இக்கட்டுரை எழுதப்பட்டதற்கான காரணம்:
ஆன்மீகம், ஞானம் என்கிற போர்வைகளில்
சில தனி நபர்களும், குழுக்களும், அமைப்புகளும்,
ஆசிரமங்களும் மக்களை மனோவசியப்படுத்தியும்,
மூளைச் சலவை செய்தும் - முடிவில்
சாதாரணமாக லௌகீகத்திலும் இல்லாமலும்
செம்மையாக ஆன்மீகத்திலும் இல்லாமலும் செய்து
மக்களை அவர்களது சொந்த மனத்திற்குள்ளேயே
ஒருவகைப் பிரமையில் சிறைப்படுத்தப்படுவது
நிகழ்ந்தேறி வருகிறது.
சிலர் ஆன்மீகத்தை பெரும் வியாபாரமாகவே
மாற்றிவிட்டனர் - யாதொரு முதலீடும் இல்லாமலேயே!
சிலர் 'உடனடி காப்பி' போல 'உடனடி ஞானம்' எனவும்
'எளிதான ஞானம்' எனவும் சொல்லி ஞானமடைதலை
ஒரு சில சூத்திரங்களுக்குள் அடைத்து - சிந்திக்கின்ற
ஒரு சிலரையும் சிந்திக்க விடாமல் சிதறடித்து
முடமாக்கி வருகின்றனர். ஆக, இத்தகைய அஞ்ஞானப்
போக்குகளையும் ஆன்மீக விரோதப் போக்குகளையும்
இனம் காட்டி எச்சரிக்கும் வகையிலேயே இக்கட்டுரை
எழுதப்பட்டுள்ளது. இவ்வகையிலேயே இக்கட்டுரையின்
முக்கியத்துவம் எழுகிறது.
///////*\\\\\\\
ஞானமடைதலை எவரும் எவருக்காகவும் எளிதாக்கிடவும் முடியாது;
அதை மேலும் கடினமானதாகவும் ஆக்கிட முடியாது.
\./
/\
ஞானமடைதலை 'எளிது' 'கடினம்' என்கிற சொற்களின் வழியே அணுக முடியாது. அது எளிதாக இருந்திருந்தால் நம்மைச் சுற்றிலும் ஏராளமானோர் ஞானிகளாக மலர்ந்திருக்க வேண்டுமே - அவ்வாறு இல்லையே? அது கடினமானது என்றால் இதுவரை ஒருவருமே ஞானமடைந்திருக்க முடியாதல்லவா? ஆனால், நம்மில் கோடியில் ஓரிருவர் ஞானமடையவே செய்கிறார்கள். ஏனெனில், கோடியில் ஓரிருவர் மட்டுமே சிந்திக்கிறவர்களாக, வாழ்க்கையின் உட்-பொருளைத் தேடுபவர்களாக, தமது உணர்வுக்கு விழித்தவர்களாக உள்ளனர். பிற அனைவரும் வாழ்க்கையின் மேற்புறத்துப் பொருட்களைத் தேடிக்கொண்டு எலிகளையும், தவளைகளையும் போல் வாழ்ந்து செல்கிறோம்.
முதலிடத்தில், "ஞான நிலை" அல்லது "ஞானமடைதல்" என்பது உள்ளதுதான் - என்றாலும் அந்நிலையை நேரடியாக அணுகவோ, அடையவோ இயலாது. எதையோ ஒன்றை பயிற்சி செய்வதன் வழியாகவோ, யாதொரு யுக்தியாலோ ஞானத்தைப் பெற முடியாது.
ஏனெனில், ஞான நிலையை அடைவதற்குரிய அடிப்படை, நோக்கம், காரணம், தேவை, அகத் தூண்டுதல், ஆகியவை எல்லோரிடமும் இயல்பாய் அமைந்திருப்பதில்லை. அதோடு, அது இயல்பான விடயமோ; மிக இயல்பாக தாமே எழக்கூடிய ஒன்றோ, அல்ல! ஞானமடைதல் என்பது ஒருவரது இயல்பில், அமைப்பில், இயல்பாய் எழாத, ஒருவரது இயல்பை மீறிய -மிகக் குறிப்பானதும், பிரத்தியேகமானதுமான ஒரு அழைப்பு அல்லது தேவைக்கான பிரத்தியேகமான ஒரு பதில் (அளிப்பு) ஆகும்.
"'ஞானமடைதல்' என்பது உயரியதொரு ஆன்மீக அனுபவம், அது மிக அழகானதொரு நிலை, அதை அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும்; நினைத்த காரியங்களை சாதிக்கக்கூடிய ஆற்றல் கைகூடும் . . . ." என்றெல்லாம் பிறரிடமிருந்து, ஞானம் பற்றி தவறாகத் தெரிந்துகொண்டு, உடனே, "எனக்கும் ஞானம் வேண்டும்!" என பேராசைப்பட்டு ஏதாவதொரு ஆன்மீக அமைப்பில், மார்க்கத்தில் சேர்ந்து கோண்டு ஏதேதோ பயிற்சிகளையெல்லாம் செய்துவருவதால் வந்திடாது.
மேலும், உணவுப்பழக்கத்தை மாற்றியமைப்பதாலும், உடையலங்காரத்தை மாற்றிக்கொள்வதாலும், கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வதாலும், பலவித குட்டிக்கரணப் பயிற்சிகளையும், வினோதப் பெயர்களைக் கொண்ட மூச்சுப் பயிற்சிகளையெல்லாம் செய்து வருவதால் ஞானம் வந்திடாது.
மேலும், சமூகத்தின் பார்வையில் 'நல்லவர்' என ஒருவர் பெயரெடுத்தாலும், அல்லது கெட்டுப்போனாலும் ஞானம் வராது! ஒருவரிடம் எல்லா சௌகரிய சம்பத்துக்களும், செல்வமும் உள்ளன; அதோடு சேர்த்துக் கொள்ள ஞானமும் வேண்டும் என விரும்பினாலும், என்ன விலை கொடுத்தாலும் ஞானம் கிடைக்காது. அல்லது உலகியல் வாழ்வில் தோல்வி கண்ட ஒருவர் புகலிடம் தேடியும், ஞானத்திற்கு, அல்லது ஆன்மீகத்திற்குச் செல்ல முடியாது.
உங்களது சொந்த வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகள், கவலைகள் இருக்கலாம். ஆக, கவலைகளுக்கெல்லாம் தீர்வாக நீங்கள் ஞானத்தை விரட்டிச் செல்ல முடியாது. வாழ்க்கைக்கு நீங்கள் அளிக்க வேண்டிய முறையான பதிலளிப்பைச் செய்யாமல், வாழ்க்கை என்றால் என்னவென்று ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் - புரிதலின் வழிச் செல்லாமல் ஞானத்தின் வாலைக் கூட பிடிக்க முடியாது.
