Thursday, 24 November 2016

நானின்றி அமையாது உலகு!


















"நான்" என இங்கு  நான் குறிப்பிடுவது என்னைத்தான்!
ஏனெனில், "நான்" என என்னை நான் உணர்வது போல
இங்கும், இப்பிரபஞ்சத்தில் வேறெங்கும் எவரும் எதுவும்
இல்லை!

"உலகம் தான் அனைத்தும் என்பதுதான் விஷயம்!"
என்றனர் அதிகம் சிந்தித்த அறிவுஜீவிகள் பலர்!
"நான் இருக்கையில் உலகம் இல்லை!" என்றேன் நான்.

உலகம் இல்லாத நிலையில் நீ எங்கிருக்கிறாய்? என்றனர்.
"முதன்முதலாக உலகம் இருந்த இடத்தில்!" என்றேன்.
"பாழாய்ப் போச்சு!" என்றனர்.

"ஆம், உடலும், உலகமும், உலகைச்சார்ந்த யாவும் முடிவில்
அப்படித்தான் போகும்; ஆனால் பேருணர்வைச் சேர்ந்த நான்
இருப்பேன் என்றென்றும்!" என்றேன்.

ஏனெனில், பேருணர்வு என்பது அழிவற்றதும் ஒருமையும்
முழுமையுமானதொரு தனி மெய்ம்மை!
நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது  என்பதைப்போல
நான் பேருணர்வைச் சேர்ந்தவன்!

நான் மிகவும் முக்கியமானவன் என்பது பிரபஞ்ச உண்மை!
அவ்வாறே நீங்கள் ஒவ்வொருவரும் ஆகலாம்!
என்னைப்போல உங்கள் உள்ளார்ந்த  ஒப்பிடவியலா மதிப்பை
நீங்களும் உணர்ந்தறியும் பொழுது!

அட, சிந்தித்தறியாமல் வேடிக்கை பார்க்கிறவர்களே, நான்
உணர்ந்தது போல நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால்
நீங்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் இருப்பீர்கள், பேசுவீர்கள்!
ஆகவே சிந்திக்கத்தொடங்குங்கள் உடனே!

திடீரென கண் விழித்துப்பார்த்த போது நான் ஒரு ஏணியின் மீது
உயரே இருக்கக்கண்டேன். ஆம், ஏணியின் பகுதியாய், அதன் ஒரு
படியாய்!  கீழே பார்த்தேன், பல படிகள், அடியற்ற ஆழத்திற்குச்
செல்வதாய்த் தெரிந்தன!

மேலே அடுத்த படியில் ஏறலாமெனப் பார்த்தேன் - வேறு
படிகள் ஏதும் இல்லை! நான் நிற்பதே உச்சிப் படியாகவும், நானே
அப்படியாகவும் இருப்பதை உணர்ந்தேன்!

பிறகு புரிந்துகொண்டேன், அந்த ஏணி என்னுடன் முடிந்துவிட
வில்லை; என்னைக்கடந்தும் செல்வதாயிருந்தது; அதாவது
நானே என்னைக்கடந்து வளர்ந்து சென்றிடவேண்டும்!
நானின்றி இறுதி-மெய்ம்மை எங்ஙணம் நிகழும்?

அது மட்டுமல்ல, என்னைச்சுற்றிலும், என்னைப்போலவே
பலரும் நிற்கக் கண்டேன்! இது, ஒரு மரத்தில் பல பிஞ்சுகள்
காய்த்திருப்பதைப்போல இருந்தது!

என்ன? திடீரென ஏணி மரமாக மாறிவிட்டது எனக் குழம்பாதீர்!
உவமைகள் மாறுவது உலகம் நேர்-கோட்டுத்தன்மையில்
இல்லை என்பதைக்குறிக்கிறது!

உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, உண்மையில்
நானின்றி அமையாது உலகு! நீங்கள் சொல்லலாம் எத்தனையோ
கோடானுகோடி பேர் பிறந்து வாழ்ந்து மாண்டுபோயினர் என்று!

'உலகம் மட்டுமே நிலையானது' எனவும் சொல்வீர்கள்! ஆனால்,
நிலையானது, நீடித்து நிலைப்பது என்பதை நீங்கள் காலத்தைக்
கொண்டு அளவிடுகிறீர்கள்! இது ஒரு மகா தவறு!

ஏனெனில், காலம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை
உங்களால் அறியமுடியுமா? காலம்  என்பதே ஒரு காலாதீதத்
தனி-நிலைப் புள்ளியில் தோன்றியது தானே!

ஒரு கணக்குப்படி காலம் தோன்றி ஆயிரத்து ஐந்நூறு கோடி
ஆண்டுகள் ஆகின்றது! ஒரு வேளை இன்னும் ஆயிரத்து ஐந்நூறு
கோடி ஆண்டுகள்வரை காலம் நீடிக்கலாம்!

அதுவரை இந்த பூமி நிலைக்கவேண்டுமே? பூமி நிலைக்க
சூரியன் நிலைக்கவேண்டுமே! சூரியன் நிலைக்க பால்-வீதி
மண்டலமும் மொத்தப்பிரபஞ்சமும் நிலைக்கவேண்டுமே!

கவலை வேண்டாம்! நான் இப்போது இங்கு இருக்கிறேன்!
ஆகவே, நான் இருக்கும்வரை அனைத்தும் நிலைத்திருக்கும்!
நான் சென்றபிறகும், என்னைப்போன்ற பிற தனிமனிதர்களுக்காக
உலகம் இருக்கும்! காய்த்துக்குலுங்கும் மரம் உடனே பட்டுப்போகாது!

ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பும் என்னுள் குவிந்தது மையம் என!
ஏனெனில், நான் விசேடமானதொரு உணர்வாம்சம் என்பதால்
மட்டுமல்ல; என்னைக் குவியாடியாகக்கொண்டு என்வழியே
அந்த இறுதி  ஒருமையாம் பேருணர்வை அடைந்திடவே!

எனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்புறவு விசித்திரமானது!
நான் இல்லாமல் பிரபஞ்சம் இல்லை; பிரபஞ்சம் இல்லாமல்
நானில்லை! பிரபஞ்சம் விருட்சமானால் நான் அதன் கனி!
என்னுள்ளே விருட்சத்தின் மூலவித்து!

விருட்சத்தைப் பெரிதெனப் போற்றும் உணர்வுப் பிஞ்சுகளா!
வித்தைத் தன்னுள் கொண்ட கனியாக நீங்கள் மாறுவது எப்போது?
வித்தில்லாமல்  விருட்சம் இல்லை என்பது ஏன் புரியவில்லை ?
வித்திற்கும் வித்திற்கும் இடையே தோன்றும் நிகழ்வே விருட்சம்!
வித்துதான் மூலமும் முடிவுமான ஒரே நிஜம்!

பிரபஞ்சம் என்னைக்கொண்டுவந்தது; நான் பிரபஞ்சத்தை
முழுமையடையச் செய்கிறேன்! பிரபஞ்சம் எனக்காகவே
இருக்கிறது என்று சொல்வது படுஅபத்தமானது; நானும் அதற்காக
இல்லை; ஏனெனில் நாங்கள் இரண்டல்ல ஒன்றே!

நாங்கள் இருவரும் இணந்திருப்பது சாரமான வேறொன்றுக்காக!
வித்து விருட்சமாக விரிவதும், விரிந்தவிருட்சம் வித்தினுள்
அடங்குவதும், என்ன விநோதம், இதற்குப்பெயர்தான் பரிணாமம்!
ஆனால், வித்தின் மகத்துவம் விரித்துச் சொல்லவியலாதது!

நான் இப்பிரபஞ்சத்தினுள் இருப்பது எவ்வளவு உண்மையோ,
என்னுள் பிரபஞ்சம் இருப்பதும் அவ்வளவு உண்மையே!
நான் உதயமாகிய போது பிரபஞ்சத்தின் பகுதியாக இருந்தேன்!
நான் தலையெடுத்ததும் பிரபஞ்சம் எனது பகுதியாயிற்று!

பிரபஞ்சத்தின் பகுதியாக நீடிக்கும்வரை, மனிதா, உனக்குச்
சுதந்திரமில்லை! பிரபஞ்சத்தின் முழுமையாக மாறும் மனிதனே
சுதந்திரன்! பிரபஞ்சம் விருட்சமானால், மனிதா,  நீ அதில்
எத்தகைய பகுதி, என்பதைக் கண்டுபிடி!

நீ, அதன் ஒரு கிளையா? இலையா? பூவா? அல்லது பிஞ்சா?
பிரபஞ்சப்பிஞ்சு நீ எனில், உடனே காயாகி, முற்றிக் கனியாகிடு!
முழுமையாதல் மட்டுமே உனது முக்திக்கு ஒரே வழி!
நீ எங்கிருப்பினும், எதனுடைய பகுதியாகவும் இராதே!

நதியாக நீ இருந்தால் உடனே சமுத்திரம் சென்று சேர்ந்திடு!
ஏணியின் படியாக நீ இருந்தால் ஏறிக்கடந்து விண்ணில் தாவிடு!
வட்டத்தினுள் நீ ஒரு புள்ளியாக இருந்தால் அதன் மையமாகிடு!
அரை-உணர்வாய் நீ இருந்தால் முழு-உணர்வாகிடு!

நானின்றி அமையாது உலகு; எனது அறிதலுக்கும் அனுபவத்திற்கும்
வெளியே உலகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்!
அறிபவன்  நானின்றி சட-உலகம் தன்னைத் தானே அறியுமோ?
தன்னையறியாத இருப்பு இருந்தென்ன பயன்?

அட மனிதா!  பேரண்டம் பெரிது என்று சொல்லாதே!
அளவற்றதை அளக்கும் அளவுகோல் எது?
ஏனெனில், உலகை உணர்வு கொள்ளும் மனித-உணர்வே
உலகை, இப்பேரண்டத்தை விடப் பெரியது!

உலகம் என்பதென்ன? பௌதீக விஞ்ஞானிகளது பார்வையில்
அது வெறும் அணுத்துகள்களின் தொகுப்பே, இயக்கத்திலுள்ள
சடப்பொருளே! ஆனால், அவர்கள் அறிந்தது உயிரற்ற வெறும்
சடப்பிரபஞ்சத்தை மட்டுமே! பாவம், அவர்களது பார்வை
(பௌதீக) உலகை மையமாகக்கொண்டது!

ஆனால், எனது பார்வை என்னை மையமாகக் கொண்டது!
பிரபஞ்சம் கனபரிமாணத்தில் பெரிதாக இருப்பதில் எனக்கு
ஆட்சேபனையில்லை! இருந்துவிட்டுப்போகட்டும்! இன்னும்
அது என்றென்றும் நீடித்து நிலைப்பதாகவும் இருக்கட்டும்!
அது என்னுடைய பிரச்சினை அல்ல!

எனது வாழ்-காலம் ஒப்பீட்டளவில் மட்டுமே குறுகியது;
எனக்கு அதுவே போதுமானதிற்கும் அதிகமானது!
எவ்வளவு வருடங்கள் உயிரோடிருக்கிறேன் என்பதல்ல
எவ்வளவு விரைவாக எனதிலக்கை, முழு-உணர்வை
அடைகிறேன் என்பது மட்டுமே முக்கியமானது!

எல்லோரும் உலகைப் பிரதானப்படுத்துகிறார்கள்!
நான் என்னைப் பிரதானப்படுத்துகிறேன்!
என்வழியாக அடையப்படவேண்டிய உன்னத இலக்கிற்காக!
ஏனெனில், உலகின் உட்கிடக்கையை புரிந்தவன் நான்!

காலம், விரிவடையும் வெளி, அணுத்துகள்கள், நிறை, ஈர்ப்புவிசை
மின்காந்தவிசை, பொருள், எதிர்ப்பொருள், பல-பிரபஞ்சம்,
பத்துக்கும் மேற்பட்ட பரிமாணங்கள், மாறாமதிப்பளவை,வெற்றிடம்
ஒளி-வேகம், கருந்துளை, வெடித்துச் சிதறும் நட்சத்திரங்கள்
என விஞ்ஞானிகள் எதையாவது கதைக்கட்டும்!

ஒன்றுமில்லாததிலிருந்து வந்தது உலகம் என்பார் - ஒன்றையும்
அறியார்! பருப்பொருளே பரம்பொருள் என்பார்- பொருளின் பொருள்
அறியார்! கடவுள் படைத்தார் என்பார்- கடவுளைக்கண்டாரில்லை!
உலகம் மாயை என்பார்- உலகில் இருந்துகொண்டே!
உலகம் மட்டுமே நிஜம் என்பார்- தன் நிஜம் அறியாதார்!

அவர்கள் போகாத ஊருக்கு வழி தேடுகிறார்கள்! ஊழிக்காலம்வரை
தேடிக்கொண்டேயிருப்பார்கள்! அவர்கள் உலகையும் அறியார்,
மனிதனையும் அறியார், வாழ்க்கையையும் அறியார்!
நான் நேர்வழியைச் சொல்கிறேன்! மனிதா, நீ உன்னையறிவதே
அனைத்தையும் அறிவதாகும்!

மனிதா! உலகம் உன்னை வந்தடைந்ததும் அதன் பணி முடிந்தது!
இனி உலகம் உனது நிழல்! நீயே உலகின் புதிய பரிமாணம்!
உன்னுடன் தொடங்குகிறது புதியதொரு பரிணாமம்!
உலகம் தனக்காக இல்லை; மனிதா! நீயும் உனக்காக இல்லை!
பின் எதற்காக நீ இருக்கிறாய் என்பதன் உண்மையைக்
கண்டுபிடித்திடவே நீ  இருக்கிறாய்!

மனிதா! கல், மண், மற்றும் நீரால் ஆன உலகில் அல்ல நீ வாழ்வது!
மாபெரும் புதிருக்குள் அல்லவா நீ வாழ்கிறாய்!
ஆகவே அனைத்தையும் புதிரின் சொற்களுக்கு மாற்றிக்காண்!
இதுவே புதிரை விடுவிக்கும் எளிய வழி!

அழியும் சதையும் எலும்பும் ரத்தமும் சேர்ந்த உடலல்ல நீ!
அனைத்தையும் ஊடுருவி உய்த்துணரும் உணர்வு நீ!
ஆகவே அனைத்தையும் உணர்வின் சொற்களுக்கு மாற்றிடு!
அனைத்தையும் உணர்வு வயப்படுத்திச் செரித்துவிடு!

இதுவே உலகைக் கடந்திட உதவும் உன்னத உபாயம்!
பிரபஞ்சம் அது நீ பிறந்த கூடு, அது உனது அசலான வீடு அல்ல!
ஆகவே நீ உணர்வுச் சிறகுகளை விரித்துப் பறந்து வீடடைந்திடு!

நானின்றி அமையாது உலகு! நான் தோன்றியதும் பின்தங்கிற்று
உலகு! ஏனெனில், நானே உலகின் உயர் அவதாரம்!
நானின்றி அமையாது மானிடம்! நானே பிறர்க்கு ஆதாரம்!

என்னைப்பொறுத்தவரை உலகா? நானா? என்றால்
சந்தேகமின்றி நானே முக்கியமானவன்!
உலகைப்பொறுத்தவரையிலும் நானே முக்கியமானவன்!
இல்லாவிடில், உலகம் நானாக ஆகியிருக்காது!

பிரபஞ்சத்திற்கு நான் மிகவும் முக்கியமானவன், ஏனெனில்
அதன் உள்ளார்ந்த விழைவையுணர்ந்து நிறைவேற்றுபவன் நானே!
உயிரும் உணர்ச்சியுமற்ற சடமாகப்பிறந்த உலகின் உணர்வு நான்!

பிரபஞ்சத்துடன்  உணர்வுபூர்வமாகத் தொடர்புகொள்பவனே மனிதன்!
மற்றெல்லோரும் கூண்டுக்குள் அடைபட்ட பயனில் ஜந்துக்களே!
நான் தோன்றும்வரை எல்லாம் உலகைப்பொறுத்ததாயிருந்தது!
நான் தோன்றியபிறகு  எல்லாம் எனது பொறுப்பாயிற்று!

உலகம், இயற்கை பருப்பொருள் என்று போற்றிப்பாடுபவர்கள்
உலகின் உட்கிடக்கையைப் புரிந்துகொண்டாரில்லை!
உலகைச் சடமாகக்கொள்பவர்கள் தாமும் சடமாய்ச் சமைந்தனர்!
அல்லது ஒருபடி மேலேறி விலங்கோடு விலங்காயினர்!

நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்கள் உணர்வும்
குழந்தையாக, அதாவது அகந்தையாக இருந்தது நியாயம்!
நீங்கள் வாலிபனாகி, வளர்ந்தமனிதனாகி, வயோதிகனாகியும்
உணர்வில்  நீங்கள் வளரவேயில்லை! உடலின் வளர்ச்சிக்கேற்ப
ஊதிப்பெருத்ததென்னவோ உங்கள் அகந்தை மட்டுமே!

உலகின் பகுதியாக எங்கோ ஒரு ஓரமாக இருக்காதீர்!
உலகின் சாரமாக அதன் கனியாக மாறுங்கள்!
உலகை விலங்குகள் சரணாலயமாக எண்ணி வாழாதீர்!
உயர் பேரறிவாலயமாக மாற்றிடுங்கள்!

பின்னிட்டுப் பார்க்காத பிரபஞ்ச இயக்கத்தின் நீட்சி நான்!
நானும் பின்னிட்டுப்பார்ப்பதில்லை! எதனுடனும் தேங்குவதில்லை!
எனது ஒரே நோக்கம், குறிக்கோள், இலக்கு,  இறுதி-ஒருமையே!

நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் உய்வு!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் மகிழ்வு!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் முழுமை!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் உண்மை!

மா.கணேசன் / நெய்வேலி / 11.11.2016
---------------------------------------------------------------------------

Monday, 21 November 2016

உணர்வு எனும் மகாபுதிர்!




கண்ணாடி இல்லாமல்  உங்கள் முகத்தை நீங்கள் பார்க்கமுடியாது!
ஆனால், எதைக்கொண்டும் உங்கள் உணர்வை நீங்கள் புரிந்து
கொள்ளமுடியாது- யாதொரு விளக்கமுமுன்றி நேரடியாக உணர்வை
உணர மட்டுமே முடியும் - ஏனெனில், உணர்வு தான் நீங்கள்!

உணர்வைக்கொண்டு பௌதீகப்பிரபஞ்சம் மொத்தத்தையும் அதிலுள்ள
அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்-ஆனால், அப்பௌதீகப்
புரிதலைக்கொண்டு உணர்வைப்புரிந்து கொள்ள ஒருபோதும் இயலாது!
புதிர்களனைத்தையும் விடுவிக்கும் புரிந்தும் புரியா மகாபுதிர் உணர்வு!

ஏணியும் அதன் படிகளுமான இயற்கை இறுதியாக எட்டும் சூக்குமவெளி!
"நீங்கள் யார்?", "உணர்வு என்றால் என்ன?" எப்படிக்கேட்டாலும் ஒன்றே!
எப்படிக்கேட்டாலும் பதிலளிக்காத மௌனமே உணர்வும் பதிலும்!
யாவுமாகியதும் யாவற்றையும் கடந்து நிற்பதும் உணர்வே!

உணர்வே இயற்கையின் மூலகாரணமும் அதன் இரகசிய இலக்கும்!

                 * * * * *
"உணர்வு" (Consciousness) என்றால் என்ன? எனும் கேள்வி எளிமையான
தாகத் தோன்றலாம்;  ஆனால்  அது  அத்தகையதல்ல!  உணர்வு  என்பது மிக
நெருக்கமானதாகவும், பரிச்சயமானதாகவும் தெரியும் அதே நேரத்தில், அது
மிக அந்நியமானதும், தொலைவானதும் ஆகும்! உணர்வைப்புரிந்துகொள்ள
உணர்வைப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி.  ஆகவே,  அதிலிருந்து  பிரிந்து
நின்று நாம் அதை  ஆராய வியலாது. ஏனெனில், உணர்வு தான் நாம்! நம்மை
இயற்கையுலகின்     நீட்சியான   உடலாகப்  பாவித்துக்கொண்டு  உணர்வை
ஆராயப்புகுகிறோம்;   ஆனால்,   உடலாகத் தன்னைப் பாவிப்பதும்   உணர்வு
தான்,  அதாவது  மனித  உணர்வின் பிரமை,  அல்லது  தவறான அடையாளப்
படுத்துதல் தான்!

பல   நூற்றாண்டுகளாக    தத்துவவாதிகள்    உணர்வைப்     புரிந்து கொள்ள
முயன்று வந்துள்ளனர்;  விஞ்ஞானிகள் அப்பிரச்சினையை மறுத்துவந்தனர்,
பிறகு வேறுவழியின்றி, விஞ்ஞானதிற்குள்ளேயே எழுந்த  நிர்ப்பந்தங்களின்
காரணமாக,  இந்த 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகளும் களத்
தில் இறங்கியுள்ளனர் என்பதை ஒரு நல்ல செய்தியாகக் கொள்வது  என்பது
அவர்களது  ஆய்வு முடிவுகளைக்கொண்டே தீர்மானிக்கப்படமுடியும்!  ஏனெ
னில்,  உணர்வு  என்பது   ஒரு சோதனைக்குழாயில்  இட்டு  ஆய்வு  செய்திடக்
கூடியதொரு பொருள் அல்ல!

அதாவது,  ஒரு  அழகிய  சிற்பம் எத்தகைய பொருளால், அதாவது,  கருங்கல்,
பளிங்கு,   அல்லது,  வெண்கலம்,  அல்லது   வேறு எத்தகைய   உலோகத்தால்
ஆனது       என்பதை     விஞ்ஞானத்தின் மூலம்   எளிதில்    கண்டறிந்திடலாம்.
ஆனால்,  அச் சிற்பத்தின் "அழகு"  பற்றிய எவ்வித புரிதலையும்  விஞ்ஞானத்
தின்  மூலம்  கண்டறியவியலாது!  ஏனெனில்,  "அழகு" என்பது அக-வயமான
தொரு   அனுபவம்   என்பதால் அல்ல.  மாறாக, ஒரு  சிற்பத்தின் அழகு,   அது
எத்தகைய கல்  அல்லது   உலோகத்தால்   ஆக்கப்பட்டிருந்தாலும்,     அக் கல்,
அல்லது      உலோகத்தினுடைய   பண்புகளின்   வெளிப்பாடு    அல்ல!     ஆம்,
"உணர்வு"    என்பது    சிற்பத்தின்    அழகு போன்றது, அது மனித மூளையின்
செயல்பாட்டினால் வெளிப்படும் ஒரு விளைவு அல்ல! மாறாக,  மனிதமூளை
யின் செயல்பாடுகளைக் கொண்டு எட்டப்படும் ஒரு  விசேடமான இருப்பு-நிலை
அல்லது  பரிமாணம் ஆகும்!   அதாவது,   உணர்வு   என்பது    மூளையையோ,
அதன் செயல்பாட்டையோ சார்ந்திருக்கும் ஒன்றல்ல! மாறாக,  மூளையைக்
கொண்ட மனிதஜீவியும், மனிதஜீவியாக எழுந்த பருப்பொருள் பிரபஞ்சமும்
தான்  உணர்வைச்சார்ந்துள்ளன! இல்லாவிடில், பிரபஞ்சத்தின் பிறப்பு  நிகழ்
வாக     விஞ்ஞானிகளால்   குறிப்பிடப்படும்  பெரு-வெடிப்பிலிருந்து    சக்திப்
பொழிவாகவும்   அணுத்துகள்களாவும்  வெளிப்பட்ட  பிரபஞ்சம்,  1500 கோடி
ஆண்டுகளின்   பரிணாம   வழிமுறையின்   விளைவாக  இன்று உணர்வுள்ள
மனித ஜீவியாக   ஏன்  உருப்பெற்றிடவேண்டும்?   ஏனெனில்,   உணர்வு தான்
பரிணாம இயற்கையின் ஒரே இலக்கு ஆகும். அதாவது முழுமையானதொரு
உணர்வில்தான் பிரபஞ்சத்தின் உய்வு அல்லது முழுமை அடங்கியுள்ளது.

உண்மையில், உணர்வு என்பது பிரபஞ்சத்தின் மையத்துவமான (Central)
அம்சம் ஆகும்.   அதுவே பிரபஞ்சத்திற்கு அர்த்தம் அளிக்கும் அம்சமுமாகும்!
ஆனால், உணர்வாகத் தம்மை உணர்ந்திடவேண்டிய மனிதஜீவிகள், தம்மை
உடலாகவும்,   தாம்,   உலகை,  இயற்கையைச் சார்ந்திருப்பதாகவும்  கருதிக்
கொண்டிருக்கிறார்கள்  என்பது  மிகவும்  துரதிருஷ்டவசமானதாகும்!   இந்த
தவறான  புரிதலிலிருந்து  மனிதஜீவிகளை விடுவிக்கும் நோக்கில்தான் இக்
கட்டுரை எழுதப்படுகிறது!  உணர்வில்லையெனில்  மனிதர்களும் தவளைக
ளைப்போலவே யாதொரு புரிதலுமின்றி வெறுமனே உயிர்வாழ்ந்துசெல்வர்.
ஆம்,  மனிதஜீவிகள் தம்மை உணர்வாக உணரவில்லையேல்,  அவர்களுக்கு
உய்வில்லை!

