Tuesday, 13 November 2018

மா.கணேசனின் கட்டுரைகள்

 


விசார மார்க்கம் வலைத்தளம்

vicharamarg.blogspot.com

விசார மார்க்கத்தின் வலைத்தளத்தில் இதுவரை பதிவேற்றப்பட்ட
மா.கணேசனின் கட்டுரைகள் பட்டியல்

2012

யுக மாற்றத்தின் வாசல் (நூல் பற்றிய குறிப்பு)• 17.7.2012
--
--
--
2016

1. மனித இனத்தில் சேருவோம்!• 11.2.2016
2. வாழ்க்கையைத்தேர்ந்தெடுப்போம்• 11.2.2016
3. என்ன என் மனதில் உள்ளது?• 11.2.2016
4. சமத்துவம் • 13.2.2016
5. விசித்திர ஞானம்• 13.2.2016
6. முகநூல்வாசிகளின் உலகம் (1) •16.2.2016
7. அர்த்தமற்ற அரசியல்• 23.2.2016
8. முகநூல்வாசிகளின் உலகம் (2) உளவியல் பக்கங்கள்• 25.2.2016
9. அனுபவம், படைப்பு, வெளிப்பாடு• 9.3.2016
10. மனிதன் என்பவன் யார்? •12.3.2016
11. வியப்பு, விசாரம், வியப்பு• 17.3.2016
12. மேலோட்டத்தின் ஆழம்• 20.3.2016
13. முதிர்ந்த நாற்றுக்களே கேளுங்கள்! •21.3.2016
14. அந்நியர்களே வாருங்கள்!• 22.3.2016
15. மரண-தண்டனைக் கைதிகளே...• 22.3.2016
16. அன்பு : மகத்தானதொரு இன்மை• 26.3.2016
17. கடவுள் ஒரு உருமாறி God Is A Transformer 1.4.2016
18. தன்னந்தனியன்• 7.4.2016
19. மறுகரையிலிருந்து •10.4.2016
20. யாருக்கு நீங்கள் சேவை செய்கிறீர்?• 13.4.2016
21. விபரீத ஞானம்• 14.4.2016
22. எங்கே எல்லோரும்? (Fermi's Paradox)• 21.4.2016
23. தன்னை அறிதல்• 23.4.2016
24. கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்?• 24.4.2016
25. வாருங்கள், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!• 27.4.2016
26. பட்டயத்தைக் கொண்டுவருபவனின் செய்தி•  30.4.2016  (†)
27. அசலான வாழ்க்கைக்கான அழைப்பு•  1.5.2016 (†)
28. முக்கியமானது முதலில்!• 2.5.2016  (†)
29. மரித்தோரின் உலகிலிருந்து வெளியேறுங்கள்• 3.5.2016  (†)
30. இறுதியான உறவை நாடுங்கள்!• 9.5.2016  (†)
31. ஆன்மீகமா? லௌகீகமா?• 12.5.2016   (†)
32. இப்படிக்கு வெட்டியான்• 17.5.2016 (Plain Verse)
33. உனக்கு நீ நண்பனா? எதிரியா?• 25.5.2016 (Plain Verse)
34. எப்போது நீங்கள் வாழத் தொடங்கப் போகிறீர்?• 3.6.2016 (Plain Verse)
35. பாதையற்ற பயணம்• 6.6.2016 (Plain Verse)
36. அகந்தையின் இடறுகுழிகள்• 12.6.2016
37. மனித ஜீவிகளுக்கு மட்டும்!• 17.6.2016 (Plain Verse)
38. சிந்திக்கத் துணிபவர்களுக்கு மட்டும்!• 19.6.2016 (Plain Verse)
39. தற்கொலை மனிதர்கள்!• 22.6.2016
40. சீரிய விசாரகனுக்கு சில குறிப்புகள்• 25.6.2016 (Plain Verse)
41. விசார இல்லத்து விசனங்கள்• 28.6.2016
42. முன்பொரு காலத்தில்...... (விசார மார்க்கம் மூடுவிழா!)• 30.6.2016
43. Freedom From J.Krishnamurti• 28.7.2016
44. பெரிதினும் பெரிது தேடு!• 30.7.2016
45. Who Brings The Truth? (On JK)• 5.8.2016
46. முதல் விடயங்கள் முதலில்!• 6.8.2016
47. உங்கள் விளக்கை நீங்களே ஏற்றிக்கொள்ளுங்கள்!• 7.8.2016(Plain Verse)
48. முற்றிலும் புதியது! 7.8.2016 (Plain Verse)
49. பிரபஞ்சம் குறித்த இறுதிச் சமன்பாடு 10.8.2016
50. விஞ்ஞானம் தோற்றுவிட்டது (1) 16.8.2016
51. விஞ்ஞானம் தோற்றுவிட்டது (2) 4.9.2016
52. வித்து இல்லாமல் விருட்சம் இல்லை!
      (படைப்புவாதம், பரிணாமவாதம்: இரண்டுக்கும் அப்பால்.) 18.9.2016
53. "சுய நலங்கொண்ட மரபணு"  4.10.2016
54. உயிர் எனும் புதிர்! 21.10.2016
55. இயற்கையின் இயற்கை என்ன?
     (What is the Natue of Nature?) 31.10.2016
56. உணர்வு எனும் மகா புதிர்! 21.11.2016
57. நானின்றி அமையாது உலகு! 24.11.2016
58. அபத்தமான் ஐந்து விஞ்ஞானப் பேருண்மைகள்! 2.12.2016
59. தந்த கோபுரத்தின் உச்சியில் ஒரு சாய்வு நாற்காலி 6.12.2016
60. அனைத்தையும் அறிவது சாத்தியமா? 13.12.2016
61. ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப் பதிலாக
       ஏதோவொன்று இருக்கிறது? 201.12.2016
62. பழைய முகமூடிகளுக்குப் புதிய முகமூடிகள்! {19.2.1989)    22.12.2016

2017

63. வாழ்-கால வரையறை விதி! 7.1.2017
64. சிற்றார்வம் X பேரார்வம் 8.1.2017
65. தன்னைக் கண்டடைதல் 10.1.2017
66. முன்-தெரிவு செய்யப்பட்டதொரு வாழ்க்கை!
     (A Life of Default) 20.1.2017
67. நீங்கள் உண்மையிலேயே இருக்கிறீர்களா?
     (Liberation Unleashed Debunked)24.1.2017
68. நீங்கள் இருக்கிறீர்கள்!  {18.6.2011]    25.1.2017 (Plain Verse)
69. இதுதான் வாழ்க்கைக்கு நீ தரும் பதிலா? 3.2.2017
70. மனிதனின் சித்தமா? உலகின் சித்தமா? 6.2.2017
71. தீர்வின் திறவுகோல் யாரிடமுள்ளது? 9.2.2017
72. ஒவ்வொரு கணமும் ....    13.2.2017
73. உங்கள் உரைகல்லைத் தூக்கி எறியுங்கள்!   14.2.2017
74. எதற்காக வந்தோம் பூமிக்கு?   15.2.2017
75. இயற்கையிலிருந்து மனிதன் தனித்தவனா?
       ( பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினை) 18.2.2017
76. இப்போது நேரம் என்ன?    19.2.2017
77. சில விபத்துகள், சில சந்திப்புகள்!    20.2.2017
78. நான் யார்?    23.2.2017
79. உண்மையின் சுவை!    25.2.2017
80. மாற்றமனைத்தும் முடிவுறும்!    27.2.2017
81. சொற்களின் அசலான அர்த்தத்தை அகழ்ந்தெடுத்தல் 4.3.2017
82. விசார மார்க்கம் எனும் புதிர்ச் சிந்தனைப்பள்ளி   7.3.2017
83. வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?   11.3.2017
84. எது பிரும்மாண்டம்?  12.3.2017
85. மனிதனின் வேர்கள் எங்கேயுள்ளன? 14.3.2017
86. இனி ஒரு சூழ்ச்சி செய்வோம்!    20.3.2017
87. சுடு நீர்ப்பானைத் தவளை போல!  24.3.2017
88. ஆன்மீக வளர்ச்சிக்கு எதிரான தடைகள் எத்தனை?  27.3.2017
89. இனியும் நாம் இயற்கையாய் வாழ்வதில் அர்த்தமில்லை!  5.4.2017
90. வாழ்வது சாவதற்காகவா?   29.4.2017
91. அது! (கடவுள் புதிர் நூலிலிருந்து)• 29.4.2017
92. எது? • 1.5.2017
93. இறுதி அற்புதம்! • 4.5.2017
94. நாத்திகத்தின் ஆணி வேர்!• 13.5.2017
95. எதைப்பற்றிச் சிந்திப்பது?   15.5.2017
96. ஒரு கல், ஒரு தவளை, ஒரு மனிதன்!  16.5.2017
97. "இதற்கா இத்தனை ஓட்டம்?"     19.5.2017
98. வாழ்வின் அர்த்தம் ஒன்றா? பலவா?  21.5.2017
99. நதியைப் போல் வாழுங்கள்!   24.5.2017
100. மனிதர்கள் பூமியைவிட்டு வெளியேறும் வேளை வந்துவிட்டதா? 27.5.2017
101. நிசர்கதத்தா மஹாராஜ்-ன் ஆன்மீக மொழிகள்  29.5.2017
102. குதிரைப் பயிற்சியாளனும் சில சண்டிக் குதிரைகளும்!  1.6.2017
103. நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்!    6.6.2017
104. அழகின் ஊற்று     15.6.2017
105. 'சுய-நேசம்' எனும் விபரீதம்!   18.6.2017
106. மன்னிக்கவும், நாம் ஒரே படகில் இல்லை!    28.6.2017
107. என் நேரத்தை வீணாக்காதீர்!    29.6.2017
108. எதனாலும் ஆக்கிரமிக்கப்படாத மனம்   3.7.2017
109. வீட்டின் மையத்தில் ஒரு படிப்பறை!   3.7.2017
110. குற்றவுணர்வும் தண்டனையும்!   4.7.2017
111. தன்னம்பிக்கையைத் தாண்டிய பெருவிழைவு!  7.7.2017
112. உத்தியோகம், உணவு, உல்லாசம்!    9.7.2017
113. வாழ்க்கை நமக்குத் தொழில்!    13.7.2017
114. உள்ளதிலிருந்து உண்மைக்கு!
   (A Metaphysical Odessey!) 19.7.2017
115. மரமானது அதன் கனியினால் அறியப்படும்!  23.7.2017
116. "மது நம்மால் மயக்கமுற்றது!"  (ரூமி)  23.7.2017
117. இவ்வளவு தானா?   25.7.2017
118. வண்ணத்துப்பூச்சியின் செய்தி!   29.7.2017
119. ஒரு வழிக் கதவு!    29.7.2017
120. உலகின் மறுபக்கம்   11.8.2017
121. முற்றுப்புள்ளியாகிப் போன தொடக்கப்புள்ளி!   16.8.2017
122. மனிதனின் அசலான வீடு!  19.8.2017
123. நோய் பிடித்த இனம்!   22.8.2017
124. மிகவும் நேர்மறையான ஒரு பதிவு!   24.8.2017
125. இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா? இல்லையா?  28 .8.2017
126. மனிதன் எங்கே தொடங்கி எங்கே முடிவடைகிறான்?  7.9.2017
127. பன்மையின் உலகமா? அல்லது உலகம் கடந்த ஒருமையா? 13.9.2017
128. மானுட மையப்பார்வை!   20.9.2017
129. எட்டாக்கனி (சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்!)   27.10.2017

[ஜனநாயகம்(அரசியல்) தொடர்பான கட்டுரைகள்]

130. எனது அரசியல் பிரவேசம்! •  15.11.2017
131. வாருங்கள், அர்த்தமுள்ள அரசியல் அறிவோம்! • 18.11.2017
132. மக்களின் தேர்தல் அறிக்கை! •  22.11.2017
133. யாருக்காக நான் பேசுகிறேன்?•   24.11.2017
134. பிரிவினைகளைக் கடந்த மக்கள் சமூகத்தின் கட்சி! •  28.11.2017
135. அரசியல்கட்சிகள் எனும் வியாபார நிறுவனங்கள்!•  29.11.2017
136. அரசியல் கட்சிகள் - அவசியத் தீமையா, அல்லது தீமையா? • 4.12.2017
137. பொதுவாக மக்கள் ஏன் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை?• 10.12.2017
138. இங்கேயும் எங்கேயும் இனி அரசியல் பேசுங்கள்! • 28.12.2017
139. 2018 புத்தாண்டுச் செய்தி! •  31.12.2017

2018

140. அரசு காலாவதியாகிவிட்டதா?• 09.01.2018
141. அநீதித்துறையில் அமளி! •15 .01.2018
142. பெரும்பணக்காரர்கள் - மானிடகுலத்தின் புற்றுநோய்!• 24.01.2018
143. நிறைவான சந்தோஷத்துடன் வாழ எவ்வளவு பணம் வேண்டும்?• 6.2.2018
144. தமிழ்நாடு திறந்துகிடக்கும் வீடல்ல!
       (கமல ஹாசனின் உண்மையான நிறம்!) •11.2.2018
145. வெட்கக்கேடான சாதனை!• 09.03.2018
146. நியூட்ரினோ திட்டம் (ஆர்வக்கோளாறின் விஞ்ஞானம்!)
       [சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தானது!]•  19.03.2018

147. கடவுள் பிஞ்சுகள்! •22.3.2018
148. தமிழ்த் தேசியத்தின் அவசியம்•  27.4.2018
149. சரியான பாடல், தவறான தாளம்•  6.5.2018
150. குழம்பிய அரசியல் குட்டையில்• 15.5.2018
151. நானும் புத்தகங்களும்• 21.6.2018
152. முழு-அறிவும் விஞ்ஞான அறிவும் • 23-09-2018
153. நிலையாமை அல்லது இரண்டாம் வெப்பச்சலன விதி • 02-10-2018
154. உலகம் எவ்வாறு தோன்றியது? • 14-10-2018
155. தன் மையத்தைத் தேடும் பிரபஞ்சம்! [The Extreme Anthropic Principle]
      • 16-10-2018 -14.11.2018
156. பிரபஞ்சத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம்!  
        (The Fate of the Universe) 07-11-2018 - 03.12.2018   


2019
 
157. பாதை ஒன்றா? பலவா?  (19-04-2019 - 27-04.2019)
158. உண்மையிலேயே நீங்கள் யார்? (29.04.2019 - 03.05.2019)
159. சமரசமற்ற ஆன்மீகவிசாரம்   (03.05.2019 -10.05.2019 )
160. முதலும் முடிவுமானது அறம்  (11.05.2019 - 15.05.2019)
161. ஞானத்தின் பயன்  (05.06.2019 - 11.06.2019)
162. அனைத்து வாதங்களுக்கும் அடியில் இயங்கும் வாதம் (மா.கணேசன்/    நெய்வேலி/ ( 23.08.2019 -28.08.2019))
163. காதல் கண்ணில்லாதது! சாதி கண்மூடித்தனமானது! (Sunday 18 August 2019)
164. தலித் பிரச்சினை தலித்துக்களின் தனிப் பிரச்சினையா? (Tuesday 6 August 2019)
165. மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா? (Saturday 28 March 2020)

2024
   
166. "நான்" என்பது உங்களுக்குள்ளே எங்கேயிருக்கிறது? (30.08.2024)
167. ஞானத்தின் திறவுகோல் (27.09.2024)



மா,கணேசனின் பிரசுரிக்கப்பட்ட நூல்கள் :

• 2012 யுகமாற்றத்தின் வாசல் • விலை ரூ. 95/-
• 2913 மனிதனின் சொல் • விலை ரூ,100/-
• 2014 கடவுள் புதிர் (ஆத்திகம் நாத்திகம் இரண்டுக்கும் அப்பால்) •
   விலை ரூ. 160/-

நூல்கள் வேண்டுவோர்
94881 94381,
93456 17754
ஆகிய எண்களில் தொடர்புகொள்ளவும்
*நூல்கள் 20% தள்ளுபடியுடன் கிடைக்கும்.


ஆர்வமிக்க வாசகர்கள் எனது பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்! 
இலவசமாகப் பெற்றதை இலவசமாகப் பகிர்வதில் மகிழ்கிறேன்!
நன்றி!
மா.கணேசன் • நெய்வேலி • 13-11-2018
Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω 

Saturday, 13 October 2018

உலகம் எவ்வாறு தோன்றியது?


   

        பிரபஞ்சம் குறித்த நம்முடைய உண்மையான பிரச்சினை, அது எவ்வாறு தோன்றியது   
    என்பதைவிட, கடைசியில் அது எத்தகைய நிலையை அடையும் என்பதுதான்! மேலும்               
    இப்பிரச்சினை பிரபஞ்சத்தைப் பற்றியதுமட்டுமல்ல; மாறாக, நம்மைப்பற்றியதும்தான்;
    நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்காலத்திற்குள் கண்டடையவேண்டிய அர்த்தம் பற்றிய
    அவசரப் பிரச்சினையாகும்! 


"ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது"


கிரேக்கத் தத்துவஞானி பார்மினடீஸ், கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
"ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது" என்று கற்பித்தார். இவரது இந்தத் தத்துவக் கருத்தாம்சமானது பலமுறை பலராலும் எதிரொலிக்கப்பட்டது. மேலும், இது உலகின் பல மதங்களின் குறிப்பாக, யூதம், மற்றும் கிறித்துவத்தின் அடிப்படையாகவும் அமைந்தது என சொல்லப்படுகிறது.

பார்மினடீஸின் இக்கருத்தாம்சத்தை ஏற்றுக்கொண்ட அவரது அனுசாரிகளால் ஒருபோதும் உலகம் தானே தன்னியல்பாக தோன்றியது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒன்று, உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கவேண்டும்; அல்லது, எல்லாம் வல்ல ஒரு மகா சக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே அவர்களின் துணிபு. 'கடவுள் தான் உலகைப் படைத்தார்' என்று விவிலியம் கூறுகிறது, மேலும், கிறித்துவ இறையிலாளர்கள் ஒன்றுமில்லாததிலிருந்து இந்த உலகம் படைக்கப்பட்டது எனும் கருத்தை முன்வைக்கிறார்கள். கடவுளுக்கு மட்டுமே இத்தகைய காரியத்தைச் சாதிக்கும் ஆற்றல் உள்ளது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்விடத்திலிருந்து தான் நாம் நமது ஆய்வைத்தொடங்குகிறோம். "ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது" எனும் பார்மினடீஸின் கூற்று சரியானதே. ஆயினும் அக்கூற்றைத் தழுவிய உப-கூற்றுக்களான 1. உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கவேண்டும்; அல்லது
2. எல்லாம் வல்ல ஒரு மகா சக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும். என்பவை சரியானவை யாகத் தெரியவில்லை; அவைகுறித்து இப்போது பார்ப்போம்.


ஆரம்பமும் முடிவுமில்லையேல் அர்த்தமுமில்லை!