உங்களுடைய கனவுகளும், எதிர்பார்ப்புகளும், பேராசைகளும், நிறைவேறாததால் வாழ்க்கை உங்களுக்கு வெறுத்துப் போயிருக்கலாம்! நீங்கள் விரக்தியடைந்திடலாம். ஆனால், வாழ்க்கையின் எதிர்பார்ப்பையும், அதன் அசலான நோக்கத்தையும் சிறிதும் கவனியாமல் வாழ்ந்து சென்றால் வெறுப்பும், விரக்தியும் தான் விளையுமே தவிர ஞானம் விளையாது!
முதலில், ஆன்மீக நாட்டம், ஞானத் தாகம் என்பது ஒவ்வொருவரின் உள்ளிருந்து தோன்றிட வேண்டும், இதன் அர்த்தம், ஒவ்வொருவருக்குள்ளும் ஆன்மீக நாட்டத்தை தூண்டுவதற்கான மையம் (தூங்கிக்கொண்டு ) உள்ளது; அதைதட்டி எழுப்பினால் போதும் என்பதல்ல. ஏனென்றால். பசி, தாகம், பாலுணர்வு, உறக்கம் ஆகியவற்றைத் தூண்டுவதற்கு உணர்த்துவதற்கு வெவ்வேறு மையங்கள் உள்ளதைப் போல ஆன்மீக நாட்டத்தை, ஞானத் தாகத்தை, மெய்ம்மைத் தேடலை தூண்டுவதற்கு யாதொரு மையமும் மனிதனுள் இல்லை!
ஆம், வாழ்க்கையின் அர்த்தம், உண்மை, மெய்ம்மை ஆகியவற்றைத் தேடும்படியாகத் தூண்டுவதற்கான மையம் ஏதும் இல்லாத நிலையில் ஒருவர் அவற்றைத் தேடுகிறார் எனும் பட்சத்தில் உடனே அவருள் (அவரது உணர்வில்) புதிதாக ஒரு "மையம்" உருவாகிறது. ஆனால், அந்த மையம் தொடர்ந்து தக்கவைக்கப் பட வேண்டும். அதற்கு அவர் உண்மையை, மெய்ம்மையை அறிந்திடுகிற விசாரத்தில் தீவிரமாகவும், பேரார்வத்துடனும், முழுமையாகவும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு புதிதாகத் தோன்றிடுகிற அந்த மையத்தை நீங்கள் ஆன்மா, கடவுள், பிரபஞ்ச உணர்வு, முழு-உணர்வு, இறுதி மெய்ம்மை . . . . என்றெல்லாம் அழைக்கலாம்.
இவ்வாறு யாதொரு தூண்டுதலும், தூண்டுதலுக்கான மையமோ எதுவும் இல்லாமலேயே வாழ்க்கையின் உட்-பொருளான அர்த்தத்தை, உண்மையைத் தேடுவதற்கு பெயர்தான் "விழிப்பு" அல்லது "உணர்வுக்கு வருதல்" என்பதெல்லாம்.
ஒரு வேளை, தூண்டுதல் எதுவும் இல்லாததன் காரணத்தினாலேயே நீங்கள் உணர்வுக்கு வரவில்லை; விழிப்படையவில்லை என போலியாக வருத்தப்பட வேண்டாம்! உங்களுக்கு தூண்டுதல்கள் வேண்டுமெனில், உங்களைச் சுற்றியுள்ள - இயற்கை, செம்மண் பூமி, நீர் நிலைகள், நீல வானம், சூரிய உதயம், பறவைகளின் பாடல், பசும் மரங்கள், வண்ணப் பூக்கள், இளந்தென்றல், இரவு நட்சத்திரங்கள், நிலா . . . . என இவை யாவும் நீங்கள் விழிப்பதற்குப் போதுமான தூண்டுதல்கள் தான்! ஏன், உங்களது இருப்பே - "நீங்கள் இருக்கிறீர்கள்!" என்பதே விழிப்பதற்கும், உணர்வுக்கு வருவதற்குமான பிரதான அம்சமாகும்!
ஆனால், மனித ஜீவிகளாகிய நாம் இன்னமும் தூண்டுதல்களுக்குப் பதிலளிக்கும் விலங்கு ஜீவிகளாகவே விளங்குகிறோம் - இன்னமும் நாம் உணர்வுக்கு வரவில்லை! நமக்கு உணர்வு இருக்கிறது; அது பரிணாம இயற்கை நமக்களித்த பரிசு! ஏதாவதொரு வகையில், நமக்கு உணர்வு உள்ளது என்பதை நாம் உணரவே செய்கிறோம் - அதை, அந்த உணர்வை புற விவகாரங்களில் செலுத்தி (மேலோட்டமான) பயன்களை அடையவும் செய்கிறோம்; ஆனால், நாம் "ஒரு உணர்வு தான்!" என்கிற உணர்வுக்கு மட்டும் இன்னமும் வரவில்லை! அதாவது, "உணர்வுதான் மனிதன்!" என்கிற உண்மைக்கு இன்னும் நாம் விழிக்கவேயில்லை!
உண்மையில், ஞானம் ஞானமடைதல் யாவும் மனிதன் உணர்வுக்கு வருவதையே சார்ந்திருக்கின்றன. வேறு சொற்களில் சொன்னால், இருப்பிற்கு மனிதன் அளிக்கின்ற முழுமையான பதிலளிப்பின் விளைவே ஞானம், ஞானமடைதல் ஆகும்! இருப்பிற்கு முறையாக, முழுமையாக பதிலளிக்காமல் நேரடியாக ஒருபோதும் ஞானத்தை அணுகவோ, அடையவோ முடியாது!
மனித ஜீவிகள் புற-இருப்பு (இயற்கை, உலகம்) நோக்கி மட்டும் விழித்தால் போதாது. இந்த விழிப்பை நாம் "புற-விழிப்பு" அல்லது "முதல்-விழிப்பு" என்றழைக்கலாம். இந்த முதல் விழிப்பையடுத்து மனிதன் உடனடியாக தனது சொந்த இருப்பு நோக்கியும் விழித்தாக வேண்டும். இதை நாம் "அக-விழிப்பு" அல்லது "இரண்டாவது விழிப்பு" என்றழைக்கலாம். இந்த இரண்டாவது விழிப்பு தான் மனிதனை மனிதனாக்கும் விழிப்பு ஆகும்.