ஆனால்,  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும், அதிகம் சிந்திக்கும் தத்துவ
சிந்தனையாளர்களும்,       மெத்தப்படித்தவர்களும்,    அறிவுஜீவிகள்    என்று
சொல்லிக்கொள்பவர்களும்   மனிதஜீவிகளை   இன்னும்  விலங்குகளாகவே
காண்கின்றனர். மேலும், சில விஞ்ஞானிகள் உணர்வை மறுக்கவும்,அல்லது
அதை ஒரு முக்கியத்துவமற்ற உபரி விளைவு அல்லது உப-விளைவு எனவும்,
சொல்லிவருகிறார்கள்.   இன்னும்,  இயற்கைவாதிகளும், பொருண்மைவாதி
களும்,  சுருக்கல்வாதிகளும் உணர்வை இயற்கைப்படுத்திட (Naturaliza
tion),பல விஷயங்களில் அதுவும் ஒன்று என காண்பிக்க முயல்கின்றனர்.
நரம்பியல்துறை விஞ்ஞானிகள் உணர்வை மூளை நரம்புகளின் (Neurons)
அதாவது மூளையின் செயல்பாடுகளின் சொற்களில் விளக்கிவிடலாம் என்
கின்றனர்.  ஆனால்,  இப்பிரபஞ்சத்திலுள்ள எதைக்கொண்டும்  உணர்வைப்
புரிந்துகொள்ளவோ,  விளக்கிடவோ  முடியாது!  ஏனெனில், உணர்வு என்பது
ஒரு  அபௌதீக  மெய்ம்மை ஆகும்!   உலகம்,  இயற்கை  என்பது   பௌதீகப்
பண்பைக்கொண்டதாயிருப்பதால்,  இறுதி  உண்மை   அல்லது    மெய்ம்மை
என்பதும்  பௌதீகப் பண்பாகத்தான் அமையவேண்டும் என எதிர்பார்ப்பது
சிறுபிள்ளைத்தனமான தர்க்கமாகும்!

மேலும், பருப்பொருள் அல்லது  சடப்பொருள் என்பது,  உண்மையில்  என்ன?
அதன் மூலம், அல்லது அடிப்படை எது? பருப்பொருள் இருப்பதற்கான உரிய
நியாயம் அல்லது காரணம் என்ன? என்று எவ்விதக்கேள்வியும் ஆய்வுமின்றி
அதை அப்படியே அடிப்படையான நிஜமாகவும்,  முடிந்த முடிவான  நிஜமாக
வும்  ஏற்றுக்கொள்வது என்பது எவ்வகையில் விஞ்ஞானப்பூர்வமானதாகும்?
அப்படியே   சடப்பொருள்தான்   அடியும்   முடியுமான நிஜம் என்றே எடுத்துக்
கொள்வோம்!   ஆனால்,    அச்சடப்பொருள்   ஏன்,  எதற்காக  பரிணமிக்கவும்
உயிர் எனும் பண்பை நோக்கி உயர்ந்தெழவும்,அதையடுத்து, உணர்வு எனும்
பண்பை எட்டிப்பிடிக்கவும் வேண்டும்?

முக்கியமாக,   ஆரம்பம்   எதுவுமின்றி  சடப்பொருளால் நித்தியமாக இலங்க
முடியுமெனில், நிச்சயம் அதுவே மூல-மெய்ம்மையாக, "கடவுள்" எனச் சொல்
லப்படும் 'எல்லாம்வல்ல', எங்கும்நிறைந்த', எல்லாம்அறிந்த' மாய நிஜமாகத்
தான் இருக்கவேண்டும்!   இல்லாவிடில், எவ்வாறு,  உயிரற்ற,  உணர்ச்சியற்ற,
உணர்வுமற்ற சடப்பொருள்  ஒரு கட்டத்தில் உயிராகவும், இன்னொரு கட்டத்
தில்  (மனிதனுள்)  உணர்வாகவும்   உயர்ந்தெழ முடியும்?    இவ்வாறு   மாறிக்
கொண்டேயிருக்கும்  ஒரு பொருளை எவ்வாறு நாம்  "சடம்" எனும் பண்புடன்
பிணைத்து முடக்க முடியும்?   மேலும்,   உயிராகவும்,    மனித உணர்வாகவும்
எழுந்த  சடம்,  மனித  உணர்வைக்கடந்து   அடுத்தது என்னவாக எழக்கூடும்,
இன்னும்  இறுதியாக  அது   தன் பரிணாமப் பயணத்தில்,  எத்தகைய  பண்பு
நிலையை   எட்டக்கூடும்  என்பதைக்  கருதாமல்   எவ்வாறு பருப்பொருளின்
உண்மையான பண்பை, தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும்?   ஆக, பருப்
பொருள்     என்பது   இன்னதென்று   அறுதியிட்டுப்  புரிந்து கொள்ளாதவரை
பருப்பொருளும் ஒரு மாயப்பொருளே, புரியாப்புதிரே!

உண்மையில்  "பொருள்"   என்றால்  என்ன  என்று புரிந்துகொள்ளவேண்டும்
எனில்,   இறுதியாக  அது எத்தகைய பண்பாக,  அம்சமாக மாற்றமடைகிறது
என்பதைக்கொண்டே  முடிவு செய்திட முடியும்!  உண்மையில்  பொருள் என்
றால்   என்ன என்று புரிந்து கொள்வதும்,  "உயிர்"  மற்றும் "உணர்வு" என்றால்
என்ன  என்று   புரிந்து  கொள்வதும்   ஒன்று தான்!    ஏனெனில்,     மெய்ம்மை
என்பது ஒற்றைப்பண்பு கொண்ட ஏகமாகத்தான் இருக்க முடியும்;   பல்வேறு
பண்புகள்,   தன்மைகளின்  கலவையாக  விளங்க வியலாது!  ஆனால்,  அந்த
ஒற்றைப் பண்பு  எது,     அதை    எவ்வாறு    முடிவு செய்வது    என்பது குறித்த
விஷயத்தில்தான் தத்துவவாதிகள் பிரிந்து வேறுபட்டுப்போகிறார்கள்!

பரிணாமத்தில்  இதுவரை  வெளிப்பட்ட பண்புகளான  சடம், உயிர், உணர்வு
ஆகிய பண்புகளில் மேலானது, தலைமையானது எது என்று பார்த்தால், அது
நிச்சயம் உணர்வாகத்தான் இருக்கமுடியும்! மேலும் அந்த உணர்வைத்தான்
பரிணாமம் தன் இலக்காகக்கொண்டு 1500 கோடிஆண்டுகள் நெடிய பிரயத்
தனங்களின்    பலனாக   தற்போது   மனிதஜீவியினுள்   கண்டடைந்துள்ளது!

பரிணாமத்தில்   உணர்வு   என்பது   வெளிப்படாதிருந்தால்,  "பொருள்  தான்
முதல்",  இல்லை,  "கருத்துதான் முதல்" என்பன போன்ற தத்துவ சர்ச்சைகள்
எதுவும் எழாதிருந்திருக்கும்!  நாமும்  தவளைகளைப்போல வாழ்ந்துகொண்
டிருப்போம்!   இன்னும்,   உயிர்ஜீவிகளும்   தோன்றாதிருந்தால், வெறும் சடப்
பொருள் மட்டும் அநாமதேயமாக   தம் எந்திரத்தனமான பௌதீக  இயக்கத்
தில் ஈடுபட்டிருந்திருக்கும்!  

இல்லை, இக்கூற்றுகள்  யாவும் கற்பனை பூர்வமானவை! ஏனெனில், இப்பிர
பஞ்சத்தில்,   உயிர்   உள்ளது,   உணர்வுள்ள  மனித ஜீவியும்  உள்ளான்!   சடப்
பொருளும்     வெறும்   சடப்பொருளாக   அநாமதேயமாக    இருக்கவில்லை!
ஏனெனில்,   பொருண்மைவாதிகள்    எண்ணுவது  போல   பொருள்   என்பது
சுதந்திரமான தனிப்பொருள் அல்ல;  மாறாக, பொருளானது  பெரிதும்  நிர்ப்
பந்தத்திற்குட்பட்ட (Constrained)பொருளே யாகும்!   மேலும்,  பரிணாமம்
என்பதும்  ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டதொரு   இலக்கு   நோக்கி  முடுக்கி
விடப்பட்டதொரு   வழிமுறையே யாகும்!   எவ்வாறு,    சமுத்திரமே    நதியின்
இலக்கு   என   முன்-குறிக்கப்பட்டதாக  உள்ளதோ,   அவ்வாறே,     உணர்வே
பரிணாமத்தின்   இலக்கு   என   முன்-குறிக்கப்பட்டதாகும்!  அதே நேரத்தில்,
எவ்வாறு, சமுத்திரத்தைச் சென்றடையும் நதியின் பாதையானது முன்குறிக்
கப்படாதிருக்கிறதோ அவ்வாறே பரிணாமம் முன்னேறிச் செல்லவேண்டிய
பாதையும் முன்குறிக்கப்படவில்லை!   இந்த  அம்சம் தான் பரிணாமத்திற்கு
சுவைகூட்டுவதாக, எதிர்பார்க்கவியலாத , முன்னறியமுடியாத தன்மையை
தருவதாயுள்ளது!   எப்படி   எந்தப்பாதையில்  சுற்றிவளைத்துச் சென்றாலும்,
நதி இறுதியில் சமுத்திரத்தைச் சென்றடைந்தேயாக வேண்டும்!  அவ்வாறே,
பரிணாமத்திற்கு  உட்பட்ட  சடப்பொருளானது சென்றடையக்கூடிய, சென்ற
டைந்தேயாகவேண்டிய ஒரே இலக்கு உணர்வு என்பது மட்டுமேயாகும்!

ஒருவகையில், பரிணாம நிகழ்வுமுறையானது தற்போது கிட்டத்தட்ட தனது
இலக்கு நிலையை நெருங்கிவிட்டது எனலாம்.  அதாவது  சடப்பொருளானது
தனது   நெடிய   பரிணாமப் பயணத்தின்   தற்போதைய   கட்டத்தில்,  மனித
உணர்வை மட்டுமே எட்டியுள்ளது. அதாவது, மனிதஉணர்வு என்பது உணர்வு
நிலையின் ஒரு தொடக்கமே தவிர, அதுவே உணர்வின் முழுமை அல்ல! நதி
யானது முகத்துவாரத்தை மட்டுமே தொட்டுள்ளது, இன்னும் அது சமுத்திரத்
தைச்சேரவில்லை!

இப்போது,  சடப்பொருளை  ஒரு கருவியாக,  ஊடகமாகக் கொண்டு இயங்கி
வருகின்ற இயற்கை அல்லது பிரபஞ்சம் எனப்படும் பரிணாமநிகழ்வுமுறை
யின்  முழுமையும்,  அதாவது,   சடப்பொருளின் உய்வும்,  யாவும்   ஒவ்வொரு
மனித ஜீவியினுடைய உணர்வுப்பரிணாமத்தையே சார்ந்துள்ளன! இன்னும்,
ஒவ்வொரு   மனிதனின் உய்வும்,   முழுமையும்   ஒவ்வொருவரும்   அடையக்
கூடிய உணர்வின் முழுமையையே, "முழு-உணர்வை"யே சார்ந்துள்ளன! இது,
எதற்கு ஒப்பாக இருக்கிறது என்றால்,  ஒரு மரத்தில் நிறைய காய்கள் காய்த்
துள்ளன. அதில், ஒவ்வொருகாயும் நன்கு முற்றிக்கனியாக மாறுவதில் தான்
ஒவ்வொரு காயின் நிறைவும், முழுமையும் அடங்கியுள்ளன! அதேநேரத்தில்,
அம்மரத்தின்  முழுமையும்   ஒவ்வொரு காயும்  கனியாவதில் தான்  உள்ளது.
ஏனெனில்,  கனிகள் தான்   ஒரு மரத்தின்   முழுமையைப்   பிரதிநிதித்துவம்
செய்யும் அம்சங்களாகும்!   அதாவது,   மரமானது  தன்  ஒவ்வொரு கனியின்
வழியாகவும்தான் தன்னைக் கடந்து செல்வதாயுள்ளது!

முக்கியமாக,    ஒரு மரத்திற்கும்  அதன் காய்கள் அல்லது கனிகளுக்குமான
தொடர்புறவைச் சரியாகப்புரிந்து  கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெ
னில்,    இதைப் போன்றதே,  உலகம்  அல்லது  பிரபஞ்சத்திற்கும்,  மனிதஜீவி
களாகிய நமக்குமான தொடர்புறவும் ஆகும்!  மனிதன் என்பவன் பிரபஞ்சத்
தின்   முக்கியத்துவமற்ற   ஏதோவொரு  ஓரத்திலுள்ள பகுதி அல்ல! மாறாக,
ஒரு மரத்தின்  காய்கள்,  கனிகள்  வகிக்கும்  மிக   மையமான  இடத்தையும்,
பாத்திரத்தையும்   கொண்டவனாவான்!    ஆம்,  பிரபஞ்சவிருட்சத்தின்  காய்
களையும்,  கனிகளையும்  போன்றவன்  மனிதன்!   ஆனால்,  துரதிருஷ்டவச
மாக,  மனிதர்கள் எல்லோரும் தாங்கள் உண்மையில் "உணர்வு" தான் எனும்
உண்மையை உணர்ந்தவர்களாக இல்லை!  தாங்கள் உண்மையில் பிரபஞ்ச
மளாவியவர்கள் என்பதை உணராதவர்களாக,   அதாவது,  பரந்த பிரபஞ்சப்
பரிணாமத்திட்டத்தில் தமது இடம், பங்கு, பணி,பாத்திரம்,பொறுப்பு,மற்றும்
முக்கியத்துவம் ஆகியவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக இல்லை!

மாறாக,  மனிதர்கள் இன்னும் தங்களைத் தங்களது  உடலுடன் அடையாளப்
படுத்திக்கொண்டு,   பெரிதும்    உடல்-ஜீவிகளாகவே  உணவு,   உடை,  உறை
விடம், உறவுகள் என உயிர்வாழ்ந்து செல்கின்றனர்!  உணர்வின்  ஜீவிகளாக
இன்னும் எழவில்லை! மனிதர்கள் இன்னும்  தங்களைப்பற்றிய  உணர்வுக்கு
வரவில்லை!  மனிதர்களுக்கு   "சுய-உணர்வு"   இருக்கிறது   என்பது  வெறும்
பெயரளவுக்கு மட்டுமேயுள்ளது. மனிதர்களது சுய-உணர்வு என்பது, சிறிதும்
ஆழமான வகையில்   சுயத்தைப் பற்றியதாகவும்   இல்லாமல்,   உணர்வைப்
பற்றியதாகவும்  இல்லாமல்,  மிகவும்  மேலோட்டமானதாகவே உள்ளது!

விலங்கினத்திலிருந்து  தோன்றிய  மனிதஜீவியானவன் உணர்வு பெறுவதற்
கான அடிப்படை அம்சமான நன்கு வளர்ச்சிபெற்ற மூளையுடன்  வந்தாலும்,
உணர்வை உணர்வு கொள்வதும்,  உணர்வில் ஆழ்ந்து  நிலைப்பதும்,  மேலும்
மேலும்  உணர்வில் பெருகி உயர்வதும், அவன்  எந்த அளவிற்கு  உணர்வுக்கு
வருகிறான் என்பதைப்பொறுத்த விஷயமாகும்! பொதுவாக மனிதர்களுக்கு
"தாம் இருக்கிறோம்!" என்பது தெரியும்;  ஆனால், தாம் ஏன், எதற்காக   இருக்
கிறோம்? உண்மையில் தாம் யார்? வாழ்க்கை என்பது வெறும் உயிர்பிழைத்
தல் மாத்திரம்தானா?   வாழ்க்கையின்  உண்மையான  குறிக்கோள், இலக்கு
என்ன? என்பதெதுவும் தெரியாது! இக்கேள்விகளை அவர்கள் கேள்விப்பட்டு
இருப்பார்களா  என்பதுகூட சந்தேகமே!   இவை   வெறும்  கேள்விகள் அல்ல!
இவை  சாதாரண மனித உணர்வைப்   பேருணர்வாக  மாற்றமுறச் செய்யும்
இரசவாத மந்திரங்கள் ஆகும்!

உண்மையில்,   "உணர்வு"    என்றவுடன்   விஞ்ஞானிகளும்,   உணர்வு பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நரம்பியல்துறை வல்லுனர்களும், தத்துவவாதி
களும்;  எண்ணங்கள், உணர்ச்சிகள், மனக்காட்சிகள், அறிநிலை, அனுபவம்,
மூளை  செயல்படும் முறை  ஆகியவற்றின் சொற்களில் உணர்வை விவரிக்
கும் நெடும்பணியில் இறங்கிவிடுகின்றனர்!  உண்மையில்  இவ்வம்சங்கள் :
எண்ணங்கள், உணர்ச்சிகள், மனக்காட்சிகள், அறிநிலை, அனுபவம்,  இன்ன
பிற  யாவும்    உணர்வின்  வெளிப்பாடுகளே,   உணர்விலிருந்து   பெறப்படும்
அம்சங்களே தவிர, இவை வேறு, மிகத்துல்லியமாக  உணர்வு  என்பது வேறு!

பரவலாக,   விஞ்ஞானிகள்  மற்றும்    தத்துவ சிந்தனையாளர்கள்  மத்தியில்
நிலவும்   ஒரு   கருத்து  என்னவென்றால்,   "உணர்வைப்பற்றிய விஞ்ஞானம்"
(The science of consciousness)என்பது  முரண்பாடானது,  பொருத்த
மற்றது என்பதேயாகும்!   இக்கூற்றில் உண்மையில்லாமலும்  இல்லை. அதே
வேளையில், இக்கூற்று முழுமையான உண்மையும் இல்லை! அதாவது  விஞ்
ஞானம்  தொடர்ந்து  தனது  பழைய,  எந்திரத் தனமானதும், சுருக்கல் வாதத்
தனமானதும், பொருண்மையானதுமான அணுகுமுறையில் தொடரும்வரை
அதனால் ஒருபோதும் உணர்வைப்புரிந்துகொள்ள இயலாது! அதேநேரத்தில்
உணர்வைப் புரிந்துகொள்ளாவிடில் விஞ்ஞானம் முழுமையடையாது!

மேலும், விஞ்ஞானத்திற்கும், தத்துவத்திற்கும் இடையே நிலவிவரும்  எதிர்ப்
புணர்வும், பகைமையும் ஆரோக்கியமானதல்ல!  இரண்டும்  தம்தம் அணுகு
முறையில் வேறுபடுகின்றனவேதவிர, இரண்டிற்கும் உண்மையை அறிவது
ஒன்றே இலக்குஆகும்! கலை, கவிதை, இசை, இலக்கியம், சமயம், ஆன்மீகம்
இவையும்  அறிதல் முறைகளே;   இவை  இயங்கும் தளங்கள் மட்டுமே வேறு
வேறு ஆகும்.  அறிதல்முறைகள் வெவ்வேறாயினும், அவை பரஸ்பரம் தமது
கனிகளைப்  பரிமாற்றம்  செய்து கொள்ளும் வகையில்,   திறந்த   அமைப்பு
களாகத் திகழ்வது அவசியமாகும்!

விஞ்ஞானம்   என்பது   புறவயமானது (objective), பொதுப்படையானது
(public) எனப்படுகிறது!   அதே வேளையில்,    உணர்வுப்பூர்வ  அனுபவம்
என்பது அகவயமானது (subjective)மற்றும் தனியொருவருக்குச்சொந்த
மானது   அதாவது,   அந்தரங்கமானது (private) எனப்படுகிறது!   ஆகவே,
"உணர்வைப்பற்றிய விஞ்ஞானம்" (science of consciousness)என்பது
முரண்பாடானது,  பொருத்தமற்றது  என்பதாக முழங்கப்படுகிறது!  ஆனால்,
இக்கூற்று  தன்  தர்க்கத்தைத் தொலைத்துவிட்ட குருட்டுவாதமாகும்!  ஏனெ
னில்,     "உணர்வு"   என்பது அதன் அடிப்படையிலும், அதன் சாரத்திலும் அக
வயமானது  என்பதுதான்  உணர்வைப்பற்றிய  மையமான  உண்மையாகும்!
மேலும், அகவயமான அம்சங்கள், மனம், உணர்வு, அனுபவங்கள் ஆகியவை
புறவயமான,   பொருண்மையான   உலகின்    வெளிப்பாடுகள்   மாத்திரமே;
ஆகவே, அவை பொருண்மையான அம்சங்களைப்போன்ற நிஜங்கள் அல்ல
எனும் கருத்து தவறானது. உண்மையில்,புறவயமானதும்,பொருண்மையான
துமான அம்சங்களையும், பொருட்களையும் விட அதிக  நிஜத்தன்மையுடை
யது (objective)மனம், அல்லது உணர்வு எனப்படும் அம்சமேயாகும்!   எவ்
வாறெனில்,  உணர்வும்,   அதன் கருவியுமான மனமும்   இல்லாமல்  நம்மால்
எதையும் அறிந்துகொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இயலாது!

அடுத்து,  விஞ்ஞானம்  என்பது என்னவாயிருந்தாலும்,  "எது"  இப்புறவுலகை,
பிரபஞ்சத்தைப் பார்க்கிறது, அறிகிறது, ஆராய்கிறது, அதைப்பற்றிய கோட்
பாடுகளை உருவாக்குகிறது என்றால், அது அகவயமான,  தன் சொந்த அனுப
வத்தை வேராகக்(Root)கொண்டதொரு மனித-உணர்வே ஆகும்! அதாவது,
"உணர்வு"  என்பது  என்னவாயிருந்தாலும்,  விவரித்து  விளக்கமுடியாததாய்
இருந்தாலும், விஞ்ஞானம் என்பது மனித - உணர்வின் ஒரு வெளிப்பாடல்லா
மல் வேறென்ன? விஞ்ஞானம் என்பது நேரே சொர்க்கத்திலிருந்து  இறங்கிய
ஒன்று அல்ல! அதாவது, மனித-உணர்வு இல்லாமல் விஞ்ஞானம் இருக்கமுடி
யாது!  அதாவது புறவயமானதும், கறாரான முறைமைகளைக்கொண்ட ஒரு
அறிதல் முறை எனப்படும் விஞ்ஞானம் உண்மையில் அகவயமான பார்வை
யின்  மிகவும் வித்தியாசமானதும், விபரீதமானதுமான  ஒருவகைப் பார்வை
ஆகும்!   எவ்வகையில்  விபரீதமானது என்றால்,  அகவயமானது   எனப்படும்
பரிமாணத்தை மையமாகக்கொண்ட உணர்வு என்பதையே அது அடியோடு
மறுக்கக்கூடியதாக,  'கிணறு வெட்ட கிளம்பியது பூதம்'   என்கிற வகையில்!

உண்மையில்,   எல்லாவித  அறிதலும்,  புரிதலும்,  பார்வையும்  அகவயமான
வையே! விஞ்ஞான அறிதல் முறையானது அது பிரதானமாக ஆராயக்கூடிய
பருப்பொருளின்பண்புகளாலும்,அதன் விதிகளாலும் பெரிதும் கட்டுப்படுத்
தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. ஆனால், உயிருள்ளஜீவியானது,அது என்ன
தான்  பருப்பொருளால்  ஆனதாயிருந்தாலும்,   அதன்  பண்புகள் முற்றிலும்
வேறானது என்பதால், பருப்பொருளின் பௌதீக விதிகளைக்கொண்டு ஒரு
உயிர்ஜீவியை புரிந்துகொள்ளவியலாது! அதாவது,  பௌதீக விதிகள்  வேறு,
உயிரியல் விதிகள் வேறு; அதைவிட, உணர்வியல் விதிகள் முற்றிலும் வேறு!

உயிரற்ற சடப்பொருட்களுக்கும்,  உயிருள்ள ஜீவிகளுக்கும் உள்ள வித்தியா
சத்தை, இடைவெளியை எவ்வித அறிதலைக் கொண்டும் விளக்கிப்போக்கி
விடமுடியாது!  அடுத்து,   சடப்பொருட்களுக்கும்,  உணர்வுள்ள  ஜீவிக்குமான
வித்தியாசம்  முன்னதைவிட  அனந்த-அளவு  பெரியது!  அதாவது,   உணர்வு
(ஒரு முழுமையான உணர்வு) சடப்பொருளாலான ஒட்டுமொத்த  உலகையே
முடிவிற்குக்கொண்டு வந்துவிடக்கூடியதாகும்!

உண்மையில்,  "நமக்குப்புறத்தே வெளியே ஒரு உலகம் உள்ளது!"   என்பதும்,
"அது நம்மைவிடப்பெரியது!",    "நாம் அதன் முக்கியத்துவம் ஏதுமற்ற பகுதி",
"ஆரம்பமும் முடிவுமின்றி   இருப்பது  இந்தப் பௌதீகப்பிரபஞ்சம் மட்டுமே",
"உயிர்த்தோற்றம் விபத்துரீதியானது!",     " உணர்வு  என்பது   மூளைச்செயல்
பாட்டின் ஒரு விளைவு!", "மனிதஜீவி என்பவன் அடிப்படையில் அணுத்துகள்
களே!","மனிதனுக்கு யாதொரு நிரந்தரசுயமோ,சுதந்திரசித்தமோ இல்லை!"
"பரிணாமம்  குறிக்கோளற்றது; பிரபஞ்சம் அர்த்தமற்றது!"  என்பன போன்ற
கூற்றுக்களும், அர்த்தமற்றவை மட்டுமல்ல ஆபத்தானவையாகும்.

உண்மையில், அகம் xபுறம்,  அகவயம் xபுறவயம், உடல் xமனம், ஆகிய பிரச்
சினைகள்  மிகவும் நுட்பமானவையாகும்.  அவற்றை  நாம்  மிக நுட்பமாகப்
புரிந்துகொள்ளவேண்டும்.    முதலிடத்தில்,  அகம் xபுறம்  எனும்  பிரச்சினை
யைத் தோற்றுவித்தது மனிதனல்ல! மாறாக,  இயற்கையே, உலகமே ஆகும்.
முதன்முதலாகத்  தோன்றிய உயிர்ஜீவியுடன் தான் அகம் xபுறம்  எனும்  இப்
பிரச்சினை தொடங்கியது! அதாவது, இயற்கையுலகம் தான் தனது சடத்தன்
மையைக்கடந்துசெல்லும் பொருட்டு உயிர்ஜீவியாக அவதாரம் எடுத்தது!

