Wednesday, 30 July 2025

உணர்வு (Consciousness ) என்பதும் கடவுள் என்பதும் ஒன்றா?



 

 

 


 

 

 

சுருக்கமான பதில்: ஆம், அப்படியும் சொல்லலாம்; ஆனால் சொல்லக் கூடாது!

ஒருபுறம் இந்த பொருள்முதல்வாதிகளும், நாத்திக வாதிகளும் "கடவுள் இல்லை, உணர்வும் இல்லை!" என் கிறார்கள்!   இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

உணர்வின் [Consciousness] முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் முன்வைக்கும் விசயத்தைப் பொறுத்தவரை, படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] என்போரை நாம் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் சந்தடி சாக்கில், தங்கள் கிறிஸ்த்தவக் கடவுளை முன்னிறுத்துவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனென்றால், உலகில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தோரும் விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அப்புறம் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் தம்தம் கடவுளை முன்னிறுத்தினால் என்னாவது? அதனால்தான்!

சரி, நாம் இப்போது பிரச்சினையின் ஆழத்திற்குச் செல்வோம். உலகம் தற்செயலானதா? அல்லது கடவுளின் திட்டமிட்ட வடிவமைப்பினால் உண்டானதா? இயற்கையுலகில் ஒரு மாபெரும் ஒழுங்கு [Order]காணப்படுகிறது. இந்த ஒழுங்கு எப்படி வந்தது? இந்த ஒழுங்கு கணிதப்படி துல்லியமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் இருப்பதை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 'அறிவுக்கூர்மையின் மறுவடிவம்' எனக் குறிப்பிட்டார்.  இதை ஆத்திகர்கள் 'கடவுளின் அறிவுக்கூர்மை' என்கிறார்கள். அதோடு நில்லாமல், அறிவுக்கூர்மையுள்ள காரணகர்த்தா ஒருவர் உள்ளார் என்று நம்புவது பகுத்தறிவுக்கு முரணாய் இருக்கமுடியாது என்கிறார்கள்.

இயற்கையின் உலகில், ஒழுங்கும், வடிவமைப்புமும் உள்ளடங்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இயற்கையுலகில் வெளிப்பட்டுள்ள உயிர், மனம், உணர்வு போன்ற அம்சங்களைப் போலவே, ஒழுங்கு, வடிவம், அமைப்பு யாவும் பரிணாமப் [Evolutionary] பூர்வமானவையே.

பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றியபோது யாதொரு ஒழுங்கும், பாங்கும், வடிவமைப்பும், எதுவுமில்லாத முற்றான ஒழுங்கின்மையே [Chaos] நிலவிற்று. சொல்லப்போனால், இயற்கையுலகில் உள்ள அனைத்தும், ஏன் இயற்கையும், யாவும், ஏன், கடவுளும் கூட பரிணாமப்பூர்வ அம்சங்களே! ஆகவே இயற்கையில் பொதிந்துள்ள அறிவுக்கூர்மையும் பரிணாமத்திற்கு உட்பட்டதே.

பிரபஞ்சம் தோன்றிய மூன்றாவது நிமிடத்தில் எத்தகைய அறிவுக்கூர்மை நிலவியது? பெரிதாகச் சொல்லும்படியாக இல்லை. ஐயத்திற்கிடமின்றி இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு, அது தொடர்ந்து பரிணமித்துக் கொண்டும் உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அது ஆத்திகர்களிடமும், நாத்திகர்களிடமும், ஏன், விஞ்ஞானிகளிடமும் ஓரளவுக்கு மேல் பரிணமிக்கவில்லை!

இயற்கையில் காணப்படும் ஒழுங்கையும் அதி நுட்பமான வடிவமைப்பையும் கண்ட ஐன்ஸ்டீன் அதை "அறிவுக்கூர்மையின் மறுவடிவம்" எனக் குறிப்பிட்டிருக்கலாம். அதில் தவறில்லை! ஆனால், இயற்கையில் இத்தகைய ஒழுங்கு எப்படி வந்தது? எனும் கேள்விக்கான சரியான பதில் "பரிணாமத்தினால்" என்பதாகத் தான் இருக்க முடியும்.

அடுத்து, இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு அனைத்துத் துறைகளின் விஞ்ஞான அறிவும் இயற்கையிடமிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவையே என்பதை அறிந்து அங்கீகரித்திடும் மனிதனும் அறிவுக்கூர்மை உடையவனே!

அதே வேளையில், அறிவுக்கூர்மை பற்றிப் பேசும் போது, அது என்னுடையதோ, உங்களுடையதோ, வேறு எவருடையதோ அல்ல! மாறாக, அறிவுக்கூர்மை என்பது அறிவுக்கூர்மை தான்! இன்னும் அது கடவுளுடையதும் அல்ல! ஆகவே அறிவுக்கூர்மையுள்ள 'காரணகர்த்தா' ஒருவரை நாம் கற்பனையாக உருவாக்கிக்கொள்ளவோ, அவரைத் தேடிச் செல்லவோ, வணங்கி வழிபடவோ, போற்றிடவோ, அல்லது அவரைத் தூற்றிடவோ, மறுத்திடவோ, தேவையில்லை! ஏனெனில், கடவுளின்  அறிவுக்கூர்மை என்றெதுவும் இல்லை. மாறாக, அறிவுக்கூர்மை தான் கடவுள்!

