அறம் என்றால் என்னவென்று புரிந்துகொண்டால்,
இல்லறமா? துறவறமா?
எது நல்லறம் என்ற கேள்விக்கே இடமில்லை!
ஏனெனில், அக்கேள்வி அர்த்தமற்றது!
சமுத்திரத்தை அடைவது என்பதைத் தவிர நதிக்கு வேறு சொந்த
இலட்சியங்கள் எதுவும் இல்லை; இருக்கவும் முடியாது!
ஆகவே, நீங்களும் நதியைப்போல் வாழுங்கள்!
அறமெனப்படுவது யாதெனின்
முதலில் அறம் என்றால் என்ன என்று பார்ப்போம். அறம் என்பதும், நெறிமுறைகள் (Ethics) என்பவையும் ஒன்றல்ல!
மனித இனத்தின் முதல் தேவை ஒரு சமூகமாக கூடி வாழ்வதில் பூசல்கள், பிரச்சினைகள், வன்முறைகள் இல்லாமல் சுமுகமாக உயிர்-பிழைத்திருப்பது என்பதுதான்; இத்தேவையை ஒட்டி உருவாகியவைதான் நெறிமுறைகள்! இவை சமூகத்திற்குச் சமூகம், காலத்திற்குக் காலம் மாறுபடுபவை. இந்நெறிமுறைகள் மேலோட்டமானவை; இவை அறம் எனப்படுவதன் கருவையோ, மையத்தையோ நெருங்குவதில்லை, தொடுவதில்லை! நெறிமுறைகள் அறம் சார்ந்தவை எனப்படுகின்றன; ஆனால், அவை கண்ணுக்குத் தெரியாத, தெளிவாக அறியப்படாத ‘அறம்’ என்ற ஒன்றைச் சுட்ட மட்டுமே செய்கின்றன!
ஒரு சமூகமாக, சுமுகமாக, இணக்கத்தோடு, இசைவோடு இயங்குவதன் மூலம் உயிர்-பிழைத்தல் என்பதற்கு மேல், வாழ்வின் அர்த்தமோ, குறிக்கோளோ, இலக்கோ வேறெதுவும் சாதிக்கப்படுவது இல்லை! ஆகவே நெறிமுறைகள், அறநெறிகள், அறவியல் எனப்படுபவை எவ்வகையிலும் இறுதியானவை அல்ல! இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் போரில்லாத மனிதகுலமாக நாம் பக்குவம் பெறவில்லை! நம்முடைய அறநெறிகள் யாவும் நூல்களில் மட்டுமே வாழ்கின்றன.
ஆகவேதான், ‘அறம்’ என்பது வேறு, வெறும் ‘நெறிமுறைகள்’ என்பது வேறு என்று இங்கு குறிப்பிடப்படுகிறது!
அதாவது, அறநெறிகள் என்பவை சமூகக் களத்தில் கூடி வாழும்போது தனிமனிதர்களுக்கிடையே தேவைப்படும் பண்புகளாகத் திகழ்கின்றன. அப்படியானால், தனிமனிதன் ஒருவன் காட்டில் தனியே வாழ நேர்ந்தால், அவனுக்கு அறநெறிகள் தேவையற்றவையா? ஆம், பொதுவாக ‘அறம்’ என்று பரவலாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதன்படிப் பார்த்தால், தனியே வாழும் ஒரு தனிமனிதனுக்குத் தேவையில்லை என்பதாகத் தான் கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மை(யில்) அறம் என்பது பிராணவாயு போல, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமானதாகும்; அவன் தனியே காட்டில் வசித்தாலும், அல்லது சமூகத்தில் வசித்தாலும்!
அப்படியானால், ‘அறம்’ என்றால் என்ன? ‘அறம்’ என்பது விழிப்பைக் குறிக்கிறது. ஆம், “விழிப்பு” (Awakening) என்பதுதான் அறத்தின் சாரம்! விழிப்பின் வழியாகத் தோன்றும் உணர்வு, அதாவது “விழிப்புணர்வு” என்பதில்லாமல் மனிதன் மனிதனாக ஆகவோ, வாழவோ இயலாது!
