Saturday, 5 October 2024

அகம் x புறம்





 

 

 

 

 

 

 

 

புறம் நிச்சயமாக இருக்கிறது!
மனித அகமே அதைக் கண்டு அறிந்து
அறிவிக்கிறது! ஆஹா!
அகம் எழாமல் புறத்திற்கு அர்த்தம்
யார் தருவது?
மூல -அகத்தின் அதிரடி உருமாற்றமே புறம்.
இது அதிகமானோருக்குப் புரியாது!
புறம் அகமாக மாறுவது தவிர்க்கவியலாத
பரிணாமம்!
இது ஒரு தொடர் சுழற்சியா?
அவசியமில்லை!
புறம் தோன்றுவதற்கு முன் இருந்தது
மூல -அகம்!
புறம் முடிவில் புகுவது மகா-அகம்.
இந்த முற்றுப்புள்ளி
முடிவைக் குறிக்கைவில்லை
முழுமையைக் கொண்டாடுகிறது!

              *

அகமுகமாகத் திரும்புதல், அகத்தாய்வு, அகமுகப் பயணம், அகத் தகவமைதல் என்றெல்லாம் அகத்தின் முக்கியத்துவம் பற்றிக் கேள்வியுறும் போது, நம்மால் அகமுகமாகத் திரும்ப முடியாமால் தடுமாறுவது  ஏன் ? மேலும், அது நம்மை அகமா? புறமா? என முடிவு செய்ய இயலாமல் பெரும் உளப்போராட்டத்தில் தள்ளி விடுவது எதனால்?

அல்லது, அகம் எனும் பரிமாணம் அவசியமற்றதா? நமது (அன்றாட) வாழ்க்கையுடன் அதற்கு யாதொரு தொடர்பும் இல்லையா?

அகம் என்பது நமக்கு அன்னியமானதா? அல்லது புறம் என்பதுதான் நமது பிறப்பிடம், புகலிடம், மற்றும் அனைத்துமா?

'அகம்' புறத்திற்கு எதிரானதா ? அல்லது,' புறம்' அகத்தைப் புறக்கணிக்கிறதா? புறம் என்பது என்ன, அது எதைக் குறிக்கிறது? அகம் என்பது என்ன, அது எதைக் குறிக்கிறது? முதலில் நாம் புறத்திலிருந்து தொடங்குவோம். ஏனெனில், நம்மை விட நமக்கு மிகவும் பரிச்சயமானது புறவுலகம் தான் - நெருங்கிய சொந்த பந்தங்களைக் கொண்ட குடும்பமும், அன்றாடச் சடங்குகளும், பொருட்களும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்களும்; ஆதரவும், வன்மமும், குரூரமும் நிறைந்த சமுதாயமும்; அழகு நிறைந்தததும், சில
சமயங்களில் சீற்றம் கொள்ளும் பூவுலகமும்; அதையும் கடந்து எல்லையற்றதாய்ப் பரந்து விரியும் - மிகச்சரியானதொரு தொடர்பு - கொள்ளல் இல்லாததினால்- இன்னும் புரிந்துகொள்ள இயலாத 'பிரபஞ்சம்' எனும் புதிருலகமும்தான்.

'பிரபஞ்சம்' குறித்து தனியே பிறிதொரு கட்டுரையில் காண்போம். நாம் பெரிதும் இயங்கும் புறவுலகம் என்பது அனைத்துக் குழப்பங்களுக்கும், பிரச்சனைகளுக்கும், முட்டாள்தனங்களுக்கும் , எல்லா அநீதிகளுக்கும் களமாக, காரணமாக விளங்குவதும், தனிமனிதர்களின் வாழ்க்கையைக் குலைக்கும் வகையில் துருத்திக் கொண்டிருப்பதுமான சமுதாயம் எனும் பாழுலகமே ஆகும். இச்சமுதாயம் குறித்தும் பிறகு பார்ப்போம். மொத்தத்தில், புறம் என்பது, பொதுவாக ஒருவருக்குப் புறத்தேயுள்ள புறவுலகமே எனலாம்.

அகம் என்பது அதன் மிகவும் சுருக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் ஒருவரது "மனம்" அல்லது அகந்தை உணர்வே எனலாம். அதன் மிக விரிவான, ஆழமான நிலையைக் குறிக்கும் வகையில் அகம் என்பது "ஆன்மா" அல்லது இறுதியும் முழுமையுமான "பேருணர்வே" எனலாம். மனம், அகந்தை, ஆன்மா, பேருணர்வு குறித்து விரிவாக பிறகு காண்போம்.

இப்போதைக்கு 'அகம்' என்பது  ( நமது) மனதைக் குறிக்கிறது. அதே வேளையில், மனித மனங்கள் ஒரு படித்தானதல்ல என்பதும்; மனத்திற்கு மனம் கனபரிமாணத்தில் வேறுபடுவதாய் உள்ளது என்பதும் உண்மையே என்றபோதிலும் மேலோட்டமான தன்மையிலும், மட்டுப்பாடான தன்மையிலும் , சுய சிந்தனையற்ற பாங்கிலும் நம் பெரும்பாலான மனங்கள் சேர்ந்து செல்வதாயுள்ளன. . . .

மொத்தத்தில், அகம் என்பது அதிகம் அறியப்படாத பிரதேசமான, இன்னும் தன்னை, தனது வீச்சையும், தனது உள்ளுறையாற்றலையும் உணராத மனத்தையே குறிக்கிறது.

உண்மையில், புறம் அல்ல பெரிதும் பிரச்சினைக்குரியது ! மாறாக, தனது அசலான ஆற்றலையும் தனது ஆழத்தையும் அறியாத அகமே, மனமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.

நாம் புறத்தே பயணிப்பதாயினும் அல்லது அகத்தே பயணிப்பதாயினும் அது பிரதானமாக நமது விருப்பத்தை, நோக்கத்தை, தேவையை - நாம் முக்கியமெனக் கருதி எவையெவற்றைத் தேடிச்செல்கிறோம் என்பதைப் பொறுத்ததேயாகும்.

அகம் நம்மை உட்பிரவேசிக்க விடாமல் விரட்டியடிப்பதும் இல்லை. புறம் நம்மை கட்டிப் போடுவதும் இல்லை. நமது நோக்கங்களும், விருப்பங்களும், மதிப்பீடுகளும் தான் நம்மை புறத்தையோ அல்லது அகத்தையோ நோக்கிச் செலுத்துவதாயுள்ளன.

நாம் எதனுடன், எவ்வெவற்றுடன் நம்மைப் பிணைத்துக்கொள்கிறோம், அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நம்மை அடிமைப்படுத்தவோ, அல்லது விடுதலைப்படுத்தவோ செய்கின்றது!

புறம் என்பது தீமையானதோ, விலக்கப்பட வேண்டியதோ அல்ல. அதனளவில் அது மட்டுப்பானது, அவ்வளவே. புறம் என்பது தவிர்க்கமுடியாதது. அதே வேளையில், நாம் புறத்தை முற்றிலுமாகச் சார்ந்திருப்பதும் கூடாது. அது நமது உய்விற்கு உதவிடாது. புறம் என்னவோ நமது " பிறந்த வீடு" தான். எனினும் புறத்தை மட்டுமே சார்ந்திருப்போமெனில், அதுவே நாம் "இறக்கும் வீடாக"வும் ஆகி விடும்.

புறமும் அகமும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்றாலும், நாம் புறவுலகைச் சார்ந்திருப்பதை விடவும் புறவுலகம்தான் நம்மை, நமது அகத்தைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. புறத்தின் (புறவுலகின்) பரிணாம வளர்ச்சியின் தவிர்க்கவியலாத ஒரு முக்கிய கட்டமாக வெளிப்பட்டுள்ள மனிதனின் (ஒவ்வொரு மனிதனின்) வழியேதான் அதன் இறுதிப் பரிமாண உச்சமானது எட்டப்படவேண்டும். உண்மையில் நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. மாறாக, பிரபஞ்சம் தான் நம்முள் வாழ்கின்றது! உண்மையில், நாமும் பிரபஞ்சமும் வேறு வேறு அல்ல. கூர்மைப்பட்ட, நுட்பம்கூடிய, சூக்கும நிலையடைந்த புறத்தின் புதிய முகமே அகம் என்பதாகும்!

ஆக, 'புறம்' எனச் சுருக்கி அழைக்கப்படும் இப்பிரபஞ்சமானது அகவயப்படுதலையே தனது பிரதான உள்-நோக்கமாக, பரிணாம இலக்காகக் கொண்டு இயங்கி வந்துள்ளது. அகவயப்படுதல்,  அல்லது அக நிலையடைதல் என்பது உணர்வடைதல், மேன்மேலும் உணர்வில் வளர்தல், பெருகுதல் என்பதே.

புறம் ஒருபோதும் அகத்துடன் முரண்படுவதில்லை. ஏனெனில், புறம் என்பது தொடர்ந்து தன்னைக் கடந்து வளர்ந்து செல்லும் உள்ளார்ந்த உந்து விசையைக் கொண்டதோர் இயக்கமாகும். ஆக, புறத்தின் வளர்ச்சியும், பரிணாமமும் மேலும் மேலும் அகவயமாவதாய் அகத்தின் ஆழத்தைத் தேடிச்செல்வதாய் இருக்கும் பட்சத்தில் நாம் புறத்தையே நோக்கிக் கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருப்பது முறையன்று.

புறவுலகை விரிவாகவும் எவ்வளவு எட்டமுடியுமோ அவ்வளவு தொலவு வரையும் ஆராய்கிற நாம் ஏன் நமக்கு அருகில் மிக நெருக்கமாக உள்ள அகத்தை, அகவுலகை ஆராயப்புகுவதில்லை?

பலவிதமான தேவைகளின் பொருட்டும் பயன் பாட்டு நோக்கங்களுக்காகவும் தான் நாம் புறவுலகை ஆராய்கிறோமே தவிர புறவுலகிற்கும், அகவுலகிற்கும்( நமக்கும்) உள்ள தொடர்புறவை நாம் இன்னும் அறிந்தபாடில்லை! தனது உயிர்-பிழைத்தலுக்கான தேவைகளைப்  பூர்த்தி செய்து கொள்வதுதான் தனது வாழ்க்கை, குறிக்கோள், நிறைவு, முழுமை, இலக்கு, யாவும் எனக் கொண்டு தனது வாழ்க்கையை மிகவும் மேலோட்டமாகவும், மட்டுப்பாடான வகையிலும் மனிதன் வாழ்ந்து செல்கிறான்.

அதாவது, மிகப் பரிதாபகரமாக அவன் தனது  மேற்புறச் சுயமான உடலின் தேவைகளை மட்டுமே உணர்ந்தவனாய், ஒரு விலங்காய்  வெறுமனே உயிர்-பிழைத்துச்செல்கிறான். இதைத்தான் அவன்  'வாழ்க்கை'  என்றழைக்கிறான். அவன் இன்னும் தனது உள்ளார்ந்த சுயத்தின் ஆழமான தேவையை உணர்ந்தவனாய், அசலான மனிதனாய் எழவில்லை!

மனிதனின் உண்மையான மகிழ்ச்சியும், நிரந்தர நிறைவும், அகலாத அர்த்தமும், முழுமையும், யாவும் அவனது உள்ளார்ந்த சுயத்தின் தேவையை நிறைவு செய்வதிலேதான் அடங்கியுள்ளது. ஆனால், இத்தகைய தேவையை நிறைவு செய்யக்கூடிய யாதொரு பொருளும், அம்சமும், கூறும், புறவுலகில் எங்கேயும் இல்லை! இதுதான் புறவுலகின் மட்டுப்பாடாகும்.

புறவுலகமானது  நமது  மேற்புறச் சுயமான உடலின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடும். ஏனெனில், நமது புறச்சுயமான உடலானது புறவுலகின் பௌதீகச் சடப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டதே யாகும். நமது உள்ளமைந்த அகச்சுயத்தின் தேவையை நாம் ஒவ்வொருவரும் நம்முள் ஆழ்ந்து செல்வதன் வழியாக மட்டுமே அடைய முடியும். நமது அகச்சுயத்தின் தேவையை அடைவது என்பது நமது அகச்சுயத்தை அதன் அடியாழத்திலிருந்து நேரடியாகக் கண்டடைவதே; நமது அகத்தில் மேன்மேலும் ஆழப்படுவதேயாகும்.

அதற்கு, முதலில் நாம் உண்மையில் ஒரு "அக ஜீவி" என்பதை உணர்ந்தறிய வேண்டும். இன்னும் உயிருள்ள எவ்வொரு சிறு புழு பூச்சியும் கூட அகஜீவிகளே. முதல் உயிரியான 'அமீபா'  தான் முதன்முதலில் இப்பிரபஞ்சத்தில் அகம், புறம் எனும் பிரிவினையை தன்னுடன் கொண்டு வந்தது.

கற்பனை செய்து பாருங்கள் : இப்பிரபஞ்சத்தில் ஒரு புழு பூச்சியும் தோன்றிடவில்லை என்றால்; யாதொரு அவதானிக்கும்  உணர்வுள்ள  (மனித) ஜீவியும்  இல்லை என்றால்; புறம் என்ற ஒன்றை உணர, காண, அறிய, அதைப்பற்றிப் பேச எதுவும், எவரும் இல்லையென்றால் புறத்தின்(புறவுலகின்) அர்த்தம் தான் என்ன?

உலகம், சடப்பிரபஞ்சம், தன்னைத்தானே பார்வை கொள்ளவும், உணரவும், அவதானிக்கவும் முடியாது! ஆனால்,  உலகிற்கு மாறான, அதன் பண்பிலிருந்து வேறான ஒன்று உலகை, புறத்தை, பார்வை கொள்ளவும், அவதானித்தறியவும் முடியும். ஆகவே தான், பிரபஞ்சம் எனும் சடத்துவம் உயிராகப் பரிணமித்தது.

உண்மையில், " உயிர்" என்பது எங்கோ கால-வெளி உலகிற்கு வெளியேயிருந்து வழி தெரியாமல் உலகிற்குள் வந்து சேர்ந்துவிடவில்லை. மாறாக, உயிர் என்பது பெளதீக(சட) பிரபஞ்சத்தின் மிக வித்தியாசமான, விசேடமான ஒரு வளர்ச்சி நிலையே, உலகின் நீட்சியே தவிர வேறில்லை!

உயிருள்ள ஜீவியாயினும், உணர்வுள்ள  (மனித) ஜீவியாயினும் அவை பரந்து விரியும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் இடம் பெறுகின்ற முக்கியத்துவம் ஏதுமற்ற விஷயங்களல்ல. மாறாக, அவை பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிப் படிகள் மாத்திரமல்ல; அவை பிரபஞ்சத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றவையும் பிரபஞ்சத்தின் மிக அசலான, சாரமான, இறுதிப் பண்பினை, தன்மையை வெளிப்படுத்தும் கருவிகளும், பிரதிநிதிகளும் ஆகும்.

பிரபஞ்சத்தின் மிக அசலான, சாரமான பண்பு அதன் சடத்தன்மை அல்ல. இன்னும் சடத்தன்மை கடந்த உயிரும் அல்ல; இன்னும் உயிர்த்தன்மை கடந்த மனித உணர்வும் அல்ல. மாறாக, மனித உணர்வையும் கடந்த, மனித உணர்வின் உள்ளேயும் ஊடேயுமாகச் சென்றடைய வேண்டிய மாபெரும் இறுதிப்" பேருணர்வு" தானாகும். இதுவே அகத்தின் இறுதி ஆழம் ,எல்லை, இன்னும் அனைத்தின் (அகம், புறம் இரண்டின்) முடிவும் முழுமையும் ஆகும்.

முதன் முதலில், முதல் உயிரியான அமீபாவின் வருகை தான் புறத்தை புறம் எனவும், அகம் எனவும் இரண்டாகப் பிரித்தது. என்றாலும், தான் ஒரு "அக-ஜீவி" (அகத்தைக் கொண்ட ஜீவி) என்பதை உணரும் அளவிற்கு அது தன் அகத்தில் (உணர்வில்) ஆழப்படவில்லை. அதற்கு "சுய உணர்வு" எனும் அந்த அரிய அம்சம் இல்லை. ஆகவேதான், அந்த அமீபா தான், நெடிய பரிணாமப் பயணத்தின் வழியாக தற்போது சுயவுணர்வையுடைய மனித ஜீவியாக எழுந்துள்ளது. ஆம், அகம் என்பது அதற்குரிய உணர்வுப் பரிமாணத்துடன் முதன் முதலில் மனிதனுடன் மட்டுமே தொடங்குகிறது.

ஆனால், மனித ஜீவிகளோ உணர்வு இருந்தும் தாம் ஒரு அக-ஜீவியே என்பதை உணராத அமீபாக்களாகத் தான் இன்னும் விளங்குகிறார்கள்! அதனால் தானே அவர்கள் அகம், புறம் எனும் பிரிவினையின் ஏற்பாட்டை , அதன் உள் நோக்கத்தை, புரிந்து கொள்ளாமல் அப்பிரிவினையை பிரச்சினையாக மாற்றிவிட்டதோடு அப்பிரச்சினையின் தாக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்.

உண்மையில், அகம் x புறம் பற்றிய பிரச்சினையை எழுப்புவதும், அதற்கான தீர்வைத் தேடுவதும் மனிதனின் சுருங்கிய ஆழமற்ற (இன்னும் ஆழப்படாத) அகமே; தன்னை நோக்கி விழிப்படையாத மனமே யாகும்.

இப்பிரச்சினைக்கான தீர்வென்பது, மனிதன் மேன்மேலும் தன் அகத்தே ஆழப்படுவதொன்றே; மேன்மேலும் தன் உணர்வில் வளர்வதொன்றே, பெருகுவதொன்றே ஆகும்.

ஆனால், மனித ஜீவிகளுக்கு அவர்களது இயல்பிலேயே  "சுயவுணர்வு" கொடுக்கப்பட்டிருந்தும் அவர்களில் விதிவிலக்கான ஒரு சிலரைத்தவிர ஏணைய பிறர் அவ்வுணர்வைத் தழுவிக் கொள்ளவில்லை. சிறு துளி அளவும் அவர்கள் தம் உணர்வில் தோயவில்லை. சிறிதளவும் அவர்கள் தம் உணர்வில் வளரவும் இல்லை.

விலங்குகளின் ஒரு பொதுப்பண்பு அவை பகலிலும் இரவிலும் எப்போதும் புறத்தையே - புற அசைவுகளை, நிகழ்வுகளை, பொருட்களை, பிற விலங்குகளையே கவனித்திருக்கும், கண்காணித்திருக்கும். அவற்றிற்கு அகப்பார்வை கிடையாது. உறங்கும் நேரம் தவிர விலங்குகள் தம்முள் அமிழ்வதில்லை!

இவ்வாறே மனித ஜீவிகளாகிய நாமும் எப்போதும் புறத்தையே, புற நிகழ்வுகளையே, புற  விஷயங்களையே; பிற மனிதர்களின் சொற்களை,செயல்களை, நடவடிக்கைகளையே கண்காணித்திருக்கிறோம். நமக்கும் பெரிதாக அகப்பார்வை எதுவும் கிடையாது. உறக்கத்தைத்தவிர நாமும் நம் அகத்துள் அமிழ்வதில்லை. நமது பெரிய, பெரிய கனவுகளும், கற்பனைகளும், நமது 'ஆழமான' சிந்தனைகளும் கூட, புற விடயங்களைப் பற்றிய அசைபோடுதலே தவிர, நாம் எண்ணுவது போல அவை "அகமுக யாத்திரை" களல்ல! ஆம், 'புறம்' பற்றிய குறிப்பு ஏதும் இல்லாத பிரயாசையோ, அகப்பார்வையோ, உள்-ஆழ்தலோ நம்மிடம் துளிர்க்கவேயில்லை! இன்னும் சொல்லப்போனால், நமது புறப்பார்வையும் கூட மட்டுப்பாடான, ஆழம் செல்லாத நமது அகத்தின் (மனத்தின்) குறுகிய நுகர்வுத் தேவைகளால் கட்டுப்படுத்தப்பட்டதேயாகும்.
 
உண்மையில் புறம் என்பது எதைக்குறிக்கிறது? அது எதற்காக இருக்கிறது? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு, உறவு என்ன? என்பன போன்ற கேள்வி எதுவும் நம்மிடம் எழுவதில்லை. நமது உடல் - மைய வாழ்க்கையின் நுகர்வுத் தேவைகளுக்கான வளங்களை, பொருட்களைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கிடங்கு என்பதற்கு மேல் நாம் புறவுலகைக் காண்பதில்லை, புரிந்துகொள்வதில்லை.

நம்மைப் பொறுத்தவரை புறம், புறவுலகம் என்பது நமது நுகர்வுத் தேவைகளைத்தான் பிரதிபலிக்கிறது, குறிக்கிறது. புறம் பற்றிய நமது பார்வையும், புரிதலும் பெரிதும் நமது ஆழமற்ற அகத்தினால் விகாரப் படுத்தப்பட்ட (குறுக்கப்பட்ட) ஒன்றாகவே உள்ளது. புறவுலகில் நாம் விழுந்து புரண்டு காரியமாற்றுவதாகத் தெரிந்தாலும், நாம் அதில் புழங்குகிறோமே தவிர, அதனுடன் ஒன்றி, ஐக்கியம் கொண்டு வாழ்வதில்லை. மாறாக, நாம் நமது ஆழமில்லாத (ஆகவே மன நோய் பீடித்த) அகத்தில்தான் வாழ்கிறோம்!

நாம் இயற்கையை இயற்கையாகவே பார்ப்பதில்லை. நமது குறுகிய நோக்கங்களுக்கேற்ப இயற்கையுலகை வளைத்து நெளித்து மாற்றியமைத்துக் கெடுத்து  நமது பொருளாதாரத் தேவைகளின் நிமித்தம் அதை மிகவும் கொச்சைப் படுத்தியே காண்கிறோம். நாம் இயற்கைக்காக (அதன் அழகுக்காக, அது நமக்கு உயிர் தந்து நம்மைப் பேணிப் பராமரித்திடும் " உயிர்க்கோளம்" என்பதற்காக) இயற்கையிடம் செல்வதில்லை!
 
மாறாக, அதனகத்தே மறைந்துள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற படிவ எரிபொருட்களுக்காகவும், உலோக மூலப்பொருட்களுக்காகவும், பசுங்காட்டு மரங்களை வெட்டிக் கொள்ளையிடவும், இன்னும் பிற வளங்களைச் சுரண்டவும், மொத்தத்தில் பொருளாதார பயன்களுக்காகவும் தான் இயற்கையிடம் செல்கிறோம். இல்லையென்றால், "சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல 'விலையுயர்ந்த' மரங்கள் எரிந்து போயின!"  என்பதாக நாம் சொல்வோமா? காட்டிலுள்ள தொன்மையான அரியவகை மரங்களுக்கு விலை குறிக்கும் முட்டாள்தனம் மனநோய் பீடித்த மனிதர்களின் சமுதாயத்திலிருந்தல்லாமல் வேறெங்கிருந்து வரும்.

புறம் பற்றிய நமது பார்வையைப் போலவே நமது அகம் பற்றிய பார்வையும் புரிதலும் மிகவும் குறுகியதே, மட்டுப்பாடானதே! உண்மையைச் சொன்னால், எந்தப் புள்ளியிலிருந்து அகம் தொடங்க வேண்டுமோ அந்தப் புள்ளியிலேயே நாம் தங்கித் தேங்கிக் கிடக்கிறோம். அப்புள்ளியிலிருந்து உள்முகமாக ஒரு சிறு அடியையும் நாம் இன்னும் எடுத்து வைக்கைவில்லை!

நமது அகம் மிகவும் சராசரியானது, சாமானியமானது, நமக்குப் பிடித்தவை, பிடிக்காதவை, விருப்பு, வெறுப்பு, பொறாமை, பேராசை, தன்னலம், தற்பெருமை, கீழ்மை ஆகிய உள்ளடக்கங்களால் கட்டமைக்கப் பட்டதாகும். உடலின் நச்சரிப்பான தேவைகளைத் தாண்டி உள்ளத்தின் உயர் தேவையை நாம் அறிந்ததில்லை, உணர்ந்ததில்லை.

ஒரு உணர்வற்ற விலங்கிற்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரு விலங்கு தன்னைத்தானே பிரதி நிதித்துவம் செய்யாமல் (அதற்கான வழிவகை இல்லாததால்) அது நேரடியாக முண்டுகிறது, முனைந்து நிற்கிறது. மனித ஜீவிகளாகிய நாமோ நமது முண்டுதலுக்கு முன்புறமாக "நான்" என்கிற ஒரு ஒட்டுச்சீட்டை ஒட்டியுள்ளோம் என்பதுதான் அந்த வித்தியாசம்! அந்த ஒட்டுச் சீட்டிற்குப் பின்னால் இருப்பது 'மனிதன்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு விலங்குதான். அரிஸ்டாட்டில் சொல்லியது போல ஒரு 'சமூக விலங்கு'. அதிலும் கூட மனிதன் தனியே தன்னில் தானே ஒரு சுதந்திரமான விலங்காகவும் இல்லை!

அகத்திற்குள் செல்வதற்கான வழிவகையும் வாய்ப்பும் இருந்தும் மனிதர்கள் அகம் புகுவதில்லை. அகத்தின் ஆழத்தில் ஞானப்பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், அதில் எவருக்கும் நாட்டமில்லை! ஆதலால் அகத்தின் வாயிற்படியிலேயே நாம் தங்கி விட்டோம். இந்தத் தேக்கத்திற்குக் காரணம் புறவுலகமோ, அதன் கவர்ச்சிமிகு அம்சங்களோ அல்ல. மாறாக, நமது உடலின் மீது நாம் கொண்டிருக்கும் அதீதப் பற்றுதலே. அதே வேளையில் உடலும் அதனுடைய அடிப்படையான உயிர்- பிழைத்தலுக்கான தேவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவைகளோ, துறக்கப்பட வேண்டியவைகளோ அல்ல! மாறாக, தவிர்க்கப்பட வேண்டியது நம் உடலுடன் நாம் கொள்ளும் அதீதப் பிணைப்பைத் தான்!

