
முதலிடத்தில், அரசு, அரசாங்கம், அரசியல்கட்சிகள் போன்ற
அமைப்புக்களை எதிர்நோக்கி மனித இனம் இப்பூமியில்
தோற்றுவிக்கப்படவில்லை!
அரசு, அரசாங்கம், தேர்தல், வாக்களித்தல், அரசியல் தலைவர்கள், பிரதம
மந்திரி, ஜனாதிபதி, முதலமைச்சர்கள், பிற அமைச்சர்கள், நாடாளுமன்றம்,
சட்ட மன்றங்கள், பெரு நிறுவனங்கள், முதலாளிகள்,.... இத்யாதி, இத்யாதிகள்
எதுவும் இல்லாமல் மக்களாகிய நம்மால் நம் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ
முடியாதா?
இத்தகையதொரு நிலைமையை நம்மில் பெரும்பாலானோர் யோசித்துப்பார்த்
திருக்கவே மாட்டோம்! பொதுவான எந்தப்பிரச்சினையைப் பற்றியும் நாம்
யோசிக்கமாட்டோம் என்பது வேறு விஷயம்! வயிற்று வலியும், தலைவலியும்
தமக்கு வந்தால் மட்டுமே தெரியும்!
அரசு இல்லையேல், அவசரகாலச் சேவைகளை யார் செய்வார்? தீப்பிடித்துக்
கொண்டால் யார் வந்து அணைப்பார்கள்? வீட்டை உடைத்து திருடிச் சென்ற
பிறகு அத்திருடனை யார் வலைவீசித் தேடிப்பிடிப்பார்கள்? வருடக்கணக்கில்
தேங்கி வழியும் வழக்குகளுக்கு யார் தீர்ப்பு வழங்குவார்? போக்குவரத்துச்
சாலைகளை யார் அமைப்பார்கள்? இல்லாத ஆறுகளின் குறுக்கே யார் பாலங்
களைக் கட்டுவார்கள்? தண்ணீரே இல்லாத ஆறு, ஏரி, குளங்களை யார் தூர்
வாருவார்?...என்றெல்லாம் நாம் கவலைப்படலாம்! ஆனால், அரசு, அரசாங்கம்,
பாரம்பரியமிக்க அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள்......இத்யாதிகள்
எல்லாம் இருந்தும் இங்கு எதுவும் உருப்படியாக நடக்கவில்லை, இயங்க
வில்லை, செயல்படவில்லை! ஏராளமான மக்கள் வறுமையில்வாடுகின்றனர்,
வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, விலைவாசி விண்ணைத்
தொடுகிறது, விவசாயிகள் தற்கொலையில் தீர்வு தேடுகின்றனர், இவ்வாறு
எத்தனையெத்தனை பிரச்சினைகள்! பிரச்சினைகளைத் தீர்க்க எத்தனை வாரி
யங்கள்! ஆம், பிரச்சினைகள் இங்கு நிறுவனப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படு
கின்றன!
அதே நேரத்தில், எண்ணற்ற பல விஷயங்கள், தினமும் நாம் சாப்பிடுவது, நம்
வீடுகளை புழங்குவதற்கான பொருட்களைக் கொண்டு பயன்கொள்வது, நண்பர்
களுடனும் சகமனிதர்களுடன் பரஸ்பரம் உரையாடுவது, இலக்கியம் வாசிப்பது,
இசையை உருவாகுவது, அல்லது கேட்டு ரசிப்பது, விளையாடுவது, தொழில்
புரிவது, விருந்து, கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற
வாழ்க்கையுடன் இணைத்துச் செயல்படுத்தும் விஷயங்கள் யாவும் யாதொரு
அரசின், அரசாங்கத்தின் ஐந்து, அல்லது, பத்தாண்டுத் திட்டங்களால், அல்லது
நிர்வாகத்தினால் விளைபவையல்ல! மாறாக, அவையனைத்தும் சுதந்திர
சமூகத்தின், மக்களின் பரஸ்பர உதவிகளாலும், தேவைகளாலும், குறிப்பாக
அவை மக்களாகிய நம்முடைய இயற்கையான சுய அரசாங்கத்தினால்
( நிர்வாகத்தினால்) விளைபவை, நிறைவேற்றப்படுபவையாகும்!
மானுடகுல வரலாற்றில், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாதொரு
அரசும் இல்லை, அரசாங்கமும் இல்லை, அரசியல்வாதிகளும் இல்லை,
தலைவர்களும் இல்லை! கற்காலத்திற்கு முன்பிருந்தே பல்லாயிரம் ஆண்டு
களாக இப்பூமியில் மனித இனம் வாழ்ந்து வந்துள்ளது!