பொதுவாகக் கருதப்படுவதுபோல விழிப்புணர்வு என்பது ஜாக்கிரதையுணர்வு அல்ல! இந்த இரண்டும் ஒன்றல்ல! மனிதன் நாட்டில் வாழ்ந்தாலும், காட்டில் வாழ்ந்தாலும் ஜாக்கிரதை - உணர்வுடன் இருப்பது அவசியம்! ஜாக்கிரதையுணர்வு என்பது குறுகிய, உடனடித் தேவையை குறிக்கோளாகக் கொண்டது; ஆகவே மிகவும் மேலோட்டமானது, மட்டுப்பாடானது! ஆனால், விழிப்புணர்வு என்பது விசேட விழிப்பின் விளைவாக அமைவதாகும். விழிப்பு என்பது, இரவில் தூங்கி காலையில் விழித்தெழுவது அல்ல; மாறாக, ஒருவன் தன்னை நோக்கியும்; தனது உணர்வுக்கும், ஒட்டுமொத்த இருப்பு, மற்றும் வாழ்க்கைக்கும் விழிப்பதாகும்! இத்தகைய விழிப்பு, “ஞான விழிப்பு”, “ஆன்மீக விழிப்பு” என அலங்காரமாக அழைக்கப்படுகிறது! ஆனால், இவ்விழிப்பு மிகவும் அடிப்படையானது; அதே நேரத்தில், இறுதியானதும் ஆகும்!
ஆம், விழிப்புதான் அறத்தின் சாரம் ஆகும். தனிமனிதனின் விழிப்பின் வழியாகத்தான் அறம் என்பது சமூகத்தில் வெளிப்படவியலும்! விழிப்பு இல்லாமல் அறம் இல்லை! வெறும் நெறிமுறைகளோ, அவற்றைப் பின்பற்றுவதோ அறமாகாது!
எது நல்லறம்?
இல்லறம், துறவறம், எது நல்லறம் என்று கேட்டால், எதுவுமல்ல என்பதுதான் சரியான பதிலாகும். முதலில், அடிப்படையில் அறம் வேண்டும், அதாவது விழிப்பு வேண்டும். விழிப்புள்ள மனிதன் இல்லறத்தில் இருந்தாலும், துறவறத்தில் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்! இல்லறமோ, துறவறமோ, அவை எதுவும் அறத்துக்கான அச்சாரம் அல்ல!
இல்லறம் இயற்கையானது; ஆகவே அடிப்படையானது. துறவறம் செயற்கையானது. இல்லறம் இல்லையேல், மனித இனம் இல்லை; எனவே எந்த அறமும் இருக்காது! ஆக, இல்லறம் என்பது தவிர்க்க இயலாத, கொடுக்கப்பட்ட நிலையாகும். ஆனால், துறவறம் என்பது தேர்வுக்குட்பட்ட நிலையாகும். சிலர், இல்லறத்தைவிட துறவறத்தை தேர்வு செய்திடலாம்; ஆனல் அதில் எவ்வித பெரிய ஆன்மீக அனுகூலமோ, தனிச்சிறப்போ கிடையாது! இல்லறமும் அத்தகையதே, அது கொடுக்கப்பட்ட நிலை என்பதைத் தவிர அதில் தனிச்சிறப்பு ஏதும் இல்லை! விழிப்பை அடிப்படையாகக்கொண்ட அறம், “இல்லறமா? துறவறமா? எது நல்லறம்?” என்ற பிரச்சினையை அடியோடு மாற்றியமைத்துவிடுவதோடு, அதை முடித்தும் வைத்துவிடுகிறது!
