Monday, 2 May 2016

முக்கியமானது முதலில்! *



          "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய
           ஒருவனாலும் கூடாது: ஒருவனைப் பகைத்து,
           மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப்
           பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்;
           தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய
           உங்களால் கூடாது.
                                (மத்தேயு 6 : 24)

என அறிவுறுத்திய இயேசு, உடனே அவ்வசனத்தைத் தொடர்ந்து,

        "ஆகையால், என்னத்தை உண்போம்,
         என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள்
         ஜீவனுக்காகவும்;  என்னத்தை உடுப்போம்
         என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்
         படாதிருங்கள் என்று, உங்களுக்குச்
         சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும்
         ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும்
         விசேஷித்தவைகள் அல்லவா?"
                               (மத்தேயு 6 : 25)  

என்பதாக அறிவுறுத்துகிறார்.எப்படிப்பட்ட மனிதர் இந்த இயேசு!
தாம் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலேயே பேசுகிற ஒரு
மனம் குழம்பிய மனிதரா அவர்? இன்னும் சாதாரணரும், யாவரும்
அறிந்த இயற்கை மற்றும் உயிரியல் நியதிகளைக்கூட அறிந்திரா
மூடரா அவர்? உணவில்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை
அவர் அறியாதவரா என்ன?

இல்லை, இல்லை; அவர் உயிர்-வாழ்தலைப் பற்றி இங்கு சொல்ல
வில்லை. உயிர்-வாழ்தலைக் கடந்த உண்மையான, நித்திய
வாழ்க்கையைப்பற்றியே அவர் சொல்கிறார். மேலும்,

         "அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல,
           நித்தியஜீவன்வரைக்கும் நிலை நிற்கிற
           போஜனத்திற்காகவே கிரியை நடப்பி
           யுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்
           குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய
           தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்."
                                   (யோவான் 6 : 27)

இவ்வாறு இன்னொரு இடத்தில் இயேசு கூறியுள்ளார். ஆம், இயேசுவி
னுடைய "வாழ்க்கை-தரிசனம்" எப்படிப்பட்டதாக இருந்தால், இவ்வாறு
      "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
       என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
என்று சொல்ல முடியும்? வாழ்க்கையை அதன் அடியிலிருந்து அதன்
கொடுமுடியான உச்சம் வரை முழுமையாகத் தரிசித்த ஒருவரால்
மட்டுமே இப்படிச் சொல்லமுடியும்!

பொதுவாக, நாமனைவரும்  வாழ்க்கையை உணவு, உடை, உறைவிடம்
எனும் அதன் அடித்தளத்தில் மட்டுமே அறிந்தவர்களாயுள்ளோம்!
அதற்குமேல், ஒரு அங்குலம் கூட நாம் மேலே நிமிர்ந்து கண்டதில்லை!
அவ்வாறு காண்பதற்கான தேவையைக்கூட நாம் உணர்ந்தது கிடை
யாது! அந்த அளவிற்கு நாம் உடலின் பசி, தாகம், பாலுணர்வு போன்ற
இயல்பான தூண்டுதல்களுக்குப் பதிலளிக்கும் உணர்வற்ற விலங்கு
களாகவே விளங்குகிறோம்! இவ்வாறு வாழ்க்கைக்கு நாம் பதிலளிக்
கும் உணர்வற்ற தன்மையிலிருந்தும், நமது விலங்குத்தனமான அணுகு
முறையின் மட்டுப்பாட்டிலிருந்தும் நம்மை விடுவிக்கவே இயேசு
         "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
          என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
என்று சொன்னார். மனித ஜீவிகள் என்கிற வகையில் வாழ்க்கையை
நோக்கிய நமது பிரதான அணுகுமுறையும், நமது பதிலளிப்பும்
(response)எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற மிகவும் முக்கிய
மான அடிப்படையான பாடத்தையே இயேசு இந்த வசனத்தின் மூலம்
புகட்டுகிறார். இயேசுவானவர் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை
முற்றிலும் வேறானது! அது எவ்வளவு முழுமையானதோ, அந்த
அளவிற்கு முற்றிலும் சரியானது! ஆம், அவர் "வாழ்க்கை" என எதைக்
காண்கிறார், சுட்டுகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளா
மல்,அவரையும் அவரது உபதேசங்களையும் நாம் முழுமையாகப்
புரிந்து கொள்ள முடியாது!

இயேசு, உண்மையில் நம்மை உண்ண வேண்டாம், உடுக்கவேண்டாம்,
என்று சொல்லவில்லை. மாறாக, மனிதஜீவிகள் என்ற வகையில் நாம்
கவலைப்பட வேண்டியது உண்பது, குடிப்பது, உடுப்பது பற்றியல்
லாமல் வாழ்க்கையின்  அர்த்தம், குறிக்கோள், இலக்கு, மற்றும்
வாழ்க்கையின் சாரமான உண்மை பற்றியே நாம் பிரதானமாகக்
கவலைப்பட வேண்டும், அக்கறை கொள்ளவேண்டும் என்கிறார்.

உணவு, உடை, உறையுள் இவையெலாம் தேவை என்பதை இயேசு
மறுக்கவில்லை. உணவு இல்லாமல், மனிதன் உயிர்வாழ முடியாது
என்பது புரிந்தமைந்த விஷயம். ஆனால், எது இன்னும் பலராலும்
புரிந்து கொள்ளப்படாத விஷயம் என்றால், உணவுடனும் இன்னும்
இதர அன்றாடத் தேவைகளுடனும் மனித-வாழ்க்கை முழுமை
யடைந்து விடுவதில்லை என்பது தானாகும்! ஆகவேதான் பிறிதொரு
இடத்தில்,
      "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,
       தேவனுடைய  வாயிலிருந்து புறப்படுகிற
       ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
       என்று எழுதிருக்கிறதே"
                                  (மத்தேயு 4: 4)

என்று "பழைய ஏற்பாடு" நூலிலிருந்து மேற்கோள்காட்டுகிறார்
இயேசு. ஆக, "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
                            என்னத்தை உடுப்போம் என்று கவலைப்
                            படாதிருங்கள்."
என்று சொன்னதோடு,

        "இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள்
         நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம்
         உங்களுக்கு வேண்டியவைகள் என்று
         உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்."
                                  (மத்தேயு 6: 32)

என்பதாகவும் சொல்கிறார் இயேசு.  ' இவைகளெல்லாம் நமக்கு
வேண்டியவைகள்' என்பது ஒட்டுமொத்த வாழ்க்கையில் இவை
யும் அடக்கம் என்பதைத்தான்.  இந்தத் தேவைகள் யாவும்
இயற்கையானவை, உயிருள்ள அனைத்து தாவரங்களுக்கும்,
விலங்கினங்களுக்கும் பொதுவானவை. ஆகவே, இவை பிரதான
மாக நாடிடுவதற்கும், தேடிடுவதற்கும் உரியவை அல்ல என்ப
தாலேயே, ' இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள்  நாடித்தேடு
கிறார்கள்' என்பதாக இயேசு குறிப்பிடுகிறார்.

உணவு, உடை, உறைவிடம் இவையெல்லாம் எல்லா மனிதர்களுக்
கும் வேண்டியவைகளே என்றாலும், இவை பிரதானமாக நாடித்
தேடிடக்கூடியவைகளல்ல. குறிப்பாக ஞானமுள்ள மனிதர்கள்,
அதாவது வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தையும், குறிக்
கோளையும், இலக்கையும் புரிந்து கொள்வதை தமது பிரதான
ஆர்வமாகக் கொண்டுள்ளவர்கள், உணவு, உடை . . .போன்றவற்றை
முதலாவதாகத் தேடுவது இல்லை!  இவர்களுக்கு மாறானவர்களை,
அதாவது வாழ்க்கையின் உண்மையை விட உணவுக்கு முதல் இடம்
கொடுத்து தேடுகிறவர்களைத்தான்  "அஞ்ஞானிகள்"  என்று
இயேசு கூறுகிறார்.

இயேசுவின் தர்க்கம் வித்தியாசமானது. அது, "மேலிருந்து கீழ்" நோக்
கிக் காண்கிற (Top-Down),முழுமையான பார்வை மற்றும்
புரிதலின் தர்க்கமாகும். நம்மைப் போன்ற சாதாரண, மேலோட்டமான
புரிதலின் "கீழிருந்து மேலே" (Bottom-Up)காணும் தர்க்கம் போன்ற
தல்ல அவருடையது!

மனிதஜீவிகள் என்ற வகையில், நாம் அனைவரும் வாழ்க்கையின்
"உட்- பொருளை"த்தான் தேடிட வேண்டுமே தவிர, விலங்குஜீவி
களைப்போல வாழ்க்கையின் மேற்புறத்திலுள்ள புறப்பொருள்
களைத் தேடிக்கொண்டிருக்கக்கூடாது! இது தான் மனிதஜீவி
களுக்கும், விலங்குஜீவிகளுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் ஆகும்.
வாழ்க்கையின் உட்- பொருளையல்லாமல் புறப்பொருள்களைத்
தேடுகிறவர்களை, இயேசு "அஞ்ஞானிகள்" என்று குறிப்பிடுகிறார்.

"உண்வில்லாமல் மனிதன் வாழமுடியுமா?" என்று நாம் கேட்கலாம்.
உணவில்லாமல்  மனிதன் உயிர் வாழ முடியாதுதான்; ஆனால்,
"வாழ்க்கையின் உட் பொருளை அறியாது, அர்த்தமில்லாமல்
நம்மால் எப்படி வாழமுடிகிறது?" என்ற கேள்வியை ஏன் நாம்
கேட்பதில்லை? வாழ்க்கை பற்றிய, அதன் அர்த்தம் பற்றிய
கேள்வியும், விசாரமும் நம்மிடம் இல்லையெனில், நாமும்கூட
அஞ்ஞானிகளே, வெறும் விலங்கு ஜீவிகளே! மனிதஜீவிகள் என்ற
வகையில், முதலாவதாகவும், பிரதானமாகவும் நாம் தேடிட
வேண்டியது "வாழ்க்கையின் உட் பொருளை"த்தான்! ஏனெனில்,
இதுதான் 'மனிதத்தரத்திற்கேற்ற "தேடு-பொருள்" ஆகும்.
ஆகவேதான் இயேசு,

             "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்
              அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது
              இவைகளெல்லாம் உங்களுக்குக்
              கூடக்கொடுக்கப்படும்."
                                    (மத்தேயு 6 : 33)

என்பதாகச் சொன்னார். ஆம், மனிதர்கள் முதலாவதாகத் தேட
வேண்டிய "தேவனின் ராஜ்யம்" எனும்  வாழ்க்கையின் இலக்கு
நிலையான "முழுமை"யை, "முக்தி"யைத் தேடினால், அம் முழுமை
யின் பகுதிகளான பிற விஷயங்களும் நமக்குக் கொடுக்கப்படும்.
ஏனெனில், முழுமையினுள் பகுதிகள் அடக்கம். பெரியதில்
சிறியதுஅடங்கும். பெரியதும், முக்கியமானதும், மையமானது
மான விஷயங்களைத் தேடிப்பெறுகின்ற வழிமுறையிலேயே
சிறியதும், அவசியமானதும், அத்தியாவசியமானதுமான
பொருட்களும்,விஷயங்களும் சுலபமாக அடையப்பட்டுவிடும்.

மனிதவாழ்க்கையின் உன்னதமான இலக்கை மறந்து, உயிர்
பிழைத்தலின் அன்றாடத்தேவைகளுக்காக அனுதினமும்,
வாழ் நாட்கள் முழுவதும் தமது சக்தியையும், அறிவையும்,
நேரத்தையும் செலவழித்து, முடிவில் உணர்வற்ற விலங்கு
களைப்போல மனிதர்கள் மாண்டு போகத்தேவை இல்லை!
உண்மையில் சொல்லப்போனால், அடிப்படையான, அத்தியா
வசியத் தேவைகளை விட அடிப்படையற்ற, 'தேவையில்லா'
தேவைகளுக்காகவும், போலியான மதிப்புக்களுக்காகவும்தான்
மனிதர்கள் அதிகமாய் உழைக்கவேண்டியுள்ளது! இந்த
'சாபக்கேடான நிலை' மனிதர்கள் தமக்குத்தாமே ஏற்படுத்திக்
கொண்டதேயாகும். வாழ்க்கையைச் சிறிதும் புரிந்துகொள்ளாத
உணர்வற்ற தன்மைதான் இதற்குக் காரணம்.

உண்மையில், அடிப்படையான, உண்மையான வாழ்க்கைத்
தேவைகள் என்பவை மிகச் சிலவேயாகும்.  ஆனால், இந்த ஒரு
சில தேவைகள் எவ்வாறு மனிதர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை
யையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன?வாழ்க்கையைவிட
வாழ்க்கைத்தேவைகள் எங்ஙணம் முக்கியத்துவம் பெற
முடியும்? ஆம், அடிப்படைத்தேவைகள் என்பவை அடிப்படை
யானவை மாத்திரமே தவிர அவையே அனைத்துமாக ஆகிட
முடியாது! ஆனால், துரதிருஷ்டவசமாக, நம்மைப்பொறுத்த
வரை அவையே அனைத்துமாகிவிட்டன!  

வாழ்க்கையானது தொடக்க நிலையில், தேவைகளின் வழியாகத்
தான் நம்மையும், வாழ்க்கையையும் உணரச்செய்கிறது! ஆனால்,
நாமோ தேவைகளை மட்டுமே உணர்கிறோம்; அதற்கு மேல்,
'நம்மை'யும் உணர்வதில்லை! 'வாழ்க்கை'யையும் உணர்வதில்லை!

ஆம், தேவைகளைத் தாண்டி நாம் இன்னும் வாழ்க்கைக்கு விழிக்க
வில்லை!! தேவைகள்,தேவைகள்தான்-அவை உயிர்பிழைத்திருக்க
உதவுகின்றன. ஆனால், உயிர்பிழைத்திருத்தல் என்பது அதன
ளவில் (முழு)வாழ்க்கையுமல்ல, வாழ்க்கையின் இலக்குமல்ல!
ஆகவேதான்,  "இவைகளெல்லாம்  உங்களுக்கு வேண்டியவைகள்
என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். " எனவும், ஆனால்,      
"இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்."
எனவும்  இயேசு குறிப்பிடுகிறார்.

உணவில்லாமல் உயிர்வாழமுடியாது என்பது உண்மைதான்.
நேற்று மூன்று வேளை உண்டோம்; ஆனால், வேறு என்ன நேற்று
சாதித்தோம்? இன்றும் மூன்று வேளை உண்போம்,அதற்காக
உழைக்கவும் செய்வோம். இவ்வாறே தினம்தினம், மாதம், வருடம்
எனத்தொடரும்; ஆனால், என்று நாம் வாழ்க்கையை உணர்ந்து,
அறிந்து, புரிந்து வாழத்தொடங்கப்போகிறோம்?  வாழ்க்கையின்
மிக மையமான, சாரமான, முக்கியமான அம்சத்தை என்றேனும்
தேடுவோமா??  இதுதான் நம்முடைய பிரச்சினையும் மட்டுப்
பாடும் ஆகும்!

ஆகவேதான்,  வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சத்தை
முதலில் தேடுமாறு இயேசுநமக்கு அறிவுறுத்துகிறார்.முக்கிய
மானதை , இறுதியானதை முதலில் தேடாவிடில், பிறகு அது
குறித்து யோசித்துப்பார்க்கவும் கூட நமக்கு அவகாசமும்
வாய்ப்பும் கிட்டாமல் போய்விடக்கூடும்.

ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள சமூகமானது வாழ்க்கை
யல்லாத வற்றுக்காக நம்மை தயார்படுத்திக்கொண்டிருக்
கிறது! மேலும், ஒருமுறை நாம் 'அன்றாடம்' எனும் தேவைகளின்
வாழ்க்கையாகிய காட்டாற்றில் இறங்கினோமேயானால், பிறகு
உண்மையான வாழ்க்கையின் கரையின் பக்கம் ஒதுங்கக்கூட
முடியாமல் அடித்துச்செல்லப்பட்டுவிடுவோம்!

அன்றாட வாழ்க்கை எனும் காட்டாற்றில் சிக்குண்டு அதிலிருந்து
தப்பிக் கரையேறுபவர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு
சிலரேஆவர்! அதில், புத்தர் தலைமையானவர். தனது 29ம் வயது
வரை அரச-வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் ஒரு நாள் மானிட
வாழ்க்கையின் "நிலையாமை"யை உணர்த்துகின்ற வகையில்
அமைந்த 'நோய்', 'மூப்பு', 'மரணம்' ஆகிய நிலைமைகளைக்கண்ட
தும், துன்பமயமானதும், நிரந்தரமற்றதுமான 'வாழ்க்கையின்
புதிரை' விடுவிக்கும் தீவிரத்தேடலார்வத்தினால், அரசையும்,
வீட்டையும், நாட்டையும் விட்டு காட்டிற்குச் சென்று தியான-தவப்
பயிற்சிகளைச் செய்தார்; கடுமையான விரதங்களையும் மேற்
கொண்டார். அவரது ஆன்மீகப்பயிற்சிகள் அவருடைய இலட்சிய
நிலையை அடைய உதவிடவில்லை என்பதை அறிந்துஅனைத்
தையும் கைவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து,  தன்-உணர்வில்
ஆழ்ந்து நிலைத்து "ஞான-விழிப்பு" எனும் முழுமை நிலையை
அடைந்தார். ஆனால், ஞானமடைந்தபிறகு அவர் தனது பழைய
அரச-வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லாமல் இறுதிவரை பிச்சை
யேற்று உண்டார். அதற்கு பதிலாக, ஞானப்பொக்கிஷங்களான
தனது உபதேசங்களை உலகிற்கு இலவசமாய் வழங்கினார்!