ஏனென்றால், மிக எளிமையானதொரு உண்மை என்னவென்றால் மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல. உடல் அவனது உடமை போன்றதே, அதைப் பேணிப் பராமரிப்பது அவனது கடமைகளில் ஒன்றே தவிர உடலின் ஊழியக்காரனாக அவன் மாறுவது முறையற்றதாகும்.

ஏனெனில், மனிதன் அடிப்படையில் ஒரு அக ஜீவியாவான். அவன் ஒரு உடலைக் கொண்டிருக்கிறான் என்பதைப்போல, சிந்திக்கும் மனத்தையும், தனது இருப்பை நேரே உணரும் சுய-உணர்வையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, சிந்திக்கும் மனம் தான் மனிதன்; சுய-உணர்வு தான் மனிதன்.

"நான்" என்று கூறும் அகந்தை உணர்வானது உண்மையில், தன்னைத்தான் குறிப்பிடுகிறது (குறிப்பிட வேண்டும்) . ஆனால், முற்றிலும் தவறாக இடம் மாற்றி (அல்லது ஆள் மாற்றி) தனது உடலைச் சுட்டுவதான பிறழ்ச்சி தொடக்க நிலையிலேயே துரதிருஷ்டவசமாக நிகழ்ந்து விடுகிறது.

இந்த துரதிருஷ்டத்தின் விளைவாக, நம்மைப்பற்றி நமக்குத் தெரிவதெல்லாம் நமது உடல் மட்டுமே. அதில், நமது உட்புறம் பற்றி நாம் அறிந்ததெல்லாம் பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்பூக்கிகளும், வேறு சில அடிமனத் தூண்டுதல்களும், அவற்றை நிறைவேற்றிக்கொள்வது குறித்து நம்முள் எழும் விருப்பங்களும் மட்டுமே! இவைதான் நம்மைச் செலுத்தி வருகின்றன பகலிலும், இரவிலும்.

மனம் என்பது உடலுடன் சேரவில்லை எனில், உடல் என்பது அதனளவில் ஒரு விலங்கு தான். அவ்வுடலின் ஒரே பிரதானமான,  மையமான முனைப்பான நோக்கம், குறிக்கோள், இலக்கு யாவும் 'சுய-பாதுகாப்பு',  'சுய-பாதுகாப்பு',  'சுய-பாதுகாப்பு', என்பதாக மட்டுமே அமையும்!

ஆனால், உடல் என்பது எத்தகைய "சுயம்"? அது ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? சரி, உடலானது எப்பாடுபட்டாயினும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகவே வைத்துக்கொள்வோம்! ஆதலால்தான் மனித மனமும் உடலின் பாதுகாப்பை சிரமேற்கொண்டு உடலின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது எனக் கொள்வோம். ஆனால், உடலுக்கு வேளை தவறாது உணவளித்து குளிப்பாட்டி சுத்தப்படுத்தி, ஆரோக்கியம் பேணி, எல்லாம் செய்தும் நோயிலிருந்தும், மூப்பிலிருந்தும், முடிவான மரணத்திலிருந்தும் காப்பாற்ற முடியாதெனும் பட்சத்தில், அது எவ்வகையில் உண்மையான, முழுமையான "சுய-பாதுகாப்பு" என்பதாக விளங்க முடியும்? இது ஒரு சுய- தோற்கடிப்பான பிரயத்தனமாகத் தெரியவில்லையா?

உயிருள்ள உடல் அது ஒரு புழுவினுடைய தாயினும், அல்லது ஒரு மனிதனுடையதாயினும், அதை ஏன் பெரு முயற்சி எடுத்துப் பாதுகாக்க வேண்டும்? ஒரு புழுவின் உடலைவிட ஒரு மனிதனின் உடல் சிறப்புடையதா, மேலானதா, மதிப்புடையதா? உடலின் பாதுகாப்பு என்பது மரணம் வரைக்கும் மட்டும்தான் சாத்தியம் என்றால் அது மிகவும் தற்காலிகமானது தானல்லவா? இந்த குறுகிய காலத்திற்கு பாதுகாக்கப்படுவதால் சாதிக்கப்படும் இலக்குதான் என்ன?

உண்மையில் "சுய-பாதுகாப்பு" என்றால் என்ன? எழுபது அல்லது என்பது ஆண்டுகளாக உடலைப்பேணி உயிரைக் காத்து முடிவில் மரணத்திடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் "சுய-பாதுகாப்பு" என்பதா? உடலுக்கு உணவளித்துப் பேணுவதோ, நோய் நொடிகளிலிருந்து காப்பதோ, ஆயுளை நீட்டிக்க பெருமுயற்சி செய்வதோ அல்ல "சுய-பாதுகாப்பு" என்பது!

உயிருள்ள எவ்வொரு ஜீவியின் பிரதான உந்துதல், உத்வேகம், ஊக்கம், யாவும் "சுய-பாதுகாப்பு" அல்லது சுய-தக்கவைப்பு என்கிற ஒன்று மட்டுமே. பிற தேவைகள், ஈடுபாடுகள், செயல்பாடுகள் யாவும் பிரதானமாக இந்த உந்துதலுக்குச் சேவை செய்யும் விதத்திலானவை மட்டுமே. ஒரு புழுவோ, எலியோ, தன்னில் எதை பாதுகாத்திட, தக்கவைத்திட முயல்கிறது? ஒரு புழுவின் 'சுயம்' என்பது அதன் மெல்லுடலா, அல்லது புழுவிற்கும் உணர்வு, ஆன்மா எதுவும் உள்ளதா? தனது எந்தச் சுயத்தைக் காத்திட அப்புழு துடிக்கிறது? தன்னில் எந்தச் சுயத்தைக் காத்திட மனிதனும் துடிக்கிறான்? அதே நேரத்தில், "மரணம்" என்பது நிச்சயம் எனும் நியதி  இருக்கும்போது  "சுய-பாதுகாப்பு" எனும் உந்துதலும் இருப்பது முரண்பாடில்லையா?

அப்படியானால்,  "சுய-பாதுகாப்பு" எனும் உந்துதலின் உண்மையான இலக்குதான் என்ன? உண்மையில், இந்த உந்துதலின் நோக்கமானது எவ்வொரு குறிப்பிட்ட ஜீவியையும் ( அது அமீபாவையோ, எலியையோ, தவளையையோ, இன்னும் மனிதனையோ ) பற்றியதல்ல. மாறாக, அது ஒட்டு மொத்தமாக அனைத்து ஜீவிகளுக்கும், இன்னும் உயிரற்ற சடப் பொருளையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கும் பொதுவானதாகும்.

ஒரு அமீபாவிற்கு, அதன் ஒற்றைச் செல் (Single Cell) உடல் தான் அதன் உடனடிச் சுயம். அதனுடைய உண்மையான இறுதியான சுயம் மிகத் தொலைவான பரிணாம வருங்காலத்தில் உள்ளது!

அந்த இறுதிச் சுயத்தை ஒரு குறிப்பிட்ட அமீபாவால் எட்டமுடியாமல்  போகலாம். அவ்வாறு நேரடியாக எட்டுவதற்கு அதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் பரிணாம வரலாறு காட்டும் உண்மை. ஆனால், மறைமுகமாக அதனால் எட்ட முடியும் என்பதும் அதே பரிணாம வரலாற்றின் உண்மையே! பரிணாமம் என்பது ஒரு "தொடர்- ஓட்டம்" (Relay Race) போன்றது. ஒரு ஜீவி விட்ட இடத்திலிருந்து இன்னொரு ஜீவி அவ்வோட்டத்தை தொடர்கிறது. இன்னொரு ஜீவியாக மாறியது அந்த அமீபா தான்! இவ்வாறு அமீபாவானது தற்போது மனித ஜீவியாக மாறியுள்ளது (அதாவது பரிணாம அவதாரம் எடுத்துள்ளது! ) ஆம், மனிதன் என்பவன், நெடிய பரிணாம ஏணியில் தோன்றிய அனைத்து ஜீவிகளின் ஏகப் பிரதிநிதியாவான்!

ஆக, அமீபாவினால் நேரடியாகவும், உடனடியாகவும் எட்ட முடியாத அதன் மிகத் தொலைவில் அமைந்த இறுதிச் சுயத்தை மறைமுகமாக எட்டும் வகையில் அப்பரிணாமத் தொடர் ஓட்டத்தில் தனது பங்கிற்கான பணியை நிறைவேற்ற வேண்டுமென்றால் அந்த அமீபா தனது உடனடிச் சுயமான ஒற்றைச் செல் உடலை பேணிப் பாதுகாத்திடத்தான் வேண்டும்.

ஏனெனில், படிகள் ஏதுமில்லாத ஏணி என்று ஒன்றிருக்க முடியாது. உயரத்தில் உள்ள ஒரு இலக்கை எட்ட வேண்டுமெனில் அதற்கு ஒரு ஏணி வேண்டும். அதற்கு படிகளும் இருக்க வேண்டும். அத்தகைய பரிணாமப் படிகள்தான் அமீபா, பாரமீசியம், யூக்ளினா, . . . .. புழு, பூச்சிகள், எறும்புகள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என எல்லாமும். ஏன், மனிதனும் அந்த ஏணியின் ஒரு படிதான்; மிகவும் முக்கியமான இறுதிப்படி! ஒப்பற்ற அந்த இறுதி மகா-சுயத்தை அடையும் வழிமுறையில் உதவுவதற்காக மனிதனும், முதலில் தனது மேற்புறச் சுயமான உடலை பேணிப் பாதுகாத்திடத் தான் வேண்டும். அதைவிட அவன் தனது உள்ளார்ந்த அகச் சுயத்தின் நலனைத் தான், பெரிதெனக் கொண்டு, அதை அடைந்திட வேண்டியே அவன் தன்  குறுகிய வாழ்காலம் முழுவதும் (அதை அடைந்திடும் வரை) சிரத்தையுடன் உழைத்தாக வேண்டும். ஏனெனில், மரணத்தைக் கடக்கும் ஒரே வழி உயிரோடிருக்கும் போதே, அழிவில்லாச் சுயமான "ஆன்மா" எனும் தூயப் பேருணர்வை அடைவதொன்றே யாகும்.

மிகவும் விசித்திரமான ஒரு உண்மை என்னவெனில், அழிவிலா ஆன்மா எனும் பேருணர்வுக்கு இட்டுச் செல்லும் ஒரே கதவு, "நான்" எனும் சிற்றுணர்வாகிய நம் அகந்தை-உணர்வு தான். அதுதான் உணர்வின் தொடக்கமும், தலைவாயிலும் ஆகும். அகந்தை மீதான அனைத்துப் பழிகளுக்கும், அவதூறுகளுக்கும் காரணம், அது 'நான்' எனும் மந்திரச்சொல்லைக் கொண்டு, தன்னை முன்னிலைப்படுத்தி, தனது சிற்றுணர்வைக் கடந்து வேறு "மெய்ம்மை" எதுவும் இல்லை என்பது போல, 'தான்-தோன்றித்' தனமாக நடந்து கொள்ளும் மட்டுப்பாடே ஆகும்.

மேலும், அகந்தை-உணர்வு என்பது உணர்வின் ஒரு தொடக்கப் புள்ளியே. உணர்வு-மாளிகையின் மிக இடுக்கமான முன்வாயில் மட்டுமே. அதன் வழியே உட்பிரவேசித்து மேன்மேலும், உணர்வு பெறுவதற்காகத்தான் ( மேன்மேலும் உணர்வில் பெருகி உயர்வதற்காகத்தான்), முதலிடத்தில் உணர்வு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, உணர்வு-மாளிகையின் வாயிற்படியிலேயே தங்கி வசிப்பதற்காக அல்ல.

அதே வேளையில், அனைத்துப் பழிகளையும், அவதூறுகளையும், ஒதுக்கிவிட்டுக் காணும்போது "நான்" எனும் அகந்தை உணர்வின் தனிச் சிறப்பான தன்மைக்கு ஈடாகவோ, மாற்றாகவோ,  இப்பிரபஞ்சத்தில் வேறெதுவுமில்லை! உணர்வற்ற, எங்கும் பரந்து சூழ்ந்திருக்கும் அந்தகாரப் பிரபஞ்சத்தில் முளைத்த உணர்வின் ஒளிப்புள்ளியே அகந்தை என்பதாகும். அது இல்லையெனில், நாமும் தவளைகளைப் போலத்தான் இருப்போம்! மேலும், நாம் "பேருணர்வு" , "பிரபஞ்ச உணர்வு", "பேரான்மா", "கடவுள்" என்றெல்லாம் பிரமாதமாகப் பேசலாம். ஆனால், நமக்கு எளிதில் எட்டக்கூடியதும், நெருக்கமானதும் அகந்தையுணர்வு மட்டுமே. அது இல்லாமல், ஒரு போதும் நாம் பேருணர்வு பற்றியும், கடவுள் பற்றியும் பேசவும் முடியாது. அதில் பேருணர்வை எட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை!

அதே நேரத்தில், அகந்தை உணர்வின் ஒரே பிரச்சினை, பெருங்குற்றம், அது முதலில் தன்னையும், அடுத்து தன்னைக் கடந்த பேருணர்வு நிலையையும் பிரதிநிதித்துவம் செய்வதை விடுத்து, தன்னை புறந்தள்ளி தனது கருவியான உடலை பிரதிநிதித்துவம் செய்திடும் தற்கொலைக்கு ஒப்பான செய்கையே ஆகும்.

ஏனெனில், எந்த உடலும் ஒரு போதும் "நான்" என்று சொல்வதில்லை. ஆனால், மனித அகந்தையோ  "நான்"  என்று மார்தட்டி அறிவிக்கும் வழியில் தலைகீழாக தனது உடலை முன்னிறுத்தி தன்னை பின்புலத்தில் மறைத்துக் கொள்கிறது. இந்த தவறான அடையாளம் தான் அகந்தையின் பெரும் மட்டுப்பாட்டிற்கும், அதன் அழிவிற்கும் காரணமாகும். இந்த அடையாள மாறாட்டம் தான் அதன் மரணத்திற்கும் ஏதுவாகிறது. உடலின் (தவிர்க்க இயலாத) மரணத்தை அகந்தை மனமானது தனது மரணமாகப் பாவித்துக்கொண்டு அல்லலுற்று தனது உணர்வை இழந்து உடலுடன் சேர்ந்து தானும் மாண்டுபோகிறது.

இந்த சாக்காட்டிலிருந்து விடுபடவேண்டுமெனில், அகந்தையானது "உண்மையில் 'தான்' யார்"? என்ற விசாரத்தை யாவற்றுக்கும் மேலாக முதலில் மேற்கொண்டாக வேண்டும்.

அதாவது, அகந்தையானது முதலில் தன்னை (தனது ஆற்றல்களையும், மிக முக்கியமாக தனது மட்டுப்பாடுகளையும்) புரிந்து கொள்ளவேண்டும். உடலுடன், தான் பிணைக்கப் பட்டிருப்பினும், தன்னளவில் தான் ஒரு தனிச்சுயமே என்கிற விசித்திரமான உண்மையை உணர்ந்திட வேண்டும்.

அகந்தை மனம், அல்லது அகந்தை உணர்வானது முதலில் தான் வேறு, தனது உடல் வேறு என்பதை தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டு விழிப்படைதல் வேண்டும். அகந்தை மனம் விழிப்படைய முனையாமல் மேற்சொன்ன வித்தியாசத்தை புரிந்து கொள்ள அதனால் இயலாது. அதாவது அவ்வாறு புரிந்து கொள்வதும் விழிப்படைதலும் ஒரு சேர நிகழ்ந்தாக வேண்டும். அதனையடுத்து அகந்தையுணர்வு தன்னைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபடல் வேண்டும்.

அகந்தை மனம் தான் பயணிக்கும் ஊர்தியான உடலின் உயிர்பிழைத்தலுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் ஒரு புறமிருக்க, அது பிரதானமாக தன்னைப் பற்றிய விசாரத்தில் ஆழ்ந்திட வேண்டும்.

அகந்தையானது வெறுமனே 'நான்', 'நான்' என்று மார் தட்டிக் கொண்டு புறத்தே வலம்வருவதை விடுத்து உண்மையில் "தான் யார்?" என வினவுவதன் வழியாகவும் அல்லது "உணர்வு என்றால் என்ன?" என்ற கேள்வியைக் கேட்பதன் வழியாகவும் ஏற்படுகிற பதிலற்ற "மௌனம்" அல்லது "வெறுமை" போன்றதொரு நிலை தான் உணர்வு ஆகும். அந்த மௌனத்தில், அமைதியில் நிலைத்து ஆழ்ந்திடல் வேண்டும். இவ்வாறு ஒருவர் தன்னுள் ஆழ்ந்திடும் போது அதனால் விளையக்கூடிய அற்புத அக-மாற்றங்களை, விவரிக்கவியலாத அனுகூலங்களை, தனது பிறவியின் இறுதிப் பயனை அடைந்திடுவார்.

அகந்தை மனம் அல்லது உணர்வானது தன்னில் மிக அடிப்படையானதொரு முழுமையான மாற்றத்திற்கு உட்படாமல் அது பேருணர்வை எட்டுவதோ, கடவுளை தரிசிப்பதோ, அல்லது 'இறைவனடி சேருவதோ' எதுவும் இயலாது. பேருணர்வு, பேரான்மா, அல்லது கடவுள் என்பது மனிதனின் அகந்தை உணர்வுக்கு புறத்தே வெளியே எங்கேயும் இல்லை. மாறாக, அகந்தை உணர்வு உட்பட்டாக வேண்டிய முழு மாற்றத்தினால் விளையும் மலர்ச்சியே பேருணர்வு அல்லது கடவுள் என்பதாகும். இந்த முழு-மாற்றம் என்பது, ஒரு கம்பளிப்புழுவானது அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாற்றமடைவதை ஒத்ததாகும்.

மனித உணர்வானது தன்னை முழுவதுமாக புறத்திற்குக் கொடுத்திடாமல், தன்முகமாக, அதாவது உள்முகமாகத் திரும்பி ஆழமடைவதன் வழியே மட்டுமே மேன்மேலும் உணர்வில் வளர்ந்து தனது உய்வை, மீட்சியை, முழுமையை எட்டவியலும்.

எந்த மனிதன் தன் உடலைக் கடந்து தன்னை ஒரு உணர்வாய் உணர்கிறானோ, அதன் தொடர்ச்சியாக அவ்வுணர்வின் உச்சத்திற்கு எழுகிறானோ, அம்மனிதனால் மட்டுமே அகம், புறம் எனும் பிளவை, பிரச்சினையைக் கடக்க இயலும்.

உண்மையில் அகம், புறம் என இரண்டு மெய்ம்மைகள் இல்லை. பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிராகவும் அவை இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போன்று ஒரே மெய்ம்மையின் இரண்டு பக்கங்கள் தான் அகமும் புறமும். அதே வேளையில், ஒரு நாணயத்தின் பக்கங்களைப் போல ஒன்றுக்கொன்று தம் முதுகைக் காட்டியபடி அவை அமைந்திருக்கவில்லை. மேலும், அவை எதிரெதிர் துருவங்களாக நித்திய காலத்திற்கும் அப்படியே தத்தம் நிலையில் நீடிப்பவையும் அல்ல. அவை வெவ்வேறு நிலைகளாகத் தோற்றம் தந்தாலும், உண்மையில் அவை ஒன்று இன்னொன்றாக  மாற்றமடைந்திடும் பரிணாமச்சுற்றில் அமைந்த நிலைகளாகும். புறம் புறமாகவும், அகம் அகமாகவும் என்றென்றும் அவை நிலைபெறுபவை அல்ல!

ஆதியும் அந்தமுமான ஒரே மெய்ம்மை தான், ஒரு விசேட மாற்றத்தினால் புறமாகி; அடுத்து புறம் பிரிந்து அதில் ஒரு பகுதி இன்னொரு பகுதியை உணர்வு கொள்ளும் அகமாகி; அடுத்து அகம் தன்னைத்தானே உணர்வு கொள்ளும் சுய- உணர்வாகி, சுய-உணர்வு  மேன்மேலும் தன்னுள் ஆழ்ந்து முடிவில் அகம், புறம் எனும் இரு நிலைகளிலிருந்தும் தன்னை முழுமையாக மீட்டுக் கொள்ளும் பேருணர்வாகி, தான் தொடங்கி வைத்த சுற்றை தானே முடித்து வைக்கிறது!

ஆதியும் அந்தமுமான மெய்ம்மையான பேருணர்வு என்பது அகம், புறம் இரண்டையும் கடந்த இரண்டுமல்லாத ஒருமையாகும்.

புறம் மற்றும் அகம் பற்றிய நமது வழக்கமான பார்வையை, புரிதலை உடனடியாக நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தியாக வேண்டும்.

நமக்குப் புறத்தே ஒரு உலகம், ஒரு மாபெரும் பிரபஞ்சம் உள்ளது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால், அது நமக்குப் புறம்பானதாக, தொடர்பற்றதாக உள்ளதா?

அதற்கும், நமக்கும் (அகத்திற்கும்) உள்ள தொடர்பு எத்தகையது?

நாம் புறத்தை (புறவுலகை) சார்ந்திருக்கிறோமா அல்லது புறம் நம்மைச் சார்ந்திருக்கிறதா? அல்லது, அகமும், புறமும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா?

அகம் என்பது எத்தகைய தன்மையிலானது? புறம் என்பது எத்தகைய தன்மையிலானது?

அகம், புறம் முறையே அவற்றின் பணி, பாத்திரம் என்ன?

அகம் அதன் சாரத்தில் எதைக்குறிக்கிறது? புறம் அதன் சாரத்தில் எதைக்குறிக்கிறது?  . . . . . என்பன போன்ற கேள்விகள் அனைத்திற்கும் நாம் பதில்களைக் கண்டுபிடிப்பது அவசியமாகும்.

சந்தேகத்திற்கு இடமின்றி புறம், புறவுலகம் என்பது உள்ளது. அதே போல, மறுக்கவியலாத வகையில் அகம் என்பதும் உள்ளது. எவ்வாறெனில், புறம் உள்ளதென நமக்கு அறிவிப்பது நமது அகமே! அகம் என்பது உணர்வே (Consciousness). ஆம், அகத்தின் சாரம் உணர்வே. அகத்தின் பணியும், பாத்திரமும் அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவற்றின் வழியாக முதலில் புறத்தையும், அடுத்து பிரதானமாக தன்னையும் அறிந்து கொள்வதே.

முதலில், புறத்தை ஏன் அறிந்து கொள்ளவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும் என்றால், புறத்தை முதலில் புரிந்து கொள்ளவில்லை எனில், அது நம்மை அகம் நோக்கிச் செல்லவிடாமல் நமது கவனத்தைச் சிதறடித்த வண்ணம் பெரும் தடையாக நிற்கும்! உண்மையைச் சொன்னால், புறமல்ல தடையாக நிற்பது, மாறாக நாம் தான் புறத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லாததுபோல் எதையெதையோ தேடிக்கொண்டு புறத்திலேயே சுற்றித் திரிந்து, தொலைந்து, முடிவில், புறத்திலேயே புதைந்து போகிறோம்!

புறத்தைப் பற்றியதொரு அரிய உண்மை என்னவெனில், அது புறத்திலேயே தங்கியிருக்கவில்லை! புறம் என்பது முற்றிலும் புறமாகவேயில்லை! ஏனெனில், புறமல்ல புறத்தின் உண்மையான முகம். அதன் ஒரு முனை புறத்தே புறமாக உள்ளது; அதனுடைய இன்னொரு முனை மிகவும் முனைப்பாக முன்னேறி, அகமாக மாறி, அகமுகமாகி வெகு காலம் ஆகிறது! நாம் தான் புறத்தின் புதிய முகமான அந்த அகமுகம்!  ஒன்றல்ல, இரண்டல்ல, 825 கோடி அகமுகங்கள்! ஆனால் நாமோ இன்னும் நம்மைப் பற்றிய உணர்வுக்கு வராமல், புறத்தையே நோக்கிக் கொண்டும், புறத்திலேயே சுற்றித் திரிந்து கொண்டும் இருக்கிறோம்.

புறத்தின் சாரமான தன்மை "பொருண்மை"யே (சடத் தன்மையே) ஆகும். ஆனால், சடத் தன்மை, பொருண்மை என்பது மிகத் திடமாகவும், நமது புலன்களுக்குத் தட்டுப் படுவதாகவும் தெரிந்தாலும் அது ஒரு "மாய வஸ்து "வே ஆகும். ஏனெனில், அது வேறொரு நிரந்தரமான, மாறாத, நிலைபேறுடைய மெய்ம்மையின் நிலைகுலைவான மாற்றத்தின் விளைவாக வெளிப்பட்ட நிலையாகும். அதனால்தான், பொருண்மை (சடத் தன்மை) தொடர்ந்து தன்னைக்கடந்து வளர்ந்து செல்வதாக, பரிணமிப்பதாக உள்ளது. பொருண்மையானது தனது சடத் தன்மையிலேயே நிலைத்திருக்கவில்லை; அது ஒரு கட்டத்தில் "உயிர்" எனும் தன்மைக்குள் பிரவேசித்தது! பிறகு ஒரு கட்டத்தில் மனிதனுள் "உணர்வு" எனும் மிக நுட்பமான பரிமாணத்திற்குள் பிரவேசித்துள்ளது. தொடர்ந்து அது உணர்வின் மிகச் செறிவான "முழு-உணர்வு" நிலையை, தனது பொருண்மையை முற்றிலும் கடந்த நிலையை, புத்தர் போன்ற மனிதர்கள் வழியாக அது பல தடவை எட்டியுள்ளது!

புறத்தின் ஒரே நாட்டம், உந்துதல், தேடல் என்பது தனது அசலான முகத்தை, முடிவான அர்த்தத்தை, தனது மூலத்தைத் தேடியடைவதே! துல்லியமாகச் சொன்னால், புறத்தின் ஒரே நாட்டம், இலக்கு, அகமுகமாதல், அகவயமாதல், அதாவது உணர்வுமயமாதலே!

புறத்தின் பணி, பாத்திரம், அதன் இருப்பிற்கான ஒரே நியாயம் அகமயமாதல், உணர்வைத் தேடிச் செல்லுதல் என்பதே தவிர, புறத்திற்கு புறத்தே வேறு வேலை, செயல் நோக்கம் எதுவுமில்லை! (ஆதி )அகத்தின் அதிரடியான "சுய- மாற்றம்" தான் புறம்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, "புறம்" என்பது உள்ளது. அது போல, மறுக்கவியலாத வகையில், "அகம்" என்பதும் உள்ளது. அதாவது புறம் உள்ளதென அறிவது, அறியப்படுத்துவது (நமது) அகமே, மனமே, உணர்வே!

