அடுத்தமுறை எவராவது உங்களிடம் வந்து, "இருப்பது யாவும் இயற்கை மட்டுமே","இயற்கையே பிரதானம்", "இயற்கை இயற்கையாகத்தோன்றியது", என இயற்கை,இயற்கை, என்று இயற்கையின் புகழ் பாடினால்,அவரிடம்; "நீங்கள்எந்த இயற்கையைப்பற்றிப்பேசுகிறீர்கள்?" என்று கேட்கத்தவ றாதீர்கள்! மேலும், அவருடன் சற்று எச்சரிக்கையுடன்பேசுங்கள், பழகுங்கள்! இல்லாவிடில், அவருடைய மட்டுப்பாட்டை உங்களிடம் தொற்றச்செய்திடுவார்!
* * *
'இயற்கை' என்று எதுவுமில்லை!
--------------------------------------------------
" இயற்கை" என்று ஏதோவொன்று மிகவும் திடமாகவும், மாறாததாகவும், நமக்குப்புறத்தே நிலையான பின்புலமாகவும் இருப்பதாக விஞ்ஞானிகளும், பொருண்மைவாதிகளும், 'இயற்கை வாதி'கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களும், இயற்கை மீறியதாகச் சொல்லப்படும் கடவுள், ஆவி, பேய், பிசாசு போன்றவற்றை மறுப்பதற்கான ஒரே ஆயுதமாக 'இயற்கை'யை மட்டுமே நம்பும் நாத்திகவாதிகளும் கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அத்தகையதொரு 'இயற்கை' அவர்களது மனங்களில், வெறும் கருத்தாக மட்டுமே இருக்கிறது! இன்னும் ஒரு மிக ஆழமானதும், முறையானதுமான ஆய்வின் இறுதியில் "இயற்கை" என்று எதுவுமில்லை என்பது புலனாகும்!
அப்படியானால், நமக்குப்புறத்தே, நம்மைச்சுற்றி ஒரு உலகம் உள்ளதே, அதற்குப்பெயர் என்ன என்று கேட்டால், அதை "உலகம்" அல்லது "பிரபஞ்சம்" என்றே அழைப்போமாக! அதேவேளையில், நம்மைச்சுற்றி ஒரு பிரபஞ்சம் மட்டுமல்லாமல், இரண்டு பிரபஞ்சம் உள்ளன! ஒன்று, பருப்பொருளாலான மாபெரும் அமைப்பான "பௌதீகப்பிரபஞ்சம்". இரண்டு, தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக்கொண்டமைந்த "உயிரியல் பிரபஞ்சம்", என இரண்டு பிரபஞ்சங்கள், அல்லது உலகங்கள் உள்ளன. இவற்றின் மத்தியில், மூன்றாவதாக ஒரு பிரபஞ்சம் எழுந்துள்ளது, அதுதான், மனிதஜீவிகளைக்கொண்டமைந்த மனம் அல்லது உணர்வின் பிரபஞ்சம் ஆகும்!
ஆம், 'இயற்கை' என்று எதுவுமில்லை! மாறாக, தனது அசலான இயற்கையை, இயல்பைத் தேடிச்செல்லும் ஒரு நெடிய இயக்கம் மட்டுமேயுள்ளது!உண்மையில், எல்லா காலத்திலும் ஒரே தன்மையிலமைந்ததான இயற்கை என்று எதுவும் இருக்கவில்லை. அதேநேரத்தில், அது நிலைகொள்ளாமல் எப்போதும் மாறிக்கொண்டேயும் இருப்பதில்லை! மாறாக, இயற்கை தனது அசலான இயற்கையை நாடிச் சென்று கொண்டுள்ளது; அத்தகைய இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும். இயற்கை, பிரபஞ்சம், உலகம், பருப்பொருள் என எவ்வாறு அதை அழைத்தாலும், அது ஒரு பரிணாம இயக்கமே ஆகும். இயற்கை என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து ஒரு குறிப்பான இலக்கு- நிலையை நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். ஆம், இலக்கு என்பது இல்லாமல் யாதொரு இயக்கமும் இல்லை; ஏனெனில் அது முரண்பாடானது. எவ்வொரு இயக்கமும் இலக்கைக் கொண்டதே; இலக்கு இல்லாவிடில் அதற்குப் பெயர் இயக்கமல்ல, அது தாறுமாறானதொரு போக்கு ஆகும். மேலும், வெறும் "மாற்றம்" என்பதற்கும், "பரிணாமம்" என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. மாற்றத்திற்காக மாற்றம் என்பது முரண்பாடானது, அல்லது மேலோட்டமானது. பண்பினடிப்படையிலான மாற்றத்தைப்பின் பற்றிச்செல்லுகிற, அதாவது தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து செல்லுகிற இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும்.
இயற்கை (எனப்படுவது) இயற்கையானதல்ல!
--------------------------------------------------------------------------
அகராதியின் படி இயற்கை என்பது,
1. மனிதனால் படைக்கப்படாமல் தானாகத் தோன்றுவனவும், நிகழ்வனவும்
2. ஒருவருடைய அல்லது ஒன்றனுடைய இயல்பான தன்மை அல்லது குணம்
3. இயல்பாக நிகழும் ஒன்று
எனக்குறிப்பிடப்படுகிறது. அதாவது, மனிதனால் படைக்கப்படுபவை செயற்கையானவை என்பதால், அதற்குமாறாக, மனிதன் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றியவையனைத்தும் இயற்கை எனப்படுகிறது. அதாவது, மனிதன் தோன்றுவதற்கு முந்தைய இருப்பை 'இயற்கை' என்று சொல்வதில் பெரிதாகத்தவறில்லை. ஆனால், எவரேனும், இயற்கை தானாகத்தோன்றியது என்று சொல்வாரெனில், அது நம் புரிதலை மட்டுப்படுத்தும் பெரும் தடையும், பிரச்சினையும் ஆகும். ஏனெனில், விதிவிலக்கின்றி அனைத்து விஞ்ஞானிகளும், பொருண்மைவாதிகளும், இயற்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும், இயற்கையின் இயற்கையை 'சடப்பொருள்', அல்லது 'பருப்பொருள்' என்பதாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.ஒருவகையில், பரிணாமம் என்பது முதலில் சடப்பண்பைக் கொண்ட அணுத்துகள்களைக் கருவியாகவும், ஊடகமாகவும் கொண்டுதான் தொடங்கியது என்பதில் சந்தேகமில்லை! ஆனால், அச்சடப் பண்புதான் இயற்கையின் முடிந்த முடிவான, இறுதி யான பண்பு என்று கொள்வது தான் பிரச்சினைக்குரியது ஆகும்!