புத்தர் நினைத்திருந்தால் ஞானமடைந்த பிறகு அவர் தமது
பழைய அரச-வாழ்க்கைக்குத் திரும்பிருக்கலாம்! ஆனால், அவர்
அப்படிச்செய்யவில்லை. ஏனெனில், அடிப்படைத்தேவைகள்
என்பவை வெறுமனே அடிப்படைத்தேவைகள்தானே தவிர,
அவையே அனைத்துமல்ல என்பதைப்புரிந்து கொண்டவர்
புத்தர். மேலும், "நிர்வாணம்" எனும் மனிதவாழ்க்கையின்
முழுமை நிலையான "மறுகரையை" அவர் அடைந்து விட்டார்!
இதையே, இயேசுவின் சொற்களில் சொன்னால் : "தேவனின்
ராஜ்யம்". ஆம், புத்தரின் 'நிர்வாணா' என்பதும்,  இயேசுவின்
"தேவனின்ராஜ்யம்" என்பதும் ஒன்றே!

ஆம், மனிதர்கள் முதலாவதாகத் தேட வேண்டியது "தேவனின்
ராஜ்யம்" எனும் வாழ்க்கையின் இலக்கு நிலையான "முழுமை"
யையே ஆகும். 'தேவனின்ராஜ்யம்' என்பது இங்கு, இந்திய மற்றும்
தமிழக ஆன்மீகத்தில் கூறப்படும் "முக்தி", வீடுபேறு" ," மரணமிலா
பெருவாழ்வு"  என்றெல்லாம் வெவ்வேறு சொற்களைக்கொண்டு
குறிப்பிடப்படும் நிலையே தவிர வேறல்ல!

'தேவனின்ராஜ்யம் என்பது 'இந்தியராஜ்யம்', 'இங்கிலாந்துராஜ்யம்'
போன்றதல்ல! மாறாக, அது ஒரு"முழுமை" நிலையாகும். இன்னும்
துல்லியமாகச் சொன்னால் "முழு உணர்வு" நிலையே அது!      

  "ஆகையால்,என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
        என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
              <<<><<><><>><>>>

    * "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி"
         (இயேசுவை மறு-கண்டுபிடிப்பு செய்தல்)
       தொகுப்பிலிருந்து.
                 ** ** ** **
மா.கணேசன்/ (18.7.2011 & 02.05.2016)

Sunday, 1 May 2016

அசலான வாழ்க்கைக்கான அழைப்பு *



         
"இயேசு   கலிலேயாக்  கடலோரமாய்   நடந்து போகையில் மீன்
பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்
னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில்
வலை போட்டுக் கொண்டிருக்கிற போது, அவர்களைக் கண்டு :
                                    (மத்தேயு 4 :18)
என் பின்னே வாருங்கள், உங்களை
மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
                                   (மத்தேயு 4 :19)
உடனே அவர்கள் வலைகளை விட்டு,
அவருக்குப் பின் சென்றார்கள்.
                                   (மத்தேயு 4 :20)
அவர் அவ்விடம் விட்டுப்போகையில், வேறே இரண்டு
சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும்,
அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன்
செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக்
கண்டு, அவர்களையும் அழைத்தார்.
                                   (மத்தேயு 4 :21)
உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும்
விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
                                   (மத்தேயு 4 :22)
               --+--
எப்படிப்பட்ட மனிதர் இந்த இயேசு! தமது  அன்றாட ஜீவித்தலுக்
காக மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, தன் பின்
னே வரும்படி அழைக்கிறார்! அதோடு,எப்படிப்பட்ட மனிதர்கள்
இந்த பேதுருவும்,  அந்திரேயா;  யாக்கோபு மற்றும் யோவானும்!
அவர்களும்   இயேசு அழைத்தவுடனேயே    தமது மீன் பிடிக்கும்
வலைகளையும்,தங்கள் தகப்பனையும்,படகையும் விட்டுவிட்டு
இயேசுவின் பின்னே சென்று விடுகிறார்கள்!

சாதாரணமாக,  நாம் நம் அன்றாட வாழ்வில்,  ஒருவர்   முனைப்
பாக தனது தொழிலை, வேலையைச் செய்து   கொண்டிருக்கும்
போது,  அதை விட்டுவிட்டு வருமாறு  நாம் அழைக்கமாட்டோம்.
மிகவும்    அவசரமான,   ஆபத்தான  நிலைமைகள்  ஏதுமிருந்தா
லொழிய,     வேலை   செய்து   கொண்டிருக்கும்    ஒருவரை  அவ்
வேலையை நிறுத்திவிட்டு  வருமாறு நாம்  அழைக்கமாட்டோம்.
வேலை ஏதுமில்லாமல் சும்மா உட்கார்ந்திருப்பவரைத்தான் நம்
முடன் வருமாறு அழைப்போம்.

ஆனால், இயேசுவோ,  பேதுரு,   அந்திரேயா,  யாக்கோபு மற்றும்
யோவான்   ஆகியோரை   தன் பின்னே    வருமாறு அழைத்தார்.
அப்படி   அவர்கள் செய்து கொண்டிருக்கும்   வேலையை விட்டு
விட்டு வருமாறு அழைப்பதற்கு என்ன அவசரமான, அதி முக்கி
யத்துவம் வாய்ந்த காரணத்தை இயேசுகொண்டிருந்தார்?

ஆம்,   பேதுரு,  அந்திரேயா,  யாக்கோபு, மற்றும் யோவான் ஆகி
யோரை அழைப்பதற்கான உண்மையிலேயே மிக அவசரமான,
அதிமுக்கியத்துவம் வாய்ந்த காரணம் இயேசுவிடம்  இருந்தது!
இந்த அழைப்பு அவர்களுக்கு மாத்திரமானதல்ல!   இன்று வாழ்
கின்ற நம் ஒவ்வொருவருக்குமே உரியதாகும்!

ஆம்,    "அறியப்படாத",  "அசலான",  "ஆழமான" வாழ்க்கையை
அறிந்து கொள்ளவும், வாழ்ந்திடவும் வேண்டி, 'அறிந்த', 'மட்டுப்
பாடான',   'மேலோட்டமான'    அன்றாட வாழ்க்கையை   விட்டு
விட்டு வரச் சொல்கிறார்  இயேசு!

ஆகவேதான், இயேசு மீன் பிடிப்பவர்களாகிய பேதுரு, . .     .முத
லானவர்களை நோக்கி,   " என் பின்னே வாருங்கள்,   உங்களை
மனுஷரைப்பிடிக்கிறவர்களாக்குகிறேன்." என்றார்.  என்ன ஒரு
அருமையான, அதிரடியான அழைப்பு இது!

இந்த உலகில்,   மீன் பிடிக்கிறவர்கள் இருக்கிறார்கள்;  பறவை
களையும், காட்டு விலங்குகளையும் பிடிக்கிறவர்களும்  இருக்
கிறார்கள். இன்னும் பல்வேறு விதமான தொழில்களைச்  செய்
கிறவர்களும் இருக்கிறார்கள்.    ஏன், பிள்ளை  பிடிக்கிறவர்கள்
கூட இருக்கிறார்கள்.   இன்னும்,  'கொத்தடிமைக்கு'   ஆள்பிடிக்
கிறவர்கள் கூட இருக்கிறார்கள்.  ஆனால்,    'மனுஷரைப் பிடிக்
கிறவர்கள்'  இருக்கிறார்களா?        மனுஷரைப்   பிடிப்பதனால்
என்ன பயன்?

ஆம், மனுஷரைப் பிடிக்கிறவர்கள், மிக அரிதாக, இயேசுவைப்
போல மிகச் சிலரே இருக்கிறார்கள்! மீன் பிடிக்கிறவர்கள் மீன்
களைப்பிடித்து மனிதர்களுக்கு இரையாகும்படிவிற்கிறார்கள்.
ஆனால், மனுஷரைப்பிடிக்கிறவர், 'உலகியல்'எனும் சமுத்திரத்
தில்    தத்தளித்துக் கொண்டிருக்கும்    மனுஷர்களைப்பிடித்து,
"கடவுள்' எனும் பாதுகாப்பான கரையில் சேர்ப்பிக்கிறார்! ஆம்,
'மனுஷரைப்பிடிப்பதே'   இயேசுவின்   ஆன்மீகப்   பணியாகும்!
அனைத்துப்பணிகளையும்விட மனுஷரைப்பிடிக்கிறபணியே
மிக    உயர்வானதும்,    உன்னதமானதுமான   ஆன்மீகப்   பணி
யாகும்!    ஆகவே தான்,     இயேசு,   "என்   பின்னே   வாருங்கள்,
உங்களை    மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்"      என்று
பேதுருவிடமும், அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரி
டமும் சொன்னார்.   அதாவது,    அவர்களை தமது "சீடர்களாக"
ஆக்கிடுகிறேன் என்பதும் அதில் அடங்கியுள்ளது!

உண்மையில், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகி
யோர்     மிகவும்   எளிமையான,   அருமையான மனிதர்களாக
இருந்திருக்கவேண்டும்!  அதனால்தான், இயேசு அழைத்ததும்
அப்படியே அவர் பின்னே வந்துவிட்டார்கள்.       இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு   முன்   இவர்கள்    வெறும்   மீன்  பிடிக்கிறவர்
களாக, குறிப்பாக, பகட்டும் ஆடம்பரமுமான பொருட்களிலும்
போலியான மதிப்புக்களிலும்   தங்கள் மனதைப் பறி கொடுத்
திடாத     சாதாரணர்களாக,     ஊழலற்றவர்களாக  இருந்திருக்
கிறார்கள்!

அதோடு,    இயேசுவின்  அழைப்பைக்கேட்டதும்,   அவருடைய
கண்களில்   எதையோ   பார்த்திருக்க வேண்டும்!  இயேசுவின்
குரலில் மிகவும் உண்மையான, கம்பீரமான,  மறுக்க முடியாத
ஒரு  ஈர்ப்பை  அவர்கள்  உணர்ந்திருக்கவேண்டும்!  அவையே
அவர்களை    இயேசுவின்   பின்னே  செல்லுமாறு செய்திருக்க
வேண்டும்!

இன்று,   இருபது நூற்றாண்டுகளுக்குப்  பிறகு   கிறித்துவமதம்
பல்வேறு பெயர்களில், பல பிரிவுகளாக உள்ளன. பல இலட்சம்
கிறித்தவர்கள்  இருக்கின்றனர்.    எண்ணற்ற   தேவாலயங்கள்
உள்ளன.   போப்புகள்,  பிஷப்புகள்,  பாதிரியார்கள்  உள்ளனர்.
ஆனால்,  இயேசு போன்ற ஒருவர் இல்லை. மீனவர்கள் இருக்கி
றார்கள்;   ஆனால்,  பேதுரு,  அந்திரேயா, யாக்கோபு, யோவான்
போன்றவர்கள் இன்று இல்லை.

அப்படியே,    இயேசு  நேரில்  வந்தாலும்  எவரும் அவர் பின்னே
செல்லமாட்டார்கள்!இன்னும், கிறித்தவர்கள் என்று  சொல்லிக்
கொள்கிறவர்கள்  கூட   இயேசுவின்   பின்னே செல்லமாட்டார்
கள்! ஏனெனில், கிறித்தவர்கள் அனைவருமே இலவசமாகவும்,
சுலபமாகவும்,  வலியின்றி,   தங்கள்  சிலுவையை எடுக்காமல்
அப்படியே  ஆகாயத்தின் மத்தியிலிருந்தே தங்களை  இரட்சித்
துக்கொள்ளக்கூடிய ஒரு இயேசுவுக்காக காத்துக்கொண்டிருக்
கிறார்கள்!

ஆம்,    கிறித்தவர்களுக்கு   இயேசுவின்  ஒரு வருகை, அதாவது
-முதல் வருகை- போதவில்லை! ஆகவே, அவர்கள்  இயேசுவின்
"இரண்டாவது- வருகை" க்காகக்  காத்துக் கிடக்கிறார்கள்!

ஆனால்,    உண்மையிலேயே  இரண்டாவது முறையாக  இயேசு
பூமிக்கு வந்தாலும், அவர் மீண்டும் பழைய பாடங்களிலிருந்தே
தொடங்குவார்!     ஏனெனில்,   அவரது     பாடங்கள்,  வாழ்க்கை
பற்றிய அவரது உட்-பார்வைகள், உண்மைகள்,  அவர் சொன்ன
உவமைக்கதைகள்,    நற்செய்திகள்,   அவற்றுடன்    இணைந்த
நிபந்தனைகள் யாவும்  மாறிடக்கூடியவை அல்ல!முக்கியமான
உண்மை என்னவென்றால், நாம் இன்னும் மாறவில்லை!  கிறித்
தவர்கள்     என்போர்    இன்னும்    மாறவில்லை!      மனிதகுலம்
இன்னும்   மாறவில்லை!     ஏனெனில்,   அவரது     உபதேசங்கள்
இன்னும் கடைபிடிக்கப்படவில்லை!முறையாக முழுமையாகப்
புரிந்து கொள்ளப்படவில்லை!  இந்நிலையில்,  இயேசு மீண்டும்
வந்தால்,
    "இன்னும் சிந்தியாமலும்,உணராமலும்
     இருக்கிறீர்களா? இன்னும் உங்கள்
     இருதயம் கடினமாயிருக்கிறதா?
                  (மாற்கு 8 :17)
என்று,     தான் ஏற்கனவே  சொன்ன  வசனத்தையே   மீண்டும்
சொல்ல வேண்டியிருக்கும்!  இந்த நிலைமையில், தான் சொன்
னதையே திரும்பத்திரும்பச் சொல்வதற்காக இயேசு மீண்டும்
இன்னொரு முறை வர வேண்டுமா?

இயேசு மீண்டும் பூமிக்கு வந்தால், மீண்டும்  அவர் கலிலேயாக்
கடலோரமாய்   நடந்துபோய்   அங்குள்ள  மீனவர்களைத்  தான்
அழைத்திடுவாரா?  ஏன்,   அவர்கள் மட்டும் தான் மனிதர்களா?
வானளாவியகட்டடங்கள் நிரம்பிய நியூயார்க், லண்டன்,பாரீஸ்
நகரத்திற்குச்சென்று அங்குள்ள பெரியதொழிலதிபர்களையும்
மென்-பொருள் பொறியாளர்களையும்,  ஹாலிவுட் புள்ளிகளை
யும்; அல்லது நேரே வாடிகன் நகருக்குச்சென்று,  போப்  மற்றும்
பிஷப்புகள், கார்டினல்களையும் சந்தித்து, "என்பின்னேவாருங்
கள், உங்களை மனுஷரைப்பிடிக்கிறவர்களாக்குவேன்."  என்று
அல்லது,     "நீங்கள் போய்,  தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து
பிரசங்கியுங்கள்" என்று சொல்லி அழைத்தால்,அவர்கள்எவரும்
இயேசுவின் பின்னே செல்வார்களா? அல்லது, நாம்தான்அவரது
அழைப்பை மதித்து ஏற்று அவர் பின்னேசெல்வோமா? முதலில்
'கிறித்தவர்கள்'  என்று  சொல்லிக்கொள்கிறவர்கள் கூட செல்ல
மாட்டார்கள்!

ஏன்,   இயேசு    நேரில்  வந்து  அழைத்தால் தான்   அவர் பின்னே
செல்லவேண்டுமா?     இயேசுவின்  பின்னே  செல்வது   என்றால்
என்ன?

       "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது
       ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச்
       சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும்
       ஜீவனாயும் இருக்கிறது."
                                (யோவான் 6 :63)

என்று,       இயேசு      சொல்லியிருக்க வில்லையா?    இயேசுவின்
வசனங்கள் தான்   நம்மிடம் "புதிய ஏற்பாடு" புத்தகத்தில் உள்ள
னவே! "ஆவியாயும் ஜீவனாயும்"  இருக்கிற அவரது    வசனங்கள்
போதாதா?  அவ்வசனங்களைப் புரிந்து கொண்டு   கடைப்பிடித்
தால் நாம் கடைத்தேற மாட்டோமா? இயேசு இன்று இப்பொழுது
இல்லையா?

இயேசு மீண்டும், மீண்டும், மீண்டும் வர வேண்டுமா? அப்படியே
அவர் வந்தாலும் அவருடன் செல்ல எந்த விதத்தில் நாம் ஆயத்த
மாயிருக்கிறோம்? அவருடைய உபதேசங்களில் ஒன்றையாவது
உருப்படியாகக் கடைப்பிடித்திருக்கிறோமா?

மாறாக ,   "இயேசுவை   நான்    என்  சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொண்டுள்ளேன்!" ,     " இயேசுவை   நான்   விசுவாசிக்கிறேன்! "
"ஞாயிற்றுக்கிழமைதோறும்  நான்    தேவாலயத்துக்குச்  செல்கி
றேன்!", "அனுதினமும் ஜெபிக்கிறேன்!", "பைபிள் வாசிக்கிறேன்!"
"தசம பாகம் செலுத்துகிறேன்!" என்றெல்லாம் சொல்கிறீர்களா?
இயேசுவின்     வாக்குத் தத்தங்களை        மட்டும்      ஞாபகத்தில்
கொண்டு, அவருடைய நிபந்தனைகளை சௌகரியமாக மறந்து
விடுகிறவர்களை   நோக்கித்தான்  இந்த வசனம் சொல்லப்பட்டு
இருக்கிறது :

    "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
     சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக
     ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
     என்னை நோக்கி : கர்த்தாவே!  கர்த்தாவே!
     என்றுசொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."
                               (மத்தேயு 7 :21)

அடுத்து,

         "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!
          நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;
          நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."
                              (மத்தேயு 11 :28)

என   இயேசு  சொல்லியிருப்பது உண்மைதான்; ஆனால், அதற்கு
அடுத்த வசனத்தில் :

           "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய்
            இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல்
            ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்
            கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள்
            ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்
            கிடைக்கும். "
                            (மத்தேயு 11 :29)
          "என் நுகம் மெதுவாயும், என் சுமை
           இலகுவாயும் இருக்கிறது என்றார்."
                            (மத்தேயு 11 :30)

என்று சொல்லியிருக்கிறாரே! "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்
கொண்டு,   என்னிடத்தில்   கற்றுக் கொள்ளுங்கள்;      அப்பொழுது,
உங்கள்   ஆத்துமாக்களுக்கு  இளைப்பாறுதல்  கிடைக்கும். "   ஆம்,
இயேசுவின்    நுகத்தை   நம் மேல்  ஏற்றுக்கொண்டு,  அவரிடத்தில்
கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் 'நிபந்தனை'!  இந்த நிபந்த
னையை  நிறைவேற்றாமல்,  இளைப்பாறுதலும் இல்லை;  இரட்சிப்
பும் இல்லை!   என்பதை  நாம்  மறந்துவிடலாகாது!   ஆம், இரட்சிப்பு
இலவசமாய்க் கிடைப்பதில்லை; எளிதாயும் அது கிடைக்காது!

