Wednesday, 30 July 2025

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1





 

 

 

 

 

 

 

கேள்வி - 1


நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், தந்தை போன்ற எந்த உறவுகளைச் சந்திக்க விரும்புவீர்கள்? 


மன்னிக்கவும், நான் எவரையும் சந்திக்க விரும்பமாட்டேன். ஏனென்றால், அப்படியொரு 'வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கை' என்றொன்று இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்பதாகவே எனது புரிதல் சொல்லுகிறது.  எனது தாய், தந்தை மீது  நான் அளவற்ற அன்பு கொண்டவன் என்றாலும், அவர்கள் அவர்களுடைய தொடரும் உணர்வியல் பரிணாமத் தேவைக்கேற்ப, அவர்கள் மீண்டும் எங்காவது பிறந்திருக்கலாம்! அல்லது அவர்கள் உணர்வியல் முழுமையடைந்தவர்களாக முழு-நிறைவடைந்திருக்கலாம்- அதாவது, இருப்பு, இன்மை கடந்த நிலையில் ஆழ்ந்திருக்கலாம்! ஆகவே , அவர்களை  வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில், தேடிச் சந்திக்கவோ, எவ்வகையிலும் அவர்களைத் தொந்திரவு செய்யவோ நான் விரும்பவில்லை!


அப்படி வாழ்க்கைக்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது எனில், நான் எனது விசார நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தொடர்ந்து விசாரப் பாதையில் செல்லுமாறு வலியுறுத்துவேன்! 


<>
வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
மறுப்பது தான் உயரிய ஞானம்!
ஏனெனில், எல்லா உலகங்களும்
இவ்வுலகம் போலவே உனது உணர்வைச்
சார்ந்திருப்பவையே!
உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
முழு-உணர்வே!

 
-- மா.கணேசன் / 


"கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" Sunday, 24 April 2016 வலைப்பதிவிலிருந்து
http://vicharamarg.blogspot.com/2016/04/blog-post_24.html
     <>
 ■
மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 2

மரணத்திற்குப் பிறகு ஆன்மா எங்கே செல்கிறது?  

 
ஒரு மனிதன் இறந்தபிறகு, அவனுடைய ஆன்மா எங்கேயும் செல்வதில்லை! அம்மனிதன் உயிரோடிருக்கும் போது அவனது ஆன்மா எங்கே இருந்ததோ, அங்கேயே தான் அது இருக்கிறது, இருக்கும்! ஏனென்றால், ஆன்மா என்பது உணர்வியல் ரீதியாக(ஒவ்வொரு மனிதனும் அடைந்திடக்கூடிய )மனம் எனும் சிற்றுணர்வைக் கடந்த, விசேடமான ஒரு உயர் உணர்வு நிலையே தவிர வேறில்லை! ஆக, உணர்வின் தளம் என்பது உடலோ, அல்லது மூளையோ அல்ல! உணர்வு, மனம் என்பவை பொருண்மையான எதையும் சார்ந்திருப்பதான அம்சங்கள் அல்ல! மூளைதான் மனதின் இருப்பிடம் என்பது (நதியை மலைதான் உற்பத்தி செய்கிறது என்பது போன்ற) ஒரு பொதுவான, தவறான  புரிதல்தானே தவிர, அது உண்மையல்ல! மூளையின் வழியாக மனமும், உணர்வும் அணுகப்படுகிறதே தவிர, மனம் என்பது மூளைச் செயல்பாட்டின் போது தோன்றும் ஒரு ஒளிப்புள்ளியே; அது ஏற்கனவே 'வெளி-காலம்-பொருண்மை' -யின் கட்டமைப்பை [அதாவது பிரபஞ்சத்தைக்] கடந்த ஒரு பரிமாணம் ஆகும். 


மனம், ஆன்மா என்பவற்றை உணர்வின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளவேண்டும். மனம் என்பது சிற்றுணர்வு, அல்லது தொடக்க நிலை உணர்வு என்றால், ஆன்மா என்பது இறுதி நிலை உணர்வு அல்லது முழு உணர்வு எனலாம். ஆம், விழிப்படைந்த மனமே ஆன்மா என்பதாகும்.

மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 3


மறுபிறவி என்பது இருக்கிறதா?  

     
ஒருவன் இந்த பிறவியை முழுமையாக வாழ்ந்து முடிப்பானேயானால், அதாவது தனது வாழ்காலத்திற்குள்ளேயே தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டானெனில், அவனுக்கு ஏன் இன்னொரு பிறவி?
ஆனால், ஒருவன் தனது பிறவிப்பயனை அடையவில்லை, தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிக்க வில்லை என்றால், அவன் மீண்டும் பிறப்பது உறுதி.  