உண்மையில், அரசு, அரசாங்கம், அரசியல்கட்சிகள் போன்ற அமைப்புக்களை
எதிர்நோக்கி மனித இனம் இப்பூமியில் தோற்றுவிக்கப்படவில்லை! இந்த
அமைப்புகள் யாவும் நமக்கு நாமே பூட்டிக்கொண்ட தளைகள், ஏற்படுத்திக்
கொண்ட சிறைகள் ஆகும்! அதே நேரத்தில், நாம் மீண்டும் அந்த பழங்காலத்
திற்குச் செல்லமுடியாது! இப்போது நாம் செய்யக்கூடியதும், செய்யவேண்டி
யதும் மேன்மேலும் இத்தளைகளில் சிக்கிக்கொள்ளாமலும், இச்சிறைகளில்
அடைபடாமலும் நமது சுதந்திரத்தையும், வாழ்வையும் பாதுகாத்துக்கொள்வது
ஒன்றே ஆகும்!
நம்மை நாமே காவல் காத்துக்கொண்டால், நமக்குத் தனியே காவல் நிலை
யங்கள் தேவைப்படாது! அதற்கு, நாம் நமக்குள் சண்டை சச்சரவுகளின்றி,
பூசல்களின்றி பரஸ்பரம் இணக்கமாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும்!
அப்படியே நமக்கிடையே பூசல்கள் தோன்றினாலும், அவற்றை நாமே சுமுக
மாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்! பிரச்சினைகளை, பூசல்களை நாமே தீர்த்துக்
கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், நமக்குப் பிரத்யேகமாக
நீதி மன்றங்கள் தேவைப்படாது!
இன்னும், எவ்வெவற்றிற்கு அரசு, அரசாங்கம், பிற நிறுவனங்கள் தேவைப்படு
வதாயுள்ளனவோ முடிந்தவரை அவற்றையெல்லாம் நமக்குநாமே நிறைவேற்
றிக்கொள்ள முயற்சிக்கலாம்! அப்படியானால், அதாவது, கிட்டத்தட்ட நமக்கு
நாமே யாவற்றையும் செய்து கொள்ளும்பட்சத்தில், நாம் ஏன் அரசாங்கத்திற்கு
வரி செலுத்தவேண்டும் என்று கேட்கலாம் ஆம், மக்களாகிய நம்முடைய
வாழ்வில் தேவையில்லாமல், அநாவசியமாகத் தலையிடாமல், குறுக்கிடாமல்,
மூக்கை நுழைக்காமல் இருப்பதற்காக அரசாங்கத்திற்கு நாம் வரி செலுத்து
வதாக வைத்துக்கொள்ளலாம்!
ஆம், அரசையோ, அரசாங்கத்தையோ நாம் எதிர்ப்பதோ, போராடுவதோ கூடத்
தேவையில்லை! ஏனென்றால், தோல்விகரமான சண்டை எனத்தெரிந்தபிறகும்
அதில் ஈடுபடுவது பயனற்றது!
"முதலும், மிக முக்கியமானதுமான படி (அடிவைப்பு) என்னவென்றால், அரசை முதன்மைப்படுத்திடாமல் நம் வாழ்க்கையை வாழ்வதும், அரசின் சிதைவைக்
கடந்து வாழ்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கிடுவதும்தான்!"
என கிரிகோரி ஸாம்ஸ் சொல்வதற்கிணங்க, அரசு என்பது இருந்தாலும், அது
ஏதோ இல்லாததைப்போலவே எண்ணிக்கொண்டு நாம் நம்முடைய வாழ்க்
கையை நம் சகமனிதர்களுடன் இணைந்து வாழ்ந்து செல்லவேண்டியதுதான்!
அதாவது, அரசின் ஒழுங்கு படுத்துதல், தடைசெய்தல், மற்றும் வரிவிதித்தல்
போன்ற வலுக்காட்டாய முறைமைகளின்றி உண்மையில் நம்மால் சிறப்பான
சுய-நிர்வாக எந்திரங்களை உருவாக்க முடியும்; மனிதர்கள் பிறவியிலேயே
கொடூரமானவர்களோ, கொலைகாரர்களோ அல்ல; தேவையற்ற காரணங்
களுக்காக ஒருவரை ஒருவர் நாம் கொல்லுவதோ, துன்புறுத்துவதோ அவசிய
மில்லை. உண்மையில், பரஸ்பரம் ஒருவக்கொருவர் இணக்கமாக இப்பூமியின்
மீது வாழ்வதுதான் மிக எளிதான இயற்கையான நிலைமையாகும்!