இயற்கை மட்டும் உயிர்ஜீவியாக பரிணமிக்கவில்லையெனில், அகம்xபுறம்
எனும்    இந்தப் பிரச்சினை, பிளவு, பிரிவினை, முரண்பாடு  எழுந்திருக்காது!
ஆனால், இயற்கை அல்லது, பருப்பொருளால் பரிணமிக்காமல், மாற்றமடை
யாமல்  இருக்க முடியவில்லை!   உண்மையில்,   இயற்கையால்    தொடர்ந்து
இயற்கையாக   இருக்கமுடியாதபோது,  அதை  'இயற்கை'  என்று  சொல்வது
எவ்வகையில்  பொருத்தமானதாயிருக்கமுடியும்?  (காண்க :  "இயற்கையின்
இயற்கை என்ன?' 31.10.2016 @ vicharamarg.blogspot.in) மேலும்,   அது
எத்தகைய இயற்கையாக இருக்கும்?  அடிப்படையில், பிரச்சினை  உலகத்தி
னுடையதே;பருப்பொருளாலான உலகம் பரிணமிக்காமல் இருக்கமுடியாது!
அதற்கு  பருப்பொருளினுள்  உள்ளமைந்த  படைப்புப்பூர்வமான சுய-முரண்
பாடுதான் காரணமாகும்!

அதாவது, ஒரு மையமின்றி அநாமதேயமாக எந்திரத்தனமாக இயங்கிவந்த
அணுத்துகள்களான பிரபஞ்சமானது சுய-அமைப்பாக்க  (Self-Organiza
tion)வழிமுறையில்,   தனி-மையப்பட்டு (Individualization) எழுந்த
நிலை அல்லது அவதாரம் தான் உயிர்ஜீவி என்பதாகும்! உண்மையில்,  புறத்
திற்கும்,  அகத்திற்கும்;   உலகம்(சுற்றுப்புறம்) என்பதற்கும்,   உயிர்ஜீவிக்கும்
இடையே யாதொரு பகையோ, முரண்பாடோ, எதிர்ப்போ எதுவும்கிடையாது.
இத்தகைய நிலையை,   நாம்  "காரியவாத-முரண்பாடு"   என்றழைக்கலாம்!
இவ்வகையில் காணும்போது,   டார்வினின்   'உயிர்-பிழைப்புப் போராட்டம்',
'வலியதே வாழும்',   'இயற்கைத்தேர்வு'   ஆகியவை  தவறாகப் புரிந்துகொள்
ளப்பட்ட கோட்பாடுகளே எனலாம். 'இயற்கையே'  பரிணாமத்திற்கு  உட்படு
கிற,   மாறுகின்ற  இயல்பைக் கொண்ட பொருளாக, கருவியாக,  ஊடகமாக
இருக்கும் பட்சத்தில்,  அங்கே  எந்த இயற்கை,  எந்த இயற்கையைத் "தேர்வு"
செய்யும்??

முதல்  உயிரியான அமீபா (அல்லது ஏதோவொரு பாக்டீரியா) வின்  வருகை
தான் உலகை புறம் எனவும், அகம் எனவும் இரண்டாகப்பிரித்தது.   எனினும்,
தான் ஒரு "அக-ஜீவி" (அகத்தை,உணர்வை மையமாகக் கொண்ட ஜீவி) என்
பதை உணரும் அளவிற்கு அது தன் அகத்தில் (உணர்வில்) ஆழப்படவில்லை.
அதற்கு "சுய உணர்வு" எனும் அவ்வரிய அம்சம் இல்லை. ஆகவேதான், அந்த
அமீபா தான், நெடிய பரிணாமப் பயணத்தின் வழியாக தற்போது சுயவுணர்
வையுடைய மனித ஜீவியாக எழுந்துள்ளது.  ஆம்,   அகம் என்பது  அதற்குரிய
உணர்வுப்பரிமாணத்துடன் முதன்முதலில் மனிதனுடன் மட்டுமே தொடங்கு
கிறது.

உணர்வைப்பற்றிப்பேசும்போது, மனிதஜீவியின் அகவயப் பரிமாணத்தைக்
கணக்கில் கொள்ளாமல்,  ஆகவே   மனிதனையும்  கணக்கில் கொள்ளாமல்
உணர்வின் சமன்பாட்டைச் சமன்செய்ய இயலாது! ஏனெனில், உணர்வுதான்
மனிதன்!  மனிதன் என்பவன் உணர்வேதவிர அவனது மூளையோ, உடலோ
அல்ல! சாதாரண பேச்சுவழக்கில்,  நாம் "உணர்வுள்ள-மனிதன்", மனிதனின்
உணர்வு" என்றெல்லாம் சொல்கிறோம்! ஆனால், உண்மையில்,மனிதனுக்கு
கைகள்,கால்கள்உள்ளன என்பதைப்போல,அவனுக்கொரு உணர்வு உள்ளது
என்று சொல்வது தவறானபுரிதல் ஆகும். மாறாக, மனிதன் உணர்வேயன்றி
வேறெதுவுமல்ல!    " உணர்வுதான் தான்!"   என்பதை   உணரும்  போது தான்
மனிதன் உண்மையில் மனிதனாகிறான்; அதுவரை அவனும் ஒரு விலங்கே!

உணர்வை  அகவயமானதொரு  அம்சம்  என்றுசொல்லி  அதை புறவயமான
உலகிற்குக் குறைச்சலான   விஷயமாகக் கருதுவது  தலைகீழான புரிதலின்
வெளிப்பாடே!   மனிதனுடைய  அறிதலுக்கும்   அனுபவத்திற்கும்   வெளியே
உலகம் இருந்தாலும்,   இல்லாவிட்டாலும்    ஒன்றுதான்!   உலகம் அர்த்தப்பட
வேண்டுமானால்,  உணர்வு  வேண்டும்!   ஆகவேதான்,   பருப்பொருளாலான
உலகம் மனிதனாக(மனித-உணர்வாக)ப் பரிணமித்தது! உயிரும்,உணர்வும்
பிரபஞ்சத்தின்  கட்டாய   விழைவும்   (Cosmic Imperative)  தேவையும்
ஆகும்!   உணர்வு  என்பது,  சடப்பிரபஞ்சத்திற்குள்  எழுந்த உயிர்ப்பிரபஞ்சத்
தின் வழியாக எட்டப்பட்ட மூன்றாவது பிரபஞ்சம் ஆகும்!   இந்த மூன்றாவது
பிரபஞ்சம்  என்பது ஒரு தாழ்-நிலை உணர்வின் சுற்றுப்பாதை (Orbit)என
லாம்!   இதுவரை நிகழ்ந்தேறிய பரிணாம வழிமுறையானது மனிதஜீவியை
இந்தத்   தாழ்-நிலை   உணர்வின்  சுற்றுப்பாதை   (The Lowest Orbit of
Consciousness)யில் ஏவியுள்ளது!  இச்சுற்றுப்பாதையிலிருந்து உணர்வின்
உச்சிப் புள்ளியை (The Summit of Consciousness) எட்டுவது  என்பது
ஒவ்வொரு        தனி மனித ஜீவியினுடைய     உணர்வார்ந்த      விழைவையும்
பொறுத்ததாகும்! அந்த உணர்வின் உச்சியே இறுதி-மெய்ம்மை (Ultimate
Reality)ஆகும்!   அதுவே   அனைத்திற்கும் ஆதியான மூல- மெய்ம்மையும்
ஆகும்!

ஆனால், உணர்வின்ஜீவிகளாக உயர்ந்தெழ வேண்டிய மனிதர்களில்  அறிவு
ஜீவிகளும்,விஞ்ஞானிகளும்,தத்துவவாதிகளும் உணர்வை  உடலியலுடனும்
பொருளியலுடனும் தொடர்புபடுத்தி தாங்களும் குழம்பி,பிறரையும் குழப்பி
வருகின்றனர்; சாமானியர்களோ அன்றாடஉயிர்வாழ்தலின் தேவைகளைக்
கடந்து  சிந்திக்கத் தொடங்கவில்லை இன்னும்!  விஞ்ஞானிகளின்  குழப்பத்
திற்குக்காரணம் அவர்கள் மனிதனை பிரதானமாக ஒரு  உடலியல்ஜீவியாக
காண்பதும், அதைவிட முக்கியமாக, அவர்கள் உணர்வை நேரடியாக முதல்-
நபர்  கண்ணோட்டத்தில்  காணாமல்,   ஒரு  மேசையைக்  காண்பதுபோலக்
காண முயற்சிக்கிறார்கள்;   இந்த முதல்-கோணல், முற்றிலும் கோணல் என
ஆகிவிடுகிறது!  அதாவது,  மூளையும்,  அதன் செயல்பாடுகளும்  உணர்வை
உருவாக்குவதாக அவர்கள் எண்ணுகிறார்கள்; ஆகவே மூளையை அவர்கள்
மிக  விரிவாக ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்!   ஆனால்,    சந்தேகமின்றி,
மூளையும்,அதன்செயல்பாடுகளும் உணர்வை எட்டுவதற்காகப்பயன்படுத்
தப்படுகின்றன!    மேலும்,    மனித-மூளை  மட்டுமல்லாமல்,  மனித உடலும்,
இன்னும்  ஒட்டு  மொத்த   உயிரியல்  தளமும்,   ஒட்டுமொத்த     பிரபஞ்சமும்
உணர்வை எட்டுவதற்கான நெடிய ஏணியாகப் பயன்படுத்தப்படுகிறது!

உணர்வைப்பற்றிய அதிமுக்கியமான ஒருஉண்மை என்னவெனில்,உணர்வு
என்பது  அனைத்திலும் இறுதியானது!  ஆம், உணர்வு  என்பது பிரபஞ்சத்தில்
உள்ள பல்வேறு பொருட்களில்,  பண்புகளில்,  அம்சங்களில், அதுவும் ஒன்று
அல்ல! உணர்வே அனைத்திலும் இறுதியானது என்று இங்கு நாம்  குறிப்பிடு
வது, மனித-உணர்வை அல்ல; மாறாக,ஒவ்வொரு மனிதனாலும் எட்டப்படக்
கூடியதும், எட்டப்படவேண்டியதுமான,  அதேநேரத்தில்,  மனித-உணர்வைக்
கடந்த தொரு, பேருணர்வு,  அல்லது   முழு-உணர்வையே குறிப்பிடுகிறோம்!

உணர்வுதான் யாவற்றுக்கும் அடிப்படையான மூலமெய்ம்மையும்,முடிவான
இறுதிமெய்ம்மையும் என இக்கட்டுரையாளர் முன்வைத்திடும் வேளையில்,
உணர்வை முற்றிலுமாக மறுத்திடும் போக்கு ஏற்கனவே வேர்பிடித்து  வெகு
காலமாக தழைத்துக்கொண்டிருக்கவே செய்கிறது!   பிரெஞ்சு தத்துவவாதி,
ரெனே தெகார்த்  (René Descartes (1596–1650)  தொடங்கி    வைத்த
"மனம்-உடல்"  பிரச்சினை  இருமை வாதத்தை (dualism)தத்துவத்திற்குள்
கொண்டுவந்துவிட்டது  பொருண்மைவாதிகளுக்கு  பெரும் தலைவலியாகி
விட,   அவர்களில்  பலரும்  பலவழிகளிலும் இருமைவாதத்தைப்போக்கிவிட
முயன்றனர்,   இன்றளவும்  முயன்றுவருகின்றனர்.  ஆனால், இவர்களுடைய
நோக்கம்,    இருமையை நீக்கி   ஒருமையை   நிலை நாட்டுவதல்ல.   மாறாக,
'பொருண்மையே  அந்த மாபெரும்  ஒருமையும், மூலமெய்ம்மையும்'   என்று
நிரூபிக்கத்தான்!

ரெனே தெகார்த்   தொடங்கி வைத்த   அந்த   "மனம்-உடல்"  பிரச்சினையை
இவ்வாறு எளிமையாகவிளக்கிடலாம்.அதாவது, எனது உடலும், மனமும் மிக
நெருக்கமான   தொடர்பில்    பிணைக்கப்பட்டுள்ளதால்,   அவை   இரண்டும்
"நானே"  என  நான் எண்ணுகிறேன்.  ஆயினும்  உடலும், மனமும்   முற்றிலும்
வெவ்வேறான  தன்மை கொண்டவை  என நான்  கருதும்  பட்சத்தில்,    நான்
என்பது என் மனமா? அல்லது, நான் என்பது என் உடலா? அல்லது,   நான் என்
பது இரண்டுமா?  அப்படியானால்,   இரண்டுக்குமான தொடர்பு தான் என்ன?  
இதுதான் "மனம்-உடல்"  பிரச்சினை!

நிஜத்தில்,  மனத்துக்கும்,  உடலுக்கும்  இடையே பிரச்சினை ஏதும் உள்ளதா?
அல்லது தத்துவவாதிகளின் குழம்பிய சிந்தனை  பிரச்சினை  இருப்பதாகக்
கற்பிக்கின்றதா?   விஷயம்  என்னவெனில்,  முதலிடத்தில், உடலும் மனமும்
என்னுடையவை எனும் பட்சத்தில், அவை நானாக முடியாது. அதாவது  எனது
உடமைகள் என்னுடையவையே; ஆனால், அவையும் நானும் ஒன்றல்ல!எனது
வீடும் நானும் ஒன்றல்ல. எனது வீடு எனக்குப்பாதுகாப்பு தருகிறது; நான் என்
வீட்டை முறையாக பராமரிப்பு செய்கிறேன்.  இவ்வகையில் எனக்கும் எனது
வீட்டிற்கும் நெருக்கமான பிணைப்பு உள்ளது.இவ்வாறே, உணர்வாகிய நான்
என் உடலையும், என் மனத்தையும் சார்ந்திருக்கிறேன்! இவ்விடத்தில், உடல்,
மனம்   இவ்விரண்டையும்  கடந்து  மூன்றாவதாக  உணர்வு என்பது  தொக்கி
நிற்கிறது என்பதை, தத்துவவாதிகள் பலர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
அதாவது,   எனது  உடலையும்,  எண்ணங்களையும்  (மனதையும்)    என்னால்
அனுபவம் கொள்ள முடிகிறதென்றால், அவை வேறாக, நான் வேறாகத்தான்
இருக்கமுடியும்!  உண்மையில்,  எண்ணங்கள்,  மனம்   என்பவை உணர்வின்
கருவிகளே. நம்மில்,பலர் உணர்வாகத் தங்களை உணரவியலாத நிலையில்
( இன்னும் உணர்வுக்கு வராத நிலையில்), மனதுடனும், எண்ணங்களுடனும்,
அல்லது அதற்கும் கீழமைந்த உடலுடனும், பலவித இச்சைகளுடனும் தவறா
கத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுவிடுகின்றனர்!  இந்தத் தவறு
தான் இல்லாத தத்துவப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அடிப்படையாகும்!

இருமைப்பிரச்சினை  மனத்திற்கும்,  உடலுக்கும்  இடையே  மாத்திரம் தான்
உள்ளதா? உயிர்-ஜீவிக்கும், உயிரற்ற சட-உலகிற்கும் இடையே  இல்லையா?
உயிரற்ற சடப்பொருள் எவ்வாறு உயிர்-ஜீவியாக எழுந்தது?  சட-உலகிற்கும்,
உயிர் ஜீவிக்கும் இடையேயான "இடைவெளி"யை எந்தவிஞ்ஞானம் அல்லது
தத்துவம் இதுவரை விளக்கித் தீர்வுகண்டுள்ளது?   இடைவெளிகள், இருமை
கள்,  முரண்பாடுகள்   நீக்கமுடியாதவை,    தீர்க்கமுடியாதவை!    ஏனெனில்,
இருமை தான் மாற்றத்திற்குட்பட்ட இருப்பின் அடிப்படையாகும்!

ஏனெனில்,   தொடர்ந்து  வளர்ந்து செல்வதான பரிணாம நிகழ்வுமுறையில்,
முந்தைய ஒருகட்டத்திற்கும், அதற்குப்பிந்தைய கட்டத்திற்கும் வேறுபாடும்,
இடைவெளியும்,   முரண்பாடும்  தோன்றுவது  தவிர்க்கவியலாதவையாகும்!
இன்னும், மாறிக்கொண்டேசெல்லும் ஒரு நிகழ்வுப்போக்கிற்கும் அதன் முடி
வான  அடைவிடம் போன்ற  இலக்கு நிலைக்கும்  இடையே   பண்பு ரீதியான
பெரும் இடைவெளி இருக்கவேசெய்யும்! பண்புரீதியாக வளர்ந்துகொண்டே
செல்லும் பரிணாம நிகழ்வுப்போக்கு என்பது வெறும் ஆற்றோட்டம்போன்ற
தல்ல! ஆறு கடலில் கலந்த பிறகு அது தனது அடையாளத்தை இழந்து, 'கடல்'
எனும் புதிய அடையாளத்தைப்பெற்றுவிடுகிறது!     அதுவரை,    "ஆறு-கடல்"
எனும் இருமை நிலை நீடிக்கவேசெய்யும்! ஆறு கடலில் கலப்பதை,  அது உட்
படக்கூடிய  இறுதி மாற்றம் என நாம் கொள்ளலாம். அதுபோலவே,பரிணாம
நிகழ்வுப்போக்கும்  தனது  இலக்கு  நிலையான  "முழு-உணர்வு"   நிலையை
அடைந்தபிறகு;   அங்கு  இயற்கை,  உலகம்,  பருப்பொருளாலான பிரபஞ்சம்,
இன்னும்  மனிதனும்  (சிற்றுணர்வு)  எதுவும்  இருக்காது!  அனைத்தும்  "முழு-
உணர்வு" அல்லது "பேருணர்வு" எனும் மகா "ஒருமை"யுள் இணைந்துவிடும்!

நதியின் அடைவிடம் சமுத்திரம்.    ஏணியின்   பயன்பாடு ஏறிக் கடந்து மேற்
தளம் அடைதல். மரத்தின் முழுமை கனிகளாக மாறுவது. இயற்கை அல்லது
உலகின் உண்மை பேருணர்வே. ஆம், இயக்கத்தின் அர்த்தம் அது  அடையக்
கூடிய    இலக்கு  நிலையில்  உள்ளது.    இவ்வாறே,   பரிணாம   இயக்கத்தின்
அர்த்தமும், முழுமையும் அது இறுதியாக அடையக்கூடிய இலக்குநிலையில்
தான் உள்ளது.  இயற்கை,   உலகம்,   பிரபஞ்சம்  என்பது ஒரு பரிணாம இயக்
கமே.  இவ்வியக்கம்  பல நூறு கோடியாண்டுகளின் பரிணாம வளர்ச்சியின்
முடிவில், சிற்றுணர்வைத் தாங்கும் மனிதஜீவியை அடைந்துள்ளது. ஆனால்,
இது இறுதி முடிவு அல்ல! மனிதன் என்பவன் பரிணாமத்தின் இறுதிச்சொல்
அல்ல! மாறாக, அவன் பேருணர்வு நிலையை அடைவதற்கான ஒரு  முக்கிய
கருவியே!  பரிணாமம்   முழுமையடைவதற்கு   இன்னும்   ஒரு  படி   உள்ளது.
சிற்றுணர்வாக   எழுந்த   மனிதனின்  உணர்வார்ந்த  முயற்சியால் மட்டுமே
அப் "பேருணர்வு" எனும் இறுதி மெய்ம்மை அடையப்படமுடியும்!

மேலும்,  இறுதிமெய்ம்மையை அடைவது என்பது ஒரே நேரத்தில் ஒவ்வொரு
மனிதனுடைய வாழ்க்கையின் இலக்காகவும்,  ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின்
பரிணாம இலக்காகவும் அமைந்ததோடல்லாமல்,   அதிமுக்கியமாக,  இறுதி
மெய்ம்மையும் அதில் களிப்பெய்துகிறது!    ஏனெனில்,  இந்த   ஒட்டுமொத்த
பிரபஞ்சம்  என்பது   அந்த   இறுதிமெய்ம்மை   தம்னைத்தாமே முதலீடாக்கி,
முடக்கியதன், அதாவது வித்தாக மாற்றி விதைத்துக்கொண்டதன் விளைவு
தானே!   ஆகவே,  இப்பிரபஞ்சத்திலிருந்து  தம்மை மீட்டெடுத்துக்கொள்வது
என்பது "ஆனந்தக்களிப்பு"  தரும் விஷயமாகத்தானே இருக்க முடியும்! மூல
மெய்ம்மை தம்மைத்தாம்   மீட்டெடுத்துக்கொள்ளும் வழிமுறைக்குப்பெயர்
தான்பரிணாமம்.அதாவது,பரிணாமத்தில் இறுதியாக வெளிப்படும் அம்சம்
அல்லது   மெய்ம்மை  எதுவோ,   அதுவே  பரிணாமத்திற்கு மூல  காரணமாக
அமைந்த அம்சமும், மெய்ம்மையும் ஆகும்.

"உணர்வு என்றால் என்ன?"   எனும் கேள்வியுடன் இக்கட்டுரையைத் தொடங்
கினோம்,  ஆனால், அதற்குரிய நேரடிப்பதிலைத்தவிர, பிற உலக விஷயங்க
ளை, அதாவது,  உணர்வுக்கும், உலகம் மற்றும் உலகிலுள்ள பிற அம்சங்கள்,
பண்புகளுக்கும்    உள்ள    தொடர்புறவுகளைப் பற்றிய   உண்மைகளையும்
உணர்த்துகோள்களையெல்லாம்   ஆழ்ந்தாராய்ந்து   அறிந்து கொண்டோம்!
ஆனால்,  தனியே,  உணர்வு என்றால் என்ன?  என்ற கேள்விக்கான பதிலைப்
பார்ப்போம் :

* உணர்வு,  அதன்  முழுமையான  தனித்த  பேருணர்வு நிலையில்  அது  ஒரு
மகா புதிர் ஆகும்!  அது  சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை (A State of
Infinite Possibilities)யாகும். அது காலம்-வெளி கடந்த மெய்ம்மை.

* அதாவது, ஆற்றல், சக்தி, பொருண்மை, காலம், வெளி, சடப்பொருள், உயிர்,
உலகம்,  இயற்கை, பிரபஞ்சம், மனிதன்,  என அனைத்தும் உணர்வின் வெவ்
வேறு நிலைகளும், வடிவங்களும், வெளிப்பாடுகளுமே ஆகும்.

* உணர்வு என்பது, அதன் ஆகச் சுருங்கிய  அடி மட்டத்தில் உணர்வற்ற சடப்
பொருளே ஆகும். ஆனால்,  'பெரு-வெடிப்பு'  நிகழ்ந்த   அக்கணத்திலிருந்தே
உணர்வுப் பரிணாமம் தொடங்கிவிடுகிறது. அதாவது, மிக நுண்ணிய அடிப்
படை அணுத்துகள்கூட அதனால் கிரகிக்கக்கூடிய அளவிலான உணர்வைப்
பெற்றுள்ளது எனலாம்.  தகவலியல் (Information Theory) சொற்களில்
சொன்னால், உணர்வு என்பது அடிப்படையில், வெறும் "தகவல்-பரிசீலனை"
(Information Processing)என்று சொல்லலாம்.ஆனால், உச்சநிலையில்
உணர்வென்பது "தகவல்களின் அனந்தநிலை" (Infinite Data)எனலாம்.
ஆனால், அந்நிலை அனைத்துத் தகவல்களையும்,தகவல்களைப் பரிசீலிக்க
வேண்டிய தேவையையும் கடந்த பரிமாணம் ஆகும்!   இதன் அர்த்தம் என்ன
வெனில்,   தகவலியல் -சொற்களில்  உணர்வைப் புரிந்து கொள்ள  இயலாது
என்பதுதான்.

* சிலர்,  அதில் குறிப்பாக,   டேவிட் ஜெ, சால்மர்ஸ்,  (David J. Chalmers)
உணர்வின்  "கடினப் பிரச்சினை" எனவும், "சுலபப் பிரச்சினை" எனவும் பேசு
கிறார்.   அதாவது, எவ்வாறு மூளையின் பௌதீகச் செயல்முறைகளானவை
அகவய   அனுபவங்களை உருவாக்குகின்றன   என்பதைப்  புரிந்து கொள்ள
இயலாது என்பதுதான் உணர்வின் "கடினப்பிரச்சினை" எனப்படுகிறது. ஆம்,
சால்மர்ஸின்   இக்கூற்று   மிகச்சரியானதே!   அதே வேளையில்,  உணர்வின்
விஞ்ஞானத்தை (science of consciousness)கட்டியெழுப்பும் விஷயம்
குறித்துப்  பேசுகையில்,   "இறுதியில்   நாம்   மூளையின்   பௌதீகச் செயல்
முறைகளையும், உணர்வுப்பூர்வ அனுபவத்தையும் இணைக்கும் அடிப்படை
விதிகளைப்பற்றிய  கோட்பாட்டினை  அடைந்திடுவோம்!"   என    சால்மர்ஸ்
நம்பிக்கைமிகுந்த   தொனியில்  கூறுவது,  அவர்   முன்வைத்த    உணர்வின்
"கடினப் பிரச்சினை" யுடன் முரண்படுவதாக ஒலிக்கிறது!    ஏனெனில்,  சால்
மர்ஸ் எதிர்பார்க்கின்ற  கோட்பாட்டினை நாம்   அடைந்திட்டாலும், "உணர்வு
என்றால் என்ன?"   "உணர்வு ஏன் எதற்காக எழுந்தது?"   என்பன போன்ற பல
கேள்விகளுக்கான பதில்களை நாம் பெற முடியாது!

