Friday, 21 October 2016

உயிர் எனும் புதிர்!



  நோக்கமின்றி, குறிக்கோளின்றி
  சுழன்று கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில்
  நோக்கத்துடனும் குறிக்கோளுடனும்
  இலைகளைத்தேடி ஊர்ந்து செல்லும்
  அற்புதத்திற்குப் பெயர் புழு!

உயிர் எவ்வாறு தோன்றியது? இக்கேள்வி மனிதகுலத்தை ஆதியிலிருந்தே கவர்ந்து வந்துள்ளது.ஒரு அம்சம் அல்லது ஒரு ஜீவி தன்னைப்பற்றிய உணர்வுக்கு வந்ததும், அது உடனே தன்னைச்சுற்றியுள்ள உலகைப்பற்றியும், தன்னைப்பற்றியும், தன்னுடைய ஆரம்பம் பற்றியும் கேள்விகளைக்கேட்கத்தொடங்கி விடுகிறது. ஆகவேதான், ஆதித்தொல்கதைகளும், புராணிகங்களும் உலகின்பிறப்பை மையமாகக் கொண்டவையாக உள்ளன. ஆனால், விஞ்ஞானம் பெருமளவு முன்னேற்றம்
அடைந்திருந்தாலும்,  இன்றளவும் 'உயிர்' எவ்வாறு தோன்றியது, 'உயிர்' என்றால் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை அதனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஒருவகையில், உயிர் எவ்வாறு தோன்றியது என்பதுபற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.ஆனால், "உயிர்" என்றால் என்ன என்பதற்கு தெளிவான யாதொரு பதிலும், விளக்கமும் இதுவரை இல்லை.

உயிரானது, தன்னியல்பாக, புறக்காரணமின்றி தானே(spontaneous generation)தோன்றியது; கடவுளால் படைக்கப்பட்டது ( creationism);விண்வெளி யிலிருந்து பூமிக்குவந்தநுண்ணுயிரிகள்அல்லது  மூலக்கூறுகளால் உருவானது (panspermia);அளவுரீதியான கூறுகளின் திரட்சியினால்
விளைந்த பண்பு; சடப்பொருளானது படிப்படியாக உயர் தரம் பெற்று உருவானது; சடப்பொருளின்இயல்மலர்ச்சியாகத்தோன்றியது(emergentism) என உயிர்த்தோற்றம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.

அதே நேரத்தில், உயிர் என்றால் என்ன என்பதை முற்றிலும் பொதுவிதிகளிலிருந்து தனிநிகழ்வைத்தீர்மானிக்கும் தருக்க முறையாலும், அல்லது, முற்றிலும்  பரிசோதனைபூர்வமான முறையாலும்புரிந்து  கொள்ள முடியாது. இத்தகைய மாபெரும் சவாலை விஞ்ஞான அணுகுமுறையுடன், தத்துவஅணுகுமுறை, ஆழ்-முக சிந்தனை மற்றும் அகத்திறஉணர்வையும் (intuition) சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்டதொரு அணுகுமுறையால் மட்டுமே சந்திக்க முடியும்.

உயிர் என்பது எத்தகைய பரிமாணம் என்பதை, தவிர்க்கவியலாமல் உயிரற்ற பொருட்கள் அல்லது சுற்றியுள்ள பௌதீகஉலகிற்கு எதிராக நிறுத்திப்பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், உயிர் என்பது சடப்பண்பை மீறியதொரு நிலை அல்லது பரிமாணம் ஆகும். முக்கியமாக உயிரை சடப்பொருளின்ஒரு வகை யாகவோ, மிக விசேடமானதொரு நிலையாகவோ சுருக்கிக்காண முடியாது. ஆனால், விதிவிலக்கின்றி விஞ்ஞானிகள் அனைவரும் பொருளின் சொற்களில்தான் உயிரை விளக்க முயற்சிக்கிறார்கள். இதற்குக்காரணம் அவர்கள் சடப்பொருளை ஒரு அடிப்படையாக, தரஅளவாக (Standard) கொள்வதே ஆகும். ஒருவகையில், சடப்பொருள் என்பது ஒரு அடிப்படை ஊடகமாக (Medium)அமைந்துள்ளது என்பதென்னவோ உண்மைதான்.ஆனால், அதன் அர்த்தம் அனைத்து உயர் வளர்ச்சி நிலைகளையும் பொருளின் பண்புகளுக்குச் சுருக்கி, பொருளின் சொற்களில் தான்காணவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்பதில்லை. இவ்வாறு சுருக்கித்தான் காண வேண்டும்என்றால் பரிணாமம் என்பது தேவையில்லாத, அர்த்தமற்ற ஆடம்பரம் என்றாகி விடும். பிறகு, விஞ்ஞானம், ஆராய்ச்சி யாவும் அர்த்தமற்றவையாகிவிடும்.

ஆக, 'உயிர்' என்பது வேறு, உலகம் என்பது வேறு எனவும்;  உயிர்ப்பண்பு வேறு, சடப்பண்பு வேறு எனவும் பிரித்துப் பார்க்காமல் 'உயிர்' என்பதை முறையாகப் புரிந்துகொள்ளமுடியாது. அதேபோல், உயிர்-ஜீவி என்பது வேறு, உயிர் என்பது வேறு எனப் பிரித்துப் புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

ஒரு உயிர்-ஜீவி என்பது உலகத்திற்கும் (சுற்றுப்புறம்), 'உயிர்' என்பதற்கும் இடையேயான பாலம்அல்லது ஒரு  இணைப்புக்கண்ணி (Interface) போன்ற தாகும். அந்த இணைப்புப் புள்ளியில்உலகமும் உயிரும் சந்தித்துக்கொள்ளவும் உறவாடவும் செய்கின்றன. அதே நேரத்தில், உயிரைப்
பொறுத்தவரை, உலகுடன் உறவாடவோ, வினைபுரியவோ  எதுவும் இல்லை! மேலும், உலகைப்பொறுத்தவரையிலும் தன்னுடன் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை; ஆகவேதான், உலகம் (பருப்பொருள்) பரிணமிப்பதாயுள்ளது. ஆக உலகம் அல்லது பருப்பொருள் என்பது பரிணமித்து உயிர்-ஜீவியாக எழுந்தபிறகு, அது மீண்டும் பழைய பருப்பொருள் அல்ல. அவ்வாறு அதை பருப்பொருளின் சொற்களில் விவரிப்பது என்பது 'உயிர்' என்றால் என்னவென்று முறையாகப்புரிந்து கொள்ளஉதவிடாது.  அவ்வாறு நாம் விவரிக்கும் போது நாம் உண்மையில் உயிர்-ஜீவியைத்தான் விவரிக்
கிறோமே தவிர 'உயிரை' விவரிப்பதில்லை

ஒருவகையில், லாஸ்கானோ (Lazcano 1994)சரியாகத்தான் சொல்லியுள்ளார். அதாவது, 'உயிர்என்பது  இசையைப்போன்றது, அதை விவரிக்கமுடியும் ஆனால் விளக்கமுடியாது.'

ஒரு உயிர்-ஜீவி என்பது பருப்பொருளின் உலகம் தன்னைத்தானே கடந்து செல்வதற்காக பயன்படுத்திக்கொள்ள உருவாக்கியதொரு ஊர்தி அல்லது பாலம் போன்றதாகும். தன்னைத்தானே கடந்து செல்வது என்பது பொருண்மையல்லாத வேறொரு இருப்பு நிலையைத் தொடர்புகொள்ளத்
தானாகும்! பருப்பொருளிலிருந்து உருவானது என்கிற வகையில், ஒரு உயிர்-ஜீவி என்பது பருப்பொருள்-உலகின் "பிரதிநிதி" யாக விளங்குகிறது எனலாம். அதே நேரத்தில், பருப்பொருளாலான உயிர்-ஜீவியானது, பருப்பொருளின் உலகில் இருந்தாலும், இயங்கினாலும், தனது இயக்கத்திற்கான(எரி)சக்தியை (Energy) பருப்பொருளின் உலகிலிருந்து எடுத்துக்கொண்டாலும், பெரிதும்
அது பருப்பொருளின் உலகைச் சேர்ந்ததாய் இருப்பதில்லை. எவ்வொரு உயிர்-ஜீவியும் அதன்பாதங்களை இவ்வுலகில் ஊன்றியிருந்தாலும், அதன் தலையை வேறொரு உலகினுள் நுழைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்! ஆகவேதான், ஒரு உயிர்-ஜீவி என்பதை இப்பிரபஞ்சத்தி னுள்ளே இயங்கும் இன்னொரு பிரபஞ்சம் என்று சொல்வது மிகப்பொருத்தமாயிருக்கும்!