தொடர்ந்து இக்கேள்விக்கான பதிலுக்குள் செல்வதற்கு முன், சில விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம் ஆகும்.
நாம் எலிகளைப் போலவோ, தவளைகளைப் போலவோ இருந்தால் மறுபிறவி பற்றிய கேள்வி எழுந்திருக்காது! ஏனென்றால், எலிகளும், தவளைகளும் பிறக்கின்றன, இரை தேடுகின்றன, இணைதேடி இனம் பெருக்குகின்றன, பெரு விலங்குகளுக்கு இரையாகிவிடாமல் தப்பி உயிர் பிழைக்கின்றன. பிறகு ஒரு கட்டத்தில் இறந்துவிடுகின்றன. இவ்வாறு இறந்துபோன எலிகளும், தவளைகளும் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை! ஒருவேளை பிறந்தாலும், அவை என்ன செய்யப்போகின்றன? மேலே சொன்ன அதே சுற்றுதான் -- இரை தேடுதல், இணை தேடுதல், கொன்றுண்ணி (Predators)களுக்கு இரையாகாமல் தப்பிப்பிழைத்தல் என்பதுதானே! இத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கு மறுபிறவி தேவையில்லையே; வெறும் இனப்பெருக்க முறையே போதுமே! முக்கியமாக, ஒரு எலி, அல்லது ஒரு தவளை என்பது ஒரு உருப்படி தானே தவிர அவற்றிற்கு யாதொரு மனமோ, தனித்துவமோ (Individuality) கிடையாது!
மறுபிறவி ஏற்படவேண்டுமானால், அதற்குரிய அடிப்படை இருக்கவேண்டுமல்லவா!


தனியொரு தவளைக்கு மேற்கொண்டு பரிணமிக்கும் காரணமோ, அடிப்படையோ இல்லை. ஏனென்றால், தவளைக்கு மனம் என்பதில்லை, ஆன்மாவும் இல்லை! ஆனால் மனிதனின் பிரச்சினையே வேறு. மனிதனுக்கு 'மனம்' எனும் சிற்றுணர்வு இருக்கிறது; அச்சிற்றுணர்வு மேன்மேலும் பரிணமித்து 'ஆன்மா' எனும் பேருணர்வு அல்லது முழு-உணர்வு நிலையை அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆன்மாவை அடைவதுதான் அவனது பிறவிப்பயன்!

மனிதனுக்குப் பிறகு என்ன?


மனிதனின் மனம் தான் அவனது தனித்துவத்திற்கான அடிப்படை. ஒரு மனிதன் என்பவன் வெறும் ஒரு உருப்படி(எண்ணிக்கை)அல்ல, ஒவ்வொரு தனிதனைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் பரிணமித்தாக வேண்டிய கடமை உள்ளது. ஒரு மனிதனின் மனமானது முழுமையடையும் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறவியெடுத்தாக வேண்டும்.

உலகம் தோன்றி, அதில் முதல் உயிர் தோன்றி, பிறகு மனிதன் தோன்றி...  இவ்வாறாகச் செல்லும் நெடிய பரிணாம நிகழ்வு முறையின் இறுதி இலக்கு என்னவோ, அந்த இலக்கை பரிணாமமானது ஒவ்வொரு மனிதனினுள்ளும், அவனது உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் அடைய விழைகிறது. அதாவது, பரிணாமம் என்பது பொருளியல் (Material/ Inorganic ), உயிரியல்-உடலியல் (Biological/Organic ) என்கிற கட்டத்தைக் கடந்து உணர்வியல் கட்டத்திற்குள் (Psychic )பிரவேசித்துவிட்டது! ஆகவே பரிணாமத்தில் மனிதனுக்குப் பிறகு என்ன தோன்றும் என்ற கேள்வி பரிணாமத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகும்!

மீண்டும் பிறவியெடுப்பது எது?


ஒரு மனிதனின் இறப்பு என்பது அவனது உடலின் இறப்பைத்தான் குறிக்கிறது.  இறந்த அந்த உடல் மீண்டும் பிறக்க இயலாது. மனிதன் என்பவன் உடல்-உயிர், மனம் [அரையுணர்வு], ஆன்மா [முழு-உணர்வு] என மூன்று அடுக்குகளால் ஆனவன். ஆக, உடல் மரித்தாலும், ஒரு மனிதனின் மனம் மரிப்பதில்லை, மாறாக, அந்த மனம், பிறக்கும் வேறொரு புதிய மனித உடலில் தோன்றி அதன் பரிணாமத்தை தொடரவிருக்கிறது. ஒரு மனமானது ஒரு பிறவியில் எவ்வளவு உணர்வு பெற்றிருக்கிறது, உணர்வில் வளர்ந்திருக்கிறது என்கிற உணர்வின் அளவு [The Degrees/Levels of Consciousness], அதாவது தர நிலைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. உணர்வின் இந்த தர-நிலை தான் அடுத்தடுத்த பிறப்புகளுக்கு கடத்தப்படுகின்றதே தவிர, சென்ற பிறவியில் பெற்ற அனுபவங்களோ, ஞாபகக்கூறுகளோ கடத்தப்படுவதில்லை. ஆகவேதான் நமக்கு சென்ற பிறவி ஞாபகங்கள் எதுவும் இருப்பதில்லை. வெறுமனே சென்ற பிறவியின் போது வாழ்ந்த, பெற்ற அனுபவங்கள் அனைத்துக்கும் அடியோட்டமாக அமைந்த அந்த உணர்வு மட்டுமே அடுத்த பிறவியில் புதிதாக தனது வாழ்வைத் தொடங்குகிறது. 