அதாவது,  சால்மர்ஸின்  அணுகுமுறையில்  உள்ள கோளாறு என்னவெனில்,
பிற விஷயங்களை அணுகுவதுபோல்,  உணர்வையும் ஒரு பிரச்சினையாகப்
பார்ப்பதுதான்!  ஆனால்,  "உணர்வு"  என்பது ஒரு பிரச்சினை அல்ல! மாறாக,
உணர்வுதான் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான தீர்வு ஆகும்.

* ஆதியும் அந்தமும்,  மூலமும் முடிவும்,  ஆல்ஃபாவும்  ஒமேகாவும் உணர்வே!
அதுமட்டும்   அல்ல,    இடையிலுள்ளவையும்  உணர்வின்   வெவ்வேறு நிலை
களும், வடிவங்களும், வெளிப்பாடுகளுமே ஆகும். ஆம், உணர்வுதான் இறுதி
யானது,   அதாவது,   எல்லா விளக்க பூர்வமான  அம்புகள் யாவும் எப்போதும்
மேல்   நோக்கியதாக  உணர்வையே  குறிக்கின்றன."     இவ்வுண்மையானது
நோபல் பரிசு   பெற்ற    அமெரிக்க  பௌதீகவியல்   விஞ்ஞானி    ஸ்டீவென்
வெய்ன்பெர்க்   (Steven Weinberg) அவர்களின் புகழ் பெற்ற வாக்கியங்
களில்   ஒன்றான,   "எல்லா  விளக்க பூர்வமான அம்புகள் யாவும்  எப்போதும்
கீழ்  நோக்கி  பௌதீகவியலையே  குறிக்கின்றன."    என்பதற்கு    முற்றிலும்
மாறானாது, எதிரானது. ஏனெனில், அவரது இக்கூற்று தவறானது மட்டுமல்ல,
படு அபத்தமானது!

முக்கியமாக,    அவரது   கூற்று  பரிணாம-விரோதமானது.   எந்தப் பரிணாம
நிகழ்வுமுறையானது   உயிரும்,  உணர்வும் அற்ற  அடிப்படை( அணு)த்துகள்
களை,   1,500 கோடி ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களினூடாகச்
செலுத்தி,   தற்போது  உணர்வுள்ள  சிந்திக்கும்  திறனுள்ள    ஒரு  விஞ்ஞானி
யாக, அவரை உருவாக்கியதோ அந்தப்பரிணாமநிகழ்வுமுறையை முற்றிலு
மாக  மறுப்பவராக  ஸ்டீவென் வெய்ன்பெர்க்  விளங்குகிறார்.   மேலும்,   இப்
பிரபஞ்சத்தையும், அதிலுள்ள அனைத்தையும்  -  கல், மண், புழு, பூச்சி, செடி
கொடிகள்,  மரங்கள்,  எலி,  தவளை,  பூனை,  யாணை,  புலி, சிங்கம், குரங்கு,
மனிதன் ஆகியவற்றையும்; உயிர், மனம், உணர்வு என எல்லாப்பண்புகளை
யும்  அடிப்படை  அணுத்துகள்களுக்குச்  சுருக்கிக்காண முடியும்!    ஆனால்,
அணுத்துகள் என்பதென்ன? பருப்பொருள் என்றால் என்ன?அனைத்தையும்
அணுத்  துகள்களுக்குச்  சுருக்கிடும்   பட்சத்தில்,    அணுத்துகளை   எதற்குச்
சுருக்குவது?   பருப்பொருள்   எத்தகைய  பொருளால்   ஆனது?   புகழ் பெற்ற
குவாண்டம் பௌதீகவியல் விஞ்ஞானி,ஹேன்ஸ்-பீட்டர் டோர் (Hans-Peter
Dürr) அவர்களின் சொற்களில்,   "பருப்பொருள்  என்பது  பருப்பொருளால்
ஆனதல்ல"   (Matter is not made out of matter)  என்பது       தான்
உண்மை!   இன்னும்,   "உள்ளது  பருப்பொருள்  மட்டுமே,  பருப்பொருள் தான்
பிரதானமானது,   அனைத்துக்கும்   அடிப்படையானது!"   என்று  தவறாகவும்,
தலைகீழாகவும்  சொல்வதற்குக்கூட  உணர்வின் உதவியில்லாமல் சொல்ல
முடியாது!

* அடுத்து,  "உணர்வு   என்றாலே  அது ஏதாவதொன்றைப்பற்றிய  உணர்வே!"
எனச் சொல்லப்படுவதும்   பிழையானதே.  புலன்வழி-உணர்வு       கொண்ட,
ஆனால்,   சுய-உணர்வற்ற  விலங்குஜீவிகளும், புலன்வழி-உணர்வுடன், சுய-
உணர்வும்    கொண்ட    மனிதஜீவிகளும்    தம்தம்    உணர்வைக் கொண்டே
தம்மைச் சுற்றியுள்ள உலகைப்புரிந்து கொள்கின்றனர்.  புலன்வழி உணர்வு
மற்றும் சுய-உணர்வு ஏதுமற்ற ஒருகூழாங்கல்லினால் அதனுடைய மிகமிகச்
சன்னமான   பௌதீகத்தனமான   உணர்வைக்கொண்டு  எதையும்   புரிந்து
கொள்ளவியலாது! அதே வேளையில், தம் புலனுணர்வைக்கொண்டு புறவுல
கினை  ஓரளவிற்கு அறிந்து  செயல்படும்  விலங்குஜீவிகளால்,    தம் சொந்த
இருப்பினை,   "தாம்  இருக்கிறோம்!"    என்கிற  உண்மையை அறிவதில்லை!
இத்தகைய  பிரத்யேக  சுய-உணர்வு மனிதஜீவிக்கு மட்டுமே வாய்த்துள்ளது
என்பது பெரும் பேறாகும்.

அதாவது,  உணர்வு என்றாலே அது ஏதாவதொன்றைப்பற்றிய உணர்வே என்
பது உணர்வின் ஒரு தொடக்கநிலைப்பண்புதானேதவிர அதுவே உணர்வின்
இறுதியான  பூரணமான பண்பு அல்ல.  ஒரு கூழாங்கல்லினால் தன்னையும்
உணரமுடியாது,    தனக்குப் புறத்தே  உள்ளவற்றையும் அறியமுடியாது.  ஒரு
தவளையால், தனக்குப்புறத்தேயுள்ளவற்றை உணரவும், அறியவும் முடியும்.
ஆனால்,  அதனால்,  தன்னையோ   தன்சொந்த   இருப்பையோ     உணரவழி
யில்லை!   அதேவேளையில்,   ஒரு  மனிதஜீவியால்,  தனக்குப் புறத்தேயுள்ள
அருகிலுள்ள சுற்றுப்புறத்தை மட்டுமல்லாமல் இப்பிரபஞ்சம் முழுவதையும்
ஆராய்ந்தறிந்திடவும்; அனைத்திற்கும் மேலாக மனிதனால், தன் சுய-உணர்
வைக்கொண்டு  தம்  சொந்த இருப்பையும், சுயத்தையும்   உணரவும், அறிய
வும் முடியும்!   ஆனால்,   மனிதனுடைய   பிரத்யேகப் பேறான சுய-உணர்வும்
கூட  உணர்வின்  இறுதிச்சொல்லோ,  பண்போ அல்ல!   ஆம்,  ஒரு மனிதஜீவி
யால் தனது சுய-உணர்வையும் கடந்துவளர்ந்து உணர்வின் உச்சநிலையான
பூரண "முழு-உணர்வு" எனும் இறுதி மெய்ம்மையையும் அடையமுடியும்!

ஆக,  'உணர்வு என்றாலே அது ஏதாவதொன்றைப்பற்றிய உணர்வே' என்பது
உணர்வின் ஒரு தொடக்கநிலைப்பண்பு மாத்திரமே; அந்நிலையுடன் உணர்
வைக்குறுக்கிவிட முடியாது! உணர்வு தொடக்கத்தில் புறம் நோக்கிப்பாய்கி
றது.  அதன்  அடுத்தகட்ட வளர்ச்சியாக,  தன் அகம் நோக்கித் திரும்புகிறது!
அதாவது  அது தன்னைப்பற்றிய உணர்வுக்கு வருகிறது.   இறுதியாக, உணர்
வானது  தனது மையத்துவமான முக்கியத்துவத்தை உணர்ந்து, தன்னுள்ளே
ஆழ்ந்து முழு-உணர்வாகஆகிறது! இயற்கை, உலகம்,பிரபஞ்சம் என்பது தன்
உட்பொதிவின் சாரத்தில் உணர்வுதான் என்பதை பரிணாம வழிமுறையின்
இறுதியில் மனித  உணர்வின் மூலமாக உணர்ந்துகொள்கிறது!

* ஆம்,  மனித- உணர்வு  என்பது பரிணாமவழிமுறையின் மிகமுக்கியமான,
திருப்பு முனையான தொரு  வளர்ச்சிக்கட்டமாக விளங்குகிறது!   நதி எனும்
இயக்கமானது பெரிதாக பண்பு நிலையில் எவ்வித மாற்றமும் அடையாமல்
இறுதியாக   தன்   இலக்கு நிலையான   சமுத்திரத்தைச்  சென்றடைந்திடும்.
ஆனால்,  பரிணாம இயக்கமானது, பொருண்மைவாதிகள் சொல்வது போல
வெறும்  "இயக்கத்திலுள்ள பருப்பொருள்" அல்ல.  மாறாக, பரிணாமமானது
பருப்பொருளை  ஒரு ஆரம்ப நிலைப்பண்பாகக்கொண்டு தொடங்குகிறதே
தவிர, இடையில் அது "உயிர்"எனும் பெரும்பண்புநிலை மாற்றத்தைத்தழுவி,
அதையடுத்து,  பல்வேறு  உயிர்ஜீவிகளின் வழியாக புலன்-வழி உணர்வைப்
பெற்று, தற்போது,   மனித ஜீவியின்  வழியாக   "சுய-உணர்வு"   எனும்  அரிய
அம்சத்தை எட்டியுள்ளது. அடுத்து இறுதிக்கட்டமாக, மனிதனின், ஒவ்வொரு
மனிதனின்,   உணர்வார்ந்த   விழைவின்   மூலமாக   உணர்வின்  உச்சமான,
"முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு" நிலையை அடைகிறது. இதுவரையில்
கணிசமான   எண்ணிக்கையிலான   தனிமனிதர்கள்   முழு-உணர்வு  எனும்
அந்நிலையை அடைந்து பிரபஞ்சம் எனும் பரிணாமஇயக்கத்தை முழுமைப்
படுத்தியுள்ளனர்!

* உணர்வு  என்பது   இயற்கையையோ,  பருப்பொருளாலான   இம்மாபெரும்
பிரபஞ்சத்தையோ; அல்லது, வேறு எவ்வொரு பண்பையோ, அம்சத்தையோ
எதனையும்  சார்ந்த  ஒன்றல்ல!   மேலும்,   உணர்வை  ஒருபோதும் வேறு எவ்
வொரு அம்சம், பண்பு, எதற்கும் குறைத்தும், வேறு எதனுடைய சொற்களின்
வழியாக விளக்கியும் புரிந்து கொள்ளமுடியாது!   மாறாக,  உணர்வை  நேரடி
யாக    ஒவ்வொருவரும்   உணர்வு கொள்வதன்   வழியாக  மட்டுமே  உணர்ந்
தறியவும், புரிந்து கொள்ளவும் முடியும்!  இதன் அர்த்தம் அது அகவயமானது
(Subjective) என்பது மட்டுமல்ல. மேலும், அகவயமானது என்பது புறவய
மான  (Objective) நிஜத்தைவிடக்  கீழானதோ,   குறைவானதோ   அல்ல.
மாறாக,புறவயமான நிஜமாகக்கருதப்படும் பருப்பொருளானது பரிணாமம்
எனும்   ஒரு  விசேட  மாற்றத்திற்கு   உட்பட்டு    அகவயபட்டதன் விளைவாக
எழுந்த  நிஜம் தான் மனித-உணர்வு ஆகும்.  ஆக, மேன்மேலும்  அகவயப்படு
வதும், சூக்குமமடைவதும்தான் நிஜத்திலும் அதி-நிஜமாகும் வழியாகும்!ஆக,
புறவயமான நிஜம் என்பது   உண்மையில்  நிஜத்தின் மேலோடு போன்றதே!
ஆக,  விஞ்ஞானிகள்  எதிர்பார்ப்பது போல,  மூளையின் செயல்பாடுகளைக்
கொண்டும்,  மூளையிலுள்ள நியூரான்கள் எனப்படும் நரம்புகளின்  வலைப்
பின்னல்களுக்கும்,   அகவயமான   முதல்-நபர்  அனுபவங்களுக்கும்    உள்ள
தொடர்புடைமைகளைக்  (Neural  Network Correlates) கொண்டும்
உணர்வைப்   புரிந்துகொள்ள  ஒருபோதும்  இயலாது.  அதாவது,   முதல்-நபர்
அணுகுமுறையைக்கொண்டு  மட்டுமே  புரிந்துகொள்ளப்படக்கூடிய   அம்ச
மான     உணர்வை   விஞ்ஞானத்தின்    மூன்றாம்-நபர்    அணுகுமுறையைக்
கொண்டு புரிந்துகொள்ள முடியாது. இவ்வுண்மையை பல விஞ்ஞானிகளும்,
தத்துவ சிந்தனையாளர்களும்  ஏற்றுக்கொள்கின்றனர்  என்பது  பாராட்டுக்
குரிய விஷயமாகும்!

* உணர்வை பருப்பொருளின் ஒரு விசேடப்பண்பாகக் குறைத்திட முயற்சிப்
பதற்கும்,  உணர்வை  இயற்கைப்படுத்திடத்  துடிப்பதற்கும்,  இன்னும் அதீத
மாகச் சென்று உணர்வை முற்றாக மறுப்பதற்கும், விஞ்ஞானபூர்வமானதும்,
தத்துவ பூர்வமானதுமான       காரணங்களையும்,       தர்க்கங்களையும்  விட
சித்தாந்த ரீதியான காரணங்களே அடிப்படையாக விளங்குகின்றன!  ஏனெ
னில்,  உணர்வை முறையாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளும் பட்சத்
தில், அதாவது மூலமும், முடிவும் உணர்வே எனும் அப்புரிதல் இயற்கையின்,
பருப்பொருள்- உலகத்தின்  மேலாண்மையை  செல்லாக்காசாக  ஆக்கிடும்!
அதோடு, விஞ்ஞானம், பொருண்மைவாதம்,சுருக்கல்வாதம், நாத்திகவாதம்,
எந்திரவாதம்,  டார்வினிய பரிணாமவாதம் ஆகியவற்றின் முடிவை அறிவிப்
பதாக அமைந்துவிடும்!  ஆக,  உணர்வின் மையத்துவம் பிறவனைத்தையும்
ஓரங்கட்டிவிடும்! ஆக இத்தகைய அச்சுறுத்துதல்களை உணர்வின் உணர்த்
துகோல்கள்  (Implications) தன்னகத்தே   கொண்டிருக்கிறது!  மேலும்,
உணர்வின் மையத்துவத்தையும்,பிரதானத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும்
பட்சத்தில், கருத்து முதல் வாதத்தையும், ஒருசில சமயபூர்வ-உண்மைகளை
(Religious Truths)யும்,  ஆன்மீக உண்மைகளையும் மறுக்கமுடியாமல்
போகும்  நிலை   உருவாகிவிடும்!    ஆக,   இத்தகைய    காரணங்களாலேயே
உணர்வை     உணர்வின்     சொற்களிலேயே      புரிந்து  கொள்வது     என்பது
தொடர்ந்து  தவிர்க்கப்பட்டும், தொடர்ந்து உணர்வுக்குக்  கீழேயுள்ள அம்சங்
கள், பண்புகளைக்கொண்டு உணர்வை விளக்கும்போக்கு நீட்டிக்கப்பட்டும்
வருகிறது.
இத்தகைய    மாய்மாலக்காரர் களுக்கு  மத்தியில்,  தத்துவ சிந்தனையாளர்
கோலின் மேக்கின் (Colin McGinn), தாமஸ் நாஜெல் (Thomas Nagel),
ஜெர்ரி ஃபோடோர் (Jerry Fodor),நோம் சோம்ஸ்க்கி (Noam Chomsky),
மார்ட்டின் கார்டுனர்   (Martin Gardner),  அமெரிக்க      உளவியலாளர்
ஸ்டீவென் பிங்க்கர் (Steven Pinker),  ஆங்கிலேய பௌதீக விஞ்ஞானி
யும், கணிதவியலாளரும், விஞ்ஞானத்தத்துவ சிந்தனையாளருமான ரோஜர்
பென்ரோஸ் (Roger Penrose), அமெரிக்க   நரம்பியல்துறை  விஞ்ஞானி
ஸாம் ஹாரிஸ் (Sam Harris)போன்றோர் உணர்வின் புரியாத்தன்மையை
ஏற்று   அங்கீகரிப்பவர்களாக  விளங்குகின்றனர்.   இவர்கள்    புதிர்வாதிகள்
(The Mysterians)என்று  அழைக்கப்படுகிறார்கள்!  இவர்கள் பிற தத்துவ
வாதிகளைப்போல 'உணர்வு-மறுப்புவாதிகள்' அல்லர்.  இவர்கள் உணர்வை
உணர்வாக  மதித்து  ஏற்றுக்கொள்கின்றனர்.  உணர்வை  உணர்வின் சொற்
களிலல்லாமல்  வேறு பண்புகளின்  சொற்களில்   புரிந்து கொள்ளவியலாது
என்கின்றனர்!

* உணர்வைப்பொறுத்த  ஒரு விசேடத்தன்மை  என்னவெனில், அது அனைத்
தையும் தன்வயமாகவும், தன்மயமாகவும் மாற்றிவிடக்கூடிய தனிமுதலான
(Absolute)ஒரு மெய்ம்மையாகும்! இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள எல்லா
 வுமாகவும்   ஆகியது  உணர்வே!   உணர்வே   பிரபஞ்சத்தின்  சாரம் அல்லது
ஆன்மா ஆகும்!  அது பருப்பொருள் தன்மை கொண்டதுமல்ல!  அது உயிரும்
அல்ல!  இன்னும்,  அது  காலையில்  மலர்ந்து இரவில் உதிர்ந்து போகக்கூடிய
சாதாரண மனித-உணர்வும் அல்ல!  அது  ஒரு மகா புதிர் ஆகும்!   உணர்வின்
புதிர்த்தன்மையைத் தரிசித்தவர்கள் வெகு சிலரே!

புதிரைப்  புதிராக இனம் கண்டுகொண்டவர்களே அப்புதிரை உண்மையில்
புரிந்து கொண்டவர்களாவர்!     அவர்களே ஞானிகள்!    உணர்வு  எனும் மகா
புதிருக்கு இன்னொரு பெயர் : கடவுள்!!

மா.கணேசன்/ 16.9.2016
----------------------------------------------------------------------------

Monday, 31 October 2016

இயற்கையின் இயற்கை என்ன? (What is the "Nature" of Nature?)


     
அடுத்தமுறை  எவராவது  உங்களிடம் வந்து,   "இருப்பது   யாவும்     இயற்கை   மட்டுமே","இயற்கையே பிரதானம்", "இயற்கை இயற்கையாகத்தோன்றியது", என இயற்கை,இயற்கை, என்று இயற்கையின் புகழ் பாடினால்,அவரிடம்; "நீங்கள்எந்த இயற்கையைப்பற்றிப்பேசுகிறீர்கள்?" என்று கேட்கத்தவ றாதீர்கள்!   மேலும்,   அவருடன்     சற்று                    எச்சரிக்கையுடன்பேசுங்கள், பழகுங்கள்! இல்லாவிடில், அவருடைய மட்டுப்பாட்டை உங்களிடம் தொற்றச்செய்திடுவார்!
                                                                           * * *

'இயற்கை' என்று எதுவுமில்லை! 
--------------------------------------------------
" இயற்கை" என்று ஏதோவொன்று மிகவும் திடமாகவும், மாறாததாகவும், நமக்குப்புறத்தே நிலையான பின்புலமாகவும் இருப்பதாக விஞ்ஞானிகளும், பொருண்மைவாதிகளும், 'இயற்கை வாதி'கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களும், இயற்கை மீறியதாகச் சொல்லப்படும் கடவுள், ஆவி, பேய், பிசாசு போன்றவற்றை மறுப்பதற்கான ஒரே ஆயுதமாக 'இயற்கை'யை மட்டுமே நம்பும் நாத்திகவாதிகளும் கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அத்தகையதொரு 'இயற்கை' அவர்களது மனங்களில், வெறும் கருத்தாக மட்டுமே இருக்கிறது! இன்னும் ஒரு மிக ஆழமானதும், முறையானதுமான ஆய்வின் இறுதியில் "இயற்கை" என்று எதுவுமில்லை என்பது புலனாகும்!

அப்படியானால், நமக்குப்புறத்தே, நம்மைச்சுற்றி ஒரு உலகம் உள்ளதே, அதற்குப்பெயர் என்ன என்று கேட்டால், அதை "உலகம்" அல்லது "பிரபஞ்சம்" என்றே அழைப்போமாக! அதேவேளையில், நம்மைச்சுற்றி ஒரு பிரபஞ்சம் மட்டுமல்லாமல், இரண்டு பிரபஞ்சம் உள்ளன! ஒன்று, பருப்பொருளாலான மாபெரும் அமைப்பான "பௌதீகப்பிரபஞ்சம்". இரண்டு, தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக்கொண்டமைந்த "உயிரியல் பிரபஞ்சம்",  என இரண்டு பிரபஞ்சங்கள், அல்லது உலகங்கள் உள்ளன. இவற்றின் மத்தியில், மூன்றாவதாக ஒரு பிரபஞ்சம் எழுந்துள்ளது, அதுதான், மனிதஜீவிகளைக்கொண்டமைந்த மனம் அல்லது உணர்வின் பிரபஞ்சம் ஆகும்!

ஆம், 'இயற்கை' என்று எதுவுமில்லை! மாறாக, தனது  அசலான இயற்கையை, இயல்பைத் தேடிச்செல்லும் ஒரு நெடிய இயக்கம் மட்டுமேயுள்ளது!உண்மையில், எல்லா காலத்திலும் ஒரே தன்மையிலமைந்ததான இயற்கை என்று எதுவும் இருக்கவில்லை. அதேநேரத்தில், அது நிலைகொள்ளாமல் எப்போதும் மாறிக்கொண்டேயும் இருப்பதில்லை! மாறாக, இயற்கை தனது அசலான இயற்கையை நாடிச் சென்று  கொண்டுள்ளது; அத்தகைய இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும்.  இயற்கை,  பிரபஞ்சம், உலகம், பருப்பொருள் என எவ்வாறு அதை அழைத்தாலும், அது ஒரு பரிணாம  இயக்கமே ஆகும். இயற்கை என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து ஒரு குறிப்பான இலக்கு- நிலையை நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். ஆம், இலக்கு என்பது இல்லாமல் யாதொரு இயக்கமும் இல்லை; ஏனெனில் அது முரண்பாடானது. எவ்வொரு இயக்கமும் இலக்கைக் கொண்டதே; இலக்கு  இல்லாவிடில் அதற்குப் பெயர் இயக்கமல்ல, அது தாறுமாறானதொரு போக்கு ஆகும். மேலும்,  வெறும் "மாற்றம்" என்பதற்கும், "பரிணாமம்" என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.  மாற்றத்திற்காக மாற்றம் என்பது முரண்பாடானது, அல்லது மேலோட்டமானது. பண்பினடிப்படையிலான மாற்றத்தைப்பின் பற்றிச்செல்லுகிற, அதாவது தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து செல்லுகிற இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும். 

இயற்கை (எனப்படுவது) இயற்கையானதல்ல!
--------------------------------------------------------------------------
அகராதியின் படி இயற்கை என்பது,

   1. மனிதனால் படைக்கப்படாமல் தானாகத் தோன்றுவனவும், நிகழ்வனவும்
   2. ஒருவருடைய அல்லது ஒன்றனுடைய இயல்பான தன்மை அல்லது குணம்
   3. இயல்பாக நிகழும் ஒன்று

எனக்குறிப்பிடப்படுகிறது. அதாவது, மனிதனால் படைக்கப்படுபவை செயற்கையானவை என்பதால், அதற்குமாறாக, மனிதன் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றியவையனைத்தும் இயற்கை எனப்படுகிறது. அதாவது, மனிதன் தோன்றுவதற்கு முந்தைய இருப்பை 'இயற்கை' என்று சொல்வதில் பெரிதாகத்தவறில்லை. ஆனால், எவரேனும், இயற்கை தானாகத்தோன்றியது என்று சொல்வாரெனில், அது நம் புரிதலை மட்டுப்படுத்தும் பெரும் தடையும், பிரச்சினையும் ஆகும். ஏனெனில், விதிவிலக்கின்றி அனைத்து விஞ்ஞானிகளும், பொருண்மைவாதிகளும், இயற்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும்,  இயற்கையின் இயற்கையை 'சடப்பொருள்', அல்லது 'பருப்பொருள்' என்பதாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.ஒருவகையில், பரிணாமம் என்பது முதலில் சடப்பண்பைக் கொண்ட அணுத்துகள்களைக் கருவியாகவும், ஊடகமாகவும் கொண்டுதான் தொடங்கியது என்பதில் சந்தேகமில்லை!  ஆனால், அச்சடப் பண்புதான் இயற்கையின் முடிந்த முடிவான, இறுதி யான பண்பு என்று கொள்வது தான் பிரச்சினைக்குரியது ஆகும்! 