நாம் எண்ணுகிறோம், நாம் சுதந்திர மனிதர்கள் என்று! ஆனால், வரலாறு
மெய்ப்பிப்பது என்னவென்றால், அரசானது வேறு மாதிரியாகச் சிந்திக்கிறது,
எப்போதும் அது மனிதர்கள்மீது மொத்த அதிகாரத்தையும் பிரயோகித்து நம்மை
அடக்கவும், ஒடுக்கவும்; பல சமயங்களில் நியாயமான கோரிக்கையை கலகக்
குரலாகக் கொண்டு நம்மை அழிக்கவும் தயங்குவதில்லை! உண்மையில்,
அரசுக்கான அசலான சவால் மக்களாகிய நம்மை பிற அரசுகளிடமிருந்து பாது
காத்தலே! தேவையேற்படின், நம்முடைய அரசுக்குள்ளேயே எழுகின்ற குற்றக்
காரணிகளிடமிருந்தும் நம்மைப் பாதுக்காப்பதும் தான்!
மக்களாகிய நாம் சிந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறோம், அதாவது, அரசு
என்பது ஒரு அவசியமான தீமை என்று! அதாவது அதிகாரம் கொண்ட ஒரு
மத்திய கட்டுப்பாடு இல்லாமல் நாம் வாழமுடியாது என்று! போர்கள், வரிகள்,
ஊழல் அரசியல்வாதிகள் யாவும் மனிதத்திரளின் இயற்கையான ஒரு பகுதி
எனவும், அவை நாகரிகத்தின் தவிர்க்கமுடியாத துணைக்காரணிகள் எனவும்
நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்! பூமி உருண்டை மீது எல்லைக்கோடுகளை
கிழித்து இது எதிரி அரசு என்று நம் சொந்த அரசு கூறுகிறது; பிறகு, நம்மைப்
பாதுகாப்பதற்காக, நிலையான ராணுவம், விமானப்படை, நவீன போர்த்தள
வாடங்கள், அணு ஆயுதங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன! இரு உலகப்
போர்களுக்கு மக்களோ, வாழ்க்கையோ காரணமல்ல!
நாம் இன்று நம்பிக்கையுடன் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும்,
வளங்களும், யாவும் நம்முடைய உழைப்பால், வாழ்க்கைத்தேவைகளின்
உந்துதல்களினால் விளைந்த கண்டுபிடிப்புகளே ஆகும்! சக்கரம், ஆகாய
விமானம், நீராவி எந்திரம், மிதிவண்டி, குண்டூசி, துணி மணிகள், பல்வேறு
எந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள், வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற
அனைத்துவித சாதனங்கள் யாவும் எந்தவொரு அரசின் மேற்பார்வையிலும்,
உதவியிலும், அதிகாரத்தைக்கொண்டும் வடிவமைக்கப் பட்டவையோ, உரு
வாக்கப்பட்டவையோ அல்ல! ஒரு சிறு குண்டூசியைக் கூட எந்த நாட்டிலும்,
எந்த ஒரு அரசியல்வாதியும் உருவாக்கிடவில்லை!
நம்முடைய வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பேற்று வாழ்ந்தாக வேண்டும்!
நம்முடைய வாழ்க்கைக்கான பொறுப்பை அரசிடமோ, அரசியல்வாதியிடமோ,
ஏதோவொரு கட்சித்தலைவரிடமோ கொடுத்துவிடும் பட்சத்தில் நம்முடைய
வாழ்க்கையும், சுதந்திரமும் நம்முடையதல்ல என்றாகிவிடும்! இறுதியாக,
நாம் பிறந்த இடத்தில், மண்ணில், நிலத்தின் மீதிருந்து, நிலத்தைச் சார்ந்து
உழைப்பதற்கும், வாழ்வதற்குமான உரிமையையும், சுதந்திரத்தையும் நாம்
ஒருபோதும் இழந்துவிடலாகாது!
சரியானதைச் செய்வதற்கான நேரம் எல்லாநேரங்களிலும் சரியாகவேயுள்ளது!
✦
குறிப்பு : இக்கட்டுரையானது கிரிகோரி ஸாம்ஸ் - ன்
The State is Out of Date/ We Can Do It Better
எனும் நூலின் சாராம்சத்தைத் தழுவி எழுதப்பட்டதாகும்.
✦
மா.கணேசன்/13:40 08-01-2018
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment