பரிணாமப் பார்வையிலமைந்த புதிய விளக்கம்
<*>
உங்களிடம் உணர்வுத்துடிப்பு இல்லையெனில்
இவ்வரிகளனைத்தும் அர்த்தமற்ற வெற்றுச் சொற்களே!
<*>
இருப்பின் தரிசனம் என்பது இருப்பு தன்னைத்தானே தரிசிப்பது என்பதையும், இருப்பின் விசேடமான பகுதியான மனிதன் தனது உணர்வைக்கொண்டு இருப்பைத் தரிசிப்பது என்பதையும் குறிக்கிறது.
மனிதன் ஏன் இருப்பை தரிசிக்க வேண்டும்? ஏனெனில், மனிதனிடம் உணர்வு இருக்கிறது - இன்னும் துல்லியமாகச் சொன்னால், மனிதன் உணர்வாகவே இருக்கிறான்! ஆகவே, இருப்பை தரிசிப்பது அவனது தலையாய பரிணாமக் கடமையாகும். அவன் ஒரு தவளையைப் போல உணர்வற்ற ஜீவியாக இருந்தால் அவனுக்கு இருப்பை தரிசிக்க வேண்டிய அவசியமிராது.
மேலும், இருப்பைத் தரிசிப்பதன் வழியாக மட்டுமே மனிதன் உண்மையிலேயே மனிதனாக ஆகவும், தனது பரிணாம வாழ்க்கையின் ஒப்பற்ற இலக்கையும், முழுமையையும் அடைய முடியும்.
இருப்பை மனிதன் தரிசிப்பதும், இருப்பு தம்மைத்தாமே தரிசிப்பதும் ஒன்றே! இருப்பு ஏன் தம்மைத்தாமே தரிசிக்க வேண்டும்? ஏனெனில், அது இருப்பின் உள்ளார்ந்த பரிணாம வளர்ச்சி விதியின் தவிர்க்க இயலாத பரிணாம அவசியமாகும்.
இருப்பு, அதை இயற்கை, உலகம், பிரபஞ்சம் என எப்படி அழைத்தாலும் அது தன்னில் முழுமையான பூரணமானதொரு நிஜமோ, மெய்ம்மையோ அல்ல. இருப்பு என்பது ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையும், இயக்கமுமாகும். இருப்பும், பரிணாமமும் பிரிக்கமுடியாதவை.
ஆக, இருப்பு என்பது ஒரு பரிணாம இயக்கமாக இருப்பதால் அதற்கென ஒரு பிரத்தியேக இலக்கும் உள்ளது. அதை நோக்கியே அது பரிணமிக்கிறது. இயக்கம், அது எவ்வகை இயக்கமாயினும் இலக்கில்லாமல் இயங்க முடியாது.
பிரபஞ்ச இருப்பு முதன்முதலில் பெருவெடிப்பில் தோன்றிய போது, வெறும் பௌதீக சட-இருப்பாக, அடிப்படை அணுத்துகள்களாக ( Fundamental Particles) மட்டுமே தமது பரிணாமப் பயணத்தைத் தொடங்கிற்று. இவ்வாறு தொடங்கிய சட-இருப்பு தொடர்ந்து அவ்வாறே தமது சடத் தன்மையிலேயே முடிவில்லாமல் நீடிக்கலாகாது. அத்தகைய இருப்பு அர்த்தமற்றது. அவ்வாறு நீடிக்க முடிந்திருந்தால் இருப்பைப் பற்றிப் பேசுவதற்கு இருப்பின் பகுதியாக இன்று நாம் இங்கிருக்க இயலாது!
இருப்பு தம்மைத்தாமே தரிசிக்கவும், உணர்வு கொள்ளவும், ஒரு வழியாக, ஒரு ஊடகமாகத்தான் அது உணர்வுடன் கூடிய ஜீவியாக, மனிதனை உருவாக்கியது. இதையே துல்லியமாகச் சொன்னால், இருப்பு தம்மைத்தாமே உணர்வு கொள்வதற்காக, மனித ஜீவியாக, அவனுள் உணர்வாக உருவாகியது.
மனித ஜீவி என்பவன் உணர்வாகிய ஜீவியாக இருப்பதால், அவனே இருப்பின் மிக விசேடமான பகுதியாகவும் (அங்கமாகவும்); மிக முக்கியமாக, இருப்பின் மிகப் பிரத்தியேகமான பிரதிநிதியாகவும்; இருப்பின் ஒரே நம்பிக்கையாகவும் விளங்குகிறான். ஏனெனில், இனி பரிணாமத்தை அதன் ஒப்பற்ற இலக்கு நோக்கி உணர்வுபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மாபெரும் பொறுப்பு அவன் கையிலேயே (உணர்விலேயே) உள்ளது.
ஆம், உணர்வுள்ள மனித ஜீவியின் வரவுடன் பழைய, இயற்கையான, நனவிலி ரீதியாக நிகழ்ந்தேறிய நெடிய பரிணாம வழிமுறை முடிவிற்கு வந்துவிட்டது. இந்த முக்கியமான வேறுபாட்டை சரியாக நாம் புரிந்துகொள்ளாவிட்டால் பரிணாமம் எனும் நிகழ்வுமுறையை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. பரிணாமத்தைப் புரிந்துகொள்ளாமல் நாமும் நமது வாழ்க்கையின் உண்மையான இலக்கை, முழுமையை அறியவும், அடையவும் முடியாது. இனி பரிணாமம் தமது பழைய இயல்பான வழிமுறையில் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. அதாவது, எந்திரத்தனமாக, உணர்வற்ற ரீதியில் தொடரமுடியாது.
சரி, இப்போது இருப்பின் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களைப் பார்ப்போம். இருப்பு என்றால் என்ன? இருப்பவை அனைத்தும் இருப்பே. எனினும் இருப்பவை அனைத்தும் ஒரே படித்தானதாக, ஒரே தன்மையில் அமைந்ததாக இருக்கவில்லை!
ஒரு கல், அல்லது பாறை இருக்கிறது; அதுவும் இருப்புதான். ஆனால், அதை பண்பு ரீதியாகக் குறிப்பிடும்போது, "சட-இருப்பு" (Material Existence) என்பதாகவே வரையறுத்தாக வேண்டும்.
அடுத்து ஒரு புழு, பூச்சி, தவளை இருக்கிறது. இவையும் இருப்புதான். பண்பு ரீதியாக இவற்றை நாம் "உயிர்-இருப்பு" எனக் குறிப்பிட்டாக வேண்டும்.
அடுத்து மனிதன் இருக்கிறான். மனிதன் பரிணாம வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தை, மிகவும் திருப்புமுனையானதொரு இருப்பு நிலையைப் பிரதிநிதித்துவம் செய்பவனாக இருக்கிறான். இதற்குக் காரணம் மனிதனின் "சுய-உணர்வு" தான். ஆக பண்பு ரீதியாக மனிதனுடன் தொடங்கும் இருப்பை நாம் "உணர்வு-இருப்பு" எனக் கொள்ள வேண்டும். ஆம், (பிரபஞ்ச) இருப்பானது மனிதனின் ( = உணர்வு) வழியாக தம்மை உணர்வு கொள்கிற (தரிசிக்கிற) கட்டத்தை எட்டியுள்ளது.