அதாவது, இயற்கை தானே தோன்றியது என்று சொல்வதன் பொருள், உயிரற்றதும், உணர்வற்றதுமான சடப்பொருள், தானே தோன்றியது என்பது தான்! ஆனால், எவ்வகையிலும், உயிரற்ற, உணர் வற்ற பௌதீகச்சடப்பொருள் தன்னில் தானே தோன்றுவதற்கான வாய்ப்பும் சாத்தியமும் சிறிதும் இல்லை! ஆகவே, பௌதீகச்சடப்பொருளை, அடிப்படை மெய்ம்மையாக, அல்லது, மூல-மெய்ம்மையாகக்கொள்வதற்கு இடமில்லை! அதே நேரத்தில், எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த ஒரு 'கடவுள்' தான் இயற்கையை, இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடமுடியாது. ஏனெனில், மிகைப்படுத்தப்பட்ட குணாதிசயங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட "கடவுள்" எனும் ஒரு ஒற்றைச்சொல்லை மூல-மெய்ம்மையாகக்கொள்ள முடியாது!

ஆக, 'இயற்கை' என்பது தானே தோன்றியதல்ல, எனும்பட்சத்தில், அது வேறு ஏதோவொன்றின் வெளிப்பாடாக, அல்லது, விளைபொருளாக மட்டுமே வெளிப்பட்டிருக்க வேண்டும்! அந்த ஏதோ ஒரு மெய்ம்மை "கடவுள்" என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை! மாறாக, அதை நாம் "பேரியற்கை" (Meta-Nature), என்று அழைக்கலாம்! அந்த பேரியற்கை தான் இயற்கை, உலகம், பிரபஞ்சம்  என அழைக்கப்படும் அனைத்திற்கும் காரணமாக அமைந்த "மூல-மெய்ம்மை" ஆகும்! அந்த "மூல-மெய்ம்மை" எத்தகைய மெய்ம்மை, அல்லது "பண்பு" என்பதைக் கண்டறிவதுதான் நம்முடைய தலையாய பணியாகும். அம்மூலமெய்ம்மையின் பண்பு எத்தகையது என்பதை நாம் துல்லியமாக அறிந்திடும் போது அதை நாம் "கடவுள்" என்றுகூட அழைக்கலாம்! அது வரை "கடவுள்" என்ற உள்ளீடு அற்ற அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாயிராது!

அப்படியானால், அதாவது, ஊமைச்சடமும் அல்ல, கடவுள் என்ற சொல்லும் அல்ல என்றால் பிறகு எது தான் மூலமெய்ம்மை, அது எத்தகைய பண்பைக்கொண்டது, அதை எவ்வாறு அறிவது? ஆம், கனியைக் கொண்டு தான் மரம் அறியப்படுகிறது! ஆனால், நம் பிரபஞ்சத்தைப்பொறுத்தவரை அது என்ன வகை மரம் என்று இதுவரை அறியப்படாமலேயே உள்ளது! அதாவது, பிரபஞ்சமானது என்னவகை கனியைத் தரும் என்பது குறித்த கேள்வியும், ஆராய்ச்சியும் விஞ்ஞானிகளிடமும், இயற்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தத்துவவாதிகளிடமும், பகுத்தறிவுவாதிகளிடமும் இல்லை! அதாவது, ஒரு பெரு-வெடிப்பில் தொடங்கிய பிரபஞ்சம் எனப்படும் பரிணாம வழிமுறை இறுதியாக எட்டக்கூடிய மெய்ம்மை யாது? அது இதுவரை எவற்றையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளது? அதாவது எத்தனை மைல்-கல் போன்ற வளர்ச்சி நிலைகளைத்தொட்டுள்ளது? என்பவை பற்றியும்; பரிணாமம் என்றால் என்ன? உண்மையில் பரிணாமத்தில் பரிணமிப்பது எது? என்பவை குறித்தும் ஆழமான புரிதல் எதுவும் இல்லை! அவர்களைப்பொறுத்தவரை, 'இயற்கை' (அது எத்தகைய மெய்ம்மை என்பது தெரியாவிட்டாலும்) இருக்கிறது; அதில் பிற உயிரினங்களும், நாமும் இருக்கிறோம், அவ்வளவுதான்! நாம் ஏன், எதற்காக இருக்கிறோம்? நம் வாழ்க்கையின் நோக்கம், குறிக்கோள், இலக்கு யாது? என்பது குறித்து எதுவும் தெரியாது! தெரிந்துகொள்ள வேண்டிய தேவையுமில்லை? ஏனெனில், மாபெரும் புரட்சிகர இயற்கை வாதியும், உயிரியலாளருமான டார்வின் அவர்கள், பரிணாமம் குறிக்கோளற்றது, திசையற்றது, அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்செல்லாதது; மற்றும் மிக முக்கியமாக, சடப் பொருள் தான் அனைத்து இருப்பின் அடித்தளம் என்பதாக போதித்துச்சென்றுள்ளாரே! 

உளவியல் பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும்  சின்மண்ட் ஃப்ராய்டு (Sigmund Freud) ஒருமுறை,  "அனைத்து மாபெரும் விஞ்ஞானப்புரட்சிகளின் பொதுவான அடிப்படைஅம்சம் என்னவெனில், அவை மனிதனை பிரபஞ்சத்தின் மையம் எனக்கருதப்பட்ட சிம்மாசனத்திலிருந்து கீழே தள்ளியது தான். கோப்பர் நிக்கஸின் புரட்சியானது புவி-மைய மாதிரியைப் புறந்தள்ளி சூரிய-மைய மாதிரியை முன்வைத்தது, அதன்படி பூமியானது பல அண்ட வெளிப்பொருட்களில் அதுவும் ஒன்று என்றாகியது. அடுத்து, சார்லஸ் டார்வினின் புரட்சியானது, 'கடவுளின் சாயலில்" படைக்கப்பட்டவனாகக் கருதப்பட்ட மனிதனை உயர் வளர்ச்சியடைந்த வானரம் என்பதாகச் சித்தரித்தது" எனக் குறிப்பிட்டார். ஆனால், இவை போன்ற 'சுய- தோல்விகரமான'  கூற்றுக்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. ஏனெனில், தத்துவசிந்தனையானது மீண்டும் மேலோங்கிடும் காலம் தொடங்கிவிட்டது. ஒரு முழுமையான "உலகப்பார்வை"யையும், "வாழ்க்கைப்பார்வை"யையும், அதாவது ஒரு முழுமையான மெய்யியலைத் தத்துவம் வழங்கிடும்போது, விஞ்ஞானம் என்பது தத்துவ சிந்தனையின் ஒரு அங்கமாகச் சுவீகரிக்கப்பட்டுவிடும். அதற்குள் விஞ்ஞானம் தனது அணுகுமுறையின் மட்டுப்பாடுகளையும், எல்லைகளையும்  உணர்ந்து தனக்கேயுரிய தனிச்சிறப்பான பணியை மட்டும் செய்யும்; தேவையில்லாமல் தத்துவத்தின் பிரதேசங்களுக்குள் மூக்கை நுழைக்காது! 

அதற்குமுன்னர், இயற்கையின் இயற்கை பற்றிய இக்கட்டுரையானது, அதனுடைய ஆழமான புரிதலைக்கொண்டு இயற்கைவாதம், விஞ்ஞானவாதம், பொருண்மைவாதம்,பகுத்தறிவுவாதம்,சுருக்கல்வாதம், இன்ன பிற வாதங்களின் மேலோட்டமான தன்மைகளையும், மட்டுப்பாடுகளையும் வெளிச்சத்திற்குக்கொண்டுவந்திட அவைகளின் ஆரவாரச் சலசலப்புகள் அடங்கிப்போகும்!

பொதுவாக இயற்கை என்றாலே அது தானே தோன்றியது என்பதாக நம்பப்படுகிறது, அடுத்து  இயற்கைக்கு யாதொரு குறிக்கோளும், இலக்கும், நோக்கமும் கிடையாது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், இவ்விரு நம்பிக்கைகளும் தவறானவை. ஏனெனில், இயற்கை தானேதோன்றியதல்ல. மேலும் இயற்கைக்கு குறிக்கோளும், இலக்கும், நோக்கமும் உள்ளன. இல்லாவிடில், அது ஒரு பரிணாம இயக்கமாக விளங்காது! அதாவது இயற்கை என்றாலே அது பரிணமிக்கும் இயற்கையே! இயற்கை என்பது எல்லாக்காலத்திலும் ஒரேவித தன்மையை, பண்பை, இயல்பைக் கொண்டதல்ல. ஆதி ஆரம்பக்கட்டத்தில், இயற்கையானது சடப்பொருளாக (அணுத்துகள்களாக) த்தான் தொடங்கியது. பிறகு பரிணாம மாற்றத்தின் விளைவாக சடப்பொருளானது உயிருள்ள ஜீவியாக எழுந்தது! 

இக்காலக்கட்டத்தில், இயற்கை என்பது "சடப்பண்பு + உயிர்ப்பண்பு" என்பதாக விளங்கியது. பிறகு, தொடர்ந்த  பரிணாமத்தின் விளைவாக உணர்வுள்ள மனிதஜீவியாக வெளிப்பட்டது. இக்காலக்கட்டத்தில் இயற்கை என்பது  "சடப்பண்பு + உயிர்ப்பண்பு +உணர்வுப்பண்பு"  என்பதாக ஆகியது. 

இப்போதைக்கு இயற்கை என்பது சடம், உயிர், உணர்வு எனும் மூன்று பண்புகளின் தொகுப்பாக உள்ளது எனக்காணலாம் என்றாலும், பண்பினடிப்படையில், மேலுயர்ந்து நிற்பது என்னவோ உணர்வு எனும் பண்புதான். ஆகவே, இயற்கையின் தற்போதைய பிரதான பண்பு உணர்வு என்பதே ஆகும். அதே நேரத்தில், மனிதனின் வழியே எட்டப்பட்ட உணர்வு என்பது எவ்வகையிலும் முழுமையானதோ, அல்லது, இறுதியானதோ அல்ல. இதன் அர்த்தம், மனிதஜீவியோ, அல்லது, மனித உணர்வோ, பரிணாமத்தின் இறுதியான இலக்கு நிலை அல்ல. அதாவது பரிணாமம் இன்னும் முடியவில்லை! பரிணாமம் எப்போது முழுமையடைகிறதோ அப்போதுதான் இயற்கை தனது அசலான இயற்கையை, இயல்பை அடைகிறது! அதுவரை, இயற்கை என்பது அவ்வக்காலக்கட்டங்களில் வெளிப்பட்ட பண்பினால் மட்டுப்படுத்தப்பட்டதொரு மெய்ம்மை மட்டுமேயாகும்.

அப்படியானால்,  பரிணாம இயற்கையின் முடிவான இறுதியான பண்பு எது? எவ்வொரு மெய்ம்மையானது காலமற்றதோ, வெளியுமற்றதோ அது நிச்சயமாக நித்தியமான தாகத் (Eternal) தான் இருக்கமுடியும்! அத்தகைய மெய்ம்மைக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது, ஆகவே அது தன்னில் தானே சுயம்புவாகத்தோன்றியதாகவும் நித்தியமாக இலங்குவதாகவும் (Self- Existent)இருக்கும். அத்தகைய மெய்ம்மையை நாம் "பேரியற்கை" அல்லது "அதி-இயற்கை" என்றழைக்கலாம்.  மேலும், அதை நாம் சாதாரண பொதுமக்களின் மொழியில் "கடவுள்" எனவும் அழைக்கலாம்! அதில், வெட்கப்படவோ, கூச்சப்படவோ, தவறாகத்தெரியுமோ  என்றெல்லாம் ஐயங்கொள்ளவோ தேவையில்லை! மாறாக, உயிரும், உணர்ச்சியும், உணர்வும் அற்ற ஊமைச்சடத்தை மூல-மெய்ம்மயாக, அதாவது பரம்பொருளாக, 'கடவுள்' என்பதாகச் சொல்வோமெனில்; அதிலும்  நாம் உணர்வின் ஜீவி எனும் உண்மையைத்துறந்துவிட்டுச் சொல்வோமெனில் அப்போது தான் நாம் உண்மையில் வெட்கப்படவும், கூனிக்குறுகவும், தலைகுனியவும் வேண்டும்! கணிதத்தில் நாம் "அனந்தம்" (infinity)என்கிற அம்சம் பற்றிப்பேசுகிறோம், ஆனால், அதை வெறுமனே நுட்பரீதியாக ஒரு குறியீடாக மட்டுமே கையாளுகிறோம். அதாவது, இணைகோடுகளின் பண்புகளைப் பற்றிப்பேசும்போது, "அவை அனந்தத்தில் சந்தித்துக்கொள்கின்றன!" என்பதாகக்குறிப்பிடுகிறோம். ஆனால், ஆழ்-உளவியல் பூர்வமாக, அசாதாரண- உணர்வு நிலையில், அனந்தத்தை நாம் நேரடியாக அனுபவம் கொள்ள முடியும்! அதாவது, "அனந்தம்" என்பது வெறும் குறியீடு அல்ல, அது நிஜத்திலும் நிஜமான, மிகத்திடமான ஒரு இறுதியான "உணர்வு நிலை"யாகும்.  

இயற்கையை நாம் அதனுடைய புதிரான அம்சத்தையும் அதனுடைய மறைபொருளான இயல்பையும் கழித்துக்கட்டிவிட்டு, அதை வெறும் சடத்தனமான அணுத்துகள்களின் சேர்க்கை என்பதாகக் காணவே விரும்புகிறோம்! ஆனால், 'இயற்கை' என்பது நாம் நினைப்பதுபோல் வெறுமனே 'இயற்கையானது' அல்ல! மாறாக, "பேரியற்கை"யானது தன்னைத்தானே சுருக்கிக்கொண்டதனால் விளைந்ததே இயற்கை! அதாவது, "காலாதீதம்" தம்மைத்தாமே நிராகரித்துக்கொண்டதால் (self-cancellation) விளைந்ததே "காலம்" என்பதாகும். அவ்வாறே, வெளி-கடந்த நிலை தம்மைத் தாமே விலக்கிக்கொண்டதால் விளைந்ததே வெளி (Space)என்பதாகும்! அதாவது "ஒருமை" வெடித்துச்சிதறியதனால்  தோன்றியதுதான் நாம் வாழும் இந்த பன்மையின் உலகம்! 

இங்கே, மேலே "காலாதீதம்" (காலம்-அற்ற நிலை,Timelessness), வெளி-அற்ற நிலை (Spacelessness); "அனந்தம்" (infinity),"பேரியற்கை" (Meta-Nature) போன்ற சொற்களைப் பயன்படுத்துவது கண்டு அஞ்சவோ, அல்லது, முகம்சுளிக்கவோ தேவையில்லை! ஏனெனில், இவை விஞ்ஞானிகள் கையாளுகின்ற சில தந்திரமான, கற்பனையான விஷயங்களைவிட நேர்மையானதும், நிஜத்திலும் நிஜமானதுமாகும். அதாவது, விஞ்ஞானிகள், எதிர்மறை-காலம் (Negative-Time),எதிர்-பொருள் (Anti-Matter),மற்றும் 'பல பிரபஞ்சங்கள்' (Multiple-Universes), 'கற்பனை-எண்கள்' (Imaginary Numbers)போன்ற இல்லாத பொல்லாத கற்பனையான விஷயங்களை இணைத்துக்கொண்டு தங்களது கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள். 

ஏனெனில், இத்தகைய கற்பனையான அம்சங்களைச் சேர்க்காவிடில், அவர்களுடைய சமன்பாடுகளில் உள்ள ஓட்டைகளை, இடைவெளிகளை அடைத்து நிரப்பி சமன்செய்யமுடியாது. இதிலிருந்து தெளிவாகப் புலப்படும் அதிமுக்கியமானதொரு உண்மை என்னவெனில், இயற்கையை, பருப் பொருளின் உலகை, இயற்கையின் சொற்களையும், பருப்பொருளின் சொற்களையும் கொண்டு மட்டுமே விளக்கமுடிவதில்லை, புரிந்துகொள்ளமுடிவதில்லை என்பதுதான்! இவ்விஷயங்களை நாம்  இங்கே வெறும் விவாதத்திற்காக மட்டும் குறிப்பிடவில்லை, இவை மிகவும் சீரிய கவனத்திற்குரியவையாகும். ஏனெனில், 'இயற்கை' யைப் பிரதானப்படுத்தி பிரமாதப்படுத்திப்பேசுகிற 'இயற்கைவாதிகள்' பெரிதும் விஞ்ஞான அறிவையும் விஞ்ஞானத்தின் முடிவுகளையும் தான் சார்ந்திருக்கிறார்கள். ஆனால்,  விஞ்ஞான அறிவு பெரிதும் மட்டுப்பாடானதாயுள்ளது, குறிப்பாக பெரும் ஓட்டைகளையும், இடைவெளிகளையும் கொண்டதாயுள்ளது!

இயற்கையின் இயற்கை பற்றி இக்கட்டுரை வழங்கிடும் புதிய புரிதலை ஒருமுறை தொகுத்துப்பார்த்துக்கொள்வோம்.  இயற்கை  என்பது நிரந்தரமான  ஒரே  தன்மையை, அல்லது சாரத்தைக்கொண்ட ஒன்றல்ல! இயற்கையின்  இயற்கை எத்தகையது? இயற்கை என்பது  ஒரு இயக்கமாகும் -  அது  தனது  அசலான  இயற்கையை    நாடிச் செல்கிறது!    (Nature seeks its own true nature). அந்த  வழிமுறையைத்தான்  நாம்  பரிணாமம் என்கிறோம். இயற்கையின்-உலகில்    நிகழும்   விஷயங்களை,   நிகழ்வுகளை இயற்கையானது   என்று குறிப்பிடுவது வழக்கத்தின்பாற்பட்டது, புரிந்து கொள்ளப்படக்கூடியது, மேலோட்டமானது, ஆகவே அது பிழையானது! இன்னும்,   இயற்கையானது என்பது இறுதியானதல்ல!   முதலிடத்தில், இயற்கையின் தோற்றம் அல்லது தொடக்கம் என்பதும்  இயற்கையானதல்ல!மாறாக, அது இயற்கையல்லாத வேறொரு மெய்ம்மை யின், பேரியற்கையின் மாறியதொரு வடிவமே, விளைவே! ஆகவே  இயற்கையை, உலகம் அல்லது பிரபஞ்சத்தை, அல்லது பௌதீகச்  சடப்பொருளை(இவையனைத்தும் ஒன்றுதான்; ஆகவே இவை எதையும்) முதன்மைப்படுத்தவோ, அடிப்படை அம்சம் எனக்கொள்ளவோ முடியாது!

விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும், சடப்பொருளின் சடப்பண்பைத்தான் இயற்கை யின் "சாரம்" என்பதாகக்கருதுகிறார்கள்! அதாவது பிரபஞ்சத்தின் ஒருமை அதன் பொருண்மைப்பண்பில் அடங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்! ஆனால், இவை முற்றிலும் தவறான புரிதலின் முடிவுகளே. ஏனெனில், சடப்பொருள், அல்லது பருப்பொருள் என்பது பரிணாமத்தின் தொடக்க நிலை நிஜமும், மற்றும் பரிணாமத்தின் கருவியும், ஊடகமும் மட்டுமே. அதாவது சடப்பண்பைக்கொண்ட, பருப்பொருள் என்பது இயற்கையின், உலகம், அல்லது பிரபஞ்சத்தின் தொடக்க நிலை நிஜம் மட்டுமே; அதாவது அது வெறும் ஒரு கட்டுமானப்பொருள் (Building-Material) மட்டுமே! ஏனெனில், பருப்பொருள் அதனுடைய  அணுத்துகள்கள் எனும் அடிப்படை நிலை அல்லது வடிவத்திலேயே கால வெளியில் தாறு மாறாக இயங்கிக்கொண்டு ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொண்டு இருக்கவில்லை. மாறாக, அணுத்துகள்கள் ஒன்றோடொன்று இணந்து மூலக்கூறுகளாகி பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து     பல்வேறு  மூலகங்களாகி,  பல்வேறு அண்ட வெளிப்பொருட்களாகி (கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்களைக்கொண்ட) ஒரு மாபெரும் பௌதீகப் பிரபஞ்சமாக விரிந்தது! ஆனால், அவை அத்துடன் நிற்கவில்லை! பொருளியல் தளத்தின் அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தீர்த்துமுடித்ததும், அணுத்துகள்கள் பொருண்மைத்தன்மையைக் கடக்கும்விதத்தில் மேலும் சிக்கலான கட்டமைப்புகளில் தம்மை அமைத்துக்கொண்டு உயிர்த்தன்மையை எட்டும் உயிர்ஜீவியாக எழுந்தது! உயிர்த்தன்மையை எட்டியதுடன் நில்லாமல், அடுத்து பல்வேறு உயிரினங்களின் வழியாக புலன் -உணர்வை எட்டியது! ஆனால், உயிர்ஜீவிகளின் புலன் உணர்வு என்பது வெறுமனே புற(வுலக)த்தை உணரவும், அறியவும், ஆராயவும் உதவுகின்ற உணர்வு மாத்திரமே; அதாவது ஒரு உயிர்ஜீவியானது தனது சொந்த இருப்பை உணராமல் அறியாமல் புற(வுலக)த்தை அறிவதனால் என்ன பயன்? ஆகவே, தன்னை தனதிருப்பை உணரக்கூடியவகையிலான "சுய-உணர்வை" எட்டும் வகையிலான மிகவும் சிக்கல்வாய்ந்த பொறியமைப்பாக மனிதஜீவியினுள் மூளையாக அமைந்து அம்மூளையின் செயல்பாட்டின் மூலம் சுய-உணர்வை எட்டியது!

இவ்வாறு, மனிதஜீவியினுள் மிகவும் சிக்கல்வாய்ந்த பொறியமைப்பான மூளையாக அமைந்ததுடன், பெரு-வெடிப்பில் முதன்முதலில், அணுத்துகள்களாக எழுந்த ஆதி இயற்கை விடை பெற்றுக்கொள்கின்றது! அதாவது, சடப்பண்பைக்கொண்ட, பருப்பொருளானது அமைந்திடக்கூடிய ஆக இறுதியான கட்டமைப்பு மனித-மூளை தானாகும்! ஏனெனில், மனித மூளையின் செயல்பாட்டின் விளைவாக வெளிப்பட்ட "சுய-உணர்வு" இயற்கையின் முடிவையும், பேரியற்கையின் தொடக்கத்தையும் குறிப்பதாகிறது! அதாவது "உணர்வு"தான் பேரியற்கையின் அடிப்படைப்பண்பு ஆகும்! 

மனிதஜீவியைப்பொறுத்தவரை, அவன் இயற்கைக்கும், பேரியற்கைக்கும் இடையே தத்தளித்துக்கொண்டிருக்கிறான்! இயற்கையுடன் தங்கிவிடுவதா, அல்லது, பேரியற்கையுடன் சேர்வதா என்ற தேர்வுச்சங்கடத்தில் சிக்கித் தடுமாறுகிறான்.மிகப்பெரும்பாலான மனிதர்கள்தங்களைத்தங்களது உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டுவிடுவதன் விளைவாக இயற்கையுடன் தங்கி விடுகின்றனர்! ஆனால், மனிதன் அவனது தோற்றுவாயின்படி, உணர்வை, அதாவது, பேரியற்கையைச் சேர்ந்தவனே! ஏனெனில், "உணர்வு" தான் மனிதன்! உண்மையில், மனிதன்   இயற்கையான
வனோ அல்லது இயற்கையின், பிரபஞ்சத்தின் பகுதியோ அல்ல! அதே நேரத்தில், மனிதன் தன்னை தனது உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வானெனில், அவன் இயற்கையைச் சேர்ந்தவனாகி விடுகிறான்! மாறாக, "தான் ஒரு உணர்வு தான்!" என்கிற உண்மையை உணர்ந்திட்ட ஒருவன் தனது உணர்வுப்பரிணாமத்தின் உச்சியில் பேரியற்கையை, அதாவது பேருணர்வைச் சேர்கிறான்! இந்த உண்மையை உணரும் வரை, அதாவது, தனது உணர்வில் முற்றிக்கனியும் வரை, அவன் இயற்கையைச் சார்ந்தவனாக இருக்கிறான்; எவ்வாறு, ஒரு மரத்தின் காயானது முற்றிக் கனியாகும் வரை அம்மரத்தைச் சார்ந்ததாக இருக்கிறதோ, அவ்வாறு! 

"தான் ஒரு உணர்வு தான்!" என்கிற உண்மையை உணர்ந்து, அவ்வுணர்வில் ஆழ்ந்து நிலைத்து, அவ்வழியே உணர்வில் பெருகி உயர்ந்து பேருணர்வைச் சேர்ந்திடும் போது, ஒருவன் இயற்கை மற்றும் பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டுவிடுகிறான்;  எவ்வாறு, ஒரு மரத்தின் காயானது  நன்கு கனிந்து கனியானதும் அம்மரத்திலிருந்து அகன்றுவிகிறதோ, அவ்வாறு! இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புறவு என்பது, ஒரு மரத்திற்கும் அதன் காய்களுக்கும் உள்ள அதே தொடர்புறவைப்போன்றதே! காய்கள் மரத்தின் பகுதியாகத் தோன்றினாலும், அவை ஒரு மரத்தின் பிற பகுதிகளான அடித்தண்டு, கிளைகள், சிம்புகள், இலைகள் ஆகியவற்றைப் போன்றதல்ல. மாறாக, காய்கள்,முற்றிக் கனிகளாகக்கூடியவையாதலால், அவை, மரத்தின் முழுமையைக்குறிக்கும் மகுடம் போன்ற பகுதியாகும். மனிதனும், அவ்வாறே இயற்கையிலிருந்து தோன்றினாலும், அவன் இயற்கையை, பிரபஞ்சத்தைச் சேர்ந்தவனோ, அல்லது, பெரும் விஞ்ஞானிகள் கூறுவதைப்போல பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற ஏதோவொரு பகுதியோ அல்ல! மாறாக, மனிதனே பிரபஞ்ச விருட்சத்தின் "கனி" ஆவான்! ஒரே ஒரு குறை, எல்லா மனிதர்களும் தம் உணர்வில் கனிவதில்லை என்பது மட்டும் தான்!