''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும்!” என்று சொல்வது மடமையாகும். எல்லாவற்றையும் துறந்தால் வறுமையும் துன்பமும் தான் வரும். எல்லாவற்றையும் துறந்தாலும், அல்லது எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டாலும் ஞானம் வராது! மாறாக, ஞானத்தின் மீது அலாதியான பற்றுகொள்வதன் வழியே மட்டுமே ஞானம் வரும்! அத்தகைய பற்று பிறவனைத்தின் மீதான பற்றுக்களையும் பின்னே தள்ளிவிடும்! சிலர் சகல சம்பத்துக்களையும், சொத்து சுகங்களையும் அடைந்துள்ள நிலையில் ஒருவகை உடமை மனோபாவத்தினால் அவற்றுடன் ஞானத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என விரும்புவது பேராசை மட்டுமல்ல, அது ஞானத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்! அத்தனைக்கும் ஆசைப்படும் விபரீதத்தின் வழியே இது!
அறநெறிகள் என்பவை தறிகெட்ட தனி நபர்களை ஒருங்கிணைத்து சமூகமாக ஆக்குவதற்காக உருவானவை. அவை தனி நபர்களை சமூக மனிதர்களாக மாற்றியதே தவிர சுயமாகச் சிந்திக்கும் தனிமனிதர்களை அவை உருவாக்கவில்லை! ஆனால், விழிப்பின் வழி பிறக்கும் உண்மை அறமானது சமூக மனிதர்களை விழிப்புணர்வுகொண்ட தனிமனிதர்களாகவும், இறுதியில் அவர்களை முழு-மனிதர்களாகவும் ஆக்கவல்லதாகும்!
அறநெறிகள் மறைமுகமாக அறத்தைச் சுட்டுவதோடு நின்றுவிடுகின்றன! அவை அறத்தின் தேவையை, முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன; ஆனால், அறம் என்றால் என்ன என்பதை அவை விளக்குவதில்லை! எச்சமூகத்தில் அறநெறி போதனைகள் மேலோங்கி ஒலிக்கின்றனவோ, அச்சமூகம் அறங்கெட்டதாக உள்ளது என்பதையே குறிக்கின்றது! அறநெறிகளுக்கு ஒரு சமூகப் பயன்பாடு இருந்தது, இன்றும் இருக்கிறது, கணிசமான மனிதர்கள் விழிப்படையும் காலம்வரை அறநெறிகளுக்கான தேவை எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்! நெறிமுறைகள் போதிக்கக் கூடியவை; ஆனால், அறத்தை போதிக்கமுடியாது! ஏனெனில், விழிப்பை போதிக்க முடியாது! அதே நேரத்தில், விழிப்பில்லாமல் அறம் இல்லை; அறம் இல்லாமல் நெறிமுறைகள் யாவும் வெற்றுச் சடங்குகளே!
பற்றை விடமுடியுமா?
பற்றுகளை விட முடியுமா? "பற்றுகளை விடுவது கடினம். ஒரு பற்றை விட்டால், இன்னொரு பற்று வந்து சேர்வது இயல்பு." என்று சொல்லப்படுகிறது. ஆனால், பற்றின் தன்மை பற்றுபவனின் தன்மையைச் சார்ந்தது. ஒருவன் ஏன் சிலவற்றைப் பற்றிக்கொள்கிறான்? பொதுவாக எல்லோரும் அறிந்தவற்றை, தெரிந்தவற்றை, அனுபவித்தவற்றை மட்டுமே பற்றுகிறார்கள். காரணம் அவை அவர்களுக்கு பயனளிப்பதாயும், மகிழ்ச்சியளிப்பதாயும் அமைகின்றன. எவையெல்லாம் துய்ப்பதற்குரியவையாயும், நுகர்வதற்குரியதாயும் உள்ளனவோ அவற்றையே மக்கள் பற்றுகிறார்கள். அவை யாவும் வாழ்வின் மேற்புறத்தேவைகளுக்குரிய பொருட்களாகவே உள்ளன. தேவைகளை நாம் அடிப்படைத்தேவைகள், அத்தியாவசியத் தேவைகள், அத்தியாவசியமற்ற அலங்காரத் தேவைகள், ஆடம்பரத் தேவைகள்... என்று வகைப்படுத்திக் காணலாம். எல்லாத் தேவைகளும், பொருட்களும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைச் சேர்ந்தவையே.