மேலும், தன்னைப் பின்பற்றுவது குறித்த முக்கியமான நிபந்தனை
களையும்  இயேசு தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:

          " . . . . ஒருவன் என்னைப் பின் பற்றி
          வர விரும்பினால், அவன் தன்னைத்
          தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்
          துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்."
                                (மத்தேயு 16 :24)

          "தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன்
          அதை இழந்து போவான்; என்னிமித்த
          மாகத் தன் ஜீவனைஇழந்து போகிறவன்
          அதைக் கண்டடைவான்."
                               (மத்தேயு 16 :25)

ஆம்,  இவை தான் முக்கியமான நிபந்தனையும், எச்சரிக்கையும்
ஆகும். ஒருவன் இயேசுவைப் பின்பற்றிவர விரும்பினால், அவன்
தன்னைத்தானே வெறுத்திடவேண்டும்!             "தன்னைத்தானே
வெறுப்பது"   என்றால்,    ஒருவன்   மனுஷருக்கு ஏற்றவைகளைச்
சிந்திக்காமல்,  தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கவேண்டும்
என்பதுதான்.  தனக்கென ஒரு சொந்த வாழ்க்கையும்,  இலட்சிய
மும்,  ராஜ்யமும்,  அலுவல்களும்  இருக்கக்கூடாது!      பொதுவாக,
வாழ்க்கை  என்றாலே  'புசிப்பது',  'குடிப்பது', 'அனுபவிப்பது', 'சுக
போகமாக இருப்பது' ;    இவற்றுக்காக   உழைப்பது    என்பதாகத்
தான் நாம் எண்ணுகிறோம், வாழ்கிறோம் !

அதாவது,    வாழ்க்கை பற்றியும்,    அதன் அர்த்தம்,    குறிக்கோள்
குறித்தும்;     வாழ்க்கையின் சாரமான உண்மை  மற்றும் இலக்கு
குறித்தும்   நாம்   அக்கறை   கொள்வதில்லை,   சிந்திப்பதில்லை!
உண்மையில், வாழ்க்கையின் இலக்கு தேவனே; தேவன் அல்லது
கடவுளை அறிவது,  அல்லது அடைவதே!  ஆக,  மனுஷருக்கு ஏற்ற
வைகளைச்   சிந்திக்காமலும்,    செயல்படுத்தாமலும்  இருப்பதே,
தவிர்ப்பதே   'தன்னைத்தானே வெறுப்பது'  என்பதாகும். அடுத்து
'தன் சிலுவையை  எடுத்துக் கொண்டு'  என்பது ஒருவன் தான் பட
வேண்டிய பாடுகளைக் குறிக்கின்றது.   'சிலுவை'  என்பது பொது
வாக பாடுகளைக் குறிக்கின்றது என்லாம்.  இதை நாம் ஒருவனது
'கர்மவினைகள்'  என்றும்  கொள்ளலாம்.   ஆழமான அர்த்தத்தில்,
ஒருவன் தனது உள்ளார்ந்த  "நிழல்-சுயத்தை", தன்னகத்தேயுள்ள
இருளான பகுதியை(Shadow),உணர்வுப்பூர்வமாக இனம் கண்டு
அதைப் புரிந்து கொள்வதன் வழியாக, இணக்குவித்தலைக்குறிக்
கின்றது.

நல்லது, உண்மையில் இயேசுவைப்பின்பற்றுவது என்றால்என்ன?
கிறித்துவ மதத்தில் இணைவதோ, அல்லது,   தினமும் ஒரு சடங்கு
போல பைபிளைவாசிப்பதோ அல்ல!மாறாக, அரிதினும்அரிதான
இந்த மானிடப் பிறப்பின் உண்மையான குறிக்கோளையும், இலக்
கையும்  அறிந்து,   உணர்வுப்பூர்வமாக   வாழ்க்கையை   வாழ்வது
என்பதும்,   இயேசுவைப்  பின்பற்றுவது  என்பதும்  வேறுவேறல்ல!
ஆம், உண்மையிலேயே  சிந்திக்கிற மனிதனுக்கு இயேசுவின் உப
தேச வசனங்கள் அந்நியமாயிருப்பதில்லை!    ஏனெனில்,   வாழ்க்
கையின்  விதிகளைத்தான்  இயேசுவின் வசனங்கள் எடுத்துரைக்
கின்றன!

ஆனால்,  இயேசு காட்டும் வாழ்க்கை,  வெறுமனே  உணவு,  உடை,
உறையுள், உறவுகள் குறித்த விவகாரங்கள் பற்றியதல்ல! மாறாக,  
இயேசு   முழுமையான  வாழ்க்கையாகவும்  அதன்  குறியீடாகவும்
திகழ்கிறார்!

                <><><><><><>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.

மா.கணேசன்/ 30.04.2016
         

Saturday, 30 April 2016

பட்டயத்தைக் கொண்டுவந்தவனின் செய்தி!



      (இயேசுவை மறு-கண்டுபிடிப்பு செய்தல்)

     இயேசுவைப் பற்றி எனக்கு (எனது பள்ளிப்    பருவத்திலிருந்து
     கல்லூரிப் படிப்பு முடித்த காலங்கள் வரையிலும்)   தெரிந்தது
     எல்லாம், 'ஏதோ காரணத்திற்காக ஒரு நல்ல மனிதரை பொய்
     யாகக் குற்றம் சுமத்தி, சிலுவையில் அறைந்து கொன்று   விட்
     டார்கள்!     ஆனால்,   அவர்  மூன்றாம் நாள்  '  உயிர்த்தெழுந்து
     விட்டார்'   என்று   சொல்லப்படுகிறது!     அவரை  மையமாகக்
     கொண்டு "கிறித்துவம்" எனும் மதம் உண்டாக்கப்பட்டது!' இம்
     மட்டும் தான் தெரியும்!
     'இயேசு'   என்பவர்    அன்பு    மயமானவர்    என நான் உள்ளூர
     உணர்ந்திருந்தேன்.    சிலுவையில் அவர் தன்னைத்  தியாகம்
     செய்தது   குறித்து  எனக்கு அவர்  மீது  இரக்கம் தோன்றியதே
     தவிர,   அவர்   மீது   எனக்கு   பெரிதாக   பிடிப்பு   ஏதும்   ஏற்பட
     வில்லை!ஏதொவொருவகையில், அவருக்கு அநீதி இழைக்கப்
     பட்டிருக்கிறது;  அவரும்   அதற்கு உடன் பட்டிருக்கிறார் என்ப
     தாகவே எனக்குப்பட்டது! அதோடு,  இயேசுவை நான் மறந்தே
     விட்டேன். பிறகு, எனது இருபத்திநான்காம் வயதில், எனக்குள்
     அந்த  விவரிக்கவியலாத  "உணர்வு-மாற்றம்"  நிகழ்ந்திட்டது!
     அந்த   வினோதமான,   விபரீதமான   நிகழ்வைச்     கொஞ்சம்
     கொஞ்சமாகச் செரித்துக் கொண்டும்,     பிரதிபலித்துப் பார்த்
     துக் கொண்டும் இருந்த காலக்கட்டத்தில்,   நான் சில கவிதை
     களைப்   போன்ற   பதிவுகளை    எழுதினேன்!     அதில் ஒன்று
     இயேசுவைப் பற்றியதாக இருந்தது :

            அன்பு செய்திடு என்றான்
            அன்பே செய்தான்!
            அவனை
            சிலுவையில் அல்லவா
            நாம் அறைந்தோம்!
            மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தான் என்பார்
            அது முற்றிலும் சுத்தப்பொய்யே, பொய்யே!
            நம் சிலுவைகளை நாம் சுமக்கும் வரை
            சிலுவை தான் அவனது சிம்மாசனம்!
            முட்கிரீடமே மணி மகுடம்!
            சாட்டையடிகளே நம் காணிக்கை!
                  {மா. கணேசன்/  1986}
           *  *   *
    இக் கவிதையை எழுதிய காலத்தில், இயேசுவின் ஒரு வசனத்
    தைக்கூட நான் வாசித்ததில்லை.     அவரைப் பற்றி    அறிவுப்
    பூர்வமாகவோ,  தத்துவ ரீதியாகவோ,  அவருடைய கொள்கை
    யையும்,    வாழ்க்கைப் பார்வையையும்   பற்றியோ      எதுவும்
    எனக்குத் தெரியாது! இயேசுவைப்பற்றிய அறிமுகவிபரங்கள்
    யாவும்,   வெகுசன கதைகள்,   பிம்பங்கள்  வழியாக   அறியப்
    பட்டவை  மட்டுமே.
    ஆனால்,     இயேசுவின்    வசனங்களை    நானே      நேரடியாக
    பைபிளிலிருந்து வாசித்தபோது தான் நான் முதன்முறையாக
    இயேசுவை உண்மையாகத் தெரிந்து கொண்டேன்.      அவரது
    வசனங்களிலிருந்து       அவரை    நேரடியாக    நான்   தெரிந்து
    கொண்டேன்!

    ஆம், 1.12.2007அன்றுதான் நான் இயேசுவை மறுகண்டுபிடிப்பு
    செய்தேன்!   நல்ல வேளையாக,  அதிகச்  சிரமமின்றி  அவரது
    வசனங்களை  மிகச் சரியாகப்  புரிந்து  கொள்ளக்கூடிய   ஒரு
    பக்குவமான  நிலையை நான்  ஏற்கனவே அடைந்திருந்தேன்!
    இயேசுவை  மறுகண்டுபிடிப்பு   செய்வதற்குத்  தூண்டுதலாக
    அமைந்தது,  அப்போது  நான்  வாசித்துக் கொண்டிருந்த பால்
    ப்ரண்ட்டன்  (Paul Brunton)-ன்,   "The Inner Reality"
    எனும் நூலே ஆகும்! அதில், திரு.ப்ரண்ட்டன் அவர்கள்,   'புதிய
    ஏற்பாட்டில்'   இடம் பெற்றுள்ள,    இயேசுவினுடைய    "மலைப்
    பிரசங்கம்"   எனும்   பகுதியின்    முக்கியத்துவத்தைப் பற்றிக்
    குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தவுடன்,   உடனே ஒரு கிறித்
    துவ சகோதரியிடமிருந்து   'புதிய ஏற்பாடு' பைபிளை வாங்கி
    வாசிக்கத் தொடங்கினேன்; அதில், இயேசு ஆற்றிய  "மலைப்
    பிரசங்கம்"   மட்டுமல்ல,    அதைத்  தொடர்ந்த,   அடுத்தடுத்த
    வசனங்களையும்   வாசித்துக்   கொண்டே  சென்றேன்.  நான்
    இதுவரை கண்டிராத  கவித்துவமான தத்துவார்த்தமும், ஆழ
    மான,   ஆன்மீக  பூர்வமான உட்-பார்வைகளையும், உண்மை
    களையும்,  மிகவும்  தனித்துவம் வாய்ந்த  வெளிப்பாடுகளை
    யும்  இயேசுவினுடைய வசனங்களில் கண்டேன்!

   இனி நாம்,   நேரடியாக   இயேசுவினுடைய    வசனங்களுக்குச்
   செல்வோம். வசனங்களைத்தொடர்ந்து, என்னுடைய சிறுசிறு
   விளக்கக் குறிப்புகளையும் வழங்கியுள்ளேன்.       என்னுடைய
   சிறு விளக்கக்குறிப்புகள், ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும்
   விளக்குபவையாக    அல்லாமல்,      இயேசுவினுடைய     ஒட்டு
   மொத்த   உபதேசத்தின்  சாரத்தைத்  தழுவியவையாக இருப்
   பவை,  அதாவது,   எவ்வொரு குறிப்பிட்ட  வசனமும், கருத்தும்
   அது  இயேசுவினுடைய முழு-பார்வையுடன்  கொண்டிருக்கும்
   தொடர்புறவில்   வைத்தே    விளக்கப்பட்டுள்ளது.          மேலும்,
   வசனங்கள் யாதொரு வரிசைக் கிரமத்திலும் தேர்வு செய்யப்
   படவில்லை;    மாறாக,      பேசப்படும்    தலைப்புகளுக்  கேற்ப
   தொகுக்கப்பட்டு  விளக்கமளிக்கப்பட்டுள்ளன   என்பதையும்
   இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.

          <><<><><><><>><>

"பூமியின் மேல் சமாதானத்தை
         அனுப்ப வந்தேன் என்று
            எண்ணாதிருங்கள்;
               சமாதானத்தையல்ல,
                  பட்டயத்தையே
                       அனுப்பவந்தேன்"
                               -இயேசு.
                             ( மத்தேயு 10:34)

நல்லது,   இயேசுவின் இந்த வசனத்திலிருந்து அவர் எத்தகைய
மனிதர்,   அல்லது   ஆளுமை,   என்பதை  ஓரளவிற்கு    ஊகிக்க
முடியும். அவர் ஒரு "முழு-புரட்சியாளர்"!     எதனுடனும் சமரசம்
செய்து கொள்ளாத "கலகக் காரர்"! ஏழை, எளிய மக்களுக்காக
குரல் கொடுத்தவர்.     இப்படியே     சொல்லிக்கொண்டே போக
லாம். யாவற்றுக்கும்மேலாக, இயேசு அன்பு-மயமானவர்! அதே
வேளையில், அவர் மிகவும் கண்டிப்பானவர்!       ஆகவே   தான்
அவர் "சமாதானத்தையல்ல", "பட்டயத்தை" (அதாவது வாளை)
அனுப்ப   வந்ததாகச்     சொல்கிறார்!   மாறாக, அவர்  பூமியின்
மேல்  அமைதியையும்,  சமாதானத்தையும்   கொண்டு   வந்தா
ரெனில்,   நாம்    மகிழ்ச்சியுடன்    வரவேற்கவே       செய்வோம்;
ஆனால்,  நாம் செயல்படமாட்டோம்; மாறாக, நன்றாகத் தூங்கி
விடுவோம்!        இப்போது      நாம்      தூங்கிக்  கொண்டிருப்பது
போலவே!    ஆகவே,   அவர்,  நம்மை விழிப்புறச்  செய்யத்தான்
பட்டயத்தை  அனுப்ப   வந்ததாகச்  சொல்கிறார்!

இப்போது, நாம்,    இயேசுவின்    அதி-முக்கியத்துவம்    வாய்ந்த
முதல் வசனத்தை, அவர் தனது உபதேசத்தை முதன்முதலாகத்
தொடங்கியபோது பேசிய முதல் வசனத்தைக் காண்போம் :

"அது முதல் இயேசு: "மனந்திரும்புங்கள்
                                            பரலோகராஜ்யம்
                                                  சமீபித்திருக்கிறது"
                      என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்."
                                                           ( மத்தேயு 4:17)