அகத்தின் தொடக்கமும், முடிவும், அதன் சாரமும் உணர்வு தான். மனிதனைப் பொறுத்தவரை, மிகக் குறைவான உணர்வு நிலையான அகந்தை உணர்வில் தொடங்கி, முழு-நிறைவான உணர்வு நிலையை அடைவதொன்றே அகத்தின் ஒரே நாட்டம், தேடல், குறிக்கோள், இலக்கு யாவும். அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவைதான் உணர்வின் செயல்பாடுகள். ஆனால், அகத்தின் இந்த பிரதான நாட்டத்தை, மனிதர்கள் அனைவரின் அகமும் தவறாமல் பின்பற்றிச்செல்வதில்லை!

ஏராளமானோர், கிட்டத்தட்ட 99% பேர் தாம் ஒரு அக ஜீவி என்கிற உணர்வுக்கே வருவதில்லை. இதற்குக்காரணம், வாழ்க்கையுடன் அவர்கள் மிகவும் மேலோட்டமானதொரு தொடர்பில், உறவில் பொருந்தியிருப்பதே! மனித ஜீவிகள் தாம் உயிரோடிருப்பதை மட்டுமே உணர்கிறார்கள். ஆகவே தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு "உயிர் பிழைத்தல்" மட்டுமே "வாழ்க்கை" என்பதாக வாழ்ந்து செல்கிறார்கள்! தமது உடலின் உள்ளமைந்த இயல்பூக்கிகளான பசி, தாகம், பாலுணர்வு, . . . .  ஆகியவற்றின் மூலம் மட்டுமே அவர்கள் வாழ்க்கையுடன் தொடர்பு கொள்கிறார்கள். இன்னும் அவர்கள் உடலின் ஜீவியாக மட்டுமே விளங்குகிறார்கள்; மனதின் உணர்வின் ஜீவியாக எழவில்லை!

ஆனால், அசலான மனித வாழ்க்கை, உயிர்-பிழைத்தலை (Survival) உள்ளடக்கியதே எனினும், அதைக் கடந்தும் செல்கிறது. மனிதர்கள் தங்கள் கைகள், கால்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ, அவ்வாறே மனத்தையும் இன்னொரு உறுப்பாகவே பாவிக்கிறார்கள். ஆகையால், தங்கள் மனத்திற்கு, ( அதாவது தங்களுக்கு) அகப் பரிமாணம் என்ற ஒன்று உள்ளது என்பதை அவர்கள் அறிவதே இல்லை. மேலும், மனத்தின் ஆற்றல்களான சிந்தனை, அறிவு ஆகியவற்றை உயிர்- பிழைத்தலின் தளத்தில் பிரயோகிப்பதற்கு மேல் வேறு எது குறித்தும் அவர்கள் நாட்டம் கொள்வதில்லை, ஆராய்வதில்லை. அவர்களது மனம் இயல்பூக்கிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப் படுவதாகவும், செலுத்தப்படுவதாகவும் மட்டுமே நிரலமைப்பு (Programme)செய்யப்பட்டதாய் விளங்குகிறது. சில சமயங்களில், அவர்களது மனம் ஒரு தானியங்கி எந்திரம் போல இயங்கி, எண்ணிச் சலித்து, அவர்களை அலைக்கழிப்பதாய்  உள்ளது. மேலும், அவர்களது உயிர்- பிழைத்தல்  தேவைகளுக்கான பொருட்கள் யாவும், புறத்தே உலகில் இருப்பதால், உறங்கும் நேரம் தவிர, அவர்கள் எப்போதும் புறத்தை நோக்கியவாறே, கண்காணித்தவாறே உள்ளனர்.

மனித ஜீவிகளான நாம் புறத்தை தவிர்க்கவியலாது. மேலும், புறத்துடன் (சமூகம், இயற்கையுலகத்துடன்) முறையாக தகவமைதல் என்பதும் அவசியமே. ஆனால், ஒரு விடயம் "தவிர்க்கவியலாதது" என்பதற்கும், அவ்விடயத்திற்குள்ளேயே 'சிக்குண்டு உழல்வது' என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது!

உண்மையில், நம்முடைய உயிர்-பிழைத்தலின் (உடலின் தேவைகள், அவற்றிற்கான) பொருட்கள் தான், அவற்றுடன் நாம் கொள்ளும் அளவு மீறிய பிணைப்புத் தான் நம்மை புறத்துடன் கட்டிப்போடுவதாக உள்ளது. நமது சிந்தனையும், ஈடுபாடும் எப்போதும் புற விடயங்களையே, புற விவகாரங்களையே சுற்றிச் சுழல்வதாயுள்ளது.

இந்நிலைமைகளில், மனிதர்கள் தம் உடலையும், அதன் தேவைகளையும் தாண்டி தமது அகத்தையும் மனத்தையும் அதன் தேவைகளையும் உணர்வதில்லையாதலால் அவர்கள் தமது அகம் நோக்கி விழிப்பதில்லை, அகத்துடன் தகவமைதலின் முக்கியத்துவத்தையும் உணர்வதில்லை!

அகத்தின் சாரமான உணர்வின் செயல்பாடுகளான அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவற்றை புறத்தை நோக்கியதாய், புறம் பற்றியதாய் மட்டுமே குறுக்கிவிட முடியாது, கூடவும் கூடாது. ஏனெனில், உணர்வின் முதன்மையான குறிக்கோள், இலக்கு, லட்சியம், யாவும் அதனுடைய முழுமை பற்றியதே.  ஏனெனில், அகத்தின், உணர்வின் உய்வு, மீட்சி, அதன் முழுமையடைதலில் தான் அடங்கியுள்ளதே தவிர புறத்தில் அல்ல!

நாம் நமது உயிர்-பிழைத்தலுக்காக மட்டுமே புறத்தைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நமது உய்விற்காக நாம் பிரதானமாக நம் அகத்தையே சார்ந்திருக்க வேண்டும். அகம் என்பது குறுகியதாக, அதன் தொடக்க நிலையில் சிற்றுணர்வாக விளங்கிடும் வரையில் மட்டுமே அது "நமது அகம்" அல்லது நமது "சொந்த சுயம்", "நான்" எனும் அகந்தை என்பதாய் அமையும்.  அகத்தின் ஆழம் கூடக்கூட, உணர்வு வளர, வளர, அது "நான்" எனும் வரையறைகளைக் கடந்து செல்லச் செல்ல, அது நமது சொந்த அகமாகவோ, உணர்வாகவோ, சுயமாகவோ நீடிக்க இயலாது! காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை மட்டுமே அதன் அடையாளம் "காவிரி" என்பதாய் விளங்கும்; கடலில் கலந்த பிறகு, அது காவிரி அல்ல 'கடல்' என்பது தான் அதன் புதிய அடையாளம்.

தன்னை உண்மையிலேயே அறிகிற, உணருகிற ஒரு மனிதனுக்கு அன்னியமாக, புறத்தே யாதொரு பிரபஞ்சமும் இல்லை! பிரபஞ்சம் என்பது அவனைப் பொறுத்தவரை அவனது 'முதுகுப்பகுதி' யாக மாறிவிடுகிறது. பிறரைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் என்பது அவர்களுக்கு ஒரு பெரும் சிறையே!

தன்னையறிதல், தன்னை உணர்தல் என்பது பிரபஞ்சத்தையும், அனைத்தையும் உள்ளடக்கியதொரு முழுமையாக தன்னை உணர்வதே!

இத்தகைய பார்வையும், புரிதலும் பலருக்கு அறிவு கலங்கிய பைத்திய நிலையாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் தோன்றலாம்.

ஆனால், "அணுத்துகள்களின் தொகுப்பே மனிதனும் யாவும்!""உலகம், பிரபஞ்சம் என்பது பொருண்மையின் (சடப் பொருளின்) மாபெரும் கட்டமைப்பே, வெளிப்பாடே!". "மனிதன் என்பவன் உயர் வளர்ச்சியடைந்த ஒரு விலங்கே!". "மனிதனது உணர்வு என்பது அவனது மூளையில் நிகழ்ந்திடும் மின்-ரசாயண வினையின் ஒரு விளைவே!"  என்றெல்லாம் காணும் தங்களின் மூளையின் பகுத்தறியும் திறனையும், இன்னும் காரண காரியத் தொடர்புபடுத்தி, அறிகிற கூர்மையும் கொண்ட பகுத்தறிவுவாதிகள், பொருள்முதல்வாதிகள், விஞ்ஞான வாதிகள் யாவரும் உண்மையில் தங்கள் வாதங்களை, புரிதல்களை  தங்கள் கால் கட்டைவிரல்கள் மூலம் தரையைக் கீறிக் கிளரி அகழ்ந்தெடுப்பதில்லை! மாறாக, தங்களது மூளையில் வெளிப்படும் - சோதனைக் குழாயில் இட்டு பரிசோதிக்க இயலாத; இருந்தும் இல்லாதது போலத் தெரிகிற, விளங்கியும் விளங்காப் புதிராகத் திகழும் அவர்களது சிற்றுணர்வின் உதவியினால் எட்டப்பட்ட தவறான, மட்டுப்பாடான கருத்துக்களே!

இந்நிலையில், தங்களது பகுத்தறிவுப் பூர்வமான கூற்றுக்களே, கண்டுபிடிப்புக்களே உண்மையானது, சரியானது என்று நம்பிக்கொண்டிருப்பதற்கும், மற்றவர்களையும் நம்பச் சொல்வதற்கும் யாதொரு அடிப்படையும் இல்லை!

பௌதீகச் சடப் பொருளை "கடவுளாக" வும், "பரம்பொருளாக"வும் பாவித்திடும் இவர்களுக்கு உணர்வின் மகத்துவத்தைப் புரியவைப்பது இயலாத காரியமே! உலகம், பிரபஞ்சம் இருக்கலாம், ஆனால், உணர்வு இல்லையேல், எதுவும் இல்லை! உலகம் இருக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியது - எப்போதெனில், அதை ஆச்சரியத்துடன் நோக்குகிற மனித உணர்வு  இருக்கும்போது தான்! அதைவிட ஆச்சரியமானது ஒரு ஜீவி "நான் இருக்கிறேன்!" என்று தன்னைத்தானே உணர்ந்தறியும் போதுதான் நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக "தானே இப்பிரபஞ்சமும் எல்லாமும்!" என்று நேரடியாக உணர்ந்தறிவதே இறுதி ஆச்சரியமும், அற்புதமும்! (இதையெல்லாம் சொல்லக் கேட்பதும், வாசித்தறிவதும் அற்புதத்தின் தொடக்கம் ஆகும்!).


மா.கணேசன்/ நெய்வேலி
Conceived earlier and completed on 13.01.2016 and Uploaded on 05-10-2024.
*
////////\\\\\\\\////////\\\\\\\////////\\\\\\\\////////\\\\\\\////////\\\\\\\\////////\\

Friday, 27 September 2024

ஞானத்தின் திறவுகோல்




 

 

 

 

 

 

 

இக்கட்டுரை எழுதப்பட்டதற்கான காரணம்:
 

ஆன்மீகம், ஞானம் என்கிற போர்வைகளில்
சில தனி நபர்களும், குழுக்களும், அமைப்புகளும்,
ஆசிரமங்களும் மக்களை மனோவசியப்படுத்தியும்,
மூளைச் சலவை செய்தும் - முடிவில்
சாதாரணமாக லௌகீகத்திலும் இல்லாமலும்
செம்மையாக ஆன்மீகத்திலும் இல்லாமலும் செய்து
மக்களை அவர்களது சொந்த மனத்திற்குள்ளேயே
ஒருவகைப் பிரமையில் சிறைப்படுத்தப்படுவது
நிகழ்ந்தேறி வருகிறது.

சிலர் ஆன்மீகத்தை பெரும் வியாபாரமாகவே
மாற்றிவிட்டனர் - யாதொரு முதலீடும் இல்லாமலேயே!
சிலர் 'உடனடி காப்பி' போல 'உடனடி ஞானம்' எனவும்
'எளிதான ஞானம்' எனவும் சொல்லி ஞானமடைதலை
ஒரு சில சூத்திரங்களுக்குள் அடைத்து -  சிந்திக்கின்ற
ஒரு சிலரையும் சிந்திக்க விடாமல் சிதறடித்து
முடமாக்கி வருகின்றனர். ஆக, இத்தகைய அஞ்ஞானப்
போக்குகளையும் ஆன்மீக விரோதப் போக்குகளையும்
இனம் காட்டி எச்சரிக்கும் வகையிலேயே இக்கட்டுரை
எழுதப்பட்டுள்ளது. இவ்வகையிலேயே இக்கட்டுரையின்
முக்கியத்துவம் எழுகிறது.

                                                      ///////*\\\\\\\


ஞானமடைதலை எவரும் எவருக்காகவும் எளிதாக்கிடவும் முடியாது;
அதை மேலும் கடினமானதாகவும் ஆக்கிட முடியாது.


                                                              \./
                                                              /\

ஞானமடைதலை 'எளிது'  'கடினம்' என்கிற சொற்களின் வழியே அணுக முடியாது. அது எளிதாக இருந்திருந்தால் நம்மைச் சுற்றிலும் ஏராளமானோர் ஞானிகளாக மலர்ந்திருக்க வேண்டுமே - அவ்வாறு இல்லையே? அது கடினமானது என்றால் இதுவரை ஒருவருமே ஞானமடைந்திருக்க முடியாதல்லவா? ஆனால், நம்மில் கோடியில் ஓரிருவர் ஞானமடையவே செய்கிறார்கள். ஏனெனில், கோடியில் ஓரிருவர் மட்டுமே சிந்திக்கிறவர்களாக, வாழ்க்கையின் உட்-பொருளைத் தேடுபவர்களாக, தமது உணர்வுக்கு விழித்தவர்களாக உள்ளனர். பிற அனைவரும் வாழ்க்கையின் மேற்புறத்துப் பொருட்களைத் தேடிக்கொண்டு எலிகளையும், தவளைகளையும் போல் வாழ்ந்து செல்கிறோம்.

முதலிடத்தில், "ஞான நிலை" அல்லது "ஞானமடைதல்" என்பது உள்ளதுதான் - என்றாலும் அந்நிலையை நேரடியாக அணுகவோ, அடையவோ இயலாது. எதையோ ஒன்றை பயிற்சி செய்வதன் வழியாகவோ, யாதொரு யுக்தியாலோ ஞானத்தைப் பெற முடியாது.

ஏனெனில், ஞான நிலையை அடைவதற்குரிய அடிப்படை, நோக்கம், காரணம், தேவை, அகத் தூண்டுதல், ஆகியவை எல்லோரிடமும் இயல்பாய் அமைந்திருப்பதில்லை. அதோடு, அது இயல்பான விடயமோ; மிக இயல்பாக தாமே எழக்கூடிய ஒன்றோ, அல்ல! ஞானமடைதல் என்பது ஒருவரது இயல்பில், அமைப்பில், இயல்பாய் எழாத, ஒருவரது இயல்பை மீறிய -மிகக் குறிப்பானதும், பிரத்தியேகமானதுமான ஒரு அழைப்பு அல்லது தேவைக்கான பிரத்தியேகமான ஒரு பதில் (அளிப்பு) ஆகும்.

"'ஞானமடைதல்' என்பது உயரியதொரு ஆன்மீக அனுபவம், அது மிக அழகானதொரு நிலை, அதை அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும்; நினைத்த காரியங்களை சாதிக்கக்கூடிய ஆற்றல் கைகூடும் . . . ." என்றெல்லாம் பிறரிடமிருந்து, ஞானம் பற்றி தவறாகத் தெரிந்துகொண்டு, உடனே, "எனக்கும் ஞானம் வேண்டும்!" என பேராசைப்பட்டு ஏதாவதொரு ஆன்மீக அமைப்பில், மார்க்கத்தில் சேர்ந்து கோண்டு ஏதேதோ பயிற்சிகளையெல்லாம் செய்துவருவதால் வந்திடாது.

மேலும், உணவுப்பழக்கத்தை மாற்றியமைப்பதாலும், உடையலங்காரத்தை மாற்றிக்கொள்வதாலும், கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வதாலும், பலவித குட்டிக்கரணப் பயிற்சிகளையும், வினோதப் பெயர்களைக் கொண்ட மூச்சுப் பயிற்சிகளையெல்லாம் செய்து வருவதால் ஞானம் வந்திடாது.

மேலும், சமூகத்தின் பார்வையில் 'நல்லவர்' என ஒருவர் பெயரெடுத்தாலும், அல்லது கெட்டுப்போனாலும் ஞானம் வராது! ஒருவரிடம் எல்லா சௌகரிய சம்பத்துக்களும், செல்வமும் உள்ளன; அதோடு சேர்த்துக் கொள்ள ஞானமும் வேண்டும் என விரும்பினாலும், என்ன விலை கொடுத்தாலும் ஞானம் கிடைக்காது. அல்லது உலகியல் வாழ்வில் தோல்வி கண்ட ஒருவர் புகலிடம் தேடியும், ஞானத்திற்கு, அல்லது ஆன்மீகத்திற்குச் செல்ல முடியாது.

உங்களது சொந்த வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகள், கவலைகள் இருக்கலாம். ஆக, கவலைகளுக்கெல்லாம் தீர்வாக நீங்கள் ஞானத்தை விரட்டிச் செல்ல முடியாது. வாழ்க்கைக்கு நீங்கள் அளிக்க வேண்டிய முறையான பதிலளிப்பைச் செய்யாமல், வாழ்க்கை என்றால் என்னவென்று ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் - புரிதலின் வழிச் செல்லாமல் ஞானத்தின் வாலைக் கூட பிடிக்க முடியாது.

உங்களுடைய கனவுகளும், எதிர்பார்ப்புகளும், பேராசைகளும், நிறைவேறாததால் வாழ்க்கை உங்களுக்கு வெறுத்துப் போயிருக்கலாம்! நீங்கள் விரக்தியடைந்திடலாம். ஆனால், வாழ்க்கையின் எதிர்பார்ப்பையும், அதன் அசலான நோக்கத்தையும் சிறிதும் கவனியாமல் வாழ்ந்து சென்றால் வெறுப்பும், விரக்தியும் தான் விளையுமே தவிர ஞானம் விளையாது!

முதலில், ஆன்மீக நாட்டம், ஞானத் தாகம் என்பது ஒவ்வொருவரின் உள்ளிருந்து தோன்றிட வேண்டும், இதன் அர்த்தம், ஒவ்வொருவருக்குள்ளும் ஆன்மீக நாட்டத்தை தூண்டுவதற்கான மையம் (தூங்கிக்கொண்டு ) உள்ளது; அதைதட்டி எழுப்பினால் போதும் என்பதல்ல. ஏனென்றால். பசி, தாகம், பாலுணர்வு, உறக்கம் ஆகியவற்றைத் தூண்டுவதற்கு உணர்த்துவதற்கு வெவ்வேறு மையங்கள் உள்ளதைப் போல ஆன்மீக நாட்டத்தை, ஞானத் தாகத்தை, மெய்ம்மைத் தேடலை தூண்டுவதற்கு யாதொரு மையமும் மனிதனுள் இல்லை!

ஆம், வாழ்க்கையின் அர்த்தம், உண்மை, மெய்ம்மை ஆகியவற்றைத் தேடும்படியாகத் தூண்டுவதற்கான மையம் ஏதும் இல்லாத நிலையில் ஒருவர் அவற்றைத் தேடுகிறார் எனும் பட்சத்தில் உடனே அவருள் (அவரது உணர்வில்) புதிதாக ஒரு "மையம்" உருவாகிறது. ஆனால், அந்த மையம் தொடர்ந்து தக்கவைக்கப் பட வேண்டும். அதற்கு அவர் உண்மையை, மெய்ம்மையை அறிந்திடுகிற விசாரத்தில் தீவிரமாகவும், பேரார்வத்துடனும், முழுமையாகவும் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு புதிதாகத் தோன்றிடுகிற அந்த மையத்தை நீங்கள் ஆன்மா, கடவுள், பிரபஞ்ச உணர்வு, முழு-உணர்வு, இறுதி மெய்ம்மை . . . . என்றெல்லாம் அழைக்கலாம்.

இவ்வாறு யாதொரு தூண்டுதலும், தூண்டுதலுக்கான மையமோ எதுவும் இல்லாமலேயே வாழ்க்கையின் உட்-பொருளான அர்த்தத்தை, உண்மையைத் தேடுவதற்கு பெயர்தான் "விழிப்பு" அல்லது "உணர்வுக்கு வருதல்" என்பதெல்லாம்.

ஒரு வேளை, தூண்டுதல் எதுவும் இல்லாததன் காரணத்தினாலேயே நீங்கள் உணர்வுக்கு வரவில்லை; விழிப்படையவில்லை என போலியாக வருத்தப்பட வேண்டாம்! உங்களுக்கு தூண்டுதல்கள் வேண்டுமெனில், உங்களைச் சுற்றியுள்ள -  இயற்கை, செம்மண் பூமி, நீர் நிலைகள், நீல வானம், சூரிய உதயம், பறவைகளின் பாடல், பசும் மரங்கள், வண்ணப் பூக்கள், இளந்தென்றல், இரவு நட்சத்திரங்கள், நிலா . . . . என இவை யாவும் நீங்கள் விழிப்பதற்குப் போதுமான தூண்டுதல்கள் தான்! ஏன், உங்களது இருப்பே - "நீங்கள் இருக்கிறீர்கள்!" என்பதே விழிப்பதற்கும், உணர்வுக்கு வருவதற்குமான பிரதான அம்சமாகும்!

ஆனால், மனித ஜீவிகளாகிய நாம் இன்னமும் தூண்டுதல்களுக்குப் பதிலளிக்கும் விலங்கு ஜீவிகளாகவே விளங்குகிறோம் - இன்னமும் நாம் உணர்வுக்கு வரவில்லை! நமக்கு உணர்வு இருக்கிறது; அது பரிணாம இயற்கை நமக்களித்த பரிசு! ஏதாவதொரு வகையில், நமக்கு உணர்வு உள்ளது என்பதை நாம் உணரவே செய்கிறோம் - அதை, அந்த உணர்வை புற விவகாரங்களில் செலுத்தி (மேலோட்டமான) பயன்களை அடையவும் செய்கிறோம்; ஆனால், நாம் "ஒரு உணர்வு தான்!" என்கிற உணர்வுக்கு மட்டும் இன்னமும் வரவில்லை! அதாவது, "உணர்வுதான் மனிதன்!" என்கிற உண்மைக்கு இன்னும் நாம் விழிக்கவேயில்லை!

உண்மையில்,  ஞானம் ஞானமடைதல் யாவும் மனிதன் உணர்வுக்கு வருவதையே சார்ந்திருக்கின்றன. வேறு சொற்களில் சொன்னால், இருப்பிற்கு மனிதன் அளிக்கின்ற முழுமையான பதிலளிப்பின் விளைவே  ஞானம், ஞானமடைதல் ஆகும்! இருப்பிற்கு முறையாக, முழுமையாக பதிலளிக்காமல் நேரடியாக ஒருபோதும் ஞானத்தை அணுகவோ, அடையவோ முடியாது!

மனித ஜீவிகள் புற-இருப்பு (இயற்கை, உலகம்) நோக்கி மட்டும் விழித்தால் போதாது. இந்த விழிப்பை நாம் "புற-விழிப்பு" அல்லது "முதல்-விழிப்பு" என்றழைக்கலாம். இந்த முதல் விழிப்பையடுத்து மனிதன் உடனடியாக தனது சொந்த இருப்பு நோக்கியும் விழித்தாக வேண்டும். இதை நாம் "அக-விழிப்பு" அல்லது "இரண்டாவது விழிப்பு" என்றழைக்கலாம். இந்த இரண்டாவது விழிப்பு தான் மனிதனை மனிதனாக்கும் விழிப்பு ஆகும்.

தொடர்ந்து, இருப்பிற்கு எவ்வாறு முறையாகவும், முழுமையாகவும் பதிலளிப்பது என்பதைப் பற்றி பார்ப்பதற்கு முன் ஞானமடைதல் என்பதன் பொருள் விளக்கத்தைப் பார்ப்போம். ஆம்,  ஞானம் ஞானமடைதல் என்பது மிகவும் நேரடியாக புரிதலுடன் தொடர்புடையதாகும். ஆக, ஞானமடைதல் என்பது ஞானத்தை, புரிதல் நிலையைக் குறிப்பதாகும். புரிதல் எனும்போது அது எதைப் பற்றிய புரிதல் எனக்கேட்டால், அது வாழ்க்கையைப் பற்றிய புரிதலே. வாழ்க்கையை அதன் சாரத்தில் புரிந்து கொள்ளும் நிலையே ஞான நிலை அல்லது ஞானமடைதல் என்பதாகும்.

ஆனால், புரிதல் என்பது 'இரண்டும் இரண்டும் நான்கு' என்பதைப் போன்ற கணிதவகைப் புரிதல் அல்ல. அது மிகவும் மேலோட்டமானது. அதாவது கணிதவியல் புரிதலைக் கொண்டு நாம் பலவகைப்பட்ட தொழில்நுட்பப் பயன்களைப் பெறலாமே தவிர கணிதவியல் புரிதலோ, அல்லது விஞ்ஞானவகை, தத்துவ வகை, மற்றும் கவிதை வகைப் புரிதலோ எதுவும் மனித-உணர்வை (உயர்)மாற்றமுறச் செய்திடாது. ஆம், புரிதலிலும் படிநிலைகள் உள்ளன. ஆனால், நாம் இங்கு சொல்கிற வகையில், வாழ்க்கையை அதன் சாரத்தில் புரிந்துகொள்கிற வழிமுறையில் மனிதனின் உணர்வானது மாபெரும் மாற்றத்திற்கு உட்படுவதாகிறது. அதாவது, ஞானம் என்பது நேரடியாக புரிதலுடன் தொடர்பு கொண்டதாயுள்ளது. அதே வேளையில், புரிதல் என்பது நேரடியாக உணர்வின் படிநிலைகளுடன் தொடர்பு கொண்டதாயுள்ளது. ஆம், உணர்வு இல்லாமல், புரிதல், அறிவு என்பதில்லை. உணர்வின் வெவ்வேறு தளங்கள் அல்லது படிநிலைகள் வெவ்வேறு தரத்திலான புரிதலைத் தருகின்றன.

