதாவது சேவை, பணி, உத்தியோகத்திற்கான) கூலி, சம்பளம்
எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? இக்கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது!
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, கூலி அல்லது சம்பள நிர்ணயம்
என்பது யாதொரு முறைமையும், நியதியும், அடிப்படையும் இல்லாமல் குத்து
மதிப்பாகத்தான் செய்யப்படுகிறது! இவ்வாறு செய்வதுதான் சம்பிரதாயமாக
உள்ளது; அதையே தான் நாம் அனைவரும் "பொன்விதி" யாக கடைப்பிடித்து
வருகிறோம்!
ஒரு குழாய் பொருத்துபவருக்கும், ஒரு மென்பொருள் பொறியாளருக்கும்
உள்ள சம்பள வித்தியாசத்தை எவ்வாறு சமன்செய்வது என்று கேட்டால், நம்
எவரிடமும் எந்தப்பதிலும், தீர்வும் கிடையாது - 'சமன் செய்யப்பட முடியாதது!'
என்பதைத்தவிர! "இல்லை, இந்த வித்தியாசத்தைச் சமன் செய்யமுடியும்
என்று எவராவது சொன்னால், நாம் அனைவரும் திகைத்துப் போவோம்!
ஆனால், சமன் செய்யமுடியும்! முடியும் என்று சொல்வதைவிட செய்து
முடித்தாகவேண்டும்! உண்மையிலேயே நாமனைவரும் சிந்திக்கிறவர்களாக,
சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்றால், நிச்சயம் ஒரு
குழாய் பொருத்துபவருக்கும், ஒரு மென்பொருள் பொறியாளருக்கும் உள்ள
சம்பள வித்தியாசத்தை, ஏற்றத்தாழ்வைச் சமன் படுத்திட முனைவோம்!
இப்போது, நாம் இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வருவோம்! அதாவது, "குறைந்த
பட்ச ஊதியம்" என்ற ஒன்றை நாம் அனைவரும் அறிவோம்; இந்த குறைந்த
பட்ச ஊதியத்தைக்கொண்டே சிறப்பாக வாழமுடியும் என்பதை எவ்வாறோ
அறிந்ததன் காரணத்தினால் தானே அரசாங்கம் "குறைந்தபட்ச ஊதியம்" என்ற
ஒன்றை நிர்ணயித்துள்ளது? மேலும், நாட்டில் ஏராளமானோர் இந்த குறைந்த
பட்ச ஊதியத்தைக்கொண்டுதான் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
எனும் பட்சத்தில், தேவையில்லாமல் சிலருக்கு மட்டும் எதற்கு அதிகபட்ச
ஊதியம் வழங்கிட வேண்டும்? பாரபட்சமின்றி எல்லோருக்கும் குறைந்த பட்ச
ஊதியத்தையே வழங்கிடலாமல்லவா? இவ்வழியே எல்லோருமே சுபிட்சமாக
வாழலாமே!
சந்தை மயமாகிப்போன நம்முடைய இன்றைய உலகில், ஒவ்வொரு பொரு
ளுக்கும் ஒரு விலை குறிக்கப்பட்டுள்ளது; அப்பொருட்கள் அத்தியாவசியத்
தேவைகளுக்குரியவையாயினும், அல்லது அத்தியாவசியமற்ற ஆடம்பரத்
தேவைகளுக்குரியவையாயினும்; அவற்றுக்கான விலை நிர்ணயம் எவரால்,
எங்கு, எவ்வாறு செய்யப்படுகிறது என்பது ஒருபுறமிருக்கட்டும்! அடிப்படை
வாழ்க்கைத் தேவைகளுக்குரிய பொருட்கள் எல்லா மக்களுக்கும் வேண்டு
மில்லையா? ஆனால், பொருட்களின் விலை ஒவ்வொருவருடைய ஊதியம்
அல்லது கூலிக்கு ஏற்றாற்போலில்லாமல், யாவருக்கும் பொதுவாக கறாராக
ஒரே மாதிரியாக இருக்கையில் ஒவ்வொருவருக்குமான சம்பளம், அல்லது
கூலியானது சமமாக இருப்பதில்லை என்றால் எல்லா மக்களும் எவ்வாறு
உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத்த்தேவைகளைப் பெற்று
கௌரவமான வகையில் மனித வாழ்க்கையை வாழமுடியும்?
