Tuesday, 2 October 2018

நிலையாமை அல்லது இரண்டாம் வெப்பச்சலன விதி



      இங்கிருந்து தப்ப எங்காவதொரு மூலையில் வழியிருந்தாக வேண்டும்
      என்று கோமாளி சொன்னான் திருடனிடம்!
           - பாப் டிலன் (Bob Dylan/ All Along the Watchtower)

பிரபஞ்சம் எனும் விருட்சம்


ஒரு மரம் போன்றதுதான் இப்பிரபஞ்சமும்! விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்? ஏனென்றால், நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்கிறோம்; நமது வாழ்க்கை இப்பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறது, அடுத்து. நாம் இப்பிரபஞ்சத்துள் இருக்கிறோம், வாழ்கிறோம் என்பதாலேயே, இப்பிரபஞ்சம் நன்மையானதாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணுவதிலும் தவறிருக்கமுடியாது! 

ஆனால், சில விஞ்ஞானிகள், "அப்படியொன்றும் நாம் விசேடமானவர்களோ, பிரத்யேகமானவர்களோ அல்ல!" என்கிறார்கள். ஆம், நம்மில் சில விஞ்ஞானிகளும், அறிவுஜீவிகளும், தத்துவவாதிகளும், பகுத்தறிவாளர்களும் நம்மைவிட பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கும், அதனுடைய பௌதிகவியல் விதிகளுக்கும் தான் முதன்மையிடமும், முன்னுரிமையும் தருபவர்களாக இருக்கிறார்கள்! இது மிகவும் துரதிட்டவசமானதாகும். ஏனெனில், பிரபஞ்சத்தை முதன்மையாகக் கொண்டு மனிதன் உள்பட பிற யாவற்றையும் இரண்டாம்பட்ச அம்சங்களாகக் காணும் இத்தகைய பார்வை அடிப்படையிலேயே தவறானதாகும்! அதாவது, நாம் இருக்கிறோம்; ஆகவே நாம் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயவும் அறியவும் விழைகிறோம்! இதன் மறுதலை உண்மை அல்ல (the converse is not true). நாம் இல்லாத நிலையில், பிரபஞ்சம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன?

அடுத்து, சிலர், "நாம் இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை, இன்னும் சொல்லப்போனால், இப்பிரபஞ்சத்திற்கு மையம் என்றும் ஏதும் இல்லை!" என்கிறார்கள். இக்கூற்றும் தவறானதே! அதாவது, வெகு காலமாக 'பூமியே பிரபஞ்சத்தின் மையம்' எனவும்; மேலும், 'சூரியனும், எல்லாக் கிரகங்களும், பூமியைச் சுற்றிவருகின்றன' எனவும் கருதப்பட்டுவந்தது. ஆனால், பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற இந்த புவி-மையக் கொள்கையை மாற்றி, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன (சூரிய-மையக் கொள்கை) என உலகிற்குக் காட்டியவர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்ற வானியல் அறிஞர். இது இவரது பெயரைக்கொண்டு, "கோப்பர்னிக்கஸின் புரட்சி" என்று வழங்கப்படுகிறது. ஆனால், நடைமுறை வானவியலுக்கு இவரது கொள்கை ஆற்றிய பங்களிப்பைத் தாண்டி வேறு மகத்தான புரட்சி எதையும் அது செய்திடவில்லை!

அதாவது, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு பற்றியும், வாழ்வியலுக்குரிய யாதொரு பெரிய புரிதலையும் அது அளித்திடவில்லை! பரந்து எல்லையில்லாமல் விரியும் இப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு ஓரத்திலுள்ள சூரியனைச் சுற்றிச் சுழலும் ஒன்பது கிரகங்களில் ஒன்றான பூமியில் நாம் இருக்கிறோம் என பரந்த-வெளியில் பூமிக்கிரகத்தின் அமைவை இட அளவில் (Spatially) குறித்துக்காட்டியது மட்டுமே "கோப்பர்னிக்கஸின் புரட்சி" செய்த சாதனையாகும். 

பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனையே சுற்றிவருகின்றன என்பது ஒரு வானியல் விபர உண்மை மட்டுமேயாகும். ஆனால், 'பூமியானது பிரபஞ்சத்தின் மையம் அல்ல' என்கிற விபர உண்மை எவ்வகையிலும் மனிதனின் மையத்துவத்தை (Centrality) அகற்றிடவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னும் விஞ்ஞானச் சமூகத்திற்கு வாய்க்கவில்லை! 

ஒருவகையில், விஞ்ஞானிகள் தற்போது மிகு-சிக்கல் (Complexity) நிகழ்வுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றாலும், மிகு-சிக்கல் நிகழ்வுமுறையானது எதை நோக்கிச் செல்கிறது என்பதை துல்லியமாக அறிந்தாரில்லை! ஒரு பரிணாம இயக்கம் என்றவகையில் பிரபஞ்சமானது மேன்மேலும் ஒருமைப்படுவதிலும் (Unification), தனி-மையப்படுவதிலும்  (Individualization) ஈடுபட்டுள்ளது! ஒரு உயிர்-ஜீவி என்பது யாதொரு பருப்பொருள் அமைப்பைவிடவும் மிகு-சிக்கல் வாய்ந்தது மட்டுமல்ல; அது மிகவும் ஒருமைப்படுத்தப்பட்டதும், தனி-மையப்படுத்தப்பட்டதுமான (Highly Unified and Individualized structure) ஒரு அமைப்பாகும்! அடுத்து ஒரு மனிதஜீவி என்பவன் ஒரு உயிர்-ஜீவியைவிடவும் மேலதிகமாக ஒருமைப்படுத்தப்பட்டவனும், தனி-மையப்படுத்தப்பட்டவனும்; யாவற்றுக்கும் மேலாக சுய-உணர்வு கொண்ட ஒரு விசேட அமைப்புமாவான்! அதாவது, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒவ்வொரு மனிதஜீவியையும் மையமெனக் கொண்டு குவிகின்றது எனலாம்! அதாவது, ஒரு விருட்சமானது தனது ஒவ்வொரு கனியையும் மையமாகக் கொள்வதைப்போல! ஒவ்வொரு மனிதனும் தனது முக்கியத்துவத்தை உணர்ந்தறியும் போது, அவன் பிரபஞ்சமளாவியவனாகிறான் (Universalized); அதே வேளையில், இவ்வழிமுறையில் பிரபஞ்சமானது தனி-மையப்படுகின்றது (Individualized)! இவ்வகையில், உண்மையில் பூமியானது தனது மையத்துவத்தை இழக்கவில்லையென்றே கொள்ளப்படவேண்டும்!

அதாவது, ஒரு மரத்தின் காய்கள் அம்மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டும் என்பதில்லை, அம்மரத்தின் எந்தப்பகுதியிலும் காய்க்கலாம்; அவ்வாறு எந்தப்பகுதியில் காய்த்தாலும் அக்காய்களின் மையத்துவமும், முக்கியத்துவமும் சிறிதும் மாறிவிடுவதில்லை. எவ்வொரு மரத்திற்கும் அதனுடைய காய்கள்/கனிகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், மரத்தின் ஒருமையும், முழுமையும் அதன் வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளில் தான் அடங்கியுள்ளன. அவ்வாறே, பிரபஞ்சத்தின் வித்துக்கள் மனிதர்கள் எனும் கனிகளில் தான் அடங்கியுள்ளன! ஆனால், மனிதர்கள் இன்னும் கனியாதவர்களாகவும், பெரும்பாலானவர்கள் கடைசிவரை (தம் வாழ்-காலம் முடியும் வரையிலும்) படும் பிஞ்சுகளாகவே தேக்கமுற்று மரணத்தில் உதிர்ந்துபோகின்றனர்!

அழிவதற்காகத் தோன்றியதல்ல பிரபஞ்சம்!


இப்போது நாம் வெப்பவியக்கவிசையியல் விதிகளைப் (Laws of Thermodynamics) பற்றிப் பார்ப்போம். இவ்விதிகளை நாம் எளிமையாக "வெப்பச்சலன விதிகள்" என்றும் அழைக்கலாம். முதலாம் வெப்பவியக்கவிசையியல் விதி, அல்லது வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது; மாறாக, சக்தியானது 
   ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றப்பட மட்டுமே முடியும். 
   ஆக, புதிதாக சக்தியானது உருவாக்கப்பட முடியாது என்பதால், பிரபஞ்சத்தின் 
   சக்தி எப்போதும் மாறாத அளவைக் கொண்டதாகவே இருக்கும்." 

சக்தி என்பது மிகவும் அடிப்படையானது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் சக்திதான் பருப் பொருளாக மாறுகிறது. பிரபஞ்சமாகவும், அதிலுள்ள அனைத்துமாகவும் ஆகிறது. சக்தி, பருப்பொருள் ஆகியவை குறித்து நாம் தொடக்கத்திலிருந்தே புரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இவை அடிப்படையான அம்சங்களே தவிர, எவ்வகையிலும் இறுதியானவையல்ல என்பதுதான். சக்தி என்பது காரியமாற்றுவதற்கான சக்தி மட்டுமே தவிர, அதற்கு யாதொரு திசையும், குறிக்கோளும், நோக்கமும் கிடையாது. பருப்பொருள் (Matter) என்பது சக்தியின் ஒரு மாறிய வடிவமே; மேலும் அது இப்பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருளே தவிர, 'பரம்பொருள்' அல்ல! ஆம், சக்தி, பருப்பொருள் ஆகியவை கருவி போன்றவை, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு, நோக்கத்திற்கு வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதற்கான ஊடகம் (Medium) போன்றவை. இவ்வாறே, இவற்றுக்கு அடிப்படையாக அமைந்த பௌதீகவியல் விதிகளும் பரிணாம விதிகளின் கருவிகளேயாகும்! ஆம், பரிணாம விதிகளே சக்தி, அல்லது பருப்பொருளானது என்ன செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் எனும் திசையையும், வழிமுறைகளையும் காட்டுகிறது!

அடுத்தது, இரண்டாம் வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றமடையும் 
   போது, அல்லது பருப்பொருளானது ஒரு மூடிய அமைப்பினுள் சுதந்திரமாக 
   இயங்கும்போது, (நாளடைவில்) அதனுடைய சீர்குலைவு (entropy)
   அதிகரிக்கிறது."

அதாவது, கணிதமேதையும், தத்துவவாதியுமான நார்பெர்ட் வீய்னர் (Norbert Wiener)அவர்கள்,  "(ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால்,) அதில் தோன்றிய எவ்வொரு பொருளும், நிகழ்வுமுறையும், (ஒட்டுமொத்த பிரபஞ்சமும்) இறுதியில் (நெடுங் காலப்போக்கில்) அழிந்துபோகும். அதில், ஒரு மனிதன் எவற்றையெல்லாம் மதிப்பு மிக்கதாகக் கருதுகிறானோ, வாழ்க்கை, செல்வம், சந்தோஷம், கலைப்பொருட்கள்; நாடுகள், நகரங்கள், சமூகங்கள், நாகரிகங்கள் - இன்னும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என யாவும் அழிந்துபோகும்! யாவும் கடைசிச் சிதைவுக்கும் அழிவுக்கும் உட்பட்டவையே, ஏனெனில், பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருளும் இந்த இரண்டாம் வெப்பச்சலன விதிக்கு உட்பட்டவையே!" எனக் கூறியுள்ளார்.

பிரபஞ்சத்தின் தலைவிதி கடைசியில் வெப்பச்சாவில் (heat death) முடிவதுதான் என்பதாக இந்த இரண்டாம் வெப்பச்சலன விதி சுட்டுகிறது. காலப்போக்கில், அனைத்து நட்சத்திரங்களும், உடுமண்டலங்களும் தமது எரிபொருளை எரித்துத் தீர்ந்த பிறகு, பிரபஞ்சம் மொத்தமும் தன் வெப்பத்தையிழந்து ஒரே சீரான வெப்ப நிலையை எட்டிவிடும்; அவ்வேளையில், யாதொரு உயிரும் பிரபஞ்சத்தில் வாழமுடியாது போகும்! 

ஆக, நமது வாழ்க்கை என்பது பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கும், அதன் முடிவு நிலைக்கும் நடுவே இடைப்பட்ட காலப் பகுதியில் நிகழும் ஒன்றாக அமைந்துள்ளது! அதாவது பிரபஞ்சம் தோன்றி கிட்டத்தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அவதரித்தோம்! அதேபோல, பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிவதற்கு பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்பாகவே நாமும், பிற உயிரினங்களும் இப்பிரபஞ்சத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிடுவோம் எனலாம்!

நாம் நாடகக் கலைஞர்களையும், பார்வையாளர்களையும் போல, நாடகம் தொடங்கும் போது மட்டுமே முறையே மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் தோன்றுகிறோம்! நாடக அரங்கம் (பிரபஞ்சம்) அமைக்கப்படும் போதும், நாடகம் முடிந்து அரங்கம் பிரிக்கப்படும் போதும் நாம் இருப்பதில்லை! எது முக்கியமெனில், நாடகம் நிகழ்கிறது என்பதும், நாடக-விதிகளை அறிந்து, அவற்றை முழுமையாக நிறைவேற்றி, நமது (பரிணாமப்) பாத்திரத்தை முறையாக உணர்ந்துசெயல்படுதல் மட்டுமே! 

இவ்வளவு ஏன்? மனிதனின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள்தான்! அதற்குள்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் 50 ஆண்டுகளோ, 60, அல்லது 70 ஆண்டுகளோ,    எவ்வளவு ஆண்டுகள் வாழ்வோம் என்பதை முன்னறிய முடியாத நிலையில், நாம் ஒவ்வொருவரும் விரைவாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை மரணத்துக்கு முன்னேயே முறையாக முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும்! 

மனித வாழ்-காலம்  வரையறைக்குட்பட்டதுதான். ஆனால், அது பொதுவாகப் பலரும் எண்ணுவது போல,  மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமானதற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது! இந்த வரையறைக்குள்ளாகவே நம்மால் முழுமையாக வாழவும், வாழ்வின் ஒப்பற்ற இலக்கை முயன்றடையவும் முடியும் என்பதால்தான் நமது வாழ்-காலம் இவ்வாறு மிகவும் கச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது

மேலும், மனித-உடலானது ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும்வகையில் உருவாக்கப்படவில்லை! ஏனெனில், "வாழ்க்கை" என்பது நீடித்து உயிர்-பிழைத்திருப்பது அல்ல! அவ்வாறு நீடித்து உயிர்-வாழ்வதுதான் வாழ்க்கை என்பதாயிருந்தால், இயற்கையாகவே ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கும் வகையில் நமது உடலானது வடிவமைக்கப்பட்டிருக்கும்! மேலும் ஆயிரம் ஆண்டுகள் நாம் நீடித்திருக்க முடியுமென்றாலும், நாம் என்ன செய்வோம்? வெறுமனே உண்டு, உறங்கி, இனம்பெருக்கி சகமனிதர்களோடு சண்டை சச்சரவிடும் கலக மானிடப்பூச்சிகளாக உழன்று கொண்டிருப்போம்!

ஆக, இரண்டாம் வெப்பச்சலன விதியை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் அழிவதற்காகத்தோன்றியதல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம்! அதாவது, பல நூறு கோடியாண்டுகளுக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிந்துவிடும் என்பதை நாம் இயல்பானதாக, அதாவது, நன்றாக, முழுமையாக அர்த்தபூர்வமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதன் மரணத்தில் முடிவதைப் போன்றே இயல்பானதாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ஏன், எந்த குறிக்கோளுக்காக இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதை முறையாகப் புரிந்துகொள்ளும்பட்சத்தில் முடிவு, இறப்பு என்பவை அழிவைக் குறிக்கும் சொற்களல்ல என்பதை நாம் புரிந்துகொள்வோம்!

அதாவது, பிரபஞ்சத்தின் பிறப்பு (ஆரம்பம்) என்பது ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வு என்றால், அதன் முடிவு என்பதும் ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வாகத்தான் அமைய முடியும்! மேலும், பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு குறிக்கோள், நோக்கம், அல்லது இலக்கு என்பது இருக்குமானால், அந்தக் குறிக்கோளை, இலக்கை அடைந்ததும் பிரபஞ்சம் முடிவிற்கு வந்துவிடுவது என்பது அழிவுகரமான விடயம் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரம் என்பதாகப் பார்ப்பதால், அவர்கள் பருப்பொருளையும், அதனை இயக்கும் பௌதீக விதிகளையுமே பிரதானமாகக் கொள்கின்றனர். உண்மையில், பிரபஞ்சத்தின் முடிவை, அதனுடைய பௌதிகத் தளத்தில் பௌதிக விதிகளின் சொற்களில் காண்பது, எதிர்பார்ப்பது தவறான புரிதலுக்குத்தான் இட்டுச் செல்வதாய் அமையும்! உண்மையில், பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றி, வெப்பச்சாவிலோ, அல்லது பெரும் உள்ளடர்தலிலோ (Big Crunch) முடிவடைவது கிடையாது! 

ஒரு விருட்சமானது ஒரு வித்திலிருந்து பிறந்து, வளர்ந்து, ஒரு கட்டத்தில் பூத்து, பிஞ்சுகள் விட்டு, பிஞ்சுகள் காய்களாகி, காய்கள் முற்றிக் கனிகளாகி, கனிகளுக்குள் இருக்கும் வித்துகளுக்குள் அடங்கி விடுகிறது! அதாவது, எவ்வொரு விருட்சமும் வித்தில் தொடங்கி வித்தில் (முழுமையடைந்து) முடிகிறது என்பதைப்போலவே, பிரபஞ்சம் எனும் விருட்சம் எத்தகைய வித்திலிருந்து தொடங்கியது (தோன்றியது) என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்! நாம் ஒரு விருட்சத்தின் வித்தைக் கணக்கிலேயே கொள்ளாமல், அவ்விருட்சத்தின் வேர்கள், அடிப்பகுதி, கிளைகள், இலைகள்; நீளம், அகலம், உயரம் ஆகியவற்றையும், அவற்றுக்கு அடியோட்டமான சில விதிகளையும் கொண்டு மட்டுமே புரிந்துகொள்வது அவ்விருட்சத்தை முழுமையாக, அதன் சாரத்தில் புரிந்து கொண்டதாக ஆகாது! ஏனெனில், ஒரு விருட்சத்தின் எல்லா பண்புகளையும், விதிகளையும் அறிந்தாலும், அதன் வித்தையும், வித்தின் பண்புகளையும், விதிகளையும் அறியாதிருப்பது அறிவீனமாகும்! அது சாரத்தை விலக்கி சக்கையைக் கொள்வதற்குச் சமமாகும்! 

