
[சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தானது!]
"பூமிக்கோளத்தின் மீது நம்மால் முறையாக
வாழ இயலாத போது சந்திரனில் மனிதனை
இறக்குவதனால் என்ன பயன்?"
-- அந்தோனி டி மெல்லோ
இக்கட்டுரை விஞ்ஞானத்திற்கு எதிரானதல்ல; மாறாக, தவறான விஞ்ஞானத்
திற்கு எதிரானது. இன்னும், முதிர்ச்சி பெறாத, எந்திரத்தனமான, தட்டையான,
மேலோட்டமான அணுகுமுறைகளில் சிக்குண்ட விஞ்ஞானத்திற்கு எதிரானது.
இக்கடுரையின் பிரதான முக்கியச் செய்தி என்னவெனில், தேனி மாவட்டத்தில்
இந்திய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளவிருக்கும் பெருஞ்செலவு பிடிக்கும்
"நியூட்ரினோ" ஆய்வுத்திட்டம் பயனற்றது, தேவையில்லாதது. அதாவது,
மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கி 'விஞ்ஞான ஆராய்ச்சி" என்ற பெயரில்
விஞ்ஞானிகள் தங்களது கோளாறான ஆர்வத்தை (Curiosity) திருப்தி
செய்து கொள்ளும் ஒரு (வீண்) முயற்சியே தவிர வேறில்லை என்பதே!
இக்கட்டுரையின் இரண்டாவது முக்கியச் செய்தி என்னவெனில், அணுவின்
கருவைப் பிளந்து "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ் போஸான் (Higgs-
Boson) துகளைக் (அதாவது பருப்பொருளின் ஆகச் சிறிய பகுதியான அணுத்
துகளின் உள்ளடக்கமாக இருக்கும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அணுக் கருத்
துகள்களில் ஒன்றிற்குப்பெயர் தான் 'ஹிக்ஸ் போஸான்' என்பது) கண்டுபிடித்
ததன் வழியாகவும், அல்லது "பிசாசுத் துகள்" என்றழைக்கப்படும் நியூட்ரினோ
துகளை சிறைப்படுத்தி ஆராய்ச்சி செய்வதன் வழியாகவும், அல்லது, கோட்பாடு
ரீதியாக அனுமானிக்கப்பட்ட வேறொரு துகளைக் கண்டுபிடித்து ஆராய்வதன்
வழியாகவும், அல்லது, செவ்வாய்க் கிரகத்திற்கோ, வியாழன் கிரகத்திற்கோ,
அல்லது அதையும் தாண்டி புளூட்டோ கிரகத்திற்கோ 'கியூரியாசிட்டி' போன்ற
விண்கலங்களையோ அல்லது மனிதர்களையோ அனுப்பி ஆராய்வதன்
வழியாகவும், அல்லது அண்ட வெளியிலுள்ள கணக்கற்ற நட்சத்திரங்களையும்,
கேலக்ஸிகளையும் துல்லியமாக எண்ணிக் கணக்கிடுவதன் வழியாகவும்;
அல்லது, பல்ஸார், குவாஸார், கருந்துளை (Black Holes)போன்ற விநோ
தமான அண்டவெளிப்பொருட்களையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்தறிவதன்
வழியாகவும், ஒருபோதும் நாம் வாழும் இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது
என்ற ரகசியத்தைக் கண்டுபிடிக்கவோ, இப்பிரபஞ்சத்தை முறையாக, முழுமை
யாகப் புரிந்துகொள்ளவோ முடியாது என்பது தான்!
மூன்றாவது முக்கியச்செய்தி என்னவெனில், நவீனவிஞ்ஞானத்தின் உள்ளார்ந்த
குறைபாடுகளினால் இம்மாதிரியான மேலோட்டமான ஆராய்ச்சிகள் பிரபஞ்சம்
பற்றிய உருப்படியான புரிதலையோ, எவ்வாறு நாம் இப்பிரபஞ்சத்தில் வாழ்வது
என்பது பற்றியோ; மனித வாழ்வின் அர்த்தம், குறிக்கோள், மற்றும் இலக்கு
குறித்த புரிதலையோ அளித்திடாது என்பதுதான்!