முதலிடத்தில், உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், உலகம் எவ்வாறு தோன்றியது என்பதிலிருந்து இன்றுவரையிலான வரலாற்றை விஞ்ஞானிகள் ஓரளவிற்கு துல்லியமாகக் கண்டறிந்து சொல்லியுள்ளனர். அதாவது, பிரபஞ்சத்தின் வயது கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகள் (1500 கோடி ஆண்டுகள்) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 1500 கோடி ஆண்டுகளில், பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து 1100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே முதல் உயிர் நம் பூமியில் தோன்றியதாகவும்; அதிலிருந்து கிட்டத்தட்ட 400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே (கிட்டத்தட்ட இன்றிலிருந்து இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) மனிதன் தோன்றினான் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், பிரபஞ்சம் தோன்றிய முதல் ஒரு நிமிடத்தில் அது ஒரு திராட்சைப் பழ அளவுதான் இருந்ததாகவும்; பிறகு ஏற்பட்ட திடீர் வீக்கத்தின் (Inflation) விளைவாக விரிவடைந்ததாகவும், இன்றளவும் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

அதாவது, இன்று நாம் காணும் பிரபஞ்சமானது படிப்படியாக வளர்ச்சி பெற்று, பரிணாமம் கண்டு இந்த நிலையை எட்டியுள்ளது என்பதற்கான ஆராய்ச்சிபூர்வமான சான்றுகளைக் கொண்டு காணும்போதும், உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை! மாறாக, 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரு வெடிப்பு என்ற ஒரு நிகழ்வில் உலகம் தோன்றியது எனும் விஞ்ஞானிகளின் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை! ஏனெனில், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்கிற வரையறைக்கிணங்க உலகின் தோற்றம் குறித்த விடயத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரையில் நாம் விஞ்ஞானிகள் கண்டு கூறுவதைப் புறந்தள்ளிட முடியாது; அதேநேரத்தில், அவர்கள் காணாமல் கூறுகிறவற்றை, அதாவது திரட்டிய சொற்பத் தரவுகளைக்கொண்டு அனுமானத்தின் அடிப்படையில் கூறுபவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை!

முக்கியமாக, நம் பிரபஞ்சமானது அளவில் சிறிதாகத் தோன்றி, பிரும்மாண்டமாக வளர்ந்துள்ளது; மிக எளிய அமைப்பாகத் தொடங்கி மிகவும் சிக்கலான அமைப்புகளாக பரிணமித்துள்ளது. மேலும், உயிர், உணர்வு ஆகிய புதிய புதிய வெளிப்படு பண்புகளையும் (Emergent Properties)கொணர்ந்துள்ளது. ஆக, இத்தகைய அம்சங்களையெல்லாம் கொண்டு காணும்போது, நிச்சயமாக, உலகம்/பிரபஞ்சம் என்றென்றைக்குமாக இருந்திருக்க வாய்ப்பேயில்லை என்று திடமாகச் சொல்லலாம்.

மேலும், ஆரம்பம் என்பது இல்லாத ஒரு அம்சத்திற்கு முடிவென்பதும் இருக்கமுடியாது. ஆரம்பமும், முடிவும் இல்லாத ஒரு அம்சத்திற்கு வளர்ச்சி, பரிணாமம், குறிக்கோள், இலக்கு அர்த்தம் என்று எதுவுமே இருக்கவாய்ப்பிருக்காது!

உலகம் கடவுளால் படைக்கப்பட்டதா?


இரண்டாவதாக, "இவ்வுலகம் எல்லாம் வல்ல ஒரு மகாசக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும்!" எனும் கருத்து சற்று சிக்கலான ஒன்று. ஒரு பொருளுக்கு பிறப்பு, ஆரம்பம் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு மூலம் என்ற ஒன்று இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில், இவ்வுலகம் தோன்றுவதற்கும் ஒரு மூலம் இருந்தாக வேண்டும்; இவ்வாறு இவ்வுலகின் மூலம், அல்லது தோற்றுவாய் குறித்து மேற்குறிப்பிட்ட வாசகம் சுட்டுகிறது என்றால் அதில் சிக்கலில்லை. அதேவேளையில், அந்த மூலம் எத்தகைய மெய்ம்மை? அது தன்னளவில் முழுமையானதாக இருக்கும் ஒன்றா? மேலும், எவ்வாறேனும் அதை நாம் அறியக்கூடியதாக, உணரக்கூடியதாக, அணுகக் கூடிய வகையில் அமைந்த மெய்ம்மையா? அல்லது நமது கற்பனையின் உருவாக்கமா? என்பதுபோன்ற எல்லா கேள்விகளுக்குமான சரியான பதில்களைக் கொண்டுதான் நாம் ஒரு சரியான முடிவிற்கு வரமுடியும்.

அடுத்து, அனைத்துக்கும் மூலமாக விளங்கக்கூடிய ஒன்றை நாம் மூல-மெய்ம்மை எனக் கொள்வதில் யாதொரு சிக்கலும் இருக்கவாய்ப்பில்லை. அது எத்தகைய மெய்ம்மை என்பதை அறிவதுதான் நம்முடைய வாழ்வை அர்த்தப்படுத்தும் குறிக்கோளும், இலக்குமாகும்! இப்போது நாம் சில முன்வைப்புகோள் (Propositions) களைக் கொண்டு, "இவ்வுலகம் எல்லாம் வல்ல ஒரு மகாசக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும்!" எனும் கூற்றிலுள்ள முடிச்சுக்களை அவிழ்க்க முயல்வோம்:

1. உலகம் இயற்கையாக தன்னில் தானே தோன்றிடஇயலாது!
2. அது என்றென்றைக்குமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை!
3. அது கடவுளாலும் படைக்கப்படவில்லை!
4. இன்னும் அது சூனியத்திலிருந்து கடவுளால் படைக்கப்படவும்,
  அல்லது இயற்கையாகத் தோன்றிடவும் இயலாது!

முதல் முன்வைப்புகோளை அதற்குரிய இடத்தில் அலசுவோம். இரண்டாவது முன்வைப்புகோளை ஏற்கனவே பார்த்துவிட்டோம். மூன்றாவது முன்வைப்புகோளான, "உலகம் கடவுளால் படைக்கப் படவில்லை!" என்பதைப் பார்ப்போம். ஒருவகையில், மூல-மெய்ம்மையை நாம் 'கடவுள்' என குறிப்பிடலாமெனில், அக்கடவுள் எல்லாம் வல்லவராகவே இருந்தாலும் அவரால் உலகைப் படைக்க இயலாது! ஏனென்றால், அவ்வாறு படைக்கும் செயலால், படைப்பவன், படைப்பு எனும் இருமை சம்பவித்திடும்; அது பெரும் சிக்கலைத் தோற்றுவித்திடுவதாய் அமைந்திடும்! ஆனால், கடவுளால் மிக எளிதாகவும், இருமைக்கு இடமளிக்காத வகையிலும் ஒன்று சாத்தியம்; அது என்னவெனில், கடவுள் உலகமாக உருமாறுவதுதான்!

வித்து வெடித்து விருட்சமாய் எழுந்தது!


ஆம், கடவுள் உலகைப் படைக்கவில்லை; மாறாக, கடவுளின் மறைவால் உலகம் தோன்றியது! அதாவது, வித்து வெடித்து விருட்சம் முளைத்தெழுவதுபோல மூலமெய்ம்மையாகிய கடவுள் மறைந்து இவ்வுலகம் வெடித்தெழுந்தது! கடவுள் இவ்வாறு தனக்குப்புறத்தே உலகைப் படைக்காமல், தன்னை மறைத்து உலகமாக உருமாறியதால், இத்தகைய உருமாற்றத்தை நாம் "எதிர்-படைப்பு" (Anti-Creation) எனவும் கொள்ளலாம்! அதாவது, மூலமெய்ம்மையாகிய கடவுள் தன்னைச் சுருக்கிக்கொண்டு (Involution) உலகமெய்ம்மையாக மாறியுள்ளார். மூலமெய்ம்மையின் சுருக்கம்தான் உலகமெய்ம்மை என்றால், உலகமெய்ம்மையின் விரிவாக்கமான பரிணாமம் தான் (Evolution) மீண்டும் மூலமெய்ம்மை தன்னை மீட்டெடுக்கும் வழிமுறையாகும்! கடவுள் அல்லது மூலமெய்ம்மையானது தனது படைப்புக்கு வெளியே இருக்க முடியாது; அதே நேரத்தில், படைப்புக்கு உள்ளும் இருக்கமுடியாது! மாறாக, படைப்பின் மலர்ச்சியில்தான் மீண்டும் மூலமெய்ம்மையாகிய கடவுள் வெளிப்படமுடியும்! இவ்வகையில், கடவுளை ஒரு கடப்பு-நிலை நிஜம் (Transcendent Reality) எனவும் கொள்ளலாம்.

மேலும், எவ்வொரு வித்தும் தனக்குப் புறத்தே விருட்சத்தைப் படைப்பதில்லை; மாறாக, வித்துதான் விருட்சமாக உருமாறுகிறது! இது இயற்கைக்கு மட்டுமல்ல இயற்கையின் மூலகாரணமான கடவுள் எனும் மூலமெய்ம்மைக்கும் பொருந்தும்! மெய்ம்மையின் வெளிப்பாடுகள் எண்ணற்றவையாயினும், அடிப்படையில் மெய்ம்மை என்பது ஒன்றாக, ஒருமையாகத்தான் இருக்கமுடியும்; பலவாகப் பன்மையில் இருக்கமுடியாது! அடுத்து மூலமெய்ம்மை மறைந்து உலகமெய்ம்மையாக எழுந்தாலும், மீண்டும் மூலமெய்ம்மை தன்னை மீட்டெடுக்கும் வகையிலான உபாயத்தை அவ்வுலகமெய்ம்மையுள் பொதிந்திருப்பது தவிர்க்கவியலாததாகும்! பரிணாமம் என்பதே அந்த உபாயம் ஏனெனில், உலகம் உலகிற்காக இல்லை! மனிதனும் தனக்காக இல்லை! வித்து தன்னைப் பன்மடங்காகப் பெருக்கிக் காணும் வழிமுறையே விருட்சம்!

வித்தானது விருட்சமாகி, விருட்சத்தின் ஒவ்வொரு கனியின் வழியாகவும் தன்னை மீள்-கண்டுபிடிப்பு செய்கிறது! கடவுள் எனும் மூலவித்தும் அப்படித்தான்; கடவுள் உலக விருட்சமாகி, உலக விருட்சத்தின் கனியான மனிதஜீவி ஒவ்வொருவரின் உணர்வுப் பரிணாமத்தின் முழுமையிலும் (அக மலர்ச்சியிலும்) தன்னைக் கண்டடைகிறார்!

கடவுள் உலகைப் படைக்கவில்லை; மாறாக, உலகமாக மாறினார் என்ற உண்மை மிகவும் மையமானதும், முக்கியமானதும் ஆகும்! இவ்வுண்மை மெய்ஞானப்பூர்வமானதாகும்! மெய்ஞானம் என்பது, ஒரே நேரத்தில் விஞ்ஞானம், இறையியல், ஆன்மீகம், தத்துவம் என எல்லா அணுகுமுறை களையும் உள்ளடக்கிய முழுமையானதொரு அறிதல்முறையாகும்.

உலகம் தன்னைத்தானே படைத்துக்கொள்ளமுடியுமா?


இப்போது நாம் 'உலகம் இயற்கையாக தன்னில் தானே தோன்றிடஇயலாது!' எனும் முன்வைப்புகோள் பற்றிக் காண்போம். விஞ்ஞானிகள் தங்கள் மனங்களில் பௌதிக விதிகள் என்ற பெயரில் சில வரையறைகளை, கட்டுப்பாடுகளை, நிபந்தனைகளை கற்பனை செய்துகொண்டு அவற்றிற்கேற்ப இயற்கையும், உலகமும் பொருந்திவரவேண்டும் என்கிறவகையில் இயற்கையையும், உலகையும் பற்றிய கோட்பாடுகளைப் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்!  நிச்சயமாக, இவ்வுலகம் அடியோட்டமான சில விதிகளைக் கொண்டே இயங்குகிறது; உலகம் சில ஒழுங்குமுறைமைகளைப் பின்பற்றாமல் தினமும் சூரியன் காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதும் நியதி மாறாமல் நிகழ்வதென்பது சாத்தியமாகாது.

அதே நேரத்தில், இயற்கை/பௌதிக விதிகளைக்கண்டுபிடிப்பது என்பது வேறு, அவற்றைவிட அவை எதனுடைய விதிகள் என்பதைக் கண்டுபிடிப்பது என்பது வேறு! இதுவரை, விஞ்ஞானிகள் எண்ணற்ற பல இயற்கை விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்; ஆனால், அவை உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளதே தவிர, உலகம் ஏன் இருக்கிறது, எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது; வாழ்வின் அர்த்தமென்ன, இறுதி உண்மை எத்தகையது,.. என்பன போன்ற கேள்விகளுக்கு யாதொரு உருப்படியான பதிலையும் அவ்விதிகள் அளித்திடவில்லை!

நியூட்டனின் இயக்கவிதிகள் வெறுமனே பருப்பொருளின் இயக்கத்தை மட்டுமே விளக்குகின்றன; பருப்பொருளின் இயக்கம் என்பது உலகின் ஒரு பண்பு மட்டுமே தவிர, அதை அறிந்துகொண்டால், ஒட்டுமொத்த மெய்ம்மையையும் அறிந்துவிட்டதாக ஆகுமா? மேலும், உலகம் என்பது வெறுமனே இயக்கத்திலுள்ள பருப்பொருள் மட்டுமல்ல. அடுத்து, பௌதிக இயக்கம் மட்டுமே பருப்பொருளின் ஒரே பண்பும் அல்ல. மாறாக, அப்பருப்பொருள் பிரதானமாக பண்புரீதியாக மாற்றமடையும் பரிணாம இயக்கத்திற்கும் உட்பட்டுள்ளது என்பது பௌதிக இயக்கத்தைவிடவும் முக்கியமானதல்லவா? 

உள்ளதிலிருந்து உண்மை உய்த்தறியப்பட வேண்டுமே தவிர, உள்ளதையே உண்மை என கட்டித் தழுவிக்கொள்வது முறையாகாது! பருப்பொருள் என்பது உலகின் பிரதான அடிப்படைப் பொருளும், பண்பும் என்பது வெளிப்படையானது; ஆனால், அதுவே உலகின் சாராம்சமான இறுதிப் பண்பாக இருக்கமுடியாது! ஏனெனில், பருப்பொருளானது பண்புரீதியாக பௌதிக நிலையல்லாத வேறு நிலைகளை (உயிர், மற்றும் உணர்வு ஆகிய நிலைகளை) எட்டும்முகமாகத் தன்னைக் கட்டியெழுப்பி உயர்ந்திடும் சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் வழிமுறையில் முனைந்து ஈடுபட்டுள்ளது! 

பருப்பொருள் (அதன் அடிப்படை வடிவமான அணுத்துகள்கள்) என்பது வெறும் கட்டுமானப்பொருள் மட்டுமே தவிர, அதுவே பரம்பொருள் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள், குறிப்பாக, குவாண்டம் பௌதிக விஞ்ஞானிகள் முற்றிலும் புதுவிதமான ஒரு ஆதியாகமத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!
பௌதிகப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய பிரச்சினை விஞ்ஞானத்தின் எல்லையிலிருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், பல விஞ்ஞானிகள் அது விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லைக்கு  (scope) அப்பால் உள்ளது என்கிறார்கள். ஆயினும், விஞ்ஞானிகள் சமீபகாலமாக மிகவும் தீவிரமாக பௌதிக விதிகளை மீறாமல் எவ்வாறு பிரபஞ்சமானது வெற்றிடத்திலிருந்து தோன்றியிருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்துவருகிறார்கள். ஆனால், எவ்வாறு எதுவும் யாதொரு செயற்படுகாரணமும்  இல்லாமல் தோன்றிடமுடியும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது!

இப்புதிரை தீர்ப்பதற்கான திறவுகோல் குவாண்டம் பௌதிகம் தான் என விஞ்ஞானிகள் தீவிரமாக நம்புகிறார்கள். ஆனால், குவாண்டம் நிகழ்வுமுறைகள் உள்ளார்ந்த வகையில் முன்னறிய இயலாத தாகவும், நிச்சயத்துவமற்றதாகவும் உள்ளன. குவாண்டம் நிகழ்வுகள் ஒரு கணத்திலிருந்து அடுத்த கணத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதை முன்னறிய முடியாது. குவாண்டம் உலகைப் பொறுத்தவரை, புறக்காரணமில்லாத தன்னியல்பான மாற்றம் என்பது அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல, அது தவிர்க்கவியலாததும் ஆகும் என்கிறார் பால் டேவிஸ் எனும் விஞ்ஞானி.

ஆக, குவாண்டம் பௌதிகவியல்தான் நவீனகால விஞ்ஞானத்தின் வேதப்புத்தகமாகத் திகழ்கிறது எனலாம்! குவாண்டம் பௌதிகவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் பலரும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு குவாண்டம் பௌதிகம் தான் என்பதாக திடமாக நம்புகிறார்கள்! இருட்டில் மறைந்திருக்கும் ஒன்றை மேலும் இருட்டான ஒன்றின் துணையுடன் கண்டறியும் முயற்சியில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது! அது அவர்களை பலவிதமான கற்பனைக் கோட்பாடு களுக்கும், முட்டுச்சந்துக் கோட்பாடுகளுக்குக் கொண்டுசென்று அலைக்கழிப்பதாய் உள்ளது! பாவம் பால் டேவிஸ், அவரால் விஞ்ஞானத்தையும் விடமுடியவில்லை, மெய்ஞ்ஞானத்தையும் முழுமையாகப் பற்ற இயலவில்லை!

ஆம், குவாண்டம் பௌதிகமானது, வெற்றிடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றமுடியும் என்கிறது! அதாவது, வெற்றிடம் அல்லது வெறுமை என்ற சொல்லுக்கு முன்னொட்டாக 'குவாண்டம்' என்ற சொல்லைச் சேர்த்தால் மூலமெய்ம்மை குறித்த பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என விஞ்ஞானிகள் எண்ணுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்களுடைய பெருமுயற்சி யாவும் குவாண்டம்-வெற்றிடத்தை 'பருப்பொருள்-பிரபஞ்சத்தின்' கருப்பை (Womb) என நிறுவுவதாகவே இருக்கிறது! அதாவது, முடிவாக, "பருப்பொருள் தான் பரம்பொருள்" என்று அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை, அவ்வளவுதான்! இவ்வாறு, பருப்பொருளை மூலமெய்ம்மையாகக் கொள்வது என்பது கருத்தினரீதியான தவறு (Categorical Mistake)ஆகும்!