இக்கட்டுரை முன்வைக்கும் பிரதான கண்டுபிடிப்பு, உண்மை, செய்தி என்னவென்றால், மனிதனை இயற்கைப்படுத்த இயலாது, அதாவது, மனிதனது மனதையோ, உணர்வையோ, அல்லது அவனது இருப்பின் தன்மையையோ, அவனது செயல்பாடுகளையோ, நோக்கத்தையோ, இலக்கையோ, எதையும் இயற்கைப்படுத்த இயலாது! இன்னும் இயற்கையையும்கூட  இயற்கைப்படுத்த இயலாது! ஏனெனில், இயற்கையே இயற்கையானதல்ல; அதாவது, இயற்கை தன்னில்தானே தோன்றியதல்ல!மாறாக, ஒரு பேரியற்கை சுருங்கியதனால் ஏற்பட்டவிளைவுதான் இயற்கை!ஆம், இயற்கை என்பது இயற்கையை மீறியதொரு மெய்ம்மையின் வெறும் ஒரு குறியீடு மட்டுமே ஆகும்!இயற்கை என்பது  ஒரு பரிணாம இயக்கமாகும்! அது எவ்வொரு குறிப்பிட்ட இயற்கையுடனும் (அதாவது, இயல்பு அல்லது பண்புடனும்) தங்கி விடுவதில்லை! இயற்கை, அல்லது இயற்கையானது என்பது இறுதியானது அல்ல! இயற்கையின் அசலான இயற்கை (பண்பு) பரிணாமத்தின் இறுதியில்அது எத்தகைய பண்பை எட்டுகிறதோ அதில் தான் அடங்கியுள்ளது!

பரிணாமம் பருப்பொருளை ஒரு கருவியாக, ஊடகமாகக் கொண்டு தொடங்கியதால், சடப்பண்புதான் இயற்கையின் சாரம் என விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும் கூறுவது தவறு! இயற்கையை அதன் தொடக்க நிலைப் பண்பிற்குக் குறைப்பதன் வழியாக, அவர்கள் இயற்கையை மேன்மைப்படுத்தவில்லை, மாறாக, பெரிதும் கொச்சைப்படுத்திவிட்டார்கள். இயற்கைவாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் மட்டுப்படுத்தும் பிடியிலிருந்து இயற்கையை மீட்பதன் அவசியத்தை உணர்த்தவும்; முக்கியமாக, மனிதனை இயற்கைப்படுத்தி அவனை வெறும் சிந்திக்கும் விலங்காகச் சுருக்கிவிடும் போக்கைக் கண்டிக்கவும் தான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது!

ஆக, நாம் மிகத்தெளிவாக 'இயற்கை'யின் அசலான இயற்கை என்னவென்று புரிந்துகொள்ளவில்லை யென்றால், ஒரு அர்த்தமுள்ளவகையில் இயற்கை பற்றிப் பேச இயலாது! ஆக, இந்நிலையில், இயற்கையை அடிப்படையாகக்கொண்டதொரு முறையான 'இயற்கைவாதம்' எதுவும் இருக்கமுடியாது! தற்போது மேற்குலகில் பேசப்படும் இயற்கைவாதம் என்பது பெரிதும் சிந்தாந்தரீதியான விஷயமேதவிர,அது உண்மையிலேயே தத்துவபூர்வமானது அல்ல எனலாம். "இயற்கையே எல்லாம்" "இயற்கை மட்டுமே போதுமானது" என்பனபோன்ற இயற்கைவாதிகளின்  முழக்கங்கள் அடிப்படையற்றவை. ஏனெனில், இயற்கை என்பது  எவ்வொரு குறிப்பிட்ட இயற்கையுடனும் (இயல்புடனும்) தங்கித்தேங்கி விடாமல், தொடர்ந்து தன்னைத்தானே கடந்து செல்லும் இயக்கமாக விளங்குகிறது. அதாவது, பௌதீகச் சடப்பொருளாகத் தொடங்கிய இயற்கையானது, உயிர் எனும் விசேட இருப்பு நிலையுடன் பொருந்தும் வகையில், உயிர்ஜீவியாக எழுந்து, அதையடுத்து, உணர்வு எனும் இருப்பு நிலையுடன் பொருந்தும்வகையில் மனிதஜீவியாக, மனிதனுள் உணர்வைத்தாங்கும் வகையிலான மூளை எனும் மிகச் சிக்கலான பொறியமைப்பாக மலர்ந்துள்ளது! அதாவது, இயற்கையானது மேன்மேலும் உணர்வுப்படுத்தப்படும் பாதையில் (Spiritualization) முன்னேறிச்சென்றுகொண்டு இருக்கையில்,  மனித-மனதை, அதாவது உணர்வை இயற்கைப்படுத்துவது என்கிற இயற்கைவாதிகளின் பேச்சு படு வியர்த்தமானதாகும். 

பரவலாக, மனிதஜீவிகள் விலங்குஜீவிகளைப்போலவே வாழ்ந்து செல்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலையாக இருக்கிறது  என்பதால், மனிதர்களை விலங்கினத்தில் சேர்த்துவிட முடியாது! மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியவன் என்பது அவனது பரிணாமக் கடந்தகாலம் ஆகும். எந்திரங்கள் தான் எந்திரங்கள்; விலங்குகள் எந்திரங்கள் அல்ல! மனிதர்கள் விலங்குகள் அல்ல! ஆனால், மனிதர்கள் மனிதர்களாக ஆகிட வேண்டும்! அதற்கு அவன் மிக ஆழமாக தனது இருப்பு குறித்தும், ஒட்டு மொத்த இருப்பு குறித்தும் உணர்வுக்கு வந்திடவேண்டும்! மனிதர்கள் இயற்கைப்பிராணிகள் அல்ல! ஏனெனில், "உணர்வு" இயற்கையானது அல்ல! மனிதன் ஒரு விலங்கு ஜீவியல்ல, அவன் ஒரு விலங்கு ஜீவியினுள் (அதாவது, உடலினுள்) ஜனித்த உணர்வு ஆவான்! அதாவது உணர்வாக மேலெழ வேண்டிய மனிதன், தன்னை உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, உணர்வின் வாழ்க்கையை வாழ்வதற்கு மாறாக, ஒரு விலங்கைப்போல, உடலின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்; இது ஒரு தடுமாற்றமான நிலையும், அடையாள-மாறாட்டச் சிக்கலும் ஆகும்! இதைச் சாக்காக வைத்துக்கொண்டு, மனிதனை இயற்கைப்படுத்த முயற்சிப்பது, அதாவது மனிதனை ஒரு விலங்காகச் சித்தரிப்பது என்பது டார்வினிய- பாணி மடமையாகும்!

அடுத்து, இயற்கைவாதமானது, இயற்கையில் உள்ளார்ந்து இருப்பதாகவோ, அல்லது, இயற்கை மீறியதொரு சக்தியினால் சுமத்தப்பட்டதாகவோ யாதொரு குறிக்கோளும் கிடையாது என்கிறது!இவ்வாறு, 'இயற்கை (அல்லது, பரிணாமம்) குறிக்கோளற்றது, நோக்கமற்றது', 'பிரபஞ்சம் அர்த்தமற்றது', 'மனித வாழ்வும் அப்படியே', 'வெறுமனே உயிர்பிழைத்திருப்பது, அதாவது, மரபணுக்களை விருத்தி செய்வதற்காக சந்ததிகளைப் பெருக்குவது என்பதற்கு மேல் மனிதவாழ்க்கைக்கு வேறு குறிக்கோள், இலக்கு எதுவும் இல்லை!' என்றெல்லாம் சொல்வதற்கு 'இயற்கைவாதம்' எனும் தத்துவம் எதற்கு? தவளைகள் தத்துவம் பேசுவதில்லை, என்பதைவிட அவைகளுக்கு முதலிடத்தில் தத்துவம் தேவையே இல்லை! அவ்வாறே, இயற்கைவாதிகளுக்கும் தத்துவம் தேவையில்லை; ஆனால், அவர்கள் தத்துவம்பேசுகிறார்கள், அதற்குப்பெயர்தான் "இயற்கைவாதம்"(Naturalism) எனப்படும் "தவளைகளின் தத்துவம்!"

'அறிவு' குறித்த விஷயத்தில், இயற்கைவாத 'உலகப்பார்வை' யானது இயற்கை விஞ்ஞானங்களைச்சார்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; இயற்கையில் உள்ள விஷயங்களைப்பற்றியும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதுபற்றியுமான அறிவை பிரதானமாக இயற்கை-விஞ்ஞானமே வெகுசிறப்பாகச்சாதிப்பதாகவும், தனிமனிதனின் அகவய வெளிப்பாடும், சமய மரபும் அல்ல என்பதாகச் சொல்கிறது! ஆனால், இயற்கைவாதம், விஞ்ஞானவாதம்  என்பவை மதங்கள் அல்லாமல் வேறென்ன? குருட்டுத்தனமாக, இயற்கையை வழிபட்டால் என்ன? அல்லது, இயற்கை மீறிய சக்தியாகச் சொல்லப்படும் கடவுளை வழிபட்டால் என்ன? 'இயற்கை'  என்றால்  என்னவென்று இயற்கைவாதிகளுக்குத் தெரியாது! அதுபோலவே, கடவுள் என்றால் என்னவென்று அதி-இயற்கை வாதிகளுக்குத் தெரியாது! 

நல்லது, "இயற்கை இயற்கையானதல்ல!" எனவும், "இறுதி ஆய்வில் இயற்கை என்று எதுவும் இல்லை" எனவும், "இயற்கை என்பது வெறும் பரிணாமக்கருவி அல்லது ஊடகம் மட்டுமே"எனவும் "இயற்கையின் உண்மையான இயற்கை(இயல்பு) உணர்வே" எனவும், "இயற்கை என்பது பேரியற்கையின் சுருங்கிய நிலையே" எனவும் இக்கட்டுரையாளர் முன்வைப்பதால், ஏதோ அவர் "கடவுளை" பின் கதவு வழியாக வீட்டிற்குள் கொண்டுவந்திட முயற்சிப்பதாக எவரும் எண்ணவேண்டாம்! ஏனெனில், நதியானது இறுதியாக சமுத்திரத்தைச் சென்று சேர்வதைப்போல இயற்கையானது இறுதியில் பேருணர்வைச் சேர்வது என்பது முன் தீர்மானிக்கப்பட்ட இலக்கு ஆகும்! பரிணாமப்பயணத்தின் ஒரு ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், அது தன் இலக்கைச் சென்று அடைவதற்கான பாதை முன்-தீர்மானிக்கப்பட்டதல்ல என்பதுதான்! ஆம், நதியானது சென்று சேருமிடம் முன்-தீர்மானிக்கப்பட்டது போல அது செல்லக்கூடிய பாதை முன்-தீர்மானிக்கப்படுவதில்லை! அதாவது, சடமாகத்தொடங்கிய இயற்கை, ஒரு கட்டத்தில் உயிர் பெற்றது, தற்போது மனிதனுள் உணர்வு பெற்று எழுந்துள்ளது, இறுதியாக அது அடையக்கூடியதாக  மனித உணர்வைக்கடந்த "பேருணர்வு" நிலைதான் எஞ்சியுள்ளது! 

ஆனால்,பரிணாம வரலாற்றில்,  சிற்றுணர்வைத் தாங்கும் ஜீவியாக மனிதஜீவி தோன்றியதைப்போல, பேருணர்வைத் தாங்குவதற்காக, மனிதனையடுத்து வேறொரு ஜீவி தோன்றிடுமா என்றால் அதற்கான சாத்தியம் இல்லை! ஏனெனில், மனித மூளை-அமைப்பு தான் சடப்பொருளால் கட்டமையக்கூடிய இறுதியான சிக்கலான-அமைப்பு ஆகும்! வேண்டுமானால், மூளையின் "நியூரான்கள்" (neurons) எனப்படும் ஸெல்களின் பின்னலமைப்புகளிலும், நியூரான்களில் ஏற்படும் மாறுபாடு (Mutations)களிலும், அடுத்தக்கட்ட நிலைகள் வெளிப்படலாம். இதன் அர்த்தம், மனிதஜீவியின் உணர்வில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் வழியாகத்தான் பரிணாமம் தனது இறுதி முழுமையை அடையவிருக்கிறது. அதாவது, மனிதஜீவி தான் இறுதியான உயிரியல் ஜீவியாவான்! மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிந்துவிட, உணர்வியல் பரிணாமம் தொடங்கியது மட்டுமல்லாமல், மனிதனை (மனித-உணர்வைக்) கொண்டே,  உணர்வின் முழுமை எட்டப்படுகிறது! ஏற்கனவே, அந்த உணர்வின் உச்சமானது உணர்வுமிக்க பல தனிமனிதர்களால் எட்டப்பட்டுள்ளது! அவர்கள் ஏற்கனவே "பேருணர்வு" எனும் பேரியற்கையுடன் கலந்துவிட்டனர்!

ஆம், பேருணர்வு தான் "மூல-மெய்ம்மை" யும், முடிவான "இறுதி-மெய்ம்மை" யும் ஆகும்! இயற்கை உலகம், பிரபஞ்சம் என்பதன் "ஒருமை" அதன் பொருண்மையில் அடங்கியிருக்கவில்லை. மாறாக, பரிணாமத்தின் வழியாக அது அடையக்கூடிய இறுதிப் பேருணர்வில் தான் அடங்கியிருக்கிறது! The Unity of the Universe (Nature) lies not in its materiality but what it ultimately reaches through evolution, that is, in Cosmic Consciousness! 

இயற்கை (பௌதீகப்பிரபஞ்சம்), மனிதன் (சிற்றுணர்வு), கடவுள் (பேருணர்வு) இம்மூன்றும் இறுதியில் ஒன்றே!

மா.கணேசன்/14.10.2016
---------------------------------------------------------------

Friday, 21 October 2016

உயிர் எனும் புதிர்!



  நோக்கமின்றி, குறிக்கோளின்றி
  சுழன்று கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில்
  நோக்கத்துடனும் குறிக்கோளுடனும்
  இலைகளைத்தேடி ஊர்ந்து செல்லும்
  அற்புதத்திற்குப் பெயர் புழு!

உயிர் எவ்வாறு தோன்றியது? இக்கேள்வி மனிதகுலத்தை ஆதியிலிருந்தே கவர்ந்து வந்துள்ளது.ஒரு அம்சம் அல்லது ஒரு ஜீவி தன்னைப்பற்றிய உணர்வுக்கு வந்ததும், அது உடனே தன்னைச்சுற்றியுள்ள உலகைப்பற்றியும், தன்னைப்பற்றியும், தன்னுடைய ஆரம்பம் பற்றியும் கேள்விகளைக்கேட்கத்தொடங்கி விடுகிறது. ஆகவேதான், ஆதித்தொல்கதைகளும், புராணிகங்களும் உலகின்பிறப்பை மையமாகக் கொண்டவையாக உள்ளன. ஆனால், விஞ்ஞானம் பெருமளவு முன்னேற்றம்
அடைந்திருந்தாலும்,  இன்றளவும் 'உயிர்' எவ்வாறு தோன்றியது, 'உயிர்' என்றால் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை அதனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஒருவகையில், உயிர் எவ்வாறு தோன்றியது என்பதுபற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.ஆனால், "உயிர்" என்றால் என்ன என்பதற்கு தெளிவான யாதொரு பதிலும், விளக்கமும் இதுவரை இல்லை.

உயிரானது, தன்னியல்பாக, புறக்காரணமின்றி தானே(spontaneous generation)தோன்றியது; கடவுளால் படைக்கப்பட்டது ( creationism);விண்வெளி யிலிருந்து பூமிக்குவந்தநுண்ணுயிரிகள்அல்லது  மூலக்கூறுகளால் உருவானது (panspermia);அளவுரீதியான கூறுகளின் திரட்சியினால்
விளைந்த பண்பு; சடப்பொருளானது படிப்படியாக உயர் தரம் பெற்று உருவானது; சடப்பொருளின்இயல்மலர்ச்சியாகத்தோன்றியது(emergentism) என உயிர்த்தோற்றம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.

அதே நேரத்தில், உயிர் என்றால் என்ன என்பதை முற்றிலும் பொதுவிதிகளிலிருந்து தனிநிகழ்வைத்தீர்மானிக்கும் தருக்க முறையாலும், அல்லது, முற்றிலும்  பரிசோதனைபூர்வமான முறையாலும்புரிந்து  கொள்ள முடியாது. இத்தகைய மாபெரும் சவாலை விஞ்ஞான அணுகுமுறையுடன், தத்துவஅணுகுமுறை, ஆழ்-முக சிந்தனை மற்றும் அகத்திறஉணர்வையும் (intuition) சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்டதொரு அணுகுமுறையால் மட்டுமே சந்திக்க முடியும்.

உயிர் என்பது எத்தகைய பரிமாணம் என்பதை, தவிர்க்கவியலாமல் உயிரற்ற பொருட்கள் அல்லது சுற்றியுள்ள பௌதீகஉலகிற்கு எதிராக நிறுத்திப்பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், உயிர் என்பது சடப்பண்பை மீறியதொரு நிலை அல்லது பரிமாணம் ஆகும். முக்கியமாக உயிரை சடப்பொருளின்ஒரு வகை யாகவோ, மிக விசேடமானதொரு நிலையாகவோ சுருக்கிக்காண முடியாது. ஆனால், விதிவிலக்கின்றி விஞ்ஞானிகள் அனைவரும் பொருளின் சொற்களில்தான் உயிரை விளக்க முயற்சிக்கிறார்கள். இதற்குக்காரணம் அவர்கள் சடப்பொருளை ஒரு அடிப்படையாக, தரஅளவாக (Standard) கொள்வதே ஆகும். ஒருவகையில், சடப்பொருள் என்பது ஒரு அடிப்படை ஊடகமாக (Medium)அமைந்துள்ளது என்பதென்னவோ உண்மைதான்.ஆனால், அதன் அர்த்தம் அனைத்து உயர் வளர்ச்சி நிலைகளையும் பொருளின் பண்புகளுக்குச் சுருக்கி, பொருளின் சொற்களில் தான்காணவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்பதில்லை. இவ்வாறு சுருக்கித்தான் காண வேண்டும்என்றால் பரிணாமம் என்பது தேவையில்லாத, அர்த்தமற்ற ஆடம்பரம் என்றாகி விடும். பிறகு, விஞ்ஞானம், ஆராய்ச்சி யாவும் அர்த்தமற்றவையாகிவிடும்.

ஆக, 'உயிர்' என்பது வேறு, உலகம் என்பது வேறு எனவும்;  உயிர்ப்பண்பு வேறு, சடப்பண்பு வேறு எனவும் பிரித்துப் பார்க்காமல் 'உயிர்' என்பதை முறையாகப் புரிந்துகொள்ளமுடியாது. அதேபோல், உயிர்-ஜீவி என்பது வேறு, உயிர் என்பது வேறு எனப் பிரித்துப் புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

ஒரு உயிர்-ஜீவி என்பது உலகத்திற்கும் (சுற்றுப்புறம்), 'உயிர்' என்பதற்கும் இடையேயான பாலம்அல்லது ஒரு  இணைப்புக்கண்ணி (Interface) போன்ற தாகும். அந்த இணைப்புப் புள்ளியில்உலகமும் உயிரும் சந்தித்துக்கொள்ளவும் உறவாடவும் செய்கின்றன. அதே நேரத்தில், உயிரைப்
பொறுத்தவரை, உலகுடன் உறவாடவோ, வினைபுரியவோ  எதுவும் இல்லை! மேலும், உலகைப்பொறுத்தவரையிலும் தன்னுடன் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை; ஆகவேதான், உலகம் (பருப்பொருள்) பரிணமிப்பதாயுள்ளது. ஆக உலகம் அல்லது பருப்பொருள் என்பது பரிணமித்து உயிர்-ஜீவியாக எழுந்தபிறகு, அது மீண்டும் பழைய பருப்பொருள் அல்ல. அவ்வாறு அதை பருப்பொருளின் சொற்களில் விவரிப்பது என்பது 'உயிர்' என்றால் என்னவென்று முறையாகப்புரிந்து கொள்ளஉதவிடாது.  அவ்வாறு நாம் விவரிக்கும் போது நாம் உண்மையில் உயிர்-ஜீவியைத்தான் விவரிக்
கிறோமே தவிர 'உயிரை' விவரிப்பதில்லை

ஒருவகையில், லாஸ்கானோ (Lazcano 1994)சரியாகத்தான் சொல்லியுள்ளார். அதாவது, 'உயிர்என்பது  இசையைப்போன்றது, அதை விவரிக்கமுடியும் ஆனால் விளக்கமுடியாது.'

ஒரு உயிர்-ஜீவி என்பது பருப்பொருளின் உலகம் தன்னைத்தானே கடந்து செல்வதற்காக பயன்படுத்திக்கொள்ள உருவாக்கியதொரு ஊர்தி அல்லது பாலம் போன்றதாகும். தன்னைத்தானே கடந்து செல்வது என்பது பொருண்மையல்லாத வேறொரு இருப்பு நிலையைத் தொடர்புகொள்ளத்
தானாகும்! பருப்பொருளிலிருந்து உருவானது என்கிற வகையில், ஒரு உயிர்-ஜீவி என்பது பருப்பொருள்-உலகின் "பிரதிநிதி" யாக விளங்குகிறது எனலாம். அதே நேரத்தில், பருப்பொருளாலான உயிர்-ஜீவியானது, பருப்பொருளின் உலகில் இருந்தாலும், இயங்கினாலும், தனது இயக்கத்திற்கான(எரி)சக்தியை (Energy) பருப்பொருளின் உலகிலிருந்து எடுத்துக்கொண்டாலும், பெரிதும்
அது பருப்பொருளின் உலகைச் சேர்ந்ததாய் இருப்பதில்லை. எவ்வொரு உயிர்-ஜீவியும் அதன்பாதங்களை இவ்வுலகில் ஊன்றியிருந்தாலும், அதன் தலையை வேறொரு உலகினுள் நுழைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்! ஆகவேதான், ஒரு உயிர்-ஜீவி என்பதை இப்பிரபஞ்சத்தி னுள்ளே இயங்கும் இன்னொரு பிரபஞ்சம் என்று சொல்வது மிகப்பொருத்தமாயிருக்கும்!

ஆம், பருப்பொருளின் பிரபஞ்சம் தனது சடப்பண்பைக் கடந்து செல்லும்பரிணாம வழிமுறையில்,தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொண்டு எடுத்த புதியதொரு அவதாரம் தான் "உயிர்-ஜீவி"
என்பதாகும்!

இவ்விடத்தில், பருப்பொருளின் உலகிற்கும் உயிர்-ஜீவிக்கும் உள்ள தொடர்புறவு எத்தகையது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியமாகும். உலகம், அல்லது சுற்றுப்புறம், அல்லது பருப்பொருள், அல்லது இயற்கை என்று அதை எவ்வாறு அழைத்தாலும், அது எவ்வொரு உயிர்-ஜீவிக்கும் எதிராக இருப்பதோ, செயல்படுவதோ இல்லை. பரந்த பிரபஞ்சத்தைப்பொறுத்தவரை அது பாராமுகமாக (Indifferent) இருப்பதாகத்தெரிவதென்னவோ உண்மைதான்! ஆனால்,
பூமிக்கிரகத்தைப்பொறுத்தவரை, அது உயிர்-ஜீவிகளுக்குப் பெரிதும் ஆதாரத்துணையாகத்தான்அமைந்துள்ளது.

ஒருவகையில், உயிர்-ஜீவிகள்தான் பருப்பொருள் உலகின் பண்புகளுக்கு மாறான வகையில், எதிர்த் திசையில் இயங்குவதாகச் சொல்லலாம்! ஒருமுறை  பருப்பொருள்- உலகின் ஒரு பகுதியானது மாற்றமடைந்து உயிர்-ஜீவியாக மாறிய பிறகு, அந்த உயிர்-ஜீவியானது தனது சுற்றுப்புற (உலக)த்திலிருந்து பிய்த்துக்கொண்டு தனியே பிரிந்து நிற்பதாகிறது! உயிர்-ஜீவி என்பது அது  தோன்றிய வகையின்படி, அது பருப்பொருள் உலகம் அல்லது இயற்கையின் (மிக வித்தியாசமானதொரு புனிதப்பணித்திட்டத்தை சிரமேற் கொண்டியங்கும்) ஒரு பிரதிநிதி போன்றதே. ஆம்,
உயிர்-ஜீவியானது இயற்கையின் பிரதிநிதியாக செயல்பட்டாலும், அது இயற்கையின் பருப்பொருளின் பண்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் இயற்கையின் உள்ளார்ந்த பரிணாம-விழைவின் இலக்கைப் பிரதிநிதித்து வம் செய்யும் கருவியாகவே விளங்குகிறது.

