Thursday, 14 April 2016

விபரீத ஞானம்




ஒரு குரங்கிடம் மனித-நிலையை
விளக்கிச் சொல்லிப் புரிய வைப்பது
இயலாத காரியம்!
ஒரு மனிதனிடம் புத்த-நிலையை
விளக்கிச் சொல்லிப் புரிய வைப்பது
என்பதும் இயலாது!

      <>

குரங்கிலிருந்து மனிதன் வந்தான்
என்று டார்வின் கோட்பாடு கூறுகிறதே
ஆனால், இன்னும் குரங்குகளும்
இருக்கின்றனவே?
அட, மனிதனிலிருந்து புத்தன் வந்த
பிறகும் , இன்னும் மனிதர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்!!

      <>

குரங்கு நிலை கடந்து மனிதனானவன்
மனித நிலை கடந்து கடவுளாகும் காலம்
வீணே கடந்து போய்க் கொண்டிருக்கிறது!

      <>

முதலில், உணர்வுக்கு வாருங்கள்!
பிறகு, எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்!
எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள்!

      <>

'வாழ்க்கை' என்றால் என்னவென்று
புரிந்து கொண்ட பிறகு, மேற்கொண்டு
புரிந்து கொள்வதற்கும்,வாழ்வதற்கும்
ஏதுமிராது!

      <>

'வாழ்க்கை' என்பது அறவியல் சார்ந்த
பிரச்சினை அல்ல!
அது மனிதன் விழிப்படைவதற்கான
சவால் ஆகும்!

      <>

தொடர்ந்து மனிதர்கள் மனிதர்களை
பிறப்பிக்கும் விலங்குகளாகவே
விளங்குகிறார்கள்!
கோடியில், ஓரிருவர் மட்டுமே
கடவுளைப் பிறப்பிக்கும்
மனிதர்களாக உயர்கிறார்கள்!

      <>

'நீங்கள் இருக்கிறீர்' என்பது
உங்களுக்குத் தெரியும்- ஆனால்
"அதிலென்ன அதிசயம்!" என்கிறீர்
அதனால்தான் சொல்கிறேன்
'நீங்கள் இருக்கிறீர்!' என்பதை
நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை
என்கிறேன் - கண்டுபிடித்திருந்தால்
இப்படி அலட்சியமாகப் பேச மாட்டீர்!

      <>

வெறுமனே உயிரோடிருக்காதீர் - அதற்கு
அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்
உணர்வோடிருங்கள்- அதற்கு
அடுத்த கட்டத்திற்குச் செல்வதை
அப்புறம் பார்க்கலாம்!

     <>

நீங்கள்  உயிரோடிருக்கிறீர்!
வளமுடனோ அல்லது
வறுமையிலோ இருக்கிறீர்!
நோயற்றோ அல்லது
நோயுற்றோ இருக்கிறீர்!
உங்களில் சிலர் சொகுசாக
ஆடம்பரமாக இருக்கிறீர்!
நீங்கள் நல்லவராகவோ
அல்லது கெட்டவராகவோ
இருக்கிறீர்!
ஆனால்  நீங்கள் எவருமே
வாழவில்லை!!

     <>

நீங்கள் போகும் பாதையில்
பேராபத்து காத்திருக்கிறது
என்பது தெரிந்தும், இன்னும்
நீங்கள் உணர்வுக்கு வராதது
பேராச்சரியம் தான் ! ! ! ! !

     <>

"உணர்வோடிருப்பது என்றால் என்ன?"
என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்
எந்தப் பதிலும் வரவில்லை, ஒரு சிந்தனையும்
எழவில்லையா ?! அதுதான்,  அதுதான்
உணர்வு - அதனுடன் இருங்கள்!

     <>

உறைக்கு ஊற்றும் நேரம் கடந்து போனால்
பால்  கெட்டுப்  போகும்!
உறை ஊற்றி, பால் தயிராகி, தண்ணீர் விட்டு
மோராகி, மத்திட்டுக் கடைந்த பின்பு அது
மீண்டும் பாலாகுமோ?
விசார-வழியில் சிறிது சென்றவன்
சிறிது சிந்தித்தவன் மீண்டும் பழைய நிலை
திரும்ப இயலுமா? சொல்லுங்கள்!

     <>

மீன், மீன், மீனேய்!
மீன் வேணுமா?
கூடையை கீழிறக்க
உதவுங்கள்!
அப்போது தான்
என்னென்ன மீன்கள்
என் கூடையில் உள்ளன
என்பது உங்களுக்குத்
தெரியும்!
அந்தந்த மீனுக்கான
விலையைக் கொடுத்து
வாங்கிச் செல்லுங்கள்!

     <>

நானும், மாடு மேய்ப்பவன் தான்!
கண்டதையும் மேய்கிற இந்த மாடுகளை
மேய்ப்பது வர வர கடினமாகவுள்ளது!
அது என்னவோ, நல்ல புற்களை
கண்டாலே அவைகளுக்குப்
பிடிப்பதில்லை - அடிமாட்டுக்காரன்
காத்திருக்கிறான் என்பது
அவைகளுக்குத் தெரியவில்லையோ
என்னவோ ?
ஆனால், தடி கொண்டு விளாசும் போது
அவை கெஞ்சுகின்றன, அழுகின்றன!
நான் கொஞ்சம் அகன்றாலும் போதும்
மீண்டும் கண்டதையும் மேயத்தொடங்கி
விடுகின்றன, கண்றாவிக!

     <>

என் கூடையில் நல்ல நல்ல அரியவகை
மீன்கள்    உள்ளன!
கூடையை இறக்கிக் காண்பிக்கிறேன்
பார்க்கிறார்கள் ! ! ! ! !
ஆனால் நல்ல விலை கொடுத்து
வாங்கிச் செல்ல எவரும்
துணிவதில்லை!
ஆசைப்பட்டால் போதுமா?
பேராசைக்காரனுக !

     <>

சளைக்காமல் பழைய வைக்கோலையே
அசை போட்டுக்கொண்டிருக்கும்
இந்த மாடுகளுக்கு ஒரு சூடு
போதாது போல !
ம்ம்ம்ம்ம்!

     <>

முயற்சிக்காதே, பயிற்சிக்காதே, இரு!
இரு, இருந்தால், முழுமையாக இரு!
ஆசைப்படாதே, அது முழுமைக்குறைவு!
அமைதியைத் தேடாதே, அமைதியாக இரு!
தேடி உள்ளதையும் இழந்து விடாதே!
சிந்தனையற்ற அமைதி அறியாமை!
அமைதியற்ற சிந்தனை அறிவுக்குறைவு!
சோற்று-ஜீவியாய் சோம்பியிராதே!
அறிவைத் தின்று வாழும் அறிவு-ஜீவியாயிரு!
இன்னும் உயர்பேரறிவை நாடு!
சேர்த்தவையுடன் பெருமிதம் கொள்ளாதே!
சாவதற்குள் வீடு சென்று சேர்ந்திடு!

     <>

எருமை புல்லை மேய்ந்துகொண்டிருக்கிறது
அதன் வால் முதுகில் அமரும் ஈக்களை
ஓட்டிக்கொண்டிருக்கிறது!
நீ என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாய்
அவ்வப்போது உன் தலையைச் சொரிகிறாய்!
அப்படிச் சொரிவது நீயல்ல, அந்த எருமை தான்!
அனிச்சையாக செயல்புரிபவனல்ல மனிதன்!
அப்படியானால் நீ மனிதனாக இருப்பது
எக் கணம் என்பதைக் கண்டுபிடி!

      <>

'வாழ்க்கையை கணத்திற்கு கணம்
விழிப்புணர்வுடன் வாழ வேண்டும்!'
என சிலர் சொல்கிறார்கள்-பலர்
அதை வழி மொழிகிறார்கள்!
இது சலிப்பூட்டும் வேலையற்ற வேலை!
கணத்திற்கு கணம் வேண்டாம்
ஒரே ஒரு கணம் மட்டும் முழுமையாக
விழிப்பாய் வாழ்ந்திடுங்கள் போதும்!
ஆற்றில் வெள்ளம் எப்போதும்
ஏற்படுவதில்லை!

      <>

வெள்ளப்பெருக்கெடுக்காத ஆறு
ஒரு போதும் சமுத்திரத்தைச்
சென்றடைவதில்லை!

      <>

எதையும் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும்!
விழிப்புணர்வுடன் உண்ண வேண்டும்!!
விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும்!!!
விழிப்புணர்வுடன் அலுவல் புரிய வேண்டும்!!!!
விழிப்புணர்வுடன் உறங்க வேண்டும்(?)
இதைக் கேட்டுக்கேட்டு காது புளித்து விட்டது!
எது ஐயா, முக்கியம்?   விழிப்புணர்வா?
அல்லது   எதையேனும்   செய்வதா?
நீங்கள்   விழிப்புணர்வாக   இருந்தால்
அதற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது?

     <>

விழிப்பைத் தவிர பிறவனைத்தும்
விபத்துக்களே!

      <>

(ஒரு) மலரைப் பார்த்தேன் மலர்ந்தேன்!

      <>

தவிர்க்க முடியாதவைகளை
தவிர்த்திடுங்கள்!
தேவையானவைகளை
தேவையற்றதாக்கி விடுங்கள்!
நிர்பந்தமானவைகளை
நிராகரித்திடுங்கள்!
அவசரமானவைகளை
அலட்சியப்படுத்திடுங்கள்!
மாபெரும் மாற்றம் உங்களுக்குள்
நிகழ்ந்திடும்!
இவை எதுவும் உங்களால்
முடியாதெனில், வெறுமனே
புத்தனைப் பற்றி பேசாதீர்கள்
போற்றாதீர்கள்!

      <>

நாம் ஏதோ கல் மண் மற்றும் நீரால்
ஆன உலகில் (மட்டும்) வாழ்ந்து
கொண்டிருக்கவில்லை!
நாம் ஒரு மாபெரும் புதிருக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
ஞானி அனைத்தையும் புதிரின்
சொற்களுக்கு மாற்றிக் காண்கிறான்!
புதிரை வாழ்கிறான், புதிராகவே
ஆகி விடுகிறான்!
வாழ்தல் என்பது உண்மையில்
புரிதலே - புரிதல் என்பது
அனைத்தையும் மீண்டும் உணர்வில்
கரைத்து விடுவதே!
உணர்விலிருந்து உருவானவை
மீண்டும் உணர்விற்கே
திரும்புகின்றன!

      <>

பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது
முதல் அவசியம் - இல்லாவிட்டால்
தேவையில்லாமல் அது நம் கவனத்தை
ஈர்த்து சிதறடித்துக்கொண்டேயிருக்கும்!

      <>

அர்த்தம் அறியாமல்
உச்சரிக்கக்கூடாத சொற்கள் :
          நான்
          அன்பு
          உணர்வு
          விழிப்பு
          உண்மை
          பிரபஞ்சம்
          கடவுள்
          வாழ்க்கை.

      <>

வசிப்பதற்கு
வீடு வாசல் தோட்டம் துரவு
எல்லாம் வேண்டும்.
வாழ்வதற்கு எதுவும் வேண்டாம்!

      <>

தயவு செய்து என்னிடம் வந்து
புத்தனையோ, தம்மத்தையோ
பற்றி பேசாதீர்!
புத்தனை நீங்கள் உச்சரிக்கும் விதம்
குமட்டலை ஏற்படுத்துகிறது!

      <>

தம்மத்தைப் பற்றி பேசாதீர்!
உணர்வே தம்மத்தின் அடிப்படை
விழிக்காமல் விழிப்பைப் பற்றி பேசாதீர்!
உணர்வு ஒரு பேசு-பொருள் அல்ல !

      <>

"எப்படி?" என்று கேட்பவன்
தன் அடிப்படையை -
நோக்கம், ஊக்கம், ஆர்வம்,
தன் வாழ்க்கை அனைத்தையும்
தொலைத்துவிட்ட ஒரு
நடைப்பிணம்.

      <>

பிரபஞ்சத்தையும் அனைத்தையும்
ஆராய்கிறதாம் - தன்னையறியாத
ஒரு குருட்டுப் புள்ளி!

      <>

உண்மையை இப் பிரபஞ்சத்தில்
தேடாதீர்-பிரபஞ்சமே
உங்கள் வழியாக அதைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறது!
நீங்கள் இப்ப்பிரபஞ்சத்தின்
முக்கியத்துவமற்ற  ஏதோ ஒரு
சிறு பகுதி அல்ல!
நீங்களே அதன் கண்கள்
நீங்களும் பிரபஞ்சமும் வேறுவேறல்ல!
பிரபஞ்சம் உங்கள் முதுகு
என்பதை உணர்ந்தால் போதும்!
அதற்கு மேல் அதைப்பற்றி
அதிகம் அறிந்து கொள்ள ஏதுமில்லை!
முதலும் இறுதியாகவும்
நீங்கள் அறிய வேண்டியது
அறிபவனாகிய  நீங்கள் "யார்?"
என்பதைத் தான்!

     <>

மா.கணேசன்/ 14.04.2016



Wednesday, 13 April 2016

யாருக்கு நீங்கள் சேவை செய்கிறீர்?



       எனது  உணர்வுகள் தான்   உங்களுடைய   உணர்வுகள்
       எனது  விருப்பங்கள் தான்  உங்களுடைய விருப்பங்கள்
       எனது  சோகங்கள் தான்  உங்களுடைய  சோகங்கள்
       எனது  சந்தோஷங்கள் தான் உங்களுடைய சந்தோஷங்கள்
       எனது  சந்தேகங்கள் தான் உங்களுடைய  சந்தேகங்கள்
       எனது  சௌகரியங்கள் தான் உங்களுடைய சௌகரியங்கள்
       எனது  அசௌகரியங்கள் தான் உங்களுடைய அசௌகரியங்கள்
       எனது  பசி தான்   உங்களுடைய   பசி
       எனது  தாகம் தான் உங்களுடைய  தாகம்
       எனது  காமம்  தான்  உங்களுடைய  காமம் .....

என்பதாக  எப்போதும்  உங்களால் உணர முடியுமா? உணர்ந்து என்னுடன்
பயணிக்க முடியுமா? நிச்சயமாக, உங்களால் இவ்வாறு என்னைப்பிடித்து
தொங்கிக்கொண்டு, என்னைச் சார்ந்து கொண்டு, உங்களை பூச்சியமாக
ஆக்கிக்கொண்டு செயல் படவும்,  எனக்காக  நீங்கள் வாழவும்  முடியுமா?
ஆ! ஒருபோதும் முடியாது என்பீர். ஆனால், நீங்கள் அப்படித்தான் வாழ்ந்து
வருகிறீர் - என்னுடன் அல்ல;   வேறு  ஒரு  மட்டுப்பாடான  நபருடன்!  அந்த
நபர்  உங்களை   முழுவதுமாக   ஆக்கிரமித்துக்   கொண்டுள்ளார் என்பது
தெரியாமலேயே   நீங்கள்  அவருடன்  இணந்து செல்கிறீர்!   சதா காலமும்
நீங்கள் அவருக்குச் சேவை செய்து வருகிறீர்!     ஊழியம் புரிந்து வருகிறீர்!

       #  நிச்சயமாக என்னுடன் அவ்வாறு உங்களால் பயணிக்க முடியாது.
           ஏனெனில், என்னிடம் நெருக்கம் கொள்ளமுடியாதபடிக்கு
           உங்களிடம் நிறைய மனத்தடைகள் உள்ளன!
       #  ஆனால், வேறொருவருடன் அவ்வாறுதான் நீங்கள்  நெடுங்காலமாக
           பயணித்து வருகிறீர்!
       #  எனது  கேள்வி என்னவெனில், ஏன்  நீங்கள் அவ்வாறு உங்களுக்காக
           அல்லாமல் வேறொருவருக்குச்  சேவை செய்து வருகிறீர்?  வேறொரு
           வருக்காக வாழ்கிறீர்?

ஆம்,  நீங்கள்  சேவை செய்து வரும் அந்த  'நபர்',  "நீங்கள்"   என     தவறாக
அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும்   உங்கள் "உடல்"  தான்!      "இதில்
என்ன தவறு - இது தானே இயற்கை?"  என்று நீங்கள் கேட்கலாம்!

ஒரு வகையில், அது உங்கள் தவறு (மட்டும்)  அல்ல!    மாறாக, அது நீங்கள்
சேர்ந்து  வாழும்  ஒட்டு மொத்த  சமூகத்தின் தவறாகும்!  ஆம், ஒரு தவறை
எல்லோருமாகச்   சேர்ந்து செய்யும் போது அது சரியானதாகத் தெரிகிறது!
ஒரு தவறு உணர்த்தப்பட்டும்,  அது தவறு  எனத் தெரிந்த பிறகும் முதலில்
எல்லோரும்  திருந்தட்டும்  என தொடர்ந்து   தவறான  திசையிலேயே நாம்
செல்கிறோம்;   தவறான  வாழ்க்கையையே  வாழ்கிறோம்!   ஆனால்,   ஒரு
தொற்று நோய் நாடு, நகரம்,  உள்ளூர்  முழுவதும் பரவிடும் போது  மட்டும்
உடனே நாம்  ஒவ்வொருவரும் தனித்தனியே  மருத்துவரிடம் ஓடுகிறோம்!

நாம் அனைவரும்   நோய்களையும்,   உடலுக்குத்    தீங்கானவைகளையும்,
உயிருக்கு     ஆபத்து    விளைவிக்கும்    எல்லாவற்றைக்  குறித்தும்    அஞ்சு
கிறோம்!  அவற்றிடமிருந்து  நம்மைப் பாதுகாத்துக்  கொள்ளும் அனைத்து
நடவடிக்கைகளையும்      மேற்கொள்கிறோம்!    'விஷம்'    எனத்     தெரிந்த
எதையும்  நாம் தொடக்கூட மாட்டோம்! நம்மில்  சிலர்  விஷம் அருந்தியோ,
அல்லது   வேறு வழிகளிலோ  தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்;
அவர்களைக் குறித்து நாம் குமைந்து போகிறோம்!

