Saturday, 27 April 2019

பாதை ஒன்றா? பலவா?



உங்களை எதுவாகவும்
அடையாளப்படுத்திக் கொள்ளாத போது
உங்கள் உண்மையான அடையாளத்தை நோக்கி
நீங்கள் நகர்வீர்!
ஒரு உணர்வுப் புள்ளியாக நீங்கள் உதிக்கிறீர்!
ஒரு மலரை அறியும்போது,
புள்ளியாக இருக்கும் நீங்கள் விரிந்து பரவி
அம்மலரைத் தழுவிக் கொள்கிறீர்;
அம்மலராகவே ஆகிவிடுகிறீர்!
நீங்கள் பிரபஞ்சத்தை அறியவிழையும்போது
பிரபஞ்சமாகவே நீங்கள் மாறிவிட வேண்டும்!
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்
இடைவெளியில்லாதவாறு!

* * *

“எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் செல்கின்றன!” ("All Roads Lead to Rome") எனும் பழமொழி ரோம் நகருக்கு வேண்டுமானால் பொருந்தலாம். எவ்வாறெனில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் சாலை அமைப்பானது அதன் தலை நகரை மையமெனக்கொண்டு எல்லா பக்கங்களையும், அல்லது திசைகளையும் நோக்கிச் செல்வதாக அமைக்கப்பட்டதாகும்.

ஆனால், நம்மில் பலர், இதே கணக்கில், ஆன்மீக இலக்கான ஞானத்தை அடைவதற்கு பல பாதைகள் உள்ளன என்பதாக நம்பிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறோம். இந்தக் கணக்கு தவறானது! உண்மையில், ஆன்மீகத்தில் பல பாதைகள் என்பதில்லை! இன்னும் “உண்மை என்பது பாதையற்ற பிரதேசம்!” (“Truth is a Pathless Land!”) எனும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வாக்குப்படி பார்த்தால், ஆன்மீகத்திற்கு பாதை என்பதே கிடையாது என்பதுதான் உண்மை!

மேலும், ஞானமடைய ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த (தனி) வழி எனவும், அல்லது, பலர் சேர்ந்து பயணிக்கும் வகையிலான பொதுவான ஒரு அகலவழி ( நெடுஞ்சாலை) எனவும் எதுவும் கிடையாது! அல்லது, வெவ்வேறு குருமார்களால் போடப்பட்ட காப்புரிமைக்குட்பட்ட தனித்தனிப் பாதைகளும் கிடையாது!

ஞானமடைதல்  (Enlightenment) என்பதற்கு அடியோட்டமாக அமைந்துள்ள விசேடமான விஞ்ஞானத்தின்படி, ஞானமடைதல் என்பது மனித மனம் அல்லது உணர்வின் மலர்ச்சியைக் குறிப்பதாகும். ஆம், ஞானமடைதல் என்பது உணர்வில் (Consciousness) தொடங்கி உணர்வில் முடிவடைகிறது. உணர்வின் தொடக்கமான அகந்தையில் தொடங்கி, அதில் நிகழும் மாபெரும் மாற்றமுறுதலினால் (Transformation in Human Consciousness) விளையும் முழு-உணர்வு அல்லது அகண்ட உணர்வில் (Cosmic Consciousness) முற்றுப் பெறுகிறது!

'அறிவு' என்பது கொடுக்கப்பட்ட தொடக்க நிலை உணர்வை, அதாவது அகந்தை உணர்வைக் கொண்டு சேகரிக்கப்படும் ஒன்றாகும். ஒன்றைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு ஒருவர் தன்னிலையில் (தனது உணர்வில்) மாற்றமடைய வேண்டியதில்லை. அறிவு என்பது ஒருவரது நேரடி அனுபவத்தில் விளைவதாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இன்னொருவருடைய அனுபவத்தில் விளைந்த விபரங்களைக் கொண்டு நாம் நம்முடைய அறிவைக் கட்டமைக்க முடியும்.  ஆனால், 'ஞானம்' என்பது நேரடி அனுபவத்தில் மட்டுமே மலரக் கூடிய அரியவகை மலராகும். ஆம், உணர்வின் மலர்ச்சியே ஞானம்!

அறிவை ஒருவர் இன்னொருவருக்குப் புகட்ட முடியும்; ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெற்றுக்
கொள்ள முடியும். ஞானத்தை அவ்வாறு புகட்டவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ இயலாது!
அறிவைப் பகிர்ந்து கொள்ள முடியும்; ஞானத்தைப் பகிரவோ, கடன் கொள்ளவோ கொடுக்கவோ இயலாது!

உணர்வுதான் ஆன்மீகத்திற்கான ஒரே கருவியும், ஊடகமும் ஆகும். மனிதனிடம் உணர்வு
துளிர்க்காவிடில் அவன் ஒரு விலங்காகவே விளங்குவான்! விலங்குகளுக்கு இருப்பு பற்றிய
யாதொரு உறுத்தலும், கேள்வியும் ஏற்படுவதில்லை! ஆன்மீகம் என்பது மிகவும் விசேடமான ஒரு
உறுத்தலினால் மட்டுமே பிறக்கிறது; சிப்பிக்குள் முத்து தோன்றுவதைப் போல! பொதுவாக
விலங்குகளுக்கு இருப்பு பற்றிய உறுத்தல் ஏற்படுவதில்லை என்பதன் அர்த்தம் அவை தமது
இருப்பை நேரடியாக உணர்வதில்லை; மாறாக, அவை பசி, தாகம், பாலுணர்வு ஆகியவற்றின்
வழியாக, மிகவும் மறைமுகமாக மட்டுமே தமது இருப்பை உணர்கின்றன. இருப்பை உணர்வு
கொள்ளும்போது தான் வாழ்க்கை, குறிப்பாக, ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது!

விலங்குகளுக்கு வாழ்க்கை என்பது தொடங்குவதேயில்லை. மாறாக, அவை ஒருவகை இருப்பு நிலையில் இருக்கின்றன; அதிலேயே இயங்குகின்றன,  குதூகலிக்கின்றன, துன்பப்படுகின்றன; இருக்கும்வரை இருந்து பிறகு ஒரு நாள் மாண்டுபோகின்றன! இருப்பானது உறுத்தலாக மாறாதவரை, வாழ்க்கை என்பது தொடங்குவதில்லை! உணர்வுதான் உறுத்தலின் கருவியாகும்; உணர்வு என்பதே ஒரு மாபெரும் உறுத்தல் தான்! உறுத்தலின் வெளிப்பாடுதான் கேள்விகள். கேள்விகள் தான் அறிதல், புரிதல், சிந்தனை, இன்னும் ஆன்மீகம் மற்றும் அனைத்துவகைப்பட்ட  விசாரத்திற்குமான அடிப்படையுமாகும்.

ஆம், நமது இருப்பை, அதாவது, நாம் ஏன் இருக்கிறோம்? எதற்காக இருக்கிறோம்? எத்தகைய இலக்கை நோக்கியது நமது இருப்பு? இந்த இருப்புக்கு அர்த்தம், குறிக்கோள் ஏதேனும் உள்ளதா? என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை என்பதற்குள் நாம் பிரவேசிக்க இயலாது! ஆம், இருப்பை உணரத்தொடங்கும் ஒருவருக்கு இக்கேள்விகள், அதாவது இருப்பைச் சந்திக்கும் மனித உணர்வுக்கு ஏற்படும் இந்த உறுத்தல்கள் இல்லாமல்; அவ்வுறுத்தல்களுக்கான பதில்களை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கண்டுபிடிக்காமல், புரிந்துகொள்ளாமல் அவரால் மனிதனுக்கே உரிய தனிச்சிறப்பான வாழ்க்கையை வாழ இயலாது! மாறாக, எலிகளையும், தவளைகளையும் போலத்தான் இருப்பின் பொழுதுகளைக் கழித்துச் செல்ல முடியும்!   ஆம், இருப்பின் அனைத்து உணர்த்துகோள்களையும் (Implications) புரிந்துகொள்வதுதான் வாழ்க்கையாகும்!

‘இருப்பு’ (Existence) என்பதற்கும் ‘வாழ்க்கை’ (Life) என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டும் ஒன்றல்ல! இருப்பவை எல்லாம் இருப்பு தான்; அவை வெவ்வேறு நிலைகளில், தரங்களில் இருக்கின்றன. உயிரற்ற ‘சட’ இருப்பு; அடுத்து, உயிருள்ள இருப்பு, அதாவது  ‘உயிர்-இருப்பு’, அடுத்து, உணர்வுள்ள இருப்பு, ‘உணர்வு-இருப்பு’ என்பவையே அவை! இருப்பானது உணர்வு கொள்ளப்பட்டு புரிந்து கொள்ளப்படும் போது வாழ்க்கை மலர்கிறது முழு-உணர்வாக!

‘இருப்பு’ என்பது இருப்பவை அனைத்தையும் குறிக்கிறது; அதில் மனிதஜீவிகளாகிய நாமும் அடங்குவோம். இருப்பை உணர்தல் என்பது ஒட்டுமொத்தத்தையும் உணர்ந்தறிதலே. அதாவது, நம்மைச்சுற்றியுள்ள இயற்கை, உலகம், அல்லது பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் மட்டுமல்லாமல், அதில் உள்ளடங்கியுள்ள நம்மையும் உணர்ந்தறிதலாகும். நம்மை அறியும் கட்டத்தை எட்டும் போதுதான் “நான் யார்?” என்ற உறுத்தல், அதாவது கேள்வி முக்கியத்துவம் பெறும்! உண்மையில், நம்மைச்சுற்றியுள்ள இருப்பான இயற்கையை, உலகை, பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது என்பது, அனைத்தையும் அறிபவனாக எழும் மனிதன் (அதாவது உணர்வு) தன்னைப் புரிந்துகொள்ளும் வழியில், இடையில் அமைந்த விஷயமே தவிர, யாவற்றையும் விட அதி முக்கியமானது மனிதன் தன்னையறிதலே ஆகும். அதாவது, உணர்வு தன்னைத் தானே உணர்வு கொள்வதே, அறிவதே! ஆகவேதான், உணர்வு என்பதே ஒரு மாபெரும் உறுத்தல்தான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. மனிதன் என்பவன் அவனது சாரத்தில் உணர்வே தவிர வேறல்ல!