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் உயிரியல் தளத்தையும், மனிதனை உள்ளடக்கிய அதிமுக்கியமான உணர்வியல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, பௌதிகத்தளத்தை மட்டுமே ஒட்டு மொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்; இது, ஒரு மரத்தின் பூக்களையும், காய்கள் மற்றும் கனிகளையும் விலக்கி வெறும் அடிமரத்தையும், கிளைகள், மற்றும் இலைகளையும் மட்டுமே மரம் எனக் காண்பதற்கு ஒப்பான மேலோட்டமான அணுகுமுறையாகும்! ஏனெனில், மரத்தின் அதிமுக்கியமான அம்சம் வித்து மட்டுமேயாகும். ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! விருட்சம் என்பது வித்தினைச் சுட்டும் ஒரு குறியீடு மாத்திரமே! மூல காரணமான வித்திற்கும், முடிவான விளைவாகக் கனியினுள் தோன்றும் வித்திற்கும் இடையேயான நிகழ்வுமுறையே (Phenomenon) விருட்சமாகும்! 

ஆம், பிரபஞ்சம் என்பது ஒரு விருட்சமானால் நாமே அதன் காய்களும், கனிகளும் போன்றவர்கள் ஆவோம்! ஒரு மரத்திற்கும், அதன் காய்களுக்கும் உள்ள உறவைப்போன்றதே பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள உறவும் ஆகும்! ஒரு மரத்திற்கு காய்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானவர்கள் பிரபஞ்சத்திற்கு மனிதஜீவிகள்! விஞ்ஞானிகள் கருதுவதுபோல, உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற, கிட்டத்தட்ட தேவையற்ற பக்கவாட்டு கிளைப்புகள் அல்ல! 

நாம் இப்பிரபஞ்சத்தில் தோன்றியிருக்கிறோம் என்பது ஒரு விபத்து அல்ல! மேலும், பிரபஞ்சத்தின் வரலாற்றை மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தால், திரும்பவும் நாம் தோன்றமாட்டோம் (ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, Stephen Jay Gould)என்பது போன்ற கூற்றுகள் அபத்தமானவை. ஏனெனில், விபத்தோ, இல்லையோ, நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை! இனி பிரபஞ்சமல்ல, நாம் இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியமானது; நம்மை இங்கு கொண்டுசேர்த்ததுடன் பிரபஞ்சத்தின் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது எனலாம். இனி நாம் தான் உணர்வுப்பூர்வமாக பிரபஞ்சம் விட்ட இடத்திலிருந்து பரிணாமத்தை அதன் இறுதியான இலக்கு நோக்கிக் கொண்டுசென்றாக வேண்டும்! 

பிரபஞ்சத்தின் எதிர்காலத்து விளைவுகளை, வளர்ச்சி நிலைகளை அதன் பௌதிகப் பரப்பில், விண்வெளியில் தொலைதூரத்தில் எங்கேயோ தேடிக்கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானதும், முறையற்றதுமாகும். ஏனென்றால், பிரபஞ்சம் என்பது வெறும் எந்திரத்தனமான பௌதிக (பொருளியல்) இயக்கம் அல்ல; பிரதானமாக அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும். பரிணாமரீதியாக, பிரபஞ்சமானது வெகு காலத்திற்கு முன்பே பௌதிகத் தளத்தை, அதாவது பொருளியல் தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்திற்குள் பிரவேசித்து, உயிரியல் தளத்தின் சாத்தியப்பாடுகள் அனைத்தையும் சோதித்து முடித்து, கடைசியாக, தற்போது உணர்வியல்-தளத்திற்குள் நுழைந்துள்ளது. இது, ஒரு மரம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் நிலையை ஒத்ததாகும்!  

ஆனால், விஞ்ஞானிகள் அனைவரும் ஏகோபித்த பார்வையில், பருப்பொருளாலான தளத்தை -- உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றையும்; அவற்றிற்கு அடிப்படையான கட்டுமானக் கூறுகளான அணுத்துகள்களையும்; மேலும்,  காலம், வெளி, நிறை, மற்றும் அடிப்படை விசைகளான ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை, அணுக்கருவின் வலுமிக்க விசை, வலுக்குறைந்த விசை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பைத்தான் மொத்தபிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்! ஆகவேதான் இவையனைத்தையும் நிர்வகிக்கும் அடியோட்டமான பௌதிகவியல் விதிகளை (The Laws of Physics) பிரதானமாகக் கொள்கிறார்கள்; கிட்டத்தட்ட அவர்கள் இவ்விதிகளை வழிபடுகிறார்கள் என்றே சொல்லலாம்!  

இல்லையென்றால், பருப்பொருளின் தளத்துக்குரிய இரண்டாம் வெப்பச்சலன விதி போன்ற ஒரு விதியைக் கொண்டு அவர்கள் பிரபஞ்சத்தின் தலைவிதியை மட்டுமல்லாமல் நம்முடைய தலைவிதியையும் சேர்த்தே எழுத எத்தனிப்பார்களா என்ன? இது எவ்வாறு உள்ளதென்றால், நாம் வசிக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டு நம்மையும், நமது வாழ்க்கையையும் வரையறுப்பது போலுள்ளது! 

முக்கியமாக, இரண்டாம் வெப்பச்சலன விதி என்பது பிரபஞ்சத்தின் பௌதிகத்தளத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விதி மாத்திரமே! இவ்விதியாயினும், பிற எவ்வொரு பௌதிக விதியாயினும், எதுவும் பரிணாம வழிமுறையை தீர்மானிக்க இயலாது! பௌதிகவிதிகள் யாவும் பருப்பொருள் தளத்தைக் கட்டுப்படுத்துவதற்கானவை மட்டுமே. பருப்பொருளானது ஒரு உயிர்-ஜீவியாக மாற்றமடையும் வழிமுறையில் இரண்டாம் வெப்பச் சலன விதி எத்தகைய பங்கு ஆற்றியுள்ளது? இறுதியில், இப்பிரபஞ்சத்தில் உயிர்-ஜீவிகள் உயிர்-பிழைத்திருக்க முடியாத நிலையை இந்த இரண்டாம் விதி தோற்றுவிக்கும் என்றால், முதலிடத்தில் உயிர் தோன்றுவதை ஏன் அந்த விதி தடுக்காமல் அனுமதித்தது?

பிரபஞ்சமானது அணுத்துகள் போன்ற மிக எளிய அமைப்பிலிருந்து ஒரு அமீபா போன்ற மிகு-சிக்கல் அமைப்பாகவும், மனித மூளை போன்ற அதி-சிக்கல் வாய்ந்த அமைப்பாகவும் தவிர்க்கவியலாத வகையில் வளர்ந்தெழும் வழிமுறையில் தனித்துவமான மிகு-சிக்கல் விதிகள் (laws of complexity)தோன்றி பரிணாமத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்கின்றன. இவ்வாறு, பரிணாமப் போக்கில், பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் தோன்றினாலும், அவ்விதிகள் பௌதிக விதிகளை மீறுவதில்லை; மாறாக அவற்றை நிறைவு செய்வதாகவே உள்ளன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறுவதிலிருந்து, அவர்கள் பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் இருந்தாலும் அவற்றை மதிப்பதில்லை, பெரிதாகக் கணக்கில் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்து பௌதிக விதிகளுக்கு விசுவாசமாக இருப்பதே விஞ்ஞான பூர்வமானது என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பதும், இவ்வழியே ஒருவகை விஞ்ஞானவாதம் (Scientism) விஞ்ஞானத்தைப் பீடித்து மட்டுப் படுத்துவதில் முடிகிறது என்பதையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் உணர்வதேயில்லை!

உண்மையில், உயிர்-தோன்றுவதற்குரிய அனைத்துச் சாதகமான நிலைமைகளுக்கும் பௌதிக விதிகள் வழியமைத்துக் கொடுத்தே அமைந்துள்ளன! இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? சிந்திகும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? ஒருவேளை, இப்பிரபஞ்சத்தில் உயிரும், மனித ஜீவியும் தோன்றவில்லை என்றால், அதாவது, பிரபஞ்சம் தரிசாகவே பல்லாயிரம் கோடி ஆண்டுகள் யாதொரு குறிக்கோளும், இலக்கும் இன்றி இயங்கி கடைசியில் இரண்டாம் வெப்பச் சலன விதியின்படி வெப்பச்சாவில் மாண்டு மறைந்துபோகும் என்றால், அந்த இரண்டாம் வெப்பச்சலன விதியின் முக்கியத்துவம் தான் என்ன? எது, அல்லது யார் அவ்விதியைப் பற்றி ஆராய்ந்துகொண்டும், போற்றிப் பாடிக்கொண்டும் இருப்பர்? 

நிலையாமை நிலையானதல்ல!


வித்தில் தொடங்கி வித்தில் முழுமைபெறும் நிகழ்வுமுறையின் சூட்சுமம் அறிந்தால், "நிலையாமை" என்ற பேச்சுக்கு இடமேது! தோன்றியவையனைத்தும் அழிந்துபோகும் என்பது தவறு! 

பிரபஞ்சம் முடிவிற்கு வரவேண்டுமானால், முழுமையடைய வேண்டும்! அது எக்குறிக்கோளுக்காத் தோன்றியதோ அக்குறிக்கோளை முழுமையாக எட்டியிருக்கவேண்டும்! அது எந்த மூலத்திலிருந்து வெடித்துத் தோன்றியதோ அந்த மூலத்தை எட்டும் வகையிலான நுட்பம் மிகுந்த ஒரு அமைப்பை கட்டமைத்தாக வேண்டும்! எவ்வாறு ஒரு விருட்சமானது எந்த வித்திலிருந்து தோன்றியதோ அதே போன்ற வித்துக்களை தனது கனிகளுக்குள் கட்டமைக்கிறதோ அவ்வாறு! பிரபஞ்சம் எதற்காகத் தோன்றியது என்பது தெரியாமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி மதிப்பையும், ஒரு பௌதிக விதியையும் (இரண்டாம் வெப்பச்சலன விதியையும்) கொண்டு இப்படித்தான் பிரபஞ்சம் முடிவிற்கு வரும் என்று கணிப்பது பொருத்தமற்றது!

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, கடைசியில் எவ்வாறு முடிவடையும் என்பதை அறிவதைவிட ஏன், எந்தக் குறிக்கோளுக்காகத் தோன்றியது என்பதை அறிவது அதிமுக்கியமானதாகும்! காலம், மற்றும் உலகம் பற்றிய உணர்வு தோன்றிய தொன்மைக் காலங்களில், "ஏன்", "எவ்வாறு", "எதிலிருந்து" உலகம் தோன்றியது என்ற கேள்விகளைப் பின்பற்றி இவ்வுலகில் தன்னையும், தனது வாழ்வையும் அர்த்தப்படுத்திடும்வகையில் எழுந்த உந்துதலில் புராணிகம் தோன்றியது! புராணிகங்களிலிருந்து ஒரு கிளை பிரிந்து மதங்கள் உருவாயின. மதங்கள் கடவுளை அனைத்துக்கும் காரண கர்த்தாவாகக் கொண்டதால் அனைத்துக் கேள்விகளும் தேடலும் முடிவிற்கு வந்துவிட்டன! இன்னொரு கிளை பிரிந்து தத்துவச் சிந்தனை பிறந்தது. அடுத்து மூன்றாவது கிளையாக, 'எவ்வாறு' என்ற கேள்வி முதன்மைபெற்றதன் வழியாக  விஞ்ஞானம் துளிர்த்தது; துளிர்த்ததோடு துரித வளர்ச்சி பெற்று, வெறும் 500 ஆண்டுகளில் கிட்டத்தட்ட தனது எல்லைகளைத் தொட்டும்விட்டன, ஆனால், அது தன் முடிவைத் தழுவிக்கொள்ள மனமில்லாமல் தத்தளித்துக்கொண்டு பற்பல கற்பனைக்கோட்பாடுகளைப் புனைந்துகொண்டுள்ளது! ஆம், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்ற வகையில் முடிவிற்கு வந்தே ஆகவேண்டும்! அதற்கு அது துணிவுடன் சில முடிவுகளை, உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்!

பிரபஞ்சமானது ஒரு பூடகமான "பெரு-வெடிப்பில்" (Big-Bang) தோன்றி, மேலும் பூடகமான தொரு "பெரும்-உள்ளடர்தலில்" (Big-Implosion) முடிவடைந்து போகும் அர்த்தமற்ற நிகழ்வுமுறை அல்ல! அதற்கு அது தோன்றாமலேயே இருந்திருக்கும்! மாறாக, அது நிரந்தரமற்ற நிலையிலிருந்து நிரந்தரத்துவம் நோக்கிச் செல்லும் அரிய நிகழ்வுமுறை ஆகும்! மிகவும் எளிமையான அணுத்துகள் என்ற நிலையில் தொடங்கிய பிரபஞ்சம், சுய-அமைப்பாக்கம் (Self-Organization)எனும் வழிமுறையின் வாயிலாக தன்னைத்தானே கட்டியெழுப்பிக்கொண்டு பருப்பொருள் நிலையிலிருந்து உயர் மாற்றம் பெற்று தனி-மையப்பட்ட (Individualized) மிகு-சிக்கல் (Complexity) அமைப்பான உயிர்ஜீவியாக எழுந்தது. பிறகு, வெறும் உயிர்-ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து, மேலும் மிகு-சிக்கலான அமைப்பான மூளையைக்கொண்ட,  சுய-உணர்வு பெற்ற, சிந்திக்கும் திறன்கொண்ட மனிதஜீவியாக அவதாரம் எடுத்தது! அடுத்து, சுய-உணர்விலிருந்து முழு-உணர்வு நிலையை அடைய இன்னும் ஒரு படிதான் உள்ளது! அதாவது, காய்கள் முற்றிக் கனிகளாக மாறுவது மட்டுமே இன்னும் நிகழவேண்டியுள்ளது! எல்லாக் காய்களும் முற்றிக் கனிகளாக ஆன பிறகு, மரம் பட்டுப்போனாலும் அதனால் பாதகம் ஒன்றுமில்லை!

இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? பிறகு மனித ஜீவிகள் எதற்கு? வெறுமனே சிறிது காலம் உயிர்-பிழைத்திருந்து பிறகு மரணத்தில் முடிந்துபோவதற்காக உருவானதா வாழ்க்கை? இல்லை, வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்த உன்னத நோக்கம் கொண்டது வாழ்க்கை! 

மனித வாழ்-காலம் வரையறைக்குட்பட்டதுதான் என்றாலும், அதற்குள்ளாகவே அடையப்படவேண்டிய பிரத்யேகமான, மகத்தான இலக்கு ஒன்று இருந்தாகவேண்டும்! அந்த இலக்கைக் கண்டடைவதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது! நெடிய ஆயுளுடன் குந்தித் தின்பதற்கும், உடுத்தி மகிழ்வதற்கும், உல்லாசமாக அவரவர் விருப்பப்படி இருப்பதற்குமான வாய்ப்பு அல்ல வாழ்க்கை! 
நிலையாமை என்பது உலக மெய்ம்மை பற்றிய உண்மையாகும். மனித ஆயுளுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சத்தின் ஆயுள் நெடியது என்றாலும் அது நிரந்தரமானதல்ல. அவ்வாறு நிரந்தரமாக நீடித்திருக்கும் வகையிலும் அது கட்டமைக்கப்படவில்லை! ஒரு வகையில், இச்செய்தியைத்தான் இரண்டாம் வெப்பச்சலன விதி உணர்த்தி நிற்கிறது எனலாம்!  

நிரந்தரத்துவம் என்பது தோற்றம், மறைவு; ஆரம்பம், முடிவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது! நாம் இந்த உலகில் முளைத்திருக்கலாம்; ஆனால், நாம் ஒவ்வொருவரும் சென்று சேர வேண்டிய உலகம் காலாதீதம்! அது ஒரு ஒப்பற்ற உணர்வு நிலையாகும்! ஒரு கணம் அதை உணர்ந்து அனுபவம் கொள்வதென்பது அனந்த காலத்திற்கு வாழ்ந்ததற்குச் சமமானது மட்டுமல்ல, அது, முக்தி, மோட்சம், வீடுபேறு எனும் இறவா நிலையை, அதாவது, நிரந்தரத்துவத்தைச் சேர்வதுமாகும்!

இந்த உலகம் (பிரபஞ்சம்) நிரந்தரமற்றது என்பதன் அர்த்தம் 'நிரந்தரமானது' என்று எதுவும் இல்லை என்பதல்ல! நிரந்தரமற்ற மெய்ம்மையாகிய இந்த உலகம் இங்கிருக்க முடியுமெனில், நிச்சயம் நிரந்தர மெய்ம்மை என்ற ஒன்றும் இருந்தாகவேண்டும்! அவ்வாறில்லாவிடில், யாதொரு அடிப்படையும், மூலமும் இன்றி, நிரந்தரமற்ற இந்த உலக-மெய்ம்மை எவ்வாறு எதிலிருந்து தோன்றியிருக்கமுடியும்? 

■ 

மா.கணேசன் / நெய்வேலி / 25-09-2018
--------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, 23 September 2018

முழு-அறிவும் விஞ்ஞான அறிவும்



இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவும் மானிட விஞ்ஞான அறிவும்


விஞ்ஞானம், விஞ்ஞான அறிவு என்பது மனிதனின் உருவாக்கம் அல்ல; அது மனிதனுக்கும் முந்தையது; அது இயற்கையில், இப்பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலேயே பின்னப்பட்டிருக்கிறது. இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அறிவுச் சுரங்கம். அது ஒரு வாழும் அறிவின்-அருங்காட்சியகம்! ( It is a living museum of Knowledge).

விஞ்ஞான அறிவானது மண்ணில் புதைந்துள்ளது, விண்ணில் விரவியுள்ளது, காற்றில் கலந்துள்ளது, நீரில் கரைந்துள்ளது! பௌதீகவியல், வேதியியல், உயிரியல்,... உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானத் துறைகளும் இயற்கையில் அல்லாமல் வேறெங்குள்ளன? இவையெதுவும் மானிட விஞ்ஞான மூளையின் உருவாக்கம் அல்ல!

இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவை அப்படியே நேரடியாக மண்ணைத்தோண்டி வெளியே எடுத்திட இயலாது; கொஞ்சம் தோண்டவும் அதிகம் சிந்திக்கவும் வேண்டும்! சிந்தித்தல் என்பது ஒருவன் தன்னிடம் ஏற்கனவே இருக்கும் (கொஞ்ச) அறிவைக்கொண்டு முழு-அறிவைத் தொடர்பு கொள்ளுதல் என்பதே ஆகும்!