மனிதர்கள் பொதுவாக, தேவைகள், தேவைகளின் நிறைவேற்றம் என்பதன் வழியாகத்தான் வாழ்க்கையை அறிகிறார்கள், வாழ்கிறார்கள். ஆண்டி முதல் அரசன் வரை அடிப்படைத் தேவைகள் என்பவை பொதுவானவை; இன்னும் முனிவனுக்கும் சில அடிப்படைத் தேவைகள் உண்டு! எவரும் தம் உடலையோ, உயிரையோ துறக்க முனைவதில்லை! ஆனால், அடிப்படைத் தேவைகள் என்பவை, அடிப்படைத் தேவைகள் மட்டுமே, அவையே மனிதவாழ்வின் ஒட்டுமொத்தத் தேவைகளையும் உள்ளடக்கியவையல்ல! இவற்றைக் கடந்த உயர்-தேவைகளும் உள்ளன. அர்த்தம், உண்மை, மெய்ம்மை ஆகியவையே அந்த உயர்-தேவைகள்! ஆனால், அரிதிலும் அரிதாக வெகு சிலரே வாழ்வின் உயர்-தேவைகளை உணர்பவர்களாகவும், தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமே உண்மை மனிதர்களாக, மனிதத் தரத்திற்குரிய வாழ்க்கையை வாழ்கின்றனர். மற்றவர்களெல்லோரும் அடிப்படைத் தேவைகளால் முற்றுகையிடப்பட்டு விலங்கையொத்த வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களை நோக்கி, "பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு." என திருவள்ளுவர் கோருகிறார்! இது எவ்வளவு கடினத்திலும் கடினமானது என்பதையும் வெகு சிலரே அறிவர்!
ஏனெனில், எல்லோரும் அந்த பற்றற்றானைப் பற்றவே செய்கிறார்கள்; ஆனால், தங்களுடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக! அதாவது, எல்லாவற்றையும் இறுகப் பற்றிக் கொண்டு, பற்றற்றானையும் சேர்த்துப் பற்றுகின்றனர்! மேலும், அவர்கள் அப்பற்றற்றானை வேறு பெயர் கொண்டு, வேறு பண்புகளை ஏற்றி, அதாவது, “கடவுள்” என்று அழைக்கின்றனர்!
பற்றுக, பற்றுக, இறுதியானதைப் பற்றுக!
பற்று என்பதே மோசமானதோ, தீமையானதோ இல்லை! மாறாக, நாம் எவற்றையெல்லாம் பற்றுகிறோம், எவற்றையெல்லாம் பற்றத் தவறுகிறோம் என்பதையும்; நமது பற்றுதலின் நோக்கங்களும், பற்றப்படும் பொருட்களின் தன்மைகளையும் பொறுத்தே நன்மை, தீமைகள் உண்டாகின்றன! பொருட்களின் பயன்பாடுகளை அறிந்து அவற்றை முறையாகப் பயன் கொள்வது என்பதில் குற்றமில்லை! ஆனால், பொருட்களின் பயன்பாட்டு எல்லையைக் கடந்து அவற்றிற்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதும், அவற்றின் மீது உடமை மனோபாவம் கொள்ளும் மூடத்தனமே பற்று என்பதாகும்!
பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே உதவக்கூடியவை. எவ்வொரு பொருளும் மனிதனை நிரந்தரமாக நிறைவு செய்வதுமில்லை, முழுமைப்படுத்துவதும் இல்லை என்பதை அறியாதவன் முழு மூடன்! ஆசை ஆசையாக பணத்தைக்கொட்டி ஒருவன் கட்டிய வீடு, அல்லது மாளிகையானது அவன் இறந்தவுடன் அவனை ஏற்காது; அவனை தாழ்வாரத்திற்கு வெளியே கிடத்திவிடும்! அவனை வெளியே கொண்டுபோய் கிடத்துபவர்கள் உயிருக்குயிரான அவனுடைய உறவுகள்தான்! ஆனால், இறப்பிற்குப் பிறகும் உங்களை ஏற்கும், வாழவைக்கும் ஒரு வீடு உள்ளது; அதுதான், அறம், பொருள், இன்பம் என்பதையடுத்து வரும் வீடு! அவ்வீட்டை அடையும் பேற்றைப் பெறும்வகையில் ஒவ்வொருவரும் மெய்ப்பொருள் அறிந்து வாழவேண்டும்!