அடுத்து, அணுக்கருத்துகள்களின் மட்டத்தில் செயல்படக் கூடியதாகத் தோன்றிய குவாண்டம் பௌதிகவியலை அண்டம் மொத்தத்திற்கும் பொருத்திக் காணவும் முடியும் என்பதாக "குவாண்டம் பிரபஞ்சவியல் (Quantum Cosmology) எனும் புதிய துறையையும் அவர்கள் தொடங்கியுள்ளனர். ஏனெனில், இம்மாபெரும் பிரபஞ்சமானது அணுக்கரு மட்டத்திலிருந்துதான் தொடங்கியது. ஆக, அவர்கள் குவாண்டம் பௌதிகத்தைக் கொண்டு பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்வாகக் கருதப்படும் 'பெரு வெடிப்பை' விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடத்தில், 'பெரு வெடிப்பு' கோட்பாடு பற்றி மிகச் சுருக்கமாகக் காண்போம். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமானது, கிட்டத்தட்ட 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 'பெருவெடிப்பு' என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வில் தோன்றியது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது, இன்று நாம் காண்கின்ற இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பருப்பொருளும் - உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), அதிலுள்ள நட்சத்திரங்கள், நட்சத்திரங்களைச் சுற்றிச் சுழலும் கிரகங்கள், என எல்லாப் பொருளும் ஆதியில் ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அது அழுத்தம் காரணமாக வெடித்ததாகவும், அவ்வெடிப்பின் விளைவாக பிரபஞ்சம் தோன்றியதோடல்லாமல், இன்றளவும் விரிவடைந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அப்பொருள் திணிவு எவ்வாறு, எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து அக்கோட்பாடு தெளிவாக எதையும் விளக்கவில்லை! பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்று நாம் விஞ்ஞானிகளைக் கேட்டால், 'பெரு வெடிப்பு எனும் நிகழ்வில் தோன்றியது!' என்பார்கள்! அப்பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்று கேட்டால், 'பெருவெடிப்பிலிருந்துதான், காலம், வெளி, பருப் பொருள், யாவும் தோன்றின; ஆகவே அதற்கு முன்னர் காலம் என்பதில்லை' என்பார்கள்!

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், பெருவெடிப்புக்குப் பிறகான நிகழ்வுகளை, நிலைமைகளை உருவான அம்சங்களைப் பற்றி அவர்கள் அதிகமாக விளக்கிச் சொல்லமுடியும், அதிலும் குறிப்பாக, பொருண்மையான நிகழ்வுகள் மற்றும் அம்சங்களைப்பற்றி மிகத் துல்லியமாக அவர்களால் ஆராய்ந்து சொல்லமுடியும். அதே நேரத்தில், பொருண்மைப் பண்பிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வுகளையும், அம்சங்களையும் பற்றி, அதாவது, உயிர்த் தோற்றம், மனித மனம், அல்லது உணர்வு போன்ற பண்புகளைப் பற்றி அவர்களால் அவ்வளவு சரியாகச் சொல்லமுடிவதில்லை! மேலும், விஞ்ஞானத்தின் தற்போதைய சட்டகத்தைக் (Paradigm) கொண்டு முப்பெரும் புதிர்களான உலகம், உயிர், உணர்வு இம்மூன்றும் எவ்வாறு தோன்றின என்பதைச் சரியாக விளக்குவது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை!

உலகம்/பிரபஞ்சம் என்பது அடிப்படையில் பருப்பொருள் தான்; அதாவது, அணுத்துகள்கள் தான்! உலகம் எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியும், பருப்பொருள் எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியும் ஒன்றுதான்! குவாண்டம் பௌதிகவியலானது அணுத்துகள்கள் வெறுமை, அல்லது வெற்றிடம், அதாவது ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றமுடியும் என்கிறது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில், பருப்பொருளின் வேர்களைத் தேடிப்போன விஞ்ஞானிகள் முடிவில் வெற்றிடத்தை சென்றடைந்துள்ளனர்! இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும், சூரியன், சந்திரன், கிரகங்கள், பூமி, பூமியிலுள்ள உயிரினங்கள், மனிதன், மற்றும் உணர்வு உள்பட அனைத்தையும் பருப்பொருளின் சொற்களில் விளக்கிச்சொன்ன விஞ்ஞானிகள் இனி வெற்றிடத்தின் சொற்களில் விளக்குவார்களா என்பது தெரியவில்லை!

உலகின், அதாவது, பருப்பொருளின் வேர்கள் வெற்றிடத்தின் இதயத்திற்குள் தொலைந்துவிட, அதனுடன் சேர்ந்து அனைத்து பௌதிகவிதிகளும் அர்த்தமிழந்துவிடுகின்றன! அதாவது உலகின் பிறப்புக்கணத்தில் அனைத்தும் - காலம், வெளி, பொருள் என அனைத்தும் பூஜ்ஜியம் என்ற தனி-நிலைப்பாட்டுப் புள்ளி (Singularity) யிலிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு மரமானது எவ்வாறு தோன்றியது என்பதை அறிய அதன் வேர்கள் வரை கீழே சென்று பார்த்துவிட்டு, மரமானது வேர்களிலிருந்துதான் தோன்றியது என்று சொல்வதுபோல, பருப்பொருள்தான் உலகின் மூலப்பொருளும் முடிவான பொருளும் என்று இதுவரை சொல்லிக்கொண்டிருந்தார்கள்! தற்போது, குவாண்டம் பௌதிகவியலைக் கொண்டு மரத்தின் வேர்களைத் தாண்டி இன்னும் கீழே சென்று பார்த்துவிட்டு, ஆகா! மண்ணிலிருந்துதான் மரம் தோன்றியது என்று சொல்வதுபோல, வெற்றிடத்தில், அதாவது ஒன்றுமில்லாததிலிருந்தே உலகம் தோன்றியது என்கிறார்கள் விஞ்ஞானிகள்! அவர்கள் கண்டுபிடிக்கத்தவறியது மரத்தின் உண்மையான மூலமான வித்தைத்தான்! வித்து பற்றிய உணர்வே இல்லாமால் அவர்கள் எதையெதையோ எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்! மரத்தின் மூலமான வித்தை அதன் கனிகளில்தான் தேடவேண்டும்!

மேலும், பருப்பொருளாயினும், வெற்றிடமாயினும் எதுவாயினும் யாவும் ஒரு மூலத்திலிருந்துதான் தோன்றியாகவேண்டும்! உண்மையில் வெற்றிடம் என்பதும் பருப்பொருளுடன் இணைந்த ஒரு பண்பு தானாகும்! அதாவது, கடவுள்தான் உலகைப் படைத்தார் என்று வைத்துக்கொண்டோமேயானால், வெற்றிடத்தையும் அவரேதான் படைத்திருக்கவேண்டும்! மூலமெய்ம்மைக்கு வெளியே யாதொரு பண்பும், நிஜமும் இருக்க முடியாது; அது ஒன்றுமில்லாத வெற்றிடமாயினும் சரி!

அடுத்து, பருப்பொருள், வெற்றிடம் என்பவற்றின் உள்ளார்ந்த பண்பு எத்தகையது என்று காணும்போது, அவை பொருண்மையானவை, சடத்தன்மையைச் சேர்ந்தவை என்பதால், அவை தம்மில் தாமே தோன்றுவதற்கான அடிப்படையையோ, காரணத்தையோ, ஆற்றலையோ கொண்டவையல்ல! அதாவது, பருப்பொருளோ, வெற்றிடமோ தாமே தோன்றுவதற்கான வாய்ப்பற்றவை; ஆகவே, பருப்பொருளாலான உலகமும் தானே தோன்றிட இயலாது! அப்படியானால், தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கான அடிப்படையை, காரணத்தை, ஆற்றலைக் கொண்ட பண்பு, அல்லது அம்சம் எதுவாக இருக்க முடியும் என்பதை நாம் கண்டறிந்தாக வேண்டும்! நாம் அறியும் வகையில் இவ்வுலகம்/பிரபஞ்சம் சடப் பண்பு (பருப்பொருள்), உயிர்ப்பண்பு (உயிர்ஜீவிகள்), உணர்வுப் பண்பு (மனிதஜீவி) ஆகிய மூன்று பண்புகள் உள்ளன. பண்பளவில், பருப்பொருளின் சடப்பண்பைவிட உயிர்ஜீவிகளின் உயிர்ப்பண்பு மேலானது ஆகும்; அடுத்து உயிர்ப்பண்பைவிடவும் மனிதஜீவிகளின் உணர்வுப்பண்பு மேலானது ஆகும். ஆனால், பரிணாம ரீதியாக மனித உணர்வானது, மனிதன் எனும் உயிர்ஜீவியைச் சார்ந்ததாகவும், பொதுவாக உயிர்ஜீவிகள் அனைத்தும் பருப்பொருளாலான உலகைச் சார்ந்ததாகவும் உள்ளதைக் காண்கையில், பருப்பொருளின் சடப்பண்பைப் போலவே, உயிர்ப்பண்பும், உணர்வுப் பண்பும் தன்னில் தானே தோன்றுவதற்கான அடிப்படையையும், காரணத்தையும், ஆற்றலையும் கொண்டவையல்ல என்ற முடிவுக்கு வரமுடியும்!

ஆனால், பருப்பொருளின் பரிணாமம் ஏன் உயிர்ப்பண்பை நாடியும், அதைக்கடந்து உணர்வுப்பண்பை நாடியும் செல்லவேண்டும்? என்ற கேள்வி முக்கியமானதாகும். மேலும், மனிதஜீவியின் வழியாக எட்டப்பட்ட உணர்வுப் பண்பை அடுத்து வெளிப்படவிருக்கும் பண்பு எத்தகையதாயிருக்கும் என்ற கேள்வி அதிமுக்கியமானதாகும்! ஏனெனில், பரிணாமத்தில் இறுதியாக வெளிப்படும் பண்பைச் சார்ந்துதான் ஒட்டுமொத்த உலகமும் இயங்குகிறது! வித்தின் மறைவால் முளைத்துத் தோன்றிய விருட்சத்தின் ஒட்டுமொத்த இயக்கமும், அவ்வித்தினை மீள்-உருவாக்கம் செய்வதை நோக்கியே  அமைந்துள்ளது!

வித்து → விருட்சம் → வித்து


நாம் இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு அதன் மூலத்தைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இந்த விருட்சத்தின் இலைகள், கிளைகள், அடிமரம், ஏன் வேர்கள்வரை சென்று ஆராய்ந்து அவற்றின் விதிகளையும் கண்டறிந்துள்ளோம். அதே நேரத்தில், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் போன்ற பகுதிகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தவறி விட்டோம்! ஏனெனில், உண்மையில் நாம் இவ்விருட்சத்தின் எந்தப்பகுதியாக இருக்கிறோம் என்பதை அறியத் தவறிவிட்டோம்! ஆம், நாம் இன்னும் நம்மை அறியவில்லை! நாமே அதன் பிஞ்சுகளாகவும், காய்களாவும், கனிகளாகவும் இருக்கிறோம் என்பதையும், நாம் முற்றிக்கனியும்போது நாம் தேடிக்கொண்டிருக்கும் மூலத்தை, அதாவது, வித்தை நம்முள் கண்டடைவோம் என்பதையும் நாம் இன்னும் அறியவில்லை!

ஏனெனில், நீண்ட நெடுங்காலமாக நாம் விருட்சத்தை பிரதானப்படுத்திடும், மையப்படுத்திடும் பார்வைக்கு நம்மைப் பழக்கப்படுத்தி வந்துள்ளோம்! மூலத்தைத் தேடும் நமது பார்வை, சிந்தனை யாவும் பின்னோக்கியதாக, பிரபஞ்ச விருட்சத்தின் கடந்தகால வரலாற்றை அகழ்ந்து ஆராய்வதாக மட்டுமே அமைந்துள்ளதே தவிர, அதன் வருங்கால வளர்ச்சி நிலைகளைப்பற்றிய முன்னோக்கிய பார்வையும் சிந்தனையும் அற்றவர்களாயுள்ளோம்!

ஒரு புறம், விஞ்ஞானிகளாகிய நாம் இப்பிரபஞ்ச விருட்சத்தின் வேர்களைத் துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்; இன்னொரு புறம், அதன் எட்டவியலாத கிளைகளை எட்டியவரை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்! கீழே வேர்களைப் பற்றிச் சென்றால் அவை சூன்யத்துள் மறைந்துவிடுவதாயும், மேலே கிளைகளைப் பற்றிச்சென்றால் அவை எல்லையில்லாத அனந்தத்தில் விரிவடைவதாயும் நம்மைக் குழப்புகின்றன! ஆயினும் நாம் இவ்விருட்சத்தின் விதிகளை - அதாவது அடிமரத்தின் விதிகள், கிளைகள், மற்றும் இலைகளின் விதிகள் என பகுதிபகுதியாக, விருட்சத்தின் பகுதிகளைப் பற்றிய விதிகளை விலாவாரியாக தொகுத்துக்கொண்டு, அவ்விதிகளை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திக்காணும் வகையறியாமல், மிகவும் மேலோட்டமான புரிதலைத் தழுவிக் கொண்டு தத்தளிக்கிறோம்! உண்மையில் விருட்சத்தின் விதிகள் யாவும் வித்தினை மீள் உருவாக்கம் செய்யும் வழிமுறைக்குச் சேவைபுரியும் விதத்திலமைந்த, வித்தின் கருவிபூர்வமான விதிகளே என்பதை அறியாதவரை நம்மால் இப்பிரபஞ்ச விருட்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது!

விஞ்ஞானிகள் தங்கள் மனங்களில் பௌதிகவிதிகளை முன்னிறுத்தி, சில வரையறைகளை, கட்டுப்பாடுகளை, நிபந்தனைகளை விதித்துக்கொண்டு அவற்றிற்கேற்ப இயற்கையும், பிரபஞ்சமும் பொருந்திவரவேண்டும் என்கிறவகையில் இயற்கையையும், பிரபஞ்சத்தையும் பற்றிய கொள்கைகளை கோட்பாடுகளைப் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்! பௌதிகவிதிகள் என்பவை சில குறிப்பிட்ட பரிணாமப் பணிகளை அல்லது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகள் மாத்திரமே. மேலும், விதிகள் படிநிலைகளில் அமைந்தவை. பௌதிக விதிகள் என்பவை எந்த மூலவிதிகளின் உப-விதிகள் என்பதை அறியாமல் அவைகளை வழிபடமுடியாது! நிச்சயமாக பௌதிக விதிகள் என்பவை மூலவிதிகளோ, தலைமை விதிகளோ அல்ல!

'கடவுள்' எனும் மூலமெய்ம்மை!


முதலிடத்தில், அனைத்திற்கும் மூலமாக ஒரு மெய்ம்மை இருந்தாக வேண்டும் என்ற எளிய தர்க்கரீதியான முன்வைப்புகோளை ஏற்றுக்கொள்கிறோமெனில், அடுத்ததாக, அது எத்தகைய மெய்ம்மை என்பதை உய்த்தறிந்து கொண்டோமெனில், அதன்பிறகு அம்மெய்ம்மையை 'கடவுள்' என்றழைத்தாலும், அல்லது வேறு எப்பெயர், அல்லது குறியீடு கொண்டு குறிப்பிட்டாலும் ஒன்றுதான்!

மூலமெய்ம்மையின் ஒரு மூலப்பண்பு என்னவெனில், அது தன்னில் தானே முழுமையானதாக, தனக்கொரு மூலம் தேவையற்றதாக சுயம்புவாக இருத்தல் வேண்டும்! இத்தகைய பண்பு இப்பிரபஞ்சத்தில் இடம்பெற்றுள்ள நாமறிந்த சடம், உயிர், உணர்வு எனும் இம்மோன்று அம்சங்களில் எதற்கு உள்ளது என ஒப்பு நோக்கும்போது, மிகத் திடமாகத் தோற்றமளிக்கும் சடபொருளைவிடவும், இன்னும் உயிர்ஜீவிகளின் உயிர்ப்பண்பைவிடவும், கண்ணுக்குப் புலப்படாத உணர்வுக்குத்தான் இருக்கமுடியும். ஏனெனில், உணர்வுதான் அறிநிலைக்கும் (Awareness),அறிவுக்கும் அடிப்படையாக அமைந்ததாகும்! அதே நேரத்தில், உணர்வு என்றதும் நாம் மனித-உணர்வைக் குறிப்பிடவில்லை!

மனித-உணர்வு என்பது உணர்வின் தொடக்கச்சொல், அல்லது ஒரு ஆரம்ப நிலைதானே தவிர, அதுவே உணர்வின் இறுதிச் சொல்லோ, முழுமையோ அல்ல! ஆம், முழுமையானதொரு பேருணர்வு மட்டுமே படைப்பாற்றல் கொண்டதாயும், எண்ணற்ற சாத்தியப்பாடுகளின் உறைவிடமாயும் திகழக்கூடிய மெய்ம்மையாகும். ஆக, அத்தகைய உணர்வே மூலமெய்ம்மையாக அமையக்கூடிய, அதாவது தன்னில்தானே சுயம்பாகத்தோன்றக்கூடிய தகுதிபடைத்ததாகும்! நிச்சயமாக, அத்தகுதி பருப்பொருளுக்குக் கிடையாது! பருப்பொருளின் ஒரு சிறப்பு என்னவெனில், அது எல்லாவகையிலும் வளைந்துகொடுக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு பொருளாகும்; ஆகவேதான் அது பிரபஞ்சத்தின் கட்டுமானப்பொருளாக அமைந்துள்ளது. உயிர் என்பது பருப்பொருளின் சடப்பண்புக்கும், மனித உணர்வுக்கும் நடுவே அமைந்த இடைமுகம் (Interface) ஆகும்! உயிர்ப்பண்பின் சிறப்பு புலனுணர்வும், புலனறிவுமே ஆகும்! மனித உணர்வின் சிறப்பு அது மூலமெய்ம்மையின் சாயலில் எழுந்த மெய்ம்மை என்பதே!

ஒருவகையில், மூலமெய்ம்மையை கடவுள் என்ற சொல்லைக்கொண்டு குறிப்பிடுவதில் சிக்கல் இல்லாமலில்லை! ஏனெனில், 'கடவுள்' எனும் சொல் பெரிதும் தவறான புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்ட ஒன்றாகும். கடவுளைப் பற்றிச் சொல்லப்படும், 'எல்லாம் வல்லவர்', 'எல்லாம் அறிந்தவர்', என்பது போன்ற அதீத குணாதிசயங்கள் உண்மையில் மிகவும் பொதுப்படையான பண்புகளே தவிர, மூலமெய்ம்மையைக் குறிக்கும் துல்லியமான பண்புகள் அல்ல. ஆனால், இப்போது நாம் கடவுள் எனும் மூலமெய்ம்மையினை நுட்பம் மிகுந்த துல்லியமான சொற்களின் வழியாக இனம்காணும் முதிர்ச்சியைப் பெற்றுள்ளோம் எனலாம். அச்சொற்கள் எவையெனில், உணர்வு (Consciousness), அறிவு (Knowledge), தகவல் (Information) ஆகியவையே. இவை மூன்றும் உண்மையில் தனித்தனியானவையல்ல. இந்த ஒன்றில்-மூன்றாய் அமைந்த மெய்ம்மையின் வெளிப்பாடுகளே இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்துமாகும். அடுத்து, மூலமெய்ம்மையை 'கடவுள்' என்ற சொல்லைக் கொண்டு குறிப்பிடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால், நீங்கள் "ஒருமை" என்ற சொல்லைக் கொண்டு அழைத்துக் கொள்ளலாம்!