கீரைக்கட்டுகளை வாங்கி காலை முதல் மதியம் வரை பனியில் நனைந்து,
வெயிலில் காய்ந்து விற்றுப் பிழைப்பு நடத்துகிறாள் ஒரு கீரைக்காரி! அவள்
படிக்காதவள், பட்டம் பெறாதவள், விசேடத்திறன் அற்றவள் என்பதால்
அவளுடைய வாழ்க்கைத் தேவைகள் சுருங்கிவிடுகின்றனவா? அல்லது
இன்னொரு பெண், அவள் படித்துப்பட்டம்பெற்று ஒரு மருத்துவராக பணி
செய்கிறாள் என்பதால் அவளுடைய வாழ்க்கைத் தேவைகள் திடீரென பெருகி
விடுகின்றனவா? அதாவது, ஒரு மருத்துவர் என்பதால், அதிகபட்ச சம்பளம்
பெறுவதற்கும், அதைக்கொண்டு அடிப்படைத்தேவைகள் மட்டுமின்றி, ஆடம்
பரத் தேவைகளையும் பூர்த்தி செய்து பகட்டாக வாழ்வதற்கான உரிமத்தை
அவளது உயர்-படிப்பு பெற்றுத்தந்துள்ளதா? அதிகச் சம்பளம் பெறுவதற்கான
வழிதான் உயர்கல்வியா?
வாழ்க்கைத்தேவைகள் என்பவை மனிதனுக்கு மனிதன் வேறுபடக்கூடிய
வையா? கட்டுமானத் தொழிலில், ஆண் சித்தாளுக்கு அதிகக் கூலியும், பெண்
சித்தாளுக்கு குறைந்த கூலியும் கொடுக்கப்பட வேண்டும் என்று, எந்த சட்டப்
புத்தகத்தில், அல்லது புனித நூலில் எழுதப்பட்டுள்ளது? இன்னும், பழைய
காகிதங்களையும், 'பிளாஸ்டிக்' பொருட்கள், 'பாட்டில்'களையும் பொறுக்கி
சீவனம் நடத்தும் மனிதர்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்? அவர்
கள் மனித ஜீவிகள் இல்லையா?
"அரிது, அரிது மானிடனாய்ப்பிறப்பது அரிது" என்று சொல்லப்பட்டது! ஆனால்,
பணம், செல்வம், என பொருளாதார நிலையை, தர அளவீடாகக்கொண்டு
மனிதர்களை அளப்பதன் வழியே அவர்களை ஏழைகள், வறியவர்கள், இல்லா
தவர்கள், பிச்சைக்காரர்கள் என்பதாகக் காண்கிறோமே தவிர, அவர்களை நாம்
மனிதர்களாக காணமுடிவதில்லை என்பதற்குக் காரணம் நாம் பொருளாதார
ஏணியில் மேன்மேலும் உயர்-நிலைக்குச் செல்லவிரும்புகிறோம் என்பதைவிட
நாம் மனிதர்களாக இல்லை என்பதே ஆகும்!
இந்தியாவின், பத்து சதவிகித பணக்காரர்கள் 2000 மாம் வருடத்திலிருந்து
தொடர்ந்து மேன்மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கின்றனர், தற்போது
நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில், நான்கில் மூன்று பகுதி அவர்களுடை
யதாய் உள்ளது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நாட்டின் பத்து சதவிகித
பணக்காரர்களில் வெறும் 8 பேர்கள் முதல் எட்டு இடங்களில் உள்ளனர்!
அவர்களுடைய சொத்து மதிப்பு இதோ:
1. முகேஷ் அம்பானி (Chairman and MD of RIL)
$19.3 billion அதாவது, 12335595000000 ரூபாய்.
2. திலீப் ஷங்க்வி (Founder of Sun Pharmaceuticals)
$16.7 billion. அதாவது, 1233559500000 ரூபாய்.
3. அஸிம் பிரேம்ஜி (Chairman of Wipro Ltd.)
$15 billion.அதாவது, 958875000000 ரூபாய்.
4. ஷிவ் நடார் (Founder and Chairman of HCL)
$11.1billion.அதாவது, 709567500000 ரூபாய்.