இந்த வசனம்,   வெறும் ஆறு சொற்களைக் கொண்ட,    ஒற்றை
வாக்கியமாக, படு சாதாரணமாகத்தெரிவதாயுள்ளது. ஆனால்,
இது மிக மிக ஆழமான அர்த்தத்தைக் குறிப்பதாகும்!      'மனம்'
'திரும்புங்கள்' என்பது,   வெறுமனே  'மனம் திருந்துவதையோ',
அல்லது,   'மனம் மாறுவதையோ',     அதாவது,       'மன-மாற்றத்
தையோ'  குறிக்கவில்லை!      அதாவது,    ஒருவன் தான் செய்த
தவறுகளை உணர்ந்து, இனிமேல் தவறுகள் செய்யாமல்  நல்ல
வனாக  இருக்க,  நடந்து  கொள்ள   முயற்சிப்பேன்    என்பதான
தீர்மானத்தின்   அடிப்படையில் எடுக்கப்படும் மேலோட்டமான
தொரு முடிவைக் குறிக்கவில்லை!   மாறாக,    மனித மனத்தின்
அடிப்படையான,ஆதாரமான, உணர்வில் (பிரக்ஞையில்) ஏற்பட
வேண்டிய "உணர்வு-நிலை மாற்றத்தை"க் குறிப்பதாகும்! ஏனெ
னில், 'உனர்வு' தான் அனைத்து வித்தியாசத்தையும்செய்கிறது!
அதிலும்,  'முழுமையான  உணர்வு' தான் அனைத்தும்! அதாவது
முழுமையான உணர்வு  தான் உண்மையும்  , இறுதி மெய்ம்மை
யும்  ஆகும்!    ஆகவே,    உணர்வில்லாத     ஒரு   நல்லவனை விட
உணர்வுடன் கூடிய  ஒரு கெட்டவன் மேலானவன்!     என்றுதான்
சொல்லியாக வேண்டும்.
இயேசு,   தனது    உபதேசத்தை   தொடங்கும் போது,  "பரலோக
ராஜ்யம்"       பற்றிய      'இனிய செய்தி'  யுடன் தான்   தொடங்கு
கிறார்.   "பரலோக ராஜ்யம்"   என்பது   இயேசு   பயன் படுத்தும்
முக்கியமான சில குறியீடுகளில் மிகவும்  மையமானது ஆகும்!
மேலும், இது வெறும் குறியீடு மட்டும் அல்ல;     இது தான்  அந்த
இறுதி-மெய்ம்மையும் ஆகும்!  அதாவது, ஒவ்வொரு மனிதனும்
அடைந்தாக  வேண்டிய  "முழுமை-நிலை" யையே   அது   குறிக்
கிறது.   ஆனால்,   பரலோக ராஜ்யத்தை  நாம் அடைய வேண்டு
மானால்,  அதற்கு  நம்மை நாம்  தகுதியுள்ளவர்களாக  ஆக்கிக்
கொள்ளவேண்டும்!  ஆகவே,  இயேசுவின்  இந்த இனிய செய்தி
யானது,   ஒரு  நிபந்தனையுடன்  இணைக்கப்பட்டுள்ளது!   ஆம்,
"மனந்திரும்புங்கள்"    என்பது தான்  அந்த  கசப்பான,  அல்லது
கடினமான நிபந்தனையாகும்!
இயேசுவின் இந்த   நிபந்தனையை சரியாகப் புரிந்து கொள்ளா
மல்,  முழுமையாக  அதை  நிறைவேற்றாமல்,   இயேசுவின் பிற
வசனங்களையும்,    அவற்றுடன்     இணைக்கப்பட்டுள்ள     பிற
நிபந்தனைகளையும், சரியாகப்புரிந்துகொள்ளவோ, அவற்றை
பின் பற்றவோ,  அவற்றின்  பலன்களை  அறுவடை செய்யவோ
சிறிதும்  சாத்தியமேயில்லை!
இயேசுவின்    இந்த   முதல்   வசனத்தைப் பற்றிப் பேசும் போது,
யோவான்ஸ்நானன்     பற்றிப்    பேசாமல்       இருக்க   முடியாது.
ஏனெனில், யோவான்ஸ்நானன் தான் இயேசுவின் குரு, அல்லது
ஆசான்  ஆவார்!    யோவான்ஸ்நானன்   பற்றி    பைபிள் சார்ந்த
வரலாற்றுக்  குறிப்புகள்   என்ன   சொன்னாலும்,  இயேசு தனது
பிரசங்கத்தை,  எந்த வசனத்தைக்கொண்டு  தொடங்கினாரோ
அதே     வசனத்தைக்  கொண்டே,        இயேசுவிற்கு     முன்னரே
யோவான்ஸ்நானன்     தனது    பிரசங்கத்தைத் தொடங்கினார்!
இதோ, அந்த வசனம் :

"அந்நாட்களில்  யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்
தில் வந்து :"   (மத்தேயு 3 :1)

"மனந்திரும்புங்கள்,  பரலோகராஜ்யம்
சமீபித்திருக்கிறது  என்று பிரசங்கம்
பண்ணினான்."      (மத்தேயு 3 :2)

இந்த  வசனம்,     யோவான்ஸ்நானன்-உடையது!       இதை, ஏன்,
இயேசு வழிமொழிந்திட வேண்டும்?  இயேசுவுக்கும், யோவான்
ஸ்நானனுக்கும் என்ன தொடர்பு?  மேலும், முக்கியமாக இயேசு
யோவான்ஸ்நானனிடம் ஞானஸ் நானம் பெற வேண்டிய அடிப்
படை, அல்லது,  அவசியம் தான் என்ன?    நிச்சயம்,     யோவான்
ஸ்நானன்    இயேசுவின்   குருவாக,   ஆசானாகத்தான்   இருக்க
வேண்டும்! இது, என்னுடைய ஊகம் அல்ல; இவ்விடத்தில்,  நான்
எனது அணுகுமுறை பற்றிச் சொல்லியாக வேண்டும். அதாவது
இயேசுவைப்பற்றியும்,  அவரது  வசனங்களைப்பற்றியும், நான்
எழுதும் இந்தப்பதிவு மட்டுமல்லாமல், அனைத்துப் பதிவுகளும்
இயேசு  சொன்னதாகச்  சொல்லப்பட்டுள்ள,   மத்தேயு,   மாற்கு,
லூக்கா, மற்றும் யோவான் ஆகியோர் எழுதப்பட்டதாகச் சொல்
லப்படும்    "சுவிசேஷங்களை"   ( நற்செய்திகளை),    அவற்றின்
வசனங்களைச்   சார்ந்தே,   அடிப்படையாகக் கொண்டே எனது
விளக்கங்களை அளித்துள்ளேன்!    எனது   இந்த   விளக்கங்கள்
முழுக்க, முழுக்க  பிரதியை  (வசனங்களை)   அடிப்படையாகக்
கொண்டவையே(solely Text-based).ஆனால், பின்நவீனத்
துவ வாதிகளைப் போல்  'பிரதியைக்கட்டுடைத்தல்'     (அல்லது
போட்டு உடைத்தல்),     அதாவது,    De-construction, எனும்
பாணியில்,  என் விளக்கங்களை நான்  வெளிப்படுத்தவில்லை.
மாறாக,"பிரதி-மறு உருவாக்கம்"(Textual Re-constrution)
எனும்   மிக  நுட்பமான,   படைப்புப்பூர்வமான    வழிமுறையில்
விளக்கமளித்துள்ளேன்.
அதில், வரலாற்றுப்பூர்வமானதும், மற்றும் கிறித்துவ  மத-இயல்
(Theological) ரீதியானதுமான   அணுகுமுறைகளை,   நான்
தொட்டுக்கவும் இல்லை, தொடர்பு கொள்ளவுமில்லை!      எனது
இந்த புதிய விளக்கவுரைகள் என்னுடைய,  நேரடியான ஆன்மீக
அனுபூதி அனுபவம், மற்றும் ஆன்ம தரிசனம் ஆகியவற்றினால்
விளைந்த     உயர்-உணர்வின் உதவியினாலும்;    மேலும், "ஞான
மடைதல்"   (Enlightenment)  என்பதன்      அடியோட்டமான
விஞ்ஞானம்  குறித்த எனது  25 ஆண்டுகால   நெடிய   ஆராய்ச்சி
யினால்  விளைந்த   தெளிவான புரிதலையும்,  பார்வையையும்
கொண்டு எழுதப்பட்டவையாகும்!

ஆம்,   மத்தேயுவின்   வசனங்களே சொல்லுகின்றன,  யோவான்
ஸ்நானன்  தான்  இயேசுவின்  'குரு'  என்று!   இதோ வசனங்கள் :

"அப்பொழுது  யோவானால் ஞானஸ் நானம் பெறுவதற்கு
இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு  அருகே
அவனிடத்தில் வந்தார்"      
            (மத்தேயு 3 :13)
"யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே
ஞானஸ் நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர்
என்னிடத்தில் வரலாமா என்றான்."
           (மத்தேயு 3 :14)
"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக : இப்பொழுது
இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது
நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது
அவருக்கு இடங்கொடுத்தான்."
           (மத்தேயு 3 :15)

மத்தேயுவின் வசனங்கள் மிகத் தெளிவாகச் சொல்லுகின்றன
'யோவானால் ஞானஸ் நானம் பெறுவதற்கு' இயேசு கலிலேயா
வைவிட்டு யோர்தானுக்குச்செல்கிறார். இவ்வாறு செல்வதற்கு
இயேசுவின் 'பணிவடக்கம்' மட்டுமே காரணமென சொல்வதற்
கில்லை;  பணிவடக்கத்தைத் தாண்டி,   குருவின் மீது கொண்ட
ஆழ்ந்த ஈடுபாடும், மரியாதையும் வசனத்தின்   குழப்படிகளை
மீறி      வெளிப்படுவதாயுள்ளது!     ஏதோ    காரணங்களுக்காக,
மத்தேயு,      இயேசுவை உயர்த்தியும்,       யோவான்ஸ்நானனை
தாழ்த்தியும் குறிப்பிடவேண்டியநிர்ப்பந்தம் செயல்பட்டுள்ளது.
ஆகவே தான்,     யோவான்ஸ்நானனுக்கு,    இயேசு அளித்திடும்
மரியாதையைக்கூட      மத்தேயு    அளித்திடத்    தவறிடுகிறார்!
விளைவு : 'அவனிடத்தில்' ,  'என்றான்' , இடங்கொடுத்தான்' என
யோவான்ஸ்நானனை  ஒருமையில் (ஏக வசனத்தில்) குறிப்பிடு
கிறார்!
யோவான்ஸ்நானனைப்    பொறுத்தவரை, அவரிடம் பணிவடக்
கம் உள்ளது தெரிகிறது. ஏனெனில்,
" . . . ..  எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும்
           வல்லவராயிருக்கிறார்"  . . . . . . .   (மத்தேயு 3 :11)
என்பதாக    யோவான்ஸ்நானன்    கூறியதிலிருந்து   தெரிகிறது.
அதே நேரத்தில்,   இயேசுவோ,    ஞானஸ் நானம் கொடுப்பதற்கு
யோவான்ஸ்நானன்    தடை சொன்ன போதிலும்,   'இப்பொழுது
இடங்கொடு,     இப்படி   எல்லா  நீதியையும்      நிறைவேற்றுவது
நமக்கு ஏற்றதாயிருக்கிறது'   என்று பதிலிறுக்கிறார்.   அதாவது
"நமக்கு ஏற்றதாயிருக்கிறது"   என்று  யோவான்ஸ்நானனையும்
தன்னையும்     (பிரித்துப் பார்க்காமல் ,  விட்டுக்கொடுக்காமல்)
இணைத்தே கூறுகிறார்!     "நமக்கு" என்ற சொல், இவ்விடத்தில்,
இருவருக்கும்  பொதுவான,  இருவரும்   பங்கு பெற்று  வந்துள்ள
ஒரு முக்கியமான   "ஆன்மீகப் பணி"    (Spiritual Mission)
யைக்  குறிப்பதாயுள்ளது!    இதிலிருந்து,      இருவருக்கும் உள்ள
தொடர்புறவு    'குருவுக்கும், சீடனுக்கும்'   உள்ள ஒன்றே என்பது
தெள்ளத்தெளிவாகிறது எனலாம்!

மேலும்,  ஏதோ காரணத்திற்காக, யோவான் காவலில் வைக்கப்
பட்டது பற்றிக் கேள்விப்பட்ட பிறகே,   இயேசு  தனது  உபதேசப்
பணியை, 'பரலோகராஜ்யம்' குறித்த    தன் குருவினுடைய   "நற்
செய்தி"யையே,      தன்னுடைய   "நற்செய்தி"      எனக் கொண்டு
தொடங்குகிறார்!  கிட்டத்தட்ட  தனது குரு விட்ட இடத்திலிருந்து  
இயேசு   தனது    ஆன்மிகப்   பணியைத்    தொடர்வதாகத் தெரி
கிறது!

அடுத்து, இயேசுவைப்   பற்றிப் பேசும் போது, புத்தரைப் பற்றிப்
பேசாமல் இருக்க முடியாது. ஏனெனில்,இயேசுவுக்கு 500 ஆண்டு
களுக்கும்  முன்னரே புத்தர் தனது வழியை நிறுவிச்சென்று விட்
டார். மானிடர்களை துன்பதிலிருந்துவிடுவிக்கும் "நடு-வழி"யை
புத்தர் தமது "நற்செய்தி"யாகப் போதித்தார். "ஆசையே துன்பத்
திற்கு காரணம்" என்று சொன்னார்.  ஆசைக்குக் காரணம் "அறி
யாமை"யே  என்றார்.   ஆகவே,   அறியாமையைப்        போக்கிடு
வதற்கு,  "எண்-வழிப்பாதை" யையும்     வகுத்துக்   கொடுத்தார்.
மேலும், "நிர்வாணம்" அல்லது   "உயர்-பேரறிவு" அடைவதையே
மனித- வாழ்க்கையின்    ஒப்பற்ற    இலக்கு   என  அறிவித்தார்!
ஆம்,  புத்தரின் "நிர்வாணம்" என்பதும்,    இயேசுவின் "பரலோக
ராஜ்யம்" என்பதும் ஒரே மெய்ம்மையைத்தான்  குறிக்கின்றன!

கிட்டத்தட்ட  எல்லா ஞானியரின், மகானின்  நற்செய்தியும் ஒரு
நிபந்தனையுடன்   இணைக்கப் பட்டதாகவே  உள்ளது!     எல்லா
வாக்குத் தத்தங்களும்,   வாக்குறுதிகளும்   நிபந்தனைகளுடன்
கூடியதாகவேயுள்ளன.   நிபந்தனைகளை   நிறை    வேற்றாமல்
யாதொரு   பயனையும்,   பலனையும்    பெற முடியாது,   என்பது
புத்தரின்,   அல்லது,   இயேசுவின்  குரூரமான சொந்த விருப்பம்
அல்ல!  மாறாக,  அது  "வளர்ச்சி"யைக்  கோரும் வாழ்க்கையின்
விதியாகும்! வளர்ச்சியின், அதாவது வாழ்க்கையின் விதிகளை
நிறைவேற்றியதன்     மூலமாகத்தான்    கௌதம சித்தார்த்தன்,
"புத்தர்" ஆனார்;  இயேசு, "கிறிஸ்து" ஆனார்.
                <<<><><><>><>>>

குறிப்பு:- "இயேசுவை மறுகண்டுபிடிப்பு செய்தல்" எனும் பெருந்
                   தலைப்பின்  கீழ்  வெவ்வேறு  சிறுசிறு தலைப்புகளில்
                   இயேசுவின்    அற்புதமான   வசனங்களுக்கான விளக்
                   கங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளியாகும்.
                *   *    *    *
மா.கணேசன்/ 27.04.2016
 







Wednesday, 27 April 2016

வாருங்கள், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!


                (ஒரு உரையாடல்)
                               
    க (கணேசன்) : வாருங்கள், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!

    சு (சுரேஷ், மற்றும் சில நண்பர்களுடன்) : வந்து விட்டோம்,
சொல்லுங்கள்!

   க : நல்லது, முதலில் உட்காருங்கள்! சரி, ஆனால், யாருடைய
வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது  -   எலியின் வாழ்க்கையைப்
பற்றியா,    அல்லது   மனிதனின்  வாழ்க்கையைப் பற்றியா?

   முத் (முத்தையன்) : . . . . .(அமைதியாக அமர்ந்திருக்கிறார்) . . . . . ?!?

   முரு (முருகன்) : வரப்போகும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி
பெறும் என்று நினைக்கிறீர்கள்?

  க : ஏதாவதொரு கட்சி நிச்சயம்  வெற்றி பெறும்; ஆனால், மக்கள்
எப்போதும் போலவே தோற்றுப்போவார்கள்!

   முரு : என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? புதிய கூட்டணிக் கட்சி
பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

   க : தனிக்கட்சி, கூட்டணிக்கட்சி . . .இவை எல்லாமே கட்சி கட்டும்
அரசியல் சார்ந்தது தானே? விஷயம் என்னவென்றால், 'மக்கள்' ,
இன்னும் அசலானதொரு அரசியலுக்குத் தயாராகிடவில்லை!

   சு : அப்படியானால்,  'கட்சி- அரசியல்'  என்பது அரசியலாகாதா?

   க : ஆகாது! அர்த்தமுள்ள அரசியலைப் பற்றியும், 'வாழ்க்கையில்'
அரசியல்        எவ்விடத்தில்        பொருந்துகிறது   என்பது பற்றியும்,
ஏற்கனவே   என்னுடைய  vicharamarg வலைப்பதிவுத் தளத்தில்
வெளியான,    "அர்த்தமற்ற அரசியல்"    எனும்    எனது     நெடிய
கட்டுரையை  நீங்கள் வாசிக்கவில்லையா?

    நண்பர்கள் மூவரும் :  . . . ????? !!!!!!????@#$%^<>??

   க : வாசித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும்! அதாவது,
"எது   அல்லது   யார்   நம்மை   ஆள   வேண்டும்?"    என்கிற  மிக
அடிப்படையான கேள்வியைக் கேட்காமல், அதற்கான  பதிலைக்
கண்டுபிடிக்காமல், அசலான அரசியலை நாம் ஒரு போதும் புரிந்து
கொள்ளமுடியாது!

  சு : 'வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம்!' என்றீர்களே?

  க : இப்போதும் வாழ்க்கையைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்
கிறோம்;   துல்லியமாகச் சொன்னால்,   அசலான வாழ்க்கைக்குத்
தடைகளாக    நிற்கிற  விஷயங்களையெல்லாம்   இனம் கண்டு
களைந்து கொண்டிருக்கிறோம்! அதாவது, அசலான  வாழ்க்கைக்
கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்!

  முரு : அப்படியென்றால், இதுவரை நாம் வாழ்ந்து கொண்டிருப்பது
'மனித-வாழ்க்கை' இல்லையா?

  க : அதற்காகத்தான், தொடக்கத்திலேயே நான் கேட்டேன்; எலியின்
வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோமா, அல்லது மனித-வாழ்க்கை
யைப்  பற்றிப் பேசுவோமா? என்றேன்!

  முத் : நீங்கள் கேட்டது சரிதான், அதே நேரத்தில், இந்தத் தேர்தலில்
ஒரு நல்ல கட்சி வெற்றி பெற்றால், நம் மாநிலத்தில் ஒரு நல்லாட்சி
ஏற்படுமில்லையா?

  க : நல்ல கட்சி?  நல்லாட்சி? ஏற்படும்,  ஏற்படும், நல்லாவே
ஏற்படட்டும்!  அது சரி,   'நல்லாட்சி' என்றால் எப்படியிருக்கும்?  
விலைவாசிகள்  யாவும் கட்டுக்குள் இருக்கும்; வரிச்சுமைகள்
இருக்காது; விவசாய வளர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கப்படும்;
புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு   வேலையில்லாத்
திண்டாட்டம்  ஒழிக்கப்படும்;  சமூகத்தில்   எவ்வித ஏற்றத்தாழ்வு
மில்லாத நிலை  நிறுவப்படும். . .இப்படியே போனால்,     மக்கள்
எல்லோரும்  சுபிட்சமாக வாழ்வர்!  அவ்வளவு தானே?