தொடர்ந்து, இருப்பிற்கு எவ்வாறு முறையாகவும், முழுமையாகவும் பதிலளிப்பது என்பதைப் பற்றி பார்ப்பதற்கு முன் ஞானமடைதல் என்பதன் பொருள் விளக்கத்தைப் பார்ப்போம். ஆம், ஞானம் ஞானமடைதல் என்பது மிகவும் நேரடியாக புரிதலுடன் தொடர்புடையதாகும். ஆக, ஞானமடைதல் என்பது ஞானத்தை, புரிதல் நிலையைக் குறிப்பதாகும். புரிதல் எனும்போது அது எதைப் பற்றிய புரிதல் எனக்கேட்டால், அது வாழ்க்கையைப் பற்றிய புரிதலே. வாழ்க்கையை அதன் சாரத்தில் புரிந்து கொள்ளும் நிலையே ஞான நிலை அல்லது ஞானமடைதல் என்பதாகும்.
ஆனால், புரிதல் என்பது 'இரண்டும் இரண்டும் நான்கு' என்பதைப் போன்ற கணிதவகைப் புரிதல் அல்ல. அது மிகவும் மேலோட்டமானது. அதாவது கணிதவியல் புரிதலைக் கொண்டு நாம் பலவகைப்பட்ட தொழில்நுட்பப் பயன்களைப் பெறலாமே தவிர கணிதவியல் புரிதலோ, அல்லது விஞ்ஞானவகை, தத்துவ வகை, மற்றும் கவிதை வகைப் புரிதலோ எதுவும் மனித-உணர்வை (உயர்)மாற்றமுறச் செய்திடாது. ஆம், புரிதலிலும் படிநிலைகள் உள்ளன. ஆனால், நாம் இங்கு சொல்கிற வகையில், வாழ்க்கையை அதன் சாரத்தில் புரிந்துகொள்கிற வழிமுறையில் மனிதனின் உணர்வானது மாபெரும் மாற்றத்திற்கு உட்படுவதாகிறது. அதாவது, ஞானம் என்பது நேரடியாக புரிதலுடன் தொடர்பு கொண்டதாயுள்ளது. அதே வேளையில், புரிதல் என்பது நேரடியாக உணர்வின் படிநிலைகளுடன் தொடர்பு கொண்டதாயுள்ளது. ஆம், உணர்வு இல்லாமல், புரிதல், அறிவு என்பதில்லை. உணர்வின் வெவ்வேறு தளங்கள் அல்லது படிநிலைகள் வெவ்வேறு தரத்திலான புரிதலைத் தருகின்றன.
நாம் குறிப்பிடும் ஞானம் என்பது இறுதிநிலைப் புரிதலாகும். இந்த இறுதியான அல்லது சாரமான புரிதலை உயரிய உணர்வு நிலை மட்டுமே அளிக்க முடியும். ஆம், ஞானமடைதல் என்பது உண்மையில் இறுதியான முழு-உணர்வு நிலையை அடைதலே. மனித ஜீவிகளான நமக்கு பரிணாம இயற்கை அளித்துள்ள உணர்வானது மிக மெல்லிய ஆரம்ப நிலை உணர்வு மட்டுமே. இந்த சிற்றுணர்வைக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக, "நான்", "நான்" என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உலவி வருவதைத்தவிர, இந்த "நான்" என்பது எத்தகைய மெய்ம்மை, அது எத்தகைய பரிணாம உச்சத்தை, முழுமையை அடையக்கூடும் என்பதை ஒரு சில ஞானிகளைத்தவிர பிற மனிதர்கள் அடைந்தபாடில்லை. அந்தத் திசையில் சிறிதும் நாம் சிந்திக்கவும் இல்லை.
ஆகவேதான், மனிதன் இயல்பாகப் பெற்றுள்ள இந்த அரையுணர்வை அல்லது சிற்றுணர்வை "அகந்தை உணர்வு" என்கிறோம். ஆயினும், இந்த அகந்தை-உணர்வும் இல்லையெனில், மனிதன் ஒரு எலியைப் போலவோ, தவளையைப் போலவோ தான் இருப்பான். ஒரு வகையில், உணர்வு இருந்தும் நம்மில் பெரும்பாலான மனிதர்கள் இன்னமும் எலியையும் தவளையையும் போலத் தான் வெறுமனே உயிர்- பிழைத்தலை நடத்திச் செல்கிறோம்.
ஏனெனில், நாம் உயிரோடிருக்கிறோம் என்பதை மட்டுமே நன்கு அறிகிறோம், உணர்கிறோம். ஆகவே, தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னென்ன வெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்கிறோம். ஆனால், "நாம் எதற்காக உயிர் வாழ்கிறோம்?" "வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு யாது? வாழ்க்கை என்றால் என்ன? . . ." என்றெல்லாம் நம்முள் கேட்பதில்லை, சிந்திப்பதில்லை. ஆனால், வாழ்க்கை என்றால் என்னவென்று அறியாமலேயே வாழ்ந்து செல்வதும், மரணம் என்றால் என்னவென்று அறியாமலேயே மாண்டு போவதும், விலங்கினத்துக்குரிய விதியாகும். உணர்வுள்ள மனிதர்கள் இவ்வாறு வாழ்ந்து செல்லலாகாது என்பதை உணருவதேயில்லை. இந்நிலையில் நம்மில் பலர் ஞானமடைதலைப்பற்றி பேசுகிறோம், கனவு காண்கிறோம்.
சிலர், 'எளிய ஞானம்', 'உடனடி ஞானம்' என்றெல்லாம் தத்துப்பித்து என்று உளறிக்கொண்டு புத்தர், ரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தி . . . . போன்ற உண்மையான ஞானாசிரியர்களையெல்லாம் குறை கூறி, கொச்சைப்படுத்தி வருகின்றனர். ஞானமடைதலை ஒரு ஒற்றை யுக்தியின் மூலம் சாதித்துவிடலாம் எனவும் பிதற்றி வருகின்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி ஞானத்தை குறுக்குவழியில் யாதொரு பயிற்சியாலோ, யுக்தியாலோ அணுகவோ, அடையவோ முடியாது. அதற்கு யாதொரு வழியுமில்லை. மாறாக, வாழ்க்கை என்றால் என்ன என்று தனக்குள்ளேயே கேட்பதற்குரிய "விழிப்பு" எப்போது ஒருவருள் துளிர்க்கிறதோ அப்போது அக்கேள்வியுடன் தொடரும் இடையறாத விசாரத்துடன் மட்டுமே அசலான மனித வாழ்க்கையும், உண்மையான ஆன்மீக நாட்டமும், ஞானத் தேடலும், ஞானமடைதலும் தொடங்குகின்றன. அதற்கு முன்னர் ஒருபோதும் வேறு வழிகளில் தொடங்குவதில்லை!