அடுத்து, 'படைப்பு' எனும் சொல்லும் பெரிதும் தவறான புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்ட ஒன்றாகும்! ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி, 'கடவுள்' எவ்வளவு வல்லவராயிருந்தாலும், அவரால் எதுவாகவும் ஆகமுடியுமே தவிர, எதையும் (தனக்குப்புறத்தே இருமை தோன்றும்வகையில்) படைக்க இயலாது! ஆம் ஒருமையும் முழுமையுமான மூலமெய்ம்மை உடைந்ததன் விளைவாகவே இந்த பன்மையின் உலகமான பிரபஞ்சம் தோன்றியது! ஆனால், பௌதிகவியல் விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தின் நான்கு அடிப்படை விசைகளையும், பன்னிரண்டு அடிப்படைத்துகள்களையும், அவற்றுக்கிடையேயான  இடைவினைகளையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் விளக்கும்வகையிலான ஒரு மாபெரும் ஒற்றைக்கோட்பாட்டை உருவாக்கிக் காண படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தன் வாழ்காலத்தின் 30ஆண்டுகளை அம்முயற்சியில் செலவிட்டு முடிவில் தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம்!

ஆனால், அந்த "மாபெரும் ஒருங்கிணைப்புக்கோட்பாட்டை" (Grand Unification Theory)யும், "அனைத்தையும் விளக்கும் கோட்பாட்டை" (Theory of Everything)யும் வெறுமனே பௌதிகத் தளத்தின் விதிகளைக்கொண்டு மட்டுமே உருவாக்கிடமுடியாது! அப்படியே உருவாக்கினாலும், அவற்றிலிருந்து, வேதியியல், உயிரியல், மற்றும் உணர்வு போன்ற வெளிப்படு பண்புகளை (Emergent properties) தருவிக்கவோ, புரிந்துகொள்ளவோ இயலாது! ஏனெனில், "பெருவெடிப்பு" என்பது பிரபஞ்சத்தின் பிறப்பைக் குறிக்கிற அதேநேரத்தில், அது ஒருமையும் முழுமையுமான மூலமெய்ம்மை உடைபடுதலைக் குறிக்கும் நிகழ்வும் ஆகும்! "பெரு வெடிப்புக்கு" முன் எதுவுமில்லை எனும் விஞ்ஞானிகளின் கூற்று மாபெரும் மோசடியாகும். மாறாக, பெருவெடிப்புக்கு முன்னிருந்த நிலையின் (மெய்ம்மையின்) சமச்சீர்- உடைவின் (Symmetry Breaking) விளைவாகவே வெளி-கால-பொருண்மைப் பிரபஞ்சம் தோன்றியது! ஆக, பெருவெடிப்பில் உடைந்த ஒருமை நிலையை மீண்டும் கட்டமைக்கும் பிரபஞ்ச இயக்கத்தைத்தான் நாம் பரிணாமம் என்கிறோம்! பௌதிக விதிகள் உள்பட பிரபஞ்சத்தின் அனைத்துவிதிகளும் ஆதியில் இழந்த அந்த ஒருமையை எட்டும்முகமாகவே ஆரவாரமின்றி செயல்பட்டுவருகின்றன!

பருப்பொருள், அல்லது, அணுத்துகள்கள் என்றால் என்ன என்பதை அவற்றை உடைத்துப் பகுத்துப் பார்த்து அறிந்துகொள்ள இயலாது! மாறாக, அவற்றை  அவற்றின் நெடிய பரிணாமப் போக்கில், அதாவது, சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையில் இயங்க விட்டு இறுதியில் அவை எத்தகைய நிலையை, பண்பை எட்டுகின்றன என்பதைக்கொண்டே அறியமுடியும்!

உலகம் ஏற்கனவே அவ்வழிமுறையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது; சொல்லப்போனால், உயிரற்ற, உணர்வற்ற துகள்களாகத் தொடங்கிய உலகம், ஒரு கட்டத்தில் உயிர்பெற்று, அதாவது உயிர்ஜீவிகளாகி - புலனுணர்வு கொண்டு, புலனறிவைப் பெற்று, அடுத்து ஒரு மாபெரும் பரிணாமத் தாவலில், மனிதஜீவியினுள் சுய-உணர்வாக எழுந்து, பகுத்தறிவால் தனது ஆதித் தொடக்கத்தையும், தான் அடையவிருக்கும் முழுமையையும் அறிந்து, முடிவாக தொகுத்தறிவால் முழு-அறிவைப் பெற்றிடும் வகையில் முழு-உணர்வாக மலர்ந்திடும் இறுதிக் கட்டத்தின் அருகாமையை வந்தடைந்துள்ளது. 

இறையியலளார்க்கு கடவுளை முதன்மைப்படுத்துவது முக்கியமாக    இருக்கிறது! விஞ்ஞானிகளுக்கு பருப்பொருளையும், பௌதிக      விதிகளையும் முதன்மைப்படுத்துவது முக்கியமாக விளங்குகிறது. நாத்திகர்க்கு இயற்கையை முதன்மைப்படுத்துவது முக்கியமாக இருக்கிறது! ஆனால், மெய்யியலாளர்க்கு உலகம், இயற்கை, பருப்பொருள், உணர்வு (மனிதன்), பேருணர்வு (கடவுள்), ....என எல்லா மெய்ம்மைகளுக்கும் அதனதன் பண்புக்குரிய இடத்தை அளித்து, அவற்றுள்   எப்பண்பு    மேலோங்கியதாக    விளங்குகிறதோ அதை மூலமெய்ம்மையாகக் கொள்வது முக்கியமாக இருக்கிறது!

முடிவுரையாக, "உலகம் எவ்வாறு தோன்றியது? எனும் கேள்விக்கான இந்த நெடிய விளக்கத்தைச் சுருக்கி தெளிவான பதில்களாக இங்கே தொகுத்துக் காண்போம்:

• உலகம், பிரபஞ்சம், இயற்கை, பருப்பொருள், என்று அதை எவ்வாறு அழைத்தாலும், அது          தன்னில் தானாகத் தோன்றிட முடியாது. அதற்கான அடிப்படையை, காரணத்தை, ஆற்றலை அது     கொண்டிருக்கவில்லை.

• உலகமானது என்றென்றைக்குமாக இருந்துவரும் ஒரு சாசுவதமான மெய்ம்மை அல்ல. அதற்கு ஒரு ஆரம்பமும், தனது உள்ளார்ந்த விழைவை அடைவதற்கான மிக நெடிய இடைப்பகுதியும், ஒரு ஒப்பற்ற முடிவும் உள்ளன.

• உலகை 'கடவுள்' படைக்கவில்லை; மாறாக, கடவுளேதான் உலகமாக மாறியுள்ளார். இங்கு 'கடவுள்' என்பது மூலமெய்ம்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளது.

• உலகம் சூன்யத்திலிருந்து இயற்கையாகத் தோன்றியதல்ல. இன்னும் கடவுளும் சூன்யத்திலிருந்து உலகைப் படைக்கவில்லை. ஏனெனில், சூன்யம், வெறுமை, வெற்றிடம், ஒன்றுமில்லாத நிலை என அதை எவ்வாறு அழைத்தாலும் அது பருப்பொருளுடன் இணைந்த ஒரு பண்பே ஆகும்.

• இறுதியாக, "ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றும் தோன்றிடாது!" எனும் பார்மினடீஸ்-ன் கூற்று முற்றிலும் சரியானதே! 'கடவுள்' எனும் மூலமெய்ம்மைக்கு வெளியே வெற்றிடம் உள்பட எதுவும் இருக்க முடியாது! இன்னும் மூலமெய்ம்மைக்கு உள்ளேயும் வெற்றிடம் உள்பட எதற்கும் இடமில்லை! ஏனெனில், மூலமெய்ம்மை என்பது மூலமெய்ம்மைதான்; அதற்குப் பகுதிகள் கிடையாது! இறுதியாக, உலகம்/பிரபஞ்சம் என்பது ஒரு தற்காலிக நிஜம் மாத்திரமே; அது நிஜத்திலும் நிஜமான மூலமெய்ம்மையை நோக்கியதொரு இயக்கம் ஆகும்! உலகம் என்பது கடவுளைச் சுட்டும் ஒரு குறியீடு, அவ்வளவே!


மா.கணேசன் / நெய்வேலி / 02-10-2018
----------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, 2 October 2018

நிலையாமை அல்லது இரண்டாம் வெப்பச்சலன விதி



      இங்கிருந்து தப்ப எங்காவதொரு மூலையில் வழியிருந்தாக வேண்டும்
      என்று கோமாளி சொன்னான் திருடனிடம்!
           - பாப் டிலன் (Bob Dylan/ All Along the Watchtower)

பிரபஞ்சம் எனும் விருட்சம்


ஒரு மரம் போன்றதுதான் இப்பிரபஞ்சமும்! விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்? ஏனென்றால், நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்கிறோம்; நமது வாழ்க்கை இப்பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறது, அடுத்து. நாம் இப்பிரபஞ்சத்துள் இருக்கிறோம், வாழ்கிறோம் என்பதாலேயே, இப்பிரபஞ்சம் நன்மையானதாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணுவதிலும் தவறிருக்கமுடியாது! 

ஆனால், சில விஞ்ஞானிகள், "அப்படியொன்றும் நாம் விசேடமானவர்களோ, பிரத்யேகமானவர்களோ அல்ல!" என்கிறார்கள். ஆம், நம்மில் சில விஞ்ஞானிகளும், அறிவுஜீவிகளும், தத்துவவாதிகளும், பகுத்தறிவாளர்களும் நம்மைவிட பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கும், அதனுடைய பௌதிகவியல் விதிகளுக்கும் தான் முதன்மையிடமும், முன்னுரிமையும் தருபவர்களாக இருக்கிறார்கள்! இது மிகவும் துரதிட்டவசமானதாகும். ஏனெனில், பிரபஞ்சத்தை முதன்மையாகக் கொண்டு மனிதன் உள்பட பிற யாவற்றையும் இரண்டாம்பட்ச அம்சங்களாகக் காணும் இத்தகைய பார்வை அடிப்படையிலேயே தவறானதாகும்! அதாவது, நாம் இருக்கிறோம்; ஆகவே நாம் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயவும் அறியவும் விழைகிறோம்! இதன் மறுதலை உண்மை அல்ல (the converse is not true). நாம் இல்லாத நிலையில், பிரபஞ்சம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன?

அடுத்து, சிலர், "நாம் இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை, இன்னும் சொல்லப்போனால், இப்பிரபஞ்சத்திற்கு மையம் என்றும் ஏதும் இல்லை!" என்கிறார்கள். இக்கூற்றும் தவறானதே! அதாவது, வெகு காலமாக 'பூமியே பிரபஞ்சத்தின் மையம்' எனவும்; மேலும், 'சூரியனும், எல்லாக் கிரகங்களும், பூமியைச் சுற்றிவருகின்றன' எனவும் கருதப்பட்டுவந்தது. ஆனால், பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற இந்த புவி-மையக் கொள்கையை மாற்றி, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன (சூரிய-மையக் கொள்கை) என உலகிற்குக் காட்டியவர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்ற வானியல் அறிஞர். இது இவரது பெயரைக்கொண்டு, "கோப்பர்னிக்கஸின் புரட்சி" என்று வழங்கப்படுகிறது. ஆனால், நடைமுறை வானவியலுக்கு இவரது கொள்கை ஆற்றிய பங்களிப்பைத் தாண்டி வேறு மகத்தான புரட்சி எதையும் அது செய்திடவில்லை!

அதாவது, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு பற்றியும், வாழ்வியலுக்குரிய யாதொரு பெரிய புரிதலையும் அது அளித்திடவில்லை! பரந்து எல்லையில்லாமல் விரியும் இப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு ஓரத்திலுள்ள சூரியனைச் சுற்றிச் சுழலும் ஒன்பது கிரகங்களில் ஒன்றான பூமியில் நாம் இருக்கிறோம் என பரந்த-வெளியில் பூமிக்கிரகத்தின் அமைவை இட அளவில் (Spatially) குறித்துக்காட்டியது மட்டுமே "கோப்பர்னிக்கஸின் புரட்சி" செய்த சாதனையாகும். 

பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனையே சுற்றிவருகின்றன என்பது ஒரு வானியல் விபர உண்மை மட்டுமேயாகும். ஆனால், 'பூமியானது பிரபஞ்சத்தின் மையம் அல்ல' என்கிற விபர உண்மை எவ்வகையிலும் மனிதனின் மையத்துவத்தை (Centrality) அகற்றிடவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னும் விஞ்ஞானச் சமூகத்திற்கு வாய்க்கவில்லை! 

ஒருவகையில், விஞ்ஞானிகள் தற்போது மிகு-சிக்கல் (Complexity) நிகழ்வுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றாலும், மிகு-சிக்கல் நிகழ்வுமுறையானது எதை நோக்கிச் செல்கிறது என்பதை துல்லியமாக அறிந்தாரில்லை! ஒரு பரிணாம இயக்கம் என்றவகையில் பிரபஞ்சமானது மேன்மேலும் ஒருமைப்படுவதிலும் (Unification), தனி-மையப்படுவதிலும்  (Individualization) ஈடுபட்டுள்ளது! ஒரு உயிர்-ஜீவி என்பது யாதொரு பருப்பொருள் அமைப்பைவிடவும் மிகு-சிக்கல் வாய்ந்தது மட்டுமல்ல; அது மிகவும் ஒருமைப்படுத்தப்பட்டதும், தனி-மையப்படுத்தப்பட்டதுமான (Highly Unified and Individualized structure) ஒரு அமைப்பாகும்! அடுத்து ஒரு மனிதஜீவி என்பவன் ஒரு உயிர்-ஜீவியைவிடவும் மேலதிகமாக ஒருமைப்படுத்தப்பட்டவனும், தனி-மையப்படுத்தப்பட்டவனும்; யாவற்றுக்கும் மேலாக சுய-உணர்வு கொண்ட ஒரு விசேட அமைப்புமாவான்! அதாவது, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒவ்வொரு மனிதஜீவியையும் மையமெனக் கொண்டு குவிகின்றது எனலாம்! அதாவது, ஒரு விருட்சமானது தனது ஒவ்வொரு கனியையும் மையமாகக் கொள்வதைப்போல! ஒவ்வொரு மனிதனும் தனது முக்கியத்துவத்தை உணர்ந்தறியும் போது, அவன் பிரபஞ்சமளாவியவனாகிறான் (Universalized); அதே வேளையில், இவ்வழிமுறையில் பிரபஞ்சமானது தனி-மையப்படுகின்றது (Individualized)! இவ்வகையில், உண்மையில் பூமியானது தனது மையத்துவத்தை இழக்கவில்லையென்றே கொள்ளப்படவேண்டும்!

அதாவது, ஒரு மரத்தின் காய்கள் அம்மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டும் என்பதில்லை, அம்மரத்தின் எந்தப்பகுதியிலும் காய்க்கலாம்; அவ்வாறு எந்தப்பகுதியில் காய்த்தாலும் அக்காய்களின் மையத்துவமும், முக்கியத்துவமும் சிறிதும் மாறிவிடுவதில்லை. எவ்வொரு மரத்திற்கும் அதனுடைய காய்கள்/கனிகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், மரத்தின் ஒருமையும், முழுமையும் அதன் வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளில் தான் அடங்கியுள்ளன. அவ்வாறே, பிரபஞ்சத்தின் வித்துக்கள் மனிதர்கள் எனும் கனிகளில் தான் அடங்கியுள்ளன! ஆனால், மனிதர்கள் இன்னும் கனியாதவர்களாகவும், பெரும்பாலானவர்கள் கடைசிவரை (தம் வாழ்-காலம் முடியும் வரையிலும்) படும் பிஞ்சுகளாகவே தேக்கமுற்று மரணத்தில் உதிர்ந்துபோகின்றனர்!

அழிவதற்காகத் தோன்றியதல்ல பிரபஞ்சம்!


இப்போது நாம் வெப்பவியக்கவிசையியல் விதிகளைப் (Laws of Thermodynamics) பற்றிப் பார்ப்போம். இவ்விதிகளை நாம் எளிமையாக "வெப்பச்சலன விதிகள்" என்றும் அழைக்கலாம். முதலாம் வெப்பவியக்கவிசையியல் விதி, அல்லது வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது; மாறாக, சக்தியானது 
   ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றப்பட மட்டுமே முடியும். 
   ஆக, புதிதாக சக்தியானது உருவாக்கப்பட முடியாது என்பதால், பிரபஞ்சத்தின் 
   சக்தி எப்போதும் மாறாத அளவைக் கொண்டதாகவே இருக்கும்." 

சக்தி என்பது மிகவும் அடிப்படையானது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் சக்திதான் பருப் பொருளாக மாறுகிறது. பிரபஞ்சமாகவும், அதிலுள்ள அனைத்துமாகவும் ஆகிறது. சக்தி, பருப்பொருள் ஆகியவை குறித்து நாம் தொடக்கத்திலிருந்தே புரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இவை அடிப்படையான அம்சங்களே தவிர, எவ்வகையிலும் இறுதியானவையல்ல என்பதுதான். சக்தி என்பது காரியமாற்றுவதற்கான சக்தி மட்டுமே தவிர, அதற்கு யாதொரு திசையும், குறிக்கோளும், நோக்கமும் கிடையாது. பருப்பொருள் (Matter) என்பது சக்தியின் ஒரு மாறிய வடிவமே; மேலும் அது இப்பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருளே தவிர, 'பரம்பொருள்' அல்ல! ஆம், சக்தி, பருப்பொருள் ஆகியவை கருவி போன்றவை, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு, நோக்கத்திற்கு வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதற்கான ஊடகம் (Medium) போன்றவை. இவ்வாறே, இவற்றுக்கு அடிப்படையாக அமைந்த பௌதீகவியல் விதிகளும் பரிணாம விதிகளின் கருவிகளேயாகும்! ஆம், பரிணாம விதிகளே சக்தி, அல்லது பருப்பொருளானது என்ன செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் எனும் திசையையும், வழிமுறைகளையும் காட்டுகிறது!

அடுத்தது, இரண்டாம் வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றமடையும் 
   போது, அல்லது பருப்பொருளானது ஒரு மூடிய அமைப்பினுள் சுதந்திரமாக 
   இயங்கும்போது, (நாளடைவில்) அதனுடைய சீர்குலைவு (entropy)
   அதிகரிக்கிறது."

அதாவது, கணிதமேதையும், தத்துவவாதியுமான நார்பெர்ட் வீய்னர் (Norbert Wiener)அவர்கள்,  "(ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால்,) அதில் தோன்றிய எவ்வொரு பொருளும், நிகழ்வுமுறையும், (ஒட்டுமொத்த பிரபஞ்சமும்) இறுதியில் (நெடுங் காலப்போக்கில்) அழிந்துபோகும். அதில், ஒரு மனிதன் எவற்றையெல்லாம் மதிப்பு மிக்கதாகக் கருதுகிறானோ, வாழ்க்கை, செல்வம், சந்தோஷம், கலைப்பொருட்கள்; நாடுகள், நகரங்கள், சமூகங்கள், நாகரிகங்கள் - இன்னும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என யாவும் அழிந்துபோகும்! யாவும் கடைசிச் சிதைவுக்கும் அழிவுக்கும் உட்பட்டவையே, ஏனெனில், பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருளும் இந்த இரண்டாம் வெப்பச்சலன விதிக்கு உட்பட்டவையே!" எனக் கூறியுள்ளார்.