ஆகவே, வெறும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமின்றி மேற்சொன்ன
தவறான விஞ்ஞான ஆராய்ச்சி அணுகுமுறைகளை பிரதானமாகக் கொண்டே
நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், மற்றும் செவ்வாய்க்கிரக ஆய்வுத்திட்டம் . . . .
போன்றவற்றை ஊக்குவிப்பதும், அனுமதிப்பதும் கூடாது என்கிற வாதத்தை
இக்கட்டுரை முன்வைக்கிறது.
மேலும், பொறுப்புமிக்க, குறைபாடற்ற விஞ்ஞான தத்துவ ஆன்மீகப் பார்வை
யும் கொண்ட ஒவ்வொரு இந்திய/உலகப் பிரஜையும் இம்மாதிரியான ஆர்வக்
கோளாறான, தவறான விஞ்ஞான ஆராய்ச்சிகளை, திட்டங்களை எதிர்ப்பது
மிகவும் அவசியமாகும். அதே வேளையில், இக்கட்டுரை வெறும் எதிர்ப்புக்
குரல் அல்ல; மாறாக, உண்மையின் குரலாகும்.
■ ■ ■
விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு எதிராக வழக்கமாக முன்வைக்கப்படும் ஒரு
வாதம் என்னவென்றால், "ஏற்கனவே நாட்டில் ஏராளமான பிரச்சினைகள்
இருக்கும்போது, அதிகச் செலவு பிடிக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் தேவை
தானா?" என்பதேயாகும். அதேவேளையில், ஒரு நாட்டில், எவ்வளவுதான் உள்
நாட்டுப் பிரச்சினைகளும், அயல் நாடுகளுடன் பிரச்சினைகளும் இருந்தாலும்
அவற்றையெல்லாம் கடந்து பிற விண்வெளி ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக்
கொண்டுதான் உள்ளன.
இதற்குக் காரணம், நம்மைச்சுற்றியுள்ள உலகை, பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள
வேண்டும் என்கிற மனிதனின் அடங்காப் பேரார்வம் தான் என்று சொல்லப்படு
கிறது.
நல்லது, மனித ஜீவிகளாகிய நாம் எத்தகைய அமைப்பினுள், உலகினுள்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் ஒரு முழுமையான மனித
வாழ்க்கையை வாழ முடியாது என்பது உண்மையே. இவ்வகையில், பிரபஞ்
சத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்கிற பேரார்வம் மதிக்கப்படவும், முக்கியத்
துவமும், முன்னுரிமையும் அளிக்கப்படவும் வேண்டும்.
ஆனால், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பேரார்வம் -- குறிப்பாக,
விண்வெளி, மற்றும் அணுக்கரு இயற்பியல் துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சி
யாளர்களின் ஆர்வமானது, சற்று விநோதமானதாகவும், சில வேளைகளில்,
விபரீதமானதாகவும் உள்ளதென்பது அவ்விஞ்ஞானிகளின் விஞ்ஞான அணுகு
முறையையும், பார்வையையும் சந்தேகிக்கச் செய்கிறது. இவர்களுடைய
ஆராய்ச்சி வழிமுறைகளும், அவற்றிற்குரிய ஆய்வுக்கூடங்களும், பூதாகரமான
எந்திரங்களும், கருவிகளும்; அவற்றை உருவாக்குவதற்காகச் செலவழிக்கப்
படுகின்ற பெருந்தொகையும், மனித சக்தியும், நேரமும், உழைப்பும்; சில
வேளைகளில், இவர்களுடைய பரிசோதனைகள் வெற்றிகரமான முடிவுகளை
தந்திடும் போது -- உதாரணத்திற்கு, அணுகுண்டு போன்ற பேரழிவை விளை
விக்கக் கூடிய ஆயுதங் களையும்; சில வேளைகளில், இவர்களுடைய
பரிசோதனைகள் தவறாகிப் போய்விடும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பேராபத்துக்
களையும் கருத்தில் கொள்வோமெனில், கண்களை மூடிக்கொண்டு, அறிவு,
வளர்ச்சி, முன்னேற்றம், விஞ்ஞான சாதனை என்கிற பெயர்களில் எல்லாவித
விஞ்ஞான ஆராய்ச்சி களையும் ஊக்குவிக்கவும் அனுமதிக்கவும் முடியாது,
கூடாது!