ஆம், பருப்பொருளின் பிரபஞ்சம் தனது சடப்பண்பைக் கடந்து செல்லும்பரிணாம வழிமுறையில்,தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொண்டு எடுத்த புதியதொரு அவதாரம் தான் "உயிர்-ஜீவி"
என்பதாகும்!

இவ்விடத்தில், பருப்பொருளின் உலகிற்கும் உயிர்-ஜீவிக்கும் உள்ள தொடர்புறவு எத்தகையது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியமாகும். உலகம், அல்லது சுற்றுப்புறம், அல்லது பருப்பொருள், அல்லது இயற்கை என்று அதை எவ்வாறு அழைத்தாலும், அது எவ்வொரு உயிர்-ஜீவிக்கும் எதிராக இருப்பதோ, செயல்படுவதோ இல்லை. பரந்த பிரபஞ்சத்தைப்பொறுத்தவரை அது பாராமுகமாக (Indifferent) இருப்பதாகத்தெரிவதென்னவோ உண்மைதான்! ஆனால்,
பூமிக்கிரகத்தைப்பொறுத்தவரை, அது உயிர்-ஜீவிகளுக்குப் பெரிதும் ஆதாரத்துணையாகத்தான்அமைந்துள்ளது.

ஒருவகையில், உயிர்-ஜீவிகள்தான் பருப்பொருள் உலகின் பண்புகளுக்கு மாறான வகையில், எதிர்த் திசையில் இயங்குவதாகச் சொல்லலாம்! ஒருமுறை  பருப்பொருள்- உலகின் ஒரு பகுதியானது மாற்றமடைந்து உயிர்-ஜீவியாக மாறிய பிறகு, அந்த உயிர்-ஜீவியானது தனது சுற்றுப்புற (உலக)த்திலிருந்து பிய்த்துக்கொண்டு தனியே பிரிந்து நிற்பதாகிறது! உயிர்-ஜீவி என்பது அது  தோன்றிய வகையின்படி, அது பருப்பொருள் உலகம் அல்லது இயற்கையின் (மிக வித்தியாசமானதொரு புனிதப்பணித்திட்டத்தை சிரமேற் கொண்டியங்கும்) ஒரு பிரதிநிதி போன்றதே. ஆம்,
உயிர்-ஜீவியானது இயற்கையின் பிரதிநிதியாக செயல்பட்டாலும், அது இயற்கையின் பருப்பொருளின் பண்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் இயற்கையின் உள்ளார்ந்த பரிணாம-விழைவின் இலக்கைப் பிரதிநிதித்து வம் செய்யும் கருவியாகவே விளங்குகிறது.

பருப்பொருளாலான தொடக்க-நிலை இயற்கையானது ஒரு உள்ளார்ந்த விழைவை, உந்துதலை, வேட்கையைக்கொண்டிருக்கிறது என்பது மிகத்தெளிவாக அது இன்றுவரை என்னென்னவாக பரிணாமம் பெற்றுள்ளது என்பதிலிருந்து சந்தேகத்திற்கிடமின்றி புலனாகியுள்ளது. அதேநேரத்தில்
இயற்கையின் உள்ளார்ந்த அந்த விழைவை, அதை ஒருவித 'ஏக்கம்' என்று சொல்வது இன்னும்அதிகப்பொருத்தமாக இருக்கும், அந்த ஏக்கம் எத்தகையது என்றால், எவ்வாறேனும் தனது பொருண்மைப்
பண்பினைக்கடந்து சென்றுவிடவேண்டும் என்பதே ஆகும். அதாவது சடப்பொருள்ஏன் தன் சடப்பண்பைக் கடந்திட வேண்டும் எனும் கேள்வியை நாம் இவ்விடத்தில் கேட்பது மிக அவசியம். ஏனெனில், சடப்பொருள் அல்லது பருப்பொருள் என்பது உண்மையில் வேறு ஏதோவொரு மெய்ம்மையின் சுருங்கிய நிலை அல்லது வடிவமாகத்தான் இருக்கவேண்டும்! ஆகவே
தான் அது தன் அசலான நிலையை அடையவேண்டி ஏக்கம்கொள்வதாகிறது!  அதேநேரத்தில்,சடப்பொருளின் இந்த ஏக்கம் எந்திர-வகைப்பட்டதாகும் (mechanical).ஒரு சுருள்வில் (spring)லானது சுருக்கப்பட்ட நிலையில் வைக்கப்படும்போது அது மீண்டும் தன் பழைய நிலைக்குத்
திரும்புவதற்கான அழுத்தத்தைக்கொண்டிருப்பது போன்றதாகும்

சுய-அமைப்பாக்கமுறையில் (Self- Organization) தன்னைக்கட்டமைத்துக்கொள்ளுதல் என்பது, பருப்பொருள் உலகின் மிக மையமான உள்ளார்ந்த விழைவு ஆகும். ஆம், பருப்பொருளானது
யாதொரு மாற்றத்திற்கும் உட்படாமல், பரிணமிக்காமல், அப்படியே எக்காலத்திற்கும் வெறும்சடமாக, சோம்பியவாறு, ஊமையாக, உணர்ச்சியற்ற, உணர்வற்ற ஒன்றாக; எந்திரத்தனமான இயக்கத்தில், அடிப்படை பௌதீக விசைகள் மற்றும் விதிகளால் ஆட்டுவிக்கப்படும் ஒன்றாகவே இருக்கமுடியாது.

ஸ்டீஃபென் ஜே. கௌல்டு  (Stephen Jay Gould) எனும் உயிரியல் பரிணாம விஞ்ஞானி, தனது "வியத்தகு உயிர்" (Wonderful Life)எனும் நூலின் கடைசிப்பகுதியில்,

   "மனிதப் பரிணாமம் என்பது  ஒழுங்குமுறையற்ற (random)தும்,      குறிக்கோளற்றதுமான
    ஒரு வழிமுறை எனப்புரிந்துகொள்வது அவசியம். அதாவது,  நம்முடைய தற்பெருமை தான்
    இயற்கை வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளதாகக் கற்பிக்கச்செய்கிறது. உயிரின் நாடாவை
    திரும்பவும் முதலிலிருந்து ஓடச்செய்தோமெனில், வரலாறு என்பது வேறாகவே வெளிப்
    படும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம். ஏனெனில், நாம்  ஒழுங்குமுறை
    யற்றதும், குறிக்கோளற்றதுமான  ஒரு வழிமுறையின் விளைபொருள் என்பதால், அவ்வழி
    முறையானது  மீண்டும் இதே நிகழ்கால நிலைமைக்குத் திரும்பாது. ஆகவே, ஒரு நிமிடம்
    கூட நாம் விசேடமானவர்கள் என எண்ணாமலிருப்போமாக..."

என எழுதியுள்ளார். ஆனால், ஸ்டீஃபென் ஜே. கௌல்டு - ன் கூற்றுக்கு மாறாக, மீண்டும் பரிணாம நாடாவை, முதலிலிருந்து ஓடச்செய்தோமெனில், அதே வரலாறானது அச்சுப் பிறழாமல் மீண்டும்அப்படியே நிகழ்ந்தேறும். மனிதஜீவிகளாகிய நாமும் அப்படியே இங்கிருப்போம் இப்போதிருப்பது
போலவே! யாதொரு மந்திர மாய சக்தியினால் அல்ல; மாறாக, ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய அதே  ஒழுங்கு முறை யற்றதும், குறிக்கோளற்றதுமான வழிமுறையினால்மட்டுமே அது சாத்திய மாகும்! ஏனெனில்,  ஏற்கனவே மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்க
ளும் இப்போது இங்கிருப்பதும் அதே வழிமுறையின் விளைவாகத்தானே சாத்தியமாகியது!