விஞ்ஞானப் பரிணாமக் கோட்பாடானது, மனிதன் எவ்வாறு, எதிலிருந்து தோன்றினான் என்பதற்குரிய மேலோட்டமான ஒரு விளக்கத்தை உருவாக்கியதுடன் தனது பரிணாம ஆய்வு முடிந்துவிட்டதாகக் கருதுகிறது! ஆனால், பரிணாமம் என்பது உயிரியல் தளத்திற்கு மட்டுமே உரியது அல்ல. அது உயிர் தோன்றுவதற்கு முன்னிருந்தே பொருளியல் பரிணாமமாக, முதல் அணுக்கள் தோன்றியதிலிருந்தே தொடங்கி செயல்பட்டு வந்துள்ளது. தற்போது, அது உயிரியல் தளத்தைக் கடந்து, மனிதனின் உணர்வைக்கொண்டு உணர்வியல் தளத்திற்குள் பிரவேசித்துள்ளது.
இனி பரிணாமம் என்பது உணர்வியல் தளத்திலேயே செயல்பட்டு உணர்வின் முழுமையை அடைவதுடன் நிறைவெய்த இருக்கிறது. இந்த உணர்வியல் தளத்துப் பரிணாமம் உணர்வுள்ள, இன்னும் துல்லியமாகச் சொன்னால், "தாம் ஒரு உணர்வுதான்!" என்கிற உணர்வுக்கு வந்திட்ட ஒவ்வொரு தனிமனித ஜீவியின் உணர்வுப் பரிணாமத்தின் வழியாகச் சென்றடையக்கூடிய முழு-உணர்வில் முழுமையடையும்!
பரிணாமம் ஏற்கனவே புத்தர், இயேசு, கபீர், ரமணர், . . . போன்ற, தம் உணர்வுக்கு விழித்த, தனிமனிதர்களின் வழியாக தமது உச்சத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
இருப்பு ( இயற்கை, உலகம், பிரபஞ்சம்) என்பது உறைந்து நிற்கும் நிலக்காட்சி அல்ல. அது பாய்ந்தோடிடும் ஒரு நதியைப் போன்றது.
இருப்பு என்பது அடிப்படையில், ஒரு பரிணாம நிகழ்வு முறை அல்லது இயக்கம் ஆகும். இருப்பு முதன்முதலாக சட-இருப்பாகத்தான் (பெரு-வெடிப்பிலிருந்து) தோன்றியது எனப்பார்த்தோம். சட-இருப்பு என்பது பௌதீக இயக்கமாகும். அது உயிரற்றது, உணர்வுமற்றது. இப்பௌதீக இயக்கம் தன்னைக்கடந்து வளர்ந்திடும்போது அது தனது பௌதீகப் பண்பை சற்று இழந்து, அதாவது பௌதீகப் பண்பில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து உயிராய்ப் பரிணமிக்கிறது. இவ்வாறு இருப்பு என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து செல்லும், பண்பு ரீதியாகப் பரிணமிக்கும் ஒரு விசேட மெய்ம்மையின் பேரியக்கமாகும்.
சரி, பரிணாமம் என்பது பண்புரீதியிலான மாற்றம் என்றால், அடியோட்டமாக பரிணாமத்தில் பரிணமிப்பது எது? இக்கேள்வி அதிமுக்கியமானது. ஆம், பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வுதான். இருப்பின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அதற்கு இணையாக உணர்வும் உயருகிறது.
சட-இருப்பை நாம் உணர்வற்றது என வரையறுத்தாலும் சடத்திற்கென ஒருவகை மெலிய உணர்வின் ஆரம்ப அறிகுறிக்கான அடிப்படையைக் கொண்டுள்ளதெனக் கொள்ளலாம். பெருவெடிப்பில் பிறந்த முதல் துகளுக்கும் கூட ஒரு சிறு துளியளவு உணர்வு [0.0000001 %] உண்டு! அதை நாம் "சட-உணர்வு" அல்லது "பௌதீக உணர்வு" (Material Consciousness) எனக் குறிப்பிடலாம்.
சட-உணர்வு எத்தகையதெனில், பௌதீக அணுத்துகள்களை எடுத்துக்கொண்டால், அவை தமக்குப் புறத்தேயுள்ளவற்றையும் உணராது; இன்னும் தம்மையும் அவை உணர வழியில்லை. மாறாக, குருட்டாம்போக்கில், அவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்ளும் நிகழ்வில் அவை பரஸ்பரம் சக்தி, மின்னூட்டம், நிறை, . . . . போன்ற பௌதீக அம்சங்களை பரிமாறிக்கொள்கின்றன. இப்பரிமாற்றத்தை ஒருவகை தகவல் பரிமாற்றம் எனக் கொள்வோமெனில், அணுத்துகள்களுக்குள் அது ஒருவகை தகவல்-பரிசீலனைச் (Information-Processing)செயல்பாடாக அமைகிறது என்கிற வகையில் அதை சட-உணர்வு என அங்கீகரிக்கலாம். ஏனெனில், உணர்வு என்பது அடிப்படையில் தகவல்-பரிசீலனை என்பதையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது.
சட-உணர்வைப் பற்றி நாம் பேசினாலும், சடப்பொருளை நாம் இருப்பின் ஒருவகையாகக் கணக்கில் கொள்ளலாமே தவிர, சட-உணர்வை பெரிதாக உணர்வின் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அது புறத்தேயுள்ளதையும், உணராது, தன்னையும் உணராது. ஆயினும் இருப்பு என்கிற அளவில் சடப்பொருளின் இருப்பைஅங்கீகரிப்பது தவிர்க்கவியலாதது. ஏனெனில், இந்த சட-இருப்பு தான் பின் ஏற்பட இருக்கிற உயிர்-இருப்பு மற்றும் உணர்வு-இருப்பு ஆகியவற்றின் அடிப்படை அல்லது அடித்தளம் ஆகும்.
ஆம், சடப்பொருள் இல்லையெனில், உயிரும் (விலங்கு ஜீவிகளும்) தோன்றியிருக்கவியலாது. உணர்வும் (மனித ஜீவிகளும்) தோன்றியிருக்கவியலாது. ஆனல், அதே வேளையில், சடப்பொருளின் இருப்பை நாம் பரிணாமத்தின் அடிப்படையாகக் கொள்வதால், சடப்பொருள் என்பது, பொருள் முதல்வாதிகள் கருதுவது போல, தன்னில் தானே தோன்றிய சுயம்புவான மெய்ம்மையாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், சடப்பொருள்
தன்னில் தானே தோன்றியதல்ல. மாறாக, அது வேறொரு மூல-மெய்ம்மையின் ஆகச் சுருங்கிய வடிவமும், நிலையும் ஆகும். ஆகவேதான், பௌதீகப் பொருளானது விரிந்து மீண்டும் தனது அசலான நிலையை அடைய வேண்டி பரிணமிக்கிறது.
மேலும், பரிணாமம் என்பது அடிப்படையான பௌதீகப் பொருளிலிருந்து வெவ்வேறு வகைப்பொருளை புதிது புதிதாக உருவாக்குவதல்ல. மாறாக, பொருளானது படிப்படியாக தனது பௌதீகச் சடத்தன்மையைக் கடந்து, அதாவது இழந்து பண்புரீதியாக வேறொரு அம்சமாக மாற்றமடைந்து முடிவில், அனைத்து மாற்றங்களையும் தீர்த்து முடித்த முழுமை நிலையை அடைவதே.
இவ்வாறு இருப்பானது தனது இறுதி முழுமை நிலையை - பொருளை ஒரு ஊடகமாகக் கொண்டு, அதையே ஏணியாக ஆக்கி, தனது இறுதி முழுமை நிலையை அடையும்போது அது முற்றிலுமாக தனது சடத் தன்மையைக் கடந்து விட்டிருக்கும்.