நாம் குறிப்பிடும் ஞானம் என்பது இறுதிநிலைப் புரிதலாகும். இந்த இறுதியான அல்லது சாரமான புரிதலை உயரிய உணர்வு நிலை மட்டுமே அளிக்க முடியும். ஆம், ஞானமடைதல் என்பது உண்மையில் இறுதியான முழு-உணர்வு நிலையை அடைதலே. மனித ஜீவிகளான நமக்கு பரிணாம இயற்கை அளித்துள்ள உணர்வானது மிக மெல்லிய ஆரம்ப நிலை உணர்வு மட்டுமே. இந்த சிற்றுணர்வைக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக, "நான்", "நான்" என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உலவி வருவதைத்தவிர, இந்த "நான்" என்பது எத்தகைய மெய்ம்மை, அது எத்தகைய பரிணாம உச்சத்தை, முழுமையை அடையக்கூடும் என்பதை ஒரு சில ஞானிகளைத்தவிர பிற மனிதர்கள் அடைந்தபாடில்லை. அந்தத் திசையில் சிறிதும் நாம் சிந்திக்கவும் இல்லை.

ஆகவேதான், மனிதன் இயல்பாகப் பெற்றுள்ள இந்த அரையுணர்வை அல்லது சிற்றுணர்வை "அகந்தை உணர்வு" என்கிறோம். ஆயினும், இந்த அகந்தை-உணர்வும் இல்லையெனில், மனிதன் ஒரு எலியைப் போலவோ, தவளையைப் போலவோ தான் இருப்பான். ஒரு வகையில், உணர்வு இருந்தும் நம்மில் பெரும்பாலான மனிதர்கள் இன்னமும் எலியையும் தவளையையும் போலத் தான் வெறுமனே உயிர்- பிழைத்தலை நடத்திச் செல்கிறோம்.

ஏனெனில், நாம் உயிரோடிருக்கிறோம் என்பதை மட்டுமே நன்கு அறிகிறோம், உணர்கிறோம். ஆகவே, தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னென்ன வெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்கிறோம். ஆனால், "நாம் எதற்காக உயிர் வாழ்கிறோம்?" "வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு யாது? வாழ்க்கை என்றால் என்ன? . . ." என்றெல்லாம் நம்முள் கேட்பதில்லை, சிந்திப்பதில்லை. ஆனால், வாழ்க்கை என்றால் என்னவென்று அறியாமலேயே வாழ்ந்து செல்வதும், மரணம் என்றால் என்னவென்று அறியாமலேயே மாண்டு போவதும், விலங்கினத்துக்குரிய விதியாகும். உணர்வுள்ள மனிதர்கள் இவ்வாறு வாழ்ந்து செல்லலாகாது என்பதை உணருவதேயில்லை. இந்நிலையில் நம்மில் பலர் ஞானமடைதலைப்பற்றி பேசுகிறோம், கனவு காண்கிறோம்.

சிலர், 'எளிய ஞானம்',  'உடனடி ஞானம்' என்றெல்லாம் தத்துப்பித்து என்று உளறிக்கொண்டு புத்தர், ரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தி  . . . . போன்ற உண்மையான ஞானாசிரியர்களையெல்லாம் குறை கூறி, கொச்சைப்படுத்தி வருகின்றனர். ஞானமடைதலை ஒரு ஒற்றை யுக்தியின் மூலம் சாதித்துவிடலாம் எனவும் பிதற்றி வருகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி ஞானத்தை குறுக்குவழியில் யாதொரு பயிற்சியாலோ, யுக்தியாலோ அணுகவோ, அடையவோ முடியாது. அதற்கு யாதொரு வழியுமில்லை. மாறாக, வாழ்க்கை  என்றால் என்ன என்று தனக்குள்ளேயே கேட்பதற்குரிய "விழிப்பு" எப்போது ஒருவருள் துளிர்க்கிறதோ அப்போது அக்கேள்வியுடன் தொடரும் இடையறாத விசாரத்துடன் மட்டுமே அசலான மனித வாழ்க்கையும், உண்மையான ஆன்மீக நாட்டமும், ஞானத் தேடலும், ஞானமடைதலும் தொடங்குகின்றன. அதற்கு முன்னர் ஒருபோதும் வேறு வழிகளில் தொடங்குவதில்லை!

புரிதல்தான் வாழ்க்கை, ஞானம் எல்லாம்; குறிப்பாக, 'வாழ்க்கை  என்றால் என்ன' என்று புரிந்து கொள்வதுதான் வாழ்க்கை என்பது பலருக்கு பெரிதும் வினோதமாகத் தோன்றலாம்! ஆனால், அதில் வினோதமும் இல்லை; விபரீதமும் இல்லை! எலி, தவளை வேண்டுமானால், தமது வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் வாழ முடியும்! ஆனால், சிந்திக்கும் திறன் கொண்ட மனத்தை, மூளையைக் கொண்ட மனிதன் தனது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் எப்படி மனிதத் தரத்திற்குரிய வாழ்க்கையை வாழ முடியும்? ஆக, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பதுடன் தான் உண்மையான ஆன்மீக நாட்டம், ஞானத் தேடல் யாவும் தொடங்குகின்றன. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டு நேரடியாக ஞானத்தைத் தேட முடியாது. அப்படியொரு ஞானம் வாழ்க்கைக்கு வெளியேயோ, வேறெங்கேயோ எதுவுமில்லை.

வாழ்க்கை பற்றிய கேள்வி -  நோய், மூப்பு, மரணம் ஆகியன பற்றிய கேள்விகள் புத்தருக்குள் எழுந்ததனாலேயே அவர் அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையையும், அதனுடைய சூழலையும் சேர்த்தே உதறிவிட்டு (துறந்துவிட்டு அல்ல!) வாழ்க்கை எனும் புதிரை விடுவிக்கும் பொருட்டு காட்டிற்குச் சென்றார். வாழ்க்கை பற்றிய கேள்வி இல்லாமல், புத்தரும் இல்லை; அவருடைய ஞானமும், நிர்வாணமும் இல்லை!

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் செயல்பாடு தான் உண்மையான வாழ்தல் ஆகும். இதற்குமாறான பிற நடைமுறை விவகாரங்கள், பிற நாட்டங்கள், சொந்த லட்சியங்கள், இலக்குகள் யாவும் உயிர்-பிழைத்தல் எனும் கோளத்தை மட்டுமே சேர்ந்தவை. ஏனெனில், வாழ்க்கை என்பது உணவு, உடை, உறையுள் மற்றும் உறவுகள் குறித்த விவகாரங்கள் அல்ல. அது ஒரு அற்புதப் புதிர், அப்புதிரை விடுவிப்பதே உண்மையான வாழ்தலும், வாழ்க்கையின் மிக அசலான உன்னத இலக்கும் யாவும் ஆகும்.

இப்போது, இருப்பிற்கு (வாழ்க்கைக்கு) எவ்வாறு முறையாக, முழுமையாக பதிலளிப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.

பொதுவாக, நாம் அனைவரும் மிக இயல்பாக பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்பூக்கிகளுக்கு பதிலளிப்பதையே வாழ்க்கை என நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளோம். பிரதானமாக, இயல்பூக்கிகளின் வழியாக மட்டுமே இருப்பை, வாழ்க்கையை அணுகி வந்துள்ளோம். "அப்படியானால், நாம் நமது சிந்திக்கும் திறனை, அறிவை பயன்படுத்தவேயில்லையா? என சிலர் கூக்குரலிடலாம்! இதற்குப் பதில், பயன்படுத்தியுள்ளோம், இன்னும் பயன்படுத்தியும் வருகிறோம். ஆனால், மேலே குறிப்பிட்ட (விலங்கினங்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான) இயல்பூக்கிகளின் வாழ்க்கைக்குச் சேவை புரியும் விதத்தில் மட்டுமே நாம் நமது அறிவை, சிந்தனையை பயன்படுத்திவருகிறோமே தவிர வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ளும் விடயத்தில் பயன்படுத்துவதேயில்லை.

நமக்குப் பசிக்கிறது, உணவு உட்கொள்கிறோம். இவ்வாறு, உணவு, உடை, உறையுள் ஆகியவற்றைப் பெறுவதற்காக உழைக்கிறோம், உத்தியோகத்தை தேடுகிறோம். உத்தியோகத்திற்காக உயர் பதவிக்காக, உயர் சம்பளத்திற்காக உயர் கல்வி கற்கிறோம். சக-மனிதர்களுடன் கடுமையாக போட்டியிடுகிறோம். . . . பாலுணர்வு தோன்றியதும், இணையைத் தேடி உறவு கொள்கிறோம். உறக்கம் வந்ததும், அதற்கிணங்கி உறங்கிவிடுகிறோம். உறங்கி எழுந்ததும், மீண்டும் அதே சுற்றுத்தான் தினம் தினம். இவ்வாறு இயல்பூக்கிகளுக்கு பதிலளிப்பது என்பதே இருப்பிற்கு (வாழ்க்கைக்கு) அளிக்கிற முழுமையான பதிலளிப்பாகிவிடாது.

ஏனெனில், நாம் விலங்கு ஜீவிகள் அல்ல - இயல்பூக்கிகளின் வழியாக மட்டுமே வாழ்க்கையை அணுகுவதற்கும், பதிலளிப்பதற்கும். நம்மிடம் சிந்திக்கும் திறனுள்ள மூளையும், மனமும் உள்ளது. முக்கியமாக, " நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்!" என்று சொல்லுகிற உள்-அமைந்த சுயவுணர்வு நமக்கு உள்ளது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ( நமது பசிக்கு உணவு உட்கொள்வது போல) வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்திடவும், ஆழமாகப் புரிந்து கொள்ளவும், உணர்வுப்பூர்வமாக வளர்ந்திடவும் (பரிணமித்திடவும்) வேண்டும். ஆக, இவ்வாறு அறிதல், புரிதல் செயல்பாட்டின் வழியாக அதற்குரிய சிந்தனை, அறிவு ஆகிய கருவிகளைக்கொண்டு வாழ்க்கையை அறிதல் பூர்வமாக (Cognitive)அணுகுவதே வாழ்க்கைக்கு, இருப்பிற்கு முறையாக பதிலளித்தல் என்பதாகும். இதை புரிதல் வழி, அல்லது விசார வழி என்கிறோம்.

இந்தப் புரிதல் பூர்வமான அணுகுமுறையை, பதிலளிப்பை ஒதுக்கிவிட்டு வெகுபலர் செய்வதுபோல தியானம், யோகா, பிரணாயாமா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம், ஞானத்தைப் பெற முடியும் என்றால், எலிகளும், தவளைகளும் கூட இப்பயிற்சிகளின் மூலம், ஞானத்தை அடைந்துவிடக்கூடும் எனலாம். ஆனால், அறிதல் பூர்வமான, புரிதல் பூர்வமான அணுகுமுறையில்லாமல் எலிகள், தவளைகள் மட்டுமல்ல, மனிதர்களும் ஞானமடைய இயலாது.

ஆனால், இருப்பிற்கு (வாழ்க்கைக்கு) பதிலளித்தல் எனும் விடயத்தில் இருப்பு அல்லது வாழ்க்கையானது மனிதனிடமிருந்து அப்படி எதை பதிலாகக் கோருகிறது என்றால், உணர்வைத்தான் -இன்னும் சொல்லப் போனால், முழு-உணர்வைத் தான் அது கோருகிறது. ஏனெனில், முழு-உணர்வு தான் பிரபஞ்ச இருப்பு எனும் மாபெரும் பரிணாம இயக்கத்தின் முழுமையும், அடைவிடமும் ஆகும்.

பரிணாம இயற்கை அல்லது இருப்பானது மனிதனுக்கு சிற்றுணர்வை அளித்துள்ளதன் உண்மையான நோக்கம் 'சிற்றுணர்வு' எனும் சிறிய மீனைப் போட்டு, 'பேருணர்வு' அல்லது 'முழு-உணர்வு' எனும் பெரிய திமிங்கிலத்தை எட்டிப்பிடிப்பதற்கே!

ஆக, மனித ஜீவியானவன் முதல் நிலையில், இயல்பூக்கிகள் அல்லது புலன்களின் வழியாக பதிலளிப்பதுடன் நில்லாமல், இரண்டாவது கட்டமாக, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் நோக்கில் மனம், சிந்தனை, அறிவு ஆகிய கருவிகளைக் கொண்டு பதிலளிப்பதுடன்; மூன்றாவது கட்டமாக ஒருவர் தமது இருப்பை, "தாம் இருக்கிறோம்!" எனும் நிஜத்தை, வெகு சுலபமாக எடுத்துக்கொண்டு உடனேயே உயிர்-இருப்பின் அன்றாடத் தேவைகளைத் தேடிச் செல்வதையே வாழ்க்கை எனக் கொண்டுவிடாமல், "தாம் இருக்கிறோம்!" எனும் நிஜத்தை, சுய-உணர்வை மிக ஆழமாக உணர்வு கொள்வதையே இருப்பிற்கு முழுமையாக பதிலளிப்பது எனக் குறிப்பிடுகிறோம்.

இவ்வாறு, ஒருவர் "தாம் இருக்கிறோம்!" எனும் அற்புதப் புதிரை நின்று நிதானித்து தரிசிப்பாரெனில், அதன் தொடர்ச்சியாக அவர் தமது உணர்வின் கருவிகளான மனம், சிந்தனை, அறிவு ஆகியவற்றைக்கொண்டு வெறுமனே வாழ்க்கையின் அன்றாட மேற்புறத் தேவைகளை (உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை) மட்டுமே தேடிக் கொண்டிராமல், வாழ்க்கையின் உட்-பொருளையும் (வாழ்க்கையின் அர்த்தம், சாரமான உண்மை, குறிக்கோள், இலக்கு ஆகியவற்றையும்) தீவிரமாகத் தேடத் தொடங்கிடுவார். இவ்வகையில், அறிதலும், உணர்வும் இணைந்து செல்வதாகின்றன. அதாவது, இருப்பிற்கு முழுமையாக பதிலளித்தல் என்பதும்; வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்து கொள்வதும் இன்னும் ஞானமடைதல் என்பதும் ஒன்றே.

ஆம், இவ்வழியிலல்லாமல், வேறு எவ்வழியாகவும் எவரும் ஞானமடைய இயலாது. அதில், 'வாழ்க்கை' என்றால் என்னவென்று புரிந்து கொள்வதற்கு, முதலில் ஒருவர் வாழ்க்கையை நேரே காணவும் - அதாவது தேவைகளின், சூழ் நிலைமைகளின், நிகழ்வுகளின் வழியாக அல்லாமல் காணவும் - இவைகளைக் கடந்து வாழ்க்கையுடன் பொருந்தவும் (தொடர்பு கொள்ளவும்) வேண்டும். இவை வெறுமனே புலன்களின் வழியாக மட்டுமேயல்லாமல் உணர்வின் வழியாக, உணர்வு பூர்வமாக நிகழ்த்திடல் வேண்டும்.

வாழ்க்கையை நேரே காணுதல் என்றால் வாழ்க்கையைப் பற்றிய யாதொரு இடையீடும்  - யாதொரு கோட்பாடும், நனவிலிரீதியான சாய்வும், தெரிவும், கருத்தும், கற்பனையான சித்திரமும், தத்துவமும், முன் முடிவும் எதுவுமில்லாமல் காணுதலே.

இந்தக் காணுதலையே இன்னும் ஆழமாக்கிக் காணும் போது, அதாவது ஒருவர் தனது இருப்பிற்கு "தாம் இருக்கிறோம்" எனும் நிஜத்திற்கு முழுமையாக  - தனது உட்பொதிவின் உள்ளாழத்திலிருந்து - தன்னைத் திறப்பாரெனில், விழிப்பாரெனில், அந்நிஜம் ஒரு மாபெரும் அற்புதமாக - பொங்கி வழியும் அனுபவமாக  - இருப்பை தரிசிக்க முடியும்.

ஒருவர் தனது இருப்பை ஒரு அற்புதமாக உணரவில்லையெனில், மிகவும் முக்கியமான, பொக்கிஷம் போன்ற  ஒன்றை அவர் இழந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வேறு எதைக்கொண்டும் அல்லது இன்னும் எல்லாவற்றையும் கொண்டும் ஈடு செய்ய முடியாத அரிய பொக்கிஷத்தை அவர் தனது கவனக் குறைவினால் (உணர்வுக் குறைவினால்) கண்டும் காணாமல், உணர்ந்தும் உணராமல், கடந்து சென்று விட்டார் -  அவர் இழந்தது எதை என்பதைக் கண்டுபிடிப்பதற்குள் அவரது ஆயுள் முடிந்தே விடும். மேலும், எவரும் அது பற்றி எடுத்துச் சொல்லாமல், அவரால் ஒரு போதும், அதைக் கண்டுபிடிக்க இயலாது. எடுத்துச் சொல்லியும் அதை அவர் கண்டு பிடிக்க இயலாமல் போய் விடலாம். அவ்வாறு, அவர் இழந்தது, கண்டுபிடிக்கத் தவறியது, உணரத் தவறியது -  ஒட்டு மொத்த இருப்பின் மலர்ச்சியான; இருப்பும் உணர்வும் ஒன்றாகிப் போன முழு-உணர்வு எனும் முழுமையான இருப்பாகிய "வாழ்க்கை'  யைத் தான்.

வாழ்க்கை, முடிவும் முழுமையான வாழ்க்கை என்பது புறத்தே எங்கும் இல்லை. புற இருப்பிற்கு அக இருப்பாகிய (மனித) உணர்வு தரும் முழுமையான பதிலளிப்பில் அகம், புறம் ( இரண்டும் ஒன்றாகி) இரண்டையும் கடந்து வெளிப்படுவது தான் விழிப்பு நிலை, ஞான நிலை, பிரம்மம், கடவுள், முக்தி, மோட்சம், காலாதீதம், நித்திய ஜீவன், ஆன்மா, மற்றும் ஆல்ஃபாவும் ஒமேகாவுமான "முழு-உணர்வு" எனும் (பெரு வெடிப்புக்கு முந்தைய) மூல மெய்ம்மையும், ஒவ்வொரு மனிதனும் அடையக்கூடிய அடைந்தாக வேண்டிய, இறுதி மெய்ம்மையும், முழுமையான வாழ்க்கையும் ஆகும்.

ஆக, வாழ்க்கையை நேரே காணுதல் அல்லது தரிசித்தல் என்பதற்கு வேறு பெயர்கள் தான் "விழிப்படைதல்", "உணர்வுக்கு வருதல்" எல்லாம். இன்னும் துல்லியமாகச் சொன்னால், வாழ்க்கை என்பதும் உணர்வுக்கு வருதல் என்பதும் ஒன்றுதான்.

ஏனெனில், மனித ஜீவியைப் பொறுத்தவரையில், உணர்வில்லையெனில் (மனிதத் தரத்துக்குரிய) வாழ்க்கையே இல்லை. உணர்வில்லாத வாழ்க்கை தவளையின் தரத்திற்கு கீழிறங்கி வெறும் உயிர்-இருப்பாக மட்டுமே விளங்கிடும். இன்னும் தவளையின் நிலைக்கும் கீழே இறங்கினால், அது ஒரு கல் அல்லது பாறையின் வெறும் சட-இருப்பாகச் சுருங்கிவிடும். மிகவும் உணர்வுக் குறைவான  - கிட்டத்தட்ட உணர்வற்ற - இருப்பு சடப் பொருட்களின் இருப்பே!

பரிணாமம் என்பது உணர்வுப் பரிணாமமே. பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வே. உண்மையில் இருப்புதான் இருப்பை (தன்னைத்தானே) உணர்வு கொள்வதாக ஆகிறது. ஆனால், உணர்வு கொள்ள, உணர்வு வேண்டும். ஆகவேதான், சட-இருப்பாகத்  தோன்றிய பௌதீக அணுத்துகள்களின் பிரபஞ்சம் உயிர்- இருப்பு எனும் புலன்-உணர்வாக, விலங்கு ஜீவியினுள் வெளிப்பட்டது. அதையடுத்து, மனிதனுள் மனமாக - புறத்தை மட்டுமல்லாமல் தன்னைத்தானே உணர்வு கொள்ளும் சுய-உணர்வாக இருப்பானது உயர்ந்துள்ளது.

ஆனால், விலங்கியல்புகளிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில் மனித ஜீவிகளோ தம்மைத் தாமே உணர்வு கொள்ளாமல் வாழ்க்கையை புறத்தே ஏதேதோ பொருட்களில் மதிப்பீடுகளில் தேடிக்கொண்டுள்ளனர். அதில் சில அதிபுத்திசாலிகள் வாழ்க்கை என்றால் என்னவென்ற கேள்வியே இல்லாமலும், வாழ்க்கையை புரிந்து கொள்ளும் தேவையையும் உணராமல் நேரடியாக ஞானத்தைத் தேடிக்கொண்டுள்ளனர்.

ஆக, யாதொரு தெளிவும் உண்மையான தேடலும் இல்லாத இந்நிலைமையில் ஆயிரத்தெட்டு ஆன்மீக அமைப்புகள், ஆசிரமங்கள், பாதைகள், குழம்பிய குட்டையை மேலும் குழப்பிட நெடுந்தாடியுடன் 'ஞானிகள்' என்ற பெயரில் வியாபாரிகள், தாறுமாறான தத்துவங்கள், வழிகாட்டல்கள்!

ஞானத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லும் பள்ளிகள் (ஆசிரமங்கள்) பலவகைப்பட்டவையாக  இருந்தாலும், அவைகளை நாம் மூன்று வகைகளில் அடக்கி விடலாம்.

முதலாவது, புராதனமானது, பாரம்பரியமானது; அதை நாம் "சக்தி வழிப் பள்ளி" (Energetic School) எனக் குறிப்பிடலாம். ஆன்மீகத்தின் உச்சமான ஞான நிலையை அடைவதற்கு 'சக்தி' வேண்டும் என்கிறது இப்பள்ளி. ஆகவே இப்பள்ளிகள் குண்டலினிச் சக்தியை கீழிருந்து மேலேற்றுதலுக்கான பயிற்சிகளையும், தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவைகளையும் வழிகளாகக் காட்டுகின்றன, சொல்லித் தருகின்றன.

ஆனால், ஞானமடைவதற்கு பெரிதாக சக்தி எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அக-மாற்றம் அல்லது உணர்வு-நிலை மாற்றத்திற்கு பிரத்தியேகமாக சக்தி எதுவும் தேவையில்லை. ஏனெனில், உணர்விலேயே சக்தி இணைந்திருக்கிறது. எது முக்கியத் தேவையெனில், வாழ்க்கை எனும் புதிரை அவ்வளவு தீவிரமாக நேசிப்பதும், அப்புதிரை விடுவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்கிற பேரார்வம் மட்டுமேயாகும். ஏனெனில், பேரார்வம் தான் மூல மெய்ம்மையின் சாரமும், அனைத்து சக்திகளின் ஊற்றுக் கண்ணும் ஆகும்.

இரண்டாவது வகைப் பள்ளியை நாம் "யுக்தி வழிப் பள்ளி" (Tactical School) எனலாம். சக்தி-வழிப் பள்ளிகள் ஞானத்தை அடைய சக்தியை மையமாகக் கொண்டு தவறான முனை அல்லது தொடங்குபுள்ளியிலிருந்து - அதாவது, உடலைக்கொண்டு - பயிற்சி செய்வதாயுள்ளன என்றால், இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்த யுக்தி வழிப் பள்ளிகள், ஞானத்தை யாதொரு அடிப்படையும் இல்லாமல், அடித்தளமும் இல்லாமல் குறுக்கு வழியில் ஞானத்தை எட்டும் முயற்சியாக சில மனோவியல் யுக்திகளை போதிக்கின்றன.

ஞானமடைதலை ஒரு மனோவியல் பிரச்சினையாகச் சுருக்கி - அதாவது கவலைகளற்று இருப்பதுதான் ஞான-நிலை எனவும், சுய-முரண்பாடற்ற, போராட்டமில்லாத, இன்பங்களைத் தக்கவைக்க முயற்சிக்காத, துன்பங்களை அப்புறப் படுத்த முயற்சிக்காத மனதைப் பெறுதல் எனவும் சொல்லி, ஆகவே உங்கள் தேடலை, (தேடுவதை) நிறுத்தி விடுங்கள் - அகத் தளவில் நாம் செய்வதற்கோ, அடைவதற்கோ எதுவும் இல்லை எனப் புரிந்து கொள்வதுதான் ஞானம் எனவும்; ஞானமடைதல் எனப்படுவது மிக 'எளிதான', 'சாதாரண' விடயம், 'நீங்களும் ஞானியாகலாம்!' இந்த பாணியைப் பின்பற்றி ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோர் ஞானமடைந்துவிட்டனர். . .  . என்றெல்லாம் கூசாமல் விளம்பரம் செய்துவருகின்றனர்.

அதாவது, ஏற்கனவே தவறான நோக்கங்களுக்காக, தவறான தேடல்களிலும், பாதைகளிலும் பயணித்து வந்த போலியான ஆன்மீக நாட்டம் கொண்டவர்களை - இந்த யுக்தி வழியானது தடுத்து (அவர்களது தவறான தேடுதல்களை நிறுத்தி) ஆட்கொண்டுவிட்ட நிலையில் உடனேயே அவர்கள் அனைவரும் ஓரிரவிற்குள்ளாகவே ஞானப்பழங்களாகி விட்டதான பிரமையில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.

ஆனால், உண்மையில் இனிமேல் தான் அவர்களுடைய உண்மையான ஆன்மீக நாட்டமும், ஞானத் தேடலும் சரியான திசையில் தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால், மனிதர்களை உளவியல் ரீதியாக மீண்டும் ஆதிமனிதர்களாக - தாம் இருப்பது தெரியாமல் இருக்கின்ற 'உணர்வற்ற இருப்பு' நிலைக்குத் திரும்பச்செல்ல வைப்பதல்ல அசலான ஆன்மீகம். இது அகந்தை நிலைக்கும் முந்தைய (Pre-Personal State),அதாவது, ஆதி-மனிதனின் நிலையாகும். மாறாக, உண்மையான ஆன்மீகம் என்பது அகந்தை-நிலைக்குப் பிந்தைய, அதாவது அகந்தை-நிலையைக்  கடந்த ( Trans-Personal State)உணர்வு நிலையை அடைவதேயாகும்.

