Tuesday, 23 February 2016

அர்த்தமற்ற அரசியல்


இக்கட்டுரை அரசியலைப் பற்றி பேசுகிறது. ஆனால் அது முன்வைப்பது 'வாழ்க்கையின் அரசியல்'!.
கட்சி கட்டும் விவகாரங்களைக் கடந்து நாம் அரசியலைப் புரிந்துகொள்ளவில்லையெனில் தொடர்ந்து நாம் ஏய்க்கப்படுவோம், மேய்க்கப்படுவோம். ஆம், சுய-சிந்தனை, சுதந்திர-சிந்தனை எனும் ஆயுதங்களை உடனடியாகக் கையில் எடுப்பது மிக அவசரமான அவசியமாகும்.


_______படியுங்கள்!_____________ சிந்தியுங்கள்!_______
____________________பகிருங்கள்!_____________________


பதிவிறக்கம்



Tuesday, 16 February 2016

முக நூல் வாசிகளின் உலகம் (1)



முக நூல் (Facebook)மற்றும் பிற சமுக வலைத்தலங்களும் ஒருவித
கலாச்சாரமாக கண்ணா பிண்ணா வென்று வளர்ந்து உலகம் முழுவதும்
பரவியுள்ளது ! தற்போது மேற்குலகில் ,சமுக வலைத்தளங்களின், குறிப்பாக
முக நூலின் தாக்கத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்த
சிந்தனைகளும், ஆய்வுகளும் விரிவாக நடந்து கொண்டுள்ளன.
முக நூலின் பிடியிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ
அவ்வளவுக்கு நல்லது என வலியுறுத்தப்படுகிறது!
   முக நூல், முதன் முதலாக பிப்ரவரி 2004 ல்,மார்க் ஸுக்கர்பர்க் (Mark
zuckerberg) அவர்களால் அமெரிக்காவில் சிறிய அளவில் தொடங்கப்
பட்டது. இன்று அதன் உறுப்பினர்கள் 1000 கோடி  பேர்களுக்கும் மேலாக
அதிகரித்துள்ளனர்.
  இன்னும் என்னைப்போன்றவர்கள் புதிது புதிதாக முக நூலில் இணைந்த
வண்ணம் உள்ளனர். நான் முதலில் ஆகஸ்ட் 2013 ல் முக நூலைத் தொடங்கி
அப்படியே மூடி வைத்து விட்டு பிறகு தற்போது மீண்டும் ஜனவரி 2016 ல்
திறந்துள்ளேன்.
  இப்போது நான் அலச வந்தது, "பிரச்சினை முக நூலில் உள்ளதா அல்லது
நம்மிடம் உள்ளதா? " என்பதைப்பற்றித்தான். முக நூல் என்பது ஒரு கருவி
போன்றதே. அதை நாம் எவ்வாறு ,எந்தெந்த நோக்கத்திற்காக,எப்படியெல்லாம்
பயன் படுத்துகிறோம்; அவ்வழிமுறைகளின் ஊடே நாம் என்னவாக ஆகிறோம்
என்பதில் தான் சிக்கல் எழுவதாகத்தெரிகிறது.
  முக நூல் ஈடுபாடு என்பது ஒரு வகை போதைப்பழக்கம் (addiction)
போல மாறிவிடுவதாகக் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை!
  எந்த ஒரு கருவி அல்லது பொருள், அல்லது விஷயத்திலும் நேர்மறையானதும்,
எதிர்மறையானதுமான விஷயங்கள், விளைவுகள் நிச்சயம் இருக்கும்.எப்பொழுது