ஆனால், நமக்குப் புரிவதில்லை; தற்கொலைக்கு ஒப்பானதே நாம் வாழும்
வாழ்க்கையும் என்பது!  உடனடியாகவும்,  நேரடியாகவும் உயிரைக்  கொல்
லுகிற விஷங்களையும், வழிமுறைகளையும்  குறித்து நம்மை எச்சரிக்கும்
சமுதாயம்,   அது   தன்னகத்தே   கொண்டிருக்கும்   'விஷம்'    போன்ற  பல
விஷயங்களையும்,   மதிப்புகளையும்,   விழுமியங்களையும்,   நடைமுறை
களையும், இலட்சியங்களையும், .....குறித்து அது நம்மை எச்சரிப்பதில்லை!

ஆம்,  தவறான ஒரு கருத்து,   தவறான ஒரு உதாரணம்,   தவறான பார்வை
தவறான சிந்தனை, தவறான நம்பிக்கை, தவறான நடைமுறை,   தவறான
மதிப்பீடு, தவறான இலட்சியம், தவறான நோக்கம், தவறான அடையாளம்
தவறான வாழ்க்கை இவையும் 'நோய்', அல்லது 'விஷம்' போன்றவையே!

நம்மில்  சிலர்   தற்கொலை செய்து கொள்வதற்கும் காரணம் சமுதாயமே!
'காரணம்'  மிகவும்  மறைமுகமாகச்  செயல்படுவதால் அது நமக்குத் தெரி
வதில்லை! அவர்கள் உடனடியாகக் கொல்லும் விஷத்தை , அல்லது,  வேறு
வழிமுறையைக் கொண்டு தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள்!   நாமோ
மெதுவாகக்    கொல்லும்    'விஷ-வாழ் முறை' யைப்    பின்பற்றிச்   சென்று
இயற்கையாக  மாய்ந்து  போகிறோம்  என்று  நம்பி வாழ்ந்து  கொண்டிருக்
கிறோம், இல்லை, இல்லை,  கொஞ்சம்  கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்
கிறோம்!   ஆம்,  "மரணம்  இயற்கையானது"   எனும் கோட்பாடு   முற்றிலும்
தற்கொலைத் தனமானது எனும் உண்மையை நாம் அறிவதேயில்லை!

"மரணம் இயற்கையானது!"  என்று  சொல்வதன் பொருள் என்ன?   அல்லது
எதுவொன்றும்    'இயற்கையானது'    என்று   சொல்லும்  போது   நாம் என்ன
அர்த்தத்தில்   சொல்கிறோம்?   முதலிடத்தில்,  இயற்கை என்பது  ஆரம்பம்
இல்லாததோ, ஆகவே முடிவில்லாததோ, அல்லது நிரந்தரமானதோ,தானே
தோன்றியதோ  அல்லது   இறுதியானதோ அல்ல!  இயற்கையுலகம் மாறிக்
கொண்டும்,   வளர்ந்து கொண்டும்   செல்கிற  ஒரு  இயக்கம் ஆகும். அதில்
ஆக்கம்,  மாற்றம்,  வளர்ச்சி,  சிதைவு,  அழிவு,  மரணம்,  முடிவு, மறுசுழற்சி
என்பவை   யாவும்   இடம்  பெறுகின்றன.    இவ்வாறு    மாறிக்     கொண்டே
யிருக்கும்  இயற்கையுலகில், மனிதனுக்கு என்ன வேலை?

மனிதன் இயற்கையானவனா?  இல்லை!  *"மனிதன் தனது இயற்கையான
நிலையில் தொடரும்வரை அவன் மனிதன் அல்ல -இன்னுமொரு விலங்கு!
இயற்கையிலிருந்து   தோன்றியவனே  மனிதன்;         எனினும்,           அவன்
இயற்கையை மீறிச்செல்லும் இயற்கையை, பேரியற்கையை சேர்ந்தவன்!
ஏனெனில்,   இயற்கை   "சுய-உணர்வு"   பெற்றிடும் போது  அது தொடர்ந்து
(பழைய) இயற்கையாக இருப்பதில்லை!"*

இயற்கையின் "இயற்கை" என்று சொல்லும்படிக்கு மாறாத-தன்மை ஏதும்
உள்ளதா?  அப்படி ஏதும் இல்லை!  அதற்காக, "மாறிக் கொண்டேயிருப்பது
தான்  இயற்கை"  என்று சொல்வது சோம்பேறித்தனமானது!  ஏனென்றால்,
இயற்கை வெறுமனே மாறிக்கொண்டேயிருப்பதில்லை! மாறாக, அது ஒரு
ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்கிறது. ஆம், இயற்கையானது அதனுடைய
அசலான  முகத்தை,   அதாவது  அதனுடைய  அசலான     "இயற்கை"யைத்
தேடிச்செல்கிறது!    அனைத்து    மாற்றங்களையும்   தீர்த்து முடித்துவிடும்
இறுதி விளைவை, அதன் முழுமையைத் தேடிச்செல்கிறது!  இயற்கையின்
இந்த  தேடல்   வழிமுறைக்குப்   பெயர் தான்     "பரிணாமம்"    என்பதாகும்.
இயற்கையானது     மனிதனைக்  கொண்டு        (ஒவ்வொரு மனிதனையும்
கொண்டு)   ஒவ்வொரு    மனிதனின்    வழியாகவும்     தனது      இலக்கைத்
தேடுகிறது!

ஒவ்வொரு மனிதனின் வழியாகவும்  இயற்கையுலகம் (பிரபஞ்சம்) தேடும்
இலக்கு எத்தகையது?  அனைத்துவித மாற்றங்களையும், அழிவுகளையும்,
முக்கியமாக      மரணத்தையும்    கடந்த       "முழுமை"  யே    அது!         ஆம்,
பிரபஞ்சத்தின் 'ஆரம்பம்'  என்பது   ஒரு  படைப்புப்பூர்வ  நிகழ்வு  என்றால்
பிரபஞ்சத்தின்   'முடிவு'   என்பதும்  ஒரு  படைப்புப்பூர்வ  நிகழ்வாகத்தான்
அமைய முடியும்!

இப்போது,  மீண்டும்  நாம்  பிரச்சினைக்கு  வருவோம்.  'மரணம்  இயற்கை
யானது'    என்பதாகவே    வைத்துக்  கொள்வோம்.     ஆனால்,    மனிதனில்
மரிப்பது, மரணிப்பது எது?ஆம்,மனிதனில் மரிப்பது அவனது உடல் தானே
தவிர மனிதன் அல்ல!  மிகத் துல்லியமாக மனிதன்  வேறு;  அவனது  உடல்
என்பது வேறு!   இது  நம்பிக்கை  சார்ந்த  விஷயம்  அல்ல.    இதைப் புரிந்து
கொள்வது அவ்வளவு கடினமானதல்ல என்றாலும்,  ஆயிரமாயிரம் ஆண்டு
களாக  மனிதன்  தவறாக  தன்  உடலுடன் தன்னை  அடையாளப்படுத்திக்
கொண்டு  வாழ்ந்து வந்திட்ட  நடைமுறையால்  இதைப்  புரிந்து கொள்வது
என்பது  அவ்வளவு  எளிதல்ல தான்!     அதே நேரத்தில், எளிதானதை, சுலப
மானதைச் செய்வதற்காகப் பிறந்தவனல்ல மனிதன்!

ஒருவன்   தான் எதற்காகப் பிறந்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்வதில்
தான்  அவனது  'உண்மையான வாழ்க்கை'  அடங்கியுள்ளது.      வெறுமனே
உயிர்  வாழ்வதல்ல   மனித வாழ்க்கை!   அதைச்   செய்வதற்கு   எலிகளும்,
தவளைகளும் உள்ளனவே!  மனிதனைப்பற்றிய ஒரு மையமான உண்மை
என்னவென்றால், அவன் ஒரு விலங்கு அல்ல; ஆனால்,  துரதிருஷ்டவசமாக
அவன்      ஒரு     விலங்கினுள்ளிருந்தவாறு       வாழும்படிக்கு    உருவாக்கப்
பட்டுள்ளான்! ஆம், அவனது "உடல்" தான் அந்த விலங்கு! அதேவேளையில்,
மனிதனின்  உடலானது   மனிதனுக்கு   ஏற்றவகையில்,   விசேடமாக வடிவ
மைக்கப்பட்டதாகும். அதாவது "உணர்வு" எனும் தீபத்தை  ஏற்றுவதற்குரிய
விளக்காக வடிவமைக்கப்பட்டதே மனித உடல்!ஆனால்,  மனிதனோ தனது
உடலுக்கேற்ற வகையில் தன்னை  மாற்றிக்கொண்டு விட்டான்!

ஏற்கனவே  குறிப்பிட்டபடி  மனிதன் வேறு,  அவனது  உடல்  வேறு!   அப்படி
யானால், அதாவது மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல என்றால், பின்
எது மனிதன்?   "உணர்வு"   தான் மனிதன்.  உங்கள் உடலில், எந்த இடத்தில்
நீங்கள்  உதிக்கிறீர்   என்பதைத்  தெரிந்து  கொள்ளுங்கள்.     ஆம்,     மனித
உடலின்  நரம்பு-மண்டலத்தின்  உச்சபட்ச  வளர்ச்சி  நிலையான    "மூளை"
யில் நிகழ்ந்திடும் மின்-வேதியியல் வினைகளின் விளைவாக உதிக்கின்ற
"உணர்வு"  தான் நீங்கள்! முதலில்  நீங்கள் குழந்தையாகப் பிறக்கும் போது
நீங்கள் ஒரு உடல்-ஜீவியாக, உயிருள்ள ஒரு உடலாகத்தான்  பிறக்கிறீர்கள்;
பிறகு,  மூன்று  அல்லது  நான்கு வயதில் உங்கள் மூளை நன்கு செயல்படத்
தொடங்கிடும்போது தான் நீங்கள் "நான்" என்று சொல்லத் தொடங்குகிறீர்!

ஆனால், நீங்கள் அப் பிராயத்தில்,  "நான்"   என்று சொல்லும் போது நீங்கள்
உண்மையில்     குறிப்பிடுவது   உங்கள்  உடலைத்தானா  என்று  கேட்டால்,
நிச்சயமாக அப்படித்தான் என்று சொல்லமுடியாது! ஆனால், ஒரு குழந்தை
வளர, வளர   உடலை   மையமாகக்    கொள்ளும்    அடையாளத்தை  தனது
சுற்றுப்புறத்திலிருந்தும்,பிறமனிதர்களிடமிருந்தும்  வரித்துக்கொள்கிறது!
அப்படியே ஒரு குழந்தை தன் உடலைத்தான்  "நான்"  என்று சொல்வதாகக்
கொண்டாலும்,    அதைத்  திருத்துவதற்கு    குடும்பத்திலும்  சரி, சமுதாயத்
திலும் சரி,    ஒருவரும் இல்லை!  ஏனெனில்,  ஒருவருக்கும்  தமது  உண்மை
யான அடையாளம் எதுவென்று தெரியாது!  ஐந்து வயதில் தொடங்கும் ஒரு
தவறு,    ஐம்பது வயதிலும்,  அதைக் கடந்தும்,  தொடர்ந்து கொண்டே செல்
கிறது!  உணர்வுப் பூர்வமாக,  ஒவ்வொருவரும்,   நேரடியாக,   உணர்ந்தறிய
வேண்டிய உண்மையை எந்த வயதிலும் எடுத்துச்சொல்லிப் புரிய வைத்து
விடமுடியாது! என்றாலும்,புரியவைக்கும் முயற்சிதொடரத்தான்வேண்டும்!

                <> <> <> <> <> <>

கூர்ந்து   நோக்குங்கள்,  ஒவ்வொரு  நாளும்   உங்கள்  வாழ்காலம்  பூராவும்
நீங்கள் என்ன செய்கிறீர் என்பதை நோக்குங்கள் தினமும், 'தாம் எதற்காக
வாழ்கிறோம்?'  என்பதே  தெரியாத   ஒரு  ஜந்துவை  நீங்கள்    குளிப்பாட்டி
தூய்மைப்படுத்துகிறீர்,அதற்கு வேளாவேளைக்கு உணவளிக்கிறீர்.  அதை
விதம்  விதமாக  உடுத்தி   அழகு  பார்க்கிறீர்!     அதன்   தலைமுடி நரைத்து
விட்டால்  அதை மைப் பூசி கறுமையாக்கி உங்கள் இளமையை மீட்டுவிட்ட
தாக   அகமகிழ்கிறீர்!   உடலுக்கு   ஏற்படும்   ஒவ்வொரு    உபாதையையும்,
நோயையும்   உடனடியாகப்  போக்கிவிட்டு   அமர்கிறீர்!    ஆனால்,  'உடலே
நோய்' ,  'மனமே பெரும்பிணி'   என்பதை     நீங்கள்     உணர்வதேயில்லை!                                                  

இவ்வாறு,  உடலுக்கு  உணவளிப்பதும்,   அதை  தினம்   குளிப்பாட்டுவதும்        

உடுத்திக்காண்பதையும், இவற்றையெல்லாம் குறைவின்றி பூர்த்திசெய்வ                                                

தற்காக 'பணம்' சம்பாதிப்பதும், அதிகப்பணம் சம்பாதிப்பதற்காக பெரும்
படிப்பு   படிப்பதும்,   பெரும் பணி  தேடியமர்வதும், .....     இவை தான் மனித
வாழ்க்கையா?

இங்கு,   உடலை  ஒரு  'விலங்கு' ,  'ஜந்து'   என்றெல்லாம்  சொல்லி,    அதைக்
கொச்சைப் படுத்திவிட்டோமா?  இல்லை, இன்னும் நாம் உடலின் கீழியல்பு
களையும்,    நச்சரிப்பான   அதன்    இச்சைகளையும்;     இன்னும்,    மனதின்
பிறழ்வுகளையும்,  கோணல்களையும் பற்றிப் பேசவேயில்லை!

உண்மையில்,    'உடல்'    அல்ல  பிரச்சினைக்குரியது!   அது  ஒரு பரிணாமக்
கருவி - அதற்கு  சில  அடிப்படையான பசிகளும், உயிர் பிழைத்திருக்கவும்,
இற்றழிந்து   போய்விடாமல்  இருக்கவும்  வேண்டும்  என்கிற ஒரே உந்துதல்
மட்டுமே அதைச்செலுத்துகிறது! ஆனால்,   மனித 'மனம்' தான் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும்  அடிப்படையாகும்.      அதன்   அடையாள- மாறாட்டம்
தான் காரணம்.   அதற்கு   மனதின்,   மனிதனின்  விழிப்பற்ற தன்மை  தான்
மூல காரணம்.

ஆனால், மனதை,  மனிதனை விழிக்கச் செய்வது எப்படி? எது, அல்லது எந்த
விஷயம்,    மனதை  உலுக்கி,    மனிதனை     விழிக்கச்  செய்யும்?       அப்படி            
எவ்வொரு  விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை! இன்னும்,கடவுளாலும்
மனிதனை விழிக்கச் செய்ய இயலாது! ஏனெனில், கடவுளும் மனிதனுடைய
விழிப்பையே  சார்ந்திருப்பதால்,   மனிதன்    எப்போது    விழிப்பான்    என்று
காத்திருப்பதால்     அவர்    முற்றிலும்     உதவியற்ற    நிலையில்  மனிதனுள்
சிறைப்பட்டிருக்கிறார்!

துன்பம்,    துயரம்,    சொல்லொனாச் சோகம்,    பேரிழப்பு,  நஷ்டம்,  தோல்வி,
ஏழ்மை,   வறுமை,   வெறுமை,   அர்த்தமின்மை,   விரக்தி,   தனிமை, சலிப்பு,
எதுவும்   மனிதனை    விழிக்கச் செய்யவில்லை!   எது  மனிதனை  விழிக்கச்
செய்யும்?     இன்பமும்  மனிதனை   விழிக்கச்  செய்யவில்லை;     துன்பமும்
மனிதனை  விழிக்கச் செய்யாது  என்றால்,  பிறகு  எது  மனிதனை விழிக்கச்
செய்யும்?     " மரண பயம்?"
                    <> <> <>

        * காண்க: "மனிதனின் சொல்"( பக்:44,45) மா.கணேசன்/ 2013
           மா.கணேசன்/ 6.03.2009; 11.04.2016

Sunday, 10 April 2016

மறு கரையிலிருந்து.....



     மறுகரை மீதான ஏக்கத்தை
     உங்களிடம் தொற்றவைப்பதே
     எனது ஆன்மீகப்பணி.
          *
      ஏனெனில், உங்களுடைய வாழ்வின்
      அர்த்தம், , அமைதி, ஆனந்தம்
      நிறைவு, முக்தி, மோட்சம், முழுமை
      யாவும் மறு கரையில் உள்ளன!
          *                                                                

                       
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . .மறுகரையின்                                                            
ஒரு     முக்கிய செய்தி    என்னவெனில்,   "மறுகரை" என்று ஒன்று
உள்ளது என்பது தான்.   இது       உணர்த்துவது         என்னவெனில்,
மனித ஜீவிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மறுகரையை
அடைந்திட வேண்டும் என்பது தான். ஏனெனில், மறுகரை    தான்
உங்களுடைய அசலான வீடு,   பாதுகாப்பான    இறுதிப்  புகலிடம்
அனைத்து மாற்றங்களையும் கடந்த முழுமை, மற்றும்  அழிவற்ற
நிரந்தரம்.