இப்பிரபஞ்சம் என்பது அறிவைப் போர்த்தியுள்ள மேலோடு போன்றதே! இயற்கையில் அனைத்து அறிவும் பொதிந்துள்ளது! ஆம், ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு முழுப்பிரபஞ்சத்தையும் கொண்டு வரவேண்டுமா? சடப் பொருளிலிருந்து உயிரை (உயிர்-ஜீவியை)க் கொண்டுவர வேண்டுமா, அதற்கான அனைத்து அறிவும், தொழில்நுட்பங்களும் பரிணாம-நோக்கத்தின்படி வெளிப்பட்டு அதைக் கச்சிதமாகச் செயல்படுத்திவிடுகின்றன! ஓரறிவு கொண்ட புழுவை சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் அறிவுஜீவியாக, ஆறறிவுள்ள மனிதனாகப் பரிணமிக்கச் செய்யவேண்டுமா, அதையும் பரிணாம விதிகள் சாதித்து முடித்துள்ளன!

ஆனால், சடப்பொருள் ஏன், எதற்காக, உயிர்ப்பண்பாக, உயிர் ஜீவியாகப் பரிணமிக்க வேண்டும்? இக்கேள்வி எவ்வொரு விஞ்ஞானியின் மூளையிலும் உதிப்பதில்லை! அடுத்து, ஆக்ஸிஜன் அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களும் இணைந்து ஏன் தண்ணீர் எனும் திரவப்பொருள் உருவாக வேண்டும்? இது பற்றியும் எந்த விஞ்ஞானிக்கும் கேள்வி எழுவதேயில்லை! அவ்வாறு உருவான தண்ணீர் பயனற்றுப் போவதுமில்லை! பரிணாமத்தில் பின்னால் தோன்றவிருக்கக்கூடிய உயிர்த் தோற்றத்திற்கு மிகவும் அடிப்படையானதொரு கூறாக அமைகிறது. அதாவது, "நீரின்றி அமையாது உலகு" என்ற கூற்றுக்கிணங்க, தண்ணீரின் அவசியம் பரிணாமத்தால் முன்-யூகிக்கப்பட்டதாயுள்ளது!

விதிகளின் விதி!


முதலிடத்தில், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன், என பலவகைப்பட்ட தனிமங்கள் எதற்காக, எந்தக் கணக்கின் அடிப்படையில், நோக்கத்திற்காக, தோன்றி இருக்கின்றன? குறிப்பாக, ஆக்ஸிஜன் அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களும் இணைந்து தண்ணீர் எனும் கூட்டுப்பொருளாக மாறவேண்டும் என்பதை எந்த விதிகள் தீர்மானிக்கின்றன? இதுவரை வெவ்வேறு வேதியியல் பண்புகள் கொண்ட 118 வகை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 94 தனிமங்கள் மட்டுமே இயற்கையில் இருப்பவை; மீதம் 24 தனிமங்கள் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஆனால், இயற்கையில் ஏன் 94 தனிமங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும்?.....இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய விஞ்ஞானிகள் ஏதாவதொரு விளக்கத்தைத் தந்து எளியனவாகத் தோற்றம்தரும் இக்கேள்விகளைப் புறந்தள்ளிவிடுவர்!

நம்முடைய விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அது பிரபஞ்சத்தின் ஆதியையும் அந்தத்தையும் தவிர்த்து, இடையிலுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும் வெற்றிகரமாக விளக்கிச் சொல்லிவிடும்! ஆனால், முதலிடத்தில், ஏன், எதற்காக இங்கே ஒரு பிரபஞ்சம் இருக்கிறது? நாம் ஏன், எதற்காக அதில் இடம் பெற்றுள்ளோம்? நம் வாழ்க்கையின் அர்த்தம் குறிக்கோள் மற்றும் இலக்கு தான் என்ன? என்பவை பற்றியெல்லாம் அதனால் ஏதும் சொல்ல முடிவதில்லை!

பௌதீகவியல் விஞ்ஞானி அந்தோனி ஸீ (Anthony Zee)அவர்கள், "நாம் இயற்கையை தவணைமுறையில் அறிந்துகொள்ளலாம். நாம் அணுவை அதன் கருவை அறிந்துகொள்ளாமலேயே அறிந்துகொள்ளலாம். . . . .  பௌதீக உலகமெய்ம்மை அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிந்தாக வேண்டுமென்பதில்லை. நன்றி, இயற்கையே" என்று நன்றியுணர்ச்சியுடன் கூறுகிறார்.

விஞ்ஞானி அந்தோனி ஸீ அவர்களின் கூற்று அவ்வளவு அபத்தமானதல்ல. ஏனென்றால், விஞ்ஞானத்தின் தற்போது வரையிலான எதார்த்த நிலையும், அவலமும் அதுதான்! முதலிடத்தில், பிரபஞ்சம் ஏன், எதற்காக, எவ்வாறு தோன்றியது என்பதை அறியாமலேயே, பிரபஞ்சத்திலுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும் பற்றி விஞ்ஞானிகள் நிறைய பேசுகிறார்கள். பருப்பொருளிலிருந்து உயிர்ஜீவி ஏன், எவ்வாறு தோன்றியது என்பதை அறியாமலேயே, உயிரினங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைப் பற்றியும், 'இயற்கைத் தேர்வு' பற்றியும் விஞ்ஞானிகள் நிறைய கதைக்கிறார்கள். அடுத்து சிந்திக்கும் திறனுள்ள மனித-உணர்வு எவ்வாறு, ஏன் தோன்றியது என்பதை அறியாமலேயே, மனிதனை இன்னுமொரு விலங்கு என்று கூறிவருகிறார்கள்! அடுத்து, பிரபஞ்சத்தின் வருங்காலம், அதன் முடிவு எத்தகையது என்பதை அதனுடைய அடியோட்டமான பரிணாமத் திட்டத்தையும், குறிக்கோளையும் கொண்டு உய்த்துணராமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி-மதிப்பைக் கொண்டு பிரபஞ்சத்தின் தலைவிதியை தாறுமாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!

இயற்கைத் தேர்வு அல்ல "இலக்குநிலைத் தேர்வு"


ஆனால், பரிணாமம் எல்லாவற்றையும் முன்-யூகித்தே செயல்படுகிறது? பரிணாமத்தின் இறுதிச் சொல் (அதாவது இலக்கு) எது என்பதும் தீர்மானிக்கப்பட்ட ஒன்று ஆகும்! அதாவது, நதியின் இலக்கு முன்-தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருப்பது போலவே, பரிணாமத்தின் இலக்கும் முன்-தீர்மானிக்கப்பட்ட ஒன்றே ஆகும்! ஆனால், நதியின் தோற்றுவாய்க்கும், முடிவிடமாகிய சமுத்திரத்திற்கும் இடையே அமையும் நதியின் வழித்தடங்கள் முன்-தீர்மானிக்கப்படுவது இல்லை. இதைப்போலவே, பரிணாமத்தின் தொடங்கு புள்ளிக்கும், இறுதிப்புள்ளிக்கும் இடையே தோன்றவிருக்கும் நிலைகளும், இறுதி இலக்கை எட்டும் வழிமுறைகளும் முன்-தீர்மானிக்கப்பட வில்லை. ஆகவே தான், பரிணாமத்தில் "சோதனை-தவறு-திருத்தம்" (Trial and Error) எனும் பரீட்சார்த்தமுறை மையமாக அமைந்துள்ளது.


அதேவேளையில், பரிணாமத்தில் வெளிப்படும் ஒரு அம்சம் சரியானது என்று எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்றால், டார்வினின் "இயற்கைத் தேர்வு" (Natural Selection) எனும் வழிமுறையினால் என்று உயிரியலாளர்கள் நம்பிவருகின்றனர். ஆனால், பரிணாமத்தில் இயற்கையே மாற்றத்திற்கு உட்படும் பொருளாக இருக்கையில், எந்த இயற்கை எந்த இயற்கையைத் தேர்வு செய்திட இயலும்? டார்வினின் 'இயற்கைத் தேர்வு'க்கு மாறாக, இயற்கையில் உண்மையில் செயல்படுவது, "இலக்குநிலைத் தேர்வு" (Teleological Selection) எனும் விதிமுறையே ஆகும்! அதாவது, பரிணாமத்தின் மிகத் தொலைவான இலக்குநிலையை எட்டும்விதமான படிக்கற்களாகச் சேவைபுரியக்கூடிய வகையிலான பொருத்தமான இடைநிலை அம்சங்களே தேர்வுசெய்யப்படுகின்றன. அவ்வாறு தெரிவு செய்வது அந்த இலக்கு நிலையே தான்! அதாவது, உணர்வு தான் (Consciousness) பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்காகும்! பரிணாமம் என்பது உணர்வின் பரிணாமமே, பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வே!

எவ்வாறு ஒரு இசைக்கோவையானது ஒரு ஒற்றை ஸ்வரத்தில் தொடங்கப்பட்டு அடுத்தடுத்து பல ஸ்வரங்களுடன் இணைத்து ஒரு முழு கோவையாக உருவாக்கப்படுகிறதோ; அதாவது, ஒரு இசைக்கோவையின் முழுமையானது அந்த இசைக் கோவையை தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு ஸ்வரத்தையும் கட்டுப்படுத்தி அதனதன் இடத்தில் அமையச் செய்வதைப்போலவே, பரிணாமமும் இறுதியாக விளையவிருக்கும்  முழுமைக்கேற்றவாறே, தொடக்கமும், இடைநிலைகளும் உருவாகின்றன! டார்வினிய கொள்கை முழங்குவதுபோல, பரிணாமம் என்பது குறிக்கோளற்ற, இலக்கற்ற, ஒரு குருட்டாம் போக்கு நிகழ்வு அல்ல!

விஞ்ஞான அறிவு என்பது விஞ்ஞானிகளின் மூளைகளில் உற்பத்தியாவதில்லை! ஆயினும் இயற்கையிலிருந்து அந்த அறிவை வெளிக்கொணர்வதற்கு அவர்களது மூளைகள் மிக மிக மிகக் கூர்மையாகச் சிந்திக்கவேண்டும்.

அதே நேரத்தில், மானிட விஞ்ஞான அறிவுக்கும் இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவிற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. ஏனெனில், மானிட விஞ்ஞான அறிவு என்பது இயற்கையிலிருந்து பெறப்படும் போதே ஒரு குறிப்பிட்ட வகையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு  குறுக்கப்பட்டும், வெட்டிக்கழிக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் உருவாக்கப்படும் ஒன்றாகும்.
இவ்வகையில், விஞ்ஞான அறிவு என்பது கரு முழுவளர்ச்சியடைவதற்கு முன்பாகப் பிறந்திட்ட ஒரு குறைப்பிறவி [In this way, scientific knowledge is a monster(a congenitally malformed or mutant entity)] ஆகும்!

இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவும் இயற்கையினுடையது அல்ல; மாறாக, அறிவு, அறிவாக தனித்தே இருக்கிறது! இயற்கை/உலகம் என்பது அறிவுக்கு வடிவம் கொடுக்கும் வெறும் ஒரு ஊடகம் (Medium),அல்லது கருவி மாத்திரமே! உலகம் என்பது பேரறிவின் உடல்!

இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னரே அறிவு ஏற்கனவே தனித்து இருந்தது, பிரபஞ்சம் தோன்றிய வுடன் சிறிது சிறிதாக பிரபஞ்சத்திற்குள் பிரவேசித்தது. பிரபஞ்சம் வளர வளர அறிவும் வளர்கிறது. பிரபஞ்சம் என்பது குறை-அறிவிலிருந்து நிறை-அறிவை நோக்கிச் செல்லும் இயக்கமேயன்றி வேறில்லை!

நம்மில் சிலருக்கு அறிவு எவ்வாறு பிரபஞ்சத்திலிருந்து தனித்து இருக்கமுடியும் என்ற சந்தேகம் எழலாம். குவாண்டம் தகவல் விஞ்ஞானப் பேராசியர் விளாட்கோ விட்ரல் (Vlatko Vedral) அவர்கள், "தகவல் (அறிவு) என்பது வெற்றிடத்திலிருந்து தன்னெழுச்சியாக தாமே வெளிப்படுகிறது" எனவும்; தகவலின் இருப்புக்கு அதற்கு முற்பட்ட யாதொரு தகவலும் தேவையற்றது" எனவும்; "தகவலானது வெற்றிடத்திலிருந்து உருவாக்கப்பட முடியும்" எனவும் கூறுகிறார். விளாட்கோ விட்ரல் அவர்களைப் பொறுத்தவரையில், வெற்றிடம் தான் பிரதானம் என்று சொல்லாமல் சொல்கிறார். ஆனால், "அறிவே பிரதானம், எல்லாமே அறிவுதான்!" என்பதுதான் இக்கட்டுரை முன்வைக்கும் அறிவு!

மேலும் நம்முடைய விஞ்ஞான அறிவு எப்போதும், குறைபாடுடையதாயும், முழுமையற்றதாயும்தான் இருக்கும்! ஒருபோதும் நாம் நம்முடைய விஞ்ஞான அணுகுமுறையின் மூலமாக முழு-அறிவையும் பெற இயலாது; அதாவது விஞ்ஞான அணுகுமுறையின் உள்ளார்ந்த குறைபாடுகளினால் அதன் மூலமாக ஒட்டுமொத்தத்தின் (பிரபஞ்சத்தின்) சாரமான உண்மையை ஒருபோதும் அறிய இயலாது! முதல் கோணல் முற்றும் கோணல்!

இதன் அர்த்தம், பிரபஞ்சத்தை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியாது என்பதல்ல; மாறாக, குறைபாடுடைய விஞ்ஞான அணுகுமுறையின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிறோம்! ஏனெனில், நம்முடைய விஞ்ஞானம் அவ்வளவு விஞ்ஞானப்பூர்வமாக இருக்கவில்லை! இப்பிரபஞ்சத்தையும் அதில் நம்மையும், நமது வாழ்க்கையையும் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியும்! அதற்கு, பருப்பொருளை மையப்படுத்தாத, பிரதானப்படுத்தாத; மாறாக, அறிவை மையப்படுத்தும், முழு-அறிவைப் பிரதானப்படுத்தும் மெய்ஞான அணுகுமுறை வேண்டும் என்கிறோம்!

"இயற்கையை முழுமையாக விவரித்து முடித்துவிட முடியாது, ஏனென்றால், அத்தகைய விவரிப்பு இயற்கையை பிரதியெடுப்பதாக ஆகும்." என தத்துவவாதி ஆர்ச்சி பாம் (Archie Bahm)கூறினார். அதாவது, ஒருவகையில், "இயற்கை அல்லது பிரபஞ்சம் பற்றிய முழுமையான விவரிப்பு என்பது இப்பிரபஞ்சத்திலிருந்து பிரித்தறியவியலாத ஒன்றாய் இருக்கும்" எனும் விஞ்ஞானி ஸெத் லாய்டு (Seth Lloyd)அவர்களின் கூற்றும் சரியே! அதாவது, பிரபஞ்சம், அல்லது, இயற்கையைப் பற்றிய முழுமையான புரிதல், அல்லது அறிவு என்பது இப்பிரபஞ்சத்திற்குச் சமமானது ஆகும்! ஏனெனில், முழு-அறிவுதான் பிரபஞ்சம், அதாவது பிரபஞ்சமாக மாறியுள்ளது! இவ்விடத்தில், நாம் இயற்கையையோ, பிரபஞ்சத்தையோ அல்லாமல், அறிவைப் பிரதானப்படுத்த வேண்டும்; அதுவே அறிவுள்ள மனிதனுக்கு அழகு!

1500 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பிரபஞ்சம் தோன்றிய அந்த "பெரு வெடிப்பு" எனும் கணத்திற்கு முன்னேயே அனைத்து அறிவும் இருந்தது! பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் பௌதீக அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் பரிணாம இயக்கமும் ஆகும்! அந்த ஆதி-அறிவு அல்லது பேரறிவு, சக்தியையும் ஆற்றலையும் உருவாக்க வல்லது! அவ்வறிவை சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை (A State of Infinite Possibilities) எனவும் கொள்ளலாம். அதுவே பெருவெடிப்பு எனும் நிகழ்வின் மூலமாக (இதை நாம் சுரிணாமம், Involution என அழைக்கலாம்) முதலில் சக்திப்பொழிவாகவும், அதையடுத்து அடிப்படை அணுத்துகள்களாகவும், பிறகு படிப்படியாக வளர்ந்து விரிந்து இப்பிரபஞ்சமாகவும் எழுந்தது. ஆக சடப்பொருளின் நிலைக்கு  (கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகச்) சுருங்கிய அறிவு, அதனுடைய பரிணாம வழிமுறையில் படிப்படியாக அறிவில் உயர்ந்தெழுந்து இறுதியில் மீண்டும் பேரறிவு நிலையை எட்டுகிறது. இவ்வாறு சுருங்கிய நிலையிலிருந்து மீண்டும் விரிந்த தனது அசலான நிலைக்குத் திரும்பும் வழிமுறையைத் தான் பரிணாமம் (Evolution)என்று அழைக்கிறோம்.

இடைவெளிகள் அல்ல "பரிணாமத் தாவல்கள்"


இயற்கையில் பொதிந்துள்ள விஞ்ஞான அறிவானது பொருண்மைவாதம் (Materialistic) சார்ந்ததுமல்ல; எந்திரத்தனமானதும் (Machanistic) அல்ல. இன்னும் அது பகுத்தறிவு எனும் கூண்டுக்குள்ளும் அடைபடுவதில்லை!

முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை ஒருபோதும் பகுத்தறிவாலும், விஞ்ஞானத்தாலும் கண்டறிய இயலாது. அதாவது, பெருவெடிப்புக்கு முந்தைய நிலைக்கும், பிந்தைய நிலைக்கும் உள்ள இடைவெளியை ஒருபோதும் விஞ்ஞானத்தால் நிரப்பிடஇயலாது! பெருவெடிப்புக்கு பிந்தைய நிலை பொருண்மை மயமானது என்பதை நாம் அறிவோம்; ஆனால், பெருவெடிப்புக்கு முந்தைய நிலை எத்தகையது என்பதை என்றாவதொரு நாள் விஞ்ஞானம் கண்டு சொல்லும் என நாம் காத்திருப்பதில் ஒரு அர்த்தமுமில்லை! ஏனெனில் விஞ்ஞானத்தின் பொருண்மைவாத  அணுகுமுறையின் மூலம் அதை அறிவதற்குச் சாத்தியமில்லை என்று நாம் உறுதியாகக் கூறிடலாம்!