பிரச்சனை என்றால் , எதிர் மறை விஷயங்கள் நேர்மறை விஷயங்களை
விழுங்கிவிடும் போதுதான் !
  முதலில்,நாம் நேர்மறையான அம்சங்களைப் பார்ப்போம் :
 சமுக வலைத்தளம் என்கிற பெயருக்கு ஏற்றால் போல முக நூலானது சமுக
உறவாடலுக்கு பெரிதும் உதவுகிறது. அது முதலில் குடும்பத்திலிருந்து
தொடங்குகிறது. முக நூலின் வழியாக வெகு சுலபமாக நாம் நம் குடும்பத்தினருடன்
(அவர்கள் உலகின் எந்த கோடியில் இருந்தாலும் சரி)பரஸ்பரம் உடனடியாக தொடர்பு
கொள்ளவும்,பேசவும், குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.சமுக
உறவுகளின் விஷயத்திலும் அப்படியே. நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள்,உடன்
பணியாற்றுபவர்கள், இன்னும் தொடர்பு-பட்டியல் வழியே நண்பர்களாக சேர்ந்து
கொள்பவர்கள் என முக நூலின் வழியே எளிதாக எல்லோருடனும் தொடர்புகொள்ள
முடியும்.
  ஆம், முக நூல்-கணக்கை தொடங்கிவிட்டால் போதும், வீட்டில் உட்கார்ந்திருக்கும்
இடத்திலிருந்தபடியே உலகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளமுடியும்.
இவ்விஷயத்தில் முக நூலைவிட வேறுசிறந்த ஊடகம் எதுவுமில்லை எனலாம். தொலைபேசி
மூலம் பேச வேண்டி எடுக்கும் பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை ! ஒரே ஒரு
வாக்கியம் அல்லது ஒரே ஒரு வார்த்தை-- எழுத்துக்களைத்தட்டிச் சேர்த்துவிட்டால்
போதும்.  அடுத்து, அதை அனுப்புவதற்கான ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்,
உடனுக்குடன் முக நூலில் நம்முடன் இனைந்திருக்குமத்தனை நபர்களுக்கும் நம்
செய்தி சென்று சேர்ந்துவிடும்.
  முக நூல் தொடங்கப்பட்ட போது , அது பல்கலைக்கழகங்களின் வளாகங்களுக்குள்
தான் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பிறகு அது கல்வி,வியாபாரம்,சமுகம் . . .என பல
தளங்களுக்கும் விரிவடைந்தது. . . . .
  சமுக வலைத்தளம் என்கிற பெயரில் முக நூல் தற்போது நம் வாழ்வின் பெரும்
பகுதியை ஆக்கிரமித்துள்ளது. சமுகத்தொடர்பு, சமுக உறவுகள்,செய்திப் பரிமாற்றம்,
தகவல் மற்றும் அறிவுப் பகிர்தல், . . .  ஆகிய களங்களில் முக நூலின் சேவை மகத்தானது
என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், நாம் , முக நூலை என்னென்ன நோக்கங்களுக்காக
பயன் படுத்துகிறோம் என்பதில் தான் பிரச்சினை எழுகிறது. அது பற்றி இரண்டாம்
பகுதியில் பார்ப்போம்.
  