பிரபஞ்சத்தின் தலைவிதி கடைசியில் வெப்பச்சாவில் (heat death) முடிவதுதான் என்பதாக இந்த இரண்டாம் வெப்பச்சலன விதி சுட்டுகிறது. காலப்போக்கில், அனைத்து நட்சத்திரங்களும், உடுமண்டலங்களும் தமது எரிபொருளை எரித்துத் தீர்ந்த பிறகு, பிரபஞ்சம் மொத்தமும் தன் வெப்பத்தையிழந்து ஒரே சீரான வெப்ப நிலையை எட்டிவிடும்; அவ்வேளையில், யாதொரு உயிரும் பிரபஞ்சத்தில் வாழமுடியாது போகும்! 

ஆக, நமது வாழ்க்கை என்பது பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கும், அதன் முடிவு நிலைக்கும் நடுவே இடைப்பட்ட காலப் பகுதியில் நிகழும் ஒன்றாக அமைந்துள்ளது! அதாவது பிரபஞ்சம் தோன்றி கிட்டத்தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அவதரித்தோம்! அதேபோல, பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிவதற்கு பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்பாகவே நாமும், பிற உயிரினங்களும் இப்பிரபஞ்சத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிடுவோம் எனலாம்!

நாம் நாடகக் கலைஞர்களையும், பார்வையாளர்களையும் போல, நாடகம் தொடங்கும் போது மட்டுமே முறையே மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் தோன்றுகிறோம்! நாடக அரங்கம் (பிரபஞ்சம்) அமைக்கப்படும் போதும், நாடகம் முடிந்து அரங்கம் பிரிக்கப்படும் போதும் நாம் இருப்பதில்லை! எது முக்கியமெனில், நாடகம் நிகழ்கிறது என்பதும், நாடக-விதிகளை அறிந்து, அவற்றை முழுமையாக நிறைவேற்றி, நமது (பரிணாமப்) பாத்திரத்தை முறையாக உணர்ந்துசெயல்படுதல் மட்டுமே! 

இவ்வளவு ஏன்? மனிதனின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள்தான்! அதற்குள்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் 50 ஆண்டுகளோ, 60, அல்லது 70 ஆண்டுகளோ,    எவ்வளவு ஆண்டுகள் வாழ்வோம் என்பதை முன்னறிய முடியாத நிலையில், நாம் ஒவ்வொருவரும் விரைவாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை மரணத்துக்கு முன்னேயே முறையாக முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும்! 

மனித வாழ்-காலம்  வரையறைக்குட்பட்டதுதான். ஆனால், அது பொதுவாகப் பலரும் எண்ணுவது போல,  மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமானதற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது! இந்த வரையறைக்குள்ளாகவே நம்மால் முழுமையாக வாழவும், வாழ்வின் ஒப்பற்ற இலக்கை முயன்றடையவும் முடியும் என்பதால்தான் நமது வாழ்-காலம் இவ்வாறு மிகவும் கச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது

மேலும், மனித-உடலானது ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும்வகையில் உருவாக்கப்படவில்லை! ஏனெனில், "வாழ்க்கை" என்பது நீடித்து உயிர்-பிழைத்திருப்பது அல்ல! அவ்வாறு நீடித்து உயிர்-வாழ்வதுதான் வாழ்க்கை என்பதாயிருந்தால், இயற்கையாகவே ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கும் வகையில் நமது உடலானது வடிவமைக்கப்பட்டிருக்கும்! மேலும் ஆயிரம் ஆண்டுகள் நாம் நீடித்திருக்க முடியுமென்றாலும், நாம் என்ன செய்வோம்? வெறுமனே உண்டு, உறங்கி, இனம்பெருக்கி சகமனிதர்களோடு சண்டை சச்சரவிடும் கலக மானிடப்பூச்சிகளாக உழன்று கொண்டிருப்போம்!

ஆக, இரண்டாம் வெப்பச்சலன விதியை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் அழிவதற்காகத்தோன்றியதல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம்! அதாவது, பல நூறு கோடியாண்டுகளுக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிந்துவிடும் என்பதை நாம் இயல்பானதாக, அதாவது, நன்றாக, முழுமையாக அர்த்தபூர்வமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதன் மரணத்தில் முடிவதைப் போன்றே இயல்பானதாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ஏன், எந்த குறிக்கோளுக்காக இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதை முறையாகப் புரிந்துகொள்ளும்பட்சத்தில் முடிவு, இறப்பு என்பவை அழிவைக் குறிக்கும் சொற்களல்ல என்பதை நாம் புரிந்துகொள்வோம்!

அதாவது, பிரபஞ்சத்தின் பிறப்பு (ஆரம்பம்) என்பது ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வு என்றால், அதன் முடிவு என்பதும் ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வாகத்தான் அமைய முடியும்! மேலும், பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு குறிக்கோள், நோக்கம், அல்லது இலக்கு என்பது இருக்குமானால், அந்தக் குறிக்கோளை, இலக்கை அடைந்ததும் பிரபஞ்சம் முடிவிற்கு வந்துவிடுவது என்பது அழிவுகரமான விடயம் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரம் என்பதாகப் பார்ப்பதால், அவர்கள் பருப்பொருளையும், அதனை இயக்கும் பௌதீக விதிகளையுமே பிரதானமாகக் கொள்கின்றனர். உண்மையில், பிரபஞ்சத்தின் முடிவை, அதனுடைய பௌதிகத் தளத்தில் பௌதிக விதிகளின் சொற்களில் காண்பது, எதிர்பார்ப்பது தவறான புரிதலுக்குத்தான் இட்டுச் செல்வதாய் அமையும்! உண்மையில், பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றி, வெப்பச்சாவிலோ, அல்லது பெரும் உள்ளடர்தலிலோ (Big Crunch) முடிவடைவது கிடையாது! 

ஒரு விருட்சமானது ஒரு வித்திலிருந்து பிறந்து, வளர்ந்து, ஒரு கட்டத்தில் பூத்து, பிஞ்சுகள் விட்டு, பிஞ்சுகள் காய்களாகி, காய்கள் முற்றிக் கனிகளாகி, கனிகளுக்குள் இருக்கும் வித்துகளுக்குள் அடங்கி விடுகிறது! அதாவது, எவ்வொரு விருட்சமும் வித்தில் தொடங்கி வித்தில் (முழுமையடைந்து) முடிகிறது என்பதைப்போலவே, பிரபஞ்சம் எனும் விருட்சம் எத்தகைய வித்திலிருந்து தொடங்கியது (தோன்றியது) என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்! நாம் ஒரு விருட்சத்தின் வித்தைக் கணக்கிலேயே கொள்ளாமல், அவ்விருட்சத்தின் வேர்கள், அடிப்பகுதி, கிளைகள், இலைகள்; நீளம், அகலம், உயரம் ஆகியவற்றையும், அவற்றுக்கு அடியோட்டமான சில விதிகளையும் கொண்டு மட்டுமே புரிந்துகொள்வது அவ்விருட்சத்தை முழுமையாக, அதன் சாரத்தில் புரிந்து கொண்டதாக ஆகாது! ஏனெனில், ஒரு விருட்சத்தின் எல்லா பண்புகளையும், விதிகளையும் அறிந்தாலும், அதன் வித்தையும், வித்தின் பண்புகளையும், விதிகளையும் அறியாதிருப்பது அறிவீனமாகும்! அது சாரத்தை விலக்கி சக்கையைக் கொள்வதற்குச் சமமாகும்! 

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் உயிரியல் தளத்தையும், மனிதனை உள்ளடக்கிய அதிமுக்கியமான உணர்வியல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, பௌதிகத்தளத்தை மட்டுமே ஒட்டு மொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்; இது, ஒரு மரத்தின் பூக்களையும், காய்கள் மற்றும் கனிகளையும் விலக்கி வெறும் அடிமரத்தையும், கிளைகள், மற்றும் இலைகளையும் மட்டுமே மரம் எனக் காண்பதற்கு ஒப்பான மேலோட்டமான அணுகுமுறையாகும்! ஏனெனில், மரத்தின் அதிமுக்கியமான அம்சம் வித்து மட்டுமேயாகும். ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! விருட்சம் என்பது வித்தினைச் சுட்டும் ஒரு குறியீடு மாத்திரமே! மூல காரணமான வித்திற்கும், முடிவான விளைவாகக் கனியினுள் தோன்றும் வித்திற்கும் இடையேயான நிகழ்வுமுறையே (Phenomenon) விருட்சமாகும்! 

ஆம், பிரபஞ்சம் என்பது ஒரு விருட்சமானால் நாமே அதன் காய்களும், கனிகளும் போன்றவர்கள் ஆவோம்! ஒரு மரத்திற்கும், அதன் காய்களுக்கும் உள்ள உறவைப்போன்றதே பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள உறவும் ஆகும்! ஒரு மரத்திற்கு காய்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானவர்கள் பிரபஞ்சத்திற்கு மனிதஜீவிகள்! விஞ்ஞானிகள் கருதுவதுபோல, உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற, கிட்டத்தட்ட தேவையற்ற பக்கவாட்டு கிளைப்புகள் அல்ல! 

நாம் இப்பிரபஞ்சத்தில் தோன்றியிருக்கிறோம் என்பது ஒரு விபத்து அல்ல! மேலும், பிரபஞ்சத்தின் வரலாற்றை மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தால், திரும்பவும் நாம் தோன்றமாட்டோம் (ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, Stephen Jay Gould)என்பது போன்ற கூற்றுகள் அபத்தமானவை. ஏனெனில், விபத்தோ, இல்லையோ, நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை! இனி பிரபஞ்சமல்ல, நாம் இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியமானது; நம்மை இங்கு கொண்டுசேர்த்ததுடன் பிரபஞ்சத்தின் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது எனலாம். இனி நாம் தான் உணர்வுப்பூர்வமாக பிரபஞ்சம் விட்ட இடத்திலிருந்து பரிணாமத்தை அதன் இறுதியான இலக்கு நோக்கிக் கொண்டுசென்றாக வேண்டும்! 

பிரபஞ்சத்தின் எதிர்காலத்து விளைவுகளை, வளர்ச்சி நிலைகளை அதன் பௌதிகப் பரப்பில், விண்வெளியில் தொலைதூரத்தில் எங்கேயோ தேடிக்கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானதும், முறையற்றதுமாகும். ஏனென்றால், பிரபஞ்சம் என்பது வெறும் எந்திரத்தனமான பௌதிக (பொருளியல்) இயக்கம் அல்ல; பிரதானமாக அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும். பரிணாமரீதியாக, பிரபஞ்சமானது வெகு காலத்திற்கு முன்பே பௌதிகத் தளத்தை, அதாவது பொருளியல் தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்திற்குள் பிரவேசித்து, உயிரியல் தளத்தின் சாத்தியப்பாடுகள் அனைத்தையும் சோதித்து முடித்து, கடைசியாக, தற்போது உணர்வியல்-தளத்திற்குள் நுழைந்துள்ளது. இது, ஒரு மரம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் நிலையை ஒத்ததாகும்!  

ஆனால், விஞ்ஞானிகள் அனைவரும் ஏகோபித்த பார்வையில், பருப்பொருளாலான தளத்தை -- உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றையும்; அவற்றிற்கு அடிப்படையான கட்டுமானக் கூறுகளான அணுத்துகள்களையும்; மேலும்,  காலம், வெளி, நிறை, மற்றும் அடிப்படை விசைகளான ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை, அணுக்கருவின் வலுமிக்க விசை, வலுக்குறைந்த விசை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பைத்தான் மொத்தபிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்! ஆகவேதான் இவையனைத்தையும் நிர்வகிக்கும் அடியோட்டமான பௌதிகவியல் விதிகளை (The Laws of Physics) பிரதானமாகக் கொள்கிறார்கள்; கிட்டத்தட்ட அவர்கள் இவ்விதிகளை வழிபடுகிறார்கள் என்றே சொல்லலாம்!  

இல்லையென்றால், பருப்பொருளின் தளத்துக்குரிய இரண்டாம் வெப்பச்சலன விதி போன்ற ஒரு விதியைக் கொண்டு அவர்கள் பிரபஞ்சத்தின் தலைவிதியை மட்டுமல்லாமல் நம்முடைய தலைவிதியையும் சேர்த்தே எழுத எத்தனிப்பார்களா என்ன? இது எவ்வாறு உள்ளதென்றால், நாம் வசிக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டு நம்மையும், நமது வாழ்க்கையையும் வரையறுப்பது போலுள்ளது! 

முக்கியமாக, இரண்டாம் வெப்பச்சலன விதி என்பது பிரபஞ்சத்தின் பௌதிகத்தளத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விதி மாத்திரமே! இவ்விதியாயினும், பிற எவ்வொரு பௌதிக விதியாயினும், எதுவும் பரிணாம வழிமுறையை தீர்மானிக்க இயலாது! பௌதிகவிதிகள் யாவும் பருப்பொருள் தளத்தைக் கட்டுப்படுத்துவதற்கானவை மட்டுமே. பருப்பொருளானது ஒரு உயிர்-ஜீவியாக மாற்றமடையும் வழிமுறையில் இரண்டாம் வெப்பச் சலன விதி எத்தகைய பங்கு ஆற்றியுள்ளது? இறுதியில், இப்பிரபஞ்சத்தில் உயிர்-ஜீவிகள் உயிர்-பிழைத்திருக்க முடியாத நிலையை இந்த இரண்டாம் விதி தோற்றுவிக்கும் என்றால், முதலிடத்தில் உயிர் தோன்றுவதை ஏன் அந்த விதி தடுக்காமல் அனுமதித்தது?

பிரபஞ்சமானது அணுத்துகள் போன்ற மிக எளிய அமைப்பிலிருந்து ஒரு அமீபா போன்ற மிகு-சிக்கல் அமைப்பாகவும், மனித மூளை போன்ற அதி-சிக்கல் வாய்ந்த அமைப்பாகவும் தவிர்க்கவியலாத வகையில் வளர்ந்தெழும் வழிமுறையில் தனித்துவமான மிகு-சிக்கல் விதிகள் (laws of complexity)தோன்றி பரிணாமத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்கின்றன. இவ்வாறு, பரிணாமப் போக்கில், பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் தோன்றினாலும், அவ்விதிகள் பௌதிக விதிகளை மீறுவதில்லை; மாறாக அவற்றை நிறைவு செய்வதாகவே உள்ளன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறுவதிலிருந்து, அவர்கள் பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் இருந்தாலும் அவற்றை மதிப்பதில்லை, பெரிதாகக் கணக்கில் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்து பௌதிக விதிகளுக்கு விசுவாசமாக இருப்பதே விஞ்ஞான பூர்வமானது என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பதும், இவ்வழியே ஒருவகை விஞ்ஞானவாதம் (Scientism) விஞ்ஞானத்தைப் பீடித்து மட்டுப் படுத்துவதில் முடிகிறது என்பதையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் உணர்வதேயில்லை!

உண்மையில், உயிர்-தோன்றுவதற்குரிய அனைத்துச் சாதகமான நிலைமைகளுக்கும் பௌதிக விதிகள் வழியமைத்துக் கொடுத்தே அமைந்துள்ளன! இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? சிந்திகும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? ஒருவேளை, இப்பிரபஞ்சத்தில் உயிரும், மனித ஜீவியும் தோன்றவில்லை என்றால், அதாவது, பிரபஞ்சம் தரிசாகவே பல்லாயிரம் கோடி ஆண்டுகள் யாதொரு குறிக்கோளும், இலக்கும் இன்றி இயங்கி கடைசியில் இரண்டாம் வெப்பச் சலன விதியின்படி வெப்பச்சாவில் மாண்டு மறைந்துபோகும் என்றால், அந்த இரண்டாம் வெப்பச்சலன விதியின் முக்கியத்துவம் தான் என்ன? எது, அல்லது யார் அவ்விதியைப் பற்றி ஆராய்ந்துகொண்டும், போற்றிப் பாடிக்கொண்டும் இருப்பர்? 

நிலையாமை நிலையானதல்ல!


வித்தில் தொடங்கி வித்தில் முழுமைபெறும் நிகழ்வுமுறையின் சூட்சுமம் அறிந்தால், "நிலையாமை" என்ற பேச்சுக்கு இடமேது! தோன்றியவையனைத்தும் அழிந்துபோகும் என்பது தவறு! 

பிரபஞ்சம் முடிவிற்கு வரவேண்டுமானால், முழுமையடைய வேண்டும்! அது எக்குறிக்கோளுக்காத் தோன்றியதோ அக்குறிக்கோளை முழுமையாக எட்டியிருக்கவேண்டும்! அது எந்த மூலத்திலிருந்து வெடித்துத் தோன்றியதோ அந்த மூலத்தை எட்டும் வகையிலான நுட்பம் மிகுந்த ஒரு அமைப்பை கட்டமைத்தாக வேண்டும்! எவ்வாறு ஒரு விருட்சமானது எந்த வித்திலிருந்து தோன்றியதோ அதே போன்ற வித்துக்களை தனது கனிகளுக்குள் கட்டமைக்கிறதோ அவ்வாறு! பிரபஞ்சம் எதற்காகத் தோன்றியது என்பது தெரியாமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி மதிப்பையும், ஒரு பௌதிக விதியையும் (இரண்டாம் வெப்பச்சலன விதியையும்) கொண்டு இப்படித்தான் பிரபஞ்சம் முடிவிற்கு வரும் என்று கணிப்பது பொருத்தமற்றது!

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, கடைசியில் எவ்வாறு முடிவடையும் என்பதை அறிவதைவிட ஏன், எந்தக் குறிக்கோளுக்காகத் தோன்றியது என்பதை அறிவது அதிமுக்கியமானதாகும்! காலம், மற்றும் உலகம் பற்றிய உணர்வு தோன்றிய தொன்மைக் காலங்களில், "ஏன்", "எவ்வாறு", "எதிலிருந்து" உலகம் தோன்றியது என்ற கேள்விகளைப் பின்பற்றி இவ்வுலகில் தன்னையும், தனது வாழ்வையும் அர்த்தப்படுத்திடும்வகையில் எழுந்த உந்துதலில் புராணிகம் தோன்றியது! புராணிகங்களிலிருந்து ஒரு கிளை பிரிந்து மதங்கள் உருவாயின. மதங்கள் கடவுளை அனைத்துக்கும் காரண கர்த்தாவாகக் கொண்டதால் அனைத்துக் கேள்விகளும் தேடலும் முடிவிற்கு வந்துவிட்டன! இன்னொரு கிளை பிரிந்து தத்துவச் சிந்தனை பிறந்தது. அடுத்து மூன்றாவது கிளையாக, 'எவ்வாறு' என்ற கேள்வி முதன்மைபெற்றதன் வழியாக  விஞ்ஞானம் துளிர்த்தது; துளிர்த்ததோடு துரித வளர்ச்சி பெற்று, வெறும் 500 ஆண்டுகளில் கிட்டத்தட்ட தனது எல்லைகளைத் தொட்டும்விட்டன, ஆனால், அது தன் முடிவைத் தழுவிக்கொள்ள மனமில்லாமல் தத்தளித்துக்கொண்டு பற்பல கற்பனைக்கோட்பாடுகளைப் புனைந்துகொண்டுள்ளது! ஆம், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்ற வகையில் முடிவிற்கு வந்தே ஆகவேண்டும்! அதற்கு அது துணிவுடன் சில முடிவுகளை, உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்!

