Wednesday, 14 November 2018

தன் மையத்தைத் தேடும் பிரபஞ்சம்! [The Extreme Anthropic Principle]




       பிரபஞ்சவியல் என்பது பரந்த வெற்றுவெளியில் பரவிக்கிடக்கும் உயிரில்லாத நட்சத்திரப்
       புழுதியைப் பற்றிய விஞ்ஞானம் அல்ல.    
                                           - மார்க்கோ ஊர்சாக் (Marko Uršič)
                             தத்துவஞானி, உளவியல் மேதை/யூகோஸ்லாவியா


மானிட-மைய விதி  [The Anthropic Principle]

"நமது மனங்கள் நாம் வாழ்கின்ற நமது பிரபஞ்சத்தையடுத்து இரண்டாவது அல்லது மூன்றாவது ஒரு பிரபஞ்சம் பற்றிச் சிந்திக்கவிரும்புவதில்லை. சில மொழிகளில், பிரபஞ்சம் என்ற சொல்லுக்கு பன்மை கிடையாது. இது ஏனென்றால் நமது பிரபஞ்சத்திற்கு இணையாக, நம்மால் அறியமுடியாத பிற பிரபஞ்சங்களைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. ... வேண்டுமானால், நாம் பிற கிரகங்கள் பற்றிப்பேசலாம், ஏனென்றால், நாம் அவற்றை இங்கிருந்தவாறே கண்டு கவனிக்க முடியும்; நம்மால் பிற சூரியன்கள், சூரிய மண்டலங்கள் இன்னும் நமக்குப் பரிச்சயமற்ற பிற உயிர் வடிவங்களையும் பற்றியும் பேசலாம்..."  என்பதாக ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி ரூடால்ப் கிப்பென்ஹான் (Rudolf Kippenhahn), "The Anthropic Principle -Man as the Focal Point of Nature" (1991) by Reinhard Breuer எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், கிப்பென்ஹான் அவர்களின் கூற்றில் நியாயம் உள்ளது. மேலும், உண்மை நிலவரம் என்னவென்றால், நம்முடைய பிரபஞ்சத்தையே நம்மால் முழுமையாகக் காணவும் அறியவும் வழியில்லாத அளவிற்கு அது பிரும்மாண்டமாய் எல்லையற்றதாக பரந்து விரிந்துகொண்டே போகிறது; இதில் இரண்டாவது பிரபஞ்சம் பற்றிப் பேசுவது என்பது அர்த்தமற்றது. இன்னும், சொல்லப்போனால், நம்முடைய பிரபஞ்சமும் கூட தேவையில்லாமல் அளவுகடந்து பெரிதாக உள்ளது! (அதற்கான காரணம் இல்லாமல் இல்லை!) அடுத்து, நமது பூமிக்கிரகத்தைச் சுற்றிலும், நமது சூரிய மண்டலத்தில் என்னென்ன அண்டவெளிப் பொருட்கள் உள்ளன என்பதை அறிவதென்பதுகூட ஒருவகையில் அவசியமானதே எனலாம். ஆனால், நமக்குச் பரிச்சயமில்லாத, நாம் அறிந்த உயிர்-ஜீவியைப் போலல்லாமல் அடிப்படையிலேயே வேறு வகைப்பட்ட, அல்லது வேற்றுலக ஜீவிகளைப் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்றுதான் நான் சொல்வேன். ஏனெனில், அத்தகைய உயிர்-ஜீவிகளுடன் ஒப்பிட்டுத்தான் நம்மை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.

மேலும், மானிட-மைய விதியைப் (Anthropic Principle) பொறுத்தவரையில், அதை ஒவ்வொரு தனிமனிதனையும் மையப்படுத்திடும் வகையிலும் நீட்டிக்க முடியும்; அதாவது, என்னைச் சுற்றிலும் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்; இருந்தாலும், என்னை இன்னொருவருக்கு பரிமாற்றம் செய்துகொள்ள இயலாது! நான் குறிப்பிடும் இந்த நீட்டிப்பு சிலருக்கு அதீதமான விடயமாகப் படலாம். இதையே நான் "அதீத மானிட-மைய விதி" (Extreme Anthropic Principle) என அறிவிக்கவும் விரும்புகிறேன்! யாருக்குத் தெரியும், இவ்விதி நாளை எனது பெயரைக்கொண்டே அழைக்கப்படலாம்! இக்கட்டுரையாசிரியரின் “அதீத மானிட-மைய விதி” இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் "மானிட மைய விதி" (Anthropic Principle) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
"மானிட-மைய விதி" முதன்முதலில் கோட்பாட்டியல் வானவியல் பௌதிகவிஞ்ஞானி, ப்ராண்டன் கார்ட்டெர் (Brandon Carter) அவர்களால், 1973-ல் கோப்பர்னிக்கஸ்-ன் 500-வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் ஒரு மாநாட்டில் அளித்த பங்களிப்பில் இடம்பெற்றது. கார்ட்டெர் தனது மானிட-மைய விதியை, கோப்பர்நிக்கஸ்-ன் விதியான ' மானிடஜீவிகள் இப்பிரபஞ்சத்தில் சிறப்புச் சலுகை கொண்ட இடத்தில் இல்லை' என்பதற்கு எதிர்வினையாக முன்வைத்தார். கார்ட்டெரின் முன்வைப்புக்கூற்று யாதெனில், "பிரபஞ்சத்தில் மானிடஜீவிகளின் இட-அமைவு மையத்துவ மானதாக இல்லையெனினும், ஓரளவிற்கு சிறப்புச் சலுகை பெற்றது" என்பதே ஆகும்.

அதாவது, இப்பிரபஞ்சத்தின் அடியோட்டமாகச் செயல்படும் இயற்கைவிதிகளானவை உயிர் தோன்றுவதற்கு ஏதுவான வகையில் அமைந்திருக்கவேண்டும்; அவ்வாறில்லையெனில், இங்கு நாம் தோன்றியிருக்க முடியாது! இதுதான் மானிட-மையத்துவ விதி பற்றிய சுருக்கமான பொருள் விளக்கம் ஆகும்.
இனி நாம் இந்த "மானிட மைய விதி" கிளப்பிய குழப்ப மேகங்களுக்குள் செல்வோம். இவ்விதியானது மிகவும் வெளிப்படையாகத்தெரியும் ஒரு உண்மை நிலை பற்றிய ஒரு கூற்றே ஆகும். ஆனால், மேற்குலக விஞ்ஞானிகள், எவ்வொரு விடயத்தையும் விதிகளின் சொற்களுக்கு மாற்றியும், கோட்பாடுகளின் வழியாகவும் தான் புரிந்துகொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள்!

ஆனால், இங்கே ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. அது கறாரான விதிகளைக்கொண்டு இயங்குகிறது. அதன் வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்தில் பூமிக்கிரகத்தில் உயிர்ஜீவிகள் தோன்றின. அதன் தொடர்ச்சியாக, பிறகொரு கட்டத்தில் சுய-உணர்வுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மானிட ஜீவிகளாகிய நாம் தோன்றி, இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு இயங்குகிறது; அதனுடைய விதிகள் என்ன, அதனுடைய முடிவு எத்தகையதாயிருக்கும்; அதில் நம்முடைய இடம் எது?..என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். ஆக, பிரபஞ்சமும் இருக்கிறது, அதில் நாமும் இருக்கிறோம்! பிறகு அதிலென்ன பிரச்சினை? அதில்தான் பிரச்சினை இருக்கிறது என்கிறார்கள் பல விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும்!

அதாவது, "உயிர் தோன்றியே ஆகவேண்டும் என்பதுபோல் இயற்கையின் விதிகள் அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது; ஆனால், பிரபஞ்சத்தின் அடிப்படையான, பொருண்மையான மாறாத-மதிப்புகளின் (universal constants) எண்ணில் சிறிது மாற்றம் இருப்பின், பிரபஞ்சமானது வேறுவகைப் பட்டதாக அமைந்திருக்கும்; அந்த வேறுவகைப்பட்ட பிரபஞ்சம் உயிர்த் தோற்றத்திற்கு ஏதுவாக அமையாது. மேலும், பெரும் எண்ணிக்கையிலான விபத்துக்கள் எல்லாம் கூட்டாகச்சேர்ந்து நாம் தோன்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதாகத் தோற்றம் தருகிறது" என்றெல்லாம் சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த விஞ்ஞானிகளின் தர்க்கம் ஏன் இவ்வாறு தலைகீழாக உள்ளது என்பதுதான் எனக்குப் புரியவில்லை! இப்பிரபஞ்சத்தில், உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் ஏற்கனவே தோன்றி வெற்றிகரமாக நிலைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பிரபஞ்சத்தின் பௌதிகவிதிகளும், மாறாத மதிப்புகளும் வேறுவிதமாக இருந்தால், இப்பிரபஞ்சமே நிலைத்திருக்காது, நட்சத்திரங்கள் தோன்றியிருக்காது, ஒரு புழு பூச்சியும் தோன்றியிருக்காது; அறிவுக்கூர்மையுள்ள மனிதஜீவியும் தோன்றியிருக்கமாட்டான், ..... என்பதுபோன்ற வாதங்களுக்களுக்கான அவசியம்தான் என்ன?

ஜெர்மானிய வானவியல் பௌதிகவியல் விஞ்ஞானி ரெய்ன்ஹார்ட் ப்ரூயர் (Reinhard Breuer) அவர்கள், உயிர் தோன்றுவதற்கு சாதகமாக அமைந்த பௌதிக காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார்; அப்பட்டியல் கவனத்திற்குரியவகையில் எண்ணிக்கையில் கணிசமானதாகும்; அத்தனை எண்ணிக்கையிலான விபத்துக்கள் விபத்துபூர்வமாக நிகழ்ந்திருக்கவியலாது என்ற உணர்வை நாம் பெறுகிறோம். கிட்டத்தட்ட நம்மை மனதில் கொண்டே இயற்கைவிதிகளானவை அமைந்தது போல் உள்ளது என்கிறார். பாவம், ரெய்ன்ஹார்ட் ப்ரூயர், அவர் மானிட-மைய விதிக்கு ஆதரவாகப் பேசுபவராக இருக்கிறார்; தனது பார்வையை எடுத்துச்சொல்ல அவர் ஒரு முழு நீளப் புத்தகத்தையே எழுதியுள்ளார்! (இக்கட்டுரையின் முதல் பத்தியில் அதன் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது).

மனிதனே பிரபஞ்சத்தின் மையம்

என்னைப்பொறுத்தவரையில், நானும் "மானிட-மைய விதி"யை ஆதரிப்பவனாகவே இருக்கிறேன். ஏனெனில், இப்போதைக்கு மனிதன்தான், ஒவ்வொரு தனிமனிதனும்தான், இப்பிரபஞ்சத்தின் மையம் ஆவான். ஆனால், இம்மையத்துவம் ஒருவகையில் முக்கியமானது; இன்னொரு வகையில், சற்று தற்காலிகமானது! எவ்வாறெனில், மனிதன் தோன்றுவதற்கும் நெடுங்காலத்திற்கு முன்னே, அதாவது, முதல் உயிர் தோன்றியபோது, அதை நாம் "அமீபா" என்று வைத்துக்கொள்வோம்; அந்த அமீபாதான் இப்பிரபஞ்சத்தின் மையமாகத்திகழ்ந்தது; அதாவது ஒட்டுமொத்தப் பிரபஞ்சப் பரிணாம இயக்கமும் அந்த அமீபாவை உருவாக்குவதில் தான் முனைப்பாகக் குவிந்திருந்தது எனலாம். அவ்வாறே, அமீபாவையடுத்து பரிணாமத்தில் வெளிப்பட்ட ஒவ்வொரு மேம்பட்ட உயிர்ஜீவியும் பிரபஞ்சத்தின் புதிய மேம்பட்ட மையமாக மாறிமாறி அமைந்தன.

பரிணாமத்தைப் பொறுத்தவரை, எவ்வொரு குறிப்பிட்ட உயிர்ஜீவியும், அது அறிவுக்கூர்மை கொண்ட ஜீவியாயினும், அல்லது மனிதனே ஆயினும், சிறப்புரிமை பெற்றதல்ல! மனிதன் உள்பட எல்லா ஜீவிகளுமே பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கை அடைவதற்கான கருவிகளே! ஆனால், மனிதஜீவியின் சிறப்பும், முக்கியத்துவமும், அவன் வழியாகத்தான், அவனைக்கொண்டுதான், அவனுள்ளேயும் ஊடேயுமாகத்தான் அந்த இறுதியான மையம், அல்லது அந்த ஒப்பற்ற இலக்கு அடையப்பட இருக்கிறது! ஏனெனில், மனிதனே உணர்வுப் பரிணாமத்தின் (Evolution of Consciousness) ஏகபோகக் களமாகத் திகழ்பவனாக அமைந்துள்ளான்! அதாவது, உணர்வுப் பரிணாமத்தின் உதயம் அவனுடன் அவனுள் தொடங்கி அவனுள்ளேயே முழுமையடைகிறது!

ஒரு குதர்க்கமான பார்வையில், “உயிர்-ஜீவிகள் எவ்வகைப்பட்ட பிரபஞ்சத்திற்கும் ஏற்றவகையில் தகவமைய முடியாதா என்ன, அதாவது, எவ்வாறு நாம் மாறி மாறி அமையும் இரவுக்கும் பகலுக்கும் தகவமைந்துள்ளோமோ அவ்வாறு? ஆக, இப்பார்வையின்படி நமது இருப்பு குறித்து ஆச்சரியப்பட ஒரு காரணமும், அடிப்படையும் இல்லை எனலாமா? ஒருவேளை  எவ்வகைப்பட்ட பிரபஞ்சமாயினும் - மிகவும் தாறுமாறான விதிகள் மற்றும், மாறாத மதிப்புகளைக் கொண்டதொரு பிரபஞ்சத்திலும் - அதில் நமது இருப்பைப் பெற்றிருப்போமல்லவா!”  இது வெறும் குதர்க்கமான பார்வை மட்டுமல்ல; மாறாக, படு அபத்தமானதாகும்; எவ்வகையிலென்றால், இது உயிர்-ஜீவி மற்றும் அதன் தோற்றம் பற்றிய மிகவும் மேலோட்டமான புரிதலை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது, உயிர்த்தோற்றம் என்பது வெறுமனே தகவமைதல் (Adaptation), மற்றும் உயிர்-பிழைத்திருத்தல்  (Survival) ஆகியவற்றைச் சார்ந்தது என்பதாகக் காணும் மிகவும் மேம்போக்கான புரிதல்!

மானிட-மைய விதியை மறுப்பவர்களின் கூற்றின்படி, மானிட-மைய விதியின் வெவ்வேறுபட்ட எல்லாவகைப் பதிப்புகளும் (Versions) பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் தேடலை ஊக்கம் கெடுப்பதாய் உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மானிட-மைய விதியானது, பொய்ப்பிக்கத் தகுமையற்றதாக (Un-Falsifiable) உள்ளதென்றும், ஆதலால், அவ்விதி விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? இத்தகைய ஆக்கம்கெட்ட முனைப்புக்குச் சரியான பதிலடியாக, யூகோஸ்லாவிய தத்துவஞானியும், உளவியல் மேதையுமான மார்க்கோ ஊர்சாக் (Marko Uršič) அவர்கள், "பிரபஞ்சவியல் என்பது பரந்த வெற்றுவெளியில் பரவிக்கிடக்கும் உயிரில்லாத நட்சத்திரப் புழுதியைப் பற்றிய விஞ்ஞானம் அல்ல." ("Cosmology cannot be a science of dead stardust spread in the vast empty space") என்று கூறியுள்ளார்.

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, 'பிரபஞ்சமே பிரதானம்' எனும் கொடிய வாதத்தால் பீடிக்கப்பட்டவர்களாவர். பிரபஞ்சத்தை பிரதானப்படுத்தி, மனிதனை தேவையற்ற ஓரத்து நிகழ்வாகச் சுருக்கிக் காண்பதில் அவர்களுக்கு அப்படியொரு அலாதி ஆனந்தம்! இத்தகைய பார்வை பெரிதும் எந்திரத்தனமான, பொருண்மைவாதம் சார்ந்த மட்டுப்பாட்டின் வெளிப்பாடே ஆகும்! இம்மட்டுப்பாட்டை உதறிக்கடந்து முன்னோக்கிச்செல்லும்வரை விஞ்ஞானம் முழுமையாக விஞ்ஞானபூர்வமாக இருக்கப்போவதில்லை!

மானிட-மைய விதியின் ஒரு பதிப்பானது, "வலுவான மானிட-மைய விதி" (Strong Anthropic Principle, SAP) என வழங்கப்படுகிறது; அவ்விதி, "பிரபஞ்சமானது ஏதோவொருவகையில் அதன் வளர்ச்சிப் போக்கில் இறுதியாக உணர்வுள்ள, அறிவார்ந்த ஜீவிகளைக் கொணர்ந்திட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உட்பட்டதாயுள்ளது." என்று கூறுகிறது. மானிட-மைய விதியின் இன்னொரு பதிப்பு, "வலுவற்ற மானிட-மைய விதி" (Weak Anthropic Principle, WAP) என வழங்கப்படுகிறது; இவ்விதி, "இறுதியாக உயிர்த்தோற்றத்திற்கு உறுதுணையாக அமைகிற பிரபஞ்சத்தில் மட்டும்தான் பிரபஞ்சத்தை அறியும் திறன்கொண்ட உயிர்கள் தோன்றக்கூடும்." என்கிறது. ஆனால், இவ்விதிகள் யாவும் மிகைக்கூற்றுகள், அல்லது வெள்ளிடைமெய் என கருதப்படுகின்றன; இக்கூற்றுகள் வெளிப்படையான உண்மைகளையே பேசுகின்றன, அவை புதிதாக எதையும் சொல்வதில்லை; மேலும், அவற்றைப் பொய்ப்பிக்கவும் வழியில்லாததால், அவை விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகள் அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறான மிகைக்கூற்றுக்களும், வெள்ளிடைமலை போன்ற ஒன்றை விவரிக்கும் கோட்பாடுகளும் ஏன் முன்வைக்கப்படுகின்றன?

ஏனென்றால், நம் விஞ்ஞானிகள் எதையுமே சுற்றிவளைத்துத்தான் புரிந்துகொள்வோம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பருப்பொருள் மாத்திரமே; ஆகவே அவர்கள்  எல்லாவற்றையும் பருப்பொருள் மற்றும் பௌதிகவிதிகளின் சொற்களிலேயே புரிந்துகொள்வோம் என அடம் பிடிக்கிறார்கள்! ஆகவேதான் நாம் மானிட-மைய விதி போன்ற மிகைக்கூற்றுக் கோட்பாடுகளை முன்வைப்பதும், அவற்றைக்கொண்டு எந்திரவாத விஞ்ஞானத்தின் மட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயற்சிப்பதும் அவசியமாகிறது!

விஞ்ஞானிகள் எவ்வளவு குதர்க்கமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.  "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றான, "பிரபஞ்சமானது உயிர்த் தோற்றத்திற்கு உறுதுணையாக இருந்தாக வேண்டும்" என்பதைச் சோதித்துக் காணவேண்டும் எனில், அதற்குச் சான்றாக நம்முடைய பிரபஞ்சமல்லாத வேறு பிரபஞ்சங்களில் உயிர் தோன்றியிருக்கவேண்டும் என்கிறார்கள்! ஆனால், பெரும்பான்மையான விளக்கத்தின்படி வேறு பிரபஞ்சங்களை நம்மால் கண்டுகவனிக்க இயலாது. ஆக, "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றைப் பொய்ப்பிக்க இயலாததால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது" என்கிறார்கள்!

அடுத்து, "நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாயிருந்தால், நாம் இப்போது  இங்கிருக்கமுடியாது. ஆனால், நமது பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாக இல்லையாதலால், நாம் இங்கிருக்கிறோம்!" என்பது போன்ற தர்க்கங்களும் பயனற்றவையாகும்! ஏனென்றால், இங்கு ஒரு முழும்பிரபஞ்சமே இருப்பதால், அதன் பகுதியாக இருந்துகொண்டுதான் நாம் வேறுவகைப்பட்ட பிரபஞ்சங்களைப் பற்றியும்; இன்னும் சில சமயங்களில் ஒன்றுமில்லாத நிலை பற்றியும் பேசுகிறோம்! மேலும், நம்மையும் பிரபஞ்சத்தையும் பிரிக்கஇயலாது! இதன் அர்த்தம் நாம் இப்பிரபஞ்சத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையாகவும் இருக்கிறோம்; மேலும், நாம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையின், விதிமுறைகளின் பகுதியாகவும், தொடர்ச்சியாகவும் இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழிமுறைகளையும், விதிமுறைகளையும் கற்பனைசெய்வது பயனற்றது! அனந்த கோடி பிரபஞ்சங்களை நம் கற்பனைகளில் விரித்துக் காணலாம்; அதனால், நமது எதார்த்த நிலை ஒரு சிறு இம்மியளவும் மாறப்போவதில்லை!

ஒரு பார்வையில், பிரபஞ்சத்திற்கு உயிருள்ள ஜீவிகளையும், உணர்வுள்ள மனிதஜீவிகளையும் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயமோ, அல்லது அவை தோன்றுவதற்கு உறுதுணையாக அமைந்தாக வேண்டிய அவசியமோ இல்லை எனக்காண இடமுண்டு எனலாம். ஆனால், ஒரு கட்டத்தில், பிரபஞ்சமானது தன்னைத்தானே அறியும்வகையில் உணர்வு பெறவில்லை எனில், அதன் இருப்பிற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆக, பிரபஞ்சமானது பரிணாமம் எனும் சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையில் உணர்வுபெறும் வகையில், முதலில் உயிர்-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, புலன் உணர்வு நிலையை எட்டியது, அதையடுத்து மேற்கொண்ட பரிணாம முயற்சியின் விளைவாக, அது மனித-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, சுய-உணர்வு நிலையை வந்தடைந்தது! இவ்வாறு வந்தடைவது என்பது தவிர்க்கவியலாததாகும்.

அதேவேளையில், உயிர்-ஜீவி, மற்றும், மனிதஜீவியை அடைவது பிரபஞ்சத்தின் பிரதான நோக்கமோ, இறுதி இலக்கோ அல்ல! மாறாக, அதன் ஒரே பிரதான இலக்கு முழுமையான உணர்வுநிலையை அடைவதே! மேலும், மனிதனின் வழியாக தற்போது எட்டப்பட்டுள்ள உணர்வு நிலை இறுதியானதோ, முழுமையானதோ அல்ல! ஆயினும், உணர்வின் உச்ச நிலையான முழு-உணர்வுநிலையும் மனிதனைக்கொண்டே, மனிதனின் வழியாகவே சாதிக்கப்பட இருக்கிறது! இதுவே பிரபஞ்சப் பரிணாம வழிமுறையின் அடியோட்டமான திட்டம் ஆகும். இவ்வகையில், மானிட-மைய விதி மட்டுமல்ல, டார்வினின் 'இயற்கைத்தேர்வுக்கு' மாற்றாகக் கொள்ளப்பட வேண்டிய "இலக்கு நிலைத் தேர்வு" (Teleological Selection) முறையும் பொருத்தமானதே ஆகும்.