இருப்பானது படிப்படியாக உணர்வாக எழும்பொருட்டு, முதற்கட்டமாக, ஒரு மாபெரும் தாவலின் மூலமாக உயிராக, உயிருள்ள விலங்கு ஜீவிகளாகப் பரிணமித்து, அந்த ஜீவிகளின் புலன்களின் வழியாக புறத்தை உணர்வு கொள்ளும் புலன் உணர்வாக எழுந்தது. பிறகு, நீண்ட நெடிய உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக, விலங்கு ஜீவிகளைக் கடந்த மனித ஜீவியாக, மனிதனுள் சுய-உணர்வாக (Self-Consciousness) வெளிப்படும் பெரும் தாவலைச் செய்தது.
மனிதனின் சுய உணர்வானது ஒட்டு மொத்த பிரபஞ்சப் பரிணாம இயக்கத்தின் வரலாற்றில் மிகவும் திருப்புமுனையான ஒரு கட்டத்தை தொடங்கி வைக்கிறது. இதுவரை இயற்கையிடமிருந்த பரிணாமப் பொறுப்பு இப்போது மனிதனிடம் கை மாறுகிறது. இனி மனிதன், ஒவ்வொரு மனிதனும் தான், பரிணாமத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுத்துச் சென்று - அதாவது, உணர்வில் பெருகியுயர்ந்து - உணர்வின் உச்சமான முழு-உணர்வை அடைந்து இருப்பை முழுமைப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு இருப்பானது படிப்படியாக உணர்வு பெற்று மனிதனிடம் தனி-உணர்வாக எழுந்து மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் முழு-உணர்வாக மலர்ந்திடும் நிலைதான் " சத்-சித்-ஆனந்தம்" என்பதாகும்.
சத் என்பது இருப்பையும், சித் என்பது உணர்வையும், ஆனந்தம் என்பது பேரின்பத்தையும் குறிக்கின்றது. சத் சித் ஆனந்த நிலை என்பது மூன்று வெவ்வேறு நிலைகளின் கலவையோ, தொகுப்போ அல்ல! இதை ஐயமின்றி "முழுமை" என்ற ஒரே சொல்லில் குறிப்பிட்டுவிடலாம்.
இம்முழுமை நிலை எத்தகைய மெய்ம்மை என்றால், நிச்சயம் அது பொருண்மை (பௌதீகச் சடத்தன்மை) யானது அல்ல. ஏனெனில், இருப்பானது முழு-உணர்வாக மலர்ந்திட்ட அந்நிலையில் இருப்பு என்பது முற்றிலுமாக உணர்வில் ஊறிக் கரைந்து. பொருண்மையின் அற்ப சொற்ப சுவடுமின்றி தூய உணர்வாக ஆகிவிடுகிற அந்நிலையே முழுமையான இருப்பாகத் திகழ்வதாகிறது! இத்தகைய முழு உணர்வின், ஆகவே முழு(மையான) இருப்பின் தன்மை எத்தகையதெனில் அது முழுமையான ஆனந்த நிலையே, பேரின்ப நிலையே!
பேரின்ப நிலை என்பது பரிணாம இருப்பு அடையக்கூடிய முடிவும் முழுமையுமான நிலை மட்டுமல்ல. அதுவே பரிணாம இருப்பு முதன்முதலில் தோன்றுவதற்கு அடிப்படையாக, மூலவித்தாக பெருவெடிப்புக்கு முன்னிருந்த மூல முதல் மெய்ம்மையும் ஆகும்.
"பேரானந்த நிலையிலிருந்துதான் அனைத்து ஜீவிகளும் பிறக்கின்றன,
அப்பேரானந்தத்தினாலேயே அவை இருக்கின்றன, வளர்கின்றன,
அப்பேரானந்தத்திற்கே மீண்டும் அவை திரும்புகின்றன."
எனும் தைத்ரிய உபநிடத்தின் கூற்றும், " சத்-சித்-ஆனந்தம்" என்கிற கருத்தும் பழைய காலத்து ஆன்மீகவாதிகளின், கருத்துமுதல்வாதிகளின் மூடத் தனமான பிதற்றல்கள் அல்ல! மாறாக, இவை பரிணாமபூர்வமான உண்மையாகும், ஆகவே, இவை 'விஞ்ஞான' பூர்வமானது. ஆனால், இங்கு நாம் குறிப்பிடும் 'விஞ்ஞானம்', தற்போதைய, இயற்கைவாதத்தில் சிக்குண்ட, இன்னும் முதிராத, எந்திரவாத விஞ்ஞானம் அல்ல.
இந்த இடத்தில், பேரின்ப நிலை, பேரானந்த நிலை குறித்து சற்று தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. பேரின்ப நிலை, பேரானந்த நிலை ஆகிய சொற்களின் பயன்பாடானது, அன்றாட மானுட அனுபவத்திற்கு பழக்கப்பட்ட இன்பம், ஆனந்தம் ஆகிவற்றின் ஆக உயரத்திலும் உயர்ந்த நிலைகள் என்பதாகப் பொருள்படும் வகையில் குறிப்பிடப்படுபவை ஆகும். மேலும், மனித ஜீவியானவன் அடையக்கூடிய இறுதியான பரிணாம முழுமையை, இறுதி மெய்ம்மையை (Ultimate Reality) பேரின்ப நிலை, பேரானந்த நிலை எனக்குறிப்பிடுவதன் வாயிலாக, குறைத்துச் சுருக்கிவிட முடியாது. இந்த முழுமை நிலையை நாம் "பேரறிவு நிலை", "உயர் ஞான நிலை" எனவும் குறிப்பிடலாம்! இத்துடன் நில்லாமல், அதை பேரறிவு எனச் சுருக்கிவிடாமல், மூலப் படைப்புச் சக்தி எனவும், அனைத்து சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கிய அனந்த நிலை எனவும் குறிப்பிடலாம். இதையே நாம் உணர்வின் சொற்களில், "பேருணர்வு", "முழு உணர்வு" என்று இக்கட்டுரையிலும் இன்னும் பிற கட்டுரைகளிலும் குறிப்பிடுகிறோம்.
சரி, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். அதாவது, " சத்-சித்-ஆனந்தம்", "முழு-உணர்வு" ஆகிய, முழுமை நிலை குறித்த கருத்துருவாக்கங்கள் நவீன விஞ்ஞானப் பார்வையிடமும், டார்வினிய கோட்பாட்டிலும் இல்லை. ஏனெனில், இந்த அணுகுமுறைகள் மனிதனை ஆக உயர் வளர்ச்சியடைந்த விலங்காகவே வகைப்படுத்துகின்றன. மேலும், வாழ்க்கை என்பது மாறும் புறச்சூழலுக்கேற்ப தகவமைந்து, வெறுமனே உண்டுறங்கி இனம் பெருக்கி உயிர்வாழ்வதும், முடிவில் மரணத்தில் முடிந்துபோவதும்தான் என்பதாகவே இவை காண்கின்றன.
விஞ்ஞானத்தின் இம் மட்டுப்பாட்டிற்குக் காரணம், அது சடப் பொருளையே மூல முதல் மெய்ம்மையாக, சாசுவதமான 'பரம்' பொருளாகக் காண்கிறது. உயிரையும், (மனித) உணர்வையும், அறிவையும் அது சடப் பொருளின் உயர் வளர்ச்சி நிலைகளாக மட்டுமே காண்கிறது.
***
விஞ்ஞானத்தை நாம் " இயற்கை வாதம்" என்று குறிப்பிடலாமெனில், (அசலான) ஆன்மீகத்தை நாம் "பேரியற்கைவாதம்" என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும். விஞ்ஞானம் மனிதனை இயற்கையின் ( = பிரபஞ்சத்தின்) முக்கியத்துவமற்ற ஒரு அங்கமாகவும், பகுதியாகவும், இயற்கையைச் சார்ந்திருக்கும் ஒரு உயர் விலங்கு என்பதாகவும்; வாழ்க்கை என்பது வெறும் உயிர்- பிழைத்திருத்தலே என்பதாகவும், மரணம் என்பது இயற்கையின் தவிர்க்கவியலாத நியதி என்பதாகவும் காண்கிறது. இயற்கை என்பது - யுரேகா! யுரேகா! - சடப்பொருளே, பொருளாலானதே தொடக்கமும், முடிவும் இடையிலுள்ளவையும், அனைத்தும் பருப்பொருளே! பொருள் ( Matter) தான் மூல முதல் மெய்ம்மை, பிரம்மம், கடவுள் யாவும் என்கிறது விஞ்ஞானம்.