உண்மையில், ஒருவன் எத்தனை பிறவியெடுத்தாலும் வாழ்க்கை அனுபவங்களும், உலக அனுபவங்ககும் ஒருவனது ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக யாதொரு பங்களிப்பையும் செய்வதில்லை! மாறாக, ஒருவனது மெய்ம்மை நாட்டமும், அர்த்தம் தேடுதலும், உண்மையில் தான் யார் என்பதை அறியும் பெருவிழைவும் தான் ஒருவனது ஆன்ம வளச்சிக்கும், உணர்வு வளர்ச்சிக்கும் உதவுவதாக அமைகிறது. ஆகவேதான், ஆன்மீக முன்னோடிகள் பலர் துறவு பற்றியும், ஆசைகளை அறுப்பது பற்றியும் பேசியுள்ளனர். ஆனால், ஒருவன் தீவிர ஆன்மீக நாட்டத்தில் இருந்துகொண்டே, அன்றாட இல்லற வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல உணவு, நண்பர்கள், இசை, கலை, .... என எல்லாத் தளத்திலும் தீவிரமாக அனுபவம் கொள்ளவும், பக்குவமாக வாழவும் முடியும்.

மா.கணேசன்/27.07.2025/நெய்வேலி.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

உணர்வு (Consciousness ) என்பதும் கடவுள் என்பதும் ஒன்றா?



 

 

 


 

 

 

சுருக்கமான பதில்: ஆம், அப்படியும் சொல்லலாம்; ஆனால் சொல்லக் கூடாது!

ஒருபுறம் இந்த பொருள்முதல்வாதிகளும், நாத்திக வாதிகளும் "கடவுள் இல்லை, உணர்வும் இல்லை!" என் கிறார்கள்!   இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

உணர்வின் [Consciousness] முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் முன்வைக்கும் விசயத்தைப் பொறுத்தவரை, படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] என்போரை நாம் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் சந்தடி சாக்கில், தங்கள் கிறிஸ்த்தவக் கடவுளை முன்னிறுத்துவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனென்றால், உலகில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தோரும் விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அப்புறம் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் தம்தம் கடவுளை முன்னிறுத்தினால் என்னாவது? அதனால்தான்!

சரி, நாம் இப்போது பிரச்சினையின் ஆழத்திற்குச் செல்வோம். உலகம் தற்செயலானதா? அல்லது கடவுளின் திட்டமிட்ட வடிவமைப்பினால் உண்டானதா? இயற்கையுலகில் ஒரு மாபெரும் ஒழுங்கு [Order]காணப்படுகிறது. இந்த ஒழுங்கு எப்படி வந்தது? இந்த ஒழுங்கு கணிதப்படி துல்லியமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் இருப்பதை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 'அறிவுக்கூர்மையின் மறுவடிவம்' எனக் குறிப்பிட்டார்.  இதை ஆத்திகர்கள் 'கடவுளின் அறிவுக்கூர்மை' என்கிறார்கள். அதோடு நில்லாமல், அறிவுக்கூர்மையுள்ள காரணகர்த்தா ஒருவர் உள்ளார் என்று நம்புவது பகுத்தறிவுக்கு முரணாய் இருக்கமுடியாது என்கிறார்கள்.

இயற்கையின் உலகில், ஒழுங்கும், வடிவமைப்புமும் உள்ளடங்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இயற்கையுலகில் வெளிப்பட்டுள்ள உயிர், மனம், உணர்வு போன்ற அம்சங்களைப் போலவே, ஒழுங்கு, வடிவம், அமைப்பு யாவும் பரிணாமப் [Evolutionary] பூர்வமானவையே.

பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றியபோது யாதொரு ஒழுங்கும், பாங்கும், வடிவமைப்பும், எதுவுமில்லாத முற்றான ஒழுங்கின்மையே [Chaos] நிலவிற்று. சொல்லப்போனால், இயற்கையுலகில் உள்ள அனைத்தும், ஏன் இயற்கையும், யாவும், ஏன், கடவுளும் கூட பரிணாமப்பூர்வ அம்சங்களே! ஆகவே இயற்கையில் பொதிந்துள்ள அறிவுக்கூர்மையும் பரிணாமத்திற்கு உட்பட்டதே.

பிரபஞ்சம் தோன்றிய மூன்றாவது நிமிடத்தில் எத்தகைய அறிவுக்கூர்மை நிலவியது? பெரிதாகச் சொல்லும்படியாக இல்லை. ஐயத்திற்கிடமின்றி இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு, அது தொடர்ந்து பரிணமித்துக் கொண்டும் உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அது ஆத்திகர்களிடமும், நாத்திகர்களிடமும், ஏன், விஞ்ஞானிகளிடமும் ஓரளவுக்கு மேல் பரிணமிக்கவில்லை!

