Sunday, 14 May 2017

எதைப் பற்றிச் சிந்திப்பது?





"எதைப்பற்றிச் சிந்திப்பது?" என்ற கேள்வி ஒரேநேரத்தில் அதி முக்கியமானதும்,
படு அபத்தமானதுமாகும். இக்கேள்வியை ஒருவன் தன்னிடமே கேட்டுக்கொள்
ளும்போது அது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது!  இதே கேள்வியை ஒருவன்
பிறரிடத்தில் கேட்கும் போது அபத்தமாகிவிடுகிறது!

எனினும்,  இக்கேள்வியை நாம்  சிந்தனைப் பயிற்சிக்குரிய ஒன்றாக எடுத்துக்
கொண்டு  அதற்கான  பதிலைக் காண்போம்.  எதைப் பற்றிச் சிந்திப்பது என்று
என்னைக் கேட்டால்,  நான்  என்னைப் பற்றிச் சிந்திப்பேன் என்று சொல்வேன்;
ஆனால், உண்மையில் நான்  எல்லாவற்றைப் பற்றியும் தான்  சிந்திக்கிறேன்!
ஏனெனில், எல்லாமும் என்னை (மனிதனை)ப் பற்றியதாகவே உள்ளன; ஏதோ
ஒருவகையில் எல்லாமும் என்னை (மனிதனை)யே சுட்டுகின்றன! ஏனெனில்,
மனிதன் உண்மையில் பிரபஞ்சமளாவியவன்!

உண்மையில்,  எவ்வொரு  மனிதனும்  தன்னைப் பற்றித்தான்  சிந்திக்கிறான்.
ஆனாலும்,  எல்லா  மனிதர்களின்  சிந்தனையும்  முழுமை  பெறுவதில்லை!
காரணம்,  அவர்கள் எல்லோரும்  தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்!
ஒருவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பதில் உள்ள மட்டுப்பாடு, குறைபாடு
என்னவென்றால்,  அவன் தன்னை  மிகவும் குறுக்கிக் கொள்கிறான், அல்லது,
சுருக்கிக் கொள்கிறான்.  ஒருவன் தன்னைப் பற்றியும், அதாவது  தனது நலன்,
தனது குடும்பத்தாரின், நெருங்கிய உறவுகளின் நலன்களைப் பற்றியும் மட்டும்
சிந்திப்பது என்பது உண்மையில் தன்னைப் பற்றிச் சிந்திப்பது என்பதாகாது!

தான், தனது நலன் என்பதென்ன?  'தான்' என்பது தனது 'உடல்' என்பதாகவும்,
தனது நலன் என்பது உடலின் 'அடிப்படைத்தேவைகள்' என்பதாகவும் இருக்கும்
பட்சத்தில், அது  உண்மையான, அல்லது, ஆழமான 'தன்னை'ப் பற்றியதல்ல!
மாறாக, மிகவும் மேலோட்டமான 'தன்னை'ப் பற்றியதாகும்!

எதைப் பற்றிச் சிந்திப்பது என்று  என்னைக் கேட்டால்,  நான் என்னைப்பற்றிச்
சிந்திப்பேன் என்று சொன்னேன். ஆனால், என்னைப்பற்றிச் சிந்திப்பது என்றால்
என்ன? எந்தமனிதனும் எடுத்தவுடனேயே நேரடியாக, அதாவது நேர்முகமாகத்
தன்னைப்பற்றிச்  சிந்திக்கத் தொடங்கிவிடுவதில்லை! உண்மையில் தன்னைப்
பற்றிச் சிந்திப்பது என்பது உண்மையில்  "தான் யார்?",  ஒட்டு மொத்த இந்தப்
பிரபஞ்சத்தில், "தான் எத்தகைய மெய்ம்மை?", பிரபஞ்ச இருப்புக்கும் எனக்கும்
(மனிதனுக்கும்) உள்ள  தொடர்பு எத்தகையது?  என்றெல்லாம் சிந்திப்பதாகும்!
ஆம்,  ஒருவன்  தன்னைப்பற்றி  சிந்திப்பதில் ஆழம் என்பது இவ்வளவு தான்,
என்றில்லாமல், சிந்திக்கச் சிந்திக்கக் கூடிக்கொண்டே செல்கிறது!

ஆக,  ஒருவன்  எதைப்பற்றிச் சிந்திப்பது என்ற கேள்வியை, பல்வேறு முனை
களிலிருந்து, அதாவது, 'தன்னைப்பற்றி' என்பதன் ஒரு மாறிய வடிவமான தன்
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதில் தொடங்கிடலாம்!  அல்லது, இப்பிரபஞ்சம்
ஏன்,   எதற்காக,  எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது?  அதற்கும்  தனக்கும்
(மனிதனுக்கும்) என்ன தொடர்பு?  என்பவை குறித்தும் சிந்திக்கலாம்! ஒருவன்
எதைப் பற்றிச் சிந்தித்தாலும்,   அது  மறைமுகமாகத்  தன்னை (மனிதனை)ப்
பற்றியதே  எனலாம்!  அதாவது,  ஒருவன்  உலகம்,  பிரபஞ்சம்,  வாழ்க்கை,
மெய்ம்மை என  எதைப்பற்றிச் சிந்தித்தாலும் இவை எல்லாவற்றிற்கும் அடிப்
படையாக, மையமாக இருப்பது மனிதனே அவனது உணர்வே ஆகும்!

நம்மில் சிலர்,  உலகம் மனிதனுக்கு முந்தையது, ஆகவே உலகமே பிரதானம்
என்பர்.  இக்கூற்றில் தவறேதுமில்லை! ஆனால்,உலகின் தன்மை, இயல்பு எத்
தகையது என்பதைக் கொண்டு மனிதனின் தன்மை, இயல்பு எத்தகையது என
அறிந்து  கொள்ளவியலாது!  மேலும், மனிதன் தன்னைப் பற்றிப் புரிந்துகொள்
ளாமல், உலகம், அல்லது பிரபஞ்சம் பற்றியும் புரிந்துகொள்ளமுடியாது! ஏனெ
னில், உலகம்,மனிதன், யாவும் ஒரே நிஜத்தின் வெவ்வேறு முகங்களேயாகும்!
உலகம் மனிதனுக்கு முந்தையது என்று சொல்வது, கம்பளிப்புழு வண்ணத்துப்
பூச்சிக்கு முந்தையது என்று சொல்வது போன்றதாகும்!  ஆம், மனிதனை எதிர்
நோக்கி உருவான அடித்தளம்தான் உலகம்! மனிதன் இல்லையேல் பிரபஞ்சத்
திற்கு யாதொரு அர்த்தமும் கிடையாது! நிச்சயம் இது ஒரு அதீதமான மனித-
மையப் பார்வைதான்! ஏனெனில்,  இங்கு நாம் அக்கறையுடன் பேசிக்கொண்டு
இருப்பது  மனிதனின்  வாழ்க்கையைப் பற்றித்தான்! அதாவது, மனிதஜீவியாக
விசேட வடிவமெடுத்த பிரஞ்சத்தின் வாழ்க்கை!

இப்போது நாம், வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைக்கு வருவோம்!  ஆம், எந்த
ஒரு மனிதனும்  தனது  வாழ்க்கையைப் பற்றித்தான்  சிந்திக்கிறான்.  அதில்,
பொதுவாக  உயிர்வாழ்தலுக்குரிய தேவைகளை எவ்வாறு அடையப்பெறுவது
என்பது குறித்து  மட்டுமே எல்லோரும் சிந்திக்கிறார்கள்! அதாவது, "உண்மை
யில் தான் யார்?" எனும் மையமான கேள்வியைக்கேட்காமலேயே மனிதர்கள்
தங்களைப்பற்றிச்  சிந்திக்கிறார்கள்!  அவ்வாறே, "வாழ்க்கை என்றால் என்ன?"
எனும்  மையமான  கேள்வியைக்  கேட்காமலேயே  வாழ்க்கையைப்  பற்றிச்
சிந்திக்கிறார்கள்  என்பதே  மனிதர்களுடைய  சிந்தனையிலுள்ள குறைபாடும்,
மட்டுப்பாடும் ஆகும்!

அடுத்து,  'எதைப்பற்றிச் சிந்திப்பது?'  என்ற பிரச்சினை ஒருபுறமிருக்க, அதற்கு
முன், 'சிந்தித்தல்' என்றால் என்ன என்பது குறித்தும் சிந்திப்பது அவசியமாகும்!
'சிந்தித்தல்'  என்றால்  என்ன?  நாம்  எது ஒன்றைப் பற்றியும் புரிந்துகொள்ள
வேண்டுமானால்,  அது  குறித்துக் கேள்விகளைத் தன்னுள் எழுப்பி, அவற்றுக்
கான பதில்களைக் கண்டுபிடிப்பது என்பதே 'சிந்தித்தல்' என்பதாகும்!

கேள்விகளின்  மகத்துவமும்,  அவை  நிகழ்த்தும்  அற்புதங்களும் அலாதியா
னவை!  கேள்விகள்,  அவை  அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்கள் ஆகும்!
அவை எங்கிருந்து எவ்வாறு தோன்றுகின்றன?  கேள்விகளுக்கான அடிப்படை
எது? தூய,ஆர்வம்-ததும்பும் உணர்வு/மனம் தான் கேள்விகளுக்கான அடிப்படை
யாகும். தூய ஆர்வம் என்றால் என்ன? விருப்பு-வெறுப்புக்களால் கறை படாத
ஆர்வமே தூய-ஆர்வம் எனப்படுவது! விருப்பு-வெறுப்புகள் ஒருவரது சிந்தனை
யைக் கட்டுப்படுத்திடுபவையாகும். ஏனெனில், விருப்பு-வெறுப்புகள் அன்றாட
உலகைச் சேர்ந்தவை; ஆனால், "உண்மை" என்பது இவ்வுலகைக்கடந்ததாகும்!

ஆர்வம்-ததும்பும் உணர்வு/மனம் என்பது எத்தகையது? ஆம், அறிந்த விஷயங்
களுடனும், அனுபவங்களுடனும் திருப்தியடைந்து தேங்கிப்போகாத,எப்போதும்
புத்துணர்வுடன் திகழும் மனமே ஆர்வம்-ததும்பும் மனமாகும்!

அடுத்து,  எது ஒன்றைப் பற்றியும்  புரிந்து கொள்ளவேண்டும் எனும் தேவை,
அல்லது விழைவு ஏன், எவ்வாறு, எங்கிருந்து எழுகிறது என்பதுதான் அனைத்
துச் சிந்தனைக்கும்,  இன்னும்  யாவற்றுக்குமான  அடிப்படையும் ஆதாரமும்!
ஆம்,  எதையும்  ஆழமாகவும்,  முழுமையாகவும்  புரிந்துகொள்ள வேண்டும்
எனும்  ஆர்வம்  இல்லையேல், மனிதர்களின்  சிந்தனை என்பது மேற்புறத்து
விஷயங்களைப்  பற்றியதாக  மட்டுமே  இருக்கும்!  வாழ்க்கையைப்  புரிந்து
கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் வாழ்க்கையை ஒருவர் அவ்வளவு ஆழமாக
நேசிக்கும் பட்சத்தில் மட்டுமே ஏற்படவியலும்!

வாழ்க்கையை    நேசிக்கும்   ஒருவனுக்கு,   "வாழ்க்கை"  எனும்  சொல்லே
அவ்வளவு இனிமை நிறைந்ததாக இருக்கும்! ஆனால்,எவ்வாறு வாழ்க்கையை
நேசிப்பது என்று ஒருவர் இன்னொருவருக்குக் கற்றுத்தர இயலாது; அவ்வாறே,
சிந்திப்பது எவ்வாறு எனவும் கற்றுத்தர இயலாது!

அதேநேரத்தில்,  மனிதர்களிடத்தில் அன்பு, நேசம் இல்லாமலில்லை! ஆனால்,
அவ்வளவும்  சுய-அன்பாகவும், சுய-நேசமாகவும் மட்டுமேயுள்ளது! இதிலுள்ள
மட்டுப்பாடு  என்னவெனில்,  தனது மையத்தில்  "தான்  உண்மையில் யார்",
"எத்தகைய மெய்ம்மை?"  என்பதை  ஒருவன் அறியாத நிலையில்,  அவனது
அன்பும்,  நேசமும்  மலராமல்  சுருங்கிப்போகிறது! ஒருவன் தனது இருப்பை,
"தான் இருக்கிறேன்!" என்பதை உணர்வது அற்புதமானதோர் அனுபவமாகும்!

"எதைப்  பற்றிச் சிந்திப்பது?"  என்று   கேட்கும்  ஒருவன்,  தனது  இருப்பின்
அர்த்தத்தை, நோக்கத்தை, காரணத்தை, இலக்கை, ஆகவே வாழ்க்கையையும்
சேர்த்தே இழந்துவிட்டவனாவான்!  ஆம்,  வாழ்க்கையின்  அர்த்தத்தை, குறிக்
கோளை,  இலக்கை அறியாதவரை  அது வாழ்க்கையல்ல!  தனது  இருப்பை
உணரும் ஒருவன்,  தாம் ஏன் இருக்கிறோம், தன் வாழ்க்கையின் குறிக்கோள்,
இலக்கு,  அர்த்தம்  என்ன  என்பதையெல்லாம்  தன்னுள் ஆழ்ந்து அறியாமல்
இருக்கமுடியாது! தனது இருப்பிற்கான நோக்கத்தை, காரணத்தை, அர்த்தத்தை
அறியாமல் இருக்கமுடியுமானால்,அது எலிகளுக்கும்,தவளைகளுக்கும் மட்டும்
தான்  சாத்தியமாகும்!   ஏனெனில்,   எலிகள்,  தவளைகள்  மட்டுமல்லாமல்,
அனைத்து  விலங்குஜீவிகளுக்கும்  இருப்பு இருக்கிறதே தவிர, அவைகளுக்கு
வாழ்க்கை என்பதில்லை! அவை யாவும் வெறுமனே உயிரோடு இருக்கின்றன;
அவ்வளவு தான்!

அதாவது,விலங்குஜீவிகள் கூழாங்கற்களையும்,பாறைகளையும் போல வெறும்
சடமாய் இல்லாமல், வேறொரு பாங்கில் (Mode),அதாவது உயிரோடு இருக்
கின்றன,  அவ்வளவு தான்! அதே பாங்கில் மனிதஜீவிகளும் இருக்கமுடியாது;
அவர்கள் வேறொரு பாங்கு, அல்லது வேறொருவகை  இருப்புக்காக, உணர்வு-
இருப்புக்காகத்  தோன்றிய  விசேட ஜீவிகளாவர்!  ஆம், இருப்பானது உணர்வு
கொள்ளப்படும் போது  மட்டுமே  வாழ்க்கையாகிறது!  ஒரு கூழாங்கல் இருக்
கிறது; ஆனால், அது வாழ்வதில்லை! ஒரு தவளை வெறுமனே உயிர்-பிழைத்
திருக்கிறது;  அது தனது இருப்பை உணர்வதில்லை, எதையும் அறிவதில்லை!
ஆகவே,  தவளையும் உண்மையில் வாழ்வதில்லை! எண்ணற்ற மனிதர்களும்
தவளைகளைப் போலவே வெறுமனே உயிர்-பிழைத்திருக்கிறார்கள்!

"சுய-உணர்வு" எனும் அம்சம் இல்லாததால்,  தவளைகளுக்கு எவ்வித கேள்வி
களும் எழுவதில்லை! "சுய-உணர்வு" இருந்தும் நம்மில் பலருக்குக் கேள்விகள்
எழுவதில்லை என்பது ஆச்சரியமான விஷயமே!

எல்லா மனிதர்களும், பிறக்கும் போது, கள்ளம் கபடமற்றவர்களாகவும், உள்ள
மைந்த ஆச்சரிய-உணர்வுடனும், பெரிதாக ஞாபகங்களின் சுமைகள்  இல்லாம
லும்,  ஆர்வத்தின் ஊற்றாகவும் தான்  பிறக்கிறார்கள்!  எல்லா  மனிதர்களும்,
குழந்தைகளாக இருக்கும் போது ஞானிகளாக - அதாவது, தூய கவனம்,  தூய
வியப்பு, தூய ஐயம்  கொண்டவர்களாக இருக்கிறார்கள்;   அதாவது,  கேள்வி-
நிறைந்தவர்களாக,   பார்க்கும்  ஒவ்வொன்றையும்,  அனைத்தையும் அறிந்து
கொள்ளும் தீரா ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! ஆனால், வளர்ந்து
மனிதனாக ஆகும்போது  கேள்வியற்று,  ஆர்வம் வற்றி,  உணர்வும், அறிவும்
மழுங்கிப்போனவர்களாக ஆகிவிடுகிறோம்!

நம்மில்  பலருக்கு,  கொஞ்சம் விஷயங்களைக் கேட்டும், படித்தும் அறிந்ததும்
அனைத்தையும்  அறிந்தாகிவிட்டது  போன்றதொரு பிரமை, அல்லது  போலி-
உணர்வு தோன்றி  அவர்களைத் தூங்கச் செய்துவிடுகிறது! கேட்டும், படித்தும்
அறிந்தவை கடன்வாங்கிய அறிவாகும்;  அவை எவ்வாறு ஒருவனது அறிவும்,
அனுபவமும்  ஆகும்?   கேள்விகள்  ஒருவனுடையதாக  இருக்கும்பட்சத்தில்
பதில்களும், அறிவும் அவனுடையதாகவே அமையும்!  கேள்வியற்றவனுக்குப்
பதில்கள் கிடைத்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை - தனக்கு இவ்வளவு
விஷயங்கள் தெரியும் எனக்காட்டிகொள்வதைத்தவிர! கேள்வி உள்ளவனுக்கே
பதில்கள் உரித்தானவை!

