Tuesday, 2 October 2018

நிலையாமை அல்லது இரண்டாம் வெப்பச்சலன விதி



      இங்கிருந்து தப்ப எங்காவதொரு மூலையில் வழியிருந்தாக வேண்டும்
      என்று கோமாளி சொன்னான் திருடனிடம்!
           - பாப் டிலன் (Bob Dylan/ All Along the Watchtower)

பிரபஞ்சம் எனும் விருட்சம்


ஒரு மரம் போன்றதுதான் இப்பிரபஞ்சமும்! விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்? ஏனென்றால், நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்கிறோம்; நமது வாழ்க்கை இப்பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறது, அடுத்து. நாம் இப்பிரபஞ்சத்துள் இருக்கிறோம், வாழ்கிறோம் என்பதாலேயே, இப்பிரபஞ்சம் நன்மையானதாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணுவதிலும் தவறிருக்கமுடியாது! 

ஆனால், சில விஞ்ஞானிகள், "அப்படியொன்றும் நாம் விசேடமானவர்களோ, பிரத்யேகமானவர்களோ அல்ல!" என்கிறார்கள். ஆம், நம்மில் சில விஞ்ஞானிகளும், அறிவுஜீவிகளும், தத்துவவாதிகளும், பகுத்தறிவாளர்களும் நம்மைவிட பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கும், அதனுடைய பௌதிகவியல் விதிகளுக்கும் தான் முதன்மையிடமும், முன்னுரிமையும் தருபவர்களாக இருக்கிறார்கள்! இது மிகவும் துரதிட்டவசமானதாகும். ஏனெனில், பிரபஞ்சத்தை முதன்மையாகக் கொண்டு மனிதன் உள்பட பிற யாவற்றையும் இரண்டாம்பட்ச அம்சங்களாகக் காணும் இத்தகைய பார்வை அடிப்படையிலேயே தவறானதாகும்! அதாவது, நாம் இருக்கிறோம்; ஆகவே நாம் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயவும் அறியவும் விழைகிறோம்! இதன் மறுதலை உண்மை அல்ல (the converse is not true). நாம் இல்லாத நிலையில், பிரபஞ்சம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன?

அடுத்து, சிலர், "நாம் இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை, இன்னும் சொல்லப்போனால், இப்பிரபஞ்சத்திற்கு மையம் என்றும் ஏதும் இல்லை!" என்கிறார்கள். இக்கூற்றும் தவறானதே! அதாவது, வெகு காலமாக 'பூமியே பிரபஞ்சத்தின் மையம்' எனவும்; மேலும், 'சூரியனும், எல்லாக் கிரகங்களும், பூமியைச் சுற்றிவருகின்றன' எனவும் கருதப்பட்டுவந்தது. ஆனால், பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற இந்த புவி-மையக் கொள்கையை மாற்றி, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன (சூரிய-மையக் கொள்கை) என உலகிற்குக் காட்டியவர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்ற வானியல் அறிஞர். இது இவரது பெயரைக்கொண்டு, "கோப்பர்னிக்கஸின் புரட்சி" என்று வழங்கப்படுகிறது. ஆனால், நடைமுறை வானவியலுக்கு இவரது கொள்கை ஆற்றிய பங்களிப்பைத் தாண்டி வேறு மகத்தான புரட்சி எதையும் அது செய்திடவில்லை!

அதாவது, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு பற்றியும், வாழ்வியலுக்குரிய யாதொரு பெரிய புரிதலையும் அது அளித்திடவில்லை! பரந்து எல்லையில்லாமல் விரியும் இப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு ஓரத்திலுள்ள சூரியனைச் சுற்றிச் சுழலும் ஒன்பது கிரகங்களில் ஒன்றான பூமியில் நாம் இருக்கிறோம் என பரந்த-வெளியில் பூமிக்கிரகத்தின் அமைவை இட அளவில் (Spatially) குறித்துக்காட்டியது மட்டுமே "கோப்பர்னிக்கஸின் புரட்சி" செய்த சாதனையாகும். 

பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனையே சுற்றிவருகின்றன என்பது ஒரு வானியல் விபர உண்மை மட்டுமேயாகும். ஆனால், 'பூமியானது பிரபஞ்சத்தின் மையம் அல்ல' என்கிற விபர உண்மை எவ்வகையிலும் மனிதனின் மையத்துவத்தை (Centrality) அகற்றிடவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னும் விஞ்ஞானச் சமூகத்திற்கு வாய்க்கவில்லை! 