   முரு : (கோபத்துடன்) வேறு எதை நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

    க : நான் எதிர்பார்ப்பது இருக்கட்டும். இவை யாவும் 'அடிப்படைகள்'
அல்லவா? மனிதர்கள் உயிர்-வாழ்வதற்குரிய அடிப்படைகளை, கட்டு
மானங்களை, ஆதார அம்சங்களை அடைவது தான் 'வாழ்க்கை'யின்
'பெரிய'  இலட்சியங்களா,   இறுதி-இலக்குகளா?    இவைகளை நாம்
போகிற   போக்கில்    அமைத்துக்   கொண்டிருக்க     வேண்டாமா?
இவைகளை,   இந்த,      உயிர்-வாழ்தலுக்கான     அடிப்படைகளை,
என்றைக்கு   நாம்    அமைத்து  முடிப்பது?  அப்புறம் என்றைக்கு நாம்
அசலான  மனித வாழ்க்கையை    வாழத்   தொடங்குவது?
   எல்லோருக்கும் நல்ல குடி-தண்ணீர்,   எல்லோருக்கும் மின்சாரம்,
எல்லோருக்கும்   சமையல்-எரிவாயு, எல்லோருக்கும் கல்வி,
எல்லோருக்கும் வேலை-வாய்ப்பு, எல்லோருக்கும் வீடு, இவை நம்
வாழ்க்கையின் அடிப்படைகளா?  அல்லது  போராடிக்  காத்திருந்து
பல ஆட்சி-மாற்றங்களைச் சந்தித்து அடையப்பட வேண்டிய உன்னத
இலட்சியங்களா? சொல்லுங்கள்!
   உண்மையில், நாம் வாழ்ந்துகொண்டிருப்பது 'மேன்மைப்படுத்தப்பட்ட
ஒரு எலி-வாழ்க்கை'யே, a Glorified rat-life, தவிர வேறில்லை!

  முரு : நீங்கள் ஏதோ ஒரு அதீதப் பார்வையிலிருந்து பேசுவதாகத்
தெரிகிறது! நீங்கள் மனிதகுலத்தின் அறிவையும், நாகரிகம்,
கலாச்சாரம்,  பண்பாடு, விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பக் -
கண்டுபிடிப்புகள், சாதனைகள் ஆகியவற்றை குறைத்து
மதிப்பிடுவதாகத் தெரிகிறது!

  க : இல்லை! இவற்றையெல்லாம் நீங்கள் 'உயர்த்தி' மதிப்பிடுவதால்
நான்   'தாழ்த்தி'   மதிப்பிடுவதாகத் தெரியலாம்! நீங்கள் குறிப்பிடும்
அறிவு,   நாகரிகம்,    விஞ்ஞான-தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள்,
வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் யாவும் அவற்றிற்குரிய தளத்தில்
குறிப்பிடத்தக்க விஷயங்களாக இருக்கலாம், ஆனால், அவை எல்லா
வற்றையும்     ஒட்டு   மொத்தமாக   மனிதகுலம்   எதில்   "முதலீடு"
செய்துள்ளது என்பதை எவ்வாறு காணத் தவறினீர் ; மனிதகுலம்
தனது ஒட்டு மொத்த அறிவு, ஆற்றல், உழைப்பு அனைத்தையும்
"உண்டு-உறங்கி-இனம் பெருக்கிச் செல்லும் 'எலி-வாழ்க்கை'யில்
தானே முதலீடு  செய்துள்ளது; முடக்கியுள்ளது? அதனால் தான்
சொன்னேன்,    நாம்   வாழ்ந்துகொண்டிருப்பது  'மேன்மைப்படுத்
தப்பட்ட ஒரு எலி-வாழ்க்கை'யே என்று!

   முத் :  நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே! ஆனால், நாம் எவ்வாறு
இந்த எலித்தனமான வாழ்க்கையைக் கடந்து அசலான மனித
வாழ்க்கையுள் பிரவேசிப்பது? அப்படியானால், நாம் 'ஆன்மீகத்தில்'
ஈடுபட வேண்டுமா?

   க :  ஆம்,   ஒரு வகையில்,   நாம்   ஆன்மீகத்தில்    ஈடுபடத்தான்
வேண்டும். ஆனால், இங்கு, இப்போது நாம் நான்கு பேர் என்ன
செய்து கொண்டிருக்கிறோம்? ஆம், நாம் இப்போது ஆன்மீகத்தில்
தான் ஈடுபட்டிருக்கிறோம்! நாம் வாழ்க்கையைப் பற்றி சும்மா
பேசிக் கொண்டிருக்கவில்லை! வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்
"விசாரத்தில்" ஈடுபட்டிருக்கிறோம்! என்ன முத்தையன், புரிகிறதா?

   முரு :  ஆனால், வாழ்க்கையைப் பற்றி பேசுவது எவ்வகையில்
'வாழ்தல்' என்பதாகும்? அல்லது ஆன்மீகம் ஆகும்? சொல்லுங்கள்!

   க :  சொல்கிறேன், முதலில்  உங்கள் கேள்வி மிகவும் நியாயமானது.
சரி,  அதே நேரத்தில்,  'வாழ்தல்' என்றால் என்னவென்று நினைக்கிறீர்?
இங்கு நீங்கள் என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கவில்லை
என்றால், இந்நேரம் நீங்கள் வீட்டிலோ, கடைத் தெருவிலோ, அல்லது
வேறு எங்கேயோ வேறு அலுவல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். சுருக்க
மாகச் சொன்னால், அன்றாடச் சுற்றில், உயிர்- வாழ்தலின் களத்தில்
உழன்று கொண்டிருப்பீர்கள், இல்லையா, முருகன்?
   அடுத்து, இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் குதர்க்கமாகக்
கூட உங்களுக்குத் தோன்றலாம்; அதாவது, வாழ்க்கையைப் புரிந்து
கொள்ளுதல் தான் வாழ்தல், வாழ்க்கை, எல்லாமும்! இதை விடுத்து
வேறு  எவ்வழியிலும் வாழ்தல் என்பது சாத்தியமாகாது!
வாழ்க்கையின் அர்த்தத்தை அறியும் தேடல், அல்லது விசாரம்
மட்டுமே ஒரே அர்த்தமுள்ள செயல்பாடும், வாழ்தலும் ஆகும்! சிலர்,
 'ஆன்மீகம்' என்ற பெயரில், பல்வேறு பயிற்சிகளைச் செய்து கொண்
டிருக்கிறார்கள்; அதை அவர்கள் பெரிதாக எதையோ செய்வதாக
எண்ணிக் கொண்டு தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்று
தான்  சொல்லவேண்டும். ஆனால், அவர்கள் தங்கள் பயிற்சிகளை
முடித்த கையோடு உடனே சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடு
கிறார்கள்! சாதாரண,சாமானிய மக்களோ, உண்பதும், உடுப்பதும்,
குடிப்பதும்;   அரட்டை, கேளிக்கை, பொழுது போக்கு போன்றவற்றை
யும் தான்  வாழ்தல், வாழ்க்கை என்பதாக வாழ்ந்து செல்கிறார்கள்!
   அடுத்து, பணக்காரர்கள், செல்வந்தர்கள் என்ன செய்கிறார்கள்?
ஆம், அவர்கள் வாழ்ந்து வரும்,பகட்டு நிறைந்த, செல்வச்செழிப்பு
மிக்க வாழ்க்கை என்பது, உண்மையில், பெரிது படுத்தப்பட்ட
சாதாரணம்; மற்றும் அபத்தமான வகையில் அலங்கரிக்கப்பட்ட
அன்றாடம் அல்லது வீண் ஆடம்பரமே தவிர வேறென்ன?
   விஷயம், இது தான், அதாவது நாம் இங்கு இவ்வாறு அமர்ந்து பேசி
விட்டு மீண்டும் 'பழைய' வாழ்க்கைக்குத் திரும்புவதில்லை;
திரும்பக் கூடாது, இல்லையா?

   சு :  அப்படியானால், பேசி முடித்துவிட்டு, நாங்கள் எங்கள் வீடு
களுக்கு திரும்பச் செல்ல வேண்டாமா? (எல்லோரும் சிரிக்கிறார்கள்!)

   க :  இல்லை, நாம் எல்லாவற்றையும் பேசி முடித்துவிட வில்லை!
ஆகவே  நாம் மீண்டும் இங்கே கூடுவோம்! மீண்டும் நம் வீடுகளுக்கு
திரும்பச்  செல்லுவோம்!  மீண்டும் இங்கே கூடுவோம்! அதாவது
மீண்டும் நாம்  நம் வீடுகளுக்கு திரும்புவதும், அன்றாடத்தில் ஈடுபடு
வதும், எதற்காக என்றால், நம்முடைய "வாழ்க்கை-விசாரத்தை"
முறையாகக் கொண்டு சென்று,  முழுமைப்படுத்துவதற்கு உதவுகிற
ஒரு "அடிப்படை"யாக அதைப் பயன் படுத்திக் கொள்வதற்காகத்
தானே தவிர, வீடுகளுக்குச் செல்வது,  அங்கே 'வாழ்வதற்காக' அல்ல!
வீடு, அன்றாடம், சமூகம், தேசம், உலகம் இவை உயிர்-வாழ்தலைக்
குறிக்கும் இடங்களாகும்.   ஆனால்,   நாம்  கூடும் இந்த  இடம்
'உண்மையான- வாழ்தலுக்கான'    "விசார-வெளி"  ஆகும்!

           . . . . . . .(யாரும் பேசவில்லை!) ..  .. . . . . . . . . .

   முரு :   'வாழ்க்கையைப் பற்றி பேசுவோம்!' என்று சொன்னீர்கள்,
ஆனால், வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை;
மாறாக,  பொதுவாக,     'மனிதர்கள்   தங்கள்    வாழ்க்கையை
வாழவில்லை!'   என  விமர்சனம் செய்கிறீர்கள்!

  க :  முதலிடத்தில், 'அன்றாடத்தை' ஓரம் கட்டி விட்டு இங்கு வந்து
அமர்ந்துள்ளோமே, இது தான், வாழ்க்கையின் தொடக்கம்! அசலான
வாழ்க்கை எங்கு தொடங்குகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும்  தான் தொடங்குகிறது!
"நீங்கள் இருக்கிறீர்கள்" என்ற உணர்வு தான் அந்த தொடக்கம்! நான்
இங்கு குறிப்பிடுவது உணர்வு-பூர்வமான வாழ்க்கையை, மனித
வாழ்க்கையை ! இதன் அர்த்தம், செடிகொடிகள் வாழவில்லை;
எலிகளும், தவளைகளும் வாழவில்லை; அவை வாழ்வது
வாழ்க்கையே அல்ல! என்றாகாது. உயிருள்ள அனைத்து ஜீவிகளும்
வாழவே செய்கின்றன; ஆனால், அவை அவற்றிற்கான
வாழ்க்கையை வாழ்கின்றன! மனித ஜீவிகளாகிய நாம் நமக்கான
வாழ்க்கையை வாழ வேண்டும்!

  சு :  'நாம் இருக்கிறோம்!'   என்பதை  நானும், ஏன்,  நாம் அனைவருமே
உணரத்தானே செய்கிறோம்?

    க :  நல்லது!  'நாம் இருக்கிறோம்!'   என்பதை நாம் அனைவருமே
உணரத்தான் செய்கிறோம்!  ஆனால், நாம் ஒவ்வொருவரும் "எதை",
'நாம்'  என அடையாளப்படுத்திக்  கொள்கிறோம்  என்பதில் தான்
சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது! பொதுவாக, 'நாம் உயிரோடு இருக்கி
றோம்!'  என்பதைத் தான் நாம் ஒவ்வொருவரும் உணர்கிறோமே
தவிர,  'நாம் இருக்கிறோம்!' இதையே  தன்னிலையில் சொன்னால்,
'நான் இருக்கிறேன்!'  என்பதாக   நாம்    ஒவ்வொருவரும்
உணர்வதில்லை!

   முரு :  'நான் உயிரோடு இருக்கிறேன்!'    என்பதற்கும்    'நான்
இருக்கிறேன்!'   என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் உள்ளது?

   க :  வித்தியாசம் உள்ளது; மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்!
'உயிரோடு இருக்கிறேன்!' என்பது  ஒரு உயிரியல் நிஜம்; எலியும்
தவளையும் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன!   ஆனால்,  'நான்
இருக்கிறேன்!'  என்று ஒருவர் உணர்வது என்பது  உயிரியல் நிஜத்தைக்
கடந்த உணர்வு-பூர்வமான நிஜமாகும்! ஆனால், அதில் நீங்கள்
எல்லோரும் பங்கு பெறுவதில்லை! இது தான் உங்கள் பிரச்சினையும்
மட்டுப்பாடும்!
   அடுத்து,  'உயிரோடு இருக்கிறேன்!' என்று உணர்வதில் உருவாகிற
பிரச்சினை என்னவென்றால், 'உயிரோடு இருப்பது' என்பது அதில் அதி
முக்கியத்துவம் பெற்றதாகி, 'உணர்வு' அல்லது, உணர்வோடிருத்தல்'
என்பது பின்னுக்குத்தள்ளப்பட்டுவிடுகிறது!  அதாவது,  'உயிரோடு
இருப்பதை'   உணரும்  நாம்   உடனே    (தொடர்ந்து)  உயிரோடு
இருப்பதற்கு ஊழியம் செய்வதை நம் வாழ்க்கையாகக் கொண்டு
விடுகிறோம்!  இவ்விடத்தில் தான் மனித ஜீவிகள் தடம் புரண்டு
எலியின் வாழ்க்கையைத் தழுவிக்கொள்கின்றனர்!
    உயிரோடு இருப்பதற்கு ஊழியம் செய்வதில் உள்ள மட்டுப்பாடு
என்னவென்றால், அது முடிவில், நம்மை மரணத்தில் கொண்டு
போய் சேர்த்துவிடும்! மனிதனின் அதிக பட்ச ஆயுட்காலம்
வெறும் நூறு ஆண்டுகள் மட்டுமே; அதற்கு மேல், இயற்கை
யுலகம்  'உயிரோடிருத்தலுக்கு' உதவிடாது!

  முத் :  சிலர்,  120 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் வாழ்ந்திருக்
கின்றனரே!?
 
   க :  அது பொது விதி அல்ல! அது விதி விலக்கான, அரிதான நிகழ்வு
ஆகும்! நீங்கள் நன்றாகப் பாருங்கள், ஒரு மனிதன் 60, அல்லது 70,
வயது அடைந்ததும் அவனது  உடலும், மனமும் தளர்ந்து போய்
விடுவதாயுள்ளது! உடலும், மனமும் தளர்ந்து போய், ஞாபகசக்தி
குன்றி, சிந்தனைத் தெளிவின்றி 200 ஆண்டுகளோ அல்லது 1000
ஆண்டுகளோ உயிர் வாழ்வதனால் என்ன பயன்? கடல்-ஆமை
யானது சர்வ சாதாரணமாக,  300, அல்லது 350 ஆண்டுகள் வரை
உயிர் வாழ்கின்றன; ஆனால், அது கடலுக்கடியில் வாழ்ந்து
கொண்டு என்ன சாதிக்கிறது? 350 ஆண்டுகளோ அல்லது 500
ஆண்டுகளோ வாழ்ந்தாலும் முடிவில் அவையும் மாண்டு
போகத் தானே செய்கின்றன?

   சு :  அப்படியானால், நாம் எப்படி வாழ்வது? எதை நம்பி, அல்லது
எதைச் சார்ந்து வாழ்வது?

   க :  உணர்வை நம்பித் தான், உணர்வைச் சார்ந்து தான், உணர்வை
உணர்வு கொண்டு , மேன்மேலும் உணர்வில் வளர்ந்து தான் வாழ
வேண்டும்! இது தான் ஒரே வழி! ஏற்கனவே பார்த்தோம், "நான்
இருக்கிறேன்!" என்பது உணர்வுப்பூர்வ நிஜம் என்று!

   முரு :  உணர்வை உணர்வு கொள்ளுதல் என்றால் என்ன? இதை
நீங்கள் அவ்வப்போது சொல்கிறீர்கள்; ஆனால், அதை அதிகம்
விளக்கிச் சொல்வதில்லை!

   க :  அது குறித்து அதிகம் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?
அதாவது, உணர்வைக்கொண்டு தான் நீங்கள் உங்களுக்கு வெளியே
உள்ளவற்றையும், இன்னும், உங்களுக்கு உள்ளே உள்ளவற்றையும்
உணர்கிறீர்கள்,அறிகிறீர்கள்!  உண்மையில், உணர்வு தான் நீங்கள்.
     இப்போதும்,   எப்போதும்,   நீங்கள்   செய்ய வேண்டியது என்ன
வென்றால், புறத்தே   எந்தப் பொருளையும், நிகழ்வையும், எதையும்
பார்க்காமலும்,   (அதற்காக    நீங்கள்  உங்கள்  கண்களை  மூடிக்
கொள்ளத் தேவையில்லை!)  அகத்தே,  மனதில், எந்த  எண்ணத்
தையும் பின்பற்றிச் செல்லாமலும்  இருக்கும் பட்சத்தில்,  நீங்கள்
வெறும் 'உணர்வாய்' இருப்பீர்கள்!   இதுதான்  உண்மையில்,
' நீங்கள் நீங்களாக  இருப்பது'  என்பது!    நீங்கள் விரும்பும்
வகையில் இருப்பது என்பது அல்ல!  நீங்கள் விரும்பும் வகையில்
இருப்பது என்பது உண்மையில், 'உங்களுக்கு மாறாக இருப்பது'
என்பதாகும்! இன்னும், வாழ்க்கைக்கு மாறாகவும், எதிராகவும்
இருப்பது என்றாகும்! சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் உணர்வு
தான் என்பதை உணர்வது தான் ' உணர்வை உணர்வு கொள்ளுதல்'
என்பது! வேறு சொற்களில் சொன்னால், பிற எல்லாவற்றையும்
ஒதுக்கி விட்டு, "நான் இருக்கிறேன்!" என்ற உணர்வுடன், 'நான்',
'இருக்கிறேன்' என்ற சொற்களும் இல்லாமல் இருப்பது தான்
"உணர்வாய் இருப்பது" என்பது!  இந் நிலையில்  நீங்கள்  நீடித்து
நிலைக்கும் பட்சத்தில் நீங்கள் உணர்வின் வேறொரு பரிமாணத்
திற்குள் பிரவேசித்திருப்பீர்கள்!