ஆகவே, எது நம்மைக் கரை சேர்க்குமோ, நிறைவு செய்யுமோ, முழுமைப்படுத்துமோ; எது இறுதியானதோ அப்பொருளை, அம்சத்தைப் பற்றுவதுதான் அறிவார்ந்த செயலாகும்! அப்படிப்பட்ட எப்பொருளும் இவ்வுலகில் இல்லை! ஆனால், மெய்ப்பொருள் என்ற ஒன்று உள்ளது; அதுவே வாழ்வின் உட்பொருள்; ஒட்டு மொத்தத்தின் சாரம் அதுவே! உலகிலுள்ள அனைத்துப்பொருட்களும் உடனடித் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும், அல்லது, மரணிக்கும்வரை மட்டுமே நமக்குச் சேவைபுரியக்கூடியவையாகவும் அமைந்தனவாகும்! மரணத்திற்கு அப்பாலும் உதவக்கூடிய ஒரே பொருள் வாழ்வின் உட்பொருளான மெய்ப்பொருள் மட்டுமே! பெயரற்ற அப்பொருளுக்கு பல பெயர்களைச் சூட்டி அழைப்பதால், அதை நாம் அறிந்ததாகவோ, உணர்ந்ததாகவோ ஆகிவிடாது! மாறாக, அது வெறும் சொல்லடக்கமான ஒரு குறியீடாகச் சுருக்கப்பட்டுவிடும், அவ்வளவுதான்! அல்லது அதை வாழ்த்தி வணங்குவதால், வழிபடுவதால், கும்பிட்டுக் கூத்தாடுவதால், அழுது தொழுது ஆரவாரம் செய்வதால், ஒருபோதும் அதை நாம் நம் வசப்படுத்திட முடியாது!
பிறவியும் பிறவிப்பயனும்
நீங்கள் மனிதனாய்ப் பிறந்துவிட்டீர்கள் என்றால், மனிதப் பிறவிக்குரிய வகையில், சிந்திக்கவும், செயல்படவும், வாழவும் வேண்டியது தவிர்க்க இயலாததாகும். அதிலிருந்து நீங்கள் வழுவிச் செல்லலாகாது! மனிதப்பிறவி என்பது வரமும் அல்ல, சாபமும் அல்ல; அது ஒரு சவால், அதை நீங்கள் எவ்வாறு சந்திக்கிறீர்கள் என்பதைப்பொறுத்தே அது வரமாகவோ, அல்லது சாபமாகவோ வடிவம் கொள்கிறது!
ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு விளைவு உண்டு. அவ்வாறே மனிதப் பிறவியெடுத்ததற்கு பிரத்தியேகமானதொரு பயன் உண்டு. அப்பயனை அடையும்வகையில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும். அப்பயன் தானே விளையாது! பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றாக ஆகவேண்டும்; பொறியாளராக, மருத்துவராக, பணக்காரராக, புகழ் பெற்றவராக, அல்லது ஏதோ துறையில் வல்லுனராக, ஏதோ வழியில் பிரபலஸ்தராக ஆக வேண்டும் என்று முயன்று; அவர்களுடைய துரதிருஷ்டம், அவ்வாறாக ஆகவும் செய்கிறார்கள்; அவ்வாறு ஆனதற்கான பயனையும் அறுவடை செய்கிறார்கள்! ஆனால், இதுவல்ல பிறவிப்பயன் என்பது! அவரவரது சொந்த இலட்சியங்களை அடைவதல்ல பிறவிப் பயன்! மாறாக, நம்மை பூமியின் மீது தோற்றுவித்த நிகழ்வுமுறையானது நமக்கொரு இலட்சியத்தை, இலக்கை முன்-குறித்துள்ளது! நதியின் பிறவிப் பயன் சமுத்திரத்தைச் சென்றடைவதே என்று குறிக்கப்பட்டிருப்பதைப் போல, மனிதப் பிறவிக்கான பிறவிப்பயனும் ஏற்கனவே குறிக்கப்பட்ட ஒன்றே ஆகும். அப்பயன் எல்லோருக்கும் ஒன்றே! அப்பயன் என்னவென்று கண்டுபிடிப்பதுதான் வாழ்க்கை விடுத்துள்ள சவால் ஆகும்!