மனிதனிடமிருந்து உணர்வைக் கழித்துவிட்டால், மீதமிருப்பது உயிருள்ள ஒரு விலங்கு மட்டுமே.
ஒரு விலங்கு ஜீவியிடமிருந்து உயிரைக் கழித்துவிட்டால் மீதமிருப்பது சடப்பொருள் மட்டுமே.
ஆனால் சடப்பொருளிலிருந்து சடப்பொருளைக் கழித்தால் என்ன கிடைக்கும்? "சூன்யம்" என்று சொல்லலாமா? அப்படியெனில், அது எத்தகைய தன்மையிலானது, அதன் பண்பு என்ன? 'சூன்யம்' எனும் வெறுமையிலிருந்து பொருண்மையான இந்த பிரபஞ்சம் எவ்வாறு பிறந்தது? ஆனால், பௌதீகவியல் விஞ்ஞானிகள் சாதுரியமாக அவ்வெறுமையையும் பொருண்மையின் ஒரு வடிவம் அல்லது நிலை என்பதாக விளக்கி மகிழ்கிறார்கள்! இது போகட்டும் என்று விட்டுவிடலாம்; ஆனால், பரிணாமத்தில் வெளிப்படும் ஒவ்வொரு புதிய பண்பையும், அம்சத்தையும் அவர்கள் பொருண்மையின் வெவ்வேறு வடிவங்களாக, நிலைகளாகச் சுருக்கிவிடுவது தான் படு அபத்தமான சுருக்கல்வாதம் ஆகும்!

விஞ்ஞானத்தால், அல்லது பகுத்தறிவால் விளக்கமுடியாத இடைவெளிகள் என நாம் மூன்றைக் குறிப்பிடலாம். முதலாவது, பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் குறிக்கும் 'பெருவெடிப்பு' எனும் நிகழ்வுக்கு முந்தைய நிலைக்கும், பிந்தைய நிலைக்கும் உள்ள இடைவெளி. இரண்டாவது, பொருளுக்கும், அதிலிருந்து பரிணமித்த உயிர் எனும் பண்புக்கும் உள்ள இடைவெளி. மூன்றாவது, சடப்பொருளுக்கும், உணர்வுக்கும் (Consciousness)உள்ள இடைவெளி.

விஞ்ஞான அறிவாலும், பகுத்தறிவாலும் விளக்கவியலாத இந்த இடைவெளிகளில் கடவுளைச்
சிக்க வைப்பது சற்றும் அறிவார்ந்த செயலல்ல! ஏனெனில், இடைவெளிகளாகத் தெரிபவை உண்மையில் இடைவெளிகள் அல்ல; அவை "பரிணாமத் தாவல்கள்" (Evolutionary Leaps)ஆகும்!  அவை இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவில் உள்ள இடைவெளிகள் அல்ல. மாறாக, அவை மானிட விஞ்ஞானத்தால், பகுத்தறிவினால் கடக்கமுடியாத இடைவெளிகள் ஆகும்! அதற்குக்காரணம், விஞ்ஞானத்தின் நெகிழ்வுத்தன்மையற்ற பொருண்மைவாத அணுகுமுறையில் அடங்கியிருக்கும் மட்டுப்பாடே ஆகும்!

வழிமுறையுடன் கூடிய மந்திரவாதம்!


இயற்கைக்கும், பரிணாமத்திற்கும் அடியோட்டமாக அமைந்திருக்கும் பேரறிவை மனிதனின் பகுத்தறிவு கொண்டு அளவிடவோ, ஆழங்காணவோ இயலாது! ஆம், இணைக்க இயலாதது என நாம் காண்பதை இணைக்கவும், சாத்தியமில்லாதது என நாம் எண்ணி மலைப்பதைச் சாத்தியமாக்கிடவும் வல்லது தான் பேரறிவு! இயற்கையிலும், அதனுள்ளார்ந்திருக்கும் அறிவிலும் யாதொரு இடைவெளியும் இல்லை! மாறாக, மனிதனின் விஞ்ஞான அறிவில்தான் இடைவெளிகள் உள்ளன.

விஞ்ஞானமானது இயற்கையில் பொதிந்துள்ள பல பிரமிப்புமிக்க ரகசியங்களைக் கற்றுத் தெரிந்துள்ளது, அதனாலேயே அது அனைத்து நிகழ்வுகளையும் புதிர்களையும் விளக்கிச் சொல்லிவிடும் என்ற முடிவிற்கு வந்துவிடலாகாது. அர்த்தம், சாரம், உணர்வு, வாழ்க்கை ஆகிய அம்சங்கள் பௌதீக-வேதியியல் மூலம் விளக்கம் பெறவோ, அல்லது உருவாக்கம் பெறவோ இயலாது! ஏனெனில், இப்பிரபஞ்சம் வெறும் விஞ்ஞான அறிவினால் மட்டுமே உருவானதல்ல; அதில் மந்திர வித்தையின் தொடுதலும் (A Touch of Magic!) இணைந்துள்ளது. அதனால்தான் அது மானிட விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் வசப்படாத முழுமையான அறிவாக, பேரறிவாகத் திகழ்கிறது! அப்பேரறிவை நாம் 'கடவுள்' எனக் குறிப்பிடலாமெனில், அவர் வெறும் ஒரு விஞ்ஞானி மாத்திரமல்ல, அவர் ஒரு மாயாவி (மந்திரவாதி) யும் ஆவார்! ஆம் அவருடையது வழிமுறையுடன் கூடிய மந்திரவாதம் (Magic with a Method) ஆகும்!

இயற்கையின் ஒழுங்கமைப்பில் சில பண்புகளை விஞ்ஞானத்தின் வழியாகப் புரிந்துகொள்வதில் இடைவெளி ஏற்படுகிறது என்பது உண்மையே; ஆகவே, அந்த இடைவெளிக்கான காரணம் 'இயற்கை கடந்த ஒன்று' (Supernatural) என்று காண்பது பொருத்தமானதே!

ஆயினும், 'Supernatural' என்பது பொருத்தமற்ற பதப்பிரயோகம் ஆகும். சரியான பொருத்தமான பதப்பிரயோகம், 'Meta-Natural', 'அதி-இயற்கை', அல்லது 'பேரியற்கை' என்பதே. ஏனெனில், மூல-மெய்ம்மையின் குறியீடாகக் கொள்ளப்படும் 'கடவுளை' எவ்வழியிலும் இயற்கையுடன் இணைத்துச் சொல்லமுடியாது; ஆனால் இயற்கையை பேரியற்கை எனும் கடவுளின் சுருங்கிய நிலையாக, ஒரு விபரீத (இயல்புக்கு மாறான, முரண்பாடான) நிலையாகச் சொல்லலாம்.

இயற்கையின் பெரும்பாலான விதிகள் (குறிப்பாக பௌதீகவியல் விதிகள்) குருட்டுத்தனமானவை, அதாவது எந்திரத்தனமானவை எனலாம். ஆனால், அவ்விதிகளை இயக்கும் பரிணாம விதிகள் முழுப் பார்வையும், தொலை நோக்கும், முற்-சிந்தனையும், துல்லியமும், தெளிவும் கொண்டவையாகும்!

ஆனால், விஞ்ஞானிகள் யாவரும் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் பௌதீக விதிகளால் செலுத்தப்படுவதாகவும், அனைத்தையும் பௌதீக விதிகளுக்குச் சுருக்கிப் புரிந்து கொள்ளமுடியும் எனவும், யாவற்றுக்கும் அடிப்படையானவை பௌதீக விதிகளே என்பதாகவும் நெடுங்காலமாக நம்பியும் அந்த நம்பிக்கையையே விஞ்ஞானத்தின் அதிகாரப்பூர்வ கொள்கைப் பிரகடனமாகவும் கொண்டுள்ளனர். உண்மை என்னவெனில், பௌதீக விதிகள் என்பவை பரிணாம விதிகளின் வெறும் கருவிகள் போன்றவையே தவிர அவை அடிப்படையானவையோ, முதன்மையானவையோ அல்ல!

அப்படியானால் பரிணாம விதிகள் என்பவை யாவை? மூல-மெய்ம்மையின் திரிபுதான் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும், பரிணாமத்திற்கும் காரணமாகியுள்ளது! நம்முன்னேயுள்ள ஒரே சவால், "எது மூலமெய்ம்மை" என்பதைக் கண்டுபிடிப்பது தானாகும்! உலக-மெய்ம்மையாகச் சுருங்கிப்போன மூல-மெய்ம்மை மீண்டும் பரிணாம வழிமுறை மூலமாக, தனது அசலான நிலைக்குத் திரும்புவதற்கு உரிய விழைவின் விதிகளே பரிணாம விதிகள் என இங்கு குறிப்பிடப்படுகிறது. அவற்றைக் கணிதக் குறியீடுகளாலும், சமன்பாடுகளாலும் விளக்குவது கடினம்!

அளவீடு (Quantification) செய்யப்படும் வகையிலமைந்த பருப்பொருள் போன்றல்லாமல், உயிர், உணர்வு ஆகிய அளவீடு செய்யவியலாத பண்புகள் பரிணாமத்தில் விளைந்துள்ளமையால் கணிதக் குறியீடுகளில் அல்லது  சமன்பாடுகளில் பரிணாம விதிகளைக் குறிப்பிடுவது கடினமாகும். முக்கியமாக, உயிர், உணர்வு, வாழ்க்கை, அன்பு, நட்பு,... போன்ற அம்சங்களை பௌதீக-வேதியியல் சொற்களில் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது! மேலும் புரிதல் என்பது சொற்களையும், மொழிகளையும் தாண்டிய விசேடக் குறியீடுகளால் ஆனது என்பதால், பொதுவாக நம் எல்லோர் கைகளிலும் உள்ள கருவியான மொழியையும், சொற்களையும் கொண்டுதான் நாம் அறிவைப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்! இதைவிட்டால் வேறு வழியில்லை!

ஈர்ப்புவிசை என்றால் என்ன என்று விளக்கிச் சொன்னால் நாம் புரிந்துகொள்ள முடியும்; அதையே விஞ்ஞானக் கணிதக் குறியீட்டு மொழியிலும் குறிப்பிடலாம். ஆனால் நாமனைவரும் தொழில் முறை விஞ்ஞானிகள் அல்ல; ஆகவே, சமன்பாடுகளையும், சூத்திரங்களையும் கொண்டுதான் நாம் உலகைப் புரிந்துகொண்டாக வேண்டுமென்கிற கட்டாயம் ஏதுமில்லை!

அடியும் முடியும் உணர்வே!


நாம் இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள அதில் எத்தனை அடிப்படை அணுத்துகள்கள் உள்ளன என்பதை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை! மாறாக, பிரபஞ்சம் என்பது அதன் சாரத்தில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் போதுமானது! பிரபஞ்சம் என்பது ஒரு அமைப்பு என்கிற வகையில், அது ஒரு பரிணாமக் களம் (Evolutionary Field) ஆகும்! ஒரு இயக்கம் என்கிற வகையில், அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கிச்செல்லும் பரிணாம இயக்கம் (Evolutionary Movement) ஆகும்! அதாவது, பொருண்மைத் தன்மையிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுத் தன்மையை (Consciousness) நோக்கி வளர்ந்து சென்று முடிவில், முழு-அறிவைப் பெறுகிறவகையிலான முழுமையான உணர்வுத் தன்மையை அடையும் ஒரு இயக்கம் ஆகும்!

அவ்வியக்கத்தில் நாம் சிற்றுணர்வு அல்லது அரை-உணர்வு பெற்ற ஒரு உணர்வு ஜீவி என்ற நிலையில் உள்ளோம்; அதிலிருந்து உயர்ந்து முழு-உணர்வு அல்லது பேருணர்வு நிலையை அடைவதுதான் நம்முடைய, நம் ஒவ்வொருவருடைய பரிணாம இலக்கும், நம்முடைய வீடுபேறு, முக்தி, மோட்சம், ஞானமடைதல், முழுமையடைதல்,... என்றெல்லாம் குறிப்பிடப்படுகிற ஒப்பற்ற நிலையாகும்!

ஒருவகையில், இயற்கை விதிகள் என்பவை பரிணாம விதிகளின் கருவிகள் என்பதால், அவற்றையும் நாம் பரிணாம விதிகளின் கருவிப் பூர்வமான விதிகளாகக் கொள்ளலாம். இவ்விடத்தில் நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ளவேண்டியது பரிணாமம் தன் இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நிகழ்வுமுறையில் ஒவ்வொரு கட்டத்திலும் புதுவகையான விதிகள் தோன்றிச் செயல்பட்டு பரிணாம வளர்ச்சியை நிகழ்த்துகின்றன. பௌதீகத் தளத்தில் பௌதீகவியல் விதிகளும், உயிரியல் தளத்தில் உயிரியல் விதிகளும், உணர்வியல் தளத்தில் உணர்வியல் விதிகளும் தோன்றிச் செயல்படுகின்றன. உயர்-தளத்து வெளிப்பாடுகளை கீழ்த் தளத்து விதிகளைக் கொண்டு புரிந்து கொள்ள இயலாது.

வெறுமனே பிரபஞ்சத்தின் பொருண்மையான பௌதீக இயக்க விதிகளையும் (Laws Of Motion), வெப்பவியக்கவிசையியல் விதிகளையும் (Laws Of Thermodynamics), வெறும் 12 அடிப்படைத் துகள்களையும், 4 அடிப்படை விசைகளையும் கொண்டு இந்தப் பௌதீகப் பிரபஞ்சத்தையும்கூட புரிந்து கொள்ள இயலாது! பிறகெப்படி, உயிரியல் பிரபஞ்சத்தையும், உணர்வியல் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்வது? வெறும் ஒரு ஸெல் உயிரியான அமீபா என்பது இப்பௌதீகப் பிரபஞ்சத்தினுள் எழுந்த இன்னொரு பிரபஞ்சம் என்பதையோ, அல்லது அது இப்பௌதீகப் பிரபஞ்சத்தின் ஒரு உயர் நிலை அவதாரம் என்பதையோ, நம் விஞ்ஞானிகள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்? இல்லை, அவர்களுடைய விஞ்ஞான சட்டகத்திற்குள் (Paradigm) அதற்கு இடமில்லை!

தமிழின் 12 உயிரெழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்களைத் தெரிந்துகொண்டால் போதும், அவற்றைக் கொண்டு திருக்குறள் உணர்த்துகிற மெய்ப்பொருளை அறிந்துகொள்ளலாம் எனும் வீண் நம்பிக்கையைப் போலவே  இப்பிரபஞ்சத்தை வெறும் 12 அடிப்படைத் துகள்களையும், 4 அடிப்படை விசைகளையும் கொண்டு புரிந்து கொள்ள இயலும் என்பதும் பயனற்ற முயற்சியே! ஏனெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் வெறும் பருப்பொருளால் ஆனது மட்டுமல்ல; மாறாக, பருப்பொருள், உயிர், உணர்வு எனும் மூன்று தனித்துவமான பண்புகளைக் கொண்ட மூன்றடுக்கு பிரபஞ்சமாகும்! ஆக, பருப்பொருளின் பௌதீகவியல் விதிகளைக்கொண்டு, பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி நிலைகளான உயிர், உணர்வு ஆகிய பண்புகளைப் புரிந்துகொள்வது சாத்தியமற்றதாகும்!

இப்பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான அம்சம் உணர்வு தானே தவிர, நம் பௌதீகவியல் விஞ்ஞானிகள் சொல்வது போல பருப்பொருள் (அதாவது, அடிப்படை அணுத்துகள்கள்) அல்ல! இன்னும் பிரபஞ்சத்தின் இறுதியான அம்சமும் உணர்வுதான்! ஆம், அடியும், முடியும் உணர்வு தானாகும்!  பருப்பொருள் என்பது வெறுமனே அடியோட்டமான உணர்வுப் பரிணாமத்திற்கு வடிவம் தருகின்ற, சேவை புரிகின்ற ஊடகம் (Medium) மாத்திரமே!

பௌதீக விஞ்ஞானமானது (Physics)அனைத்தின் ஒருமையை பிரபஞ்சத்தின் பிறப்புக் கணத்தில் பருப்பொருளின் அடியாழத்தில், அடிப்படை விசைகளின் ஒருங்கிணப்பில் காண முயல்கிறது. ஆனால், மெய்யியல் தத்துவமானது (Metaphysics)அனைத்தின் ஒருமையை மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில், அதாவது முழு-அறிவில் காண்கிறது! ஆம், பிரபஞ்சத்தின் ஒருமையானது அதன் பொருண்மையில் (Materiality) அடங்கியிருக்கவில்லை! மாறாக, பிரபஞ்ச பரிணாம இயக்கம் மனித உணர்வின் வழியாக எட்டவிருக்கும் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் அடையவிருக்கும் முழு-அறிவு நிலையில்தான் அடங்கியிருக்கிறது!

அறிவே பிரதானம்


விஞ்ஞானிகள் நம்மை நம்பவைத்துக் கொண்டிருப்பதுபோல, நிறையும், சக்தியும் மட்டுமே இப்பிரபஞ்சத்தின் அடிப்படை அம்சங்கள் அல்ல; மாறாக, தகவல் (Information) எனும் அம்சமும் மிக அடிப்படையானதே. தகவல் என்பதை நாம் அறிவின் கூறுகளாகவும், அறிவு என்பதை உணர்வின் கூறுகள் அல்லது வெளிப்பாடாகவும் புரிந்துகொள்ளவேண்டும். ஆம், தகவல் என்பதை உணர்வு எனவும், அல்லது அறிவு எனவும், இடத்திற்குத் தகுந்தாற்போல் கொள்ளவேண்டும். தகவல் என்பது அடிப்படையானது என்று சொல்வதைக் காட்டிலும், அறிவு, மற்றும் உணர்வின் கூறுகளாக அது தொடக்கத்திலிருந்தே இப்பிரபஞ்சத்திற்கு இணையானதொரு கண்ணுக்குத்தெரியாத ஒரு பிரபஞ்சமாகத் திகழ்கிறது எனலாம். உணர்வு (Consciousness) என்பது அதன் அடிமட்டத்தில், தகவல்-முறைப்படுத்துதல் (Information- Processing) என்பதேயாகும்!

தனது பரிணாம வளர்ச்சியின் எவ்வொரு கட்டத்திலும், பிரபஞ்சம் என்பது பிரபஞ்ச-அறிவுத் தொகுப்பிலிருந்து (Universal Knowledge-Pool)தகவல்களையும், அறிவையும் பெறக்கூடிய, பெற்று மேன்மேலும் பரிணாம வளர்ச்சி காணக்கூடிய, தொடர்ந்து வளர்கின்ற ஓர் அமைப்பே (System), அதாவது, கடினப் பொருள் (Hardware) போன்றது ஆகும்! வளர்ந்து, இறுதியில் முழு-அறிவை அடைந்து முழுமையடைவதே அவ்வமைப்பின் இலக்கு ஆகும்! பரிணாம ரீதியாக இறுதியில் எட்டப்படவிருக்கும் முழு-அறிவுதான் தொடக்கத்திலிருந்தே பரிணாமத்தை வழிநடத்தி வந்துகொண்டிருக்கிறது!

