Thursday, 22 March 2018

கடவுள் பிஞ்சுகள்!





மனிதன் எதன் மீது அதீத ஆர்வமும், தீவிர பற்றும் கொள்கிறானோ அதுவே அவனது மதம் ஆகிறது,

அது கிரிக்கெட், மது, காதல், பணம், சொத்து, கடவுள் இருக்கிறார் என நம்புவது, கடவுள் இல்லை என மறுப்பது, ஒரு கொள்கை, கோட்பாடு.....என எதுவாயினும், அதுவே ஒருவனது மதம்!

ஆகவே ஒருவனது மதம் இன்னொருவனுக்கு வெறித்தனமாகவும்; ஒருவனது கடவுள் இன்னொருவனுக்கு சாத்தானாகவும் தெரிகிறது!

ஆனால், புதிரான இப்பிரபஞ்சத்தில், தன்னையும், வெறும் உயிர்-பிழைத்தலைத் தாண்டிய தனது வாழ்வையும் அர்த்தப்படுத்தும் வகையில் மனிதனுக்கு புதிரான வேறொன்று தேவைப்பட்டது!

அந்த வேறொன்றினைச் சுட்டும் குறியீடு தான் "கடவுள்" என்பது! புதிரான அந்த வேறொன்றின் தேவையை நேரடியாக தன் அகத்தே உணர்வது தான் உணர்வார்ந்த மதத்தின் முதல்படி!

அவ்வுணர்வை கடனாகக் கொடுக்கவோ, வாங்கவோ முடியாது; அதை ஒரு நிறுவனமாகவும் கட்டியெழுப்ப முடியாது! அவ்வுணர்வு ஒவ்வொருரிடமும் தாமே துளிர்த்திட வேண்டும்!

அவ்வுணர்வில் மேன்மேலும் உயர்ந்து அதன் உச்சியைத் தழுவிக்கொள்வதே இறுதிப்படியான கடவுள் அனுபவம்!

ஆகவே தான் தத்துவ விசாரத்தில் சிறந்து விளங்கிய அந்த அரசன் சொன்னான், "மூடர்களே, இது என்ன சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு! கடவுளைக் கேட்டால், இந்த பொம்மைகளைக் கொண்டுவருவதென்ன? உங்கள் தலைகளைக் கொய்வதற்குள் கொண்டு போய்விடுங்கள் அவற்றை
உடனே; போய் இனியாவது சிந்திக்கத் தொடங்குங்கள்!" என்றான்.

ஏனெனில், கடவுள் என்பது அன்றாடத் தேவைகளுக்கு உதவும் தட்டுமுட்டுச் சாமான்களைப் போன்றதல்ல! அது அன்றாட வாழ்வைக்கடந்த உயர்-வாழ்க்கைக்கான அகத்தேவை யாகும்!

ஆக, நேரடி அனுபவத்தைத்தராத எவ்வொரு பொருளும், குறியீடும், நம்பிக்கையும், பக்தியும், ஈடுபாடும், சடங்கு, சாத்திரங்கள்..... யாவும் வெறும் தட்டுமுட்டுச் சாமான்களே தவிர வேறல்ல! புதிரான அந்த
மெய்ம்மையைக் குறிக்கும் எதுவொன்றும் இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் கிடையாது!

ஆயிரம் சிலைகளை, பொம்மைகளைச் செய்து கோயில்களில் பிரதிஷ்டை செய்யலாம்; ஆனால், ஒவ்வொருவரும் தம் அகத்தின் உச்சியில் கண்டடையும் கடவுளைப் போல் எதுவும் ஆகாது!

மேலும், ஒருவனது பசிக்கு இன்னொருவன் உண்ணமுடியாது! ஆகவே, எல்லோருக்கும் பொதுவான கடவுள் என்று எதுவும் இல்லை! உணர்ந்தறிபவனுக்கு மட்டுமே கடவுள் உண்டு! அறியப்படாத கடவுள்
இல்லாத நிஜம்!

ஒட்டுமொத்த விருட்சத்திற்கும் ஒரு விதை மூலமானது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால், அவ்விருட்சத்தின் எல்லாக் காய்களுக்கும் பொதுவான ஒரு வித்து எங்கேயுமில்லை! ஏனெனில், அவ்வித்துதானே தற்போது விருட்சமாக எழுந்துள்ளது! ஆம், ஒவ்வொரு காய்க்குமான வித்து
அதனுள்ளேயேதான் உள்ளது! ஆம், ஒவ்வொரு காயும் நன்றாக முற்றிக் கனியாகும் போது, தானும், மூலமும் ஒன்றாகிவிட்டிருப்பதை அறிந்துகொள்ளும்!

ஆக, உலகில் எத்தனை கோடி தனிமனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி மதங்கள் தேவை!
ஏனெனில், அத்தனை கோடி தனிமனிதர்களும் அத்தனை கோடி கடவுள்களாக கனிய வேண்டிய கடவுள் பிஞ்சுகள், காய்கள்!

மா.கணேசன் • 22-03-2018
............................................................................

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...