மானிட-மைய விதியின் வலுவான பதிப்போ(SAP), வலுவற்ற பதிப்போ(WAP), இன்னும் அதன் பல்வேறுபட்ட பதிப்புக்களின் அடிப்படை அம்சம் என்னவென்றால், அவை பிரபஞ்சத்தில் மனிதனின் மையத்துவத்தையும், அவனது முக்கியத்துவத்தையும் சுட்டுகிறது என்பதொன்றே ஆகும்!  ஆனால், சிலர், "மானிட இருப்பு என்பது விளக்கம் அளிக்கப்படவேண்டிய பலவகைப்பட்ட அம்சங்களின். பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்ற ஒன்றுதான்!" என்கிறார்கள்.

ஆனால், மானிட இருப்பு என்பது பிற பலவகைப்பட்ட அம்சங்களின், பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்றதல்ல. மேலும், மானிட இருப்பு என்பது எத்தகையது என்பதைக் கொண்டே மானிடனின் முக்கியத்துவம் கணிக்கப்படவேண்டும்; ஆக, மானிட இருப்பானது பலவகைப்பட்ட அம்சங்களில் அதுவும் ஒன்று என்பதாக இருக்கமுடியாது! ஏனெனில், இருப்பு (Existence) என்பது ஒருபடித்தானதல்ல. இருப்பு என்பதை இருக்கின்ற பொருட்களின், பண்புகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்திக் காண முடியும். இருப்பதெல்லாம் இருப்புதான் என பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது! அனைத்துப் பொருட்களையும், அம்சங்களையும் அவற்றின் பண்புகளுக்கு ஏற்ப கிட்டத்தட்ட மூன்று  வகையினங்களில் அடக்கிவிடலாம். ஒன்று, சட-இருப்பு  (Inorganic Existence); இரண்டாவது, உயிர்-இருப்பு (Organic Existence); மூன்றாவது, உணர்வு-இருப்பு (Psychic Existence). இம்மூன்று வகைகளும் வெறும் இருப்பு நிலைகள் மட்டும் அல்ல; மாறாக, இவை பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளும், வெவ்வேறு தளங்களும் ஆகும். ஒன்றிலிருந்து மற்றொன்று பண்பிலும், தரத்திலும் உயர்வானது, மேலானது.

ஒரு கட்டம்வரை இம்மூன்று இருப்புநிலைகளும், தளங்களும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையே எனக்காண இடமுண்டு என்றாலும், ஒவ்வொரு உயர்-வளர்ச்சி நிலைக்குள்ளும் அதற்கு முந்தைய நிலைகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும். அதாவது உள்ளடக்கப்பட்டதாகவும்; முந்தைய நிலைகளை அடுத்தடுத்த உயர்-நிலைகள் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அமைந்ததாகும். இதன் அர்த்தம் பரிணாமத் தொடரில் இறுதியாக எட்டப்படும் நிலையில் முந்தைய நிலைகள் யாவும் உள்ளடக்கப்பட்டு பிரபஞ்சத்தின் ஒருமையும் முழுமையும் அந்த ஒற்றை இறுதி நிலையில், அந்த ஒற்றைப் புள்ளியில் எட்டப்படும்! எந்தப் புள்ளியிலிருந்து இப்பிரபஞ்சம் வெடித்துத் தோன்றியதோ அந்தப்புள்ளி!

அப்புள்ளியைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் வெறும் குறியீடு (Symbol) மாத்திரமே! பிரபஞ்சத்தின் சாரமான (விதை போன்ற) அந்தப்புள்ளியில், நாம் காணும் பிரபஞ்சம் இடம்பெறாது! இப்புரிதலிலிருந்து காணும்போது, இறுதியில் அப்புள்ளி மட்டுமே முக்கியமானது; அப்புள்ளியை நோக்கிய நிகழ்வுமுறையே பிரபஞ்சம் என்பது. நாம் அந்த வழிமுறையின் உணர்வுப் பூர்வமான பிரதிநிதிகள் ஆவோம்.

முதலிடத்தில் நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்? அதற்கான அடிப்படை அவசியம் என்ன?  நாம் இருக்கிறோம்! ஆகவேதான் பிரபஞ்சத்தைப்பற்றி நாம் ஆராய்ந்து அறிந்திட விழைகிறோம்! நாம் இல்லாத நிலையில் பிரபஞ்சத்தைப்பற்றி நமக்குக் கவலையில்லை! அதேவேளையில், நாம் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. இரண்டையும் வேறுவேறாகப் பார்ப்பது என்பது, ஒரே நிகழ்வுமுறையின் வெவ்வேறு கட்டங்களை, வளர்ச்சி நிலைகளைத் தனித்தனியே காண்பதன் வழியாக மட்டுமே எழுகிறது.

பரிணாமம் என்றால் என்ன, பரிணாமத்தில் பரிணமிப்பது எது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாதவரை, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில், உயிர்-ஜீவிகளைப் பற்றியும், இன்னும் அறிவுக்கூர்மையுள்ள ஜீவிகளான நம்மைப்பற்றியும், இன்னும் எதைப்பற்றியுமே நாம் உருப்படியாகப் புரிந்துகொள்ள இயலாது! பிரபஞ்சம் என்பது ஒரு பொதுவான சொல் ஆகும். பிரபஞ்சம் என்றாலே உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள், கிரகங்கள்; இன்னும் பலவகைப்பட்ட பருப்பொருளாலான பொருட்கள், மற்றும் நிகழ்வுகள்தான் என்பதாகப் பார்க்கும் பார்வை பழமையானதாகும். இப்பார்வை, பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரமாகவும், பருப்பொருளின் பிரும்மாண்டமான அமைப்பாகவும் காண்கிற மட்டுப்பாட்டினால் விளைந்ததாகும்! இவ்வாறு காண்பதற்கான ஒரு பக்கத்தையும், தேவையையும் பிரபஞ்சம் கொண்டிருக்கிறது என்ற போதிலும், பிரபஞ்சம் என்பது பிரதானமாக ஒரு பரிணாம இயக்கமே, நிகழ்வுமுறையே ஆகும்.  

பிரபஞ்சத்தைப்பற்றி ஆராயும் விஞ்ஞானிகள், வெளி-காலம் (Space-Time), முப்பரிமாணம், நாற்பரிமாணம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், புறத்தே  வியாபித்திருக்கும்
பிரபஞ்சத்தின் வெளி-காலமானது, உணர்வுள்ள மனிதஜீவிகள் தோன்றியபிறகு, உணர்வார்ந்த மனிதனின் உணர்வில் (Consciousness) குவிந்து, மேன்மேலும் குறுகி, வெளியும், காலமும் அற்ற தனி நிலைப்பாடு (Singularity) எனும் புள்ளியில் அடர்ந்து ஐக்கியமாகிவிடுகிறது! இதை நாம் பிரபஞ்சத்தின் செறிவடைவுக் கட்டம் (Conflationary Stage) என்றழைக்கலாம்.

இறுதி மானிட-மைய விதி

மானிட-மைய விதியின் மற்றுமொரு பதிப்பு,  இறுதி மானிட-மைய விதி (Final Anthropic Principle) என வழங்கப்படுகிறது. பேர்ரோ & டிப்லர் (Barrow & Tipler) அவர்கள் முன்வைத்த மிகவும் அதீதமான இவ்விதியானது, அறிவுள்ள உயிர்கள்  பிரபஞ்சத்தின் மிக அவசியமான ஒரு பண்புக்கூறு என்கிறது. மேலும் ஒருமுறை அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் பிறகு ஒருபோதும் இற்றழியாது என்கிறது. மேலும், மானிட-மைய விதியின் இப்பதிப்பானது, பிரபஞ்சத்தின் ஒரே குறிக்கோள் அறிவுள்ள உயிர்களை உருவாக்குவதும், அவற்றைப் பேணிக்காப்பதும் தான் எனச் சொல்லாமல் சொல்கிறது.

"அறிவுள்ள உயிர்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் அண்டவெளி முழுவதும் பரவிச் சென்று பிரபஞ்சத்தையே மாற்றியமைத்திடும்; அவ்வழியே, மானிடகுல மதிப்புகளை மிகத்தொலைவான எதிர்காலத்திற்கு ........ஓமேகா புள்ளி (Omega Point) எனப்படும் இறுதி ஒருமை நிலைக்குக் கடத்திச்செல்லும்.... .......அந்நிலையில், அறிவுள்ள உயிர்கள் அனைத்து பருப்பொருளையும், ஆற்றல்களையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்திடும்..." என்றெல்லாம் 'இறுதி மானிட-மைய விதி' விரிகிறது.

ஆனால், நாம் 'பிரபஞ்சம்' எனும் ஒரு பிரும்மாண்டமான மரத்தின் பகுதியாக - துல்லியமாகச் சொன்னால், அம்மரத்தின் பிஞ்சுகளாகவும், காய்களாகவும் - இருந்துகொண்டு, அம்மரத்தின் மூலத்தை அறியும் நோக்கில் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நம்மில் சிலர், அம்மரத்தின் வேர்களைத் தேடிச்சென்று, வேர்களிலிருந்துதான் அம்மரம் தோன்றியது என்கிறோம்! இன்னும் சிலர், இல்லை, இல்லை, 'கடவுள்'தான் அம்மரத்தைத் தோற்றுவித்தவர் என்கிறோம்! ஆனால், இந்த இரண்டு பார்வைகளும் தவறானவை; மாறாக, அம்மரமானது ஒரு வித்திலிருந்துதான் தோன்றியது; அந்த வித்தை - பிஞ்சுகளாகவும், காய்களாகவும் விளங்கும் நாம் ஒவ்வொருவரும் முற்றிக் கனியாவதன் வழியாக, நம்முள்ளேதான் கண்டடைய முடியும் என்கிறோம்! இந்த உவமையில் இடம்பெறும் பிஞ்சு, காய், கனி, வித்து என்பவை உணர்வின் வளர்-முகமான உயர் நிலைகளைக் குறிக்கின்றன!

ஒருவகையில், இந்த ‘இறுதி மானிட-மைய விதி’ யானது மானிடர்களின் மையத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது என்றாலும், அதன் கூற்றுக்கள் அதீதக் கற்பனை சார்ந்ததாக உள்ளன. மேலும், அவை பெரிதும், பிரபஞ்சத்தின் பொருண்மையான பண்புகளையும், பௌதிக விதிகளையும் அடிப்படையாகக் கொண்டமைந்தவையாக உள்ளதாலேயே மிகவும் தவறான கருதுகோள்களுக்கும், கற்பனையான முடிவுகளுக்கும் இட்டுச்சென்றுள்ளன. குறிப்பாக, ஒருமுறை தோன்றிய அறிவுள்ள உயிர்கள், அதாவது அவற்றின் சந்ததிகள் பிறகு எல்லாக் காலத்திற்கும், பிரபஞ்சம் முடியும் வரையிலும் நீடித்து நிலைத்திருக்கும் எனப்படுகிறது! இத்தகைய கூற்று, அறிவுள்ள உயிர்களின், குறிப்பாக மனிதஜீவிகளின் தனித்துவமிக்க தன்மையை அறியாததன் விளைவாகவும்; முக்கியமாக, பரிணாமம் பற்றிய ஆழமான புரிதலின்மையின் விளைவாகவும் எழுந்த கற்பனைக் கோளாறு ஆகும். ஒரு தனிமனிதனை எடுத்துக் கொண்டால், அவன் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள், அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே இப்பூமியில் உயிர்வாழ்பவனாக இருக்கிறான்; ஆயினும், அவன் அக்குறுகிய வாழ்காலத்திற்குள்ளாகவே தனது பரிணாம முழுமையை அடைவதற்கான உட்பொதிவை, உள்ளுறையாற்றலைக் கொண்டவனாகத் திகழ்கிறான்!

பிரபஞ்சம் என்பது அடிப்படையில் ஒரு பரிணாம இயக்கம் என்று நாம் குறிப்பிட்டுள்ளோம். அதில் மனிதன் என்பவன் அப்பரிணாம வழிமுறையின் உணர்வுப்பூர்வ பிரதிநிதியாவான்! துல்லியமாகச் சொன்னால், மனிதனின் வழியாக, இன்னும் ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகத்தான் பிரபஞ்சமானது  தனது ஒப்பற்ற பரிணாம முழுமையை எட்டுகிறது. அதாவது, பருப்பொருளாலான பிரபஞ்சத்தின் இறுதி முடிவு, எவ்வாறு அமையும் - ஒரு மாபெரும் உள்ளடர்தலில் (Big Crunch) முடிவடையுமா, அல்லது முற்றிலும் தனது வெப்ப ஆற்றலை இழந்து வெப்பச்சாவில் (Heat Death) முடிவடையுமா என்பது போன்ற அனுமானங்கள் தேவையற்றவையாகும்! ஏனெனில், இத்தகைய அனுமானங்கள் பருப்பொருளின் அடர்த்தி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுபவையாகும். அதாவது, பிரபஞ்சத்தை முழுக்க முழுக்க பருப்பொருளின் பண்புகள் மற்றும் பௌதிக விதிகளுக்குச் சுருக்கிக் காணும் மாபெரும் மட்டுப்பாட்டின் மயக்கத்திலிருந்து இன்னமும் விஞ்ஞானம் விடுதலையாகவில்லை!

பருப்பொருள் என்பது பிரபஞ்சத்தின் ஒரேயொரு பண்பு மட்டும்தானே தவிர அதுவே ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அல்ல! இன்னும் சொல்லப்போனால், பருப்பொருளை ஒரு பண்பாகவே கணக்கில் கொள்ள இயலாது. சரியாகச் சொன்னால், அது வெறும் ஒரு கட்டுமானப் பொருள் மாத்திரமே; அதைக்கொண்டு அமையும் கட்டுமானங்களின் மூலம் வெளிப்படக் கூடியவற்றையே (Emergent properties) -உயிர், உணர்வு (Consciousness) ஆகியவற்றையே-  முறையான பண்புகளாகக் கொள்ளவேண்டும். இவ்வழிமுறையின் மூலமாக இறுதியாக எட்டப்படும் ‘வெளிப்படு-பண்பு’ தான் “இறுதி மெய்ம்மை” (Ultimate Reality) ஆகும்! அதுவே “மூல மெய்ம்மை”யும் (Source Reality) ஆகும்!

'பிரபஞ்சம்' என்பது பரிணாம வழிமுறையில் ஏற்கனவே உருப்பெற்றவை அனைத்தையும், இன்னும் உருப்பெறாத அம்சங்களையும், பண்புகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தத்தையும் குறிக்கும் பொதுவான ஒரு ஒற்றைச் சொல் ஆகும். பிரபஞ்சம் என்பது பல்வேறுவகைப்பட்ட அண்டவெளிப் பொருட்களும், நிகழ்வுகளும் மட்டுமே அல்ல. மாறாக, அத்தனை அண்ட வெளிப்பொருட்களும், நிகழ்வுகளும் சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் வழிமுறையின் வாயிலாக உருவானவையே என்பதால், அடிப்படையில் பிரபஞ்சம் என்பதை ஒரு பரிணாம இயக்கமாகக் காண்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி, நெடிய இடைப்பட்ட நிலைகளின் வழியாக வளர்ந்து, ஒரு முடிவான இலக்கு அல்லது முழுமை நிலையை அடையும் நிகழ்வுமுறை தான் பிரபஞ்சம் ஆகும்! ஒரு நெடிய சங்கிலித்தொடர் போன்ற நிகழ்வுமுறையில் குறிப்பிட்ட எவ்வொரு கண்ணியை, அல்லது, நிலையை; அல்லது எவ்வொரு பண்பையும், இதுதான் பிரபஞ்சம் என அடையாளப்படுத்திட முடியாது - அந்நிகழ்வுமுறையின் இறுதியான இலக்கு நிலையைத் தவிர! மரமானது அதன் கனியைக்கொண்டே அறியப்படும் என்பதுபோலத்தான் பிரபஞ்சமும். சிலர் காய்க்காத மரங்களும் உள்ளனவே என வாதம் செய்யலாம். ஆனால், காய்க்காத மரங்களைப் பற்றி அதன் காய்கள் எவ்வாறு பேசமுடியும்?  

பிரபஞ்சத்தின் பிறப்பைப்போலவே, அதன் இறப்பும் பூடகமானதாகும்! அவ்வாறானதே மனிதனின் பிறப்பும், இறப்பும்! மனிதன் பிறக்கும்போது தனது உண்மையான (தன்னை உணரக்கூடிய முழுமையான) நிலையில் இருப்பதில்லை! அவ்வாறே மனிதன் இறக்கும்போதும் உணர்வுடன் இரு(ற)ப்பதில்லை! உண்மையான முழு-உணர்வுகொண்ட மனிதன் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு உச்சக்கட்டத்தில்தான் தோன்றுகிறான்; அல்லது பலரது விடயத்தில் அத்தகைய உச்சக்கட்டம் தோன்றுவதேயில்லை! இவ்வாறே, பிரபஞ்சத்தின் உச்சக்கட்டமும் அதனுடைய பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே முறையே தனது உச்சக்கட்டத்தை எட்டுகின்ற ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும்தான் நிகழ்கிறது! ஆக, பிரபஞ்சமானது இறுதியில் எவ்வாறு அழியும், அல்லது முடிவுக்கு வரும் என்பது குறித்த பருப்பொருள்சார்ந்த விஞ்ஞானக் கற்பனைகளில் நேரத்தை விரயமாக்குவது பயனற்றதாகும்!

பிரபஞ்சத்திற்கும், அறிவுள்ள ஜீவிகளுக்கும் (மனிதஜீவிகளுக்கும்) உள்ள தொடர்புகுறித்த விடயத்தில், அறிவுள்ள ஜீவிகள் பரந்த இப்பிரபஞ்சத்தின் மீது எவ்விதமான தாக்கத்தையும் செலுத்துவதான தடயம் எதுவும் இல்லை என விஞ்ஞானிகள்  பேர்ரோ & டிப்ளர் இருவரும் தங்கள் நூலில் போகிறபோக்கில் ஒரு கருத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். ஆனால், இக்கூற்று மேலோட்டமான  ஒன்றாகும். ஒரு மரத்தில் விளையும் ஒவ்வொரு கனியும் மறைமுகமாக பெரும் தாக்கத்தை அம்மரத்திற்குச் செய்கின்றது; அதாவது ஒவ்வொரு கனியும் அம்மரத்தின் முழுமையைச் சாத்தியமாக்குகின்றது! அவ்வாறே, பிரபஞ்சத்தின் மீதான அறிவுள்ள ஜீவிகளாகிய மனிதர்களின் தாக்கமும் மறைமுகமானதாகும்! மனிதஜீவிகள் தங்கள் தாக்கத்தை நேரடியாக பருண்மையாக பரந்த பிரபஞ்சத்தின் மீது செய்யத்தேவையில்லை. ஏற்கனவே இங்கு பூமிக்கிரகத்தின்மீது விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு நாம் செலுத்தியுள்ள பெரும்தாக்கங்கள் நமக்கும் பிறஜீவிகளுக்கும் மிகக்கேடான சுற்றுச்சூழல்சார்ந்த விளைவுகளை உருவாக்கியுள்ளன. கிட்டத்தட்ட நாமும், பிற உயிர்ஜீவிகளும் இற்றழியும் நிலைக்கு நாம் காரணமாகியுள்ளோம்!  இந்நிலையில் நாம் பிற கேலக்ஸிகளையும் காலனியாக்குவது என்பதும் பிரபஞ்சம் முழுவதும் பரவி பருப்பொருளையும் பிற இயற்கை ஆற்றல்களையும் நம்முடைய முழுக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவது என்பதும் கற்பனைக் கோளாறாகும்! இது அறிவுள்ள ஜீவிகளுக்கு அழகல்ல!

ஆக, மேற்காணும் விளக்கங்களின்படி, ‘இறுதி மானிட-மைய விதி’யின் பிரதான கருதுகோளான 'அறிவுள்ள தகவல்-முறைப்படுத்தும் (Intelligent information-processing) ஜீவிகள் பிரபஞ்சத்தில் தோன்றுவது கட்டாயம்; அவ்வாறு அவை ஒருமுறை தோன்றிடும் பட்சத்தில், அவை ஒருபோதும் மரிப்பதில்லை' என்பது மிகவும் அதீதமானதொரு நிலையாகும்; ஆகவே, அதற்கு அவசியமில்லை என்றாகிறது. ஏனெனில், முடிவேயில்லாமல், தகவல்-முறைப்படுத்துதல் என்பது தேவையற்றதாகும். அதாவது, தகவல்-முறைப்படுத்துதலுக்காக தகவல்- முறைப் படுத்துதல் (Information-processing for the sake of itself) என்பது அபத்தமானதாகும். தகவல்-முறைப்படுத்துதலின் நோக்கம் அறிவைப் பெறுவதற்காகத்தான். எதைப்பற்றிய அறிவு என்றால், இறுதி மெய்ம்மை பற்றிய அறிவுதான் - பிரபஞ்சம், மனிதன், வாழ்க்கை என ஒட்டுமொத்தத்தின் அர்த்தம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை அறிவதுதான்! அதற்காக ஒருவன் அனந்த காலம் வாழ்ந்துகொண்டிருப்பது என்பது சாபக்கேடான நிலையாகும்! ஆம், இறுதி மெய்ம்மையை, அர்த்தத்தை ஒவ்வொருவனும் தன் வாழ்-காலத்திற்குள்ளாகவே உணர்ந்தறிந்து தன் பரிணாம முழுமையை அடைந்திட முடியும்!  
துல்லிய-மதிப்பமைவு (Fine-Tuning)

மானிட-மைய விதி மனிதனை பிரபஞ்சப் (பரிணாம)  இயக்கத்தின் பிரதான இலக்காகக் காண்கின்றது என்றால், மனிதஜீவியை உருவாக்கிடும் வகையில், பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளும் (Initial conditions), சில மாறாத பொருளியல் மதிப்புகளும் (Physical Constants) துல்லியமாக அமைக்கப்பட்டதாக "துல்லிய-மதிப்பமைவுக் கோட்பாடு" (Fine-Tuning) சொல்கிறது! இவ்விரு கோட்பாடுகளின் ஊடாக, இறையிலாளர்கள் கடவுளை உள்ளே கொண்டு வந்துவிடுகின்றனர்; அதாவது, கடவுள்தான் இப்பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் துல்லியமாக அமைத்தவர் என்கின்றனர்! ஆகவே, நாத்திகர்களும், பொருள்முதல்வாதிகள், இயற்கைவாதிகள், மற்றும் சில விஞ்ஞானிகளும் இவ்விரு கோட்பாடுகளையும் எதிர்த்து வருகின்றனர். இவர்களின் கேள்வி என்னவென்றால், கடவுள் ஏன் பெருவெடிப்பை உருவாக்கவேண்டும், பிறகு மனிதனின் வரவுக்காக பல நூறு கோடியாண்டுகள் காத்திருக்கவேண்டும்?" என்கின்றனர். மேலும், பிரபஞ்சமானது நமக்காக துல்லியமாக மதிப்பமைவு செய்யப்படவில்லை, நாம்தான் அதற்கேற்றவாறு தகவமைந்து இருக்கிறோம் என்று விக்டர் ஸ்டெஞ்செர் (Victor Stenger) போன்ற விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

ஆனால், இந்த தர்க்கம் பிரபஞ்சம் பற்றிய மிகவும் மேலோட்டமான, ஆகவே தவறான புரிதலின் வெளிப்பாடே ஆகும்!  மானிட-மைய விதி பற்றிய விவாதத்தில், மனிதன் உருவாகும்வகையில் பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் துல்லியமாக அமையச்செய்தது யார் அல்லது எது ; அதாவது கடவுளா, அல்லது இயற்கையா என்பது இப்போதைக்கு முக்கியமல்ல! ஏனெனில், தெளிவான நோக்கத்துடன் முன்-யோசித்து, திட்டமிட்டு,  கடவுள், அல்லது வேறு சக்தியினால் மதிப்பமைவு செய்யப்பட்டதோ, அல்லது, விபத்துபூர்வமாக எல்லா நிலைமைகளும், மதிப்புகளும் கூடி அமைந்ததோ; உயிர்-ஜீவிகளும், உணர்வுள்ள மானிடஜீவிகளும் உருவாகும் வகையில் பிரபஞ்சமானது துல்லிய மதிப்பமைவு (fine-tuning) செய்யப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்!  