ஒருவகையில், விஞ்ஞானிகள் தற்போது மிகு-சிக்கல் (Complexity) நிகழ்வுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றாலும், மிகு-சிக்கல் நிகழ்வுமுறையானது எதை நோக்கிச் செல்கிறது என்பதை துல்லியமாக அறிந்தாரில்லை! ஒரு பரிணாம இயக்கம் என்றவகையில் பிரபஞ்சமானது மேன்மேலும் ஒருமைப்படுவதிலும் (Unification), தனி-மையப்படுவதிலும்  (Individualization) ஈடுபட்டுள்ளது! ஒரு உயிர்-ஜீவி என்பது யாதொரு பருப்பொருள் அமைப்பைவிடவும் மிகு-சிக்கல் வாய்ந்தது மட்டுமல்ல; அது மிகவும் ஒருமைப்படுத்தப்பட்டதும், தனி-மையப்படுத்தப்பட்டதுமான (Highly Unified and Individualized structure) ஒரு அமைப்பாகும்! அடுத்து ஒரு மனிதஜீவி என்பவன் ஒரு உயிர்-ஜீவியைவிடவும் மேலதிகமாக ஒருமைப்படுத்தப்பட்டவனும், தனி-மையப்படுத்தப்பட்டவனும்; யாவற்றுக்கும் மேலாக சுய-உணர்வு கொண்ட ஒரு விசேட அமைப்புமாவான்! அதாவது, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒவ்வொரு மனிதஜீவியையும் மையமெனக் கொண்டு குவிகின்றது எனலாம்! அதாவது, ஒரு விருட்சமானது தனது ஒவ்வொரு கனியையும் மையமாகக் கொள்வதைப்போல! ஒவ்வொரு மனிதனும் தனது முக்கியத்துவத்தை உணர்ந்தறியும் போது, அவன் பிரபஞ்சமளாவியவனாகிறான் (Universalized); அதே வேளையில், இவ்வழிமுறையில் பிரபஞ்சமானது தனி-மையப்படுகின்றது (Individualized)! இவ்வகையில், உண்மையில் பூமியானது தனது மையத்துவத்தை இழக்கவில்லையென்றே கொள்ளப்படவேண்டும்!

அதாவது, ஒரு மரத்தின் காய்கள் அம்மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டும் என்பதில்லை, அம்மரத்தின் எந்தப்பகுதியிலும் காய்க்கலாம்; அவ்வாறு எந்தப்பகுதியில் காய்த்தாலும் அக்காய்களின் மையத்துவமும், முக்கியத்துவமும் சிறிதும் மாறிவிடுவதில்லை. எவ்வொரு மரத்திற்கும் அதனுடைய காய்கள்/கனிகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், மரத்தின் ஒருமையும், முழுமையும் அதன் வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளில் தான் அடங்கியுள்ளன. அவ்வாறே, பிரபஞ்சத்தின் வித்துக்கள் மனிதர்கள் எனும் கனிகளில் தான் அடங்கியுள்ளன! ஆனால், மனிதர்கள் இன்னும் கனியாதவர்களாகவும், பெரும்பாலானவர்கள் கடைசிவரை (தம் வாழ்-காலம் முடியும் வரையிலும்) படும் பிஞ்சுகளாகவே தேக்கமுற்று மரணத்தில் உதிர்ந்துபோகின்றனர்!

அழிவதற்காகத் தோன்றியதல்ல பிரபஞ்சம்!


இப்போது நாம் வெப்பவியக்கவிசையியல் விதிகளைப் (Laws of Thermodynamics) பற்றிப் பார்ப்போம். இவ்விதிகளை நாம் எளிமையாக "வெப்பச்சலன விதிகள்" என்றும் அழைக்கலாம். முதலாம் வெப்பவியக்கவிசையியல் விதி, அல்லது வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது; மாறாக, சக்தியானது 
   ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றப்பட மட்டுமே முடியும். 
   ஆக, புதிதாக சக்தியானது உருவாக்கப்பட முடியாது என்பதால், பிரபஞ்சத்தின் 
   சக்தி எப்போதும் மாறாத அளவைக் கொண்டதாகவே இருக்கும்." 