அறிவு என்பது, பிரபஞ்ச-அறிவுத் தொகுப்பிலிருந்து (Universal Knowledge-Pool), பரிணமிக்கும் பிரபஞ்சத்தின் சுய-அமைப்பாக்கக் கட்டமைப்புகளின் சக்திக்கும், கிரகிக்கும் தன்மைக்கும், தேவைக்கும் ஏற்ப நேர்விகிதத்தில் அடையக்கூடியதாக அமைந்ததாகும்! பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒரே ஒரு மூல அணு (பரமாணு) தான் தோன்றியது என்றால், அதனால் கிரகிக்கக்கூடிய திறனுக்கும், உடனடியான அதன் பரிணாம வளர்ச்சிக்கும், அதாவது, மடிப்பவிழ்தலுக்கும் (Unfolding) உரிய சொற்ப அளவு தகவல் (=அறிவு=உணர்வு) மட்டுமே அது கொண்டிருக்கும்! அதே நேரத்தில், அந்த முதல் அணுவானது தொடக்கத்தில் எவ்வளவு சிறியதாயிருப்பினும், மிகவும் குறைந்த அளவே பொருண்மையை  (நிறையும், சக்தியும்) கொண்டிருப்பினும்; அந்த நிலைக்கேயுரிய தகவல் கூறுகளைக் குறைவாகக் கொண்டிருப்பினும், அந்த மூல அணுவால் அளவில்லா சக்தியையும் நிறையையும்; அளவில்லா தகவல்களை (அறிவையும், உணர்வையும்) அடையப்பெறுவதற்குரிய (To Access) உட்பொதிவை (Potential), உள்ளுறையாற்றலைக் கொண்டதாகும்!

தகவல் என்றால் என்ன? தகவல் என்பது மனித ஜீவியைப் பொறுத்தவரையில், உயிர்-வாழ்தலின் பொருட்டு, தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் வகையில், புற உலகுடன் (இயற்கையுடன்) மேற்கொள்ளும் பரஸ்பர வினையாற்றுதல் மற்றும் பரிமாற்றத்திற்கு உதவும் அறிபொருள் கூறுகள் (செய்திக்கூறுகள்) ஆகும். தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பிறகு, தனது வாழ்வை அர்த்தப்படுத்தும் பொருட்டு, தன்னை உணர்ந்து முழுமைப்படுத்திக் கொள்வதற்கான, அதாவது உண்மையை அறிவதற்காக, உயர்-உணர்வுத் தளங்களுடன் தான் மேற்கொள்ளும் பரிமாற்றத்திற்கான புரிதல் கூறுகள்தான் தகவல் என்பதாகும்!

தகவல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, நிகழ்வைப் பற்றிய விபரங்கள் மட்டுமல்ல; மாறாக, அது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் (பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சி நிலைகளையும்) பற்றிய விபரங்களையும், அதாவது, முழு-அறிவையும் சுட்டுகின்றது. ஏனெனில், முழு-அறிவுதான் பிரபஞ்சத்தின் இலக்கு! முழு-அறிவை எட்டிப் பிடிக்கும் வழிமுறையே பரிணாமம்! இறுதி மெய்ம்மை என்பது முழு-அறிவு அன்றி வேறில்லை! முழு-அறிவு தனக்குத்தானே ஒளிந்து தன்னையே மீள் கண்டுபிடிப்பு செய்யும் விளையாட்டுக்கான கருவி, அல்லது உபாயம் தான் பிரபஞ்சம்! முழு-அறிவு அல்லது பேரறிவு தன்னை ஒளித்துக் கொண்டதால் இந்த உலகம், பிரபஞ்சம் தோன்றியது! பிரபஞ்சம் என்பது அடிப்படையில் அணுத்துகள்கள் தான், அதாவது, தகவல் கூறுகள்தான்!

தகவல் கூறுகள் இருந்தால் அவ்விடத்தில் கணக்கிடுதல் (computation) இருக்கும். அடுத்து ஒரு பிரபஞ்சம் நிறைய அணுத்துகள்கள்/தகவல் கூறுகள் இருந்தால் அவை தகவல்-முறைப்படுத்துதலில்
(information-processing)ஆழ்வது தவிர்க்க இயலாது! ஆக, ஒரு கணக்கிடும் பிரபஞ்சம் (computational universe) தவிர்க்க முடியாத அவசியமாக  மிகு-சிக்கல் அமைப்புகளை (complexity)உருவாக்கிடும். அதே வேளையில், வெறும் கணக்கிடுதலோ, அல்லது, தகவல்-முறைப்படுத்துதலோ, உயிர்-ஜீவி போன்ற மிகு-சிக்கல் அமைப்பை உருவாக்கிடாது! இவையெல்லாமே வெறும் பரிணாமக் கருவிகள் மாத்திரமே!

மேலும், தகவல், அல்லது அறிவு என்பது சில விஞ்ஞானிகள் கூறுவதற்கு மாறாக, அது  பருப்பொருள் சார்ந்தது ( physical) மட்டுமல்ல; மாறாக, அது பருப்பொருளையும் கடந்தது, அதாவது அதன் அசலான இருப்பிடம் பேரியற்கையே  (Meta-physicical)ஆகும். ஆம், தகவல் அல்லது அறிவு என்பது வெளி-காலத்தின் உலகிலும், காலமில்லா உலகிலும் செயல்படக்கூடியதாகும்!

ஒரு மரபணு (DNA) என்பது இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் மிகு-சிக்கலான அமைப்பு ஆகும். ஆனால், பரிணாமம் ஏன் குறை-சிக்கலான நிலைகள்/அமைப்புகளிலிருந்து மிகு-சிக்கலான நிலைகள்/அமைப்புகளை நோக்கிச் செல்லவேண்டும்? பருப்பொருளின் பிரபஞ்சத்தில் உயிர்ஜீவிக்கு என்ன வேலை இருக்க முடியும்? அடுத்து ஒரு மரபணுவைவிட பெரிதும் மிகு-சிக்கலான ஒரு அமைப்பு என்றால் அது மனித மூளையாகத்தான் இருக்க முடியும். பிரபஞ்சம் ஏன் எளிய அமைப்புகளிலிருந்து, மிகு-சிக்கலான அமைப்புகளாக வளர்ந்தெழ வேண்டும்? அவ்வழியாக பிரத்யேகமாக என்ன சாதிக்கப்படுகிறது? ஆம், மிகு-சிக்கலான அமைப்புகள் வழியாக இப்பிரபஞ்சம் மேன்மேலும் அறிவைப் பெறவும், அறிவில் உயரவுமே பிரயத்தனப்படுகிறது!

அறிவு என்பது முழுமையாக இப்பிரபஞ்சத்திற்கு இணையான கண்ணுக்குப் புலப்படாத (Invisible) ஒரு பிரபஞ்சமாகத் திகழ்கிறது என்றாலும், பருப்பொருளாலான வெளி-காலத்தின் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை அறிவு என்பது ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையாகவே விளங்குகிறது.
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் வெவ்வேறு அறிவு மட்டத்தின் நிலைகளே, வடிவங்களே. ஒரு அணுத்துகள் என்பது அறிவின் மிக மிக மிகச் சிறிய கூறினை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு அமீபா (ஒரு செல் உயிரி) புலன்வழி வெறும் அறிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதனைத்தவிர பிற அனைத்து உயிரினங்களும் புலனறிவின் ஜீவிகளே! மனிதஜீவியானவன் சுய-உணர்வின் முலம் பகுத்தறிந்து பெறும் அறிவைப் பிரதிநிதித்துவம் செய்பவனாகவும், முடிவில் அனைத்தையும் தொகுத்தறியும் முழு-உணர்விற்கு உயர்ந்து அனைத்தறிவையும் தொகுத்தறிந்து முழு-அறிவில் முழுமையடைபவனாவான்!

ஆகவேதான், பெருவெடிப்பில் தொடங்கிய பிரபஞ்சமானது, 1500 கோடி ஆண்டுகள் நெடிய பரிணாமப் பிரயத்தனத்தின் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி நிலையாக, மிகு-சிக்கல் அமைப்பான மனித-மூளையை வந்தடைந்துள்ளது. மூளையின் ஒரு தனிச் சிறப்பான இயக்கம் என்னவெனில், அது சுய-உணர்வின் இருக்கையாகச் (Seat of Self-Consciousness)செயல்படுவதுதான்! அதாவது, மனித-மூளை என்பது ஒரு கணினியைப் போலவோ, அல்லது இப்பிரபஞ்சத்திலுள்ள வேறு எவ்வொரு பருப்பொருள்-அமைப்பைப் போலவோ உணர்வற்ற நிலையில் தகவல் முறைப்படுத்துதலை (Information Processing) மேற்கொள்வதில்லை; மாறாக, உணர்வுடன், உணர்வின் மேற்பார்வையில் வெறும் தகவல் கூறுகளை மட்டுமல்லாமல், நேரடியாக அறிவு-முறைப்படுத்துதலை (Knowledge-Processing)மேற்கொள்கிறது!

அறிவு இல்லாமல் எதுவுமில்லை! 


அறிவு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை! அறிவு இல்லாமல் எதுவும், ஒரு அணுவும் கூடத் தோன்றமுடியாது! வெற்றிடத்திலிருந்து இப்பிரபஞ்சம் தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது; அந்த வெற்றிடத்தையும் அறிவு தான் தோற்றுவித்திருக்க வேண்டும்! ஆம், சூன்யத்திற்கும் முந்தையது அறிவு!

அறிவை புதிதாக நாம் வளர்க்கவோ, உருவாக்கவோ முடியாது! அனைத்து அறிவும் ஏற்கனவே பிரபஞ்ச அறிவுத் தொகுப்பில் உள்ளது; அத்தொகுப்பிலிருந்து அறிவை அடையப்பெறுவதொன்றே நமது சவால் ஆகும். விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் புதிதாக ஒரு சிறுதுளி அறிவையும்கூட இப்பிரபஞ்சத்துடன் சேர்க்கப்போவதில்லை!

ஆனால், இயற்கையில், பிரபஞ்சத்தில் ஏற்கனவே பொதிந்திருக்கும் அறிவைத் தோண்டி எடுக்கவே எண்ணற்ற விஞ்ஞானிகளும், எண்ணற்ற விஞ்ஞானத் துறைகளும் தடுமாறிக் கொண்டிருக்கையில், இவ்வளவு அறிவும் இயற்கையில், இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு எங்கிருந்து வந்தது?

பிரபஞ்சத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு அதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம்! ஏனெனில், 'பிரபஞ்சம்' என்பது அதனைக் கடந்த வேறொன்றின் குறியீடு ஆகும். அந்த வேறொன்று முழு-அறிவு ஆகும்; அதை நாம் பேரறிவு, பேரிருப்பு அல்லது பேருணர்வு எனவும் காணலாம்! முழு-அறிவு என்பது முழுமையானதொரு இறுதி உணர்வு நிலையே ஆகும்! பிரபஞ்சம் என்பது வாலிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்ந்து தலையில் முடியும் ஒரு வினோத விலங்கு ஆகும்! தன் நிஜத்தைத் தேடும் நிழல் இப்பிரபஞ்சம்!

இப்பிரபஞ்சத்திலேயே மிக முக்கியமான அம்சம் என்பது பௌதீக விதிகளோ, சக்தியோ, ஆற்றலோ, ஏன் இப்பிரபஞ்சமோகூட அல்ல! மாறாக, அறிவு, முழுமையான அறிவு மட்டுமே அதிமுக்கியமான அம்சம் ஆகும்! ஏனெனில், பௌதீக விதிகள், சக்தி, ஆற்றல், இன்னபிற அம்சங்களனைத்தையும், இன்னும் மனிதனையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அறிவை அடைவதற்கான கருவிகள் மாத்திரமே ஆகும்! ஆம், மனிதனும், அவனது உணர்வும் இறுதியானதல்ல; மனிதன் அடையக் கூடிய, ஒவ்வொரு மனிதனும் எவ்வாறேனும் அடைந்திட வேண்டிய முழு-அறிவு, அல்லது, பேரறிவு மட்டுமே இறுதியானது!

மா.கணேசன் / நெய்வேலி / 21-09-2018
------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, 21 June 2018

நானும் புத்தகங்களும்



ஆம், நான் வாசிக்க விரும்பிய புத்தகங்களை எப்படியாவது வாங்கி 
வாசிக்காமல், எனது சொந்த நூலகத்தில் சேர்த்துக்கொள்ளாமல் இருந்ததே
யில்லை! இன்றளவும் என்னால் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும், 
அவ்வப்போது காண்கின்ற புத்தகக் கடைகளிலும், புத்தகங்களை வாங்காமல் 

இருக்க முடிந்ததில்லை! அதே நேரத்தில் கண்ணில் படுகிற எல்லாப் புத்தகங்
களையும் நான் வாங்குவதுமில்லை, வாசிப்பதுமில்லை. மாறாக மிகக்கறாரான 
வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே வாங்குகிறேன், 
வாசிக்கிறேன்!

புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு அலாதியானது! புத்தகக் 
கண்காட்சித் திடலில் நுழைந்ததும் நான் வேறு ஒரு ஆளாக மாறிவிடுவது 
தவிர்க்கவியலாது நிகழ்ந்து விடுகிறது! நான் புத்தகங்களைத் தீயாக இறங்கித் 
தேடுகிறேன்; புத்தகங்களும் என்னைத் தேடுவதை நான் எண்ணற்ற முறை 
உணர்ந்துள்ளேன்! பல சமயங்களில், புத்தகங்கள் என்னை அழைக்கவும் 
செய்கின்றன! 

தத்துவம், மெய்யியல் தொடர்பாக நான் எதிர்பார்க்கும் தரத்தில், அதாவது 
சிந்தனைக்குச் சவாலாக அமையும் புத்தகங்கள் தற்போது கிட்டத்தட்ட இல்லை 
என்றே சொல்லலாம்! எனினும் நான் தேடிக் கொண்டே தான் இருக்கிறேன்! 
இதில் ஒரு ஆச்சரியகரமான விடயம் என்னவென்றால், சில பழைய காலத் 
தத்துவஞானிகளிடமும் சிந்தனையாளர்களிடமும் நான் எதிர்பார்க்கும் ஆழமான 
பார்வைகள், அதாவது மிகச் சாரமான உண்மைகளை உள்ளடக்கிய 
உட்-பார்வைகள் எதிர்பாராதவிதத்தில் தேடலின் ஊடே அவ்வப்போது வெளிப்
படுவதுண்டு! 

நம்மில் பலருக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வதில் கூட தெளிவு இல்லை! 
இதற்கு நம்முடைய சொந்தத் தெரிவுகளும், சாய்வுகளும், துண்டுபட்ட பார்வை
களும் தான் காரணம்! ஒரு குறிப்பிட்ட தேவைக்காக, நோக்கத்திற்காக ஒரு 
குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிப்பது அவசியமே. 
ஆயினும், அனைத்தையும் தழுவிய ஒரு முழுமையான உலகப் பார்வை 

மற்றும் வாழ்க்கைப் பார்வையை வெளிப்படுத்துகிற புத்தகங்களைத் தெரிவு
செய்வது மிகமிக முக்கியமாகும். வாழ்வின் பகுதிகள் எவ்வாறு எவ்விடத்தில் 
முழுமையானதொரு சித்திரத்தில் பொருந்துகின்றன என்பது தெரியாமல் 
பகுதிகளை மட்டும் கட்டித்தழுவிக்கொண்டிருப்பது வாழ்க்கையை முழுமையாக 
வாழ்வதற்கு உதவிடாது!

எனக்குத் தெரிந்தவரை வெகு சிலரே புத்தகங்களை முழுமையாக வாசிக்கிற
வர்களாக இருக்கிறார்கள்! எண்ணற்ற பலர் இன்னும் வாசிக்கக் கற்றுக்கொள்ள
வேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்! பலர் புத்தகங்களை வாங்கு
வதோடு சரி, இப்படியும் அப்படியுமாக புரட்டிப்பார்ப்பது தவிர வாசிப்பதே
யில்லை! சிலர் புத்தகங்களை முன்னட்டையிலிருந்து பின்னட்டைவரை ஒரு 
எழுத்துகூட விடாமல் வாசித்து முடித்து விடுவர்; ஆனால், எதையும் புரிந்து
கொள்வதில்லை. பலர் தாங்கள் வாசித்துத் தெரிந்து கொண்டவற்றை புரிந்து 
கொண்டுவிட்டதாகவும், அவற்றைத் தங்களுடைய அறிவாகவும் பாவித்துக் 

கொள்ளும் விபரீதத்தில் சிக்கிக்கொண்டுவிடுகின்றனர்! 

வாசிப்பு என்பது ஒரு வேள்வியைப் போன்றிருக்க வேண்டும்! தன்னை 
முழுமையாகத் திறக்கும் ஒருவனிடம் மட்டுமே வாசிப்பு நிகழும்! சிந்தனை 
ரீதியாகத் தொடர்ந்து தன்னைக் கடந்து வளர்ந்து செல்லும் பெருவிருப்பம் 
கொண்ட ஒருவனுக்கு புத்தகங்களைப் போன்ற சிறந்த சாதனமும் துணையும் 
வேறில்லை! புத்தகங்கள் எண்ணற்ற சிந்தனைச் சாத்தியங்களைத் திறந்து
விடுகின்றன. 

ஒருவன் வாசிக்கும் ஒரு புத்தகம் அவனை அடியோடு புரட்டிப்போட்டு 
மாற்றிடும் வகையில் இல்லையென்றால் அந்தப் புத்தகம் வீணே! அல்லது 
அவனது வாசிப்பு குறைபாடுடையதாக இருக்கிறது! முக்கியமாக, புத்தகங்கள் 
ஒருவருடைய சிந்தனைக்கு மாற்று (பதிலீடு) அல்ல! சிந்திக்காத மனிதனுக்கு 
புத்தகங்கள் வெறும் சுமையே; சிந்திப்பவனுக்கு அவை (மேலதிகப்படியான) 

சிறகுகள்! புத்தகங்கள் ஒருவன் அடையவேண்டிய சிந்தனைச் சிகரங்களைச் 
சுட்டுபவையும், சில சமயங்களில் ஒருவன் கடந்த மைல்கற்களைக் 
குறிப்பவையும் ஆகும்! 

உலகின் இறுதியான புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை! அப்படியான ஒரு 
புத்தகம் ஒருபோதும் எழுதப்படவும் இயலாது! அதே சமயம் அப்படியான பல 
புத்தகங்கள் எழுதப்பட்டு கடந்து செல்லப்பட்டுவிட்டன! எனினும் உலகின் 
இறுதியான புத்தகத்தையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்; அல்லது எழுதிக்
கொண்டிருக்கிறேன்! 