அதாவது, இயற்கை தானே தோன்றியது என்று சொல்வதன் பொருள், உயிரற்றதும், உணர்வற்றதுமான சடப்பொருள், தானே தோன்றியது என்பது தான்! ஆனால், எவ்வகையிலும், உயிரற்ற, உணர் வற்ற பௌதீகச்சடப்பொருள் தன்னில் தானே தோன்றுவதற்கான வாய்ப்பும் சாத்தியமும் சிறிதும் இல்லை! ஆகவே, பௌதீகச்சடப்பொருளை, அடிப்படை மெய்ம்மையாக, அல்லது, மூல-மெய்ம்மையாகக்கொள்வதற்கு இடமில்லை! அதே நேரத்தில், எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த ஒரு 'கடவுள்' தான் இயற்கையை, இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடமுடியாது. ஏனெனில், மிகைப்படுத்தப்பட்ட குணாதிசயங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட "கடவுள்" எனும் ஒரு ஒற்றைச்சொல்லை மூல-மெய்ம்மையாகக்கொள்ள முடியாது!
ஆக, 'இயற்கை' என்பது தானே தோன்றியதல்ல, எனும்பட்சத்தில், அது வேறு ஏதோவொன்றின் வெளிப்பாடாக, அல்லது, விளைபொருளாக மட்டுமே வெளிப்பட்டிருக்க வேண்டும்! அந்த ஏதோ ஒரு மெய்ம்மை "கடவுள்" என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை! மாறாக, அதை நாம் "பேரியற்கை" (Meta-Nature), என்று அழைக்கலாம்! அந்த பேரியற்கை தான் இயற்கை, உலகம், பிரபஞ்சம் என அழைக்கப்படும் அனைத்திற்கும் காரணமாக அமைந்த "மூல-மெய்ம்மை" ஆகும்! அந்த "மூல-மெய்ம்மை" எத்தகைய மெய்ம்மை, அல்லது "பண்பு" என்பதைக் கண்டறிவதுதான் நம்முடைய தலையாய பணியாகும். அம்மூலமெய்ம்மையின் பண்பு எத்தகையது என்பதை நாம் துல்லியமாக அறிந்திடும் போது அதை நாம் "கடவுள்" என்றுகூட அழைக்கலாம்! அது வரை "கடவுள்" என்ற உள்ளீடு அற்ற அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாயிராது!
அப்படியானால், அதாவது, ஊமைச்சடமும் அல்ல, கடவுள் என்ற சொல்லும் அல்ல என்றால் பிறகு எது தான் மூலமெய்ம்மை, அது எத்தகைய பண்பைக்கொண்டது, அதை எவ்வாறு அறிவது? ஆம், கனியைக் கொண்டு தான் மரம் அறியப்படுகிறது! ஆனால், நம் பிரபஞ்சத்தைப்பொறுத்தவரை அது என்ன வகை மரம் என்று இதுவரை அறியப்படாமலேயே உள்ளது! அதாவது, பிரபஞ்சமானது என்னவகை கனியைத் தரும் என்பது குறித்த கேள்வியும், ஆராய்ச்சியும் விஞ்ஞானிகளிடமும், இயற்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தத்துவவாதிகளிடமும், பகுத்தறிவுவாதிகளிடமும் இல்லை! அதாவது, ஒரு பெரு-வெடிப்பில் தொடங்கிய பிரபஞ்சம் எனப்படும் பரிணாம வழிமுறை இறுதியாக எட்டக்கூடிய மெய்ம்மை யாது? அது இதுவரை எவற்றையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளது? அதாவது எத்தனை மைல்-கல் போன்ற வளர்ச்சி நிலைகளைத்தொட்டுள்ளது? என்பவை பற்றியும்; பரிணாமம் என்றால் என்ன? உண்மையில் பரிணாமத்தில் பரிணமிப்பது எது? என்பவை குறித்தும் ஆழமான புரிதல் எதுவும் இல்லை! அவர்களைப்பொறுத்தவரை, 'இயற்கை' (அது எத்தகைய மெய்ம்மை என்பது தெரியாவிட்டாலும்) இருக்கிறது; அதில் பிற உயிரினங்களும், நாமும் இருக்கிறோம், அவ்வளவுதான்! நாம் ஏன், எதற்காக இருக்கிறோம்? நம் வாழ்க்கையின் நோக்கம், குறிக்கோள், இலக்கு யாது? என்பது குறித்து எதுவும் தெரியாது! தெரிந்துகொள்ள வேண்டிய தேவையுமில்லை? ஏனெனில், மாபெரும் புரட்சிகர இயற்கை வாதியும், உயிரியலாளருமான டார்வின் அவர்கள், பரிணாமம் குறிக்கோளற்றது, திசையற்றது, அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்செல்லாதது; மற்றும் மிக முக்கியமாக, சடப் பொருள் தான் அனைத்து இருப்பின் அடித்தளம் என்பதாக போதித்துச்சென்றுள்ளாரே!