சக்தி என்பது மிகவும் அடிப்படையானது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் சக்திதான் பருப் பொருளாக மாறுகிறது. பிரபஞ்சமாகவும், அதிலுள்ள அனைத்துமாகவும் ஆகிறது. சக்தி, பருப்பொருள் ஆகியவை குறித்து நாம் தொடக்கத்திலிருந்தே புரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இவை அடிப்படையான அம்சங்களே தவிர, எவ்வகையிலும் இறுதியானவையல்ல என்பதுதான். சக்தி என்பது காரியமாற்றுவதற்கான சக்தி மட்டுமே தவிர, அதற்கு யாதொரு திசையும், குறிக்கோளும், நோக்கமும் கிடையாது. பருப்பொருள் (Matter) என்பது சக்தியின் ஒரு மாறிய வடிவமே; மேலும் அது இப்பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருளே தவிர, 'பரம்பொருள்' அல்ல! ஆம், சக்தி, பருப்பொருள் ஆகியவை கருவி போன்றவை, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு, நோக்கத்திற்கு வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதற்கான ஊடகம் (Medium) போன்றவை. இவ்வாறே, இவற்றுக்கு அடிப்படையாக அமைந்த பௌதீகவியல் விதிகளும் பரிணாம விதிகளின் கருவிகளேயாகும்! ஆம், பரிணாம விதிகளே சக்தி, அல்லது பருப்பொருளானது என்ன செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் எனும் திசையையும், வழிமுறைகளையும் காட்டுகிறது!

அடுத்தது, இரண்டாம் வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றமடையும் 
   போது, அல்லது பருப்பொருளானது ஒரு மூடிய அமைப்பினுள் சுதந்திரமாக 
   இயங்கும்போது, (நாளடைவில்) அதனுடைய சீர்குலைவு (entropy)
   அதிகரிக்கிறது."

அதாவது, கணிதமேதையும், தத்துவவாதியுமான நார்பெர்ட் வீய்னர் (Norbert Wiener)அவர்கள்,  "(ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால்,) அதில் தோன்றிய எவ்வொரு பொருளும், நிகழ்வுமுறையும், (ஒட்டுமொத்த பிரபஞ்சமும்) இறுதியில் (நெடுங் காலப்போக்கில்) அழிந்துபோகும். அதில், ஒரு மனிதன் எவற்றையெல்லாம் மதிப்பு மிக்கதாகக் கருதுகிறானோ, வாழ்க்கை, செல்வம், சந்தோஷம், கலைப்பொருட்கள்; நாடுகள், நகரங்கள், சமூகங்கள், நாகரிகங்கள் - இன்னும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என யாவும் அழிந்துபோகும்! யாவும் கடைசிச் சிதைவுக்கும் அழிவுக்கும் உட்பட்டவையே, ஏனெனில், பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருளும் இந்த இரண்டாம் வெப்பச்சலன விதிக்கு உட்பட்டவையே!" எனக் கூறியுள்ளார்.

பிரபஞ்சத்தின் தலைவிதி கடைசியில் வெப்பச்சாவில் (heat death) முடிவதுதான் என்பதாக இந்த இரண்டாம் வெப்பச்சலன விதி சுட்டுகிறது. காலப்போக்கில், அனைத்து நட்சத்திரங்களும், உடுமண்டலங்களும் தமது எரிபொருளை எரித்துத் தீர்ந்த பிறகு, பிரபஞ்சம் மொத்தமும் தன் வெப்பத்தையிழந்து ஒரே சீரான வெப்ப நிலையை எட்டிவிடும்; அவ்வேளையில், யாதொரு உயிரும் பிரபஞ்சத்தில் வாழமுடியாது போகும்! 

ஆக, நமது வாழ்க்கை என்பது பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கும், அதன் முடிவு நிலைக்கும் நடுவே இடைப்பட்ட காலப் பகுதியில் நிகழும் ஒன்றாக அமைந்துள்ளது! அதாவது பிரபஞ்சம் தோன்றி கிட்டத்தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அவதரித்தோம்! அதேபோல, பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிவதற்கு பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்பாகவே நாமும், பிற உயிரினங்களும் இப்பிரபஞ்சத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிடுவோம் எனலாம்!

நாம் நாடகக் கலைஞர்களையும், பார்வையாளர்களையும் போல, நாடகம் தொடங்கும் போது மட்டுமே முறையே மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் தோன்றுகிறோம்! நாடக அரங்கம் (பிரபஞ்சம்) அமைக்கப்படும் போதும், நாடகம் முடிந்து அரங்கம் பிரிக்கப்படும் போதும் நாம் இருப்பதில்லை! எது முக்கியமெனில், நாடகம் நிகழ்கிறது என்பதும், நாடக-விதிகளை அறிந்து, அவற்றை முழுமையாக நிறைவேற்றி, நமது (பரிணாமப்) பாத்திரத்தை முறையாக உணர்ந்துசெயல்படுதல் மட்டுமே! 