புரிதல்தான் வாழ்க்கை, ஞானம் எல்லாம்; குறிப்பாக, 'வாழ்க்கை என்றால் என்ன' என்று புரிந்து கொள்வதுதான் வாழ்க்கை என்பது பலருக்கு பெரிதும் வினோதமாகத் தோன்றலாம்! ஆனால், அதில் வினோதமும் இல்லை; விபரீதமும் இல்லை! எலி, தவளை வேண்டுமானால், தமது வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் வாழ முடியும்! ஆனால், சிந்திக்கும் திறன் கொண்ட மனத்தை, மூளையைக் கொண்ட மனிதன் தனது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் எப்படி மனிதத் தரத்திற்குரிய வாழ்க்கையை வாழ முடியும்? ஆக, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பதுடன் தான் உண்மையான ஆன்மீக நாட்டம், ஞானத் தேடல் யாவும் தொடங்குகின்றன. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டு நேரடியாக ஞானத்தைத் தேட முடியாது. அப்படியொரு ஞானம் வாழ்க்கைக்கு வெளியேயோ, வேறெங்கேயோ எதுவுமில்லை.
வாழ்க்கை பற்றிய கேள்வி - நோய், மூப்பு, மரணம் ஆகியன பற்றிய கேள்விகள் புத்தருக்குள் எழுந்ததனாலேயே அவர் அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையையும், அதனுடைய சூழலையும் சேர்த்தே உதறிவிட்டு (துறந்துவிட்டு அல்ல!) வாழ்க்கை எனும் புதிரை விடுவிக்கும் பொருட்டு காட்டிற்குச் சென்றார். வாழ்க்கை பற்றிய கேள்வி இல்லாமல், புத்தரும் இல்லை; அவருடைய ஞானமும், நிர்வாணமும் இல்லை!
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் செயல்பாடு தான் உண்மையான வாழ்தல் ஆகும். இதற்குமாறான பிற நடைமுறை விவகாரங்கள், பிற நாட்டங்கள், சொந்த லட்சியங்கள், இலக்குகள் யாவும் உயிர்-பிழைத்தல் எனும் கோளத்தை மட்டுமே சேர்ந்தவை. ஏனெனில், வாழ்க்கை என்பது உணவு, உடை, உறையுள் மற்றும் உறவுகள் குறித்த விவகாரங்கள் அல்ல. அது ஒரு அற்புதப் புதிர், அப்புதிரை விடுவிப்பதே உண்மையான வாழ்தலும், வாழ்க்கையின் மிக அசலான உன்னத இலக்கும் யாவும் ஆகும்.
இப்போது, இருப்பிற்கு (வாழ்க்கைக்கு) எவ்வாறு முறையாக, முழுமையாக பதிலளிப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.
பொதுவாக, நாம் அனைவரும் மிக இயல்பாக பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்பூக்கிகளுக்கு பதிலளிப்பதையே வாழ்க்கை என நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளோம். பிரதானமாக, இயல்பூக்கிகளின் வழியாக மட்டுமே இருப்பை, வாழ்க்கையை அணுகி வந்துள்ளோம். "அப்படியானால், நாம் நமது சிந்திக்கும் திறனை, அறிவை பயன்படுத்தவேயில்லையா? என சிலர் கூக்குரலிடலாம்! இதற்குப் பதில், பயன்படுத்தியுள்ளோம், இன்னும் பயன்படுத்தியும் வருகிறோம். ஆனால், மேலே குறிப்பிட்ட (விலங்கினங்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான) இயல்பூக்கிகளின் வாழ்க்கைக்குச் சேவை புரியும் விதத்தில் மட்டுமே நாம் நமது அறிவை, சிந்தனையை பயன்படுத்திவருகிறோமே தவிர வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ளும் விடயத்தில் பயன்படுத்துவதேயில்லை.
நமக்குப் பசிக்கிறது, உணவு உட்கொள்கிறோம். இவ்வாறு, உணவு, உடை, உறையுள் ஆகியவற்றைப் பெறுவதற்காக உழைக்கிறோம், உத்தியோகத்தை தேடுகிறோம். உத்தியோகத்திற்காக உயர் பதவிக்காக, உயர் சம்பளத்திற்காக உயர் கல்வி கற்கிறோம். சக-மனிதர்களுடன் கடுமையாக போட்டியிடுகிறோம். . . . பாலுணர்வு தோன்றியதும், இணையைத் தேடி உறவு கொள்கிறோம். உறக்கம் வந்ததும், அதற்கிணங்கி உறங்கிவிடுகிறோம். உறங்கி எழுந்ததும், மீண்டும் அதே சுற்றுத்தான் தினம் தினம். இவ்வாறு இயல்பூக்கிகளுக்கு பதிலளிப்பது என்பதே இருப்பிற்கு (வாழ்க்கைக்கு) அளிக்கிற முழுமையான பதிலளிப்பாகிவிடாது.
ஏனெனில், நாம் விலங்கு ஜீவிகள் அல்ல - இயல்பூக்கிகளின் வழியாக மட்டுமே வாழ்க்கையை அணுகுவதற்கும், பதிலளிப்பதற்கும். நம்மிடம் சிந்திக்கும் திறனுள்ள மூளையும், மனமும் உள்ளது. முக்கியமாக, " நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்!" என்று சொல்லுகிற உள்-அமைந்த சுயவுணர்வு நமக்கு உள்ளது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ( நமது பசிக்கு உணவு உட்கொள்வது போல) வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்திடவும், ஆழமாகப் புரிந்து கொள்ளவும், உணர்வுப்பூர்வமாக வளர்ந்திடவும் (பரிணமித்திடவும்) வேண்டும். ஆக, இவ்வாறு அறிதல், புரிதல் செயல்பாட்டின் வழியாக அதற்குரிய சிந்தனை, அறிவு ஆகிய கருவிகளைக்கொண்டு வாழ்க்கையை அறிதல் பூர்வமாக (Cognitive)அணுகுவதே வாழ்க்கைக்கு, இருப்பிற்கு முறையாக பதிலளித்தல் என்பதாகும். இதை புரிதல் வழி, அல்லது விசார வழி என்கிறோம்.
இந்தப் புரிதல் பூர்வமான அணுகுமுறையை, பதிலளிப்பை ஒதுக்கிவிட்டு வெகுபலர் செய்வதுபோல தியானம், யோகா, பிரணாயாமா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம், ஞானத்தைப் பெற முடியும் என்றால், எலிகளும், தவளைகளும் கூட இப்பயிற்சிகளின் மூலம், ஞானத்தை அடைந்துவிடக்கூடும் எனலாம். ஆனால், அறிதல் பூர்வமான, புரிதல் பூர்வமான அணுகுமுறையில்லாமல் எலிகள், தவளைகள் மட்டுமல்ல, மனிதர்களும் ஞானமடைய இயலாது.