ஆனால், ஆன்மீகம் எனப்படும் பேரியற்கை வாதம் மனிதனை உணர்வாகவும், இயற்கையை மீறிச் செல்லும் பேரியற்கையைச் சேர்ந்தவனாகவும்; இயற்கை, உலகம் என்பவை பேரியற்கையின் உருவாக்கம் அல்லது மாறிய வடிவம் - அதாவது, முழு உணர்வின் உருமாறிய நிலையும், வடிவமும் என்பதாகவும்; வாழ்க்கை என்பது 'உணவு, உடை, உறையுள்' குறித்த விவகாரம் அல்ல. மாறாக, அது ஒரு அற்புதப் புதிர்; அதை விடுவிக்கும் வழிமுறையில் - இயற்கையுலகின் ஒரு பகுதியாகவும், ஒரு சிற்றுணர்வாகவும் தொடங்கிய தாம் - உணர்வில் வளர்ந்து முடிவில் பேருணர்வு அல்லது முழு உணர்வு எனும் மூலான்மாவை, பேரியற்கையைச் சேருவதே மனித இருப்பின், வாழ்க்கையின் இலக்கு என்பதாகவும் - ஏனெனில், முழு உணர்வு (Absolute Consciousness)தான் பெரு வெடிப்புக்கு முன்னிருந்த மூலவித்து, மூல முதல் மெய்ம்மை, பேரியற்கை. அதுவே, பிரபஞ்சப் பரிணாமத்தின் முடிவான முழுமையும். ஆகவே, முழு உணர்வு தான் ஆன்மா, பிரம்மம், கடவுள், பேரியற்கை, பேரிருப்பு, . . . . யாவும் என்பதாகவும் - ஆன்மீகம் எனும் பேரியற்கை வாதம் உணர்வார்ந்த அனுபூதி அனுபவத்தின் மூலம் நேரடியான தரிசனத்தின் வாயிலாகக் காண்கிறது!
முக்கியமாக, இவ்விடத்தில் விஞ்ஞானம் எனும் இயற்கைவாதத்திடம் ( Naturalism) இருப்பு எனும் பரிணாம இயக்கத்தின் இலக்கு பற்றியும், குறிப்பாக மனித வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு பற்றியும் அதாவது, மரணமிலா முழு-உணர்வு எனும் சத்-சித்-ஆனந்த நிலை பற்றியும், யாதொரு கற்பனையும், ஏன் இல்லாமல் போய்விட்டது என்பது குறித்த விளக்கத்தைக் காண்பது அவசியமாகும்.
விஞ்ஞானமானது முற்றிலும் இயற்கையுலகைச் சார்ந்ததாக இருப்பதாலும், சடப்பொருளை மூலப் பரம்பொருளாகப் பாவிப்பதாலும், இயற்கையின் பௌதீக விதிகளை இறுதியானவை எனக்காண்பதாலும் மிகவும் மட்டுப்பாடானதொரு உலகப்பார்வையிலும், வாழ்க்கைப் பார்வையிலும் அது சிக்குண்டுவிட்டது. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரையில், 'இருப்பது இந்த இயற்கை மட்டுமே!' ஆகவே, அதனுடைய வரையறைகளுக்குள்ளேயே வலம் வருவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்பதாக அது தனது பார்வையைச் சுருக்கிக் கொண்டுவிட்டது.
இயற்கையுலகில் தோன்றிய ஜீவிகள் யாவும், மனிதர்கள் உள்பட, இயற்கையின் மட்டுப்படுத்தும் விதிகளுக்குட்பட்டு இயற்கையைச் சார்ந்தே இருக்க முடியும், வாழமுடியும்; அதில் மரணம் என்பது தவிர்க்கவியலாத இயற்கை நியதி என விஞ்ஞானம் தீர்க்கமாக நம்புகிறது. ஆகவே, வாழ்க்கை என்பது வெறுமனே மாறும் இயற்கைச் சூழலுக்கு ஈடுகொடுத்து தகவமைந்து அல்லது விஞ்ஞானத்தொழில் நுட்பத்தைக் கொண்டு தற்காத்துக்கொண்டு - மரணம் சம்பவிக்கும்வரையிலும் - உயிர் வாழ்வது, பிறகு தவிர்க்கவியலாத மரணத்தில் முடிந்துபோவது என்பதாகவே விஞ்ஞானம் காண்கிறது, போதிக்கிறது.
ஆனால், ஆன்மீகம் எனும் பேரியற்கை வாதமானது தமது கூரிய உட்-பார்வையின் மூலமாக, 'இயற்கையானது' என்பது எவ்வகையிலும் இறுதியானது அல்ல; அதாவது, பூரணமானது அல்ல எனும் உண்மையைக் கண்டறிந்து கொண்டுள்ளது.
மேலும், இயற்கை என்பது மாற்றத்திற்குட்பட்டது, உலகம் என்பதும் அவ்வாறானதே; இயற்கையுலகம் என்பது ஒரு பரிணாம இயக்கமே; இயக்கம் என்றிருந்தால் அதற்கு நிச்சயம் ஒரு இலக்கு, அடைவிடம் என்பதும் இருந்தேயாக வேண்டும். ஆகவே, மாற்றத்திற்குட்பட்ட இயற்கையுலகை மனிதர்கள் சார்ந்திருக்கலாகாது. அதாவது, இயற்கையுலகைச் சார்ந்திருக்கும் தமது உடலையும், ஆகவே உயிர் வாழ்தலையும் மனிதர்கள் சார்ந்திருக்கலாகாது. ஏனெனில், விரைவிலோ, சற்று தாமதமாகவோ, மரணம் மனிதர்களின் கதையை முடித்துவிடும். ஆகவே, மரணமடைவதற்குள்ளேயே மனித ஜீவிகள் ஒவ்வொருவரும் இந்த இயற்கையுலகை, அதன் பகுதியாகிய உடலை, உயிர்வாழ்தலை கடந்து சென்றாக வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்த பேரியற்கைவாதிகள் இவ்வாறு கடந்து செல்வதற்கான வழியையும் கண்டுபிடிக்கத் தவறவில்லை. ஆம், "உணர்வு " தான் இயற்கையுலகை, உடலை, மரணத்தை, மரணத்தில் முடிந்துபோகக்கூடிய மேலோட்டமான வாழ்க்கையை கடந்து செல்வதற்கான வழி; அதாவது, பேரியற்கைக்கு, பேரிருப்புக்குச் செல்லும் வழி ஆகும்!
(மனித)வாழ்க்கை பற்றிய பேரியற்கைவாதிகளின் மாபெரும் கண்டுபிடிப்பு என்னவெனில், "வாழ்க்கை அழிவற்றது; மரணம் தெரிவிற்குட்பட்டது!" (Life is Eternal; Death is Optional!) என்பதுதான்
ஆம், வாழ்க்கையை நாம் மிகச் சரியாக, பரிணாமப்பார்வையில் புரிந்துகொள்வோமெனில், வாழ்க்கை (முறையாக, முழுமையாக உணர்வுப்பூர்வமாக வாழப்படும் வாழ்க்கை) மரணத்தில் முடிந்துபோகக்கூடியதல்ல. உடல்தான் மரணிக்கிறது. உணர்வுக்கு (குறிப்பாக, முழு-உணர்வுக்கு, முழு-உணர்வை அடைந்தவர்க்கு) மரணம் கிடையாது.