பருப்பொருளாலான தொடக்க-நிலை இயற்கையானது ஒரு உள்ளார்ந்த விழைவை, உந்துதலை, வேட்கையைக்கொண்டிருக்கிறது என்பது மிகத்தெளிவாக அது இன்றுவரை என்னென்னவாக பரிணாமம் பெற்றுள்ளது என்பதிலிருந்து சந்தேகத்திற்கிடமின்றி புலனாகியுள்ளது. அதேநேரத்தில்
இயற்கையின் உள்ளார்ந்த அந்த விழைவை, அதை ஒருவித 'ஏக்கம்' என்று சொல்வது இன்னும்அதிகப்பொருத்தமாக இருக்கும், அந்த ஏக்கம் எத்தகையது என்றால், எவ்வாறேனும் தனது பொருண்மைப்
பண்பினைக்கடந்து சென்றுவிடவேண்டும் என்பதே ஆகும். அதாவது சடப்பொருள்ஏன் தன் சடப்பண்பைக் கடந்திட வேண்டும் எனும் கேள்வியை நாம் இவ்விடத்தில் கேட்பது மிக அவசியம். ஏனெனில், சடப்பொருள் அல்லது பருப்பொருள் என்பது உண்மையில் வேறு ஏதோவொரு மெய்ம்மையின் சுருங்கிய நிலை அல்லது வடிவமாகத்தான் இருக்கவேண்டும்! ஆகவே
தான் அது தன் அசலான நிலையை அடையவேண்டி ஏக்கம்கொள்வதாகிறது!  அதேநேரத்தில்,சடப்பொருளின் இந்த ஏக்கம் எந்திர-வகைப்பட்டதாகும் (mechanical).ஒரு சுருள்வில் (spring)லானது சுருக்கப்பட்ட நிலையில் வைக்கப்படும்போது அது மீண்டும் தன் பழைய நிலைக்குத்
திரும்புவதற்கான அழுத்தத்தைக்கொண்டிருப்பது போன்றதாகும்

சுய-அமைப்பாக்கமுறையில் (Self- Organization) தன்னைக்கட்டமைத்துக்கொள்ளுதல் என்பது, பருப்பொருள் உலகின் மிக மையமான உள்ளார்ந்த விழைவு ஆகும். ஆம், பருப்பொருளானது
யாதொரு மாற்றத்திற்கும் உட்படாமல், பரிணமிக்காமல், அப்படியே எக்காலத்திற்கும் வெறும்சடமாக, சோம்பியவாறு, ஊமையாக, உணர்ச்சியற்ற, உணர்வற்ற ஒன்றாக; எந்திரத்தனமான இயக்கத்தில், அடிப்படை பௌதீக விசைகள் மற்றும் விதிகளால் ஆட்டுவிக்கப்படும் ஒன்றாகவே இருக்கமுடியாது.

ஸ்டீஃபென் ஜே. கௌல்டு  (Stephen Jay Gould) எனும் உயிரியல் பரிணாம விஞ்ஞானி, தனது "வியத்தகு உயிர்" (Wonderful Life)எனும் நூலின் கடைசிப்பகுதியில்,

   "மனிதப் பரிணாமம் என்பது  ஒழுங்குமுறையற்ற (random)தும்,      குறிக்கோளற்றதுமான
    ஒரு வழிமுறை எனப்புரிந்துகொள்வது அவசியம். அதாவது,  நம்முடைய தற்பெருமை தான்
    இயற்கை வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளதாகக் கற்பிக்கச்செய்கிறது. உயிரின் நாடாவை
    திரும்பவும் முதலிலிருந்து ஓடச்செய்தோமெனில், வரலாறு என்பது வேறாகவே வெளிப்
    படும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம். ஏனெனில், நாம்  ஒழுங்குமுறை
    யற்றதும், குறிக்கோளற்றதுமான  ஒரு வழிமுறையின் விளைபொருள் என்பதால், அவ்வழி
    முறையானது  மீண்டும் இதே நிகழ்கால நிலைமைக்குத் திரும்பாது. ஆகவே, ஒரு நிமிடம்
    கூட நாம் விசேடமானவர்கள் என எண்ணாமலிருப்போமாக..."

என எழுதியுள்ளார். ஆனால், ஸ்டீஃபென் ஜே. கௌல்டு - ன் கூற்றுக்கு மாறாக, மீண்டும் பரிணாம நாடாவை, முதலிலிருந்து ஓடச்செய்தோமெனில், அதே வரலாறானது அச்சுப் பிறழாமல் மீண்டும்அப்படியே நிகழ்ந்தேறும். மனிதஜீவிகளாகிய நாமும் அப்படியே இங்கிருப்போம் இப்போதிருப்பது
போலவே! யாதொரு மந்திர மாய சக்தியினால் அல்ல; மாறாக, ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய அதே  ஒழுங்கு முறை யற்றதும், குறிக்கோளற்றதுமான வழிமுறையினால்மட்டுமே அது சாத்திய மாகும்! ஏனெனில்,  ஏற்கனவே மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்க
ளும் இப்போது இங்கிருப்பதும் அதே வழிமுறையின் விளைவாகத்தானே சாத்தியமாகியது!

கடவுளாலோ, அல்லது வேறு எவ்வொரு சக்தியாலோ வழிநடத்தப்படாத, ஒழுங்குமுறைப்படுத்தப்படாத ஒரு இயற்கை வழிமுறை ஏன், எதற்காக உயிருள்ள ஜீவிகளையும், சிந்திக்கும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவி களையும் விளைவிக்கவேண்டும்? ஆக, எத்தனை முறை பரிணாம
நாடாவை, முதலிலிருந்து ஓடச்செய்தாலும், மீண்டும் மீண்டும், அதே விளைவுகள்தான் தோன்றும்! கடவுள் கூட தவறிழைத்திடக்கூடும், அல்லது மனம் மாறி வேறுவிதமாகப் படைப்பைச் செய்திடக்  கூடும்; ஆனால், இயற்கை வழிமுறை தவறிழைக்காது! அதே வேளையில், இயற்கையின் வழிமுறை உண்மையிலேயே தாறுமாறானதும், ஒழுங்குமுறையற்றதும், குறிக்கோளற்றதும், இலக்கற்றதும்தானா என்பது குறித்து பிறகு ஆய்ந்தறிவோம்.

ஆம், அடிப்படை அணுத்துகள்கள் அவற்றின் போக்கில் தனித்து விடப்பட்டால், அவை ஒன்றோடு ஒன்று இணைவதும்,  பிரிவதுமாக,  பல்வேறு சாத்தியப்பாடுகளைப் பரிட்சித்து, முதலில், நிலைப்பு கொண்ட மூலக்கூறு களாகவும், பிறகு பல்வேறு மூலகங்களாகவும், இவ்வாறு மேன்மேலும் சிக்க
லான அமைப்புகளாக எழும் பரிணாம வழிமுறையில், ஒரு கட்டத்தில் உயிர்ப்பண்பு பெற்ற மூலக்கூறுகளாக, அதாவது, நுண்ணுயிரிகளாக மாற்றமடைவதும், பிறகு, நுண்ணுயிரிகள் இணந்து பல்வேறு விலங்கு மற்றும் தாவர ஸெல்களாகி, பிறகு பல ஸெல்லுயிரிகளாகவும், முடிவில் மனிதஜீவிகளாகவும் வெளிப்படுவது என்பது தவிர்க்கவியலாது நிகழ்ந்துவிடுகிறது!

மேலும், மீண்டும் பரிணாமத்தை முதலிலிருந்து தொடங்கச்செய்தால், வேறுவிதமாகத்தான் பரிணாம வரலாறு அமையும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம் என்பதாகவே அமைந்தாலும், அதனால், தற்போதுவரை வெளிப்பட்ட வரலாறும், மனிதஜீவிகளாகிய நாமும்
நிஜமில்லை என்றாகிவிடப்போவதில்லை! ஏனெனில், இப்போதுள்ள நிஜமும், நிலையும் தான் ஆகச்சிறந்த சாத்தியப்பாடு(The best possible state or world)ஆகும்! மேலும்,காலத்தின் அம்பு (The Arrow of Time) ஒருபொதும் பின்னோக்கிச் செல்வதில்லை!

அதாவது, பூமியின்மீது உயிரி(உயிர்-ஜீவி) களும், மனிதஜீவிகளும் தோன்றியது, தற்செயலானதோ அல்லது விபத்து போன்றதோ அல்ல; மாறாக, அவை தவிர்க்கவியலாதவகையில் தோன்றியுள்ளன!
ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்களின் கூற்று தவறானது. அதாவது, மீண்டும் பரிணாமத்தை முதலிலிருந்து தொடங்கச்செய்தால், வேறுவிதமாகத்தான் பரிணாம வரலாறு அமையும் என்பதும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம் என்பதும் முற்றிலும் தவறானதாகும்! ஏனெனில், நாம்
எதிர்கொள்ளவேண்டிய தவிர்க்கவியலாத நிஜம், நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே! இதற்கு மாறாக,  "மீண்டும் முதலிலிருந்து தொடங்கினால், நாம் இங்கிருக்க மாட்டோம்"
என்பது போன்ற பேச்சுகள் முட்டாள்தனமானவையாகும். இத்தகைய பேச்சுகள் யாவும் ஏற்கனவே நிகழ்ந்தேறியுள்ள இயற்கை மற்றும் பரிணாம தருக்கங்களுக்கும், வழிமுறை மற்றும் விளைவுகளுக்கும் புறம்பானவையும், எதிரானவையுமாகும்.

அடுத்து, ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்களின் இன்னொரு கூற்றும், அதாவது, "நம்முடைய தற்பெருமை தான் இயற்கை - வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளதாகக் கற்பிக்கச்செய்கிறது" என்பதும் தவறானதாகும். இதே தொனியில், நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீவென்
வெய்ன்பெர்க் அவர்களும் சொல்லியுள்ளார். அதாவது, "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப்புரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது." என்பதுதான் அக்கூற்று. உண்மையில்,  'இயற்கை-வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளது' , "பிரபஞ்சம் அர்த்தமுடையது"
"பரிணாமத்திற்கு குறிக்கோள் மற்றும் இலக்கு உண்டு", "மனிதனின் உயரிய பரிணாமப்பொறுப்பு மனிதனை முக்கியத்துவம் வாய்ந்தவனாக ஆக்குகிறது" என்றெல்லாம் கற்பிக்கச்செய்வது நம்முடைய கர்வமோ,  அகம்பாவமோ, தற்பெருமையோ, அல்லது, "நாம் விசேடமானவர்கள்" என்கிற கிறுக்குத்தனமான எண்ணமோ அல்ல! ஆனால், 'இயற்கை-வரலாற்றுக்கு அர்த்தம் எதுவும் இல்லை' ,"பிரபஞ்சம் அர்த்தமற்றது", "பரிணாமம் ஒழுங்குமுறையற்றதும், குறிக்கோளற்றதுமான  ஒரு வழி
முறை" என விஞ்ஞானி ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, மற்றும் விஞ்ஞானி ஸ்டீவென் வெய்ன்பெர்க் ஆகியோரைக் கூற வைப்பது அவர்களுடைய தாழ்வு-மனப்பான்மையும், அவர்களுடைய  தவறான (மிதமிஞ்சிய பொருண்மைவாத, எந்திரவாத, சுருக்கல்வாத) விஞ்ஞான அணுகுமுறையும் தானேதவிர வேறில்லை.

உண்மையில், பரிணாம வழிமுறை என்பது தாறுமாறானதும் (random), ஒழுங்குமுறையற்றதும்,குறிக்கோளற்றதும், இலக்கற்றதுமாகத்தான் தொடங்கியது என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று ஆகும். ஆனால், இயற்கையின் வழிமுறையில் அடங்கியுள்ள ஒரு முரண் என்னவெனில், அர்த்தமற்றதும், குறிக்கோளற்றதுமானதொரு வழிமுறை 'ஏன்' அர்த்தம் நாடுகிற, குறிக்கோள் நிறைந்த மனிதஜீவிகளை விளைவிக்கவேண்டும் என்பதுதான்! ஒருவேளை, அர்த்தம் நாடுகிற, குறிக்கோள் நிறைந்த மனிதஜீவிகளை விளைவிப்பது தான் குறிக்கோளற்றதும், இலக்கற்றதுமாகத்தொடங்கிய பரிணாம வழிமுறையின் குறிக்கோளாக இருக்கலாம்! எப்படியிருந்தாலும் இதில் யாதொரு முரண்பாடும் இல்லை என்பதே உண்மை.

எவ்வாறெனில், "பெரு-வெடிப்பு" எனும் பிறப்பு நிகழ்வின்போது, வெறும் அணுத்துகள்களாகத்தான் பிரபஞ்சம் தொடங்கியது. உயிரற்ற, உணர்ச்சியற்ற, உணர்வுமற்ற பௌதீகச் சடப்பொருளான அணுத்துகள்கள்தான் பரிணாமத்திற்கான மூலதனம், முதலீடு யாவுமாகும்! அணுத்துகள்களின் சேர்க்கையின், அவற்றின் சுய-அமைப்பாக்கமுறையின் (Self-Organization)விளைபொருட்கள்தான் இன்று நாம் காணும் பரந்து விரியும் பிரபஞ்சமும், அதிலுள்ள உயிர்-ஜீவிகளும், மனிதஜீவிகளும் யாவும் ஆகும். ஆம், யாதொரு வழிநடத்துதலும், ஒழுங்குமுறைப்படுத்துதலும், வரைவும்,
திட்டமும், குறிக்கோளும் இல்லாமல், உணர்வற்ற சடத்துகள்களைக்கொண்டு தொடங்கியதுதான் இயற்கைப்பரிணாம வழிமுறை என்பது. இவ்வழிமுறை யின் நெடிய வரலாற்றின் ஒரு கட்டத்தில் உயிருள்ள ஜீவிகளும், இன்னொரு கட்டத்தில் சிந்திக்கும் திறனும், சுய-உணர்வும் கொண்ட மனிதஜீவிகளும் விளைந்தன என்பது வினோதமே என்றாலும், அவை தவிர்க்கவியலாத விளைவுகளே. அதாவது, குருட்டாம்போக்கான வழிமுறை ஒரு கட்டத்தில் குருடு நீங்கி பார்வை பெறுவது என்பதுதான் அவ்வழிமுறையின் குறிக்கோள் ஆகும்! இதற்கு மாறாக, முடிவேயில்லாமல் குருட்டாம்போக்கிலேயே இருட்டில் தடுமாறிக்கொண்டு தொடர்ந்திடும் ஒரு வழிமுறை விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதுபோல குறிக்கோளற்றது என்கிற அதன் போக்கில் நிலைமாறாததாய் (Consistent) இருக்கலாம்; ஆனால், அத்தகைய வழிமுறை அர்த்தமற்றதாகும்.

தொடர்ந்து மேலே செல்வதற்கு முன் "இயற்கை" பற்றிய விஞ்ஞானிகளின் புரிதல் எத்தகையதாய் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஏனெனில், அவர்கள் இயற்கை என்பது இப்படித்தான் இருந்தாகவேண்டும் என வற்புறுத்துவதாகத்தெரிகிறது! இயற்கையின் அசலான இயற்கை (இயல்பு) எத்தகையது என்பதை அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டதற்கான தடயம்எதுவும்  தெரியவில்லை. உண்மையில், எல்லா காலத்திலும் ஒரே தன்மையிலமைந்ததாக இயற்கை இருக்கவில்லை. அதே நேரத்தில், அது எப்போதும் மாறிக் கொண்டேயும் இருக்கவில்லை! மாறாக,இயற்கை தனது அசலான இயற்கையை நாடிச்சென்று கொண்டுள்ளது; அத்தகைய இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும். இயற்கை, பிரபஞ்சம், உலகம்,பருப்பொருள் என எவ்வாறு
அதை அழைத்தாலும், அது ஒரு பரிணாம இயக்கமே. இயற்கை என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து, ஒரு குறிப்பான இலக்கு- நிலையை நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். ஆம், இலக்கு இல்லாத யாதொரு இயக்கமும் இல்லை; இருக்கவும் முடியாது. ஏனெனில் அது முரண்பாடானது.  எவ்வொரு இயக்கமும் இலக்கைக் கொண்டதே; இலக்கு இல்லாவிடில் அதற்குப்பெயர் இயக்கமல்ல, அது தாறுமாறானதொரு போக்கு ஆகும். மேலும்,   "மாற்றம்" என்பதற்கும், "பரிணாமம்" என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. மாற்றத்திற்காக மாற்றம் என்பது முரண்பாடானது,
அல்லது மேலோட்டமானது. பண்பினடிப்படையிலான மாற்றத்தைப்பின் பற்றிச் செல்லும் போக்கிற்குப்பெயர்தான் பரிணாமம் என்பதாகும்.

எவ்வொரு இயக்கத்திற்கும் தொடக்கம், அல்லது ஒரு ஆரம்பம் உள்ளது; ஆகவே அதற்கு ஒரு முடிவும், அடைவிடமும் உண்டு. இயற்கை என்பது அத்தகையதொரு இயக்கமே. பருப்பொருள் (அணுத்துகள்கள்) தான் இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பதன் தொடக்க நிலையாகும். அதாவது,
சடத்தன்மை தான் இயற்கையின் தொடக்க நிலைப் பண்பு ஆகும். தொடர்ந்த பரிணாம வளர்ச்சியினால், பருப்பொருள் ஒரு கட்டத்தில் உயிரைத் தாங்கும் கட்டமைப்பாக மாறியது; அக்கட்டத்தில்,இயற்கை உயிர்பெற்று எழுந்தது என்று சொல்லலாம்! அதையடுத்துத் தொடர்ந்த உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக மனிதனுள் "சுய-உணர்வாக" இயற்கை உணர்வுபெற்று எழுந்தது என்று சொல்லலாம்!

அதாவது,  இயற்கை அல்லது பிரபஞ்சத்தின் தொடக்க நிலையில், பருப்பொருளை (அணுத்துகள்களை)க்கொண்டு நிகழ்ந்த பரிணாம வழிமுறை என்பது பெரிதும் எந்திரத்தனமாகவும், ஒழுங்கு முறையற்ற தாகவும், குறிக்கோளற்றதாகவும் தான் இருந்திருக்கமுடியும். ஏனெனில், ஒழுங்கு (Order), திட்டவரைவு (Planning), குறிக்கோள் (Purpose) யாவும் பரிணமிக்கும் அம்சங்களேயாகும். இதேபோல், அறிவுக்கூர்மை (Intelligence), அறிநிலை (Awareness), உணர்வு (Consciousness) போன்றவையும் பரிணமிக்கும் அம்சங்களே. இவ்வாறு புதிய புதிய அம்சங்களும், பண்புகளும் சேர்ந்து கொண்டே முன்னேறிச்செல்லும் ஒரு ஒப்பற்ற இயக்கமே பரிணாமம்
என்பதாகும்!

ஆரம்பக்கட்டத்தில், பரிணாமம் என்பது பொருண்மையின் அதாவது சடப்பண்பினைக்கொண்டு அமையக்கூடிய சாத்தியப்பாடுகளைத் தீர்த்து முடிப்பதில் ஈடுபட்டிருந்தது. இந்தப் பரிணாமக்கட்டத்தை நாம் பொருளியல் கட்டம் (Inorganic or Material Sector)என்று அழைக்கலாம். அதே நேரத்தில், பொருளியல் கட்டம் முடிவில்லாது நீண்டுகொண்டே செல்லவில்லை. மாறாக,
அணுத்துகள்களின் மிகச் சிக்கலான கட்டமைப்புகள் ஒரு எல்லையைத் தொட்டு உயிர்ப்புபெற்றதும் பரிணாமம் உயிரியல் கட்டத்திற்குள் பிரவேசித்தது. இப்பரிணாமக் கட்டத்தை நாம் உயிரியல் கட்டம் (Organic or Biological Sector)என்று அழைக்கலாம். இக்கட்டத்தினுள் உயிர்ப்பண்பி னைக்கொண்டு அமையக்கூடிய  சாத்தியப்பாடுகளைத் தீர்த்து முடிப்பதில் பரிணாமம் ஆழ்ந்தது. அதாவது பரிணாமம் பல்வேறு உயிரினங்களை விளைவித்தது. ஆனால்,இயற்கைப்பரிணாமத்தின் உள்ளார்ந்த விழைவு பல்வேறு உயிரினங்களை உருவாக்குவதல்ல; மாறாக, அவ்வுயிரிகளின் வழியாக இயற்கை தேடியது இயற்கையின் வேட்கையை முற்றாகத்தணிக்கும்,அதாவது அதன் வேட்கையை முடிவிற்குக்கொண்டு வரும் வகையிலான வேறொரு வகைப் பண்பு அல்லது இயல்பையே ஆகும். அத்தகையதொரு பண்பு அல்லது அம்சம் எதுவென்றால், அது "உணர்வு" என்பது தான்.

உண்மையில்,  ஒரு உயிர்-ஜீவியின் பிரத்யேக அடிப்படை அம்சங்களாக, தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளுதல் (இனப்பெருக்கம்), வளர்சிதை மாற்றம், சுற்றுப்புறத்துடன் தகவமைதல் போன்றவையே பொதுவாக உயிரியல்விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுபவையாகும். சிலர் உயிர்
என்பது பொருள், சக்தி, மற்றும் தகவல் (Information) ஆகியவற்றால் ஆனது எனவும்,  சிலர், உயிரை பொருளியல் அமைப்புமுறை எனவும், சிலர் அதை ரசாயண அமைப்புமுறை எனவும், சிலர், சிக்கலான அமைப்பு முறையின் விசேடப்பண்பு எனவும் குறிப்பிடுவர். ஆனால், ஒருவகையில் இவை யாவும் அடிப்படை அம்சங்களே எனினும் எவரும் "உணர்வு" (Consciousness) எனும்
அம்சம் பற்றிக் குறிப்பிடவேயில்லை.

ஆம், "உணர்வு" தோன்றுவதற்கான ஒரு முன்-தேவையாக, முன்- நிபந்தனை யாகத்தான் "உயிர்" என்பது உருவானது! உணர்வின் மிகச்சிறியஆரம்பம், முதல் உயிர்-ஜீவியுடன் தொடங்கிவிடுகிறது எனலாம். மிக அருகிலுள்ள பொருட்களை உணரக்கூடிய மெல்லிய 'உறுத்தல்-உணர்வில்' ஆரம்பித்து,  மிகத்தெளிவாகச் சுற்றுப்புறத்தை அறியக்கூடிய புலன்-வழி உணர்வாக வளர்ந்து, பிறகு புற-உலகை மட்டுமல்லாமல், தனது சொந்த இருப்பையும் உணரக்கூடிய "சுய-உணர்வாக" மனிதனுள் வெளிப்பட்டதுடன், பரிணாமம் உணர்வுப்பூர்வமான வழிமுறையாக மாறியுள்ளது. அதாவது,மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிந்துவிட்டது. ஏனெனில், (சுய)உணர்வை எட்டுவதற்கான மிகப்பொருத்தமான, நன்கு வளர்ச்சியடைந்த பொறியமைப்பான மனித மூளையை வந்தடைந்ததும், உயிரியல் பரிணாமத்தின் பணி முழுமையடைந்துவிடுகிறது. ஏனெனில், உயிரியல் பரிணாமத்தின் நோக்கம் வெறுமனே விதவிதமான உயிரிகளை உருவாக்குவதல்ல. உயிரியலாளர்களைப்பொறுத்தவரை, பரிணாமம் என்பது உயிரியலை மையமாகக்கொண்டது, அதாவது பரிணாமம்என்றாலே அது உயிரியல் பரிணாமம் தான்; ஆகவே, அது தங்களது ஆளுகைக்கு உட்பட்டது என்பதாகக் கருதுகிறார்கள். பௌதீக வியலாளர்களைப் பொறுத்தவரை, அனைத்தும் பருப்பொருளே,அதாவது அடிப்படை அணுத்துகள்களே; ஆகவே, பரிணாமம் என்பது பொருளியல் ( Material)
பரிணாமமே; ஆகவே, பிரபஞ்சம் மொத்தமும் தங்களது ஆளுகைக்கு உட்பட்டதே என்பதாகக்கருதுகிறார்கள்.

ஆனால், பிரபஞ்சம்  என்பது காலம், வெளி மற்றும் பருப்பொருளின் மாபெரும் அமைப்பும், இயக்கமும் மட்டுமல்ல! மாறாக, உயிரினங்களின் "உயிரியல் கோளம்" (The Biological Sphere)தான் பருப்பொருளாலான பிரபஞ்சத்தின் நீட்சியும் உயர்-வளர்ச்சி நிலையுமாகும்! இத்துடன் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி முற்றுப்பெற்றுவிடவில்லை. உயிரியல் கோளத்தினூடாக எழுந்த மனிதஜீவிகளின் "உணர்வியல் கோளம்" (Psychic Sphere) தான் பிரபஞ்சத்தின் தற்போதைய உயர்-வளர்ச்சி நிலையாகும்! இதுவும் இறுதியானதல்ல. ஏனெனில், மனித உணர்வு என்பது இறுதியான முழுமையான உணர்வு அல்ல!

மேலும், பரிணாமம் என்பது சூன்யத்தில் நடைபெறுவதியலாது, ஆகவே, பரிணாமம் பொருளை, சடப்பண்பை ஒரு அடிப்படையாக, ஊடகமாக, உபகரணமாகக்கொண்டு தொடங்கியது! ஆக, பரிணாமம் என்பது தொடக்க காலக்கட்டத்தில், பொருளியல் பரிணாமமாகத்திகழ்ந்தது. அதாவது,
பொருளின் சடப்பண்பில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக "உயிர்ப்பண்பு" வெளிப்பட்டது. உயிர் அல்லது உயிர்-ஜீவிகளைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் மனிதன்எனும் உயிர்-ஜீவியின் வழியாக "உணர்வு" எனும் பண்பு  வெளிப்பட்டது! ஆக, மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிவிற்கு வந்துவிட , "உணர்வியல் பரிணாமம்" (Psychic Sector)தொடங்கியுள்ளது! ஒரு உயிரினம் என்கிறவகையில், மனிதன்தான் கடைசி உயிரியல் ஜீவியாவான். மனிதனையடுத்து, அல்லது, மனிதனிலிருந்து கிளைத்து வேறொரு புது உயிரினம் தோன்றக்கூடும் என
எதிர்பார்த்தோமெனில், நாம் பரிணாமம் என்பதை சரியாகப்புரிந்து கொள்ளவில்லை என்றுதான்அர்த்தம்! ஏனெனில், பரிணாமம் என்பது அடிப்படையில் உணர்வுப்பரிணாமம் தான்; அதாவது,பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வு தான்.