துல்லியமாக மதிப்பமைவு பெற்ற சில காரணிகள் என இதுவரை அறியப்பட்ட நான்கு அடிப்படை விசைகளைக் கூறலாம். அவற்றில் ஒன்றான வலுவான அணுக்கருவியல் விசையானது (Strong nuclear force) கொஞ்சம் அதிக ஆற்றல் கொண்டதாயிருந்தால், உயிர்த் தோன்றுவதற்கு மிகவும் இன்றியமையாத ‘ஹைட்ரஜன்’ தோன்றியிருக்காது போயிருக்கும். அது கொஞ்சம் வலுக்குறைவாக இருந்திருந்தால், ஹைட்ரஜன் மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே தனிமமாக அமைந்திருக்கும்.

நான்கு அடிப்படைவிசைகளுள் இன்னொன்றான வலுக்குறைவான அணுக்கருவியல் விசையானது (Weak nuclear force), அதன் மதிப்பில் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும், நட்சத்திரங்களில் கனமான தனிமங்களை உருவாக்குவதற்குத் தேவையான "ஹீலியம்" எனும் தனிமம் போதுமான அளவிற்கு அமைந்திருக்காது போயிருக்கும். அல்லது, நட்சத்திரங்கள் வெகு சீக்கிரமாக எரிந்து தீர்ந்துவிடும்; அதனால், கனமான தனிமங்களை அண்டவெளியெங்கும் பரவச்செய்யும் சூப்பர் நோவா' (Supernova)  என்று குறிப்பிடப்படும் "நட்சத்திர வெடிப்பு" நிகழ்வுகள் நிகழாமல் போயிருக்கும். அதாவது, உயிர் தோன்றுவதற்கு மிகவும் அடிப்படையான கனமான தனிமங்கள் ஆற்றல் உலைகளான நட்சத்திரங்களின் மையங்களில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நான்கு அடிப்படை விசைகள் என அறியப்பட்டவைகளுள் ஒன்றான, மின்காந்த விசையானது
(Electromagnetic force), அறியப்பட்ட அதன் மதிப்பைவிட சிறிது வலுவாகவோ, அல்லது  சிறிது வலுக்குறைந்தோ இருக்குமானால், அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளும், சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகியிருக்காது.

அதேபோல், நான்கு அடிப்படை விசைகளில் மற்றொன்றான ஈர்ப்பு விசை (Gravity) யானது , அதன் மதிப்பில் கொஞ்சம் பெரிதாயிருந்தால்கூட,  அதன் ஒரு விளைவு என்னவாக இருக்கும் என்றால், நட்சத்திரங்கள் மிகு கொதிப்பாகவும், விரைவாக தன் எரிபொருளை எரித்துத் தீர்த்துவிடுவதாயும் அமைந்திருக்கும். ஈர்ப்பு விசையானது கொஞ்சம் சிறிதாயிருந்தால்கூட, நட்சத்திரங்கள் ஆற்றலை உமிழும்வகையில் எரியாமல் போயிருக்கும்; அதனால் கனமான- தனிமங்கள் உருவாக முடியாது. இவ்வாறு உயிர் தோன்றுவதற்கு இயைபாக அமைந்தவையாக, 25 -க்கும் மேற்பட்ட காரணிகள் துல்லியமாக மதிப்பமைவு பெற்று அமைந்துள்ளதாக  இனம் கண்டறியப்பட்டுள்ளன. …..

தொடர்ந்து பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பின் தன்மை குறித்துக் காண்பதற்கு முன், முதலிடத்தில், பிரபஞ்சம் என்று எதை நாம் குறிப்பிடுகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுப்பது மிகவும் முக்கியமாகும். விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகிய அண்டவெளிப் பொருட்கள் மற்றும் கருந்துளைகள் (Black holes), ‘சூப்பர் நோவா’ (Super nova) போன்ற வினோத நிகழ்வுகளையும்; காலம், வெளி, நிறை, அணுத்துகள்கள்; ஈர்ப்பு (Gravity), மின்காந்த விசை ஆகிய விசைகளையும் உள்ளடக்கிய, பரந்துவிரியும் பிரும்மாண்டமான  பருப்பொருள் தொகுதியைத்தான் பிரபஞ்சம் எனக் காண்கின்றனர். ஆனால், இவ்வாறு அவர்கள் காண்பது மூன்றில் ஒரு பகுதி பிரபஞ்சத்தை மட்டுமே ஆகும்! அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளத்தையே அவர்கள் ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் கண்டு மயங்கித் தடுமாறிக் கொண்டுள்ளனர்.

ஆனால், பருப்பொருளின் தளத்தையடுத்து பருப்பொருள் தன்மையை மீறிய பரிணாம வளர்ச்சி நிலையாகத் திகழும் உயிர்ஜீவிகளின் தொகுதியும் இப்பிரபஞ்சத்தின் சட்ட முறைப் படியான (Legitimate Part) பகுதிதான். இதை நாம் பிரபஞ்சத்தின் இடைத்தளம் அல்லது உயிரியல் தளம் என்றழைக்கலாம்; அல்லது இரண்டாம் பிரபஞ்சம் எனவும் இதை அழைக்கலாம். இந்த தளத்தையடுத்து, பிரபஞ்சத்திற்கு அடுத்த மூன்றாவது ஒரு தளமும் உள்ளது. அதுதான் சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் திறன்பெற்ற மானிட ஜீவிகளின் தொகுதியாகும். இத்தளத்தை நாம் உணர்வியல் தளம் அல்லது மூன்றாம் பிரபஞ்சம் என்றும் அழைக்கலாம்.

இப்போது நாம் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பின் தன்மை குறித்துக் காண்போம். வலுவற்ற மானிடமைய விதியின் உட்கோள் என்னசொல்கிறது என்றால், மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறான் என்கிறது. அதாவது,  பிரபஞ்சத்தையும், மனிதனையும் தனித்தனி அம்சங்களாகப் பார்க்கும்போது தவறான புரிதலுக்கு அது இட்டுச் செல்வதாய் அமைந்திடும். ஒருவகையில், அதாவது, பிரபஞ்சத்தின் பருப்பொருளாலான அடித்தளத்திlல் இருந்துதான் உயிரியல்தளம் எழமுடியும்; இவ்வகையில், உயிரியல்தளம் பருப்பொருள் தளத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்வது நியாயமானதே. அடுத்து, உணர்வுள்ள மனிதஜீவிகளைக்கொண்ட உணர்வியல்தளமானது அதற்கு முந்தைய இடைத்தளமான உயிரியல் தளத்தையும், அடித்தளமான பருப்பொருள் தளத்தையும் சாந்திருக்கிறது என்பதும் சரியானதே. அதே நேரத்தில், ஒரே பரிணாம வழிமுறையின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களான இம்மூன்று தளங்களையும் பண்பினடிப்படையில் நாம் வேறுவேறாக பிறித்தறிவது தவிர்க்கமுடியாதது என்றாலும், பரஸ்பரம் ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்துவது முறையாகாது.

மேலும், வலுவான மானிடமைய விதியின் உட்கோளானது, பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறது என்கிறது. இப்பார்வையிலும் தவறில்லை! பரிணாம வழிமுறையானது படிப்படியாக அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டும்வகையில் முன்னேறிச் சென்று அதன் ஒப்பற்ற இலக்கு நிலையை அடைந்தாகவேண்டும் என்றவகையில் பிரபஞ்சம் எனும் பரிணாம இயக்கமானது அடுத்தடுத்த உயர்-வளர்ச்சி நிலைகளை சார்ந்திருக்கிறது என்று சொல்வது பொருத்தமானதே! ஆக இவ்விரு உட்கோள்களின்படி, பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ளது இருவழிப் பிணைப்பு என்பது உறுதியாகிறது.  ஆக, பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறதா? அல்லது மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறானா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை, இறுதியாக, பிரபஞ்சமும் நாமும் இணைந்து பரிணாம நிகழ்வுமுறையின் முடிவான இலக்கு நிலையைச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான் அறுதி உண்மையாகும்!  

முடிவாக, நாம் வாழும் இந்த பூமிக்கிரகம் பரந்த விண்வெளியில் (Spatially) பிரபஞ்சத்தின் மையத்தில் இருக்கிறதோ, இல்லையோ; மனிதஜீவிகளாகிய நாம் இப்பிரபஞ்சத்திற்கு முக்கியமானவர்களோ, இல்லையோ; பூமியில் உயிர் தோன்றியது விபத்தோ, அல்லது திட்டமிடப்பட்ட உருவாக்கமோ; உயிரியல் பரிணாமத்தின் உச்சக்கட்டமாக சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் திறன்பெற்ற மானிட இனம் தோன்றியது என்பதும் விபத்து பூர்வமானதோ, இல்லையோ; நாம் இங்கு இருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத நிஜமாகும்! அந்த நிஜத்தின் உணர்த்துகோள்களை (Implications) நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும். ஆக, மானிட-மைய விதியானது, மனிதனையும், பிரபஞ்சத்தையும், அதன் பௌதிக விதிகளையும்; அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் மறுபரிசீலனை செய்யுமாறும்; அவ்வழியே பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவை உணர்வுப்பூர்வமாகப் புதுப்பித்துக்கொண்டு, பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் பொதுவான பரிணாம இலக்கை அடையும்வகையில் முன்னேறிச்செல்ல அழைப்பு விடுக்கிறது!



மானிட-மைய விதி தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் :
1. மானிட-மைய விதி மற்றும் துல்லிய-மதிப்பமைவு (Fine-Tuning) கோட்பாட்டின் மீது தொற்றிக்கொண்டு கடவுளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாகச் சொல்வது சரியா?

ஒருவகையில் சரிதான்; ஆனால், கடவுள் என்பது எத்தகைய மெய்ம்மை என்பதை அவர்கள் (இறையியல்வாதிகள்) விளக்கியாக வேண்டும்! மேலும், பிரபஞ்சத்தின் மூலகாரணமாக அமைந்த கடவுளைவிட பிரபஞ்சத்தின் முடிவான (பரிணாம) விளைவாக எழும் கடவுள்தான் முக்கியம்! ஏனெனில், கடவுளை நாம் பரிணாமத்தின் முழுமையில் மட்டுமே கண்டறிய முடியும்!

2. பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டதா?

இது சற்று சிக்கலான கேள்வியாகும்! பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்படவில்லை என்றால், வேறு எதற்காகப் படைக்கப்பட்டது? மனிதன் இல்லாத பிரபஞ்சத்தைப்பற்றி யார் அல்லது எது ஆராயவும், அறியவும் கூடும்? உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள், கிரகங்கள்… போன்ற இவை மட்டும்தான் பிரபஞ்சமா? கல், மண், புல், பூண்டு, மரம், புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள், மனித ஜீவிகள்… இவையெல்லாம் பிரபஞ்சம் இல்லையா? ஒருவகையில், மனிதனைப்போல் வேறெதுவும் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்பதால், மனிதனுக்குத் தனிச்சிறப்பான ஒரு இடம் உள்ளது எனலாம்! அதே நேரத்தில், அவனுக்கு தனித்துவமான பெரும் பொறுப்பும், பரிணாமப் பணியும் உள்ளன! உண்மையில், இப்பிரபஞ்சம் தனக்காக இல்லை; மனிதனும் தனக்காக இல்லை! பிரபஞ்சம் என்பது பல கண்ணிகளைக்கொண்ட ஒரு நெடிய சங்கிலி போன்றதாகும்; அதில் ஒவ்வொரு கண்ணியும் வித்தியாசமானதாகும்; அவற்றுள் மனிதனும் ஒரு கண்ணி ஆவான், ஆனால், மிகவும் முக்கியமான ஒரு கண்ணியாவான். அது அவனது விசேடமான பரிணாமப் பாத்திரத்தினால் (Evolutionary Role) அமைந்ததாகும்.

பிரபஞ்சம் என்பது காலம்,வெளி, பருப்பொருளாலான ஒரு ஊடகம் (Medium) ஆகும். பருப்பொருள் என்பது சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையிலமைந்த பரிணாமத்தின் கட்டுமானப்பொருள் ஆகும். பிரபஞ்சம் என்பது ஒரு பிரும்மாண்டமான அமைப்பு மட்டுமல்ல. அது ஒப்பற்றதொரு இலக்கை நோக்கிச் செல்லும் மாபெரும் இயக்கமும் ஆகும். ……  
பிரபஞ்சம் என்பது ஒரு நெடிய நிகழ்வுமுறையானால், அதை அடிப்படை அணுத்துகள்களுடன் இவ்வளவுதான் பிரபஞ்சம் என்று நிறுத்திக்கொள்ளமுடியாது! அல்லது,உடுமண்டலங்களுடனோ, நட்சத்திரங்களுடனோ, கிரகங்களுடனோ, அல்லது முதல் உயிரியுடனோ, அல்லது டார்வினின் வானரத்துடனோ, அல்லது, அந்த வானரத்தின் வழித்தோன்றிய மனிதனுடனோ, ‘இவ்வளவு தான் பிரபஞ்சம்’ என்று முடித்துக்கொள்ள முடியுமா? பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில், மனிதன் எதற்காகப்படைக்கப்பட்டிருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்காமல் சாத்தியமில்லை! அதாவது, மனிதனின் வழியாக, மனிதனைக்கடந்த இறுதிப் பரிணாம இலக்கு ஒன்று இருப்பதால்; மேலும், அந்த இலக்கானது உணர்வார்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும் அடையப்பட இருப்பதால், இப்பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது என்று கொள்வதிலும் தவறில்லை!

மேலும், மானிட-மைய விதியானது, ஒரு மனிதனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பொருந்துவதுபோல், மனித இனத்தை ஒத்த, உணர்வில் வளர்ந்த அனைத்து இனங்களுக்கும், வேற்றுக்கிரக ஜீவிகளுக்கும்  பொருந்தும்!


3.பிரபஞ்சம் ஒன்றா, பலவா?

பௌதிகவியல் விஞ்ஞானி விக்டர் ஸ்டெஞ்செர் (Victor Stenger) அவர்களின் வாதத்தின்படி, நவீன பிரபஞ்சவியல் கோட்பாடுகள் கூறுவதுபோல வெவ்வேறு மாறா-மதிப்புகளையும், பௌதிகவிதிகளையும் கொண்ட பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும். ஆக, அதில் நமக்குப் பொருத்தமான ஒரு பிரபஞ்சத்தில் நாம் தோன்றியிருக்கிறோம் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளுக்காக துல்லிய- மதிப்பமைவு செய்யப்பட வில்லை; மாறாக, உயிர்ஜீவிகள்தான் பிரபஞ்சத்திற்கேற்ப தகவமைவமைந்துள்ளன என்கிறார். நமது பிரபஞ்சம் உயிர்ஜீவிகளுக்கு இயைபாக இருக்கிறது என்பதற்கு நிரூபணம் தேவையா என்ன? அதற்காக நாம் வெவ்வேறு மாறா-மதிப்புகளும், வேறுபட்ட பௌதிக விதிகளையும் கொண்ட எண்ணற்ற பல பிரபஞ்சங்களைக் கற்பனையில் உருவாக்கி அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமா? அவ்வாறு பல பிரபஞ்சங்கள் இருப்பதற்கான யாதொரு சான்றும், தடயமும் இல்லை; அப்படியே இருந்தாலும் அவற்றை கண்டுகவனிப்பதற்கான வழியும் இல்லை.

ஒருவகையில், பல்வேறு தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் கொண்ட எண்ணற்ற பல பிரபஞ்சங்கள் நிஜத்தில் இருக்கமுடியாது என்பதற்கு, இத்தகைய பல்வேறு பிரபஞ்சங்களின் சாத்தியப்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து பொருத்தமான ஒரு பிரபஞ்சமாக, நாம் வாழ்கின்ற இப்பிரபஞ்சமானது தொடக்கத்திலேயே தெரிவு செய்யப்பட்டு விட்டதே காரணம் எனலாம்!

சொல்லப்போனால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இப்பிரபஞ்சத்தையே ஒரு எல்லைக்கு மேல் நம்மால் காணவும், ஆராயவும் வழியில்லை. மேலும், நம் பிரபஞ்சத்தை முழுமையாக கண்டுகவனிக்கும் சாத்தியம் ஒருபோதும் ஏற்படப்போவதுமில்லை! நாம் வாழ்ந்துவரும் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சம் உயிர்பெற்று, உணர்வும் பெற்றெழுந்தால் எப்படியிருக்கும்? சந்தேகமில்லாமல், அவ்வாறு உயிர்பெற்று, உணர்வும் பெற்றெழுந்த பிரபஞ்சம்தான் மனிதன்! ஒருவகையில் ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறும்-பிரபஞ்சம் (Miniature Universe)  எனவும் கொள்ளலாம். எவ்வாறெனில், இப்பிரபஞ்சத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பிரதான அம்சங்கள் அல்லது பண்புகளான பருப்பொருள் (Matter), உயிர் (Life), உணர்வு (Consciousness) ஆகிய இம்மூன்றும் ஒருங்கே மனிதனுள்ளும் இடம்பெற்றுள்ளன!


4. வேற்று கிரகங்களில் அறிவுள்ள உயிர்ஜீவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், "மானிட-மைய விதி"யின் கதி என்னவாகும்?

ஒன்றும் ஆகாது! வேற்று கிரகங்களில் உயிர்ஜீவிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும்; கண்டுபிடிக்கப்பட்டாலும், கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும், மனிதனின் மையத்துவம் சிறிதும் மாறாது! இன்னும், நமது பூமிக்கிரகத்திலேயே எண்ணற்ற உயிரினங்கள், அதாவது கிட்டதட்ட 87,00,000 உயிரினங்கள் உள்ளன. மனித இனத்திலும் 7,70,00,00,000 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் மானிட-மைய விதி பொதுவானதே என்றாலும், பிரபஞ்சப் பரிணாம இயக்கத்தில் தனது இடம், பங்கு, பாத்திரம், தனது பரிணாம இலக்கு ஆகியவற்றை உணர்ந்த தனிமனிதர்களுக்கு மட்டுமே அவ்விதி முழுமையாகப் பொருந்தும். மனிதனின் மையத்துவமும், முக்கியத்துவமும் விசேடமான அவனது பரிணாமப் பாத்திரத்தினால் அடையப்பட்டதாகும். வேற்றுக்கிரகங்களில் உயிர்ஜீவிகளும், மனிதனை ஒத்த அறிவுள்ள ஜீவிகளும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், எவ்வகையிலும் அது மனிதனின் மையத்துவத்தைக் குறைத்துவிடவோ, விலக்கிவிடவோ செய்யாது! உங்களுக்கு ஒரு அண்டை வீட்டுக்காரர் இருக்கிறார் என்பதால், மானிட-மைய விதி உங்களுக்குப் பொருந்தாமல் போய்விடாது! உயிர்ஜீவிகளும், அறிவார்ந்த ஜீவிகளும் பிரபஞ்சம் முழுவதிலும் அவற்றுக்கு இயைபாக அமைந்த எல்லா இடங்களிலும் இருந்தாலும்; பிரபஞ்சத்திற்கும், அறிவார்ந்த ஜீவிகளுக்கும் இடையிலான ஒரு பொதுவிதி என்னவென்றால், முறையே அந்தந்த ஜீவிகள் பெற்றுள்ள உணர்வின் தன்மை, மற்றும் வீச்சுக்கு ( The Degrees of Consciousness) ஏற்ப அவை தம்மையும் பிரபஞ்சத்தையும் உணர்வுகொள்வதாக, ஆராய்ந்தறிவதாக இருக்கும்!

5. மானிட-மைய விதி என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்ல என்று சொல்லப்படுகிறதே, அவ்விதியின் தற்போதைய நிலை என்ன?

மானிட-மைய விதி என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்ல என்றால், எத்தனையோ  விஞ்ஞானிகள் அதைப் பொய்ப்பிக்க முயற்சித்தும் இதுவரை யாதொரு தெளிவான முடிவையும்  எட்ட இயலாதிருப்பதன் அர்த்தம் என்ன? மாபெரும் விஞ்ஞானிகள் எனப் போற்றப்படும் ஜான் எ.வீலர்( John A. Wheeler), ஸ்டீஃபென் ஹாக்கிங் (Stephen Hawking), ஸ்டீவென் வெயின்பெர்க் (Steven Weinberg ) போன்ற பலர் அதன் ஈர்ப்புக்கு இணங்காதிருக்க இயலாமல் போனது ஏன்? மானிட-மைய விதியின் மீதான விவாதம் இன்றளவும் தொடர்ந்துகொண்டே உள்ளது. முதலிடத்தில், மானிட-மைய விதி என்பது ஒரு கோட்பாடு அல்ல; அது வெளிப்படையாகத் தெரிகின்ற, இன்னும் அதன் ஆழம் அறியப்படாத ஒரு உண்மையைப் பற்றிய குறிப்பு ஆகும்.