உண்மையில், பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் தவறேதுமில்லை!
மாறாக, எந்த திசையில் மனிதன் தன் ஆர்வத்தைச் செலுத்துகிறான்; எந்த
திசையில் அவனது ஆராய்ச்சிகள் செல்கின்றன, அதற்கான வழிமுறைகள்,
(உள்) நோக்கங்கள் யாவை என்பதில்தான் கோளாறுகள் உள்ளன.
மேலும், உலகை, பிரபஞ்சத்தை முழுமையாக அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள
மிகவும் சிக்கலான, பெருஞ்செலவு பிடிக்கும் ஆராய்ச்சி வழிமுறைகளின்
வழியேதான் செல்லவேண்டும் என்பதில்லை.
மாபெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யாதொரு புகழ்பெற்ற
பல்கலைக்கழகத்திலும் பயின்றவரல்ல, அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்
புக்களை யாதொரு பெரிய ஆய்வுக்கூடத்திலும் நிகழ்த்திடவில்லை. தெளிவாக,
தீர்க்கமாகச் சிந்திக்கும் அவரது மனம்தான் ஆய்வுக்கூடம். காகிதமும்,
பென்சிலும்தான் அவரது கருவியும், உபகரணமும். இவற்றைக்கொண்டு தன்
கூரிய மதியால் காகிதத்தில் அவர் எழுதிய எவ்வித பயங்கர தோற்றத்தையும்
கொண்டிராத "E=mc2"(அதாவது, சக்தியானது பொருள்/நிறையாகவும்;
பொருளானது சக்தியாக மாற்றப்படக்கூடியது; சக்தியும், பொருளும் சமம்)
எனும் சமன்பாடானது, அன்றைய இரண்டாம் உலகப் போர் அரசியல் சூழ்நிலை
களுக்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க விஞ்ஞானிகளின் முயற்சிகளால்
பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக அவதாரம் எடுத்தது என்பது
ஒருவகையில் விதிவசமானதுதான்.
ஆக, அணுவையும் அணுவின் விரிவாக்கமான அண்டத்தையும் அதாவது
பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலான வழிமுறைகளும், பெரிய
ஆய்வுக்கூடங்களும், பிரும்மாண்டமான எந்திரங்களும், கருவிகளும் தேவை
யில்லை. ஏனெனில், பூரணமானதொரு விஞ்ஞான அணுகுமுறை என்பது
மிகவும் நேரடியானதும், எளிமையானதும், செலவற்றதும் ஆகும்.
சமீபத்தில், 2012 ஜூலை, 4-ம் தேதி, "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ்
போஸான் துகளை கண்டுபிடித்துவிட்டதாக சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய
அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால், 50 ஆண்டுகளுக்கு முன்னர் பலவித
அணுக்கருத்துகள்களுக்கும் நிறையை (Mass)அளிக்கும் விதமாக ஒரு அடிப்
படைத்துகள் இருக்கவேண்டும் என முன்மொழியப்பட்ட அந்தத் துகளைத்தான்
தற்போது தங்களது ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்
ளனர்.