உண்மையில், “நான் யார்?” என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனை, அதாவது ஒரு நபரை, அதாவது உங்களைப் பற்றிய விசாரம் அல்ல! மாறாக, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் (பிரபஞ்சத்துடனான தொடர்பில்) மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதைப் பற்றியதாகும்.

ஆன்மீகம் என்பது ஆன்மீகம் தொடர்பாகப் புழங்கும் பிரத்தியேக துறைச் சொற்களுடன், அதாவது, தியானம், சமாதி, யோகம், துவைதம், அத்வைதம்,  ஆன்மா, பிரம்மம், ஞானமடைதல்...…போன்ற எண்ணற்ற பிற சொற்களுடன் பரிச்சயம் பெறுவதும் அச்சொற்களைக் கொண்டு கதைப்பதும், வாத விவாதங்களில் ஈடுபடுவதும் அல்ல! அல்லது ஏதாவது ஒரு மார்க்கத்தில், ஆசிரமத்தில் சேர்ந்துகொள்வதோ, அல்லது ஒவ்வொரு ஆசிரமமாக, ஏறி இறங்குவதோ, வெவ்வேறு குருமார்களிடம் தீட்சை பெறுவதோ அல்ல! இருப்பை  ஒருவர் நேரடியாகத் தம்முள் ஒரு பெரும் உறுத்தலாக உணராதவரை, அவ்வுறுத்தலைத் தொடர்ந்து, இருப்பு குறித்த ஆழமான, இடையறாத விசாரத்தில் இறங்காதவரை, மேலே குறிப்பிடப்பட்ட பிரத்தியேக ஆன்மீகத்துறைச் சொற்கள் யாவும் அர்த்தமற்றவையே!

ஞானம் என்பது ஒவ்வொருவரும் தன்னைத்தோண்டிக் கண்டடைய வேண்டிய பொக்கிஷமாகும்! ஞானிகளின் உபதேசக் களஞ்சியத்திலிருந்து நாம் சில குறிப்புக்களையும், ஆன்மீக விசாரத்தில் தொய்வடையும் போது ஊக்கத்தையும், மேன்மேலும் முன்னேறிச் செல்வதற்கான உந்துதலையும் மட்டுமே பெறவியலும். தன்னைத்தோண்டுவது என்பது ஒவ்வொருவரும் தன்னுடன் தான்    மேற்கொள்ளவேண்டிய பணியாகும். பிறர் அதில் பெரிதாக உதவிட இயலாது. அதே வேளையில், உண்மையான ஒரு குரு, அல்லது ஞானி என்பவர் செய்யக்கூடிய பேருதவி ஒன்று உள்ளது என்றால், அது சாதகர்களிடமிருந்து பலவகைப்பட்ட பிரமைகளைப் பிடுங்கிக் களைவது என்பது மட்டுமே!

ஆன்மீகம் என்பது இருப்பிலேயே உள்ளடங்கிய பரிணாம உந்துதலாகும்; எனினும், இருப்பானது தன்னைத்தானே உணர்வதற்குரிய வளர்ச்சியைப் பெறாமல்; அதாவது, தன்னைத்தானே அறிவதற்குரிய கருவியைப் பெற்றெடுக்காமல், அக்கருவியாக மாற்றமடையாமல்  தன்னையறிதல் என்பது சாத்தியமில்லை! ஆகவே தான், சட இருப்பாக, இயற்கை, பிரபஞ்சம் எனத் தோன்றிய இருப்பானது உயிர் பெற்றெழுந்தது; அதாவது, உயிருள்ள ஜீவியாய்ப் பரிணமித்தது! பிறகு ஒரு கட்டத்தில், உணர்வுள்ள மனித ஜீவியாக, மனிதனுள் மனம் அல்லது உணர்வாக எழுந்தது! ஆம், உணர்வு என்பது இருப்பின் உயர் வளர்ச்சி நிலையாகும். இருப்பு என்பது என்றென்றும் ஒரே இருப்பாக இருக்கும் ஒன்றல்ல. மாறாக, வளர்ச்சிக்குட்பட்ட ஒரு நிகழ்வுமுறை ஆகும்; அதையே நாம் பரிணாம நிகழ்வுமுறை என்கிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள இருப்பை, இயற்கை, உலகம், பிரபஞ்சம் என்று பல பெயர்களைக் கொண்டு நாம் அழைக்கிறோம். அது மிகத் திண்மையானதும், நிரந்தரமானதுமான ஒரு அமைப்பு  என்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது! ஆனால், உண்மையில், இயற்கை, உலகம் என்பது வளர்ச்சிக்குட்பட்ட தொரு நிகழ்வுப் போக்கே ஆகும். அது சலனமற்று மிக அமைதியாக ஓடும் ஒரு நதியைப் போல ஆரவாரமின்றி தனது இலக்கு நோக்கி மெதுவாக முன்னேறிச் செல்கிறது! பல சமயங்களில், அது தேக்கமுற்று ஸ்தம்பித்து நிற்கிறது. இதற்குக் காரணம், பரிணாம வளர்ச்சியின் அம்புத்தலையாக விளங்கும் மனிதஜீவிகள், உணர்வு இருந்தும் உணர்வற்ற ஜீவிகளைப் போல வாழ்ந்து செல்வதால், உணர்வுப் பரிணாமம் தேக்கமுற்று நிற்கிறது!

மேலும், முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது ஏராளமானவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு பல்வேறு மார்க்கங்களையும், ஆசிரமங்களையும், குருமார்களையும் தேடிச் செல்கின்றனர்; எனினும், அகந்தையின் எல்லைகளுக்குள்ளாகவே அவர்களின் ஆன்மீகம் சுழன்று கொண்டுள்ளதே தவிர, உணர்வின் உள்ளார்ந்த உறுத்தலின் தேடலாக அமையாமல், செயற்கையாகத் தூண்டப்பட்ட தேடலாக; ஒருவகை புதுமைப்பாணியாக (Fashion or Fad), பலவகைப்பட்ட தியானம், பயிற்சிகள்; சத்சங்கங்கள் எனும் சடங்குகளாக மட்டுமே உள்ளன! இவர்களது ஆன்மீகம் வெறும் பேச்சாக மட்டுமே உள்ளது; அவர்களது நடையாக இன்னும் தவழத்தொடங்கவில்லை!

அகமுகமான ஆன்மீகப் பயணம் என்பது மூட்டை முடிச்சுக்களுடன் இன்பச் சுற்றுலா செல்வது  போன்றதல்ல. அகப்பயணத்தின்போது யாதொரு மூட்டை முடிச்சுக்களையும் - புத்தக அறிவு, அனுபவம், கொள்கை கோட்பாடுகள், முன்முடிவுகள், வரைபடங்கள்… போன்ற எதையும் உடன் கொண்டு செல்ல இயலாது. மாறாக, ஒவ்வொருவரும் தனியே நிராயுதனாகத்தான் செல்ல முடியும், செல்ல வேண்டும். நீங்கள் எதையேனும் எடுத்துச் சென்றால், அங்கே அகப்பயணம் என்பதே  தொடங்காது; மாறாக, ஒருவகைக் கற்பனைப் பயணமாகவே அது அமையும்; அதுதான் நம்மில் பலரது விஷயத்திலும் நிகழ்கிறது!

அதாவது, ஒருவர் இமாலயத்திற்குச் சென்று வந்து ஒரு நெடிய பயணக்கட்டுரை அல்லது ஒரு புத்தகமே எழுதுகிறார். ஆனால், எவரும் அப்பயணக்கட்டுரையை, அல்லது புத்தகத்தை வாசித்துவிட்டு, அது தமக்கு நன்றாகப் புரிகின்றது என்பதால், தாமும் இமாலயம் சென்றுவந்துவிட்டதாக பிரமை கொள்வதில்லை! மாறாக, தாமும் இமாலயம் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்; பிறகு அதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறார்; பிறகு ஒரு நாள் தம் வீட்டை விட்டு இறங்கி இமாலயம் நோக்கி பயணம் மேற்கொள்கிறார். ஆனால், ஞானமடைதல் பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு தாம் ஞானமடைந்துவிட்டதாக நம்மில் பலர் மிகச் சுலபமாக எண்ணிக்கொள்கிறோம்!    

ஆன்மீக சம்பந்தமான நூல்கள் யாவும் இனிப்பு செய்வது எப்படி என்பதைக் கூறும் செய்முறைக் குறிப்புக்கள் (Recipe) போன்றவையே தவிர வேறல்ல. ஆனால், நம்மில் பலர், அச்செய்முறைக் குறிப்புக்களையே தின்று மகிழ்கிறவர்களாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்! ஞானமடைதல் (Enlightenment) பற்றியும், விழிப்படைதல் (Awakening) பற்றியும் சில புத்தகங்களை வாசித்துவிட்டு; அவற்றில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தங்களுக்கு நன்றாகப் புரிகிறது என்பதாலேயே தாங்கள் ஞானமடைந்துவிட்டாற்போலவும், விழிப்படைந்துவிட்டாற் போலவும், நெடிய பிரமையில் ஆழ்ந்து போகின்றனர்! இந்நிலை அஞ்ஞானத்தைவிட ஆபத்தானது! எவ்வாறென்றால், ஒருவர் தனது அஞ்ஞானத்தை என்றாவதொரு நாள் கடந்துசென்றுவிடக் கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளார். ஆனால், போலி ஞானத்தை, ஞானமடைந்துவிட்டதான பிரமையைக் கடப்பது என்பது சாத்தியமேயில்லை!

ஆக, “எல்லா (ஆன்மீகப்) பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன!” என்கிற கூற்று ஆபத்தானது; ஏனென்றால், அது பொய்யான வாக்குறுதியைக் கொண்டதாகும்! அடுத்து, எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கு நோக்கித்தான் செல்கின்றன என்றால், ஒருவர் எந்தப் பாதையில் போவது? அல்லது எல்லாப் பாதைகளிலும் சிறந்தது எது? அடுத்து, பாதைகள் பலவாயினும் ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு பாதையில் மட்டும்தானே செல்லவியலும்; இடையில் பாதை மாற இயலுமா? மாற முடியுமானால் ஒருவர் பயணித்துவந்த பாதை அந்த இலக்கிற்குச் செல்லாதா? புதிதாக மாறிச்சென்ற பாதை அந்த இலக்கிற்குக் கொண்டு செல்லும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? ஆக, இவ்வாறு எப்படிப் பார்த்தாலும், “எல்லா (ஆன்மீகப்) பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன!” என்கிற கூற்று தோல்விகரமானதாகவே தெரிகின்றது!
சொல்லப்பட்ட பாதைகள் பலப் பல!
ஆனால், உணரப்படும் பாதை ஒன்றே!
பசியுள்ளவன் தன் உணவை
அடைந்தே தீர்வான்!
பாதையல்ல முக்கியம்
பயணத்தின் அவசியம் உணர்பவனுக்கு!
வழியறிந்தபின்னே பயணிப்பதில்லை நதி!
உள்ளிருந்து எழும் உத்வேகம்
உன்னை உந்திச் செலுத்தட்டும்!
வழியும், இலக்கும், உண்மையுமான
மையத்தை உன்னுள் கண்டுபிடித்திடு!

* * *

மா.கணேசன்/ நெய்வேலி/ 19-04-2019

*****************************************************************************

Sunday, 2 December 2018

பிரபஞ்சத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம்! (The Fate of the Universe)



 பிரபஞ்சத்தின் எதிர்காலமானது கடுங்குளிரையோ, அல்லது கடும் வெப்பத்தையோ  உள்ளடக்கியதாய் அமையும்; இவ்விரு சூழல்களிலும் மனித இனம் வாழ  இயலாது.    
- பௌதிகவியல் விஞ்ஞானி ஸ்டீவென் வெய்ன்பெர்க்

  சிலர் சொல்கிறார்கள் உலகம் நெருப்பில் அழிந்துபோகும் என்று,
  சிலர் சொல்கிறார்கள் உறைபனியில் என்று …..
  நானோ, நெருப்பைத் தெரிவுசெய்வோருடன்  ஒத்துப்போகிறேன்.                         
                                 - ராபர்ட் ஃப்ராஸ்ட்


  இங்கே எனது அறையில் எழுது மேசையின் முன் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறேன் என்கிறீர்களா? பிரபஞ்சம் பற்றிய தவறான விஞ்ஞானப் பார்வையைத் திருத்தியமைத்து மானிடகுலத்தின் தலைவிதியை மாற்றியமைக்கும் உபாயத்தை   எழுதிக்கொண்டிருக்கிறேன்!      
- மா.கணேசன் / 14.11.2018
---------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : இக்கட்டுரையில் இடம்பெறும் சாய்வு எழுத்துக்களில் (Italics) அமைந்த வரிகள் யாவும்
பிறருடைய கருத்துக்கள் ஆகும். நேரெழுத்துக்களில் அமைந்த வரிகள் இக்கட்டுரையாசிரியரின் கருத்துக்கள் ஆகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------


பிரபஞ்சத்தின் தலைவிதி பற்றிய விஞ்ஞான விளக்கம்


பீதியடையாதீர்கள், நமது பூமிக்கிரகத்தின் கதை முடியப்போகிறது. அதற்கு சற்று காலம் ஆகக்கூடும், கிட்டத்தட்ட இன்றிலிருந்து 600 கோடியாண்டுகளில், நமது பூமி ஆவியாக்கப்படும்; அதாவது, சூரியனானது மடியும் தறுவாயில் விரிவடைந்து ஒரு செம்பூதமாக (Red Giant) மாறி நமது பூமியைச் சூழ்ந்து விழுங்கிவிடும்.


நமது பூமியானது சூரியமண்டலத்திலுள்ள கிரகங்களில் ஒரு கிரகம் மட்டுமே, நமது சூரியன் பால்வீதி  உடுமண்டலத்திலுள்ள கோடாணுகோடி நட்சத்திரங்களில் ஒன்றுதான், பால்வீதியைப் போல பிரபஞ்சத்தில் கோடாணுகோடி உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்) உள்ளன. அவை அனைத்துக்கும் எத்தகைய கதி காத்திருக்கிறது? ஒட்டுமொத்த பிரபஞ்சம் எவ்வாறு முடிவுக்கு வரும்? பிரபஞ்சத்தின் முடிவு குறித்து விஞ்ஞானமானது திட்டவட்டமான முடிவுக்கு வரவில்லை.


பிரபஞ்சத்தின் முடிவு குறித்த முதல் குறிப்பு வெப்பஆற்றல் பற்றிய ஆய்வான  (Thermodynamics) வெப்பச்சலனவியலிலிருந்து வருகிறது. அது, "வெப்பச் சாவு நெருங்கிக் கொண்டிருக்கிறது !" ("THE HEAT DEATH IS COMING")என எச்சரிக்கிறது. வெப்பச் சாவைப் பொறுத்தவரை, அது கரிக்கட்டையாக தீய்ந்துபோவதைவிட படுமோசமானதாகும். அதாவது பிரபஞ்சம் முழுவதற்கும் வெப்ப நிலையானது யாதொரு வித்தியாசமுமின்றி சம நிலைக்கு வந்துவிடும் - வெப்பம் முழுவதுமாக மறைந்து உறை நிலைக்கு வந்துவிடும்.  


பிரபஞ்சத்தின் முடிவுக்கு வெப்பச் சாவு மட்டுமே ஒரே சாத்தியமான வழியாக அமையக்கூடும் எனத் தெரிகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் மடிந்துவிடும், கிட்டத்தட்ட அனைத்துப் பருப் பொருளும் சிதைந்துபோகும், கடைசியாக மிஞ்சுவது அடிப்படைத்துகள் மற்றும் கதிரியக்கமும் சேர்ந்த சூப்பு மட்டுமே. இன்னும் அந்த சூப்பின் சக்தியும்  பிரபஞ்ச விரிவடைதலினால் வடிகட்டப்பட்டுவிடும் .


இந்த  "மகா உறை நிலை" யில்  ("Big Freeze"), பிரபஞ்சமானது  ஒரே சீராகக் குளிர்ந்து, செத்து, வெறுமையாகிவிடும்.


ஆனால், வெப்பச்சலனவியலை அடுத்து  நூறாண்டுகள் கழித்து வெளிவந்த ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் படி,  பிரபஞ்சத்தின் இறுதி முடிவானது பருப்பொருளினால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது.


பிரபஞ்சமானது மிகவும் அசாதாரணமான அளவிற்குச் சிறியதாகத் தொடங்கி , மிகவும் அசாதாரணமான வேகத்தில் விரிவடைந்ததாகவும் கருதப்படுகிறது. ஐன்ஸ்டீனின்  பொதுச் சார்பியல் கோட்பாடானது பிரபஞ்சமானது ஒன்று விரிவடைந்துகொண்டிருக்கவேண்டும் அல்லது சுருங்கிக்கொண்டிருக்கவேண்டும் என்ற முன் கணிப்பை முன்வைத்தது. ஐன்ஸ்டீன் அவர்கள் இதை 1917-ல்  உணர்ந்தார்.


பிறகு, 1929-ல், அமெரிக்க வானவியலாளர் எட்வின் ஹப்பிள் அவர்கள் பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதற்கான திடமான சான்றுகளைக் கண்டுபிடித்தார். ஆக, பிரபஞ்சமானது விரிவடைகிறதென்றால், அது  தற்போதைய அளவைவிட ஏற்கனவே மிகச் சிறியதாய் இருந்திருக்கவேண்டும். இந்தப் புரிதல்தான் பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு இட்டுச் சென்றது.


பிரபஞ்சம் விரிவடைகிறதென்றால், அதன் தலைவிதியானது, ஒரு எளிய கேள்வியில்  தொங்கிக்கொண்டிருக்கிறது : பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையுமா, எவ்வளவு துரிதமாக?


பிரபஞ்சத்தின் பொருள்-திணிவு அளவுக்கதிகமாய் இருக்குமானால், அதன் விரிவடைதல்  மெதுவாகி (ஒருகட்டத்தில் )நின்றுவிடும். அதிக பொருள்-திணிவு என்றால், அதிக ஈர்ப்புவிசை, அது யாவற்றையும் இழுத்து ஒன்றுசேர்ப்பதன் வழியாக விரிவடைதல் மெதுவாக்கப்படும்.
பொருள்-திணிவானது ஒரு உச்ச மதிப்பைத் தாண்டவில்லையெனில், பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்துகொண்டே போகும், இறுதியில் வெப்பச்சாவிற்கு உட்பட்டு உறைந்துபோகும்.


ஆனால்,பொருள்-திணிவானது அளவுக்கதிகமாய் இருந்தால், விரிவடைதல் மெதுவாகி நின்றுவிடும். அதன்பிறகு பிரபஞ்சமானது சுருங்கத்தொடங்கும். சுருங்கும் பிரபஞ்சம் சுருங்கச் சுருங்க  மேன்மேலும் சிறிதாகிக்கொண்டே போக, மேன்மேலும் அடர்ந்துகொண்டே போவதுடன் சூடும் கூடிக்கொண்டே போகும். இறுதியில் கச்சிதமான நெருப்பு -நரகமாக ஆகிவிடும். இது ஒருவகையான தலைகீழ் பெருவெடிப்பு நிகழ்வாக , பெரும்-உள்ளடர்தல்  (Big Crunch)என்று அறியப்படும் ஒன்றாக அமையும்.


இருபதாம் நூற்றாண்டின் பெரும்பாலான வானவியல் பௌதிகவியலாளர்களைப் பொறுத்தவரை, "கடும்-உறைவு " நிலையா அல்லது  “பெரும்-உள்ளடர்தலா”? பனியா அல்லது நெருப்பா? இந்த இரு காட்சிகளில் எது சம்பவிக்கும் என்பதை அவர்களால் நிச்சயிக்க இயலவில்லை


கரும்-சக்தி  பிரபஞ்சத்தைப் பிய்த்தெறிகிறது


1998-ல், இரு போட்டிக்குழுக்களைச்சேர்ந்த  வான்-பௌதிகவியலாளர்கள் ஒரு திகைப்பூட்டுகிற அறிவிப்பைச் செய்தனர் : பிரபஞ்சத்தின் விரிவடைதல் படுவேகத்தில் நிகழ்கிறது.


சாதாரண பருப்பொருளும் சக்தியும் பிரபஞ்சத்தின் இத்தகைய நடத்தையைச் செய்யவியலாது. இதுவே  அடிப்படையில் ஒரு புதுவகை சக்தி இருப்பதற்கான முதல் சான்று ஆகும். அதற்கு, கரும்-சக்தி ("Dark energy") எனப் பெயரிட்டுள்ளனர். அதன் நடத்தை பிரபஞ்சத்திலுள்ள வேறெதைப்போலவும்  இல்லை.


கரும்-சக்தி  பிரபஞ்சத்தைப் பிய்த்தெறிகிறது. அது எத்தகையது என்பதை இன்னும் நாம் அறியோம். ஆனால், குத்துமதிப்பாக பிரபஞ்சத்தின் 70% சக்தி கரும்-சக்தியே.


கரும்-சக்தி இருக்கிறது என்பதன் அர்த்தம் ஏற்கனவே பிரபஞ்சத்திலுள்ள பொருண்மையின் அளவானது பிரபஞ்சத்தின் இறுதி முடிவைத் தீர்மானிக்க இயலாது. உண்மையில் கரும்-சக்தியே பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துகிறது, விரிவடைதலின் வேகத்தை முடுக்கிவிடுகிறது.  இஃது பெரும்-உள்ளடர்தலின் (Big Crunch)சாத்தியத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. ஆனால் இதன் அர்த்தம் "கடும்-உறைவு " (Big Freeze) தவிர்க்கவியலாது என்பதல்ல. வேறு சாத்தியங்கள் உள்ளன.


[ ம்ம்ம்....  பிரபஞ்சத்தின் இறுதி முடிவு பற்றி இதுவரை  விவரிக்கப்பட்ட விஞ்ஞான விளக்கங்களில் பிரதானமாக இருவழிகளில்  பிரபஞ்சமானது தனது அழிவைச் சந்திக்கும் எனத் தெரிகின்றது. ஒன்று , "கடும்-உறைவு " (Big Freeze) அதாவது கடும்-பனி, இரண்டு, பெரும்-உள்ளடர்தல்  (Big Crunch) அதாவது, நெருப்பு -நரகம்! இவ்விரண்டு வழிகளையும் தாண்டி வேறு இரண்டு வழிகளும் முன்வைக்கப்படுகின்றன; ஆனால், அவை பெரிதும் கற்பனை கலந்தவையாக உள்ளதால்  கட்டுரையின் நீளம் கருதி இங்கு விவரிக்கப்படவில்லை . ஆர்வமுள்ளவர்கள் வேண்டுமானால் கீழேயுள்ள இணைப்பிற்குச் சென்று www.bbc.com/earth/story/20150602-how-will-the-universe-end
ஆங்கிலத்தில் வாசித்துக் கொள்ளலாம்.]

பிரபஞ்சத்தின் தலைவிதி பற்றிய மெய்யியல் விளக்கம்


வாசகர்கள் மேலே கொடுக்கப்பட்ட விஞ்ஞான விளக்கத்தை வாசித்து அதன் சாரத்தை கிரகித்திருப்பீர்கள். இப்போது நாம் அவ்விளக்கத்தின் பொருத்தப்பாடுகளையும், விஞ்ஞான விளக்கத்திற்கு மாற்றாக கட்டுரையாசிரியர் முன்வைக்கும் புதிய மெய்யியல் (Metaphysical) விளக்கத்தையும் இனி காண்போம்.


முதலிடத்தில், பிரபஞ்சத்தின் தலைவிதி, அதாவது அதன் இறுதி முடிவு எப்படிப்பட்டதாக அமையும் என்பது பற்றிய விஞ்ஞான அணுகுமுறையும், பார்வையும் முழுக்கமுழுக்க பருப் பொருளின் (Matter) சில பண்புகளை, குறிப்பாக பருப்பொருளின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டமைந்தவையாகவே உள்ளன. இந்த அணுகுமுறைதான் விஞ்ஞானத்தின் மாபெரும் குறைபாடாகும். ஏதோ, பிரபஞ்சத்தின் இருப்பையும்,அதன் வளர்ச்சிப் போக்கையும், அதன் குறிக்கோள், மற்றும் இலக்கு யாவற்றையும் பருப்பொருளும், அதன் பண்புகளும், ஒரு சில பௌதிகவிதிகளும் தான் தீர்மானித்தன என்பது போன்ற உள்ளமைந்த தர்க்கத்தைக் கொண்டு ஒட்டுமொத்த விஞ்ஞான அணுகுமுறையும் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது!


தோன்றிய ஒவ்வொன்றும் ஒருகட்டத்தில் மறைந்தேயாக வேண்டும் என்ற விதி ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திற்கும் பொருந்தும். அதே நேரத்தில், பிரபஞ்சம் போன்ற மிகவும் தனித்துவமான (வேறு எதனுடனும் ஒப்பிடவியலாத), மிகவும் புதிரான ஒன்று, ஏன், எதற்காகத் தோன்றியது, அதனுடைய குறிக்கோள், இலக்கு என்ன என்று எல்லாவற்றைப் பற்றியும் ஆராய்ந்தறியாமல், வெறுமனே பிரபஞ்சத்தின் அமைப்பையும், அது எதனால், எத்தகைய கட்டுமானப்பொருளால் ஆனது, என்பது போன்ற சில காரணிகளையும்; இயக்கவியல் விதிகள் (Laws of motion), மற்றும் வெப்பச்சலன விதிகள் (Laws of Thermodynamics) ஆகியவற்றையும் மட்டுமே கொண்டு அதன் இறுதி முடிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை அறிய முடியாது. ஏனெனில், இவ்விதிகளும், ஏனைய பிற பௌதிகவிதிகளும் பொருளியல் தளத்திற்கு (Material Plane) மட்டுமே உரியவையாகும்; அவை ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்துபவை அல்ல! உதாரணத்திற்கு, எல்லா சடப் பொருட்களும் புவி ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டவை தான்; ஏன், மனிதனுக்கும் அது பொருந்தும். அதாவது, ஒரு மனிதன் வீட்டு மாடியிலிருந்து குதித்தால் கீழே தரையில்தான் வந்து வீழ்வான்; அப்படியே எழும்பி, வானத்தில் பறக்க மாட்டான். ஆம், மனிதனும் புவி-ஈர்ப்பு விசைக்குக் கட்டுப் பட்டவன் தான். புவி ஈர்ப்பு விசையைப்பொறுத்தவரை, மனிதனும் ஒரு சடப்பொருளைப் போலத்தான். ஆனால், ஈர்ப்பு விசையே எல்லாம் அல்ல; இன்னும் அது எவ்வகையிலும் இறுதியானதுமல்ல (There is nothing ultimate about Gravity)!


ஒருவகையில், மொத்தப் பிரபஞ்சமும் பருப்பொருளால் கட்டியெழுப்பப் பட்டிருப்பதால், பிரபஞ்சமளாவிய அளவில் ஈர்ப்புவிசையானது பருப்பொருள் தளத்தை கட்டுப்படுத்தக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஈர்ப்புவிசை குறித்த ஒரு விஞ்ஞான விளக்கக்குறிப்பைக் காண்போம்:


“பிரபஞ்சத்தின் பரிணாமமானது விரிவடைதலின் உந்தத்திற்கும் (momentum) ஈர்ப்புவிசையின் தள்ளுதல் (அல்லது இழுத்தல்) ஆகியவற்றுக்கும் இடையேயான போட்டியால் தீர்மானிக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் தற்போதைய விரிவடைவு விகிதமானது (rate of expansion) ஹப்பிள்-ன் மாறாமதிப்பைக் (Hubble Constant) கொண்டு அளவிடப்படுகிறது, அதேவேளையில் ஈர்ப்புவிசையின் வலிமையானது (strength of gravity) பிரபஞ்சதிலுள்ள பருப்பொருளின் அடர்த்தியையும் அழுத்தத்தையும் சார்ந்துள்ளது.“


இதோ இன்னொரு குறிப்பு:


“நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றான ஈர்ப்பு விசை (Gravity) யானது, அறியப்பட்ட அதன் மதிப்பில் கொஞ்சம் பெரிதாயிருந்தால்கூட,  அதன் ஒரு விளைவு என்னவாக இருக்கும்
என்றால், நட்சத்திரங்கள் மிகு கொதிப்பாகவும், விரைவாக தன் எரிபொருளை எரித்துத்
தீர்த்துவிடுவதாயும் அமைந்திருக்கும். ஈர்ப்பு விசையானது கொஞ்சம் சிறிதாயிருந்தால்கூட,
நட்சத்திரங்கள் ஆற்றலை உமிழும்வகையில் எரியாமல் போயிருக்கும்; அதனால் கனமான-
தனிமங்கள் உருவாக முடியாது. அதனால் உயிர்ஜீவிகள் தோன்ற முடியாமல் போயிருக்கும்...”


ஆம், இந்த இரு குறிப்புகளுடன் இன்னும் ஈர்ப்புவிசை குறித்த பல்வேறு குறிப்புகளிலிருந்தும் நாம் பெறக்கூடிய உணர்த்துகோள் (Implication) என்னவென்றால், விஞ்ஞான வகை விளக்கத்தின்படி, ஈர்ப்புவிசையானது பௌதிகப் பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான விசை அல்லது ஆற்றலாக அமைந்திருக்கிறது என்பதே! ஈர்ப்புவிசையை அடுத்து மிக அடிப்படையான இன்னொரு அம்சம் என்னவென்றால், அது பருப்பொருளின் அடர்த்தியே (Density of Matter) ஆகும்.


ஆனால், ஈர்ப்புவிசையும், பருப்பொருளின் அடர்த்தியும் (மற்றும் அதன் பிற பண்புகளும்) சேர்ந்து இப்பிரபஞ்சத்தையும், அதில் உயிர்-ஜீவிகளையும், இன்னும் அறிவுள்ள உணர்வு-ஜீவிகளான மனிதர்களையும் என்ன நோக்கத்திற்காக உருவாக்கின? அல்லது  அவை உருவாவதற்கு உகந்த அளவில், விகிதத்தில், துல்லிய-மதிப்பமைவில் (Fine-Tuning) அமைவதற்கான நோக்கம் தான் என்ன? விஞ்ஞான விளக்கத்தில் இதற்கு பதில் கிடையாது!  கேட்டால், நோக்கம், குறிக்கோள், இலக்கு, அர்த்தம்… போன்றவை விஞ்ஞான ஆய்விற்கு உரித்தானவையல்ல; விஞ்ஞானத்தில் அவற்றிற்கு இடமில்லை என்று உடனே விஞ்ஞானிகள் பதிலிறுப்பர். ஏனெனில், அவர்களது அணுமுறை எந்திரத்தனமானதும், பொருண்மை வாதம் சார்ந்ததுமாகும்.


அப்படியானால், விஞ்ஞானிகளின் எந்திரத்தனமான அணுகுமுறை என்பதென்ன? அது ஏன் மட்டுப்பாடானது? உதாரணத்திற்கு, விஞ்ஞானிகள் ஒரு மரத்தைப் பார்க்கும்போது, அதன் வேர்கள், அடிமரம், கிளைகள், இலைக்கொத்துகள்; மற்றும் மரத்தின் நீளம், அகலம், உயரம், எடை போன்ற வற்றை மட்டுமே ஒரு மரம் என்பதாகக் கணக்கில் கொள்கிறார்கள். அம்மரத்தின் பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் ஆகியவற்றை அவர்கள் மரத்தின் முக்கியத்துவமற்ற பகுதிகளாக மட்டுமே கணக்கில் கொள்கிறார்கள். ஏனெனில், அடிமரம், கிளைகள், இலைக்கொத்துகள்; நீளம், அகலம், உயரம், எடை போன்றவையே மரத்திற்கு அடிப்படையானவை. பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் ஆகியவை மரத்தின் பகுதிகளாகவே இருந்தாலும், அவை மிகைப்படியானவை என்பது விஞ்ஞானிகளின் கணக்காகும்! அவர்களைப் பொறுத்தவரை, ஒரு மரமானது பூத்தாலும், பூக்காவிட்டாலும், காய்த்தாலும், காய்க்காவிட்டாலும் மரம் என்பது மரம்தான். இது ஒருவகை அடிப்படைவாதப் பார்வை எனலாம். இவ்வகையில் விஞ்ஞானிகள் யாவரும் ஒருவகை அடிப்படைவாதிகளே (Fundamentalists) எனலாம்.


விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட அடிப்படைவாதப் பார்வையைக் கொண்டே ஒரு மரத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் காண்கிறார்கள். இத்தகைய பார்வை, அணுகுமுறை ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை மட்டுமல்லாது, அதிலுள்ள ஒவ்வொன்றைப் பற்றிய விடயத்திலும், தொடக்கத்திலிருந்து முடிவுவரை பிரதிபலிப்பதாகிறது! அவர்களுக்கு நன்றாகத் தெரியும், பூக்கள், காய்கள், கனிகளின் “பயன்” என்னவென்று! கனிகளும் அவற்றினுள்ளேயுள்ள விதைகளும் எவ்வளவு முக்கியமானவை என்பதும் அவர்களுக்குத் தெரியும்! விதைகளிலிருந்து தான் மரங்கள் முளைத்தெழுகின்றன என்பதும் தெரியும்! ஆனால், கனிகளையும், விதைகளையும் மரம்தான் உற்பத்தி செய்கிறது என்பதுதான் அவர்களுடைய கணக்கு! விதைகள் இல்லாவிட்டால் என்ன? கிளைகளை வெட்டிப் பதியன் போட்டே மரங்களை நாங்கள் உருவாக்கிடுவோமே! இன்னும், ஒரே ஒரு திசுவிலிருந்து உயிரி-நகலாக்கம் (Cloning) முறையில் ஒரு மரத்தையே நாங்கள் உருவாக்கிடுவோமே என்கிறார்கள் விஞ்ஞானிகள்! சாத்தியம்தான், பதியன்முறை, திசு-கலாச்சாரம், உயிரி-நகலாக்கம் போன்றவை பரிணாம இயற்கையிலேயே அமைந்திருக்கும் மாற்றுவழிகளாகும். அவை பிரதான முறைகள் அல்ல. அவ்வாறிருப்பின், கனிகளும், விதைகளும் தோன்றியிருக்காது!


அழிவு அல்ல உய்வு!


இப்போது நாம் ஒரு மரத்தின் தலைவிதி, அதாவது, அதன் இறுதி முடிவு எத்தகையது என்பதைப் பார்ப்போம். ஒரு மரமானது நன்கு வளர்ந்து முதிர்ந்த பிறகு, பூத்துக் காய்த்துக் கனிகளை விளைவிக்கிறது; பல ஈடுகள் கனிகளை ஈன்றபிறகு, ஒரு நாள் அம்மரம் பட்டுப்போகிறது; மண்ணில் வீழ்ந்து சிதைவுற்று மண்ணோடு மண்ணாகிப் போகிறது. இவ்வாறே இப்பிரபஞ்சமும் ஒரு நாள் மடிந்துபோகும் என்பதே விஞ்ஞானிகளின் பார்வையாகவும் அமைந்துள்ளது! ஆனால், இக்கட்டுரை முன்வைக்கும் மெய்யியல் பார்வையானது இத்தகைய விஞ்ஞானப் பார்வையை மறுக்கிறது! ஏனெனில், நன்கு முதிர்ந்த வயதாகிப்போன மரம் கடைசியில் பட்டுப்போகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதுவல்ல அம்மரத்தின் தலைவிதி!


விஞ்ஞானிகளின் மொன்னையான அடிப்படைவாதப் பார்வையில், மரம் என்பது அடிப்படையில் அடிமரம், கிளைகள், இலைகள் மட்டுமே என்பதாக உள்ளது! ஆனால், மெய்யியல் பார்வையில், அடிப்படையில் ஒரு மரம் என்பது விதை தான்! மரத்தின் சாராம்சத்தைக் குறிப்பது விதைதானே தவிர, அடிமரமோ, கிளைகளோ, இலைகளோ அல்ல! ஒரு மரமானது அதன் ஆயுட்காலத்தின் முடிவில் பட்டுப்போவது என்பது இயற்கையானது, தவிர்க்கமுடியாதது; அது அம்மரத்தின் பருப்பொருளின் பண்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும்.


ஆம், மரத்தின் தலைவிதி கடைசியில் அது பட்டுப்போகிறதா, நீண்ட நெடும்காலம் நிலைத்து நிற்கிறதா என்பதில் இல்லை! மரத்தின் நற்கதியானது அம்மரத்தின் வித்துக்களைக் கொண்ட நற்கனிகளை உருவாக்குவதில் அடங்கியுள்ளதே தவிர, எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது என்பதில் இல்லை! காய்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, காய்த்துக்குலுங்கும் மரம் உடனடியாகப்  பட்டுப்போகாது! காய்கள் நன்கு முற்றிக் கனிகளாக விளைவதிலேயே அவற்றின் நற்கதியும் அடங்கியுள்ளன! ஆம், மரத்தின் தலைவிதி இறுதியாக அம்மரத்தின் கனிகளுடன் பிணைக்கப்பட்டதாகும். அவ்வாறே பிரபஞ்சத்தின் தலைவிதியும் அதன் நற்கனிகளான உணர்வுள்ள மானிடர்களின் (ஒவ்வொரு மானிடனின்) முழுமையுடனும்  பிணைக்கப் பட்டதாகும்!  Like the fate of the tree which is bound up with its fruits that contain its seeds…  the fate of the Universe is inextricably bound up with the conscious humans who are the fruits of the Universe.


அடுத்து, ஒரு மரத்தில் காய்த்துள்ள காய்களைப்பொறுத்தவரை, அம்மரம் எத்தனை கிளைகளைக் கொண்டிருக்கிறது என்பது பற்றியோ, இன்னும் அம்மரம் எத்தனை கிளைகளை விடக்கூடும் என்பது பற்றியோ, அல்லது அக்காய்கள் இருக்கின்ற கிளை எத்தனை காலம் நிலைத்திருக்கும் என்பது பற்றியோ, அல்லது அம்மரம் எத்தனை காலம் பசுமை மாறாது இருக்கும், கடைசியில் அது பட்டுப்போகுமா என்பது பற்றியோ கேள்வி எழுப்புவதில்லை, கவலைப்படுவதில்லை! இன்னும், ஒரே கிளையில் உள்ள காய்களும் தனது சக காய்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை! ஏனெனில், ஒவ்வொரு காய்க்கும் உள்ளார்ந்த ஒரு பொறுப்பு உள்ளது; அது என்னவெனில், காலத்தே கனிந்து அம்மரத்தின் வித்தை தன்னுள் கொள்வதேயாகும்! வித்துதான் அம்மரத்தின் முழுமையும் சாரமும் ஆகும்!


வித்தை தன்னுள் கொண்டிருக்கும் கனியைப்பொறுத்தவரை,  மரம் நீடித்து சாசுவதமாக இருக்கப் போகின்றதா, அல்லது பட்டுப்போய்விடுமா என்பது பற்றிக் கவலைகொள்வதில்லை! ஏனெனில், வித்திலிருந்து தோன்றிய மரம் முடிவில் வித்தினுள் அடங்குகிறது! வித்துதான் மரத்தின் உய்வு ஆகும்!  விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அது பிரபஞ்சத்தின் முடிவை, அதாவது அழிவைப் பற்றிப் பேசுகிறது. ‘முடிவு’ அல்லது ‘அழிவு’ என்பது, தவறான சொற்பிரயோகம் ஆகும்.ஏனெனில், அவை மரணம், சிதைவு, நாசம், இழப்பு, தோல்வி ஆகியவற்றைக் குறிக்கிறது. மொழியளவிலேயே நாம் இத்தகைய சொற்பிரயோகங்களைத் தவிர்க்கவேண்டும். ‘முடிவு’ அல்லது ‘அழிவு’ என்பவற்றுக்கு மாற்றாக நாம் உய்வு, முழுமை போன்ற சொற்களைப் பயன்படுத்தவேண்டும்! இவை வாழ்வு, நற்கதி, மீட்சி, விடுதலை, முக்தி, நிறைவு, பூரணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இவ்வாறு மாற்றிப் பயன்படுத்துவது என்பது அழகியல் காரணத்திற்காகவோ, அல்லது மங்கலகரமாக இருக்கும் என்பதற்காகவோ அல்ல; மாறாக,  இது மட்டுமே விஞ்ஞானப்பூர்வ மாகவும், மெய்ஞ்ஞானப்பூர்வமாகவும் சரியானது ஆகும்! மேலும், தோன்றியவையெல்லாம் அழியக்கூடியவை என்பது அபத்தமானதாகும். அதற்கு எதுவுமே தோன்றி பிறகு மறைவதைவிட தோன்றாமலிருப்பதே அதிக அர்த்தமுடையதாயிருக்கும்!


மரத்தைப்பொறுத்தவரையில், அளவில் பிரும்மாண்டமாக ஓங்கி வளர்வதையோ, மேன்மேலும் கிளைகளைப் பரப்பி, பரந்து விரிவடைவதையோ குறிக்கோளாகக் கொண்டதல்ல. மாறாக, அது எந்த மூலத்திலிருந்து (Source) வெளிப்பட்டதோ அந்த மூலத்தை, அதாவது விதையை மறு-உருவாக்கம் செய்வதொன்றே அதன் ஒரே பிரதான குறிக்கோளும், இலக்கும் ஆகும். மரம் தனது குறிக்கோளை அடைவதற்காகவே பூக்கிறது, காய்க்கிறது, கனிகளாகிறது. கனிகளின் உள்ளேயிருக்கும் வித்துக்களின் மூலம் மரம் தன்னை மீண்டும் மீண்டும் படைத்துக்கொள்கிறது!


மரமானது
விண்ணைத் தொடவோ
பூமியின் ஆழத்தை அளக்கவோ
முயற்சிக்கவில்லை!
மாறாக, அது தன் மூலத்தை
தேடுகிறது!
மீண்டும் வித்திற்குள் அடங்குவதே
அதன் ஒரே லட்சியம்!
ஏனெனில், மீண்டும் மீண்டும் ‘
தன்னை தோன்றிடச் செய்யும்
சூத்திரம் வித்தில் உள்ளது!


இவ்வாறே, பிரபஞ்சமும் தன் மூலத்தைத் தேடியே இயங்குகிறது; அதன் இயக்கம் மேம்போக்காகப் பார்க்கும்போது எந்திரத்தனமான பௌதிக இயக்கமாகத் தெரிகிறது. ஆனால், அடியோட்டமாக, அது ஒரு ஒப்பற்ற இலக்கைக் குறிவைத்துச் செல்லும் பரிணாம இயக்கம் ஆகும். பொருள்முதல் வாதச் சார்பு கொண்ட விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ‘இயக்கத்திலுள்ள பருப்பொருள்’ (Matter in Motion) என்பதாகக் காண்கிறார்கள். ஆனால், பிரபஞ்சம் என்பது பரிணாமத்திற்குட்பட்ட பருப்பொருள் (Matter in Evolution) என்பதே அதைப்பற்றிய ஆழமான உண்மையாகும்.


பிரபஞ்சம் என்பது ஒரு பிரும்மாண்டமான எந்திரமும் அல்ல; அது பருப்பொருளால் ஆனது என்றாலும் அது வெறும் ‘பருப்பொருள் - அமைப்பு’ம் அல்ல! பருப்பொருள் என்பது அதனளவில் முதலானதும் இல்லை முடிவானதும் இல்லை; அதைக் கட்டுப்படுத்தி இயக்குகிற விதிகளும், அவ்விதிகளப் பணிக்கும் செயல்திட்டமும் இல்லாமல், பருப்பொருளை அப்படியே அதன் போக்கில் விட்டு விட்டால் இறுதியில் அது இற்றழிந்துபோகும்!


ஆனால், நல்லவேளையாக, எவ்வித கட்டுப்பாடும், முறைமையும் இல்லாத சுதந்திர பருப்பொருள் (Free Matter) என்பது இல்லை!  பருப்பொருள் என்பது அதனளவில் ஒன்றுமேயில்லை என்றுகூட சொல்லிவிடலாம்! அதைக்கொண்டு ஒரு பிரும்மாண்டமான பிரபஞ்சமே எழுப்பப் பட்டாலும்; அப்பிரபஞ்சமும் ஒன்றுமில்லாததுதான்! பருப்பொருள் என்பது எப்போதும் தன்னைக் கடந்த வேறு ஏதோவொன்றின் பொருளே ஆகும்! அதாவது, பருப்பொருளானது தன்னைக் கடந்த வேறொன்றினைச் சுட்டும் குறியீடே! தண்ணீரைப் போல அது நிறமற்றது, வடிவமுமற்றது; ஆனால், மிகுந்த நெகிழ்வுத் தன்மை  கொண்டது! அது பரிணாமத்தின் தேவைகளுக்கேற்ப எத்தகைய வடிமைப்புகளிலும் தன்னை அமைத்துக்கொள்ளும் அளவிற்கு மிகுந்த நெகிழ்வுத்தன்மை கொண்டதாகும்!, அவ்வடிவமைப்புகளின் வழியாக பரிணாமமானது தனது இலக்கு நிலையை அடையும் முயற்சியில் உயிர், உணர்வு (Consciousness) ஆகிய புதிய பண்புகள் அல்லது இருப்பு-நிலைகளை எட்டுவதற்கான பொருத்தமான ஊடகமாக, கருவியாக பருப்பொருள் அமைந்திருக்கிறது. பரிணாமத்தின் நோக்கம் பௌதிகச் சடப் பண்பைக் கடந்து செல்வதுதான்! ஏனெனில், சடப்பண்பு, அல்லது சட-இருப்பு என்பது பிரபஞ்சத்தின் அடித்தளம் போன்றதாகும்.  


அதாவது, பரிணாமமானது சட-இருப்புக்குள்ளேயே, அதாவது சடப்பண்பின் தளத்திற்குள்ளேயே  அடைபட்டிருக்கவோ, வளைய வந்துகொண்டிருக்கவோ முடியாது. சடம், பருப்பொருள், இயற்கை, பிரபஞ்சம் என்று அதை எப்படிக் குறிப்பிட்டாலும் அதுவே தொடக்கமும், முடிவாகவும் இருக்க முடியாது! பருப்பொருள் என்பது தனக்குத்தானே ஒரு சிறையாக அமைந்ததாகும். அதிலிருந்து அது தன்னைத்தானே கடந்து செல்வதன் வழியாக தனது விடுதலையை, உய்வை  நாடி அடைந்தாக வேண்டியது கட்டாயமாகும்! பருப்பொருள் ஒரு குறிப்பிட்ட மிகு-சிக்கல் அமைப்பில் (Complexity) அமையும் போது அது உயிர்பெற்றதாகிறது, அதாவது உயிர்-ஜீவியாக பரிணமிக்கிறது; அவ்வழியே அது உயிர்-இருப்புடன் தொடர்பு கொள்வதாகிறது! இன்னும், மேன்மேலும் மிகு-சிக்கல் வாய்ந்த மனித மூளை எனும் அமைப்பின் வழியாக  பருப்பொருளானது உணர்வு பெற்றதாகிறது; அவ்வழியே அது உணர்வு-இருப்புடன் தொடர்பில் அமைகிறது!


இறுதியாக, அது மனிதமூளையில் உள்ள நியூரான்களின் அமைப்பிலும், அவற்றின் மிகு-சிக்கலான வலைப்பின்னல்கள் வழியாக ஏற்படக்கூடிய மாற்றங்களால் (Mutations) எட்டப்படும் இறுதி-நிலை உணர்வில் (Ultimate Consciousness) தனது முழுமையை அடைந்து விடுதலை பெறுகிறது! இந்த இறுதி-நிலை உணர்வே, சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் பரிணாம வழிமுறையின் வாயிலாக பருப்பொருளானது எட்டக்கூடிய உச்சபட்ச நிலையாகும்! பருப்பொருளின் (பிரபஞ்சத்தின்) உணர்வுப்பூர்வமான பிரதிநிதியாக பரிணாம முழுமையைச் சாத்தியமாக்கிடுபவன் மனிதஜீவியே ஆவான்! விதை என்பது எவ்வாறு ஒரு மரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்வதாக அமைகிறதோ, அவ்வாறு, மனிதனே பிரபஞ்சத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்பவனாக பிரபஞ்சத்தின் கனியாக அமைகிறான்! மனிதன் தான் அடையக்கூடிய உணர்வுப் பரிணாமத்தின் உச்சமான முழு-உணர்வில் (அதுவே பிரபஞ்சத்தின் வித்து, அதாவது “மூலம்”) தன்னைத்தானே கடந்தவனாகிறான்!


விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தின் தலைவிதியை முடிவு, அழிவு ஆகிய சொற்களின் வழியே காண்கின்றனர். ஆனால், மெய்ஞ்ஞானிகளோ உய்வு, முழுமை ஆகிய சொற்களின் வழியே காண்கின்றனர். இவ்விரு பார்வைகளுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் உள்ளது! இவை வெறுமனே சொற்களின் அளவிலான வித்தியாசம் அல்ல. மாறாக, மேம்போக்கான புரிதலுக்கும் ஆழமான புரிதலுக்கும் உள்ள மகா வித்தியாசம் ஆகும்!


அடுத்து, மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மிக முக்கியமான அம்சம் ‘சாசுவதம்’ பற்றியதாகும். அதாவது,  சாசுவதம் என்பது காலத்தில் நிலைத்திருப்பது, முடிவேயில்லாமல் நீடிப்பது என்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், சாசுவதம் என்பது நீண்ட நெடிய காலமோ, அல்லது காலத் தொடர்ச்சியோ அல்ல. அது காலத்தின் மலர்ச்சி ஆகும்! அது காலத்தை விட்டு நீங்கிய, காலத்தைக் கடந்த ‘முழுமை’ நிலையாகும்; அதை, காலத்தைக் கொண்டு அளக்க முடியாது. ஏனெனில் சாசுவதம் என்பது காலத்தில் இல்லை. ஏனெனில்,


எது தொடர்கிறதோ அது முழுமையற்றது!
எது முழுமையானதோ அது தொடர்ச்சியற்றது!
அதுவே இறுதியானது, ஆகவே காலமற்றது!
ஆகவே அது எப்போதுமுள்ளது, இப்போதுமுள்ளது!
எது காலமற்றதோ அது நித்தியமானது!
எது காலத்தில் தொடர்கிறதோ அது அநித்தியமானது!


இவை கவிதை வரிகளல்ல. மாறாக, மெய்ஞ்ஞானச் சமன்பாடு ஆகும்! ஆம், சாசுவதம் என்பது முற்றிலும் வேறு வகை பரிமாணம் ஆகும்.


அழிவதற்காக அல்ல, அழியா மெய்ம்மையைப் பற்றுவதற்காகத் தோன்றிய தற்காலிக நிஜம் பிரபஞ்சம்! தோன்றியவையனைத்தும் மறைந்து போகும் என்பது மிகவும் மேலோட்டமானதொரு புரிதல் ஆகும். இப்புரிதல், உள்ளதை மட்டுமே, அதாவது பருப்பொருளை, அல்லது அதனால் கட்டியெழுப்பப்பட்ட பௌதிகப் பிரபஞ்சத்தை மட்டுமே பிரதான நிஜம், அல்லது மொத்த நிஜமும் என்பதாகக் கொண்டு அடையப்பட்டதாகும்.  பிரபஞ்சமாயினும், அல்லது எதுவாயினும் அது தோன்றியதற்கான காரணமும், நோக்கமும் முக்கியமானவையாகும். இவை பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகும். அடுத்து, தோன்றுகிற பொருளனைத்தும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஏனென்றால், நீடித்து நிலைத்திருப்பது என்பதே அதனளவில் குறிக்கோளாகவோ, இலக்காகவோ இருக்கமுடியாது; அவ்வாறு நீடித்து நிலைத்து இருப்பதன் மூலம் அடையப்படும் அல்லது சாதிக்கப்படும் இலக்குதான் என்ன? அடுத்து, நீடித்து நிலைத்திருப்பதை நாம் நிரந்தரத்துவம் என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது! ஆகவே தான், தோன்றியவையனைத்தும் அழியக்கூடியவையே என்று சொல்லப்படுகிறது.


இத்தகைய தவறான புரிதலுக்குக் காரணம், ‘காலம்’ என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என்பதேயாகும்.  ‘காலம்’ என்பது முழுமைக் குறைவையும், ஆகவே வளர்ச்சியின் அவசியத்தையும்; மட்டுப்பாட்டையும், ஆகவே அதன் நிவர்த்தியையும் சுட்டுகிறது. ஆக, குறைவை நிறைவுசெய்து, மட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, முழுமை-நிலை எட்டப்படும்போது அம்முழுமை-நிலை கால-வெளி உலகைக் கடந்துவிடுகிறது! ஏனெனில், முழுமை என்பது காலத்தின் உலகில் தரிப்பதில்லை! முழுமை என்பது முற்றிலும் வேறொரு பரிமாணம், அல்லது உலகமாகும்! பிரபஞ்சத்தின் முழுமை எட்டப்பட்ட பிறகு, அதாவது எந்த இலக்கிற்காக பிரபஞ்சம் தோன்றியதோ, அந்த இலக்கைத் தொட்டபிறகு, அழிவதாகத்தெரிவது பிரபஞ்சத்தின் வெறும் சக்கை போன்ற பகுதியே தவிர சாரம் அல்ல! பிரபஞ்சத்தின் நோக்கம் தனது சாரத்தை உணர்வதே!


ஆனால் சடப் பண்புகொண்ட பருப்பொருளாலான பிரபஞ்சம் நேரடியாக தனது மூலத்தையோ, சாரத்தையோ அறியவோ, உணரவோ இயலாது. ஆகவேதான் அது உயிர்-ஜீவியாக அவதாரம் எடுத்தது. உயிர்-ஜீவி என்பது அதன் சாரத்தில் புலனுணர்வின் மூலமாகப் பெறும் புலனறிவே ஆகும். ஆனால், அப்புலனுணர்வு அல்லது புலனறிவு மூலம் உயிர்-ஜீவிகளாலும் பிரபஞ்சத்தின் நோக்கத்தை அறியப்போதுமானதாக அமையவில்லை! மேலும், உயிர்-ஜீவிகளுக்கு உயிர்-பிழைத்திருப்பதற்கான தேவைகளை அடைவது என்கிற குறுகிய இலக்கிலேயே அவற்றின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது!


ஆகவேதான், பிரபஞ்சமானது உயிரியல் பரிணாமத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்று. சுய-உணர்வு உள்ள, பகுத்தறிவு கொண்ட ஜீவிகளாகிய மானிடர்களாக அவதாரம் எடுத்தது! ஆனால், பகுத்தறிவு பெற்றிருந்தும், எல்லா மானிடர்களாலும், பிரபஞ்சத்தின் நோக்கத்தை அறியும் அளவிற்கு உணர்வு பெற இயலவில்லை! மிகவும் அரிதாக அவ்வப்போது இங்கொருவர் அங்கொருவராக மிகச்சிலர் மட்டுமே பிரபஞ்சத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் அளவிற்கு உணர்வு பெறுகிறார்கள்! மிகப் பெரும்பாலான மானிடர்கள் தம் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதிலும், பரிணாம வாழ்க்கைக்குப் புறம்பான லட்சியங்களைத் துரத்திச்செல்வதிலும் மூழ்கி, இலக்கற்ற ஜீவிகளாக வாழ்ந்து மடிந்து போகின்றனர்! அதாவது, மானிடஜீவிகள் தமது இருப்பை உணரக்கூடிய சுய-உணர்விலும், அதைக்கொண்டு தமது குறுகிய தேவைகளை அடையும் பொருட்டு உலகை மேம்போக்காக அறிய உதவும் பகுத்தறிவிலும் தங்கித் தேங்கிப் போயினர். இதன் விளைவாக, சுய-உணர்வைத் தாண்டிய உயர்-உணர்வும், பகுத்தறிவைத் தாண்டிய உயர் அறிவும் உள்ளன என்பதை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத மட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டனர். இதில் விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல!


மனிதஜீவிகளின் இந்தத் தேக்க நிலையால், பிரபஞ்சம் தனது நோக்கத்தை, இலக்கை அடைய இயலாமல் பரிணாம ரீதியாகத் தேக்கமுற்று (ஸ்)தம்பித்து நிற்கிறது! ஏனெனில், பிரபஞ்சத்தின் ஒரே நோக்கம் முழு-உணர்வை, அதாவது முழு-அறிவை எட்டுவதேயாகும்! அப்படி முழு-அறிவில் முழு-உணர்வில் என்ன விசேடம் உள்ளது? ஏற்கனவே குறிப்பிட்டபடி, (வித்திலிருந்து தோன்றிய மரம்) மீண்டும் வித்திற்குள் அடங்குவதே அதன் ஒரே லட்சியம்! ஏனெனில், மீண்டும் மீண்டும் தன்னை தோன்றிடச் செய்யும் சூத்திரம் வித்தில் உள்ளது! ஆம், அதுபோலவே, இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கான முழு சூத்திரமும் முழு-அறிவில், அதாவது முழு-உணர்வில் உள்ளது.


மேலும், பரிணாமத்தில் பரிணமிப்பது எதுவென்றால், அது உணர்வே (Consciousness) ஆகும். ஆம், உணர்விலிருந்து பெறப்படுவது (Derivative)தான் அறிவு ஆகும்! பாமரர்களும், விஞ்ஞானிகளும் உயிர்ஜீவி என்பதை வெறும் உண்டு, உறங்கி, இனம்பெருக்கி உயிர்-பிழைத்திருக்கும் ஜந்து, அல்லது ஒரு எந்திரம் போன்றது என்பதாக மேலோட்டமாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், உண்மை என்னவெனில், உணர்வுக்கும் அறிவுக்குமான அடிப்படைகளை உயிர்-ஜீவிகளை ஊடகமாகக் கொண்டே பரிணாமம் படைக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, உயிர்ஜீவிகள் உணர்வு, மற்றும் அறிவை வெளிப்படுத்தும் ஊடகங்களே ஆகும்! இவ்வரிசையில் உணர்விலும் அறிவிலும் குறிப்பிடத்தக்க உயர் வளர்ச்சி நிலையை வெளிப்படுத்தும் வகையில் எழுந்த ஜீவியே மனிதன்! உண்மையில், பரிணாமத்தில் விளையும் உயிர்-ஜீவிகளோ, அல்லது மனித-ஜீவிகளோ முக்கியமல்ல; அவை பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கை அடைவதற்கான கருவிகளேயாகும். மாறாக, மனித ஜீவியின் வழியாக அடையப்படும் உணர்வு நிலையும், அதிலிருந்து பெறப்படும் (Derivative) அறிவு நிலையும் மட்டுமே முக்கியமானவையாகும்! ஏனெனில், பருப்பொருளோ, விசைப் புலமோ (Field of force), அல்லது கால-வெளி ஊடகமோ (Spacetime continuum), இவை எதுவும் பிரபஞ்சத்தின் அடிப்படையான மெய்ம்மை அல்ல; அறிவு தான் அடியும் முடியுமான மெய்ம்மையாகும்; அறிவுக்கும் அடிப்படை,  உணர்வு (Consciousness) தானாகும்!


ஆனால், பிரபஞ்சத்தின் தலைவிதியை யார் எழுதுவது? யாரும் எழுதவேண்டியதில்லை; அது ஏற்கனவே முழு பரிணாமத் திட்டத்தின்படி எழுதப்பட்டுவிட்டது. அவ்விதியைச் சரியாகப் புரிந்துகொண்டு நிறைவேற்றுவது மட்டுமே பரிணாமத்தின் உணர்வுப்பூர்வமான பிரதிநிதிகளான மனிதஜீவிளாகிய நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்! விஞ்ஞானிகள் பரிணாமத் திட்டத்தையும், பரிணாமத்தில் பரிணமிப்பது எது என்பதையும்  புரிந்துகொள்ளாததால், அவர்கள் அதன் (தலை)விதியைத் தவறாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!


பிரபஞ்சம் என்பது ஒரு பரிணாம இயக்கம்; பரிணாம இயக்கத்திற்கு வெளியே அதற்கு யாதொரு   அர்த்தமுமில்லை! பிரபஞ்சத்தின் தலைவிதியானது, பரிணாமரீதியாக எழும் இறுதி நிலையுடன் பிணைக்கப்பட்டதாகும். பரிணாமத்தில் கடைசியாக விளைந்தவன் மனிதஜீவியே ஆவான். ஆயினும், அவனே பரிணாமத்தின் கடைசிச் சொல் அல்ல; அவன் கடைசிசொல்லுக்கும் முந்தைய சொல் ஆவான்! அதாவது, அவன் இறுதியானதொரு பரிணாம மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டாக வேண்டும்!  ஆம், அவனது மலர்ச்சியே அந்த இறுதிச் சொல்லும், ஒப்பற்ற இலக்கு நிலையும் ஆகும்! அதாவது, மனிதன் என்பவன் உணர்வே ஆவான்; உணர்வின் மலர்ச்சியைத்தான் நாம் மனிதனின் மலர்ச்சி, ஒருமை, முழுமை, பூரணம் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். மனிதன் தன்னையும், தன் வாழ்வையும் பரிணாமத்துடன் தொடர்புபடுத்தாமல், பரிணாமரீதியாகப் புரிந்து கொண்டு வாழாமல் தன் சொந்த விருப்பம், மற்றும் தெரிவுகளின்படி வாழ்வானேயானால், அவன் இன்னுமொரு விலங்குஜீவியாக மட்டுமே உழன்று, இறுதியில் மாண்டு போவான்!


ஆக, பரிணாம ரீதியாகக் காண்கையில், பிரபஞ்சத்தின் இலக்கும், தலைவிதியும்; மனிதனின் இலக்கும் தலைவிதியும் ஒரே புள்ளியில்தான் குவிகின்றன! இன்னும் சொல்லப்போனால், பிரபஞ்சத்தின் முடிவான நிறைவேற்றம் (consummation)என்பது வருங்காலத்தில் நிகழ்வதில்லை! மாறாக, அது ஒவ்வொரு மனிதனின் பரிணாம முழுமையில் இப்போதே நிகழக்கூடிய ஒன்றாகும். ஆம், மனிதஜீவிகள் மட்டும் தமது பரிணாமக் கடமையை உணர்ந்திருப்பார்களேயானால்!


மேலும், மனிதனே பிரபஞ்ச முழுமைக்குச் செல்லும் வாயில் ஆவான்! ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும் தான் பிரபஞ்சத்தின் முழுமை அடையப்படவேண்டும்;ஒவ்வொரு கனியினுள்ளேயும் மரம் தனது சாரத்தை, மூலத்தைக் கண்டடைவதுபோல! இவ்வகையில் பிரபஞ்சத்தின் தலைவிதி, அதாவது, உய்வு, நற்கதி, விடுதலை என்பது ஒவ்வொரு மனிதனும் அடைந்தாக வேண்டிய முழுமையைச் சார்ந்திருக்கிறதே தவிர, மனிதனின் தலைவிதியானது  பிரபஞ்சத்தைச் சார்ந்து இருக்கவில்லை! பல ஈடுகள் கனிகளைக் கண்ட மரம் இறுதியில் அழிந்து போனாலும், பட்டுப்போனாலும் அதனால் மரத்திற்கும் பாதிப்பில்லை, அதன் கனிகளுக்கும் யாதொரு பாதிப்புமில்லை! பிரபஞ்சம் என்பது அழிவற்றதிலிருந்து அழிவற்றதிற்குச் செல்லும் ஒரு தற்காலிகப் பாலம் போன்றதே!


முக்கியமாக, இப்பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பில் (Big-Bang) பிறந்த போது, அப்பிறப்புக் கணத்தைக் கொண்டாட நாம் அழைக்கப்படவில்லை! ஏன், பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி ஆண்டுகள் வரை நாம் தோன்றிடவில்லை. அவ்வாறே, பிரபஞ்சத்தின் முடிவுக் காலத்தின்போதும் நாம் அழைக்கப்படமாட்டோம்! ஏனெனில், அதற்குள் நாமும், ஒட்டுமொத்த மனிதகுலமும்; நம் வழியே இப்பிரபஞ்சமும் முக்தியடைந்துவிடுவோம், அதாவது, பரிணாம முழுமையை அடைந்துவிடுவோம்! அழிவதாக, முடிவிற்கு வருவதாகத் தெரிவது வெறும் சக்கையே தவிர சாரம் அல்ல! பறவை கூட்டைவிட்டுப் பறந்துபோன பிறகு, கூட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை!


உண்மையிலேயே நாம் அக்கறையுள்ளவர்களாயிருந்தால், நாம் கேட்க வேண்டிய கேள்வி, பிரபஞ்சம் இறுதியில் எத்தகைய முடிவைத் தழுவிடக்கூடும் என்பது பற்றியல்லாமல், நாம் நம் வாழ்-காலத்தின் முடிவில் எத்தகைய முடிவைத் தழுவிக் கொள்ளப்போகிறோம் என்பதைப் பற்றியதாக இருக்கவேண்டும். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறந்துதான் போகவேண்டும் என்று நாம் கூறுவோமானால், நாம் நம்மையும் புரிந்து கொள்ளவில்லை; பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளவில்லை; அதாவது, உடலாகிய கூட்டை நாமாகவும், சடப் பொருளாலான காலி அரங்கத்தை பிரபஞ்சமாகவும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ளோம்! இவ்வழியே உன்னதமான ஒட்டுமொத்தப் புதிரையும் நாம் கொச்சைப் படுத்திவிட்டோம் என்பதாகத்தான் அர்த்தம்!




குறிப்பு: இக்கட்டுரையுடன் தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையாசிரியரின் பிற கட்டுரைகளையும் வாசிப்பது வாசகர்களுக்கு முழுமையான புரிதலைக் கொடுக்கும்.


*  தன் மையத்தைத் தேடும் பிரபஞ்சம்! [The Extreme Anthropic Principle]
*  உலகம் எவ்வாறு தோன்றியது?
*  முழு-அறிவும் விஞ்ஞான அறிவும்

மா.கணேசன் / நெய்வேலி/ 07-11-2018
ŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒ

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...