ஆனால், இருப்பிற்கு (வாழ்க்கைக்கு) பதிலளித்தல் எனும் விடயத்தில் இருப்பு அல்லது வாழ்க்கையானது மனிதனிடமிருந்து அப்படி எதை பதிலாகக் கோருகிறது என்றால், உணர்வைத்தான் -இன்னும் சொல்லப் போனால், முழு-உணர்வைத் தான் அது கோருகிறது. ஏனெனில், முழு-உணர்வு தான் பிரபஞ்ச இருப்பு எனும் மாபெரும் பரிணாம இயக்கத்தின் முழுமையும், அடைவிடமும் ஆகும்.
பரிணாம இயற்கை அல்லது இருப்பானது மனிதனுக்கு சிற்றுணர்வை அளித்துள்ளதன் உண்மையான நோக்கம் 'சிற்றுணர்வு' எனும் சிறிய மீனைப் போட்டு, 'பேருணர்வு' அல்லது 'முழு-உணர்வு' எனும் பெரிய திமிங்கிலத்தை எட்டிப்பிடிப்பதற்கே!
ஆக, மனித ஜீவியானவன் முதல் நிலையில், இயல்பூக்கிகள் அல்லது புலன்களின் வழியாக பதிலளிப்பதுடன் நில்லாமல், இரண்டாவது கட்டமாக, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் நோக்கில் மனம், சிந்தனை, அறிவு ஆகிய கருவிகளைக் கொண்டு பதிலளிப்பதுடன்; மூன்றாவது கட்டமாக ஒருவர் தமது இருப்பை, "தாம் இருக்கிறோம்!" எனும் நிஜத்தை, வெகு சுலபமாக எடுத்துக்கொண்டு உடனேயே உயிர்-இருப்பின் அன்றாடத் தேவைகளைத் தேடிச் செல்வதையே வாழ்க்கை எனக் கொண்டுவிடாமல், "தாம் இருக்கிறோம்!" எனும் நிஜத்தை, சுய-உணர்வை மிக ஆழமாக உணர்வு கொள்வதையே இருப்பிற்கு முழுமையாக பதிலளிப்பது எனக் குறிப்பிடுகிறோம்.
இவ்வாறு, ஒருவர் "தாம் இருக்கிறோம்!" எனும் அற்புதப் புதிரை நின்று நிதானித்து தரிசிப்பாரெனில், அதன் தொடர்ச்சியாக அவர் தமது உணர்வின் கருவிகளான மனம், சிந்தனை, அறிவு ஆகியவற்றைக்கொண்டு வெறுமனே வாழ்க்கையின் அன்றாட மேற்புறத் தேவைகளை (உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை) மட்டுமே தேடிக் கொண்டிராமல், வாழ்க்கையின் உட்-பொருளையும் (வாழ்க்கையின் அர்த்தம், சாரமான உண்மை, குறிக்கோள், இலக்கு ஆகியவற்றையும்) தீவிரமாகத் தேடத் தொடங்கிடுவார். இவ்வகையில், அறிதலும், உணர்வும் இணைந்து செல்வதாகின்றன. அதாவது, இருப்பிற்கு முழுமையாக பதிலளித்தல் என்பதும்; வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்து கொள்வதும் இன்னும் ஞானமடைதல் என்பதும் ஒன்றே.
ஆம், இவ்வழியிலல்லாமல், வேறு எவ்வழியாகவும் எவரும் ஞானமடைய இயலாது. அதில், 'வாழ்க்கை' என்றால் என்னவென்று புரிந்து கொள்வதற்கு, முதலில் ஒருவர் வாழ்க்கையை நேரே காணவும் - அதாவது தேவைகளின், சூழ் நிலைமைகளின், நிகழ்வுகளின் வழியாக அல்லாமல் காணவும் - இவைகளைக் கடந்து வாழ்க்கையுடன் பொருந்தவும் (தொடர்பு கொள்ளவும்) வேண்டும். இவை வெறுமனே புலன்களின் வழியாக மட்டுமேயல்லாமல் உணர்வின் வழியாக, உணர்வு பூர்வமாக நிகழ்த்திடல் வேண்டும்.
வாழ்க்கையை நேரே காணுதல் என்றால் வாழ்க்கையைப் பற்றிய யாதொரு இடையீடும் - யாதொரு கோட்பாடும், நனவிலிரீதியான சாய்வும், தெரிவும், கருத்தும், கற்பனையான சித்திரமும், தத்துவமும், முன் முடிவும் எதுவுமில்லாமல் காணுதலே.
இந்தக் காணுதலையே இன்னும் ஆழமாக்கிக் காணும் போது, அதாவது ஒருவர் தனது இருப்பிற்கு "தாம் இருக்கிறோம்" எனும் நிஜத்திற்கு முழுமையாக - தனது உட்பொதிவின் உள்ளாழத்திலிருந்து - தன்னைத் திறப்பாரெனில், விழிப்பாரெனில், அந்நிஜம் ஒரு மாபெரும் அற்புதமாக - பொங்கி வழியும் அனுபவமாக - இருப்பை தரிசிக்க முடியும்.
ஒருவர் தனது இருப்பை ஒரு அற்புதமாக உணரவில்லையெனில், மிகவும் முக்கியமான, பொக்கிஷம் போன்ற ஒன்றை அவர் இழந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வேறு எதைக்கொண்டும் அல்லது இன்னும் எல்லாவற்றையும் கொண்டும் ஈடு செய்ய முடியாத அரிய பொக்கிஷத்தை அவர் தனது கவனக் குறைவினால் (உணர்வுக் குறைவினால்) கண்டும் காணாமல், உணர்ந்தும் உணராமல், கடந்து சென்று விட்டார் - அவர் இழந்தது எதை என்பதைக் கண்டுபிடிப்பதற்குள் அவரது ஆயுள் முடிந்தே விடும். மேலும், எவரும் அது பற்றி எடுத்துச் சொல்லாமல், அவரால் ஒரு போதும், அதைக் கண்டுபிடிக்க இயலாது. எடுத்துச் சொல்லியும் அதை அவர் கண்டு பிடிக்க இயலாமல் போய் விடலாம். அவ்வாறு, அவர் இழந்தது, கண்டுபிடிக்கத் தவறியது, உணரத் தவறியது - ஒட்டு மொத்த இருப்பின் மலர்ச்சியான; இருப்பும் உணர்வும் ஒன்றாகிப் போன முழு-உணர்வு எனும் முழுமையான இருப்பாகிய "வாழ்க்கை' யைத் தான்.