இவ்வளவு ஏன்? மனிதனின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள்தான்! அதற்குள்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் 50 ஆண்டுகளோ, 60, அல்லது 70 ஆண்டுகளோ,    எவ்வளவு ஆண்டுகள் வாழ்வோம் என்பதை முன்னறிய முடியாத நிலையில், நாம் ஒவ்வொருவரும் விரைவாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை மரணத்துக்கு முன்னேயே முறையாக முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும்! 

மனித வாழ்-காலம்  வரையறைக்குட்பட்டதுதான். ஆனால், அது பொதுவாகப் பலரும் எண்ணுவது போல,  மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமானதற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது! இந்த வரையறைக்குள்ளாகவே நம்மால் முழுமையாக வாழவும், வாழ்வின் ஒப்பற்ற இலக்கை முயன்றடையவும் முடியும் என்பதால்தான் நமது வாழ்-காலம் இவ்வாறு மிகவும் கச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது

மேலும், மனித-உடலானது ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும்வகையில் உருவாக்கப்படவில்லை! ஏனெனில், "வாழ்க்கை" என்பது நீடித்து உயிர்-பிழைத்திருப்பது அல்ல! அவ்வாறு நீடித்து உயிர்-வாழ்வதுதான் வாழ்க்கை என்பதாயிருந்தால், இயற்கையாகவே ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கும் வகையில் நமது உடலானது வடிவமைக்கப்பட்டிருக்கும்! மேலும் ஆயிரம் ஆண்டுகள் நாம் நீடித்திருக்க முடியுமென்றாலும், நாம் என்ன செய்வோம்? வெறுமனே உண்டு, உறங்கி, இனம்பெருக்கி சகமனிதர்களோடு சண்டை சச்சரவிடும் கலக மானிடப்பூச்சிகளாக உழன்று கொண்டிருப்போம்!

ஆக, இரண்டாம் வெப்பச்சலன விதியை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் அழிவதற்காகத்தோன்றியதல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம்! அதாவது, பல நூறு கோடியாண்டுகளுக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிந்துவிடும் என்பதை நாம் இயல்பானதாக, அதாவது, நன்றாக, முழுமையாக அர்த்தபூர்வமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதன் மரணத்தில் முடிவதைப் போன்றே இயல்பானதாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ஏன், எந்த குறிக்கோளுக்காக இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதை முறையாகப் புரிந்துகொள்ளும்பட்சத்தில் முடிவு, இறப்பு என்பவை அழிவைக் குறிக்கும் சொற்களல்ல என்பதை நாம் புரிந்துகொள்வோம்!

அதாவது, பிரபஞ்சத்தின் பிறப்பு (ஆரம்பம்) என்பது ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வு என்றால், அதன் முடிவு என்பதும் ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வாகத்தான் அமைய முடியும்! மேலும், பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு குறிக்கோள், நோக்கம், அல்லது இலக்கு என்பது இருக்குமானால், அந்தக் குறிக்கோளை, இலக்கை அடைந்ததும் பிரபஞ்சம் முடிவிற்கு வந்துவிடுவது என்பது அழிவுகரமான விடயம் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரம் என்பதாகப் பார்ப்பதால், அவர்கள் பருப்பொருளையும், அதனை இயக்கும் பௌதீக விதிகளையுமே பிரதானமாகக் கொள்கின்றனர். உண்மையில், பிரபஞ்சத்தின் முடிவை, அதனுடைய பௌதிகத் தளத்தில் பௌதிக விதிகளின் சொற்களில் காண்பது, எதிர்பார்ப்பது தவறான புரிதலுக்குத்தான் இட்டுச் செல்வதாய் அமையும்! உண்மையில், பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றி, வெப்பச்சாவிலோ, அல்லது பெரும் உள்ளடர்தலிலோ (Big Crunch) முடிவடைவது கிடையாது! 

ஒரு விருட்சமானது ஒரு வித்திலிருந்து பிறந்து, வளர்ந்து, ஒரு கட்டத்தில் பூத்து, பிஞ்சுகள் விட்டு, பிஞ்சுகள் காய்களாகி, காய்கள் முற்றிக் கனிகளாகி, கனிகளுக்குள் இருக்கும் வித்துகளுக்குள் அடங்கி விடுகிறது! அதாவது, எவ்வொரு விருட்சமும் வித்தில் தொடங்கி வித்தில் (முழுமையடைந்து) முடிகிறது என்பதைப்போலவே, பிரபஞ்சம் எனும் விருட்சம் எத்தகைய வித்திலிருந்து தொடங்கியது (தோன்றியது) என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்! நாம் ஒரு விருட்சத்தின் வித்தைக் கணக்கிலேயே கொள்ளாமல், அவ்விருட்சத்தின் வேர்கள், அடிப்பகுதி, கிளைகள், இலைகள்; நீளம், அகலம், உயரம் ஆகியவற்றையும், அவற்றுக்கு அடியோட்டமான சில விதிகளையும் கொண்டு மட்டுமே புரிந்துகொள்வது அவ்விருட்சத்தை முழுமையாக, அதன் சாரத்தில் புரிந்து கொண்டதாக ஆகாது! ஏனெனில், ஒரு விருட்சத்தின் எல்லா பண்புகளையும், விதிகளையும் அறிந்தாலும், அதன் வித்தையும், வித்தின் பண்புகளையும், விதிகளையும் அறியாதிருப்பது அறிவீனமாகும்! அது சாரத்தை விலக்கி சக்கையைக் கொள்வதற்குச் சமமாகும்! 