கடவுளாலோ, அல்லது வேறு எவ்வொரு சக்தியாலோ வழிநடத்தப்படாத, ஒழுங்குமுறைப்படுத்தப்படாத ஒரு இயற்கை வழிமுறை ஏன், எதற்காக உயிருள்ள ஜீவிகளையும், சிந்திக்கும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவி களையும் விளைவிக்கவேண்டும்? ஆக, எத்தனை முறை பரிணாம
நாடாவை, முதலிலிருந்து ஓடச்செய்தாலும், மீண்டும் மீண்டும், அதே விளைவுகள்தான் தோன்றும்! கடவுள் கூட தவறிழைத்திடக்கூடும், அல்லது மனம் மாறி வேறுவிதமாகப் படைப்பைச் செய்திடக்  கூடும்; ஆனால், இயற்கை வழிமுறை தவறிழைக்காது! அதே வேளையில், இயற்கையின் வழிமுறை உண்மையிலேயே தாறுமாறானதும், ஒழுங்குமுறையற்றதும், குறிக்கோளற்றதும், இலக்கற்றதும்தானா என்பது குறித்து பிறகு ஆய்ந்தறிவோம்.

ஆம், அடிப்படை அணுத்துகள்கள் அவற்றின் போக்கில் தனித்து விடப்பட்டால், அவை ஒன்றோடு ஒன்று இணைவதும்,  பிரிவதுமாக,  பல்வேறு சாத்தியப்பாடுகளைப் பரிட்சித்து, முதலில், நிலைப்பு கொண்ட மூலக்கூறு களாகவும், பிறகு பல்வேறு மூலகங்களாகவும், இவ்வாறு மேன்மேலும் சிக்க
லான அமைப்புகளாக எழும் பரிணாம வழிமுறையில், ஒரு கட்டத்தில் உயிர்ப்பண்பு பெற்ற மூலக்கூறுகளாக, அதாவது, நுண்ணுயிரிகளாக மாற்றமடைவதும், பிறகு, நுண்ணுயிரிகள் இணந்து பல்வேறு விலங்கு மற்றும் தாவர ஸெல்களாகி, பிறகு பல ஸெல்லுயிரிகளாகவும், முடிவில் மனிதஜீவிகளாகவும் வெளிப்படுவது என்பது தவிர்க்கவியலாது நிகழ்ந்துவிடுகிறது!

மேலும், மீண்டும் பரிணாமத்தை முதலிலிருந்து தொடங்கச்செய்தால், வேறுவிதமாகத்தான் பரிணாம வரலாறு அமையும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம் என்பதாகவே அமைந்தாலும், அதனால், தற்போதுவரை வெளிப்பட்ட வரலாறும், மனிதஜீவிகளாகிய நாமும்
நிஜமில்லை என்றாகிவிடப்போவதில்லை! ஏனெனில், இப்போதுள்ள நிஜமும், நிலையும் தான் ஆகச்சிறந்த சாத்தியப்பாடு(The best possible state or world)ஆகும்! மேலும்,காலத்தின் அம்பு (The Arrow of Time) ஒருபொதும் பின்னோக்கிச் செல்வதில்லை!

அதாவது, பூமியின்மீது உயிரி(உயிர்-ஜீவி) களும், மனிதஜீவிகளும் தோன்றியது, தற்செயலானதோ அல்லது விபத்து போன்றதோ அல்ல; மாறாக, அவை தவிர்க்கவியலாதவகையில் தோன்றியுள்ளன!
ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்களின் கூற்று தவறானது. அதாவது, மீண்டும் பரிணாமத்தை முதலிலிருந்து தொடங்கச்செய்தால், வேறுவிதமாகத்தான் பரிணாம வரலாறு அமையும் என்பதும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம் என்பதும் முற்றிலும் தவறானதாகும்! ஏனெனில், நாம்
எதிர்கொள்ளவேண்டிய தவிர்க்கவியலாத நிஜம், நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே! இதற்கு மாறாக,  "மீண்டும் முதலிலிருந்து தொடங்கினால், நாம் இங்கிருக்க மாட்டோம்"
என்பது போன்ற பேச்சுகள் முட்டாள்தனமானவையாகும். இத்தகைய பேச்சுகள் யாவும் ஏற்கனவே நிகழ்ந்தேறியுள்ள இயற்கை மற்றும் பரிணாம தருக்கங்களுக்கும், வழிமுறை மற்றும் விளைவுகளுக்கும் புறம்பானவையும், எதிரானவையுமாகும்.

அடுத்து, ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்களின் இன்னொரு கூற்றும், அதாவது, "நம்முடைய தற்பெருமை தான் இயற்கை - வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளதாகக் கற்பிக்கச்செய்கிறது" என்பதும் தவறானதாகும். இதே தொனியில், நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீவென்
வெய்ன்பெர்க் அவர்களும் சொல்லியுள்ளார். அதாவது, "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப்புரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது." என்பதுதான் அக்கூற்று. உண்மையில்,  'இயற்கை-வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளது' , "பிரபஞ்சம் அர்த்தமுடையது"
"பரிணாமத்திற்கு குறிக்கோள் மற்றும் இலக்கு உண்டு", "மனிதனின் உயரிய பரிணாமப்பொறுப்பு மனிதனை முக்கியத்துவம் வாய்ந்தவனாக ஆக்குகிறது" என்றெல்லாம் கற்பிக்கச்செய்வது நம்முடைய கர்வமோ,  அகம்பாவமோ, தற்பெருமையோ, அல்லது, "நாம் விசேடமானவர்கள்" என்கிற கிறுக்குத்தனமான எண்ணமோ அல்ல! ஆனால், 'இயற்கை-வரலாற்றுக்கு அர்த்தம் எதுவும் இல்லை' ,"பிரபஞ்சம் அர்த்தமற்றது", "பரிணாமம் ஒழுங்குமுறையற்றதும், குறிக்கோளற்றதுமான  ஒரு வழி
முறை" என விஞ்ஞானி ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, மற்றும் விஞ்ஞானி ஸ்டீவென் வெய்ன்பெர்க் ஆகியோரைக் கூற வைப்பது அவர்களுடைய தாழ்வு-மனப்பான்மையும், அவர்களுடைய  தவறான (மிதமிஞ்சிய பொருண்மைவாத, எந்திரவாத, சுருக்கல்வாத) விஞ்ஞான அணுகுமுறையும் தானேதவிர வேறில்லை.

உண்மையில், பரிணாம வழிமுறை என்பது தாறுமாறானதும் (random), ஒழுங்குமுறையற்றதும்,குறிக்கோளற்றதும், இலக்கற்றதுமாகத்தான் தொடங்கியது என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று ஆகும். ஆனால், இயற்கையின் வழிமுறையில் அடங்கியுள்ள ஒரு முரண் என்னவெனில், அர்த்தமற்றதும், குறிக்கோளற்றதுமானதொரு வழிமுறை 'ஏன்' அர்த்தம் நாடுகிற, குறிக்கோள் நிறைந்த மனிதஜீவிகளை விளைவிக்கவேண்டும் என்பதுதான்! ஒருவேளை, அர்த்தம் நாடுகிற, குறிக்கோள் நிறைந்த மனிதஜீவிகளை விளைவிப்பது தான் குறிக்கோளற்றதும், இலக்கற்றதுமாகத்தொடங்கிய பரிணாம வழிமுறையின் குறிக்கோளாக இருக்கலாம்! எப்படியிருந்தாலும் இதில் யாதொரு முரண்பாடும் இல்லை என்பதே உண்மை.