உளவியல் பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும் சின்மண்ட் ஃப்ராய்டு (Sigmund Freud) ஒருமுறை, "அனைத்து மாபெரும் விஞ்ஞானப்புரட்சிகளின் பொதுவான அடிப்படைஅம்சம் என்னவெனில், அவை மனிதனை பிரபஞ்சத்தின் மையம் எனக்கருதப்பட்ட சிம்மாசனத்திலிருந்து கீழே தள்ளியது தான். கோப்பர் நிக்கஸின் புரட்சியானது புவி-மைய மாதிரியைப் புறந்தள்ளி சூரிய-மைய மாதிரியை முன்வைத்தது, அதன்படி பூமியானது பல அண்ட வெளிப்பொருட்களில் அதுவும் ஒன்று என்றாகியது. அடுத்து, சார்லஸ் டார்வினின் புரட்சியானது, 'கடவுளின் சாயலில்" படைக்கப்பட்டவனாகக் கருதப்பட்ட மனிதனை உயர் வளர்ச்சியடைந்த வானரம் என்பதாகச் சித்தரித்தது" எனக் குறிப்பிட்டார். ஆனால், இவை போன்ற 'சுய- தோல்விகரமான' கூற்றுக்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. ஏனெனில், தத்துவசிந்தனையானது மீண்டும் மேலோங்கிடும் காலம் தொடங்கிவிட்டது. ஒரு முழுமையான "உலகப்பார்வை"யையும், "வாழ்க்கைப்பார்வை"யையும், அதாவது ஒரு முழுமையான மெய்யியலைத் தத்துவம் வழங்கிடும்போது, விஞ்ஞானம் என்பது தத்துவ சிந்தனையின் ஒரு அங்கமாகச் சுவீகரிக்கப்பட்டுவிடும். அதற்குள் விஞ்ஞானம் தனது அணுகுமுறையின் மட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் உணர்ந்து தனக்கேயுரிய தனிச்சிறப்பான பணியை மட்டும் செய்யும்; தேவையில்லாமல் தத்துவத்தின் பிரதேசங்களுக்குள் மூக்கை நுழைக்காது!
அதற்குமுன்னர், இயற்கையின் இயற்கை பற்றிய இக்கட்டுரையானது, அதனுடைய ஆழமான புரிதலைக்கொண்டு இயற்கைவாதம், விஞ்ஞானவாதம், பொருண்மைவாதம்,பகுத்தறிவுவாதம்,சுருக்கல்வாதம், இன்ன பிற வாதங்களின் மேலோட்டமான தன்மைகளையும், மட்டுப்பாடுகளையும் வெளிச்சத்திற்குக்கொண்டுவந்திட அவைகளின் ஆரவாரச் சலசலப்புகள் அடங்கிப்போகும்!
பொதுவாக இயற்கை என்றாலே அது தானே தோன்றியது என்பதாக நம்பப்படுகிறது, அடுத்து இயற்கைக்கு யாதொரு குறிக்கோளும், இலக்கும், நோக்கமும் கிடையாது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், இவ்விரு நம்பிக்கைகளும் தவறானவை. ஏனெனில், இயற்கை தானேதோன்றியதல்ல. மேலும் இயற்கைக்கு குறிக்கோளும், இலக்கும், நோக்கமும் உள்ளன. இல்லாவிடில், அது ஒரு பரிணாம இயக்கமாக விளங்காது! அதாவது இயற்கை என்றாலே அது பரிணமிக்கும் இயற்கையே! இயற்கை என்பது எல்லாக்காலத்திலும் ஒரேவித தன்மையை, பண்பை, இயல்பைக் கொண்டதல்ல. ஆதி ஆரம்பக்கட்டத்தில், இயற்கையானது சடப்பொருளாக (அணுத்துகள்களாக) த்தான் தொடங்கியது. பிறகு பரிணாம மாற்றத்தின் விளைவாக சடப்பொருளானது உயிருள்ள ஜீவியாக எழுந்தது!
இக்காலக்கட்டத்தில், இயற்கை என்பது "சடப்பண்பு + உயிர்ப்பண்பு" என்பதாக விளங்கியது. பிறகு, தொடர்ந்த பரிணாமத்தின் விளைவாக உணர்வுள்ள மனிதஜீவியாக வெளிப்பட்டது. இக்காலக்கட்டத்தில் இயற்கை என்பது "சடப்பண்பு + உயிர்ப்பண்பு +உணர்வுப்பண்பு" என்பதாக ஆகியது.
இப்போதைக்கு இயற்கை என்பது சடம், உயிர், உணர்வு எனும் மூன்று பண்புகளின் தொகுப்பாக உள்ளது எனக்காணலாம் என்றாலும், பண்பினடிப்படையில், மேலுயர்ந்து நிற்பது என்னவோ உணர்வு எனும் பண்புதான். ஆகவே, இயற்கையின் தற்போதைய பிரதான பண்பு உணர்வு என்பதே ஆகும். அதே நேரத்தில், மனிதனின் வழியே எட்டப்பட்ட உணர்வு என்பது எவ்வகையிலும் முழுமையானதோ, அல்லது, இறுதியானதோ அல்ல. இதன் அர்த்தம், மனிதஜீவியோ, அல்லது, மனித உணர்வோ, பரிணாமத்தின் இறுதியான இலக்கு நிலை அல்ல. அதாவது பரிணாமம் இன்னும் முடியவில்லை! பரிணாமம் எப்போது முழுமையடைகிறதோ அப்போதுதான் இயற்கை தனது அசலான இயற்கையை, இயல்பை அடைகிறது! அதுவரை, இயற்கை என்பது அவ்வக்காலக்கட்டங்களில் வெளிப்பட்ட பண்பினால் மட்டுப்படுத்தப்பட்டதொரு மெய்ம்மை மட்டுமேயாகும்.