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் உயிரியல் தளத்தையும், மனிதனை உள்ளடக்கிய அதிமுக்கியமான உணர்வியல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, பௌதிகத்தளத்தை மட்டுமே ஒட்டு மொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்; இது, ஒரு மரத்தின் பூக்களையும், காய்கள் மற்றும் கனிகளையும் விலக்கி வெறும் அடிமரத்தையும், கிளைகள், மற்றும் இலைகளையும் மட்டுமே மரம் எனக் காண்பதற்கு ஒப்பான மேலோட்டமான அணுகுமுறையாகும்! ஏனெனில், மரத்தின் அதிமுக்கியமான அம்சம் வித்து மட்டுமேயாகும். ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! விருட்சம் என்பது வித்தினைச் சுட்டும் ஒரு குறியீடு மாத்திரமே! மூல காரணமான வித்திற்கும், முடிவான விளைவாகக் கனியினுள் தோன்றும் வித்திற்கும் இடையேயான நிகழ்வுமுறையே (Phenomenon) விருட்சமாகும்! 

ஆம், பிரபஞ்சம் என்பது ஒரு விருட்சமானால் நாமே அதன் காய்களும், கனிகளும் போன்றவர்கள் ஆவோம்! ஒரு மரத்திற்கும், அதன் காய்களுக்கும் உள்ள உறவைப்போன்றதே பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள உறவும் ஆகும்! ஒரு மரத்திற்கு காய்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானவர்கள் பிரபஞ்சத்திற்கு மனிதஜீவிகள்! விஞ்ஞானிகள் கருதுவதுபோல, உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற, கிட்டத்தட்ட தேவையற்ற பக்கவாட்டு கிளைப்புகள் அல்ல! 

நாம் இப்பிரபஞ்சத்தில் தோன்றியிருக்கிறோம் என்பது ஒரு விபத்து அல்ல! மேலும், பிரபஞ்சத்தின் வரலாற்றை மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தால், திரும்பவும் நாம் தோன்றமாட்டோம் (ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, Stephen Jay Gould)என்பது போன்ற கூற்றுகள் அபத்தமானவை. ஏனெனில், விபத்தோ, இல்லையோ, நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை! இனி பிரபஞ்சமல்ல, நாம் இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியமானது; நம்மை இங்கு கொண்டுசேர்த்ததுடன் பிரபஞ்சத்தின் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது எனலாம். இனி நாம் தான் உணர்வுப்பூர்வமாக பிரபஞ்சம் விட்ட இடத்திலிருந்து பரிணாமத்தை அதன் இறுதியான இலக்கு நோக்கிக் கொண்டுசென்றாக வேண்டும்! 

பிரபஞ்சத்தின் எதிர்காலத்து விளைவுகளை, வளர்ச்சி நிலைகளை அதன் பௌதிகப் பரப்பில், விண்வெளியில் தொலைதூரத்தில் எங்கேயோ தேடிக்கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானதும், முறையற்றதுமாகும். ஏனென்றால், பிரபஞ்சம் என்பது வெறும் எந்திரத்தனமான பௌதிக (பொருளியல்) இயக்கம் அல்ல; பிரதானமாக அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும். பரிணாமரீதியாக, பிரபஞ்சமானது வெகு காலத்திற்கு முன்பே பௌதிகத் தளத்தை, அதாவது பொருளியல் தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்திற்குள் பிரவேசித்து, உயிரியல் தளத்தின் சாத்தியப்பாடுகள் அனைத்தையும் சோதித்து முடித்து, கடைசியாக, தற்போது உணர்வியல்-தளத்திற்குள் நுழைந்துள்ளது. இது, ஒரு மரம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் நிலையை ஒத்ததாகும்!  