Saturday, 13 February 2016

விசித்திர ஞானம்



புல் தரையில் இருக்கிறது,தரை புல்லைச் சார்ந்திருக்கிறது! பூமியும்,சூரிய மண்டலமும்,
பிரபஞ்சமும் அப்புல்லைச் சார்ந்தே இருக்கிறது! புல்லைப் பிடுங்கினால் பிரபஞ்சம்
நெடுகிலும் அதிர்வுகள் அலையெனப் பரவும். புல் புழுவைச் சார்ந்திருக்கிறது,புழு
பறவையைச் சார்ந்திருக்கிறது, பறவை வேட்டைக்காரனைச் சார்ந்தும்,வேட்டைக்காரன்
மனிதனைச் சார்ந்தும்  இருக்கிறான். எல்லாம் மனிதனைச்சார்ந்தே இருக்கின்றன!
மனிதன் தன் உணர்வைச் சார்ந்திருக்கிறான், மனித  உணர்வு இறுதிப் பேருணர்வைச்
சார்ந்திருக்கிறது. ஆகவே, மனிதா, நீ பேருணர்வைச் சேர்ந்திடு!

புல் எங்கு முளைத்ததோ அங்கேயே வாழும் உரிமையை எவரும் அதற்கு வழங்கத்
தேவையில்லை! அவ்வுரிமையை மறுக்க எம்மன்னனுக்கும் அதிகாரம் இல்லை !

புற்களை கால் நடைகள் மேய்ந்திடலாம். மேய, மேய மீண்டும் மீண்டும் புற்கள்
துளிர்த்திடும். மனிதன் புல்லை வேரோடு பிடுங்கி எறிந்திடலாம். ஆனால், புல்லிடம்
எதிர்ப்புணர்வு சிறிதும் இல்லை. ஏனெனில் அதனிடம் அச்சவுணர்வு சிறிதும் இல்லை!
புல்லின் மேன்மை, அது தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பற்று
இருப்பதிலேயே அடங்கியுள்ளது !

எதிர்ப்புணர்வு காட்டாத புல்லைப் பிடுங்கவும் அதிகாரமற்ற நவ நாகரிக அறிவீனர்களே
இயற்கையோடியைந்த பழங்குடிகள்,வனவாசிகள், ஆதிவாசிகளை புலம்பெயர்த்தழிப்பதற்கு
உமக்கேது அதிகாரம் ? உமது அக்கிரமங்களால் சூடேறும் புவிக்கோளம் உங்களை
உக்கிரத்துடன் பொசுக்கிச் சாம்பலாக்கிடும் காலம் வெகு தொலைவிலில்லை!
                         
                       *    *    *

மீன் கடலில் உள்ளது. மீனை கடலிலிருந்து எடுக்கலாம், ஆனால் மீனும் கடலும் பிரிக்க
முடியாதது கடலும் பூமியும் பிரிக்கமுடியாதது. அவ்வாறே, பூமியும் விசும்பும் சூரிய
மண்டலமும் நட்சத்திரங்களும் பால்வீதியும் மொத்தப்பிரபஞ்சமும் - எதையும்
எதனிடமிருந்தும் பிரிக்க முடியாது.

தனித்தனியே தெரியும் தோற்றம் ஒருமையை மறைக்கும் கவனச்சிதறலே!
யாவும் ஒன்றை நோக்கியே சுட்டுகின்றன! யாவும் அந்த ஒருமையை எட்டும்
ஏணியின் படிகளாயின!

ஒவ்வொரு படியும் மேலுயரும் தொடர்- இருப்பில் ஒரு தனியிருப்பு. ஓர் துகள்,புழு,
பூச்சி,பறவை,எலி, புலி, வானரம்,மனிதன் எதுவும் தனித்து இல்லை; தனக்காகவும்
இல்லை! அவை ஒவ்வொன்றும் முழு இருப்பை எட்டிட முயற்ச்சிக்கும் தொடர்-இருப்பின்
ஒரு கண்ணி!                                    ((  3.02.2016 ))
                     

                      *   *  *  *  *




சமத்துவம்


நானும் நீயும் சமம் என்று சொல்வது,நாயும் பூனையும் சமம் என்று சொல்வதைப் போல    
அபத்தமானது. நாயும்  நாயும் சமம் என்று சொல்வதும் பொருத்தமற்றதே. ஏனெனில்,
இரண்டும் சமம் எனும் போது இரண்டு எதற்கு - ஒன்று போதுமே ? உங்களைப் பார்த்த
வுடன் வாலை ஆட்டும் பழகிய நாயும், உங்களைப் பார்த்தவுடன் குரைக்கும் தெரு நாயும்
சமமாக முடியுமா ? உண்மையுணர்ந்தவனையும்,  "அப்படியென்றால் ?"எனக் கேட்பவனையும்
சமமாக "மனிதன்" என்றழைக்க முடியுமா ?