பல லட்சம் கோடிகள் செலவில் உருவாக்கப்பட்ட விசேடமான எந்திரங்களை
யும், கருவிகளையும் கொண்டு பல நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான
விஞ்ஞானிகளின் சீரிய முயற்சிகளின் விளைவாக கிட்டத்தட்ட "ஹிக்ஸ்
போஸான்" போன்றதொரு துகளை கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சரி, "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ் போஸான் துகளைக் கண்டுபிடித்தாகி
விட்டது! அடுத்தது என்ன?
பெரும்பாலான இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இத்துகளைக் கண்டு
பிடித்தது என்பது ஒரு சாதனை தான், ஆனால், சற்று உற்சாகக் குறைவுடன்
அவர்கள் உணர்வது என்னவென்றால், இதில் புதிதாக ஒன்றும் இல்லை
என்பது தான். இக்கண்டுபிடிப்பின் விளைவாக அணுவைப்பற்றியோ, அல்லது
அண்டத்தைப்பற்றியோ யாதொரு புதிய புரிதலும், பார்வையும் வெளிப்பட
வில்லை. இவை பற்றி ஏற்கனவே நாம் புரிந்துகொண்டுள்ள நிலையிலேயே
தான் இருக்கிறோம் என்கிறார்கள்.
இந்த லட்சணத்தில், "கடவுள் துகள்" போய், "பிசாசுத் துகள்" என்றழைக்கப்படும்
நியூட்ரினோ துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தற்போது இந்திய
விஞ்ஞானிகள் குழு இறங்கவுள்ளது.
1930 - ல், அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்
களைத்தவிர வேறு சில துகள்களும் இருக்கக்கூடும் என்று உல்ஃப் கேங் பாலி
என்ற விஞ்ஞானி யூகித்தார். அதில் ஒரு துகளுக்கு அவர் வைத்த பெயர் தான்
"நியூட்ரினோ". பிறகு நெடிய ஆராய்ச்சிகளின் விளைவாக அணு உலையில்
நியூட்ரினோவைக் கண்டறிந்ததற்காக ரைனஸ், கோவான் ஆகிய விஞ்ஞானி
களுக்கு 1955-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அணுவுக்குள் மட்டுமல்லாமல், சூரியன், நட்சத்திரங்களில் இருந்தும் கோடாணு
கோடி நியூட்ரினோக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதாகவும்,
ஆனால், காஸ்மிக் கதிர்களோடு சேர்ந்துவரும் இத்துகளை தனியே பிடிப்பது
என்பது சாதாரண காரியமல்ல என்பதாகவும், ஆகவேதான் அத்துகளை "பிசாசுத்
துகள்" (The Ghost Particle)என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
ஆக, எளிதில் அகப்படாத, எல்லாப் பொருட்களையும் எளிதில் ஊடுருவிச்
செல்கிற இந்த துகளை தனியே சிறைப்பிடித்து ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழ்
நாட்டில், தேனி மாவட்டம், பொட்டிபுரம் ஊராட்சி புதுக்கோட்டைக்கு அருகே
யுள்ள பொட்டிதட்டி மலையை இந்திய விஞ்ஞானிகள் தேர்வுசெய்து ஆரம்பக்
கட்ட வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த பொட்டிதட்டி மலையைக்
குடைந்து சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில், சுரங்கம் அமைத்து ஆய்வுக்
கூடத்தை நிறுவப் போகிறார்கள். அதற்காக இந்திய அரசாங்கம் ரூ.1356 கோடி
களை ஒதுக்கியுள்ளது.