ஆனால், விஞ்ஞானிகள் அனைவரும் ஏகோபித்த பார்வையில், பருப்பொருளாலான தளத்தை -- உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றையும்; அவற்றிற்கு அடிப்படையான கட்டுமானக் கூறுகளான அணுத்துகள்களையும்; மேலும்,  காலம், வெளி, நிறை, மற்றும் அடிப்படை விசைகளான ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை, அணுக்கருவின் வலுமிக்க விசை, வலுக்குறைந்த விசை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பைத்தான் மொத்தபிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்! ஆகவேதான் இவையனைத்தையும் நிர்வகிக்கும் அடியோட்டமான பௌதிகவியல் விதிகளை (The Laws of Physics) பிரதானமாகக் கொள்கிறார்கள்; கிட்டத்தட்ட அவர்கள் இவ்விதிகளை வழிபடுகிறார்கள் என்றே சொல்லலாம்!  

இல்லையென்றால், பருப்பொருளின் தளத்துக்குரிய இரண்டாம் வெப்பச்சலன விதி போன்ற ஒரு விதியைக் கொண்டு அவர்கள் பிரபஞ்சத்தின் தலைவிதியை மட்டுமல்லாமல் நம்முடைய தலைவிதியையும் சேர்த்தே எழுத எத்தனிப்பார்களா என்ன? இது எவ்வாறு உள்ளதென்றால், நாம் வசிக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டு நம்மையும், நமது வாழ்க்கையையும் வரையறுப்பது போலுள்ளது! 

முக்கியமாக, இரண்டாம் வெப்பச்சலன விதி என்பது பிரபஞ்சத்தின் பௌதிகத்தளத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விதி மாத்திரமே! இவ்விதியாயினும், பிற எவ்வொரு பௌதிக விதியாயினும், எதுவும் பரிணாம வழிமுறையை தீர்மானிக்க இயலாது! பௌதிகவிதிகள் யாவும் பருப்பொருள் தளத்தைக் கட்டுப்படுத்துவதற்கானவை மட்டுமே. பருப்பொருளானது ஒரு உயிர்-ஜீவியாக மாற்றமடையும் வழிமுறையில் இரண்டாம் வெப்பச் சலன விதி எத்தகைய பங்கு ஆற்றியுள்ளது? இறுதியில், இப்பிரபஞ்சத்தில் உயிர்-ஜீவிகள் உயிர்-பிழைத்திருக்க முடியாத நிலையை இந்த இரண்டாம் விதி தோற்றுவிக்கும் என்றால், முதலிடத்தில் உயிர் தோன்றுவதை ஏன் அந்த விதி தடுக்காமல் அனுமதித்தது?

பிரபஞ்சமானது அணுத்துகள் போன்ற மிக எளிய அமைப்பிலிருந்து ஒரு அமீபா போன்ற மிகு-சிக்கல் அமைப்பாகவும், மனித மூளை போன்ற அதி-சிக்கல் வாய்ந்த அமைப்பாகவும் தவிர்க்கவியலாத வகையில் வளர்ந்தெழும் வழிமுறையில் தனித்துவமான மிகு-சிக்கல் விதிகள் (laws of complexity)தோன்றி பரிணாமத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்கின்றன. இவ்வாறு, பரிணாமப் போக்கில், பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் தோன்றினாலும், அவ்விதிகள் பௌதிக விதிகளை மீறுவதில்லை; மாறாக அவற்றை நிறைவு செய்வதாகவே உள்ளன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறுவதிலிருந்து, அவர்கள் பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் இருந்தாலும் அவற்றை மதிப்பதில்லை, பெரிதாகக் கணக்கில் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்து பௌதிக விதிகளுக்கு விசுவாசமாக இருப்பதே விஞ்ஞான பூர்வமானது என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பதும், இவ்வழியே ஒருவகை விஞ்ஞானவாதம் (Scientism) விஞ்ஞானத்தைப் பீடித்து மட்டுப் படுத்துவதில் முடிகிறது என்பதையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் உணர்வதேயில்லை!

உண்மையில், உயிர்-தோன்றுவதற்குரிய அனைத்துச் சாதகமான நிலைமைகளுக்கும் பௌதிக விதிகள் வழியமைத்துக் கொடுத்தே அமைந்துள்ளன! இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? சிந்திகும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? ஒருவேளை, இப்பிரபஞ்சத்தில் உயிரும், மனித ஜீவியும் தோன்றவில்லை என்றால், அதாவது, பிரபஞ்சம் தரிசாகவே பல்லாயிரம் கோடி ஆண்டுகள் யாதொரு குறிக்கோளும், இலக்கும் இன்றி இயங்கி கடைசியில் இரண்டாம் வெப்பச் சலன விதியின்படி வெப்பச்சாவில் மாண்டு மறைந்துபோகும் என்றால், அந்த இரண்டாம் வெப்பச்சலன விதியின் முக்கியத்துவம் தான் என்ன? எது, அல்லது யார் அவ்விதியைப் பற்றி ஆராய்ந்துகொண்டும், போற்றிப் பாடிக்கொண்டும் இருப்பர்? 