இயற்கையில் காணப்படும் ஒழுங்கையும் அதி நுட்பமான வடிவமைப்பையும் கண்ட ஐன்ஸ்டீன் அதை "அறிவுக்கூர்மையின் மறுவடிவம்" எனக் குறிப்பிட்டிருக்கலாம். அதில் தவறில்லை! ஆனால், இயற்கையில் இத்தகைய ஒழுங்கு எப்படி வந்தது? எனும் கேள்விக்கான சரியான பதில் "பரிணாமத்தினால்" என்பதாகத் தான் இருக்க முடியும்.

அடுத்து, இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு அனைத்துத் துறைகளின் விஞ்ஞான அறிவும் இயற்கையிடமிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவையே என்பதை அறிந்து அங்கீகரித்திடும் மனிதனும் அறிவுக்கூர்மை உடையவனே!

அதே வேளையில், அறிவுக்கூர்மை பற்றிப் பேசும் போது, அது என்னுடையதோ, உங்களுடையதோ, வேறு எவருடையதோ அல்ல! மாறாக, அறிவுக்கூர்மை என்பது அறிவுக்கூர்மை தான்! இன்னும் அது கடவுளுடையதும் அல்ல! ஆகவே அறிவுக்கூர்மையுள்ள 'காரணகர்த்தா' ஒருவரை நாம் கற்பனையாக உருவாக்கிக்கொள்ளவோ, அவரைத் தேடிச் செல்லவோ, வணங்கி வழிபடவோ, போற்றிடவோ, அல்லது அவரைத் தூற்றிடவோ, மறுத்திடவோ, தேவையில்லை! ஏனெனில், கடவுளின்  அறிவுக்கூர்மை என்றெதுவும் இல்லை. மாறாக, அறிவுக்கூர்மை தான் கடவுள்!

ஆனால், அறிவுக்கூர்மை என்பதென்ன? அது எங்கிருந்து ஊற்றெடுக்கிறது? அதன் அடிப்படை என்ன? ஆம், அறிவுக்கூர்மையின் அடிப்படை "உணர்வு" [Consciousness] தான்! உணர்வு என்பதில்லாமல் அறிவுக்கூர்மை இல்லை! ஆகவே, உணர்வை நாம் 'கடவுள்' எனக் கொள்ளலாம். ஆனால், வழக்கமாக, மதங்கள் முன்வைக்கும் அந்தக்கடவுள் அல்ல! இவ்விடத்தில் நாம் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்!

அதாவது, மதங்களின் கடவுளை வழிபடுவது, தொழுவது, அவரை நோக்கி பிரார்த்தனை செய்வது போன்ற சடங்குபூர்வமான விசயங்கள் அறிவுக்கூர்மை எனப்படும் கடவுளிடம் எடுபடாது! ஏனென்றால், அறிவுக்கூர்மையை வழிபடவோ, வணங்கவோ, இயலாது; அப்படிச் செய்வதனால் ஒரு பயனும் விளையாது!

மாறாக, மனிதன், தன் அறிவைக் கொண்டுதான் அறிவுக்கூர்மையை அணுகவும் அறியவும், அடையவும் முடியும். 'கடவுள்' என்று குறிப்பிடத் தக்க மாபெரும் அறிவுக்கூர்மையை, அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் மாபெரும் உணர்வை மனிதன் எட்ட வேண்டுமானால், அதற்கிணையான உணர்வு நிலைக்கு ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வில் பரிணமித்து உயரவேண்டும்.

மேலும், இயற்கையில் ஒழுங்கும், அதி நுட்பமான வடிவமைப்பும் இருக்கிறது என்பதால், அதை வடிவமைத்த ஒரு 'மகா நபர்', கடவுள் என்று ஒருவர் இயற்கைக்குப் பின்னால், பிரபஞ்சத்திற்குப் பின்னால் இருக்க வேண்டும் எனும் சிறுபிள்ளைத் தனமான முடிவுக்கு உடனே தாவிக்குதித்திடல் வேண்டாம்! ஏனெனில், கடவுளோ, வேறு எவரோ பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தை வடிவமைக்கவில்லை!

மாறாக, முற்றான ஒழுங்கின்மை [Chaos] யிலிருந்து முழுமையான ஒழுங்கையும், மிக எளிய வடிவமைப்பில் தொடங்கி  மிகவும் சிக்கலான வடிவமைப்பையும் நோக்கிச் செல்லும் பரிணாம வழிமுறையில் மேன்மேலும் பரிணமிக்கும் ஒழுங்கும் வடிவமைப்பும் தான், கடவுளை வடிவமைக்கவும், கட்டமைக்கவும் போகின்றன.