வாழ்க்கை, முடிவும் முழுமையான வாழ்க்கை என்பது புறத்தே எங்கும் இல்லை. புற இருப்பிற்கு அக இருப்பாகிய (மனித) உணர்வு தரும் முழுமையான பதிலளிப்பில் அகம், புறம் ( இரண்டும் ஒன்றாகி) இரண்டையும் கடந்து வெளிப்படுவது தான் விழிப்பு நிலை, ஞான நிலை, பிரம்மம், கடவுள், முக்தி, மோட்சம், காலாதீதம், நித்திய ஜீவன், ஆன்மா, மற்றும் ஆல்ஃபாவும் ஒமேகாவுமான "முழு-உணர்வு" எனும் (பெரு வெடிப்புக்கு முந்தைய) மூல மெய்ம்மையும், ஒவ்வொரு மனிதனும் அடையக்கூடிய அடைந்தாக வேண்டிய, இறுதி மெய்ம்மையும், முழுமையான வாழ்க்கையும் ஆகும்.
ஆக, வாழ்க்கையை நேரே காணுதல் அல்லது தரிசித்தல் என்பதற்கு வேறு பெயர்கள் தான் "விழிப்படைதல்", "உணர்வுக்கு வருதல்" எல்லாம். இன்னும் துல்லியமாகச் சொன்னால், வாழ்க்கை என்பதும் உணர்வுக்கு வருதல் என்பதும் ஒன்றுதான்.
ஏனெனில், மனித ஜீவியைப் பொறுத்தவரையில், உணர்வில்லையெனில் (மனிதத் தரத்துக்குரிய) வாழ்க்கையே இல்லை. உணர்வில்லாத வாழ்க்கை தவளையின் தரத்திற்கு கீழிறங்கி வெறும் உயிர்-இருப்பாக மட்டுமே விளங்கிடும். இன்னும் தவளையின் நிலைக்கும் கீழே இறங்கினால், அது ஒரு கல் அல்லது பாறையின் வெறும் சட-இருப்பாகச் சுருங்கிவிடும். மிகவும் உணர்வுக் குறைவான - கிட்டத்தட்ட உணர்வற்ற - இருப்பு சடப் பொருட்களின் இருப்பே!
பரிணாமம் என்பது உணர்வுப் பரிணாமமே. பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வே. உண்மையில் இருப்புதான் இருப்பை (தன்னைத்தானே) உணர்வு கொள்வதாக ஆகிறது. ஆனால், உணர்வு கொள்ள, உணர்வு வேண்டும். ஆகவேதான், சட-இருப்பாகத் தோன்றிய பௌதீக அணுத்துகள்களின் பிரபஞ்சம் உயிர்- இருப்பு எனும் புலன்-உணர்வாக, விலங்கு ஜீவியினுள் வெளிப்பட்டது. அதையடுத்து, மனிதனுள் மனமாக - புறத்தை மட்டுமல்லாமல் தன்னைத்தானே உணர்வு கொள்ளும் சுய-உணர்வாக இருப்பானது உயர்ந்துள்ளது.
ஆனால், விலங்கியல்புகளிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில் மனித ஜீவிகளோ தம்மைத் தாமே உணர்வு கொள்ளாமல் வாழ்க்கையை புறத்தே ஏதேதோ பொருட்களில் மதிப்பீடுகளில் தேடிக்கொண்டுள்ளனர். அதில் சில அதிபுத்திசாலிகள் வாழ்க்கை என்றால் என்னவென்ற கேள்வியே இல்லாமலும், வாழ்க்கையை புரிந்து கொள்ளும் தேவையையும் உணராமல் நேரடியாக ஞானத்தைத் தேடிக்கொண்டுள்ளனர்.
ஆக, யாதொரு தெளிவும் உண்மையான தேடலும் இல்லாத இந்நிலைமையில் ஆயிரத்தெட்டு ஆன்மீக அமைப்புகள், ஆசிரமங்கள், பாதைகள், குழம்பிய குட்டையை மேலும் குழப்பிட நெடுந்தாடியுடன் 'ஞானிகள்' என்ற பெயரில் வியாபாரிகள், தாறுமாறான தத்துவங்கள், வழிகாட்டல்கள்!
ஞானத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லும் பள்ளிகள் (ஆசிரமங்கள்) பலவகைப்பட்டவையாக இருந்தாலும், அவைகளை நாம் மூன்று வகைகளில் அடக்கி விடலாம்.
முதலாவது, புராதனமானது, பாரம்பரியமானது; அதை நாம் "சக்தி வழிப் பள்ளி" (Energetic School) எனக் குறிப்பிடலாம். ஆன்மீகத்தின் உச்சமான ஞான நிலையை அடைவதற்கு 'சக்தி' வேண்டும் என்கிறது இப்பள்ளி. ஆகவே இப்பள்ளிகள் குண்டலினிச் சக்தியை கீழிருந்து மேலேற்றுதலுக்கான பயிற்சிகளையும், தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவைகளையும் வழிகளாகக் காட்டுகின்றன, சொல்லித் தருகின்றன.
ஆனால், ஞானமடைவதற்கு பெரிதாக சக்தி எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அக-மாற்றம் அல்லது உணர்வு-நிலை மாற்றத்திற்கு பிரத்தியேகமாக சக்தி எதுவும் தேவையில்லை. ஏனெனில், உணர்விலேயே சக்தி இணைந்திருக்கிறது. எது முக்கியத் தேவையெனில், வாழ்க்கை எனும் புதிரை அவ்வளவு தீவிரமாக நேசிப்பதும், அப்புதிரை விடுவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்கிற பேரார்வம் மட்டுமேயாகும். ஏனெனில், பேரார்வம் தான் மூல மெய்ம்மையின் சாரமும், அனைத்து சக்திகளின் ஊற்றுக் கண்ணும் ஆகும்.
இரண்டாவது வகைப் பள்ளியை நாம் "யுக்தி வழிப் பள்ளி" (Tactical School) எனலாம். சக்தி-வழிப் பள்ளிகள் ஞானத்தை அடைய சக்தியை மையமாகக் கொண்டு தவறான முனை அல்லது தொடங்குபுள்ளியிலிருந்து - அதாவது, உடலைக்கொண்டு - பயிற்சி செய்வதாயுள்ளன என்றால், இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்த யுக்தி வழிப் பள்ளிகள், ஞானத்தை யாதொரு அடிப்படையும் இல்லாமல், அடித்தளமும் இல்லாமல் குறுக்கு வழியில் ஞானத்தை எட்டும் முயற்சியாக சில மனோவியல் யுக்திகளை போதிக்கின்றன.