ஆனால், அறிவுக்கூர்மை என்பதென்ன? அது எங்கிருந்து ஊற்றெடுக்கிறது? அதன் அடிப்படை என்ன? ஆம், அறிவுக்கூர்மையின் அடிப்படை "உணர்வு" [Consciousness] தான்! உணர்வு என்பதில்லாமல் அறிவுக்கூர்மை இல்லை! ஆகவே, உணர்வை நாம் 'கடவுள்' எனக் கொள்ளலாம். ஆனால், வழக்கமாக, மதங்கள் முன்வைக்கும் அந்தக்கடவுள் அல்ல! இவ்விடத்தில் நாம் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்!

அதாவது, மதங்களின் கடவுளை வழிபடுவது, தொழுவது, அவரை நோக்கி பிரார்த்தனை செய்வது போன்ற சடங்குபூர்வமான விசயங்கள் அறிவுக்கூர்மை எனப்படும் கடவுளிடம் எடுபடாது! ஏனென்றால், அறிவுக்கூர்மையை வழிபடவோ, வணங்கவோ, இயலாது; அப்படிச் செய்வதனால் ஒரு பயனும் விளையாது!

மாறாக, மனிதன், தன் அறிவைக் கொண்டுதான் அறிவுக்கூர்மையை அணுகவும் அறியவும், அடையவும் முடியும். 'கடவுள்' என்று குறிப்பிடத் தக்க மாபெரும் அறிவுக்கூர்மையை, அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் மாபெரும் உணர்வை மனிதன் எட்ட வேண்டுமானால், அதற்கிணையான உணர்வு நிலைக்கு ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வில் பரிணமித்து உயரவேண்டும்.

மேலும், இயற்கையில் ஒழுங்கும், அதி நுட்பமான வடிவமைப்பும் இருக்கிறது என்பதால், அதை வடிவமைத்த ஒரு 'மகா நபர்', கடவுள் என்று ஒருவர் இயற்கைக்குப் பின்னால், பிரபஞ்சத்திற்குப் பின்னால் இருக்க வேண்டும் எனும் சிறுபிள்ளைத் தனமான முடிவுக்கு உடனே தாவிக்குதித்திடல் வேண்டாம்! ஏனெனில், கடவுளோ, வேறு எவரோ பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தை வடிவமைக்கவில்லை!

மாறாக, முற்றான ஒழுங்கின்மை [Chaos] யிலிருந்து முழுமையான ஒழுங்கையும், மிக எளிய வடிவமைப்பில் தொடங்கி  மிகவும் சிக்கலான வடிவமைப்பையும் நோக்கிச் செல்லும் பரிணாம வழிமுறையில் மேன்மேலும் பரிணமிக்கும் ஒழுங்கும் வடிவமைப்பும் தான், கடவுளை வடிவமைக்கவும், கட்டமைக்கவும் போகின்றன.

கடவுள் என்பது இறுதியான ஒழுங்கு மற்றும் வடிவமைப்பு என்பதிலிருந்து வேறானது அல்ல! ஏதோவொரு வகையில் பிரபஞ்சத் தோற்றத்திற்கு, 'கடவுள்' அதாவது 'கடவுளையொத்த' அறிவுக்கூர்மை' காரணமாய் அமைந்திருக்கலாம். ஆனால், உலகம், பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னிருந்த கடவுளோ, அல்லது அறிவுக்கூர்மையோ முக்கியமல்ல! ஏனென்றால், அவர்/ அது 'மறைந்து' காணாமல் போய் 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றன! உண்மையான, உயிருள்ள கடவுள் கடந்தகாலத்தைச் சேர்ந்தவராக இருக்கவியலாது. இன்னும் அவர் நாளை, வருங்காலத்தைச் சார்ந்தவராகவும் இருக்கவியலாது. துல்லியமாகச் சொன்னால், கடவுளை ஒரு போதும் காலத்தின் உலகில் காண இயலாது! ஏனெனில், 'காலாதீதம்' அல்லது 'அனந்தம்' தான் கடவுள்!

மேலும், சில மதங்கள் எதிர்பார்ப்பது போல், உலகின் முடிவில், அல்லது அழிவில் கடவுள் தோன்றப் போவதில்லை! மாறாக, உலகின் முழுமையில் மட்டுமே கடவுள் தோன்றுவார்! உலகின் முழுமையானது ஒவ்வொரு மனிதனின் பரிணாம முழுமையைச் சார்ந்துள்ளது. ஆம், மனிதன் தன் உணர்வில் முழுமையடைகிற இடத்தில் கடவுள் தோன்றிடுவார்!

மா.கணேசன்/ 28.07.2025/நெய்வேலி.
"ஆழமான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும்" எனும் தொகுப்பிற்காக புதிதாக எழுதப்படும் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

No comments:

Post a Comment

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...