மறுகரை  என்பது  வெறும்  நம்பிக்கையன்று.    இக்கரை  என்பது
இருப்பதால்    அக்கரை    அல்லது      மறுகரை   இருக்கவேண்டும்
என்கிற    தர்க்கரீதியான  முடிவின்   அறிவிப்பு  அல்ல   அது.    நதி
இருப்பதால் சமுத்திரம் இருக்கிறது எனும்தர்க்கம் தலைகீழானது.
மாறாக ,     சமுத்திரத்தினால் தான்   நதி   இருக்கிறது!      நதியின்
மூலமும்,    முடிவும்   சமுத்திரமே.  ஆம்,     மறுகரையினால்   தான்
இக்கரை உள்ளது.

மறுகரை   என்பது   சொர்க்கமோ,   வேறொரு   அதிசய உலகமோ,
பொன்னுலகமோ  அல்ல.     மாறாக,    அனைத்து      உலகங்களின்
மூலமும் முடிவும் அதுவே.

மறுகரை உங்கள் கண்களுக்குப்புலப்படுவதில்லை;அதை நீங்கள்
காண்பதில்லை   என்பதால்   அப்படி  எதுவும்   இல்லை   என்பதாக
நீங்கள் முடிவு செய்து விட முடியாது. அதே வேளையில்,   இக்கரை-
யின்   இருப்பானது   மிகத்   தெளிவாகவும்,   வெளிப்படையாகவும்
தெரிவதால் அது முற்றானது, முழுமையானது, முடிவானது மற்றும்
நிரந்தரமானது என்பதாகக் கொள்ளமுடியாது.

ஆம், இக்கரையின் இருப்பை நாம் நிரூபிக்கத் தேவையில்லை.அது
போலவே அதன் தேவையை நாம் அதிகம்  வலியுறுத்தவும்  தேவை
யில்லை.    இக்கரை   இருக்கிறது;   அதில்   நாமும்      இருக்கிறோம்.
ஆனால் , என்றென்றைக்கும் நாம் இங்கு  இக்கரையில் இருப்போம்
என்பதற்கு   உத்தரவாதம் ஏதும்   இருக்குமானால்    மறுகரை பற்றி
நாம் யோசிக்கவும் தேவையில்லை! அப்படியொரு மறுகரைக்கான
அவசியமே  இராது.

இக்கரையானது மிகவும் திடமானதாகவும் மாற்றங்கள் பல நிகழ்ந்
தாலும்  ஒருவகை  நிரந்தரத் தன்மையில் நீடிப்பதாகவும் தோற்றம்
தருகின்றது என்பதென்னவோ உண்மைதான்.  ஆனால்,  விரைவில்
மரணம் வந்து உங்களை அழித்துவிடுகின்றது -  உங்கள்  வாழ்வை
அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது என்பதுஎதை உணர்த்துகிறது?

ஆம்,  நீங்கள்   இக்கரையிலேயே  தோன்றிய போதிலும், இங்கேயே
வாழ்ந்திட்ட போதிலும்   நீங்கள்    உண்மையில்         மறுகரையைச்
சேர்ந்தவர்கள்,முடிவில் மறுகரையைச்சேரவேண்டும் என்பதையே
அது உணர்த்துகிறது!

மறுகரையைச் சேர   வேண்டுமெனில்,     முதலிடத்தில்     இக்கரை
இருக்கவேண்டும்!    அதில்   நாமும்     இருக்க வேண்டும் !          ஆம்,
மறுகரைக்குச் செல்ல வேண்டும்    என்பதற்காகத்தான்    இக்கரை
உள்ளது!

இக்கரை என்பது எவ்வகையிலும் இறுதியான கரையல்ல. இது ஒரு
தற்காலிக உலகம்.  மறுகரைக்குச்    செல்வதற்காக    ஏற்பட்ட   ஒரு
அரை-வழிப்பாலம்,அல்லது ஒரு 'ஏவு-தளம்' போன்றதாகும். ஆகவே
இக்கரையிலேயே  நீங்கள்  என்றென்றைக்குமாகத் தங்கி வாழ்ந்து
கொண்டிருக்க  முடியாது !     மாற்றமும்,   மரணமும்   இக்கரையின்
தவிர்க்கவியலாத விதிகளாகும்.

இக்கரை   என்பது  ஒரு  அடிப்படையாகும். அது வேறொன்றை (மறு
கரையை)   அடைவதற்கான    ஒரு  தற்காலிக   ஏற்பாடு;        அதுவே
முடிவான    முடிவல்ல!     மறு கரையின்    அவசியத்தையும்    அதன்
முக்கியத்துவத்தையும்     சுட்டுவதற்காகவே     இக்கரை      உள்ளது.
இக்கரை    என்பது      மறுக்கவியலாத   நிஜமாகும்-அது ஒரு மாயை
அல்ல!

ஆனால்,   அது மிகவும் மட்டுப்பாடானதொரு நிஜமாகும். மனிதஜீவி
களாகிய    நம்மை      அதனால்  'ஒரு குறிப்பிட்ட '  காலத்திற்கு மேல்
உயிருடன்  வைத்திருக்க முடியாது! ஆகவேதான், நாம் இக்கரையை
மட்டுமே   சார்ந்து   வாழ்ந்திட முடியாது;  இக்கரையில் நமது வாழ்வு
முடிவதற்குள்   மறுகரையை  நாம்  அடைவது   அவசரமான அவசிய
மாகும்.    ஏனெனில்,  முழுமையான,   நிரந்தரமான,   நித்திய வாழ்வு
என்பது மறுகரையைச் சேர்ந்தது!

இக்கரையின் இயற்கை அழகானது. ஆனால், இக்கரையின் அழகை
கண்டு,  உணர்ந்து,  ஆனந்திப்பது எது, அல்லது யார்?   இக்கரையால்,
இக்கரையின்    அழகைக்  காண   முடியாது!      ஏனெனில்,      அதற்கு
"உணர்வு"  கிடையாது .  உணர்வுள்ள  மனித ஜீவியால்  தான் புறத்தே
யுள்ள   அழகை    உணர்வு    கொண்டு   ஆனந்திக்க முடியும்.        ஆக,
அழகைக் கண்டு     ஆனந்திக்கும் " மனித-உணர்வு "    அழகிலிருந்து
வேறானதாய் இருக்கமுடியுமா?

அழகு புறத்தேயுள்ளதா? அல்லது காண்பவனின் அகத்தேயுள்ளதா?
இக்கரை    அழகானதே,  அதிலுள்ள யாவும் அழகானவையே! அழகு
எங்கும்,எதிலும் உள்ளது. எல்லாம் அழகின் வெவ்வேறு வடிவங்களே,
நிலைகளே! ஆனால், மறுகரையே "அனைத்து-அழகின்" உறைவிடம்
மற்றும் ஊற்றுக்கண் ஆகும்.

புறத்தேயுள்ள     அழகு    அகத்தின்    அடியாழத்தில்      மறுகரையில்
உறையும்         "அனைத்து-அழகை"       நினைவூட்டும்        மங்கலான
பிரதிபலிப்பு       மாத்திரமே!      சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும்
சந்திரனைப்போன்றது இக்கரை. ஆம், அழகு என்பது மறுகரையைச்
சேர்ந்தது!

புறத்தேயுள்ள   (இக்கரையின்)  அழகே    ஆனந்தமளிப்பதாய் உள்ள
போது அகத்தின் அடியாழத்தில், மறுகரையில் உறையும் "அனைத்து
அழகின்" ஊற்றை என்னசொல்வது? அதுவே ஆனந்தத்தின் ஊற்றும்
ஆகும்.  ஆம்,  " ஆனந்தம் " என்பதும்  மறுகரையைச் சேர்ந்ததே!

இக்கரையில்,     தேவையான   எல்லாம்   உள்ளது.  எல்லாம் இருந்தும்
எதுவும்    நிறைவின்  உணர்வை   நம்முள்   தோன்றச்செய்வதில்லை!
ஏனேனில், "நிறைவு" என்பதும் மறுகரையைச் சேர்ந்தது!

நீங்கள்  உங்களுடைய   "உயிர்-இருப்பு"  க்கான அடிப்படைத் தேவை
களுக்காக இக்கரையைச் சார்ந்திருத்தல் என்பது தவிர்க்கவியலாது.
ஆனால், உங்கள்  "உயிர்-இருப்பை" கடந்த, "உணர்வு-இருப்பு" க்கான
அதாவது உங்களுடைய இறுதித்தேவைகளான "அர்த்தம்", "உண்மை"
மற்றும்   "முழுமை"   ஆகியவற்றுக்கு    நீங்கள்   மறுகரையைத் தான்
நாடிட வேண்டும்!

நீங்கள்,     ஒரு   புழுவைப்போல   அல்லது,      ஒரு தவளையைப்போல,
வாழ்வின் அர்த்தமறியாமல்  வாழ்ந்து மடிந்து போவதில் உங்களுக்கு
வருத்தம்  ஏதுமில்லையெனில், நீங்கள் மறுகரையைப் பற்றி சிறிதும்
யோசிக்க வேண்டிய தேவையில்லை!

ஆனால்,   ஒரு   மனிதஜீவியாக,    உங்கள்    வாழ்வை     அர்த்தத்துடன்,
நிறைவுடன்,     ஆனந்தத்துடன்     முழுமையாக    வாழ   விரும்பினால்,
உடனடியாக      இக்கரையிலிருந்து      வெளியேறுவதற்கு    உங்களை
ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்!

               <> <> <> <> <> <>


மறுகரையை அடைவதற்காக நீங்கள் செய்யக்கூடியது என்று எதுவும்
இல்லை!      உங்களுடைய  அறிவுச்சேகரம்,   உங்களுடைய எல்லாவித
அனுபவம்;   நீங்கள்   சம்பாதித்த   பணம்,  புகழ்,  நற்பெயர்,   செல்வம்;
உங்களுடைய   வாய்மை,    தூய்மை,    நற்பண்புகள்,    நம்பிக்கைகள்,
பிரார்த்தனைகள்,   கடவுள்கள்;   நீங்கள் பிறருக்குச் செய்த உதவிகள்,
புண்ணியங்கள்,   தானதர்மங்கள், . . . . . எதுவும், மறுகரையை அடைய
உதவிடாது!   ஏனெனில், மறுகரைக்கு  உங்களுடன் எதையும் எடுத்துச்
செல்ல முடியாது!   ஏன்,  உங்களையும்கூட    நீங்கள்  கொண்டு செல்ல
முடியாது!

மறுகரைக்கு    உங்களையும் கூட    நீங்கள் கொண்டு செல்லமுடியாது
எனில்     பிறகு மறுகரையை அடைவது "யார்?"   இதையே வேறு சொற்
களில்   சொன்னால்,   உண்மையில்   நீங்கள்   என்பது   "யார்?" அல்லது
"எது?" என்பதைக் கண்டடைவதே மறுகரையைஅடைதல் என்பதாகும்!

ஆம்,  நீங்கள் உங்களை  'எவராக' அல்லது 'என்னவாக' கருதிக்கொண்
டிருக்கிறீர்களோ    அதுவல்ல  "உண்மையான"    நீங்கள் - அது, வெறும்
எண்ணங்களால்  எழுப்பப்பட்ட "புனைவு"!   (இக்கரையிலுள்ள) எதனுட
னாவது    உங்களை     அடையாளப்படுத்திக் காணும்  வரையில்  (அது
உங்கள்    உடலாயினும்,   அல்லது    மனதாயினும்  சரி ) உண்மையான
உங்களை நீங்கள் ஒருபோதும் சந்திக்கவே இயலாது!

நீங்கள்    விரும்பும்     வண்ணம்     உங்களை    வடிவமைத்துக்கொள்ள
முடியும்  என்றால்,  அதனாலேயே அது அசலான நீங்கள் அல்ல!

எவ்வொரு அடையாளத்தையும் நீங்கள் பற்றிடாத போது, ஏதாவதொரு
அச்சில் இட்டு உங்களை வார்த்திடாத போது,  ஏதோவொன்றாக ஆகிட
ஆசைப்படாத  முயற்சிக்காத போது இருப்பீர்கள்,  "நீங்கள் நீங்களாக"!
அனைத்திற்கும்     ஈடாக,     ஒருமையும்-முழுமையுமான   உணர்வாக -
மறுகரையில் !

மறுகரை  என்பது  உங்களது   சாரத்திலிருந்து   வேறானதல்ல! அதுவே
உங்களது உண்மையான "சுயம்" மறுகரை என்பது உங்களது "ஆன்மா"
வே தான்!  ஆம்,  "மனிதன்"  என்பவன்  தன்னில் தானே முடிவானவன்!

                <> <> <> <> <> <>
     

மறுகரையை     அடைவதற்கு, உங்களிடம் மாபெரும் "ஏக்கம்" இருக்க
வேண்டும்!     மறுகரை மீதான ஏக்கம் எப்போது உங்களிடம் ஏற்படும்?
இக்கரையில் உள்ள  பொருட்கள், உறவுகள், உடமைகள், விஷயங்கள்,
மீது     உங்களுக்கு   ஈர்ப்பும்,   பிடிப்பும்  உள்ளவரை   மறுகரை மீதான
ஏக்கம்   ஒருபோதும்  உங்களிடம்  துளிர்க்காது!

மறுகரைக்கு இணையாக,மாதிரியாக,மாற்றாக அதை நினைவூட்டும்
வகையில் எவ்வொரு அம்சமும் இக்கரையில் இல்லை!    இக்கரையில்
உள்ள        அனைத்திற்கும்     உங்கள்      முதுகைக்          காட்டும்போது,
அவைகளை    ஒட்டுமொத்தமாகப்     புறக்கணித்திடும்   போது,     மறு
கரை மீதான ஏக்கம் உங்களிடம் உருவாகும்!

இக்கரையிலுள்ளவை, இவையிவை,   இன்ன   இன்னவை   தான்   என,
அவற்றின்   பொருத்தப்பாடுகளையும்,   மட்டுப்பாடுகளையும் புரிந்து
கொள்ளும் போது,  அவற்றின்  மீது   உங்களுக்கு  ஒருவித ஆரோக்கிய
மான   "அதிருப்தி"   ஏற்படும்.    ஆனால்,    அந்த    "தெய்வீக-அதிருப்தி"
வெறுமனே ஏற்பட்டுவிடுவதில்லை!

உங்களிடம்,  "புரிதல்"   இல்லாதபோது,  "தேடலார்வம்"  இல்லாதபோது
நீங்கள்    தொடர்ந்து     மேலோட்டமான  விஷயங்களிலும், விவகாரங்
களிலும் தான் மூழ்கித் திளைப்பீர்கள்!

"தேடல்"  என்பது,   புதியதைத்   தேடுவதையோ, இல்லாதவொன்றைத்
தேடுவதையோ  குறிப்பதல்ல !   மாறாக,    தேடல்   என்பது     உண்மை
யானதை,    உயர்ந்ததை,     முடிவானதை,   இறுதியானதை,    முழுமை
யானதை   உணர்ந்தறிவதற்கான  "இறுதி-உணர்வை" அடைதலையே
குறிக்கிறது!

உங்களிடம்,   முழுமையாக  வாழ்க்கைக்கு உங்களை அர்ப்பணிக்கும்
"அன்பு"  எனும்  "பேரார்வம்" இருக்கும்போது, "தேடல்" இருக்கும். தேடல்
இருக்கும்போது தான் மட்டுப்பாடுகளைக்கடந்து செல்லும் தேவையை
நீங்கள்   உணர்வீர்கள்!    அப்போதுதான்,   மறுகரை     பற்றிய     ஏக்கம்
உங்களிடம் தோன்றும்!

உங்களிடம்   மேலான தேடல்    இருக்கும் பட்சத்தில்,  நீங்கள் யாதொரு
அற்பமான,     மேலோட்டமான   விஷயங்களிலும்,   விவகாரங்களிலும்;
யாதொரு மட்டுப்பாட்டிலும் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள்!

ஆனால், உங்களிடம் "அன்பு " எனும்   "பேரார்வம்"  இல்லை.  பேரார்வம்
என்பது   பெரிய,   சிறந்த,   அரிய, உயர்ந்த,  உண்மையான, இறுதியான
விஷயங்களின் மீதான ஆர்வமாகும்!  அன்பு  இல்லாததால் உங்களிடம்
பேரார்வம்   இல்லை;     பேரார்வம்   உங்களிடம்  இல்லாததால்,    தேடல்
இல்லை;  உங்களிடம்  தேடல்  இல்லாததால் , நீங்கள் இக்கரையிலேயே
உழன்று கொண்டுள்ளீர்!

நீங்கள்   ஒரு  'இயற்கையான- ஜீவியாக' த் தொடரும் வரையில், நீங்கள்
இக்கரையைச் சேர்ந்தவர்களாகவே  இங்கேயே சிறைப்பட்டிருப்பீர்கள்!
உங்கள்    உருவாக்கத்தின்    அடிப்படையில் ,     உங்களது  அடிப்படைச்
சுயமான உடலானது இக்கரையைச்சேர்ந்தது. ஏனெனில், உங்கள் உடல்
இக்கரையின்  பொருட்களால்  கட்டமைக்கப்பட்டதாகும்.   ஆகவேதான்,
உங்கள்    உடலானது      "மாற்றம்"   மற்றும்   "மரணம்"   ஆகியவற்றுக்கு
உட்பட்டதாக விளங்குகிறது!

உங்கள் மனதைப்பொறுத்தவரையில், அது, இக்கரையைச் சேர்ந்ததாக
வும் இல்லாமல், மறுகரையைச் சேர்ந்ததாகவும்  இல்லாமல், 'இரண்டும்-
கெட்டான்'    நிலையில்,    இரண்டுக்கும் இடையே 'நடுநிலை'யில் உள்ள
தெனினும்,   உங்களது    மனமானது    பெரிதும்    உடலுடனும்,  இக்கரை
யுடனும்,   இக்கரையிலுள்ள    பொருட்கள்   மற்றும்   விஷயங்களுடனும்
தன்னை      அடையாளப்படுத்திக் கொள்வதால்,  அது,      இக்கரையைச்
சேர்ந்ததாகவே ஆகிவிடுகிறது!