ஞானமடைதலை ஒரு மனோவியல் பிரச்சினையாகச் சுருக்கி - அதாவது கவலைகளற்று இருப்பதுதான் ஞான-நிலை எனவும், சுய-முரண்பாடற்ற, போராட்டமில்லாத, இன்பங்களைத் தக்கவைக்க முயற்சிக்காத, துன்பங்களை அப்புறப் படுத்த முயற்சிக்காத மனதைப் பெறுதல் எனவும் சொல்லி, ஆகவே உங்கள் தேடலை, (தேடுவதை) நிறுத்தி விடுங்கள் - அகத் தளவில் நாம் செய்வதற்கோ, அடைவதற்கோ எதுவும் இல்லை எனப் புரிந்து கொள்வதுதான் ஞானம் எனவும்; ஞானமடைதல் எனப்படுவது மிக 'எளிதான', 'சாதாரண' விடயம், 'நீங்களும் ஞானியாகலாம்!' இந்த பாணியைப் பின்பற்றி ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோர் ஞானமடைந்துவிட்டனர். . . . என்றெல்லாம் கூசாமல் விளம்பரம் செய்துவருகின்றனர்.
அதாவது, ஏற்கனவே தவறான நோக்கங்களுக்காக, தவறான தேடல்களிலும், பாதைகளிலும் பயணித்து வந்த போலியான ஆன்மீக நாட்டம் கொண்டவர்களை - இந்த யுக்தி வழியானது தடுத்து (அவர்களது தவறான தேடுதல்களை நிறுத்தி) ஆட்கொண்டுவிட்ட நிலையில் உடனேயே அவர்கள் அனைவரும் ஓரிரவிற்குள்ளாகவே ஞானப்பழங்களாகி விட்டதான பிரமையில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால், உண்மையில் இனிமேல் தான் அவர்களுடைய உண்மையான ஆன்மீக நாட்டமும், ஞானத் தேடலும் சரியான திசையில் தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால், மனிதர்களை உளவியல் ரீதியாக மீண்டும் ஆதிமனிதர்களாக - தாம் இருப்பது தெரியாமல் இருக்கின்ற 'உணர்வற்ற இருப்பு' நிலைக்குத் திரும்பச்செல்ல வைப்பதல்ல அசலான ஆன்மீகம். இது அகந்தை நிலைக்கும் முந்தைய (Pre-Personal State),அதாவது, ஆதி-மனிதனின் நிலையாகும். மாறாக, உண்மையான ஆன்மீகம் என்பது அகந்தை-நிலைக்குப் பிந்தைய, அதாவது அகந்தை-நிலையைக் கடந்த ( Trans-Personal State)உணர்வு நிலையை அடைவதேயாகும்.
மூன்றாவது பள்ளி, ஞானத்திற்கு மிகச் சரியான வழியை (வழியற்ற வழியை) காட்டுகிற இப் பள்ளியை நாம் "புரிதல்-வழி"ப் பள்ளி ( Cognitive School)எனலாம். இப்பள்ளியானது முதல் இரண்டு பள்ளிகளான சக்திப் பள்ளி, மற்றும் யுக்தி வழிப் பள்ளிகளிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. புத்தர், இயேசு, ரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, போன்றவர்கள் இப்பள்ளியின் முன்னோடிகள். அதே வேளையில், இவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏராளமானவர்களாய் இருந்தாலும், இவர்களது உபதேசங்களை, தத்துவங்களை புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே! ஏனெனில் அவை அவ்வளவு எளிதானதல்ல. ஆகவேதான், உலகில் பலவகைப்பட்ட புத்த மதங்களும், கிறிஸ்துவ மதப் பிரிவுகளும் மலிந்து காணப்படுகின்றன - புத்த-உணர்வு அடைந்தவர்களும், கிறிஸ்து- உணர்வு அடைந்தவர்களும் மிக அரிதாகவே காணப்படுகின்றனர்.
ஒரு சிறுவனைப் பார்த்து அவனிடம் நீயும் ஒரு இளைஞனாக, நன்கு வளர்ந்த மனிதனாக ஆகலாம் என்று சொல்வதைப் போல அபத்தமானது மனிதர்களைப் பார்த்து அவர்களிடம் 'நீங்களும் ஞானியாகலாம்' என்று சொல்வது! மனித ஜீவியாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஞானியாக மலரவேண்டியது ஒவ்வொருவரது விருப்பத்தையோ, தெரிவையோ பொறுத்த விடயமல்ல. மாறாக, அது ஒவ்வொருவரின் பரிணாமக் கடமையாகும். ஏனெனில், ஞானமடைதல் என்பது மனித வாழ்வின் இலக்கும் முழுமையும் மாத்திரமல்ல - அதுவே அர்த்தபூர்வமாக வாழும் வழியும், மனிதத் தரத்திற்குரிய வாழ்தலும் ஆகும்.
ஆனால், ஒரு சிறுவன் பிரத்யேகமாக எதுவும் செய்யாமலேயே - இறுதிவரை உணர்வுக்கு வராமலேயே- ஒரு வாலிபனாகவும், பிறகு வளர்ந்த மனிதனாகவும் ஆகிடுவதைப் போல எவரும் தாமே, தானியங்கித் தனமாகவோ, அல்லது தமது விருப்பத்தின் விளைவாகவோ, நெடிய பயிற்சியின் மூலமாகவோ, அல்லது 'உடனடிக் காப்பி' ( Instant Coffee) போல யாதொரு யுக்தியின் மூலமாகவோ ஞானியாகிட முடியாது.
ஞானமடைதல் என்பது ஆனந்தத்தைத் தேடுவதோ உங்களது துன்பங்கள், கவலைகளுக்கெல்லாம் தீர்வு தருவதோ, வாழ்க்கையிடமிருந்து தப்பியோடுபவர்களின் புகலிடமோ, அல்லது வாழ்க்கையென நீங்கள் கருதுகின்ற உணவு, உடை, உறையுள் மற்றும் உறவுகள் குறித்த விவகாரங்களில் உழல்வதன் மூலமாக கண்டடையக்கூடிய விடயமோ அல்ல.
ஞானம் என்றால் புரிதல், குறிப்பாக வாழ்க்கை பற்றிய புரிதல். ஆகவே வாழ்க்கைக்கு வெளியே தனியே யாதொரு ஞானமும் இல்லை. இன்னும் வாழ்க்கை என பொதுவாக நீங்கள் வாழ்ந்து வருகிற விவகாரங்களிலும் அது இல்லை. வாழ்க்கையை, அதன் அர்த்தம், குறிக்கோள், நோக்கம், இலக்கு என முழுமையாகப் புரிந்து கொள்ளுதலில் மட்டுமே ஞானம் அடங்கியுள்ளது.