மூன்றாவது பள்ளி, ஞானத்திற்கு மிகச் சரியான வழியை (வழியற்ற வழியை) காட்டுகிற இப் பள்ளியை நாம் "புரிதல்-வழி"ப் பள்ளி ( Cognitive School)எனலாம். இப்பள்ளியானது முதல் இரண்டு பள்ளிகளான சக்திப் பள்ளி, மற்றும் யுக்தி வழிப் பள்ளிகளிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. புத்தர், இயேசு, ரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, போன்றவர்கள் இப்பள்ளியின் முன்னோடிகள். அதே வேளையில், இவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏராளமானவர்களாய் இருந்தாலும், இவர்களது உபதேசங்களை, தத்துவங்களை புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே! ஏனெனில் அவை அவ்வளவு எளிதானதல்ல. ஆகவேதான், உலகில் பலவகைப்பட்ட புத்த மதங்களும், கிறிஸ்துவ மதப் பிரிவுகளும் மலிந்து காணப்படுகின்றன - புத்த-உணர்வு அடைந்தவர்களும், கிறிஸ்து- உணர்வு அடைந்தவர்களும் மிக அரிதாகவே காணப்படுகின்றனர்.

ஒரு சிறுவனைப் பார்த்து அவனிடம் நீயும் ஒரு இளைஞனாக, நன்கு வளர்ந்த மனிதனாக ஆகலாம் என்று சொல்வதைப் போல அபத்தமானது மனிதர்களைப் பார்த்து அவர்களிடம் 'நீங்களும் ஞானியாகலாம்' என்று சொல்வது! மனித ஜீவியாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஞானியாக மலரவேண்டியது ஒவ்வொருவரது விருப்பத்தையோ, தெரிவையோ பொறுத்த விடயமல்ல. மாறாக, அது ஒவ்வொருவரின் பரிணாமக் கடமையாகும். ஏனெனில், ஞானமடைதல் என்பது மனித வாழ்வின் இலக்கும் முழுமையும் மாத்திரமல்ல -  அதுவே அர்த்தபூர்வமாக வாழும் வழியும், மனிதத் தரத்திற்குரிய வாழ்தலும் ஆகும்.

ஆனால், ஒரு சிறுவன் பிரத்யேகமாக எதுவும் செய்யாமலேயே - இறுதிவரை உணர்வுக்கு வராமலேயே- ஒரு வாலிபனாகவும், பிறகு வளர்ந்த மனிதனாகவும் ஆகிடுவதைப் போல எவரும் தாமே, தானியங்கித் தனமாகவோ, அல்லது தமது விருப்பத்தின் விளைவாகவோ, நெடிய பயிற்சியின் மூலமாகவோ, அல்லது 'உடனடிக் காப்பி' ( Instant Coffee) போல யாதொரு யுக்தியின் மூலமாகவோ ஞானியாகிட முடியாது.

ஞானமடைதல் என்பது ஆனந்தத்தைத் தேடுவதோ உங்களது துன்பங்கள், கவலைகளுக்கெல்லாம் தீர்வு தருவதோ,  வாழ்க்கையிடமிருந்து தப்பியோடுபவர்களின் புகலிடமோ, அல்லது வாழ்க்கையென நீங்கள் கருதுகின்ற உணவு, உடை, உறையுள் மற்றும் உறவுகள் குறித்த விவகாரங்களில் உழல்வதன் மூலமாக கண்டடையக்கூடிய விடயமோ அல்ல.

ஞானம் என்றால் புரிதல், குறிப்பாக வாழ்க்கை பற்றிய புரிதல். ஆகவே வாழ்க்கைக்கு வெளியே தனியே யாதொரு ஞானமும் இல்லை. இன்னும் வாழ்க்கை என பொதுவாக நீங்கள் வாழ்ந்து வருகிற விவகாரங்களிலும் அது இல்லை. வாழ்க்கையை, அதன் அர்த்தம், குறிக்கோள், நோக்கம், இலக்கு என முழுமையாகப் புரிந்து கொள்ளுதலில் மட்டுமே ஞானம் அடங்கியுள்ளது.

"வாழ்க்கை என்றால் என்ன?" என்பது வெறும் அறிவு ஜீவியக் கேள்வி (Intellectual Question) அல்ல. மாறாக, இக்கேள்வியைக் கேட்பதற்குரிய அடிப்படை விழிப்பும், அவ்விழிப்பின் உணர்வும் தான் ஞானத்திற்கான திறவுகோல் ஆகும். இந்த விழிப்பும், உணர்வும் இல்லாத நிலையில் வாழ்க்கை பற்றிய கேள்வி, 'நாய் பெற்ற தெங்கம் பழம்' போன்றது தான்!

இக்கேள்வியைக் கேட்பதற்குரிய அடிப்படை விழிப்பு உங்களுக்குள் துளிர்த்துவிட்டால், அதன்பிறகு நீங்கள் ஞானமடைவதை எந்தச் சக்தியும் தடுக்கமுடியாது! மேலும் ஞானத்தைத் தேடி, நீங்கள் ஆசிரமம் ஆசிரமமாய் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு வெளியே எந்த ஞானியையும், ஆசானையும் தேட வேண்டாம், நாட வேண்டாம்.

அதேவேளையில், இக்கேள்வியைக் கேட்பதற்குரிய ஆதாரமான விழிப்பு உங்களுக்குள் துளிர்க்கவில்லை எனும் பட்சத்தில், அதற்கு ஒரேயொரு மாற்று வழி மட்டுமேயுள்ளது. அது, " வாழ்க்கை என்றால் என்ன?" எனும் கேள்வியை எழுப்பி, உங்களுக்குள் ஆழத்தில் படியச்செய்து,  தீவிரமாகவும், சிரத்தையோடும், பேரார்வத்தோடும் வாழ்க்கை பற்றிச் சிந்திப்பது, விசாரத்தில் ஈடுபடுவது மட்டுமே அந்த மாற்று வழி!

இவ்விடத்தில், ஒரு முக்கியக் குறிப்பைச் சொல்ல வேண்டும், "சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த ஞானி" என ஆன்மீக உளவியல் மேதையான, கென் வில்பர் (Ken Wilber) அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட ஶ்ரீ ரமண மகரிஷி அவர்கள், "நான் யார்?" என ஆத்ம விசாரம் செய்யச் சொன்னார். ஆனால், இக்கட்டுரையின் ஆசிரியரோ, "வாழ்க்கை என்றால் என்ன?" என்று வாழ்க்கை விசாரம் செய்யச் சொல்கிறார் என்பதில் எந்த முரண்பாடும், அதிகப்பிரசங்கித்தனமும் இல்லை! உண்மையில், "நான் யார்?" எனும் விசாரம் ஶ்ரீ ரமணர் காலத்திற்கு மட்டுமல்லாமல், இனி வரும் எல்லா காலத்திற்கும் பொருந்துகிற, தவிர்க்கவியலாத, மையமான கேள்வியும் விசாரமும் ஆகும். ஒருவர் எந்த அடிப்படைக் கேள்வியின் வழியாகச் சென்றாலும், "நான் யார்?" எனும் கேள்வியைச் சந்திக்காமல் ஞானத்தின் நுழைவாயிலை எட்டமுடியாது!

ஆக, "நான் யார்?" எனும் கேள்வி மிகவும் மையமானது என்பதைப்போல, "வாழ்க்கை என்றால் என்ன?" எனும் கேள்வி மிகவும் அடிப்படையானது ஆகும். அதாவது, வாழ்க்கை விசாரத்தின் வழியாகச் சென்றாலும், ஒரு கட்டத்தில், "நான் யார்?" எனும் விசாரத்தை ஏதாவதொரு வடிவத்தில் மேற்கொள்வது தவறாமல் நிகழ்ந்தேறிடும்!

ஆனால், திடீரென முளைத்து தமிழ் நாட்டில் தலையெடுத்து வரும் அதிமேதாவி ஒருவர், "ரமணருடைய "நான் யார்?" விசாரத்தின் வழியே ரமணரே கூட ஞானமடைந்திருக்க முடியாது!" என்பதாகச் சொல்லியும், தனது புத்தகங்களில் எழுதியும், ரமண வழியைக் கொச்சைப்படுத்துவதன் வாயிலாக தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் கயமைத்தனம் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இத்தகைய போலி ஆசாமிகளையும், அவர்களது வழிகாட்டல்களையும் குறித்து வாசகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

முக்கியமாக, ஞானமடைதலுக்கு யாதொரு எளிய வழியும், குறுக்கு வழியும், யுக்தியும், தந்திரமும், மந்திரமும், கிடையாது. அசலான ஆன்மீகமும், ஞானமடைதலும் ஒவ்வொருவரது விழிப்பைச் சார்ந்தவையாகும். ஆகவே, மன-இயக்கத்தையோ, அல்லது எண்ண ஓட்டத்தையோ, அல்லது வேறு எதையுமோ, தடையின்றி 'ஏற்று அனுமதித்தல்' என்பதாயினும், 'மறுப்பற்று இருத்தல்' என்பதாயினும், அல்லது வேறு யாதொரு யுக்தியாயினும், இவை எதுவுமே விழிப்பைக்கொண்டு வராது! ஏனெனில், விழிப்பை எவ்வகையிலும் பயிற்சி செய்ய முடியாது. அல்லது உங்களது மன- இயக்கத்தில் 'சிறு மாற்றம்' செய்வதன் வழியாகவும் விழிப்பு ஏற்படாது!

விழிப்பு பற்றிய ஒரு விசேடமான அம்சம் என்னவெனில், விழிப்பைத்தவிர விழிப்புக்கு மாற்றாக வேறெதுவுமில்லை என்பதே!

விழிப்பு என்பது காரணம், விளைவு எனும் சங்கிலித் தொடரின் இன்னுமொரு நிகழ்வு அல்ல. மாறாக, அது, அச்சங்கிலித்தொடரின், மற்றும், அனைத்துவித இயக்கங்கள், பிரவாகங்களின் முடிவைக் கோருகின்ற அற்புத மலர்வாகும்!



மா.கணேசன்/ நெய்வேலி // Conceived earlier and completed on 01.07.2013/ Uploaded on 27-09-2024

                             ////////.\\\\\\\\.////////.\\\\\\\.////////.\\\\\\\\.////////.\\\\\\\.////////.\\\\\\\\






Tuesday, 24 September 2024

இருப்பின் தரிசனம்! (இருப்பிலிருந்து பேரிருப்பிற்கு)


 
 
 
"இருப்பின் மலர்வு" அல்லது "சத்-சித்-ஆனந்தம்" பற்றிய
பரிணாமப் பார்வையிலமைந்த புதிய விளக்கம்

                                         <*>

உங்களிடம் உணர்வுத்துடிப்பு இல்லையெனில்
இவ்வரிகளனைத்தும் அர்த்தமற்ற வெற்றுச் சொற்களே!

                                         <*>                

இருப்பின் தரிசனம் என்பது இருப்பு தன்னைத்தானே தரிசிப்பது என்பதையும், இருப்பின் விசேடமான பகுதியான மனிதன் தனது உணர்வைக்கொண்டு இருப்பைத் தரிசிப்பது என்பதையும் குறிக்கிறது.

மனிதன் ஏன் இருப்பை தரிசிக்க வேண்டும்? ஏனெனில், மனிதனிடம் உணர்வு இருக்கிறது - இன்னும் துல்லியமாகச் சொன்னால், மனிதன் உணர்வாகவே இருக்கிறான்! ஆகவே, இருப்பை தரிசிப்பது அவனது தலையாய பரிணாமக் கடமையாகும். அவன் ஒரு தவளையைப் போல உணர்வற்ற ஜீவியாக இருந்தால் அவனுக்கு இருப்பை தரிசிக்க வேண்டிய அவசியமிராது.

மேலும், இருப்பைத் தரிசிப்பதன் வழியாக மட்டுமே மனிதன் உண்மையிலேயே மனிதனாக ஆகவும், தனது பரிணாம வாழ்க்கையின் ஒப்பற்ற இலக்கையும், முழுமையையும் அடைய முடியும்.

இருப்பை மனிதன் தரிசிப்பதும், இருப்பு தம்மைத்தாமே  தரிசிப்பதும் ஒன்றே! இருப்பு ஏன் தம்மைத்தாமே  தரிசிக்க வேண்டும்? ஏனெனில், அது இருப்பின் உள்ளார்ந்த பரிணாம வளர்ச்சி விதியின் தவிர்க்க இயலாத பரிணாம அவசியமாகும்.

இருப்பு, அதை இயற்கை, உலகம், பிரபஞ்சம் என எப்படி அழைத்தாலும் அது தன்னில் முழுமையான பூரணமானதொரு நிஜமோ, மெய்ம்மையோ அல்ல. இருப்பு என்பது ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையும், இயக்கமுமாகும். இருப்பும், பரிணாமமும் பிரிக்கமுடியாதவை.

ஆக, இருப்பு என்பது ஒரு பரிணாம இயக்கமாக இருப்பதால் அதற்கென ஒரு பிரத்தியேக இலக்கும் உள்ளது. அதை நோக்கியே அது பரிணமிக்கிறது. இயக்கம், அது எவ்வகை இயக்கமாயினும் இலக்கில்லாமல் இயங்க முடியாது.

பிரபஞ்ச இருப்பு முதன்முதலில் பெருவெடிப்பில் தோன்றிய  போது, வெறும் பௌதீக சட-இருப்பாக, அடிப்படை அணுத்துகள்களாக ( Fundamental Particles) மட்டுமே தமது பரிணாமப் பயணத்தைத் தொடங்கிற்று. இவ்வாறு தொடங்கிய சட-இருப்பு தொடர்ந்து அவ்வாறே தமது சடத் தன்மையிலேயே முடிவில்லாமல் நீடிக்கலாகாது. அத்தகைய இருப்பு அர்த்தமற்றது. அவ்வாறு நீடிக்க முடிந்திருந்தால் இருப்பைப் பற்றிப் பேசுவதற்கு இருப்பின் பகுதியாக இன்று நாம் இங்கிருக்க இயலாது!

இருப்பு தம்மைத்தாமே தரிசிக்கவும், உணர்வு கொள்ளவும், ஒரு வழியாக, ஒரு ஊடகமாகத்தான் அது உணர்வுடன் கூடிய ஜீவியாக, மனிதனை உருவாக்கியது. இதையே துல்லியமாகச் சொன்னால், இருப்பு தம்மைத்தாமே உணர்வு கொள்வதற்காக, மனித ஜீவியாக, அவனுள் உணர்வாக உருவாகியது.

மனித ஜீவி என்பவன் உணர்வாகிய ஜீவியாக இருப்பதால், அவனே இருப்பின் மிக விசேடமான பகுதியாகவும் (அங்கமாகவும்); மிக முக்கியமாக, இருப்பின் மிகப் பிரத்தியேகமான பிரதிநிதியாகவும்; இருப்பின் ஒரே நம்பிக்கையாகவும் விளங்குகிறான். ஏனெனில், இனி பரிணாமத்தை அதன் ஒப்பற்ற இலக்கு நோக்கி உணர்வுபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மாபெரும் பொறுப்பு அவன் கையிலேயே (உணர்விலேயே) உள்ளது.

ஆம், உணர்வுள்ள மனித ஜீவியின் வரவுடன் பழைய, இயற்கையான, நனவிலி ரீதியாக  நிகழ்ந்தேறிய நெடிய பரிணாம வழிமுறை முடிவிற்கு வந்துவிட்டது. இந்த முக்கியமான வேறுபாட்டை சரியாக நாம் புரிந்துகொள்ளாவிட்டால் பரிணாமம் எனும் நிகழ்வுமுறையை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. பரிணாமத்தைப் புரிந்துகொள்ளாமல் நாமும் நமது வாழ்க்கையின் உண்மையான இலக்கை, முழுமையை அறியவும், அடையவும் முடியாது. இனி பரிணாமம் தமது பழைய இயல்பான வழிமுறையில் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. அதாவது, எந்திரத்தனமாக, உணர்வற்ற ரீதியில் தொடரமுடியாது.

சரி, இப்போது இருப்பின் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களைப் பார்ப்போம். இருப்பு என்றால் என்ன? இருப்பவை அனைத்தும் இருப்பே. எனினும் இருப்பவை அனைத்தும் ஒரே படித்தானதாக, ஒரே தன்மையில் அமைந்ததாக இருக்கவில்லை!

ஒரு கல், அல்லது பாறை இருக்கிறது; அதுவும் இருப்புதான். ஆனால், அதை பண்பு ரீதியாகக் குறிப்பிடும்போது, "சட-இருப்பு" (Material Existence) என்பதாகவே வரையறுத்தாக வேண்டும்.

அடுத்து ஒரு புழு, பூச்சி, தவளை இருக்கிறது. இவையும் இருப்புதான். பண்பு ரீதியாக இவற்றை நாம் "உயிர்-இருப்பு" எனக் குறிப்பிட்டாக வேண்டும்.

அடுத்து மனிதன் இருக்கிறான். மனிதன் பரிணாம வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தை, மிகவும் திருப்புமுனையானதொரு இருப்பு நிலையைப் பிரதிநிதித்துவம் செய்பவனாக இருக்கிறான். இதற்குக் காரணம் மனிதனின் "சுய-உணர்வு" தான். ஆக பண்பு ரீதியாக மனிதனுடன் தொடங்கும் இருப்பை நாம் "உணர்வு-இருப்பு" எனக் கொள்ள வேண்டும். ஆம், (பிரபஞ்ச) இருப்பானது மனிதனின் ( = உணர்வு) வழியாக தம்மை உணர்வு கொள்கிற (தரிசிக்கிற) கட்டத்தை எட்டியுள்ளது.

விஞ்ஞானப் பரிணாமக் கோட்பாடானது, மனிதன் எவ்வாறு, எதிலிருந்து தோன்றினான் என்பதற்குரிய மேலோட்டமான ஒரு விளக்கத்தை உருவாக்கியதுடன் தனது பரிணாம ஆய்வு முடிந்துவிட்டதாகக் கருதுகிறது! ஆனால், பரிணாமம் என்பது உயிரியல் தளத்திற்கு மட்டுமே உரியது அல்ல. அது உயிர் தோன்றுவதற்கு முன்னிருந்தே பொருளியல் பரிணாமமாக, முதல் அணுக்கள் தோன்றியதிலிருந்தே தொடங்கி செயல்பட்டு வந்துள்ளது. தற்போது, அது உயிரியல் தளத்தைக் கடந்து, மனிதனின் உணர்வைக்கொண்டு உணர்வியல் தளத்திற்குள் பிரவேசித்துள்ளது.

இனி பரிணாமம் என்பது உணர்வியல் தளத்திலேயே செயல்பட்டு உணர்வின் முழுமையை அடைவதுடன் நிறைவெய்த இருக்கிறது. இந்த உணர்வியல் தளத்துப் பரிணாமம் உணர்வுள்ள, இன்னும் துல்லியமாகச் சொன்னால், "தாம் ஒரு உணர்வுதான்!" என்கிற உணர்வுக்கு வந்திட்ட ஒவ்வொரு தனிமனித ஜீவியின் உணர்வுப் பரிணாமத்தின் வழியாகச் சென்றடையக்கூடிய முழு-உணர்வில் முழுமையடையும்!

பரிணாமம் ஏற்கனவே புத்தர், இயேசு, கபீர், ரமணர், . . . போன்ற, தம் உணர்வுக்கு விழித்த, தனிமனிதர்களின் வழியாக தமது உச்சத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

இருப்பு ( இயற்கை, உலகம், பிரபஞ்சம்) என்பது உறைந்து நிற்கும் நிலக்காட்சி அல்ல. அது பாய்ந்தோடிடும் ஒரு நதியைப் போன்றது.

இருப்பு என்பது அடிப்படையில், ஒரு பரிணாம நிகழ்வு முறை அல்லது இயக்கம் ஆகும். இருப்பு முதன்முதலாக சட-இருப்பாகத்தான் (பெரு-வெடிப்பிலிருந்து) தோன்றியது எனப்பார்த்தோம். சட-இருப்பு என்பது பௌதீக இயக்கமாகும். அது உயிரற்றது, உணர்வுமற்றது. இப்பௌதீக இயக்கம் தன்னைக்கடந்து வளர்ந்திடும்போது அது தனது பௌதீகப் பண்பை சற்று இழந்து, அதாவது பௌதீகப் பண்பில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து உயிராய்ப் பரிணமிக்கிறது. இவ்வாறு இருப்பு என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து செல்லும், பண்பு ரீதியாகப் பரிணமிக்கும் ஒரு விசேட மெய்ம்மையின் பேரியக்கமாகும்.

சரி, பரிணாமம் என்பது பண்புரீதியிலான மாற்றம் என்றால், அடியோட்டமாக பரிணாமத்தில் பரிணமிப்பது எது? இக்கேள்வி அதிமுக்கியமானது. ஆம், பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வுதான். இருப்பின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அதற்கு இணையாக உணர்வும் உயருகிறது.

சட-இருப்பை நாம் உணர்வற்றது என வரையறுத்தாலும் சடத்திற்கென ஒருவகை மெலிய உணர்வின் ஆரம்ப அறிகுறிக்கான அடிப்படையைக் கொண்டுள்ளதெனக் கொள்ளலாம். பெருவெடிப்பில் பிறந்த முதல் துகளுக்கும் கூட ஒரு சிறு துளியளவு உணர்வு [0.0000001 %] உண்டு! அதை நாம் "சட-உணர்வு" அல்லது "பௌதீக உணர்வு" (Material Consciousness) எனக் குறிப்பிடலாம்.

சட-உணர்வு எத்தகையதெனில், பௌதீக அணுத்துகள்களை எடுத்துக்கொண்டால், அவை தமக்குப் புறத்தேயுள்ளவற்றையும் உணராது; இன்னும் தம்மையும் அவை உணர வழியில்லை. மாறாக, குருட்டாம்போக்கில், அவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்ளும் நிகழ்வில் அவை பரஸ்பரம் சக்தி, மின்னூட்டம், நிறை, . . . . போன்ற பௌதீக அம்சங்களை பரிமாறிக்கொள்கின்றன. இப்பரிமாற்றத்தை ஒருவகை தகவல் பரிமாற்றம் எனக் கொள்வோமெனில், அணுத்துகள்களுக்குள் அது ஒருவகை தகவல்-பரிசீலனைச் (Information-Processing)செயல்பாடாக அமைகிறது என்கிற வகையில் அதை சட-உணர்வு என அங்கீகரிக்கலாம். ஏனெனில், உணர்வு என்பது அடிப்படையில் தகவல்-பரிசீலனை என்பதையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது.

சட-உணர்வைப் பற்றி நாம் பேசினாலும், சடப்பொருளை நாம் இருப்பின் ஒருவகையாகக் கணக்கில் கொள்ளலாமே தவிர, சட-உணர்வை பெரிதாக உணர்வின் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அது புறத்தேயுள்ளதையும், உணராது, தன்னையும் உணராது. ஆயினும் இருப்பு என்கிற அளவில் சடப்பொருளின் இருப்பைஅங்கீகரிப்பது தவிர்க்கவியலாதது. ஏனெனில், இந்த சட-இருப்பு தான் பின் ஏற்பட இருக்கிற உயிர்-இருப்பு மற்றும் உணர்வு-இருப்பு ஆகியவற்றின் அடிப்படை அல்லது அடித்தளம் ஆகும்.

ஆம், சடப்பொருள் இல்லையெனில், உயிரும் (விலங்கு ஜீவிகளும்) தோன்றியிருக்கவியலாது. உணர்வும் (மனித ஜீவிகளும்) தோன்றியிருக்கவியலாது. ஆனல், அதே வேளையில், சடப்பொருளின் இருப்பை நாம் பரிணாமத்தின் அடிப்படையாகக் கொள்வதால், சடப்பொருள் என்பது, பொருள் முதல்வாதிகள் கருதுவது போல, தன்னில் தானே தோன்றிய சுயம்புவான மெய்ம்மையாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், சடப்பொருள்
தன்னில் தானே தோன்றியதல்ல. மாறாக, அது வேறொரு மூல-மெய்ம்மையின் ஆகச் சுருங்கிய வடிவமும், நிலையும் ஆகும். ஆகவேதான், பௌதீகப் பொருளானது விரிந்து மீண்டும் தனது அசலான நிலையை அடைய வேண்டி பரிணமிக்கிறது.

மேலும், பரிணாமம் என்பது அடிப்படையான பௌதீகப் பொருளிலிருந்து வெவ்வேறு வகைப்பொருளை புதிது புதிதாக உருவாக்குவதல்ல. மாறாக, பொருளானது படிப்படியாக தனது பௌதீகச் சடத்தன்மையைக் கடந்து, அதாவது இழந்து பண்புரீதியாக வேறொரு அம்சமாக மாற்றமடைந்து முடிவில், அனைத்து மாற்றங்களையும் தீர்த்து முடித்த முழுமை நிலையை அடைவதே.

இவ்வாறு இருப்பானது தனது இறுதி முழுமை நிலையை - பொருளை ஒரு ஊடகமாகக் கொண்டு, அதையே ஏணியாக ஆக்கி, தனது இறுதி முழுமை நிலையை அடையும்போது அது முற்றிலுமாக தனது சடத் தன்மையைக் கடந்து விட்டிருக்கும்.

இருப்பானது படிப்படியாக உணர்வாக எழும்பொருட்டு, முதற்கட்டமாக, ஒரு மாபெரும் தாவலின் மூலமாக உயிராக, உயிருள்ள விலங்கு ஜீவிகளாகப் பரிணமித்து, அந்த ஜீவிகளின் புலன்களின் வழியாக புறத்தை உணர்வு கொள்ளும் புலன் உணர்வாக எழுந்தது. பிறகு, நீண்ட நெடிய உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக, விலங்கு ஜீவிகளைக் கடந்த மனித ஜீவியாக, மனிதனுள் சுய-உணர்வாக (Self-Consciousness) வெளிப்படும் பெரும் தாவலைச் செய்தது.