ஆம்,  மனம்   எதனுடன்  தன்னை  அடையாளப்படுத்திக் கொள்கிறதோ
பிணைத்துக்   கொள்கிறதோ   அதனுடனேயே  இணைந்து கொள்கிறது,
இணைந்து செல்கிறது!

இவ்வாறு,    உங்களுடைய      யாவும்     இக்கரையைச்    சார்ந்ததாகவும்,
சேர்ந்ததாகவும்,   இருக்கையில்,   இக்கரையைச்  சேர்ந்திராத ஏதேனும்,
ஏதேனும்,   ஒரு  அம்சமாவது   உங்களிடம்  இருக்கிறதா?    "இருக்கிறது!"
என்று   உங்களால்     சொல்லமுடியாது!   அவ்வாறு   இருந்தால்    நீங்கள்
இவ்வாறு     இருக்கமாட்டீர்!       ஆனால்,      முற்றிலும்       இக்கரையைச்
சேர்ந்திராத    ஒரு   அம்சம்       உங்களிடம்   (ஒவ்வொரு மனிதனிடமும்)
தோன்ற முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  அது  யாதெனில்
"மறுகரை"  பற்றி உங்களுக்குள் எழக்கூடிய "ஆழமான ஏக்கம்" தான்!

மறுகரை   மீதான  ஏக்கம் என்பது இக்கரையை முற்றிலுமாக மறுத்தல்
அல்லது  புறக்கணித்தல்  என்பதே !  இக்கரையை  'மறுத்தல்'  என்பதன்
எளிய   வடிவமாக,       "மறத்தல்"      என்பதைச்        சொல்லலாம்!     ஆம்,
இக்கரையை முற்றிலுமாக "மறந்திருத்தல்"  என்பதை "தியானம்" எனக்
கொள்ளலாம்!   இவ்வகையில் அல்லாமல்  வேறு  வகையில் " தியானம்"
என்பதை  நாம் அணுகுதல் முறையானதன்று!

ஒரு  காதலன்  தன்  காதலி  மீது கொள்ளும்  தீவிர ஏக்கத்தினால், தனது
உணவையும்,  உறக்கத்தையும்,  பெற்றோர்,   உற்றார்,   உறவினரையும்
தனது பணி  முதலான  அன்றாடச்செயல்பாடுகளையும்;  காலம், நேரம்,
இடம்    யாவற்றையும்;     இன்னும்   முக்கியமாக    தன்னையும்      தனது
உயிரையும்கூட         பொருட்படுத்தாமல்         அனைத்தையும்      துறந்து
விடுகிறான். புறக்கணித்துவிடுகிறான்.

'துறத்தல்',    'புறக்கணித்தல்'    என்பது      எந்தவொரு    விஷயத்தையும்
முற்றிலுமாக விலக்கி விடுதல்,   அடியோடு  துடைத்து  எறிந்து   விடுதல்
என்பதல்ல!  மாறாக,  ஒரு   விஷயத்தைத்    'துறத்தல்'     என்பது  அதற்கு
இதுவரை   அளித்து வந்த 'முதலிடத்தை',  முக்கியத்துவத்தை விலக்கிக்
கொண்டு,  அதற்கு    'இரண்டாம்-பட்சம்'  அல்லது  'மூன்றாம்-பட்சமான'
இடத்தை  அளித்தல்  என்பதேயாகும்! ஏனெனில்,  "உணவு" போன்ற மிக
அடிப்படையான   தேவையை    நாம்   முற்றிலுமாகத் துறக்க   முடியாது!
அப்படியே   உணவைத்  துறக்க  முடிந்தாலும்    வாழ்க்கையின் ஒப்பற்ற
இலக்கு  அதுவல்ல!   துறக்கப்படவேண்டியது 'உணவே பிரதானம்' என்ற
பிறழ்வைத்தான். 'உணவின்றி  உயிர்-வாழ  முடியாது' என்பது  உண்மை
தான். ஆனால்,  "இலக்கு அறியாமல் வாழ்வது அர்த்தமற்றது; அது மனித
தரத்திற்கு குறைவானது!" என்பது  "பேருண்மை" யாகும்!

இக்கரையை   ' அழித்துவிடுவதன்'  வழியே நாம் மறுகரையை அடைந்து
விட முடியாது!   இக்கரையைக்  கடந்து செல்வதன் வழியே மட்டுமே நாம்
மறுகரையை அடைய முடியும்!

ஒரு    விஷயத்தைக்      "கடந்து-செல்லுதல்"     என்பது     அவ்விஷயத்தை
முழுமையாகப்   "புரிந்துகொள்ளுதல்" என்பதே!  புரிதல் இல்லாமல் எந்த
விஷயத்திலிருந்தும்  விடுபடவோ,  அதைக் கடந்து செல்லவோ முடியாது!

ஆகவே, இக்கரையை  "மாயை"  என்று மறுக்கவும் தேவையில்லை. அதே
வேளையில்,  அதன்  இடம்,  பாத்திரம்,  மற்றும்  அவசியம்  ஆகியவற்றை
அதிகப்படியாக   பெரிதுபடுத்திக்கூறவும்    தேவையில்லை!         மாறாக,
இக்கரையின்   பொருத்தப்பாடுகளையும்,   மற்றும்   அதன்   மட்டுப்பாடு
களையும்   புரிந்து கொண்டு   கடந்து  செல்வது  மட்டுமே முக்கியமாகும்!

இக்கரையை   நாம்   கடந்து செல்ல     வேண்டியதன்     "அவசர-அவசியம்"
மற்றும்      "பிரதான காரணம்"    யாதெனில்,       இக்கரையானது   மிகவும்
தற்காலிகமானதொரு உலகம் ஆகும்.   தனிமனிதஜீவிகளின்   ஆயுளுடன்
ஒப்பிடுகையில்,    இப்பிரபஞ்சம்   நீண்ட- காலம்    நீடித்திருப்பதாயுள்ளது.
ஆனால், தனிமனித ஜீவிகளின் ஆயுள் மிகவும் குறுகியதே!

ஆம்,   எந்த நேரத்திலும்  உங்களது  வாழ்வு  முடிந்து போகலாம்!     ஆகவே,
காலத்தை    வீணாக்காமல்      இக்கரையையும்,  அதன்       மட்டுப்பாடான
வாழ்க்கையையும்   விட்டு அகன்று    பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான
இறுதிக்கரையை அடைவது  அவசர-அவசியமாகும்!

                <> <> <> <> <> <>

ஆனால்,  மனிதஜீவிகளாகிய  நீங்களோ, என்றென்றைக்குமாக நிலைத்து
நீடித்து      வாழப்போகிறவர்களைப்போல,             இக்கரையின்      தன்மை
அறியாமலும்,  மற்றும் 'மரணம்' என்பது  உங்களது ஒவ்வொரு செல்லிலும்
பொறிக்கப்பட்டுள்ளது;   சீக்கிரமாகவோ,  அல்லது  சற்று  தாமதமாகவோ
நீங்கள்   "மண்ணோடு மண்ணாவது"   உறுதி  என்பதை அறிந்தபோதிலும்
உடலுடனும்,  'உடலின்-வாழ்க்கை'யுடனும் உங்களை நீங்கள் அடையாளப்
படுத்திக் கொண்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.

ஒரு  'உயிருள்ள-ஜீவி' என்கிற வகையில்,  சந்தேகமின்றி  நீங்கள்  இக்கரை
யைச் சேர்ந்தவர்களே!    ஆனால்,  உங்களுடைய  இருப்பு   வெறும்    "உயிர்-
இருப்புடன்"  முடிந்துவிடுவதோ, முழுமையடைந்துவிடுவதோ இல்லை!

"மனித-இருப்பு"      அல்லது    "மனித-வாழ்க்கை"     என்பது,        வெறுமனே
'உயிரோடிருத்தல்' மற்றும் உயிரோடிருத்தலுக்காக பல்வேறு செயல்களை
செய்தல்  என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நீங்கள் எவ்வளவு காலம்
உயிரோடிருக்கப்போகிறீர்கள்?   'விபத்து',   'நோய்',  'மூப்பு'   இந்த  ஏதாவது
ஒன்றினால் மரணம் நேரும் வரை உயிரோடிருப்பீர்கள்!

        ஆம், மரணம் நேரும் வரை- தினம்
        மூன்று வேளை உண்பீர்!
        மரணம் நேரும் வரை- தினமும்
        உறவு கொள்வீர்!
        மரணம் நேரும் வரை-
        சிரிப்பீர்  அல்லது அழுவீர்!
        ஆம்,  தினம் தினம் -வாழ்வீர்
        வாழ்வீர் வாழ்வீர்-மரணம் நேரும்
        மட்டும்!

நிச்சயமாக,       உயிரோடிருத்தல்    என்பது    அதனளவில்    முழுமையான
இருப்பாக,   வாழ்க்கையாக   ஆகிடாது!   ஒரு   அறுபது,     அல்லது, எழுபது
அல்லது   அதிகபட்சம்  ஒரு நூறு ஆண்டுகள்  வாழ்ந்து திடீரென ஒரு நாள்
மரணத்தில்  மறைந்து  போவதில்  என்ன   "அர்த்தம்"   இருக்க முடியும்?

மிகக் குறுகிய    ஆயுளைக்  கொண்ட   இந்த   'வாழ்க்கை'  ஏன்,  எதற்காக;
அப்படி  என்ன  'பெரிய'   குறிக்கோள்,  அல்லது   இலக்கு இக்குறுகிய கால
வாழ்க்கையின் வழியாக அடையப்படுகிறது?

'உயிரோடிருத்தல்' தான்     'வாழ்க்கை'   என்றால்,      பிறகு   'மரணம்'   ஏன்
சம்பவிக்கிறது,   வாழ்க்கையைப்   பறித்துச் சென்று     விடுகிறது?  ஒன்று:
இந்த  'வாழ்க்கை'  அபத்தமானதாயிருக்க  வேண்டும்!   அல்லது: 'மரணம்'
என்பது அபத்தமானதாயிருக்க  வேண்டும்!

ஆனால்,   நிச்சயமாக  வாழ்க்கை  அபத்தமானதாயிருக்க வாய்ப்பில்லை
மாறாக,  வாழ்க்கை என்பது  வெறுமனே 'உயிரோடிருத்தல்' என்பதைவிட
பெரிதாய் , வேறேதோவொன்றாய் இருக்க  வேண்டும்!  அதுவும்,  உயிரோ
டிருக்கும்  (காலத்தின்)   போதே    அது       சாதிக்கப்படவும்        வேண்டும்!
ஏனெனில்,  வாழ்க்கையின் அர்த்தத்தை, இலக்கை மரணத்தின் போதோ
அல்லது மரணத்திற்குப் பிறகோ அடையமுடியாது!    இவ்வாறில்லாவிடில்
வாழ்க்கைக்கு யாதொரு அர்த்தமும் இருக்க முடியாது!

உண்மையில்,  மனிதஜீவியின்  வாழ்க்கை  "உயிர்-இருப்பு"டன் தொடங்கு
கிறது.  ஆனால்,   உயிர்-இருப்புடன் முடிந்து விடுவதோ,  அல்லது முழுமை
யடைந்து  விடுவதோ  இல்லை!    மாறாக,   "உயிர்-இருப்பு"    முடிவதற்குள்
மனிதஜீவியானவன்    "உணர்வு-இருப்பு" க்குள்    பிரவேசித்து  உணர்வின்
உச்சத்தை  அடைந்திட  வேண்டும்.    உணர்வின்   உச்ச-நிலையைத் தான்
இங்கு  "மறுகரை" என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.

"மறுகரை"  என்பது  ஒவ்வொரு மனிதஜீவியும் அடைந்திட வேண்டிய, தன்
உணர்வின்  உச்சி  அல்லது  சிகரம்  ஆகும். அதுவே, இருப்பின், வாழ்க்கை
யின் முழுமையாகும்.

வாழ்க்கை  என்பது  நிச்சயமாக  "உயிர்-இருப்பு" (உயிரோடிருத்தல்) மட்டு
மல்ல.       மாறாக,   "உணர்வு-இருப்பே"        (உணர்வோடிருத்தல் என்பதே)
உண்மையான  வாழ்க்கை யாகும் !

ஏனெனில்,   உணர்வில்லாத  இருப்பு  இருப்பே அல்ல .இங்கே இப்பூமியில்
ஒரு  புழு,  பூச்சி கூட  தோன்றிடாத  காலத்தில்  இம்மாபெரும்   பிரபஞ்சம்
உயிர்ப்பற்ற சடமாய், சடத்துவ-இருப்பாய் இயங்கி வந்தது.

பிறகு,       உயிர்   தோன்றியதும்  "புறம்"  (புறவுலகம்)   பற்றிய      'உணர்வு'
மெலிதாய்  தொடங்கிற்று!  ஆனால்,  அப் 'புலன்-வழி-உணர்வு'  எவ்வகை
யிலும்   இருப்பை  (அகத்தேயும் சரி, புறத்தேயும் சரி)  உணரும் ஆழமான
உணர்வாக   வெளிப்படவில்லை!   அனைத்து    விலங்கு ஜீவிகளும்  தமது
உயிர்த் தேவைகளுக்காக   புறத்தை (உலகை)  நாடின.      அவை      தமது
உணவுத்தேடலைக் கடந்து "உலக-மெய்ம்மை" பற்றியோ, இன்னும் தமது
சொந்த   "சுயத்தின்-மெய்ம்மை"  பற்றியோ   உணர்வு  கொள்ளவில்லை!
ஏனெனில்,   விலங்கு-ஜீவிகள்   அனைத்திற்கும்    "சுய-உணர்வு"   என்பது
கிடையாது. அவைகளுக்கு, "தாம் இருக்கிறோம்!" என்பதே தெரியாது!

ஆம், உணர்வின் பரிணாமத்தில்  "சுய-உணர்வு" என்பது மிகவும் முக்கிய
மான, திருப்பு-முனையான ஒரு கட்டமாகும்.

ஏனெனில்,     உணர்வு   என்பது  வெறுமனே -  அதாவது,ஏதோவொரு ஜீவி
தன்னை  உணர்வு  கொள்ளாமல் -   தனக்குப்  புறத்தேயுள்ள  உலகையும்,
அதிலுள்ளவற்றையும்  மட்டுமே உணர்வு கொள்ளுதல் என்பது  பொருத்த
மானதல்ல.   இது  மிகவும் முக்கியமானது :   உணர்வு  என்பது  எப்போதும்
'எதையோ' பற்றியதோ, நோக்கியதோ அல்ல.    மாறாக, உணர்வு  என்பது
பிரதானமாக  உணர்வைப் பற்றியதே,  தன்னை  நோக்கியதே.   இவ்வாறு
இல்லாவிடில்,   பரிணாம  வழிமுறையில்,    ஒரு  கட்டத்தில்,   உணர்வுள்ள
மனித-ஜீவி என்பவன் தோன்றியிருக்கமுடியாது!

ஆம்,   உணர்வு  கொள்வதற்கு  முதலிடத்தில்    யாராவதொருவர், அல்லது
ஒரு  'உணர்வுள்ள'  ஜீவி வேண்டும்.  அதோடு,  அந்த ஒருவர்,அல்லது அந்த
ஜீவி முதலில் தன்னை உணர்வு கொள்வதாக, "சுய-உணர்வு" உடையதாக
இருப்பது அடிப்படை அவசியமாகும்!

ஆனால்,   'சுய-உணர்வுடைய'   மனிதனோ, 'சுய-உணர்வற்ற'  விலங்கைப்
போல,   தனது  சுய-உணர்வை,  பல்வேறு மேலோட்டமான    தேவைகளின்
பொருட்டு,  புறவுலகை  நோக்குவதிலும்,  ஆராய்வதிலும்,    கண்காணிப்ப
திலும்  முடக்கி  தனது சுய-உணர்வை வெறும்  'புற-உணர்வாக' ச் சுருக்கி
விட்டான். இதன் விளைவாக,புற-உலகம் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதி
முக்கியமான  தாகிவிட்டது!     உணர்வாகிய  மனிதன்  தனது முக்கியத்து
வத்தை  முற்றிலுமாக  உணரத் தவறிவிட்டான்!

மனிதனுக்கு  "தாம் இருக்கிறோம்!"  என்பது  (மட்டும்)  தெரியும்!    அதற்கு
மேல் "தாம் ஏன், எதற்காக இருக்கிறோம்?",  "எதை நோக்கிச்செல்கிறோம்,
அல்லது  செல்ல  வேண்டும்?",       "வாழ்க்கையின்   அசலான  குறிக்கோள்,
இலக்கு யாது?"  அல்லது,    "வாழ்க்கை என்றால் என்ன?" என்பவை எதுவும்
தெரியாது!  இதற்குக் காரணம், மனிதன் இன்னும்தனது "சுய-உணர்வுக்கு"
விழிக்க வில்லை!

மேலும்,மனிதனின் சுய-உணர்வு முழுமையான  தன்-உணர்வு அல்ல.அது
உணர்வின்  ஒரு  சிறு தொடக்கமே!   மேலும்,  அது பெரிதும் தானியங்கித்
தனமானது.     ஆகவேதான்,   மனிதன்   தனது  சுய-உணர்வையும்,   தனது
இருப்பையும் வெகு சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான்.

மனிதனின்    சுய-உணர்வானது    முழுமையான    "தன்-உணர்வின்" முன்
வாசல்   போன்றதாகும்.   அது  உணர்வின்   ஒரு  சிறு  தொடக்க  நிலையே
"தாம் இருக்கிறோம்!"என்கிற சுய-உணர்வுடன் தான்மனிதனின் அசலான
இருப்பு- அதாவது, "உணர்வு-இருப்பு" தொடங்குகிறது.