ஆம், இனி மனிதனையடுத்து வேறொரு புதிய உயிரினமோ, உயிர்-ஜீவியோ தோன்றிட வாய்ப்பு ஏதுமில்லை. மாறாக, மனிதன்தான் (ஒவ்வொரு மனிதனும்தான்) தனது உணர்வின் வளர்ச்சி மூலம் புதியதொரு ஜீவியாக, அதாவது மனிதன் தற்போது பெற்றுள்ள உணர்வைக்கடந்து வளர்ந்து வேறு
ஒரு "உயர் உணர்வின்" ஜீவியாக எழுந்திடவேண்டும். முடிவாக, உணர்வின் முழுமையைஒவ்வொரு மனிதனும் எட்டும்போது பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்வான பெரு-வெடிப்பில் தொடங்கிய பரிணாமம் முழுமைபெறுகிறது.

நல்லது, நாம் மீண்டும் உயிர் பற்றிய புதிருக்கு வருவோம். உயிர் என்பது ஒரு புதிர் என சொல்வதன் வழியே, உயிர் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம் என அர்த்தம் அல்ல. மாறாக,  அதை அவ்வளவு எளிதாக விவரித்து விளக்கிவிடவும் முடியாது என்பதால்தான் 'புதிர்' என்கிறோம். விஞ்ஞானிகள், பரிணாமவாதிகள், உயிரியலாளர்கள் ஆகியோரது விளக்கங்கள் யாவும் உயிர்-ஜீவியைப்பற்றியதாய் உள்ளனவேதவிர, அவர்கள் "உயிர்" எனும் அம்சத்தை நெருங்கவும் இல்லை என்பது தான் உண்மை நிலையாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி, உயிர்-ஜீவிக்கும், 'உயிர்' என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது! ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்வரைதான் அவரை
பெயரிட்டு அழைக்கிறோம், மதிக்கிறோம், எல்லாம் செய்கிறோம். ஆனால், அம்மனிதன் இறந்து போனால், "பிணம்" என்கிறோம்! அவரது உடல் முழுமையாக இருந்தாலும், சலனமற்றுக்கிடப்பதாகிறது, சிறிது நேரத்தில் சில்லிட்டுப்போகிறது.அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. அவரது இதயம் நின்றுவிட்டது; நாடித்துடிப்புஅடங்கிவிட்டது; மூளைக்கு இரத்தம் செல்லாததால் அவரது  மூளை செத்துவிட்டது  என்கிறார்கள். அதாவது, அம்மனிதனின் உடல் முழுமையாக உள்ளது, ஆனால், உயிர் மட்டும் இல்லை என்பது எதைக்குறிக்
கிறது? அப்படியென்றால்,  "உயிர்" என்றால் என்ன? இதயத்தின் இயக்கம், நாடித்துடிப்பு, சுவாசம், மூளை-இயக்கம், இன்னும் பிற இயக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு தான் "உயிர்" என்பதா? அல்லது தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளுதல் (இனப்பெருக்கம்), வளர்சிதை மாற்றம்,
சுற்றுப்புறத்துடன் தகவமைதல் ஆகிய அடிப்படைகளும் சேர்ந்ததுதான் "உயிர்" என்பதா? ஆம், இவை யாவும்  "உயிர்" எனும் பரிமாணத்தை, அந்த விசேடமான "இருப்பு நிலை"யை தொடர்பு கொள்ளக்கூடிய உயிர்-ஜீவியின் அம்சங்கள் மட்டுமேயாகும்!

அடிப்படையில் பருப்பொருள் என்று அறியப்படும் உலகம், பிரபஞ்சம், அல்லது இயற்கையானது தன்னைத்தானே ஒரு உயிர்-ஜீவியாக (ஏணியாக) கட்டமைத்துக்கொண்டு எட்டக்கூடியதொரு விசேடமான இருப்பு-நிலைக்குப்பெயர்தான் "உயிர்" என்பதாகும்! ஆம், மிகச்சரியாகவும், துல்லிய
மாகவும் சொன்னால் "உயிர்" என்பது பருப்பொருள் எனப்படும் இருப்பு-நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு விசேடவகை "இருப்பு-நிலை"யே (A Non-Material state of existence) ஆகும்!

அதாவது, பருப்பொருள் அல்லது சடப்பொருள் என்பது ஒருவித இருப்பு நிலையாகும் - அது அமைப்பாக்கப்படாத அணுத்துகள்களின் உணர்வற்ற நிலையின் இருப்பாகும். இதை நாம் "சட-இருப்பு" (Material Existence) என்றழைக்கலாம். சடப்பொருளானது பௌதீகவிதிகளால் இயக்கப்படுவதும், அதே நேரத்தில், உயிரியல் மற்றும்  உணர்வியல் விதிகளுக்கு உட்பட்டதுமாகும்.

உயிர் என்பது மிகச்சிக்கலான சுய-அமைப்பாக்கமுறையில் (self-organization) அமைந்ததும், தனி-மையப்படுத்தப்பட்ட (individualized)துமான உயிர்-ஜீவி என்றழைக்கப்படும் பொருளியல் அமைப்பினால்  தொடர்புகொள்ளப்படும் ஒரு வித இருப்பு நிலையாகும். இதை நாம் "உயிர்-இருப்பு"  (Organic Existence) என்றழைக்கலாம். ஒரு உயிர்-ஜீவி என்பது பௌதீக விதிகளுக்கு உட்பட்டதும், பெரிதும் உயிரியல் விதிகளால் ஆளப்படுகிற ஒன்றாகும்.

உணர்வு அல்லது மனம் என்பது உணர்வுகொள்ளும் திறனைப்பெற்ற உயர்-வளர்ச்சியடைந்த உயிர்-ஜீவியினால், குறிப்பாக, மனித-ஜீவியினால் தொடர்புகொள்ளக்கூடியதொரு  விசேடவகை இருப்பு நிலையாகும். இதை நாம் "உணர்வு-இருப்பு" (Conscious Existence)என்றழைக்கலாம்.

பொருள்,உயிர், உணர்வு ஆகிய அம்சங்களை ஓரளவிற்குத் துல்லியமாக, "இருப்பு-நிலை" என்பதன்சொற்களில் புரிந்துகொண்டோம்; ஆனால், பல்வேறு இருப்பு-நிலைகளை நாம் "உணர்வு" என்பதன்சொற்களைக்கொண்டு  தான் புரிந்துகொள்ளமுடியும். அதாவது "சட-இருப்பு" நிலை என்பது கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையே ஆகும். "உயிர்-இருப்பு"  நிலை என்பது புலன்வழி உணர்வைக்கொண்ட இருப்பு நிலை ஆகும். "உணர்வு-இருப்பு" என்பது மனிதஜீவிகள் எட்டியுள்ள "சுய-உணர்வின்" இருப்புநிலையாகும். ஒரு மனிதஜீவியைப்பொறுத்தவரை, அவனுள் சட-இருப்பு, உயிர்-இருப்பு, உணர்வு-இருப்பு ஆகிய இம்மூன்று இருப்பு நிலைகளும் சங்கமிக்கும் மையமாக விளங்குகிறான் எனலாம்.

அதே நேரத்தில், மனிதஜீவிகளால்  தற்போது எட்டப்பட்டுள்ள உணர்வு என்பது, உணர்வு நிலையின்முழுமையோ, அல்லது இறுதியோ அல்ல. அதாவது மனிதனுடன் உயிரியல் பரிணாமம் தான்முடிவிற்கு வந்துள்ளது; உணர்வியல் பரிணாமமோ இப்போதுதான் அவனுள் தொடங்கியுள்ளது.

மனிதனின் சுய-உணர்வு என்பது உணர்வின் தொடக்கம் மாத்திரமே. ஆம், ஒவ்வொரு மனிதஜீவியும் தனது சுய-உணர்விலேயே தங்கித்தேங்கிவிடாமல், தனக்குப்புறத்தேயுள்ள யாதொரு விஷயத்துடனும், பொருளுடனும், உறவுடனும் அடையாளப்படுத்திக்கொள்ளாமல், தனது உணர்வை உணர்வு கொண்டு உணர்வில் பெருகி பூரண முழு-உணர்வை அடைந்திடுவது அவசியமாகும். ஏனெனில், உணர்வின் முழுமை அல்லது "முழு-உணர்வு" என்பதுதான் முழுமையானதும், இறுதியானதுமான இருப்பு நிலை ஆகும்.

ஒருவகையில், 'உயிர்' என்பதும்  'உயிர்-ஜீவி' என்பதும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பதாகக் காணமுடியும் என்றாலும், அதாவது, உயிர் என்பது உயிர்-ஜீவிகளுக்கு வெளியே இருக்கமுடியாது! அதே போல், உயிர்-ஜீவிகளும் உயிர் இல்லாமல் இருக்கமுடியாது என்பதாகத் தெரிந்தாலும்; அதாவது, உயிர் என்பது உயிர்-ஜீவி எனப்படும் விசேடக்கட்டமைப்பின் வெளிப்படு- பண்பு (Emergent Property)என்பதாகக்கொண்டாலும்;  "உயிர்" என்பது ஒரு சுற்றுப்பாதை (orbit) போன்றதாகும்; அச்சுற்றுப்பாதையில் தன்னை ஏவிக்கொள்வது, அல்லது நிலைநிறுத்திக்கொள்வது என்பது உயிர்-ஜீவிகளின் பிரச்சினையேதவிர "உயிர்" என்பதன் பிரச்சினையல்ல! அதாவது, தொடர்ந்து உயிர்-பிழைத்திருப்பதும்  (survive), பிற உயிர்ஜீவிகளுடன்  போட்டியிடுவதும், இனப்பெருக்கத்தின் வழியே தன் வகையினத்தை தக்கவைத்துக்கொள்வதும்,மாறுகின்ற சுற்றுச்
சூழலுக்கேற்றாற்போல தகவமைவதும்உயிர்ஜீவிகளின் பிரச்சினையே தவிர உயிரின் பிரச்சினையல்ல!

உயிரியலாளர்கள் சிலர், உயிர்ஜீவிகளை,பருப்பொருளின்-அமைப்பு (Material System)எனவும்,சிலர்,  ரசாயண-அமைப்பு(Chemical System)எனவும், சிலர், மூலக்கூறுகளின் -அமைப்பு எனவும், இன்னும் எப்படிச்சொன்னாலும் அவையெதுவும், உயிர்ஜீவிகளையோ, அல்லது, உயிரையோ முழுமையாக விளக்குவதில்லை. இவை யாவும் மேலோட்டமான விவரிப்புகளே, அதாவது, மேற்புறவிவர-உண்மைகளே; இவைகளைக்கொண்டு அர்த்தமுள்ள புரிதலைப்பெறவியலாது!

உயிர்ஜீவி என்பது, பௌதீகச்சடப்பொருளைப் பயன்படுத்திக்கொண்டு வெளிப்பட்ட  அபௌதீகப்(Non-Material) பரிமாணம் ஆகும். மேலும், உயிர்ஜீவி என்பது அணுத்துகள்களின் சிக்கலான ஒருங்கிணைப்பு அல்லது கட்டமைப்பின் உச்சியில்  எழுந்த, தனி-மையப்பட்ட ஒரு  தனிப்பண்பு
(Life is discrete particles of matter unified and individualized.)ஆகும்!

அதாவது, யாதொரு மையமும்   இல்லாமல்   இயங்கும்   பிரபஞ்சத்தினுள், தனி-மையம் கொண்ட ஒரு ஜீவியாக எழுந்த புதிர்தான் 'உயிர்ஜீவி' ஆகும்!  உயிர்ஜீவி, அது ஒரு சிறு புழுவாக  இருந்தாலும், என்ன தான்  அது    சுற்றியுள்ள  உலகைச் சார்ந்திருந்தாலும், அது இவ்வுலகினுள்  தன்னளவில்
இன்னொரு உலகமாக, பண்பினடிப்படையில்  இவ்வுலகின் சட-இருப்பி லிருந்து  முற்றிலும் வேறான "உயிர்" எனும் இருப்பு நிலையுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு அற்புதம் ஆகும்!  மனிதஜீவிஎன்பவன், சடஇருப்பையும், உயிர்-இருப்பையும் பயன்படுத்திக்கொண்டு "உணர்வு" எனும் இருப்பு
நிலையுடன்  தொடர்பு கொண்டிருக்கும் ஒரு விசேட மெய்ம்மையாவான்!

'பரந்த பிரபஞ்சத்தின் அளவுடன்  ஒப்பிடுகையில், உயிர்-ஜீவி என்பது மிகமிகச் சிறிய அல்லது அற்பமானதொரு பங்கேற்பாளர் (player)' எனவும், 'உயிர்த்தோற்றம் என்பது பிரபஞ்சத்தின்மிகக்கட்டாயமான தவிர்க்க வியலாத அவசியம்' என்பதாகக் காணும் உயிர்-மைய தரிசனங்கள்யாவும் மிகைக்கூற்றுக்களே' எனவும், 'இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பர சம்பந்தம் கொண்டதல்ல' எனவும்,  'உயிர்-ஜீவிகள், செயல்படும் இயற்பியல் விதிகளின் இயற்கையான வரையறைகளுக்குள் மட்டுமே இருப்பு பெறமுடியும், அதே நேரத்தில் இயற்கை விதிகள்
இருக்கின்றன என்பதால் உயிர் தோன்றியாகவேண்டும் என்கிற உத்திரவாதத்தை அது அளிப்பதில்லை.' எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இக்கூற்றுக்கள் யாவும் முட்டாள்தனமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!  முதலில், 'அளவு' அல்ல முக்கியம், மாறாக, 'தரம்' அல்லது, 'பண்பு' தான் முக்கியமாகும். அடுத்தது, 'உயிர்த்தோற்றம்' என்பது பிரபஞ்சத்தின் மிகக்கட்டாயமான தவிர்க்க வியலாத அவசியம்' என்பதால்தான் 80,00,000 க்கும் மேற்பட்ட பல்வேறுவகை
உயிரினங்களும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்கிறோம்! குறிப்பாக யாதொரு புறச்சக்தியின் குறுக்கீடும், வழி-நடத்துதலும் இல்லாமலேயே உயிருள்ள ஜீவிகளும், சுய-உணர்வுள்ள மனிதஜீவிகளும் உருவாகி யிருக்கிறோம் என்பது இம்முடிவிற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகிறது!

ஆக, 'உயிர்-ஜீவிகள், செயல்படும் இயற்பியல் விதிகளின் இயற்கையான வரையறைகளுக்குள் மட்டுமே இருப்பு பெறமுடியும், அதே நேரத்தில் இயற்கை விதிகள் இருக்கின்றன என்பதால் உயிர் தோன்றியாகவேண்டும் என்கிற உத்திரவாதத்தை அது அளிப்பதில்லை.' எனும் கூற்றின் அர்த்தம்
என்ன? அப்படியானால், இயற்கை விதிகள் என்பவை எதற்காக இருக்கின்றன, அல்லது இயற்கை விதிகள் என்பவை யாவை? உண்மையில், அனைத்து இயற்கை விதிகளும் "பரிணாம விதிகளே"யாகும்;  செயல்படுகின்ற அல்லது செயல்பாட்டிலிருக்கின்ற இயற்பியல் விதிகள் (laws of Physics) யாவும் "உயிரியல் - விதிகளுக்கு"ச் சேவை செய்வதற்காகவே இருக்கின்றன! அனைத்து உயிரியல்-விதிகளும்,  "உணர்வியல்விதிகளுக்கு"ச்  சேவை செய்வதற்காகவே இருக்கின்றன! முதலிடத்தில், பருப்பொருளாலான இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பது அதன் அடிப்படையில்ஒரு பரிணாம இயக்கமே என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். விஞ்ஞானிகள் இயற்கையை பரிணாமவழிமுறைக்கு வெளியே இருப்பதாகவும், இயற்பியல் அல்லது பௌதீகவிதிகள் என்பவை பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான சாசுவதமான விதிகள் என்பதாகவும் கருதுவது தவறானது!
ஆம்,   பரிணாமவழிமுறைக்கு வெளியே யாதொரு இயற்கையும் இல்லை! மாறாக,  'இயற்கை' என்பதும் பரிணாமத்திற்கு உட்பட்டதேயாகும்!  அதாவது, பரிணாம வழிமுறையின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு விதிகள் தோன்றி பரிணாமத்தை மேற்கொண்டு வழி நடத்திச்செல்கின்றன என்பதுதான் சரியான பார்வையாகும்.

உதாரணத்திற்கு, ஆக்ஸிஜன் மூலக்கூறுகளும், ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் இணையும் போது தண்ணீர் எனும் திரவப்பொருள் உருவாகிறது. ஆனால், தனியே ஆக்ஸிஜன் மூலக்கூறுகளிலும், ஹைட்ரஜன் மூலக்கூறுகளிலும், தண்ணீரின் பண்புகள் இருப்பதில்லை! மாறாக, இவ்விரு வித மூலக்கூறு களும் இணையும்போது தண்ணீர் உருவாகும் என்பதை எந்த விதி தீர்மானிக்கிறது? தண்ணீர் என்பது பௌதீகப்பண்புகளைக்கொண்டது என்றாலும், நிச்சயமாக, பௌதீக விதிகள் அதைத்தீர்மானிப்பதில்லை! தண்ணீர் என்பது ஒரு வெளிப்படு-பண்பு (Emergent Property) ஆகும்.  அதை வேறுவகை விதிகளே தீர்மானிப்பதாகத்தெரிகிறது! இவ்வாறே, வெவ்வேறு மூலக்கூறுகள் சிக்கலான அமைப்பிலும், படிமுறையிலும் இணந்து பாக்டீரியா எனப்படும் உயிர்-ஜீவியும்பல்வேறு பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள் இணைந்து பல-ஸெல் உயிரிகளும், அதாவது தாவர இனங்களும், விலங்கினங்களும், பிறகு மனிதஇனமும் தோன்றியதற்குப் பின்னனியில்புதிதாக அவ்வப்போது தோன்றிச் செயல்பட்ட பரிணாம விதிகளே காரணமாகும். அதாவது "விதிகள்" என்பவையும் புதிதுபுதிதாகத் தோன்றுகின்றன, அல்லது பரிணமிக்கின்றன!

அடுத்து,  'இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பர சம்பந்தம் கொண்டதல்ல' எனும் கூற்றைப்பார்ப்போம். அதாவது, இயற்கை வேறு அதிலிருந்து முளைத்தெழுகின்றவை வேறு எனும் தவறான புரிதலிலிருந்து வெளிப்படும் கூற்றுக்களே இவை! உண்மையில், இயற்கை தான் (அதன் ஒரு சிறு பகுதி தான்) பரிணமித்து உயிர்-ஜீவியாகியுள்ளது! அதாவது, "உள்", "வெளி"; "அகம்" "புறம்" எனும்பிரிவினையைத் தோற்றுவித்தது இயற்கையே, தனது தொடக்கநிலை இயற்கையான,
சடப்பண்பைக்கடந்து செல்லும் பரிணாம-மாற்றத்தின் விளைவே! அதாவது, இயற்கைதான் உயிர்-ஜீவியாக எழுந்தது என்றாலும் இரண்டும் வெவ்வேறு இயற்கையாகும்! ஏற்கனவே குறிப்பிட்டபடி, பருப்பொருளின் பிரபஞ்சம் தனது சடப்பண்பைக் கடந்து செல்லும்பரிணாம வழிமுறையில்,
தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொண்டு எடுத்த புதியதொரு அவதாரம் தான் "உயிர்-ஜீவி" என்பதாகும்! ஆனால், இதன் அர்த்தம், 'இயற்கைக்கும், உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பரசம்பந்தம் கொண்டதல்ல' என்பதாக ஆகிவிடாது.

ஒருவகையில், இயற்கையானது உயிர்ஜீவியாக அவதாரம் எடுத்தபிறகு, உயிர்ஜீவிதான் தற்போதைய இயற்கை, உலகம், பிரபஞ்சம் யாவும் ஆகும்! இது முற்றிலும் வழக்கத்திற்கு மாறான பார்வை எனத்தெரிந்தாலும், இதுதான் உண்மையாகும். அதே நேரத்தில், உயிர்-ஜீவிகளும், உயிர் எனும்
இருப்பு நிலையும் இறுதியானவையல்ல! ஆகையால்தான், உயிர்ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து  உணர்வுள்ள மனிதஜீவி எனும் இனம் உதித்தது! மனிதஜீவியின் கட்டத்தை, அதாவது மனிதனுள் சுய-உணர்வு எனும் நிலையை அடைந்த பிறகு, மனித-உணர்வுதான் புதிய இயற்கையாகும்! அதாவது நம் பிரபஞ்சத்தை ஒரு பெரிய விருட்சமாகக்கொண்டால், அந்த விருட்சத்தின்பிஞ்சுகள், அல்லது காய்கள் தான் மனிதஜீவிகள்! ஆக, ஒரு மரத்திற்கும் அதன் காய்களுக்குமான தொடர்பும், உறவும் எத்தகையதோ அத்தகையதே இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான உறவும்தொடர்பும் ஆகும். அது  பரஸ்பர சம்பந்தம் கொண்டதும், அதே நேரத்தில், அனைத்துவித சம்பந்தங்களையும் கடந்துசெல்வதுமானதாகும்! அதாவது, காய்கள் கனியாகும் வரை மட்டுமே அவை மரத்தின் பகுதியாகும்; ஒரு காய் நன்கு முற்றிக்கனியானதும் அது மரத்தைவிட்டு அகன்றுவிடுகின்றது! குறிப்பாக மனித ஜீவிகளுக்கும், இயற்கைக்கும் உள்ள தொடர்பு இத்தகையதே. ஏனெனில், மற்ற உயிரினங்களைவிட மனிதஇனம் மட்டுமே நன்கு முற்றிய பக்குவத்தில் உள்ள இனமாகும்! உண்மையில், மரம்தான் ஒரு கட்டத்தில் பூக்களாக மாறுகிறது, பிறகு, பிஞ்சுகளாகவும், காய்களாகவும் மாறுகின்றது. பிறகு, ஒவ்வொரு காயும் கனிந்ததும் மரத்தைவிட்டு வெளியேறுவதும் மரமேயாகும்! மரமானது, (தனது) ஒவ்வொரு கனியின் வழியாக தன்னைக்கடந்து செல்கிறது; அதாவது தனது முழுமையை  அடைகிறது! இன்னும் துல்லியமாகச் சொன்னால், அதாவது, மரத்திற்குக்காரணமான
வித்தின் கோணத்திலிருந்து காணும்போது, வித்துதான, மரமாக மாறுகிறது; பூக்களாக மாறுவதும், பிறகு பிஞ்சுகளாகாவும், காய்களாகவும்மாறுவதும்; பிறகு ஒவ்வொரு காயும்கனிந்து கனியானதும்ஒவ்வொரு கனியின் வழியாகவும் மரத்தைவிட்டு வெளியேறுவதும் அதே வித்துதான்!

ஒரு மேற்புறப்பார்வையில், உயிர்ஜீவிகள் தமக்குரிய (எரி)சக்தியை (உணவைப்) பெறுவதற்காக இயற்கையை, சுற்றுப்புறத்தைச் சார்ந்திருப்பது வெளிப்படையாகும். ஆனால், பெரிதும்,மறைமுகமாக, இயற்கையும், பிரபஞ்சமும் தான் உயிர்ஜீவி களைச்சார்ந்துள்ளன என்பதுதான் உண்மை!
இவ்விடத்தில், உயிர்ஜீவிகள் என்றுகுறிப்பிடப்படுவதுமனிதஜீவிகளைத்தான். உண்மையில், ஒரு உயிர்ஜீவி என்ற வகையில், புழு, பூச்சி, ஈ, எறும்பு, எலி, மனிதன் எல்லாம் ஒன்றுதான். அதாவது மனிதன் விசேடமானவனாக, தனிச்சிறப்புபெற்றவனாக விளங்குகிறான் என்பது முற்றிலும்
எதேச்சை யானதாகும். அதற்குக்காரணம் அவனல்ல, அவனிடம் உதயமாகியுள்ள "சுய-உணர்வு" என்கிற அம்சமே ஆகும்! ஒரு கரப்பான்பூச்சியிடம் "சுய-உணர்வு" தோன்றியிருக்குமானால்,
"தனிச்சிறப்பானது" என்கிற பட்டத்தை அது பெற்றுவிட்டிருக்கும், மேலும், கரப்பான்பூச்சியுடன்உயிரியல் பரிணாமமும் நிறைவு பெற்றிருக்கும்!

மனிதன் விசேடமானவன், தனிச்சிறப்பானவன் என்பது பொதுப்படை யாகவும், சகட்டுமேனிக்கு எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும் விஷயம் அல்ல! அதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தகுதியுள்ளவனாக, பாத்திரனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் உடல்மைய ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து உணர்வு-மைய ஜீவியாக எழ வேண்டும்! பொதுவாக, மனிதஜீவிகள் தாம் உயிரோடிருக்கிறோம் என்பதை மட்டுமே உணர்கிறார்கள்; தொடர்ந்து உயிரோடிருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை மட்டுமே சிரமேற்கொண்டு செய்
கிறார்கள்! மாறாக, "தாம் உணர்வோடிருக்கிறோம்!" அல்லது "தாம் ஒரு உணர்வுதான்!" என்பதை கோடியில் ஓரிருவர் மட்டுமே உணர்கிறார்கள்!

உண்மையில்,மனிதன் என்பவன் வெறும் ஒரு உயிர்ஜீவி மட்டுமல்ல; அவ்வாறிருப்பின் அவனுக்கும்பி ற விலங்குஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏதுமிராது! மாறாக, மனிதன் என்பவன் பிரதானமாக ஒரு உணர்வுஜீவியே ஆவான்! மனிதன் என்பவன்,உயிர் இருப்பையும்,  அணுத்துகள்களின் ஒன்றிணப்பு மற்றும் தனி-மையப்பட்ட தன்மையையும்  உணர்ந்த உணர்வு ஆவான்! (A human being is a living entity became conscious of matter's unification and individualization in his consciousness).


மா.கணேசன்/4.10.2016
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...