உண்மையில், மனிதன் என்பவன் அவனது உடலல்ல. உணர்வுதான் மனிதன்! ( ஆனால், மனிதன் இயல்பாகப் பெற்றிருப்பது பரிணாம இயற்கை வழங்கிய "அகந்தை -உணர்வு" (Ego-Consciousness) எனப்படும் சிற்றுணர்வு அல்லது அரை-உணர்வைத்தான். ஆகவேதான், மனிதன் உணர்வில் பரிணமித்து அழிவிலா முழு- உணர்வாகிட வேண்டும் என இக்கட்டுரை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது.) அதாவது, (அரை) உணர்வாகிய மனிதன் தனது உடலையும், இயற்கையுலகையும் சார்ந்திருக்க வேண்டியிருப்பது மிகவும் தற்காலிகமானதொரு நிலைமையாகும். (இயற்கையான நிலைமையில் தனிமனிதர்கள் அதிக பட்சம் 100 ஆண்டுகள் மட்டுமே உயிரோடிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க!)
பேரியற்கைவாதிகள் உலகை, இயற்கையை மறுப்பதில்லை! மாறாக, உலகை, இயற்கையை நிரந்தரமானதொரு நிஜமெனக் கொண்டாடுவதைத்தான் "மாயை" என மறுக்கிறார்கள். ஏனெனில், உலகமானது ஒரு பரிணாம இயக்கமாக இருப்பதால், அது ஒரு இலக்கை நோக்கிச் செல்கிறது. துல்லியமாகச் சொன்னால், உலக இருப்பானது, மனித ஜீவியின் வழியாக தனது பரிணாம முழுமையை நோக்கியே செல்கிறது. இந்த நோக்கத்தை, விழைவை நிறைவேற்றிடுவதற்காகத்தான் அது மனித ஜீவியாக, குறிப்பாக மனித உணர்வாக மாறியுள்ளது.
உண்மையில், மனிதனுள் உணர்வாக மாறிய உலகமானது மீண்டும் தனது பழைய நிலையை, அதாவது, பௌதீக நிலையை திரும்பிப்பார்ப்பதில்லை. மாறாக, பரிணாமப் பார்வையும், புரிதலும் அற்ற மனிதர்கள் தான் பௌதீக உலகை (முறையான நோக்கமின்றி) ஆராய்ந்து கொண்டுள்ளனர். ஆனால், பரிணாமத்தின் மிக அசலான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பேரியற்கைவாதிகள் (அசலான ஆன்மீகவாதிகள்) முன்னோக்கி மட்டுமே பார்க்கிறார்கள். தம்முன்னேயுள்ள பரிணாம இலக்கை மட்டுமே குறிவைத்து தம்முள் ஆழ்ந்து செல்லுகிறார்கள்!
உணர்வைப் பற்றிய மாபெரும் உண்மை யாதெனில், அது ஒரு கட்டத்தில் இவ்வுலகில், இயற்கையில் தோன்றினாலும், தொடக்கத்தில் இவ்வுலைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும், அது இவ்வுலக இயற்கையைச் சேர்ந்ததல்ல! மாறாக, அது "முழு-உணர்வு" எனும் பேரியற்கையின் உலகைச் சேர்ந்ததாகும். எவ்வாறு ஒரு நதியானது மலையில் உற்பத்தியாகிறதோ, அவ்வாறே உணர்வும் மனித உடலில் (குறிப்பாக மூளையின் இயக்கத்தில்) உற்பத்தியாகிறதே தவிர, உணர்வை உடலோ, மூளையோ, பௌதீக உலகமோ உற்பத்தி செய்வதில்லை! ஆம், நதியை மலை உற்பத்தி செய்வதில்லை. மாறாக, நதி உற்பத்தியாவதற்கு மலை ஏற்ற இடமாக இருக்கிறது- அவ்வளவுதான். மேலும், நதியானது மலையையும், அது நெடுக பாய்ந்து செல்கிற வழிகளையும், இடங்களையும் தற்காலிகமாகச் சார்ந்திருக்கிறதே தவிர நதியானது சமுத்திரத்தைச் சேர்ந்ததே! மனித உணர்வும் உடலில், (மூளையில்) தோன்றினாலும் அவ்வாறு தோன்றுவதற்கு அது ஏற்ற இடமாக, அமைப்பாக இருக்கிறது என்பதைத்தவிர உணர்வானது "முழு-உணர்வு" எனும் சமுத்திரத்தை மட்டுமே சேர்ந்தது!
உணர்வாகிய மனிதன் தாம் ஒரு உணர்வு தான் என்கிற உணர்வுக்கு வராமல் (தன்னை நோக்கி விழிக்காமல்), உடலுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதால்; இதன் நீட்சியாக உலகுடனும், இயற்கையுடனும், உலகப் பொருட்களுடனும் தம்மைப் பிணைத்துக் காண்பதால், உடலின் விதியான மரணத்துடன் தாமும் (உணர்வும்) முடிந்து போவதாக தவறாகக் கருதிக் கொள்கிறான் - உடலின் மரணத்துடன் இணைந்து தானும் மாண்டுபோகிறான்.
ஆனால், "தான் ஒரு உணர்வுதான்!" என்கிற உணர்வுக்கு விழித்துக்கொள்பவன் முதன்முறையாக உண்மையிலேயே சுயவுணர்வு கொள்கிறான். இதைத் தொடர்ந்து தமது சுய உணர்விலேயே நிலைப்பதன் (ஆழ்வதன்) வழியே உணர்வில் பெருகி உயர்ந்து உணர்வின் உச்சமான முழு-உணர்வு எனும் என்றும் வற்றாத, அழிவிலா, உணர்வுச் சமுத்திரத்தை அடைகிறான். இதைத்தான் பேரியற்கைவாதிகளான ஆன்மீக முன்னோடிகள் முக்தியடைதல், மரணமிலாப் பெருவாழ்வு, வீடு பேறு, நித்திய ஜீவன், நிர்வாணம், ஆத்மசாட்சாத்காரம், இறைவனடி சேருதல், தேவனின் ராஜ்ஜியம், ஒளியுலகு சேருதல், ஞானமடைதல் அதாவது, ஞான - ஒளி-விளக்கம்-பெறுதல் (Enlightenment) ஆகிய வெவ்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.
***
இனி நாம், பொதுவாக, ஆன்மீகம் தொடர்பான விடயங்களையும், குறிப்பாக ஞானமடைதல், இருப்பின் தரிசனம், சத்-சித்-ஆனந்தம் ஆகியவை குறித்தும் பரவலாக நிலவுகின்ற தவறான புரிதல்களையும், கோட்பாடுகளையும் இனம் கண்டு களைவோம்.
"நமது இயல்பான தன்மையே ஆனந்த சொரூபம் தான்" என, ஶ்ரீ ரமண மகரிஷி போன்ற மகா ஞானிகள் சொல்லும்போது, அவர்கள் குறிப்பிடுவது, மனிதன் முயன்று அடையக் கூடிய, அடைந்தாக வேண்டிய முழு- உணர்வு நிலையைத்தானே தவிர, ஏற்கனவே மனிதன் கொண்டிருக்கும் இயல்பை அல்ல! பொதுவாக, சாதாரணமாக நாம் பேசும்போது, "அடிப்படையில் நாம் அனைவரும் மனித ஜீவிகள் தானே!" எனக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், இது மிகவும் தவறானதொரு கூற்று ஆகும். ஏனெனில், மனிதர்கள் தமது அடிப்படையில் வெறும் விலங்குகளே. இறுதியாகத்தான் (உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில்தான்) மனித ஜீவிகள் உண்மையில் மனித ஜீவிகளாக ஆகிறார்கள். ஆகவே, "நமது அடிப்படை இயல்பே ஆன்மீக சொரூபம் தான்!" என்பது பரிணாம பூர்வமான கூற்றேயாகும், நமது அடிப்படையில் கீழியல்பில் நாம் ஆனந்த சொரூபிகளல்ல. நாம் அடையக்கூடிய மேலியல்பில் தான் நாம் ஆனந்த சொரூபிகளாவோம்.