அடுத்து, எல்லாவற்றையும் நாம் விஞ்ஞானப்பூர்வமான கோட்பாடுகளைக் கொண்டுதான் அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு வாழ்கிறோம் என்பதில்லை! முக்கியமாக, விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வுமட்டுமே என்பதை நாம் மறந்துவிடலாகாது.
மேலும் எல்லா அம்சங்களும் விஞ்ஞான அணுகுமுறைக்கு உட்படுபவையாகவும் இல்லை. ஆக, “மானிட-மைய விதி” என்பது அடிப்படையில், ஒரு விஞ்ஞானப் பிரச்சினையல்ல; அவ்வாறு  அதை ஒரு விஞ்ஞானப் பிரச்சினையாகக் காண்பதற்கான பக்குவம் பொருண்மைவாதத்தினால் (Materialism) பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட விஞ்ஞானத்திடம் இல்லை! அடிப்படையில் அதை ஒரு தத்துவப் பிரச்சினை எனக்கொள்ளலாம்; அதைவிட, அதை ஒரு ஆன்மீகப் பிரச்சினையாகக் காண்பதுதான் பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால், மானிட-மைய விதியை விஞ்ஞானப் பூர்வமான கோட்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்; அதற்குமுன், விஞ்ஞான அணுகுமுறையின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை  விரிவுபடுத்தியாக வேண்டும்!

6. விஞ்ஞானி கோப்பர்நிக்கஸ்-ன் கூற்றுப்படியும், நவீன பிரபஞ்சவியலின் புரிதலின்படியும்
பிரபஞ்சத்திற்கு மையம் என்பது கிடையாது என்ற நிலையில், பிரபஞ்சத்தின் மையம் பற்றிப் பேசும் 'மானிட-மைய விதி' யின் பொருத்தப்பாடு என்ன?

ஆம், 'பிரபஞ்சத்திற்கு யாதொரு மையமும் கிடையாது!' எனும் விஞ்ஞானிகளின் கூற்று சரியானதே! ஆனால், அவர்கள் பிரபஞ்சத்தை பருப்பொருளின் ஒரு மாபெரும் அமைப்பாக (Structure) மட்டுமே காண்கிறார்கள். ஆனால், நானோ பிரபஞ்சத்தை ஒரு பரிணாம இயக்கமாகக் (Evolutionary Movement) காண்பதன் அவசியத்தை முன்வைக்கிறேன், வலியுறுத்துகிறேன். இந்த அடிப்படை வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால் இரண்டு பார்வைக்கும் இடையே முரண்பாடு எழாது!

மேலும், நான் குறிப்பிடும் பரிணாமம் என்பது வெறும் உயிரியல் பரிணாமம் மட்டும் அல்ல; மாறாக, பரிணாமம் என்பது பிரபஞ்சத்தின் தொடக்கப்புள்ளியான பெரு-வெடிப்பு நிகழ்வுடனேயே தொடங்கி அறுபடாமல் பொருளியல், உயிரியல், உணர்வியல் என பண்புரீதியாக வெவ்வேறு தளங்களின் வழியாக இன்றளவும் தொடர்ந்து முன்னேறி தனது ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்வதாயுள்ளது.

ஒரு மரமானது விதையிலிருந்து முளைத்து சிறு செடியாக உயர்ந்து கிளைகள் விட்டு, படிப்படியாக உயர்ந்து வளர்ந்து மேன்மேலும் கிளைகள் பரப்பி விரிந்து வளர்ந்து பெரிய மரமாக எழுகிறது. ஆனால், ஒரு மரம் என்பது அதன் வேர்கள், அடிமரம், கிளைகள், இலைகள் மட்டுமேயல்ல! மாறாக, அம்மரமானது ஒரு கட்டத்தில், பூக்கின்றது, பூக்கள் பிஞ்சுகளாக மாறுகின்றன, பிஞ்சுகள் காய்களாகி, பிறகு காய்கள் முற்றிக் கனிகளாகின்றன.

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, வேர்கள், அடிமரம், கிளைகள், இலைகள் ஆகியவை உள்ளடங்கிய அமைப்பை மட்டுமே மரம் எனக் கணக்கில் கொள்கிறார்கள். இத்தொகுதியும் மரம் தான்; அதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இவ்வமைப்பின் நீட்சியாகவும், உயர் வளர்ச்ச்சி நிலைகளாகவும் தோன்றுபவைதான் பூக்கள், பிஞ்சுகள், காய்கள் மற்றும் கனிகள். இவையே ஒரு மரத்தின் மிக முக்கியமான பகுதிகள் ஆகும். ஆக, விதையிலிருந்து  முளைத்து, சிறு செடியாக எழுந்து, தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து பல கிளைகள் பரப்பி, ஓங்கி உயர்ந்து எழும் மரமானது ஒருகட்டத்தில் பூக்கள்விட்டு, பிஞ்சுகளாகி, காய்களாகி, கடைசியாகக் கனிகளாகும் வரையிலான இந்த வழிமுறையைத்தான் நான் பரிணாம இயக்கம் என்றழைக்கிறேன்.

ஒரு மரத்தைப்பொறுத்தவரை, அதன் பூக்கள் தான் அம்மரத்தின் முதல் கட்ட மையம் ஆகும்! அடுத்து, பூக்கள் பிஞ்சுகளாக மாறியதும் அப்பிஞ்சுகள்தான் அம்மரத்தின் இரண்டாம் கட்ட மையம் ஆகும்! அடுத்து, பிஞ்சுகள் காய்களாகி நன்கு முற்றிக்கனிந்து கனிகளானதும் அக்கனிகள்தான் அம்மரத்தின் மூன்றாம் கட்ட மையம் ஆகும். இறுதி மையம் என்பது அக்கனிகளுக்குள் தோன்றும் விதைகளே ஆகும். வித்திலிருந்து எழும் மரம் மீண்டும் வித்தினுள் அடங்குகிறது. ஆக, வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளே மரத்தின் மையமும், இலக்கும் ஆகும்.

ஒரு மரத்தைப்போன்றதே பிரபஞ்சமும். ஒரே நேரத்தில், பிரபஞ்சமானது ஒரு மாபெரும் அமைப்பாகவும், ஒரு தனித்துவமான இயக்கமாகவும் விளங்குகிறது. பிரபஞ்சத்தை அதனுடைய பல்வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு அமைப்புரீதியாக மட்டுமே ஆராய்ந்து  அதை முறையாகப் புரிந்துகொள்ள முடியாது. மாறாக, அது எத்தகைய இயக்கம் என்பதையும், அதன் இலக்கையும் புரிந்துகொள்வதன்மூலம் மட்டுமே முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியும்.

மேலும்,  மரமானது அதன் இலக்கு நிலையால் கட்டுப்படுத்தப்பட்டதாகும்; அதாவது அதனுடைய வளர்ச்சி நிலைகளின் ஒவ்வொரு கட்டமும், விதை எனும் இலக்கு நிலையை அடைவதற்கு ஏதுவாக, “இலக்கு நிலைத் தேர்வு” (Teleological Selection) மூலம் தீர்மானிக்கப் படுவதாகும். ஆக, இதே விதி பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். ஒரு மரமானது ஒருகட்டத்தில், பூக்களை உருவாக்குவதைப்போல, பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளைத் தோற்றுவித்துள்ளது. மனிதஜீவி என்பவனே பிரபஞ்ச விருட்சத்தின் பிஞ்சுகளும், காய்களும், கனிகளும் ஆவான்! ஆனால், பிரபஞ்சத்தின் ஒப்பற்ற இலக்கு நிலையை எட்டும் விடயத்தில், எல்லா மனிதர்களும் தங்களை இன்னும் ஆயத்தப்படுத்திக் கொள்ளவில்லை! இதற்குக் காரணம் மனிதர்கள் தங்களுக்கென சொந்த இலக்குகளையும், இலட்சியங்களையும், ஆசைகளையும் கொண்ட மிகவும் மட்டுப்பாடான ஜீவிகளாக உழன்றுகொண்டுள்ளனர்! பரந்த உலகு பற்றியும், வாழ்வின் இலக்கு பற்றியும் சிந்திக்கும் அளவிற்கு மனிதர்கள் இன்னமும் உணர்வு பெறவில்லை!

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தை அவர்கள் விந்தையான பல பொருட்களையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கிய உயிரற்ற, உணர்வற்ற, யாதொரு குறிக்கோளும், இலக்கும் அற்ற ஒரு மாபெரும் பௌதிக அமைப்பாகவும், வினோதமான ஒரு எந்திரமாகவும் பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்! பிரபஞ்சம் பற்றி அறியவேண்டுமென்ற உணர்வில் ஒரு சதவிகிதம் கூட பிரபஞ்சத்தின் அதிமுக்கியமான பகுதியும், பரிணாம இயக்கத்தின் உணர்வுபூர்வ பிரதிநிதியுமான  மனிதனை(அதாவது,தங்களைப்பற்றி) ஆராய்ந்தறிய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணராதவர்களாக இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்!

அதீத மானிட-மைய விதி (The Extreme Anthropic Principle)

(இது இக்கட்டுரையாளரால் முன்வைக்கப்படும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட மானிட-மைய விதி)

1. பருப்பொருளாலான பிரபஞ்சமானது தன் வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்தில் உணர்வுபெற்றதாக மாறியாக வேண்டியது கட்டாயத்தேவையாகும்; இல்லாவிடில், அதன் இருப்பிற்கு யாதொரு அர்த்தமும்  இருக்கமுடியாது. நல்ல வேளையாக, அதாவது தவிர்க்க இயலாத வகையிம் நாம் இங்கு இருக்கிறோம், நமது இருப்பே இந்த விதியின் நிரூபணம் ஆகும்.

2. பிரபஞ்சத்தின் பௌதிகவிதிகள் என்பவை அடிப்படையானவையோ, பிரதானமானவையோ அல்ல. உயிர்ஜீவிகளையும், அறிவுள்ள மானிட ஜீவிகளையும் அவை தோற்றுவிக்கவில்லை. மாறாக, பிரபஞ்சமானது உணர்வுபெற்றாக வேண்டுமென்ற உள்ளார்ந்த தேவையினை நிறைவேற்றும் பொருட்டு அமைந்த பரிணாமக் கருவிகளே பௌதிகவிதிகள்.

3. அதீத மானிட-மைய விதி யின் சிறப்பு என்னவென்றால்,  ‘பிரபஞ்சமே பிரதானம்’ எனும் தவறான விஞ்ஞானப் பார்வையை மாற்றி, மனிதனைப் பிரபஞ்சத்தின் மையமாகக் கொள்வதோடு, மனிதனின் வழியாக அடையப்படவேண்டிய இறுதி இலக்கு நிலையைப் பிரதானப்படுத்துகிறது என்பதேயாகும். ஆம், மனிதனே பிரபஞ்சத்தின் மையம் ஆவான்; ஆனால், மனிதனின் மையம் பிரபஞ்சத்தைக் கடந்த பரிமாணத்தில் உள்ளது! பிரபஞ்சத்தின் பரிணாம இலக்கு உயிர்ஜீவிகளை உருவாக்குவதோ, அல்லது, அறிவுள்ள ஜீவிகளை, அதாவது மனிதஜீவிகளை உருவாக்குவதோ அல்ல; மாறாக, தனது அசலான இயல்பை, தனது  உண்மையான மெய்ம்மை நிலையைச் சென்றடைவது மட்டுமேயாகும். ஆக, பிரபஞ்சத்தின் இந்த இலக்கை அடைவதற்கான விசேட ஊடகங்கள் அல்லது பிரதிநிதிகள்தான் உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் ஆவர்!

4. "மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறானா?" அல்லது "பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறதா?" என்று கேட்டால், இறுதியாக, பிரபஞ்சமும் நாமும் இணைந்து பரிணாம நிகழ்வுமுறையின் முடிவான இலக்கு நிலையைச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான் அறுதியான உண்மையாகும்!

[ குறிப்பு : இந்த “அதீத மானிட-மைய விதி” யானது மேலும் விரிவாக்கத்திற்குட்பட்டதாகும்.
 - கட்டுரையாசிரியர் ]
-----------------------------------------------------------------------------------------
ஆராய்ச்சிக்கு உதவிய நூல்கள்

The Anthropic Principle -Man as the Focal Point of Nature (1991) by Reinhard Breuer

Anthropic Cosmological Principle   by John D. Barrow and Frank J. Tipler, 1986

ஆராய்ச்சித் தாள்கள்

Marko Uršič /University of Ljubljana/Slovenia
"Cogito ergo mundus talis est" On some metaphysical and epistemological aspects
of the Anthropic Cosmological Principle
-----------------------------------------------------------------------------------------

மா.கணேசன் / நெய்வேலி /  16-10-2018 - 14.11.2018
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE



Tuesday, 13 November 2018

மா.கணேசனின் கட்டுரைகள்

 


விசார மார்க்கம் வலைத்தளம்

vicharamarg.blogspot.com

விசார மார்க்கத்தின் வலைத்தளத்தில் இதுவரை பதிவேற்றப்பட்ட
மா.கணேசனின் கட்டுரைகள் பட்டியல்

2012

யுக மாற்றத்தின் வாசல் (நூல் பற்றிய குறிப்பு)• 17.7.2012
--
--
--
2016

1. மனித இனத்தில் சேருவோம்!• 11.2.2016
2. வாழ்க்கையைத்தேர்ந்தெடுப்போம்• 11.2.2016
3. என்ன என் மனதில் உள்ளது?• 11.2.2016
4. சமத்துவம் • 13.2.2016
5. விசித்திர ஞானம்• 13.2.2016
6. முகநூல்வாசிகளின் உலகம் (1) •16.2.2016
7. அர்த்தமற்ற அரசியல்• 23.2.2016
8. முகநூல்வாசிகளின் உலகம் (2) உளவியல் பக்கங்கள்• 25.2.2016
9. அனுபவம், படைப்பு, வெளிப்பாடு• 9.3.2016
10. மனிதன் என்பவன் யார்? •12.3.2016
11. வியப்பு, விசாரம், வியப்பு• 17.3.2016
12. மேலோட்டத்தின் ஆழம்• 20.3.2016
13. முதிர்ந்த நாற்றுக்களே கேளுங்கள்! •21.3.2016
14. அந்நியர்களே வாருங்கள்!• 22.3.2016
15. மரண-தண்டனைக் கைதிகளே...• 22.3.2016
16. அன்பு : மகத்தானதொரு இன்மை• 26.3.2016
17. கடவுள் ஒரு உருமாறி God Is A Transformer 1.4.2016
18. தன்னந்தனியன்• 7.4.2016
19. மறுகரையிலிருந்து •10.4.2016
20. யாருக்கு நீங்கள் சேவை செய்கிறீர்?• 13.4.2016
21. விபரீத ஞானம்• 14.4.2016
22. எங்கே எல்லோரும்? (Fermi's Paradox)• 21.4.2016
23. தன்னை அறிதல்• 23.4.2016
24. கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்?• 24.4.2016
25. வாருங்கள், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!• 27.4.2016
26. பட்டயத்தைக் கொண்டுவருபவனின் செய்தி•  30.4.2016  (†)
27. அசலான வாழ்க்கைக்கான அழைப்பு•  1.5.2016 (†)
28. முக்கியமானது முதலில்!• 2.5.2016  (†)
29. மரித்தோரின் உலகிலிருந்து வெளியேறுங்கள்• 3.5.2016  (†)
30. இறுதியான உறவை நாடுங்கள்!• 9.5.2016  (†)
31. ஆன்மீகமா? லௌகீகமா?• 12.5.2016   (†)
32. இப்படிக்கு வெட்டியான்• 17.5.2016 (Plain Verse)
33. உனக்கு நீ நண்பனா? எதிரியா?• 25.5.2016 (Plain Verse)
34. எப்போது நீங்கள் வாழத் தொடங்கப் போகிறீர்?• 3.6.2016 (Plain Verse)
35. பாதையற்ற பயணம்• 6.6.2016 (Plain Verse)
36. அகந்தையின் இடறுகுழிகள்• 12.6.2016
37. மனித ஜீவிகளுக்கு மட்டும்!• 17.6.2016 (Plain Verse)
38. சிந்திக்கத் துணிபவர்களுக்கு மட்டும்!• 19.6.2016 (Plain Verse)
39. தற்கொலை மனிதர்கள்!• 22.6.2016
40. சீரிய விசாரகனுக்கு சில குறிப்புகள்• 25.6.2016 (Plain Verse)
41. விசார இல்லத்து விசனங்கள்• 28.6.2016
42. முன்பொரு காலத்தில்...... (விசார மார்க்கம் மூடுவிழா!)• 30.6.2016
43. Freedom From J.Krishnamurti• 28.7.2016
44. பெரிதினும் பெரிது தேடு!• 30.7.2016
45. Who Brings The Truth? (On JK)• 5.8.2016
46. முதல் விடயங்கள் முதலில்!• 6.8.2016
47. உங்கள் விளக்கை நீங்களே ஏற்றிக்கொள்ளுங்கள்!• 7.8.2016(Plain Verse)
48. முற்றிலும் புதியது! 7.8.2016 (Plain Verse)
49. பிரபஞ்சம் குறித்த இறுதிச் சமன்பாடு 10.8.2016
50. விஞ்ஞானம் தோற்றுவிட்டது (1) 16.8.2016
51. விஞ்ஞானம் தோற்றுவிட்டது (2) 4.9.2016
52. வித்து இல்லாமல் விருட்சம் இல்லை!
      (படைப்புவாதம், பரிணாமவாதம்: இரண்டுக்கும் அப்பால்.) 18.9.2016
53. "சுய நலங்கொண்ட மரபணு"  4.10.2016
54. உயிர் எனும் புதிர்! 21.10.2016
55. இயற்கையின் இயற்கை என்ன?
     (What is the Natue of Nature?) 31.10.2016
56. உணர்வு எனும் மகா புதிர்! 21.11.2016
57. நானின்றி அமையாது உலகு! 24.11.2016
58. அபத்தமான் ஐந்து விஞ்ஞானப் பேருண்மைகள்! 2.12.2016
59. தந்த கோபுரத்தின் உச்சியில் ஒரு சாய்வு நாற்காலி 6.12.2016
60. அனைத்தையும் அறிவது சாத்தியமா? 13.12.2016
61. ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப் பதிலாக
       ஏதோவொன்று இருக்கிறது? 201.12.2016
62. பழைய முகமூடிகளுக்குப் புதிய முகமூடிகள்! {19.2.1989)    22.12.2016

2017

63. வாழ்-கால வரையறை விதி! 7.1.2017
64. சிற்றார்வம் X பேரார்வம் 8.1.2017
65. தன்னைக் கண்டடைதல் 10.1.2017
66. முன்-தெரிவு செய்யப்பட்டதொரு வாழ்க்கை!
     (A Life of Default) 20.1.2017
67. நீங்கள் உண்மையிலேயே இருக்கிறீர்களா?
     (Liberation Unleashed Debunked)24.1.2017
68. நீங்கள் இருக்கிறீர்கள்!  {18.6.2011]    25.1.2017 (Plain Verse)
69. இதுதான் வாழ்க்கைக்கு நீ தரும் பதிலா? 3.2.2017
70. மனிதனின் சித்தமா? உலகின் சித்தமா? 6.2.2017
71. தீர்வின் திறவுகோல் யாரிடமுள்ளது? 9.2.2017
72. ஒவ்வொரு கணமும் ....    13.2.2017
73. உங்கள் உரைகல்லைத் தூக்கி எறியுங்கள்!   14.2.2017
74. எதற்காக வந்தோம் பூமிக்கு?   15.2.2017
75. இயற்கையிலிருந்து மனிதன் தனித்தவனா?
       ( பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினை) 18.2.2017
76. இப்போது நேரம் என்ன?    19.2.2017
77. சில விபத்துகள், சில சந்திப்புகள்!    20.2.2017
78. நான் யார்?    23.2.2017
79. உண்மையின் சுவை!    25.2.2017
80. மாற்றமனைத்தும் முடிவுறும்!    27.2.2017
81. சொற்களின் அசலான அர்த்தத்தை அகழ்ந்தெடுத்தல் 4.3.2017
82. விசார மார்க்கம் எனும் புதிர்ச் சிந்தனைப்பள்ளி   7.3.2017
83. வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?   11.3.2017
84. எது பிரும்மாண்டம்?  12.3.2017
85. மனிதனின் வேர்கள் எங்கேயுள்ளன? 14.3.2017
86. இனி ஒரு சூழ்ச்சி செய்வோம்!    20.3.2017
87. சுடு நீர்ப்பானைத் தவளை போல!  24.3.2017
88. ஆன்மீக வளர்ச்சிக்கு எதிரான தடைகள் எத்தனை?  27.3.2017
89. இனியும் நாம் இயற்கையாய் வாழ்வதில் அர்த்தமில்லை!  5.4.2017
90. வாழ்வது சாவதற்காகவா?   29.4.2017
91. அது! (கடவுள் புதிர் நூலிலிருந்து)• 29.4.2017
92. எது? • 1.5.2017
93. இறுதி அற்புதம்! • 4.5.2017
94. நாத்திகத்தின் ஆணி வேர்!• 13.5.2017
95. எதைப்பற்றிச் சிந்திப்பது?   15.5.2017
96. ஒரு கல், ஒரு தவளை, ஒரு மனிதன்!  16.5.2017
97. "இதற்கா இத்தனை ஓட்டம்?"     19.5.2017
98. வாழ்வின் அர்த்தம் ஒன்றா? பலவா?  21.5.2017
99. நதியைப் போல் வாழுங்கள்!   24.5.2017
100. மனிதர்கள் பூமியைவிட்டு வெளியேறும் வேளை வந்துவிட்டதா? 27.5.2017
101. நிசர்கதத்தா மஹாராஜ்-ன் ஆன்மீக மொழிகள்  29.5.2017
102. குதிரைப் பயிற்சியாளனும் சில சண்டிக் குதிரைகளும்!  1.6.2017
103. நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்!    6.6.2017
104. அழகின் ஊற்று     15.6.2017
105. 'சுய-நேசம்' எனும் விபரீதம்!   18.6.2017
106. மன்னிக்கவும், நாம் ஒரே படகில் இல்லை!    28.6.2017
107. என் நேரத்தை வீணாக்காதீர்!    29.6.2017
108. எதனாலும் ஆக்கிரமிக்கப்படாத மனம்   3.7.2017
109. வீட்டின் மையத்தில் ஒரு படிப்பறை!   3.7.2017
110. குற்றவுணர்வும் தண்டனையும்!   4.7.2017
111. தன்னம்பிக்கையைத் தாண்டிய பெருவிழைவு!  7.7.2017
112. உத்தியோகம், உணவு, உல்லாசம்!    9.7.2017
113. வாழ்க்கை நமக்குத் தொழில்!    13.7.2017
114. உள்ளதிலிருந்து உண்மைக்கு!
   (A Metaphysical Odessey!) 19.7.2017
115. மரமானது அதன் கனியினால் அறியப்படும்!  23.7.2017
116. "மது நம்மால் மயக்கமுற்றது!"  (ரூமி)  23.7.2017
117. இவ்வளவு தானா?   25.7.2017
118. வண்ணத்துப்பூச்சியின் செய்தி!   29.7.2017
119. ஒரு வழிக் கதவு!    29.7.2017
120. உலகின் மறுபக்கம்   11.8.2017
121. முற்றுப்புள்ளியாகிப் போன தொடக்கப்புள்ளி!   16.8.2017
122. மனிதனின் அசலான வீடு!  19.8.2017
123. நோய் பிடித்த இனம்!   22.8.2017
124. மிகவும் நேர்மறையான ஒரு பதிவு!   24.8.2017
125. இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா? இல்லையா?  28 .8.2017
126. மனிதன் எங்கே தொடங்கி எங்கே முடிவடைகிறான்?  7.9.2017
127. பன்மையின் உலகமா? அல்லது உலகம் கடந்த ஒருமையா? 13.9.2017
128. மானுட மையப்பார்வை!   20.9.2017
129. எட்டாக்கனி (சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்!)   27.10.2017