ஆனால், நம்மில் ஒரு சிலரைத்தவிர மற்ற அனைவருக்கும் ஏன் கேள்விகளே
உதிப்பதில்லை? எல்லோருக்கும் கேள்விகள் உதிக்கவே செய்கின்றன;ஆனால்,
அவை  மேலோட்டமான விஷயங்களைப் பற்றியவையாக மட்டுமே உள்ளன!
ஏனெனில், மனிதர்கள்  மேலோட்டமானவர்கள்!  அவர்கள் வாழும் வாழ்க்கை
மேலோட்டமானது!  அவர்கள் விரும்பி, நாடித்தேடுகிற விஷயங்கள், மதிப்பீடு
கள் யாவும் மேற்புறத்தைச் சேர்ந்தவை!

                  முக்கிய கருத்தாம்சங்கள்
             ---------------------
ஒருவகையில், எதைப்பற்றிச்சிந்திப்பது என்பதைச் சொல்வது எளிது; ஆனால்,
எவ்வாறு சிந்திப்பது என்பதை விளக்கிச் சொல்வது கடினம்!
 
• எவ்வொரு மனிதனும் சிந்திக்கிறான்; ஆனால், தன்னைப்பற்றி மட்டும் தான்
            சிந்திக்கிறான்.

• எவ்வொரு மனிதனும் தனது  வாழ்க்கையைப் பற்றியும், தனது நலன்,
            தனது குடும்பத்தாரின், நெருங்கிய உறவுகளின் நலன்களைப்
            பற்றியும் மட்டும் தான்  சிந்திக்கிறான்.

• எவ்வொரு மனிதனிடமும் அன்பும், நேசமும் உள்ளது! ஆனால், அது
           சுய-அன்பாகவும், சுய-நேசமாகவும் சுருங்கிக் கிடக்கிறது!

• எல்லா மனிதர்களுக்கும் சுய-உணர்வு உள்ளது; ஆனால், அவ்வுணர்வு
           எதையும் ஆழமாகக் காண்பதும், அறிவதும், புரிந்துகொள்வதும்
           இல்லை. மாறாக, அது வாழ்வின் மேற்புறத்துத்தேவைகளை
           மட்டுமே தேடியலைகிறது!
           
• சிந்திப்பதற்கு பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும்,
           முக்கியமானதை, முழுமையானதை, மையமானதை,
           இறுதியானதை, மெய்ம்மையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்!
           சிந்திப்பவனை முழுமைப்படுத்துகிற, நிறைவுசெய்கிற,
           மரணத்தைக் கடக்க உதவுகிற, நித்தியவாழ்வு தருகிற அம்சம்
           எதுவோ அதுபற்றிச் சிந்திக்கவேண்டும்!
           ஆம், அனைத்தின் சாரமான உண்மையைப்பற்றிச் சிந்திக்க
           வேண்டும்!

மா.கணேசன்•நெய்வேலி•11-05-2017
----------------------------------------------------------------------------

Friday, 12 May 2017

நாத்திகத்தின் ஆணிவேர்






      தம்மை மீறி இன்னொரு கடவுள், அல்லது பேரகந்தை இருப்பதை
      பொதுவாக மனிதர்களின் அகந்தை விரும்புவதில்லை!
                          <•>

குறிப்பு : இக்கட்டுரை நாத்திகம், ஆத்திகம் பற்றிப்பேசினாலும், பிரதானமாக,
இது மனிதஜீவிகள் வாழ்ந்துவருகின்ற அடியோட்டமான வாழ்வின் தன்மை,
தரம் மற்றும் வாழ்க்கைப் பார்வை பற்றியதேயாகும்!
                         <<•>>

மனித இனம் ஆத்திகர்கள்,  நாத்திகர்கள் என இரு அணியாகப் பிரிந்து கிடப்ப
தாகத்  தெரிவது  ஒரு தோற்றப்பிழையே தவிர அது நிஜமல்ல! உண்மையில்
இது முழுக்க முழுக்க நாத்திக உலகமே; எல்லோரும் நாத்திகர்களே! எனினும்
நம்பிக்கை, கொள்கை,  மற்றும்  கோட்பாடு  என  பெயரளவில்  ஆத்திகர்கள்,
நாத்திகர்கள் என்போர் உள்ளனர் எனலாம்; எவ்வாறு, கட்சி-சார்ந்த அரசியலில்,
பல கட்சிகள்,அணிகள் உள்ளனவோ அவ்வாறு! அதாவது,கட்சி-சார்ந்த அரசியல்
என்பது எவ்வளவு மேலோட்டமானதோ, அர்த்தமற்றதோ அவ்வளவு அர்த்தமற்
றதே மதம் எனும் விஷயமும்! ஆத்திகம் என்றவுடன் அதற்கு ஒரு மதச்சாயம்
அல்லது  மதச்சார்பு  உள்ளதைப் போலவே  நாத்திகத்திற்கும் ஒரு மதச்சாயம்
அல்லது  மதச்சார்பு  உள்ளது! நாத்திகத்தைப் பொறுத்தவரை "மதச்சார்பற்றது"
என்பதுதான் அந்த மதச்சாயம்! ஆம் நாத்திகம் என்பதும் ஒரு மதமே; அதாவது,
கடவுளுக்கு பதிலாக இயற்கையை,அல்லது பகுத்தறிவை நம்புகிற ஒரு மதம்!
இவ்வாறே, விஞ்ஞானம், பொருள்முதல்வாதம், பொதுவுடமைவாதம் (கம்யூனி
சம்), டார்வினிய பரிணாமவாதம் என்பவையும் மதங்களே!  அதாவது, கடவுள்
இல்லாமலும்,  மதங்கள் இல்லாமலும்  மனித இனம் எவ்வொரு காலத்திலும்
இருந்ததில்லை!

நாத்திகம் என்பது,  ஆதி அல்லது இயற்கை மதங்களைப்போல இயற்கையான
தல்ல! மாறாக,  'கடவுள்' மற்றும் மத- நம்பிக்கைகளுக்கு எதிராகத் தோன்றிய
எதிர்-வினையே எனலாம். நாத்திகம் என்பது வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு
நிலைப்பாடு ஆகும்!  நாத்திகத்தில்  இருவகைகள்  உள்ளன எனலாம்! ஒன்று,
பகுத்தறிவுப்பூர்வமாக  தெரிவுசெய்யப்பட்ட  ஒரு நிலைப்பாடு.  இன்னொன்று
அறிவிக்கப்படாத ஒரு நிலைப்பாடு,அல்லது விவரமில்லாத ஒரு மனோநிலை.
பெரும்பாலானவர்கள்  இந்த  இரண்டாம் வகை  நாத்திகர்களேயாவர்; அதில்,
ஆத்திகர்கள் என்போரும் அடங்குவர்!

அதாவது, சமயபூர்வமானவர்கள் (Religious People) எனக்கருதிக்கொள்ப
வர்கள், கடவுள் நம்பிக்கையாளர், ஆத்திகர் எனப்படுபவர்களும், உண்மையை,
அதாவது  உண்மையான  கடவுளைத்  தேடுவது இல்லை!  மாறாக, வெறும்
ஆறுதலையும்,  சுலப - அருளையும்  (Easy Grace) தான்  தேடுகிறார்கள்!
அவர்கள்   கடவுளுக்காகத் தம்மை  இழக்கத்  தயாராயில்லை!  ஆத்திகர்கள்
என்பவர்களும் ஒருவகை நாத்திகர்களே! ஆம், கடவுள் எனும் மெய்ம்மையை
நேரே தம் உணர்வின் உச்சத்திற்கு உயர்ந்து அனுபவம்கொள்ளாத, தரிசிக்காத
எவரும் நாத்திகரே!

"கடவுள் இருக்கிறார்!" என நம்புபவர்கள் ஆத்திகர்கள்; "கடவுள் இல்லை!" என
வாதம் புரிபவர்கள்  நாத்திகர்கள்  எனப்படுகிறார்கள்!    ஆத்திகர்கள்   மனித
அறிவையும், இயற்கை ஆற்றலையும் மீறியதொரு ஆற்றல் இருப்பதாக நம்பு
கிறார்கள்; அந்த ஆற்றலை அவர்கள் "கடவுள்" என்றழைக்கிறார்கள். நாத்திகர்
கள் தம் பகுத்தறிவை மட்டுமே தீவிரமாக நம்புகிறார்கள்; இருப்பது இயற்கை
மட்டுமே என்கிறார்கள்;  அந்த  இயற்கை ஆற்றலை  மீறிய ஆற்றல் எதுவும்
இல்லை;  ஆகவே, "கடவுள் என்பது இல்லை!" என வாதிடுகிறார்கள்! ஆத்திக
வாதம், நாத்திகவாதம், இவ்விரண்டுவாதங்களின் வேர்களை ஆராய்ந்து காண்
கையில்,  இவையிரண்டும்  யாதொரு அனுபவபூர்வமான அறிவையும் அடிப்
படையாகக்கொண்டவையல்ல என்பது தெரியவரும்!

அதாவது நாத்திகவாதத்தின் கூற்றுகள் உண்மையாக இருக்கவேண்டுமானால்,
மனித அறிவு,அதாவது பகுத்தறிவு என்பது இறுதியானதாக இருக்கவேண்டும்,
மேலும்,பகுத்தறிவைக்கடந்து வேறு அறிவுநிலைகள் எதுவும் இருக்கக்கூடாது;
அப்போதுதான், நாத்திகவாதத்தை பிழையற்ற தத்துவம் எனக்கொள்ளமுடியும்!
ஆனால், மனித அறிவு, அதாவது பகுத்தறிவு என்பது இறுதியானதல்ல! மனித
ஜீவிகளில்  ஏராளமானவர்கள்  இன்னும் பகுத்தறிவு நிலையைக் கூட எட்டிட
வில்லை! அதை எட்டியவர்களிடம் அத்தளத்தினை முழுமையாகப் பிரயோகித்
ததற்கான  தடயம்  ஏதும்  தெரியவில்லை!  அவ்வாறு  பிரயோகித்திருந்தால்,
அவர்கள் பகுத்தறிவு  எனும்  தளத்தைக் கடந்து,  அதையடுத்த உயர்-அறிவுத்
தளத்தை  எட்டியிருப்பார்கள்!  ஆக,  நாத்திகவாதம்  என்பது  பூரணமானதோ,
அல்லது, பிழையற்ற தத்துவமோ அல்ல என்பது தெளிவு!

அடுத்து,  ஆத்திகவாதிகள்  நம்புகிற  மனித அறிவைக் கடந்த அறிவு, மற்றும்
இயற்கை ஆற்றலை மீறிய ஆற்றல் என்று சொல்லப்படும்  'கடவுள்'  பற்றிய
நேரடி அனுபவம்,  மற்றும்,  நிரூபணத்திற்கான  தடயத்தை  ஆத்திகர்களிடம்
தேடினால்,அப்படி எதுவும் அவர்களிடம் காணக் கிடைக்கவில்லை! ஆம்,மனித
அறிவை   மிஞ்சிய  பேரறிவு  இருக்கலாம்!  ஆனால்,  அதை  மனிதர்களால்
தொடர்புகொள்ள  இயலவில்லையெனில்,  அதனால்  மனிதர்களுக்கு  என்ன
பயன்  விளையமுடியும்?  அதாவது, அறிவை அறிவால் மட்டுமே அணுகவும்,
அடையவும் முடியும்!  அதாவது,  'கடவுள்'  எனும் பேரறிவை நம்பிக்கையின்
மூலமாக அணுகவோ, பணியவைக்கவோ முடியாது!

தற்போது  உலகில்  நாத்திகம்  தீவிரமாகி வருகிறது  என்பதான ஒரு கருத்து
ஆத்திக வட்டத்தில் நிலவிவருகிறது எனப்படுகிறது.  பல  சிந்தனையாளர்கள்
நாத்திகம்  தீவிரமாக  வளர்ந்து  வருவதற்குக் காரணமாக பல அம்சங்களைக்
குறிப்பிடுகின்றனர்.  நாத்திகத்தின் வளர்ச்சிக்கு  ஒரு பாதி காரணம் மதவாதம்,
குறிப்பாக,  கிறித்துவமே என அல்வின் பிளாண்டிங்கா (ALVIN PLANTINGA)
குறிப்பிடுகிறார்.  புராட்டஸ்ட்டண்ட் பிரிவு கிறித்தவர்களுக்கும், கத்தோலிக்கப்
பிரிவு  கிறித்தவர்களுக்கும் இடையேயான பரஸ்பரச் சண்டைகளும், கொலை
களும் கிறித்துவத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கியது;அதுவே பொது
வான பிற மதங்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் மாற்றான நிலைபாட்டிற்கு
அதாவது நாத்திகத்திற்கு இட்டுச்சென்றது என்கிறார். பிளாண்டிங்கா- வின் இக்
கூற்று,  ஐரோப்பாவிற்கு  மட்டுமே பொருந்தும்; ஏனெனில், நாத்திகம் என்பது
உலகளாவியதொரு போக்கு ஆகும்.

பிளாண்டிங்கா-வின் இன்னொருகூற்று, நாத்திகம் என்பது ஒருவகை குருட்டுத்
தனம்,  அதாவது உலகிலுள்ள மிக முக்கியமான ஒன்றைக் காணத்தவறியதன்
விளைவு என்கிறார். இக்கூற்று ஒருவகையில் பொருத்தமானதே எனலாம்.

தத்துவப் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்வின்பர்ன் (Richard Swinburne)அவர்கள்
கூற்றுப்படி,நாத்திகர்கள் எவ்வாறு உருவாகிறார்களென்பது, 'அவர்கள் எத்தகை
யவர், அவர்கள் வாழும் காலம், எத்தகைய தாக்கங்களுக்கு இலக்கானவர் என்
பதைப் பொறுத்தது' என்கிறார். குறிப்பாக, அறிவுஜீவியச் சூழலின் தாக்கத்தைப்
பற்றி  ஸ்வின்பர்ன் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில், மனிதர்கள் தங்களது சூழ
லின்  தாக்கத்தைக் கடந்து  எது உண்மை என்று அறியமுடியும் எனவும், சில
மனிதர்களுக்கு அதிர்ஷ்டவசமாக கடவுளுடைய இருப்பு(presence of God)
குறித்த அனுபவம் கிட்டுவதாகவும்  பலருக்கு அது கிட்டுவதில்லை'  எனவும்
ஸ்வின்பர்ன்  குறிப்பிடுகிறார். ஆனால், இக்கடைசிக்கூற்று பொருந்தவில்லை.
ஏனெனில், 'கடவுளின் இருப்பு' குறித்த அனுபவம் எனப் பெயர் பொறிக்கப்பட்ட
யாதொரு அனுபவமும் இல்லை! அதிலும்,அவ்வனுபவம் நம்பிக்கையை அடிப்

படையாகக்கொண்டதென்றால், அது இன்னும் சந்தேகத்திற்குரியதாகும்!

வேண்டுமானால், ஆழமான அக - அனுபவம், அதாவது, உணர்வியல் ரீதியாக,
மனித உணர்வைக் கடந்த  பேருணர்வுடன்  பொருந்திய அனுபவம்,  அல்லது
அக-மலர்ச்சி, உணர்வுநிலையில் ஏற்படும் ஒரு பெரும்மாற்றம் போன்ற அரிய
அனுபவங்களை, கடவுள்-அனுபவத்திற்கு இணையானவை எனக்குறிப்பிடலாம்!
இவ்வனுபவங்கள் அனைத்திற்கும் மையமான, அனைத்தின் சாரமான,ஒருமை
யும் முழுமையுமான ஒரு மெய்ம்மையைச் சுட்டுவனவாகும்! இத்தகைய ஒரு
மெய்ம்மையை நாம் "கடவுள்" என்று அழைப்பது பொருத்தமாகவே இருக்கும்!
ஆனால், இத்தகைய அனுபவத்தைப்பெற்ற ஒருவன், அதன்பிறகு, ஆத்திகனாக
வும், நாத்திகனாகவும், அல்லது இப்படியுமில்லாத,அப்படியுமில்லாத இரண்டும்
கெட்டானாகவும், அதாவது அறியொணாமைவாதியாகவும்(Agnostic)இருக்க
மாட்டான்!

நாத்திகர்களின்  அதிகரிப்புக்கு  இன்னொரு காரணம், விஞ்ஞானத்தின் தாக்கம்
என  ரிச்சர்ட் ஸ்வின்பர்ன் கூறுகிறார்.அதாவது நவீனகால விஞ்ஞானஅறிவின்
வளர்ச்சியையும்,அதன் வீச்சையும் கண்டுபிரமித்துப்போன பலர், கடவுளுக்கான
இடம்   இப்பிரபஞ்சத்தில் மிகச் சொற்பமே  என எண்ணும்படி தள்ளப்பட்டனர்.
இக்கூற்று ஓரளவிற்கு சரியே எனலாம்.