5. ஸைரஸ் பூனாவாலா (who set up Serum Institute
of India, a biotec company)
$8.5billion. அதாவது, 543362500000 ரூபாய்.
6. லக்ஷ்மி மிட்டல் (Chairman and CEO of Arcelor Mittal)
$8.4billion. அதாவது, 536970000000 ரூபாய்.
7. உதய் கோட்டக் (Executive vice Chairman and MD of
Kotak Mahindra Bank)
$6.3billion. அதாவது, 402727500000 ரூபாய்.
8. குமார் மங்களம் பிர்லா (Chairman of Aditya Birla Group)
$6.1billion. அதாவது, 389942500000 ரூபாய்.
பணக்காரர்கள் என்றவுடன் அவர்களிடம் உள்ள பணத்தை மட்டுமே பார்த்து
வாய் பிளக்கக்கூடாது; மாறாக, அவ்வளவு பணத்தால் அவர்கள் எவ்வளவு
கேட்டை அடைகிறார்கள், பெரும் பணத்தைச் சம்பாதிக்கும் அவர்களுடைய
பேராசையால் எவ்வாறு ஏராளமான மக்களின் சோற்றில் மண்ணை அள்ளிப்
போடுகிறார்கள் என்பதையும், முக்கியமாக, "பணம்" குறித்து நாம் ஒவ்வொரு
வரும் கொண்டிருக்கும் தவறான தலைகீழான மதிப்பீடுகளையும் பார்க்க
வேண்டும்! ஒவ்வொருவரும் பணத்திலிருந்து வாழ்க்கையைப் பார்க்காமல்,
வாழ்க்கையிலிருந்து பணத்தையும், யாவற்றையும் பார்க்கமுடியுமானால்,
உலகிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்!
நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில், நான்கில் மூன்று பகுதியானது பத்து
சதவிகித பணக்காரர்களின் வசம் உள்ளது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
நாட்டின் பத்து சதவிகித பணக்காரர்களில் வெறும் 8 பேர்கள் முதல் எட்டு
இடங்களில் உள்ளனர்! இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 134, 00,00,000
பேர்கள்! இந்த 134 கோடி மக்களில் 10 % என்பது 134,00,00,00 பேர்கள், அதாவது,
வெறும் பதிமூன்று கோடியே நாற்பது லட்சம் பேர்கள்; அதில் வெறும் 8 நபர்
களின் வசம் நாட்டின் உச்ச பட்ச சொத்துக்கள் உள்ளன!
ஆனால், "நம்நாடு பல லட்சம் கோடி கடனில் இருக்கிறது என்று சொல்லப்
படுகிறது! ஒரு சதவிகிதம் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் கோடீஸ்
வரர்களாக உள்ளனர்! மக்களோ வரிச்சுமைகளையும், பல்வேறு கடன்சுமை
களையும் சுமந்து கொண்டுள்ளனர்! யாருக்காக இவ்வளவு கடன்கள் வாங்கப்
பட்டன? நாட்டிலுள்ள பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் பல லட்சம்
கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கையில், நம் நாடு கடனில் இருக்கிறது
என்பதன் அர்த்தம் என்ன? இதில் எந்த முரண்பாடும் இல்லையா? இவர்கள்
இங்கே நம் நாட்டின் பிரஜைகள் தானா? அல்லது, வேறு அயல் நாடுகளைச்
சேர்ந்தவர்களா?
இந்தியாவின் பணக்காரர்களது சொத்துக்குவிப்பு குறித்து ஏற்றத்தாழ்வுகளுக்கு
எதிரான செயலார்வலர்கள், மற்றும், வளர்ச்சி மீது அக்கறை கொண்ட பொரு
ளாதாரவியலாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு, நாட்டின்
58% வருமானமானது இந்தியாவின் 1% பணக்காரர்களிடம் சென்று சேர்ந்தன
என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது! சென்ற ஆண்டு, 2017-ல், 73% சொத்துகள்
அதே 1% பணக்காரர்களின் வசமே சேர்ந்துள்ளது என சர்வதேச நிறுவனமான
ஆக்ஸ்ஃபாம் (Oxfam),22.01.2018 அன்று தனது ஆய்வறிக்கையை வெளி
யிட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் வருமான ஏற்றத்தாழ்வு மிக
மோசமாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இத்தகைய நிலை "99% க்கு எதிரான 1%" எனும் போக்கை குறிக்கிறது! இது
எவ்வகையிலும் பகல் கொள்ளைக்கு குறைந்ததல்ல. இதனால் தான் பட்டினிச்
சாவுகளை நீங்கள் இந்தியாவில் காண்கிறீர்கள்" என உரிமைகளுக்காகப்
போராடும் செயலார்வலரும் MKSS எனும் தொழிலாளர் சமூகத்தின் நிறுவன
ருமான நிகில் டெய் என்பவர் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்
துள்ளார்.