வேறு சொற்களில் சொன்னால், மனிதவாழ்வின் உண்மை, அர்த்தம், குறிக்கோள், இலக்கு யாது என்று கண்டுபிடிப்பதே அந்த சவால் ஆகும். வாழ்க்கை விடுக்கும் சவாலை ஏற்று அதற்கான பதிலைக் கண்டுபிடிப்பதே உண்மையான வாழ்தலும், அதன் இலக்கும் ஆகும்! உலகிலுள்ள வெவ்வேறு தத்துவ ஆன்மீகப் பள்ளிகள் வாழ்வின் இலக்கை அறியும் செயல்பாட்டிற்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டியுள்ளனர். ஞானமடைதல், மெய்ப்பொருள் அறிதல், தன்னையறிதல், அ(க)ண்ட - உணர்வடைதல், முக்தி, மோட்சம், இரட்சிப்பு, நிர்வாணம், வீடுபேறு,.... ஆகியவையே அவை.
மேலே குறிப்பிட்டதுபோல, மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும், மனிதப் பிறவிக்குரிய வகையில், சிந்திக்கவும், செயல்படவும், வாழவும் வேண்டும்; அதிலிருந்து வழுவிச் செல்வது இழுக்கு! அனைத்து இடர்களையும், நிலைமைகளையும், எதிர்த்து நின்று சமாளித்து முன்னேறிச் சென்று பிறவிப்பயனை, அந்த ஒப்பற்ற இலக்கை ஒவ்வொருவரும் அடைந்தாகவேண்டும். அவ்வாறு அடையாமல் போவதற்கு யாதொரு காரணமோ, தடையோ எதுவும் கிடையாது! ஏனென்றால், நீங்கள் மனித ஜீவியாகப் பிறந்திருப்பதே அந்த இலக்கை அடைவதற்காகத்தான்!
நீங்கள் கருப்போ, சிகப்போ; உயரமோ, குட்டையோ, திருமணம் ஆனவரோ, ஆகாதவரோ; குழந்தைகுட்டிகள் இருக்கின்றனவோ, இல்லையோ; ஏழையோ, பணக்காரரோ; இல்லறத்தாரோ, இல்லறம் வெறுத்து துறவறம் மேற்கொண்டவரோ; வியாதியஸ்தரோ, ஆரோக்கியவானோ; ஆனோ, பெண்ணோ, வேறு எதுவோ; இன்னும் நீங்கள் மனிதஜீவியாகவே இருக்கிறீர், தொடர்கிறீர் என்றால், எந்த சாக்குப்போக்கும் நீங்கள் சொல்ல முடியாது! உங்களுடைய ஒரே தலையாய கடமை, பொறுப்பு, பணி, ஈடுபாடு, தொழில், இலட்சியம், ….. என்பது எப்பாடுபட்டேனும் பிறவிப்பயனை அடைவது மட்டுமே!
நீங்கள் துன்பத்தில் உழலுகிறீர்! இன்பமும் துன்பமும் மாறிமாறி அமைந்து வாட்டுகின்றன! என்றால் அதற்கு ஒரேயொரு காரணம் தான் உள்ளது! வாழ்வின் அசலான குறிக்கோளை நீங்கள் அறியவில்லை; அறிந்து அதற்கேற்ப வாழவில்லை என்பதுதான் அக்காரணம்! உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தெரிகிறது! சகல சம்பத்துக்களும் இருந்தும் நிறைவில்லை; ஏதோவொன்று குறைவதைப்போல உணர்கிறீர் என்றால், அதற்குக்காரணம், வாழ்வின் அசலான இலக்கு வேறாகவும், உங்களுடைய இலட்சியங்கள் வேறாகவும் இருப்பதுதான்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 11.05.2019 - 15.05.2019
********************************************************************************************************