"உணர்வு"  தான் இருப்பின், வாழ்க்கையின் அளவீடு ஆகும். ஒட்டு மொத்த
பரிணாம   நிகழ்வு  முறையானது    "சடம்",   "உயிர்",     "உணர்வு"       ஆகிய
நிலைகளை         அல்லது       கட்டங்களை    வளர்ந்து    கடந்து    இறுதியில்
"முழு-உணர்வு" எனும் நிலையில் முழுமை எய்துகிறது.

"இருப்பு",   "வாழ்க்கை"   என்பது  உணர்வை அடிப்படையாகக் கொண்டது.
"உணர்வு"  இல்லாமல்   இருப்பு  அர்த்தம் பெறாது.  உணர்வில்லாத வெறும்
'உயிர்-இருப்பு'   அர்த்தமற்றது.   அது 'விலங்குத்தனமானது'.     இதே போல
"தாம் இருக்கிறோம்!"    என்பதை   மேலோட்டமாக,   மெலிதாக  உணர்வது
அல்லது  உணர்ந்திருப்பது  என்பது      "அரை-மனிதத்தனமானது".

இதற்கு மாறாக,    தாம்   ஒரு      "உணர்வு"   என்பதை   உணர்ந்து, அதாவது
உணர்வாய் உணர்ந்து, ஆழ்ந்து,பெருகி முழு-உணர்வாய் மலர்வது ஒன்றே
"முழு-மனிதத்தனமானது"!

       ஆம், இருப்பு (வாழ்க்கை) என்பது உயிரோடிருப்பது
       பற்றியதல்ல - ஏனெனில்
      'உயிர்-இருப்பு' மிகவும் தற்காலிகமானது, மற்றும்
       மரணத்திற்கு  உட்பட்டது!
       உயிரோடிருப்பது  உணர்வோடிருப்பதற்காகவே!
       உணர்வோடிருப்பது  என்பதும்  ஒரு தொடக்கமே!
       உணர்வோடிருப்பது   முழு-உணர்வை அடையவே!
       ஏனெனில் முழு-உணர்வு மட்டுமே நிரந்தரமானது,
       நித்தியமானது, மரணமற்றது!
       ஆம்,  முழு-உணர்வுக்குக்  குறைவான
       எதுவும் மரணமே!

நிரந்தரமற்றவை   யாவும்     இக்கரையைச்   சேர்ந்தவையே.      ஏனெனில்,
இக்கரை  என்பது  காலத்தின்  உலகமாகும்!   கால-வெளி  உலகில்   உள்ள
யாவும்   'வளர்ச்சி',   'மாற்றம்',    'சிதைவு',   'மரணம்'  மற்றும்  'மறு-சுழற்சி'  
ஆகிய    விதிகளுக்கு  உட்பட்டவையாகும்!

மேலும்,  காலத்தின் உலகில் உள்ள ஒரு பொருள் எவ்வளவு உயர்ந்த, உச்ச
பட்ச வளர்ச்சி நிலையை  எட்ட முடிந்தாலும்  அது  ஒருபோதும்,   'முழுமை-
நிலையை'  மட்டும்   எட்ட முடியாது!    ஏனெனில்,   "முழுமை" , " நிரந்தரம்"
என்பவை   காலத்தின்-உலகை   மீறிய   தன்மைகளாகும்!      ஆகவேதான்
அவை,       காலமற்ற,           காலத்தைக் கடந்த,           காலாதீத  உலகமான
"மறுகரையை"ச் சேர்ந்தவையாக விளங்குகின்றன!   ஆம், "முழு-உணர்வு"
என்பது மறுகரையைச் சேர்ந்தது!

உணர்வே   இருப்பின்   அளவுகோல்!    இருப்பு  உணர்வைச்  சார்ந்துள்ளது.
தற்போது     நீங்கள் உங்கள்    இருப்பை  அரை-குறையாகவேனும்  உணர்
கிறீர் என்றால்,   அது  உங்களுடைய  அரை-குறையான   தொடக்க-நிலை
உணர்வைக்  கொண்டு தானே தவிர,   உங்களிடம்  உணர்வு இல்லையேல்
நீங்களும் தவளைகளைப்போலவே தான் இருப்பீர்!   நீங்கள்   "இருக்கிறீர்!"
என்பதைக்கூட அறிய மாட்டீர்!

"இருப்பு"  உண்மையில் இருப்பாக இருக்க வேண்டுமெனில், அது உணர்வு
உள்ளதாக இருக்க வேண்டும்.  'அரை-குறை' உணர்வு 'அரை-குறை' யான
இருப்பைக் குறிக்கிறதென்றால்,  'முழு-உணர்வு' முழுமையான இருப்பை
முழுமையான வாழ்க்கையைக் குறிக்கிறது!

ஆகவே,      மனித ஜீவியானவன்    தனது   ( முழுமையான)     இருப்புக்காக
இக்கரையைச்  சேர்ந்த 'நிரந்தரமற்ற'   உடலையும்,  உயிரையும்    சார்ந்து
இருக்கலாகாது!

ஒரு   உணர்வுள்ள   ஜீவி     என்கிற  வகையில்,           மனிதன்     ஏற்கனவே
மறுகரைக்கு   உரியவனாவான்!      ஏனெனில்,   உணர்வு      மறுகரையைச்
சேர்ந்தது.

       ஆம், 'நதி' மலையில் தான் தோன்றுகிறது
       என்ற போதிலும் அது
       மலைக்குரியதல்ல - உண்மையில்
       நதியை மலை உற்பத்தி செய்திடவில்லை!
       மாறாக, நதி உற்பத்தியாவதற்கு
       உகந்த இடமாக மலை உள்ளது
       அவ்வளவு தான்!
       மற்றபடி நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது!

நதியைப்போலவே,     மனித -உணர்வானது    உயிருள்ள    மனித-உடலில்
குறிப்பாக,  மனித-மூளையில் தோன்றிய போதிலும்,  அது இக்கரையைச்
சேர்ந்த  உடலையோ,  உயிரையோ,   இன்னும்  உலகையோ சேர்ந்ததல்ல!
மாறாக,  உணர்வு என்பது "முழு-உணர்வு" எனும் மறுகரையைச்சேர்ந்தது!

நதியானது  பாய்ந்தோடிடக் கூடியது,  அதைத்  தேங்கிடச் செய்தால்,  அது
இக்கரையையே       பிரதிபலிப்ப  தாயிருக்கும்  -     அது    சமுத்திரத்தைச்
சென்றடையாது!  ஆனால்,  அது   வெள்ளப்பெருக்கெடுத்திடும் பட்சத்தில்
பாய்ந்தோடிடக்கூடிய முடுக்கத்தையும் வேகத்தையும் பெற்றிடும்- பிறகு
நதியானது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைந்திடும்!

அது போல, உங்களது தொடக்க-நிலை உணர்வில் நீங்கள் தேங்கி  விடும்
பட்சத்தில்,  உங்கள் உணர்வானது  இக்கரைக்கு உரியதாக, இக்கரையை
மட்டுமே  பிரதிபலிப்பதாக;   இக்கரைக்குரிய  உடலுடனும்,    அதனுடைய
பிராணித்தனமான இச்சைகள், பசிகள், மற்றும் மேலோட்டமான  தேவை
களுடனும்   தன்னை  அடையாளப்படுத்திக்கொண்டுவிடும் அபாயத்தில்
சிக்குண்டு விடும்!  அதன் பிறகு,  உங்கள்  உணர்வை  இக்கரையிலிருந்து
பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!

மாற்றம், மற்றும் மரணத்தின் விதிகளுக்கு உட்பட்ட இக்கரையில் நீங்கள்
சிக்கிக்கொண்டீர்   என்பதை  உணர்வதற்குள்   உங்கள் உடலும், மனமும்
தளர்ந்து போய்விடும்!    கிட்டத்தட்ட மரணம் உங்களை நெருங்கும் போது
தான்  நீங்கள்  இக்கரையில்  வெகுவாக  சிக்கிக்கொண்டுவிட்டீர் என்பது
தெரிய வரும்!   தெளிவாகச்  சிந்திக்கக் கூட  இயலாமல்  'மரணப்பீதியில்'
உறைந்து    போய்விடும்    அத்தருணத்தில்,     உங்களால்   எதுவும்   செய்ய
முடியாது! மரணமும் உங்கள் உணர்வை முழுமைப்படுத்தாது!
............
மா.கணேசன் / 19.02.2010





Thursday, 7 April 2016

தன்னந்தனியன் !



          மனிதா, நீ தனியன்! அனைத்து உறவுகளுக்கும்,
          பொருட்களுக்கும் மத்தியிலும், இப்பூமியிலும்,
          ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் சரி,
          நீ  தன்னந் தனியனே !

மனிதன் பிறக்கும் போதும் தனியேதான் பிறக்கிறான்; இறக்கும்
போதும்    தனியே தான்   இறக்கிறான்.     ஆனால்,     பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையே அவன் வாழ்கின்ற காலத்தில் மட்டும் ஏன்
'தான் ஒரு தனியன்!'   என்கிற உண்மையை மறந்து போகிறான்?
ஏன் உறவுச்சிக்கல்களில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி
றான்?

இல்லாமலிருந்த    மனிதன்   'பிறப்பு'  எனும்    கதவின்   வழியாக
'இருப்பு' பெறுகிறான்!  பிறகு 'இறப்பு' எனும்  கதவின்  வழியாகச்
சென்று மீண்டும் இல்லாமல் போகிறான்!  தன்   பிறப்பிற்கு முன்
இல்லாத  மனிதன்  தன்   இறப்பிற்குப் பின்   இல்லாமல்  போவது
குறித்து ஏன் பயப்பட வேண்டும்? வருந்திட வேண்டும்?

தாய்-தந்தை எனும் கதவின் வழியாக இவ்வுலகிற்குள் நுழையும்
மனிதன், தான் எதற்காக, எந்த நோக்கத்திற்காக, எந்த இலக்கை
குறிக்கோளை    அடைவதற்காக   இருப்பு  பெற்றான்     என்பதை
ஆராயாமல்," பெற்றோர்" எனும் கதவைக்கட்டிக்கொண்டு தனது
பாலகப் பருவம் வரை அகலுவதேயில்லை!  மனிதனைக்   கட்டிப்
போடுகின்ற முதல் உறவு இதுவே, இக்கதவே!   அப்படியே  அவன்
அகன்றாலும்  அடுத்தடுத்த  உறவுகளில்   அகப்படுவதற்காகவே
செல்கிறான்!  பலர்   கடைசிவரையிலும்   அகலுவதே      இல்லை!
அவர்கள் "தொப்புள்-கொடி" நீக்கப்படாதவர்கள்!

மனிதன்    வாலிபப் பருவம்    எய்தியதும்,    ஒரு        பெண்ணைப்
பார்க்கிறான், காதலில் விழுகிறான், பிறகு கல்யாணம்பண்ணிக்
கொள்கிறான்.      அத்துடன்,       தான்           இந்த           உலகிற்குள்
பிரவேசிப்பதற்கு கருவியாக அமைந்த பெற்றோர் எனும் கதவை
முற்றிலுமாக மறந்தே போகிறான் !     ஏனெனில்,       அவன்    தன்
பங்கிற்கு   ஒரு   'கதவாக'    மாறிவிடுகிறான்!       அதாவது அவன்
குழந்தை-குட்டிகளைப்       பெற்றுக்கொண்டு         குடும்ப- உறவு
களுக்குள் சிறைப்பட்டுவிடுகிறான்!   இனி  அவன்      ஒருபோதும்
தான் எதற்காக, எந்த குறிக்கோளுக்காக,  இப்பூமிக்  கிரகத்திற்கு
கொண்டு   வரப்பட்டான்    என்பது    குறித்தோ,   தன்     வாழ்வின்
அசலான  அர்த்தம்  மற்றும்  இலக்கு  குறித்தோ  ஆராயப்போவது
இல்லை !

மனிதனது  பிறப்பிற்கும்   இறப்பிற்கும்   இடையே    ஏற்படுகின்ற,
தாய்-தந்தை,  குடும்ப,  சொந்த-பந்த  உறவுகள், மற்றும் மனிதன்
ஏற்படுத்திக்கொள்கின்ற   நண்பர்கள்,   எதிரிகள்,      கொடுக்கல்-
வாங்கல் பரிவர்த்தனை உறவுகள் என எல்லாஉறவுகளும் மனித
வாழ்வின்            அசலான         நோக்கத்தை,           குறிக்கோளைச்
சிதறடிப்பவையே,   திசை  தவறச் செய்பவையே!    இந்த    மனித
உறவுகளுடன், பலவகைப்பொருட்களுடனும்    சொத்து-சுகங்கள்
மற்றும்    உடமைகளுடனும்   மனிதன்      ஏற்படுத்திக்கொள்ளும்
உறவுகளும் அவனைச் சிறைப்படுத்துபவையே! இன்னும், எல்லா
விதமான   அரை-உண்மைகள்,    கொள்கைகள்,    கோட்பாடுகள்,
இயங்கள்,      பிணைப்புகள்,       மற்றும்           அனைத்துவிதமான
அடையாளங்களுடனான   உறவுகளும்    மனிதனை    முடமாக்கு
பவையே, சிறைப்படுத்துபவையே !

மனிதன் தன்னைப் பற்றிப் படரும்   உறவுகளின்   தன்மைகளை,
அவற்றின்   பங்கு,   பணி,   பாத்திரம்   ஆகியவற்றைப்        புரிந்து
கொள்ளாமல்  பிணைக்கப்படும்  நிலையில்  அவனும்   பலவகை
உறவுகளில்  - ஒவ்வொரு   உறவுக்கும்  ஏற்ப  வெவ்வேறு     உறவு
முறையை,     பாத்திரத்தை     தழுவிக்கொள்கிறான்,         அல்லது
அடையாளப்படுத்தப்படுகிறான்.     ஒரு    மனிதனுக்கு    அவனது
பெற்றோர் தான் முதல் உறவு ; அப்பெற்றோருக்கு அவன்  "மகன்"
என அடையாளப்படுத்தப்படுகிறான்.        அம்மனிதனுக்கு உடன்
பிறந்தவர்கள்    இருக்கும்  பட்சத்தில் அவர்களுக்கு அவன்  சகோ
தரன் ஆகிறான். அம்மனிதன் ஒரு பெண்ணை திருமணம்புரிந்து
கொள்ளும் போது  "கணவன்"  என்றாகிறான்.       பிள்ளைகளைப்
பெற்றுக்கொள்ளும்   பட்சத்தில்  அவன் ஒரு  "தந்தை"   ஆகிறான்.
சமூகத்திற்கு,  தேசத்திற்கு  அவன்  ஒரு  "பிரஜை " ஆகிறான். பிற
மனிதர்களுக்கு  அவன்   "சக மனிதன்"  ஆகிறான்.        ஆக உறவு
களின்      வட்டத்திற்குள் எவ்வொரு மனிதனும் ஒரு "மனிதனாக"
தலையெடுக்கவோ,   வளரவோ,   வாழவோ,   முக்கியமாக தனது
சாரமான     "மனிதத்தை"    நோக்கிப் பயணிக்கவோ       இடமோ,
வாய்ப்போ, அவகாசமோ கிடையாது.

ஏனென்றால்,    ஒவ்வொரு   உறவிற்கும் குறிப்பிட்ட கடமைகளும்,
பொறுப்புகளும்        உள்ளதால்        அவற்றையெல்லாம்      அவன்
கவனித்தாக  வேண்டும்,   சுமந்தாக வேண்டும்,  பூர்த்திசெய்தாக
வேண்டும் எனும் நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில்  ஒரு மனிதனால்
தன்னுடைய   உள்ளார்ந்த  சாரமான சுயத்தை  வெளிக்கொண்டு
வருவதற்கான  கடமையையும்,  பொறுப்பையும்    பற்றிச் சிந்திப்
பதற்குக்கூட     அவகாசம்      இருப்பதில்லை     எனும்    நிலையில்
அவற்றை  நிறைவுசெய்தல் என்பது சிறிதும் சாத்தியமற்றதாகும்.

ஒரு மனிதன் வீடு-நிறைந்த உறவுகளுக்கு மத்தியில்இருந்தாலும்,
சமூகத்தில்  பெருந்திரளான மக்கள்  கூட்டத்திற்கிடையே புழங்கி
வந்தாலும் அவனுடைய  அசலான  உறவு நிலை  என்பது அதாவது
அவன்ஒரு  "தனியன்"  என்பது சிறிதும் மாறுவதில்லை!


மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும்   மட்டுமல்ல அவன்
வாழும்  காலத்திலும் தனியனாகத்தான்  வாழ்கிறான்,  அனுபவம்
கொள்கிறான்.    உங்களுக்குப்   பக்கத்தில்    இருப்பவன் 'இனிப்பு'
சாப்பிடுகிறான்  என்றால்    அதன்   அனுபவம்   அவனுக்கு மட்டும்
தான் கிடைக்கும்.   உங்கள் காலில்  'முள்'   தைத்தால் உங்களுக்கு
மட்டும் தான் அதன் வலி; அடுத்தவனுக்கு வலிக்காது.