நிலையாமை நிலையானதல்ல!


வித்தில் தொடங்கி வித்தில் முழுமைபெறும் நிகழ்வுமுறையின் சூட்சுமம் அறிந்தால், "நிலையாமை" என்ற பேச்சுக்கு இடமேது! தோன்றியவையனைத்தும் அழிந்துபோகும் என்பது தவறு! 

பிரபஞ்சம் முடிவிற்கு வரவேண்டுமானால், முழுமையடைய வேண்டும்! அது எக்குறிக்கோளுக்காத் தோன்றியதோ அக்குறிக்கோளை முழுமையாக எட்டியிருக்கவேண்டும்! அது எந்த மூலத்திலிருந்து வெடித்துத் தோன்றியதோ அந்த மூலத்தை எட்டும் வகையிலான நுட்பம் மிகுந்த ஒரு அமைப்பை கட்டமைத்தாக வேண்டும்! எவ்வாறு ஒரு விருட்சமானது எந்த வித்திலிருந்து தோன்றியதோ அதே போன்ற வித்துக்களை தனது கனிகளுக்குள் கட்டமைக்கிறதோ அவ்வாறு! பிரபஞ்சம் எதற்காகத் தோன்றியது என்பது தெரியாமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி மதிப்பையும், ஒரு பௌதிக விதியையும் (இரண்டாம் வெப்பச்சலன விதியையும்) கொண்டு இப்படித்தான் பிரபஞ்சம் முடிவிற்கு வரும் என்று கணிப்பது பொருத்தமற்றது!

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, கடைசியில் எவ்வாறு முடிவடையும் என்பதை அறிவதைவிட ஏன், எந்தக் குறிக்கோளுக்காகத் தோன்றியது என்பதை அறிவது அதிமுக்கியமானதாகும்! காலம், மற்றும் உலகம் பற்றிய உணர்வு தோன்றிய தொன்மைக் காலங்களில், "ஏன்", "எவ்வாறு", "எதிலிருந்து" உலகம் தோன்றியது என்ற கேள்விகளைப் பின்பற்றி இவ்வுலகில் தன்னையும், தனது வாழ்வையும் அர்த்தப்படுத்திடும்வகையில் எழுந்த உந்துதலில் புராணிகம் தோன்றியது! புராணிகங்களிலிருந்து ஒரு கிளை பிரிந்து மதங்கள் உருவாயின. மதங்கள் கடவுளை அனைத்துக்கும் காரண கர்த்தாவாகக் கொண்டதால் அனைத்துக் கேள்விகளும் தேடலும் முடிவிற்கு வந்துவிட்டன! இன்னொரு கிளை பிரிந்து தத்துவச் சிந்தனை பிறந்தது. அடுத்து மூன்றாவது கிளையாக, 'எவ்வாறு' என்ற கேள்வி முதன்மைபெற்றதன் வழியாக  விஞ்ஞானம் துளிர்த்தது; துளிர்த்ததோடு துரித வளர்ச்சி பெற்று, வெறும் 500 ஆண்டுகளில் கிட்டத்தட்ட தனது எல்லைகளைத் தொட்டும்விட்டன, ஆனால், அது தன் முடிவைத் தழுவிக்கொள்ள மனமில்லாமல் தத்தளித்துக்கொண்டு பற்பல கற்பனைக்கோட்பாடுகளைப் புனைந்துகொண்டுள்ளது! ஆம், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்ற வகையில் முடிவிற்கு வந்தே ஆகவேண்டும்! அதற்கு அது துணிவுடன் சில முடிவுகளை, உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்!