எவ்வாறெனில், "பெரு-வெடிப்பு" எனும் பிறப்பு நிகழ்வின்போது, வெறும் அணுத்துகள்களாகத்தான் பிரபஞ்சம் தொடங்கியது. உயிரற்ற, உணர்ச்சியற்ற, உணர்வுமற்ற பௌதீகச் சடப்பொருளான அணுத்துகள்கள்தான் பரிணாமத்திற்கான மூலதனம், முதலீடு யாவுமாகும்! அணுத்துகள்களின் சேர்க்கையின், அவற்றின் சுய-அமைப்பாக்கமுறையின் (Self-Organization)விளைபொருட்கள்தான் இன்று நாம் காணும் பரந்து விரியும் பிரபஞ்சமும், அதிலுள்ள உயிர்-ஜீவிகளும், மனிதஜீவிகளும் யாவும் ஆகும். ஆம், யாதொரு வழிநடத்துதலும், ஒழுங்குமுறைப்படுத்துதலும், வரைவும்,
திட்டமும், குறிக்கோளும் இல்லாமல், உணர்வற்ற சடத்துகள்களைக்கொண்டு தொடங்கியதுதான் இயற்கைப்பரிணாம வழிமுறை என்பது. இவ்வழிமுறை யின் நெடிய வரலாற்றின் ஒரு கட்டத்தில் உயிருள்ள ஜீவிகளும், இன்னொரு கட்டத்தில் சிந்திக்கும் திறனும், சுய-உணர்வும் கொண்ட மனிதஜீவிகளும் விளைந்தன என்பது வினோதமே என்றாலும், அவை தவிர்க்கவியலாத விளைவுகளே. அதாவது, குருட்டாம்போக்கான வழிமுறை ஒரு கட்டத்தில் குருடு நீங்கி பார்வை பெறுவது என்பதுதான் அவ்வழிமுறையின் குறிக்கோள் ஆகும்! இதற்கு மாறாக, முடிவேயில்லாமல் குருட்டாம்போக்கிலேயே இருட்டில் தடுமாறிக்கொண்டு தொடர்ந்திடும் ஒரு வழிமுறை விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதுபோல குறிக்கோளற்றது என்கிற அதன் போக்கில் நிலைமாறாததாய் (Consistent) இருக்கலாம்; ஆனால், அத்தகைய வழிமுறை அர்த்தமற்றதாகும்.

தொடர்ந்து மேலே செல்வதற்கு முன் "இயற்கை" பற்றிய விஞ்ஞானிகளின் புரிதல் எத்தகையதாய் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஏனெனில், அவர்கள் இயற்கை என்பது இப்படித்தான் இருந்தாகவேண்டும் என வற்புறுத்துவதாகத்தெரிகிறது! இயற்கையின் அசலான இயற்கை (இயல்பு) எத்தகையது என்பதை அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டதற்கான தடயம்எதுவும்  தெரியவில்லை. உண்மையில், எல்லா காலத்திலும் ஒரே தன்மையிலமைந்ததாக இயற்கை இருக்கவில்லை. அதே நேரத்தில், அது எப்போதும் மாறிக் கொண்டேயும் இருக்கவில்லை! மாறாக,இயற்கை தனது அசலான இயற்கையை நாடிச்சென்று கொண்டுள்ளது; அத்தகைய இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும். இயற்கை, பிரபஞ்சம், உலகம்,பருப்பொருள் என எவ்வாறு
அதை அழைத்தாலும், அது ஒரு பரிணாம இயக்கமே. இயற்கை என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து, ஒரு குறிப்பான இலக்கு- நிலையை நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். ஆம், இலக்கு இல்லாத யாதொரு இயக்கமும் இல்லை; இருக்கவும் முடியாது. ஏனெனில் அது முரண்பாடானது.  எவ்வொரு இயக்கமும் இலக்கைக் கொண்டதே; இலக்கு இல்லாவிடில் அதற்குப்பெயர் இயக்கமல்ல, அது தாறுமாறானதொரு போக்கு ஆகும். மேலும்,   "மாற்றம்" என்பதற்கும், "பரிணாமம்" என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. மாற்றத்திற்காக மாற்றம் என்பது முரண்பாடானது,
அல்லது மேலோட்டமானது. பண்பினடிப்படையிலான மாற்றத்தைப்பின் பற்றிச் செல்லும் போக்கிற்குப்பெயர்தான் பரிணாமம் என்பதாகும்.

எவ்வொரு இயக்கத்திற்கும் தொடக்கம், அல்லது ஒரு ஆரம்பம் உள்ளது; ஆகவே அதற்கு ஒரு முடிவும், அடைவிடமும் உண்டு. இயற்கை என்பது அத்தகையதொரு இயக்கமே. பருப்பொருள் (அணுத்துகள்கள்) தான் இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பதன் தொடக்க நிலையாகும். அதாவது,
சடத்தன்மை தான் இயற்கையின் தொடக்க நிலைப் பண்பு ஆகும். தொடர்ந்த பரிணாம வளர்ச்சியினால், பருப்பொருள் ஒரு கட்டத்தில் உயிரைத் தாங்கும் கட்டமைப்பாக மாறியது; அக்கட்டத்தில்,இயற்கை உயிர்பெற்று எழுந்தது என்று சொல்லலாம்! அதையடுத்துத் தொடர்ந்த உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக மனிதனுள் "சுய-உணர்வாக" இயற்கை உணர்வுபெற்று எழுந்தது என்று சொல்லலாம்!

அதாவது,  இயற்கை அல்லது பிரபஞ்சத்தின் தொடக்க நிலையில், பருப்பொருளை (அணுத்துகள்களை)க்கொண்டு நிகழ்ந்த பரிணாம வழிமுறை என்பது பெரிதும் எந்திரத்தனமாகவும், ஒழுங்கு முறையற்ற தாகவும், குறிக்கோளற்றதாகவும் தான் இருந்திருக்கமுடியும். ஏனெனில், ஒழுங்கு (Order), திட்டவரைவு (Planning), குறிக்கோள் (Purpose) யாவும் பரிணமிக்கும் அம்சங்களேயாகும். இதேபோல், அறிவுக்கூர்மை (Intelligence), அறிநிலை (Awareness), உணர்வு (Consciousness) போன்றவையும் பரிணமிக்கும் அம்சங்களே. இவ்வாறு புதிய புதிய அம்சங்களும், பண்புகளும் சேர்ந்து கொண்டே முன்னேறிச்செல்லும் ஒரு ஒப்பற்ற இயக்கமே பரிணாமம்
என்பதாகும்!

ஆரம்பக்கட்டத்தில், பரிணாமம் என்பது பொருண்மையின் அதாவது சடப்பண்பினைக்கொண்டு அமையக்கூடிய சாத்தியப்பாடுகளைத் தீர்த்து முடிப்பதில் ஈடுபட்டிருந்தது. இந்தப் பரிணாமக்கட்டத்தை நாம் பொருளியல் கட்டம் (Inorganic or Material Sector)என்று அழைக்கலாம். அதே நேரத்தில், பொருளியல் கட்டம் முடிவில்லாது நீண்டுகொண்டே செல்லவில்லை. மாறாக,
அணுத்துகள்களின் மிகச் சிக்கலான கட்டமைப்புகள் ஒரு எல்லையைத் தொட்டு உயிர்ப்புபெற்றதும் பரிணாமம் உயிரியல் கட்டத்திற்குள் பிரவேசித்தது. இப்பரிணாமக் கட்டத்தை நாம் உயிரியல் கட்டம் (Organic or Biological Sector)என்று அழைக்கலாம். இக்கட்டத்தினுள் உயிர்ப்பண்பி னைக்கொண்டு அமையக்கூடிய  சாத்தியப்பாடுகளைத் தீர்த்து முடிப்பதில் பரிணாமம் ஆழ்ந்தது. அதாவது பரிணாமம் பல்வேறு உயிரினங்களை விளைவித்தது. ஆனால்,இயற்கைப்பரிணாமத்தின் உள்ளார்ந்த விழைவு பல்வேறு உயிரினங்களை உருவாக்குவதல்ல; மாறாக, அவ்வுயிரிகளின் வழியாக இயற்கை தேடியது இயற்கையின் வேட்கையை முற்றாகத்தணிக்கும்,அதாவது அதன் வேட்கையை முடிவிற்குக்கொண்டு வரும் வகையிலான வேறொரு வகைப் பண்பு அல்லது இயல்பையே ஆகும். அத்தகையதொரு பண்பு அல்லது அம்சம் எதுவென்றால், அது "உணர்வு" என்பது தான்.

உண்மையில்,  ஒரு உயிர்-ஜீவியின் பிரத்யேக அடிப்படை அம்சங்களாக, தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளுதல் (இனப்பெருக்கம்), வளர்சிதை மாற்றம், சுற்றுப்புறத்துடன் தகவமைதல் போன்றவையே பொதுவாக உயிரியல்விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுபவையாகும். சிலர் உயிர்
என்பது பொருள், சக்தி, மற்றும் தகவல் (Information) ஆகியவற்றால் ஆனது எனவும்,  சிலர், உயிரை பொருளியல் அமைப்புமுறை எனவும், சிலர் அதை ரசாயண அமைப்புமுறை எனவும், சிலர், சிக்கலான அமைப்பு முறையின் விசேடப்பண்பு எனவும் குறிப்பிடுவர். ஆனால், ஒருவகையில் இவை யாவும் அடிப்படை அம்சங்களே எனினும் எவரும் "உணர்வு" (Consciousness) எனும்
அம்சம் பற்றிக் குறிப்பிடவேயில்லை.

ஆம், "உணர்வு" தோன்றுவதற்கான ஒரு முன்-தேவையாக, முன்- நிபந்தனை யாகத்தான் "உயிர்" என்பது உருவானது! உணர்வின் மிகச்சிறியஆரம்பம், முதல் உயிர்-ஜீவியுடன் தொடங்கிவிடுகிறது எனலாம். மிக அருகிலுள்ள பொருட்களை உணரக்கூடிய மெல்லிய 'உறுத்தல்-உணர்வில்' ஆரம்பித்து,  மிகத்தெளிவாகச் சுற்றுப்புறத்தை அறியக்கூடிய புலன்-வழி உணர்வாக வளர்ந்து, பிறகு புற-உலகை மட்டுமல்லாமல், தனது சொந்த இருப்பையும் உணரக்கூடிய "சுய-உணர்வாக" மனிதனுள் வெளிப்பட்டதுடன், பரிணாமம் உணர்வுப்பூர்வமான வழிமுறையாக மாறியுள்ளது. அதாவது,மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிந்துவிட்டது. ஏனெனில், (சுய)உணர்வை எட்டுவதற்கான மிகப்பொருத்தமான, நன்கு வளர்ச்சியடைந்த பொறியமைப்பான மனித மூளையை வந்தடைந்ததும், உயிரியல் பரிணாமத்தின் பணி முழுமையடைந்துவிடுகிறது. ஏனெனில், உயிரியல் பரிணாமத்தின் நோக்கம் வெறுமனே விதவிதமான உயிரிகளை உருவாக்குவதல்ல. உயிரியலாளர்களைப்பொறுத்தவரை, பரிணாமம் என்பது உயிரியலை மையமாகக்கொண்டது, அதாவது பரிணாமம்என்றாலே அது உயிரியல் பரிணாமம் தான்; ஆகவே, அது தங்களது ஆளுகைக்கு உட்பட்டது என்பதாகக் கருதுகிறார்கள். பௌதீக வியலாளர்களைப் பொறுத்தவரை, அனைத்தும் பருப்பொருளே,அதாவது அடிப்படை அணுத்துகள்களே; ஆகவே, பரிணாமம் என்பது பொருளியல் ( Material)
பரிணாமமே; ஆகவே, பிரபஞ்சம் மொத்தமும் தங்களது ஆளுகைக்கு உட்பட்டதே என்பதாகக்கருதுகிறார்கள்.

ஆனால், பிரபஞ்சம்  என்பது காலம், வெளி மற்றும் பருப்பொருளின் மாபெரும் அமைப்பும், இயக்கமும் மட்டுமல்ல! மாறாக, உயிரினங்களின் "உயிரியல் கோளம்" (The Biological Sphere)தான் பருப்பொருளாலான பிரபஞ்சத்தின் நீட்சியும் உயர்-வளர்ச்சி நிலையுமாகும்! இத்துடன் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி முற்றுப்பெற்றுவிடவில்லை. உயிரியல் கோளத்தினூடாக எழுந்த மனிதஜீவிகளின் "உணர்வியல் கோளம்" (Psychic Sphere) தான் பிரபஞ்சத்தின் தற்போதைய உயர்-வளர்ச்சி நிலையாகும்! இதுவும் இறுதியானதல்ல. ஏனெனில், மனித உணர்வு என்பது இறுதியான முழுமையான உணர்வு அல்ல!

மேலும், பரிணாமம் என்பது சூன்யத்தில் நடைபெறுவதியலாது, ஆகவே, பரிணாமம் பொருளை, சடப்பண்பை ஒரு அடிப்படையாக, ஊடகமாக, உபகரணமாகக்கொண்டு தொடங்கியது! ஆக, பரிணாமம் என்பது தொடக்க காலக்கட்டத்தில், பொருளியல் பரிணாமமாகத்திகழ்ந்தது. அதாவது,
பொருளின் சடப்பண்பில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக "உயிர்ப்பண்பு" வெளிப்பட்டது. உயிர் அல்லது உயிர்-ஜீவிகளைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் மனிதன்எனும் உயிர்-ஜீவியின் வழியாக "உணர்வு" எனும் பண்பு  வெளிப்பட்டது! ஆக, மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிவிற்கு வந்துவிட , "உணர்வியல் பரிணாமம்" (Psychic Sector)தொடங்கியுள்ளது! ஒரு உயிரினம் என்கிறவகையில், மனிதன்தான் கடைசி உயிரியல் ஜீவியாவான். மனிதனையடுத்து, அல்லது, மனிதனிலிருந்து கிளைத்து வேறொரு புது உயிரினம் தோன்றக்கூடும் என
எதிர்பார்த்தோமெனில், நாம் பரிணாமம் என்பதை சரியாகப்புரிந்து கொள்ளவில்லை என்றுதான்அர்த்தம்! ஏனெனில், பரிணாமம் என்பது அடிப்படையில் உணர்வுப்பரிணாமம் தான்; அதாவது,பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வு தான்.

ஆம், இனி மனிதனையடுத்து வேறொரு புதிய உயிரினமோ, உயிர்-ஜீவியோ தோன்றிட வாய்ப்பு ஏதுமில்லை. மாறாக, மனிதன்தான் (ஒவ்வொரு மனிதனும்தான்) தனது உணர்வின் வளர்ச்சி மூலம் புதியதொரு ஜீவியாக, அதாவது மனிதன் தற்போது பெற்றுள்ள உணர்வைக்கடந்து வளர்ந்து வேறு
ஒரு "உயர் உணர்வின்" ஜீவியாக எழுந்திடவேண்டும். முடிவாக, உணர்வின் முழுமையைஒவ்வொரு மனிதனும் எட்டும்போது பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்வான பெரு-வெடிப்பில் தொடங்கிய பரிணாமம் முழுமைபெறுகிறது.

நல்லது, நாம் மீண்டும் உயிர் பற்றிய புதிருக்கு வருவோம். உயிர் என்பது ஒரு புதிர் என சொல்வதன் வழியே, உயிர் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம் என அர்த்தம் அல்ல. மாறாக,  அதை அவ்வளவு எளிதாக விவரித்து விளக்கிவிடவும் முடியாது என்பதால்தான் 'புதிர்' என்கிறோம். விஞ்ஞானிகள், பரிணாமவாதிகள், உயிரியலாளர்கள் ஆகியோரது விளக்கங்கள் யாவும் உயிர்-ஜீவியைப்பற்றியதாய் உள்ளனவேதவிர, அவர்கள் "உயிர்" எனும் அம்சத்தை நெருங்கவும் இல்லை என்பது தான் உண்மை நிலையாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி, உயிர்-ஜீவிக்கும், 'உயிர்' என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது! ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்வரைதான் அவரை
பெயரிட்டு அழைக்கிறோம், மதிக்கிறோம், எல்லாம் செய்கிறோம். ஆனால், அம்மனிதன் இறந்து போனால், "பிணம்" என்கிறோம்! அவரது உடல் முழுமையாக இருந்தாலும், சலனமற்றுக்கிடப்பதாகிறது, சிறிது நேரத்தில் சில்லிட்டுப்போகிறது.அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. அவரது இதயம் நின்றுவிட்டது; நாடித்துடிப்புஅடங்கிவிட்டது; மூளைக்கு இரத்தம் செல்லாததால் அவரது  மூளை செத்துவிட்டது  என்கிறார்கள். அதாவது, அம்மனிதனின் உடல் முழுமையாக உள்ளது, ஆனால், உயிர் மட்டும் இல்லை என்பது எதைக்குறிக்
கிறது? அப்படியென்றால்,  "உயிர்" என்றால் என்ன? இதயத்தின் இயக்கம், நாடித்துடிப்பு, சுவாசம், மூளை-இயக்கம், இன்னும் பிற இயக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு தான் "உயிர்" என்பதா? அல்லது தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளுதல் (இனப்பெருக்கம்), வளர்சிதை மாற்றம்,
சுற்றுப்புறத்துடன் தகவமைதல் ஆகிய அடிப்படைகளும் சேர்ந்ததுதான் "உயிர்" என்பதா? ஆம், இவை யாவும்  "உயிர்" எனும் பரிமாணத்தை, அந்த விசேடமான "இருப்பு நிலை"யை தொடர்பு கொள்ளக்கூடிய உயிர்-ஜீவியின் அம்சங்கள் மட்டுமேயாகும்!

அடிப்படையில் பருப்பொருள் என்று அறியப்படும் உலகம், பிரபஞ்சம், அல்லது இயற்கையானது தன்னைத்தானே ஒரு உயிர்-ஜீவியாக (ஏணியாக) கட்டமைத்துக்கொண்டு எட்டக்கூடியதொரு விசேடமான இருப்பு-நிலைக்குப்பெயர்தான் "உயிர்" என்பதாகும்! ஆம், மிகச்சரியாகவும், துல்லிய
மாகவும் சொன்னால் "உயிர்" என்பது பருப்பொருள் எனப்படும் இருப்பு-நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு விசேடவகை "இருப்பு-நிலை"யே (A Non-Material state of existence) ஆகும்!

அதாவது, பருப்பொருள் அல்லது சடப்பொருள் என்பது ஒருவித இருப்பு நிலையாகும் - அது அமைப்பாக்கப்படாத அணுத்துகள்களின் உணர்வற்ற நிலையின் இருப்பாகும். இதை நாம் "சட-இருப்பு" (Material Existence) என்றழைக்கலாம். சடப்பொருளானது பௌதீகவிதிகளால் இயக்கப்படுவதும், அதே நேரத்தில், உயிரியல் மற்றும்  உணர்வியல் விதிகளுக்கு உட்பட்டதுமாகும்.

உயிர் என்பது மிகச்சிக்கலான சுய-அமைப்பாக்கமுறையில் (self-organization) அமைந்ததும், தனி-மையப்படுத்தப்பட்ட (individualized)துமான உயிர்-ஜீவி என்றழைக்கப்படும் பொருளியல் அமைப்பினால்  தொடர்புகொள்ளப்படும் ஒரு வித இருப்பு நிலையாகும். இதை நாம் "உயிர்-இருப்பு"  (Organic Existence) என்றழைக்கலாம். ஒரு உயிர்-ஜீவி என்பது பௌதீக விதிகளுக்கு உட்பட்டதும், பெரிதும் உயிரியல் விதிகளால் ஆளப்படுகிற ஒன்றாகும்.

உணர்வு அல்லது மனம் என்பது உணர்வுகொள்ளும் திறனைப்பெற்ற உயர்-வளர்ச்சியடைந்த உயிர்-ஜீவியினால், குறிப்பாக, மனித-ஜீவியினால் தொடர்புகொள்ளக்கூடியதொரு  விசேடவகை இருப்பு நிலையாகும். இதை நாம் "உணர்வு-இருப்பு" (Conscious Existence)என்றழைக்கலாம்.

பொருள்,உயிர், உணர்வு ஆகிய அம்சங்களை ஓரளவிற்குத் துல்லியமாக, "இருப்பு-நிலை" என்பதன்சொற்களில் புரிந்துகொண்டோம்; ஆனால், பல்வேறு இருப்பு-நிலைகளை நாம் "உணர்வு" என்பதன்சொற்களைக்கொண்டு  தான் புரிந்துகொள்ளமுடியும். அதாவது "சட-இருப்பு" நிலை என்பது கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையே ஆகும். "உயிர்-இருப்பு"  நிலை என்பது புலன்வழி உணர்வைக்கொண்ட இருப்பு நிலை ஆகும். "உணர்வு-இருப்பு" என்பது மனிதஜீவிகள் எட்டியுள்ள "சுய-உணர்வின்" இருப்புநிலையாகும். ஒரு மனிதஜீவியைப்பொறுத்தவரை, அவனுள் சட-இருப்பு, உயிர்-இருப்பு, உணர்வு-இருப்பு ஆகிய இம்மூன்று இருப்பு நிலைகளும் சங்கமிக்கும் மையமாக விளங்குகிறான் எனலாம்.

அதே நேரத்தில், மனிதஜீவிகளால்  தற்போது எட்டப்பட்டுள்ள உணர்வு என்பது, உணர்வு நிலையின்முழுமையோ, அல்லது இறுதியோ அல்ல. அதாவது மனிதனுடன் உயிரியல் பரிணாமம் தான்முடிவிற்கு வந்துள்ளது; உணர்வியல் பரிணாமமோ இப்போதுதான் அவனுள் தொடங்கியுள்ளது.

மனிதனின் சுய-உணர்வு என்பது உணர்வின் தொடக்கம் மாத்திரமே. ஆம், ஒவ்வொரு மனிதஜீவியும் தனது சுய-உணர்விலேயே தங்கித்தேங்கிவிடாமல், தனக்குப்புறத்தேயுள்ள யாதொரு விஷயத்துடனும், பொருளுடனும், உறவுடனும் அடையாளப்படுத்திக்கொள்ளாமல், தனது உணர்வை உணர்வு கொண்டு உணர்வில் பெருகி பூரண முழு-உணர்வை அடைந்திடுவது அவசியமாகும். ஏனெனில், உணர்வின் முழுமை அல்லது "முழு-உணர்வு" என்பதுதான் முழுமையானதும், இறுதியானதுமான இருப்பு நிலை ஆகும்.

ஒருவகையில், 'உயிர்' என்பதும்  'உயிர்-ஜீவி' என்பதும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பதாகக் காணமுடியும் என்றாலும், அதாவது, உயிர் என்பது உயிர்-ஜீவிகளுக்கு வெளியே இருக்கமுடியாது! அதே போல், உயிர்-ஜீவிகளும் உயிர் இல்லாமல் இருக்கமுடியாது என்பதாகத் தெரிந்தாலும்; அதாவது, உயிர் என்பது உயிர்-ஜீவி எனப்படும் விசேடக்கட்டமைப்பின் வெளிப்படு- பண்பு (Emergent Property)என்பதாகக்கொண்டாலும்;  "உயிர்" என்பது ஒரு சுற்றுப்பாதை (orbit) போன்றதாகும்; அச்சுற்றுப்பாதையில் தன்னை ஏவிக்கொள்வது, அல்லது நிலைநிறுத்திக்கொள்வது என்பது உயிர்-ஜீவிகளின் பிரச்சினையேதவிர "உயிர்" என்பதன் பிரச்சினையல்ல! அதாவது, தொடர்ந்து உயிர்-பிழைத்திருப்பதும்  (survive), பிற உயிர்ஜீவிகளுடன்  போட்டியிடுவதும், இனப்பெருக்கத்தின் வழியே தன் வகையினத்தை தக்கவைத்துக்கொள்வதும்,மாறுகின்ற சுற்றுச்
சூழலுக்கேற்றாற்போல தகவமைவதும்உயிர்ஜீவிகளின் பிரச்சினையே தவிர உயிரின் பிரச்சினையல்ல!

உயிரியலாளர்கள் சிலர், உயிர்ஜீவிகளை,பருப்பொருளின்-அமைப்பு (Material System)எனவும்,சிலர்,  ரசாயண-அமைப்பு(Chemical System)எனவும், சிலர், மூலக்கூறுகளின் -அமைப்பு எனவும், இன்னும் எப்படிச்சொன்னாலும் அவையெதுவும், உயிர்ஜீவிகளையோ, அல்லது, உயிரையோ முழுமையாக விளக்குவதில்லை. இவை யாவும் மேலோட்டமான விவரிப்புகளே, அதாவது, மேற்புறவிவர-உண்மைகளே; இவைகளைக்கொண்டு அர்த்தமுள்ள புரிதலைப்பெறவியலாது!

உயிர்ஜீவி என்பது, பௌதீகச்சடப்பொருளைப் பயன்படுத்திக்கொண்டு வெளிப்பட்ட  அபௌதீகப்(Non-Material) பரிமாணம் ஆகும். மேலும், உயிர்ஜீவி என்பது அணுத்துகள்களின் சிக்கலான ஒருங்கிணைப்பு அல்லது கட்டமைப்பின் உச்சியில்  எழுந்த, தனி-மையப்பட்ட ஒரு  தனிப்பண்பு
(Life is discrete particles of matter unified and individualized.)ஆகும்!

அதாவது, யாதொரு மையமும்   இல்லாமல்   இயங்கும்   பிரபஞ்சத்தினுள், தனி-மையம் கொண்ட ஒரு ஜீவியாக எழுந்த புதிர்தான் 'உயிர்ஜீவி' ஆகும்!  உயிர்ஜீவி, அது ஒரு சிறு புழுவாக  இருந்தாலும், என்ன தான்  அது    சுற்றியுள்ள  உலகைச் சார்ந்திருந்தாலும், அது இவ்வுலகினுள்  தன்னளவில்
இன்னொரு உலகமாக, பண்பினடிப்படையில்  இவ்வுலகின் சட-இருப்பி லிருந்து  முற்றிலும் வேறான "உயிர்" எனும் இருப்பு நிலையுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு அற்புதம் ஆகும்!  மனிதஜீவிஎன்பவன், சடஇருப்பையும், உயிர்-இருப்பையும் பயன்படுத்திக்கொண்டு "உணர்வு" எனும் இருப்பு
நிலையுடன்  தொடர்பு கொண்டிருக்கும் ஒரு விசேட மெய்ம்மையாவான்!

'பரந்த பிரபஞ்சத்தின் அளவுடன்  ஒப்பிடுகையில், உயிர்-ஜீவி என்பது மிகமிகச் சிறிய அல்லது அற்பமானதொரு பங்கேற்பாளர் (player)' எனவும், 'உயிர்த்தோற்றம் என்பது பிரபஞ்சத்தின்மிகக்கட்டாயமான தவிர்க்க வியலாத அவசியம்' என்பதாகக் காணும் உயிர்-மைய தரிசனங்கள்யாவும் மிகைக்கூற்றுக்களே' எனவும், 'இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பர சம்பந்தம் கொண்டதல்ல' எனவும்,  'உயிர்-ஜீவிகள், செயல்படும் இயற்பியல் விதிகளின் இயற்கையான வரையறைகளுக்குள் மட்டுமே இருப்பு பெறமுடியும், அதே நேரத்தில் இயற்கை விதிகள்
இருக்கின்றன என்பதால் உயிர் தோன்றியாகவேண்டும் என்கிற உத்திரவாதத்தை அது அளிப்பதில்லை.' எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இக்கூற்றுக்கள் யாவும் முட்டாள்தனமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!  முதலில், 'அளவு' அல்ல முக்கியம், மாறாக, 'தரம்' அல்லது, 'பண்பு' தான் முக்கியமாகும். அடுத்தது, 'உயிர்த்தோற்றம்' என்பது பிரபஞ்சத்தின் மிகக்கட்டாயமான தவிர்க்க வியலாத அவசியம்' என்பதால்தான் 80,00,000 க்கும் மேற்பட்ட பல்வேறுவகை
உயிரினங்களும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்கிறோம்! குறிப்பாக யாதொரு புறச்சக்தியின் குறுக்கீடும், வழி-நடத்துதலும் இல்லாமலேயே உயிருள்ள ஜீவிகளும், சுய-உணர்வுள்ள மனிதஜீவிகளும் உருவாகி யிருக்கிறோம் என்பது இம்முடிவிற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகிறது!

ஆக, 'உயிர்-ஜீவிகள், செயல்படும் இயற்பியல் விதிகளின் இயற்கையான வரையறைகளுக்குள் மட்டுமே இருப்பு பெறமுடியும், அதே நேரத்தில் இயற்கை விதிகள் இருக்கின்றன என்பதால் உயிர் தோன்றியாகவேண்டும் என்கிற உத்திரவாதத்தை அது அளிப்பதில்லை.' எனும் கூற்றின் அர்த்தம்
என்ன? அப்படியானால், இயற்கை விதிகள் என்பவை எதற்காக இருக்கின்றன, அல்லது இயற்கை விதிகள் என்பவை யாவை? உண்மையில், அனைத்து இயற்கை விதிகளும் "பரிணாம விதிகளே"யாகும்;  செயல்படுகின்ற அல்லது செயல்பாட்டிலிருக்கின்ற இயற்பியல் விதிகள் (laws of Physics) யாவும் "உயிரியல் - விதிகளுக்கு"ச் சேவை செய்வதற்காகவே இருக்கின்றன! அனைத்து உயிரியல்-விதிகளும்,  "உணர்வியல்விதிகளுக்கு"ச்  சேவை செய்வதற்காகவே இருக்கின்றன! முதலிடத்தில், பருப்பொருளாலான இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பது அதன் அடிப்படையில்ஒரு பரிணாம இயக்கமே என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். விஞ்ஞானிகள் இயற்கையை பரிணாமவழிமுறைக்கு வெளியே இருப்பதாகவும், இயற்பியல் அல்லது பௌதீகவிதிகள் என்பவை பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான சாசுவதமான விதிகள் என்பதாகவும் கருதுவது தவறானது!
ஆம்,   பரிணாமவழிமுறைக்கு வெளியே யாதொரு இயற்கையும் இல்லை! மாறாக,  'இயற்கை' என்பதும் பரிணாமத்திற்கு உட்பட்டதேயாகும்!  அதாவது, பரிணாம வழிமுறையின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு விதிகள் தோன்றி பரிணாமத்தை மேற்கொண்டு வழி நடத்திச்செல்கின்றன என்பதுதான் சரியான பார்வையாகும்.

உதாரணத்திற்கு, ஆக்ஸிஜன் மூலக்கூறுகளும், ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் இணையும் போது தண்ணீர் எனும் திரவப்பொருள் உருவாகிறது. ஆனால், தனியே ஆக்ஸிஜன் மூலக்கூறுகளிலும், ஹைட்ரஜன் மூலக்கூறுகளிலும், தண்ணீரின் பண்புகள் இருப்பதில்லை! மாறாக, இவ்விரு வித மூலக்கூறு களும் இணையும்போது தண்ணீர் உருவாகும் என்பதை எந்த விதி தீர்மானிக்கிறது? தண்ணீர் என்பது பௌதீகப்பண்புகளைக்கொண்டது என்றாலும், நிச்சயமாக, பௌதீக விதிகள் அதைத்தீர்மானிப்பதில்லை! தண்ணீர் என்பது ஒரு வெளிப்படு-பண்பு (Emergent Property) ஆகும்.  அதை வேறுவகை விதிகளே தீர்மானிப்பதாகத்தெரிகிறது! இவ்வாறே, வெவ்வேறு மூலக்கூறுகள் சிக்கலான அமைப்பிலும், படிமுறையிலும் இணந்து பாக்டீரியா எனப்படும் உயிர்-ஜீவியும்பல்வேறு பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள் இணைந்து பல-ஸெல் உயிரிகளும், அதாவது தாவர இனங்களும், விலங்கினங்களும், பிறகு மனிதஇனமும் தோன்றியதற்குப் பின்னனியில்புதிதாக அவ்வப்போது தோன்றிச் செயல்பட்ட பரிணாம விதிகளே காரணமாகும். அதாவது "விதிகள்" என்பவையும் புதிதுபுதிதாகத் தோன்றுகின்றன, அல்லது பரிணமிக்கின்றன!

அடுத்து,  'இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பர சம்பந்தம் கொண்டதல்ல' எனும் கூற்றைப்பார்ப்போம். அதாவது, இயற்கை வேறு அதிலிருந்து முளைத்தெழுகின்றவை வேறு எனும் தவறான புரிதலிலிருந்து வெளிப்படும் கூற்றுக்களே இவை! உண்மையில், இயற்கை தான் (அதன் ஒரு சிறு பகுதி தான்) பரிணமித்து உயிர்-ஜீவியாகியுள்ளது! அதாவது, "உள்", "வெளி"; "அகம்" "புறம்" எனும்பிரிவினையைத் தோற்றுவித்தது இயற்கையே, தனது தொடக்கநிலை இயற்கையான,
சடப்பண்பைக்கடந்து செல்லும் பரிணாம-மாற்றத்தின் விளைவே! அதாவது, இயற்கைதான் உயிர்-ஜீவியாக எழுந்தது என்றாலும் இரண்டும் வெவ்வேறு இயற்கையாகும்! ஏற்கனவே குறிப்பிட்டபடி, பருப்பொருளின் பிரபஞ்சம் தனது சடப்பண்பைக் கடந்து செல்லும்பரிணாம வழிமுறையில்,
தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொண்டு எடுத்த புதியதொரு அவதாரம் தான் "உயிர்-ஜீவி" என்பதாகும்! ஆனால், இதன் அர்த்தம், 'இயற்கைக்கும், உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பரசம்பந்தம் கொண்டதல்ல' என்பதாக ஆகிவிடாது.

ஒருவகையில், இயற்கையானது உயிர்ஜீவியாக அவதாரம் எடுத்தபிறகு, உயிர்ஜீவிதான் தற்போதைய இயற்கை, உலகம், பிரபஞ்சம் யாவும் ஆகும்! இது முற்றிலும் வழக்கத்திற்கு மாறான பார்வை எனத்தெரிந்தாலும், இதுதான் உண்மையாகும். அதே நேரத்தில், உயிர்-ஜீவிகளும், உயிர் எனும்
இருப்பு நிலையும் இறுதியானவையல்ல! ஆகையால்தான், உயிர்ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து  உணர்வுள்ள மனிதஜீவி எனும் இனம் உதித்தது! மனிதஜீவியின் கட்டத்தை, அதாவது மனிதனுள் சுய-உணர்வு எனும் நிலையை அடைந்த பிறகு, மனித-உணர்வுதான் புதிய இயற்கையாகும்! அதாவது நம் பிரபஞ்சத்தை ஒரு பெரிய விருட்சமாகக்கொண்டால், அந்த விருட்சத்தின்பிஞ்சுகள், அல்லது காய்கள் தான் மனிதஜீவிகள்! ஆக, ஒரு மரத்திற்கும் அதன் காய்களுக்குமான தொடர்பும், உறவும் எத்தகையதோ அத்தகையதே இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான உறவும்தொடர்பும் ஆகும். அது  பரஸ்பர சம்பந்தம் கொண்டதும், அதே நேரத்தில், அனைத்துவித சம்பந்தங்களையும் கடந்துசெல்வதுமானதாகும்! அதாவது, காய்கள் கனியாகும் வரை மட்டுமே அவை மரத்தின் பகுதியாகும்; ஒரு காய் நன்கு முற்றிக்கனியானதும் அது மரத்தைவிட்டு அகன்றுவிடுகின்றது! குறிப்பாக மனித ஜீவிகளுக்கும், இயற்கைக்கும் உள்ள தொடர்பு இத்தகையதே. ஏனெனில், மற்ற உயிரினங்களைவிட மனிதஇனம் மட்டுமே நன்கு முற்றிய பக்குவத்தில் உள்ள இனமாகும்! உண்மையில், மரம்தான் ஒரு கட்டத்தில் பூக்களாக மாறுகிறது, பிறகு, பிஞ்சுகளாகவும், காய்களாகவும் மாறுகின்றது. பிறகு, ஒவ்வொரு காயும் கனிந்ததும் மரத்தைவிட்டு வெளியேறுவதும் மரமேயாகும்! மரமானது, (தனது) ஒவ்வொரு கனியின் வழியாக தன்னைக்கடந்து செல்கிறது; அதாவது தனது முழுமையை  அடைகிறது! இன்னும் துல்லியமாகச் சொன்னால், அதாவது, மரத்திற்குக்காரணமான
வித்தின் கோணத்திலிருந்து காணும்போது, வித்துதான, மரமாக மாறுகிறது; பூக்களாக மாறுவதும், பிறகு பிஞ்சுகளாகாவும், காய்களாகவும்மாறுவதும்; பிறகு ஒவ்வொரு காயும்கனிந்து கனியானதும்ஒவ்வொரு கனியின் வழியாகவும் மரத்தைவிட்டு வெளியேறுவதும் அதே வித்துதான்!

ஒரு மேற்புறப்பார்வையில், உயிர்ஜீவிகள் தமக்குரிய (எரி)சக்தியை (உணவைப்) பெறுவதற்காக இயற்கையை, சுற்றுப்புறத்தைச் சார்ந்திருப்பது வெளிப்படையாகும். ஆனால், பெரிதும்,மறைமுகமாக, இயற்கையும், பிரபஞ்சமும் தான் உயிர்ஜீவி களைச்சார்ந்துள்ளன என்பதுதான் உண்மை!
இவ்விடத்தில், உயிர்ஜீவிகள் என்றுகுறிப்பிடப்படுவதுமனிதஜீவிகளைத்தான். உண்மையில், ஒரு உயிர்ஜீவி என்ற வகையில், புழு, பூச்சி, ஈ, எறும்பு, எலி, மனிதன் எல்லாம் ஒன்றுதான். அதாவது மனிதன் விசேடமானவனாக, தனிச்சிறப்புபெற்றவனாக விளங்குகிறான் என்பது முற்றிலும்
எதேச்சை யானதாகும். அதற்குக்காரணம் அவனல்ல, அவனிடம் உதயமாகியுள்ள "சுய-உணர்வு" என்கிற அம்சமே ஆகும்! ஒரு கரப்பான்பூச்சியிடம் "சுய-உணர்வு" தோன்றியிருக்குமானால்,
"தனிச்சிறப்பானது" என்கிற பட்டத்தை அது பெற்றுவிட்டிருக்கும், மேலும், கரப்பான்பூச்சியுடன்உயிரியல் பரிணாமமும் நிறைவு பெற்றிருக்கும்!

மனிதன் விசேடமானவன், தனிச்சிறப்பானவன் என்பது பொதுப்படை யாகவும், சகட்டுமேனிக்கு எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும் விஷயம் அல்ல! அதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தகுதியுள்ளவனாக, பாத்திரனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் உடல்மைய ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து உணர்வு-மைய ஜீவியாக எழ வேண்டும்! பொதுவாக, மனிதஜீவிகள் தாம் உயிரோடிருக்கிறோம் என்பதை மட்டுமே உணர்கிறார்கள்; தொடர்ந்து உயிரோடிருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை மட்டுமே சிரமேற்கொண்டு செய்
கிறார்கள்! மாறாக, "தாம் உணர்வோடிருக்கிறோம்!" அல்லது "தாம் ஒரு உணர்வுதான்!" என்பதை கோடியில் ஓரிருவர் மட்டுமே உணர்கிறார்கள்!

உண்மையில்,மனிதன் என்பவன் வெறும் ஒரு உயிர்ஜீவி மட்டுமல்ல; அவ்வாறிருப்பின் அவனுக்கும்பி ற விலங்குஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏதுமிராது! மாறாக, மனிதன் என்பவன் பிரதானமாக ஒரு உணர்வுஜீவியே ஆவான்! மனிதன் என்பவன்,உயிர் இருப்பையும்,  அணுத்துகள்களின் ஒன்றிணப்பு மற்றும் தனி-மையப்பட்ட தன்மையையும்  உணர்ந்த உணர்வு ஆவான்! (A human being is a living entity became conscious of matter's unification and individualization in his consciousness).


மா.கணேசன்/4.10.2016
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...