இந்த நியூட்ரினோ ஆய்வு மூலம் சூரியனின் சூட்சுமத்தையும், பிரபஞ்சத்தின்
பிறப்பு ரகசியத்தையும் அறிந்துகொள்ளலாம் என்பது இந்த ஆய்வில் ஈடுபட்
டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஏதோ பிரபஞ்சத்தின் சூட்சுமம்
நியூட்ரினோ துகளிலும், ஹிக்ஸ் போஸான் போன்ற துகள்களிலும் அடங்கி
யிருப்பதாகக் கருதுவது ஒரு விஞ்ஞானவகை மூட நம்பிக்கை தானே தவிர
முதிர்ச்சியடைந்த விஞ்ஞான அணுகுமுறையாக இருக்கவில்லை. ஏனென்றால்,
அணு என்றால் என்னவென்று அணுவைப் பிளந்து பார்த்து அறிந்துகொள்ள
முடியாது! அது தேவையற்ற வேலையும் கூட!
மேலும், பிரபஞ்சத்தில் தனியே ஒரு "அணு" என்பதாகவோ, எல்லாத் துகள்
களுக்கும் அடிப்படையான ஒரு ஒற்றைத்துகள் என்பதாகவோ ஏதுமில்லை!
அவ்வாறு ஒரு இறுதியான அடிப்படைத் துகளைத் தேடிச் சென்றால் முடிவே
யில்லாமல் நாம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதிய துகளையும் பிளந்து கொண்டே
செல்லவேண்டியிருக்கும்.
ஆனால், இவ்வாறு முடிவேயில்லாமல் துகள்களைப் பிளந்து கொண்டே
செல்லமுடியாது. கொள்கைப்படி எதுவும் சாத்தியமே என்றாலும் நடைமுறை
யில் எல்லாமும் சாத்தியமாவதில்லை! அப்படியே முயன்றாலும் மேன்மேலும்
பெரிய பூதாகரமான எந்திரங்களும், கருவிகளும் தேவைப்படும். அதற்கு கோடி
கோடியாக மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்திட வேண்டும். அதோடு
அத்தகைய ஆராய்ச்சிகள் தறிகெட்டுப்போகுமெனில், மிகவும் விபரீதமான
விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். ஏனெனில், நாம் வெறுமனே துகள்
களோடு மட்டும் செயல்படவில்லை; மாறாக, அளப்பரிய ஆற்றல்களுடன்,
அல்லது சக்தியின் ஊற்றுக்கண்ணுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.
ஏற்கனவே ஜெனிவாவில், பூமிக்கடியில் 27 கி.மீ. சுற்றளவில் அமைக்கப்பட்ட
வட்டவடிவ குகைப்பாதையில் தான் புரோட்டான் துகளை வேகமாகச் செலுத்தி,
இன்னொரு புரோட்டான் துகளுடன் மோதச் செய்து ஹிக்ஸ் போஸான்
துகளைக் கண்டுபிடித்தனர். அடுத்ததாக, 2025 -க்குள் 80 கி.மீ. சுற்றளவுள்ள
குகைப்பாதையை அதே இடத்தில் அமைத்து ஈர்ப்பு விசையின் புதிரை
விடுவிப்பதற்கான திட்டத்தை அவ்விஞ்ஞானிகள் தீட்டியுள்ளனர். ஆனால்,
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகாதிருந்தால் சரிதான்.
நாம் ஒரு பொருளை, உதாரணத்திற்கு, ஒரு பாறைத் துண்டை உடைத்துக்
கொண்டே சென்றால், சிறு சிறு கற்களையும், அடுத்து மிகச் சிறிய மணல்
போன்ற துகள்களையும், அதையும் உடைத்தால், அணு எனப்படும் நுண்ணிய
துகளையும் அடைவோம். அணுவையும் உடைத்தால் அதன் கருவினுள்ளே
புரோட்டான், நியூட்ரான் எனும் துகள்களும் வெளிப்படும். இவ்வாறு நாம்
உடைத்துக் கொண்டே செல்லலாம் என்பது கோட்பாட்டளவில் சாத்தியமே.