மனிதனின் சுய உணர்வானது ஒட்டு மொத்த பிரபஞ்சப் பரிணாம இயக்கத்தின் வரலாற்றில் மிகவும் திருப்புமுனையான ஒரு கட்டத்தை தொடங்கி வைக்கிறது. இதுவரை இயற்கையிடமிருந்த பரிணாமப் பொறுப்பு இப்போது மனிதனிடம் கை மாறுகிறது. இனி மனிதன், ஒவ்வொரு மனிதனும் தான், பரிணாமத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுத்துச் சென்று - அதாவது, உணர்வில் பெருகியுயர்ந்து - உணர்வின் உச்சமான முழு-உணர்வை அடைந்து இருப்பை முழுமைப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு இருப்பானது படிப்படியாக உணர்வு பெற்று மனிதனிடம் தனி-உணர்வாக எழுந்து மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் முழு-உணர்வாக மலர்ந்திடும் நிலைதான் " சத்-சித்-ஆனந்தம்" என்பதாகும்.

சத் என்பது இருப்பையும், சித் என்பது உணர்வையும், ஆனந்தம் என்பது பேரின்பத்தையும் குறிக்கின்றது. சத் சித் ஆனந்த நிலை என்பது மூன்று வெவ்வேறு நிலைகளின் கலவையோ, தொகுப்போ அல்ல! இதை ஐயமின்றி "முழுமை" என்ற ஒரே சொல்லில் குறிப்பிட்டுவிடலாம்.

இம்முழுமை நிலை எத்தகைய மெய்ம்மை என்றால், நிச்சயம் அது பொருண்மை (பௌதீகச் சடத்தன்மை) யானது அல்ல. ஏனெனில், இருப்பானது முழு-உணர்வாக மலர்ந்திட்ட அந்நிலையில் இருப்பு என்பது முற்றிலுமாக உணர்வில் ஊறிக் கரைந்து. பொருண்மையின் அற்ப சொற்ப சுவடுமின்றி தூய உணர்வாக ஆகிவிடுகிற அந்நிலையே முழுமையான இருப்பாகத் திகழ்வதாகிறது! இத்தகைய முழு உணர்வின், ஆகவே முழு(மையான) இருப்பின் தன்மை எத்தகையதெனில் அது முழுமையான ஆனந்த நிலையே, பேரின்ப நிலையே!

பேரின்ப நிலை என்பது பரிணாம இருப்பு அடையக்கூடிய முடிவும் முழுமையுமான நிலை மட்டுமல்ல. அதுவே பரிணாம இருப்பு முதன்முதலில் தோன்றுவதற்கு அடிப்படையாக, மூலவித்தாக பெருவெடிப்புக்கு முன்னிருந்த மூல முதல் மெய்ம்மையும் ஆகும்.

"பேரானந்த நிலையிலிருந்துதான் அனைத்து ஜீவிகளும் பிறக்கின்றன,
அப்பேரானந்தத்தினாலேயே அவை இருக்கின்றன, வளர்கின்றன,
அப்பேரானந்தத்திற்கே மீண்டும் அவை திரும்புகின்றன."

எனும் தைத்ரிய உபநிடத்தின் கூற்றும், " சத்-சித்-ஆனந்தம்" என்கிற கருத்தும் பழைய காலத்து ஆன்மீகவாதிகளின், கருத்துமுதல்வாதிகளின் மூடத் தனமான பிதற்றல்கள் அல்ல! மாறாக, இவை பரிணாமபூர்வமான உண்மையாகும், ஆகவே, இவை 'விஞ்ஞான' பூர்வமானது. ஆனால், இங்கு நாம் குறிப்பிடும் 'விஞ்ஞானம்', தற்போதைய, இயற்கைவாதத்தில் சிக்குண்ட, இன்னும் முதிராத, எந்திரவாத விஞ்ஞானம் அல்ல.

இந்த இடத்தில், பேரின்ப நிலை, பேரானந்த நிலை குறித்து சற்று தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. பேரின்ப நிலை, பேரானந்த நிலை ஆகிய சொற்களின் பயன்பாடானது, அன்றாட மானுட அனுபவத்திற்கு பழக்கப்பட்ட இன்பம், ஆனந்தம் ஆகிவற்றின் ஆக உயரத்திலும் உயர்ந்த நிலைகள் என்பதாகப் பொருள்படும் வகையில் குறிப்பிடப்படுபவை ஆகும். மேலும், மனித ஜீவியானவன் அடையக்கூடிய இறுதியான பரிணாம முழுமையை, இறுதி மெய்ம்மையை (Ultimate Reality) பேரின்ப நிலை, பேரானந்த நிலை எனக்குறிப்பிடுவதன் வாயிலாக, குறைத்துச் சுருக்கிவிட முடியாது. இந்த முழுமை நிலையை நாம் "பேரறிவு நிலை", "உயர் ஞான நிலை" எனவும் குறிப்பிடலாம்! இத்துடன் நில்லாமல், அதை பேரறிவு எனச் சுருக்கிவிடாமல், மூலப் படைப்புச் சக்தி எனவும், அனைத்து சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கிய அனந்த நிலை எனவும் குறிப்பிடலாம். இதையே நாம் உணர்வின் சொற்களில், "பேருணர்வு",  "முழு உணர்வு" என்று இக்கட்டுரையிலும் இன்னும் பிற கட்டுரைகளிலும் குறிப்பிடுகிறோம்.

சரி, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். அதாவது, " சத்-சித்-ஆனந்தம்", "முழு-உணர்வு" ஆகிய, முழுமை நிலை குறித்த கருத்துருவாக்கங்கள் நவீன விஞ்ஞானப் பார்வையிடமும், டார்வினிய கோட்பாட்டிலும் இல்லை. ஏனெனில், இந்த அணுகுமுறைகள் மனிதனை ஆக உயர் வளர்ச்சியடைந்த விலங்காகவே வகைப்படுத்துகின்றன. மேலும், வாழ்க்கை என்பது மாறும் புறச்சூழலுக்கேற்ப தகவமைந்து, வெறுமனே உண்டுறங்கி இனம் பெருக்கி உயிர்வாழ்வதும், முடிவில் மரணத்தில் முடிந்துபோவதும்தான் என்பதாகவே இவை காண்கின்றன.

விஞ்ஞானத்தின் இம் மட்டுப்பாட்டிற்குக் காரணம், அது சடப் பொருளையே மூல முதல் மெய்ம்மையாக, சாசுவதமான 'பரம்' பொருளாகக் காண்கிறது. உயிரையும், (மனித) உணர்வையும், அறிவையும் அது சடப் பொருளின் உயர் வளர்ச்சி நிலைகளாக மட்டுமே காண்கிறது.

***

விஞ்ஞானத்தை நாம் " இயற்கை வாதம்" என்று குறிப்பிடலாமெனில், (அசலான) ஆன்மீகத்தை நாம் "பேரியற்கைவாதம்" என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும். விஞ்ஞானம் மனிதனை இயற்கையின் ( = பிரபஞ்சத்தின்) முக்கியத்துவமற்ற ஒரு அங்கமாகவும், பகுதியாகவும், இயற்கையைச் சார்ந்திருக்கும் ஒரு உயர் விலங்கு என்பதாகவும்; வாழ்க்கை என்பது வெறும் உயிர்- பிழைத்திருத்தலே என்பதாகவும், மரணம் என்பது இயற்கையின் தவிர்க்கவியலாத நியதி என்பதாகவும் காண்கிறது. இயற்கை என்பது - யுரேகா! யுரேகா!  - சடப்பொருளே, பொருளாலானதே தொடக்கமும், முடிவும் இடையிலுள்ளவையும், அனைத்தும் பருப்பொருளே! பொருள் ( Matter) தான் மூல முதல் மெய்ம்மை, பிரம்மம், கடவுள் யாவும் என்கிறது விஞ்ஞானம்.

ஆனால், ஆன்மீகம் எனப்படும் பேரியற்கை வாதம் மனிதனை உணர்வாகவும், இயற்கையை மீறிச் செல்லும் பேரியற்கையைச் சேர்ந்தவனாகவும்; இயற்கை, உலகம் என்பவை பேரியற்கையின் உருவாக்கம் அல்லது மாறிய வடிவம் - அதாவது, முழு உணர்வின் உருமாறிய நிலையும், வடிவமும் என்பதாகவும்; வாழ்க்கை என்பது 'உணவு, உடை, உறையுள்' குறித்த விவகாரம் அல்ல. மாறாக, அது ஒரு அற்புதப் புதிர்; அதை விடுவிக்கும் வழிமுறையில் - இயற்கையுலகின் ஒரு பகுதியாகவும், ஒரு சிற்றுணர்வாகவும் தொடங்கிய தாம் - உணர்வில் வளர்ந்து முடிவில் பேருணர்வு அல்லது முழு உணர்வு எனும் மூலான்மாவை, பேரியற்கையைச் சேருவதே மனித இருப்பின், வாழ்க்கையின் இலக்கு என்பதாகவும் - ஏனெனில், முழு உணர்வு (Absolute Consciousness)தான் பெரு வெடிப்புக்கு முன்னிருந்த மூலவித்து, மூல முதல் மெய்ம்மை, பேரியற்கை. அதுவே, பிரபஞ்சப் பரிணாமத்தின் முடிவான முழுமையும். ஆகவே, முழு உணர்வு தான் ஆன்மா, பிரம்மம், கடவுள், பேரியற்கை, பேரிருப்பு, . . . . யாவும் என்பதாகவும் - ஆன்மீகம் எனும் பேரியற்கை வாதம் உணர்வார்ந்த அனுபூதி அனுபவத்தின் மூலம் நேரடியான தரிசனத்தின் வாயிலாகக் காண்கிறது!  

முக்கியமாக, இவ்விடத்தில் விஞ்ஞானம் எனும் இயற்கைவாதத்திடம் ( Naturalism) இருப்பு எனும் பரிணாம இயக்கத்தின் இலக்கு பற்றியும், குறிப்பாக மனித வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு பற்றியும் அதாவது, மரணமிலா முழு-உணர்வு எனும் சத்-சித்-ஆனந்த நிலை பற்றியும், யாதொரு கற்பனையும், ஏன் இல்லாமல் போய்விட்டது என்பது குறித்த விளக்கத்தைக் காண்பது அவசியமாகும்.

விஞ்ஞானமானது முற்றிலும் இயற்கையுலகைச் சார்ந்ததாக இருப்பதாலும், சடப்பொருளை மூலப் பரம்பொருளாகப் பாவிப்பதாலும், இயற்கையின் பௌதீக விதிகளை இறுதியானவை எனக்காண்பதாலும் மிகவும் மட்டுப்பாடானதொரு உலகப்பார்வையிலும், வாழ்க்கைப் பார்வையிலும் அது சிக்குண்டுவிட்டது. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரையில், 'இருப்பது இந்த இயற்கை மட்டுமே!' ஆகவே, அதனுடைய வரையறைகளுக்குள்ளேயே வலம் வருவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்பதாக அது தனது பார்வையைச் சுருக்கிக் கொண்டுவிட்டது.

இயற்கையுலகில் தோன்றிய ஜீவிகள் யாவும், மனிதர்கள் உள்பட,  இயற்கையின் மட்டுப்படுத்தும் விதிகளுக்குட்பட்டு இயற்கையைச் சார்ந்தே இருக்க முடியும், வாழமுடியும்; அதில் மரணம் என்பது தவிர்க்கவியலாத இயற்கை நியதி என விஞ்ஞானம் தீர்க்கமாக நம்புகிறது. ஆகவே, வாழ்க்கை என்பது வெறுமனே மாறும் இயற்கைச் சூழலுக்கு ஈடுகொடுத்து தகவமைந்து அல்லது விஞ்ஞானத்தொழில் நுட்பத்தைக் கொண்டு தற்காத்துக்கொண்டு - மரணம் சம்பவிக்கும்வரையிலும் - உயிர் வாழ்வது, பிறகு தவிர்க்கவியலாத மரணத்தில் முடிந்துபோவது என்பதாகவே விஞ்ஞானம் காண்கிறது, போதிக்கிறது.

ஆனால், ஆன்மீகம் எனும் பேரியற்கை வாதமானது தமது கூரிய உட்-பார்வையின் மூலமாக, 'இயற்கையானது' என்பது எவ்வகையிலும் இறுதியானது அல்ல; அதாவது, பூரணமானது அல்ல எனும் உண்மையைக் கண்டறிந்து கொண்டுள்ளது.

மேலும், இயற்கை என்பது மாற்றத்திற்குட்பட்டது, உலகம் என்பதும் அவ்வாறானதே; இயற்கையுலகம் என்பது ஒரு பரிணாம இயக்கமே; இயக்கம் என்றிருந்தால் அதற்கு நிச்சயம் ஒரு இலக்கு, அடைவிடம் என்பதும் இருந்தேயாக வேண்டும். ஆகவே, மாற்றத்திற்குட்பட்ட இயற்கையுலகை மனிதர்கள் சார்ந்திருக்கலாகாது. அதாவது, இயற்கையுலகைச் சார்ந்திருக்கும் தமது உடலையும், ஆகவே உயிர் வாழ்தலையும் மனிதர்கள் சார்ந்திருக்கலாகாது. ஏனெனில், விரைவிலோ, சற்று தாமதமாகவோ, மரணம் மனிதர்களின் கதையை முடித்துவிடும். ஆகவே, மரணமடைவதற்குள்ளேயே மனித ஜீவிகள் ஒவ்வொருவரும் இந்த இயற்கையுலகை, அதன் பகுதியாகிய உடலை, உயிர்வாழ்தலை கடந்து சென்றாக வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்த பேரியற்கைவாதிகள் இவ்வாறு கடந்து செல்வதற்கான வழியையும் கண்டுபிடிக்கத் தவறவில்லை. ஆம், "உணர்வு " தான் இயற்கையுலகை, உடலை, மரணத்தை, மரணத்தில் முடிந்துபோகக்கூடிய மேலோட்டமான வாழ்க்கையை  கடந்து செல்வதற்கான வழி; அதாவது, பேரியற்கைக்கு, பேரிருப்புக்குச் செல்லும் வழி ஆகும்!

(மனித)வாழ்க்கை பற்றிய பேரியற்கைவாதிகளின் மாபெரும் கண்டுபிடிப்பு என்னவெனில், "வாழ்க்கை அழிவற்றது; மரணம் தெரிவிற்குட்பட்டது!" (Life is Eternal; Death is Optional!) என்பதுதான்

ஆம், வாழ்க்கையை நாம் மிகச் சரியாக, பரிணாமப்பார்வையில் புரிந்துகொள்வோமெனில், வாழ்க்கை (முறையாக, முழுமையாக உணர்வுப்பூர்வமாக வாழப்படும் வாழ்க்கை) மரணத்தில் முடிந்துபோகக்கூடியதல்ல. உடல்தான் மரணிக்கிறது. உணர்வுக்கு (குறிப்பாக, முழு-உணர்வுக்கு, முழு-உணர்வை அடைந்தவர்க்கு) மரணம் கிடையாது.

உண்மையில், மனிதன் என்பவன் அவனது உடலல்ல. உணர்வுதான் மனிதன்! ( ஆனால், மனிதன் இயல்பாகப் பெற்றிருப்பது பரிணாம இயற்கை வழங்கிய "அகந்தை -உணர்வு" (Ego-Consciousness) எனப்படும் சிற்றுணர்வு அல்லது அரை-உணர்வைத்தான். ஆகவேதான், மனிதன் உணர்வில் பரிணமித்து அழிவிலா முழு- உணர்வாகிட வேண்டும் என இக்கட்டுரை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது.) அதாவது, (அரை) உணர்வாகிய மனிதன் தனது உடலையும், இயற்கையுலகையும் சார்ந்திருக்க வேண்டியிருப்பது மிகவும் தற்காலிகமானதொரு நிலைமையாகும். (இயற்கையான நிலைமையில் தனிமனிதர்கள் அதிக பட்சம் 100 ஆண்டுகள் மட்டுமே உயிரோடிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க!)

பேரியற்கைவாதிகள் உலகை, இயற்கையை மறுப்பதில்லை! மாறாக, உலகை, இயற்கையை நிரந்தரமானதொரு நிஜமெனக் கொண்டாடுவதைத்தான் "மாயை" என மறுக்கிறார்கள். ஏனெனில், உலகமானது ஒரு பரிணாம இயக்கமாக இருப்பதால், அது ஒரு இலக்கை நோக்கிச் செல்கிறது. துல்லியமாகச் சொன்னால், உலக இருப்பானது, மனித ஜீவியின் வழியாக தனது பரிணாம முழுமையை நோக்கியே செல்கிறது. இந்த நோக்கத்தை, விழைவை நிறைவேற்றிடுவதற்காகத்தான் அது மனித ஜீவியாக, குறிப்பாக மனித உணர்வாக மாறியுள்ளது.

உண்மையில், மனிதனுள் உணர்வாக மாறிய உலகமானது மீண்டும் தனது பழைய நிலையை, அதாவது, பௌதீக நிலையை திரும்பிப்பார்ப்பதில்லை. மாறாக, பரிணாமப் பார்வையும், புரிதலும் அற்ற மனிதர்கள் தான் பௌதீக உலகை (முறையான நோக்கமின்றி) ஆராய்ந்து கொண்டுள்ளனர். ஆனால், பரிணாமத்தின் மிக அசலான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பேரியற்கைவாதிகள் (அசலான ஆன்மீகவாதிகள்) முன்னோக்கி மட்டுமே பார்க்கிறார்கள். தம்முன்னேயுள்ள பரிணாம இலக்கை மட்டுமே குறிவைத்து தம்முள் ஆழ்ந்து செல்லுகிறார்கள்!

உணர்வைப் பற்றிய மாபெரும் உண்மை யாதெனில், அது ஒரு கட்டத்தில் இவ்வுலகில், இயற்கையில் தோன்றினாலும், தொடக்கத்தில் இவ்வுலைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும், அது இவ்வுலக இயற்கையைச் சேர்ந்ததல்ல! மாறாக, அது "முழு-உணர்வு" எனும் பேரியற்கையின் உலகைச் சேர்ந்ததாகும். எவ்வாறு ஒரு நதியானது மலையில் உற்பத்தியாகிறதோ, அவ்வாறே உணர்வும் மனித உடலில் (குறிப்பாக மூளையின் இயக்கத்தில்) உற்பத்தியாகிறதே தவிர, உணர்வை உடலோ, மூளையோ, பௌதீக உலகமோ உற்பத்தி செய்வதில்லை! ஆம், நதியை மலை உற்பத்தி செய்வதில்லை. மாறாக, நதி உற்பத்தியாவதற்கு மலை ஏற்ற இடமாக இருக்கிறது- அவ்வளவுதான். மேலும், நதியானது மலையையும், அது நெடுக பாய்ந்து செல்கிற வழிகளையும், இடங்களையும் தற்காலிகமாகச் சார்ந்திருக்கிறதே தவிர நதியானது சமுத்திரத்தைச் சேர்ந்ததே! மனித உணர்வும் உடலில், (மூளையில்) தோன்றினாலும் அவ்வாறு தோன்றுவதற்கு அது ஏற்ற இடமாக, அமைப்பாக இருக்கிறது என்பதைத்தவிர உணர்வானது "முழு-உணர்வு" எனும் சமுத்திரத்தை மட்டுமே சேர்ந்தது!

உணர்வாகிய மனிதன் தாம் ஒரு உணர்வு தான் என்கிற உணர்வுக்கு வராமல் (தன்னை நோக்கி விழிக்காமல்), உடலுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதால்; இதன் நீட்சியாக உலகுடனும், இயற்கையுடனும், உலகப் பொருட்களுடனும் தம்மைப் பிணைத்துக் காண்பதால், உடலின் விதியான மரணத்துடன் தாமும் (உணர்வும்) முடிந்து போவதாக தவறாகக் கருதிக் கொள்கிறான் - உடலின் மரணத்துடன் இணைந்து தானும் மாண்டுபோகிறான்.
 
ஆனால், "தான் ஒரு உணர்வுதான்!" என்கிற உணர்வுக்கு விழித்துக்கொள்பவன் முதன்முறையாக உண்மையிலேயே சுயவுணர்வு கொள்கிறான். இதைத் தொடர்ந்து தமது சுய உணர்விலேயே நிலைப்பதன் (ஆழ்வதன்) வழியே உணர்வில் பெருகி உயர்ந்து உணர்வின் உச்சமான முழு-உணர்வு எனும் என்றும் வற்றாத, அழிவிலா, உணர்வுச் சமுத்திரத்தை அடைகிறான். இதைத்தான்  பேரியற்கைவாதிகளான ஆன்மீக முன்னோடிகள் முக்தியடைதல், மரணமிலாப் பெருவாழ்வு, வீடு பேறு, நித்திய ஜீவன், நிர்வாணம், ஆத்மசாட்சாத்காரம், இறைவனடி சேருதல், தேவனின் ராஜ்ஜியம், ஒளியுலகு சேருதல், ஞானமடைதல் அதாவது, ஞான - ஒளி-விளக்கம்-பெறுதல் (Enlightenment) ஆகிய வெவ்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

***

இனி நாம், பொதுவாக, ஆன்மீகம் தொடர்பான விடயங்களையும், குறிப்பாக ஞானமடைதல், இருப்பின் தரிசனம், சத்-சித்-ஆனந்தம் ஆகியவை குறித்தும் பரவலாக நிலவுகின்ற தவறான புரிதல்களையும், கோட்பாடுகளையும் இனம் கண்டு களைவோம்.

"நமது இயல்பான தன்மையே ஆனந்த சொரூபம் தான்" என,  ஶ்ரீ ரமண மகரிஷி போன்ற மகா ஞானிகள் சொல்லும்போது, அவர்கள் குறிப்பிடுவது, மனிதன் முயன்று அடையக் கூடிய, அடைந்தாக வேண்டிய முழு- உணர்வு நிலையைத்தானே தவிர, ஏற்கனவே மனிதன் கொண்டிருக்கும் இயல்பை அல்ல! பொதுவாக, சாதாரணமாக நாம் பேசும்போது, "அடிப்படையில் நாம் அனைவரும் மனித ஜீவிகள் தானே!" எனக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், இது மிகவும் தவறானதொரு கூற்று ஆகும். ஏனெனில், மனிதர்கள் தமது அடிப்படையில் வெறும் விலங்குகளே. இறுதியாகத்தான் (உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில்தான்) மனித ஜீவிகள் உண்மையில் மனித ஜீவிகளாக ஆகிறார்கள். ஆகவே, "நமது அடிப்படை இயல்பே ஆன்மீக சொரூபம் தான்!" என்பது பரிணாம பூர்வமான கூற்றேயாகும், நமது அடிப்படையில் கீழியல்பில் நாம் ஆனந்த சொரூபிகளல்ல. நாம் அடையக்கூடிய மேலியல்பில் தான் நாம் ஆனந்த சொரூபிகளாவோம்.

சிலர் 'சத் தரிசனம்' பற்றிச் சொல்லும் போது, சத் எனப்படும் இருப்பு நிலையே 'இருப்புணர்வு' என்பதாகவும் கூறிவிடுகிறார்கள். இது தவறு. சத் என்பது இருப்பைக் குறிக்கிறது. ஆக, சத் எனும் இருப்பு பரிணமித்து உணர்வாக எழாமல், அது புறத்தேயுள்ள எதையும் அல்லது தன்னையும் தரிசிக்க இயலாது. இருப்பிற்குப் புறத்தே எதுவுமில்லை, இருப்பைத் தவிர! ஆகவேதான் அது தன்னைத்தானே தரிசிக்க வேண்டிய, தனது அசலான முகத்தைக் காண வேண்டிய, தன்னைத்தானே அறிய வேண்டிய, தனது உண்மையான தன்மையைக் கண்டுபிடித்தாக வேண்டிய அவசியம் எழுகிறது. இதே அவசியம்தான் இருப்பின் மிக விசேடமான அங்கமான, இருப்பின் உணர்வுபூர்வமான பிரதி நிதியுமான மனிதனுக்கும் உரியதாகிறது. மனிதன் என்பவன் உண்மையில் உணர்வு பெற்ற இருப்பே, இயற்கையே!

ஆனால், இவ்விடத்தில்தான் இருப்பும், பரிணாமமும், அவற்றின் பிரதான நோக்கமும் பெரும் தடையைச் சந்திப்பதாக உள்ளன. அந்தத் தடை மனிதனே! ஏனெனில், மனிதன் தன்னைத்தவிர, பிற உலக விடயங்களையும், பிரபஞ்சத்தையும், ஆராய்பவனாக, குறிக்கோளற்றவனாக, விளங்குகிறான். மனிதன் தனக்குப் புறத்தேயுள்ள இருப்பை மட்டுமே காண்கிறான், அறிகிறான். அவன் தன்னைக் காண்கிற, அறிகிற, தரிசிக்கிற பிரதான அவசியத்தை தவிர்த்துவிட்டு, தன்னைக் குறித்தவரையில் ஒரு "குருட்டுப்புள்ளி" யாகவே (Blind Spot) திரிந்து கொண்டிருக்கிறான்

ஆக, உணர்வாகிய மனிதன் உணர்வை உணர்வுகொள்ளாமல், தவறாக தமது உடலை தாம் என்று கருதத் தொடங்கி விடுகிறான். இதன் விளைவாக, அவன் "தான் உயிரோடிருக்கிறான்!" எனும் உயிர்-இருப்பை மட்டுமே உணர்கிறான். தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறான்.

ஆனால், "நான் உயிரோடிருக்கிறேன்!" எனும் நிலை வேறு; "நான் இருக்கிறேன்!" எனும் நிலை வேறு. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எவ்வாறென்றால், "நான் உயிரோடிருக்கிறேன்!" என்பது ஒரு உயிரியல் நிஜம் மட்டுமே. எலியும், தவளையும் கூடத்தான் உயிரோடிக்கின்றன. எனினும் "தாம் இருக்கிறோம்!" என்பதை அவை உணருவதில்லை; உணரவும் வழியில்லை! ஆனால், "நான் இருக்கிறேன்!" என்பது எனது உயிர்-இருப்பைக் கடந்த ஒரு உணர்வுபூர்வமான நிஜமாகும். அதாவது, உணர்வு தன்னைத்தானே உணர்ந்து தன்னை உணர்வாக இனம் கண்டு அதிசயித்து, அக மகிழும் நிலையாகும்! இந்நிலை சர்வசாதாரணமானதல்ல. ஏனெனில், அது அவ்வளவு சர்வ சாதாரணமாக எல்லா மனிதர்களிடமும் நிகழ்வதில்லை, ஏற்படுவதில்லை!