பிரபஞ்சமானது ஒரு பூடகமான "பெரு-வெடிப்பில்" (Big-Bang) தோன்றி, மேலும் பூடகமான தொரு "பெரும்-உள்ளடர்தலில்" (Big-Implosion) முடிவடைந்து போகும் அர்த்தமற்ற நிகழ்வுமுறை அல்ல! அதற்கு அது தோன்றாமலேயே இருந்திருக்கும்! மாறாக, அது நிரந்தரமற்ற நிலையிலிருந்து நிரந்தரத்துவம் நோக்கிச் செல்லும் அரிய நிகழ்வுமுறை ஆகும்! மிகவும் எளிமையான அணுத்துகள் என்ற நிலையில் தொடங்கிய பிரபஞ்சம், சுய-அமைப்பாக்கம் (Self-Organization)எனும் வழிமுறையின் வாயிலாக தன்னைத்தானே கட்டியெழுப்பிக்கொண்டு பருப்பொருள் நிலையிலிருந்து உயர் மாற்றம் பெற்று தனி-மையப்பட்ட (Individualized) மிகு-சிக்கல் (Complexity) அமைப்பான உயிர்ஜீவியாக எழுந்தது. பிறகு, வெறும் உயிர்-ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து, மேலும் மிகு-சிக்கலான அமைப்பான மூளையைக்கொண்ட,  சுய-உணர்வு பெற்ற, சிந்திக்கும் திறன்கொண்ட மனிதஜீவியாக அவதாரம் எடுத்தது! அடுத்து, சுய-உணர்விலிருந்து முழு-உணர்வு நிலையை அடைய இன்னும் ஒரு படிதான் உள்ளது! அதாவது, காய்கள் முற்றிக் கனிகளாக மாறுவது மட்டுமே இன்னும் நிகழவேண்டியுள்ளது! எல்லாக் காய்களும் முற்றிக் கனிகளாக ஆன பிறகு, மரம் பட்டுப்போனாலும் அதனால் பாதகம் ஒன்றுமில்லை!

இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? பிறகு மனித ஜீவிகள் எதற்கு? வெறுமனே சிறிது காலம் உயிர்-பிழைத்திருந்து பிறகு மரணத்தில் முடிந்துபோவதற்காக உருவானதா வாழ்க்கை? இல்லை, வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்த உன்னத நோக்கம் கொண்டது வாழ்க்கை! 

மனித வாழ்-காலம் வரையறைக்குட்பட்டதுதான் என்றாலும், அதற்குள்ளாகவே அடையப்படவேண்டிய பிரத்யேகமான, மகத்தான இலக்கு ஒன்று இருந்தாகவேண்டும்! அந்த இலக்கைக் கண்டடைவதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது! நெடிய ஆயுளுடன் குந்தித் தின்பதற்கும், உடுத்தி மகிழ்வதற்கும், உல்லாசமாக அவரவர் விருப்பப்படி இருப்பதற்குமான வாய்ப்பு அல்ல வாழ்க்கை! 
நிலையாமை என்பது உலக மெய்ம்மை பற்றிய உண்மையாகும். மனித ஆயுளுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சத்தின் ஆயுள் நெடியது என்றாலும் அது நிரந்தரமானதல்ல. அவ்வாறு நிரந்தரமாக நீடித்திருக்கும் வகையிலும் அது கட்டமைக்கப்படவில்லை! ஒரு வகையில், இச்செய்தியைத்தான் இரண்டாம் வெப்பச்சலன விதி உணர்த்தி நிற்கிறது எனலாம்!  

நிரந்தரத்துவம் என்பது தோற்றம், மறைவு; ஆரம்பம், முடிவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது! நாம் இந்த உலகில் முளைத்திருக்கலாம்; ஆனால், நாம் ஒவ்வொருவரும் சென்று சேர வேண்டிய உலகம் காலாதீதம்! அது ஒரு ஒப்பற்ற உணர்வு நிலையாகும்! ஒரு கணம் அதை உணர்ந்து அனுபவம் கொள்வதென்பது அனந்த காலத்திற்கு வாழ்ந்ததற்குச் சமமானது மட்டுமல்ல, அது, முக்தி, மோட்சம், வீடுபேறு எனும் இறவா நிலையை, அதாவது, நிரந்தரத்துவத்தைச் சேர்வதுமாகும்!

இந்த உலகம் (பிரபஞ்சம்) நிரந்தரமற்றது என்பதன் அர்த்தம் 'நிரந்தரமானது' என்று எதுவும் இல்லை என்பதல்ல! நிரந்தரமற்ற மெய்ம்மையாகிய இந்த உலகம் இங்கிருக்க முடியுமெனில், நிச்சயம் நிரந்தர மெய்ம்மை என்ற ஒன்றும் இருந்தாகவேண்டும்! அவ்வாறில்லாவிடில், யாதொரு அடிப்படையும், மூலமும் இன்றி, நிரந்தரமற்ற இந்த உலக-மெய்ம்மை எவ்வாறு எதிலிருந்து தோன்றியிருக்கமுடியும்? 

■ 

மா.கணேசன் / நெய்வேலி / 25-09-2018
--------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, 23 September 2018

முழு-அறிவும் விஞ்ஞான அறிவும்



இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவும் மானிட விஞ்ஞான அறிவும்


விஞ்ஞானம், விஞ்ஞான அறிவு என்பது மனிதனின் உருவாக்கம் அல்ல; அது மனிதனுக்கும் முந்தையது; அது இயற்கையில், இப்பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலேயே பின்னப்பட்டிருக்கிறது. இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அறிவுச் சுரங்கம். அது ஒரு வாழும் அறிவின்-அருங்காட்சியகம்! ( It is a living museum of Knowledge).

விஞ்ஞான அறிவானது மண்ணில் புதைந்துள்ளது, விண்ணில் விரவியுள்ளது, காற்றில் கலந்துள்ளது, நீரில் கரைந்துள்ளது! பௌதீகவியல், வேதியியல், உயிரியல்,... உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானத் துறைகளும் இயற்கையில் அல்லாமல் வேறெங்குள்ளன? இவையெதுவும் மானிட விஞ்ஞான மூளையின் உருவாக்கம் அல்ல!

இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவை அப்படியே நேரடியாக மண்ணைத்தோண்டி வெளியே எடுத்திட இயலாது; கொஞ்சம் தோண்டவும் அதிகம் சிந்திக்கவும் வேண்டும்! சிந்தித்தல் என்பது ஒருவன் தன்னிடம் ஏற்கனவே இருக்கும் (கொஞ்ச) அறிவைக்கொண்டு முழு-அறிவைத் தொடர்பு கொள்ளுதல் என்பதே ஆகும்!

இப்பிரபஞ்சம் என்பது அறிவைப் போர்த்தியுள்ள மேலோடு போன்றதே! இயற்கையில் அனைத்து அறிவும் பொதிந்துள்ளது! ஆம், ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு முழுப்பிரபஞ்சத்தையும் கொண்டு வரவேண்டுமா? சடப் பொருளிலிருந்து உயிரை (உயிர்-ஜீவியை)க் கொண்டுவர வேண்டுமா, அதற்கான அனைத்து அறிவும், தொழில்நுட்பங்களும் பரிணாம-நோக்கத்தின்படி வெளிப்பட்டு அதைக் கச்சிதமாகச் செயல்படுத்திவிடுகின்றன! ஓரறிவு கொண்ட புழுவை சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் அறிவுஜீவியாக, ஆறறிவுள்ள மனிதனாகப் பரிணமிக்கச் செய்யவேண்டுமா, அதையும் பரிணாம விதிகள் சாதித்து முடித்துள்ளன!

ஆனால், சடப்பொருள் ஏன், எதற்காக, உயிர்ப்பண்பாக, உயிர் ஜீவியாகப் பரிணமிக்க வேண்டும்? இக்கேள்வி எவ்வொரு விஞ்ஞானியின் மூளையிலும் உதிப்பதில்லை! அடுத்து, ஆக்ஸிஜன் அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களும் இணைந்து ஏன் தண்ணீர் எனும் திரவப்பொருள் உருவாக வேண்டும்? இது பற்றியும் எந்த விஞ்ஞானிக்கும் கேள்வி எழுவதேயில்லை! அவ்வாறு உருவான தண்ணீர் பயனற்றுப் போவதுமில்லை! பரிணாமத்தில் பின்னால் தோன்றவிருக்கக்கூடிய உயிர்த் தோற்றத்திற்கு மிகவும் அடிப்படையானதொரு கூறாக அமைகிறது. அதாவது, "நீரின்றி அமையாது உலகு" என்ற கூற்றுக்கிணங்க, தண்ணீரின் அவசியம் பரிணாமத்தால் முன்-யூகிக்கப்பட்டதாயுள்ளது!

விதிகளின் விதி!


முதலிடத்தில், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன், என பலவகைப்பட்ட தனிமங்கள் எதற்காக, எந்தக் கணக்கின் அடிப்படையில், நோக்கத்திற்காக, தோன்றி இருக்கின்றன? குறிப்பாக, ஆக்ஸிஜன் அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களும் இணைந்து தண்ணீர் எனும் கூட்டுப்பொருளாக மாறவேண்டும் என்பதை எந்த விதிகள் தீர்மானிக்கின்றன? இதுவரை வெவ்வேறு வேதியியல் பண்புகள் கொண்ட 118 வகை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 94 தனிமங்கள் மட்டுமே இயற்கையில் இருப்பவை; மீதம் 24 தனிமங்கள் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஆனால், இயற்கையில் ஏன் 94 தனிமங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும்?.....இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய விஞ்ஞானிகள் ஏதாவதொரு விளக்கத்தைத் தந்து எளியனவாகத் தோற்றம்தரும் இக்கேள்விகளைப் புறந்தள்ளிவிடுவர்!

நம்முடைய விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அது பிரபஞ்சத்தின் ஆதியையும் அந்தத்தையும் தவிர்த்து, இடையிலுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும் வெற்றிகரமாக விளக்கிச் சொல்லிவிடும்! ஆனால், முதலிடத்தில், ஏன், எதற்காக இங்கே ஒரு பிரபஞ்சம் இருக்கிறது? நாம் ஏன், எதற்காக அதில் இடம் பெற்றுள்ளோம்? நம் வாழ்க்கையின் அர்த்தம் குறிக்கோள் மற்றும் இலக்கு தான் என்ன? என்பவை பற்றியெல்லாம் அதனால் ஏதும் சொல்ல முடிவதில்லை!

பௌதீகவியல் விஞ்ஞானி அந்தோனி ஸீ (Anthony Zee)அவர்கள், "நாம் இயற்கையை தவணைமுறையில் அறிந்துகொள்ளலாம். நாம் அணுவை அதன் கருவை அறிந்துகொள்ளாமலேயே அறிந்துகொள்ளலாம். . . . .  பௌதீக உலகமெய்ம்மை அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிந்தாக வேண்டுமென்பதில்லை. நன்றி, இயற்கையே" என்று நன்றியுணர்ச்சியுடன் கூறுகிறார்.

விஞ்ஞானி அந்தோனி ஸீ அவர்களின் கூற்று அவ்வளவு அபத்தமானதல்ல. ஏனென்றால், விஞ்ஞானத்தின் தற்போது வரையிலான எதார்த்த நிலையும், அவலமும் அதுதான்! முதலிடத்தில், பிரபஞ்சம் ஏன், எதற்காக, எவ்வாறு தோன்றியது என்பதை அறியாமலேயே, பிரபஞ்சத்திலுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும் பற்றி விஞ்ஞானிகள் நிறைய பேசுகிறார்கள். பருப்பொருளிலிருந்து உயிர்ஜீவி ஏன், எவ்வாறு தோன்றியது என்பதை அறியாமலேயே, உயிரினங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைப் பற்றியும், 'இயற்கைத் தேர்வு' பற்றியும் விஞ்ஞானிகள் நிறைய கதைக்கிறார்கள். அடுத்து சிந்திக்கும் திறனுள்ள மனித-உணர்வு எவ்வாறு, ஏன் தோன்றியது என்பதை அறியாமலேயே, மனிதனை இன்னுமொரு விலங்கு என்று கூறிவருகிறார்கள்! அடுத்து, பிரபஞ்சத்தின் வருங்காலம், அதன் முடிவு எத்தகையது என்பதை அதனுடைய அடியோட்டமான பரிணாமத் திட்டத்தையும், குறிக்கோளையும் கொண்டு உய்த்துணராமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி-மதிப்பைக் கொண்டு பிரபஞ்சத்தின் தலைவிதியை தாறுமாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!

இயற்கைத் தேர்வு அல்ல "இலக்குநிலைத் தேர்வு"


ஆனால், பரிணாமம் எல்லாவற்றையும் முன்-யூகித்தே செயல்படுகிறது? பரிணாமத்தின் இறுதிச் சொல் (அதாவது இலக்கு) எது என்பதும் தீர்மானிக்கப்பட்ட ஒன்று ஆகும்! அதாவது, நதியின் இலக்கு முன்-தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருப்பது போலவே, பரிணாமத்தின் இலக்கும் முன்-தீர்மானிக்கப்பட்ட ஒன்றே ஆகும்! ஆனால், நதியின் தோற்றுவாய்க்கும், முடிவிடமாகிய சமுத்திரத்திற்கும் இடையே அமையும் நதியின் வழித்தடங்கள் முன்-தீர்மானிக்கப்படுவது இல்லை. இதைப்போலவே, பரிணாமத்தின் தொடங்கு புள்ளிக்கும், இறுதிப்புள்ளிக்கும் இடையே தோன்றவிருக்கும் நிலைகளும், இறுதி இலக்கை எட்டும் வழிமுறைகளும் முன்-தீர்மானிக்கப்பட வில்லை. ஆகவே தான், பரிணாமத்தில் "சோதனை-தவறு-திருத்தம்" (Trial and Error) எனும் பரீட்சார்த்தமுறை மையமாக அமைந்துள்ளது.


அதேவேளையில், பரிணாமத்தில் வெளிப்படும் ஒரு அம்சம் சரியானது என்று எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்றால், டார்வினின் "இயற்கைத் தேர்வு" (Natural Selection) எனும் வழிமுறையினால் என்று உயிரியலாளர்கள் நம்பிவருகின்றனர். ஆனால், பரிணாமத்தில் இயற்கையே மாற்றத்திற்கு உட்படும் பொருளாக இருக்கையில், எந்த இயற்கை எந்த இயற்கையைத் தேர்வு செய்திட இயலும்? டார்வினின் 'இயற்கைத் தேர்வு'க்கு மாறாக, இயற்கையில் உண்மையில் செயல்படுவது, "இலக்குநிலைத் தேர்வு" (Teleological Selection) எனும் விதிமுறையே ஆகும்! அதாவது, பரிணாமத்தின் மிகத் தொலைவான இலக்குநிலையை எட்டும்விதமான படிக்கற்களாகச் சேவைபுரியக்கூடிய வகையிலான பொருத்தமான இடைநிலை அம்சங்களே தேர்வுசெய்யப்படுகின்றன. அவ்வாறு தெரிவு செய்வது அந்த இலக்கு நிலையே தான்! அதாவது, உணர்வு தான் (Consciousness) பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்காகும்! பரிணாமம் என்பது உணர்வின் பரிணாமமே, பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வே!

எவ்வாறு ஒரு இசைக்கோவையானது ஒரு ஒற்றை ஸ்வரத்தில் தொடங்கப்பட்டு அடுத்தடுத்து பல ஸ்வரங்களுடன் இணைத்து ஒரு முழு கோவையாக உருவாக்கப்படுகிறதோ; அதாவது, ஒரு இசைக்கோவையின் முழுமையானது அந்த இசைக் கோவையை தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு ஸ்வரத்தையும் கட்டுப்படுத்தி அதனதன் இடத்தில் அமையச் செய்வதைப்போலவே, பரிணாமமும் இறுதியாக விளையவிருக்கும்  முழுமைக்கேற்றவாறே, தொடக்கமும், இடைநிலைகளும் உருவாகின்றன! டார்வினிய கொள்கை முழங்குவதுபோல, பரிணாமம் என்பது குறிக்கோளற்ற, இலக்கற்ற, ஒரு குருட்டாம் போக்கு நிகழ்வு அல்ல!

விஞ்ஞான அறிவு என்பது விஞ்ஞானிகளின் மூளைகளில் உற்பத்தியாவதில்லை! ஆயினும் இயற்கையிலிருந்து அந்த அறிவை வெளிக்கொணர்வதற்கு அவர்களது மூளைகள் மிக மிக மிகக் கூர்மையாகச் சிந்திக்கவேண்டும்.

அதே நேரத்தில், மானிட விஞ்ஞான அறிவுக்கும் இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவிற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. ஏனெனில், மானிட விஞ்ஞான அறிவு என்பது இயற்கையிலிருந்து பெறப்படும் போதே ஒரு குறிப்பிட்ட வகையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு  குறுக்கப்பட்டும், வெட்டிக்கழிக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் உருவாக்கப்படும் ஒன்றாகும்.
இவ்வகையில், விஞ்ஞான அறிவு என்பது கரு முழுவளர்ச்சியடைவதற்கு முன்பாகப் பிறந்திட்ட ஒரு குறைப்பிறவி [In this way, scientific knowledge is a monster(a congenitally malformed or mutant entity)] ஆகும்!

இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவும் இயற்கையினுடையது அல்ல; மாறாக, அறிவு, அறிவாக தனித்தே இருக்கிறது! இயற்கை/உலகம் என்பது அறிவுக்கு வடிவம் கொடுக்கும் வெறும் ஒரு ஊடகம் (Medium),அல்லது கருவி மாத்திரமே! உலகம் என்பது பேரறிவின் உடல்!

இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னரே அறிவு ஏற்கனவே தனித்து இருந்தது, பிரபஞ்சம் தோன்றிய வுடன் சிறிது சிறிதாக பிரபஞ்சத்திற்குள் பிரவேசித்தது. பிரபஞ்சம் வளர வளர அறிவும் வளர்கிறது. பிரபஞ்சம் என்பது குறை-அறிவிலிருந்து நிறை-அறிவை நோக்கிச் செல்லும் இயக்கமேயன்றி வேறில்லை!