சிலர் 'சத் தரிசனம்' பற்றிச் சொல்லும் போது, சத் எனப்படும் இருப்பு நிலையே 'இருப்புணர்வு' என்பதாகவும் கூறிவிடுகிறார்கள். இது தவறு. சத் என்பது இருப்பைக் குறிக்கிறது. ஆக, சத் எனும் இருப்பு பரிணமித்து உணர்வாக எழாமல், அது புறத்தேயுள்ள எதையும் அல்லது தன்னையும் தரிசிக்க இயலாது. இருப்பிற்குப் புறத்தே எதுவுமில்லை, இருப்பைத் தவிர! ஆகவேதான் அது தன்னைத்தானே தரிசிக்க வேண்டிய, தனது அசலான முகத்தைக் காண வேண்டிய, தன்னைத்தானே அறிய வேண்டிய, தனது உண்மையான தன்மையைக் கண்டுபிடித்தாக வேண்டிய அவசியம் எழுகிறது. இதே அவசியம்தான் இருப்பின் மிக விசேடமான அங்கமான, இருப்பின் உணர்வுபூர்வமான பிரதி நிதியுமான மனிதனுக்கும் உரியதாகிறது. மனிதன் என்பவன் உண்மையில் உணர்வு பெற்ற இருப்பே, இயற்கையே!
ஆனால், இவ்விடத்தில்தான் இருப்பும், பரிணாமமும், அவற்றின் பிரதான நோக்கமும் பெரும் தடையைச் சந்திப்பதாக உள்ளன. அந்தத் தடை மனிதனே! ஏனெனில், மனிதன் தன்னைத்தவிர, பிற உலக விடயங்களையும், பிரபஞ்சத்தையும், ஆராய்பவனாக, குறிக்கோளற்றவனாக, விளங்குகிறான். மனிதன் தனக்குப் புறத்தேயுள்ள இருப்பை மட்டுமே காண்கிறான், அறிகிறான். அவன் தன்னைக் காண்கிற, அறிகிற, தரிசிக்கிற பிரதான அவசியத்தை தவிர்த்துவிட்டு, தன்னைக் குறித்தவரையில் ஒரு "குருட்டுப்புள்ளி" யாகவே (Blind Spot) திரிந்து கொண்டிருக்கிறான்
ஆக, உணர்வாகிய மனிதன் உணர்வை உணர்வுகொள்ளாமல், தவறாக தமது உடலை தாம் என்று கருதத் தொடங்கி விடுகிறான். இதன் விளைவாக, அவன் "தான் உயிரோடிருக்கிறான்!" எனும் உயிர்-இருப்பை மட்டுமே உணர்கிறான். தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறான்.
ஆனால், "நான் உயிரோடிருக்கிறேன்!" எனும் நிலை வேறு; "நான் இருக்கிறேன்!" எனும் நிலை வேறு. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எவ்வாறென்றால், "நான் உயிரோடிருக்கிறேன்!" என்பது ஒரு உயிரியல் நிஜம் மட்டுமே. எலியும், தவளையும் கூடத்தான் உயிரோடிக்கின்றன. எனினும் "தாம் இருக்கிறோம்!" என்பதை அவை உணருவதில்லை; உணரவும் வழியில்லை! ஆனால், "நான் இருக்கிறேன்!" என்பது எனது உயிர்-இருப்பைக் கடந்த ஒரு உணர்வுபூர்வமான நிஜமாகும். அதாவது, உணர்வு தன்னைத்தானே உணர்ந்து தன்னை உணர்வாக இனம் கண்டு அதிசயித்து, அக மகிழும் நிலையாகும்! இந்நிலை சர்வசாதாரணமானதல்ல. ஏனெனில், அது அவ்வளவு சர்வ சாதாரணமாக எல்லா மனிதர்களிடமும் நிகழ்வதில்லை, ஏற்படுவதில்லை!
இவ்வாறு ஒரு மனிதன் தனது உணர்வை உணர்வு கொள்ளும் போது, "தான் உணர்வுதான்" எனும் உணர்வைப் பெறும்போது என்ன நிகழும்? ஆம், ஒட்டுமொத்த பிரபஞ்ச வரலாற்றில், வெகு அபூர்வமாகவும், அரிதாகவும் நிகழ்ந்திட்ட "விழிப்பு" என்பது நிகழும்! யாதொரு ஓசையும், ஆரவாரமும் இன்றி, ஒருவன் "புத்த -உணர்வு", "கிறிஸ்து-உணர்வு", "ரமண உணர்வு" எனப்படும் முழு-உணர்வைப் பெற்றிடுவான், முழுமையடைந்திடுவான்!
இந்த முழுமை நிலை (இதுவே பெரு வெடிப்புக்கு முன்னிருந்த மூல நிலை) யின் வெளிப்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால்,
பிறவிக்குருடன் திடீரென பார்வை பெற்று ஒளியைத் தரிசிப்பது போல இருக்கும்!
இருளாகத் தெரிந்தவை அனைத்தும் ஒளியாகத் தெரியும்!
மறைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிப்படையாகத் தெரியும்!
இம் முழுமை நிலையின் தன்மைகள், பயன்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்றால்,
ஒருவன் எதை அறிந்துகொண்டால்
வேறு எதனையும் அறிந்திடத் தேவையில்லையோ
எதை அடைந்துவிட்டால்
வேறு எதனையும் அடைந்திட, அனுபவித்திட,
தேடிட, ஓடிட, நாடிடத் தேவையில்லையோ
அந்த அதியற்புத நிலை தான் இம்முழுமை நிலை!
இதன் பயன்கள் எவை எவையெனப் பார்த்தால், அவற்றைப் பட்டியலிட முடியாது. "முழுமை நிலை" என்பதில் உள்ள "முழுமை" எனும் ஒற்றைச் சொல்லே முழுமையாக எல்லாவற்றையும் தன்னகத்தே உள்ளடக்கிவிடுகிறது! எனினும், பேரியற்கைவாதிகளான ஆன்மீக முன்னோடிகள், "பேரானந்தம்" அல்லது "பேரின்பம்" என்கிற சொற்களைக் கொண்டு, இந்நிலையை குறிப்பிட்டிருப்பதால், அதன் பொருளை நாம் ஆழமாகவும், விரிவாகவும் புரிந்து கொள்வது அவசியமாகும்.
ஏனெனில், ஞானத்திற்கும், புரிதலுக்கும் தொடர்பில்லாத தற்கால 'ஞானி'களில் ஒருவர், தங்களுடன் சிந்தித்தறியாத ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டு, 'அடைவதற்கு ஒன்றுமில்லை!' எனவும், " 'ஆனந்தம்' என்கிற வார்த்தையே ஆன்மீகத்தை பெரும் குழப்பத்திற்குள்ளாக்குகிறது!" எனவும்; புத்தர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அரவிந்தர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது ஆன்மீகக் கருத்துக்களை மேற்கோள்காட்டி, அவற்றிற்கு தமது தாறுமாறான விளக்கங்களை அளித்தும், ஏதோ அவர்கள் அனைவரும் அஞ்ஞானிகள் என்பது போலவும் கிண்டலடித்து தூற்றிப்பேசி தம்மை உயர்த்திக் கொள்ளும் மலினமான யுக்திகளைக் கையாண்டுவருகின்றார்.