  முரு :  ஆனால், எண்ணங்களின் குறுக்கீடில்லாமல், அதாவது
எண்ணமற்று இருப்பது எவ்வாறு?

   க :  நான் இப்போது சொன்னவற்றை கவனித்துக் கேட்டிருந்தால்
இந்தக் கேள்விக்கு அவசியமே இல்லாமல் போயிருக்கும்! முதலில்
எண்ணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள், இல்லா
விட்டால், எண்ணமற்ற நிலைக்கு நீங்கள் ஒரு போதும் போகவே
முடியாது! எண்ணம் அல்லது எண்ணங்கள் என்பது உங்களுக்கு
வெளியேயுள்ள பொருட்களையும், நிகழ்வுகளையும், விஷயங்
களையும் குறிக்கின்ற 'ஒட்டுச்சீட்டுகள்', 'குறியீடுகள்' தான் அவை!
அவையில்லாமல் உங்களால்  சிந்திக்க முடியாது! அதே நேரத்தில்,
அவை இருந்தால், உங்களால்  சிந்திக்காமல், எண்ணாமல் இருக்க
முடியாது! இது தான் உங்களது பிரச்சினை!   ஒரு எண்ணம் என்பது
ஏதோவொரு பொருளை,  நிகழ்வை, விஷயத்தைக் குறிப்பதாயும்,
நினைவூட்டுவதாயும் தான் உங்களுள் எழுகிறது! உடனே நீங்கள்
அது குறித்து எண்ணத் தொடங்கி விடுகிறீர்கள்; அப்போது உங்கள்
உணர்வு அப்பொருளை, விஷயத்தை, நிகழ்வைப் பற்றியதாக
மாறி விடுகிறது! அதாவது,  உணர்வாகிய நீங்கள் நீங்களாக
இல்லாமல் போய்விடுகிறீர்கள்! அதாவது உணர்வு உணர்வாக
இல்லாமல், தற்காலிகமாக, அந்தப் பொருளாக, அல்லது, அந்தப்
பொருளைப் பற்றிய எண்ணமாகச் 'சுருங்கி'  விடுகிறது! இப்போது
பிரச்சினை எண்ணத்தை விரட்டுவதோ, காலி செய்வதோ அல்ல!
மாறாக, அந்த 'எண்ணம்' குறிக்கின்ற, சுட்டுகின்ற பொருளை,
அல்லது நிகழ்வை, அல்லது விஷயத்தை ஏன் நாம்
'ஒரு பொருட்டாக' எடுத்துக்கொள்கிறோம் என்பது தான்!
     ஆக,நாள் முழுவதும்  நாம் எண்ணற்ற பலவித எண்ணங்களால்,
அதாவது  எண்ணற்ற பலவித பொருட்களால், விஷயங்களால்,
நிகழ்வுகளால் ஈர்க்கப்படுகிறோம், துரத்தப்படுகிறோம், அலைக்
கழிக்கப்படுகிறோம்! அதாவது நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும்
புற விஷயங்களை, பொருட்களை, நிகழ்வுகளைப் பற்றியதாகவே
அவைகளைச் சுற்றிச் சுழல்வதாகவே உள்ளது!
    விஷயம் என்னவென்றால், நம் வாழ்க்கையில், புற விஷயங்
களுக்கும், பொருட்களுக்கும்,  நிகழ்வுகளுக்கும் இடமுள்ளது.
எவ்வாறென்றால், நமக்குத் தேவைகள் உள்ளன! ஆனால், நமக்குத்
தெரிவதில்லை; 'தேவைகள் மட்டுமே வாழ்க்கையல்ல' என்பது!
ஆகவே, நாம் எடாகொடமாகச் சிக்கிக் கொண்டுவிடுகிறோம்!
ஆகவே, தேவைக்குமேல்,தேவைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்
டிருப்பது, தேவைகளைத் தேடிக்கொண்டிருப்பது என்பதிலிருந்து
விடுபடாமல், எண்ணங்களிலிருந்து விடுபட முடியாது!
   வாழ்க்கையின் மேற்புறத்தேவைகளுக்குரிய பொருட்களை
நாம் தேடித்தான் ஆகவேண்டும், அதே நேரத்தில்,  வாழ்க்கையின்
"உட்பொருளை"அதாவது "அர்த்தத்தை" யும் நாம் தேடித்தான்
ஆகவேண்டும். இல்லாவிடில், நாம் உயிர்-வாழ்வது நோக்கமற்று,
குறிக்கோளற்று, இலக்கற்று, மொத்தத்தில், அர்த்தமற்றுப்
போய்விடும்!

   சு :  சரி, நேரமாகிவிட்டது, நாம் வீட்டிற்குச் செல்லலாம் என்று
நினைக்கிறேன்!

  க :  நல்லது, நாளை நாம் தொடர்ந்து பேசுவோம், இப்போது
கிளம்புவோம்!

 **  **  **  **  **  ***
மா.கணேசன்/ 26.04.2016



Sunday, 24 April 2016

கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?



          எச்சரிக்கை :-
          வாழ்க்கையின்  முடிவு 'மரணம்' என்பது தவறு!
          வாழ்க்கையின்  முடிவு  முழுமையான நித்திய
          வாழ்க்கையே! ஆனால், மனிதன் "இறவா நிலை"
          எய்துவதும்;அல்லது, இறந்து போவதும் முறையே அவன்
          எவ்வளவு முழுமையாகத் தன்னை அறிகிறான் அல்லது
          அறியத் தவறிடுகிறான் என்பதைப் பொறுத்ததே!

                 ****

வாழ்க்கை அழிவற்றது, நித்தியமானது!
மரணம் தெரிவிற்குட்பட்டது!!

      <>

இப்பதிவு உங்களை இறக்கச் சொல்கிறது!
ஆம், எக்காரணத்திற்காகவும் நீங்கள்
இறந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு முறை
மட்டும் உங்களை இறக்கச் சொல்கிறது!

கம்பளிப்புழு தனது 'புழு' நிலைக்கு இறக்காமல்
அழகிய வண்ணத்துப்பூச்சியாக பிறக்கவியலாது!

மனிதன் தனது 'அரை-உணர்வாகிய' அகந்தைக்கு
இறக்காமல்  'முழு-உணர்வாகிய' அழிவில்லா
ஆன்மாவை பிரசவிக்கவியலாது!

ஆம், உயிரையும், உடலையும் இழக்காமல் உணர்வுடன்
ஒருவர் தமது அகந்தைக்கு இறத்தல் வேண்டும்!
அகந்தைக்கு இறத்தல் வலி நிறைந்தது தான்-பிரசவ
வலியைப் போல!

ஒருவர் தனது அகந்தைக்கு இறக்காவிடில், அவர்
முடிவில்  உண்மையிலேயே இறந்து போகிறார்!

ஆகவேதான், இப்பதிவு, 'இறப்பு' பற்றி எடுத்துச்
சொல்கிறது! நீங்கள் ஏற்கனவே இறந்து விட்டீரா,
அல்லது    உணர்வு பெருகி வழிய வாழ்ந்து
கொண்டிருக்கிறீரா   என உங்களை நீங்களே
பரிசோதித்துக்  கொள்ளும்படிச்  சொல்கிறது!

ஏனென்றால், 'வாழ்க்கை' என்றால் என்னவென்று
அறியாமலே வாழ்வது மரணத்திற்கு ஒப்பானது!
அதில்,
"மரணம்" என்றால் என்னவென்று அறியாமல்
மரணிப்பது இறந்து போனவன் இரண்டாவது முறை
இறப்பது போன்றது!

        <>

தன்னையறியாதவன் இறப்பதில்லை!
ஏனெனில், அவன் ஏற்கனவே இறந்து விட்டவன்!

        <>

மரணம் என்பது வாழ்க்கையின் எதிர்ப்பதம் அல்ல!
மாறாக, அது பிறப்பின் எதிர்ப்பதம் மட்டுமே!

        <>

வாழ்க்கைக்கு எதிர்ப்பதம் ஏதுமில்லை!
பிறப்பு, இறப்பு மற்றும் எல்லா எதிரிணைகளும்
இருமைகளும், நிகழ்வுகளும் யாவும்
வாழ்க்கையினுள் தான் இடம் பெறுகின்றன!

        <>

தயவுசெய்து 'வாழ்க்கையை'ச் சுருக்கி விடாதீர்!
அதுதான் உங்கள் மரணத்திற்கான முதல் சுழி!

        <>

வாழ்க்கை என்பது எல்லாவற்றையும்
பிரபஞ்சம் முழுவதையும் உள்ளடக்கியதும்
எல்லாவற்றையும் கடந்ததுமான
பேரியக்கமாகும்!

        <>

பிறப்பு நம்மை காலத்தின் உலகினுள்
இருப்பு எனும் "உணர்வு-ஆட்டத்திற்கு"
அறிமுகப்படுத்துகிறது!
உணர்வு-ஆட்டத்தை நாம் முறையாக
முழுமையாக ஆடி முடித்தாலும்
முடிக்காவிட்டாலும்,இறப்பு
ஆட்டத்தை முடிவிற்குக் கொண்டு
வந்து விடுகிறது!

        <>

ஆட்ட-நேரம் முடிந்ததும் அரங்கம் கலைக்
கப்பட்டு விடுகிறது!
ஆம், இறப்பு நம்மை காலத்தின் உலகிலிருந்து
விடுவிப்பதில்லை - அதிலேயே
கரைத்து விடுகிறது!

        <>

பிறப்பு : இருப்பின் நுழைவாயில்.
இறப்பு : இன்மையின் நுழைவாயில்.

        <>

இல்லாமலிருந்தோம்!
பிறப்பு எனும் கதவின் வழியாக
இருப்பு பெற்றோம்
இறப்பு எனும் கதவின் வழியாக
மீண்டும் இல்லாமல் போகிறோம்!
அதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி?

       <>

உண்மையிலேயே  "நாம்" யார்? என்பதை
உணராவிடில் நாம் இறப்பது உறுதி!

       <>

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்
அடைபட்ட இருப்பு அல்ல வாழ்க்கை!
இருப்பை எவ்வாறு உணர்வு கொண்டு
முழுமைப்படுத்துகிறோம் என்பதே  வாழ்க்கை!

       <>

வாழ்க்கை என்பது உயிரோடிருப்பது அல்ல!
உணர்வோடிருப்பதே!
இது ஒரு தொடக்கம் மட்டுமே!

       <>

செடிகொடிகள், புழு பூச்சிகள், பறவைகள்
பெருவிலங்குகள் இவை எதுவும்
"தாம் இருக்கிறோம்!" என்பதை உணர்வதில்லை!
ஆகவே அவற்றிற்கு இல்லை "மரண-பயம்"!

       <>

"தாம் இருக்கிறோம்!" என்பதை உணரும்
மனித ஜீவிகளோ தினம் தினம் செத்து செத்து
பிழைக்கின்றோம் -  "மரண-பயத்தில்"!

       <>

மனிதா,
உனது
இருப்பு : பெருங்குழப்பம்.
இறப்பு : பேரச்சம்.

       <>

உயிரோடிருப்பது உணர்வோடிருப்பதற்காகவே!
உணர்வோடிருப்பது முழு-உணர்வை
அடைவதற்காகவே!

       <>

முழு-உணர்வு = முழுமையான இருப்பு

       <>

இருப்பின் நிலைகள்:-
உணர்ச்சியற்ற  இருப்பு :  சடம்
உணர்ச்சியுள்ள இருப்பு : உயிர்
(சுய) உணர்வுள்ள  இருப்பு : மனம்
முழு-உணர்வு=முழு-இருப்பு : ஆன்மா

       <>

குறுகிய காலமோ அல்லது நீண்ட  காலமோ
உயிரோடிருப்பது பற்றியதல்ல வாழ்க்கை!
உணர்வு- நிலையில் எவ்வளவு உயர்கிறோம்
என்பதைப் பற்றியது!

       <>

உயிரோடிருப்பது அற்புதம்!
உணர்வோடிருப்பது அதியற்புதம்!!
முழு-உணர்வையடைவது
(அனைத்து அற்புதங்களுக்கும்
அப்பாற்பட்ட) உன்னதம்!!!

       <>

மனிதன் உயிரோடிருப்பது  :  இயற்கையின் ஏற்பாடு!
உயிரோடிருந்தும் உணர்வோடில்லையனில்
அது  :  இயற்கையின் குறைபாடு!
சுய-உணர்வடைந்தும்  முழு-உணர்வையடையாவிடில்
அது  :  மனிதனின் சுய-மட்டுப்பாடு!

       <>

மரணம் குறித்தல்ல நாம் அஞ்சி நடுங்க
வேண்டியது!
மாறாக, தன் முழுமையைத் தேடாமல்
தனது 'அரை-உணர்வில்' தேங்கித்
தற்கொலை செய்து கொள்ளும் அகந்தை
குறித்துத்தான்!

       <>

மரணத்தை எண்ணி அஞ்சுவதும்
மரணிப்பதும் மனிதனின் அகந்தையே!

       <>

ஆன்மா என்பது நீங்கள்  ஏற்கனவே பெற்றிருக்கும்
ஒன்றல்ல!
அதை நீங்கள் புதிதாக பெற்றெடுத்தாக
வேண்டும்!
ஆன்மாவை பிரசவிக்கும் ஊடகமே நீங்கள்!

       <>

உலகின்
உயிரின்
உணர்வின்
உய்விப்பு
முழு - உணர்வில்!

       <>

ஆன்மா என்பது உங்களுக்குள்ளேயும் இல்லை!
வெளியேயும் இல்லை!
ஆனால், உங்கள் அகத்தின் வழியாகத்தான்
அதை  நீங்கள்
கண்டடைந்தாக வேண்டும்!
அவ்வாறு கண்டடைந்திடும் போது
அதை  உங்களது ஆன்மா
என அழைத்துக் கொள்ளலாம்!

       <>

"நான்"
என்பது எனது உடலல்ல,
எனது உணர்ச்சிகளும் அல்ல,
எனது சிந்திக்கும் மனமுமல்ல,
எவையெல்லாம் என்னுடையவையோ
அவையெதுவும் அல்ல
"நான்"

       <>

மனிதா, உண்மையான "நீ" ஒரு போதும்
மரிப்பதில்லை!
"நீ"மட்டும் உண்மையிலேயே "யார்?"
என்பதை அறிந்திருப்பின்!
ஆ! எது உன்னில் இறக்க அஞ்சுகிறதோ
அது இறந்தே ஆக வேண்டும்!
உன்னில் சில பகுதிகள் இறப்பது
நிச்சயம்!
ஆகவே மீதமுள்ள காலத்தை
வீணாக்காமல்  "நீ யார்?" என்பதை
அறியும் விசாரத்தில் செலவிடு!

       <>

நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்
நீங்கள் ஒரு 'முக்கியஸ்தர்', 'பெரிய நபர்'
என்றெல்லாம்!
ஆனால், மரணம் சொல்லிக்
கொண்டேயிருக்கிறது :
நீங்கள் 'ஒன்றுமில்லை', வெறும்
"பூச்சியம்" என்று!
மரணம் தனது கூற்றை
உண்மையாகவே செயல்பூர்வமாக
நிரூபித்து விடுகிறது-விரைவாகவோ
அல்லது தாமதமாகவோ!

       <>

மரணத்தைவிட
'மரணம்' பற்றிய
பயமே நம்மைக்
கொல்கிறது.

       <>

உண்மையில்,  99.9%  மனிதர்களின் மரணம்
அகால  மரணமே!

       <>

இரண்டு வயது முதல்
இறக்கும்  வயது வரை
மனிதன்
தனது உணர்வின்
'குழந்தைப் பருவமான
அகந்தையிலேயே
கழித்து
உடலின் மரணத்துடன்
இணந்து
அகால மரணம்
அடைகிறான்!

       <>

மனிதா,
உனது உடல் முதுமை அடைவதற்குள்
நீ  உனது உணர்வின் முழுமையை
எட்டிவிடு!
இல்லாவிடில் உனது உடல் மரிக்கும் போது
நீயும் அதனுடன்சேர்ந்து
உடன்-கட்டை ஏறுவதை
தவிர்க்க வியலாது!

       <>

அகந்தை, அது
பல வடிவங்களில் தோன்றும்!
அது ஆணவம் கொண்டு
ஆரவாரமும் செய்யும்;
சாந்தமே வடிவாக
சாதாரணமாகவும் திரியும்!
. . . . . .
மொத்தத்தில்,
விழிப்படையாத மனமே
அகந்தை!

       <>

மரணத்தை  மறுப்பது அகந்தையின்
சிறு பிள்ளைத்தனம்!
மரணத்தை  ஏற்றுக் கொள்வது அகந்தையின்
கோழைத்தனம்!
மரணத்தை  நேரே சந்திப்பது அகந்தையின்
உரு-மாற்றம்!

       <>

அகந்தை என்பது அகற்றப்பட வேண்டிய
தீமையோ அசிங்கமோ அல்ல!
அது உணர்வு-நிலை வாழ்வின்
இன்றியமையா தொடக்க நிலைக்
கட்டுமானம்!
அது விழிப்படையா மனதின்
கலைக்கப்படவேண்டிய தொரு
புனைவு!
அது புரிதலைக் கொண்டு
கடக்கப்பட வேண்டிய அபாயகரமான
சுய-மட்டுப்பாடு!
அகந்தையிலேயே வாழ்வதென்பது
அரைக்கிணறு தாண்டும்
ஆபத்து!