நானும், நீயும் சமமில்லை; நாயும் பூனையும் சமமில்லை; இன்னும் நாயும் நாயும் சமமில்லை. நாய்-
ஒவ்வொரு நாயும் தனித்துவமானது;ஒன்றுக்கொன்று மாற்றாகாது !மனிதனும் அப்படித்தான்,
ஆனால்,ஒவ்வொரு மனிதனும் தன் தனித்தன்மையை தன்னுள்ளிருந்து கன்டு வெளிக்கொணர
வேன்டும்.

நாயோ, பூனையோ , எதுவும் எதற்கும் சமமாக இருக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது?
மனிதனும், எவரும் எவருக்கும் சமமாக இருக்கவேண்டியதில்லை.

நாய், பூனை, நான் , நீ , . . . . அது அது, அது அதற்கும், நான் எனக்கும், நீ உனக்கும் சமமாக இருத்தலே
நலம் -இதுவே உண்மையான சமத்துவம்.

"எல்லா மனிதர்களும் எல்லா நிலைகளிலும் சமமானவர்கள்" என்பது சமத்துவமாகாது.ஏனெனில்,
அது உண்மைக்கு மாறானது. எல்லா மனிதர்களையும் ஒரே மட்டத்திற்கு கத்தரிப்பதுஅல்லது நீட்டு
வது செயற்கையானது.

ஒரு கூழாங்கல், அது எப்போதும் அதற்குச் சமமாகவே விளங்குகிறது. அதனருகில் உள்ள
இன்னொரு கூழாங்கல்லும் அப்படியே. இவ்வாறே இயற்கையில் ஒவ்வொன்றும் தமக்குத்தாமே சமமாகவே
விளங்குகிறது, மனிதனைத்தவிர! ஏனெனில், மனிதன் மட்டும் தனக்குத்தானே சமமாக உயர்ந்தாக
வேண்டும். தனது இயற்கையான நிலையில் தொடரும் வரையில் மனிதன் மனிதனாவதில்லை -
அவன் இன்னுமொரு விலங்காகவே தொடர்வான் !

ஒவ்வொருவரும் தனக்குத்தானே சமமாக விளங்குவது தான் உண்மையான சமத்துவம் ஆகும்.
தனக்குத்தானே சமமாக விளங்கும் மனிதனால் மட்டுமே தனது சக மனிதர்களுடனும் பிற எல்லா
வற்றுடனும் இசைவுடன் வாழ முடியும். இத்தகைய மனிதனின் வழியே தான் "சமத்துவம்" என்பது
சமுகத்துள் தோன்றவும் நிலைபெறவும் முடியும்.

தனக்குத்தானே சமமாக இல்லாததனால் தான் மனிதன் பிறருடன் தன்னை ஒப்பிட்டுப்பார்க்கவும் பிறர்
மீதுபொறாமை கொள்ளவும் ,பொய் சொல்லவும்,பிறர் பொருளை களவாடவும்,பிறரை ஏமாற்றவும்,
வஞ்சிக்கவும், கொல்லவும் செய்கிறான்.

மனிதன் துன்புறுவதும் விரக்தியில் வெந்து மாய்வதும் எதனால் ?
தனக்குத்தானே சமமாக விளங்கும் நேர்வழியை தெரிந்தெடுக்காமல் எது எதற்கோ சமமாக
ஆக வேண்டுமென பொய்யும் போலியுமான செயற்கையான மதிப்புக்களை, இலட்சிய நிலைகளை
அடையத்துடிப்பதும், அடையாவிடில் தோல்வியில் தவிப்பதும் தானே!

வளர்ச்சியின் விதியைப்பற்றிச்செல்லும் பிரபஞ்ச-இயக்கத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை ! எல்லாம்
சமம் எனும் போது அது தேக்கத்தைக் குறிக்கும்; அது வளர்ச்சியின் உள்ளார்ந்த விதியான
உள்-முரண்பாட்டை மரிக்கச்செய்து வளர்ச்சியைத் தடுத்துவிடும்.மேலும் இத்தகைய பிரபஞ்சத்தில்
'சமமின்மை' ( வித்தியாசம் பாராட்டுதல் ) என்பதற்கும் இடமில்லை. ஏனெனில், அது ஏற்றத்தாழ்விற்கு
இடமளித்துவிடும் ! ஆகவே, அதையதை அதனதன் இடத்தில் , நிலையில், அங்கீகரிப்பதொன்றே
இசைவானது, ஆகவே சரியானது .

சிசு தாய்க்கு சமமாகுமா?
மகன் தந்தைக்கும்,
மனைவி கணவனுக்கும்,
நண்பன் நண்பனுக்கும்,
மாணவன் ஆசிரிருக்கும்,
சீடன் குருவுக்கும், சமமாக முடியுமா?
சமுக உறவுகள் உட்பட, எந்த உறவுக்கும் தேவை
'சமத்துவம்' அல்ல, இதயங்களின் "சங்கமம்" மட்டுமே !

  13.2.2016         [மீண்டும் தொடருவோம்]


Thursday, 11 February 2016

என்ன என் மனதில் உள்ளது?

26.1.2016
என் மனதில் உலக விஷயங்கள் இல்லை! ஆனால் அவற்றைப்பற்றிய புரிதல் உள்ளது. ஆகவே,முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே முகநூலுக்குள் பிரவேசித்துள்ளேன். அதன் ஆழம் அறியாமல் அதில் இறங்குகிறேனோ எனும் எச்சரிக்கை உணர்வுடன் அடியெடுத்து வைக்கிறேன்! ஒரு வேளை அது அவ்வளவு ஆழமாக இல்லையெனில் சிறிது ஆழம் கூட்டவே விரும்புகிறேன்.
It does not mean that I want to make a difference
For Iam already different !
முடிவிலாது புகைப்படங்களையும், கானொலிகளையும், உலக விஷயங்களை யும் பகிர்ந்து கொள்வதில்,like குகளை பரிமாறிக்கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.'எனக்கு', 'எனக்கு', 'நான்', 'நான்' என்கிற சொற்களை பயன்படுத்துவதில் நான் எச்சரிக்கை யாயிருக்கிறேன்-வேறு வழியில்லாத போது அவற்றை ப்பயன்படுத்துகிறேன்.
'என்னை' யார் என எனக்குத் தெரியாத போது
'எனக்கு' என்பது அர்த்தமற்றது !
(தொடரும்)

வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்!



7.02.2016

விருப்பு வெறுப்புகள்,சாதி,மத,இன,மொழி,தேச, . . வேற்றுமைகள்,ஏற்றத்தாழ்வுகள், ..
மனிதர்களை சகமனிதர்களிடமிருந்து துண்டாடும் அனைத்துக்கூறுகளையும் மறந்து
விட முடியுமானால் நல்லது . இல்லாவிடில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டு
மாய்ந்துபோகும் வரலாறு தொடர்ந்திடும் !
ஆகவே, வாழ்க்கையைத் ேர்ந்தெடுப்போம்!
பொய்யும்போலியுமான,ஒட்டுச்சீட்டுகளைப்போன்ற உள்ளீடற்ற அடையாளங்களை அல்ல !
இவை வெறும் நல்லெண்ணப்பிதற்றல்களோ, 'நாமெல்லாம் இன்றிலிருந்து நல்லபிள்ளைகளாக
இருப்போம் ! ' என்கிற ரீதியிலான பலவீனமான இதயத்தின் ஆலோசனைகளோ,அல்லது தந்த கோபுர
மேதாவிலாச கோட்பாடுகளோ அல்ல !
மாறாக, மனித இனத்தினால் உதாசீணப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட உண்மையான
வாழ்க்கையின் அழைப்பு !
ஆகவே,சிந்திப்போம், மனித இனத்தில் சேருவோம்.
{மீண்டும் தொடர்வோம்}

மனித இனத்தில் சேருவோம் !