"இந்தியாவின் பணக்காரர்களுக்கு எவ்வெவ்வழிகளிலெல்லாம் முடியுமோ அந்த
எல்லாவழிகளிலும் சலுகைகளும், மானிய உதவிகளும் அளிக்கப்படுகின்றன.
ஏழைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நிலங்கள் எடுத்துக்
கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் அறவே இல்ல. பள்ளிகள் தனியார்
மயமாக்கப்படுகின்றன."
இந்தியாவின் முன்னனி ஆடை நிறுவனத்தின் உயர் அதிகாரி 17.5 நாட்களில்
பெறுகிற சம்பளத்தை குறைந்தபட்ச கூலி பெறும் ஒரு சாதாரண தொழிலாளி
எட்டுவதற்கு அவரது வாழ்நாட்கள் மொத்தமும் பிடிக்கும் (50 ஆண்டுகள் அவர்
வேலை செய்கிறார் எனக்கொண்டால்) என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சில கோடீஸ்வரர்கள்
மட்டுமே அனுபவிப்பதாக ஆக்ஸ்ஃபாம் முதன்மைச் செயல் அதிகாரி (சிஇஓ)
நிஷா அகர்வால் தெரிவிக்கிறார். கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் காரணி அல்ல என குறிப்பிட்ட அவர்,
இது பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் தவறான போக்கை உணர்த்துவ
தாக உள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தியில் பாடுபடும் விவசாயி, கட்ட
மைப்பு வசதிக்காக உழைக்கும் உழைப்பாளி, தொழிற்சாலை பணியாளர்கள்
தங்கள் குழந்தைகளின் கல்விவளர்ச்சிக்கு பெரிதும் போராடுகின்றனர். குடும்ப
முதியவர்களின் மருத்துவ செலவுகளை ஈடுகட்டமுடியாமல் திணறுகின்றனர்.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சம்பாதிப்பதே
பெரும் போராட்டமாக உள்ளது. இத்தகைய ஏற்றத்தாழ்வு அதிகரித்தால்
நாட்டில் லஞ்சம் அதிகரிக்கவும், குரோனி முதலாளித்துவம் உருவாக வழி
ஏற்படுத்தும் என்றும் நிஷா அகர்வால் எச்சரித்துள்ளார். [ குறிப்பு: 'குரோனியி
ஸம்' (Cronyism) என்பது, தனக்கு வேண்டியவர்களையும், உறவினர்களை
யும் வேலைவாய்ப்பு, மற்றும், அதிகார நிலைகளில் அமர்த்துதல் என்பதைக்
குறிக்கிறது. அதாவது, அதிகாரிகள் அதிகாரிகளுக்கும், முதலாளிகள் முதலாளி
களுக்கும் மட்டுமே உதவிக்கொண்டு முன்னேறிச் செல்லுதலைக் குறிக்கிறது!]
"பொருளாதாரச் சமநிலை இல்லாமையைக் குறைப்பதற்கான இந்திய அரசாங்
கத்தின் முயற்சிகள் வருத்தமளிக்கக்கூடிய அளவில் மிகவும் போதாமையாக
உள்ளது. பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து இந்திய
நாட்டின் சொத்துகளை, வளங்களைக் கொள்ளையடிப்பதை அரசாங்கம் தடுத்து
நிறுத்திடவேண்டும்" எனவும் நிஷா அகர்வால் கூறியுள்ளார்.