ஆனால், "ஆனந்தம்", "பேரானந்தம்" அல்லது "பேரின்பம்" ஆகிய சொற்களை ஆன்மீக முன்னோடிகள் மிகவும் பிரத்தியேகமான அர்த்தத்தில் மட்டுமே பிரயோகித்துள்ளனர். பேரானந்தம் எனும் சொல் முற்றும் முடிவான நிலையைக் குறிப்பதாகும். அதற்கும், சாதாரணமாக பலரும் திபுதிபுவென ஆன்மீகத்திற்குள் நுழைந்து தேடிக்கொண்டிருக்கும் 'குச்சி மிட்டாய்' போன்ற 'ஆனந்த அனுபவங்கள்' எனக் குறிப்பிடப்படுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. இன்னும், 'அடைவதற்கு ஒன்றுமில்லை' என அரற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் அதில் யாதொரு பங்கும் இல்லை.
மேலும், ஒருவர் வாழ்க்கையின் சாரமான உண்மையை அறிய விரும்புகிறார் என்றாலும், தூய்மையான புனிதமான இரண்டற்ற நிலையை அடையவிரும்பினாலும், அல்லது ஞானம் என்றால் என்னவென்றே தெரியாமல், பெயரற்ற பெரும் தேடலில் ஈடுபட்டிருந்தாலும்; உண்மையான ஞானிகள் குறிப்பிடுகின்ற பேரானந்தத்தை அடைய விரும்பினாலும் அதில் தவறில்லை! அதற்கான தகுதிகளை அவர் வளர்த்துக்கொள்ளட்டும். அது சாமான்ய இன்ப நாட்டமாகாது! அதே வேளையில், இன்ப நாட்டம் என்பது ஒரு அசிங்கமான விடயமோ, அருவருப்பான, தவறான விடயமோ அல்ல.
ஒருவர் இன்ப நாட்டத்தைப் பின்பற்றிச் செல்லட்டும். அவர் எங்கே போய்விடுவார்? ஏன், அவர் எங்கே வேண்டுமானாலும் போகட்டும். கோடி கோடியாகச் சம்பாதிக்கட்டும்; எல்லா சௌகரிய சம்பத்துக்களையும் அனுபவிக்கட்டும். எதுவும் அவரை நிறைவு செய்யாது! அவரது அக-வறுமையை எதுவும் போக்காது, நீக்காது. உண்மையில் இன்ப நாட்டம் அல்ல பிரச்சினை. எதை ஒருவர் நாடுகிறார், எதற்காக நாடுகிறார் என்பதில்தான் பிரச்சினையுள்ளது. எது உண்மையான இன்பம் என்பது தெரியாத வரை இன்ப நாட்டம் ஒழியாது. எல்லா நாட்டமும் இன்ப நாட்டமே, ( எல்லா பயமும் மரண பயமே என்பதைப்போல!). அதில் சாமான்யமானதும், அசாமான்யமானதும் அடக்கமே! ஒருவரிடம் இன்ப நாட்டம் இல்லையெனில், ஒன்று அவர் ஞானம் எனும் பேரின்ப நிலையை அடைந்திருக்க வேண்டும் அல்லது அவர் செத்துப்போயிருக்க வேண்டும்! ஏனெனில், இன்ப நாட்டம் தான் வாழ்க்கையின் மிக அடிப்படையான உந்து விசை, உந்து சக்தி.
ஞானி என்பவன் இன்பத்துக்கு எதிரானவன் அல்ல. அதே வேளையில், துன்பத்துக்கு நண்பனும் அல்ல! இன்பம் துன்பம் இரண்டையும் கடந்து வாழ்க்கையை, இருப்பைத் தரிசித்தவனே ஞானி!
சாதாரண சாமான்ய இன்பத்தை அறியாதவன் பேரின்பத்தை அறிய முடியாது. ஒரு ஞானி தனது காலைச் சிற்றுண்டியாக இட்லி (சூடாக), சட்னி, சாம்பார், கொஞ்சம் மிளகாய்ப்பொடி (நல்லெண்ணையுடன் தான்) சாப்பிடும்போதும், சரி, பிரபஞ்ச உண்மையைப் பற்றி சிந்திக்கும் போதும் சரி, அதே குன்றாப் பேரார்வத்துடன் தான் ஈடுபடுகிறான்! ஆனால், அவனது இன்ப நாட்டம் அசாதாரணமானது. அது எவ்வொரு குறிப்பிட்ட விடயத்துடனும், பொருளுடனும் தங்கித் தேங்கிவிடுவதில்லை!
பேருண்மை, முழுமையான ஞானம் என்பவற்றிற்கு இன்னுமொரு பெயர்தான் பேரின்பம், அல்லது பேரானந்தம் என்பது. பேரின்பம் என்பது பாலும்,தேனும் ஆறாய் ஓடும் ஒரு இடமோ, சொர்க்கமோ அல்ல! அது ஒரு உணர்வு; அது எதைப்பற்றிய உணர்வும் அல்ல! ஏனெனில், அதுவே முழு-உணர்வு. உணர்வானது (இருப்பிலிருந்து தன்னை முழுவதுமாக மீட்டுக்கொண்டு) தன்னைத்தானே உணர்வு கொண்டு தன்னை முழுமையாகக் கண்டடைந்த நிலை!
இம்முழுமை நிலையே மெய்ப்பொருள் நிலை. சிலர் சொல்வதுபோல, நம்முடைய சத் அம்சமான உயிர்-இருப்பு நிலையோ, (அல்லது நம் சித் அம்சமான சிற்றுணர்வின் இருப்பு நிலையோ), பிரம்மம் எனும் மெய்ப்பொருள் நிலை அல்ல. மாறாக, சத் அம்சம் முழுவதுமாக சித் அம்சமாக மாற்றமடைந்து, பேருணர்வு அல்லது முழு- உணர்வு நிலையை அடைவதுதான் மெய்ப்பொருள் நிலையாகும். இருப்பு என்பது உண்மையில் வேறு, அல்லது மாறு வேடத்தில் இருக்கும் உணர்வே தவிர வேறில்லை! (Existence is nothing but Consciousness in Disguise!). உணர்வின் மாறிய வடிவமும், நிலையும் தான் இருப்பு! இருப்பு, இயற்கை, பொருளாலான பிரபஞ்சம் என எதுவாயினும் இறுதியில், உணர்வின் சொற்களில்தான் (In terms of Consciousness) புரிந்துகொள்ள முடியுமே தவிர, பொருண்மையாலான இருப்பின் சொற்களில் அல்ல!
இருப்பு என்பது தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும்பரிணாம இயக்கமாகும். அதன் நெடும் பயணத்தின், இடைவழியில், எவ்வொரு புள்ளியிலும், கட்டத்திலும் அது பாதி-நிஜம் மட்டுமேயாகும்! அதனுடைய பயணத்தின் முடிவான அடைவிடத்தை அடையும்போது மட்டுமே இருப்பானது "நிஜமான-நிஜமாக", மெய்ப்பொருளாக ஆகிறது! அப்போதுதான், முற்றும் முடிவான எவ்வகையிலும் வலிந்து தக்கவைக்கப்பட வேண்டுமெனும் தேவையைக் கடந்த பேரானந்த நிலை மலரும். இதுவே பிரம்மம், பேரிருப்பு, பேரியற்கை!
இந்நிலையை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நேர்முகமாகவும், நேர்மறையான அணுகுமுறையின் வாயிலாகவும் அடையவும், அனுபவம் கொள்ளவும், உணரவும் ( அதாவது 'ஐஸ்-க்ரீம்' சாப்பிடுவதைப்போல அனுபவிக்கவும்) முடியும், முடியும், முடியும்!