நாம்    நெருங்கிய   உறவுகளுடனும் ,  சக-மனிதர்களுடனும் பழகு
வதன்,   நெருங்கி    உறவாடுவதன்     மூலமாக        வாழ்க்கையை
உண்மையாகவும்,    முழுமையாகவும்    வாழ்ந்து    விடுவதில்லை!
நாம் சேர்ந்து  உண்ணலாம்,  கூடிப் பேசலாம்,  ஆடலாம்,  பாடலாம்
ஆனால்,      இவ்வழிகளிலெல்லாம்     நாம்       வாழ்க்கை        எனும்
புதிருக்கு   நெருக்கமாகி விடுவதில்லை !    ஏனெனில்,      அசலான
வாழ்க்கை    என்பது   எல்லாக்காலங்களிலும்     "தனிமனித" பூர்வ
மானதாகும்.    அதாவது,    தனிமனிதர்களால்    மட்டுமே  அசலான
வாழ்க்கையுடன்      உணர்வுபூர்வமாக       தொடர்பு      கொள்ளவும்;
வாழ்க்கையை    ஆழமாக    அறிந்து     கொள்ளவும்    முழுமையாக
வாழவும் இயலும்.

சமூக-பூர்வமான   வாழ்க்கை  என்பது   மிகவும்  மேலோட்டமானது.
ஏனெனில்,  அது   "பொதுப்படையானது".     ஒரு சமூகத்தின்  எல்லா
அங்கத்தினர்களும்       பகிர்ந்து       கொள்ளக்கூடிய     'பொதுவான'
அம்சங்களால்   மட்டும்   ஆனது !     ஆகவே,    அது     சராசரியானது,
சாமானியமானது.     ' சமூகம் '     என்பது      ஒரு     தனிமனிதனைப்
போன்றதொரு       நிஜமான,     இரத்தத்தாலும்,   சதையாலும்  ஆன;
யாவற்றுக்கும்   மேலாக,   உணர்வுள்ள   ஜீவி யல்ல!   அது   இன்னும்
தான்   ஒரு    உணர்வுதான்    என்கிற   உணர்வுக்கு வராத,   இன்னும்
தான்  ஒரு   "தனியன்"   எனும்   தன்னிலை  உணராத  'தனி மனிதர்'
களின்  கூட்டமாகும் !    மேலும்,   அது   அனைவருக்கும்  பொதுவாக
உள்ள     அம்சங்களை    மட்டும்       பிரித்தெடுத்து       ஒரு      'மனித
மாதிரியை' யும்,      மற்றும்      ஒரு       'வாழ்க்கை-மாதிரியை'     யும்
அங்கீகரித்து    இடமளிக்கும்   ஒரு   வித்தியாசமான,   கலவையான
ஜந்து  ஆகும்!      அது    " தனித்தன்மை"    அறியாதது.        ஏனெனில்,
தனித்தன்மை   என்பது    ஒரு    சமூகத்தைப்     பொறுத்தவரையில்
அந்நியமானது,      வழக்கத்துக்கு      மாறானது ;         ஆகவே       அது
'விதி-மீறலு'க்குச்    சமமானது !       எவ்வொரு     சமூகமும்     மனிதர்
களிடமுள்ள            பொதுத்தன்மைகளை     மட்டுமே     அனுமதித்து
ஏற்றுக்கொள்ளும்;         தனித்தன்மைகளை       அது          கணக்கில்
கொள்ளாது.     ஆகவே,    எவ்வொரு   சமூகத்திலும்     அசலான தனி
மனிதர்கள்  தோன்றவும்,  வளரவும்  முடியாது!

சமூகமானது   "புத்தர்"      போன்ற    ஒரு          தனிமனிதரை      தனது
பிரஜையாக    அங்கீகரித்து    ஏற்றுக்கொள்வது   என்பது     எளிதான
விஷயம்   அல்ல!     ஏனெனில்,    சமூகத்திற்கு   புத்தரிடம்   யாதொரு
வேலையும்   இல்லை!     புத்தரால்       அதற்கு  ஒரு பயனும்   இல்லை !
அப்படியே    அது    புத்தரை   ஏற்றுக்கொண்டாலும்,      அவரை    ஒரு
'மனிதராக'      ஏற்றுக்கொள்ளாது !    மாறாக,   ஒரு  'மகான்'   எனவும்
'கடவுள்'      எனவும்     முத்திரை    குத்தி     அவரை  ஓரம் கட்டி விடும்!
மேலும்,    புத்தர்   போன்ற   ஒரு   தனிமனிதர்  சமூகத்தில் எவ்வொரு
இடத்திற்கும்,     உறவுக்கும் பொருந்துபவரல்ல !   ஏனெனில்,    புத்தர்,
இயேசு    போன்ற     தனிமனிதர்கள்     பிரதிநிதித்துவம்   செய்கின்ற
வாழ்க்கையும்,      அதன்     இலக்கும்     சமூகம்     அறிந்த    சாதாரண,
சராசரியான      வாழ்க்கை,     மற்றும்    இலக்கிலிருந்தும்   முற்றிலும்
வேறானவையாகும்.

சமூகத்தைப்      பொறுத்தவரை    'வாழ்க்கை'   என்றால்  அது   'உயிர்
பிழைத்திருத்தல்'     எனும்         அடிப்படை  வாழ்க்கையும்,      அதைப்
பூர்த்தி     செய்துகொள்வதற்குரிய     விவகாரங்கள்  மட்டுமே யாகும்.
உண்மையில்,      "உயிர்-வாழ்தல்"       எனும்    அடிப்படை   வாழ்க்கை
என்பது    விலக்குதலுக்குரியதோ,    தேவையற்றதோ  அல்ல. மாறாக,
அது         தவிர்க்கவியலாத       அடிப்படையாகும்.      அதே    நேரத்தில்,
பிரச்சினை      எப்போது     எழுகிறது   என்றால்,       இந்த     அடிப்படை
வாழ்க்கையே       மொத்த   வாழ்க்கையும்,      எல்லாமும்     என்பதாக
அதிலேயே   நாம்   மூழ்கி   விடும் போது   அது மனிதத் தரத்திலிருந்து
கீழிறங்கி விடுவதோடு,  முற்றிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது.

ஆக,     அசலான    மனித-வாழ்க்கையை    மனிதர்கள்  வாழவேண்டு
மானால்,      சமூகத்தின்     மட்டுப்படுத்தும்       தாக்கங்களிலிருந்தும்,
அதன்    பகட்டான     வெற்று-மதிப்புகள்,        மற்றும்    விழுமியங்கள்
அனைத்திலிருந்தும்,         தனிமனிதர்கள்       தங்களை    விடுவித்துக்
கொள்வது    அவசர    அவசியம்   ஆகும். மேலும்,   மனிதனை  மட்டுப்
படுத்துகின்ற,     பிணைக்கின்ற    அனைத்து  சமூகஉறவுகள் மற்றும்
அனைத்துவித     குடும்ப,    சொந்தபந்த,       நண்பர்கள்    உறவுகளில்
இருந்தும் மனிதர்கள் தங்களைவிடுவித்துக்கொள்வது அவசியம்.

இதன்  அர்த்தம்,         உறவுகளே   வேண்டாம்     என்பதல்ல.     மாறாக,
அசலான    வாழ்க்கைக்கும்,     அதன் ஒப்பற்ற   இலக்கிற்கும்  சேவை
புரியும்     வகையில்     உறவுகள்       யாவும்         முறைப்படுத்தப்பட்டு
நிர்வகிக்கப்பட   வேண்டும்.       இவ்வழியாக     மட்டுமே     ஒவ்வொரு
வரின்-  ஆகவே   ஆண், பெண்   என   பால்பாகுபாடின்றி அனைவரின்
உள்ளார்ந்த ,   சாரமான,  மையமான  சுயத்தின் நலம் சாதிக்கப்படும்.
அனைவரின்   விடுதலையும்    சாத்தியமாகும்.    தற்போதுள்ள   உறவு
முறைகள்    யாவும்     மனிதர்களின்     மேலோட்டமான    சுயங்களின்
நலன்களுக்காக      அவர்களின்    சாரமான,  அசலான   சுயங்கள் பலி
யிடப்படுவதாய் அமைந்துள்ளவையாகும்.

உதாரணத்திற்கு,    தற்போதுள்ள    தன்மைகளில்,  மிக நெருக்கமான
'கணவன்-மனைவி'      எனும்  உறவை   எடுத்துக்கொண்டால்,    அதில்
கணவனும் சரி,    மனைவியும் சரி,      இருவருமே   பரஸ்பரம்     ஒருவர்
இன்னொருவரால்     மட்டுப்படுத்தப்படுகிறார்கள்,      முடமாக்கப்படு
கிறார்கள்.      இருவருமே    'குடும்பம்'   எனும் சிறையின் ஆயுள்-கைதி
களாக     அல்லல்படுகிறார்கள்.     உண்மையான  "விடுதலை" என்பது
என்னவென்று     தெரியாமல்     பரஸ்பரம்    ஒருவரிடமிருந்து    ஒருவர்
விடுதலை   பெற    வேண்டி  விவாகரத்து கோருகிறார்கள்!     கணவன்-
மனைவி    உறவு     மட்டுமல்ல,       பெற்றோர்-பிள்ளைகள்        உறவும்,
அனைத்து      உறவுகளும்     மனிதர்களை      மட்டுப்படுத்துவதாகவும்,
முடமாக்குவதாகவும்,   சிறைப்படுத்துவதாகவுமே   உள்ளன. இதற்குக்
காரணம்,     அனைத்து  உறவுகளும்     மனிதர்களின்  மேலோட்டமான
சுயங்களுக்கிடையிலான    பரிவர்த்தனைகளாக   அமைந்திருப்பதும்,
உண்மையான    வாழ்க்கை   பற்றிய  நாட்டமின்மையும் தான்!   இவை
அனைத்திற்கும்   அடிப்படையான  காரணம்  நாம் "தனியர்கள்" எனும்
உண்மையை இன்னும்  நாம் உணராததே யாகும் !

உண்மையில்,   நாம்   ஒவ்வொருவரும்  அசலான ஆழமான வாழ்க்கை
யைச்   சந்திக்கவும்,     வாழவும்     அஞ்சுகிறோம்.       ஏனெனில்,    நாம்
தனித்திருக்க    அஞ்சுகிறோம்.     "தனிமை" என்பது ஒருவரை அவருள்
ஆழ்ந்திட        வேண்டியதன்     அவசியத்தைச்   சுட்டுவதால்,   தனிமை
குறித்து     பீதியடைகிறோம்.    ஏனெனில்,    ஒருவர்  தன்னுள்    ஆழ்ந்து
செல்ல   வேண்டுமானால்,   அவர்   தனியேதான்  செல்ல முடியும். மேற்
புறத்து       விஷயங்களையும்,      பொருட்களையும்,   உடமைகளையும்,
உறவுகளையும்,     பிணைப்புகளையும்     தன்னுடன் கொண்டு செல்ல
முடியாது!  மேலும்,  அவ்வாறு  உள்ளாழும்  ஒருவரது  மேற்புறச்சுயமும்
உணர்வும்  ஆழத்திற்கேற்ப  மாற்றமடையக் கூடும்;   அதாவது, ஒருவர்
தனது    வழக்கமான  சுயத்தை,    அடையாளத்தை      இழக்க  நேரிடும்
என்பதால்  கலக்கமும், பீதியும் அவரைத் தொற்றிக்கொள்கிறது!

தன்    அடியாழம்   வரை   சென்று மீண்டு  வரும் ஒருவர் முற்றிலும் ஒரு
புதிய    சுயமாக,    புதிய  உணர்வாக,    புதிய  மனிதனாக,       அதாவது
முழு-மனிதனாக,       ஒரு  புத்தனாக     வெளிப்படுகிறான்!      அசலான
ஆழமான    "வாழ்க்கை"    என்பதும்,       ஆழமான    " சுயம்"     என்பதும்,
ஆழமான  "உணர்வு"   என்பதும்  ஒன்றுதான்!

ஆக,      தனது         மேலோட்டமான         முகப்புச்      சுயத்தை     இழக்க
விரும்பாதவன்,     தனது    முகப்புச்  சுயத்தைக்   கடந்து    மேன்மேலும்
ஆழமாக    வளர     விரும்பாதவன்   வாழ்க்கையின் மேற்புறத்திலேயே
அதன்  மேற்புற  உறவுகளிலேயே   தங்கித்தேங்கி விடுறான். ஒரு புறம்,
மனிதர்கள்  தாங்கள்   "தனியர்கள்"   எனும் உண்மையைத்  தவிர்க்கும்
முகமாக  பலவிதமான உறவுகளையும்,  பிணைப்புகளையும்  ஏற்படுத்
திக்கொள்கிறார்கள்.   இவ்வாறு உறவுகளின் மத்தியில் இருப்பது பாது
காப்பானது  என அவர்கள் நம்புகிறார்கள். இன்னொரு புறம், உறவுகள்
உறவுகள்      அனைத்தும்    மனிதர்களை   அவர்களுக்குள்     ஆழமாகச்
செல்ல விடாமல் பார்த்துக்கொள்கின்றன!

எவ்வொரு   உறவும்   மனிதனின்,   அவனது சுயத்தின் முன்னோக்கிய
வளர்ச்சிக்கு   வழிவிடும்    "கதவு"களாக,      " திறப்பு"களாக    அமைய
வேண்டுமேதவிர,    மனிதனைச்     சிறைப்படுத்துவதாக,         அவனது
வளர்ச்சியைத் தடுப்பதாக அமைதல் கூடாது.  அப்படியானால், எல்லா
உறவுகளும்,  மனித வாழ்வின்   முன்னோக்கிய,     வளர்ச்சிபூர்வமான
இயக்கத்திற்கு    உதவுகிற  வகையிலான  கதவுகளாக, வாயில்களாக
அமையவேண்டுமானால்,    முடிவில்  மனிதன்   அடையக்கூடிய இறுதி
இடம் தான் எது?  அல்லது  எந்த உறவு மனிதன் சென்று சேரவேண்டிய
அடைவிடமாக,   இறுதிக்கரையாக அமையக்கூடியது? சந்தேகத்திற்கு
இடமில்லாமல்,"மெய்ம்மை"யுடனான உறவுமட்டுமே மனிதனை கரை
சேர்க்கும், நிறைவு செய்யும், முழுமைப்படுத்தி விடுதலை செய்யும்!

மெய்ம்மையைத்தவிர வேறு எந்த உறவும் மனிதனை  முழுமைப்படுத்
தாது. மேலும், இவ்வுலகம் ஒரு பாதுகாப்பானஓய்வகமோ, நிரந்தரமான
புகலிடமோ அல்ல!     இது ஒரு தற்காலிக கல்விக்கூடவிடுதி போன்றது;
இது  ஒரு விசேடமான  பாடத்தைக்   கற்பதற்கான கற்றல் மையமாகும்.
நிரந்தரமான  வேறொரு  உலகிற்குச்  செல்வதற்கான   ஆயத்தக் களம்
ஆகும்.          இவ்வுலகம்    நிரந்தரமானதல்ல       என்பதைப்     போலவே
இவ்வுலகைச்சேர்ந்த உறவுகளும்  நிரந்தரமானவையல்ல.

மனிதன்    தனது   பெற்றோருக்குச்  சொந்தமானவனோ,  தன் மனைவி
மக்களுக்குச்சொந்தமானவனோ அல்ல! இன்னும் அவனும் அவனுக்குச்
சொந்தமானவன் அல்ல !   மாறாக, அவனையும், அனைத்தையும், ஒட்டு
மொத்த    இப்பிரபஞ்சத்தையும்    எது     கொண்டு      வந்ததோ       அந்த
மெய்ம்மைக்கு மட்டுமே சொந்தமானவன்!

நாம்    எல்லோருமே    பிறருடன்    நல்லுறவில்   அமைய   வேண்டுமென
விரும்புகிறவர்களாக இருக்கிறோம்.  இதிலுள்ள மாபெரும் முரண்பாடு
என்னவெனில்,     நம்மில்    ஒருவரும்   தன்னுடனான     உறவைப்பற்றிச்
சிறிதும் கருதுவதேயில்லை! ஏதோ, மனிதன் என்பவன் பலவகைப்பட்ட
உறவுமுறைகளுக்குப்  பொருந்தும்  வகையில்  வடிவமைக்கப்பட்ட ஒரு
துண்டு   என்பதைப்  போலவும்,      அவ்வாறு      உறவுகளில்    அமையும்
பட்சத்தில்    அவன்    மந்திர ஜாலம் போல    அதிகம் ' உயிர்ப்பு'   பெற்று
விடுவது போலவும்,    முழுமையடைந்து விடுவது     போலவும்,     யாவும்
படு அபத்தமாக உள்ளது!

ஒரு மனிதன் தன்னை அறியாத நிலையில்,  அவன் தன்னுடன் உறவில்
அமைவதில்லை!   இந்நிலையில்,  எவ்வாறு  ஒருவன்(ஒரு பூச்சியம்) பிற
மனிதர்களுடன்(பிற பூச்சியங்களுடன்)   உறவில்    அமைய       முடியும்?
ஒருவன்     தனது       பிள்ளைகளுக்குத்   தந்தையாகவும்,     தன்னுடைய
பெற்றோருக்கு    மகனாகவும்    இருப்பதன்    வழியே      வாழ்க்கையின்
எத்தகைய இறுதியான இலக்கு சாதிக்கப்படுகிறது,அடையப்படுகிறது?
எந்த உறவும்  மனிதனை எங்கும் கொண்டு சேர்ப்பதில்லை! அனைத்து
உறவுகளும்,   மனித ஜீவிகளும்   மரணத்தில்    முடிந்து     அர்த்தமிழந்து
போகிற   "உயிர்-வாழ்தல்"    எனும்    மேலோட்டமான  விவகாரத்திற்குச்
'சேவை' புரியும் கருவிகளாக மட்டுமே விளங்குகின்றன.