       <>

"மரணம்"
எனும் சொல்
மட்டுமே போதும்- நம்மை
பீதியில் உறையச் செய்ய!
இவ்வாறு உறையும் போது
மட்டுமே நாம் நமது
முட்டாள்-தனமான
ஈடுபாடுகளையும்
செயல்பாடுகளையும்
நிறுத்துகிறோம்!

       <>

மரண-பயம் நல்லது!
அது ஒருவனுள் ஒரு முறையேனும்
ஏற்படவில்லையெனில் அவன்
ஒரு வேளை ஏற்கனவே
இறந்திருக்கக் கூடும்!
அல்லது  அவன்
ஒரு உணர்வற்ற விலங்கு போல
உலவிக் கொண்டிருக்கிறான்!

       <>

மரண-பயம் நல்லது!
அது மட்டுமே நம்மை
நமது அகம் நோக்கித்
திருப்புகிறது;சுயத்தை
உணர்வு கொள்ளச்
செய்கிறது!
மற்ற விஷயங்கள் யாவும்
நம்மை புறம் நோக்கிச்
செலுத்துவதாகவும்,
சுய-மறதியை
உருவாக்குவதாகவும்
உள்ளவை!

       <>

திடீர் மரணம்
அகால மரணம்
இயற்கை மரணம்
நோயால்   மரணம்
இள-வயது  மரணம்
விபத்தினால் மரணம்
தற்கொலை    மரணம்
கொலையால்   மரணம்
. . . . . . . . . .
எல்லாவகை  மரணமும்
'உணர்வற்ற - நிலையின் '
மீதான காதலின் விளைவுகளே!

       <>

உணர்வின் நிலைகள் :-
புறம் நிலைத்த உணர்வு    : விலங்கு
எண்ணங்களில் சிக்கிய உணர்வு   : சராசரி மனிதன்
புறம்,   அகம்   இரண்டும்     கடந்த      உணர்வு  :   ஞானி

       <>

பிறரது மரணம் உமக்கு ஒரு சம்பவம்!
உமது  மரணம் பிறருக்கு ஒரு சம்பவம்?
என்ன மலினம்!

       <>

பெரும்பாலான மனிதர்கள் கருதுவது போல
மரணம் என்பது ஒரு ஓய்வகமோ அல்லது
விடுவிப்போ அல்ல!
அது
ஒரு
மாபெரும்
"மறு- சுழற்சி"  எந்திரம்!

      <>

நன்றி, மரணமே!
நீ மட்டும் இல்லையேல்
புவி மீது அகந்தையின் ஆட்சியை
அகற்றவே இயலாது!

      <>

மறு-பிறப்பு தெரிவிற்குட்பட்டது!
இப்பிறவியை முறையாகப் பயன் படுத்திக்
கொண்டால் மறு-பிறப்பு அவசியமற்றது!

      <>

இருப்பு
இன்மை
இரண்டில்
எது மேலானது?

      <>

இருப்பினால் ஒரு பயனும் இல்லை!
இன்மையால் எந்த நஷ்டமும் இல்லை!!
மொத்தத்தில் இழப்பதற்கு எதுவுமில்லை!!!

      <>

இருப்பை தெரிவு செய்து
இன்மையை வெறுப்பது
அச்சம் கொண்ட அகந்தையின்
அரை-உணர்வுச் செய்கையே!
ஏனெனில், முழு-உணர்வில்
எதுவும்  விடுபட வியலாது!

      <>

முழு-உணர்வை அடைவதொன்றே
முக்கியம்.
மற்றவை யாவும் மரணம்.

      <>

மிகவும் வினோதமாக 'மரணம்' என்பது
மரணத்தை மீறிய ஒன்றின் குறியீடாகத் திகழ்கிறது!

      <>

பிளவு தான் மரணம்!
தனியே பிரித்துப்
பார்ப்பதும்
பிரிந்து நிற்பதும்
சார்ந்திருப்பதும்
தேக்கமும்
நிலை கொள்ளாத
இயக்கமும்
நிறைவடையாமையும்
முழுமைக்குறைவும்
தான் மரணம்!

     <>

இருப்பையும்
இன்மையையும்
அறிவது உணர்வே!
உணர்வில்லையேல்
இருப்பும் இல்லை
இன்மையும் இல்லை
இருப்பிற்கும்
இன்மைக்கும்
இடையில் சிக்கிய
உணர்வும்
இருப்பு
இன்மை
இரண்டையும் கடந்த
உணர்வும்
ஒன்றல்ல!

      <>

இன்மையை முழுமையாக உணர்வதே மரணம்
இன்மையை முழுமையாக உணராமல்
இருப்பு முழுமை பெறுவதில்லை!

      <>

முழு-உணர்வு என்பது
எதைப்பற்றியுமான
உணர்வுமல்ல!
அது முழுமையான
தன்னுணர்வே!

      <>

சே! யாரது?
இன்மையிலிருந்து எழுப்பி
இருப்பிற்குள்
என்னைத் தள்ளியது!
 
      <>

முழு-உணர்வு,  காலாதீதம்,  நித்தியம்
என்பவை எங்கோ தொலைவில்
பிரபஞ்சத்திற்கு அப்பால் இல்லை!
அதைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்!
எதுவும் செய்ய வேண்டாம்!
அது இங்கே இப்போதில் உள்ளது!
 
      <>

முழு-உணர்வு -  அதற்கு மாற்று ஏதுமில்லை!
எப்படியேனும் ஒவ்வொருவரும் அதை
அடைந்திடுவது அவசியம்!
"எப்படி?"  அடைவது என்று கேட்காதீர்
அப்படிக் கேட்கும் போது உங்கள் உணர்வு
பிளவு பட்டு விடுகிறது!

      <>

புறமும்
அகமும்
அற்றுப் போகும்
முழு-கவனம்
அதுவே
முழு-உணர்வு.

      <>

மனிதா! காலமற்ற நித்தியத்தை
கைப்பற்ற எவ்வளவு காலம்
வேண்டும் உனக்கு?

      <>

இதோ, மரணத்தை வெல்ல சுலபமானதொரு
வழி : அன்பு

      <>

தன்னை முழுமையாக இழப்பவனே
தன்னை முழுமையாக பெறுபவன்!

      <>

இருப்பில் இன்மையையும்
இன்மையில் இருப்பையும்
காண்பது முழுமை!

      <>

மரணத்திற்கப்பால் என்ன உள்ளது?
என்பதை  நீங்கள்
கடைசியாக இறந்த பிறகு
தெரிந்து கொள்ள முடியாது
இருக்கும் போதே இறந்து
தெரிந்து கொள்ள வேண்டும்!

      <>

நித்தியம் என்பது உணர்வு-மயமான மெய்ம்மை!
அதுவே    முழு-உணர்வு.
அது எவ்வொரு உலகின் கைதியுமல்ல!
ஆகவே, அதற்கும் சொர்க்கம், மறுவுலகம்
என்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!
அதை, இங்கே, இப்போது, அடையமுடியவில்லை
எனில், அதை வேறு எங்கும்,எப்போதும்
நீங்கள் அடையவியலாது!

     <>

ஒரு துளி நித்தியத்துவத்திற்கு
இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும்
ஈடாகாது!

     <>

அன்பு : அதை அறிய வேண்டுமெனில்
ஒரு முறையேனும் நீங்கள் இறக்க வேண்டும்!
ஏனெனில், அது காலத்தின் உலகில் இல்லை
எளிதாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ள!

     <>

காலமற்ற   இப்போதில்   வாழ்வதென்பது
மரணத்திற்கு இறப்பதும்
மரணத்தைக் கடந்து வாழ்வதும் ஆகும்!

     <>

மரணத்தை  தவிர்ப்பதற்கான ஒரே உபாயம் :
அதனுடன் வாழ்வதே!

     <>

இறுதியானது என்பது கடைசியில் வருவதல்ல!
முழுமையானது மட்டுமே இறுதியானது!
எது தொடர்கிறதோ அது முழுமையற்றது!
எது முழுமையானதோ அது தொடர்ச்சியற்றது!
அதுவே இறுதியானது, ஆகவே காலமற்றது!
ஆகவே அது எப்போதுமுள்ளது, இப்போதுமுள்ளது!
எது காலமற்றதோ அது நித்தியமானது!
எது காலத்தில் தொடர்கிறதோ அது தற்காலிகமானது!
ஏனெனில் 'காலம்' தான் மரணம்!!

      <>

பொருந்தாததை
மட்டுப்பாடானதை
வளரத் தவறியதை
முயற்சியற்றதை
மேலோட்டமானதை
தேக்கமுற்றதை
உணர்வற்றதை
தன்னில் தானே
முழுமையற்றதை
மரணம் அழிக்கின்றது!

     <>

நன்றாகப் பார்!
நீ
உயிருமல்ல, உடலுமல்ல!
உணர்வு தான் என்பதை
உணர்ந்து கொள்!
உணர்வில்லாத உயிரும் உடலும்
வெறும் விலங்கு தான்!
நீ உணர்வு தான் என்பதை
உணராத வரை நீயும்
ஒரு விலங்கு தான்!
நீ உணர்வு தான் என்பதை
உணர்ந்த பிறகு இறப்பில் உதிரும்
உமது உயிரும் உடலும்
உனை விடுவிக்கும் விலங்கு தான்!

       <>

இன்னும் நன்றாகப் பார்!
நீ உயிருமல்ல உடலுமல்ல!
உணர்வுமல்ல!
ஆம், உணர்வாகிய உனக்குள்
ஒரு உள்ளுணர்வை உன்னால்
உணர முடிந்தால் அதுவே
இறுதியான முழு-உணர்வு!
அதன் முன் நீ வெறும்
அரை-உணர்வே!
ஆகவே உணர்வை
உணர்வு கொண்டு
முழு-உணர்வில் கலந்திடு!    
உனக்கில்லை மரணம்!

     <>

வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
மறுப்பது தான் உயரிய ஞானம்!
ஏனெனில், எல்லா உலகங்களும்
இவ்வுலகம் போலவே உனது உணர்வைச்
சார்ந்திருப்பவையே!
உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
முழு-உணர்வே!

     <>

இந்த கணத்தில்  முழுமையாக இருங்கள்!
இருப்பை முழுமையாக உணருங்கள்
அதில், காலம் அசைவற்று நின்று விடும்
அற்புதத்தை அனுபவியுங்கள்!
அதற்குப்பிறகு நூறு வருடங்கள்
வாழ்ந்து காண்பதற்கு ஒன்றுமில்லை
என்பதைப் புரிந்து கொள்வீர்!

     <>

இந்த உலகம்,அதில் உமது உயிர்,உடல், உணர்வு
இருப்பு யாவும் சிறைகளே!
அதில் நீங்கள் மரண-தண்டனைக்காகக்
காத்திருக்கும் ஆயுட்கைதிகள்!
விழித்துக் கொண்டால், தப்பினீர்!
எப்படியெனில்,  "விழிப்பு" என்பது
வேறு உலகைச் சேர்ந்தது!

     <>

ஆட்ட நேரமும், ஆட்டமும் ஒன்றல்ல!
ஆம், வாழ்-காலமும், வாழ்க்கையும் ஒன்றல்ல!
எவ்வாறு ஆடுகிறோம்  ( வாழ்கிறோம்)
என்பதே முக்கியம் !
ஆட்ட நேரம் முடியப்போவதைப் பற்றி
கவலைப்படாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி
ஆடுங்கள்- ஆட்டத்தை முழுமையாக ஆடும் போது
அடையும் உச்சமே இலக்கு!
அது, ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் நிகழலாம்!
ஆட்டத்தை முறையாக, முழுமையாக ஆடி
உச்சம் அடைந்த பிறகு புரிந்து கொள்வீர்!
ஆட்டம், ஆட்ட நேரம், ஆடு களம், இன்னும்
ஆடுபவரும் துச்சமே என்பதை!

     <>

மரணம் சார்பானது
நீங்கள் உணர்வுடனும்
சற்று தயக்கத்துடனும்
அணுகினால் அது உங்களை
மாற்றமுறச் செய்திடும்!
நீங்கள் உணர்வின்றி
உதாசீனமாய் இருந்தால்
அது உங்களை உயிரோடு
விழுங்கி விடும்!

     <>

மரணத்தை  எண்ணி அஞ்சுகிறீர்
என்பதை மறுக்கத் தேவையில்லை!
ஆம், அறியப்படாத ஒரு ஆற்றலின்
தாக்கம் இனம் புரியாத அச்சத்தை
ஏற்படுத்தவே செய்யும்!
அச்சத்தினூடே அமைதியாக
எண்ணமற்று இருங்கள்!
கொடிய கரு-நாகம் ஒன்று
உங்கள் மார்பின்  மீது ஊர்ந்து
கீழிறங்கிச் செல்லும் வரை
சலனமற்று இருங்கள்
தப்பிடலாம்!

    <>

முதன் முறையாக இறப்பது
சற்று கடினமே!
ஆனால், இரண்டாவது, மூன்றாவது
. . . . . . . .. .
என அடுத்தடுத்த முறை  இறப்பது
சுலபம்!

    <>

தயவு செய்து
ஒரே ஒரு முறை
இறந்து
பாருங்கள்!

     <>

மா.கணேசன்/ 24.04.2016

Saturday, 23 April 2016

தன்னை அறிதல்



          அனைத்து அடையாளங்களும் மனிதனைக்
          கட்டிப்போடுபவையே, மட்டுப்படுத்துபவையே
          கட்டுப்படுத்துபவையே!

ஒருவர்   இன்னாருடைய மகன், அல்லது மகள்;  சொந்த ஊர் இது;
இன்ன  குலம்,  கோத்திரம்,   மதம்,  தாய்மொழி;  இன்ன தொழில்
செய்கிறார் . . .   போன்ற   இன்ன பிற யாவும்   ஒருவரைப் பற்றிய
மேலோட்டமான    விபரங்களே தவிர    அவை      ஒரு மனிதனின்
கருவான,      அசலான மையத்தைத் தொடுவதில்லை,  விவரிப்ப
துமில்லை!      இவையெல்லாம்,     சமூகத்தில்     ஒரு    மனிதனை
இன்னொரு   மனிதனிடமிருந்து நடைமுறை காரியங்களுக்காக
பிரித்தறிவதற்கு   உதவுகிற  மேற்புற அடையாளங்கள் மட்டுமே!
இவற்றில்   ஒரு மனிதன்  தன்னையும்,  தனது வாழ்க்கையையும்
முதலீடு செய்வதும்,    இவற்றின்   மீது    நிறுவ  முயல்வதும்   சுய-
அழிவிற்கான அடிப்படைகளேயாகும்!

ஒரு   மனிதன்   குறிப்பிட்ட   ஒரு துறையில் நிபுணனாக, வல்லுன
னாக, திறமை வாய்ந்தவனாக இருக்கலாம். ஆனால், திறமைகள்
யாவும்   மேற்புறத்  தேவைகளுக்குச் சேவை செய்திடுகிற கருவி
களைப்போன்றவையே! அவை ஒருபோதும் அசலான மனிதனை
வெளிக்கொணர உதவிடாது!

அதேவேளையில்,   ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  ஒரு அசலான
மனிதன்  உள்ளான்;   ஒரு  'ஆன்மா '  உள்ளது   என்பவை   யாவும்
அழகிய   கட்டுக்கதைகளே!     அக்கதை களினால்,    ஒருவருக்கு
யாதொரு  பயனும்  விளையாது!    உங்கள் வீட்டுத்  தோட்டத்தில்
அரிய    பொக்கிஷங்கள்   அடங்கிய புதையல் உள்ளது;   ஆனால்,
அது  பற்றி  உங்களுக்கு   எதுவுமே தெரியாது என்றால்  அதனால்
உங்களுக்கு      எவ்வளவு    பயன்    விளையுமோ,     அதே    அளவு
பயனைத்தான்    இந்த  அழகிய  கட்டுக்கதைகளும்  உங்களுக்கு
அளித்திடும்!

சாதாரணமாக,     போகிற   போக்கில்,       சிலர்       சொல்வதுண்டு:
"ஒரு   சமுதாயம்   பலதரப்பட்ட,   பலவகைப்பட்ட வித்தியாசமான
நபர்களைக்    கொண்டே   அமைகிறது!"    'பலதரப்பட்ட',     மற்றும்
'வித்தியாசமான'     நபர்கள்-- அதாவது,   ஒழுக்கக்கேடானவர்கள்,
அற்பர்கள்,   ஒட்டுண்ணிகள்,  மூடர்கள்,  பொய்யர்கள், திருடர்கள்,
பாவணைக் காரர்கள்,      எத்தர்கள்,    போலிகள்,    பலவகைப்பட்ட
தொழில்களைச்    செய்பவர்கள்,    பெரும் புள்ளிகள்,   சாதாரணர்,
சாமானியர் . . . .   ஆகியோர்!?     ஆக,    எவ்வகையிலும்,  எவ்வொரு
சமுதாயமும்   (அசலான) மனிதர்களைக் கொண்டுஅமைவதாகத்
தெரிவதில்லை!  அப்படியொரு   வரலாறு  ஏதும் இருந்தால்  தானே
அதை உதாரணமாகக் கொண்டு பேச  இயலும்?

சிலர்,    அல்லது  பலர்,    ஒரு  குறிப்பிட்ட   துறையில்,   திறமைசாலி
களாக   விளங்குவதைக்கொண்டு     'அகந்தை'யுடன்,      'ஆணவத்'
துடன்  நடந்து  கொள்வதுண்டு!  அவர்கள்  ஆணவம் கொள்வதற்கு
'திறமை'   என்கிற  அடிப்படையாவது   உள்ளது!  ஆனால், எவ்விதத்
திறமையும்  இல்லாமல் ,  யாதொரு  சாதனையும் செய்யாமலேயே
நம்மில்   பலர்  செறுக்கும்,   இறுமாப்பும்,    தற்பெருமையும்  கொள்
வதை  என்னவென்று சொல்வது?  இவர்களை எந்தவகைப்பாட்டில்
சேர்ப்பது?