மா.கணேசன். 22-06-2018
க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் 

Tuesday, 15 May 2018

குழம்பிய அரசியல் குட்டையில் ....





✦முன்னொரு காலத்தில் "தமிழகம்" "தமிழ் நாடு" எனும் ஒரு நாடு இருந்தது!

தமிழ்நாடு என்பது ஒரு புறம்போக்கு இடப்பரப்பாகத்தான் பிற மாநிலத்தவர்
களும், பிறமொழிக்காரர்களும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்!

✦தமிழ் நாட்டில் திடீரென அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று
  சொல்லப்படுவது உண்மையா?

இதற்கு பதில், "ஆம்", "இல்லை" இரண்டும்தான்! ஆம், தமிழக அரசியலில்
உண்மையிலேயே வெற்றிடம் ஏற்பட்டுள்ளது! ஆனால், அது இன்று, நேற்று
ஏற்பட்டதல்ல, மாறாக, அந்த வெற்றிடம், ஐம்பது, அறுபது ஆண்டுகாலமாக 
உண்மையான ஒரு மக்கள் நேசருக்காக, வாழ்க்கையை உள்ளும் புறமும்
அறிந்த உண்மையான அரசியல் ஞானமுள்ள ஒரு அசலான மனிதருக்காகக்
காத்திருக்கிறது!

"வந்தாரை வாழ்விக்கும் தமிழகம்" என்பது ஒரு வஞ்சப்புகழ்ச்சியணியே தவிர
மற்றபடி, தமிழர்கள் என்றால் ஏமாளிகள், இளிச்சவாயன்கள், தங்களுக்குள்
ஒற்றுமையில்லாதவர்கள் என்பதை பிற மாநிலத்தவர்கள் அனைவரும் நன்கு
அறிவர்!

தமிழர்களின் குருட்டு விசுவாசத்திற்கு எல்லைகளே கிடையாது! எவராவது
இங்கு வந்து நாமெல்லாம் 'திராவிடர்கள்' என்று சொன்னால் உடனே அவர்
பின்னால் அணி திரண்டுவிடுவர்! இன்னொருவர் வந்து, நாம் எல்லோரும்
'இந்துக்கள்' என்று சொன்னால் உடனே அவர் பின்னே சென்று விடுவர்!
வேறொருவர் வந்து "பிற்போக்கு திராவிடர் முன்னேற்றக்கழகம்" என்று
புதிதாக ஒரு கட்சியை அறிவித்தால் போதும் உடனே அக்கட்சியில் சேர்ந்து
கொள்வர்! ஆனால், நாமெல்லோரும் தமிழர்கள் என்று சொன்னால் உடனே
அவர்கள் ஏதோ தகாத சொல்லைச் சொல்லிவிட்டதுபோல மிரண்டு போவர்!

✦தமிழர்களிலிருந்து தலைமைப்பண்பு கொண்ட தரமான அரசியல்தலைவர்கள்
  ஏன் உருவாகிடவில்லை!

தமிழர்கள் என்றால் 'செம்மறியாட்டுக்கூட்டம்" என்பதே அதன் பொருள்! அவர்
கள், வழிநடத்தக்கூடியவர்களாக அல்லாமல் எளிய வாழ்க்கைத் தேவைகளால்
வழிநடத்தப்படக்கூடிய எளியவர்களாக வாழ்ந்து வந்த உழைப்பாளிகள்! சேர,
சோழ, பாண்டிய அரசர்கள் காலத்திற்குப்பிறகு, குடியரசு இந்தியாவில், தமிழர்
களை விட பிற மொழிகளைச் சேர்ந்தவர்களே அரசியலில் தலைவர்களாகத்
தம்மை முன்னிறுத்திக்கொண்டு வந்துள்ளனர்! இன்றளவும் தமிழ் நாட்டு
அரசியலில் பிரவேசம் செய்யும் புதியவர்களில், குறிப்பாக தமிழினமல்லாத
பிற மொழியினத்தவர் எவரும் தலைவராகத்தான் தம்மை முன்னிறுத்த
முனைகிறாரே தவிர; அதாவது, ஆட்சியதிகாரத்தை பிடிக்கவே விரும்புகிறாரே
தவிர மக்களுக்கு உண்மையாக சேவை செய்யவேண்டுமென்ற சீரிய நோக்கத்
தினால் அல்ல!

இத்தகைய பலருக்கு 'அரசியல்' என்றாலே, அது, "ஆட்சியதிகாரம்" என்பதாகவே
காதில் ஒலிக்கிறது! ஏதோ ஆட்சியதிகாரம் இருந்தால் மக்கள் நலன்களனைத்
தையும் பூர்த்தி செய்துவிட்டுத்தான் ஓயப் போவதைப்போல முழங்குகின்றனர்
தற்போது புதிதாக அரசியலுக்கு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும்!

✦தமிழர்களை ஒருங்கிணைப்பது சாத்தியமா?

தமிழர்கள் இயல்பாகவே அகந்தையற்றவர்கள்; இதன் அர்த்தம் ஏதோ அவர்கள்
எல்லோரும் ஞானிகள், உயர்பேரறிவாளர்கள் என்பது அல்ல; மாறாக, சமீப
காலங்களில் தான் அவர்களுக்கு 'அகந்தை' துளிர்க்கத் தொடங்கியுள்ளது!
ஆகவே அவர்களால் யாதொரு கருத்தொற்றுமை யையும் எட்டவியலாது!
மிகவும், அடிப்படையான, யாவருக்கும் நலமளிக்கும் ஒரு பொதுவான முன்
வைப்பை, முடிவை, கருத்தாம்சத்தைச் சொன்னாலும், அதை உடனே
ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயத்தையும், கருத்தையும் சொல்லி எதிர்க்
கவும், மறுக்கவும் செய்வர்! எவ்வாறு அகந்தை துளிர்க்காத காலங்களில்
தமிழர்களை அடிமைப்படுத்துவது எளிதாக அமைந்ததோ, அவ்வாறே தற்போது
அகந்தை துளிர்த்தபிறகு அவர்கள் கருத்தொற்றுமை கொள்ளவியலாமல் பிரிந்து
நிற்கும் நிலையில் அவர்களை ஆள்வது எளிது!

தமிழனின் பிரச்சினை இதுதான், அதாவது தமிழன் என்பவன் தனது மொழியி
லிருந்து வேறானவனாக இல்லை; ஆகவே, அவனிடம் மொழிப்பற்றும்
இல்லை, மொழி வெறியும் இல்லை! ஆகவே, தமிழனை மொழிப்பற்று கொள்
ளச் செய்வது கடினம்! தமிழனைப்பொறுத்தவரை,

✦திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?

இக்கேள்வி ஒன்றும் 'பில்லியன் டாலர்' கேள்வியல்ல, என்றாலும், அரசியல்
என்பது பெரிதாக முதலீடு ஏதும் இன்றி பல கோடிகளைச் சுருட்டுவதற்கும்,
வருமானத்திற்கு மேலாகச் சொத்து சேர்ப்பதற்கும் மிகச்சுலபமானதொரு வழி
யாகும்! நடிகர்களைப் பொறுத்தவரை, "அரசியல்வாதி" அல்லது, "அரசியல்
தலைவர்" என்பது ஒருவகைக் "குணச்சித்திர வேடம்" தானே தவிர வேறல்ல!
மேலும் நம் மக்களுக்கு 'அரசியல்' என்பதும் 'சினிமா' என்பதும் ஒன்றுதான்!
இரண்டு இடங்களிலும் அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக, பார்வையாளர்
களாக மட்டுமே இருக்கப்போகிறார்கள்! ஒரு திரைப்படத்தை காசு கொடுத்து
சீட்டு வாங்கி இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் மட்டும் பார்க்கப்படு
கிறது! ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆட்சி எனும் அரசியல்
நாடகத்தை, (பணத்தை வாங்கிக்கொண்டு) வாக்குச் சீட்டை அளித்து தேர்ந்
தெடுத்த பிறகு ஐந்து வருடங்கள், என்ன நடந்தாலும்; இன்பமோ, துன்பமோ,
செயல்பாடற்றதோ, கொடுங்கோலோ, சகித்துக்கொண்டு வேடிக்கைபார்ப்பதைத்
தவிர மக்களால் ஒன்றுமே செய்யவியலாது!

'சினிமா' நடிகர்களைப்பொறுத்தவரையில், குறிப்பாக, திரைப்படங்களில் கதா
நாயகர்களாகவே நடித்துப் புகழும், பிரபல்யமும் பெற்றவர்களால், அரசியலில்
மக்களுக்குச் சேவை செய்பவர்களில் ஒருவராக இருக்க முடியாது; மாறாக,
அரசியலிலும் அவர்கள் கதா நாயகர்களாகத்தான், அதாவது தலைவர்களாக
மட்டுமே திகழ விரும்புவர்!

அடுத்து, எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது ஜனநாயகத்
தின் சாபக்கேடு ஆகும்! இங்கும் எங்கும் சரி, அரசியல்கட்சிகள் என்பவை
வியாபார நிறுவனங்களைப்போலவே ஸ்தாபிக்கப்பட்டு தமது வியாபாரத்தை

நடத்திக்கொண்டிருக்கின்றன! ஆகவே ஏற்கனவே ஸ்தாபிதமான பெரிய கட்சி
களே தொடரலாம் என்பது இன்னும் கேடானது! அரசியல் என்பது எவருக்கும்

குடும்பத்தொழிலாகவோ, நிரந்தரத்தொழிலாகவோ இருக்கமுடியாது; அது ஜன
நாயக விரோதமானது!

அடுத்து, புதிதாக அரசியலில் நுழைபவர்களை, அவர்கள் 'சினிமா' நடிகர்களா
யினும், வேறு எவராயினும் எல்லோருமே வரவேற்பதாகச் சொல்லுவார்கள்;
சிலர், குறிப்பாக, ஏற்கனவே ஸ்தாபிதமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
மறைமுகமாக எதிர்க்கவும், கடுமையாக விமர்சிக்கவும் செய்வார்கள்! இதற்குக்
காரணம் அவர்களுடைய வியாபாரத்திற்குப் போட்டியாக முளைத்தெழுபவர்கள்
பெரும் அச்சுறுத்தலாக அமைவது தான்! ஏனெனில், புதிதாக அரசியலுக்கு
வருபவர்கள் ஓட்டுக்களைப்பிரித்து தேர்தலை பலமுனைப்போட்டியாக மாற்றி
விடுவார்கள்! இது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமே ஆபத்தானதாகும்!
அதே வேளையில், இந்த இரண்டு கட்சிகளுமே மீண்டும் மீண்டும் மாறி மாறி
ஆட்சிக்கு வருவதென்பது மக்களுக்கு பேராபத்தானதாகும்! ஜனநாயகத்தையும்,
மக்களையும் காப்பாற்றவேண்டுமானால், எவ்வொரு அரசியல்கட்சியும் நிரந்தர
அமைப்பாக நீடிப்பதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!

✦கமலின் அரசியல் : கமலுடைய அரசியலில், நடிகரும் அவரே, இயக்குனரும்
அவரே! அவருடைய அரசியல் முறையை ஒருவகை "தொழில் நுட்ப முறை"
(Technocracy) எனலாம்! எவ்வாறு ஒரு திரைப்படம் எடுப்பதற்கு பல்வேறு
தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்களோ, அவ்வாறே, அவருடைய
அரசியலும் பல்துறை நிபுணர்கள், வல்லுநர்கள், அறிஞர்கள் ஆகியோரின்
ஆலோசனைகளைக் கேட்டு நிகழ்த்தப்படும் ஒன்றாக இருக்கும் எனக்கொள்ள
லாம்! இவ்வழியே அவர் மக்களுக்கான சில பல நலத்திட்டங்களை நிறை
வேற்றக்கூடும்! ஆயினும், சிறப்பான நிர்வாகம் என்பதே நல்லாட்சியாகிடாது!

எவ்வொரு அரசியல் தலைவரின் அல்லது அவரது கட்சியின் கொள்கை கோட்
பாடுகளையும், வாக்குறுதிகளையும் வைத்து அவரது ஆட்சியின் தன்மையை
கணித்திட முடியாது! ஏனெனில், நேர்முகமாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்
படும் 'காரிய நிரல் பட்டியல்'  (Agenda) ஒன்றாகவும், மறைமுகமான காரிய
நிரல் பட்டியல் வேறொன்றாகவும் இருக்கும் என்பது தவிர்க்கவியலாததாகும்!
ஏனெனில், அரசியல் மேடையைப் பொறுத்தவரையில், மேடையில் தோன்றும்
கதா பாத்திரங்களான, முதலமைச்சர், மற்றும் பிற அமைச்சர்களைக் கொண்டு
மட்டும் ஆட்சி நடைபெறுவதில்லை! மாறாக, அம்மேடைக்குப் பின் புலத்தில்
இருந்துகொண்டு மேடையிலுள்ள கதா பாத்திரங்களை இயக்கும் ஆதிக்க
சக்திகளையும் (பெருமுதலாளிகள், பெரும்பணக்காரர்கள், அதிகாரவர்க்கத்
தினர் ஆகியோரையும்) கணக்கில் கொள்ளவேண்டும்!

ஆகவே, ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆட்சி செயல்படாததாயுள்ளது, ஊழல்
மலிந்ததாக உள்ளது, வரிச்சுமை, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றால் மக்கள்
அல்லல் படுகிறார்கள் என்பதால் அக்குறிப்பிட்ட கட்சியையும், அதன் தலை
வரையும் மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்க முடியாது! ஒரு நாட்டில்
நல்லாட்சி நடக்கவேண்டுமென்றால், ஆட்சியாளர்கள், ஆதிக்கச் சக்திகள்,
மற்றும் மேட்டுக்குடிகளின் (Elites)அச்சுறுத்தல்களிடமிருந்து தொற்றுத்
தடுப்புச்சக்தி (Immunity) பெற்றிருக்கவேண்டும்! அதாவது, ஆதிக்கச் சக்தி
களின் தலையீட்டையும், குறுக்கீட்டையும் முற்றாகத் தவிர்க்கும் விதத்தில்
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிப்பவர்களாயிருத்தல் வேண்டும்!

ஏனெனில், அரசியல் என்பது எல்லாக்காலங்களிலும், மக்களின் நலன்களும்
மக்கள்-விரோத ஆதிக்க சக்திகளின் நலன்களும் மோதிக்கொள்ளும் ஒரு
களமாகத்தான் இருந்து வந்துள்ளது! அதில் மக்கள் நலன்கள் என்பவை
எப்போதும் பேரம்பேசப்பட்டு தியாகம் செய்யப்பட்டுவிடும்!

அதே நேரத்தில், ஒரு நாட்டை, அல்லது, ஒரு மாநிலத்தை எந்தக்கட்சி
ஆண்டாலும், ஆளும் தலைவர், அல்லது, முதல்வர் என்பவர்  மூடராகவே
இருந்தாலும்கூட, அல்லது ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும்கூட, மக்களின்
குறைந்த பட்ச நலன்கள் என்பவை, அதாவது அரை வயிற்று உணவுடன்
உயிர்-பிழைத்திருக்கும் அளவிற்கு எப்போதும் அருளப்படும்! ஏனெனில், ஆட்சி
யாளர்களைப் பொறுத்தவரை, மக்கள் என்போர் உயிர்-பிழைத்திருப்
பதற்காக உழைத்துத் தேயும் எந்திரங்கள், மேலும், 1 சதவிகித ஆதிக்கசக்திகள்,
மேட்டுக்குடிகளின் நலன்களானவை எப்போதும் 99 சதவிகித உழைக்கும்
மக்களின் உழைப்பையும், உற்பத்தியையுமே சார்ந்திருக்கின்றன!

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரண்டு திராவிடக்கட்சிகளும் மாறி
மாறி ஆண்டு மக்களை அலைக்கழித்து வந்துள்ளன! "இந்த இரு திராவிடக்
கட்சிகளின் பிடிகளிலிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும்!" எனும்
தமிழருவி மணியன் அவர்களின் ஆவேசக்கூற்றில் நியாயம் இல்லாமல்
இல்லை! அதேநேரத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக அவசரஅவசரமாக
அவர் சிபாரிசு செய்யும், இன்னும் தன் கட்சியைக்கூடத் தொடங்காத நடிகர்
ரஜினியின் மீது அவர் வைக்கும் நம்பிக்கை அவரது அரசியல் பார்வையின்
ஆழத்தை, முதிர்ச்சியை கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது! அதாவது, ரஜினி
தனது அரசியல்பிரவேசத்தை அறிவித்த உடனேயே எடுக்கப்பட்ட ஒரு செய்தி
ஊடகத்தின் கருத்துக்கணிப்பு, ரஜினி 21% வாக்குகளைப் பெறுவார் என்று
சொல்லியது! திரு தமிழருவி மணியனும், ரஜினி 21% வாக்குகளைப் பெறுவார்
என்று கணிக்கிறார்! ஆனால், "தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெறுவது
எப்படி எனத்தெரிந்த எவரும் நாட்டை சிறப்பாக ஆளத்தெரிந்தவரே என்பதாக
எப்படி நாம் நம்புகிறோம்?" என 2400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க தத்துவ
ஞானி பிளேட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்!

கமல் தனது அரசியல் நகர்வை மிக நுட்பமாகத் திட்டமிட்டுச் செய்கிறார்.
அவர் சாதாரண மக்களின் நலன்களைப்பற்றி அக்கறையுடன் பேசுகிறார்!
அவருடைய "கிராமம்", "விவசாயம்", "விவசாயி" ஆகியவற்றை மையப்படுத்திப்
பேசும் "கிராம-மைய அரசியல்", சரியான தொடக்கப்புள்ளியாகத் தெரிகிறது!

அதே நேரத்தில், கமலின் 'இந்தியன்' எனும் தேசியச் சார்பைவிட 'தமிழன்'
எனும் தமிழ்தேசியச் சார்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது! "தமிழன் என்பது
ஒரு விலாசம் (அடையாளம்) தானே தவிர அது ஒரு தகுதி அல்ல!" எனும்
கமல்ஹாசனின் கூற்றில் ஜனநாயகம் இருக்கிற அளவிற்கு காலம் கடந்து
முளைத்தெழும் தேவையான மாநில சுயாட்சிக்கான தடயம் சிறிதும் இல்லை!
ஆனால், அவர் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஓட்டு
வேட்டைக்காக தன்னை ஒரு தமிழன் எனக்காட்டிக்கொள்ளத் தயங்கவில்லை!