மனிதர்கள்  பல்வேறு   உறவுமுறைகளை,  பாத்திரங்களை  வகிப்பதன்
வழியாக தங்களின் மற்றும்  வாழ்க்கையின்  அர்த்தத்தைப்பெற்றுவிடு
வதில்லை!  ஆதலால்தான்,  உறவுகள் யாவும்  மேலோட்டமானவையாக,
பிரச்சினைகள் நிரம்பியவையாக உள்ளன.   மேலும்,   உறவுகள்  யாவும்
மனிதர்களை புறஅளவில் மட்டுமே இணைக்கின்றன,பிணைக்கின்றன,
பயன்படுத்திக்கொள்கின்றனவே தவிர  (தனி)மனிதர்களின்  "உள்ளீடு"
பற்றி    சிறிதும்    அக்கறை    கொள்வதில்லை!        உறவுகள்          எனும்
'வலைப்-பின்னலின்'   ஒரு  பகுதியாக  விளங்கும்  மனிதன்  உள்ளீடற்ற
வனாகவே   உள்ளான்.    அவன்      தன்னோடு     யாதொரு        ஆழமான
தொடர்பையும்,   உறவையும்   கொண்டிருப்பதில்லை   என்பது  மிகவும்
பரிதாபகரமானது.

"வாழ்வின் ஊற்று"       என்பது     புறத்தேயுள்ள    உலகிலோ,           பரந்த
பிரபஞ்சத்தில்   எங்கோ     தொலைவிலோ,  எங்கேயும் இருக்கவில்லை!
மாறாக,   ஆணோ,பெண்ணோ    அது   ஒவ்வொரு   தனிமனிதஜீவியின்
உணர்வின் அடியாழத்தில் மட்டுமே கண்டடையக்கூடியதாகும்!

புறவுலகம்   உயிர்-வாழ்தலுக்கு   அடிப்படையான   காற்று,  நீர்,  உணவு
ஆகியவற்றை மட்டுமே அளிக்கும்.    பிரபஞ்சம்  என்பதன் பெரும்பகுதி
(99%)உயிரற்ற வெறும் சடப்பொருளே, ஒரு சதவீதத்திற்கும் குறைவான
சிறு பகுதி மட்டுமே   உயிருள்ள ஜீவிகள்,   அதில்    ஒரு சதவீதத்திற்கும்
குறைவான   மிகச் சிறிய   பகுதி மட்டுமே உணர்வின் சிறு பொறியைக்
கொண்ட மனிதஜீவிகள்!   ஆம்,  வாழ்க்கைக்கான   ஒரு அடிப்படையை
மாத்திரமே     பிரபஞ்சத்தினால்   அளிக்கமுடியும்!          அதற்கு       மேல்,
வாழ்க்கையை  ஒவ்வொரு   மனிதஜீவியும்  தான்    உணர்வுப்பூர்வமாக
கட்டியெழுப்பிட வேண்டும்.

வாழ்க்கையை  உணர்வுப்பூர்வமாக கட்டியெழுப்புவது  என்றால்  என்ன?
உண்டு,  உறங்கி,  இனம்பெருக்கி,  சௌகரியமாக   உயிர்-பிழைத்தலும்;
அதற்காகப்  பணம்  சம்பாதித்தலும் அல்ல  மனித-வாழ்க்கை.   ஒரு எலி
செய்வதையே நேர்த்தியாகச் செய்வதல்ல மனித-வாழ்க்கை!

மனிதனைப்    பொறுத்தவரை    "உணர்வு"    தான்   வாழ்க்கை.  உணர்வு
இல்லாமல்   மனிதனால்    வாழ்க்கையை    உணர  முடியாது.        மேலும்,
வாழ்க்கையை    முழுமையாக    உணர  வேண்டுமானால்,             அதற்கு
"முழு-உணர்வு "  என்பது  வேண்டும்.  ஏனென்றால், "முழு-உணர்வு" தான்
முழுமையான இருப்பும், வாழ்க்கையும் ஆகும்.    மனிதன்    உணர்வைப்
பெற்றிருப்பது   உண்பதற்கும்,   குடிப்பதற்கும்,    உடுப்பதற்கும்    அல்ல!
பசிக்கும், தாகத்திற்கும், பாலுணர்விற்கும்  பதிலளிப்பது வாழ்க்கைக்கு
பதிலளிப்பது   என்பதாகாது !     "இருப்பு" அல்லது வாழ்க்கைக்கு  எதைக்
கொண்டு      மனிதன்      பதிலளிப்பான்?   எதைக்கொண்டு  பதிலளிக்க
வேண்டும்? ஆம்,   "உணர்வைத்தான்"   ஒவ்வொரு   மனிதனும்   பதிலாக
அளித்திட வேண்டும்!     உணர்வு,     மேலும் உணர்வு,         மேலும் மேலும்
உணர்வு . . . . . . . . . .

உணர்வுள்ள மனிதன்    இவ்வுலகையோ   இதிலுள்ள பொருட்களையோ;
தன்னைச் சுற்றியுள்ள  உறவுகளையோ சேர்ந்தவனல்ல! ஒரு வகையில்,
மனிதன்   இவற்றையெல்லாம்   சார்ந்திருக்கிறான் என்பது தவிர அவன்
இவற்றைச்  சேர்ந்தவனல்ல.    மனிதன் உணர்வை மட்டுமே சேர்ந்தவன்.
ஏனெனில், உணர்வு தான் மனிதன்!  மனிதன்,   'உணர்வுள்ளவன்'  எனும்
நிலையிலிருந்து 'உணர்வாகவே' , முடிவில் உணர்வின் முழுமையாகவே
ஆகிட வேண்டும்!

உணர்வின் மைய-நிலையும், முக்கியத்துவமும் மனிதனை அவனுடைய
"அகம்" நோக்கித் திரும்புவதை,  தன்னுள் ஆழ்வதை,   பிரதானப்படுத்து
கிறது.       இதன்    தொடர்ச்சியாக      'தனிமையும்',      'தனித்திருத்தலும்'
முக்கியத்துவம்    பெறுகின்றன.     தனிமை,   தனித்திருத்தல்  என்பவை
மிகவும்  ஆழமான  அர்த்தத்தையும்,     உணர்த்துதல்களையும் கொண்ட
வையாகும்.   தனித்திருப்பது என்பது யாதொரு உறவும், துணையும்,  சக
வாசமும் இல்லாமல் தனியே இருப்பது என்பதல்ல. ஒருவன் உறவுகளின்
மத்தியில்     இருந்தாலும்,   பெருங்கூட்டத்தின்   மத்தியில்    இருந்தாலும்,
தனியே   காட்டில் இருந்தாலும்,   அவன்   தன்னில்  வேர்கொண்டவனாக
தனித்திருத்தல்  அவசியமாகும்.    சுருக்கமாக, தனித்திருப்பது என்றால்,
தன்னுடன்,     அதாவது,    உணர்வுடன் இருப்பது,   உணர்வாய்    இருப்பது
என்பதே யாகும்.

மீண்டும்   நாம்   உறவுகளுக்கு  வருவோம்.  உறவுகளை மதிக்கும் ஒருவர்
பிறரையும்   தனித்திருக்க  உதவுபவராக,   பிறரது சுதந்திரத்தை மதித்து
பேணுபவராக   இருப்பார்.     அதே   நேரத்தில் ,        ' உறவுகளை மதித்தல்'
என்றால்  என்ன?      உறவுகளை    மதிப்பதற்கு முன்         ஒவ்வொருவரும்
வாழ்க்கையை    மதிப்பவராக,      நேசிப்பவராக    இருப்பது       முக்கியம்.
அப்போதுதான்   உறவுகளை மதிப்பது, நேசிப்பது, கொண்டாடுவது என்ப
தெல்லாம்   உண்மையிலேயே அர்த்தம் பெறும்!ஏனென்றால், உறவுகளுக்
காக   உறவுகள்  என்பதாக இருக்க முடியாது.  ஆகவேதான், எந்த உறவும்
நம்மை  முடக்குவதாகவோ,  சிறைப்படுத்துவதாகவோ  இருக்கக்கூடாது;
நாமும்    எந்த   உறவையும்    சொல்லி    பிறரை  முடக்குவதோ,    அல்லது,
சிறைப்படுத்துவதோ கூடாது என்று வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.

அடுத்து,  உறவுக்கான  முதல்  அடி(ப்படை)யை ஒருவன் தன்னுடன்  தான்
கொள்ளும்ஆழமான தொடர்பிலிருந்து தொடங்கிடவேண்டும்.ஏனெனில்,
மையம் என்று ஒன்று  இல்லாமல் வட்டம் என்பது இருக்கமுடியாது.

"துறவு"    என்கிற    ஆழமான     கோட்பாடு    பிற தேசங்களை விட   இங்கு
இந்தியாவில் தான் பிரதானப்படுத்தப்பட்டது எனலாம். அதேவேளையில்,
அக்கோட்பாடு   வேறெங்கேயும்விட  மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்
பட்டதும் இங்கு தான்!   "துறவு"  என்பது ஒரு மேலான உயரிய,  இறுதியான
"மெய்ம்மை" யுடனான உறவைக்குறிப்பதாகும்.  ஆம்,  துறவு  என்பது நாம்
சாதாரணமாக  கருதுவது போல உறவுகளை  உதறிச்செல்வதைப் பற்றிய
தல்ல!   மாறாக, மனிதனை   முழுமைப்படுத்துகிற  இறுதியான உறவைப்
பற்றுவதற்காக      பிற  (இடை நிலை)  உறவுகளைக்   கடந்து     செல்வதன்
அவசியத்தைப்பற்றியதாகும்.

மனிதன்   "தனியனாக"  இருக்கிறான் என்பது தான் அவனுடைய அசலான
நிலை ஆகும்.இன்னும்,அவன் பிற உறவுகளனைத்தையும் கடந்து செல்வது
எனும் அவசியத்தையும் விட பெரிய  மகா-அவசியம்,   முக்கியமாக அவன்
முழுமையடைய வேண்டுமென்றால்,  ஒரு கட்டத்தில்,   அவன்  தன்னையும்
கடந்து சென்றாக வேண்டும்!

"மனிதன் தன்னில் தானே முடிவானவன்" எனும் கூற்று உண்மையே அதன்
ஆழமான  அர்த்தத்தில்!   ஆனால்,   மனிதர்களின்   தற்போதைய   உணர்வு
வளர்ச்சியில்  அவர்களுக்கு  இக்கூற்று  பொருந்தாது!    மனிதன்    இன்னும்
தனது உள்ளுறையாற்றலை உணர்ந்தவனாகவும் இல்லை; இன்னும் அவன்
ஒரு "உணர்வின்- ஜீவியாக"  எழவும் இல்லை! மாறாக,  பெரிதும் அவன் தன்
"உடலின்-ஜீவியாக"வே   உழன்று  கொண்டிருக்கிறான்!   மனிதன் இன்னும்
தன்   உணர்வின்  கதவைக்  கண்டுபிடித்தானில்லை!     மனிதன்   தன்னில்
முடிவானவனாக    ஆவதற்கு    தன்    உணர்வின்   கதவைக்  கண்டுபிடித்து
அதன்  வழியாகச் சென்று  இருப்பின்,  வாழ்க்கையின்     "மூலத்தானத்தை"
அடைந்தாக வேண்டும்!

உண்மையில்,      அசலான வாழ்க்கை    என்பது      தனித்திருக்கும்      அந்த
"மெய்ம்மை"யை நோக்கிய  தனிமைப் பயணமே ஆகும்! ஏனெனில், அன்பு
தனித்திருக்கிறது - முழுமையாகத்   தன்னைத்தியாகம்  செய்யத்துணியும்
ஒரு  தனியனுக்காக!    உண்மை  தனித்திருக்கிறது -பேரார்வம் கொண்டுத்
தகிக்கும்  ஒரு  தனியனுக்காக!     கடவுள்      தனித்திருக்கிறார்  -   சாயலை
அசலாக்கி தன்னை வந்தடைந்திடும் ஒரு தனியனுக்காக!

மா.கணேசன் / 1.04.2016




Friday, 1 April 2016

கடவுள் ஒரு உருமாறி ! (God is a Transformer!)



ஒரு குட்டி கற்பனைக் கதை!
(the Ultimate Transformer)
       -Final Part-

மகன்- உருமாறி (son-transformer):
      அப்பா எனக்கு பயமாயிருக்கு !
தந்தை-உருமாறி (father-transformer):
      மகனே, இதில் பயப்பட என்ன இருக்கு?
      நீ ஒரு உருமாறி, உனது பிறப்பே அப்படித்தான்!
      மாறிக் கொண்டேயிருப்பது (பரிணமித்துக்
      கொண்டேயிருப்பது) தான் உனது இயல்பு!
      பயப்படத்தேவையில்லை!
மகன்-உருமாறி :
      அப்பா, நான் அதற்காகப்பயப்படவில்லை!
      அனைத்து மாற்றங்களையும் தீர்த்து முடித்து
      விட்டேன், இனி மாற்றமடைய ஏதுமில்லை
      என்பது தான் என் பயம்!
தந்தை-உருமாறி :
      அருமை! இப்போதுதான் உண்மையிலேயே
      நீ என் மகன். நீ ஒரு முழுமையான உருமாறி,
      என்னைப்போலவே! Yoy are an Ultimate
      Transformer like me!

(கடைசியாக, தந்தை-உருமாறி இவ்வாறு கூறியதாக ஒட்டுக்
கேட்ட ஒரு சிலர் சொன்னார்கள் :
     "நானும் என் மகனும் ஒன்றாயிருக்கிறோம்!"
      (I and my son are One!)
          ---*---

 கடவுள் ஒரு உருமாறி, அவர் ஒரு மந்திரவாதியல்ல!

இக் கண்டுபிடிப்பு அதி முக்கியமானது, இவ்வுண்மையை நாம்
சரியாகப் புரிந்து கொள்ளவில்லையெனில், நம்மால் பிரபஞ்சத்தையும்
அதில் நம்மையும், நமது வாழ்க்கையையும் அதன் அர்த்தம், மற்றும்
இலக்கையும் புரிந்து கொள்ள  இயலாது. இது மிகவும் அடிப்படையான
உண்மையாகும். இதைத்தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் விஞ்ஞானம்,
தத்துவம், ஆன்மீகம், மற்றும் சமயங்கள் எதிர் கொண்டுவரும் பெரும்
கேள்விகளையும், பிரச்சினைகளையும் ஒருபோதும் தீர்க்க இயலாது!

இதுதான் அந்த உண்மை: ஆம், கடவுள் ஒரு உருமாறி; அவர் ஒரு
மந்திரவாதியல்ல ! தொடக்கத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள
வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில்,  'கடவுள்' என்பது
மூல மெய்ம்மையைக் குறிக்கும் ஒரு சொல் அல்லது குறியீடு என்பதே.
கிட்டத்தட்ட கணிதத்தில் நமக்குத் தெரியாத ஒரு காரணியை, 'x'
(எக்ஸ்) என்று வைத்துக்கொள்வதைப் போன்றதே. ஆம்,
மூல-மெய்ம்மையை  நேரடியாக உணர்ந்தறியாத வரை 'கடவுள்'
எனும் சொல் உள்ளீடற்ற ஒன்றே!

கடவுள் எனும் மூல-மெய்ம்மை பற்றிய நமது இந்த ஆய்வில் முதலில்
நாம் காரண-காரிய அறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் புரிந்து
கொள்ள முனைகிறோம். அடுத்து, அதே நேரத்தில் மிகவும் நேரடியாக
உணர்வுப் பூர்வமாகவும் (இதை நாம் ஆன்மீக-அனுபூதி அணுகுமுறை
எனலாம்) முனைகிறோம். முதல் அணுகுமுறை, நெருப்பைத் தொடாமல்
தொலைவிலிருந்து அதன் தன்மையை அறியும் முறையாகும்.
இரண்டாவது, நெருப்பைத் தொட்டு சுட்டுக்கொண்டு நேரடியாக
அறிகிற அனுபவப் பூர்வமான அறிதல் முறையாகும்.

நாம் இப்போது நேரடியாக விஷயத்திற்கு வருவோம். ஆம், கடவுளின்
பிரதான பிரச்சினை என்னவென்றால், அவரால் எதையும் படைக்க
முடியாது என்பது தான்! ஆனால், அவரால் எதுவாகவும் மாறிட முடியும்!
அதே வேளையில் அவரால் ஒரு சிறு கொசுவைக்கூட படைக்க முடியாது!
இந்த நிலைமையில், எவ்வாறு அவர் ஒரு மலையை அல்லது இவ்வளவு
பிரம்மாண்டமான விரிவடையும் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க முடியும்?
முடியாது! ஆனால், அவர் விரும்பினால் அவரால் ஒரு கொசுவாக மாற
முடியும். அதே வேளையில், அவர் ஒரு கொசுவாக மாறிவிட்ட பிறகு
அக் கொசுவின் நிலையிலிருந்து மீண்டும் தனது அசலான நிலைக்குத்
திரும்புவது கடினம் ! ஆகவே தான் அவர் மிக அடிப்படையான
அடிப்படை அணுத்துகள்களாக ஒரு "பெரு-வெடிப்பு" மூலமாக தன்னை
மாற்றிக்கொண்டார் ! . . . .

இவ்வாறில்லாமல், நம்முடைய பழைய பார்வையின்படி கடவுள் உலகைப்
படைத்தார் என்பதாகக் கொண்டால், அச்செயல் 'படைத்தவன்-'படைப்பு'
எனும் இருமையை ஏற்படுத்தியிருக்கும்! அதோடு, 'படைப்பு'  இருக்கும்
பட்சத்தில் 'படைத்தவனும்' இங்கு இப்பிரபஞ்சத்தில் எங்காவது இருந்தாக
வேண்டும் அல்லவா? ஆனால், அப்படி ஒருவரும், ஒரு கடவுளும் கண்ணுக்கு
எட்டிய ஒளி-ஆண்டுகள் தொலைவு வரையிலும் தென்படவேயில்லை!!