ஆனால், அணுவை உடைப்பது என்பது ஒரு பாறையை உடைப்பது போல
அவ்வளவு எளிதான காரியமல்ல. அதாவது, ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு
அடிப்படைத்துகளை வெளிக்கொண்டு வருவதற்கு புரோட்டான் துகள்களை
கிட்டத்தட்ட ஒளியின் வேகத்திற்கு ( வினாடிக்கு 300,000 கி.மீ.) செலுத்தி
எதிர்ப்புறமாக அதே வேகத்தில் செலுத்தப்பட்டு பாய்ந்துவரும் புரோட்டான்
துகள்களுடன் மோதச் செய்யும் போது அம்மோதலின் விளைவாக புரோட்டான்
துகளானது உடைந்து பல்வேறு வகைப்பட்ட நுண் துகள்களாகப் பிரிந்து சிதறும்.
அப்போது சூரியனின் மையப்பகுதியில் உள்ளதைப் போல லட்சம் மடங்கு
வெப்பம் உண்டாகும்.
இத்தகைய பரிசோதனைகளைச் செய்வதற்கு பல்லாயிரம் கோடிகளைச் செலவு
செய்து பூதாகரமான எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சிகளில்
ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை இத்தகைய பரிசோதனைகள்
பாதுகாப்பானவை என்பதாகவே சொல்கிறார்கள். ஆனால், சில விஞ்ஞானிகள்
இவை ஆபத்துகள் நிறைந்தவை என்கிறார்கள்.
அதே வேளையில், ஆபத்துகளும் பெருஞ்செலவுகளும் ஒருபுறமிருக்கட்டும்;
இந்த நவீன துகள்கள் பற்றிய கோட்பாடுகளும், ஆராய்ச்சிகளும் எவ்வகையில்
நமக்குப் பயன் படுகிறது என்பதைப்பார்க்கும் போது, " எந்த ஒரு குறிப்பிட்ட
காலத்திலும் ஒரு சில ஆயிரம் பேர்களுக்கு மேலாக துகள்கள் பற்றிய கோட்
பாட்டை முழுவதுமாகப் புரிந்து கொள்ளவும், செரித்துக்கொள்ளவும்
இயலாது. மேலும் இந்தக் கோட்பாடானது நம் காலத்தின் மகத்தான அறிவு
ஜீவிய சாதனைதான் என்றாலும் 40 ஆண்டுகளாக அதனால் விளைந்த நடை
முறைப்பயன்கள் என்பது மிகச் சொற்பமே" என்பதாகவும், "இது ஒரு மிக அதிகச்
செலவு பிடிக்கும் பொழுதுபோக்கு" என்பதாகவும் விஞ்ஞானி பிரையன்
எல்.ஸில்வர் தனது "Ascent of Science"(1998)நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒரு இயற்பியல் விஞ்ஞானியைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தின்
ஆழமான ரகசியங்களை இத்துகள்கள் தான் தங்களகத்தே கொண்டிருக்கின்றன
என்பதாகச் சொல்லக்கூடும். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால்,
அன்றாட உலகின் இயக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இத்துகள்கள் தேவை
யற்றவையாகும்" என்பதாகவும் விஞ்ஞானி பிரையன் எல்.ஸில்வர் கூறியுள்ளார்.
ஆனால், நாம் இன்னும் ஆழமாகச் சென்று காணும் போது, நமது (கட்டுரை
யாளரின்) புதிய பரிணாமப் பார்வையில், பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்து
கொள்வதற்கு துகள்களைப்பற்றிய ஆராய்ச்சிகள் உதவிடாது. என்பதோடல்
லாமல் அவை தேவையற்றவை எனவும் கூறிவிடலாம்.
ஏனென்றால், இதுவரை (கடவுள் துகள் உட்பட) கண்டுபிடிக்கப்பட்ட 400 வகை
அடிப்படைத்துகள்கள் யாவும் ஒரு வினாடியில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி
நேரம் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டவை. அதாவது, முழுமையாக ஒரு
வினாடிகூட நிலைத்திராத, அணுவின் கருவினுள்ளே அடங்கியிருக்கும்
இத்துகள்களை ஆராய்வது வேலையற்ற வேலையாகும்.