கடவுள் என்பது இறுதியான ஒழுங்கு மற்றும் வடிவமைப்பு என்பதிலிருந்து வேறானது அல்ல! ஏதோவொரு வகையில் பிரபஞ்சத் தோற்றத்திற்கு, 'கடவுள்' அதாவது 'கடவுளையொத்த' அறிவுக்கூர்மை' காரணமாய் அமைந்திருக்கலாம். ஆனால், உலகம், பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னிருந்த கடவுளோ, அல்லது அறிவுக்கூர்மையோ முக்கியமல்ல! ஏனென்றால், அவர்/ அது 'மறைந்து' காணாமல் போய் 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றன! உண்மையான, உயிருள்ள கடவுள் கடந்தகாலத்தைச் சேர்ந்தவராக இருக்கவியலாது. இன்னும் அவர் நாளை, வருங்காலத்தைச் சார்ந்தவராகவும் இருக்கவியலாது. துல்லியமாகச் சொன்னால், கடவுளை ஒரு போதும் காலத்தின் உலகில் காண இயலாது! ஏனெனில், 'காலாதீதம்' அல்லது 'அனந்தம்' தான் கடவுள்!

மேலும், சில மதங்கள் எதிர்பார்ப்பது போல், உலகின் முடிவில், அல்லது அழிவில் கடவுள் தோன்றப் போவதில்லை! மாறாக, உலகின் முழுமையில் மட்டுமே கடவுள் தோன்றுவார்! உலகின் முழுமையானது ஒவ்வொரு மனிதனின் பரிணாம முழுமையைச் சார்ந்துள்ளது. ஆம், மனிதன் தன் உணர்வில் முழுமையடைகிற இடத்தில் கடவுள் தோன்றிடுவார்!

மா.கணேசன்/ 28.07.2025/நெய்வேலி.
"ஆழமான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும்" எனும் தொகுப்பிற்காக புதிதாக எழுதப்படும் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Tuesday, 29 July 2025

'பெரு வெடிப்பு'க்கு முன் என்ன இருந்தது?

 



 

 

 

 

 

 

"பெரு வெடிப்பு" [Big Bang Theory] என்பது பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும். ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் பொருண்மையும் [Matter], கனபரிமாணமற்ற ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அதன் உள்ளார்ந்த அழுத்தம் தாங்காமல் வெடித்து இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும், அவ்வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சம் இன்றளவும் பரந்து விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் கூறுகிறது.

இக்கோட்பாட்டின்படி, அவ்வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது எனப்படுகிறது. பெரு வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், அவ்வெடிப்பிற்கு முன் எந்த 'வெளி' [Space] யில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் யாவும் இருந்தன என்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

மேலும், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்டால், அப்படிக் கேட்பது அர்த்தமற்றது என பெரு வெடிப்புக் கோட்பாட்டாளர்கள் மிரட்டுகின்றனர்.  இந்த விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் திறந்த மனதுடன் மெய்ம்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக, பருப்பொருள் அதாவது சடப்பொருள்தான் முதன்மையான, சாசுவதமான, யாவற்றுக்குமான அடிப்படையான நிஜம் அல்லது மெய்ம்மை என அடித்துச் சொல்லும் கூச்சமில்லாத பொருள்முதல்வாதிகளாகத் திகழ்கின்றனர்.  

ஆனால், இந்தப் பொருள்முதல்வாதிகளின் கூச்சலைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. கேட்க வேண்டிய கேள்விகளை தர்க்கரீதியாக நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். ஆம், பெரு வெடிப்புக்கு முன் என்ன, எத்தகைய மெய்ம்மை இருந்தது? ஒரு வெடிப்பில் தான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், பெருவெடிப்புக்கு முன் ஒரு பொருளல்லாத [Non-Material]  மெய்ம்மை தான் இருந்திருக்க வேண்டும்! இனி அது எத்தகைய பண்பு கொண்ட மெய்ம்மை, என்பதைக் கண்டறிவதுதான் நம்முன் உள்ள சவாலாக இருக்கமுடியும்.

இதுவரை நாம் அறிந்த அம்சங்களுள் மனம் அல்லது உணர்வு [Consciousness] என்பது தான் பொருள் தன்மை கலவாத அம்சம் ஆகும். அதையும் கூட பொருள்முதல்வாதத்தினால் பீடிக்கப்பட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. மனம் அல்லது உணர்வு என்றோரு விசயமே இல்லை என்று சாதிக்கிறார்கள். ஆம் விஞ்ஞானத்தின் அனைத்துத் துறைகளிலும் இந்த பொருள்முதல்வாத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளைப்போல் ஊடுருவி விட்டுள்ளனர்!

அதே நேரத்தில், எவ்வித சார்பு நிலையும் கொள்ளாத, திறந்த மனதுடைய சில விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான்
மேக்ஸ் ப்ளாங்க் [Max Planck] எனும் விஞ்ஞானி; இவர் 1963-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர்தான் குவாண்டம் எந்திரவியலின் [quantum mechanics] தந்தை எனப்படுபவர். இவரது கூற்றுப்படி, "உணர்வு [Consciousness] தான் யாவற்றுக்கும் அடிப்படையான நிஜம். பொருள் என்பது உணர்விலிருந்து பெறப்பட்ட ஒன்று. உணர்வே ஒட்டு மொத்த பொருளாலான உலகிற்கும் அடியோட்டமான ஆழமான நிஜம்" என்றாகிறது.