இப்போது, நாம் விதிகளுக்கு வருவோம். இதுதான் அடிப்படை விதி : ஆம்,
வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! கடவுள் அல்லது மூல-மெய்ம்மை
எனும் வித்து மாபெரும்  தியாகத்தை மேற்கொண்டு மறைந்து மாபெரும்
விருட்சமாக,  விரிவடையும் பிரபஞ்சமாக எழுந்துள்ளது! இப்போது நாம்
அந்த விருட்சத்தின் ஒரு விசேடமான கிளையின், ஒரு விசேடமானதொரு
சிம்பின்,  ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து கொண்டு
அந்த விருட்சத்தின் மூலத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறோம்!

இப்போது நமது பிரச்சினை இதுதான் : மூலம் என்பது விருட்சத்தின்
எப்பகுதியில் உள்ளது? அதை எங்கே சென்று கண்டு பிடிப்பது -
விருட்சத்தின் அடிவேரிலா அல்லது மேலே அவ்விருட்சத்தின் முடியிலா?

யாரோ சொல்லிச்சென்று விட்டார்கள் என்பதற்காக, காலம்காலமாக
நாமும் கிளிப்பிள்ளைகளைப்போல அதே கருத்தையே, கோட்பாட்டையே
திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டி தத்துவம் பேசிவருகிறோம். அது என்ன
கருத்து என்றால், "இருப்பின் அடித்தளம்" (The Ground of Being)
என்பதும், அதையே சற்று மாற்றி  "அடியோட்டமான ஒருமை"
(The Under-lying Unity)என்பதுமே யாகும்.

"இருப்பின் அடித்தளம்" அல்லது, "அடியோட்டமான ஒருமை" என்பதாக
விருட்சத்தின் அடிப்பாகத்தில், அதன் ஆணி வேரில் ஏதுமுள்ளதா? ஐயா,
வேரும் விருட்சமும் வேறு வேறு அல்ல! வித்தாகிய 'மூலம்' மறைந்ததால்
தான் விருட்சம் தோன்றியது. ஆக, விருட்சத்தின் மூலம் விருட்சத்தின்
எப்பகுதியிலுமிருக்க முடியாது! மாறாக, விருட்சத்தின் முழுமையைக்
குறிக்கும் கனியினுள்ளே தோன்றிடும் வித்தில் தான் விருட்சத்தின்
'மூலம்' வெளிப்பட இயலும் ! சொல்லப்போனால், விருட்சத்தின் மூலம்
என்பது விருட்சத்திற்கு வெளியேதான் வெளிப்படுகிறது! விருட்சம் தான்
கனியை விளைவிக்கிறது என்ற போதிலும் ஒரு வகையில், கனி என்பது
விருட்சத்தின் முடிவைக் குறிப்பதாயுள்ளது எனக் காணலாம் ! ஆம்,
வித்தின்  வழியாக விருட்சமானது தன்னைத்தானே கடந்து சென்று
விடுகிறது! ஒரு விருட்சத்தின் காயானது முற்றிக் கனியாகும் வரை
மட்டுமே அது விருட்சத்தின் பகுதியாக விளங்குகிறது! காய் முற்றிக்
கனியான பிறகு கனியானது விருட்சத்திலிருந்து விடுபட்டு விடுகிறது!

விருட்சத்தின் "ஒருமை" அதன் வேரிலோ, அடிமரத்திலோ, கிளைகளிலோ
இலைகளிலோ, பூக்களிலோ, பிஞ்சுகள் அல்லது காய்களிலோ
இருப்பதில்லை. மாறாக, விருட்சத்தின் "ஒருமை" அதன் கனிகளில்தான்
அடங்கியுள்ளது!

பிரபஞ்சம் என்பதும் ஒருவகை விருட்சமே, அதன் பிஞ்சுகளும், காய்களும்
தான் நாம்!  நாம் ஒவ்வொருவரும் உணர்வில் முற்றி "முழு-உணர்வு" எனும்
கனி நிலையை எட்டும் போது பிரபஞ்சத்தின் ஒருமை எட்டப்படுகிறது.
ஆம், பிரபஞ்சத்தின் ஒருமை அடியோட்டமாக  (under-lying) அதன்
அடிப்பாகத்தில் இல்லை. மாறாக, அதன் முடிப்பாகத்தில் (over-lying),
அதாவது உச்சியில் மட்டுமே வெளிப்படுவதாயுள்ளது.

ஒரு விருட்சம் பல பாகங்களை-- அடிமரம், கிளைகள், இலைகள், பூக்கள்,
பிஞ்சுகள், காய்கள் ஆகியவற்றைக் கொண்டதாக பன்மை நிலையில்
உள்ளது. ஆனால், அதன் கனியானது(வித்து) பகுதிகளோ, பாகங்களோ
எதுவும் இல்லாமல் ஒருமை நிலையில் முழுமையைக் குறிப்பதாகத்
திகழ்கிறது! அதே நேரத்தில், ஒரு வித்தானது ஒரு முழு விருட்சத்திற்கு
ஈடாக, அதாவது முழு விருட்சத்தையும் தன்னுள் கொண்டுள்ளதாக
உள்ளது!

ஒரு விருட்சம் எண்ணற்ற காய்களை உருவாக்குகிறது. அதன் ஒவ்வொரு
காயும் முற்றிக் கனியாகும் போது அவ்வழியே அவ்விருட்சமானது
முடிவிற்கு வருகிறது (முழுமையடைந்து விடுகிறது). அதைப்போலவே
ஒவ்வொரு புத்தனுடனும் ஒரு பிரபஞ்சம் முடிவிற்கு வருகிறது !
ஒரு விருட்சமானது தனது ஒவ்வொரு கனியின் வழியாகவும் தனது
முழுமையைத்தேடி தன்னைக் கடந்துசெல்வதாயுள்ளது. ஒரே விருட்சம்
பல கனிகளின் வழியே தன்னைக் கடந்து செல்வதை நாம் "பல்முனை-
கடப்பு நிலை" (Multiple Transcendence) என்றழைக்கலாம்.

ஆம், ஒருமை, முழுமை, உண்மை,  மெய்ம்மை, அன்பு, கடவுள் ஆகிய
இறுதியான அம்சங்கள் எதுவும் நம் பிரபஞ்சத்தின் பகுதியாக
இருப்பதில்லை! ஒரு வகையில்,  இவை பிரபஞ்சத்தினுள்ளே
உட்-பொதிவாக, உள்ளுறையாற்றலாக அடங்கியுள்ளது எனக்
கொள்ளலாம் ! ஆனால், அவை "வெளிப்படு- மெய்ம்மைகள்"
(Emergent-Realities) ஆகும். அதாவது, அவை வெளிப்படும்
பட்சத்தில் மட்டுமே மெய்ம்மைகளாக, நிஜங்களாக ஆகின்றன.
அதேவேளையில், அவ்வாறு வெளிப்படும் போது அவை பிரபஞ்சத்தின்
பகுதியாகவோ, பாகமாகவோ இருப்பதில்லை!

ஆதிக்கும் ஆதியில் ஒரு மெய்ம்மை இருந்திருக்க வேண்டும். அதை
'கடவுள்' என்றோ, அனைத்தையும் விஞ்சிய 'சக்தி' என்றோ
குறிப்பிடுவதால், வணங்குவதால், வழிபடுவதால்  மன -அளவில்
ஆறுதல் அடையலாமே தவிர எவ்வகை இறுதிப் பயனும் விளையாது!
மாறாக, அந்த மெய்ம்மை எத்தகையது என்பதை ஒவ்வொருவரும்
நேரே உணர்ந்து அடைந்திட வேண்டும். ஏனெனில், இது விஞ்ஞான
உண்மைகளைப் போன்றதல்ல. எவரோ ஒருவர் கண்டு சொல்வார்,
அதைக் கேட்டுக் கொண்டு வாளாவிருப்பதற்கு! ஒருவன் தனது பசிக்கு
இன்னொருவனை உண்ணச் செய்யமுடியாது. அவனவன் பசிக்கு
அவனவன் தான் உண்ண வேண்டும். அதைப்போலத்தான் அர்த்தம்
அறிதலும், உண்மை உணர்தலும் ! ஒவ்வொருவரும் நேரடியாக தன்னில்
தானே அறிந்தாக, உணர்ந்தாக வேண்டும்.

ஆக, ஆதிக்கும் ஆதியில் ஒரு மெய்ம்மை இருந்தது. அது தான்
மூல-மெய்ம்மை. அந்த மெய்ம்மை உருமாறியதன் விளைவாக முதலில்
இப் பௌதீகப் பிரபஞ்சம் எழுந்தது. அடுத்து அப்பௌதீகப்
பிரபஞ்சத்திலிருந்து,  'உயிர்'  எனும் அம்சம் எழுந்தது. அதற்கடுத்து,
உயிர்க்கோளத்திலிருந்து மனிதனும், அவனுள் 'உணர்வு' எனும் அம்சமும்
வெளிப்பட்டது.  இப்போது, பிரபஞ்சத்தை நாம் மிகச் சரியாகப் புரிந்து
கொள்ளவேண்டுமெனில், 'பிரபஞ்சம்' என்பது அதன் சாரத்தில்
எத்தகைய பண்பாக விளங்குகிறது என்பதைத் துல்லியமாக அறிந்தாக
வேண்டும். நம் பிரபஞ்சம் தற்போது வெறும் பௌதீகப் பிரபஞ்சமாக
மட்டும் இருக்கவில்லை. மாறாக, தனித்துவமான மூன்று வெவ்வேறு
பண்புகளின் சேர்க்கையாக உள்ளது. அவை "சடம்",  "உயிர்", "உணர்வு"
ஆகியவையே. இப்போது நாம் பிரபஞ்சத்தை இம்மூன்று அம்சங்களின்,
மற்றும் அவற்றின் சொற்களின் வழியாகத்தான் புரிந்து கொண்டாக
வேண்டும்.

பிரபஞ்சத்தை வெறும் பௌதீகப் பிரபஞ்சம் என்பதாக அதனுடைய
சடப்-பண்பிற்குக் குறைத்துச் சுருக்கிவிடல் ஆகாது! இதைப்போலவே,
அவசரப்பட்டு பிரபஞ்சத்தை 'உயிர்' மற்றும் 'உணர்வு' எனும்
பண்புகளுக்கு உயர்த்திவிடவும் கூடாது! ஏனெனில், பிரபஞ்சத்தின்
பரிணாம வளர்ச்சிப்போக்கில் , தொடக்கத்தில் வெளிப்பட்ட சடத்
தன்மையைக் கடந்து உயிரும், உயிர்த்தன்மையைக் கடந்து
மனித-உணர்வும் வெளிப்பட்டிருந்தாலும் 'மனித-உணர்வு' தான்
பரிணாமத்தில் இறுதியானது என்று முடிவு கட்டி விட முடியாதல்லவா!
ஏற்கனவே பிரபஞ்சத்தின் சாரமான பண்புகளைப்பற்றி அறிந்து
கொள்ளவேண்டியதன் அவசியத்தைப் பின்பற்றிச் சென்றோம்.
இப்போது பிரபஞ்சம் என்பது  எத்தகைய  'இயக்கம்' என்பதையும்
அதன் குறிக்கோள், இலக்கு, முழுமை எத்தகையது என்பதையும்
புரிந்துகொள்வது அவசியம் ஆகும்.

முதலிடத்தில், பிரபஞ்சத்தையும், அதில் நமது இட-அமைவையும்
நமது வாழ்க்கையையும் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாகவும்,
உறுதுணையாகவும் இருப்பது "உணர்வு" தான் என்கிற உண்மையை
நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனித உணர்வு என்பது
எவ்வகையிலும் இறுதியானது, முடிவானது அல்ல என்ற போதிலும்
மனித- உணர்வின் முக்கியத்துவம் சிறிதும் குறைவதில்லை !
முக்கியமாக, மனிதனிடம் 'உணர்வு' இல்லையெனில், மனிதனும்
ஒரு தவளை அல்லது எலியைப்போலவே வாழ்ந்து செல்வான்.                                                                    

பிரபஞ்சத்தையும், இன்னும் எதைப்பற்றியும் அறிந்து
கொள்ளும் , புரிந்து கொள்ளும்  தேவையும் எழாதிருந்திருக்கும் !
இக்கட்டுரையும் எழுதப்படாதிருந்திருக்கும் !

பிரபஞ்சத்தின் நெடிய  1500 கோடிஆண்டுகளின் பரிணாம வரலாற்றின்
உச்சபட்ச வளர்ச்சி நிலையாக வெளிப்பட்ட அம்சம் "மனித-உணர்வு"
தான். அது மட்டுமல்ல,  மனித-உணர்வைக் கடந்த உணர்வின்
இறுதியான வளர்ச்சி நிலையும் நம் மனித-உணர்வில் ஏற்படவேண்டிய
மாற்றத்தையே சார்ந்துள்ளது. அத்தகைய இறுதியான உச்ச நிலை
உணர்வும்கூட ஏற்கனவே புத்தர், இயேசு,பரமஹம்சர்,  ரமணர் ஆகிய
தனிமனிதர்களால் சாதிக்கப்பட்டுவிட்டன, அடையப்பட்டுவிட்டன!
அவர்கள்  ஏற்கனவே  உணர்வில்  முற்றிக் கனியாகி,  தம்முள்
முழுமையாகி பிரபஞ்ச-விருட்சத்தையும்  முழுமைப்படுத்தி அதைவிட்டு
வெளியேறி விட்டவர்கள்!

இன்னும் நம் பங்கும், பணியும் தான் அப்படியே உள்ளது. ஆம், உணர்வுப்
பிஞ்சுகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் முற்றிக் கனியாவது
முழு-உணர்வாக ஆவது ஒன்றே நமது ஆன்மீகப்பணியும், நம் வாழ்வின்
நிறைவும், இலக்கும் ஆகும்.

நம்மில் பலருக்கு இக்கட்டுரையின் உள்ளடக்கங்கள் வழக்கத்திற்கு
மாறான கருத்துக்களை முன் வைப்பதாகத் தோன்றலாம். குறிப்பாக
இக்கட்டுரை "உணர்வை" (Consciousness) பிரதானப்படுத்துகிறது.
பிரபஞ்சப் பரிணாமத்தின் முழுமையாக "முழு-உணர்வு" அல்லது
"பேருணர்வு" என்பதை 'கடவுள்' அல்லது  "இறுதி மெய்ம்மை" எனக்
குறிப்பிடுகிறது. மேலும், பரிணாமத்தில் எது இறுதியாக
வெளிப்படுகிறதோ அதுதான் ,அந்த "முழு-உணர்வு" தான்
மூல-மெய்ம்மையாக  "பெரு-வெடிப்பு" க்கு முன் இருந்த ஒன்று
என்கிறது ! அந்த ஒருமையும் முழுமையுமான மூல-மெய்ம்மை தான்
வெடித்து பிரபஞ்சமாக எழுந்தது என்கிறது !  அடுத்து, ஒட்டு மொத்த
பிரபஞ்சப்பரிணாமத்தின் தர்க்கரீதியான முடிவில் மீண்டும் அந்த
"முழு-உணர்வு" எனும் மூல-மெய்ம்மை தன்னைக் கண்டடைகிறது
என்கிறது!

ஆம், பிரபஞ்சப் பரிணாம வளர்ச்சிப் போக்கின் ஒரு கட்டத்தில்
முழு-உணர்வின் சாயலைக் கொண்ட "சுய-உணர்வு"டன் மனிதன்
வெளிப்படுகிறான். இவை எதுவும் கற்பனையான விஷயங்கள்
அல்ல! ஏனெனில், கற்பனைகளை அடியொட்டிச் சென்று நிஜத்தை
தரிசிக்க இயலாது! மாறாக, உள்ளதிலிருந்துதான் "உண்மை"
உய்த்துணரப்படவேண்டும் !

உள்ளது பிரபஞ்சம் தான். பிரபஞ்சம் என்பது சடம், உயிர், உணர்வு
ஆகியவற்றின் சேர்க்கை தான். உள்ளது என்பது நிலைத்த இருப்பு
அல்ல. அது மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும்; ஒரு குறிப்பான
இலக்கு நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். இந்த வளர்ச்சி, அல்லது
பரிணாமத்தில் பரிணமிப்பது எதுவென்றால் அது "உணர்வு" என்கிற
அம்சம் தான். ஆக, சடம், உயிர், மனித-உணர்வு எனும் தொடரில்
அடுத்ததாகவும், இறுதியாகவும் வெளிப்பட வேண்டிய நிஜம்
"பேருணர்வு" அல்லது "முழு-உணர்வு" என்பது தான்!

ஆனால், "முழு-உணர்வு" என்பது 'கடவுள்' என்பதைப்  போன்றதொரு
'மந்திரச்சொல்'லோ , அல்லது தர்க்க ரீதியாக அடையப்பட்ட ஒரு முடிவோ
அல்ல. உண்மையில், "முழு-உணர்வு" தான் கடவுள்! ஆனால், இக்கடவுளை
வணங்கவோ, வழிபடவோ, எவ்வழியிலும் நம் வசப்படுத்திடவோ முடியாது.
மேலும், "கடவுள் இருக்கிறார்!" என்று நம்புவதைப்போல முழு-உணர்வை
நம்புவதால் ஒரு பயனும் விளையாது! மாறாக, 'தான் ஒரு உணர்வு தான்'
என்கிற உண்மையை நேரே உணரும் ஒவ்வொரு மனிதனும்
முழு-உணர்வை எட்ட முடியும். அப்போது கடவுள் எனப்படும்
'தந்தை-உருமாறி' மனிதன் எனப்படும் 'மகன்-உருமாறி' யிடம்  இவ்வாறு
சொல்லக்கூடும் :       "நானும் என் மகனும் ஒன்றாயிருக்கிறோம் !"
   
மா.கணேசன் / 28.03.2016

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...