புதிதாக அரசியலில் இறங்கும் இரு பெரும் நடிகர்களான கமலும், ரஜினியும்
தங்களது திரைப்பட பிம்பத்தையும், பிரபல்யத்தையும் பிரதான முதலீடாகப்
பயன்படுத்திக்கொள்வர் என்பதில் சந்தேகமில்லை! தங்களது ரசிகர் படையை
அவர்கள் தொண்டர்படையாகக் கொண்டு சில சதவிகித ஓட்டுக்களைப் பெறு
வர் என்பதும் நிச்சயம்! இப்போதே அவ்விருவரும் ஒரு 'அரசியல்வாதி' க்கே,
குறிப்பாக, ஒரு அரசியல் தலைவருக்கே உரிய பாவனையை, சொல்லாடலை
பிரயோகிக்கத் தொடங்கிவிட்டனர்!

எனினும் இருவருக்குமே 'அரசியல்வாதி' எனும் வேடம் இன்னும் சரிவரப்
பொருந்தி வருவதாகத் தெரியவில்லை! ஆனால், ஊடகங்கள் இருவரையும்
அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும், நகர்வையும் பெரிதாகக்காட்டியும்,
பேசியும் வருகின்றன! ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைமை
ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தை இருவரில் எவர் நிரப்புவார், அடுத்து
வரும் தேர்தலில் இவர்களில் எவர் வெற்றி பெறுவார்? அல்லது எதிர்க்கட்சி
வெற்றி பெறுமா, அல்லது தற்போதைய ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப்
பிடிக்குமா? இக்கேள்விகளுக்கான விடைகள் 'மக்களின் தீர்ப்பு' எனும் தெளி
வில்லா மனங்களின் தேர்வில் அடங்கியுள்ளன! இவ்வகையில், ஜனநாயகம்
என்பது குருடர்களுக்காக, குருடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குருடர்களால்
நடத்தப்படும் ஆட்சியேயாகும்!

✦வாக்காளர்களின் அரசியலும் உளவியலும்!

ஆம், வாக்காளர்களாகிய மக்களும் அரசியல்வாதிகளைப்போல ஆகிவிடுவது
தேர்தல் காலத்தில் நிகழ்கிறது! வாக்குச்சீட்டை உடனடிப்பலனைப் பெறுவதற்
கான ஒரு வாய்ப்புச்சீட்டாக வாக்காளர்கள் கருதுவதாகத் தெரிகிறது! 

உண்மையில் வாக்காளர்களின் உளவியலைப் புரிந்துகொள்வது என்பது மிக
மிகக் கடினமானது! மக்கள் இன்னமும் தங்களது ஜனநாயக உரிமைகளையும்,
கடமைகளையும் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள் என்பதுதான் புலனாகிறது!
மக்கள் இன்னும் தங்களுக்கான அரசியலை அறியாமல், அரசியல்வாதிகளின்
அரசியலையே பேசிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் உள்ளனர்!
மக்களின் அரசியல் பங்கேற்பு என்பது ஓட்டுப்போடுவதுடன் முடிந்துவிடுகிறது!
அதாவது, எங்கு தொடங்க வேண்டுமோ அங்கேயே முடிந்து போகிறது! இது
அரசியல் வாதிகளுக்குச் சாதகமாகி விடுகிறது! கேட்டால், "மக்கள் தீர்ப்பு",
"மக்களின் முடிவு" என்று அரசியல்வாதிகள் பசப்புகிறார்கள்! இன்னும் நாம்
எவ்வளவு காலத்திற்கு  "பெரிய தீமை" க்குப் பதிலாக, "சிறிய தீமை" யை
தேர்ந்தெடுத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்!

தமிழ் நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆண்டுவந்த இரு
பெரும் திராவிடக்கட்சிகளைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் தேர்தலில்
அவையிரண்டும் மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கான நியாயத்தை
யும், அடிப்படையையும் இழந்து நிற்கின்றன! தமிழ் நாட்டின் நகரங்களாயினும்,
கிராமங்களாயினும், சாலை, குடிநீர், வடிகால் ஆகிய அடிப்படைக் கட்டமைப்
புகள் சரியாக இல்லை! இங்கே பொறியியல் கல்லூரிகள் பெருகிய அளவிற்கு
தொழிற்சாலைகள் பெருகவில்லை! இதன் விளைவு ஆண்டு தோறும் லட்சக்
கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பின்றி

அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்! எங்கள் ஆட்சியில் நாங்கள் இதைச் செய்
தோம், அதைச்செய்தோம் என்று மாறி மாறி சாதனைப்பட்டியல் வாசிக்கும்
இரு திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்
களுடன் ஒப்பிட்டால், ஒரு சராசரி சாமான்ய மனிதனிடம் சொத்து என்று
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமேயில்லை எனும் அவல நிலைதான் தொடர்
கதையாகத் தொடர்கிறது! தமிழக அரசாங்கம் பல லட்சம் கோடிகள் கடனில்
தத்தளிக்கிறது; ஆனால் தமிழக அமைச்சர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகளாக
விளங்குகிறார்கள் எனும் மாபெரும் முரண்பாடு மிக எளிதாக மறைக்கப்படு
கிறது, மறக்கப்படுகிறது!

மா.கணேசன்/ 12-02-2018
----------------------------------------------------------------------------

Sunday, 6 May 2018

சரியான பாடல் தவறான தாளம்!





வானக, வையகத்திற்குத்
தங்கள் கருணை சொந்தமில்லை.
அவற்றுக்கு
அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

ஞானிக்கும்
தன் கருணை சொந்தமில்லை.
அவனுக்கு
மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்திற்கு இடைப்பட்ட வெளி
கொல்லர் துருத்தி மாதிரி இருக்கிறது.
காலியாகத் தோன்றினாலும் அந்த வெளியில்
இல்லாதது ஒன்றும் இல்லை.
இயக்கப்பட்டால் அது
இன்னும்கூட நிறைய உருவாக்கும்.

அதிகம் பேசுகிற மனிதன்
விரைவில் அயர்ந்து போகிறான்.

அவன்
தன்னிடம் இருப்பதைத்
தன்னிடமே வைத்துக்கொல்வது நல்லது.

                2500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு
                எழுதிய 'தாவோ தேஜிங்' நூலிலிருந்து தமிழில் சி.மணி.
                            •••

இக்கட்டுரை, தமிழ் இந்து நாளிதழ்-ன் வார இதழான காமதேனு (15-04-2018)
வில் கட்டுரையாளர் திரு ஆசை(த்தம்பி) அவர்கள் எழுதி வெளியான, "தாவோ
புதிய பாதை" என்கிற தலைப்பின் கீழ் இடம்பெற்ற கட்டுரையில் காணப்படும்
சில முக்கியமான கருத்தாம்சங்களின் மீதான சில பார்வைகளை முன்வைக்கும்
முகமாக எழுதப்பட்டதாகும்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம். "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான்
   நாம்" என்று கார்ல் சேகன் கூறியதைப்போல்தான் நாமும் நினைத்துக்
   கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் அர்த்தத்தைக்கண்டுபிடிக்கிறோம்,   
   கொடுக்கிறோம்...."   (ஆசை)

மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகள், "இப்பிரபஞ்சத்தில் மனிதனின் இடம்
எத்தகையது?" அதாவது, "இப்பிரபஞ்சத்தில் மனிதன் விசேடமானவனா அல்லது,
முக்கியத்துவம் ஏதுமற்றவனா? எனும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்
கான ஒரு பதிலை அல்லது விளக்கத்தை சீன ஞானி  லாவோ ட்சு அவர்களின்
ஒரு பாடலை முன்னிறுத்தி அளிக்க முயற்சிக்கிறது எனலாம்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம்."      (ஆசை)

ஆசைத் தம்பியின் இக்கூற்று மனிதர்கள் தங்களை மிகவும் விசேடமானவர்கள்
என்று கருதிக்கொள்வதை எள்ளி நகையாடுகிறது! பொதுவாக மனித ஜீவிகள்
ஒவ்வொருவரும், தாம் முக்கியமானவர், விசேடமானவர், தனித்தன்மையானவர்
என்று கருதிக்கொள்ளும் உள்ளீடற்ற ஒரு மனப்போக்கு உள்ளது என்பதை நாம்
குறிப்பிட்டேயாக வேண்டும்! அகந்தை, தன்முனைப்பு, தன்னலம், ஆணவம்,
உள்ளீடற்ற சுய-முக்கியத்துவம் போன்றவை அந்த மனப்போக்கின் வெளிப்பாடு
களே! அதே நேரத்தில், மனித ஜீவிகள் ஒவ்வொருவரும் தம்மை முக்கியமான
வர், விசேடமானவர், என்று கருதிக்கொள்வது என்பது வெகு இயல்பானதொரு
எண்ணமே தவிர, அது எவ்வகையிலும் அடாத, முறையற்ற, பொருத்தமற்ற,
சாத்தியமற்ற நிலைப்பாடு அல்ல! அதிலுள்ள ஒரே பிரச்சினை என்னவெனில்,
அவ்வாறு தன்னுள் எழும் எண்ணத்தை இறுதிவரைப் பற்றிச் சென்று இப்
பிரபஞ்சத்தில் தனது உண்மையான முக்கியத்துவத்தை, விசேட தன்மையை
உணர்ந்தறியாமலேயே இருக்கிறோம் என்பதேயாகும்!

அடுத்து, "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான் நாம்" என்று
கார்ல் சேகன் கூறியதாகச் சொல்லப்படுவதைக் கேட்பதற்கே இனிமையாகவும்,
மனதிற்கு இதமாகவும் இருக்கிறது. ஏனெனில், கார்ல் சேகன் (Carl Edward
Sagan, 1934-1996), ஒரு வானவியல் விஞ்ஞானியான அவர் மனிதஜீவி
களாகிய நம்மையும் பிரபஞ்சத்தையும் இணைத்து இவ்வாறான ஒரு கருத்தைச்
சொல்வது என்பது கொண்டாடப்படவேண்டியதொரு விடயம் ஆகும்! ஏனெனில்
இது வெறும் ஒரு கருத்து அல்ல, இது ஒரு ஆழமான உண்மையாகும்! அதே
நேரத்தில், அவர் அறியாத, கண்டு சொல்லாத உண்மைகள் அநேகம்!

கார்ல் சேகன் சொல்லிய அந்த முழு வாசகம் இதோ : "நாம் நட்சத்திரப் பொரு
ளால் ஆனவர்கள். பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்"
இக்கூற்று மிக ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாகும்; அதை வெறுமனே
ஒரு மேலோட்டமான வாசிப்பின் மூலம் புரிந்துகொண்டுவிட இயலாது! மேலும்,
நூற்றுக்கணக்கான வானவியல், பிரபஞ்சவியல் சம்பந்தமான நூல்களைப்
படித்துத் திரட்டப்பட்ட பெரும் தரவுகளைக் கொண்டும் புரிந்துகொள்ளமுடியாது!

அதாவது, "பிரபஞ்சமானது தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி அல்லது
கருவியே நாம்" என்பதன் அர்த்தம் என்ன? மேலும், பிரபஞ்சம் தன்னை அறிந்து
கொள்வதற்கான வெறும் கருவி மட்டும் அல்ல நாம். அதாவது, மனிதனை
பிரபஞ்சத்தின் ஒரு கருவியாகச் சுருக்கிவிடலாகாது; இவ்வாறு பொருள்
கொள்வது தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றுவிடும். ஏனெனில், பிரபஞ்சம்
வெறும் ஒரு எந்திரம் போன்றதல்ல, நாம் அதன் ஒரு பாகம் மட்டுமே அல்ல!

"பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்" எனும் இக்கூற்றை,
வாசகத்தை கீழ்க்காணும் வகையில் நாம் விரித்துக் காண வேண்டும்!

• பிரபஞ்சத்திற்கு தன்னைத் தானே அறிந்துகொள்ள வேண்டிய அவசியம்
  அல்லது கட்டாய விழைவு உள்ளது.

• அதே நேரத்தில், பௌதீகச் சடப்பொருளால் ஆன, உயிரற்ற, உணர்வற்ற
   பிரபஞ்சம் எவ்வாறு தன்னைத் தானே அறிந்துகொள்ள இயலும்? என்ற
   கேள்வியையும் அவ்வாசகம் உள்ளடக்கியுள்ளது.

• இக்கேள்விக்கான பதிலாக, பிரபஞ்சமானது தன்னை அறிந்துகொள்வதற்காக
   மனிதனை ஒரு வழியாகக் கொள்கிறது, அல்லது கருவியாகப் பயன்படுத்து
   கிறது என்பதையும் அவ்வாசகமே சொல்லுகிறது!

• அப்படியானால், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு, உறவு
   எத்தகையது? அதாவது, மனிதன் இப்பிரபஞ்சத்திற்குள் எவ்வாறு எங்கிருந்து
   வந்து சேர்ந்தான்?

• மனிதன் இப்பிரபஞ்சத்திற்கு வெளியே எங்கிருந்தும் கொண்டுவரப்பட்டவன்
  அல்ல! மாறாக, இப்பிரபஞ்சமானது தன்னை அறிவதற்குரிய பொருத்தமான
  அம்சங்களைப் பெறும் வகையில் பரிணாமத்தின் வாயிலாக தன்னிலிருந்தே
  வெளிக்கொண்டுவரப்பட்டவனே மனிதன்! 

• இதன் அர்த்தம் பிரபஞ்சமும் மனிதனும் வேறு வேறு அல்ல! அதாவது,
   பிரபஞ்சத்தின் ஒரு விசேடமான நிலைமாற்றமே மனிதன்!

• அதே நேரத்தில், தன்னை அறிவதற்காக (பரிணாமத்தின் வழியாக) பிரபஞ்சம்
   மனிதனாக மாறியது என்பதுடன் பிரபஞ்சத்தின் தன்னை அறியும் நோக்கம்
   முழுமையாக நிறைவேறிவிடுவதில்லை!

• ஏனென்றால், பிரபஞ்சத்தை அறிய மனிதன் வந்தான்; ஆனால் மனிதனை
   அறிய யார், அல்லது எது வரும்?

• உண்மையில் பிரபஞ்சம் தன்னை அறிவதும், மனிதன் தன்னை அறிவதும்,
   இவ்விரண்டுமே ஒன்றுதான்! ஆயின், மனிதன் தன்னை அறியாதவரை
   தன்னை அறியும் பிரபஞ்சத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறுவது
   இல்லை!

• ஆக, இவ்வாறு நாம் விரித்துக்கொண்டே போகலாம் -- முடிவேயில்லாமல்
   அல்ல -- மாறாக, முடிவான முழுமையான பதிலை, புரிதலை அடையும்
   வரை!

சரி, இனி நாம் ஆசைத்தம்பி அவர்களின் பிற கருத்தாம்சங்களையும் சேர்த்துக்
கொண்டு நம்முடைய புரிதலில் முன்னேறிச்செல்வோமாக.

   "கடவுளை நம் உருவத்தில் படைத்திருப்பதுபோல் பிரபஞ்சத்தையும் நம்
   உருவத்தில் படைக்கும் செயல்தான் இது. ஆனால், பிரபஞ்சம் நாம்
   கொடுக்கும் அர்த்தமாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை.
   அது வெறுமனே இருக்கிறது!     (ஆசை)

உண்மையில், கடவுளை நம் உருவத்தில் நாம் படைக்கவில்லை; மாறாக,
கடவுள் (அனைத்துக்கும் மூலமாகிய மெய்ம்மை) தான் நம் உருவத்தில்
வெளிப்பட்டிருக்கிறார். அடுத்து, இப்பிரபஞ்சத்தையும் நாம் நம் உருவத்தில்
படைக்க முயற்சிக்கவில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் நம் உருவத்தை
எடுத்திருக்கிறது! ஏனெனில், மனிதன் என்பவன் உண்மையில், பிரபஞ்சத்தின்
நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையுமே தவிர வேறல்ல! மேலும், ஒருவகையில்,
திரு. ஆசை அவர்கள் சொல்வது போல, "பிரபஞ்சம் நாம் கொடுக்கும் அர்த்த
மாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை." என்பது உண்மையே!
எவ்வாறெனில், நாம்தான், அதாவது பிரபஞ்சத்தின் உள்ள்ளார்ந்த விழைவைப்
புரிந்து நிறைவேற்றும் உணர்வார்ந்த ஒவ்வொரு மனிதனும்தான், பிரபஞ்சத்
தின் அர்த்தமாக மலர்கிறோம்; மலர வேண்டும்! இறுதியாக, "இப்பிரபஞ்சம்
வெறுமனே இருக்கிறது" என்பது ஒரு தோற்றப்பிழையே தவிர அது உண்மை
யல்ல!

ஆம், இப்பிரபஞ்சம் வெறுமனே நம்மிடமிருந்து தொடர்பற்று தனித்திருக்க
வில்லை! அது சும்மா வெறுமனே இருப்பதாகத்தோற்றம் தருவதற்குக்காரணம்
நாம் அதன் நீட்சியாக, அதன் கண்களாக, செவிகளாக, இதயமாக வெளிப்பட்
டிருக்கிறோம் என்பதாலேயே யாகும்! நாம் இப்பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி
நிலையாக வெளிப்பட்ட பிறகு, பிரபஞ்சமானது நம்முடைய பகுதியாக மாறி
விடுகிறது! ஆகவே, இனி செயல்பட வேண்டியவர்கள் மனித ஜீவிகளாகிய
நாம் ஒவ்வொருவரும் தானே தவிர பிரபஞ்சம் அல்ல; ஏனெனில் நாம்தான்
இப்பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை! ......

   "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை ஏற்றிவிடு
   கிறோம். மழையின் கருணை, மழையின் கோபம், இயற்கையின் சீற்றம்
   என்றெல்லாம் கூறுகிறோம். ....

   உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
   அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும்
   கிடையாது. ....
   இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
   ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும்
   ஒன்றுதான். .... "     (ஆசை)

ஆம், முதல் கோணல் முற்றும் கோணல் என்பதால், இக்கட்டுரையில் நாம்
அந்த முதல் கோணலை சரி செய்திடும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து
அமைந்திடும் அடுத்தடுத்த கோணல்களும் சரி செய்யப்பட்டுவிடுவது சர்வ
நிச்சயம்!

உண்மையில், "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை"
நாம் ஏற்றிவிடுவதில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் அனைத்து வித உணர்வு
களையும் தன் மீது ஏற்றிக்கொள்கிறது! இல்லாவிடில் பிரபஞ்சம் என்பது
உயிரற்ற, உணர்ச்சியற்ற, உணர்வற்ற வெறும் பௌதீகச் சடப்பொருளின்
எந்திர இயக்கமாக மட்டுமே தொடர்ந்துகொண்டிருக்கும் -- எதையும், எதுவும்
அறிய, ஆராய, உணர நாதியற்ற நிலையில்!