அடுத்து, எர்வின் ஷ்ரோடிங்கர் [Erwin Schrödinger] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது பொருளின் ஒரு தயாரிப்போ/ விளை பொருளோ அல்ல; வெறுமனே மூளைச் செயல்பாட்டின் ஒரு துணை விளைவு,அல்லது இரண்டாம் பட்ச வெளிப்பாடோ அல்ல. மாறாக, உணர்வு தான் அடிப்படையான நிஜம் - பகுக்கவியலாத ஒற்றைத் தனி நிஜம் ஆகும்" என்றார்.

அடுத்து, யூஜின் விக்னர் [Eugene Wigner] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது ஒரு பொருளல்லாத [non-physical entity ] சுயாதீன இருப்பு கொண்ட அம்சம்; அது பௌதீக உலகுடன் வினைபுரியும் ஒன்று...." என்றார்.

அடுத்து, டொனால்ட் ஹாப்மேன் [Donald Hoffman], இவர் ஒரு Cognitive Science விஞ்ஞானி ஆவார். இவரும் உணர்வுதான் பௌதீக உலகின் அடிப்படையான நிஜம் என்றார்.

அடுத்து, க்ரிஸ்டோஃப் கோச் [Christof Koch], Neuroscientist; ராபர்ட் லேன்ஸா [Robert Lanza], Stem cell and regenerative medicine ;  ரோஜர் பென்ரோஸ் [Roger Penrose], Mathematical physics, David Chalmers, [philosopher]; Philip Goff, [philosopher]; Annaka Harris, [science editor] என இத்தனை விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் எடுத்துச்சொல்லியும் பொருள்முதல்வாதக் குட்டையில் ஊறிய விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் விஞ்ஞானப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் மறுத்து வருகின்றனர். இந்த அடாவடிக் காரர்கள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளைக் கூட மதிப்பதில்லை!

இந்த பொருள்முதல்வாதிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

இந்தக் குழப்பவாதிகளுக்கு மத்தியில் எவ்வாறு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் நிறுவுவது என்பது பெரும் சவாலான விசயமே!
நாம் மீண்டும் பிரதான விசயத்திற்கு வருவோம். ஆம், பொருளாலான பிரபஞ்சத்தின் பிறப்புக்கு முன்னர், அதாவது பெருவெடிப்புக்கு முன்னர் பொருளல்லாத ஒரு விசேட அம்சமான உணர்வே இருந்தது. இதை  நிறுவுவதற்கு நாம் பரிணாம வரலாற்றின் போக்கையும் அதன் அசலான இலக்கையும் புரிந்துகொள்வது அவசியமாகும். அதற்கு முன்னர் பொருள் என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதையும் ஆராய்ந்தறிந்தாக வேண்டியது முக்கியமாகும்.

முதன்முதலில், பெரு வெடிப்பில் தோன்றியது பொருள், பருப்பொருள், சடப்பொருள் எனப்படும், உயிரற்ற, உணர்வுமற்ற பொருள்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை! ஆனால், அப்பொருள் எப்படி வந்தது? பொருள்முதல்வாதிகள் சொல்வது போல், "பொருள் சுயம்புவாக தன்னில் தானாகத் தோன்றியதாக, என்றென்றும் சாசுவதமாக இருக்கும் ஒரு பொருள்" என்பதை நம்மால் ஏற்கவியலாது. அது தர்க்கவியலின் படி தவறானதாகும். பண்பளவில் உயிரற்ற, உணர்வுமற்ற பொருள் [பொருளும், சக்தியும் ஒன்றே என்றாலும் கூட] எவ்வாறு தன்னில் தானாகத் தோன்றிட இயலும்? முக்கியமாக, பெருவெடிப்பில்தான் இப்பொருள் தோன்றியது எனும் பட்சத்தில், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் பெறுவதாகிறது.

"கடவுள்தான் உலகைப் படைத்தவர்!" என்று இறையியலாளர்களும், ஆத்திகவாதிகளும் சொல்லும் போது, "அந்தக் கடவுளைப் படைத்தது யார், எது?" என பொருள்முதல்வாதிகளும், நாத்திகவாதிகளும் கேட்டு கொக்கரிக்கின்றனரே; அதேபோல் "பொருள் எவ்வாறு எங்கிருந்து வந்தது, அதைப் படைத்தது எது, யார்?" என்று கேட்டால் பொருள்முதல்வாதிகள் என்ன சொல்வார்கள்; அவர்கள் முகங்களை எங்கே புதைத்துக் கொள்வார்கள்?!

சரி, இந்த இரண்டு அணிகளும், அவர்களுடைய கூச்சல்களும் ஒரு புறம் இருக்கட்டும். ஆம், எந்தவகையிலும் பொருள் என்பது சுயம்புவாக தானே தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை.  நிச்சயமாக, பெரு வெடிப்புக்கு முன் பொருளல்லாத ஒரு மெய்ம்மை இருந்திருக்க வேண்டும். அதை நாம் உணர்வு என்கிறோம்; ஆனால், அது மனித உணர்வோ, அல்லது கடவுளோ அல்ல! நாம் கூறும் உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது!