அப்படியானால், பரிணாம இயற்கையின் முடிவான இறுதியான பண்பு எது? எவ்வொரு மெய்ம்மையானது காலமற்றதோ, வெளியுமற்றதோ அது நிச்சயமாக நித்தியமான தாகத் (Eternal) தான் இருக்கமுடியும்! அத்தகைய மெய்ம்மைக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது, ஆகவே அது தன்னில் தானே சுயம்புவாகத்தோன்றியதாகவும் நித்தியமாக இலங்குவதாகவும் (Self- Existent)இருக்கும். அத்தகைய மெய்ம்மையை நாம் "பேரியற்கை" அல்லது "அதி-இயற்கை" என்றழைக்கலாம். மேலும், அதை நாம் சாதாரண பொதுமக்களின் மொழியில் "கடவுள்" எனவும் அழைக்கலாம்! அதில், வெட்கப்படவோ, கூச்சப்படவோ, தவறாகத்தெரியுமோ என்றெல்லாம் ஐயங்கொள்ளவோ தேவையில்லை! மாறாக, உயிரும், உணர்ச்சியும், உணர்வும் அற்ற ஊமைச்சடத்தை மூல-மெய்ம்மயாக, அதாவது பரம்பொருளாக, 'கடவுள்' என்பதாகச் சொல்வோமெனில்; அதிலும் நாம் உணர்வின் ஜீவி எனும் உண்மையைத்துறந்துவிட்டுச் சொல்வோமெனில் அப்போது தான் நாம் உண்மையில் வெட்கப்படவும், கூனிக்குறுகவும், தலைகுனியவும் வேண்டும்! கணிதத்தில் நாம் "அனந்தம்" (infinity)என்கிற அம்சம் பற்றிப்பேசுகிறோம், ஆனால், அதை வெறுமனே நுட்பரீதியாக ஒரு குறியீடாக மட்டுமே கையாளுகிறோம். அதாவது, இணைகோடுகளின் பண்புகளைப் பற்றிப்பேசும்போது, "அவை அனந்தத்தில் சந்தித்துக்கொள்கின்றன!" என்பதாகக்குறிப்பிடுகிறோம். ஆனால், ஆழ்-உளவியல் பூர்வமாக, அசாதாரண- உணர்வு நிலையில், அனந்தத்தை நாம் நேரடியாக அனுபவம் கொள்ள முடியும்! அதாவது, "அனந்தம்" என்பது வெறும் குறியீடு அல்ல, அது நிஜத்திலும் நிஜமான, மிகத்திடமான ஒரு இறுதியான "உணர்வு நிலை"யாகும்.
இயற்கையை நாம் அதனுடைய புதிரான அம்சத்தையும் அதனுடைய மறைபொருளான இயல்பையும் கழித்துக்கட்டிவிட்டு, அதை வெறும் சடத்தனமான அணுத்துகள்களின் சேர்க்கை என்பதாகக் காணவே விரும்புகிறோம்! ஆனால், 'இயற்கை' என்பது நாம் நினைப்பதுபோல் வெறுமனே 'இயற்கையானது' அல்ல! மாறாக, "பேரியற்கை"யானது தன்னைத்தானே சுருக்கிக்கொண்டதனால் விளைந்ததே இயற்கை! அதாவது, "காலாதீதம்" தம்மைத்தாமே நிராகரித்துக்கொண்டதால் (self-cancellation) விளைந்ததே "காலம்" என்பதாகும். அவ்வாறே, வெளி-கடந்த நிலை தம்மைத் தாமே விலக்கிக்கொண்டதால் விளைந்ததே வெளி (Space)என்பதாகும்! அதாவது "ஒருமை" வெடித்துச்சிதறியதனால் தோன்றியதுதான் நாம் வாழும் இந்த பன்மையின் உலகம்!
இங்கே, மேலே "காலாதீதம்" (காலம்-அற்ற நிலை,Timelessness), வெளி-அற்ற நிலை (Spacelessness); "அனந்தம்" (infinity),"பேரியற்கை" (Meta-Nature) போன்ற சொற்களைப் பயன்படுத்துவது கண்டு அஞ்சவோ, அல்லது, முகம்சுளிக்கவோ தேவையில்லை! ஏனெனில், இவை விஞ்ஞானிகள் கையாளுகின்ற சில தந்திரமான, கற்பனையான விஷயங்களைவிட நேர்மையானதும், நிஜத்திலும் நிஜமானதுமாகும். அதாவது, விஞ்ஞானிகள், எதிர்மறை-காலம் (Negative-Time),எதிர்-பொருள் (Anti-Matter),மற்றும் 'பல பிரபஞ்சங்கள்' (Multiple-Universes), 'கற்பனை-எண்கள்' (Imaginary Numbers)போன்ற இல்லாத பொல்லாத கற்பனையான விஷயங்களை இணைத்துக்கொண்டு தங்களது கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள்.
ஏனெனில், இத்தகைய கற்பனையான அம்சங்களைச் சேர்க்காவிடில், அவர்களுடைய சமன்பாடுகளில் உள்ள ஓட்டைகளை, இடைவெளிகளை அடைத்து நிரப்பி சமன்செய்யமுடியாது. இதிலிருந்து தெளிவாகப் புலப்படும் அதிமுக்கியமானதொரு உண்மை என்னவெனில், இயற்கையை, பருப் பொருளின் உலகை, இயற்கையின் சொற்களையும், பருப்பொருளின் சொற்களையும் கொண்டு மட்டுமே விளக்கமுடிவதில்லை, புரிந்துகொள்ளமுடிவதில்லை என்பதுதான்! இவ்விஷயங்களை நாம் இங்கே வெறும் விவாதத்திற்காக மட்டும் குறிப்பிடவில்லை, இவை மிகவும் சீரிய கவனத்திற்குரியவையாகும். ஏனெனில், 'இயற்கை' யைப் பிரதானப்படுத்தி பிரமாதப்படுத்திப்பேசுகிற 'இயற்கைவாதிகள்' பெரிதும் விஞ்ஞான அறிவையும் விஞ்ஞானத்தின் முடிவுகளையும் தான் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞான அறிவு பெரிதும் மட்டுப்பாடானதாயுள்ளது, குறிப்பாக பெரும் ஓட்டைகளையும், இடைவெளிகளையும் கொண்டதாயுள்ளது!