பிரபஞ்சவியல் விஞ்ஞானிகள் கூறியதைப்போல நமது பிரபஞ்சமானது 1500
கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு "பெரு வெடிப்பு" நிகழ்வில் இத் துகள்
களுடன் தொடங்கியிருக்கலாம். ஆனால், ஒரு சில விநாடிகள் அல்லது
நிமிடங்களிலேயே பிரபஞ்சமானது இந்த அடிப்படைத்துகள்களின் நிலையைக்
கடந்து சென்றுவிட்டது. அதாவது, நீடித்த நிலைப்புத்தன்மை கொண்ட மூலகங்
களின் (Elements) அணுக்களின் கருவினுள் அத்துகள்களை உள்ளடக்கி
அடுத்தடுத்த உயர் நிலைப் பொருட்களாக பிரபஞ்சமானது உருமாறிச் சென்று
விட்டதோடு பொருளின் தளத்திலேயே தங்கிவிடாமல் "உயிரியல் தளம்",
பிறகு "உணர்வியல் தளம்" என பரிணமித்து உணர்வின் (Consciousness)
உச்ச நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
பிரபஞ்சமானது அடிபப்டைத் துகள்களையும், பலவித மூலகங்களையும்,
நட்சத்திரங்களையும், மாபெரும் கேலக்ஸிகளையும், .... கொண்டிருந்தாலும்
அது பிரதானமாக இவைகளுடன் வினையாற்றுவதாக, சம்பந்தப்பட்டிருப்பதாக
இருக்கவில்லை. மாறாக, பிரபஞ்சமானது தொடர்ந்து முன்னேறி முன்னோக்கிச்
செல்லும் தனது பரிணாம நிகழ்வு முறையில் அவ்வப்போது வெளிப்படுகிற
அம்சங்களையே (Emerging Properties)பற்றிச் செல்வதாயுள்ளது.
அணுக்கள், மற்றும் அடிப்படைத்துகள்கள் பற்றிய ஒரு உண்மை என்னவெனில்,
இவை யாவும் பொருளின் உட்கூறுகளாக உள்ளமைந்த அம்சங்கள் என்பதுதான்.
மிக அரிதாக, நியூட்ரினோ போன்ற துகள்கள் மட்டுமே நட்சத்திரங்களின்
(சூரியன்களின்) வெப்பம் மிகுந்த மையப்பகுதியில் உருவாகி அண்டவெளியில்
தனித் துகள்களாக திரிந்துகொண்டுள்ளன.
அணு, என்றும், அடிப்படைத்துகள் என்றும் நாம் நுட்பரீதியாக (Technically)
பேசினாலும், அணு என்பது ஒரு தனிப்பொருள் அல்ல. அணுவும், அண்டமும்
பிரிக்கமுடியாதவை. ஒரு அணு என்பது உடனடியாக பிற அணுக்களுடனும்,
ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும், இன்னும் தொலைதூர வருங்காலத்தில்
அடையக்கூடிய அதனுடைய இறுதியான இலக்கு நிலையுடனும் பிணைக்கப்
பட்ட தாகும்.
அதாவது, ஒரு அணுவின் அல்லது அதன் உட்கூறான ஒரு அடிப்படைத்து
களின் அசலான பண்பு என்பது பரிணாம ரீதியாக, பரிணாம நிகழ்வுமுறையின்
முடிவில், முழுமையில் மட்டுமே வெளிப்படு வதாயுள்ளது. ஏனெனில், அணு
என்பது ஒரு பரிணமிக்கும் பொருளாகும். அணுவும் அண்டமும் வேறானதல்ல.