[ஜனநாயகம்(அரசியல்) தொடர்பான கட்டுரைகள்]

130. எனது அரசியல் பிரவேசம்! •  15.11.2017
131. வாருங்கள், அர்த்தமுள்ள அரசியல் அறிவோம்! • 18.11.2017
132. மக்களின் தேர்தல் அறிக்கை! •  22.11.2017
133. யாருக்காக நான் பேசுகிறேன்?•   24.11.2017
134. பிரிவினைகளைக் கடந்த மக்கள் சமூகத்தின் கட்சி! •  28.11.2017
135. அரசியல்கட்சிகள் எனும் வியாபார நிறுவனங்கள்!•  29.11.2017
136. அரசியல் கட்சிகள் - அவசியத் தீமையா, அல்லது தீமையா? • 4.12.2017
137. பொதுவாக மக்கள் ஏன் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை?• 10.12.2017
138. இங்கேயும் எங்கேயும் இனி அரசியல் பேசுங்கள்! • 28.12.2017
139. 2018 புத்தாண்டுச் செய்தி! •  31.12.2017

2018

140. அரசு காலாவதியாகிவிட்டதா?• 09.01.2018
141. அநீதித்துறையில் அமளி! •15 .01.2018
142. பெரும்பணக்காரர்கள் - மானிடகுலத்தின் புற்றுநோய்!• 24.01.2018
143. நிறைவான சந்தோஷத்துடன் வாழ எவ்வளவு பணம் வேண்டும்?• 6.2.2018
144. தமிழ்நாடு திறந்துகிடக்கும் வீடல்ல!
       (கமல ஹாசனின் உண்மையான நிறம்!) •11.2.2018
145. வெட்கக்கேடான சாதனை!• 09.03.2018
146. நியூட்ரினோ திட்டம் (ஆர்வக்கோளாறின் விஞ்ஞானம்!)
       [சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தானது!]•  19.03.2018

147. கடவுள் பிஞ்சுகள்! •22.3.2018
148. தமிழ்த் தேசியத்தின் அவசியம்•  27.4.2018
149. சரியான பாடல், தவறான தாளம்•  6.5.2018
150. குழம்பிய அரசியல் குட்டையில்• 15.5.2018
151. நானும் புத்தகங்களும்• 21.6.2018
152. முழு-அறிவும் விஞ்ஞான அறிவும் • 23-09-2018
153. நிலையாமை அல்லது இரண்டாம் வெப்பச்சலன விதி • 02-10-2018
154. உலகம் எவ்வாறு தோன்றியது? • 14-10-2018
155. தன் மையத்தைத் தேடும் பிரபஞ்சம்! [The Extreme Anthropic Principle]
      • 16-10-2018 -14.11.2018
156. பிரபஞ்சத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம்!  
        (The Fate of the Universe) 07-11-2018 - 03.12.2018   


2019
 
157. பாதை ஒன்றா? பலவா?  (19-04-2019 - 27-04.2019)
158. உண்மையிலேயே நீங்கள் யார்? (29.04.2019 - 03.05.2019)
159. சமரசமற்ற ஆன்மீகவிசாரம்   (03.05.2019 -10.05.2019 )
160. முதலும் முடிவுமானது அறம்  (11.05.2019 - 15.05.2019)
161. ஞானத்தின் பயன்  (05.06.2019 - 11.06.2019)
162. அனைத்து வாதங்களுக்கும் அடியில் இயங்கும் வாதம் (மா.கணேசன்/    நெய்வேலி/ ( 23.08.2019 -28.08.2019))
163. காதல் கண்ணில்லாதது! சாதி கண்மூடித்தனமானது! (Sunday 18 August 2019)
164. தலித் பிரச்சினை தலித்துக்களின் தனிப் பிரச்சினையா? (Tuesday 6 August 2019)
165. மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா? (Saturday 28 March 2020)

2024
   
166. "நான்" என்பது உங்களுக்குள்ளே எங்கேயிருக்கிறது? (30.08.2024)
167. ஞானத்தின் திறவுகோல் (27.09.2024)



மா,கணேசனின் பிரசுரிக்கப்பட்ட நூல்கள் :

• 2012 யுகமாற்றத்தின் வாசல் • விலை ரூ. 95/-
• 2913 மனிதனின் சொல் • விலை ரூ,100/-
• 2014 கடவுள் புதிர் (ஆத்திகம் நாத்திகம் இரண்டுக்கும் அப்பால்) •
   விலை ரூ. 160/-

நூல்கள் வேண்டுவோர்
94881 94381,
93456 17754
ஆகிய எண்களில் தொடர்புகொள்ளவும்
*நூல்கள் 20% தள்ளுபடியுடன் கிடைக்கும்.


ஆர்வமிக்க வாசகர்கள் எனது பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்! 
இலவசமாகப் பெற்றதை இலவசமாகப் பகிர்வதில் மகிழ்கிறேன்!
நன்றி!
மா.கணேசன் • நெய்வேலி • 13-11-2018
Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω Ω 

Saturday, 13 October 2018

உலகம் எவ்வாறு தோன்றியது?


   

        பிரபஞ்சம் குறித்த நம்முடைய உண்மையான பிரச்சினை, அது எவ்வாறு தோன்றியது   
    என்பதைவிட, கடைசியில் அது எத்தகைய நிலையை அடையும் என்பதுதான்! மேலும்               
    இப்பிரச்சினை பிரபஞ்சத்தைப் பற்றியதுமட்டுமல்ல; மாறாக, நம்மைப்பற்றியதும்தான்;
    நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்காலத்திற்குள் கண்டடையவேண்டிய அர்த்தம் பற்றிய
    அவசரப் பிரச்சினையாகும்! 


"ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது"


கிரேக்கத் தத்துவஞானி பார்மினடீஸ், கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
"ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது" என்று கற்பித்தார். இவரது இந்தத் தத்துவக் கருத்தாம்சமானது பலமுறை பலராலும் எதிரொலிக்கப்பட்டது. மேலும், இது உலகின் பல மதங்களின் குறிப்பாக, யூதம், மற்றும் கிறித்துவத்தின் அடிப்படையாகவும் அமைந்தது என சொல்லப்படுகிறது.

பார்மினடீஸின் இக்கருத்தாம்சத்தை ஏற்றுக்கொண்ட அவரது அனுசாரிகளால் ஒருபோதும் உலகம் தானே தன்னியல்பாக தோன்றியது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒன்று, உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கவேண்டும்; அல்லது, எல்லாம் வல்ல ஒரு மகா சக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே அவர்களின் துணிபு. 'கடவுள் தான் உலகைப் படைத்தார்' என்று விவிலியம் கூறுகிறது, மேலும், கிறித்துவ இறையிலாளர்கள் ஒன்றுமில்லாததிலிருந்து இந்த உலகம் படைக்கப்பட்டது எனும் கருத்தை முன்வைக்கிறார்கள். கடவுளுக்கு மட்டுமே இத்தகைய காரியத்தைச் சாதிக்கும் ஆற்றல் உள்ளது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்விடத்திலிருந்து தான் நாம் நமது ஆய்வைத்தொடங்குகிறோம். "ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது" எனும் பார்மினடீஸின் கூற்று சரியானதே. ஆயினும் அக்கூற்றைத் தழுவிய உப-கூற்றுக்களான 1. உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கவேண்டும்; அல்லது
2. எல்லாம் வல்ல ஒரு மகா சக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும். என்பவை சரியானவை யாகத் தெரியவில்லை; அவைகுறித்து இப்போது பார்ப்போம்.


ஆரம்பமும் முடிவுமில்லையேல் அர்த்தமுமில்லை!


முதலிடத்தில், உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், உலகம் எவ்வாறு தோன்றியது என்பதிலிருந்து இன்றுவரையிலான வரலாற்றை விஞ்ஞானிகள் ஓரளவிற்கு துல்லியமாகக் கண்டறிந்து சொல்லியுள்ளனர். அதாவது, பிரபஞ்சத்தின் வயது கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகள் (1500 கோடி ஆண்டுகள்) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 1500 கோடி ஆண்டுகளில், பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து 1100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே முதல் உயிர் நம் பூமியில் தோன்றியதாகவும்; அதிலிருந்து கிட்டத்தட்ட 400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே (கிட்டத்தட்ட இன்றிலிருந்து இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) மனிதன் தோன்றினான் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், பிரபஞ்சம் தோன்றிய முதல் ஒரு நிமிடத்தில் அது ஒரு திராட்சைப் பழ அளவுதான் இருந்ததாகவும்; பிறகு ஏற்பட்ட திடீர் வீக்கத்தின் (Inflation) விளைவாக விரிவடைந்ததாகவும், இன்றளவும் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

அதாவது, இன்று நாம் காணும் பிரபஞ்சமானது படிப்படியாக வளர்ச்சி பெற்று, பரிணாமம் கண்டு இந்த நிலையை எட்டியுள்ளது என்பதற்கான ஆராய்ச்சிபூர்வமான சான்றுகளைக் கொண்டு காணும்போதும், உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை! மாறாக, 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரு வெடிப்பு என்ற ஒரு நிகழ்வில் உலகம் தோன்றியது எனும் விஞ்ஞானிகளின் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை! ஏனெனில், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்கிற வரையறைக்கிணங்க உலகின் தோற்றம் குறித்த விடயத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரையில் நாம் விஞ்ஞானிகள் கண்டு கூறுவதைப் புறந்தள்ளிட முடியாது; அதேநேரத்தில், அவர்கள் காணாமல் கூறுகிறவற்றை, அதாவது திரட்டிய சொற்பத் தரவுகளைக்கொண்டு அனுமானத்தின் அடிப்படையில் கூறுபவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை!

முக்கியமாக, நம் பிரபஞ்சமானது அளவில் சிறிதாகத் தோன்றி, பிரும்மாண்டமாக வளர்ந்துள்ளது; மிக எளிய அமைப்பாகத் தொடங்கி மிகவும் சிக்கலான அமைப்புகளாக பரிணமித்துள்ளது. மேலும், உயிர், உணர்வு ஆகிய புதிய புதிய வெளிப்படு பண்புகளையும் (Emergent Properties)கொணர்ந்துள்ளது. ஆக, இத்தகைய அம்சங்களையெல்லாம் கொண்டு காணும்போது, நிச்சயமாக, உலகம்/பிரபஞ்சம் என்றென்றைக்குமாக இருந்திருக்க வாய்ப்பேயில்லை என்று திடமாகச் சொல்லலாம்.

மேலும், ஆரம்பம் என்பது இல்லாத ஒரு அம்சத்திற்கு முடிவென்பதும் இருக்கமுடியாது. ஆரம்பமும், முடிவும் இல்லாத ஒரு அம்சத்திற்கு வளர்ச்சி, பரிணாமம், குறிக்கோள், இலக்கு அர்த்தம் என்று எதுவுமே இருக்கவாய்ப்பிருக்காது!

உலகம் கடவுளால் படைக்கப்பட்டதா?


இரண்டாவதாக, "இவ்வுலகம் எல்லாம் வல்ல ஒரு மகாசக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும்!" எனும் கருத்து சற்று சிக்கலான ஒன்று. ஒரு பொருளுக்கு பிறப்பு, ஆரம்பம் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு மூலம் என்ற ஒன்று இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில், இவ்வுலகம் தோன்றுவதற்கும் ஒரு மூலம் இருந்தாக வேண்டும்; இவ்வாறு இவ்வுலகின் மூலம், அல்லது தோற்றுவாய் குறித்து மேற்குறிப்பிட்ட வாசகம் சுட்டுகிறது என்றால் அதில் சிக்கலில்லை. அதேவேளையில், அந்த மூலம் எத்தகைய மெய்ம்மை? அது தன்னளவில் முழுமையானதாக இருக்கும் ஒன்றா? மேலும், எவ்வாறேனும் அதை நாம் அறியக்கூடியதாக, உணரக்கூடியதாக, அணுகக் கூடிய வகையில் அமைந்த மெய்ம்மையா? அல்லது நமது கற்பனையின் உருவாக்கமா? என்பதுபோன்ற எல்லா கேள்விகளுக்குமான சரியான பதில்களைக் கொண்டுதான் நாம் ஒரு சரியான முடிவிற்கு வரமுடியும்.

அடுத்து, அனைத்துக்கும் மூலமாக விளங்கக்கூடிய ஒன்றை நாம் மூல-மெய்ம்மை எனக் கொள்வதில் யாதொரு சிக்கலும் இருக்கவாய்ப்பில்லை. அது எத்தகைய மெய்ம்மை என்பதை அறிவதுதான் நம்முடைய வாழ்வை அர்த்தப்படுத்தும் குறிக்கோளும், இலக்குமாகும்! இப்போது நாம் சில முன்வைப்புகோள் (Propositions) களைக் கொண்டு, "இவ்வுலகம் எல்லாம் வல்ல ஒரு மகாசக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும்!" எனும் கூற்றிலுள்ள முடிச்சுக்களை அவிழ்க்க முயல்வோம்:

1. உலகம் இயற்கையாக தன்னில் தானே தோன்றிடஇயலாது!
2. அது என்றென்றைக்குமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை!
3. அது கடவுளாலும் படைக்கப்படவில்லை!
4. இன்னும் அது சூனியத்திலிருந்து கடவுளால் படைக்கப்படவும்,
  அல்லது இயற்கையாகத் தோன்றிடவும் இயலாது!

முதல் முன்வைப்புகோளை அதற்குரிய இடத்தில் அலசுவோம். இரண்டாவது முன்வைப்புகோளை ஏற்கனவே பார்த்துவிட்டோம். மூன்றாவது முன்வைப்புகோளான, "உலகம் கடவுளால் படைக்கப் படவில்லை!" என்பதைப் பார்ப்போம். ஒருவகையில், மூல-மெய்ம்மையை நாம் 'கடவுள்' என குறிப்பிடலாமெனில், அக்கடவுள் எல்லாம் வல்லவராகவே இருந்தாலும் அவரால் உலகைப் படைக்க இயலாது! ஏனென்றால், அவ்வாறு படைக்கும் செயலால், படைப்பவன், படைப்பு எனும் இருமை சம்பவித்திடும்; அது பெரும் சிக்கலைத் தோற்றுவித்திடுவதாய் அமைந்திடும்! ஆனால், கடவுளால் மிக எளிதாகவும், இருமைக்கு இடமளிக்காத வகையிலும் ஒன்று சாத்தியம்; அது என்னவெனில், கடவுள் உலகமாக உருமாறுவதுதான்!

வித்து வெடித்து விருட்சமாய் எழுந்தது!


ஆம், கடவுள் உலகைப் படைக்கவில்லை; மாறாக, கடவுளின் மறைவால் உலகம் தோன்றியது! அதாவது, வித்து வெடித்து விருட்சம் முளைத்தெழுவதுபோல மூலமெய்ம்மையாகிய கடவுள் மறைந்து இவ்வுலகம் வெடித்தெழுந்தது! கடவுள் இவ்வாறு தனக்குப்புறத்தே உலகைப் படைக்காமல், தன்னை மறைத்து உலகமாக உருமாறியதால், இத்தகைய உருமாற்றத்தை நாம் "எதிர்-படைப்பு" (Anti-Creation) எனவும் கொள்ளலாம்! அதாவது, மூலமெய்ம்மையாகிய கடவுள் தன்னைச் சுருக்கிக்கொண்டு (Involution) உலகமெய்ம்மையாக மாறியுள்ளார். மூலமெய்ம்மையின் சுருக்கம்தான் உலகமெய்ம்மை என்றால், உலகமெய்ம்மையின் விரிவாக்கமான பரிணாமம் தான் (Evolution) மீண்டும் மூலமெய்ம்மை தன்னை மீட்டெடுக்கும் வழிமுறையாகும்! கடவுள் அல்லது மூலமெய்ம்மையானது தனது படைப்புக்கு வெளியே இருக்க முடியாது; அதே நேரத்தில், படைப்புக்கு உள்ளும் இருக்கமுடியாது! மாறாக, படைப்பின் மலர்ச்சியில்தான் மீண்டும் மூலமெய்ம்மையாகிய கடவுள் வெளிப்படமுடியும்! இவ்வகையில், கடவுளை ஒரு கடப்பு-நிலை நிஜம் (Transcendent Reality) எனவும் கொள்ளலாம்.

மேலும், எவ்வொரு வித்தும் தனக்குப் புறத்தே விருட்சத்தைப் படைப்பதில்லை; மாறாக, வித்துதான் விருட்சமாக உருமாறுகிறது! இது இயற்கைக்கு மட்டுமல்ல இயற்கையின் மூலகாரணமான கடவுள் எனும் மூலமெய்ம்மைக்கும் பொருந்தும்! மெய்ம்மையின் வெளிப்பாடுகள் எண்ணற்றவையாயினும், அடிப்படையில் மெய்ம்மை என்பது ஒன்றாக, ஒருமையாகத்தான் இருக்கமுடியும்; பலவாகப் பன்மையில் இருக்கமுடியாது! அடுத்து மூலமெய்ம்மை மறைந்து உலகமெய்ம்மையாக எழுந்தாலும், மீண்டும் மூலமெய்ம்மை தன்னை மீட்டெடுக்கும் வகையிலான உபாயத்தை அவ்வுலகமெய்ம்மையுள் பொதிந்திருப்பது தவிர்க்கவியலாததாகும்! பரிணாமம் என்பதே அந்த உபாயம் ஏனெனில், உலகம் உலகிற்காக இல்லை! மனிதனும் தனக்காக இல்லை! வித்து தன்னைப் பன்மடங்காகப் பெருக்கிக் காணும் வழிமுறையே விருட்சம்!

வித்தானது விருட்சமாகி, விருட்சத்தின் ஒவ்வொரு கனியின் வழியாகவும் தன்னை மீள்-கண்டுபிடிப்பு செய்கிறது! கடவுள் எனும் மூலவித்தும் அப்படித்தான்; கடவுள் உலக விருட்சமாகி, உலக விருட்சத்தின் கனியான மனிதஜீவி ஒவ்வொருவரின் உணர்வுப் பரிணாமத்தின் முழுமையிலும் (அக மலர்ச்சியிலும்) தன்னைக் கண்டடைகிறார்!

கடவுள் உலகைப் படைக்கவில்லை; மாறாக, உலகமாக மாறினார் என்ற உண்மை மிகவும் மையமானதும், முக்கியமானதும் ஆகும்! இவ்வுண்மை மெய்ஞானப்பூர்வமானதாகும்! மெய்ஞானம் என்பது, ஒரே நேரத்தில் விஞ்ஞானம், இறையியல், ஆன்மீகம், தத்துவம் என எல்லா அணுகுமுறை களையும் உள்ளடக்கிய முழுமையானதொரு அறிதல்முறையாகும்.

உலகம் தன்னைத்தானே படைத்துக்கொள்ளமுடியுமா?


இப்போது நாம் 'உலகம் இயற்கையாக தன்னில் தானே தோன்றிடஇயலாது!' எனும் முன்வைப்புகோள் பற்றிக் காண்போம். விஞ்ஞானிகள் தங்கள் மனங்களில் பௌதிக விதிகள் என்ற பெயரில் சில வரையறைகளை, கட்டுப்பாடுகளை, நிபந்தனைகளை கற்பனை செய்துகொண்டு அவற்றிற்கேற்ப இயற்கையும், உலகமும் பொருந்திவரவேண்டும் என்கிறவகையில் இயற்கையையும், உலகையும் பற்றிய கோட்பாடுகளைப் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்!  நிச்சயமாக, இவ்வுலகம் அடியோட்டமான சில விதிகளைக் கொண்டே இயங்குகிறது; உலகம் சில ஒழுங்குமுறைமைகளைப் பின்பற்றாமல் தினமும் சூரியன் காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதும் நியதி மாறாமல் நிகழ்வதென்பது சாத்தியமாகாது.

அதே நேரத்தில், இயற்கை/பௌதிக விதிகளைக்கண்டுபிடிப்பது என்பது வேறு, அவற்றைவிட அவை எதனுடைய விதிகள் என்பதைக் கண்டுபிடிப்பது என்பது வேறு! இதுவரை, விஞ்ஞானிகள் எண்ணற்ற பல இயற்கை விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்; ஆனால், அவை உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளதே தவிர, உலகம் ஏன் இருக்கிறது, எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது; வாழ்வின் அர்த்தமென்ன, இறுதி உண்மை எத்தகையது,.. என்பன போன்ற கேள்விகளுக்கு யாதொரு உருப்படியான பதிலையும் அவ்விதிகள் அளித்திடவில்லை!

நியூட்டனின் இயக்கவிதிகள் வெறுமனே பருப்பொருளின் இயக்கத்தை மட்டுமே விளக்குகின்றன; பருப்பொருளின் இயக்கம் என்பது உலகின் ஒரு பண்பு மட்டுமே தவிர, அதை அறிந்துகொண்டால், ஒட்டுமொத்த மெய்ம்மையையும் அறிந்துவிட்டதாக ஆகுமா? மேலும், உலகம் என்பது வெறுமனே இயக்கத்திலுள்ள பருப்பொருள் மட்டுமல்ல. அடுத்து, பௌதிக இயக்கம் மட்டுமே பருப்பொருளின் ஒரே பண்பும் அல்ல. மாறாக, அப்பருப்பொருள் பிரதானமாக பண்புரீதியாக மாற்றமடையும் பரிணாம இயக்கத்திற்கும் உட்பட்டுள்ளது என்பது பௌதிக இயக்கத்தைவிடவும் முக்கியமானதல்லவா? 