நம்மில் சிலருக்கு அறிவு எவ்வாறு பிரபஞ்சத்திலிருந்து தனித்து இருக்கமுடியும் என்ற சந்தேகம் எழலாம். குவாண்டம் தகவல் விஞ்ஞானப் பேராசியர் விளாட்கோ விட்ரல் (Vlatko Vedral) அவர்கள், "தகவல் (அறிவு) என்பது வெற்றிடத்திலிருந்து தன்னெழுச்சியாக தாமே வெளிப்படுகிறது" எனவும்; தகவலின் இருப்புக்கு அதற்கு முற்பட்ட யாதொரு தகவலும் தேவையற்றது" எனவும்; "தகவலானது வெற்றிடத்திலிருந்து உருவாக்கப்பட முடியும்" எனவும் கூறுகிறார். விளாட்கோ விட்ரல் அவர்களைப் பொறுத்தவரையில், வெற்றிடம் தான் பிரதானம் என்று சொல்லாமல் சொல்கிறார். ஆனால், "அறிவே பிரதானம், எல்லாமே அறிவுதான்!" என்பதுதான் இக்கட்டுரை முன்வைக்கும் அறிவு!

மேலும் நம்முடைய விஞ்ஞான அறிவு எப்போதும், குறைபாடுடையதாயும், முழுமையற்றதாயும்தான் இருக்கும்! ஒருபோதும் நாம் நம்முடைய விஞ்ஞான அணுகுமுறையின் மூலமாக முழு-அறிவையும் பெற இயலாது; அதாவது விஞ்ஞான அணுகுமுறையின் உள்ளார்ந்த குறைபாடுகளினால் அதன் மூலமாக ஒட்டுமொத்தத்தின் (பிரபஞ்சத்தின்) சாரமான உண்மையை ஒருபோதும் அறிய இயலாது! முதல் கோணல் முற்றும் கோணல்!

இதன் அர்த்தம், பிரபஞ்சத்தை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியாது என்பதல்ல; மாறாக, குறைபாடுடைய விஞ்ஞான அணுகுமுறையின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிறோம்! ஏனெனில், நம்முடைய விஞ்ஞானம் அவ்வளவு விஞ்ஞானப்பூர்வமாக இருக்கவில்லை! இப்பிரபஞ்சத்தையும் அதில் நம்மையும், நமது வாழ்க்கையையும் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியும்! அதற்கு, பருப்பொருளை மையப்படுத்தாத, பிரதானப்படுத்தாத; மாறாக, அறிவை மையப்படுத்தும், முழு-அறிவைப் பிரதானப்படுத்தும் மெய்ஞான அணுகுமுறை வேண்டும் என்கிறோம்!

"இயற்கையை முழுமையாக விவரித்து முடித்துவிட முடியாது, ஏனென்றால், அத்தகைய விவரிப்பு இயற்கையை பிரதியெடுப்பதாக ஆகும்." என தத்துவவாதி ஆர்ச்சி பாம் (Archie Bahm)கூறினார். அதாவது, ஒருவகையில், "இயற்கை அல்லது பிரபஞ்சம் பற்றிய முழுமையான விவரிப்பு என்பது இப்பிரபஞ்சத்திலிருந்து பிரித்தறியவியலாத ஒன்றாய் இருக்கும்" எனும் விஞ்ஞானி ஸெத் லாய்டு (Seth Lloyd)அவர்களின் கூற்றும் சரியே! அதாவது, பிரபஞ்சம், அல்லது, இயற்கையைப் பற்றிய முழுமையான புரிதல், அல்லது அறிவு என்பது இப்பிரபஞ்சத்திற்குச் சமமானது ஆகும்! ஏனெனில், முழு-அறிவுதான் பிரபஞ்சம், அதாவது பிரபஞ்சமாக மாறியுள்ளது! இவ்விடத்தில், நாம் இயற்கையையோ, பிரபஞ்சத்தையோ அல்லாமல், அறிவைப் பிரதானப்படுத்த வேண்டும்; அதுவே அறிவுள்ள மனிதனுக்கு அழகு!

1500 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பிரபஞ்சம் தோன்றிய அந்த "பெரு வெடிப்பு" எனும் கணத்திற்கு முன்னேயே அனைத்து அறிவும் இருந்தது! பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் பௌதீக அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் பரிணாம இயக்கமும் ஆகும்! அந்த ஆதி-அறிவு அல்லது பேரறிவு, சக்தியையும் ஆற்றலையும் உருவாக்க வல்லது! அவ்வறிவை சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை (A State of Infinite Possibilities) எனவும் கொள்ளலாம். அதுவே பெருவெடிப்பு எனும் நிகழ்வின் மூலமாக (இதை நாம் சுரிணாமம், Involution என அழைக்கலாம்) முதலில் சக்திப்பொழிவாகவும், அதையடுத்து அடிப்படை அணுத்துகள்களாகவும், பிறகு படிப்படியாக வளர்ந்து விரிந்து இப்பிரபஞ்சமாகவும் எழுந்தது. ஆக சடப்பொருளின் நிலைக்கு  (கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகச்) சுருங்கிய அறிவு, அதனுடைய பரிணாம வழிமுறையில் படிப்படியாக அறிவில் உயர்ந்தெழுந்து இறுதியில் மீண்டும் பேரறிவு நிலையை எட்டுகிறது. இவ்வாறு சுருங்கிய நிலையிலிருந்து மீண்டும் விரிந்த தனது அசலான நிலைக்குத் திரும்பும் வழிமுறையைத் தான் பரிணாமம் (Evolution)என்று அழைக்கிறோம்.

இடைவெளிகள் அல்ல "பரிணாமத் தாவல்கள்"


இயற்கையில் பொதிந்துள்ள விஞ்ஞான அறிவானது பொருண்மைவாதம் (Materialistic) சார்ந்ததுமல்ல; எந்திரத்தனமானதும் (Machanistic) அல்ல. இன்னும் அது பகுத்தறிவு எனும் கூண்டுக்குள்ளும் அடைபடுவதில்லை!

முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை ஒருபோதும் பகுத்தறிவாலும், விஞ்ஞானத்தாலும் கண்டறிய இயலாது. அதாவது, பெருவெடிப்புக்கு முந்தைய நிலைக்கும், பிந்தைய நிலைக்கும் உள்ள இடைவெளியை ஒருபோதும் விஞ்ஞானத்தால் நிரப்பிடஇயலாது! பெருவெடிப்புக்கு பிந்தைய நிலை பொருண்மை மயமானது என்பதை நாம் அறிவோம்; ஆனால், பெருவெடிப்புக்கு முந்தைய நிலை எத்தகையது என்பதை என்றாவதொரு நாள் விஞ்ஞானம் கண்டு சொல்லும் என நாம் காத்திருப்பதில் ஒரு அர்த்தமுமில்லை! ஏனெனில் விஞ்ஞானத்தின் பொருண்மைவாத  அணுகுமுறையின் மூலம் அதை அறிவதற்குச் சாத்தியமில்லை என்று நாம் உறுதியாகக் கூறிடலாம்!

மனிதனிடமிருந்து உணர்வைக் கழித்துவிட்டால், மீதமிருப்பது உயிருள்ள ஒரு விலங்கு மட்டுமே.
ஒரு விலங்கு ஜீவியிடமிருந்து உயிரைக் கழித்துவிட்டால் மீதமிருப்பது சடப்பொருள் மட்டுமே.
ஆனால் சடப்பொருளிலிருந்து சடப்பொருளைக் கழித்தால் என்ன கிடைக்கும்? "சூன்யம்" என்று சொல்லலாமா? அப்படியெனில், அது எத்தகைய தன்மையிலானது, அதன் பண்பு என்ன? 'சூன்யம்' எனும் வெறுமையிலிருந்து பொருண்மையான இந்த பிரபஞ்சம் எவ்வாறு பிறந்தது? ஆனால், பௌதீகவியல் விஞ்ஞானிகள் சாதுரியமாக அவ்வெறுமையையும் பொருண்மையின் ஒரு வடிவம் அல்லது நிலை என்பதாக விளக்கி மகிழ்கிறார்கள்! இது போகட்டும் என்று விட்டுவிடலாம்; ஆனால், பரிணாமத்தில் வெளிப்படும் ஒவ்வொரு புதிய பண்பையும், அம்சத்தையும் அவர்கள் பொருண்மையின் வெவ்வேறு வடிவங்களாக, நிலைகளாகச் சுருக்கிவிடுவது தான் படு அபத்தமான சுருக்கல்வாதம் ஆகும்!

விஞ்ஞானத்தால், அல்லது பகுத்தறிவால் விளக்கமுடியாத இடைவெளிகள் என நாம் மூன்றைக் குறிப்பிடலாம். முதலாவது, பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் குறிக்கும் 'பெருவெடிப்பு' எனும் நிகழ்வுக்கு முந்தைய நிலைக்கும், பிந்தைய நிலைக்கும் உள்ள இடைவெளி. இரண்டாவது, பொருளுக்கும், அதிலிருந்து பரிணமித்த உயிர் எனும் பண்புக்கும் உள்ள இடைவெளி. மூன்றாவது, சடப்பொருளுக்கும், உணர்வுக்கும் (Consciousness)உள்ள இடைவெளி.

விஞ்ஞான அறிவாலும், பகுத்தறிவாலும் விளக்கவியலாத இந்த இடைவெளிகளில் கடவுளைச்
சிக்க வைப்பது சற்றும் அறிவார்ந்த செயலல்ல! ஏனெனில், இடைவெளிகளாகத் தெரிபவை உண்மையில் இடைவெளிகள் அல்ல; அவை "பரிணாமத் தாவல்கள்" (Evolutionary Leaps)ஆகும்!  அவை இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவில் உள்ள இடைவெளிகள் அல்ல. மாறாக, அவை மானிட விஞ்ஞானத்தால், பகுத்தறிவினால் கடக்கமுடியாத இடைவெளிகள் ஆகும்! அதற்குக்காரணம், விஞ்ஞானத்தின் நெகிழ்வுத்தன்மையற்ற பொருண்மைவாத அணுகுமுறையில் அடங்கியிருக்கும் மட்டுப்பாடே ஆகும்!

வழிமுறையுடன் கூடிய மந்திரவாதம்!


இயற்கைக்கும், பரிணாமத்திற்கும் அடியோட்டமாக அமைந்திருக்கும் பேரறிவை மனிதனின் பகுத்தறிவு கொண்டு அளவிடவோ, ஆழங்காணவோ இயலாது! ஆம், இணைக்க இயலாதது என நாம் காண்பதை இணைக்கவும், சாத்தியமில்லாதது என நாம் எண்ணி மலைப்பதைச் சாத்தியமாக்கிடவும் வல்லது தான் பேரறிவு! இயற்கையிலும், அதனுள்ளார்ந்திருக்கும் அறிவிலும் யாதொரு இடைவெளியும் இல்லை! மாறாக, மனிதனின் விஞ்ஞான அறிவில்தான் இடைவெளிகள் உள்ளன.

விஞ்ஞானமானது இயற்கையில் பொதிந்துள்ள பல பிரமிப்புமிக்க ரகசியங்களைக் கற்றுத் தெரிந்துள்ளது, அதனாலேயே அது அனைத்து நிகழ்வுகளையும் புதிர்களையும் விளக்கிச் சொல்லிவிடும் என்ற முடிவிற்கு வந்துவிடலாகாது. அர்த்தம், சாரம், உணர்வு, வாழ்க்கை ஆகிய அம்சங்கள் பௌதீக-வேதியியல் மூலம் விளக்கம் பெறவோ, அல்லது உருவாக்கம் பெறவோ இயலாது! ஏனெனில், இப்பிரபஞ்சம் வெறும் விஞ்ஞான அறிவினால் மட்டுமே உருவானதல்ல; அதில் மந்திர வித்தையின் தொடுதலும் (A Touch of Magic!) இணைந்துள்ளது. அதனால்தான் அது மானிட விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் வசப்படாத முழுமையான அறிவாக, பேரறிவாகத் திகழ்கிறது! அப்பேரறிவை நாம் 'கடவுள்' எனக் குறிப்பிடலாமெனில், அவர் வெறும் ஒரு விஞ்ஞானி மாத்திரமல்ல, அவர் ஒரு மாயாவி (மந்திரவாதி) யும் ஆவார்! ஆம் அவருடையது வழிமுறையுடன் கூடிய மந்திரவாதம் (Magic with a Method) ஆகும்!

இயற்கையின் ஒழுங்கமைப்பில் சில பண்புகளை விஞ்ஞானத்தின் வழியாகப் புரிந்துகொள்வதில் இடைவெளி ஏற்படுகிறது என்பது உண்மையே; ஆகவே, அந்த இடைவெளிக்கான காரணம் 'இயற்கை கடந்த ஒன்று' (Supernatural) என்று காண்பது பொருத்தமானதே!

ஆயினும், 'Supernatural' என்பது பொருத்தமற்ற பதப்பிரயோகம் ஆகும். சரியான பொருத்தமான பதப்பிரயோகம், 'Meta-Natural', 'அதி-இயற்கை', அல்லது 'பேரியற்கை' என்பதே. ஏனெனில், மூல-மெய்ம்மையின் குறியீடாகக் கொள்ளப்படும் 'கடவுளை' எவ்வழியிலும் இயற்கையுடன் இணைத்துச் சொல்லமுடியாது; ஆனால் இயற்கையை பேரியற்கை எனும் கடவுளின் சுருங்கிய நிலையாக, ஒரு விபரீத (இயல்புக்கு மாறான, முரண்பாடான) நிலையாகச் சொல்லலாம்.

இயற்கையின் பெரும்பாலான விதிகள் (குறிப்பாக பௌதீகவியல் விதிகள்) குருட்டுத்தனமானவை, அதாவது எந்திரத்தனமானவை எனலாம். ஆனால், அவ்விதிகளை இயக்கும் பரிணாம விதிகள் முழுப் பார்வையும், தொலை நோக்கும், முற்-சிந்தனையும், துல்லியமும், தெளிவும் கொண்டவையாகும்!

ஆனால், விஞ்ஞானிகள் யாவரும் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் பௌதீக விதிகளால் செலுத்தப்படுவதாகவும், அனைத்தையும் பௌதீக விதிகளுக்குச் சுருக்கிப் புரிந்து கொள்ளமுடியும் எனவும், யாவற்றுக்கும் அடிப்படையானவை பௌதீக விதிகளே என்பதாகவும் நெடுங்காலமாக நம்பியும் அந்த நம்பிக்கையையே விஞ்ஞானத்தின் அதிகாரப்பூர்வ கொள்கைப் பிரகடனமாகவும் கொண்டுள்ளனர். உண்மை என்னவெனில், பௌதீக விதிகள் என்பவை பரிணாம விதிகளின் வெறும் கருவிகள் போன்றவையே தவிர அவை அடிப்படையானவையோ, முதன்மையானவையோ அல்ல!

அப்படியானால் பரிணாம விதிகள் என்பவை யாவை? மூல-மெய்ம்மையின் திரிபுதான் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும், பரிணாமத்திற்கும் காரணமாகியுள்ளது! நம்முன்னேயுள்ள ஒரே சவால், "எது மூலமெய்ம்மை" என்பதைக் கண்டுபிடிப்பது தானாகும்! உலக-மெய்ம்மையாகச் சுருங்கிப்போன மூல-மெய்ம்மை மீண்டும் பரிணாம வழிமுறை மூலமாக, தனது அசலான நிலைக்குத் திரும்புவதற்கு உரிய விழைவின் விதிகளே பரிணாம விதிகள் என இங்கு குறிப்பிடப்படுகிறது. அவற்றைக் கணிதக் குறியீடுகளாலும், சமன்பாடுகளாலும் விளக்குவது கடினம்!

அளவீடு (Quantification) செய்யப்படும் வகையிலமைந்த பருப்பொருள் போன்றல்லாமல், உயிர், உணர்வு ஆகிய அளவீடு செய்யவியலாத பண்புகள் பரிணாமத்தில் விளைந்துள்ளமையால் கணிதக் குறியீடுகளில் அல்லது  சமன்பாடுகளில் பரிணாம விதிகளைக் குறிப்பிடுவது கடினமாகும். முக்கியமாக, உயிர், உணர்வு, வாழ்க்கை, அன்பு, நட்பு,... போன்ற அம்சங்களை பௌதீக-வேதியியல் சொற்களில் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது! மேலும் புரிதல் என்பது சொற்களையும், மொழிகளையும் தாண்டிய விசேடக் குறியீடுகளால் ஆனது என்பதால், பொதுவாக நம் எல்லோர் கைகளிலும் உள்ள கருவியான மொழியையும், சொற்களையும் கொண்டுதான் நாம் அறிவைப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்! இதைவிட்டால் வேறு வழியில்லை!

ஈர்ப்புவிசை என்றால் என்ன என்று விளக்கிச் சொன்னால் நாம் புரிந்துகொள்ள முடியும்; அதையே விஞ்ஞானக் கணிதக் குறியீட்டு மொழியிலும் குறிப்பிடலாம். ஆனால் நாமனைவரும் தொழில் முறை விஞ்ஞானிகள் அல்ல; ஆகவே, சமன்பாடுகளையும், சூத்திரங்களையும் கொண்டுதான் நாம் உலகைப் புரிந்துகொண்டாக வேண்டுமென்கிற கட்டாயம் ஏதுமில்லை!

அடியும் முடியும் உணர்வே!


நாம் இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள அதில் எத்தனை அடிப்படை அணுத்துகள்கள் உள்ளன என்பதை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை! மாறாக, பிரபஞ்சம் என்பது அதன் சாரத்தில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் போதுமானது! பிரபஞ்சம் என்பது ஒரு அமைப்பு என்கிற வகையில், அது ஒரு பரிணாமக் களம் (Evolutionary Field) ஆகும்! ஒரு இயக்கம் என்கிற வகையில், அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கிச்செல்லும் பரிணாம இயக்கம் (Evolutionary Movement) ஆகும்! அதாவது, பொருண்மைத் தன்மையிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுத் தன்மையை (Consciousness) நோக்கி வளர்ந்து சென்று முடிவில், முழு-அறிவைப் பெறுகிறவகையிலான முழுமையான உணர்வுத் தன்மையை அடையும் ஒரு இயக்கம் ஆகும்!

அவ்வியக்கத்தில் நாம் சிற்றுணர்வு அல்லது அரை-உணர்வு பெற்ற ஒரு உணர்வு ஜீவி என்ற நிலையில் உள்ளோம்; அதிலிருந்து உயர்ந்து முழு-உணர்வு அல்லது பேருணர்வு நிலையை அடைவதுதான் நம்முடைய, நம் ஒவ்வொருவருடைய பரிணாம இலக்கும், நம்முடைய வீடுபேறு, முக்தி, மோட்சம், ஞானமடைதல், முழுமையடைதல்,... என்றெல்லாம் குறிப்பிடப்படுகிற ஒப்பற்ற நிலையாகும்!