அணுவின் விரிவாக்கமே அண்டம் அதாவது பிரபஞ்சம் ஆகும். ஆக, அணுவின்
முடிவான முழுமையான பண்பை அறிய பிரபஞ்சமானது இறுதியில்
எந்நிலையை எட்டுகிறது, என்னவாக பரிணமிக்கிறது என்பதைக்கொண்டே
அறிய இயலும்.
இதற்கு மாறாக, ஒரு அணுவை பிரபஞ்சத்திலிருந்து உருவியெடுத்து அதை
உடைத்துப்பார்த்தால் அதனுடைய (அதாவது பிரபஞ்சத்தினுடைய) அரைகுறை
யான தொடக்க நிலைப்பண்பினை மட்டுமே அறிய முடியும். ஒரு விதையை
உடைத்து அது என்னவென்று அறிவது முறையான விஞ்ஞான அறிதல்முறை
யாகாது. மாறாக, அவ்விதையை மண்ணில் ஊன்றி அது முளைத்து செடியாக
வளர்ந்து பிறகு பெரும் விருட்சமாக எழுந்தபிறகு பூத்து, காய்த்து என்ன
கனியைக் கொடுக்கிறது என்பதைக்கொண்டே அவ்விதை ஆலவிதையா,
அல்லது என்ன விதை என்று அறிய முடியும். இதற்கு மாறாக, அவ்விதயை
உடைத்துப் பார்த்தால் அது பலவித அணுக்கருத்துகள்களின் தொகுப்பாக
உள்ளதென்றும், இறுதியில் ஒரு முடிவிற்கும் வர இயலாமல் குழம்பிப்
போகலாம். அல்லது முடிவில், "ஒன்றுமில்லை" என்ற என்ற மாபெரும் கண்டு
பிடிப்பை அறிவித்திடலாம். இத்தகைய தலைகீழ் அணுகுமுறையில் தான்
தற்போதைய விஞ்ஞானம் சென்று கொண்டுள்ளது.
■ ■ ■
மனித ஜீவிகளின் பிரதான அக்கறையும், தேடலும், ஆராய்ச்சியும் தனது
உணர்வுப் பரிணாமத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர,
அணுக்களைப்பற்றியோ, அடிப்படைத்துகள்களைப் பற்றியோ; அண்டவெளியில்
திரியும் நட்சத்திரங்கள், கிரகங்கள்,,, பிற நிகழ்வுகளைப்பற்றியோ இருக்க
முடியாது!
மனித ஜீவி என்பவன் அடிப்படையில் அணுத்துகள்களால் ஆனவன் தான்!
அதாவது, அடிப்படைத்துகள் தான் அண்டத்திலுள்ள அனைத்துப் பொருட்களு
மாகி, புழுவாகி, பூச்சியாகி, பிறகு மனிதஜீவியுமாகி மனித ஜீவிகளுள் இயற்
பியல் விஞ்ஞானியுமாக ஆகியுள்ளன. ஆனால், இயற்பியல் விஞ்ஞானியாக
ஆகிய ஆதி அடிப்படை அணுத்துகள்கள் மீண்டும் தம்மையே (அடிப்படைத்
துகள் களையே) ஆராய்ந்துகொண்டிருப்பது என்பது மாபெரும் முரண் அல்லவா?
இது ஒரு விபரீத வட்டமாகத் தெரியவில்லையா?
ஆகவே, விஞ்ஞானிகளே விழித்துக்கொள்ளுங்கள்! புத்தம் புதிதாகச் சிந்தி
யுங்கள்! நீங்கள் வெறும் அடிப்படைத்துகள்களின் தொகுப்பு அல்ல! பிரதானமாக
நீங்கள் ஒரு "உணர்வு" தான்! உங்களுடைய உணர்வுப் பரிணாமத்தின் இறுதி
யில் நீங்கள் முழு-உணர்வே! அணுவாக, அடிப்படைத்துகளாகச் சுருங்கியது
அந்த முழு-உணர்வே!
மா.கணேசன் • • 18-03-2018
----------------------------------------------------------------------------