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! ஏனெனில், இதுதான் மனிதனின் அசலான சொரூபம்; இதுதான் அவனது சொந்த வீடும், பேறும். ஒருவனது சொந்த வீட்டிற்குச் செல்ல எவரும் வழி காட்டத் தேவையில்லை! சொந்த வீட்டிற்குச் செல்லவேண்டும் என்கிற மாபெரும் ஏக்கம் மட்டுமே வேண்டும். இதை "அடைய முடியாது" என ஒருவர் சொன்னால்தான் நாம் ஆச்சரியப்படவும், அதிர்ச்சியடையவும், அவரது 'புத்தி சுவாதீனம்' குறித்து சந்தேகப்படவும் வேண்டும்.
இவை யாவும் கற்பனையான விடயங்களோ, அல்லது சாதாரண மனித நிலையில் திருப்தியடைய இயலாத ஒரு விபரீத மனத்தின் அதீதக் கருத்தாக்கங்களோ அல்ல. இவை பரிணாம பூர்வ உண்மைகளாகும். இவை கடினமானவையாக இருப்பதாகத் தெரியலாம். ஆனால், இறுதியில் மகா சுகம் உள்ளது!
உண்மையில், பேருண்மை, ஞான-ஒளி-விளக்கம், முக்தி, மோட்சம், விடுதலை, வீடுபேறு, எனப்படுபவை பேரானந்தமாக இல்லையெனில், அவற்றைத் தேடுவது, அடைவது பயனற்றது, தேவையற்றது. பேரானந்தம் என்பது ஒரு இன்ப உணர்வு அல்ல! அது ஒருமையும் முழுமையுமான நிலை. அதிலிருந்து பிரியாமல், சற்று விலகியிருந்து, அதை ஒரு இன்ப நிலையாகவும், அனுபவமாகவும் உணர முடியும்! பிளவற்ற முழுமை நிலையில், ஆனந்தம், ஆனந்திப்பவன், ஆனந்தம் தரும் பொருள் யாவும் தானாகவே இருக்கிறான்!
பேரானந்தம் எனும் பேருண்மையின் ஒளி எவற்றின் மீதெல்லாம் படிகின்றதோ அவை எல்லாம் அந்த ஒளியைப் பிரதிபலிப்பதால் பேரானந்தத்தின் தன்மையையே அவை பிரதிபலிக்கின்றன.
ஒரு புறம் பேரானந்தம் இன்னொரு புறம் உடம்பில் புற்று நோய்க்கட்டியின் பொறுக்கமுடியாத வலி. ரமணர் சொல்கிறார் (அவர்தான் சொல்லமுடியும்!) :
"அனைத்தும் ஆனந்தமே; துக்கம் கூட
துக்கானந்தமே"
இன்னொருவன் சொன்னான்:
"தீக்குள் விரலைவிட்டால் உன்னைத்
தீண்டும் இன்பம் தோணுதடா!"
இவன் தான் பாரதி.
பேரானந்தம் தான் பேருண்மை, பேருண்மை தான் பேரானந்தம். பேரானந்தத்திற்கு வேறு பெயர்களும் உள்ளன. அர்த்தம், புரிதல், ஞானம், அன்பு, அழகு, உயர் பேரறிவு, கடவுள் . . . . இவை எல்லாமே அந்த இறுதியான முழு-உணர்வு நிலையின் அம்சங்களாகும்.
ஞான விடுதலை என்பது இருக்கின்ற மட்டுப்பாடான (சுயத்தின்) நிலையை, முழுமைக் குறைவான நிலையை மறுப்பதோ, மாற்றுவதோ, சீரமைப்பதோ, அல்லது அப்படியே ஏற்றுக்கொள்வதோ, மறுக்காமல் இருப்பதோ அல்ல. மட்டுப்பாடு என்பது உணர்வுக்குறைவான நிலையே, உணர்வற்ற தன்மையே.
ஞானம், ஞான விடுதலை என்பது எதிலிருந்தும் விடுபடும் நிலையல்ல! எதையும் அடையாமலிருக்கும் நிலையுமல்ல! மாறாக, எல்லாவுமாகிய நிலை, எல்லாவற்றையும் அடைந்த முழு நிறைவான நிலை!
தன்னைத் தொலைத்துவிட்டவனல்ல; முழுமையாகத்
தன்னைக் கண்டடைந்தவனே ஞானி!
சிலர் இருப்பின் அடித்தளம் (GROUND OF BEING)பற்றிப் பேசுகிறார்கள். ஆனல், இருப்பின் அடித்தளமென்பது உணர்வற்ற பௌதீகச் சடத்தன்மை தான். அதற்கும் கீழே (பெரு வெடிப்புக்கு முந்தைய மூல வித்து நிலைக்கு) நாம் செல்ல முடியாது. பரிணாமத்தில் பின்னோக்கிச் செல்வதற்கு வழியே இல்லை! மூல வித்து வெடித்து மறைந்து, முளைத்து, செடியாக வளர்ந்து, மாபெரும் பிரபஞ்ச விருட்சமாக விரிந்து, தற்போது 1500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி அல்லது மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். ஆகவேதான், இக்கட்டுரை "இருப்பின் உச்சம்" (SUMMIT OF BEING) எனும் புதிய புரிதலின் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசுகிறது. இறுதி மெய்ம்மையாகிய முழு-உணர்வு பற்றிப் பேசுகிறது.
ஆம், அனைத்து வகை பிரவாகங்களும் தற்போது முடிவுறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் உணர்வுப் பரிணாமம் உணர்வற்று தேங்கி நிற்கிறது. மனிதனின் முன் உள்ள இறுதிச் சவால் கடவுள் தொடங்கி வைத்ததை மனிதன் விரைவாக முழுமைப்படுத்தி முடித்து வைப்பதே! அதற்கு ஒரே ஒரு "உள்-பார்வை" (INSIGHT) மட்டுமே போதும்! அது எங்கே, எவரிடம் உள்ளது? அந்த மென்-பொருள் (திறவுகோல்) எவரிடமும் எந்தக் கடையிலும் இல்லை. அதை எந்த ஞானியும் எவருக்கும் கொடுக்க இயலாது. ஒவ்வொருவரும் தானே அதை தன்னுள்ளே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஞானத்தின் இடுக்கமான வாசல் வழியே கும்பல் கும்பலாக, கூட்டமாகச் செல்ல இயலாது
இறுதியாக, ஒவ்வொரு மானிடனும் செய்ய வேண்டியது, அனைத்துப் பிரவாகங்களிலிருந்தும் ஒரே தாவலில் வெளியேறிடுவது மட்டுமே!
ஆம், பெரு வெடிப்பிலிருந்து தொடங்கிய இருப்பின் பிரவாகம், மனித சமூகம் படைத்துச் செல்லும் ... வரலாறு எனும் பிரவாகம், தனி மனிதர்களின் அகந்தை அல்லது உணர்-மனத்தின் சொந்தப் பிரவாகம் . . . . என அனைத்து பிரவாகங்களும், இயக்கங்களும் முடிவுற்ற நிலையே ஞானமடைதல், ஞான விடுதலை, பேரானந்த நிலை, முக்தி . . . . . .. யாவும்!
ஆகவே வாசகர்களே, உடனே உணர்வுக்கு வந்திடுங்கள். ஆம், நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், விழிப்பைத்தவிர பிறவனைத்தும் விபத்துக்களே! விழிப்பு மட்டுமே அனைத்து மட்டுப் பாடுகளின் பிரவாகங்களிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரே வழி!
■
மா.கணேசன் /Conceived and completed on 06.08.2013/ Uploaded on 22-09-2024
No comments:
Post a Comment