ஒருவகையில், இயற்கை விதிகள் என்பவை பரிணாம விதிகளின் கருவிகள் என்பதால், அவற்றையும் நாம் பரிணாம விதிகளின் கருவிப் பூர்வமான விதிகளாகக் கொள்ளலாம். இவ்விடத்தில் நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ளவேண்டியது பரிணாமம் தன் இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நிகழ்வுமுறையில் ஒவ்வொரு கட்டத்திலும் புதுவகையான விதிகள் தோன்றிச் செயல்பட்டு பரிணாம வளர்ச்சியை நிகழ்த்துகின்றன. பௌதீகத் தளத்தில் பௌதீகவியல் விதிகளும், உயிரியல் தளத்தில் உயிரியல் விதிகளும், உணர்வியல் தளத்தில் உணர்வியல் விதிகளும் தோன்றிச் செயல்படுகின்றன. உயர்-தளத்து வெளிப்பாடுகளை கீழ்த் தளத்து விதிகளைக் கொண்டு புரிந்து கொள்ள இயலாது.

வெறுமனே பிரபஞ்சத்தின் பொருண்மையான பௌதீக இயக்க விதிகளையும் (Laws Of Motion), வெப்பவியக்கவிசையியல் விதிகளையும் (Laws Of Thermodynamics), வெறும் 12 அடிப்படைத் துகள்களையும், 4 அடிப்படை விசைகளையும் கொண்டு இந்தப் பௌதீகப் பிரபஞ்சத்தையும்கூட புரிந்து கொள்ள இயலாது! பிறகெப்படி, உயிரியல் பிரபஞ்சத்தையும், உணர்வியல் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்வது? வெறும் ஒரு ஸெல் உயிரியான அமீபா என்பது இப்பௌதீகப் பிரபஞ்சத்தினுள் எழுந்த இன்னொரு பிரபஞ்சம் என்பதையோ, அல்லது அது இப்பௌதீகப் பிரபஞ்சத்தின் ஒரு உயர் நிலை அவதாரம் என்பதையோ, நம் விஞ்ஞானிகள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்? இல்லை, அவர்களுடைய விஞ்ஞான சட்டகத்திற்குள் (Paradigm) அதற்கு இடமில்லை!

தமிழின் 12 உயிரெழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்களைத் தெரிந்துகொண்டால் போதும், அவற்றைக் கொண்டு திருக்குறள் உணர்த்துகிற மெய்ப்பொருளை அறிந்துகொள்ளலாம் எனும் வீண் நம்பிக்கையைப் போலவே  இப்பிரபஞ்சத்தை வெறும் 12 அடிப்படைத் துகள்களையும், 4 அடிப்படை விசைகளையும் கொண்டு புரிந்து கொள்ள இயலும் என்பதும் பயனற்ற முயற்சியே! ஏனெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் வெறும் பருப்பொருளால் ஆனது மட்டுமல்ல; மாறாக, பருப்பொருள், உயிர், உணர்வு எனும் மூன்று தனித்துவமான பண்புகளைக் கொண்ட மூன்றடுக்கு பிரபஞ்சமாகும்! ஆக, பருப்பொருளின் பௌதீகவியல் விதிகளைக்கொண்டு, பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி நிலைகளான உயிர், உணர்வு ஆகிய பண்புகளைப் புரிந்துகொள்வது சாத்தியமற்றதாகும்!

இப்பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான அம்சம் உணர்வு தானே தவிர, நம் பௌதீகவியல் விஞ்ஞானிகள் சொல்வது போல பருப்பொருள் (அதாவது, அடிப்படை அணுத்துகள்கள்) அல்ல! இன்னும் பிரபஞ்சத்தின் இறுதியான அம்சமும் உணர்வுதான்! ஆம், அடியும், முடியும் உணர்வு தானாகும்!  பருப்பொருள் என்பது வெறுமனே அடியோட்டமான உணர்வுப் பரிணாமத்திற்கு வடிவம் தருகின்ற, சேவை புரிகின்ற ஊடகம் (Medium) மாத்திரமே!

பௌதீக விஞ்ஞானமானது (Physics)அனைத்தின் ஒருமையை பிரபஞ்சத்தின் பிறப்புக் கணத்தில் பருப்பொருளின் அடியாழத்தில், அடிப்படை விசைகளின் ஒருங்கிணப்பில் காண முயல்கிறது. ஆனால், மெய்யியல் தத்துவமானது (Metaphysics)அனைத்தின் ஒருமையை மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில், அதாவது முழு-அறிவில் காண்கிறது! ஆம், பிரபஞ்சத்தின் ஒருமையானது அதன் பொருண்மையில் (Materiality) அடங்கியிருக்கவில்லை! மாறாக, பிரபஞ்ச பரிணாம இயக்கம் மனித உணர்வின் வழியாக எட்டவிருக்கும் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் அடையவிருக்கும் முழு-அறிவு நிலையில்தான் அடங்கியிருக்கிறது!

அறிவே பிரதானம்


விஞ்ஞானிகள் நம்மை நம்பவைத்துக் கொண்டிருப்பதுபோல, நிறையும், சக்தியும் மட்டுமே இப்பிரபஞ்சத்தின் அடிப்படை அம்சங்கள் அல்ல; மாறாக, தகவல் (Information) எனும் அம்சமும் மிக அடிப்படையானதே. தகவல் என்பதை நாம் அறிவின் கூறுகளாகவும், அறிவு என்பதை உணர்வின் கூறுகள் அல்லது வெளிப்பாடாகவும் புரிந்துகொள்ளவேண்டும். ஆம், தகவல் என்பதை உணர்வு எனவும், அல்லது அறிவு எனவும், இடத்திற்குத் தகுந்தாற்போல் கொள்ளவேண்டும். தகவல் என்பது அடிப்படையானது என்று சொல்வதைக் காட்டிலும், அறிவு, மற்றும் உணர்வின் கூறுகளாக அது தொடக்கத்திலிருந்தே இப்பிரபஞ்சத்திற்கு இணையானதொரு கண்ணுக்குத்தெரியாத ஒரு பிரபஞ்சமாகத் திகழ்கிறது எனலாம். உணர்வு (Consciousness) என்பது அதன் அடிமட்டத்தில், தகவல்-முறைப்படுத்துதல் (Information- Processing) என்பதேயாகும்!

தனது பரிணாம வளர்ச்சியின் எவ்வொரு கட்டத்திலும், பிரபஞ்சம் என்பது பிரபஞ்ச-அறிவுத் தொகுப்பிலிருந்து (Universal Knowledge-Pool)தகவல்களையும், அறிவையும் பெறக்கூடிய, பெற்று மேன்மேலும் பரிணாம வளர்ச்சி காணக்கூடிய, தொடர்ந்து வளர்கின்ற ஓர் அமைப்பே (System), அதாவது, கடினப் பொருள் (Hardware) போன்றது ஆகும்! வளர்ந்து, இறுதியில் முழு-அறிவை அடைந்து முழுமையடைவதே அவ்வமைப்பின் இலக்கு ஆகும்! பரிணாம ரீதியாக இறுதியில் எட்டப்படவிருக்கும் முழு-அறிவுதான் தொடக்கத்திலிருந்தே பரிணாமத்தை வழிநடத்தி வந்துகொண்டிருக்கிறது!

அறிவு என்பது, பிரபஞ்ச-அறிவுத் தொகுப்பிலிருந்து (Universal Knowledge-Pool), பரிணமிக்கும் பிரபஞ்சத்தின் சுய-அமைப்பாக்கக் கட்டமைப்புகளின் சக்திக்கும், கிரகிக்கும் தன்மைக்கும், தேவைக்கும் ஏற்ப நேர்விகிதத்தில் அடையக்கூடியதாக அமைந்ததாகும்! பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒரே ஒரு மூல அணு (பரமாணு) தான் தோன்றியது என்றால், அதனால் கிரகிக்கக்கூடிய திறனுக்கும், உடனடியான அதன் பரிணாம வளர்ச்சிக்கும், அதாவது, மடிப்பவிழ்தலுக்கும் (Unfolding) உரிய சொற்ப அளவு தகவல் (=அறிவு=உணர்வு) மட்டுமே அது கொண்டிருக்கும்! அதே நேரத்தில், அந்த முதல் அணுவானது தொடக்கத்தில் எவ்வளவு சிறியதாயிருப்பினும், மிகவும் குறைந்த அளவே பொருண்மையை  (நிறையும், சக்தியும்) கொண்டிருப்பினும்; அந்த நிலைக்கேயுரிய தகவல் கூறுகளைக் குறைவாகக் கொண்டிருப்பினும், அந்த மூல அணுவால் அளவில்லா சக்தியையும் நிறையையும்; அளவில்லா தகவல்களை (அறிவையும், உணர்வையும்) அடையப்பெறுவதற்குரிய (To Access) உட்பொதிவை (Potential), உள்ளுறையாற்றலைக் கொண்டதாகும்!

தகவல் என்றால் என்ன? தகவல் என்பது மனித ஜீவியைப் பொறுத்தவரையில், உயிர்-வாழ்தலின் பொருட்டு, தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் வகையில், புற உலகுடன் (இயற்கையுடன்) மேற்கொள்ளும் பரஸ்பர வினையாற்றுதல் மற்றும் பரிமாற்றத்திற்கு உதவும் அறிபொருள் கூறுகள் (செய்திக்கூறுகள்) ஆகும். தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பிறகு, தனது வாழ்வை அர்த்தப்படுத்தும் பொருட்டு, தன்னை உணர்ந்து முழுமைப்படுத்திக் கொள்வதற்கான, அதாவது உண்மையை அறிவதற்காக, உயர்-உணர்வுத் தளங்களுடன் தான் மேற்கொள்ளும் பரிமாற்றத்திற்கான புரிதல் கூறுகள்தான் தகவல் என்பதாகும்!

தகவல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, நிகழ்வைப் பற்றிய விபரங்கள் மட்டுமல்ல; மாறாக, அது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் (பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சி நிலைகளையும்) பற்றிய விபரங்களையும், அதாவது, முழு-அறிவையும் சுட்டுகின்றது. ஏனெனில், முழு-அறிவுதான் பிரபஞ்சத்தின் இலக்கு! முழு-அறிவை எட்டிப் பிடிக்கும் வழிமுறையே பரிணாமம்! இறுதி மெய்ம்மை என்பது முழு-அறிவு அன்றி வேறில்லை! முழு-அறிவு தனக்குத்தானே ஒளிந்து தன்னையே மீள் கண்டுபிடிப்பு செய்யும் விளையாட்டுக்கான கருவி, அல்லது உபாயம் தான் பிரபஞ்சம்! முழு-அறிவு அல்லது பேரறிவு தன்னை ஒளித்துக் கொண்டதால் இந்த உலகம், பிரபஞ்சம் தோன்றியது! பிரபஞ்சம் என்பது அடிப்படையில் அணுத்துகள்கள் தான், அதாவது, தகவல் கூறுகள்தான்!

தகவல் கூறுகள் இருந்தால் அவ்விடத்தில் கணக்கிடுதல் (computation) இருக்கும். அடுத்து ஒரு பிரபஞ்சம் நிறைய அணுத்துகள்கள்/தகவல் கூறுகள் இருந்தால் அவை தகவல்-முறைப்படுத்துதலில்
(information-processing)ஆழ்வது தவிர்க்க இயலாது! ஆக, ஒரு கணக்கிடும் பிரபஞ்சம் (computational universe) தவிர்க்க முடியாத அவசியமாக  மிகு-சிக்கல் அமைப்புகளை (complexity)உருவாக்கிடும். அதே வேளையில், வெறும் கணக்கிடுதலோ, அல்லது, தகவல்-முறைப்படுத்துதலோ, உயிர்-ஜீவி போன்ற மிகு-சிக்கல் அமைப்பை உருவாக்கிடாது! இவையெல்லாமே வெறும் பரிணாமக் கருவிகள் மாத்திரமே!

மேலும், தகவல், அல்லது அறிவு என்பது சில விஞ்ஞானிகள் கூறுவதற்கு மாறாக, அது  பருப்பொருள் சார்ந்தது ( physical) மட்டுமல்ல; மாறாக, அது பருப்பொருளையும் கடந்தது, அதாவது அதன் அசலான இருப்பிடம் பேரியற்கையே  (Meta-physicical)ஆகும். ஆம், தகவல் அல்லது அறிவு என்பது வெளி-காலத்தின் உலகிலும், காலமில்லா உலகிலும் செயல்படக்கூடியதாகும்!

ஒரு மரபணு (DNA) என்பது இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் மிகு-சிக்கலான அமைப்பு ஆகும். ஆனால், பரிணாமம் ஏன் குறை-சிக்கலான நிலைகள்/அமைப்புகளிலிருந்து மிகு-சிக்கலான நிலைகள்/அமைப்புகளை நோக்கிச் செல்லவேண்டும்? பருப்பொருளின் பிரபஞ்சத்தில் உயிர்ஜீவிக்கு என்ன வேலை இருக்க முடியும்? அடுத்து ஒரு மரபணுவைவிட பெரிதும் மிகு-சிக்கலான ஒரு அமைப்பு என்றால் அது மனித மூளையாகத்தான் இருக்க முடியும். பிரபஞ்சம் ஏன் எளிய அமைப்புகளிலிருந்து, மிகு-சிக்கலான அமைப்புகளாக வளர்ந்தெழ வேண்டும்? அவ்வழியாக பிரத்யேகமாக என்ன சாதிக்கப்படுகிறது? ஆம், மிகு-சிக்கலான அமைப்புகள் வழியாக இப்பிரபஞ்சம் மேன்மேலும் அறிவைப் பெறவும், அறிவில் உயரவுமே பிரயத்தனப்படுகிறது!

அறிவு என்பது முழுமையாக இப்பிரபஞ்சத்திற்கு இணையான கண்ணுக்குப் புலப்படாத (Invisible) ஒரு பிரபஞ்சமாகத் திகழ்கிறது என்றாலும், பருப்பொருளாலான வெளி-காலத்தின் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை அறிவு என்பது ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையாகவே விளங்குகிறது.
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் வெவ்வேறு அறிவு மட்டத்தின் நிலைகளே, வடிவங்களே. ஒரு அணுத்துகள் என்பது அறிவின் மிக மிக மிகச் சிறிய கூறினை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு அமீபா (ஒரு செல் உயிரி) புலன்வழி வெறும் அறிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதனைத்தவிர பிற அனைத்து உயிரினங்களும் புலனறிவின் ஜீவிகளே! மனிதஜீவியானவன் சுய-உணர்வின் முலம் பகுத்தறிந்து பெறும் அறிவைப் பிரதிநிதித்துவம் செய்பவனாகவும், முடிவில் அனைத்தையும் தொகுத்தறியும் முழு-உணர்விற்கு உயர்ந்து அனைத்தறிவையும் தொகுத்தறிந்து முழு-அறிவில் முழுமையடைபவனாவான்!

ஆகவேதான், பெருவெடிப்பில் தொடங்கிய பிரபஞ்சமானது, 1500 கோடி ஆண்டுகள் நெடிய பரிணாமப் பிரயத்தனத்தின் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி நிலையாக, மிகு-சிக்கல் அமைப்பான மனித-மூளையை வந்தடைந்துள்ளது. மூளையின் ஒரு தனிச் சிறப்பான இயக்கம் என்னவெனில், அது சுய-உணர்வின் இருக்கையாகச் (Seat of Self-Consciousness)செயல்படுவதுதான்! அதாவது, மனித-மூளை என்பது ஒரு கணினியைப் போலவோ, அல்லது இப்பிரபஞ்சத்திலுள்ள வேறு எவ்வொரு பருப்பொருள்-அமைப்பைப் போலவோ உணர்வற்ற நிலையில் தகவல் முறைப்படுத்துதலை (Information Processing) மேற்கொள்வதில்லை; மாறாக, உணர்வுடன், உணர்வின் மேற்பார்வையில் வெறும் தகவல் கூறுகளை மட்டுமல்லாமல், நேரடியாக அறிவு-முறைப்படுத்துதலை (Knowledge-Processing)மேற்கொள்கிறது!

அறிவு இல்லாமல் எதுவுமில்லை! 


அறிவு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை! அறிவு இல்லாமல் எதுவும், ஒரு அணுவும் கூடத் தோன்றமுடியாது! வெற்றிடத்திலிருந்து இப்பிரபஞ்சம் தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது; அந்த வெற்றிடத்தையும் அறிவு தான் தோற்றுவித்திருக்க வேண்டும்! ஆம், சூன்யத்திற்கும் முந்தையது அறிவு!

அறிவை புதிதாக நாம் வளர்க்கவோ, உருவாக்கவோ முடியாது! அனைத்து அறிவும் ஏற்கனவே பிரபஞ்ச அறிவுத் தொகுப்பில் உள்ளது; அத்தொகுப்பிலிருந்து அறிவை அடையப்பெறுவதொன்றே நமது சவால் ஆகும். விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் புதிதாக ஒரு சிறுதுளி அறிவையும்கூட இப்பிரபஞ்சத்துடன் சேர்க்கப்போவதில்லை!

ஆனால், இயற்கையில், பிரபஞ்சத்தில் ஏற்கனவே பொதிந்திருக்கும் அறிவைத் தோண்டி எடுக்கவே எண்ணற்ற விஞ்ஞானிகளும், எண்ணற்ற விஞ்ஞானத் துறைகளும் தடுமாறிக் கொண்டிருக்கையில், இவ்வளவு அறிவும் இயற்கையில், இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு எங்கிருந்து வந்தது?

பிரபஞ்சத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு அதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம்! ஏனெனில், 'பிரபஞ்சம்' என்பது அதனைக் கடந்த வேறொன்றின் குறியீடு ஆகும். அந்த வேறொன்று முழு-அறிவு ஆகும்; அதை நாம் பேரறிவு, பேரிருப்பு அல்லது பேருணர்வு எனவும் காணலாம்! முழு-அறிவு என்பது முழுமையானதொரு இறுதி உணர்வு நிலையே ஆகும்! பிரபஞ்சம் என்பது வாலிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்ந்து தலையில் முடியும் ஒரு வினோத விலங்கு ஆகும்! தன் நிஜத்தைத் தேடும் நிழல் இப்பிரபஞ்சம்!

இப்பிரபஞ்சத்திலேயே மிக முக்கியமான அம்சம் என்பது பௌதீக விதிகளோ, சக்தியோ, ஆற்றலோ, ஏன் இப்பிரபஞ்சமோகூட அல்ல! மாறாக, அறிவு, முழுமையான அறிவு மட்டுமே அதிமுக்கியமான அம்சம் ஆகும்! ஏனெனில், பௌதீக விதிகள், சக்தி, ஆற்றல், இன்னபிற அம்சங்களனைத்தையும், இன்னும் மனிதனையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அறிவை அடைவதற்கான கருவிகள் மாத்திரமே ஆகும்! ஆம், மனிதனும், அவனது உணர்வும் இறுதியானதல்ல; மனிதன் அடையக் கூடிய, ஒவ்வொரு மனிதனும் எவ்வாறேனும் அடைந்திட வேண்டிய முழு-அறிவு, அல்லது, பேரறிவு மட்டுமே இறுதியானது!

மா.கணேசன் / நெய்வேலி / 21-09-2018
------------------------------------------------------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...