உள்ளதிலிருந்து உண்மை உய்த்தறியப்பட வேண்டுமே தவிர, உள்ளதையே உண்மை என கட்டித் தழுவிக்கொள்வது முறையாகாது! பருப்பொருள் என்பது உலகின் பிரதான அடிப்படைப் பொருளும், பண்பும் என்பது வெளிப்படையானது; ஆனால், அதுவே உலகின் சாராம்சமான இறுதிப் பண்பாக இருக்கமுடியாது! ஏனெனில், பருப்பொருளானது பண்புரீதியாக பௌதிக நிலையல்லாத வேறு நிலைகளை (உயிர், மற்றும் உணர்வு ஆகிய நிலைகளை) எட்டும்முகமாகத் தன்னைக் கட்டியெழுப்பி உயர்ந்திடும் சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் வழிமுறையில் முனைந்து ஈடுபட்டுள்ளது! 

பருப்பொருள் (அதன் அடிப்படை வடிவமான அணுத்துகள்கள்) என்பது வெறும் கட்டுமானப்பொருள் மட்டுமே தவிர, அதுவே பரம்பொருள் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள், குறிப்பாக, குவாண்டம் பௌதிக விஞ்ஞானிகள் முற்றிலும் புதுவிதமான ஒரு ஆதியாகமத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!
பௌதிகப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய பிரச்சினை விஞ்ஞானத்தின் எல்லையிலிருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், பல விஞ்ஞானிகள் அது விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லைக்கு  (scope) அப்பால் உள்ளது என்கிறார்கள். ஆயினும், விஞ்ஞானிகள் சமீபகாலமாக மிகவும் தீவிரமாக பௌதிக விதிகளை மீறாமல் எவ்வாறு பிரபஞ்சமானது வெற்றிடத்திலிருந்து தோன்றியிருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்துவருகிறார்கள். ஆனால், எவ்வாறு எதுவும் யாதொரு செயற்படுகாரணமும்  இல்லாமல் தோன்றிடமுடியும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது!

இப்புதிரை தீர்ப்பதற்கான திறவுகோல் குவாண்டம் பௌதிகம் தான் என விஞ்ஞானிகள் தீவிரமாக நம்புகிறார்கள். ஆனால், குவாண்டம் நிகழ்வுமுறைகள் உள்ளார்ந்த வகையில் முன்னறிய இயலாத தாகவும், நிச்சயத்துவமற்றதாகவும் உள்ளன. குவாண்டம் நிகழ்வுகள் ஒரு கணத்திலிருந்து அடுத்த கணத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதை முன்னறிய முடியாது. குவாண்டம் உலகைப் பொறுத்தவரை, புறக்காரணமில்லாத தன்னியல்பான மாற்றம் என்பது அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல, அது தவிர்க்கவியலாததும் ஆகும் என்கிறார் பால் டேவிஸ் எனும் விஞ்ஞானி.

ஆக, குவாண்டம் பௌதிகவியல்தான் நவீனகால விஞ்ஞானத்தின் வேதப்புத்தகமாகத் திகழ்கிறது எனலாம்! குவாண்டம் பௌதிகவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் பலரும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு குவாண்டம் பௌதிகம் தான் என்பதாக திடமாக நம்புகிறார்கள்! இருட்டில் மறைந்திருக்கும் ஒன்றை மேலும் இருட்டான ஒன்றின் துணையுடன் கண்டறியும் முயற்சியில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது! அது அவர்களை பலவிதமான கற்பனைக் கோட்பாடு களுக்கும், முட்டுச்சந்துக் கோட்பாடுகளுக்குக் கொண்டுசென்று அலைக்கழிப்பதாய் உள்ளது! பாவம் பால் டேவிஸ், அவரால் விஞ்ஞானத்தையும் விடமுடியவில்லை, மெய்ஞ்ஞானத்தையும் முழுமையாகப் பற்ற இயலவில்லை!

ஆம், குவாண்டம் பௌதிகமானது, வெற்றிடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றமுடியும் என்கிறது! அதாவது, வெற்றிடம் அல்லது வெறுமை என்ற சொல்லுக்கு முன்னொட்டாக 'குவாண்டம்' என்ற சொல்லைச் சேர்த்தால் மூலமெய்ம்மை குறித்த பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என விஞ்ஞானிகள் எண்ணுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்களுடைய பெருமுயற்சி யாவும் குவாண்டம்-வெற்றிடத்தை 'பருப்பொருள்-பிரபஞ்சத்தின்' கருப்பை (Womb) என நிறுவுவதாகவே இருக்கிறது! அதாவது, முடிவாக, "பருப்பொருள் தான் பரம்பொருள்" என்று அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை, அவ்வளவுதான்! இவ்வாறு, பருப்பொருளை மூலமெய்ம்மையாகக் கொள்வது என்பது கருத்தினரீதியான தவறு (Categorical Mistake)ஆகும்!

அடுத்து, அணுக்கருத்துகள்களின் மட்டத்தில் செயல்படக் கூடியதாகத் தோன்றிய குவாண்டம் பௌதிகவியலை அண்டம் மொத்தத்திற்கும் பொருத்திக் காணவும் முடியும் என்பதாக "குவாண்டம் பிரபஞ்சவியல் (Quantum Cosmology) எனும் புதிய துறையையும் அவர்கள் தொடங்கியுள்ளனர். ஏனெனில், இம்மாபெரும் பிரபஞ்சமானது அணுக்கரு மட்டத்திலிருந்துதான் தொடங்கியது. ஆக, அவர்கள் குவாண்டம் பௌதிகத்தைக் கொண்டு பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்வாகக் கருதப்படும் 'பெரு வெடிப்பை' விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடத்தில், 'பெரு வெடிப்பு' கோட்பாடு பற்றி மிகச் சுருக்கமாகக் காண்போம். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமானது, கிட்டத்தட்ட 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 'பெருவெடிப்பு' என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வில் தோன்றியது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது, இன்று நாம் காண்கின்ற இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பருப்பொருளும் - உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), அதிலுள்ள நட்சத்திரங்கள், நட்சத்திரங்களைச் சுற்றிச் சுழலும் கிரகங்கள், என எல்லாப் பொருளும் ஆதியில் ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அது அழுத்தம் காரணமாக வெடித்ததாகவும், அவ்வெடிப்பின் விளைவாக பிரபஞ்சம் தோன்றியதோடல்லாமல், இன்றளவும் விரிவடைந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அப்பொருள் திணிவு எவ்வாறு, எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து அக்கோட்பாடு தெளிவாக எதையும் விளக்கவில்லை! பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்று நாம் விஞ்ஞானிகளைக் கேட்டால், 'பெரு வெடிப்பு எனும் நிகழ்வில் தோன்றியது!' என்பார்கள்! அப்பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்று கேட்டால், 'பெருவெடிப்பிலிருந்துதான், காலம், வெளி, பருப் பொருள், யாவும் தோன்றின; ஆகவே அதற்கு முன்னர் காலம் என்பதில்லை' என்பார்கள்!

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், பெருவெடிப்புக்குப் பிறகான நிகழ்வுகளை, நிலைமைகளை உருவான அம்சங்களைப் பற்றி அவர்கள் அதிகமாக விளக்கிச் சொல்லமுடியும், அதிலும் குறிப்பாக, பொருண்மையான நிகழ்வுகள் மற்றும் அம்சங்களைப்பற்றி மிகத் துல்லியமாக அவர்களால் ஆராய்ந்து சொல்லமுடியும். அதே நேரத்தில், பொருண்மைப் பண்பிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வுகளையும், அம்சங்களையும் பற்றி, அதாவது, உயிர்த் தோற்றம், மனித மனம், அல்லது உணர்வு போன்ற பண்புகளைப் பற்றி அவர்களால் அவ்வளவு சரியாகச் சொல்லமுடிவதில்லை! மேலும், விஞ்ஞானத்தின் தற்போதைய சட்டகத்தைக் (Paradigm) கொண்டு முப்பெரும் புதிர்களான உலகம், உயிர், உணர்வு இம்மூன்றும் எவ்வாறு தோன்றின என்பதைச் சரியாக விளக்குவது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை!

உலகம்/பிரபஞ்சம் என்பது அடிப்படையில் பருப்பொருள் தான்; அதாவது, அணுத்துகள்கள் தான்! உலகம் எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியும், பருப்பொருள் எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியும் ஒன்றுதான்! குவாண்டம் பௌதிகவியலானது அணுத்துகள்கள் வெறுமை, அல்லது வெற்றிடம், அதாவது ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றமுடியும் என்கிறது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில், பருப்பொருளின் வேர்களைத் தேடிப்போன விஞ்ஞானிகள் முடிவில் வெற்றிடத்தை சென்றடைந்துள்ளனர்! இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும், சூரியன், சந்திரன், கிரகங்கள், பூமி, பூமியிலுள்ள உயிரினங்கள், மனிதன், மற்றும் உணர்வு உள்பட அனைத்தையும் பருப்பொருளின் சொற்களில் விளக்கிச்சொன்ன விஞ்ஞானிகள் இனி வெற்றிடத்தின் சொற்களில் விளக்குவார்களா என்பது தெரியவில்லை!

உலகின், அதாவது, பருப்பொருளின் வேர்கள் வெற்றிடத்தின் இதயத்திற்குள் தொலைந்துவிட, அதனுடன் சேர்ந்து அனைத்து பௌதிகவிதிகளும் அர்த்தமிழந்துவிடுகின்றன! அதாவது உலகின் பிறப்புக்கணத்தில் அனைத்தும் - காலம், வெளி, பொருள் என அனைத்தும் பூஜ்ஜியம் என்ற தனி-நிலைப்பாட்டுப் புள்ளி (Singularity) யிலிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு மரமானது எவ்வாறு தோன்றியது என்பதை அறிய அதன் வேர்கள் வரை கீழே சென்று பார்த்துவிட்டு, மரமானது வேர்களிலிருந்துதான் தோன்றியது என்று சொல்வதுபோல, பருப்பொருள்தான் உலகின் மூலப்பொருளும் முடிவான பொருளும் என்று இதுவரை சொல்லிக்கொண்டிருந்தார்கள்! தற்போது, குவாண்டம் பௌதிகவியலைக் கொண்டு மரத்தின் வேர்களைத் தாண்டி இன்னும் கீழே சென்று பார்த்துவிட்டு, ஆகா! மண்ணிலிருந்துதான் மரம் தோன்றியது என்று சொல்வதுபோல, வெற்றிடத்தில், அதாவது ஒன்றுமில்லாததிலிருந்தே உலகம் தோன்றியது என்கிறார்கள் விஞ்ஞானிகள்! அவர்கள் கண்டுபிடிக்கத்தவறியது மரத்தின் உண்மையான மூலமான வித்தைத்தான்! வித்து பற்றிய உணர்வே இல்லாமால் அவர்கள் எதையெதையோ எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்! மரத்தின் மூலமான வித்தை அதன் கனிகளில்தான் தேடவேண்டும்!

மேலும், பருப்பொருளாயினும், வெற்றிடமாயினும் எதுவாயினும் யாவும் ஒரு மூலத்திலிருந்துதான் தோன்றியாகவேண்டும்! உண்மையில் வெற்றிடம் என்பதும் பருப்பொருளுடன் இணைந்த ஒரு பண்பு தானாகும்! அதாவது, கடவுள்தான் உலகைப் படைத்தார் என்று வைத்துக்கொண்டோமேயானால், வெற்றிடத்தையும் அவரேதான் படைத்திருக்கவேண்டும்! மூலமெய்ம்மைக்கு வெளியே யாதொரு பண்பும், நிஜமும் இருக்க முடியாது; அது ஒன்றுமில்லாத வெற்றிடமாயினும் சரி!

அடுத்து, பருப்பொருள், வெற்றிடம் என்பவற்றின் உள்ளார்ந்த பண்பு எத்தகையது என்று காணும்போது, அவை பொருண்மையானவை, சடத்தன்மையைச் சேர்ந்தவை என்பதால், அவை தம்மில் தாமே தோன்றுவதற்கான அடிப்படையையோ, காரணத்தையோ, ஆற்றலையோ கொண்டவையல்ல! அதாவது, பருப்பொருளோ, வெற்றிடமோ தாமே தோன்றுவதற்கான வாய்ப்பற்றவை; ஆகவே, பருப்பொருளாலான உலகமும் தானே தோன்றிட இயலாது! அப்படியானால், தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கான அடிப்படையை, காரணத்தை, ஆற்றலைக் கொண்ட பண்பு, அல்லது அம்சம் எதுவாக இருக்க முடியும் என்பதை நாம் கண்டறிந்தாக வேண்டும்! நாம் அறியும் வகையில் இவ்வுலகம்/பிரபஞ்சம் சடப் பண்பு (பருப்பொருள்), உயிர்ப்பண்பு (உயிர்ஜீவிகள்), உணர்வுப் பண்பு (மனிதஜீவி) ஆகிய மூன்று பண்புகள் உள்ளன. பண்பளவில், பருப்பொருளின் சடப்பண்பைவிட உயிர்ஜீவிகளின் உயிர்ப்பண்பு மேலானது ஆகும்; அடுத்து உயிர்ப்பண்பைவிடவும் மனிதஜீவிகளின் உணர்வுப்பண்பு மேலானது ஆகும். ஆனால், பரிணாம ரீதியாக மனித உணர்வானது, மனிதன் எனும் உயிர்ஜீவியைச் சார்ந்ததாகவும், பொதுவாக உயிர்ஜீவிகள் அனைத்தும் பருப்பொருளாலான உலகைச் சார்ந்ததாகவும் உள்ளதைக் காண்கையில், பருப்பொருளின் சடப்பண்பைப் போலவே, உயிர்ப்பண்பும், உணர்வுப் பண்பும் தன்னில் தானே தோன்றுவதற்கான அடிப்படையையும், காரணத்தையும், ஆற்றலையும் கொண்டவையல்ல என்ற முடிவுக்கு வரமுடியும்!

ஆனால், பருப்பொருளின் பரிணாமம் ஏன் உயிர்ப்பண்பை நாடியும், அதைக்கடந்து உணர்வுப்பண்பை நாடியும் செல்லவேண்டும்? என்ற கேள்வி முக்கியமானதாகும். மேலும், மனிதஜீவியின் வழியாக எட்டப்பட்ட உணர்வுப் பண்பை அடுத்து வெளிப்படவிருக்கும் பண்பு எத்தகையதாயிருக்கும் என்ற கேள்வி அதிமுக்கியமானதாகும்! ஏனெனில், பரிணாமத்தில் இறுதியாக வெளிப்படும் பண்பைச் சார்ந்துதான் ஒட்டுமொத்த உலகமும் இயங்குகிறது! வித்தின் மறைவால் முளைத்துத் தோன்றிய விருட்சத்தின் ஒட்டுமொத்த இயக்கமும், அவ்வித்தினை மீள்-உருவாக்கம் செய்வதை நோக்கியே  அமைந்துள்ளது!

வித்து → விருட்சம் → வித்து


நாம் இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு அதன் மூலத்தைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இந்த விருட்சத்தின் இலைகள், கிளைகள், அடிமரம், ஏன் வேர்கள்வரை சென்று ஆராய்ந்து அவற்றின் விதிகளையும் கண்டறிந்துள்ளோம். அதே நேரத்தில், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் போன்ற பகுதிகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தவறி விட்டோம்! ஏனெனில், உண்மையில் நாம் இவ்விருட்சத்தின் எந்தப்பகுதியாக இருக்கிறோம் என்பதை அறியத் தவறிவிட்டோம்! ஆம், நாம் இன்னும் நம்மை அறியவில்லை! நாமே அதன் பிஞ்சுகளாகவும், காய்களாவும், கனிகளாகவும் இருக்கிறோம் என்பதையும், நாம் முற்றிக்கனியும்போது நாம் தேடிக்கொண்டிருக்கும் மூலத்தை, அதாவது, வித்தை நம்முள் கண்டடைவோம் என்பதையும் நாம் இன்னும் அறியவில்லை!

ஏனெனில், நீண்ட நெடுங்காலமாக நாம் விருட்சத்தை பிரதானப்படுத்திடும், மையப்படுத்திடும் பார்வைக்கு நம்மைப் பழக்கப்படுத்தி வந்துள்ளோம்! மூலத்தைத் தேடும் நமது பார்வை, சிந்தனை யாவும் பின்னோக்கியதாக, பிரபஞ்ச விருட்சத்தின் கடந்தகால வரலாற்றை அகழ்ந்து ஆராய்வதாக மட்டுமே அமைந்துள்ளதே தவிர, அதன் வருங்கால வளர்ச்சி நிலைகளைப்பற்றிய முன்னோக்கிய பார்வையும் சிந்தனையும் அற்றவர்களாயுள்ளோம்!

ஒரு புறம், விஞ்ஞானிகளாகிய நாம் இப்பிரபஞ்ச விருட்சத்தின் வேர்களைத் துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்; இன்னொரு புறம், அதன் எட்டவியலாத கிளைகளை எட்டியவரை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்! கீழே வேர்களைப் பற்றிச் சென்றால் அவை சூன்யத்துள் மறைந்துவிடுவதாயும், மேலே கிளைகளைப் பற்றிச்சென்றால் அவை எல்லையில்லாத அனந்தத்தில் விரிவடைவதாயும் நம்மைக் குழப்புகின்றன! ஆயினும் நாம் இவ்விருட்சத்தின் விதிகளை - அதாவது அடிமரத்தின் விதிகள், கிளைகள், மற்றும் இலைகளின் விதிகள் என பகுதிபகுதியாக, விருட்சத்தின் பகுதிகளைப் பற்றிய விதிகளை விலாவாரியாக தொகுத்துக்கொண்டு, அவ்விதிகளை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திக்காணும் வகையறியாமல், மிகவும் மேலோட்டமான புரிதலைத் தழுவிக் கொண்டு தத்தளிக்கிறோம்! உண்மையில் விருட்சத்தின் விதிகள் யாவும் வித்தினை மீள் உருவாக்கம் செய்யும் வழிமுறைக்குச் சேவைபுரியும் விதத்திலமைந்த, வித்தின் கருவிபூர்வமான விதிகளே என்பதை அறியாதவரை நம்மால் இப்பிரபஞ்ச விருட்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது!

விஞ்ஞானிகள் தங்கள் மனங்களில் பௌதிகவிதிகளை முன்னிறுத்தி, சில வரையறைகளை, கட்டுப்பாடுகளை, நிபந்தனைகளை விதித்துக்கொண்டு அவற்றிற்கேற்ப இயற்கையும், பிரபஞ்சமும் பொருந்திவரவேண்டும் என்கிறவகையில் இயற்கையையும், பிரபஞ்சத்தையும் பற்றிய கொள்கைகளை கோட்பாடுகளைப் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்! பௌதிகவிதிகள் என்பவை சில குறிப்பிட்ட பரிணாமப் பணிகளை அல்லது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகள் மாத்திரமே. மேலும், விதிகள் படிநிலைகளில் அமைந்தவை. பௌதிக விதிகள் என்பவை எந்த மூலவிதிகளின் உப-விதிகள் என்பதை அறியாமல் அவைகளை வழிபடமுடியாது! நிச்சயமாக பௌதிக விதிகள் என்பவை மூலவிதிகளோ, தலைமை விதிகளோ அல்ல!

'கடவுள்' எனும் மூலமெய்ம்மை!


முதலிடத்தில், அனைத்திற்கும் மூலமாக ஒரு மெய்ம்மை இருந்தாக வேண்டும் என்ற எளிய தர்க்கரீதியான முன்வைப்புகோளை ஏற்றுக்கொள்கிறோமெனில், அடுத்ததாக, அது எத்தகைய மெய்ம்மை என்பதை உய்த்தறிந்து கொண்டோமெனில், அதன்பிறகு அம்மெய்ம்மையை 'கடவுள்' என்றழைத்தாலும், அல்லது வேறு எப்பெயர், அல்லது குறியீடு கொண்டு குறிப்பிட்டாலும் ஒன்றுதான்!

மூலமெய்ம்மையின் ஒரு மூலப்பண்பு என்னவெனில், அது தன்னில் தானே முழுமையானதாக, தனக்கொரு மூலம் தேவையற்றதாக சுயம்புவாக இருத்தல் வேண்டும்! இத்தகைய பண்பு இப்பிரபஞ்சத்தில் இடம்பெற்றுள்ள நாமறிந்த சடம், உயிர், உணர்வு எனும் இம்மோன்று அம்சங்களில் எதற்கு உள்ளது என ஒப்பு நோக்கும்போது, மிகத் திடமாகத் தோற்றமளிக்கும் சடபொருளைவிடவும், இன்னும் உயிர்ஜீவிகளின் உயிர்ப்பண்பைவிடவும், கண்ணுக்குப் புலப்படாத உணர்வுக்குத்தான் இருக்கமுடியும். ஏனெனில், உணர்வுதான் அறிநிலைக்கும் (Awareness),அறிவுக்கும் அடிப்படையாக அமைந்ததாகும்! அதே நேரத்தில், உணர்வு என்றதும் நாம் மனித-உணர்வைக் குறிப்பிடவில்லை!

மனித-உணர்வு என்பது உணர்வின் தொடக்கச்சொல், அல்லது ஒரு ஆரம்ப நிலைதானே தவிர, அதுவே உணர்வின் இறுதிச் சொல்லோ, முழுமையோ அல்ல! ஆம், முழுமையானதொரு பேருணர்வு மட்டுமே படைப்பாற்றல் கொண்டதாயும், எண்ணற்ற சாத்தியப்பாடுகளின் உறைவிடமாயும் திகழக்கூடிய மெய்ம்மையாகும். ஆக, அத்தகைய உணர்வே மூலமெய்ம்மையாக அமையக்கூடிய, அதாவது தன்னில்தானே சுயம்பாகத்தோன்றக்கூடிய தகுதிபடைத்ததாகும்! நிச்சயமாக, அத்தகுதி பருப்பொருளுக்குக் கிடையாது! பருப்பொருளின் ஒரு சிறப்பு என்னவெனில், அது எல்லாவகையிலும் வளைந்துகொடுக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு பொருளாகும்; ஆகவேதான் அது பிரபஞ்சத்தின் கட்டுமானப்பொருளாக அமைந்துள்ளது. உயிர் என்பது பருப்பொருளின் சடப்பண்புக்கும், மனித உணர்வுக்கும் நடுவே அமைந்த இடைமுகம் (Interface) ஆகும்! உயிர்ப்பண்பின் சிறப்பு புலனுணர்வும், புலனறிவுமே ஆகும்! மனித உணர்வின் சிறப்பு அது மூலமெய்ம்மையின் சாயலில் எழுந்த மெய்ம்மை என்பதே!