நமக்காக ஆடைகளை உருவாக்கும், நமக்காக கைப்பேசிகளை ஒன்று சேர்க்கும்,
நமக்கான உணவு தானியங்களை விளைவிக்கும் மக்கள் - அதாவது, மலிவான
பொருட்களை தொடர்ந்து சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும்வகையில்
பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், மற்றும், கோடீஸ்வர முதலீட்டாளர்கள்
தங்களுடைய லாபங்களைப் பெருகச் செய்வதற்காக - பெருமளவில் ஏய்க்கப்
படுகிறார்கள் என ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் விண்ணி
பையானிமா (Winnie Byanyima) கூறுகிறார்.
தி கார்டியன் பத்திரிகை, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள
இடைவெளியை, பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு முக்கியமானவை
எனக் கருதப்படுகின்ற ஏழு நடவடிக்கைகளில் (கீழே கொடுக்கப்பட்டுள்ளன)
எது அதிமுக்கியமானது என்று கருத்து கேட்டுள்ளது.
1.இலவசமாகவும் உயர்தரக்கல்வியையும் அரசாங்கம் வழங்கவேண்டும்.
2.குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
3.பணக்காரர்களுக்கு வரிகளை உயர்த்தவேண்டும்.
4.ஊழலை ஒழிக்கவேண்டும்.
5.ஏழைகளுக்கு அதிக சமூகப்பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
6.அரசியலில் பணக்காரர்களின் தாக்கத்தை நிறுத்தவேண்டும்.
7.வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவேண்டும்.
ஆனால், 99% மக்களின் வாழ்க்கை மூழ்கிக்கொண்டிருக்கையில், கருத்துகளை
கேட்டு, திட்டங்களைத்தீட்டி சாவகாசமாக செயல்படுவதற்கான நேரம் அல்ல
இது; உடனடியாகச் செயல்படவேண்டிய தருணம் இது! ஆயினும், இந்த 7
அம்சங்களின் பொருத்தப்பாடுகளைப் பார்ப்போம்! இந்த ஏழில், அதிமுக்கிய
மானது என்றால், "வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவேண்டும்"
என்பதைச் சொல்லலாம், ஏனெனில், 2 வது அம்சமான "குறைந்த பட்ச
ஊதியத்தை உயர்த்த வேண்டும்" என்பதைவிட அவசர அவசியம் வேலையற்
றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதாகத்தான் இருக்கமுடியும்; ஏனெனில்,
ஏதாவதொரு தொழிலில், உத்தியோகத்தில் குறைந்த பட்ச ஊதியம் பெறுபவர்
களைவிட மிக அவலமான நிலையில் இருப்பவர்கள் வேலையற்றோர்களே
ஆவர்! ஆக, வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதுடன்சேர்த்து
குறைந்த பட்ச ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும்.
அடுத்தபடியாக, உடனடியாகச் செய்யமுடியக் கூடியவைகளில், முதலாவதாக
இரண்டு அம்சங்களைச் சொல்லலாம். ஒன்று, பணக்காரர்களுக்கு வரிகளை
உயர்த்துவது, இரண்டாவது, அரசியலில் பணக்காரர்களின் தாக்கத்தை நிறுத்து
வது. இவ்விரண்டு அம்சங்களும் அவசியமானது, ஏழைகளின் மீது அக்கறை
கொண்ட அரசாங்கமாயிருந்தால், இவற்றை உடனடியாக அமல்படுத்தமுடியும்.
அடுத்து, "இலவசமாகவும் உயர்தரக்கல்வியையும் அரசாங்கம் வழங்கவேண்
டும்" என்பது முக்கியமான அம்சமே எனினும், இதன் பலன்களை அறுவடை
செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனடி நடவடிக்கைகள்
பட்டியலில் விடுபட்டுவிடாமல் இரண்டாவது கட்டத்தில் முதலாவது அம்ச
மாக இதை அமல்படுத்திடவேண்டும்.
இவையெல்லாவற்றையும் செயல்படுத்துவதுடன் இணைந்ததாக ஊழலை
ஒழிப்பது என்பதை, அரசாங்கமும்,மக்களனைவரும் கடைப்பிடித்தாகவேண்டும்.