ஜெரார்ட் ஜெ.ஹ்யூஸ் (தத்துவத்துறைத் தலைவர்,லண்டன் பல்கலைக்கழகம்)
அவர்களது பார்வையில்,  நாத்திகம் ஏன் மனத்தைக் கவரக்கூடியதாகவுள்ளது
என்றால், 'பல,  அல்லது,  அனைத்து  மதங்களும் பொய்யான கருத்துகளைத்
தாங்கிப் பிடித்ததும், மூட  நம்பிக்கைகள்,  மற்றும்  நெறிதவறிய வழிகளைக்
கைக்கொண்டதும்,  பிரறது பார்வையில்  மோசமான  விஞ்ஞானம்,  மற்றும்
நியாயப்படுத்த முடியாத  நடத்தைகளின்   கலவையாகத் தெரிந்தது.  இதற்கு
மாறான வகையில், நாத்திகமானது,  மதத்தின் முதிர்ச்சியற்ற தன்மையிலிருந்
தும்,  மதக்கொள்கையின்  கொடுங்கோன்மைலிருந்தும் விடுதலை பெறுவதற்
கான ஒரு வழியாகத் தன்னைக்காட்டிக்கொண்டது' என்று குறிப்பிடுகிறார். இக்
கூற்று  ஒருவகையில், பொருத்தமானதாகவே தெரிகிறது. எனினும், நாத்திகம்,
ஆத்திகத்தைப் போலவே மட்டுப்பாடானது, முதிர்ச்சியற்றது, சிறுபிள்ளைத்தன
மானது என்பதில் ஐயமில்லை!

மேலும்,   மதத்தில்,  குருட்டுப் பிடிவாதக் கொள்கையாளர்கள் (religious
bigots) இருப்பதைப்போல,  அவர்களுக்குச் சமமாக நாத்திகர்களும்  மூடிய-
மனங்களுடனும்,  கொள்கை வெறியுடனும்  இருக்கிறார்கள்  என   ஹ்யூஸ்
அவர்கள் கூறுகிறார்!

ஏன்  பல  சிந்தனையாளர்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள்? என்ற கேள்விக்
கான பதிலாக, சமயத்துறை ஆய்வு பேராசிரியர் ஹ்யூகோ மெய்னெல் (HUGO
MEYNELL) இவ்வாறு சொல்கிறார், 'ஆம், தீமை குறித்த பிரச்சினை, அதுதான்
மனிதர்கள்  ஏன் கடவுளை மறுக்கிறார்கள்  என்பதற்கான  சரியான  காரணம்'
என்கிறார். 'மேலும்,சிலர், வில்ஃப்ரட் செல்லார்ஸ் குறிப்பிட்டபடி,விஞ்ஞானமே
அனைத்திற்கான  அளவுகோல்  என  எண்ணத் தலைப்படுகிறார்கள்.  மேலும்,
பெரும்பாலான சமகால தத்துவச் சிந்தனையாளர்கள், கடவுள் இருக்கிறார் என்
பதற்கான  வாதங்கள் எதுவும்  பிழைபடாததாக இருக்கவில்லை என எண்ணு
கிறார்கள். சில தத்துவவாதிகள் கடவுள் இருக்கிறார் என்பது முற்றிலும் அர்த்த
மற்ற பேச்சு;  ஏனெனில், கடவுளை ஒருவர் பார்க்கவோ, கேட்கவோ, தொட்டு
உணரவோ முடியாது  என்கிறார்கள்  எனக்குறிப்பிடும்  ஹ்யூகோ மெய்னெல்,
ஆனால்,  நீங்கள்  எலக்ட்ரான்கள் அல்லது பாஸிட்ரான்கள் ஆகியவற்றையும்
தான்  தொட்டுணரவும்,  கேட்கவும், முகர்ந்தறியவும் முடியாது; ஏன், அப்படிப்
பார்த்தால்,   பிற மனிதர்களின்  எண்ணங்களையும்,  உணர்வுகளையும் தான்;
ஆயினும்   அவை  யாவும்  இருக்கவே  செய்கின்றன  என்கிறார்.  முடிவாக,
ஹ்யூகோ மெய்னெல்  சொல்வது,  தீமை குறித்த பிரச்ச்சினை ஒருபுறமிருக்க,
விஞ்ஞானவாதம் (scientism), மற்றும் நேர்க்காட்சிவாதம் (positivism)
ஆகியவை பலருக்கு நாத்திகம் ஏற்புடையதாகக்காட்டிற்று என்கிறார்.

ஆனால்,  மேற்சொல்லப்பட்ட  காரணங்களுக்காக பலர் நாத்திகத்தைத் தழுவு
கிறார்கள் எனில், அவர்களது அறிவுக்கூர்மை சந்தேகத்திற்குரியதே! ஏனெனில்,
'கடவுள்'  என்பது புலன்களின் வழியாக அறியப்படுகிற அம்சம் அல்ல! மாறாக,
ஒவ்வொருவரும் தம்உணர்வின் உச்சத்திற்குஉயர்ந்து நேரடியாக உணர்ந்தறிய
வேண்டிய அம்சமாகும்.  மேலும், "கடவுள்" என்பது  வாதப்பிரதிவாதங்களைக்
கொண்டு நிலைநாட்டப்படவேண்டிய விஷயம் எனக்கருதுவது பேரபத்தமாகும்!
"கடவுள்"என்பது உணர்வுள்ள மனிதஜீவிகளுக்கேயுரிய பிரத்யேகச் சவாலாகும்!
ஆம், எலிகளுக்கும், தவளைகளுக்கும் இத்தகைய சவால் ஏதும் இல்லை! சுய-
உணர்வுடைய மனிதஜீவியானவன் முழு-உணர்வை அடைந்தேயாகவேண்டும்
என்பது பரிணாம நியதியாகும்! ஏனெனில், "முழு-உணர்வு" தான் கடவுள்!

ஒரு  வட்டம் என்றிருந்தால்,  அதற்கு  நிச்சயம் ஒரு மையம் இருக்கும்! ஆக,
உலகம்  (பிரபஞ்சம்)  என்றிருந்தால், அதற்கு ஒரு மூலம், அதாவது, "கடவுள்"
நிச்சயம் இருந்தாகவேண்டும்! விருட்சம் என்றிருந்தால், நிச்சயம் வித்து இருந்
தாகவேண்டும்! வித்து இல்லையென்றாலும், அவ்விருட்சம் கனிகளாக மாறும்
வரை காத்திருக்கவேண்டும்;  அதாவது,  பிரபஞ்ச விருட்சத்தின்  பிஞ்சுகளாக
(அகந்தை எனும் அரை-உணர்வாக)  உள்ள  நாம் ஒவ்வொருவரும் உணர்வில்
முற்றிக்கனிந்து முழு-உணர்வாக மாறியாகவேண்டும்!

தத்துவச் சிந்தனையாளர் ஜோஸெப் செய்ஃபெர்ட்(Josef Seifert) அவர்கள்,
நாத்திகத்திற்கு பல வேர்கள் உள்ளனவென்று கூறுகிறார். 'அகம்பாவம்(pride)
கொண்ட மனிதர்கள் கடவுள் மீது சார்ந்திருப்பதை விரும்பவில்லை, அதோடு,
அவர்கள் தங்கள் ஆளுமையை இப்பிரபஞ்சத்தில் மிகமேன்மையான விஷயம்
எனப் பிரகடனம் செய்திட விரும்புகின்றனர்; அதாவது, தங்களைக் கட்டுப்படுத்
துகிற  எவ்வொரு அறநெறிமுறையும், உயர்-நீதிபதியும் இருக்கக்கூடாது; தாம்
தம்  மனம்போன போக்கில்  வாழவேண்டும் என விரும்புகிறார்கள்', என்பதாக
செய்ஃபெர்ட் கூறுகிறார். மேலும், பொருள்முதல்வாதம், நியதிவாதம் (deter-
minism) போன்ற  பல அறிவுஜீவியப் பிழைகளும் ஒருவரை நாத்திகத்திற்கு
இட்டுச்செல்வதாயுள்ளன எனவும் கூறுகிறார்.

ஆம், 'சுதந்திரம்' என்பதை தலைகீழாகப்புரிந்து கொண்டவர்கள் இந்நாத்திகர்கள்!
அவர்கள் விரும்புவது எலிகளுக்கான சுதந்திரமேயாகும்! ஆகவேதான்,அவர்கள்
'கடவுள் இல்லை!', 'அறநெறிமுறைகள் வேண்டாம்!', 'மனிதனுக்கு சுதந்திர சித்
தம் (Free-will)என்பதில்லை!' உணர்வு (Consciousness) என்பதில்லை!',
'பரிணாமம் குறிக்கோளற்றது!', 'மனிதவாழ்க்கை இலக்கற்றது!', 'உலகம் என்பது
இயக்கத்திலுள்ள பருப்பொருளே!', 'உயிர்-பிழைத்திருத்தலே மொத்தவாழ்க்கை
யும்!', 'மரபணுக்களை பிரதியெடுப்பதற்காக இனப்பெருக்கம் செய்தலே இலக்கு!'
என்றெல்லாம் தத்துவம் பேசிவருகிறார்கள்; எலிகளுக்கு  சிந்திக்கும்  திறனும்,
பேசும்திறனும் இருந்தால் அவற்றின் தத்துவமும் இவ்வாறுதான் இருக்கும்!

இதுவரை  மேலே குறிப்பிடப்பட்ட தத்துவச்சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தி
யவை யாவும் நாத்திகத்தின் பக்க வேர்கள் அல்லது சல்லி வேர்கள் மட்டுமே
யாகும்! ஆம், நாத்திகத்தின் ஆணிவேரை, வாழ்க்கையை அணுகும் முறையி
லிருந்தும், வாழும் முறையிலிருந்தும்தான் அறியமுடியும்! ஏனெனில்,கடவுள்
என்பது அறிவுஜீவியப் பிரச்சினை(Intellectual Problem)அல்ல! 'கடவுள்
இருக்கிறாரா?' 'இல்லையா?' என்கிற கோணத்தில் கடவுள் எனும் மெய்ம்மை
யை அணுகவியலாது! மாறாக, வாழ்க்கை இருக்கிறது! வாழ்க்கையை வாழ்வ
தற்காக (உணர்வு கொள்வதற்காக) மனிதன் இருக்கிறான்! வாழ்க்கையை ஒரு
வர் முழுமையாக உணர்வு கொள்வதன் வழியாக மட்டுமே உண்மை என்பது
உய்த்துணரப்படமுடியும்!

ஆம்,  "வாழ்க்கை"  என்பது தயார்- நிலையில் அப்படியே  எடுத்துச் சாப்பிடும்
வகையில் கிடைக்கும்  ஒரு உணவுப் பண்டம் போன்றதல்ல;  மாறாக, நன்கு
சமைத்துச்  சாப்பிடுவதற்காக  அளிக்கப்பட்டுள்ள கச்சாப்பொருட்களின் பொதி
(பொட்டலம்) போன்றதாகும்!  அதாவது,   வாழ்க்கையைப் பற்றிய   எவ்விதக்
கேள்வியும், கேள்வியைத்தொடரும் நெடிய சிந்தனையும்,ஆழமான விசாரமும்
இல்லாமல் ஒருவர் வாழ்க்கையை வாழமுடியாது! நாம் எலிகளாக இருந்தால்
மட்டுமே கேள்வி இல்லாமல் வாழமுடியும்! அதே நேரத்தில், நம் அனைவரிட
மும் கேள்விகள் இல்லாமலுமில்லை!  ஆனால்,  அக்கேள்விகள் அனைத்தும்
வாழ்க்கையின் மேற்புறத்துத் தேவைகளைக் குறித்தவை மட்டுமே! ஆக, நாத்
திகர்கள், ஆத்திகர்கள், மற்றும், இப்படியுமில்லாத, அப்படியுமில்லாத அறியொ
ணாவாதிகள் என அனைவரும் வாழ்வின் மேற்புறத்துப்பொருட்களைத் தேடிப்
பெறுவதையே 'வாழ்க்கை' என வாழ்ந்து செல்கின்றனர்! வெகு அரிதாக, கோடி
யில்  ஓரிருவர் மட்டுமே வாழ்க்கையின் உட்பொருளை முதலில் தேடுகிறவர்
களாக   இருக்கிறார்கள்!   வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் இவர்கள் மட்டுமே
அர்த்தமுள்ள   மனித-வாழ்க்கையை  வாழ்பவர்கள்!  ஏனெனில், அர்த்தம்தான்
'கடவுள்'!

இக்கட்டுரை நாத்திகத்தின் ஆணிவேரைப் பற்றியது என்பதால், இது  நாத்திகத்
தையும், நாத்திகர்களையும்  குறிவைத்ததல்ல! ஏனெனில், வாழ்க்கையை ஆழ
மாக  வாழத்தவறிய அனைவருமே  நாத்திகர்களே ஆவர்! வாழ்க்கையின் மிக
அசலான  குறிக்கோள்,  மற்றும் இலக்கை அறியாது வாழ்ந்துசெல்லும் உணர்
வற்ற தன்மையே நாத்திகத்தின் ஆணிவேர் ஆகும்!


மா.கணேசன் / நெய்வேலி / 07-05-2017
----------------------------------------------------------------------------

Thursday, 4 May 2017

இறுதி அற்புதம்!

























அற்புதம் என்று இங்கு குறிப்பிடப்படுபவை உண்மையிலேயே அற்புதமானவை;
காற்றிலிருந்து  கத்தரிக்காய்  வரவழைப்பது,  தங்க மோதிரம்  வரவழைப்பது
போன்ற மாயமந்திர தந்திர ஜாலவித்தைகளையோ, வேறு அசாதாரண நிகழ்வு
களையோ  அற்புதங்கள் என்று  இங்கு குறிப்பிடப்படவில்லை!  ஒரு மனிதன்
அப்படியே எம்பி மேலெழுந்து விண்ணில் பறக்கலாம்; அது அசாதாரணமானது,
அல்லது  வழக்கத்துக்கு மாறானது  என்று காணமுடியும்;  ஆனால், எவ்வகை
யிலும்  அது  இறுதியானதல்ல;  அதாவது,  அது   இறுதியான  பயனையோ,
நன்மையையோ அளிக்கவல்லதல்ல! சாதாரணமானவை,அசாதாரணமானவை
என்பவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்கலாம்.  அவ்வாறே வழக்கமானவை,
வழக்கத்துக்கு மாறானவை என்பவையும்.ஆனால்,இவையெதுவும் இறுதியான
நிஜங்கள் அல்ல!

அற்புதம் என்பது பொருட்களிலோ,நிகழ்வுகளிலோ தங்கியிருக்கவில்லை! அது
காண்பவரின்  உணர்வின் தன்மையைப் பொறுத்ததாகும்!  அற்புதம்  குறித்துச்
சொல்லும்போது,  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  இவ்வாறு சொல்கிறார்:

   "வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன : எதுவுமே  அற்புதம் இல்லை
    என்று நீங்கள் வாழலாம்; அல்லது  ஒவ்வொன்றுமே ஒரு அற்புதம்தான்
    என்று நீங்கள் வாழலாம்."       (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)

ஆக,  அற்புதம் என்பது புறத்தே எங்கும் இல்லை; அற்புதங்கள், அதிசயங்கள்
என்றேனும் நிகழும் என்று காத்திருப்பதும் வீணே! அதாவது அற்புதமாக மாற
வேண்டியது ஒவ்வொரு மனிதனும்தான்! புத்தர் சொல்கிறார்,

   "நம்மால் ஒரு ஒற்றை மலரின் அற்புதத்தை தெளிவாகக் காண
   முடிந்தால், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிவிடும்." (புத்தர்)
                                           
நாம் அன்றாடம் பலவகைப்பட்ட மலர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்,
அழகிய, பலவண்ணங்களில், வித்தியாசமான பல வடிவங்களில் உள்ள மலர்
களைப் பார்க்கிறோம்! ஆனால், நாமோ, நமது வாழ்க்கையோ சிறிதும் மாறிய
தாகத் தெரியவில்லை!

முக்கியமான  விஷயம்  என்னவென்றால்,  சிட்டுக்குருவிகள்,  சிறு தும்பிகள்,
பறக்கின்றன. ஆனால்,அதை ஏன் மனிதர்கள் அதிசயமாக, அற்புதமாகக்கொண்
டாடுவதில்லை!  ஏனெனில், பறப்பதென்பது அவைகளுக்கு இயல்பானது என்ப
தால் பறவைகள் பறப்பதை அற்புதமாகக் காண்பதில்லை.

ஆக, விஷயம் இதுதான், மனிதனுக்குப் பறக்கவேண்டிய அவசியம் இருப்பின்
அவனுக்கும் சிறகுகள் தோன்றியிருக்கும்! ஆனால், மனிதனிடமுள்ள விசேடப்
பண்பு சிந்தித்தல்; அதுவே அவனது இயல்பான பண்பு, மனிதனைத்தவிர வேறு
ஜீவிகள்  எதற்கும்  சிந்திக்கும் திறன்  கிடையாது!  ஆனால், அதே நேரத்தில்
மனிதன்  மட்டும்  ஏனோ   தன்   இயல்பான  தன்மையில் இருப்பதில்லை,
அதாவது பெரும்பாலான மனிதர்கள் சிந்திப்பதேயில்லை!

பொதுவாக, மனிதர்கள் அற்புதங்கள் என்று குறிப்பிடுபவை கீழானவையாகும்!
அவை முதன்மையான அற்புதங்களை இனம்காண இயலாதவர்களால், இனம்
காணத் தவறியவர்களால் சிலாகிக்கப்படும் விஷயங்களாகும்!