ஒருவகையில், மூலமெய்ம்மையை கடவுள் என்ற சொல்லைக்கொண்டு குறிப்பிடுவதில் சிக்கல் இல்லாமலில்லை! ஏனெனில், 'கடவுள்' எனும் சொல் பெரிதும் தவறான புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்ட ஒன்றாகும். கடவுளைப் பற்றிச் சொல்லப்படும், 'எல்லாம் வல்லவர்', 'எல்லாம் அறிந்தவர்', என்பது போன்ற அதீத குணாதிசயங்கள் உண்மையில் மிகவும் பொதுப்படையான பண்புகளே தவிர, மூலமெய்ம்மையைக் குறிக்கும் துல்லியமான பண்புகள் அல்ல. ஆனால், இப்போது நாம் கடவுள் எனும் மூலமெய்ம்மையினை நுட்பம் மிகுந்த துல்லியமான சொற்களின் வழியாக இனம்காணும் முதிர்ச்சியைப் பெற்றுள்ளோம் எனலாம். அச்சொற்கள் எவையெனில், உணர்வு (Consciousness), அறிவு (Knowledge), தகவல் (Information) ஆகியவையே. இவை மூன்றும் உண்மையில் தனித்தனியானவையல்ல. இந்த ஒன்றில்-மூன்றாய் அமைந்த மெய்ம்மையின் வெளிப்பாடுகளே இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்துமாகும். அடுத்து, மூலமெய்ம்மையை 'கடவுள்' என்ற சொல்லைக் கொண்டு குறிப்பிடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால், நீங்கள் "ஒருமை" என்ற சொல்லைக் கொண்டு அழைத்துக் கொள்ளலாம்!

அடுத்து, 'படைப்பு' எனும் சொல்லும் பெரிதும் தவறான புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்ட ஒன்றாகும்! ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி, 'கடவுள்' எவ்வளவு வல்லவராயிருந்தாலும், அவரால் எதுவாகவும் ஆகமுடியுமே தவிர, எதையும் (தனக்குப்புறத்தே இருமை தோன்றும்வகையில்) படைக்க இயலாது! ஆம் ஒருமையும் முழுமையுமான மூலமெய்ம்மை உடைந்ததன் விளைவாகவே இந்த பன்மையின் உலகமான பிரபஞ்சம் தோன்றியது! ஆனால், பௌதிகவியல் விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தின் நான்கு அடிப்படை விசைகளையும், பன்னிரண்டு அடிப்படைத்துகள்களையும், அவற்றுக்கிடையேயான  இடைவினைகளையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் விளக்கும்வகையிலான ஒரு மாபெரும் ஒற்றைக்கோட்பாட்டை உருவாக்கிக் காண படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தன் வாழ்காலத்தின் 30ஆண்டுகளை அம்முயற்சியில் செலவிட்டு முடிவில் தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம்!

ஆனால், அந்த "மாபெரும் ஒருங்கிணைப்புக்கோட்பாட்டை" (Grand Unification Theory)யும், "அனைத்தையும் விளக்கும் கோட்பாட்டை" (Theory of Everything)யும் வெறுமனே பௌதிகத் தளத்தின் விதிகளைக்கொண்டு மட்டுமே உருவாக்கிடமுடியாது! அப்படியே உருவாக்கினாலும், அவற்றிலிருந்து, வேதியியல், உயிரியல், மற்றும் உணர்வு போன்ற வெளிப்படு பண்புகளை (Emergent properties) தருவிக்கவோ, புரிந்துகொள்ளவோ இயலாது! ஏனெனில், "பெருவெடிப்பு" என்பது பிரபஞ்சத்தின் பிறப்பைக் குறிக்கிற அதேநேரத்தில், அது ஒருமையும் முழுமையுமான மூலமெய்ம்மை உடைபடுதலைக் குறிக்கும் நிகழ்வும் ஆகும்! "பெரு வெடிப்புக்கு" முன் எதுவுமில்லை எனும் விஞ்ஞானிகளின் கூற்று மாபெரும் மோசடியாகும். மாறாக, பெருவெடிப்புக்கு முன்னிருந்த நிலையின் (மெய்ம்மையின்) சமச்சீர்- உடைவின் (Symmetry Breaking) விளைவாகவே வெளி-கால-பொருண்மைப் பிரபஞ்சம் தோன்றியது! ஆக, பெருவெடிப்பில் உடைந்த ஒருமை நிலையை மீண்டும் கட்டமைக்கும் பிரபஞ்ச இயக்கத்தைத்தான் நாம் பரிணாமம் என்கிறோம்! பௌதிக விதிகள் உள்பட பிரபஞ்சத்தின் அனைத்துவிதிகளும் ஆதியில் இழந்த அந்த ஒருமையை எட்டும்முகமாகவே ஆரவாரமின்றி செயல்பட்டுவருகின்றன!

பருப்பொருள், அல்லது, அணுத்துகள்கள் என்றால் என்ன என்பதை அவற்றை உடைத்துப் பகுத்துப் பார்த்து அறிந்துகொள்ள இயலாது! மாறாக, அவற்றை  அவற்றின் நெடிய பரிணாமப் போக்கில், அதாவது, சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையில் இயங்க விட்டு இறுதியில் அவை எத்தகைய நிலையை, பண்பை எட்டுகின்றன என்பதைக்கொண்டே அறியமுடியும்!

உலகம் ஏற்கனவே அவ்வழிமுறையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது; சொல்லப்போனால், உயிரற்ற, உணர்வற்ற துகள்களாகத் தொடங்கிய உலகம், ஒரு கட்டத்தில் உயிர்பெற்று, அதாவது உயிர்ஜீவிகளாகி - புலனுணர்வு கொண்டு, புலனறிவைப் பெற்று, அடுத்து ஒரு மாபெரும் பரிணாமத் தாவலில், மனிதஜீவியினுள் சுய-உணர்வாக எழுந்து, பகுத்தறிவால் தனது ஆதித் தொடக்கத்தையும், தான் அடையவிருக்கும் முழுமையையும் அறிந்து, முடிவாக தொகுத்தறிவால் முழு-அறிவைப் பெற்றிடும் வகையில் முழு-உணர்வாக மலர்ந்திடும் இறுதிக் கட்டத்தின் அருகாமையை வந்தடைந்துள்ளது. 

இறையியலளார்க்கு கடவுளை முதன்மைப்படுத்துவது முக்கியமாக    இருக்கிறது! விஞ்ஞானிகளுக்கு பருப்பொருளையும், பௌதிக      விதிகளையும் முதன்மைப்படுத்துவது முக்கியமாக விளங்குகிறது. நாத்திகர்க்கு இயற்கையை முதன்மைப்படுத்துவது முக்கியமாக இருக்கிறது! ஆனால், மெய்யியலாளர்க்கு உலகம், இயற்கை, பருப்பொருள், உணர்வு (மனிதன்), பேருணர்வு (கடவுள்), ....என எல்லா மெய்ம்மைகளுக்கும் அதனதன் பண்புக்குரிய இடத்தை அளித்து, அவற்றுள்   எப்பண்பு    மேலோங்கியதாக    விளங்குகிறதோ அதை மூலமெய்ம்மையாகக் கொள்வது முக்கியமாக இருக்கிறது!

முடிவுரையாக, "உலகம் எவ்வாறு தோன்றியது? எனும் கேள்விக்கான இந்த நெடிய விளக்கத்தைச் சுருக்கி தெளிவான பதில்களாக இங்கே தொகுத்துக் காண்போம்:

• உலகம், பிரபஞ்சம், இயற்கை, பருப்பொருள், என்று அதை எவ்வாறு அழைத்தாலும், அது          தன்னில் தானாகத் தோன்றிட முடியாது. அதற்கான அடிப்படையை, காரணத்தை, ஆற்றலை அது     கொண்டிருக்கவில்லை.

• உலகமானது என்றென்றைக்குமாக இருந்துவரும் ஒரு சாசுவதமான மெய்ம்மை அல்ல. அதற்கு ஒரு ஆரம்பமும், தனது உள்ளார்ந்த விழைவை அடைவதற்கான மிக நெடிய இடைப்பகுதியும், ஒரு ஒப்பற்ற முடிவும் உள்ளன.

• உலகை 'கடவுள்' படைக்கவில்லை; மாறாக, கடவுளேதான் உலகமாக மாறியுள்ளார். இங்கு 'கடவுள்' என்பது மூலமெய்ம்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளது.

• உலகம் சூன்யத்திலிருந்து இயற்கையாகத் தோன்றியதல்ல. இன்னும் கடவுளும் சூன்யத்திலிருந்து உலகைப் படைக்கவில்லை. ஏனெனில், சூன்யம், வெறுமை, வெற்றிடம், ஒன்றுமில்லாத நிலை என அதை எவ்வாறு அழைத்தாலும் அது பருப்பொருளுடன் இணைந்த ஒரு பண்பே ஆகும்.

• இறுதியாக, "ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றும் தோன்றிடாது!" எனும் பார்மினடீஸ்-ன் கூற்று முற்றிலும் சரியானதே! 'கடவுள்' எனும் மூலமெய்ம்மைக்கு வெளியே வெற்றிடம் உள்பட எதுவும் இருக்க முடியாது! இன்னும் மூலமெய்ம்மைக்கு உள்ளேயும் வெற்றிடம் உள்பட எதற்கும் இடமில்லை! ஏனெனில், மூலமெய்ம்மை என்பது மூலமெய்ம்மைதான்; அதற்குப் பகுதிகள் கிடையாது! இறுதியாக, உலகம்/பிரபஞ்சம் என்பது ஒரு தற்காலிக நிஜம் மாத்திரமே; அது நிஜத்திலும் நிஜமான மூலமெய்ம்மையை நோக்கியதொரு இயக்கம் ஆகும்! உலகம் என்பது கடவுளைச் சுட்டும் ஒரு குறியீடு, அவ்வளவே!


மா.கணேசன் / நெய்வேலி / 02-10-2018
----------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, 2 October 2018

நிலையாமை அல்லது இரண்டாம் வெப்பச்சலன விதி



      இங்கிருந்து தப்ப எங்காவதொரு மூலையில் வழியிருந்தாக வேண்டும்
      என்று கோமாளி சொன்னான் திருடனிடம்!
           - பாப் டிலன் (Bob Dylan/ All Along the Watchtower)

பிரபஞ்சம் எனும் விருட்சம்


ஒரு மரம் போன்றதுதான் இப்பிரபஞ்சமும்! விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்? ஏனென்றால், நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்கிறோம்; நமது வாழ்க்கை இப்பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறது, அடுத்து. நாம் இப்பிரபஞ்சத்துள் இருக்கிறோம், வாழ்கிறோம் என்பதாலேயே, இப்பிரபஞ்சம் நன்மையானதாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணுவதிலும் தவறிருக்கமுடியாது! 

ஆனால், சில விஞ்ஞானிகள், "அப்படியொன்றும் நாம் விசேடமானவர்களோ, பிரத்யேகமானவர்களோ அல்ல!" என்கிறார்கள். ஆம், நம்மில் சில விஞ்ஞானிகளும், அறிவுஜீவிகளும், தத்துவவாதிகளும், பகுத்தறிவாளர்களும் நம்மைவிட பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கும், அதனுடைய பௌதிகவியல் விதிகளுக்கும் தான் முதன்மையிடமும், முன்னுரிமையும் தருபவர்களாக இருக்கிறார்கள்! இது மிகவும் துரதிட்டவசமானதாகும். ஏனெனில், பிரபஞ்சத்தை முதன்மையாகக் கொண்டு மனிதன் உள்பட பிற யாவற்றையும் இரண்டாம்பட்ச அம்சங்களாகக் காணும் இத்தகைய பார்வை அடிப்படையிலேயே தவறானதாகும்! அதாவது, நாம் இருக்கிறோம்; ஆகவே நாம் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயவும் அறியவும் விழைகிறோம்! இதன் மறுதலை உண்மை அல்ல (the converse is not true). நாம் இல்லாத நிலையில், பிரபஞ்சம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன?

அடுத்து, சிலர், "நாம் இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை, இன்னும் சொல்லப்போனால், இப்பிரபஞ்சத்திற்கு மையம் என்றும் ஏதும் இல்லை!" என்கிறார்கள். இக்கூற்றும் தவறானதே! அதாவது, வெகு காலமாக 'பூமியே பிரபஞ்சத்தின் மையம்' எனவும்; மேலும், 'சூரியனும், எல்லாக் கிரகங்களும், பூமியைச் சுற்றிவருகின்றன' எனவும் கருதப்பட்டுவந்தது. ஆனால், பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற இந்த புவி-மையக் கொள்கையை மாற்றி, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன (சூரிய-மையக் கொள்கை) என உலகிற்குக் காட்டியவர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்ற வானியல் அறிஞர். இது இவரது பெயரைக்கொண்டு, "கோப்பர்னிக்கஸின் புரட்சி" என்று வழங்கப்படுகிறது. ஆனால், நடைமுறை வானவியலுக்கு இவரது கொள்கை ஆற்றிய பங்களிப்பைத் தாண்டி வேறு மகத்தான புரட்சி எதையும் அது செய்திடவில்லை!

அதாவது, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு பற்றியும், வாழ்வியலுக்குரிய யாதொரு பெரிய புரிதலையும் அது அளித்திடவில்லை! பரந்து எல்லையில்லாமல் விரியும் இப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு ஓரத்திலுள்ள சூரியனைச் சுற்றிச் சுழலும் ஒன்பது கிரகங்களில் ஒன்றான பூமியில் நாம் இருக்கிறோம் என பரந்த-வெளியில் பூமிக்கிரகத்தின் அமைவை இட அளவில் (Spatially) குறித்துக்காட்டியது மட்டுமே "கோப்பர்னிக்கஸின் புரட்சி" செய்த சாதனையாகும். 

பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனையே சுற்றிவருகின்றன என்பது ஒரு வானியல் விபர உண்மை மட்டுமேயாகும். ஆனால், 'பூமியானது பிரபஞ்சத்தின் மையம் அல்ல' என்கிற விபர உண்மை எவ்வகையிலும் மனிதனின் மையத்துவத்தை (Centrality) அகற்றிடவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னும் விஞ்ஞானச் சமூகத்திற்கு வாய்க்கவில்லை! 

ஒருவகையில், விஞ்ஞானிகள் தற்போது மிகு-சிக்கல் (Complexity) நிகழ்வுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றாலும், மிகு-சிக்கல் நிகழ்வுமுறையானது எதை நோக்கிச் செல்கிறது என்பதை துல்லியமாக அறிந்தாரில்லை! ஒரு பரிணாம இயக்கம் என்றவகையில் பிரபஞ்சமானது மேன்மேலும் ஒருமைப்படுவதிலும் (Unification), தனி-மையப்படுவதிலும்  (Individualization) ஈடுபட்டுள்ளது! ஒரு உயிர்-ஜீவி என்பது யாதொரு பருப்பொருள் அமைப்பைவிடவும் மிகு-சிக்கல் வாய்ந்தது மட்டுமல்ல; அது மிகவும் ஒருமைப்படுத்தப்பட்டதும், தனி-மையப்படுத்தப்பட்டதுமான (Highly Unified and Individualized structure) ஒரு அமைப்பாகும்! அடுத்து ஒரு மனிதஜீவி என்பவன் ஒரு உயிர்-ஜீவியைவிடவும் மேலதிகமாக ஒருமைப்படுத்தப்பட்டவனும், தனி-மையப்படுத்தப்பட்டவனும்; யாவற்றுக்கும் மேலாக சுய-உணர்வு கொண்ட ஒரு விசேட அமைப்புமாவான்! அதாவது, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒவ்வொரு மனிதஜீவியையும் மையமெனக் கொண்டு குவிகின்றது எனலாம்! அதாவது, ஒரு விருட்சமானது தனது ஒவ்வொரு கனியையும் மையமாகக் கொள்வதைப்போல! ஒவ்வொரு மனிதனும் தனது முக்கியத்துவத்தை உணர்ந்தறியும் போது, அவன் பிரபஞ்சமளாவியவனாகிறான் (Universalized); அதே வேளையில், இவ்வழிமுறையில் பிரபஞ்சமானது தனி-மையப்படுகின்றது (Individualized)! இவ்வகையில், உண்மையில் பூமியானது தனது மையத்துவத்தை இழக்கவில்லையென்றே கொள்ளப்படவேண்டும்!

அதாவது, ஒரு மரத்தின் காய்கள் அம்மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டும் என்பதில்லை, அம்மரத்தின் எந்தப்பகுதியிலும் காய்க்கலாம்; அவ்வாறு எந்தப்பகுதியில் காய்த்தாலும் அக்காய்களின் மையத்துவமும், முக்கியத்துவமும் சிறிதும் மாறிவிடுவதில்லை. எவ்வொரு மரத்திற்கும் அதனுடைய காய்கள்/கனிகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், மரத்தின் ஒருமையும், முழுமையும் அதன் வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளில் தான் அடங்கியுள்ளன. அவ்வாறே, பிரபஞ்சத்தின் வித்துக்கள் மனிதர்கள் எனும் கனிகளில் தான் அடங்கியுள்ளன! ஆனால், மனிதர்கள் இன்னும் கனியாதவர்களாகவும், பெரும்பாலானவர்கள் கடைசிவரை (தம் வாழ்-காலம் முடியும் வரையிலும்) படும் பிஞ்சுகளாகவே தேக்கமுற்று மரணத்தில் உதிர்ந்துபோகின்றனர்!

அழிவதற்காகத் தோன்றியதல்ல பிரபஞ்சம்!


இப்போது நாம் வெப்பவியக்கவிசையியல் விதிகளைப் (Laws of Thermodynamics) பற்றிப் பார்ப்போம். இவ்விதிகளை நாம் எளிமையாக "வெப்பச்சலன விதிகள்" என்றும் அழைக்கலாம். முதலாம் வெப்பவியக்கவிசையியல் விதி, அல்லது வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது; மாறாக, சக்தியானது 
   ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றப்பட மட்டுமே முடியும். 
   ஆக, புதிதாக சக்தியானது உருவாக்கப்பட முடியாது என்பதால், பிரபஞ்சத்தின் 
   சக்தி எப்போதும் மாறாத அளவைக் கொண்டதாகவே இருக்கும்." 

சக்தி என்பது மிகவும் அடிப்படையானது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் சக்திதான் பருப் பொருளாக மாறுகிறது. பிரபஞ்சமாகவும், அதிலுள்ள அனைத்துமாகவும் ஆகிறது. சக்தி, பருப்பொருள் ஆகியவை குறித்து நாம் தொடக்கத்திலிருந்தே புரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இவை அடிப்படையான அம்சங்களே தவிர, எவ்வகையிலும் இறுதியானவையல்ல என்பதுதான். சக்தி என்பது காரியமாற்றுவதற்கான சக்தி மட்டுமே தவிர, அதற்கு யாதொரு திசையும், குறிக்கோளும், நோக்கமும் கிடையாது. பருப்பொருள் (Matter) என்பது சக்தியின் ஒரு மாறிய வடிவமே; மேலும் அது இப்பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருளே தவிர, 'பரம்பொருள்' அல்ல! ஆம், சக்தி, பருப்பொருள் ஆகியவை கருவி போன்றவை, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு, நோக்கத்திற்கு வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதற்கான ஊடகம் (Medium) போன்றவை. இவ்வாறே, இவற்றுக்கு அடிப்படையாக அமைந்த பௌதீகவியல் விதிகளும் பரிணாம விதிகளின் கருவிகளேயாகும்! ஆம், பரிணாம விதிகளே சக்தி, அல்லது பருப்பொருளானது என்ன செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் எனும் திசையையும், வழிமுறைகளையும் காட்டுகிறது!

அடுத்தது, இரண்டாம் வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றமடையும் 
   போது, அல்லது பருப்பொருளானது ஒரு மூடிய அமைப்பினுள் சுதந்திரமாக 
   இயங்கும்போது, (நாளடைவில்) அதனுடைய சீர்குலைவு (entropy)
   அதிகரிக்கிறது."

அதாவது, கணிதமேதையும், தத்துவவாதியுமான நார்பெர்ட் வீய்னர் (Norbert Wiener)அவர்கள்,  "(ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால்,) அதில் தோன்றிய எவ்வொரு பொருளும், நிகழ்வுமுறையும், (ஒட்டுமொத்த பிரபஞ்சமும்) இறுதியில் (நெடுங் காலப்போக்கில்) அழிந்துபோகும். அதில், ஒரு மனிதன் எவற்றையெல்லாம் மதிப்பு மிக்கதாகக் கருதுகிறானோ, வாழ்க்கை, செல்வம், சந்தோஷம், கலைப்பொருட்கள்; நாடுகள், நகரங்கள், சமூகங்கள், நாகரிகங்கள் - இன்னும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என யாவும் அழிந்துபோகும்! யாவும் கடைசிச் சிதைவுக்கும் அழிவுக்கும் உட்பட்டவையே, ஏனெனில், பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருளும் இந்த இரண்டாம் வெப்பச்சலன விதிக்கு உட்பட்டவையே!" எனக் கூறியுள்ளார்.

பிரபஞ்சத்தின் தலைவிதி கடைசியில் வெப்பச்சாவில் (heat death) முடிவதுதான் என்பதாக இந்த இரண்டாம் வெப்பச்சலன விதி சுட்டுகிறது. காலப்போக்கில், அனைத்து நட்சத்திரங்களும், உடுமண்டலங்களும் தமது எரிபொருளை எரித்துத் தீர்ந்த பிறகு, பிரபஞ்சம் மொத்தமும் தன் வெப்பத்தையிழந்து ஒரே சீரான வெப்ப நிலையை எட்டிவிடும்; அவ்வேளையில், யாதொரு உயிரும் பிரபஞ்சத்தில் வாழமுடியாது போகும்! 

ஆக, நமது வாழ்க்கை என்பது பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கும், அதன் முடிவு நிலைக்கும் நடுவே இடைப்பட்ட காலப் பகுதியில் நிகழும் ஒன்றாக அமைந்துள்ளது! அதாவது பிரபஞ்சம் தோன்றி கிட்டத்தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அவதரித்தோம்! அதேபோல, பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிவதற்கு பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்பாகவே நாமும், பிற உயிரினங்களும் இப்பிரபஞ்சத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிடுவோம் எனலாம்!

நாம் நாடகக் கலைஞர்களையும், பார்வையாளர்களையும் போல, நாடகம் தொடங்கும் போது மட்டுமே முறையே மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் தோன்றுகிறோம்! நாடக அரங்கம் (பிரபஞ்சம்) அமைக்கப்படும் போதும், நாடகம் முடிந்து அரங்கம் பிரிக்கப்படும் போதும் நாம் இருப்பதில்லை! எது முக்கியமெனில், நாடகம் நிகழ்கிறது என்பதும், நாடக-விதிகளை அறிந்து, அவற்றை முழுமையாக நிறைவேற்றி, நமது (பரிணாமப்) பாத்திரத்தை முறையாக உணர்ந்துசெயல்படுதல் மட்டுமே! 