"வாழ்க்கை என்றால் என்ன?" என்பது வெறும் அறிவு ஜீவியக் கேள்வி (Intellectual Question) அல்ல. மாறாக, இக்கேள்வியைக் கேட்பதற்குரிய அடிப்படை விழிப்பும், அவ்விழிப்பின் உணர்வும் தான் ஞானத்திற்கான திறவுகோல் ஆகும். இந்த விழிப்பும், உணர்வும் இல்லாத நிலையில் வாழ்க்கை பற்றிய கேள்வி, 'நாய் பெற்ற தெங்கம் பழம்' போன்றது தான்!
இக்கேள்வியைக் கேட்பதற்குரிய அடிப்படை விழிப்பு உங்களுக்குள் துளிர்த்துவிட்டால், அதன்பிறகு நீங்கள் ஞானமடைவதை எந்தச் சக்தியும் தடுக்கமுடியாது! மேலும் ஞானத்தைத் தேடி, நீங்கள் ஆசிரமம் ஆசிரமமாய் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு வெளியே எந்த ஞானியையும், ஆசானையும் தேட வேண்டாம், நாட வேண்டாம்.
அதேவேளையில், இக்கேள்வியைக் கேட்பதற்குரிய ஆதாரமான விழிப்பு உங்களுக்குள் துளிர்க்கவில்லை எனும் பட்சத்தில், அதற்கு ஒரேயொரு மாற்று வழி மட்டுமேயுள்ளது. அது, " வாழ்க்கை என்றால் என்ன?" எனும் கேள்வியை எழுப்பி, உங்களுக்குள் ஆழத்தில் படியச்செய்து, தீவிரமாகவும், சிரத்தையோடும், பேரார்வத்தோடும் வாழ்க்கை பற்றிச் சிந்திப்பது, விசாரத்தில் ஈடுபடுவது மட்டுமே அந்த மாற்று வழி!
இவ்விடத்தில், ஒரு முக்கியக் குறிப்பைச் சொல்ல வேண்டும், "சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த ஞானி" என ஆன்மீக உளவியல் மேதையான, கென் வில்பர் (Ken Wilber) அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட ஶ்ரீ ரமண மகரிஷி அவர்கள், "நான் யார்?" என ஆத்ம விசாரம் செய்யச் சொன்னார். ஆனால், இக்கட்டுரையின் ஆசிரியரோ, "வாழ்க்கை என்றால் என்ன?" என்று வாழ்க்கை விசாரம் செய்யச் சொல்கிறார் என்பதில் எந்த முரண்பாடும், அதிகப்பிரசங்கித்தனமும் இல்லை! உண்மையில், "நான் யார்?" எனும் விசாரம் ஶ்ரீ ரமணர் காலத்திற்கு மட்டுமல்லாமல், இனி வரும் எல்லா காலத்திற்கும் பொருந்துகிற, தவிர்க்கவியலாத, மையமான கேள்வியும் விசாரமும் ஆகும். ஒருவர் எந்த அடிப்படைக் கேள்வியின் வழியாகச் சென்றாலும், "நான் யார்?" எனும் கேள்வியைச் சந்திக்காமல் ஞானத்தின் நுழைவாயிலை எட்டமுடியாது!
ஆக, "நான் யார்?" எனும் கேள்வி மிகவும் மையமானது என்பதைப்போல, "வாழ்க்கை என்றால் என்ன?" எனும் கேள்வி மிகவும் அடிப்படையானது ஆகும். அதாவது, வாழ்க்கை விசாரத்தின் வழியாகச் சென்றாலும், ஒரு கட்டத்தில், "நான் யார்?" எனும் விசாரத்தை ஏதாவதொரு வடிவத்தில் மேற்கொள்வது தவறாமல் நிகழ்ந்தேறிடும்!
ஆனால், திடீரென முளைத்து தமிழ் நாட்டில் தலையெடுத்து வரும் அதிமேதாவி ஒருவர், "ரமணருடைய "நான் யார்?" விசாரத்தின் வழியே ரமணரே கூட ஞானமடைந்திருக்க முடியாது!" என்பதாகச் சொல்லியும், தனது புத்தகங்களில் எழுதியும், ரமண வழியைக் கொச்சைப்படுத்துவதன் வாயிலாக தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் கயமைத்தனம் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இத்தகைய போலி ஆசாமிகளையும், அவர்களது வழிகாட்டல்களையும் குறித்து வாசகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.
முக்கியமாக, ஞானமடைதலுக்கு யாதொரு எளிய வழியும், குறுக்கு வழியும், யுக்தியும், தந்திரமும், மந்திரமும், கிடையாது. அசலான ஆன்மீகமும், ஞானமடைதலும் ஒவ்வொருவரது விழிப்பைச் சார்ந்தவையாகும். ஆகவே, மன-இயக்கத்தையோ, அல்லது எண்ண ஓட்டத்தையோ, அல்லது வேறு எதையுமோ, தடையின்றி 'ஏற்று அனுமதித்தல்' என்பதாயினும், 'மறுப்பற்று இருத்தல்' என்பதாயினும், அல்லது வேறு யாதொரு யுக்தியாயினும், இவை எதுவுமே விழிப்பைக்கொண்டு வராது! ஏனெனில், விழிப்பை எவ்வகையிலும் பயிற்சி செய்ய முடியாது. அல்லது உங்களது மன- இயக்கத்தில் 'சிறு மாற்றம்' செய்வதன் வழியாகவும் விழிப்பு ஏற்படாது!
விழிப்பு பற்றிய ஒரு விசேடமான அம்சம் என்னவெனில், விழிப்பைத்தவிர விழிப்புக்கு மாற்றாக வேறெதுவுமில்லை என்பதே!
விழிப்பு என்பது காரணம், விளைவு எனும் சங்கிலித் தொடரின் இன்னுமொரு நிகழ்வு அல்ல. மாறாக, அது, அச்சங்கிலித்தொடரின், மற்றும், அனைத்துவித இயக்கங்கள், பிரவாகங்களின் முடிவைக் கோருகின்ற அற்புத மலர்வாகும்!
■
மா.கணேசன்/ நெய்வேலி // Conceived earlier and completed on 01.07.2013/ Uploaded on 27-09-2024
////////.\\\\\\\\.////////.\\\\\\\.////////.\\\\\\\\.////////.\\\\\\\.////////.\\\\\\\\