முக்கியமாக, பிரபஞ்சம் என்பதும், அதிலுள்ள ஒவ்வொரு அணுத்துகளும், புழு
பூச்சியும், புல்லும் பூண்டும், விலங்கும், மனிதனும் இப்பிரபஞ்சத்திலிருந்து
வேறானதல்ல! ஒவ்வொன்றும் பிற ஒவ்வொன்றுடனும் ஓர் மாபெரும்
வலைப்பின்னலில் இணைந்துள்ளதால், மழையின் கருணை, கோபம், சீற்றம்
யாவும் பொருத்தப்பாடுடையவையே! இப்பிரபஞ்சத்தில் எதுவும் இடம் தவறி
யதாய் இருக்கவில்லை! புல், பூண்டுகளாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய
பிரபஞ்சம் உயிர் போன்றதாகும், ஆகவே மழை எனும் கருணை மிக அவசிய
மாகும்! புல்லை மேய்ந்து வாழும் கால்நடைகளாகிய பிரபஞ்சத்திற்கு மழை
யாகிய பிரபஞ்சம் அமிர்தமாகும்; கால்நடைகளைச் சார்ந்து வாழும் மனிதர்
களாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய பிரபஞ்சம் இன்றியமையாததாகும்!

அடுத்து, "உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும் கிடையாது..."
என்பதும் சரியானதல்ல! ஏனெனில், இயற்கையானது மனிதனுடனும், பிறவற்
றுடனும் யாதொரு தொடர்புமற்ற வகையில் தன் போக்கில் இருக்கவில்லை,
இயங்கவில்லை! உண்மையில் இயற்கைக்கு ஒரு போக்கு, வழிமுறை இருக்
கத்தான் செய்கிறது; அந்த வழிமுறைக்குப் பெயர் "பரிணாமம்" என்பதாகும்!
அவ்வழிமுறையின் மூலமாகத்தான் பிரபஞ்சமானது அண்டத்து பொருள்
களாகவும், பல்வேறு விசித்திர நிகழ்வுகளாகவும், உயிர்-ஜீவிகளாகவும், உணர்
வுள்ள, சிந்திக்கின்ற மனித ஜீவிகளாகவும்.... யாவுமாகியது!

பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளாக, அவற்றிலும் குறிப்பாக, மனித ஜீவிகளாக
எழும்வரை மட்டுமே அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ
ஏதும் கிடையாது என்று சொல்லலாம். ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவிகளின்
நிலையை எட்டிய பிறகு, அவ்வுணர்வுகள் இல்லாமல் உயிரினங்கள் வாழ
வியலாது!

அடுத்து, "இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும் ஒன்றுதான்."
என்ற கூற்று முற்றிலும் தவறானது; ஏனெனில், இக்கூற்று பரிணாமத்தின்
அடிப்படை அம்சம் அல்லது வளர்ச்சி எனும் விதியையே மறுக்கிறது! வேண்டு
மானால், ஞானியும் இயற்கைதான், அஞ்ஞானியும் இயற்கைதான் என்று ஒரு
பார்வையில் கொள்ளலாமே தவிர, ஞானியும், அஞ்ஞானியும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கு இடமில்லை! அவ்வாறே புலியும் மானும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கும் இடமில்லை!

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, ஞானி, அல்லது ஞான நிலையே அதன்
ஒப்பற்ற இலக்காக இருக்கிறது என்று கொள்ளலாம். சீன ஞானி லாவோ ட்சு
அவர்களும் இதைத்தான் சொல்கிறார்! - இப்போது, நாம் ஞானி லாவோ ட்சு -
வின் பாடலுக்கு வருவோம். லாவோ ட்சு சொல்கிறார் :

   வானக, வையகத்திற்குத்
   தங்கள் கருணை சொந்தமில்லை.
   அவற்றுக்கு
   அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

   ஞானிக்கும்
   தன் கருணை சொந்தமில்லை.
   அவனுக்கு
   மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்தை, அதாவது இயற்கை, அல்லது பிரபஞ்சத்தைப் பொறுத்த
வரை அனைத்தும் வைக்கோல் நாய்தான் என்கிறார்! அடுத்து, ஞானியைப்
பொறுத்தவரையில் மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான் என்கிறார்!
இப்பாடலில் லாவோ ட்சு அவர்கள் பிரபஞ்சத்தையும், ஞானியையும் சமநிலை
யில் வைக்கிறார்! எனினும், பிரபஞ்சத்திற்கும் சரி, ஞானிக்கும் சரி தத்தம்
கருணை சொந்தமில்லை என்று சொல்வதன் வழியே, கருணை, அன்பு
என்பதை அவர் ஞானியையும், பிரபஞ்சத்தையும் கடந்த ஒப்பற்ற இறுதியான,
கடப்பு நிலை மெய்ம்மை எனச் சுட்டுகிறார்! ஆம், அன்பு, அல்லது, கருணை
என்பதுதான் இப்பிரபஞ்சத்தின் மூலப்பண்பு, அல்லது சாரமான மெய்ம்மை
ஆகும்! அதை நாம் ஒருமையும் முழுமையுமானதொரு பேருணர்வு எனலாம்!

அடுத்து, ஆசைத்தம்பி அவர்களின் கட்டுரையில், நம் உடலின் அணுக்கள்
பற்றிய ஒரு குறிப்பு ஒன்று வருகிறது :

   மரணத்துக்குப் பிறகு நம் உடல் அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப்
   பிரிந்து மறுசுழற்சியடைகின்றன. ஷேக்ஸ்பியர் உடலில் இருந்த அணுக்
   களில் சுமார் நூறு கோடி அணுக்களாவது, இயற்கையின் மறுசுழற்சி
   முறையில் நம் ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்
   என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். ஷேக்ஸ்பியரின் உடல்
   என்பதால் இயற்கை அதற்குத் தனிமதிப்புக் கொடுத்துப் பத்திரப்படுத்தி
   வைக்கவில்லை. அவர் உடலின் அணுக்களும் ஆதியில் ஏதாவதொரு   
   விண்மீன் வெடிப்பிலிருந்து வந்துசேர்ந்தவைதான். மரணம் நம்மை
   மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர்களையும், விண்மீன்களையும் கூட
   மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் பொருட்கள்போல் ஆக்கிவிடுகிறது..."
             (ஆசை) 

திரு.ஆசை அவர்கள் ஞானி லாவோ ட்சு அவர்களின் ஒரு பாடலுக்கு
விளக்கம் தருவதற்காக இறங்கி இயற்கை, பிரபஞ்சம் பற்றியும், இவற்றிற்கும்
மனிதனுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து
கொள்ளும் ஆர்வத்தில், லாவோ ட்சு பாடலுக்கு சம்பந்தம் இல்லா பல கருத்து
களையும் போகிற போக்கில் அடுக்கிச் சென்று விடுகிறார். அவை கிட்டத்தட்ட
பொருண்மை வாதப் பார்வையில் அமைந்தவையாக, ஆகவே, தவறானவை
யாக உள்ளன. அதாவது, மனித உடலின் அணுக்களும், மனிதனும் ஒன்று
என்பது போல் திரு.ஆசை அவர்கள் கூறியுள்ளது தவறானது, பொருத்தமற்றது
ஆகும். இப்பிரபஞ்சத்திலுள்ள அணுக்கள் யாவும் ஒரே மாதிரியானவை, பொது
வானவை! அதாவது, வீடு கட்டுவதற்கான அடிப்படைக்கட்டுமானப் பொருளான
செங்கற்கள் போன்றவையே அணுத்துகள்கள் எனலாம்! ஆக, ஒரு வீட்டின்
செங்கற்களைப் பிரித்தெடுத்து வேறொரு வீடு கட்டுவதற்குப் பயன் படுத்திக்
கொள்ள இயலும் என்பதைப் போல 'ஷேக்ஸ்பியரின் மரணத்துக்குப் பிறகு
அவரது உடலின் அணுக்கள் இயற்கையின் மறுசுழற்சி முறையில் நம்
ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்' என அறிவியலாளர்கள்
நம்பலாம்; ஆனால், இச்சிறு விடயம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல!
ஏனெனில், ஷேக்ஸ்பியரின் உடலணுக்கள் அவருடைய உடலின் அணுக்கள்
மட்டுமே தவிர அவை ஷேக்ஸ்பியர் அல்ல!

ஆக, "மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல, உடலின் அணுக்களும் அல்ல
என்றால், பின் எது தான் மனிதன்?" என்று வாசகர்கள் கேட்கலாம்! ஆனால்,
அதி முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குள்
கேட்டு அதற்கான பதிலை அடைவதில் தான் மனித வாழ்வின் அர்த்தம்,
முழுமை, சாகாநிலை யாவும் அடங்கியுள்ளன!

  "நான் யார் தெரியுமா?" என்று ஒருவன் அடுத்தவரிடம் கேட்பதில்
  அர்த்தமில்லை; அவன் வெறும் வைக்கோல் நாய்தான்!
  மாறாக, "தான் உண்மையில் யார்?" என்று தன்னிடமே
  கேட்பவனே தன்னைக் கண்டடைபவனாகிறான்!

மா.கணேசன் • 01-05-2018
----------------------------------------------------------------------------

Friday, 27 April 2018

தமிழ்த்தேசியத்தின் அவசியம்





    தமிழ் என்றொரு மொழி இருந்தது,
    இன்றும் இருக்கிறது, அது என்றென்றும் இருக்கும்;
    அவ்வாறே தமிழினமும்!

மொழி என்பது பண்பாட்டின் கருவூலம்
------------------------------
மொழி என்பது வெறும் கருத்து, செய்தி அல்லது தகவல் பரிமாற்றத்துக்கான
கருவி மட்டுமல்ல. அது ஒரு மொழியைப் பேசுகின்ற, தாய்மொழியாகக்
கொண்ட மொழியினத்தின் தொன்மம், இலக்கியம், சமயம், தத்துவம்
(மெய்யியல்), பண்பாடு ஆகியவற்றின் கருவூலம் ஆகும்!

ஆகவே, ஒரு மொழியினத்தின் மீதான இன்னொரு மொழியின் திணிப்பு,
ஆக்கிரமிப்பு என்பது  மொழிகளுக்கிடையேயான வெறும் போட்டியோ,
சச்சரவோ அல்ல. மாறாக, அது பண்பாட்டின் மீதான போர் எனவும்,
இன அழிப்புக்கான முற்றுகை எனவும் காணப்படவேண்டும்! ஒரு மொழியின்
மீதான தாக்குதல் என்பது அம்மொழியினத்தின் மீது தொடுக்கப்படும் போர்
ஆகும்!

தமிழ் மொழி, அதன் இலக்கணம், தொன்மம், இலக்கியம், சமயம், தத்துவம்
(மெய்யியல்), பண்பாடு என்று  எல்லாவற்றிலுமே சமஸ்கிருதத்திலிருந்து
வேறுபட்டது. மேலும், அது சமஸ்கிருதத்தைவிட, சமஸ்கிருத கலாச்சாரத்தை
விட சீரியது. ஆகவே, தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் சமஸ்கிருதம்
அழிக்க முயல்கிறது! அதை நேரடியாக அல்லாமல், "ஒரே மொழி, ஒரே மதம்,
ஒரே நாடு' என்ற கோஷத்தின் வழியாகச் செயல்படுத்த எத்தனிக்கிறது. ஆகவே,
தமிழும், தமிழினமும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படவேண்டும் எனும் சீரிய
அக்கறையில்தான் தமிழ்த் தேசியத்தின் அவசியம் எழுகிறது.

மொழி என்பது அம்மொழியினத்தின் உயிர்
--------------------------------
சிலர், "தமிழ்த் தேசியம் என்பது மக்களைச் சாதி, மதங்களுக்கு அப்பால்
ஒன்றிணைக்கும் தேசியமாக அமையுமா? அல்லது, மக்களைச் சாதி, மத
அடிப்படையில் கூறு போடும் தமிழ்ப் பாசிசமாக அமையுமா?" என்று சந்தேகக்
கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களுடைய அச்சம் அடிப்படையற்றது. ஏனெனில்,
ஏற்கனவே நெடுங்காலமாக மக்கள் இங்கு சாதி, மத அடிப்படையில் கூறு
போடப் பட்டிருக்கிறார்கள்; புதிதாக தமிழ்த்தேசியம் வந்துதான் அதைச் செய்ய
வேண்டியதில்லை; மேலும், தமிழ் மொழி, அல்லது தமிழ்ப் பண்பாடு அவ்வாறு
மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடுவதற்கான சாய்வைக்
கொண்டிருக்கிறதா? அதாவது, தமிழ்மொழி தான் சாதி, மதக் கட்டமைப்புகளை
உருவாக்கியதா? இக்கேள்விகளையெல்லாம் கேட்காமல் தமிழ்த் தேசியத்தை

எதிர்ப்பது என்பது அபத்தமானதாகும்!

மேலும், தமிழரின் உண்மையான சமயம் எது என்பது எவரும் அறியாத ஒன்று;
ஆகவே அதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்! தமிழர் சமயத்தின் அடிப்படை
யான கொள்கைகளை திருமூலரின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனும்
மகா வாக்கியத்திலும்; கணியன் பூங்குன்றன் என்ற மெய்யியல் மேதையின்,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் மகா வாக்கியத்திலும் நாம் கண்டடை
யலாம்! திருமூலர் கூறியது போன்ற கொள்கை விளக்கத்தை, உலகில்
வேறெங்கும் காணவியலாது.


தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தை விளக்கும் பூங்குன்றனாரின் வரிகள்,
உலக சமயங்கள் கூறும் எல்லாக்கொள்கைகளையும் உள்ளடக்கிய வித்தாகும்.
தமிழர் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்பதற்கு,
பூங்குன்றனும், திருமூலரும் அளித்துள்ளனவைகளே விடைகளாகும். ஆக,
தமிழினம் அதனளவில் சாதி மதச் சழக்குகளால் துண்டாடப்பட்ட இனம் அல்ல

என்று துணிந்து கூறலாம்!

மேலும், ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட, அரை நூற்றாண்டுகாலம் வரலாறு
படைத்த சமூக நீதி இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், 'தேசியங்கள்'
மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடுவதைத் தடுத்தனவா, சமூக
நீதியை நிறுவிற்றா, இல்லையெனில், ஏன் அவை தோற்றுப் போயின என்ற
கேள்வியை தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் கேட்கத் தவறினர்
என்பதற்கும் அவர்கள்தான் பதில் கண்டுபிடித்தாக வேண்டும்!

மேலும், "சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?" என்று சிலர்
கேட்கிறார்கள்! சாதியைப் போலவே, இன்னொரு முக்கிய பிரச்சினை பரந்து
விரியும் வறுமை! வறுமை, ஏழ்மையையும் ஏற்கனவே கோலோச்சி வந்த
'தேசியம்' ஏன் தீர்க்கவில்லை என்ற கேள்வியை யார் எவரிடம்

போய்க்கேட்பது?

அடுத்து, எப்போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ
அப்போதெல்லாம் தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு
காலகட்டங்களில் நடந்துவந்திருக்கிறது.  தற்போது, காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டங்களின் 

தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்து வருகின்றன. உரிமைகள்
குறித்த இந்த விடயத்திலும் ஏற்கனவே ஆண்ட கட்சிகள், 'தேசியங்கள்'
தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதில் ஏன் தோற்றுப்போயின? அல்லது,
எக்காரணங்களுக்காக அவற்றை இழக்கும்வகையிலான சமரசங்களுக்கு
உடன்பட்டன? இவ்வாறு எவ்வொரு விடயத்திலும் ஏற்கனவே வரலாறு
படைத்த கட்சிகள், 'தேசியங்கள்' படுதோல்வியடைந்து போயின என்பதால்
அவை தொடர்ந்து நீடிப்பதில் யாதொரு அர்த்தமும், நியாயமும் இல்லை!

ஆக, காவிரி நீர் உள்பட தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும்
பொருட்டும்; தமிழகத்தின் வாழ்வாதாரங்களை, வளங்களைப் பாதுகாக்கும்
பொருட்டும் தமிழ்த் தேசியத்தின் அவசியம் முன்னெப்போதையும்விட தற்போது 
மிக அவசரமான தேவையாக உணரப்படுகிறது.

மேலும், தமிழர்களின் ஒற்றுமையில்லாத மொழிப்பற்றில்லாத (மொழிப்பற்று
என்பது மெய்ம்மை நாட்டம், மெய்யியல் தேட்டம் ஆகிய விழைவினால்
ஏற்படுவது) தன்மையினால் திறந்த விசால மனம் கொண்டிருந்தபோதிலும்
பிறரால் ஏய்க்கப்பட்டு மேய்க்கப்பட்டு அடிமையாக்கப்பட்டிருக்கும் நிலையி
லிருந்து மீள்வதற்கும்; தாம் இழந்த பண்பாட்டுப் பெருமைகளை மீட்டெடுப்
பதற்கும், தமது மெய்யியல் பொக்கிஷங்களை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கும்
தமிழ்த்தேசியம் தற்போது மிகமிக அவசியமாகிறது!

மொழி என்பது அன்றாட உயிர்-வாழ்க்கைக்கான ஒரு கருவி மாத்திரமல்ல!
அதுவே ஆன்மீக உயர்-வாழ்க்கைக்கான கருவியும் ஆகும்! ஒருவர் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டிருப்பதனால் மட்டுமே தமிழராகிவிடுவதல்ல;
ஏனெனில், அர்த்தமில்லாத மொழி என்று எதுவும் இருக்கவியலாது!

அவ்வாறிருக்க முடியுமெனில், அர்த்தமறியப்படாத வாழ்வின் கருவியாக
மட்டுமே அம்மொழி பிழைத்திருக்கும்! ஆக, வாழ்வின் உயர் அர்த்தத்
தளங்களை எட்டுவதற்கான ஊடகமாக மொழியானது கொள்ளப்படவேண்டும்!
அதாவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவனும் பாமரத்

தமிழனாகத் தொடங்கி முடிவில் ஞானத்தமிழனாக முழுமையடைதல்
வேண்டும்!

ஆகவே, தமிழ்த் தேசியம் என்பது வெறும் சமூகப் பொருளாதார அரசியல்
கோட்பாடோ, சித்தாந்தமோ மட்டுமேயல்ல! இவ்வகையில், தமிழ்த் தேசியம்
என்பது தனித்தன்மையானது மட்டுமல்ல, வரலாற்றில் அதைத்தவிர அதற்கு
யாதொரு முன்னுதாரணமும் கிடையாது! தமிழினத்தின் உயர் வளர்ச்சியில்,
முதிர்ச்சியில் அமைக்கப்படுவதே உண்மை தமிழ்த் தேசியம்; அதற்குக்
குறைவான எதுவும் வெறும் ஒத்திகை முயற்சிகளே!

            “எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
                 அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”

மா.கணேசன் • 28-04-2018
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...