தி கார்டியன் பத்திரிகை முன்வைத்த 7 அம்சங்களில் இடம்பெறாத எட்டாவது
அம்சம், மிக மையமான அம்சம் ஒன்று உள்ளது! அது என்னவென்றால்,
மானிடவாழ்வு முழுவதும் சந்தைமயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அமைப்பு
சாராத எண்ணற்ற தொழிலாளர்கள், எடுபிடிகள், சிறுவியாபாரிகள் (கீரைக்காரி
கள்), விவசாய தினக்கூலிகள், மூட்டைத்தூக்குபவர்கள், வீட்டுவேலை செய்ப
வர்கள், .... இன்னும் எண்ணற்ற வகைகளில் உழைப்பவர்கள் அனைவருக்கும்
தங்களுடைய உழைப்புக்கும், சேவைக்கும் உரிய, கௌரவமான வகையில்
தங்களது அன்றாடத்தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்குப் போதிய
அளவிலான கூலியை, சம்பளத்தை, விலையை நிர்ணயம் செய்து கொள்ளும்
உரிமையை அவர்களே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த மைய
மான அம்சம் ஆகும்!
ஆம், நாளையிலிருந்து ஒரு கட்டு கீரையின் விலை 50 ரூபாய் + 10 ரூபாய்
வரி ( இது உழைப்பவருக்குச் சேரவேண்டிய கௌரவ வாழ்விற்கான நியாய
மான வரியாகும்) என்றால், நிரந்தர வருவாய் பெறும் வர்க்கத்தைச்சேர்ந்தவர்
கள் அதிர்ச்சியடையக்கூடாது! இல்லை, " இது அநியாயம், பகல் கொள்ளை!"
நாங்கள் அதிர்ச்சியடையத்தான் செய்வோம் என்றால், அதே அதிர்ச்சி இந்தியா
வின் 73 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீதம் வசதிபடைத்தவர்கள் வசம் ஏன்
இருக்கிறது? எவ்வாறு அவர்களிடம் போய்க் குவிந்தது? என்பது குறித்து ஏன்
ஏற்படவில்லை என்று யோசிக்கட்டும்! இது குறித்து காங்கிரஸ் தலைவர்
ராகுல்காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு 23-01-2018 அன்று கேள்வி எழுப்பி
யுள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும்
சர்வதேச பொருளாதார மாநாட்டின் தொடக்க விழாவில் 23-01-2018 அன்று
பங்கேற்று பேசினார். (அதாவது, அந்நிய பெரு முதலீட்டாளர்களுக்கு சிவப்புக்
கம்பளம் விரித்துவிட்டு அப்படியே உள்ளூர் சிறுமுதலீட்டாளர்களுக்கு கோடித்
துணி வாங்கிவருவதற்காக டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளாரா? - இது இக்
கட்டுரையாளரின் தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு!) டாவோஸ் மாநாட்டில்
திரு மோடி பேசியது (காண்க: தி இந்து/ 24-01-2018) :
"இந்தியாவில் முன்பிருந்த சிவப்பு நாடா முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு
முதலீட்டாளர்களுக்கு சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்கும் நிலை உருவாகி
யுள்ளது என்று டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்...."
அந்நிய முதலீட்டாளர்கள் எவ்வித அனுமதிக்காகவும் காத்திருக்கத் தேவை
யில்லை. தனது தலைமையிலான மூன்றரை ஆண்டுக் கால ஆட்சியின்
வர்த்தக, முதலீட்டு ஏற்புடைமை சாதக சூழ்நிலைகளைப் பட்டியலிட்ட மோடி,
ஏறக்குறைய நடைமுறைக்கு ஏற்பில்லாத 1,400 விதிமுறைகள் முற்றிலுமாக
நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்......"
அந்நிய முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சாத்தியமான வகையில் வளர்ச்சிக்கான வழிமுறைகள் இந்தியாவில் வகுக்கப்
பட்டுள்ளன. இந்தியாவில் பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் 90 சத
வீதம் வரை அனுமதிக்கப்படுகின்றன......"
சர்வதேச அளவில் தீவிரவாதம், புவி வெப்பமடைதல், உள்நாட்டு தொழில்
மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்க அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு
வாத கொள்கைகள் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன என்று
பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்."