இவ்வாறு ஒரு மனிதன் தனது உணர்வை உணர்வு கொள்ளும் போது, "தான் உணர்வுதான்" எனும் உணர்வைப் பெறும்போது என்ன நிகழும்? ஆம், ஒட்டுமொத்த பிரபஞ்ச வரலாற்றில், வெகு அபூர்வமாகவும், அரிதாகவும் நிகழ்ந்திட்ட "விழிப்பு" என்பது நிகழும்! யாதொரு ஓசையும், ஆரவாரமும் இன்றி, ஒருவன் "புத்த -உணர்வு",  "கிறிஸ்து-உணர்வு", "ரமண உணர்வு" எனப்படும் முழு-உணர்வைப் பெற்றிடுவான், முழுமையடைந்திடுவான்!

இந்த முழுமை நிலை (இதுவே பெரு வெடிப்புக்கு முன்னிருந்த மூல நிலை) யின் வெளிப்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால்,

பிறவிக்குருடன் திடீரென பார்வை பெற்று ஒளியைத் தரிசிப்பது போல இருக்கும்!
இருளாகத் தெரிந்தவை அனைத்தும் ஒளியாகத் தெரியும்!

மறைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிப்படையாகத் தெரியும்!

இம் முழுமை நிலையின் தன்மைகள், பயன்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்றால்,

ஒருவன் எதை அறிந்துகொண்டால்
வேறு எதனையும் அறிந்திடத் தேவையில்லையோ
எதை அடைந்துவிட்டால்
வேறு எதனையும் அடைந்திட, அனுபவித்திட,
தேடிட, ஓடிட, நாடிடத் தேவையில்லையோ
அந்த அதியற்புத நிலை தான் இம்முழுமை நிலை!

இதன் பயன்கள் எவை எவையெனப் பார்த்தால், அவற்றைப் பட்டியலிட முடியாது. "முழுமை நிலை" என்பதில் உள்ள "முழுமை" எனும் ஒற்றைச் சொல்லே முழுமையாக எல்லாவற்றையும் தன்னகத்தே உள்ளடக்கிவிடுகிறது! எனினும், பேரியற்கைவாதிகளான ஆன்மீக முன்னோடிகள், "பேரானந்தம்" அல்லது "பேரின்பம்" என்கிற சொற்களைக் கொண்டு, இந்நிலையை குறிப்பிட்டிருப்பதால், அதன் பொருளை நாம் ஆழமாகவும், விரிவாகவும் புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஏனெனில், ஞானத்திற்கும், புரிதலுக்கும் தொடர்பில்லாத தற்கால 'ஞானி'களில் ஒருவர், தங்களுடன் சிந்தித்தறியாத ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டு, 'அடைவதற்கு ஒன்றுமில்லை!' எனவும், " 'ஆனந்தம்' என்கிற வார்த்தையே ஆன்மீகத்தை பெரும் குழப்பத்திற்குள்ளாக்குகிறது!" எனவும்; புத்தர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அரவிந்தர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது ஆன்மீகக் கருத்துக்களை மேற்கோள்காட்டி, அவற்றிற்கு தமது தாறுமாறான விளக்கங்களை அளித்தும், ஏதோ அவர்கள் அனைவரும் அஞ்ஞானிகள் என்பது போலவும் கிண்டலடித்து தூற்றிப்பேசி தம்மை உயர்த்திக் கொள்ளும் மலினமான யுக்திகளைக் கையாண்டுவருகின்றார்.

ஆனால், "ஆனந்தம்",  "பேரானந்தம்" அல்லது "பேரின்பம்" ஆகிய சொற்களை ஆன்மீக முன்னோடிகள் மிகவும் பிரத்தியேகமான அர்த்தத்தில் மட்டுமே பிரயோகித்துள்ளனர். பேரானந்தம் எனும் சொல் முற்றும் முடிவான நிலையைக் குறிப்பதாகும். அதற்கும், சாதாரணமாக பலரும் திபுதிபுவென ஆன்மீகத்திற்குள் நுழைந்து தேடிக்கொண்டிருக்கும் 'குச்சி மிட்டாய்' போன்ற 'ஆனந்த அனுபவங்கள்' எனக் குறிப்பிடப்படுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. இன்னும், 'அடைவதற்கு ஒன்றுமில்லை' என அரற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் அதில் யாதொரு பங்கும் இல்லை.

மேலும், ஒருவர் வாழ்க்கையின் சாரமான உண்மையை அறிய விரும்புகிறார் என்றாலும், தூய்மையான புனிதமான இரண்டற்ற நிலையை அடையவிரும்பினாலும், அல்லது ஞானம் என்றால் என்னவென்றே தெரியாமல், பெயரற்ற பெரும் தேடலில் ஈடுபட்டிருந்தாலும்; உண்மையான ஞானிகள் குறிப்பிடுகின்ற பேரானந்தத்தை அடைய விரும்பினாலும் அதில் தவறில்லை! அதற்கான தகுதிகளை அவர் வளர்த்துக்கொள்ளட்டும். அது சாமான்ய இன்ப நாட்டமாகாது! அதே வேளையில், இன்ப நாட்டம் என்பது ஒரு அசிங்கமான விடயமோ, அருவருப்பான, தவறான விடயமோ அல்ல.

ஒருவர் இன்ப நாட்டத்தைப் பின்பற்றிச் செல்லட்டும். அவர் எங்கே போய்விடுவார்? ஏன், அவர் எங்கே வேண்டுமானாலும் போகட்டும். கோடி கோடியாகச் சம்பாதிக்கட்டும்; எல்லா சௌகரிய சம்பத்துக்களையும் அனுபவிக்கட்டும். எதுவும் அவரை நிறைவு செய்யாது! அவரது அக-வறுமையை எதுவும் போக்காது, நீக்காது. உண்மையில் இன்ப நாட்டம் அல்ல பிரச்சினை. எதை ஒருவர் நாடுகிறார், எதற்காக நாடுகிறார் என்பதில்தான் பிரச்சினையுள்ளது. எது உண்மையான இன்பம் என்பது தெரியாத வரை இன்ப நாட்டம் ஒழியாது. எல்லா நாட்டமும் இன்ப நாட்டமே, ( எல்லா பயமும் மரண பயமே என்பதைப்போல!). அதில் சாமான்யமானதும், அசாமான்யமானதும் அடக்கமே! ஒருவரிடம் இன்ப நாட்டம் இல்லையெனில், ஒன்று அவர் ஞானம் எனும் பேரின்ப நிலையை அடைந்திருக்க வேண்டும் அல்லது அவர் செத்துப்போயிருக்க வேண்டும்! ஏனெனில், இன்ப நாட்டம் தான் வாழ்க்கையின் மிக அடிப்படையான உந்து விசை, உந்து சக்தி.

ஞானி என்பவன் இன்பத்துக்கு எதிரானவன் அல்ல. அதே வேளையில், துன்பத்துக்கு நண்பனும் அல்ல! இன்பம் துன்பம் இரண்டையும் கடந்து வாழ்க்கையை, இருப்பைத் தரிசித்தவனே ஞானி!

சாதாரண சாமான்ய இன்பத்தை அறியாதவன் பேரின்பத்தை அறிய முடியாது. ஒரு ஞானி தனது காலைச் சிற்றுண்டியாக இட்லி (சூடாக), சட்னி, சாம்பார், கொஞ்சம் மிளகாய்ப்பொடி (நல்லெண்ணையுடன் தான்) சாப்பிடும்போதும், சரி, பிரபஞ்ச உண்மையைப் பற்றி சிந்திக்கும் போதும் சரி, அதே குன்றாப் பேரார்வத்துடன் தான் ஈடுபடுகிறான்! ஆனால், அவனது இன்ப நாட்டம் அசாதாரணமானது. அது எவ்வொரு குறிப்பிட்ட விடயத்துடனும், பொருளுடனும் தங்கித் தேங்கிவிடுவதில்லை!

பேருண்மை, முழுமையான ஞானம் என்பவற்றிற்கு இன்னுமொரு பெயர்தான் பேரின்பம், அல்லது பேரானந்தம் என்பது. பேரின்பம் என்பது பாலும்,தேனும் ஆறாய் ஓடும் ஒரு இடமோ, சொர்க்கமோ அல்ல! அது ஒரு உணர்வு; அது எதைப்பற்றிய உணர்வும் அல்ல! ஏனெனில், அதுவே முழு-உணர்வு. உணர்வானது (இருப்பிலிருந்து தன்னை முழுவதுமாக மீட்டுக்கொண்டு) தன்னைத்தானே உணர்வு கொண்டு தன்னை முழுமையாகக் கண்டடைந்த நிலை!

இம்முழுமை நிலையே மெய்ப்பொருள் நிலை. சிலர் சொல்வதுபோல, நம்முடைய சத் அம்சமான உயிர்-இருப்பு நிலையோ, (அல்லது நம் சித் அம்சமான சிற்றுணர்வின் இருப்பு நிலையோ), பிரம்மம் எனும் மெய்ப்பொருள் நிலை அல்ல. மாறாக, சத் அம்சம் முழுவதுமாக சித் அம்சமாக மாற்றமடைந்து, பேருணர்வு அல்லது முழு- உணர்வு நிலையை அடைவதுதான் மெய்ப்பொருள் நிலையாகும். இருப்பு என்பது உண்மையில் வேறு, அல்லது மாறு வேடத்தில் இருக்கும் உணர்வே தவிர வேறில்லை! (Existence is nothing but Consciousness in Disguise!). உணர்வின் மாறிய வடிவமும், நிலையும் தான் இருப்பு! இருப்பு, இயற்கை, பொருளாலான பிரபஞ்சம் என எதுவாயினும் இறுதியில், உணர்வின் சொற்களில்தான் (In terms of Consciousness) புரிந்துகொள்ள முடியுமே தவிர, பொருண்மையாலான இருப்பின் சொற்களில் அல்ல!

இருப்பு என்பது தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும்பரிணாம இயக்கமாகும். அதன் நெடும் பயணத்தின், இடைவழியில், எவ்வொரு புள்ளியிலும், கட்டத்திலும் அது பாதி-நிஜம் மட்டுமேயாகும்! அதனுடைய பயணத்தின் முடிவான அடைவிடத்தை அடையும்போது மட்டுமே இருப்பானது "நிஜமான-நிஜமாக", மெய்ப்பொருளாக ஆகிறது! அப்போதுதான், முற்றும் முடிவான எவ்வகையிலும் வலிந்து தக்கவைக்கப்பட வேண்டுமெனும் தேவையைக் கடந்த பேரானந்த நிலை மலரும். இதுவே பிரம்மம், பேரிருப்பு, பேரியற்கை!

இந்நிலையை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நேர்முகமாகவும், நேர்மறையான அணுகுமுறையின் வாயிலாகவும் அடையவும், அனுபவம் கொள்ளவும், உணரவும் ( அதாவது 'ஐஸ்-க்ரீம்' சாப்பிடுவதைப்போல அனுபவிக்கவும்) முடியும், முடியும், முடியும்!

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! ஏனெனில், இதுதான் மனிதனின் அசலான சொரூபம்; இதுதான் அவனது சொந்த வீடும், பேறும். ஒருவனது சொந்த வீட்டிற்குச் செல்ல எவரும் வழி காட்டத் தேவையில்லை! சொந்த வீட்டிற்குச் செல்லவேண்டும் என்கிற மாபெரும் ஏக்கம் மட்டுமே வேண்டும். இதை "அடைய முடியாது" என ஒருவர் சொன்னால்தான் நாம் ஆச்சரியப்படவும், அதிர்ச்சியடையவும், அவரது 'புத்தி சுவாதீனம்' குறித்து சந்தேகப்படவும் வேண்டும்.

இவை யாவும் கற்பனையான விடயங்களோ, அல்லது சாதாரண மனித நிலையில் திருப்தியடைய இயலாத ஒரு விபரீத மனத்தின் அதீதக் கருத்தாக்கங்களோ அல்ல. இவை பரிணாம பூர்வ உண்மைகளாகும். இவை கடினமானவையாக இருப்பதாகத் தெரியலாம். ஆனால், இறுதியில் மகா சுகம் உள்ளது!

உண்மையில், பேருண்மை, ஞான-ஒளி-விளக்கம், முக்தி, மோட்சம், விடுதலை, வீடுபேறு,  எனப்படுபவை பேரானந்தமாக இல்லையெனில், அவற்றைத் தேடுவது, அடைவது பயனற்றது, தேவையற்றது. பேரானந்தம் என்பது ஒரு இன்ப உணர்வு அல்ல! அது ஒருமையும் முழுமையுமான நிலை. அதிலிருந்து பிரியாமல், சற்று விலகியிருந்து, அதை ஒரு இன்ப நிலையாகவும், அனுபவமாகவும் உணர முடியும்! பிளவற்ற முழுமை நிலையில், ஆனந்தம், ஆனந்திப்பவன், ஆனந்தம் தரும் பொருள் யாவும் தானாகவே இருக்கிறான்!

பேரானந்தம் எனும் பேருண்மையின் ஒளி எவற்றின் மீதெல்லாம் படிகின்றதோ அவை எல்லாம் அந்த ஒளியைப் பிரதிபலிப்பதால் பேரானந்தத்தின் தன்மையையே அவை பிரதிபலிக்கின்றன.

ஒரு புறம் பேரானந்தம் இன்னொரு புறம் உடம்பில் புற்று நோய்க்கட்டியின் பொறுக்கமுடியாத வலி. ரமணர் சொல்கிறார் (அவர்தான் சொல்லமுடியும்!) :

"அனைத்தும் ஆனந்தமே; துக்கம் கூட
துக்கானந்தமே"


இன்னொருவன் சொன்னான்:

"தீக்குள் விரலைவிட்டால் உன்னைத்
தீண்டும் இன்பம் தோணுதடா!"


இவன் தான் பாரதி.

பேரானந்தம் தான் பேருண்மை, பேருண்மை தான் பேரானந்தம். பேரானந்தத்திற்கு வேறு பெயர்களும் உள்ளன. அர்த்தம், புரிதல், ஞானம், அன்பு, அழகு, உயர் பேரறிவு, கடவுள் . . . . இவை எல்லாமே அந்த இறுதியான முழு-உணர்வு நிலையின் அம்சங்களாகும்.

ஞான விடுதலை என்பது இருக்கின்ற மட்டுப்பாடான (சுயத்தின்) நிலையை, முழுமைக் குறைவான நிலையை மறுப்பதோ, மாற்றுவதோ, சீரமைப்பதோ, அல்லது அப்படியே ஏற்றுக்கொள்வதோ, மறுக்காமல் இருப்பதோ அல்ல. மட்டுப்பாடு என்பது உணர்வுக்குறைவான நிலையே, உணர்வற்ற தன்மையே.

ஞானம், ஞான விடுதலை  என்பது எதிலிருந்தும் விடுபடும் நிலையல்ல! எதையும் அடையாமலிருக்கும் நிலையுமல்ல! மாறாக, எல்லாவுமாகிய நிலை, எல்லாவற்றையும் அடைந்த முழு நிறைவான நிலை!

தன்னைத் தொலைத்துவிட்டவனல்ல; முழுமையாகத்
தன்னைக் கண்டடைந்தவனே ஞானி!

சிலர் இருப்பின் அடித்தளம் (GROUND OF BEING)பற்றிப் பேசுகிறார்கள். ஆனல், இருப்பின் அடித்தளமென்பது உணர்வற்ற பௌதீகச் சடத்தன்மை தான். அதற்கும் கீழே (பெரு வெடிப்புக்கு முந்தைய மூல வித்து நிலைக்கு) நாம் செல்ல முடியாது. பரிணாமத்தில் பின்னோக்கிச் செல்வதற்கு வழியே இல்லை! மூல வித்து வெடித்து மறைந்து, முளைத்து, செடியாக வளர்ந்து, மாபெரும் பிரபஞ்ச விருட்சமாக விரிந்து, தற்போது 1500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி அல்லது மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். ஆகவேதான், இக்கட்டுரை "இருப்பின் உச்சம்" (SUMMIT OF BEING) எனும் புதிய புரிதலின் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசுகிறது. இறுதி மெய்ம்மையாகிய முழு-உணர்வு பற்றிப் பேசுகிறது.

ஆம், அனைத்து வகை பிரவாகங்களும் தற்போது முடிவுறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் உணர்வுப் பரிணாமம் உணர்வற்று தேங்கி நிற்கிறது. மனிதனின் முன் உள்ள இறுதிச் சவால் கடவுள் தொடங்கி வைத்ததை மனிதன் விரைவாக முழுமைப்படுத்தி முடித்து வைப்பதே! அதற்கு ஒரே ஒரு "உள்-பார்வை" (INSIGHT) மட்டுமே போதும்! அது எங்கே, எவரிடம் உள்ளது? அந்த மென்-பொருள் (திறவுகோல்) எவரிடமும் எந்தக் கடையிலும் இல்லை. அதை எந்த ஞானியும் எவருக்கும் கொடுக்க இயலாது. ஒவ்வொருவரும் தானே அதை தன்னுள்ளே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஞானத்தின் இடுக்கமான வாசல் வழியே கும்பல் கும்பலாக, கூட்டமாகச் செல்ல இயலாது

இறுதியாக, ஒவ்வொரு மானிடனும் செய்ய வேண்டியது, அனைத்துப் பிரவாகங்களிலிருந்தும் ஒரே தாவலில் வெளியேறிடுவது மட்டுமே!

ஆம், பெரு வெடிப்பிலிருந்து தொடங்கிய இருப்பின் பிரவாகம், மனித சமூகம் படைத்துச் செல்லும் ... வரலாறு எனும் பிரவாகம், தனி மனிதர்களின் அகந்தை அல்லது உணர்-மனத்தின் சொந்தப் பிரவாகம் . . . . என அனைத்து பிரவாகங்களும், இயக்கங்களும் முடிவுற்ற நிலையே ஞானமடைதல், ஞான விடுதலை, பேரானந்த நிலை, முக்தி . . . .  . ..  யாவும்!

ஆகவே வாசகர்களே, உடனே உணர்வுக்கு வந்திடுங்கள். ஆம், நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், விழிப்பைத்தவிர பிறவனைத்தும் விபத்துக்களே! விழிப்பு மட்டுமே அனைத்து மட்டுப் பாடுகளின் பிரவாகங்களிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரே வழி!


மா.கணேசன் /Conceived and completed on 06.08.2013/ Uploaded on 22-09-2024

Friday, 30 August 2024

"நான்" என்பது உங்களுக்குள்ளே எங்கேயிருக்கிறது?


 

 

 

 

 

 

 

எப்போதும் "நான்", "நான்", "நான்" என்கிறீர்களே, அந்த "நான்" உங்களுள் எங்கேயிருக்கிறது? நீங்கள் "நான்" என சொல்லும்போதும், எண்ணும் போதும், அச்சொல் உங்களில் எதைக்குறிக்கிறது? உங்கள் உடலைத்தான் "நான்" எனச் சொல்லுகிறீரா? அல்லது "நான்" எனச் சொல்வது உங்கள் மனமா? உண்மையில் மனம் என்பதுதான் நீங்களா? உங்கள் மனம் எங்கேயிருக்கிறது?  உங்கள் தலையினுள் உள்ள மூளையின் உள்ளேயிருந்து உதிக்கும் ஒரு அம்சம் தான் "நான்" என்று எண்ணுகிறதா, சொல்கிறதா?

அந்த மனிதன் ஒரு சாலை விபத்தில் சிக்கி தலையில் பலமாக அடிபட்டு நினைவிழந்து "கோமா" நிலையில் ஆழ்ந்துகிடக்கிறான். அவனால் பேச முடியவில்லை; உடலை, கை கால்களை அசைக்க முடியவில்லை. மருத்துவமனையில் உயர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறான். மருத்துவர்கள் சொல்கிறார்கள், "உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை; ஆனால் அந்த மனிதனுக்கு நினைவு எப்போது திரும்பும் என்று சொல்ல முடியாது!" என்கின்றனர். சிலரது விடயத்தில், மாதக்கணக்கில், அல்லது வருடக்கணக்கில் ஆகலாம் எனப்படுகிறது.

ஆம், நினைவு, அதாவது உணர்வு (Consciousness) திரும்பினால் தான் அந்த மனிதன் மனிதனாக எழுவான். அதுவரை, அவன் வெறும் ஒரு உடல், உயிருள்ள உடல் மட்டுமே! மனமற்ற, உணர்வற்ற, வெறும் உயிருள்ள உடல் மனிதனாகாது! ஆகவே, 'நீங்கள்' என்பது உங்கள் உடல் அல்ல! இன்னும் உங்கள் மூளையும் அல்ல! மாறாக, உங்கள் மூளையின் உள்ளே நடைபெறும் மிகவும் சிக்கல் வாய்ந்த நிகழ்வுமுறையின் விளைவாகத் தோன்றும் 'உணர்வு' என்பதுதான் உண்மையில் நீங்கள் ஆவீர்! அந்த உணர்வு தான் "நான்" என்கிறது!

அந்த உணர்வு தோன்றுவதற்கு, உதிப்பதற்கு ஒரு மூளை அமைப்பு வேண்டும், அந்த மூளை-அமைப்பைத் தாங்குவதற்கு ஒரு உடல் வேண்டும்! அந்த உடல் இருப்பதற்கு, இயங்குவதற்கு நீர், நிலம், காற்று மண்டலம் ஆகியவற்றைக்கொண்ட ஒரு பூமிக்கிரகம் வேண்டும். அந்த பூமிக்கிரகம் இயங்குவதற்கு, ஒரு சூரியனை மையமாகக் கொண்டு சுழலும் பல கிரகங்களைக்கொண்ட அமைப்பான ஒரு சூரியக்குடும்பம் வேண்டும்! அந்த சூரியக்குடும்பம் இருந்தியங்குவதற்கு, கோடானுகோடி கோடி சூரியக் குடும்பங்களால் ஆன ஒரு மாபெரும் 'கேலக்ஸி' (Galaxy) எனும் அமைப்பு வேண்டும்! நமது சூரியக் குடும்பம் அமைந்துள்ள கேலக்ஸியின் பெயர் "பால்வீதி மண்டலம்"  (Milky Way Galaxy). இந்த பால்வீதி மண்டலமானது கோடானுகோடி கோடி கேலக்ஸிகளில் ஒன்றுமட்டுமே! இந்த ஒட்டு மொத்த அமைப்பான பிரபஞ்சம் இயங்குவதற்கு எல்லையற்ற வெளி (Space) வேண்டும்! இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும், 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்,   "பெரு வெடிப்பு" (Big-Bang)எனும் ஒரு நிகழ்வில் தொடங்கியது என தற்கால விஞ்ஞானம் சொல்லுகிறது!

இந்த பெரு வெடிப்பு நிகழ்வு பிரபஞ்சத்தின் ஒரு (தொடக்க) முனை என்றால். உணர்வாகிய நீங்கள் தான் இப்பிரபஞ்சத்தின் மறுமுனையாகத் திகழ்கிறீர்கள்! இந்த மறுமுனை ஒரு முற்றுப்புள்ளி அல்ல, மாறாக, அது ஒரு அம்புக்குறியே எனலாம்! அந்த அம்புக்குறி பரிணாமம் முடிந்துவிட வில்லை மேற்கொண்டு தொடரவேண்டியுள்ளது என்பதையே குறிக்கின்றது!

உணர்வாகிய நீங்கள், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பது உங்கள் குழந்தைப் பருவத்தில் தொற்றிக்கொண்ட ஒரு தவறான பழக்கமே, பார்வையே! அதே வேளையில்,  உணர்வாகிய நீங்கள் இருந்தியங்குவதற்கு அவசியம் ஒரு உடல் வேண்டும் என்பதால், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் அல்ல என்றாலும், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பதுடன் மட்டும் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும்! பரிணாம ரீதியாக (Evolutionary Process), நீங்கள் உங்கள் உடலையும் தாண்டி, இப்பூமிக்கிரகம், சூரியக் குடும்பம், பால்வீதி மண்டலம், மற்ற அனைத்து கேலக்ஸிகள் என ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும் இடமுள்ளது! பிரபஞ்சத்தை ஒரு விருட்சம் (மரம்) எனக்கொண்டால், மனிதர்களை அவ்விருட்சத்தின் பிஞ்சுகள் எனக்கொள்ளலாம்!

மூளையின் உள்ளே நடைபெறும் மிகவும் சிக்கல் வாய்ந்த நிகழ்வுமுறையின் விளைவாகத் தோன்றும் 'உணர்வு' தான் உண்மையில் நீங்கள் என்றோம்! அந்த உணர்வு தான் மனம் என்பதை ஒரு கருவியாகக்கொண்டு,  "நான்" என்று சொல்கிறது! ஆனால், இந்த "நான்" உணர்வு, மனத்தின் பலவித மயக்கங்களின் விளைவாக, தன்னை தனது உடலுடனும், தன்னைச்சுற்றியுள்ள பல்வேறு உறவுகள், பொருட்கள், செல்வங்கள், பட்டங்கள், பதவிகள், சொத்துக்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், அதனால், தனது அசலான இலக்கான, பரிணாம முழுமையை, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையடுத்த வீடுபேற்றை அடைவதிலிருந்து தடுக்கப்பட்டு பரிணாமத் தேக்கத்திற்கு உள்ளாகி, தனது பிறவிப்பயனை அடையாமல் வீழ்ச்சியடைகிறது! இந்த வீழ்ச்சியானது அந்த உணர்வை (அதாவது உங்களை) மறுசுழற்ச்சிக்கு உள்ளாக்கி, மீண்டும் மீண்டும் பிறவி யெடுக்கும் அவலத்திற்கு உள்ளாக்குகின்றது!

ஆக, ஒவ்வொரு மனிதனும், முதலில் தான் ஒரு "உணர்வு" தான் என்ற உண்மைக்கு விழித்தாக வேண்டும்! அந்த விழிப்பு தான் முழுமையின் வாசல் ஆகும்! முதலில் விழிப்படையுங்கள், பிறகு அந்த வாசல் வழியாக உள்ளே பிரவேசித்து, அது எத்தகைய புரிதலை, பயனை, அனுபவத்தைத் தருகின்றது என்பதை நேரடியாக அறிந்து கொள்ளுங்கள்!