இயற்கையின் இயற்கை பற்றி இக்கட்டுரை வழங்கிடும் புதிய புரிதலை ஒருமுறை தொகுத்துப்பார்த்துக்கொள்வோம். இயற்கை என்பது நிரந்தரமான ஒரே தன்மையை, அல்லது சாரத்தைக்கொண்ட ஒன்றல்ல! இயற்கையின் இயற்கை எத்தகையது? இயற்கை என்பது ஒரு இயக்கமாகும் - அது தனது அசலான இயற்கையை நாடிச் செல்கிறது! (Nature seeks its own true nature). அந்த வழிமுறையைத்தான் நாம் பரிணாமம் என்கிறோம். இயற்கையின்-உலகில் நிகழும் விஷயங்களை, நிகழ்வுகளை இயற்கையானது என்று குறிப்பிடுவது வழக்கத்தின்பாற்பட்டது, புரிந்து கொள்ளப்படக்கூடியது, மேலோட்டமானது, ஆகவே அது பிழையானது! இன்னும், இயற்கையானது என்பது இறுதியானதல்ல! முதலிடத்தில், இயற்கையின் தோற்றம் அல்லது தொடக்கம் என்பதும் இயற்கையானதல்ல!மாறாக, அது இயற்கையல்லாத வேறொரு மெய்ம்மை யின், பேரியற்கையின் மாறியதொரு வடிவமே, விளைவே! ஆகவே இயற்கையை, உலகம் அல்லது பிரபஞ்சத்தை, அல்லது பௌதீகச் சடப்பொருளை(இவையனைத்தும் ஒன்றுதான்; ஆகவே இவை எதையும்) முதன்மைப்படுத்தவோ, அடிப்படை அம்சம் எனக்கொள்ளவோ முடியாது!
விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும், சடப்பொருளின் சடப்பண்பைத்தான் இயற்கை யின் "சாரம்" என்பதாகக்கருதுகிறார்கள்! அதாவது பிரபஞ்சத்தின் ஒருமை அதன் பொருண்மைப்பண்பில் அடங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்! ஆனால், இவை முற்றிலும் தவறான புரிதலின் முடிவுகளே. ஏனெனில், சடப்பொருள், அல்லது பருப்பொருள் என்பது பரிணாமத்தின் தொடக்க நிலை நிஜமும், மற்றும் பரிணாமத்தின் கருவியும், ஊடகமும் மட்டுமே. அதாவது சடப்பண்பைக்கொண்ட, பருப்பொருள் என்பது இயற்கையின், உலகம், அல்லது பிரபஞ்சத்தின் தொடக்க நிலை நிஜம் மட்டுமே; அதாவது அது வெறும் ஒரு கட்டுமானப்பொருள் (Building-Material) மட்டுமே! ஏனெனில், பருப்பொருள் அதனுடைய அணுத்துகள்கள் எனும் அடிப்படை நிலை அல்லது வடிவத்திலேயே கால வெளியில் தாறு மாறாக இயங்கிக்கொண்டு ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொண்டு இருக்கவில்லை. மாறாக, அணுத்துகள்கள் ஒன்றோடொன்று இணந்து மூலக்கூறுகளாகி பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து பல்வேறு மூலகங்களாகி, பல்வேறு அண்ட வெளிப்பொருட்களாகி (கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்களைக்கொண்ட) ஒரு மாபெரும் பௌதீகப் பிரபஞ்சமாக விரிந்தது! ஆனால், அவை அத்துடன் நிற்கவில்லை! பொருளியல் தளத்தின் அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தீர்த்துமுடித்ததும், அணுத்துகள்கள் பொருண்மைத்தன்மையைக் கடக்கும்விதத்தில் மேலும் சிக்கலான கட்டமைப்புகளில் தம்மை அமைத்துக்கொண்டு உயிர்த்தன்மையை எட்டும் உயிர்ஜீவியாக எழுந்தது! உயிர்த்தன்மையை எட்டியதுடன் நில்லாமல், அடுத்து பல்வேறு உயிரினங்களின் வழியாக புலன் -உணர்வை எட்டியது! ஆனால், உயிர்ஜீவிகளின் புலன் உணர்வு என்பது வெறுமனே புற(வுலக)த்தை உணரவும், அறியவும், ஆராயவும் உதவுகின்ற உணர்வு மாத்திரமே; அதாவது ஒரு உயிர்ஜீவியானது தனது சொந்த இருப்பை உணராமல் அறியாமல் புற(வுலக)த்தை அறிவதனால் என்ன பயன்? ஆகவே, தன்னை தனதிருப்பை உணரக்கூடியவகையிலான "சுய-உணர்வை" எட்டும் வகையிலான மிகவும் சிக்கல்வாய்ந்த பொறியமைப்பாக மனிதஜீவியினுள் மூளையாக அமைந்து அம்மூளையின் செயல்பாட்டின் மூலம் சுய-உணர்வை எட்டியது!
இவ்வாறு, மனிதஜீவியினுள் மிகவும் சிக்கல்வாய்ந்த பொறியமைப்பான மூளையாக அமைந்ததுடன், பெரு-வெடிப்பில் முதன்முதலில், அணுத்துகள்களாக எழுந்த ஆதி இயற்கை விடை பெற்றுக்கொள்கின்றது! அதாவது, சடப்பண்பைக்கொண்ட, பருப்பொருளானது அமைந்திடக்கூடிய ஆக இறுதியான கட்டமைப்பு மனித-மூளை தானாகும்! ஏனெனில், மனித மூளையின் செயல்பாட்டின் விளைவாக வெளிப்பட்ட "சுய-உணர்வு" இயற்கையின் முடிவையும், பேரியற்கையின் தொடக்கத்தையும் குறிப்பதாகிறது! அதாவது "உணர்வு"தான் பேரியற்கையின் அடிப்படைப்பண்பு ஆகும்!