முதன்மையான அற்புதங்களில் முதலாவது, உலகம்,இப்பிரபஞ்சம் இருக்கிறது
என்பதுதான்!  இரண்டாவது  அற்புதம்  உயிர்-ஜீவிகள்!  மூன்றாவது  அற்புதம்
மனிதன் தான்! ஆம்,"நீங்கள் இருக்கிறீர்கள்!" என்பதை ஒரு அற்புதமாக நீங்கள்

உணரவில்லையெனில் மிகவும் முக்கியமான ஒன்றை நீங்கள் இழந்துவிட்டீர்
என்றுதான் சொல்லவேண்டும்! வேறு எதைக்கொண்டும் இன்னும்  எல்லாவற்
றையும் கொண்டும் ஈடுசெய்ய முடியாத அரிய பொக்கிஷத்தை உமது கவனக்
குறைவினால் கண்டும் காணாமலும் கடந்து சென்று விட்டீர்!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, "இப்பிரபஞ்சம் இருக்கிறது என்பது பெரிதும் சாத்
தியமற்றது!" எனப்படுகிறது. தத்துவவாதிகள், " அற்புதங்கள் சாத்தியமற்றவை"
என்று சொல்கிறார்கள், ஏனெனில், அவை இயற்கை விதிகளுக்கு மாறானவை,
இயற்கை விதிகளை மீறியவை; மேலும், இயற்கைவிதிகள் மாறாதவை எனப்
படுவதால்  அற்புதங்கள்  சாத்தியமில்லை எனப்படுகிறது!  இயற்கை விதிகள்
மாறாதவை எனும் வாதம், 1670 களில், டச்சு நாட்டு  தத்துவஞானி பெனடிக்ட்
ஸ்பினோசா (Benedict Spinoza) அவர்களால், பிரபலப்படுத்தப் பட்டதாகச்
சொல்லப்படுகிறது.

அற்புதங்களுக்கு எதிரான ஸ்பினோசாவின் வாதம் இவ்வாறு செல்கிறது:

1. அற்புதங்கள் எனப்படுபவை இயற்கை விதிகளின் மீறுதல்கள் ஆகும்.

2. இயற்கை விதிகள் மாறாதவை (Immutable).
 
3. இயற்கை விதிகளை மீறுவது என்பது இயலாது.

4. ஆகவே, அற்புதங்கள் எனப்படுபவை சாத்தியமற்றவை.

உண்மைதான்,  அதாவது,  இயற்கை விதிகள்  மாறாதவை எனும் பட்சத்தில்,
அற்புதங்கள் சாத்தியமற்றவை தான்!  ஆனால், இயற்கைவிதிகள்  எங்கிருந்து
வந்தன? அதாவது, இயற்கை, உலகம்,பிரபஞ்சம் என்பது எங்கிருந்து எவ்வாறு
எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது?  இயற்கை விதிகள் என்பவை இயற்கை
அல்லது  பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு  முந்தையதா?  பிந்தையதா? அல்லது
பிரபஞ்சத்துடன் தோன்றியவையா?

நாம் வாழும் இப்பிரபஞ்சமானது, "பெரு-வெடிப்பு"(Big-Bang)எனும் நிகழ்வில்,
காலம் = பூச்சியம், வெளி = பூச்சியம், எனும் "தனி நிலைப்பாட்டுப்புள்ளி" யில்
(Singularity) தோன்றியதாக விஞ்ஞானிகள்  கூறுகிறார்கள். ஆனால், தற்
போது இப்பிரபஞ்சத்தில் செல்லுபடியாகும் 'மாறாதவை' என்று சொல்லப்படும்
பௌதீக விதிகள் எதுவும் பிரபஞ்சத்தின் பிறப்புக்கணத்தில், அந்த "தனிநிலைப்
பாட்டுப்புள்ளி" யில் செயல்படுவதில்லை என்றும்  அதே விஞ்ஞானிகள் தான்
கூறுகிறார்கள்! அதாவது, இயற்கைவிதிகள் எனப்படுபவை இயற்கை, அல்லது
பிரபஞ்சத்திற்கு முந்தையவையல்ல;  மாறாக, அவை இயற்கையுடன் சேர்ந்து
உருவானவையே.  ஆம், இயற்கையை  எந்த இயற்கை விதியும் உருவாக்கிட
வில்லை என்பதுதான் உண்மை! அப்படியானால்,இயற்கை,பிரபஞ்சம் எவ்வாறு
தோன்றியது? எந்த விதி இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தது?

ஆம், இயற்கை, ( உலகம், பிரபஞ்சம் என எப்படி அதை அழைத்தாலும் அது )
இயற்கையாகத் தோன்றியதல்ல! மேலும், ஒன்றுமில்லாததிலிருந்தும் உலகம்
தோன்றிடவில்லை! ஆனால்,உலகம்,இயற்கை, பிரபஞ்சம் என்பது இருக்கிறது;
எவ்வாறோ அது சாத்தியமாகியுள்ளது!  அதாவது,  இயற்கைவிதி எதுவும் இப்
பிரபஞ்சத்தை, உலகைப் படைக்கவில்லையென்றாலும், நிச்சயம் வேறு ஏதோ
வொரு 'விதி' உலகைக் கொண்டு வந்திருக்கவேண்டும்!   அந்த    உயர்-விதி
"கடவுள்" தான்  என்று  அவசரப்பட்டு  முடிவிற்கு வந்திடுவது முறையாகாது!
ஏனெனில்,  'கடவுள்'  என்பது வெறும் ஒருசொல் மட்டுமே. மாறாக, அவ்விதி
எது,  அது எத்தகைய மெய்ம்மை  என்பது கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும்!
அதே வேளையில், எந்த விதி,அல்லது மெய்ம்மை இப்பிரபஞ்சத்தைப்  படைத்
திருந்தாலும்,  இப்பிரபஞ்சம் அற்புதமானது என்பதில் யாதொரு மாற்றமும் சந்
தேகமும் ஏற்படமுடியாது! மாறாக, இப்பிரபஞ்சத்திற்குக் காரணமான அவ்விதி,
அம்மெய்ம்மை நிச்சயம் அதியற்புதமானதாய்த்தான் இருக்கமுடியும்!

'மனிதன்' எனும் அற்புதத்தைப் பற்றிச்சொல்லவேண்டுமானால், ஸ்காட்லாந்து
தத்துவவாதி  தாமஸ் கார்லைல்   சொல்லியது போல,  "மனிதன்  என்பவன்
அற்புதங்களிலெல்லாம் அற்புதம் ஆவான்!" ஆம், அனைத்து அற்புதங்களுக்கும்
உயிர் தரும் அற்புதம் மனிதனே!  மனிதன் இல்லையேல்,  இப்பிரபஞ்சத்திற்கு
யாதொரு அர்த்தமும் இருக்காது! ஏனெனில்,பருப்பொருளாலான இப்பிரபஞ்சம்
தன்னைத்தானே அறியவோ,உணரவோ இயலாது! ஆகவேதான் பிரபஞ்சமானது
தன்னையறியும் பொருட்டு  தன்னிலிருந்து  விலகி நின்று  தன்னைக் காணும்
வகையில்,மனிதனாக,மனிதனுள் உணர்வாகப் பரிணமித்தது! மனிதன் வந்தான்,
பிரபஞ்சத்தின் பிரும்மாண்டத்தைக்கண்டு பிரமித்து,அதன் புதிரை விடுவிக்கும்
பொருட்டு  நூற்றாண்டுகளாக அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்; இன்னும்
அது, தன் ரகசியத்தை  வெளிப்படுத்திடவில்லை! மனிதன் இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் பிரபஞ்சத்தைத்  துருவித்துருவி ஆராய்ந்தாலும்,அதன் புதிரை
விடுவிக்கவியலாது! காரணம் பிரபஞ்சம் தன்னையறியும் பொருட்டு மனிதனா
கப்பரிணமித்தபோது, பிரபஞ்சத்தின் புதிரானது மனிதனிடம் இடம்மாறிவிட்டது!
ஆம், பிரபஞ்சத்தின் புதிர் மனிதனின் பிரக்ஞை (உணர்வு) யினுள் தான் உறை
கின்றது! மனிதனே அனைத்துப் புதிர்களின் உறைவிடமாவான்!

ஆனால், தனக்குப் புறத்தேயுள்ள பிரபஞ்சத்தையும்,அதிலுள்ள அனைத்தையும்
ஆராய்ந்திடும்  மனிதன் தன்னையறியாத   குருட்டுப் புள்ளியாக இருக்கிறான்.
அனைத்தையும் அறியும் மனிதன் தனக்குத்தானே அந்நியனாக விளங்குகிறான்!
மனிதன் தன்னை அறியாமல், பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளமுடியாது! மேலும்,
அவன் தன்னிலிருந்து விலகி நின்று தன்னைக் காணாதவரை  தன்னை அவன்
அறிந்துகொள்ள  முடியாது!  தன்னிலிருந்து விலகி நிற்றல் என்பது,  தன்னைக்
கடந்து வளர்வதைக் குறிக்கிறது!

ஆம், மனிதன் தன்னை ஒரு அற்புதமாகக்  காண்பதற்குரிய விழிப்பு நிலைக்கு
வர வேண்டும்!  அநேகர்  தங்களது அற்புதத்திற்கு விழிக்காமலேயே வாழ்ந்து
மறைந்து போகின்றனர்!

மனிதன் மட்டும் தன்னைப்பற்றிய உண்மையை அறிய முற்படுவானேயானால்,
உண்மையில், முதல் அற்புதமும், இறுதி அற்புதமும் மனிதனேயாவான்! ஆம்,
"தான் இருக்கிறேன்!"  என்பதை உணர்வது முதல் அற்புதம்! தன்னை முழுமை
யாக  உணர்வு கொள்வது, (தன்னில் முழுமையாகக் கனிவது) இறுதி அற்புதம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 01-05-2017
----------------------------------------------------------------------------

Sunday, 30 April 2017

எது?







"எது?" எனும் கேள்வி மனிதவாழ்வில் எது முக்கியமானது, இறுதியானது என்
பதைப் பற்றியதாகும். ஆம், எது முக்கியமானது, இறுதியானது, எது வாழ்வின்
இலக்கு  என்பவற்றைப் பற்றிய  கேள்வியும்,  சிந்தனையும்  இல்லாமல் ஒரு
போதும்  மனித வாழ்வு  அர்த்தம் பெறவோ;  மனிதத்தரத்துக்குரிய வாழ்வை
நம்மால் வாழவோ இயலாது.

வாழ்க்கையைப்  பற்றிப்  பேசும்போது  பொதுவாக பயணத்தை உவமையாகச்
சொல்வதுண்டு.  ஆனால், எங்கு, எதை நோக்கிய, எத்தகைய இலக்கை அடை
வதற்கான  பயணம்  என்பது தெரியாமல் மேற்கொள்ளப்படும் பயணம் அர்த்த
மற்றதாகும்!சென்றடையும்இடம் தெரியாத பயணம் எவ்வாறு அர்த்தமற்றதோ
அவ்வாறே குறிக்கோளற்ற, இலக்கற்ற வாழ்க்கையும் அர்த்தமற்றதே யாகும்!

வாழ்க்கையின் குறிக்கோள் பற்றிக்கேட்டால்,  "வாழ்வது தான் வாழ்க்கையின்
குறிக்கோள்!"  என்று நம்மில் பலர் பட்டென்று  பதிலிறுப்பதை நாம் கேட்டிருக்
கிறோம்.  ஆனால்,  இப்பதில் எவ்வளவு பாமரத்தனமானது என்பதை நாம் சிறி
தும் உணர்வது கிடையாது!  பொதுவாக  நம்மிடம் பிரத்யேகமாக "வாழ்க்கைப்
பார்வை" என்று எதுவும் கிடையாது!  அது குறித்து நாம் சிந்தித்த தேயில்லை!
உயிர்-வாழ்தல்,  அதற்குரிய தேவைகள், அத்தேவைகளின் நிறைவேற்றம் என்
பதற்கு மேல் வாழ்க்கையைப்பற்றி நாம் அறிந்தோமில்லை!

வாழ்க்கையில் எது  முக்கியமானது  என்பதை  நாம் ஒவ்வொருவரும் நன்கு
அறிந்துள்ளதாகவே கருதிக்கொண்டிருக்கிறோம்!  நம்மில் சிலர், மிகத்  தாராள
மாக "எல்லாமே முக்கியம்தான்!" என்று பசப்புகிறோம்! ஆனால்,அப்பட்டியலில்
"வாழ்க்கை" மட்டும் இடம்பெறுவதில்லை!

"வாழ்க்கை" என்பது ஒரு விசேட உணர்வு ஆகும்! அது இனிய தருணங்களின்
நினைவோ,  அல்லது எதிர்காலத்தில்  எட்டிப்பிடிக்கப்படவிருக்கும் இலட்சியக்
கனவோ அல்ல!  இன்னும், நிகழ்காலத்தில் நீங்கள் விழுந்து புரண்டு ஆற்றும்
காரியங்களும், ஈடுபாடுகளும்  அல்ல!  ஆம்,  வாழ்க்கை  என்பது  இருப்பின்
மையத்தைக் கண்டடைந்த (மனித)உணர்வின் உணர்வு ஆகும்! வாழ்க்கை,அது
உணர்வார்ந்ததொரு இருப்பு நிலையாகும்!  அதாவது,  இருப்பு உணர்வு பெற்ற
துடன் தன்னையே உணர்ந்த நிலையாகும்! வாழ்க்கை என்பது ஒருமையாகும்!
அது  பலவகைப்பட்ட  விஷயங்களின்,  அம்சங்களின்,  பகுதிகளின் தொகுப்பு
அல்ல!

ஆக, "வாழ்வில் 'எது' முக்கியமானது"?  என்ற கேள்வியில், இடம்பெறும் 'எது'
என்ற சொல் ஒருமையைக் குறிக்கிறது. ஏனெனில், முக்கியமானது என்பதில்,
பன்மைக்கு,   பல விஷயங்களுக்கு,  மூட்டை முடிச்சுகளுக்கு  இடமில்லை!
முக்கியமானது என்று ஒன்று தான் இருக்கமுடியும், ஏனெனில், இறுதியானது
என இரண்டு அம்சங்கள் இருக்கமுடியாது!

அடுத்து,  'முக்கியமானது'  என்பது எத்தகையதாக இருக்கும்; அதை எவ்வாறு
இனம் காண்பது? ஆம்,எது மனிதனை முழுமைப்படுத்துகிறதோ, முழுநிறைவு
அளிக்கிறதோ,எது எல்லாவகையிலும் இறுதியானதோ,அதுவே முக்கியமானது!
பெரும்பாலான மனிதர்களுக்கு அடிப்படை அம்சங்களுக்கும்,  இறுதியான அம்
சத்திற்கும்  உள்ள  வித்தியாசம்  இன்னும்  புரியவில்லை!  ஆம், உள்ளவை
அனைத்தும்  வாழ்க்கையை  எட்டுவதற்கான  ஏற்பாடுகளே, படிக்கட்டுக்களே
தவிர,  அவை வாழ்க்கையல்ல! வழியைப் பற்றிக்கொண்டு இலக்கைத் தவற
விடுவது தற்கொலைக்குச் சமமானதே! அதாவது,உயிர்-பிழைத்திருத்தலுக்கும்
(Sruvival), உண்மையான வாழ்தலுக்கும் (Living) உள்ள வித்தியாசம்
அறியாத  மனித-மந்தை தான்  சமூகம் என்பதாகும்.   (உயிர்) பிழைப்புக்கான
பயன்களைத் தேடிடும்  வழிமுறையில், பிறவிப் பயனைத் தொலைத்துவிட்ட
பெருங்கூட்டம்!

மனிதர்கள்  விபரீதமான ஜீவிகள்!  பலருக்கு  வயிறு நிறைந்தாலே  போதும்
வாழ்வின் அர்த்தத்தை அடைந்துவிட்டாற்போன்றதொரு திருப்தி ஏற்பட்டுவிடு
கிறது!  இன்னும் பலருக்கு சௌகரிய சம்பத்துக்களை அடைவதிலேயே வாழ்
வின்  இலக்கு அடையப்பட்ட உணர்வு கிடைத்துவிடுகிறது! சிலருக்கு சமூகத்
தில் பேரும் புகழும் பெற்றுத்திகழ வேண்டும்! சிலருக்கு பெரும்பதவி,அதிகார
நிலைகளை அடையவேண்டும்! பொதுவாக,மனிதர்கள் இயற்கையான தூண்டு
தல்களுக்குப் பதிலளிக்கும்  ஜீவிகளாகவே  ஜீவித்துவருகின்றனர்!  உடனடித்
தேவைகள், உடனடி அலுவல்கள்,பிரச்சினைகள்,விவகாரங்கள் ஆகியவற்றைக்
கடந்து  மனிதர்களால்,  வாழ்க்கையைக் காணவும்,  வாழ்க்கையின் அர்த்தம்,
குறிக்கோள், இலக்கு ஆகியன குறித்தெல்லாம் சிந்திக்கவும் முடிவதில்லை!

ஆக, உடனடி விவகாரங்களால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு அலைக்கழிக்
கப்படும்  மனிதத்திரளினால்  இறுதியான அம்சம் குறித்து சிந்திக்கமுடியாமல்
போவது  குறித்து  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!  மேலும்,  மனிதகுலமானது
கடற்கரையில்  விளையாடிக்கொண்டும்,  சிறு  கிளிஞ்சல்களைப்  பொறுக்கிச்
சேகரித்துக் கொண்டும் இருக்கும்  சிறுவர்களை  ஒத்ததாக  இருக்கிறது! அவர்
களுக்கு,   கடலின் ஆழம்  குறித்த  கற்பனையும் கிடையாது,  ஆழத்திலுள்ள
அரிய  முத்துக்களின்  மகத்துவமும் தெரியாது!  என்னசெய்வது?  இறுதியான
தைப்பற்றி விசாரிக்க  விசேட விழிப்பு தேவைப்படுகிறது! அறிந்த உலகையும்,
அறிந்த வாழ்க்கையையும்,  உடனடித் தேவைகளையும் கடந்த,  அறியப்படாத
உலகையும்,   வாழ்க்கையையும்,  இறுதித் தேவையையும்  பற்றி  விசாரிக்க
கூருணர்வு தேவைப்படுகிறது!


மா.கணேசன்/நெய்வேலி/ 01-04-2017
----------------------------------------------------------------------------

Friday, 28 April 2017

அது!





     
       

                     அதன் "இல்லாமை" சதா காலமும், நம்மை நனவிலும்
                       கனவிலும் நெருடிக்கொண்டேயுள்ளது, அனைத்தின்
                 இருப்பையும் விட, அதன் "இல்லாமை" ஓங்கி ஒலிக்கிறது.
                ஆனால், நமது மனம், மற்றும் அன்றாடத்தின் இரைச்சலில்,
               அது நம் எல்லோருக்கும் கேட்பதில்லை. இல்லாத, அறியாத
                         பொருளைவிட இருக்கின்ற, அறிந்த பொருட்களை
                      சிந்திப்பதும், தேடியடைவதும்தான் உசிதம் என்கிறது
                  இச்சைகளின் வழி செல்லும் நமது சுயம்... அனைத்திற்கும்
                   ஆதாரமான, மூலமானதொரு மெய்ம்மை உள்ளது. அதன்
                  நிழல்தான், இம்மாபெரும் பிரபஞ்சமும், அதிலுள்ள யாவும்,
               நாமும்! அனைத்தும் மறைமுகமாக அதையேச் சுட்டுகின்றன;
                         தத்தம் நிலை மற்றும் அமைப்புக்கேற்ப, அதையே
                       நோக்கியுள்ளன, நாடுகின்றன. அதை எவ்வாறேனும்
               அடையாமல் நமது இருப்பும், வாழ்வும் ஒருபோதும் அர்த்தம்
                 பெறாது, நிறைவடையாது, முழுமை பெறாது. ஆனால், அது
                         குறித்து நாம் இன்பத்திலும், துன்பத்திலும், சாதாரண
                    தருணத்திலும்; தாமாகவும் அல்லது எவர் சொல்லியும்கூட
                   சிந்திப்பதில்லை. அது இல்லாதது போலத் தோன்றினாலும்,
                           அது மட்டுமே நிஜத்திலும் நிஜமானது, நிரந்தரமாய்,
                            நித்தியமாய் உள்ளது. அதுதான் உண்மை, சத்தியம்,
                          மெய்ப்பொருள். அதுவே அனைத்தின் சாரம்; ஆதியும்,
                        அந்தமும், அனந்தமும் அதுவே! தன்னையேத் தியாகம்
                      செய்து, சிருஷ்டியாக உருமாறி, தன்னையே தேடி, இறுதி
                         விளைவாக எழ எத்தனிக்கும் மூல முதல் காரணமான
                                                      'கடவுள்' எனும் புதிர்!
                   
                                                                 <<<<•>>>>

இப்பதிவு, 2014-ல் வெளியான எனது "கடவுள்புதிர்" நூலிலிருந்து "அது" என்ற
            பகுதி  அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
               

மா.கணேசன்/நெய்வேலி/ 29-04-2017
----------------------------------------------------------------------------

வாழ்வது சாவதற்காகவா?





      வாழ்வு, சாவு இரண்டையும் வித்தியாசப்படுத்துவது உணர்வு!
      உணர்வில்லையேல்,  வாழ்வும்  இல்லை!  சாவும்  இல்லை!
      உணர்வு வாழ்வையும், உணர்வின்மை சாவையும் குறிக்கிறது!
      உணர்வும், உணர்வின்மையும், இரு எதிரெதிர் துருவங்கள் எனில்,
      மூன்றாவது துருவம் ஒன்றும் உள்ளது; அதுதான் முழு-உணர்வு!
      வாழ்வின் முடிவும் முழுமையும் பெரு-வாழ்வே தவிர சாவு அல்ல!
                       
                         <•>

செடிகொடிகள்,  புழு  பூச்சிகள், பறவைகள், பெருவிலங்குகள் இவை எதுவும்
"தாம் இருக்கிறோம்!"  என்பதை  உணர்வதில்லை! ஆகவே "மரண-பயம்" என்
பது  அவற்றிற்கு இல்லை! ஆனால், "தாம் இருக்கிறோம்!" என்பதை உணரும்
மனித ஜீவிகளாகிய  நாமோ  தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கின்றோம்
மரண-பயத்தில் !

சாக்ரட்டீஸ், கி.மு 399-ல், தன் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த போது,
"தத்துவத்தை  முறையாகப் பயிற்சி செய்து வருபவர்களின்  ஒரு குறிக்கோள்
என்னவென்றால்,  இறப்புக்கும், இறப்பதற்காகவும் பயிற்சிசெய்தலே" என அறி
வித்ததாக பிளேட்டோ சொல்கிறார்.

அதற்கு 2000 வருடத்திற்குப்பிறகு, பிரெஞ்சு  மறுமலர்ச்சி  சிந்தனையாளரான
மாண்டேய்ன் (Michel de Montaigne) கூறியதென்னவென்றால்,  "எல்லா
ஞானமும்,  பகுத்தறிவுச் சிந்தனைகளும்  முடிவில்  இறப்பதற்கு  அஞ்சாமல்
இருக்கும்படி நமக்குப் போதிப்பதற்கே" என்றார்.

ஒரு வகையில், அஞ்சாமல் மரணத்தைச் சந்திக்கும் தீரம்தான் தத்துவஞானிக்
கான அளவுகோல் எனச் சிலர் கருதினாலும், பல மகத்தான தத்துவஞானிகள்
என்று குறிப்பிடப்படுபவர்களின் தத்துவம் என்பது மரணம் குறித்த எதிர்வினை
களே  என்றமையும்  பட்சத்தில்,  அத்தத்துவச் சிந்தனையாளர்களின் எல்லாக்
கூற்றுகளையும் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்றுதான்
சொல்லத் தோன்றுகிறது!  ஏனெனில், மரணத்தை மையப்படுத்துகிற, அல்லது
பிரதானப்படுத்துகிற எவ்வொரு தத்துவமும் குறைபாடுடையதே ஆகும்! ஏனெ
னில், 'மரணம்'  என்பது இறுதியானதுமல்ல, ஒரு அடைவிடமும்  (இலக்கும்)
அல்ல! (Neither death is something final, nor it is a desti
nation!)

அதே வேளையில்,  சாதாரணர்களின் மரணத்திற்கும், தத்துவச்சிந்தனையாளர்
களின்  மரணத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது!  எவ்வாறெனில், தத்துவ
வாதிகள்  வாழ்ந்ததற்கான தடயமாக  அவர்களது தத்துவங்கள் திகழ்கின்றன!
அதாவது, 2400 வருடங்களுக்குப் பிறகும் நாம் சாக்ரட்டீஸ் பற்றிப்பேசுகிறோம்,
ஆனால்,  அவருடைய  அண்டைவீட்டுக்காரரைப் பற்றியோ, அவர் காலத்தில்
வாழ்ந்த பிற எண்ணற்றவர்களைப் பற்றியோ நாம் பேசுவது இல்லை! மேலும்,
சாக்ரட்டீஸ்  பற்றிப் பேசும் போது அவரது  சீடர் பிளேட்டோவையும்,  பிளேட்
டோவின் சீடரான அரிஸ்ட்டாட்டில் பற்றியும் பேசுகிறோம்! அதேவேளையில்,
அரிஸ்ட்டாட்டிலின்  சீடரான  அலெக்ஸாண்டர்  பற்றிக் குறிப்பிட   மட்டுமே
செய்கிறோமே தவிர அதிகம் பேசுவதில்லை! ஏனெனில், அலெக்ஸாண்டரிடம்
குறிப்பிடும் படியான தத்துவப் பங்களிப்பு எதுவும் இல்லை!

ஆக,  தத்துவச் சிந்தனையாளர்களின்  மரணம்  சாதாரண  வகையைச் சேர்ந்த
தல்ல;  அவை  தத்துவப்பூர்வமான  மரணங்களாகும்!  அதாவது,  அவர்களது
வாழ்க்கையும்  தத்துவப்பூர்வமானவையே;  அவர்கள் சாதாரணர்களைப்போல,
ஏதோ  பிறந்தோம், உயிர்-வாழ்ந்தோம், செத்தோம் என்றில்லாமல்,  வாழ்க்கை
யைப்புரிந்து கொள்வதையே வாழ்க்கையாக வாழ்ந்தனர் எனலாம்.

மரணம் குறித்த கிரேக்கத் தத்துவவாதி எபிக்யூரஸ்-ன் புகழ்பெற்ற ஒரு கூற்று,
"நாம் உயிரோடிருக்கும் வரை  மரணம் என்பது நம்முடன் இல்லை;  ஆனால்,
மரணம் வரும்போது, நாம் இருப்பதில்லை." என்றார். இதிலிருந்து எபிக்யூரஸ்
எடுக்கும் முடிவு என்னவென்றால், "மரணம் என்பது வாழ்பவர்களுக்கும்,  இறந்
தவர்களுக்கும்  ஒரு  பொருட்டு  அல்ல என்பதே;  அதாவது   வாழ்பவருக்கு
மரணம் இல்லை, இறந்தவர் தற்போது இருப்பதில்லை!"

ஆனால்,  எபிக்யூரஸ்-ன்  இக்கூற்று,  குறிப்பாக, " நாம் உயிரோடிருக்கையில்
மரணம் என்பது நம்முடன் இல்லை"  என்பது  மேலோட்டமானதாகும்!  ஏனெ
னில்,மரணம் என்பது வாழ்வின் இடையில் எப்போதோ,அல்லது இறுதியிலோ
சம்பவிக்கின்ற  ஒரு 'தீமை' அல்ல! மாறாக,  அது உயிர்-இருப்பின், வாழ்வின்
பின்புலத்தில் இடைவிடாது செயல்படும் ஒரு எதிர்-விசை (Counter-Force)
போன்றதாகும்! ஆக,நம் இருப்பின்மீது மரணத்தின் தாக்கம் என்பது எப்போதும்
இருந்துவரும் ஒன்றாகும்!

ஏனெனில்,  இருப்பு  என்பது முதலிடத்தில், இன்மைக்கு (Non-Existence)
எதிராகக் கட்டியெழுப்பட்ட ஒன்றாகும்!  ஆகவே,  இறப்பு  என்பது  எப்போது
வேண்டுமானாலும்  நிகழலாம்.  அதாவது, சற்று வழுக்கினாலும் இருப்பானது
(Existence),இன்மையில்(Non-Existence)தான் விழவேண்டியிருக்கும்!

மரணம்  என்பது முடிவிற்கு  வருதலைக் குறிக்கிறது;  ஆனால்,  மனிதனில்
உண்மையில்  எது  முடிவிற்கு வருகிறது என்பது தான் முக்கியமான கேள்வி
யாகும்!  ஆம்,  உயிரோடிருத்தல்  என்பதும்,  உடலும்,   உடலுடன் தன்னை
அடையாளப்படுத்திக்கொண்ட மனமும், மனம்  தொடர்புபடுத்திக்கொண்டுள்ள
அனைத்து  விஷயங்களும், அம்சங்களும், பிணைப்புகளும், புற உலகுடனான
பந்தங்களும் தான்  முடிவிற்கு வருகின்றன!  சுருக்கமாகச்  சொன்னால், உயி
ரோடு இருத்தல் என்பதைச் சார்ந்துள்ள  உடலும்,  மனமும் தான் முடிவிற்கு
வருகின்றனவே தவிர, உணர்வு முடிவிற்கு வருவதில்லை! ஆம், உணர்வுக்கு
மரணமில்லை!

அதாவது,  உண்மையில்  'தான்' யார்  அல்லது,  'எத்தகைய நிஜம்' என்பதை
உணர்ந்தறிந்த  மனிதனுக்கு மரணம் குறித்து அஞ்சவேண்டிய தேவை இராது!
எனினும்,  உணர்வாகிய மனிதன் உடலில் தங்கி வாழும் வரை, மரண பயத்தி
லிருந்து முற்றிலுமாக விடுபடுவதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல!
அதற்கு அதீதமான பக்குவம், அதாவது சாதுரியம் வேண்டும்!அதாவது,  மரண-
பயத்தையும்   ஒருவன்   தனக்குச் சாதகமாகப்  பயன்படுத்திக்  கொள்ளுதல்
வேண்டும்!

பயம்,  அது எவ்வகைப் பயம் என்றாலும், மறைமுகமாக ( நனவிலி ரீதியாக )
அது மரண-பயத்தையே குறிக்கிறது, அடிப்படையாகக்கொண்டது  என்று சொல்
லப்பட்டாலும், பயம் என்பது முற்றிலும் எதிர்-மறையான ஒரு உணர்வு என்று
சொல்லிவிட முடியாது!  பயம் என்பது  பிரதானமாக  ஒரு கவன - உணர்வே
ஆகும்;  அதை நாம், எச்சரிக்கை உணர்வு, விழிப்புணர்வு, முற்காப்புணர்வு என்
றெல்லாம் விரித்துக் காணலாம்! 'பயம்' என்பது உணவுக்கு உப்பு போல அளவு
டன்  இருப்பது அவசியமாகும்! பயம் என்பதில்லையெனில், எவ்வொரு  உயிர்-
ஜீவியாலும்  இப்பூமியில் உயிர் வாழவியலாது!  அதாவது தன்னைக் காத்துக்
கொள்ளும்   முனைப்பின்   உணர்வு  தான்  பயம்!   அது   உயிர்  ஜீவியின்
அடிப்படையிலேயே பின்னப்பட்டதொரு இழை போன்றதாகும்!

அதேநேரத்தில், மரணம் என்பது எதிர் கொண்டாகவேண்டிய, அவசியம் புரிந்து
கொண்டாகவேண்டிய, புரிந்து கொண்டு கடக்கப்படவேண்டிய ஒரு நிஜமாகும்!
ஏனெனில், உண்மையில் இறப்பது நாமல்ல; நமது உடல் தான், அதன் காலம்
முடிந்ததும் இறக்கிறது!  மனித உடலானது நோய், மூப்பு ஆகியவற்றுக்கு உள்
ளாகி இறுதியில் இறப்பில்முடிவது என்பது உறுதியாகும்.ஆக ஒருவன்  இவற்
றையெல்லாம்  கணக்கில் கொண்டு  உடலின்  இறப்பை  உணர்வுபூர்வமாகச்
சந்திக்கத்  தயாராகிட வேண்டியது  அவசியமாகும்.  இல்லாவிடில்,  உடலின்
இறப்புடன் இணைந்து உணர்வாகிய தானும் மடிய நேரிடும்! மேலும், இறப்பது
உடல் தானே நமக்கென்ன என்று எவரும் வாளாவிருக்கமுடியாது; ஏனெனில்,
உணர்வும், உடலும் வேறாயினும், உடலைச் சார்ந்துதான் உணர்வு வாழ்கிறது!

மிகச்சரியாகச்சொன்னால், உணர்வைத் தாங்குவதற்கான உகந்த பொறியமைப்
பாகத்தான் பரிணாமக் கிரமத்தில் உயிருள்ள உடல்ஜீவி முதலில் தோன்றியது!
மேலும்,  முறையான  விழிப்பு  பெறாத  எண்ணற்ற  மனிதர்கள்  உடலுடன்
கொண்டுவிட்ட  ஐக்கியத்தின்  விளைவாக  உடலின்  இறப்பு  அவர்களுக்குக்
கொடும் துன்பகரமான ஒருஅனுபவம் மட்டுமல்லாமல்,அழிவுகரமானதுமாகும்!

ஆனால்,   மரணத்தைப்  புரிந்து கொள்வது,  உடல்  முடிவுக்கு   வருவதை
உணர்வுப்பூர்வமாகச் சந்திப்பது என்றால் என்ன? ஆம், மனிதன் தன் அகந்தை
உணர்வைக்  கடந்து வளராத  வரையில்,  அவனால்  மரணத்தை,  அதாவது
தொடர்ந்து  உடலில்  இருந்தவாறே  தன்  உணர்வு- நிலை  வாழ்க்கையைத்
தொடர முடியாத  ஒரு  நிலைமையைச் சந்திப்பதென்பது  இயலாது! மேலும்,
மரணத்தை  உணர்வுப் பூர்வமாகச் சந்திப்பது  என்பது  வெறும்  அறிவுப்பூர்வ
மானதொரு  விஷயமோ  அல்லது  கோட்பாட்டு ரீதியானதொரு விஷயமோ
அல்ல!  ஆனால்,  அது பற்றிய  விளக்கங்கள்  யாவும் கோட்பாட்டு ரீதியான
விஷயங்களாகத்தான் பிறருக்குத் தோன்றும்! உடலின்  மரணத்தை உணர்வுப்
பூர்வமாகச்  சந்திப்பது என்பது உடலின் மரணத்தினூடே சென்று மரணத்தைக்
கடப்பது  என்பதே!  அதாவது,  மரணத்தைத்  தவிர்ப்பதற்கான  ஒரே உபாயம்
மரணத்துடன் வாழ்வதே!

முக்கியமாக,  ஒருவன்  தன் உடலில் தங்கி வாழும் காலத்திலேயே உடலில்
இருந்து  விலகி நின்று  உணர்வாய் வாழும் வாழ்க்கையுடன்  பரிச்சயம் பெற்
றிருத்தல்  என்பது  ஒரு அவசியமான முன்-தேவையாகும்!  அதற்கு, தத்துவச்
சிந்தனைப்பயிற்சி  என்பது  ஒரு  சிறந்த வழியாகும்.  பொதுவாக, காலத்தில்
தொடர்வதையே,  பயணிப்பதையே  அதாவது  எவ்வளவு  காலம் உயிரோடு
இருக்கிறோம்  என்பதையே  எல்லோரும்  சிறப்பான வாழ்க்கை எனக் கருதிக்
கொண்டிருக்கிறோம்!  ஆனால், இவ்விஷயத்தில்,  கடல்ஆமைகள் மனிதனை
மிகச்  சுலபமாகத் தோற்கடித்துவிடும்;  அவை  சாதாரணமாக  350   அல்லது
400  வருடங்கள் உயிர்-வாழ்கின்றன! ஆனால், நீண்ட காலம் உயிர்வாழ்வதில்
யாதொரு  அர்த்தமும்  அடங்கியிருக்கவில்லை!  மாறாக,  எவ்வளவு  உணர்-
வோடிருக்கிறோம் என்பதில்தான் வாழ்வின் அர்த்தமும்,முழுமையும்,இலக்கும்
யாவும் அடங்கியுள்ளன!

மேலும்,  'காலம்'  என்பது  தொடக்கப்புள்ளியும் முடிவுப்புள்ளியும் அற்ற ஒரு
வட்டம்  போன்றது;   உண்மையில்,  காலம்  என்பது  காலத்தில்  தோன்றிட
வில்லை!  மாறாக,   காலமில்லாப்புள்ளியில்,  காலாதீதத்திலிருந்து  வெளிப்
பட்ட  ஒரு  சிறு  குமிழியே காலம்  என்பதாகும்; அக்குமிழி  பெரிதாகி வெளி
யாக   விரிந்து,   கால-வெளி உலகம் என்பதாயிற்று! ஆக கால ஓட்டத்துடன்
சென்று  ஒரு போதும்   காலம்   மொத்தத்தையும்   வசப்படுத்த  முடியாது!
மாறாக,   காலத்தைக் கடப்பது,  அல்லது  காலத்தை  முடிவிற்குக் கொண்டு
வருவதன்  வழியாக  மட்டுமே  காலத்தை வெற்றி கொள்ளமுடியும்; அதற்கு,
கால ஓட்டத்துடன்  பயணிப்பதை நிறுத்தி  "இப்போதில்"  நிலைக்கவேண்டும்!
கால ஓட்டத்துடன் பயணிப்பதை  நிறுத்துவதுடன்,  வரலாற்று  ஓட்டத்துடன்
இணைந்து செல்வதையும்;  இன்னும்  சமூகத்தின்  எவ்வகைப் பந்தயத்திலும்
கலந்து கொள்வதையும் ஒருவர் நிறுத்திடவேண்டும்!

'இப்போதில்  வாழ்வது',  'கால - ஓட்டத்தை  நிறுத்துவது',   'எண்ணங்களைக்
காலிசெய்வது',  'தியானம்'  போன்ற  யாவும் உணர்வில் ஆழ்தல் என்பதையே
குறிக்கின்றன!   இவற்றில்  "உணர்வில் ஆழ்தல்" என்பதைத்தவிர பிறவற்றை
எவரும்  பயிற்சியாக  மேற்கொள்ளமுடியும்;  ஆனால்,  அவற்றின்  மூலமாக
எவரும்   உணர்வில் ஆழ்ந்திடவோ,  உணர்வில் நிலைத்திடவோ  முடியாது!
ஏனெனில்,  உணர்வுக்கு வருதல், விழிப்படைதல், உணர்வோடிருத்தல் ஆகிய
வற்றைப் பயிற்சி  செய்வதன் மூலம் அடையவியலாது!  மேலும் உணர்வுக்கு
வருதல் என்பது எவ்வாறு என்று எவரும் எவருக்கும் கற்றுத்தரவும் இயலாது!
இதை  மிக எளிதாகச் சொல்லவேண்டுமானால்,  ஒருவன்  தனது  இருப்பை,
"தான் இருக்கிறேன்!"  என்றுணரும்  உணர்வதைத்தாண்டி, சற்றும் அகலாமல்
அதிலேயே நிலைப்பதையே உணர்வில் ஆழ்தல் என்று குறிப்பிடப்படுகிறது!

மேலும்,  ஒருவன்  தனது இருப்பை உணர்வதற்காக மீண்டும் தன் குழந்தைப்
பருவத்திற்குச்  செல்லத்தேவையில்லை!  மாறாக,  எந்த  நேரத்திலும் உணர
லாம்,  எல்லா நேரத்திலும் உணரலாம்!  ஏன்,  இப்போதே  இக்கணத்திலேயே
ஒருவன்  தன்னை,  தனதிருப்பை,   உணரத் தொடங்கலாம்,  அவ்வுணர்வில்
ஆழ்ந்திடலாம்!  உண்மையில், எப்போது  ஒருவன் தன்னை உணரத்தொடங்கு
கிறானோ  அக்கணத்தில்தான்  அவன்  உண்மையில்  பிறக்கிறான்!  ஒருவன்
எவ்வளவு  ஆழமாகவும்,  முழுமையாகவும்   தனதிருப்பை  உணர்கிறானோ,
அதாவது,  உணர்வில்  ஆழ்கிறானோ,   அவ்வளவிற்கு  அவன் தன்னில் ஆழ
மடைகிறான், முழுமையடைகிறான்!

உண்மையில், வாழ்வாயினும், சாவாயினும், இவ்விரண்டையும் கடந்த வேறு
வகை  நிஜமாயினும், யாவற்றையும் உணர்வின் சொற்களில் மட்டுமே புரிந்து
கொள்ளமுடியும்!  உணர்வே அனைத்தின் அளவீடு (Measure) ஆகும்! சற்று
எண்ணிப் பாருங்கள்,  நாம்  மட்டும் 'சுய-உணர்வற்ற' தவளைகளாயிருந்தால்,
நமக்கு வாழ்வும் புரியாது, சாவும் தெரியாது!  உயிரோடு  இருக்கும்வரை புழு
பூச்சிகளை  உண்டு,  இனப்பெருக்கம்  செய்து,  பாம்புகளைக்  கண்டு பதுங்கி,
மரணம் வந்ததும் எவ்வித புகாரும், புலம்பலும் இன்றி, என்ன ஏதென்று இனம்
புரியாத திகைப்புடன் மாண்டுபோவோம்!

ஆனால்,  நாம்  சுய-உணர்வுள்ள  ஜீவிகளாயுள்ளோம் என்பது தான் நம்மைப்
பிற   விலங்குஜீவிகளிடமிருந்து   வித்தியாசப்படுத்துகிறது.  அதே  உணர்வு
தான்  நம்முடைய  வாழ்க்கையையும் பிற ஜீவிகளுடைய வாழ்க்கையிலிருந்
தும்  வேறுபடச் செய்கிறது!  முக்கியமாக,  நாம்  விலங்கு ஜீவிகளைப்போல
வெறுமனே   உயிர் - பிழைத்திருப்பதற்காகத்  தோன்றியவர்களல்ல; மேலும்,
உணர்வு  என்பது  உயிரோடிருப்பதை  உணர்வுகொண்டு  செவ்வனே நடத்திச்
செல்வதற்கான ஒரு கருவியும் அல்ல! மாறாக, நாம் உணர்வில் மேன்மேலும்
வளர்ந்து உயர்ந்து உணர்வின் முழுமையை அடைவதற்காகத்தோன்றியவர்கள்!

உணர்வின்  முழுமையை   நாம்  ஏன்  அடையவேண்டும்?   நாம்  தற்போது
அடைந்துள்ள   இந்த   அகந்தை-உணர்வு  போதாதா?  போதாது,   ஏனெனில்
நாம்  அடைந்துள்ள  அகந்தை-உணர்வு  என்பது  உணர்வின்  ஒரு  தொடக்க
நிலை மட்டுமே! மேலும், நாம் வேறு, அகந்தை எனும் உணர்வு வேறு அல்ல;
பேச்சுவழக்கில்  நாம்  'உணர்வுள்ளவர்கள்' என்றும், நமக்குக் கைகள், கால்கள்
உள்ளதைப்போல  உணர்வும் உள்ளது என்றும் கூறுகிறோமே தவிர  உண்மை
யில் அகந்தை எனும் சிற்றுணர்வு தான் நாம்!  ஆம்,  உணர்வு தான் மனிதன்!
இன்னும்  உணர்வுதான் வாழ்க்கை என்பதும்!  ஆக,  சிற்றுணர்வாக, அல்லது
அரையுணர்வாகத்  தோன்றிய நாம்  ஒவ்வொருவரும் முழு-உணர்வாய்  மலர்
வது அதிமுக்கியமானதாகும்!  ஏனெனில், உணர்வின் முழுமை அல்லது முழு-
உணர்வு தான் முழுமையான இருப்பும், வாழ்க்கையும் ஆகும்!

மேலும், முழு - உணர்வின்  பரிமாணம்  சாதாரண  மனித  உணர்விலிருந்து,
அதாவது,  அகந்தை - உணர்விலிருந்து  முற்றிலும் வேறானது!  அது 'ஆக்கம்,
அழிவு',  'தொடக்கம், முடிவு',  'இயக்கம், இயக்கமின்மை',  'மாற்றம்,  மரணம்'
ஆகியவைகளைக்  கடந்தது! அது கால-வெளி உலகைக்கடந்தது, ஆகவே அது
நித்தியமானது!  அதுவே  ஒருமையும் முழுமையுமான மெய்ம்மை!  ஒருவன்
முழு-உணர்வை  ஒரு முறை,  ஒரு கணம் மட்டுமே  தொட்டாலும் போதும்;
உணர்வாகிய  அவனுக்கு  மரணம் என்பதில்லை!  இது வெறும் நப்பாசையோ,
அல்லது,  நித்திய வாழ்வு  குறித்த  ஏக்கத்தின் கோட்பாடோ  அல்ல! மாறாக,
புத்தர்கள், சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் ஞானிகள் அனுபவபூர்வமாக உணர்ந்
தடைந்த உண்மையாகும்!

ஆம்,  "மனிதனால், தன்  உடலை  மரணத்திடமிருந்து  காப்பாற்ற முடியாது;
ஆனால்,அவனால், மரணத்திடமிருந்து தன்னைக்காப்பாற்றிக் கொள்ளமுடியும்!"
அதே நேரத்தில்,  மனிதன்  எப்போது  தன்னுடன்  தன் உடலையும் சேர்த்துக்
கரையேற்ற முயற்சிக்கிறானோ, அதாவது, தன்னைத் தன் உடலுடன் இணத்து

அடையாளப்படுத்திக்கொள்கிறானோ அப்போது யாவும் சிக்கலாகி விடுகின்றன!
ஏனெனில், மனிதன் என்பவன்  மிகத்துல்லியமாக தன் உடலிலிருந்து வேறான
வன்! அதாவது, உண்மையில் "தான் யார்?" என்பதை உணர்ந்தறிவதன் மூலம்
தான் மரணத்தின் புதிர் முடிச்சு அவிழ்க்கப்பட இயலும்!

மரணம்  என்பது 'அழிவின் கதவு' அல்ல!  மாறாக,  உண்மையில்  அது புதிய
தொரு பிறப்பு அல்லது வேறொரு பரிமாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான கதவு
ஆகும்!  அக்கதவின்  வழியாகச் செல்வதற்கு ஒவ்வொருவரும் தம்மை உரிய
முறையில்   தயார்படுத்திக் கொள்ளவேண்டும்!  அதற்கு  ஒருவன்  முதலில்
"தான் ஒரு உணர்வுதான்!"  எனும் உண்மைக்கு விழித்தாக வேண்டும்!  "தான்
ஒரு உணர்வு தான்!"  என்பதை  உணர்ந்த ஒருவனுக்கு மரணமில்லை! ஏனெ
னில், உணர்வுதான் மனிதவாழ்வின் தொடக்கமும் முடிவும் ஆகும்!  'அகந்தை-
உணர்வு'  மனிதனின், மற்றும் அவனது வாழ்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது
என்றால்,  'முழு-உணர்வு'  என்பது  மனிதனின்,  மற்றும்  அவனது வாழ்வின்
முழுமையைக் குறிக்கிறது!

"நீங்கள்  பிறந்த  அந்த மணி நேரத்திலிருந்தே  நீங்கள் இறக்கத்தொடங்கிவிடு
கிறீர்கள்!"  எனவும்,  "பிறப்பிற்கும்  இறப்பிற்கும்  இடையேயுள்ள காலப்பகுதி
தான் வாழ்க்கை!"  எனவும்  சொல்லப்படுவது  மேலோட்டமான கூற்றுக்களே
தவிர  அவை  இறுதியான உண்மைகள் அல்ல!  மாறாக,அகந்தை-உணர்வாக
எழும் மனிதன்,  தனது இருப்பை  உணரத்தொடங்கியதிலிருந்து அவன் மேன்
மேலும்  உணர்வில் வளர வேண்டும் என்பது  உணர்வுப் பரிணாமத்தின் விதி
ஆகும்.  உணர்வில் வளர்வது என்பது,  வாழ்வில் உயர்வது,  பெருகுவது என்
பதைக் குறிப்பதேயாகும்!

பரிணாமத்தில்,  உயிருள்ள உடலின் சேவை  மகத்தானது என்பது பலருக்குத்
தெரியாது!  உணர்வாக நீங்கள் பிறந்ததிலிருந்து, உணர்வில் நீங்கள் வளர்கிறீர்
களோ இல்லையோ உங்கள் உடல் வளர்ந்து பல பருவக் கட்டங்களைக்கடந்து
உழைத்துத் தேய்ந்து  நோயுற்று  நலிந்து முடிவில் இடுகாட்டுக்குக் கொண்டு
சேர்க்கப்படுகிறது! உடலின் வளர்ச்சி நிலைகளில் பங்கெடுத்து வாழும் நீங்கள்
உங்கள்  உள்ளத்தில்,  உணர்வில் வளர்வதேயில்லை! ஒருவன் தன் உடலின்
வளர்ச்சிக்கு இணையாக உணர்விலும் வளர்வானெனில், அதாவது, குழந்தைப்
பருவம், வாலிபப்பருவம்,  நன்கு வளர்ந்த மனிதப்பருவம்,  வயோதிகப்பருவம்
ஆகியவற்றுக்கு   இணையாக  வளர்வானெனில்,  உடல் நோயுற்று, முதுமை
யடைந்து   இறப்பைச் சந்திக்கும் தறுவாயில்,  உணர்வில் முதிர்ந்த மனிதன்
தன்  உடலின் இறப்பை  உணர்வுப்பூர்வமாகச் சந்திக்கும்  பக்குவத்தைப் பெறு
வதோடு,  தன் (உடலை இழந்தாலும்) உணர்வின் முழுமையில் அடைக்கலம்
புகுவான்!

அதாவது,  நாம் ஒரு விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம், திடீரென
நடுவானில்  அவ்விமானம்  பழுதுபட்டுவிட்டது  தெரிந்து  பத்திரமாக  அதில்
இருந்து "பாராச்சூட்"  மூலமாகத் தப்பிப்பதைப்போல; உடல் மரணத்திற்குள்ளா
கும்  தருணத்தில்,  உணர்வில் தரிப்பதன் மூலம்  உடலிலிருந்து  உணர்வின்
தளத்திற்குத் தாவிச்செல்வதன் வழியாக  ஒவ்வொருவரும் உடலின் மரணத்தி
லிருந்து  தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்!  ஆனால், ஏற்கனவே  குறிப்
பிட்டவாறு  உடலுடன்  கொண்ட பிணைப்பிலிருந்து,  அடையாளப்படுத்துதலி
லிருந்து  தன்னைப் பிரித்தறிவது என்பது  அவ்வளவு  எளிதான காரியமல்ல!
மேலும்,  மரணத்தின் போது,  உணர்வு ஜீவியாகிய  மனிதனிடமிருந்து உயிர்
ஜீவியான மனிதன் பிரிக்கப்படுவது என்பது  வலி நிறைந்த ஒரு நிகழ்வே என
லாம்! ஆனால், உடலை ஆதாரமாகக்கொண்ட உயிர்-ஜீவியின் சேவைக்காலம்
முடிவுறுவது தவிர்க்கவியலாத தாகையால்,  ஒவ்வொருவரும்  தமது  வாழ்-
காலத்திற்குள்  முழு-உணர்வடைவது  என்பது  துரிதமாகச்  சாதிக்கப்பட்டாக
வேண்டும்!

உண்மையில்,  தத்துவம்  என்பது,   ஒரு  சில  தத்துவச் சிந்தனையாளர்கள்
குறிப்பிட்டபடி,    மரணத்திற்காகத் தன்னை   ஆயத்தப்படுத்திக் கொள்வதோ;
அல்லது, மரணம் குறித்து பயப்படாமல் இருப்பதற்கான பயிற்சியோ; அல்லது,
மரணத்தை மறுப்பதோ; அல்லது, துணிவுடன் மரணத்தை ஏற்றுக்கொள்வதோ
அல்ல! மாறாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் புனிதச்செயல்பாட்டின் ஒரு
முக்கிய  பகுதியாக   வாழ்வில்  மரணத்தின் இடம்,  பொருத்தப்பாடு, மற்றும்
உணர்த்துகோள்களையும் புரிந்துகொண்டு மரணத்தைக்கடந்த பெரு-வாழ்வைச்
சென்றடைவதற்கான ஒரு உபாயமே  தத்துவம் ஆகும்! ஏனெனில், மனிதஜீவி
களாகிய நாம் வாழ்வின் குழந்தைகள் ஆவோம்! சாவிற்காக நேர்ந்துவிடப்பட்ட
'காவு - விலங்குகள்' அல்ல நாம்!  அதாவது,  வாழ்வின் தளத்தில்  தோன்றிய
நாம் சாவில் முடிந்துபோவது என்பது அபத்தமானது!

ஆகவே,  'மனிதன், தான் பிறந்த கணத்திலிருந்தே  இறக்கத்  தொடங்கி  விடு
கிறான்!'  என்பது  தவறான புரிதலாகும்!  உண்மையில், நதியானது தோன்றும்
போது  சிறு  நீர்க்கசிவாகத் தொடங்கி,  போகப்போக  நீரோடையாக  அகன்று
மேன்மேலும் தண்ணீர் சேரச்சேர வெள்ளப்பெருக்கெடுத்துப் பாய்ந்து, முடிவில்
மாபெரும்  சமுத்திரத்தைச் சென்றடைவதைப் போலவே, உணர்வாகிய மனித
னும்  தன் உணர்வில் பெருகப்பெருக,  அறிவிலும், புரிதலிலும் வளர்வதுடன்,
அவனது  சுயமும்,  வாழ்க்கையும் வளர்கிறது,  ஆழப்படுகிறது, முழுமைப்படு
கிறது!   உண்மையில்,  உணர்வும்,  வாழ்க்கையும்  வேறு வேறு  அல்ல! நம்
இருப்பை,  "நாம் இருக்கிறோம்!"  என்பதை   உணரும்  சுய-உணர்வு  மட்டும்
இல்லையெனில்  நாம் இவ்வாறு வாழ்க்கைபற்றிய தத்துவம் எதையும் பேசிக்
கொண்டிருக்க மாட்டோம்.  நாம்  அணில்களாய் இருந்தால்  மரத்திற்கு மரம்,
கிளைக்குக்கிளைத்  தாவிக்கொண்டு காய் கனிகளைத் தின்று கொண்டு உயிர்-
பிழைத்திருப்போம்! உயிர்-பிழைத்திருப்பதைப் பற்றி பெரிதாகத் தத்துவம் பேச
என்ன இருக்கிறது?  அல்லது,  உயிர்-போவதைப்பற்றிப்  பேசவும் தான் என்ன
இருக்கிறது?

ஆக,  பிறப்பிற்கும்  இறப்பிற்கும்  இடைப்பட்ட காலத்தில் அடைபட்ட இருப்பு
அல்ல வாழ்க்கை என்பது! மாறாக, இறப்பதற்குள் இருப்பை எவ்வாறு உணர்வு
கொண்டு  முழுமைப்படுத்துகிறோம்  என்பதே  வாழ்க்கையாகும்! இருப்புக்கும்,
இருப்பை  உணர்வு கொள்ளும்  உணர்வுக்கும்  உள்ள தொடர்பு தான்  என்ன?
இருப்பு  தன்னைத்தானே  உணர்வுகொள்ளும் பொருட்டு  உருமாற்றம் பெற்ற
நிலையே உணர்வு என்பதாகும்! பிரபஞ்சஇயற்கை எனும் அடிப்படை(தொடக்க
நிலை)  இருப்பானது   பருப்பொருளால்,  அதாவது  உயிரும்   உணர்வுமற்ற
பௌதீகச்சடப்பொருளால் ஆனது தான் என்றாலும், ஒருகட்டத்தில் அது உயிர்
பெற்றெழுவதும்,  அதற்கடுத்த கட்டத்தில்  உணர்வு பெற்றெழுவதும் தவிர்க்க
வியலாத பரிணாம நியதியாகும்!  இறுதியில் அது என்னவாக எழுகிறது என்ப
தில்தான்  இறுதி மெய்ம்மை  அடங்கியுள்ளது!  ஏனெனில்,  பிரபஞ்ச  இருப்பு
என்பது  தன்னைத்தானே  கடந்து  வளர்ந்து  ஒப்பற்றதொரு இலக்கு நோக்கிச்
செல்லும் ஒரு பரிணாம நிகழ்வுமுறையாகும்!

இருப்பு என்பது ஒட்டு மொத்த உலகையே (பிரபஞ்சத்தையே) குறிக்கிறது.ஆம்,
உலகம் தன்னைத்தானே அறியும் விழைவின் பொருட்டே உயிர்-ஜீவியாகவும்,
உணர்வுள்ள  மனித ஜீவியாகவும்  அவதாரம் எடுத்தது! உலகம் மனிதஜீவியி
னுள் உணர்வாகி தற்போது தன்னையே ஆராய்ந்து கொண்டிருப்பதன் வழியாக
தனது அசலான விழைவின் ஒருபாதியை மட்டுமே நிறைவேற்றியுள்ளது; இன்
னொரு பாதி நிறைவேற வேண்டுமானால், உலகை ஆராய்வதிலேயே மூழ்கித்
தனை  இழந்துவிட்ட மனித-உணர்வானது இனி தன்னையே உணர்வுகொண்டு
தனது உண்மையை அறிந்து முழுமையடைய வேண்டும்!

தன்னைத்  தானே  உணர்வுகொள்ளாத  இருப்பு,  இருந்தாலும்  ஒன்று தான்,
இல்லாவிட்டாலும்  ஒன்று தான்!   ஒரு  கூழாங்கல்  இருக்கிறது;  அதுவும்
ஒருவகை  இருப்பு தான்;  அதை நாம்  "சட-இருப்பு" என வகைப்படுத்தலாம்.
அது   தன்னையும்  அறியாது,  தனக்குப் புறத்தேயுள்ள வற்றையும் அறியாது,
உணராது! ஒரு தவளை இருக்கிறது; அதுவும் ஒருவகை இருப்பு தான்; அதை
நாம்  "உயிர்-இருப்பு"  என வகைப்படுத்தலாம். அது ஓரளவிற்கு தனக்குப்புறத்
தேயுள்ளவற்றை  அறியக்கூடும்;  ஆனால்,  அதனால்,  தன் இருப்பை,  "தாம்
இருக்கிறோம்!" என்பதை  உணரமுடியாது! அடுத்து, மனிதஜீவிகள் இருக்கிறார்
கள்!  அவர்களதும்  ஒரு வகை இருப்பாகும்;  அதை நாம்  'உணர்வு - இருப்பு'
எனலாம்! மனிதஜீவிகள் புறவுலகான பிரபஞ்சத்தை எட்டிய தொலைவு வரை
ஆராய்ந்து  அறிபவர்களாகவும்,  அதே வேளையில், தமது இருப்பையும் அறிப
வர்களாக உள்ளனர்!

ஆனால்,  மனிதர்கள்  பொதுவாக  "தாம் இருக்கிறோம்!"  என்பதை  மட்டுமே
அறிகின்றனர்! அதற்குமேல், தாம் ஏன்,எதற்காக இருக்கிறோம்; வாழ்க்கையின்
குறிக்கோள்,  அர்த்தம், இலக்கு என்ன என்பது குறித்து பரவலாக எல்லோரும்
அக்கறைப்படுவதில்லை! அறிவதில்லை! இன்னும் பெரும்பாலோர் நேரடியாக
தமது  இருப்பை உணர்வதில்லை;  மாறாக,  "எனது  அண்டை வீட்டுக்காரன்
இருக்கிறான்,  ஆகவே  நான் இருக்கிறேன்!"  என்கிற அளவிலேயே தங்களை
உணரும் அவல நிலையில் உணர்வில் மலராதவர்களாக உள்ளனர்!

பொதுவாக,  மனிதர்கள்  உயிர்-பிழைத்திருப்பதையே 'வாழ்க்கை' என கருதிக்
கொண்டிருக்கிறார்கள்!  ஆகவே, உயிர்-பிழைத்திருப்பதிலேயே முழுமையாகத்
தம்மை முதலீடு செய்திடுகிறார்கள்! உயிர்-பிழைத்தல் என்பது உடலை மைய
மாகக் கொண்டதொரு  மட்டுப்பாடான வாழ்க்கையாகும்! முக்கியமாக, உணர்
வாக எழுந்த (அதாவது,உணர்வுடைய) மனிதஜீவியைப் பொறுத்தவரை உடல்-
மைய-வாழ்க்கை  என்பது  உணர்வு-மைய-வாழ்க்கையை மேற்கொள்வதற்குச்
சேவை புரியும் ஒரு கருவியும், ஊடகமும்  மாத்திரமேயாகும்!

'உயிர்-பிழைத்தல்'  எனும்  உடல்-மைய-வாழ்க்கை  என்பது உடலுக்கு உணவு
அளிப்பது, உடலை ஆரோக்கியமாகப் பேணிக்காப்பது என்பதற்குமேல்  விசேட
மாக  வேறு எதுவுமல்ல!   ஆனால், உணர்வுள்ள மனிதஜீவிகளுக்கு உணவு,
உடை,  உறையுள்  ஆகியவற்றைப்  பூர்த்தி செய்துகொள்வதுடன் வாழ்க்கை
அர்த்தம் பெறுவதில்லை!  புழு, பூச்சிகள்,  பிற விலங்குஜீவிகளுக்கு  வேண்டு
மானால், சிறிதுகாலம் வெறுமனே உயிர்-வாழ்ந்திருந்து பிறகு மரித்துப்போகும்
இலக்கற்ற ஜீவிதம்  அர்த்தமுள்ளதாகப்படலாம்!  மனிதஜீவிகளைப் பொறுத்த
வரை  அவர்கள்  ஒன்றில் இரண்டு ஜீவிகளாக, அதாவது, உயிர்-ஜீவியாகவும்,
உணர்வு ஜீவியாகவும் விளங்குவதால் அவர்கள் உயிர்-வாழ்வதுடன், உணர்வு
வாழ்க்கையையே பிரதானமாக வாழ்ந்தாக வேண்டும்!

மனிதஜீவிகளைப் பொறுத்தவரை  வாழ்க்கை,  வாழ்தல்  என்பது  உணர்தல்,
அறிதல்,  புரிதல்  என்பதையே  மையமாகக் கொண்டதாகும்!  இன்று  இரவு
உணவாக  எதைச் சாப்பிடலாம்  என்பது பற்றி  முன் கூட்டியே யோசிப்பதில்
தவறேதுமில்லை!  ஆனால், வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொண்
டோமா,  வாழ்வின்  குறிக்கோளைக்  கண்டறிந்தோமா,  வாழ்வின்  அசலான
இலக்கை  முன்வைத்துத்தான்  வாழ்கிறோமா என்பதையெல்லாம் கருதாமல்
அடுத்தடுத்த வேளைக்கான உணவு பற்றி மட்டும் முன்-யோசித்து திட்டமிட்டு
நிறைவேற்றுவதில்  யாதொரு அர்த்தமுமில்லை!  ஏனெனில், உணவு என்பது
உயிர்-வாழ்தலுக்குரிய  அடிப்படைத் தேவைகளில் மிகவும் அடிப்படையானது
என்பதில் சந்தேகம் இல்லை!  உணவு  என்பது உடலின் இயக்கத்திற்கு அத்தி
யாவசியமான  எரிபொருள்  போன்றது;  ஆனால், உணவு எனும் எரிபொருள்
அளித்து,  எந்த  இலக்கு நோக்கி  உடலின்  இயக்கம் முடுக்கிவிடப்படுகிறது?
ஆம்,மிகவும் வினோதமாக,மனிதஜீவிகளின் ஒட்டுமொத்த இயக்கம், உழைப்பு,
ஆற்றல்  யாவும்  உணவுப்பொருட்களை (எரிபொருள்)  உற்பத்திசெய்வதிலும்,
அவற்றை உட்கொள்ளுதலிலும்தான் முடக்கப்படுகின்றன! அதாவது,வாழ்க்கை
என்பதே எரிபொருள் (உணவு) உற்பத்தி,பராமரிப்பு,மேலாண்மை என்பதுதானா?
இங்கு நாம் உணவு பற்றிய விஷயத்தை சர்ச்சைக்குள்ளாக்கவில்லை; மாறாக,
மனித வாழ்க்கையானது  எவ்வளவு குறுகிய விவகாரமாக ஆக்கப்பட்டு கொச்
சைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையே குறிப்பிடுகிறோம்!

முடிவாகச்  சொல்ல வேண்டுமானால்,  நாம் வாழ்வது  சாவதற்காக  அல்ல!
மாறாக,  வாழ்விலிருந்து உயர்ந்து மேன்மேலும் உயர்-வாழ்விற்கு,  பெருவாழ்
விற்குச் செல்வதற்குத்தான்!  வாழ்க்கையை  நாம் முறையாக முழுமையாகப்
புரிந்து கொள்ளும் பட்சத்தில்,  வாழ்க்கை  ஒருபோதும் மரணத்தில் முடிவதற்
காகத் தோன்றியதல்ல என்பது நிதரிசனமாகும்!

இருப்பானது உணர்வு கொள்ளப்படும்போது மட்டுமே வாழ்க்கையாகிறது! ஒரு
கூழாங்கல்  இருக்கிறது;  ஆனால், அது வாழ்வதில்லை! ஒரு தவளை வெறு
மனே உயிர்-பிழைத்திருக்கிறது; அது தனது இருப்பை உணர்வதில்லை, எதை
யும் அறிவதில்லை! ஆகவே, தவளையும் உண்மையில் வாழ்வதில்லை! எண்
ணற்ற  மனிதர்களும் தவளைகளைப் போலவே உயிர்-பிழைத்திருக்கிறார்கள்;
அதாவது, முடிவில் மரணத்திற்கு இரையாவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்
கள்!  பெரும்பாலான  மனிதர்கள்  உண்மையான  வாழ்க்கைக்குள்  இன்னும்
பிரவேசிக்கவேயில்லை!  உணர்வுக்கு  வராமல் வாழ்க்கைக்குள் பிரவேசிப்பது
எவ்வாறு  இயலும்?  உணர்வுக்கு  வந்தவர் தன்னைக் கண்டடைந்தவராவார்!
உணர்வைச் சுவைத்தவர் வாழ்க்கையைச் சுவைத்தவராவார்! வாழ்க்கையைச்
சுவைத்தவர்  ஒருபோதும் மரிப்பதில்லை! வாழ்வின் முழுமையை, அதாவது
முழு-உணர்வை  ஒரு கணம்  தரிசித்தவர், அல்லது தொட்டவர் நித்தியத்தை
தரிசித்தவராவார்!  அவருக்கு  காலம்,  தொடர்ச்சி,  உலகம், வாழ்வு, மரணம்
எதுவுமே ஒரு பொருட்டு அல்ல; யாவும் துச்சமே!

"மனிதன் இறந்த பிறகு எங்கே போகிறான்?" என்ற கேள்வி  பாமரத்தனமானது!
ஏனெனில்,  அவன்  எங்கேயும் போவதில்லை!  மனிதவாழ்வின் ஒரே சவால்,
அவன்   வந்து சேருவது  மட்டுமே!  மனிதர்கள்  அநேகர்  இன்னும்  இங்கே,
வாழ்க்கையை, தங்களை முழுமையாக வந்தடையவேயில்ல! ஆக, இன்னும்
வந்தடையாத போது எங்கே போவது? . . .

நித்திய உலகம், சொர்க்கம், மோட்சம் என்பவை எங்குமில்லை; அவை இங்கு
இப்போதில்  அடங்கியுள்ளன!  அவற்றைத்தேடி எவரும்  எங்கேயும்  செல்ல
வேண்டாம்! உணர்வின் உச்சத்தில், முழுமையில் மட்டுமே அவை கண்டடை
யப்படவேண்டும்! அதுவும் ஒருவன் உயிரோடிருக்கும்போதே உடலின் மரணத்
திற்கும் முன்னேயே அவற்றைக் கண்டடைந்தாகவேண்டும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07-04-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 4 April 2017

இனியும் நாம் இயற்கையாக வாழ்வதில் அர்த்தமில்லை!





விக்ரம் சோனி ( இயற்பியல் பேராசிரியர், இயற்கைப் பாதுகாப்பு பற்றிய
ஆராய்ச்சியாளர்) எழுதிய   "இயற்கையாக" (Naturally) எனும் நூலைப்
பற்றி  "இயற்கையாக வாழ முடியாதா என்ன?" என்ற தலைப்பில்,
ந.வினோத்குமார் எழுதி,  01.04.2017, தமிழ் இந்து நாளிதழில் வெளியான
கட்டுரையிலிருந்து சில முக்கியமான கருத்துக்களை எடுத்துக்கொண்டு
அவற்றின் பொருத்தப்பாடுகளை இக்கட்டுரை அலசுகிறது!
                       <•>
முதலில், விக்ரம் சோனியின் கருத்துக்களைக் காண்போம்:
                     
       "இதுவரையில் இந்தப்பூமியில் தோன்றிய மிகச்சிறந்த சூழலியலாளர்,
        விஞ்ஞானி யார் என்று என்னைக்கேட்டால், நான் கௌதம புத்தரைத்
        தான் சொல்வேன். சுயம், சமூகம், பிரபஞ்சம் எனும் மூன்று நிலைகளில்
        இயற்கையோடு இணைந்து வாழப் புத்தர் நமக்கான வழியைக்
        காட்டுகிறார்.

   •சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படு
         கிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது,

   •சமூகம் என்ற  நிலையில், ஏற்றத்தாழ்வுகள் கடந்து அனைவரையும்
         சமமாக நடத்துவது,

   •பிரபஞ்சம் எனும் நிலையில், அனைத்து உயிர்களிலும்,தன்னைக்
         காண்பது ஆகிய வழிகளைப்பின்பற்றினால் இந்தப்பூமி இன்னும் பல
         காலம் தழைத்திருக்கும். சுருக்கமாக 'பூமியின் மீது மெள்ள மெள்ள
         நடை பயில்வோம்!'
                        <<•>>

முதலில், (மனித) சுயம் பற்றி  விக்ரம் சோனி அவர்கள்  முன் வைத்துள்ள
கருத்தை  அலசுவோம்.

      "சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படு
       கிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது" - விக்ரம் சோனி.

'சுயம்' என்பது,  விக்ரம் சோனியின்  விளக்கத்தின்படி,  அடிப்படைத் தேவை
கள்,  மற்றும்,  பல்வகைப்பட்ட , அதாவது, அத்தியாவசியமானதும், அத்தியா
வசியமற்றதுமான நுகர்வுத் தேவைகளின் மையமாகவும்,  பேராசை பிடித்த
ஜந்துவாகவும்   இருப்பதாகவும்;     புத்தரின்  வழியில்  சென்றால்,    அதாவது
"சுயம்   என்ற   நிலையில்,    நமக்கு  எது  அத்தியாவசியமாகத்   தேவைப்படு
கிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது"   என்பதன்  மூலமாக   இப்
பூமியை  இன்னும் பல காலம் தழைத்திருக்கச்செய்யலாம் என ஆலோசனை
வழங்குகிறார்!

ஆனால்,  மனித சுயத்தின்  (வாழ்வின் குறிக்கோள், அர்த்தம் பற்றிய) பிரச்சி
னையும்,   அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட எண்ணற்ற சமூகக் கேடுகளும்,
வெறுமனே  எது   அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறதோ  அதை மட்டும் வைத்துக்கொள்வதுடன் தீர்ந்துவிடக்கூடியதா என்ன?

மனித வாழ்க்கையில்  தேவைகளும்  இடம் பெறுகின்றன;  ஆனால்,  தேவை
களே வாழ்க்கையாவதில்லை! மனிதஜீவிகள் தேவைகளைப்பூர்த்தி செய்து
கொள்வதன் வழியாக நிறைவடைவதுமில்லை, முழுமையடைவதுமில்லை!
ஆக,மனிதஜீவிகளை, தேவைகளை மையமாகக்கொண்ட ஜந்துக்கள் என்ப
தாகச் சுருக்கிக் காண்பது ஆழமற்ற, ஆகவே ஆபத்தான பார்வையாகும்!

'இயற்கை மீதான பிடிப்பு',  'இயற்கையை நேசித்தல்', 'சுற்றுச்சூழலைப் பாது
காத்தல்'  இவையெல்லாம்  தேவையானவைதான்;  ஆனால், போதுமானவை
யல்ல!  இயற்கையை  உண்மையில்  நேசிப்பது  என்பதன்  அர்த்தம்  அழகிய
இயற்கைக்காட்சிகள்    நிறைந்த  மலைப் பிரதேசத்திற்கோ,   அல்லது   காடு
களுக்கோ  சுற்றுலா  சென்று   இயற்கையைத் தரிசிப்பதில்  அடங்கியிருக்க
வில்லை;   மாறாக,   இயற்கையின்,   பிரபஞ்சத்தின்    உள்ளார்ந்த  பரிணாம
"விழைவை",   நோக்கத்தை   உணர்ந்து அதை நிறைவேற்றுவதிலேயே அடங்
கியுள்ளது!

மனிதன்  இயற்கையிலிருந்து தோன்றியவன் என்பது பாலபாட  அறிவாகும்!
"ஆனால்,  மனிதன்  இயற்கையிலிருந்து தோன்றியவனே என்றாலும், அவன்
இயற்கையை  மீறிச்செல்லும் இயற்கையை, பேரியற்கையைச் சேர்ந்தவனா
வான்!அதாவது, இயற்கையானது மனிதனுள் சுய-உணர்வு பெற்றிடும்போது,
அது   தொடர்ந்து   இயற்கையாக  இருப்பதில்லை!  மனிதன்   என்பவன்  சுய-
உணர்வு  பெற்ற   இயற்கையாவான்!    மனிதன்   சுய-உணர்வு  பெறுவதுடன்
முழுமை யடைந்து  விடுவதில்லை;  அதாவது,  முழு- மனிதனாக  ஆகிவிடுவ
தில்லை!"*

"மேலும்,  முழுமை என்பது (பரிணாமச்)சிருஷ்டியின் ஒரு பகுதியோ, உயரிய
படி நிலையோ அல்ல!  மாறாக, முழுமை என்பது சிருஷ்டியின் முடிவு ஆகும்!
மனிதன் சிருஷ்டியின்வழி தோன்றிடினும்,உண்மையில்,அவன் சிருஷ்டியை
(இயற்கையை)   முழுமைப்படுத்த  வந்த   சிருஷ்டியாவான்!    இவ்வகையில்,
மனிதன்   சிருஷ்டியின்  பிரதிநிதியல்ல; மாறாக, அவன் முழுமையின் பிரதி
நிதியாவான்!*
 
"மனிதன்    தனது   சுய-உணர்வை   உணர்வு கொள்ளும்  அக்கணத்திலேயே
சிருஷ்டியை      (இயற்கையை)   விட்டு     வெளியேறிச்   செல்லும்     அவனது
உணர்வுப்பயணம்   தொடங்கிவிடுகிறது!  மனிதனின்  அசலான வசிப்பிடம்  சிருஷ்டியின்(இயற்கையின்) உலகமல்ல! ஏனெனில்,  மனிதன் சிருஷ்டியின் உலகைச்சேர்ந்தவனல்ல!  அவன் உணர்வின் உலகைச் சேர்ந்தவன் ஆவான்-
அதிலும், முழு-உணர்வே அவனது இறுதிப் புகலிடமாகும்! முழு-உணர்வுக்குக்
குறைவான எவ்வொரு (உணர்வு) நிலையும் மனிதனுக்கு மரணம் போன்றதே
யாகும்!"*
       
ஆம், இயற்கையிலிருந்து வேறானவனல்ல மனிதன்; மாறாக, இயற்கையின்
ஒரு மேம்பட்ட,பண்பட்ட,உயரிய  நிலை மாற்றமே மனிதன்! அதே நேரத்தில்,
இயற்கையின்  உள்ளார்ந்த  விழைவின், அதாவது இயற்கை எதிர் நோக்கிய
அந்த  இறுதி நிஜமல்ல மனிதன்;  மாறாக, அந்த  இறுதி மெய்ம்மையை எட்டு
வதற்கான  விசேட  கருவியும், ஊடகமும் தான்  மனிதன்!    மனிதன்  அடைந்
தாக வேண்டிய அவனது முழுமையில் தான்(அதுவே இயற்கையின் முழுமை
யும்) அந்த இறுதி மெய்ம்மை அடங்கியுள்ளது!

அடுத்து, விக்ரம் சோனியின் சமூகம் பற்றிய பார்வையைப் பார்ப்போம்:

    "சமூகம் என்ற  நிலையில், ஏற்றத்தாழ்வுகள் கடந்து அனைவரையும்
     சமமாக நடத்துவது."

நிச்சயம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன; ஆனால்,  அவை  ஒவ்வொரு
தனிமனிதனின்  அகத்தே  நிலவும்  ஏற்றத் தாழ்வான வளர்ச்சியின் வெளிப்
பாடே ஆகும்! தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே சமமாக வள
ராதபோது,  அவர்கள் சமூகக்களத்தில் செயற்கையானதும், பொருள்வகைப்
பட்டதுமான பல மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டு பரஸ்பரம் ஒருவருக்
கொருவர்  ஒப்பிட்டுக் காண்பதும்,  ஒருவரை  ஒருவர் முந்திச் செல்வதுமான
போட்டிகளில், எலிப்பந்தயத்தில் ஈடுபடுகின்றனர்; அவற்றின் விளைவுதான்
சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகும்! தற்போது நடைமுறையில்,அமலில் இருக்கும்
மதிப்பீட்டு -அமைப்பில்  ஒரு  அன்றாடக்  கூலிக்காரனையும்,   ஒரு  கணினி
பொறியாளரையும்  இச்சமூகம்  சமமாக மதிக்காது!   ஏனெனில்,  இச்சமூகம்
மனிதர்களுடைய அக-வளர்ச்சியின் முக்கியத்துவம் அறியாது!    இச்சமூகத்
திற்கு,    அசலான,  உண்மையான மனிதனைத்தவிர,  பிற எல்லாவகையான
போலியும்,  பிறழ்ச்சியுமான ஆளுமைகளை, அதாவது,  'பெரிய மனிதர்கள்',
'லட்சாதிபதி',   'பிரபலஸ்தர்',  'அரசியல் பிரமுகர்',  'சினிமா-நட்சத்திரங்கள்', 'விளையாட்டு-நட்சத்திரங்கள்'  போன்றவர்களை  மட்டுமே  தெரியும்!  ஆம்,
அதற்கு  அசலான மனிதனை மட்டும் தெரியாது!  ஏனெனில்,   உண்மையில்
மனிதனாக இருப்பது என்றால் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது!

இன்னொருவகையிலும், நாம், ஒரு கூலிக்காரனையும்,  ஒரு  கணினி பொறி
யாளரையும்  சமமாக  மதிக்கமுடியாது என்பது மட்டுமல்ல;  அதாவது,  அந்த
இருவருமே  உள்ளீடு அற்ற  மனிதர்களாக,   உணர்வற்றவர்களாக,   அல்லது
உணர்வுக் குறைவுள்ளவர்களாக  இருக்கும் பட்சத்தில்   அவர்கள்   இருவரை
யுமே மனிதர்களாகக் கொள்ளவோ,மதிக்கவோ இயலாது!அதாவது, மனிதர்
கள் உண்மையில் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் தான், சமூகம் என்பது
முறையாக  சமூகமாக  இருக்கும்!  ஆக,   விக்ரம் சோனியினுடைய    சமூகம்
பற்றிய பார்வையும் மட்டுப்பாடாகவே உள்ளது!  சமூக ஏற்றத்தாழ்வுகளைக்
களைவது அவசியமானதே யாகும்;  ஆனால், மனிதர்களிடம் உரிய உணர்வு
வளர்ச்சி இல்லாமல் ஒருபோதும்  சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவது என்
பது சாத்தியமற்றதாகும்!

திரு.விக்ரம் சோனி அவர்கள் புத்தரை  மேற்கோள் காட்டுவதிலும்,புத்தரின்
வழியைப்பின்பற்றும்  அவரது  விருப்பத்திலும்  தவறில்லை!  ஆனால், அதற்
காக புத்தரின் தத்துவத்தை மிகவும் நீர்க்கச்செய்வது முறையாகாது! புத்தர்
போன்ற  ஒரு  விழிப்படைந்த மனிதரின் பார்வையில் சூழலியம் மட்டுமல்ல
அனைத்து  தத்துவங்களும்  அடங்கியிருக்கும்  என்று காண முடியும்!   ஏனெ
னில்,"விழிப்பு", "ஞானம்" என்பவை அத்தகையது!ஆனால், புத்தரை ஒரு சூழ
லியலாளராகவோ, இயற்கை நேசிப்பாளராகவோ,இயற்கை வாதியாகவோ,
சுருக்கிவிடலாகாது!

விக்ரம் சோனி  போன்ற நல்லெண்ணம் கொண்ட சிந்தனையாளர்கள் பலர்
அடிப்படையில்,  இயற்கை வேறு,  மனிதன் வேறு  எனும் பிளவுண்ட பார்வை
யிலிருந்தே  இரண்டையும்  இணைக்க முயற்சிக்கின்றனர்!  அதாவது,  அவர்
களுக்கு  இரண்டைப் பற்றியுமான  ஆழமான புரிதல்  இல்லை  என்பது தான்
அவர்களுடைய  மட்டுப்பாடு  ஆகும்!     அவர்களுடைய   ஆதங்கத்தை   நாம்
புரிந்து கொள்ளலாம்;   ஆனால்,   அவர்கள்   சொல்கிற  வழியில்  பிரச்சினை
களை, குறிப்பாக சூழலியல் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது!அதே நேரத்
தில்,  ஓரிரவிற்குள்ளேயே  மனிதர்கள் அனைவரும் மாறிடவோ,  விழிப்படை
யவோ இயலாது என்கிறபோது,  வேறு  மாற்று வழியும் இல்லை எனும் நிலை
யில், புவிக்கோளம் சூடேறுதலிலிருந்தும், சீதோஷ்ண- நிலை குலைவிலிருந்
தும்   புவியைக் காப்பாற்றுவது  என்பது  சாத்தியமற்ற  ஒன்றாகும்!  முக்கிய
மாக,  மனிதகுலம்  தனது  "உற்பத்திசெய்தல்-உட்கொள்ளுதல்" (Produce-
Consume)எனும் நுகர்வை அடிப்படையாகக்கொண்ட வாழ்முறைகளையும்,
பொருளாதார நடவடிக்கைகளையும் மாற்றிக்கொள்வதற்குள் காலம்கடந்து
விடக்கூடும்!  மேலும், மக்கள்தொகைப்பெருக்கத்தையும் நம்மால் குறைக்க
இயலாது!    இந்நிலையில்,   இயற்கையை,   புவிச் சூழலைக்   காப்பாற்றுவது
குறித்த   நேர் மறையான   உரையாடல்களும்,   முயற்சிகளும்    வீண்   என்று
சொல்ல முடியாது  என்றாலும்,   ஏற்கனவே   புவிக்கு  இழைக்கப்பட்ட சேதங்
களையும்  தீங்குகளையும் கணக்கில் கொண்டு காணும் போது எதிர்மறைச்
சிந்தனைகளையும்,   வருங்காலம்  இருளடர்ந்ததாகத்   தோன்றும்  சித்திரத்
தையும் தவிர்த்துவிட இயலாது!

முக்கியமாக,   விக்ரம் சோனியின்   'இயற்கையைப் பாதுகாப்பது',  'பூமியின்
மீது மெள்ள மெள்ள நடைபயில்வது',   அதாவது,   இப்பூமியை   இன்னும்  பல
காலம்        தழைத்திருக்கச்      செய்வதற்கான      ஆலோசனைகள்      யாவும்
மனிதகுலத்தின்   நலத்தை  மையமாகக்கொண்டதே,   அதாவது தொடர்ந்து
மனிதகுலம்   இப்பூமியில்   உயிர்-வாழ்வதைத்      தக்கவைப்பதற்குத்தானே
தவிர,    இயற்கையின்  நலத்தையோ,   அல்லது    மனித வாழ்வின்   ஒப்பற்ற
இலக்கினை  மையமாகக்கொண்டதாவோ  தெரியவில்லை!  இயற்கையின்
நலம்    என்பது,    ஏற்கனவே    குறிப்பிட்டபடி     இயற்கையின்     உள்ளார்ந்த
விழைவை உணர்ந்து நிறைவேற்றி இயற்கையை, பிரபஞ்சத்தை  முழுமைப்
படுத்துவது என்பதேயாகும்! அதாவது, ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மீக
முழுமையை அடைவதே யாகும்!

ஆகவே,   இன்னும்  நாம்   தேவைகளின்   சொற்களிலேயே  வாழ்க்கையைக்
காண்கிற,வாழ்கிற மட்டுப்பாடான போக்கைக் கடந்து சென்றாகவேண்டும்!
மனிதசுயத்தின் தேவைகள் எனச்சொல்லப்படுபவை யாவும் மனிதஉடலின் அடிப்படைத்தேவைகளே;   அதாவது   அவை   அடிப்படையானவை மட்டுமே
தவிர   எவ்வகையிலும்  அவை  இறுதியானவையல்ல!   ஆகவே,  மனிதகுலம்
தனது   உடல்-மைய  அடையாளத்தையும்,   உடல்-மைய    வாழ்க்கையையும்
கடந்து  வளர்ந்தாக  வேண்டியது   அவசர   அவசியமாகும்!  ஏனெனில், எஞ்சி
யிருக்கும்  காலத்தில்  மனிதகுலம்   ஆன்மீகரீதியாக  வாழ்வதில்   ஈடுபடும்
எனில்,  அதனால்  நிறைவான அர்த்தம் நிறைந்ததொரு வாழ்க்கையை வாழ
முடியும்!  ஆம்,  நெடுங்காலம்  விழுந்து புரண்டு காரியமாற்றி,  குந்தித்தின்று
வெறுமனே   உயிர்-வாழ்வதைக்  காட்டிலும்,    ஆன்மீக   ரீதியாக,   அதாவது,
உணர்வார்ந்த வகையில் கொஞ்சகாலம் வாழ்வது மேல்!

அதாவது,    மனிதகுலத்திற்கு   இப்பூமியில்   தொடர்ந்து   உயிர்-வாழ்வதற்கு
இன்னும் கொஞ்ச எதிர்காலமே உள்ளது என்று சொல்லும் அளவிற்கு பூமியின்
சூழலைக் குலைத்துக் கெடுத்துவிட்டு, "பூமி அழகானது!" என்றும், "இயற்கை
புனிதமானது!"  என்றும்,    "சித்தாந்தத்தில் அடங்காதது  இயற்கை!"   என்றும்
கவிதை பாடிக்கொண்டிருக்கிறோம்!

"இனியும்    நாம்    இயற்கையாக    வாழ்வதில்   அர்த்தமில்லை!"     என்பதன்
அர்த்தம்  'இனி நாம் செயற்கையாக வாழலாம்!' என்பதல்ல. ஏனெனில்,  இது
வரை   நாம்   ஒரு பிராணியைப்போல   இயற்கையாகவும்,   அதன்  இயற்கை
யான   தேவைகளை   மிகப்பிறழ்ச்சியான   வகையிலும்     செயற்கையாகப்
பெருக்கியும் தான் வாழ்ந்து வந்துள்ளோமே தவிர,  ஒரு போதும் நாம்  மனித
னுக்கே   உரிய   இயற்கையைப் பின்பற்றி,     அதாவது     உணர்வு கொண்டு,
உணர்வில்   பெருகியுயர்ந்து   வாழவில்லை!   ஆக,  இதுவரை இயற்கையாக
வாழ்ந்தது  போதும்,    இனியாவது    மனிதனாக  வாழ்வோம்     என்பதே  இக்
கட்டுரை சொல்லும் செய்தியாகும்!


* இக்குறியிடப்பட்ட பகுதிகள் இக்கட்டுரையாளரின் 2013-ல் வெளியான
  "மனிதனின் சொல்" எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டு இக்கட்டுரைக்கு
   உரிய வகையில் சற்று மாற்றம்செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மா.கணேசன்/நெய்வேலி/03-04-2017
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...