இதை எவ்வாறு நாம் சொல்கிறோம் என்றால், பெருவெடிப்பின் போது பொருள் மட்டும்தான் தோன்றியது. காலம், வெளி என்பவையும் கூட பொருண்மையான அம்சங்களே என்பதால், இவற்றையும் நாம் பொருண்மை [Material] என்பதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், பெருவெடிப்பில் தோன்றிய இப்பொருளானது சும்மா இருக்கவில்லை. மாறாக அது ஒரு நீண்ட நெடிய பரிணாம நிகழ்வு முறைக்கு உட்படுவதாகிறது. அதாவது பொருளானது பரிணமித்து ஒரு கட்டத்தில் உயிராக(உயிரியாக)எழுகிறது! அந்த உயிரியானது மேன்மேலும் பரிணமித்து ஒரு கட்டத்தில் உணர்வுள்ள ஜீவியாக [அதாவது மனித ஜீவியாக] எழுகிறது! இப்போது மனித ஜீவிகளாகிய நாம் நம் மனதின் உணர்வைக் கொண்டு சிந்திக்கிறோம், நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுமுள்ள பரந்த பிரபஞ்சத்தையும் ஆராய்கிறோம். அப்படியானால், இந்த உணர்வு எங்கிருந்து வந்தது? பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்பது தெரியவில்லை என்று வைத்துக்கொள்வேம்; ஆனால், பெருவெடிப்புக்குப் பின் மாபெரும் பிரபஞ்சம் எழுந்தது மட்டுமல்ல, அதில் ஒரு கட்டத்தில் உயிர்ப் பண்பு அதாவது உயிருள்ள ஜீவிகள் தோன்றின; பிறகு ஒரு கட்டத்தில் உணர்வுப் பண்பு அதாவது உணர்வுள்ள ஜீவிகளான நாமும் தோன்றினோம்! இந்த உயிர்ப்பண்பும், உணர்வுப்பண்பும் சடப் பிரபஞ்சத்தில், எவ்வாறு, ஏன் தோன்றியது? பொருள், உயிர், உணர்வு இம்மூன்றும் துல்லியமாக தனித்த பண்புகளைக் கொண்டவையாகும். பண்பளவில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட அம்சங்களாகும். இம்மூன்று பண்புகளும் இப்பிரபஞ்சத்தில் ஒத்திசைவுடன் இணைந்திருக்கின்றன.

மனித ஜீவிகளாகிய நாம் தவளைகளைப் போல சிந்திக்கும் மனமோ, உய்த்துணரும் உணர்வோ இல்லாதவர்களாய் இருந்தால், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியே எழுந்திருக்காதல்லவா? ஆகவேதான், இவ்வாதங்களையும் தர்க்கங்களையும் வைத்துத் தான் சொல்கிறோம், "உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது! ஆகவே, பெரு வெடிப்புக்கு முன் ஒரு விசேட பெரும் உணர்வு தான் இருந்தது. அந்த பேருணர்வு தான் உருமாறி பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆனது. பிறகு அப்பொருளானது பரந்து விரியும் பிரபஞ்சமுமானது!" என்கிறோம்.

அறிவு குழம்பிய பொருள்முதல்வாத விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் சொல்கிறார்கள், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்பது அர்த்தமற்றது என்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், 'பெருவெடிப்பு' என்பது ஒரு 'நிகழ்வு' மட்டுமல்ல, அதையே அவர்கள் 'கடவுள்' என்பதாக வழிபட்டு வருகிறார்கள் போல!

பொருளை முதன்மையானதாகவும், யாவற்றுக்கும் அடிப்படையானதாகவும், சாசுவத பரம்பொருளாகவும்  கருதும் பொருள்முதல் வாதிகள் எவரும் "பொருள் என்றால் என்ன?" என்பதைப்பற்றி உருப்படியாக இதுவரையிலும் எதையும், எந்த முறையான தெளிவான விளக்கத்தையும்  தரவில்லை.

ஆனால், நம்மால் சொல்ல முடியும், 'பொருள்' என்பது உயிரற்ற, உணர்வுமற்ற ஒன்று; ஆனால், அப்பொருள் தன்னகத்தே அளப்பரிய உள்ளுறையாற்றலைக் கொண்ட ஒரு பரிணமிக்கும் பொருளாகும். பொருள் என்பது தன்னில் எவ்வகையிலும் முடிவானதோ, இறுதியானதோ அல்ல. அது ஒரு பரிணாமக் கருவி, ஒரு பரிணாம் ஊடகம், அல்லது கட்டுமானப் பொருள் என்கிறவகையில் பொருளானது முதன்மையானதாக இல்லாவிட்டாலும் முக்கியத்துவமான மெய்ம்மையாகும்.