மனிதஜீவியைப்பொறுத்தவரை, அவன் இயற்கைக்கும், பேரியற்கைக்கும் இடையே தத்தளித்துக்கொண்டிருக்கிறான்! இயற்கையுடன் தங்கிவிடுவதா, அல்லது, பேரியற்கையுடன் சேர்வதா என்ற தேர்வுச்சங்கடத்தில் சிக்கித் தடுமாறுகிறான்.மிகப்பெரும்பாலான மனிதர்கள்தங்களைத்தங்களது உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டுவிடுவதன் விளைவாக இயற்கையுடன் தங்கி விடுகின்றனர்! ஆனால், மனிதன் அவனது தோற்றுவாயின்படி, உணர்வை, அதாவது, பேரியற்கையைச் சேர்ந்தவனே! ஏனெனில், "உணர்வு" தான் மனிதன்! உண்மையில், மனிதன் இயற்கையான
வனோ அல்லது இயற்கையின், பிரபஞ்சத்தின் பகுதியோ அல்ல! அதே நேரத்தில், மனிதன் தன்னை தனது உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வானெனில், அவன் இயற்கையைச் சேர்ந்தவனாகி விடுகிறான்! மாறாக, "தான் ஒரு உணர்வு தான்!" என்கிற உண்மையை உணர்ந்திட்ட ஒருவன் தனது உணர்வுப்பரிணாமத்தின் உச்சியில் பேரியற்கையை, அதாவது பேருணர்வைச் சேர்கிறான்! இந்த உண்மையை உணரும் வரை, அதாவது, தனது உணர்வில் முற்றிக்கனியும் வரை, அவன் இயற்கையைச் சார்ந்தவனாக இருக்கிறான்; எவ்வாறு, ஒரு மரத்தின் காயானது முற்றிக் கனியாகும் வரை அம்மரத்தைச் சார்ந்ததாக இருக்கிறதோ, அவ்வாறு!
"தான் ஒரு உணர்வு தான்!" என்கிற உண்மையை உணர்ந்து, அவ்வுணர்வில் ஆழ்ந்து நிலைத்து, அவ்வழியே உணர்வில் பெருகி உயர்ந்து பேருணர்வைச் சேர்ந்திடும் போது, ஒருவன் இயற்கை மற்றும் பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டுவிடுகிறான்; எவ்வாறு, ஒரு மரத்தின் காயானது நன்கு கனிந்து கனியானதும் அம்மரத்திலிருந்து அகன்றுவிகிறதோ, அவ்வாறு! இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புறவு என்பது, ஒரு மரத்திற்கும் அதன் காய்களுக்கும் உள்ள அதே தொடர்புறவைப்போன்றதே! காய்கள் மரத்தின் பகுதியாகத் தோன்றினாலும், அவை ஒரு மரத்தின் பிற பகுதிகளான அடித்தண்டு, கிளைகள், சிம்புகள், இலைகள் ஆகியவற்றைப் போன்றதல்ல. மாறாக, காய்கள்,முற்றிக் கனிகளாகக்கூடியவையாதலால், அவை, மரத்தின் முழுமையைக்குறிக்கும் மகுடம் போன்ற பகுதியாகும். மனிதனும், அவ்வாறே இயற்கையிலிருந்து தோன்றினாலும், அவன் இயற்கையை, பிரபஞ்சத்தைச் சேர்ந்தவனோ, அல்லது, பெரும் விஞ்ஞானிகள் கூறுவதைப்போல பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற ஏதோவொரு பகுதியோ அல்ல! மாறாக, மனிதனே பிரபஞ்ச விருட்சத்தின் "கனி" ஆவான்! ஒரே ஒரு குறை, எல்லா மனிதர்களும் தம் உணர்வில் கனிவதில்லை என்பது மட்டும் தான்!
இக்கட்டுரை முன்வைக்கும் பிரதான கண்டுபிடிப்பு, உண்மை, செய்தி என்னவென்றால், மனிதனை இயற்கைப்படுத்த இயலாது, அதாவது, மனிதனது மனதையோ, உணர்வையோ, அல்லது அவனது இருப்பின் தன்மையையோ, அவனது செயல்பாடுகளையோ, நோக்கத்தையோ, இலக்கையோ, எதையும் இயற்கைப்படுத்த இயலாது! இன்னும் இயற்கையையும்கூட இயற்கைப்படுத்த இயலாது! ஏனெனில், இயற்கையே இயற்கையானதல்ல; அதாவது, இயற்கை தன்னில்தானே தோன்றியதல்ல!மாறாக, ஒரு பேரியற்கை சுருங்கியதனால் ஏற்பட்டவிளைவுதான் இயற்கை!ஆம், இயற்கை என்பது இயற்கையை மீறியதொரு மெய்ம்மையின் வெறும் ஒரு குறியீடு மட்டுமே ஆகும்!இயற்கை என்பது ஒரு பரிணாம இயக்கமாகும்! அது எவ்வொரு குறிப்பிட்ட இயற்கையுடனும் (அதாவது, இயல்பு அல்லது பண்புடனும்) தங்கி விடுவதில்லை! இயற்கை, அல்லது இயற்கையானது என்பது இறுதியானது அல்ல! இயற்கையின் அசலான இயற்கை (பண்பு) பரிணாமத்தின் இறுதியில்அது எத்தகைய பண்பை எட்டுகிறதோ அதில் தான் அடங்கியுள்ளது!
பரிணாமம் பருப்பொருளை ஒரு கருவியாக, ஊடகமாகக் கொண்டு தொடங்கியதால், சடப்பண்புதான் இயற்கையின் சாரம் என விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும் கூறுவது தவறு! இயற்கையை அதன் தொடக்க நிலைப் பண்பிற்குக் குறைப்பதன் வழியாக, அவர்கள் இயற்கையை மேன்மைப்படுத்தவில்லை, மாறாக, பெரிதும் கொச்சைப்படுத்திவிட்டார்கள். இயற்கைவாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் மட்டுப்படுத்தும் பிடியிலிருந்து இயற்கையை மீட்பதன் அவசியத்தை உணர்த்தவும்; முக்கியமாக, மனிதனை இயற்கைப்படுத்தி அவனை வெறும் சிந்திக்கும் விலங்காகச் சுருக்கிவிடும் போக்கைக் கண்டிக்கவும் தான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது!
ஆக, நாம் மிகத்தெளிவாக 'இயற்கை'யின் அசலான இயற்கை என்னவென்று புரிந்துகொள்ளவில்லை யென்றால், ஒரு அர்த்தமுள்ளவகையில் இயற்கை பற்றிப் பேச இயலாது! ஆக, இந்நிலையில், இயற்கையை அடிப்படையாகக்கொண்டதொரு முறையான 'இயற்கைவாதம்' எதுவும் இருக்கமுடியாது! தற்போது மேற்குலகில் பேசப்படும் இயற்கைவாதம் என்பது பெரிதும் சிந்தாந்தரீதியான விஷயமேதவிர,அது உண்மையிலேயே தத்துவபூர்வமானது அல்ல எனலாம். "இயற்கையே எல்லாம்" "இயற்கை மட்டுமே போதுமானது" என்பனபோன்ற இயற்கைவாதிகளின் முழக்கங்கள் அடிப்படையற்றவை. ஏனெனில், இயற்கை என்பது எவ்வொரு குறிப்பிட்ட இயற்கையுடனும் (இயல்புடனும்) தங்கித்தேங்கி விடாமல், தொடர்ந்து தன்னைத்தானே கடந்து செல்லும் இயக்கமாக விளங்குகிறது. அதாவது, பௌதீகச் சடப்பொருளாகத் தொடங்கிய இயற்கையானது, உயிர் எனும் விசேட இருப்பு நிலையுடன் பொருந்தும் வகையில், உயிர்ஜீவியாக எழுந்து, அதையடுத்து, உணர்வு எனும் இருப்பு நிலையுடன் பொருந்தும்வகையில் மனிதஜீவியாக, மனிதனுள் உணர்வைத்தாங்கும் வகையிலான மூளை எனும் மிகச் சிக்கலான பொறியமைப்பாக மலர்ந்துள்ளது! அதாவது, இயற்கையானது மேன்மேலும் உணர்வுப்படுத்தப்படும் பாதையில் (Spiritualization) முன்னேறிச்சென்றுகொண்டு இருக்கையில், மனித-மனதை, அதாவது உணர்வை இயற்கைப்படுத்துவது என்கிற இயற்கைவாதிகளின் பேச்சு படு வியர்த்தமானதாகும்.
பரவலாக, மனிதஜீவிகள் விலங்குஜீவிகளைப்போலவே வாழ்ந்து செல்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலையாக இருக்கிறது என்பதால், மனிதர்களை விலங்கினத்தில் சேர்த்துவிட முடியாது! மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியவன் என்பது அவனது பரிணாமக் கடந்தகாலம் ஆகும். எந்திரங்கள் தான் எந்திரங்கள்; விலங்குகள் எந்திரங்கள் அல்ல! மனிதர்கள் விலங்குகள் அல்ல! ஆனால், மனிதர்கள் மனிதர்களாக ஆகிட வேண்டும்! அதற்கு அவன் மிக ஆழமாக தனது இருப்பு குறித்தும், ஒட்டு மொத்த இருப்பு குறித்தும் உணர்வுக்கு வந்திடவேண்டும்! மனிதர்கள் இயற்கைப்பிராணிகள் அல்ல! ஏனெனில், "உணர்வு" இயற்கையானது அல்ல! மனிதன் ஒரு விலங்கு ஜீவியல்ல, அவன் ஒரு விலங்கு ஜீவியினுள் (அதாவது, உடலினுள்) ஜனித்த உணர்வு ஆவான்! அதாவது உணர்வாக மேலெழ வேண்டிய மனிதன், தன்னை உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, உணர்வின் வாழ்க்கையை வாழ்வதற்கு மாறாக, ஒரு விலங்கைப்போல, உடலின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்; இது ஒரு தடுமாற்றமான நிலையும், அடையாள-மாறாட்டச் சிக்கலும் ஆகும்! இதைச் சாக்காக வைத்துக்கொண்டு, மனிதனை இயற்கைப்படுத்த முயற்சிப்பது, அதாவது மனிதனை ஒரு விலங்காகச் சித்தரிப்பது என்பது டார்வினிய- பாணி மடமையாகும்!
அடுத்து, இயற்கைவாதமானது, இயற்கையில் உள்ளார்ந்து இருப்பதாகவோ, அல்லது, இயற்கை மீறியதொரு சக்தியினால் சுமத்தப்பட்டதாகவோ யாதொரு குறிக்கோளும் கிடையாது என்கிறது!இவ்வாறு, 'இயற்கை (அல்லது, பரிணாமம்) குறிக்கோளற்றது, நோக்கமற்றது', 'பிரபஞ்சம் அர்த்தமற்றது', 'மனித வாழ்வும் அப்படியே', 'வெறுமனே உயிர்பிழைத்திருப்பது, அதாவது, மரபணுக்களை விருத்தி செய்வதற்காக சந்ததிகளைப் பெருக்குவது என்பதற்கு மேல் மனிதவாழ்க்கைக்கு வேறு குறிக்கோள், இலக்கு எதுவும் இல்லை!' என்றெல்லாம் சொல்வதற்கு 'இயற்கைவாதம்' எனும் தத்துவம் எதற்கு? தவளைகள் தத்துவம் பேசுவதில்லை, என்பதைவிட அவைகளுக்கு முதலிடத்தில் தத்துவம் தேவையே இல்லை! அவ்வாறே, இயற்கைவாதிகளுக்கும் தத்துவம் தேவையில்லை; ஆனால், அவர்கள் தத்துவம்பேசுகிறார்கள், அதற்குப்பெயர்தான் "இயற்கைவாதம்"(Naturalism) எனப்படும் "தவளைகளின் தத்துவம்!"
'அறிவு' குறித்த விஷயத்தில், இயற்கைவாத 'உலகப்பார்வை' யானது இயற்கை விஞ்ஞானங்களைச்சார்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; இயற்கையில் உள்ள விஷயங்களைப்பற்றியும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதுபற்றியுமான அறிவை பிரதானமாக இயற்கை-விஞ்ஞானமே வெகுசிறப்பாகச்சாதிப்பதாகவும், தனிமனிதனின் அகவய வெளிப்பாடும், சமய மரபும் அல்ல என்பதாகச் சொல்கிறது! ஆனால், இயற்கைவாதம், விஞ்ஞானவாதம் என்பவை மதங்கள் அல்லாமல் வேறென்ன? குருட்டுத்தனமாக, இயற்கையை வழிபட்டால் என்ன? அல்லது, இயற்கை மீறிய சக்தியாகச் சொல்லப்படும் கடவுளை வழிபட்டால் என்ன? 'இயற்கை' என்றால் என்னவென்று இயற்கைவாதிகளுக்குத் தெரியாது! அதுபோலவே, கடவுள் என்றால் என்னவென்று அதி-இயற்கை வாதிகளுக்குத் தெரியாது!
நல்லது, "இயற்கை இயற்கையானதல்ல!" எனவும், "இறுதி ஆய்வில் இயற்கை என்று எதுவும் இல்லை" எனவும், "இயற்கை என்பது வெறும் பரிணாமக்கருவி அல்லது ஊடகம் மட்டுமே"எனவும் "இயற்கையின் உண்மையான இயற்கை(இயல்பு) உணர்வே" எனவும், "இயற்கை என்பது பேரியற்கையின் சுருங்கிய நிலையே" எனவும் இக்கட்டுரையாளர் முன்வைப்பதால், ஏதோ அவர் "கடவுளை" பின் கதவு வழியாக வீட்டிற்குள் கொண்டுவந்திட முயற்சிப்பதாக எவரும் எண்ணவேண்டாம்! ஏனெனில், நதியானது இறுதியாக சமுத்திரத்தைச் சென்று சேர்வதைப்போல இயற்கையானது இறுதியில் பேருணர்வைச் சேர்வது என்பது முன் தீர்மானிக்கப்பட்ட இலக்கு ஆகும்! பரிணாமப்பயணத்தின் ஒரு ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், அது தன் இலக்கைச் சென்று அடைவதற்கான பாதை முன்-தீர்மானிக்கப்பட்டதல்ல என்பதுதான்! ஆம், நதியானது சென்று சேருமிடம் முன்-தீர்மானிக்கப்பட்டது போல அது செல்லக்கூடிய பாதை முன்-தீர்மானிக்கப்படுவதில்லை! அதாவது, சடமாகத்தொடங்கிய இயற்கை, ஒரு கட்டத்தில் உயிர் பெற்றது, தற்போது மனிதனுள் உணர்வு பெற்று எழுந்துள்ளது, இறுதியாக அது அடையக்கூடியதாக மனித உணர்வைக்கடந்த "பேருணர்வு" நிலைதான் எஞ்சியுள்ளது!
ஆனால்,பரிணாம வரலாற்றில், சிற்றுணர்வைத் தாங்கும் ஜீவியாக மனிதஜீவி தோன்றியதைப்போல, பேருணர்வைத் தாங்குவதற்காக, மனிதனையடுத்து வேறொரு ஜீவி தோன்றிடுமா என்றால் அதற்கான சாத்தியம் இல்லை! ஏனெனில், மனித மூளை-அமைப்பு தான் சடப்பொருளால் கட்டமையக்கூடிய இறுதியான சிக்கலான-அமைப்பு ஆகும்! வேண்டுமானால், மூளையின் "நியூரான்கள்" (neurons) எனப்படும் ஸெல்களின் பின்னலமைப்புகளிலும், நியூரான்களில் ஏற்படும் மாறுபாடு (Mutations)களிலும், அடுத்தக்கட்ட நிலைகள் வெளிப்படலாம். இதன் அர்த்தம், மனிதஜீவியின் உணர்வில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் வழியாகத்தான் பரிணாமம் தனது இறுதி முழுமையை அடையவிருக்கிறது. அதாவது, மனிதஜீவி தான் இறுதியான உயிரியல் ஜீவியாவான்! மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிந்துவிட, உணர்வியல் பரிணாமம் தொடங்கியது மட்டுமல்லாமல், மனிதனை (மனித-உணர்வைக்) கொண்டே, உணர்வின் முழுமை எட்டப்படுகிறது! ஏற்கனவே, அந்த உணர்வின் உச்சமானது உணர்வுமிக்க பல தனிமனிதர்களால் எட்டப்பட்டுள்ளது! அவர்கள் ஏற்கனவே "பேருணர்வு" எனும் பேரியற்கையுடன் கலந்துவிட்டனர்!
ஆம், பேருணர்வு தான் "மூல-மெய்ம்மை" யும், முடிவான "இறுதி-மெய்ம்மை" யும் ஆகும்! இயற்கை உலகம், பிரபஞ்சம் என்பதன் "ஒருமை" அதன் பொருண்மையில் அடங்கியிருக்கவில்லை. மாறாக, பரிணாமத்தின் வழியாக அது அடையக்கூடிய இறுதிப் பேருணர்வில் தான் அடங்கியிருக்கிறது! The Unity of the Universe (Nature) lies not in its materiality but what it ultimately reaches through evolution, that is, in Cosmic Consciousness!
இயற்கை (பௌதீகப்பிரபஞ்சம்), மனிதன் (சிற்றுணர்வு), கடவுள் (பேருணர்வு) இம்மூன்றும் இறுதியில் ஒன்றே!
மா.கணேசன்/14.10.2016
---------------------------------------------------------------