நீங்கள் பொய்மையினால் முத்தமிடப்படுவதை விரும்புவதை விட உண்மையினால்
அறையப்படுவது குறித்து கலக்கமடைய மாட்டீர் என்றால்,தொடர்ந்து வாசியுங்கள் !
தன்னை உயர்ந்தவன்,உயர் சாதி என்றும்,பிறனை தாழ்ந்தவன்,தாழ்ந்த சாதி என்றும்
சொல்பவன் மன நலம் இழந்த சாதியாவான்.
வரலாற்று உண்மைகள் என்பவை விபத்து போன்றவை~அவை இறுதியானவை அல்ல.
ஆகவே,அவை உண்மையானவையல்ல.
`உயர்வு-மனப்பான்மை`,`தாழ்வு-மனப்பான்மை` இரண்டுமே தவறான மனப்பான்மைகளே.
ஏனெனில்,`சரியான-மனப்பான்மை` உடையவன் எவரையும் `உயர்வு`, `தாழ்வு` என்கிற
சொற்களில் காண்பதில்லை. உலகம் பல துண்டுகளாகப் பிளவுபட்டிருப்பதற்கும் பரஸ்பரம்
முரண்பட்டு தாக்கி அழித்துக்கொள்வதற்கும், ஒன்று மற்றொன்றை அடக்கியொடுக்குவதற்கும்
தவறான-மனப்பான்மைகளே காரணம்.
மனிதர்களில் உயர்ந்த சாதியும் இல்லை, தாழ்ந்த சாதியும் இல்லை.` இந்த இரண்டில் நீங்கள்
எந்த சாதி?` என்று ஒருவரைப்பார்த்துக் கேட்பது அர்த்தமற்றது. ஏனெனில், மனிதன் என்பவன்
தனது மன-நலத்தை இழக்காத நிலையில் அவன் நிச்சயம் மனித சாதியைச் சேர்ந்தவனாகத்தான்
இருக்க முடியும். தனது` சித்த-சுவாதீனத்தை` இழந்து விட்ட ஒருவன் தன்னை உயர்ந்தவனாகவோ,
உலகைக் காக்க வந்த இரட்சகனாகவோ,கடவுளாகவோ, அல்லது, பூதமாகவோ பாவித்துக்கொள்ள
முடியும் !
ஆனால்,அர்த்தமுள்ள மனித வாழ்க்கையில் எது முக்கியமெனில் ஒவ்வொருவரும் `தான்` எத்தகைய
மெய்ம்மை அல்லது நிஜம் என்பதை நேரடியாக உணர்வார்ந்த முறையில் கண்டுபிடிப்பது ஒன்றே.
இதை விடுத்து , ஒருவர் தன்னை ஒரு பொறியாளர்,மருத்துவர்,அல்லது குழாய்-பொருத்துவர்,தச்சர் ...
என்பதாக அடையாளப்படுத்திக் கொள்வது ஒருவரது சாரமான மனிதத்தை தொடுவதில்லை,
வெளிப்படுத்துவதுமில்லை -அவை ஒருவரது பணி அல்லது தொழிலைக் குறிப்பது மட்டுமே !
ஒருவர் தன்னை லட்சாதிபதி,கோடீஸ்வரர்,அல்லது பிச்சைக்காரர் என்பதாக இனம் காண்பதும்
அர்த்தமற்றது-அவை அவரது உடமைகளை,வங்கிக் கணக்கை மட்டுமே குறிப்பன !
ஒவ்வொரு மனிதனும் தன்னையறியும்,தன்னில் தான் உண்மையில் எத்தகைய நிஜம் என்பதை
நேரடியாக கண்டறியும் உன்னதத்திற்கு மாற்றாக,பதிலாக வேறெதுவும் இவ்வுலகிலும் வேறெவ்வுலகிலும்
கிடையாது ! {மீண்டும் தொடர்வோம்}

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...