பெருவெடிப்பில் தோன்றிய பொருளானது ஏன் அப்படியே பொருளாக, வெறும் அணுத் துகள்களாகவே இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு தனிமங்களாகவும், மூலகங்களாகவும் ஆயின. ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து பெரும் வாயுக்கூட்டமாக சுற்றிச் சுழன்று 'நெபுலா' வாகவும், அதிலிருந்து கேலக்ஸிகளாகவும், பிறகு எண்ணற்ற நட்சத்திரங்களாகவும், பிறகு கிரகங்களாகவும் ஆயின. பிறகு ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சூரியனைச் சுற்றிச் சுழலும் எட்டு கிரகங்களில் ஒன்றான பூமிக் கிரகத்தின் மீது ஏன் உயிருள்ள ஒரு 'ஸெல்'லாக எழ வேண்டும்?  பிறகு ஒரு ஸெல் உயிரியானது பரிணமித்து பல ஸெல் உயிரிகளாகவும், அடுத்து ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனவும் உருவாக வேண்டும். அப்பாலூட்டிகளில் ஒரு இனமாக சிந்திக்கும் திறனுள்ள, உணர்வு கொண்ட மனித ஜீவிகள் ஏன் உருவாக வேண்டும்? மொத்தத்தில், பொருள் ஏன் பொருளாகவே நில்லாமல் பல்வேறு பண்புகளில் அமைந்த ஜீவிகளாக ஆக வேண்டும்? அதாவது, பொருள் ஏன் பரிணமிக்கும் பொருளாக ஆனது?

ஏனென்றால், பொருளின் பொருண்மைப் பண்பு [Materiality] என்பது அதன் அசலான பண்பு அல்ல! ஆகவேதான் அது தனது அசலான முகத்தை, பண்பைத் தேடிச் செல்லும் நெடிய பரிணாமப் பயணத்திற்கு உட்படுவதாயிற்று! அதாவது, பரிணமிக்கும் பொருளாக, பரிணாமக் கருவியாக, ஊடகமாக, கட்டுமானப் பொருளாக ஆகியது. பொருளானது அதனுடைய பொருண்மைபண்பிலேயே நிலைகொண்டு நிற்க முடியாது! பரிணமிக்கும் பொருள் என்றவகையில் பொருளையும், பரிணாமத்தையும் பிரிக்கவியலாது. பரிணாமத்திற்கு வெளியே பொருளுக்கு யாதொரு அர்த்தமும் கிடையாது!

உண்மையில், உணர்வு தான் பொருளின் அசலான முகமும், பண்பும் ஆகும். அந்த அசலான உணர்வு நிலையை நோக்கியதாகத்தான் அதன் முழு விழைவும் உள்ளது. உணர்வின் ஆகச் சுருங்கிய நிலை தான் பருப்பொருள் என்பதாகும். தன்னைத்தானே மறைத்துக்கொண்ட, சுருக்கிக்கொண்ட உணர்வின் ஒரு வடிவம் தான் பொருள் என்பதாகும்!

இப்போது நாம் விஞ்ஞான ஆதியாகமத்தை மாற்றி எழுதிடுவோம். "இருள் என்பது மிகக் குறைந்த ஒளி!" என்று குறிப்பிடுவது போல, "பொருள் என்பது மிக மிகக் குறைந்த உணர்வு!" என்று சொல்லலாம். ஆம், ஆதியில் உணர்வு, ஒரு 'பேருணர்வு' இருந்தது! அது 'வெடித்து' உருமாறி பருப்பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆகியது! அந்த ஆதிப் பேருணர்வு தற்போது பரந்துவிரியும் இந்த பிரபஞ்சமாகவும், அதில் எண்ணற்ற உயிரினங்களாகவும், முக்கியமாக உணர்வில் பெருகி வளரும் மானுட ஜீவிகளாகவும் இருக்கிறது! ஆனால் மானுட ஜீவிகள் பரிணாம நிகழ்வுமுறையின் இறுதிச் சொல் அல்ல. ஏனென்றால், அவர்களுடைய உணர்வு இன்னும் சிற்றுணர்வாகவே உள்ளது. மானுடர்களில் 99.9% இன்னும் விழிப்படையாமலேயே தங்களது அன்றாடத்திலேயே அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றனர்! நீண்ட நெடிய ஒப்பற்ற பரிணாமத்தின் இறுதி இலக்கு, மனிதனின் உணர்வின் உள்ளேயும், ஊடேயுமாகச் சென்றுயர்ந்து மீண்டும் பேருணர்வை எட்டுவதே ஆகும். தன்னையிழந்து பிரபஞ்சமாக மாறிய பேருணர்வு தன்னை மீள் கண்டுபிடிப்பு செய்வதொன்றே ஆகும். பரிணாமமானது இந்த ஒப்பற்ற இலக்கை ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் அடையவிருப்பதுதான் பரிணாமம் மனிதனுக்கு அளித்துள்ள முக்கியத்துவமாகும்!
 
இந்த பரிணாமப் பொறுப்பைத் தாண்டி மனிதனுக்கு வேறு யாதொரு பெருமையும், தனியொரு வாழ்க்கையும் கிடையாது. மனிதன் என்பவன் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பரிணாமக் கருவியாவான்!

மா.கணேசன்/ 28.07.2025/ நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...