இவ்வளவு ஏன்? மனிதனின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள்தான்! அதற்குள்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் 50 ஆண்டுகளோ, 60, அல்லது 70 ஆண்டுகளோ,    எவ்வளவு ஆண்டுகள் வாழ்வோம் என்பதை முன்னறிய முடியாத நிலையில், நாம் ஒவ்வொருவரும் விரைவாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை மரணத்துக்கு முன்னேயே முறையாக முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும்! 

மனித வாழ்-காலம்  வரையறைக்குட்பட்டதுதான். ஆனால், அது பொதுவாகப் பலரும் எண்ணுவது போல,  மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமானதற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது! இந்த வரையறைக்குள்ளாகவே நம்மால் முழுமையாக வாழவும், வாழ்வின் ஒப்பற்ற இலக்கை முயன்றடையவும் முடியும் என்பதால்தான் நமது வாழ்-காலம் இவ்வாறு மிகவும் கச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது

மேலும், மனித-உடலானது ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும்வகையில் உருவாக்கப்படவில்லை! ஏனெனில், "வாழ்க்கை" என்பது நீடித்து உயிர்-பிழைத்திருப்பது அல்ல! அவ்வாறு நீடித்து உயிர்-வாழ்வதுதான் வாழ்க்கை என்பதாயிருந்தால், இயற்கையாகவே ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கும் வகையில் நமது உடலானது வடிவமைக்கப்பட்டிருக்கும்! மேலும் ஆயிரம் ஆண்டுகள் நாம் நீடித்திருக்க முடியுமென்றாலும், நாம் என்ன செய்வோம்? வெறுமனே உண்டு, உறங்கி, இனம்பெருக்கி சகமனிதர்களோடு சண்டை சச்சரவிடும் கலக மானிடப்பூச்சிகளாக உழன்று கொண்டிருப்போம்!

ஆக, இரண்டாம் வெப்பச்சலன விதியை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் அழிவதற்காகத்தோன்றியதல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம்! அதாவது, பல நூறு கோடியாண்டுகளுக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிந்துவிடும் என்பதை நாம் இயல்பானதாக, அதாவது, நன்றாக, முழுமையாக அர்த்தபூர்வமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதன் மரணத்தில் முடிவதைப் போன்றே இயல்பானதாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ஏன், எந்த குறிக்கோளுக்காக இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதை முறையாகப் புரிந்துகொள்ளும்பட்சத்தில் முடிவு, இறப்பு என்பவை அழிவைக் குறிக்கும் சொற்களல்ல என்பதை நாம் புரிந்துகொள்வோம்!

அதாவது, பிரபஞ்சத்தின் பிறப்பு (ஆரம்பம்) என்பது ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வு என்றால், அதன் முடிவு என்பதும் ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வாகத்தான் அமைய முடியும்! மேலும், பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு குறிக்கோள், நோக்கம், அல்லது இலக்கு என்பது இருக்குமானால், அந்தக் குறிக்கோளை, இலக்கை அடைந்ததும் பிரபஞ்சம் முடிவிற்கு வந்துவிடுவது என்பது அழிவுகரமான விடயம் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரம் என்பதாகப் பார்ப்பதால், அவர்கள் பருப்பொருளையும், அதனை இயக்கும் பௌதீக விதிகளையுமே பிரதானமாகக் கொள்கின்றனர். உண்மையில், பிரபஞ்சத்தின் முடிவை, அதனுடைய பௌதிகத் தளத்தில் பௌதிக விதிகளின் சொற்களில் காண்பது, எதிர்பார்ப்பது தவறான புரிதலுக்குத்தான் இட்டுச் செல்வதாய் அமையும்! உண்மையில், பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றி, வெப்பச்சாவிலோ, அல்லது பெரும் உள்ளடர்தலிலோ (Big Crunch) முடிவடைவது கிடையாது! 

ஒரு விருட்சமானது ஒரு வித்திலிருந்து பிறந்து, வளர்ந்து, ஒரு கட்டத்தில் பூத்து, பிஞ்சுகள் விட்டு, பிஞ்சுகள் காய்களாகி, காய்கள் முற்றிக் கனிகளாகி, கனிகளுக்குள் இருக்கும் வித்துகளுக்குள் அடங்கி விடுகிறது! அதாவது, எவ்வொரு விருட்சமும் வித்தில் தொடங்கி வித்தில் (முழுமையடைந்து) முடிகிறது என்பதைப்போலவே, பிரபஞ்சம் எனும் விருட்சம் எத்தகைய வித்திலிருந்து தொடங்கியது (தோன்றியது) என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்! நாம் ஒரு விருட்சத்தின் வித்தைக் கணக்கிலேயே கொள்ளாமல், அவ்விருட்சத்தின் வேர்கள், அடிப்பகுதி, கிளைகள், இலைகள்; நீளம், அகலம், உயரம் ஆகியவற்றையும், அவற்றுக்கு அடியோட்டமான சில விதிகளையும் கொண்டு மட்டுமே புரிந்துகொள்வது அவ்விருட்சத்தை முழுமையாக, அதன் சாரத்தில் புரிந்து கொண்டதாக ஆகாது! ஏனெனில், ஒரு விருட்சத்தின் எல்லா பண்புகளையும், விதிகளையும் அறிந்தாலும், அதன் வித்தையும், வித்தின் பண்புகளையும், விதிகளையும் அறியாதிருப்பது அறிவீனமாகும்! அது சாரத்தை விலக்கி சக்கையைக் கொள்வதற்குச் சமமாகும்! 

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் உயிரியல் தளத்தையும், மனிதனை உள்ளடக்கிய அதிமுக்கியமான உணர்வியல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, பௌதிகத்தளத்தை மட்டுமே ஒட்டு மொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்; இது, ஒரு மரத்தின் பூக்களையும், காய்கள் மற்றும் கனிகளையும் விலக்கி வெறும் அடிமரத்தையும், கிளைகள், மற்றும் இலைகளையும் மட்டுமே மரம் எனக் காண்பதற்கு ஒப்பான மேலோட்டமான அணுகுமுறையாகும்! ஏனெனில், மரத்தின் அதிமுக்கியமான அம்சம் வித்து மட்டுமேயாகும். ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! விருட்சம் என்பது வித்தினைச் சுட்டும் ஒரு குறியீடு மாத்திரமே! மூல காரணமான வித்திற்கும், முடிவான விளைவாகக் கனியினுள் தோன்றும் வித்திற்கும் இடையேயான நிகழ்வுமுறையே (Phenomenon) விருட்சமாகும்! 

ஆம், பிரபஞ்சம் என்பது ஒரு விருட்சமானால் நாமே அதன் காய்களும், கனிகளும் போன்றவர்கள் ஆவோம்! ஒரு மரத்திற்கும், அதன் காய்களுக்கும் உள்ள உறவைப்போன்றதே பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள உறவும் ஆகும்! ஒரு மரத்திற்கு காய்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானவர்கள் பிரபஞ்சத்திற்கு மனிதஜீவிகள்! விஞ்ஞானிகள் கருதுவதுபோல, உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற, கிட்டத்தட்ட தேவையற்ற பக்கவாட்டு கிளைப்புகள் அல்ல! 

நாம் இப்பிரபஞ்சத்தில் தோன்றியிருக்கிறோம் என்பது ஒரு விபத்து அல்ல! மேலும், பிரபஞ்சத்தின் வரலாற்றை மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தால், திரும்பவும் நாம் தோன்றமாட்டோம் (ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, Stephen Jay Gould)என்பது போன்ற கூற்றுகள் அபத்தமானவை. ஏனெனில், விபத்தோ, இல்லையோ, நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை! இனி பிரபஞ்சமல்ல, நாம் இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியமானது; நம்மை இங்கு கொண்டுசேர்த்ததுடன் பிரபஞ்சத்தின் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது எனலாம். இனி நாம் தான் உணர்வுப்பூர்வமாக பிரபஞ்சம் விட்ட இடத்திலிருந்து பரிணாமத்தை அதன் இறுதியான இலக்கு நோக்கிக் கொண்டுசென்றாக வேண்டும்! 

பிரபஞ்சத்தின் எதிர்காலத்து விளைவுகளை, வளர்ச்சி நிலைகளை அதன் பௌதிகப் பரப்பில், விண்வெளியில் தொலைதூரத்தில் எங்கேயோ தேடிக்கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானதும், முறையற்றதுமாகும். ஏனென்றால், பிரபஞ்சம் என்பது வெறும் எந்திரத்தனமான பௌதிக (பொருளியல்) இயக்கம் அல்ல; பிரதானமாக அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும். பரிணாமரீதியாக, பிரபஞ்சமானது வெகு காலத்திற்கு முன்பே பௌதிகத் தளத்தை, அதாவது பொருளியல் தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்திற்குள் பிரவேசித்து, உயிரியல் தளத்தின் சாத்தியப்பாடுகள் அனைத்தையும் சோதித்து முடித்து, கடைசியாக, தற்போது உணர்வியல்-தளத்திற்குள் நுழைந்துள்ளது. இது, ஒரு மரம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் நிலையை ஒத்ததாகும்!  

ஆனால், விஞ்ஞானிகள் அனைவரும் ஏகோபித்த பார்வையில், பருப்பொருளாலான தளத்தை -- உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றையும்; அவற்றிற்கு அடிப்படையான கட்டுமானக் கூறுகளான அணுத்துகள்களையும்; மேலும்,  காலம், வெளி, நிறை, மற்றும் அடிப்படை விசைகளான ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை, அணுக்கருவின் வலுமிக்க விசை, வலுக்குறைந்த விசை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பைத்தான் மொத்தபிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்! ஆகவேதான் இவையனைத்தையும் நிர்வகிக்கும் அடியோட்டமான பௌதிகவியல் விதிகளை (The Laws of Physics) பிரதானமாகக் கொள்கிறார்கள்; கிட்டத்தட்ட அவர்கள் இவ்விதிகளை வழிபடுகிறார்கள் என்றே சொல்லலாம்!  

இல்லையென்றால், பருப்பொருளின் தளத்துக்குரிய இரண்டாம் வெப்பச்சலன விதி போன்ற ஒரு விதியைக் கொண்டு அவர்கள் பிரபஞ்சத்தின் தலைவிதியை மட்டுமல்லாமல் நம்முடைய தலைவிதியையும் சேர்த்தே எழுத எத்தனிப்பார்களா என்ன? இது எவ்வாறு உள்ளதென்றால், நாம் வசிக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டு நம்மையும், நமது வாழ்க்கையையும் வரையறுப்பது போலுள்ளது! 

முக்கியமாக, இரண்டாம் வெப்பச்சலன விதி என்பது பிரபஞ்சத்தின் பௌதிகத்தளத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விதி மாத்திரமே! இவ்விதியாயினும், பிற எவ்வொரு பௌதிக விதியாயினும், எதுவும் பரிணாம வழிமுறையை தீர்மானிக்க இயலாது! பௌதிகவிதிகள் யாவும் பருப்பொருள் தளத்தைக் கட்டுப்படுத்துவதற்கானவை மட்டுமே. பருப்பொருளானது ஒரு உயிர்-ஜீவியாக மாற்றமடையும் வழிமுறையில் இரண்டாம் வெப்பச் சலன விதி எத்தகைய பங்கு ஆற்றியுள்ளது? இறுதியில், இப்பிரபஞ்சத்தில் உயிர்-ஜீவிகள் உயிர்-பிழைத்திருக்க முடியாத நிலையை இந்த இரண்டாம் விதி தோற்றுவிக்கும் என்றால், முதலிடத்தில் உயிர் தோன்றுவதை ஏன் அந்த விதி தடுக்காமல் அனுமதித்தது?

பிரபஞ்சமானது அணுத்துகள் போன்ற மிக எளிய அமைப்பிலிருந்து ஒரு அமீபா போன்ற மிகு-சிக்கல் அமைப்பாகவும், மனித மூளை போன்ற அதி-சிக்கல் வாய்ந்த அமைப்பாகவும் தவிர்க்கவியலாத வகையில் வளர்ந்தெழும் வழிமுறையில் தனித்துவமான மிகு-சிக்கல் விதிகள் (laws of complexity)தோன்றி பரிணாமத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்கின்றன. இவ்வாறு, பரிணாமப் போக்கில், பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் தோன்றினாலும், அவ்விதிகள் பௌதிக விதிகளை மீறுவதில்லை; மாறாக அவற்றை நிறைவு செய்வதாகவே உள்ளன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறுவதிலிருந்து, அவர்கள் பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் இருந்தாலும் அவற்றை மதிப்பதில்லை, பெரிதாகக் கணக்கில் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்து பௌதிக விதிகளுக்கு விசுவாசமாக இருப்பதே விஞ்ஞான பூர்வமானது என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பதும், இவ்வழியே ஒருவகை விஞ்ஞானவாதம் (Scientism) விஞ்ஞானத்தைப் பீடித்து மட்டுப் படுத்துவதில் முடிகிறது என்பதையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் உணர்வதேயில்லை!

உண்மையில், உயிர்-தோன்றுவதற்குரிய அனைத்துச் சாதகமான நிலைமைகளுக்கும் பௌதிக விதிகள் வழியமைத்துக் கொடுத்தே அமைந்துள்ளன! இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? சிந்திகும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? ஒருவேளை, இப்பிரபஞ்சத்தில் உயிரும், மனித ஜீவியும் தோன்றவில்லை என்றால், அதாவது, பிரபஞ்சம் தரிசாகவே பல்லாயிரம் கோடி ஆண்டுகள் யாதொரு குறிக்கோளும், இலக்கும் இன்றி இயங்கி கடைசியில் இரண்டாம் வெப்பச் சலன விதியின்படி வெப்பச்சாவில் மாண்டு மறைந்துபோகும் என்றால், அந்த இரண்டாம் வெப்பச்சலன விதியின் முக்கியத்துவம் தான் என்ன? எது, அல்லது யார் அவ்விதியைப் பற்றி ஆராய்ந்துகொண்டும், போற்றிப் பாடிக்கொண்டும் இருப்பர்? 

நிலையாமை நிலையானதல்ல!


வித்தில் தொடங்கி வித்தில் முழுமைபெறும் நிகழ்வுமுறையின் சூட்சுமம் அறிந்தால், "நிலையாமை" என்ற பேச்சுக்கு இடமேது! தோன்றியவையனைத்தும் அழிந்துபோகும் என்பது தவறு! 

பிரபஞ்சம் முடிவிற்கு வரவேண்டுமானால், முழுமையடைய வேண்டும்! அது எக்குறிக்கோளுக்காத் தோன்றியதோ அக்குறிக்கோளை முழுமையாக எட்டியிருக்கவேண்டும்! அது எந்த மூலத்திலிருந்து வெடித்துத் தோன்றியதோ அந்த மூலத்தை எட்டும் வகையிலான நுட்பம் மிகுந்த ஒரு அமைப்பை கட்டமைத்தாக வேண்டும்! எவ்வாறு ஒரு விருட்சமானது எந்த வித்திலிருந்து தோன்றியதோ அதே போன்ற வித்துக்களை தனது கனிகளுக்குள் கட்டமைக்கிறதோ அவ்வாறு! பிரபஞ்சம் எதற்காகத் தோன்றியது என்பது தெரியாமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி மதிப்பையும், ஒரு பௌதிக விதியையும் (இரண்டாம் வெப்பச்சலன விதியையும்) கொண்டு இப்படித்தான் பிரபஞ்சம் முடிவிற்கு வரும் என்று கணிப்பது பொருத்தமற்றது!

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, கடைசியில் எவ்வாறு முடிவடையும் என்பதை அறிவதைவிட ஏன், எந்தக் குறிக்கோளுக்காகத் தோன்றியது என்பதை அறிவது அதிமுக்கியமானதாகும்! காலம், மற்றும் உலகம் பற்றிய உணர்வு தோன்றிய தொன்மைக் காலங்களில், "ஏன்", "எவ்வாறு", "எதிலிருந்து" உலகம் தோன்றியது என்ற கேள்விகளைப் பின்பற்றி இவ்வுலகில் தன்னையும், தனது வாழ்வையும் அர்த்தப்படுத்திடும்வகையில் எழுந்த உந்துதலில் புராணிகம் தோன்றியது! புராணிகங்களிலிருந்து ஒரு கிளை பிரிந்து மதங்கள் உருவாயின. மதங்கள் கடவுளை அனைத்துக்கும் காரண கர்த்தாவாகக் கொண்டதால் அனைத்துக் கேள்விகளும் தேடலும் முடிவிற்கு வந்துவிட்டன! இன்னொரு கிளை பிரிந்து தத்துவச் சிந்தனை பிறந்தது. அடுத்து மூன்றாவது கிளையாக, 'எவ்வாறு' என்ற கேள்வி முதன்மைபெற்றதன் வழியாக  விஞ்ஞானம் துளிர்த்தது; துளிர்த்ததோடு துரித வளர்ச்சி பெற்று, வெறும் 500 ஆண்டுகளில் கிட்டத்தட்ட தனது எல்லைகளைத் தொட்டும்விட்டன, ஆனால், அது தன் முடிவைத் தழுவிக்கொள்ள மனமில்லாமல் தத்தளித்துக்கொண்டு பற்பல கற்பனைக்கோட்பாடுகளைப் புனைந்துகொண்டுள்ளது! ஆம், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்ற வகையில் முடிவிற்கு வந்தே ஆகவேண்டும்! அதற்கு அது துணிவுடன் சில முடிவுகளை, உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்!

பிரபஞ்சமானது ஒரு பூடகமான "பெரு-வெடிப்பில்" (Big-Bang) தோன்றி, மேலும் பூடகமான தொரு "பெரும்-உள்ளடர்தலில்" (Big-Implosion) முடிவடைந்து போகும் அர்த்தமற்ற நிகழ்வுமுறை அல்ல! அதற்கு அது தோன்றாமலேயே இருந்திருக்கும்! மாறாக, அது நிரந்தரமற்ற நிலையிலிருந்து நிரந்தரத்துவம் நோக்கிச் செல்லும் அரிய நிகழ்வுமுறை ஆகும்! மிகவும் எளிமையான அணுத்துகள் என்ற நிலையில் தொடங்கிய பிரபஞ்சம், சுய-அமைப்பாக்கம் (Self-Organization)எனும் வழிமுறையின் வாயிலாக தன்னைத்தானே கட்டியெழுப்பிக்கொண்டு பருப்பொருள் நிலையிலிருந்து உயர் மாற்றம் பெற்று தனி-மையப்பட்ட (Individualized) மிகு-சிக்கல் (Complexity) அமைப்பான உயிர்ஜீவியாக எழுந்தது. பிறகு, வெறும் உயிர்-ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து, மேலும் மிகு-சிக்கலான அமைப்பான மூளையைக்கொண்ட,  சுய-உணர்வு பெற்ற, சிந்திக்கும் திறன்கொண்ட மனிதஜீவியாக அவதாரம் எடுத்தது! அடுத்து, சுய-உணர்விலிருந்து முழு-உணர்வு நிலையை அடைய இன்னும் ஒரு படிதான் உள்ளது! அதாவது, காய்கள் முற்றிக் கனிகளாக மாறுவது மட்டுமே இன்னும் நிகழவேண்டியுள்ளது! எல்லாக் காய்களும் முற்றிக் கனிகளாக ஆன பிறகு, மரம் பட்டுப்போனாலும் அதனால் பாதகம் ஒன்றுமில்லை!

இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? பிறகு மனித ஜீவிகள் எதற்கு? வெறுமனே சிறிது காலம் உயிர்-பிழைத்திருந்து பிறகு மரணத்தில் முடிந்துபோவதற்காக உருவானதா வாழ்க்கை? இல்லை, வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்த உன்னத நோக்கம் கொண்டது வாழ்க்கை! 

மனித வாழ்-காலம் வரையறைக்குட்பட்டதுதான் என்றாலும், அதற்குள்ளாகவே அடையப்படவேண்டிய பிரத்யேகமான, மகத்தான இலக்கு ஒன்று இருந்தாகவேண்டும்! அந்த இலக்கைக் கண்டடைவதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது! நெடிய ஆயுளுடன் குந்தித் தின்பதற்கும், உடுத்தி மகிழ்வதற்கும், உல்லாசமாக அவரவர் விருப்பப்படி இருப்பதற்குமான வாய்ப்பு அல்ல வாழ்க்கை! 
நிலையாமை என்பது உலக மெய்ம்மை பற்றிய உண்மையாகும். மனித ஆயுளுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சத்தின் ஆயுள் நெடியது என்றாலும் அது நிரந்தரமானதல்ல. அவ்வாறு நிரந்தரமாக நீடித்திருக்கும் வகையிலும் அது கட்டமைக்கப்படவில்லை! ஒரு வகையில், இச்செய்தியைத்தான் இரண்டாம் வெப்பச்சலன விதி உணர்த்தி நிற்கிறது எனலாம்!  

நிரந்தரத்துவம் என்பது தோற்றம், மறைவு; ஆரம்பம், முடிவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது! நாம் இந்த உலகில் முளைத்திருக்கலாம்; ஆனால், நாம் ஒவ்வொருவரும் சென்று சேர வேண்டிய உலகம் காலாதீதம்! அது ஒரு ஒப்பற்ற உணர்வு நிலையாகும்! ஒரு கணம் அதை உணர்ந்து அனுபவம் கொள்வதென்பது அனந்த காலத்திற்கு வாழ்ந்ததற்குச் சமமானது மட்டுமல்ல, அது, முக்தி, மோட்சம், வீடுபேறு எனும் இறவா நிலையை, அதாவது, நிரந்தரத்துவத்தைச் சேர்வதுமாகும்!

இந்த உலகம் (பிரபஞ்சம்) நிரந்தரமற்றது என்பதன் அர்த்தம் 'நிரந்தரமானது' என்று எதுவும் இல்லை என்பதல்ல! நிரந்தரமற்ற மெய்ம்மையாகிய இந்த உலகம் இங்கிருக்க முடியுமெனில், நிச்சயம் நிரந்தர மெய்ம்மை என்ற ஒன்றும் இருந்தாகவேண்டும்! அவ்வாறில்லாவிடில், யாதொரு அடிப்படையும், மூலமும் இன்றி, நிரந்தரமற்ற இந்த உலக-மெய்ம்மை எவ்வாறு எதிலிருந்து தோன்றியிருக்கமுடியும்? 

■ 

மா.கணேசன் / நெய்வேலி / 25-09-2018
--------------------------------------------------------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...