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சின் கடைசியில் அவர் சொல்லிய ஒரு
கருத்தாம்சம், அதாவது, "உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்க
அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் பாதுகாப்புவாத (Protectionism) கொள்
கைகள் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன" என்பது குறித்து நாம்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! அவரது அக்கறை உலகமயமாக்கலைப்
பற்றியதாக இருக்கிறதே தவிர நாட்டுமக்களைப்பற்றியதாக இருக்கவில்லை!
மக்களாகிய நாம் 99% என்பதை நாம் மறந்துவிடவேண்டாம்! வெறும்1% பணக்
காரர்களுடைய பணபலம், மற்றும், செல்வாக்கின் முன் 99% மக்களின் சக்தியும்,
உழைப்பும் கௌரவமும் கைகட்டி நிற்கின்றன!
உண்மையில், அரசு, அரசாங்கம் யாருக்காக, யாருடைய நலன்களைப் பாது
காப்பதற்காக இருக்கிறது? என்கிற கேள்வி இன்னும் பதில் கண்டடையப்படாத
தால் மீண்டும் மீண்டும் மேற்புறத்திற்கு எழுந்து வருகிறது! உண்மையில்
அரசுக்கு மக்கள் தேவைப்படுகிறார்களா? எனும் கேள்வியும் முக்கியமானதே!
உண்மையில் பார்த்தால் (அரசுக்கு மக்கள்) தேவையில்லை தான்! ஆனால்,
வேறு பல காரணங்களுக்காக அரசுக்கு மக்கள் தேவைப்படவே செய்கிறார்கள்!
அதாவது, அரசு, அரசாங்கம் என்பதன் பின்புலத்தில் உள்ள தனிநபர்கள், குழுக்
கள், மேட்டுக்குடிகள், ஆதிக்க சக்திகள், செல்வந்தர்கள், பெருமுதலாளிகள் . . .
ஆகியோரது சொந்த நலன்களைக் காப்பதற்கு, ஒரு நிலையான இராணுவமும்,
அவர்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் உரிய பொருட்களை உற்பத்தி
செய்துதருவதற்குரிய பலவகைப்பட்ட தொழிலாளர்களும், வினைஞர்களும்,
கலைஞர்களும், நிபுணர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும்,
உணவுப்பொருட்களை விளைவித்துத் தரும் விவசாயிகளும், பணிவிடை
செய்வதற்கான வேலையாட்களும் தேவைப்படுகின்றனர்!
இவர்களின், அதாவது, இந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின்
பார்வையில், "மக்கள்" என்போர் கூலிக்காரர்கள், வேலைக்காரர்கள், காவல்
காரர்கள், உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பணிவிடை செய்
பவர்கள், அவ்வளவு தான்!
இந்த 1% பணக்காரர்கள் 99% மக்களின் நலன்களுக்கு எதிராகச்செயல்படுகிறார்
கள் என்பதை எப்போது 99% உணரப்போகிறது? இவ்வளவிற்கும், அவர்கள்
சப்தமின்றி, போரின்றி, ஆரவாரமின்றி, அமைதியாக தங்களுடைய கயமைத்
தனம், பேராசை, சுயநலம், நரித்தந்திரம், பொய், ஏமாற்று, ஆகியவற்றைக்
கொண்டு 99% மக்களை ஏய்த்து மேய்த்து வருகின்றனர்!
இந்நிலை, இந்தியாவில் மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் முறையே,
1 % பணக்காரர்கள் தான் உலக மக்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட
பொருள் வளங்களையும், அனைவருக்கும் சொந்தமான சொத்துக்களையும்,
செல்வங்களையும், நயவஞ்சகமாகக் கொள்ளையடித்து வைத்துக்கொண்டு
பொருளாதாரத்தின் உச்சியில் இருந்துகொண்டிருக்கிறார்கள்! இந்த 1% பணக்
காரர்களை மானிட குலத்தைப் பீடித்துள்ள உள்ளிருந்தே அழிக்கும் புற்றுநோய்
என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
குறிப்பு : இக்கட்டுரையானது பெரிதும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் புள்ளி
விபரங்களையும் செய்தித்தாட்களில் வெளியான செய்திகளையும் தரவுகளாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
மா.கணேசன் / 10-01-2018
----------------------------------------------------------------------------