*

விளக்கக் குறிப்புகள்:

1) சிலர், "நான்" என்ற உணர்வு நிலை சுயநலம் கொண்டது, அது அகந்தை, ஆணவம் ஆகியவற்றுக்கு இடமளிப்பது. ஆகவே, அது நசிப்பிக்கப்பட வேண்டியது என்கின்றனர். ஆனால், இப்போக்கு தவறானது! ஏனென்றால், விழிப்படையாத "நான்" உணர்வு தான் மட்டுப்பாடானது; அகந்தை, ஆணவம் ஆகியவற்றுக்கு இரையாவது! ஆகவே, நான் என்ற உணர்வு நசிப்பிக்கப்படவேண்டியதோ, அழிக்கப்படவேண்டியதோ அல்ல! அப்படி அழிக்கப்பட்டால், மனிதன் ஒரு தவளையைப்போலத்தான் இருப்பான்! மாறாக, "நான்" உணர்வு மலர வேண்டும்! விழிப்படைய வேண்டும்!

2) சிலர், "நான்" என்ற உணர்வு சுயநலம் மிக்கதாகையால், அது எல்லோரையும் அரவணைக்கும் விதமாக "நாம்" என்ற சமூக உணர்வு கொண்டு பொது நலம் கொண்டு இயங்கவேண்டும் என்பர்! இதுவும் மிகவும் மட்டுப்பாடனதொரு நிலையே! ஏனென்றால், விழிப்படையாத "நான்" களின் கூட்டு என்பது பூச்சியங்களின் கூட்டுத்தொகையைப் போன்றே, பூச்சிய மதிப்பையே தரும்! மனிதர்கள் யாவரும் சேர்ந்து ஒரு சமூகமாக இணக்கமாக வாழ்தல் அவசியம், முக்கியம் தான்! ஆனால், விழிப்படையா மனிதர்கள் தனியே தீவு போல வாழ்ந்தாலென்ன? அல்லது சேர்ந்து சமூகமாக வாழ்ந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான்!

3) "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை !" என்று சொல்லப்பட்டது. ஆனால், வரலாற்றில் இன்றுவரை நாம் சமூகமாக கூடி இயங்கி வந்துள்ளோமே தவிர, நாம் "வாழ்தல்" என்பதன் உண்மையான அர்த்தத்தில் இதுவரை வாழவேயில்லை! இதுவரை நாம் உயிர் "பிழைத்தல்" (Survival), என்பதைத்தான் "வாழ்தல்" (Living) என்பதாகச் செய்துவந்துள்ளோம்! அதிலும் அந்த உயிர் "பிழைத்தல்" என்பதையும் கூட எல்லோரும் ஒரு கௌரவமான வகையில் மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் கூட நாம் வகுக்கத் தவறியுள்ளோம்! எங்கும், எதிலும் போட்டி, பொறாமை, வெறுப்பு, வன்மம், வன்முறை நிறைந்த  உணர்வற்ற மிகவும் வினோதமான ஜந்துக்களைப்போலவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இதற்கு, நம்முடைய பொருளாயத மதிப்பீடுகளே காரணம்.

4) ஏனென்றால், நம்முடைய சுயம் குறித்த பார்வை (Self-View) நம் உடலை மையமாகக் கொண்டமைந்த காரணத்தால், உயிர்-பிழைத்தல் என்பது நமது உடலின் நச்சரிப்பு மிக்க தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே என்றாகிவிட, உணவு, உடை, உறையுள், சௌகரிய சம்பத்துக்கள் ஆகிய தேவைகளைப் பெற்றிட பணம், பணம் மட்டுமே பிரதானம் என்றாகிவிட, சமூகம், அல்லது நாடு என்பது ஒரு மாபெரும் போட்டிக் களமாக, பந்தயக்களமாக மாறிவிட, 'இருப்பவன்', 'இல்லாதவன்'; ஏழை, 'பணக்காரன்' என ஏற்றத்தாழ்வு நிலைகள்உருவாகி நிலைத்துவிட்டன! பணம் அல்லது பொருளாதார அளவீட்டிலான இந்த அவலம் (ஏற்றத்தாழ்வு நிலைகள்) ஒருபுறமிருக்க; சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இன்னொரு புறம் மனிதர்களைக் கொடூரமாக அலைக்கழித்து வருகின்றது!

5) நம்முடைய சுயம் குறித்த பார்வை (Self-View) நம் உடலை மையமாகக் கொண்டு அமையாமல் (ஏனென்றால், மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல!) உணர்வை மையமாகக் கொண்டதாக மாற்றமடையாத வரை, சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய வழியேயில்லை! ஆம், மனிதர்கள் தங்களது உடல்-மைய அடையாளத்தை விட்டொழித்து,  உணர்வு-மைய அடையாளத்திற்கு உயரவேண்டும்! உடல்-மைய அடையாளத்திற்கும், உணர்வு-மைய அடையாளத்திற்கும் இடையே ஒரு பெருந்தடையாக இருப்பது, ஒருவருடைய மனம் என்பதாகும். மனம் என்பது எல்லாவித மயக்கங்களுக்கும், கற்பனைகள் மற்றும் கட்டுக்கதைகளுக்கும் ஆட்படக்கூடிய ஒரு தளம் ஆகும். இந்த மன-மைய அடையாளமே உடல்-மைய அடையாளத்தை விட ஆபத்தானதாகும்!(ஏனென்றால், மனிதன் என்பவன் அவனது மனம் அல்ல!) விதிவிலக்கின்றி எல்லா மனிதர்களும் இந்த மன-மைய அடையாளத்திற்கு பலியாகின்றனர். மனிதர்களின் அனைத்துவித மட்டுப்பாடுகளுக்கும், குறைபாடுகள், தீமைகளுக்கும் காரணம்; சுருக்கமாக, மனிதர்கள் மனிதர்களாக இல்லாததற்குக் காரணம் இந்த உடல், மற்றும் "மன-மைய" அடையாளங்களில் சிக்கியிருப்பதேயாகும்.

6) உண்மையில், எந்த மனித உடலும் "நான்" என்று சொல்வதில்லை! மாறாக, மனிதனின் மனம் தான் "நான்" என்று சொல்கிறது. மேலும், ஒவ்வொரு மனிதனின் மனமும், அது சார்ந்திருக்கும் உடலை பரிதியாக, கூடாகக் கொண்டு, தன்னை மையப்படுத்திக்கொண்டு, தான் 'இப்படிப்பட்டவன்', அல்லது 'அப்படிப்பட்டவன்' என தன்னைப் பற்றிய ஒரு கட்டுக்கதையை, பிம்பத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டு புறத்தே சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மனம் இல்லையென்றால், எவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றிய யாதொரு அடையாளத்தையும், பிம்பத்தையும் கொண்டிருக்க மாட்டான். வெறுமனெ ஒரு தவளையைப்போலவே இரையையும், இணையையும் தேடித் திரிந்து வாழ்ந்து செல்வான். பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து செல்கின்றனர். " எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தானே!" என்ற பரவலான கூற்றே அதற்குச் சான்றாகும். பெரும்பாலான மனிதர்களின் மனமானது உடலையும், அதனுடைய நச்சரிப்பான தேவைகளையும் பிரதிநிதித்துவம்  செய்வதிலேயே வாழ்க்கையைக் கழித்துவிடுகிறது. ஆனால், மனமானது அதன் ஆதாரமான, சாரமான உணர்வைத்தான் பிரதிநிதித்துவம் செய்வதாய் இருக்கவேண்டும். அதாவது உணர்வின் பிரதிநிதியாகத்தான் மனம் செயல்படவேண்டும். ஒவ்வொரு மனிதனும், தான் ஒரு உடல் அல்ல; மனமும் அல்ல; மாறாக "தான் ஒரு சுதந்திர உணர்வு" (A Free Spirit) என்ற புரிதலுக்கு வரவேண்டும். இதுவே விழிப்புக்கான முதல் படி ஆகும்!

7) மனிதனின் சுயம் என்பது, உடல், மனம், மற்றும் உணர்வு (Consciousness)என மூன்று பகுதிகளைக்  கொண்டது. உடல் என்பது மனிதனின் மேலோடு போன்றதாகும். மனம் என்பதைத் தாங்கும் ஒரு பாத்திரம் போன்றது. அடுத்து, மனம் (Mind) என்பதை மனிதனின் மிக முக்கியமான இடை நிலைச் சுயம் எனலாம். உணர்வு (Consciousness)என்பது மனம் என்பதற்கும்  ஆதாரமாக அமைந்துள்ள மனிதனின் உண்மையான, சாரமான சுயம் ஆகும். உடலின் முக்கியத்துவமானது மனதைத் தாங்குவதற்கான பாத்திரமாக அமைந்திருப்பது தான். மனம் என்பதன் முக்கியத்துவமானது உணர்வை எட்டக்கூடிய ஒரு பாலமாக அமைவதால் மட்டுமே. உடல், மனம், உணர்வு ஆகிய இம்மூன்றில், உணர்வு மட்டுமே அனைத்திலும் முக்கியமான அம்சம் ஆகும். "நான்" என்பதன் பிறப்பிடம் உணர்வு தான். ஆகவேதான், உணர்வுதான் மனிதன் என்கிறோம். ஆனால், மனிதர்களோ தங்களை உடலாகவும், மனமாகவும் அடையாளப்படுத்திக்கொண்டு முடக்க நிலையில், தேக்க நிலையில் ஆழ்ந்துகிடப்பதால், அவர்களால், தாம் உணர்வு என்பதை உணர இயலாத நிலையில் உள்ளனர்.  இதற்குக் காரணம், மனிதர்கள் தங்களை உடலாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டதால், கைகள், கால்கள், மனம் ஆகியவற்றைப்போல உணர்வும் அவர்களின் ஒரு பாகம் என்பது போல பாவித்துவருகிறார்கள் என்பதுதான். ஆனால் உடல், மனம் ஆகியவைதான் உணர்வின் பகுதிகளாகப் பாவிக்கப்பட வேண்டும். உண்மையில் உணர்வுக்கு பரிணாமச் சேவை செய்வதற்காகவே உடலும், மனமும் அமைந்துள்ளன.

8) உண்மையில், அரிதிலும் அரிதாக வெகு சிலரே உணர்வுக்கு வருகிறார்கள். அதாவது தாங்கள் ஒரு உணர்வு என்பதை உணர்கிறார்கள்;  உணர்வுக்கு விழிக்கிறார்கள். உணர்வாகிய மனிதன் தன்னை நோக்கி விழிப்பது என்பது அவ்வளவு இயல்பான, எளிதான ஒரு விடயமாக இல்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே! இவ்வாறு தன்னைத் தானே விழிப்புக்கு உட்படுத்திக்கொள்ளாதவரை, மனிதன் ஒருபோதும் உண்மையான, முழுமையான மனிதனாக ஆக முடியாது! ஏனெனில், விழிப்பு தான் மனிதத்தின் சாரம். விழிப்பு என்பது முதலும் இறுதியானது; ஆகவே அதுவே மனிதனின் முழுமையுமாகும்.  மனிதம் என்பது, நாம் சாதாரணமாகக் குறிப்பிடும் மனிதத் தன்மை என்பதல்ல! மனிதத் தன்மை என்பது மனிதம் என்பதன் மிகவும் மங்கலான  ஒரு பிரதிபலிப்பு (சந்திர ஒளி போன்றது) மட்டுமே. மனிதம் என்பது சூரியன் போன்றது, பிரகாசமான சுய- ஒளியைக் கொண்டது!

9) "நான்" என்ற உணர்வை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். "நான்" என்ற உணர்வு தான் மனிதன். மனிதனுக்கு, அதாவது உங்களுக்கு ஒரு உணர்வு உள்ளது என்பது தவறான புரிதல் ஆகும். ஏனென்றால், உணர்வு தான் நீங்கள்! உங்களுக்கு ஒரு உணர்வு உள்ளது எனில். நீங்கள் வேறு, உணர்வு வேறு என்றாகிவிடும். அப்போது தேவையில்லாமல் நீங்கள் யார் என்ற கேள்வி எழும். பொதுவாக, "நான்" என்பதை ஒரு ஆளாக, அல்லது ஒரு நபராக பாவிக்கிறோம். அதாவது நம்மை நாமே ஒரு ஆளாக, நபராக நாம் கருதிக் கொள்கிறோம். ஆனால், "நான்" என்பது ஒரு நபரை, ஆளைக் குறிப்பதற்கானதல்ல; அவ்வாறு குறிக்கப் பயன்படுவது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. "நான்" என்பது அதன் சாரத்தில்  அவதானிப்பிற்கான ஒரு மையம் (Center of Observation) ஆகும். அது ஒரு  படைப்பாக்க விசை (Creative Force) ஆகும். "நான்" என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்ததோ, சேர்ந்ததோ; அல்லது ஒரு குறிப்பிட்ட ஆளை, நபரைக் குறித்ததோ அல்ல; மாறாக, அது பிரபஞ்சமளாவிய அம்சம், அல்லது மெய்ம்மை  ஆகும். "நான்" உணர்வு அதன் குழந்தைப்பருவத்தில் 'அகந்தை' யாகவும், அதன் முதிர்ந்த, நன்கு கனிந்த நிலையில் 'அகன்ற பேருணர்வாக' வும் திகழ்கிறது. நன்கு கனிந்த ஒரு கனியானது, மரத்திலிருந்து விடுபட்டுவிடுவதைப்போல, உணர்வானது அதன் கனிந்த நிலையில், பிரபஞ்சப்பரிணாமத்தின் முழுமையாக கால-வெளிப் பிரபஞ்சத்தைக் கடந்த மெய்ம்மையாகிறது!

10) "நான்" என்பது ஒரு நபரை, ஆளைக் குறிப்பதற்கானதல்ல; அவ்வாறு குறிக்கப் பயன்படுவது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என மேலே குறிப்பிட்டோம். பொதுவாக, சாதாரணமாக, ஒரு மனிதன் "நான்"  உணர்வு கொண்டு, மையமென தன்னைச் சுற்றி, ஒரு கற்பிதத்தை, ஒரு கட்டுக்கதையை, "தான் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன்!",  "தனது பராக்கிரமங்கள் இப்படியானது, அப்படியானது!" என்றெல்லாம் பின்னிக்கொண்டு லௌகீக, நடைமுறை  உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறான். ஆனால், ஒரு மனிதன் தன்னையறியும் பாதையில் இறங்குவானெனில், அவன் தன்னைப்பற்றிய கற்பிதங்களை கடந்து செல்வது அவசியமாகும். அக்கற்பிதங்கள் அவனுக்கு லௌகீக, நடைமுறை  உலகில் உதவக்கூடியதாகவும், தேவையானவையாகவும் இருக்கலாம்; ஆனால், அவை ஆன்மீகத்திற்கு பெரும் தடையாகவும், பாரமாகவும் மட்டுமே அமையும். மட்டுப்பாடான நான் என்பது ஒரு அடைவிடமோ, முடிவிடமோ அல்ல; அது கடக்கப்படவேண்டிய தற்காலிக நிலையே! சமூகக் களத்தில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபராக, ஆளுமையாக இருப்பது தேவைப்படலாம். ஆனால், உங்கள் உள்ளார்ந்த தன்மையில், நீங்கள் உலகம் கடந்த பெரு நிஜம் ஆவீர்! அ ந் நிலையை அடைவதில் தான் உங்கள் பிறவிப்பயன், முழுமை , முக்தி, மோட்சம், வீடுபேறு யாவும் அடங்கியுள்ளது!

மா.கணேசன்/ 03-08-2024

Saturday, 28 March 2020

மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா?





மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா?

ஆம், மற்றும் இல்லை என்பதே இக்கேள்விக்கான பதிலாகும். இது நாள் வரை நாம் நம் விருப்பங்களைத் தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக கணக்கில் கொள்ளாமல் நம் மனம் போன போக்கில் வாழ்ந்துவந்துள்ளோம். இனியும் நாம் அவ்வாறு தொடரமுடியாது என்பது கொரோனா சுட்டும் முக்கிய பாடங்களில் ஒன்று எனலாம். உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளையும், மக்களையும், அவர்களது வாழ்க்கையையும் முற்றாக முடக்கிப்போட்டுவிட்டது கொரோனா. வரலாறு என்பது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று தெளிவாகப் பிரித்துக் காண வேண்டிய அளவிற்கு பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கொரோனா ஏன், எவ்வாறு வந்தது போன்ற கேள்விகள் குறுகிய எல்லைகளைக்கொண்டவை. கொரோனா ஏற்பட்டது ஒரு விபத்தாக இருக்கலாம். அல்லது மனிதத் தவற்றின் விளைவாக இருக்கலாம். எப்படியாயினும் அது ஏற்பட்டுவிட்டது; அது இங்கே இருக்கிறது; எவ்வாறேனும் அதை இங்கே தங்கவிடாமல் விரட்டுவது தற்போதைய தலையாய பணியாகும். ஆனால், கொரோனாவை விரட்டியடித்த பிறகு மீண்டும் நாம் நம் பழைய வாழ்-முறைகளுக்கும், அதே பழைய உள்ளீடற்ற வாழ்க்கைப்  பார்வைக்கும் திரும்பப் போவதென்பது பெருந்தவறாகவே முடியக்கூடும். கொரோனாவானது இதுவரை நாம் வாழ்ந்துவந்த நமது வாழ்க்கை முறைகளை, நாம் கொண்டிருந்த வாழ்க்கைப் பார்வைகளை (அவ்வாறான பார்வை ஏதும் நம்மிடம் இருக்குமென்றால்) மறு பரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தைச் சுட்டி நிற்கிறது எனலாம்.

எவ்வாறெல்லாம் கொரோனா தற்போது நம் வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது என்பதை மறந்துவிடாமல் ஞாபகத்தில் கொள்வது அறிவுடைமை ஆகும். முதலிடத்தில் அது நமது இயக்கத்தை, குறிப்பாக பிற மனிதர்களுடன் கூடிச் செயல்படுவதை, கூட்டியக்கத்தை முடக்கியது. ஏனென்றால், உயிர் பிழைத்திருப்பது முக்கியம் என்பதால்,  கொரோனா தொற்றிலிருந்து தப்ப வேண்டுமானால் நாம் கூட்டமாகக் கூடுதல், கூடிச் செயல்படுதல்  கூடாது. இது ஒரு அருமையான பாடம். அதாவது, உயிர் பிழைத்திருத்தலின் முக்கியத்துவத்தை நாம் அநேக நேரங்களில் மறந்துவிடுகிறோம். அதன் விளைவாக, நாம் உயிர் பிழைத்திருத்தலின் நோக்கம், குறிக்கோள், அல்லது  இலக்கு என்ன என்பவைகளையும் வாழ்வின் அர்த்தம் பற்றியும் அறிவதையும் சேர்த்தே மறந்து விடுகிறோம்.  உயிர் பிழைத்திருத்தல் எனும் அடித்தளத்தின், அல்லது அடிப்படை யின் மீதுதான் நாம் நமது அறிவார்ந்த அம்சங்களை அல்லது நமது படு முட்டாள்தனமான விஷயங்களை அரங்கேற்றி வாழ்க்கை என்ற பெயரில் வாழ்ந்து செல்கிறோம்.


கொரோனா சுட்டும் பாடங்கள்

கொரோனா நம்மை வீட்டுச் சிறையில் தனிமைப்படுத்தி வைத்துவிட்டது. அது நம்மை சமூகத்திரளிடமிருந்து தனிமைப்படுத்தியதோடு, ஒரு வகையில் அது நம்மை நம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் தனிமைப்படுத்த வைக்கிறது. சமூகத் திரளுடன் சேர்ந்து செயல்படக்கூடாத நிலைமையில் யாதொரு பொருளாதாரச் செயல்பாடும் நிகழவியலாததால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால், இந்த நேரத்தில் சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதால் பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தாக வேண்டும். அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புக்களை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். வழக்கத்துக்கு மாறான இந்த நிகழ்வை நாம் கணக்கில் கொண்டோமெனில், பொருளாதாரம் பற்றிய நமது பழைய பார்வையின் அடித்தளத்தையே நாம் மாற்றியமைத்தாக வேண்டும் என்பது முக்கியமானதாகும். இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு துறையையும், அம்சத்தையும் நாம் மறு சிந்தனைக்கு உட்படுத்தி மாற்றியமைப்பது அவசியமாகும். அதாவது பொருளாதார அடித்தளத்தை   மாற்றியமைப்பதன் தொடர்ச்சியாக நமது மதிப்பீடுகள் அனைத்தையும், ஒவ்வொரு நடைமுறையையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றில் அவசியமான மாற்றத்தைச் செய்தாக வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக கடைப்பிடித்தாக வேண்டிய சமூக விலகலானது நமது அனைத்து வழக்கங்களையும்,  திருமணம்,, மற்றும் பிற கொண்டாட்ட நிகழ்வுகளையும்,  சாவுச் சடங்குமுறைகளையும், நடைமுறைகளையும் பெரிதும் பாதித்துள்ளது. சமூக விலகலானது நான்கு அல்லது எட்டு நெருங்கிய உறவினர்களைக்  கொண்டு மட்டுமே ஒரு திருமண நிகழ்வை நடத்த நிர்ப்பந்திக்கிறது. திருமணங்கள் முக்கியமெனில், அவை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சம்பந்தப்பட்ட சொந்த பந்தங்களைக் கொண்டு நிகழ்த்தப்படலாம் எனும் பட்சத்தில் ஊரைக்கூட்டி பெரும் செலவில் ஆரவாரமாகவும், ஆடம்பரமாகவும் திருமணங்களை நடத்துவது என்பது அவசியம்தானா என்பது பற்றி நாம் பொறுப்புணர்வுடன் சிந்தித்து முடிவெடுக்கவேண்டியது அவசியமாகும். திருமணத்தைப்போலவே சாவுச் சடங்கும் நெருங்கிய சம்பந்தப்பட்ட சிலரைக் கொண்டு மட்டுமே நடைபெற முடியுமெனில், இவ்வாறே பிறவனைத்து நடைமுறைகளையும் நாம் அத்தியாவசியம் என்ற எல்லைக்குள் அடக்குவது என்பது நன்மை பயப்பதாய் அமையும். அதாவது கொரோனா விளைவித்த முடக்கமானது மிகவும் அவசியமான, அத்தியாவசியமான அம்சங்களையும், நிகழ்வுகளையும் மட்டுமே அனுமதிக்கிறது. அத்தியாவசியம் என்ற எல்லையை மீறுவது, அதாவது, சமூக விலகலை மீறுவது என்பது தற்கொலைக்குச் சமமானதாகும். 

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைவிட நம்மில் பலருக்கு சமூக விலகலைக்கடைப்பிடிப்பதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது என்பது பெரும் நெருக்கடியாக உள்ளதாகத் தெரிகிறது. வழக்கம் போல் நம்மால் வெளியே தெருக்களில், பொது இடங்களில் உலவ இயலவில்லை. தேநீர்க் கடைகள், பூங்காக்கள் என்று நண்பர்களைச் சந்தித்து உரையாட அரட்டையடிக்க இயலவில்லை என்பது நம்மில் பலருக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளது. ஆனால், இந்த முற்றும் முழுதான முடக்கம் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே செல்வதற்கான, தன்னையறியும் ஆன்மீகச் செயல்பாட்டிற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை ஒவ்வொருவரும் முறையாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

கொரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறினால் அது பெரும் எண்ணிக்கையில் மனிதர்களைக் காவு கொண்டுவிடும். இப்போதைக்கு கொரோனா அபாயம் நீங்கி மீண்டும் நாம் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிட ஏங்குகிறோம். அதாவது, கொரோனா தொற்று நீங்கியவுடன் பழைய சமூக நடைமுறைகள், சடங்குகள், மதிப்பீடுகள், வாழ்முறைகள் எனும் சமூகத் தொற்றுக்காக; அவற்றுக்குத் திரும்பிட நாம் ஏங்குகிறோம்.

கொரோனா அபாயத்தினால், உலகம் முழுவதுமே முடக்கப்பட்ட நிலைமையில், நாடுகளுக்கிடையேயான விமானப்போக்குவரத்து, மற்றும் உள் நாட்டு விமானப்போக்குவரத்தும், பிற அனைத்து வகையான வாகனப்போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதனால் காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறே, பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டதனால் நிலம் நீர் மாசடைவதும் குறைந்திருக்கக் கூடும். இது சுற்றுச்சூழலுக்கும், புவி வெப்படைதல் சற்று தணிவதற்கும் நல்லதாகும்.

உயிர் பிழைத்திருப்பதற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம்மைச் சுருக்கிக்கொள்ளத் தயாரெனில், அதையே நாம்  ஏன் யாதொரு நெருக்கடியும் இல்லாத எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கக் கூடாது? உயிர் பிழைத்திருப்பது என்பது அவ்வளவு முக்கியமெனில், அதைவிட முக்கியமான அம்சம் என்று வேறு எதுவும் இருக்கிறதா? உயிர் பிழைத்திருப்பதற்கு பெரும் நெருக்கடி ஏதும் ஏற்படுமெனில், நாம் எல்லாவற்றையும் அப்படியே போட்டதை போட்டபடியே விட்டுவிட்டு உயிர் தப்ப ஓடுகிறோம் எனில் அவற்றிற்கு என்ன பெரிதாக முக்கியத்துவம் இருக்க முடியும்? வழக்கமான காலங்களில் மனித ஜீவிகளாகிய நாம் எண்ணற்ற பல காரியங்களிலும், அலுவல்களிலும் ஈடுபடுகிறோம்; அவற்றில் எதுவும் உயிர் பிழைத்திருப்பதற்கான நோக்கத்தை, இலக்கை, அர்த்தத்தை எட்ட உதவுகிறதா என்பது பெரும் கேள்விக்குறியே! அப்படியானால், வெறுமனே உயிர் பிழைத்திருப்பதே நோக்கமாகவும், இலக்காகவும், அர்த்தமாகவும் அமைய முடியுமா? அதாவது, உயிர் பிழைத்திருப்பதைவிட வேறு ஒரு முக்கியமான அம்சம் எதுவும் இருக்க முடியுமெனில், அது   உயிர் பிழைத்திருத்தலின் நோக்கத்தை, இலக்கை, அர்த்தத்தை அறிவது,  அடைவது என்பதாக மட்டுமே இருக்க முடியும். 

மா.கணேசன்/ நெய்வேலி / 12:02 PM 29-03-2020

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...