பிரபஞ்சமானது ஒரு பூடகமான "பெரு-வெடிப்பில்" (Big-Bang) தோன்றி, மேலும் பூடகமான தொரு "பெரும்-உள்ளடர்தலில்" (Big-Implosion) முடிவடைந்து போகும் அர்த்தமற்ற நிகழ்வுமுறை அல்ல! அதற்கு அது தோன்றாமலேயே இருந்திருக்கும்! மாறாக, அது நிரந்தரமற்ற நிலையிலிருந்து நிரந்தரத்துவம் நோக்கிச் செல்லும் அரிய நிகழ்வுமுறை ஆகும்! மிகவும் எளிமையான அணுத்துகள் என்ற நிலையில் தொடங்கிய பிரபஞ்சம், சுய-அமைப்பாக்கம் (Self-Organization)எனும் வழிமுறையின் வாயிலாக தன்னைத்தானே கட்டியெழுப்பிக்கொண்டு பருப்பொருள் நிலையிலிருந்து உயர் மாற்றம் பெற்று தனி-மையப்பட்ட (Individualized) மிகு-சிக்கல் (Complexity) அமைப்பான உயிர்ஜீவியாக எழுந்தது. பிறகு, வெறும் உயிர்-ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து, மேலும் மிகு-சிக்கலான அமைப்பான மூளையைக்கொண்ட,  சுய-உணர்வு பெற்ற, சிந்திக்கும் திறன்கொண்ட மனிதஜீவியாக அவதாரம் எடுத்தது! அடுத்து, சுய-உணர்விலிருந்து முழு-உணர்வு நிலையை அடைய இன்னும் ஒரு படிதான் உள்ளது! அதாவது, காய்கள் முற்றிக் கனிகளாக மாறுவது மட்டுமே இன்னும் நிகழவேண்டியுள்ளது! எல்லாக் காய்களும் முற்றிக் கனிகளாக ஆன பிறகு, மரம் பட்டுப்போனாலும் அதனால் பாதகம் ஒன்றுமில்லை!

இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? பிறகு மனித ஜீவிகள் எதற்கு? வெறுமனே சிறிது காலம் உயிர்-பிழைத்திருந்து பிறகு மரணத்தில் முடிந்துபோவதற்காக உருவானதா வாழ்க்கை? இல்லை, வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்த உன்னத நோக்கம் கொண்டது வாழ்க்கை! 

மனித வாழ்-காலம் வரையறைக்குட்பட்டதுதான் என்றாலும், அதற்குள்ளாகவே அடையப்படவேண்டிய பிரத்யேகமான, மகத்தான இலக்கு ஒன்று இருந்தாகவேண்டும்! அந்த இலக்கைக் கண்டடைவதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது! நெடிய ஆயுளுடன் குந்தித் தின்பதற்கும், உடுத்தி மகிழ்வதற்கும், உல்லாசமாக அவரவர் விருப்பப்படி இருப்பதற்குமான வாய்ப்பு அல்ல வாழ்க்கை! 
நிலையாமை என்பது உலக மெய்ம்மை பற்றிய உண்மையாகும். மனித ஆயுளுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சத்தின் ஆயுள் நெடியது என்றாலும் அது நிரந்தரமானதல்ல. அவ்வாறு நிரந்தரமாக நீடித்திருக்கும் வகையிலும் அது கட்டமைக்கப்படவில்லை! ஒரு வகையில், இச்செய்தியைத்தான் இரண்டாம் வெப்பச்சலன விதி உணர்த்தி நிற்கிறது எனலாம்!  

நிரந்தரத்துவம் என்பது தோற்றம், மறைவு; ஆரம்பம், முடிவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது! நாம் இந்த உலகில் முளைத்திருக்கலாம்; ஆனால், நாம் ஒவ்வொருவரும் சென்று சேர வேண்டிய உலகம் காலாதீதம்! அது ஒரு ஒப்பற்ற உணர்வு நிலையாகும்! ஒரு கணம் அதை உணர்ந்து அனுபவம் கொள்வதென்பது அனந்த காலத்திற்கு வாழ்ந்ததற்குச் சமமானது மட்டுமல்ல, அது, முக்தி, மோட்சம், வீடுபேறு எனும் இறவா நிலையை, அதாவது, நிரந்தரத்துவத்தைச் சேர்வதுமாகும்!

இந்த உலகம் (பிரபஞ்சம்) நிரந்தரமற்றது என்பதன் அர்த்தம் 'நிரந்தரமானது' என்று எதுவும் இல்லை என்பதல்ல! நிரந்தரமற்ற மெய்ம்மையாகிய இந்த உலகம் இங்கிருக்க முடியுமெனில், நிச்சயம் நிரந்தர மெய்ம்மை என்ற ஒன்றும் இருந்தாகவேண்டும்! அவ்வாறில்லாவிடில், யாதொரு அடிப்படையும், மூலமும் இன்றி, நிரந்தரமற்ற இந்த உலக-மெய்ம்மை எவ்வாறு எதிலிருந்து தோன்றியிருக்கமுடியும்? 

■ 

மா.கணேசன் / நெய்வேலி / 25-09-2018
--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...