பரவலாக   'மனிதர்கள்'   பிறருடைய  சொற்களை அண்டியே  வாழ்
கிறார்கள்!   பிறருடைய கருத்துக்கள், கொள்கை கோட்பாடுகளின்
நிழல்களிலேயே   வாழ்கிறார்கள்!   பிறருடைய    அனுபவங்களைச்
சிலாகித்துக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்!

ஏதோவொரு       வகையில்,     "மொழி"   யானது,         எல்லோரையும்
சமப்படுத்திவிடுகிறது! நம்முடைய  மொழித்திறன் அலாதியானது!
நம்முடைய   பேச்சுகள்  நம்முடைய  "உள்-நோக்கங்களை"  சாதுர்ய
மாக  மறைத்து  விடுவதாயுள்ளது!     இதனால்,     "ஓநாய்"களையும்,
"செம்மறியாடு" களையும் பிரித்தறிய இயலாமல் போய் விடுகிறது!
இல்லாவிட்டால், செம்மறியாடுகள் நனைவது குறித்த ஓநாய்களின்
வஞ்சகப் பேச்சை    "அக்கறை"     என்பதாக      எடுத்துக் கொள்ளும்
"அரசியல்-அறியாமை"   செம்மறியாடுகளுக்கு   எளிதில்    சாத்திய
மாகுமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட    சொற்களை       அழகிய     வாக்கியங்களில்
அமைத்து பரிமாறப்படும் இனிய மொழியானது, கள்ளதீர்க்கதரிசி
களையும்,     போலி-ஞானிகளையும்     காட்டிக்  கொடுப்பதில்லை!
மேலும்,    எவ்வொரு   மொழியின் அகராதியும் எப்போதும் திறந்தே
கிடப்பதால்,        படித்தவர்களும்,      படிக்காத       சாதாரணர்களும்,
சாமானியர்களும்,      எல்லோரும்      பல்வேறு   சொற்களைப் பயன்
படுத்துவது           சர்வ- சாதாரண     விஷயமாக   உள்ளது!     மேலும்,
பேச்சுரிமை, கருத்துச்சுதந்திரம் ஆகிவற்றைக்காக்க  சட்டங்களும்
உள்ளதால்;   காற்று மண்டலம்   முழுவதும் 'வெட்டி'-விவாதங்களில்
உதிர்க்கப்படும்  அர்த்தமற்ற   வெற்றுச் சொற்களால் நிரப்பப்பட்டு
சிந்தித் தறியாத           மனித-மனங்களைப்      போலவே     பெரிதும்
மாசடைந்து   விட்டது   எனலாம்!    வருங்காலங்களில்,    'மன-மாசுக்'
களைக்    குறைக்கும்  விதமாக,   அர்த்தம்   அறியாமல் சொற்களை,
அல்லது     மொழியைப்   பயன்-படுத்தக்கூடாது      என    "சொற்கள்-
தடைச்சட்டம்"     அல்லது     "மொழி-தடைச்சட்டம்"    கொண்டு வரப்
படலாம்!

இச்சிறு மொழி ஆராய்ச்சியின் முடிவு என்னவென்றால், மனிதர்கள்
எவ்வொரு    மொழியையும்,    அதன்     அனைத்துச்  சொற்களையும்
பயன்படுத்தலாம்.    ஆனால்,  அனுபவமும்,  அர்த்தமும், மொழியின்  
வழியாகப்    பெறப்படுவதில்லை.    நாம்  செய்திகளையும்,   கருத்து
களையும்  பரிமாறிக்  கொள்ளலாமே  தவிர அர்த்தத்தையும், அனுப
வத்தையும் பரிமாறிக்கொள்ள இயலாது!

ஒரு  பொருளை,  அல்லது   ஒரு  விஷயத்தை   புறத்தேயிருந்தவாறே
புரிந்து  கொள்வதற்கும்   உள்ளேயிருந்து    புரிந்து    கொள்வதற்கும்
மாபெரும்  வித்தியாசம்  உள்ளது!  ஒரு அழகிய மாளிகையை அதன்
உள்ளேசெல்லாமல், வெளியேயிருந்துமட்டுமே பார்த்துவிட்டு அதை
முழுமையாகக்    கண்டு  விட்டதாகக்   கொள்ளமுடியுமா? " தன்னை
அறிதல் "   என்பதும் அப்படித்தான்!

ஒரு மனிதன், "தான்" என்று தன்னை அறிவது தனது உடலைத்தான்!
ஆகவேதான்,  அதை "உடல்-மைய அடையாளம்" என்று இங்கு குறிப்
பிடுகிறோம். இதன் அர்த்தம் மனிதர்கள் தங்கள் உடலை அவ்வளவு
முழுமையாக     அறிந்துள்ளார்கள்,    புரிந்துள்ளார்கள்    என்பதல்ல!
மாறாக,   மனிதர்கள்  தங்கள்  உடலைப்பற்றி அறிந்துள்ளதும் மிகக்
குறைவே, மேலோட்டமானதே! இவ்விடத்தில், மருத்துவ விஞ்ஞானம்
வழியாக நாம் அறிந்துள்ள 'உடல்-கூற்றியல்' மற்றும் உடல் எவ்வாறு
இயங்குகிறது  என்பதைப் பற்றிய  விலாவாரியான அறிவைக் குறிப்
பிடவில்லை!   இந்த   அறிவு  'உயிர்-வாழ்தலு'க்கு  உதவுமே யொழிய
அசலான வாழ்தலுக்கு உதவிடாது!

உடலைப்பற்றி   நாம்  அறிந்து கொள்ளவேண்டியது, "உடல் என்றால்
என்ன?  உடலுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு, உறவு என்ன?"  "உடல்
ஏன்,   எந்த  நோக்கத்திற்காக உயிர்-வாழத் துடிக்கிறது?"   என்பவை
குறித்தே ஆகும். ஆனால்,பொதுவாக,சாதாரணமாக   இக்கேள்விகள்
எதுவும் மனிதர்களுக்குத் தோன்றாது! ஒருவகையில், இக்கேள்விகள்
ஆபத்தானவை -  எவ்வாறென்றால்,   இக்கேள்விகள்    உடலிலிருந்து
மனிதனைப் பிரித்துவிடும்!   இன்னொரு  வகையில், இக்கேள்விகள்
ஒருபோதும் மனிதர்களின் மனதில் எழாது  - ஏனென்றால், உடலுடன்
மனிதன் கொண்டிருக்கும் பிணைப்பு அத்தகையது;   கேள்வியின்றி
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அதீதப் பிணைப்பு!

மேலும்,  பொதுவாக "மனம்" பற்றிய மனிதர்களது புரிதலும் அலாதி
யானதே!    அதாவது,     "மனம்"   தான்  "தாம்"   என்பதும்,   "மனிதன்"
என்பதும்   மனிதர்களுக்குத் தெரியாது!  அதாவது,  மனித உடலுக்கு,  
இரண்டு  கைகளும் ,    இரண்டு   கால்களும்       உள்ளது      போலவே,    
'உடலாகிய' தமக்கு ஒரு 'மனமும்' உள்ளது என்பதாகவே மனிதர்கள்
எடுத்துக்கொண்டுள்ளார்கள்!  இதன் தொடர்ச்சியாக, 'மனம்'  இருப்
பதே  உடலுக்குச் சேவை  செய்வதற்காகத்தான்;  உடலின் நலனைப்
பேணிக்காப்பதற்குத்தான் என்பது தவிர்க்கவியலாத விதியாகிறது!

ஒரு மனிதன் "நான்" என்று குறிப்பிடுவது, தனது உடலை பிரதி நிதித்
துவம் செய்திடும் ஒரு பிரதிநிதியாக,   ஒரு முகவராகத் தானே தவிர
உண்மையில் தான் ஒரு "மன-ஜீவி" என்கிற மையத்திலிருந்து அல்ல!
மேலும்,   "நான்"  என்று  சொல்வது மனிதனின் உடலல்ல; ஏனெனில்,
மனிதனைத்தவிர வேறு எந்த (விலங்கு)ஜீவியும் "நான்" என்று சொல்
வதில்லை!     அடுத்து,    மனித-உடலில்     மனம்      தோன்றியதற்குக்
காரணம்,  உடலைப்   பிரதிநிதித்துவம் செய்வதற்காகவோ  அல்லது
உடலுக்கு    ஊழியம்    செய்வதற்காகவோ   அல்ல!         விலங்கு-ஜீவி
களுக்கும் , மனிதஜீவிக்கும் உள்ள 'ஒரே' வித்தியாசம்,   ஒரு  விலங்கு
ஜீவி தன்னைத்தானே (தனது உடலை) பிரதிநிதித்துவம் செய்யாமல்
(அப்படிச் செய்வதற்கு யாதொரு வழிவகையும் இல்லாததால்)    அது
நேரடியாக முண்டுகிறது, முனைந்து நிற்கிறது;  ஆனால், மனித-ஜீவி
களோ  தங்களது  முண்டுதலுக்கு  முன்புறமாக "நான்" என்கிற    ஒரு
"ஒட்டுச் சீட்டை"    ஒட்டியுள்ளோம்  என்பது  மட்டும்  தான்!   அதாவது,
தனது  உடலுக்கு முன்புறமாக, "நான்" என்று எழுதப்பட்ட ஒரு ஒட்டுச்
சீட்டாக "மனமாகிய மனித-ஜீவி" தொங்கிக்கொண்டிருக்கிறான்!

மனிதன்  உண்மையிலேயே  'மனித'   வாழ்க்கையை  வாழ வேண்டு
மெனில், அவன் இரண்டுபிரதானச்சிக்கலிலிருந்து தன்னைத்தானே
விடுவித்துக்கொண்டாக வேண்டும்! முதல்பிரதானச்சிக்கல் என்பது
'அடையாளச் சிக்கல்' ஆகும். இரண்டாவது பிரதானச்சிக்கல் என்பது
'பிரதி நிதித்துவச்சிக்கல்' ஆகும்.  உண்மையில்,  இவ்விரண்டும் ஒரே
சிக்கலின் இரு முகங்களே எனலாம்!   மனம்   பக்குவப்படாத   அதன்
தொடக்ககாலத்தில், "ஏன்?" என்ற கேள்வி யின்றி அது உடலை 'தான்"
என்று வரித்துக்கொண்டுவிட்டது! இவ்வாறு,தொடக்கத்தில் ஏற்பட்டு
விட்ட  'உடல்-மைய அடையாளம்'   இறுதி வரை  தொடர்வது  என்பது
ஒரு ஆச்சரியமான 'புதிர்' தான் எனலாம்!

"முதல் கோணல் முற்றும் கோணல்"   என்பதற்கு    இணங்க மனிதன்
தன்  வழியை,    வாழ்க்கையை     தொடக்கத்திலேயே     தவற விட்டு
விட்டான்! மனதின் "தலைமை"யை உடல் பறித்துக்கொண்டுவிட்டது.
உடலின்     நச்சரிப்பான   தேவைகளையும்,      கோரிக்கைகளையும்,
சௌகரியங்களையும் நிறைவு செய்வது தான் மனதின், மனிதனின்
தலையாய     கடமையாகவும்,   வாழ்க்கையாகவும்    மாற்றிவிட்டது!
'உடலை'  தன் மைய - அடையாளமாகக் கொண்டுவிட்ட பிறகு மனம்
அல்லது  மனிதன்   தன்   'அசலான அடையாளத்தை'  அறிவதற்கான
யாதொரு  அடிப்படையும்,  தேவையும்    இல்லாமல் போய்விடுகிறது!

உண்மையில்,   "தன்னையறிதல்"  என்பது    ஒருவகையில், இயற்கை
மீறியது  எனலாம்!  அதன்  அவசியத்தையும், முக்கியத்துவத்தையும்
எந்தச்   சமூகமும்   சொல்லித் தருவதில்லை;   அது   எவ்வொரு சமூக,
கலாச்சார,   பண்பாட்டு  விழுமியங்களின் பட்டியலிலும்   இடம்பெறு
வதில்லை! எந்த 'உயர்' கல்வி, பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்
திலும்     அது    கற்பிக்கப் படுவதில்லை!         ஏனெனில்,     அவற்றின்
"வாழ்க்கை பார்வை" யும்,      'உடல்-மைய அடையாளத்தில்'     ஊறிய
வையே!  மேலும்,    ஒரு   தனிமனிதனை விட   எவ்வொரு     சமூகமும்
அதன்   நிறுவனங்களும்  மேலானவையோ,  மெய்ம்மைக்கு நெருக்க
மானவையோ அல்ல!

ஒருவகையில்,     உடல்-மைய அடையாளம்    என்பது     இயல்பானது;
ஆனால்,   அதையடுத்த பிற அடையாளங்கள் யாவும் சமூகத்தினால்
வழங்கப்படுபவையும்,  சுமத்தப்படுபவையும்; மேலும், சமூகத்துடன்
தகவமைதலின்  வழியே  மனிதர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டவை
யுமே ஆகும்!  ஆனால், மனிதன் தன் உண்மையான அடையாளத்தை
உணர்ந்தறியாத வரை,    அனைத்து   அடையாளங்களும் மனிதனை
கட்டிப்போடுபவையே, முடமாக்குபவையே, கட்டுப்படுத்துபவையே!

இப்போது நாம்,  பிரதி நிதித்துவச் சிக்கலுக்கு   வருவோம்.  உண்மை
யில்,     மனம்   'எதை'   அல்லது   'யாரை'    பிரதி நிதித்துவம் செய்திட
வேண்டும்?    மனம்  முறையாக   'எதையாவது'       பிரதி  நிதித்துவம்
செய்திடவேண்டுமென்றால், அது தன்னைக்கடந்த உயரிய, மேலான
அல்லது       இறுதியான  "மெய்ம்மையைத்"  தான்   பிரதி நிதித்துவம்
செய்திட வேண்டும்.   ஏனெனில்,    அது தான்    பரிணாம     ரீதியாகச்
சரியானது!   ஆனால்,  அதற்குமுன்,    மனமானது  முதலில் தன்னைத்
தான் பிரதி நிதித்துவம் செய்திட வேண்டும்.   அப்போது தான்,  மனம்
என்பது    தன்னளவில்  ஒரு   சுயமாக,  ஒரு  மெய்ம்மையாக   எழவும்,
தன்னை  நிறுவிக் கொள்ளவும் முடியும்!  இதன் அர்த்தம், மனமானது
முதலில் தன்னை நோக்கி விழித்தாக வேண்டும்!  அதாவது, மனிதன்
தனது     'உடல்-மைய அடையாளத்தை'    விலக்கி   தான் வேறு, உடல்
வேறு என்ற புரிதலை அடைவதும்,  மனம் விழிப்பதும் ஒரு சேர நிகழ்
வதாகும்! இது நாள் வரை, உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டு
உடலை பிரதி நிதித்துவம் செய்து வந்த மனமானது தன்னை நோக்கி
விழித்ததும், முதன் முறையாக, மனிதன் மனிதனாக, ஒரு "மன-ஜீவி"
யாக ஆகிறான்!   அதாவது,   இதுவரை,   தனது  'உடலை' மையமாகக்
கொண்டிருந்த மனிதன்,    முதன் முறையாக, தனது  'மனதை' மைய
மாகக் கொள்கிறான்!

அதன் பிறகு,  மனமானது  தனது  அசலான பணியை மேற்கொள்ளத்
தொடங்கிவிடும்!   ஆம்,   "மெய்ம்மை-நாட்டம்"  தான் மனதின் தலை
யாய,  அசலான பணியாகும்!  ஆம்,  அறிதல் , தெளிதல், புரிதல்  ஆகி
யவைதான்   மனதின்    பிரதான    நோக்கமாகும்!        ஒரு வகையில்,
'மெய்ம்மை"யை   அறிவது   தான்   மனமாகிய    மனிதனின் இலக்கு
என்ற போதிலும்,   'மெய்ம்மையை  அறியும்  "தான்" யார்?'  என்பதை
அறியாமல்,   மெய்ம்மையை  அறிய முடியாது!    ஏனெனில்,    மெய்ம்
மைக்கும்,  மனிதனுக்கும்  நெருங்கிய  தொடர்பு  உள்ளது!  இவ்விடத்
தில்தான்   "நான் யார்?"   எனும்   கேள்வி   அதி முக்கியத்துவம்  பெறு
கிறது! மனிதன் முதலில் தன்னை அறியாமல் உலகையும்அதிலுள்ள
பொருட்களையும்,   விஷயங்களையும், நிகழ்வுகளையும் அறிவதால்
என்ன பயன்!   அறிதலுக்கான அடிப்படை  இல்லாமல் அந்த அறிதலி
னால் மேலோட்டமான பயன்கள் கிட்டலாம்;   ஆனால்,     ஒரு போதும்
"அர்த்தம்" கிட்டாது! அர்த்தமில்லாத  'வாழ்க்கை'  மனித-தரத்திற்குக்
கீழானது.   விலங்கு-ஜீவிகள்   உணவைத் தவிர   வேறு  எந்த அர்த்தத்
தையும் தேடுவது இல்லை!     அவைகளுக்கு    உயிர்- வாழ்தல்    தான்
ஒரே அர்த்தம்.   ஆனால்,  மனித ஜீவிக்கோ,  "அர்த்தம்"   தான்     உயிர்,
வாழ்க்கை, யாவும்!

       யாதொரு அடையாளத்திலிருந்தும் தன்னைக்
       காணாதிருக்கும் நிலையிலேயே "தன்னையறிதல்"
       தொடங்குகிறது; ஒருவனிலிருந்து அசலான மனிதன்    
       எழத் தொடங்குகிறான்!

மா.கணேசன்/ 21.04.2016

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...