Thursday, 2 May 2019

உண்மையிலேயே நீங்கள் யார்?





மனிதன்  இப்பிரபஞ்சம் முழுவதையும், அதிலுள்ள அனைத்தையும் அறியலாம்! ஆனால், அனைத்தையும் அறியும் மனிதன் தன்னை அறியவில்லையெனில், அதாவது அறிபவனாகிய “தான் யார்?” என்பதை அறியவில்லையெனில், அவனுடைய அறிதல் யாதொரு அடிப்படையும் அற்ற மேம்போக்கான ஒன்றே ஆகும்!
                                                           ✦ ✦ ✦

“நான் யார்?” எனும் விசாரத்தைத் தொடங்கும் உணர்வு இறுதியான உணர்வு அல்ல!
அவ்விசாரத்தின் முழுமையில் வெளிப்படும் உணர்வு ஒருவன் தொடங்கும்போதிருந்த அதே அகந்தை-உணர்வு அல்ல!
                                                           ✦ ✦ ✦


வழிதவறி ஆன்மீகத்தை வந்தடைந்த எண்ணற்ற பலரிடம், “உண்மையில் நீங்கள் யார்?” என்று கேட்டால், உடனே பளிச்சென்று, “நான் ஆன்மா!” என்றும், “நான் பிரம்மம்!” என்றும், அல்லது,
“நான் கடவுள்!” என்றும் சொல்லிடுவர்! இவர்கள் ஏட்டுச்சுரைக்காயை கறி சமைத்து உண்ணும் பிரமையில் ஆழ்ந்தவர்கள்! இவர்கள் கரை சேர்வது கடினம்!

பரிணாம வழிமுறையில் வெளிப்படும் ஒவ்வொரு அம்சமும் தம்மைத்தாமே இறுதியானது
என்பதுபோல நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றது! இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல. ஆகவேதான் ஒரு புழு கடைசிவரை ஒரு புழுவாகவும், ஒரு தவளை கடைசிவரை ஒரு தவளையாகவும் நீடிக்கிறது. இவ்வாறே, ஒவ்வொரு மனிதனும் தன்னை இறுதி நிஜம் என எண்ணிக் கொள்கிறான், அகங்காரத்தில் மூழ்கி தம் அகந்தையிலேயே சுருக்கிட்டுச் சாகிறான்!

ஒருவர் சதா "நான்", "நான்", "நான்" என்று தன்னை முன்னிறுத்துவது, சுயமுக்கியத்துவம் பாராட்டுவது, தன்னைக் கொண்டாடுவது,.... ஆகியவற்றின் வழியாக எதை, அல்லது யாரை
நிறுவுகிறார்? உண்மையிலேயே, அவரது "நான்" என்பது எதைக்குறிக்கிறது? அது எத்தகைய
மெய்ம்மை?

உங்களுடைய "நான்" என்பது என்ன சுயம்புவாக தன்னில் தானே தோன்றியதா? அல்லது அதுவே
இறுதியான நிஜமா? தனது மூலம் எது முடிவு எது என்பதை ஆராய்ந்தறியாத மனிதன் எதை
அடிப்படையாகக்கொண்டு தன்னைக் கொண்டாடுகிறான்?


"நான் யார்?" எனும் விசாரம் உண்மையிலேயே எதைக் குறிக்கிறது?

உண்மையில், "நான் யார்?" எனும் விசாரம் எவ்வொரு தனி நபரையும் பற்றியதல்ல! ஏனெனில், ஒரு தனி நபர் என்பவர் யார்? அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏதோவொரு ஊரில், நகரில், நாட்டில், ஒரு குறிப்பிட்ட தம்பதியர்க்கு மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம். அவர் ஒரு ஏழ்மையான, அல்லது பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம்; அவருடைய கல்வித்தகுதி எதுவாகவும் இருக்கலாம்; அவருடைய தனித்திறமையும் எதுவாகவும் இருக்கலாம். அவர் இருக்கும் சமூகத்தில் அவர் ஒரு பெரிய மனிதராக மதிக்கப்படலாம், அல்லது சாதாரண ஒருவராகவோ, எவராகவோ,  யாதொரு முக்கியத்துவமும் அற்றவராக இருக்கலாம்! இத்தகைய நபர்களைப் பற்றியதல்ல "நான் யார்?" எனும் விசாரம்!

எவ்வொரு மனிதருக்கும் ஒரு உள்ளூர் அடையாளமும், (Local-Identity) சுய சரிதக் குறிப்புகளும் இருக்கும். அதே போல, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரபஞ்சமளாவிய அடையாளமும் (Universal Identity) இருக்கிறது. இவ்விரண்டில், இரண்டாவது சொல்லப்படும் விஷயம்தான்  அதிமுக்கியத்துவம் கொண்டதாகும்; ஏனெனில், அதில்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டிய பரிணாம முழுமை அடங்கியிருக்கிறது!

ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமலேயே பலர் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஆன்மீகத்தின் வழியாக பணக்காரராக ஆக விழைகின்றனர்! சிலர் ஆன்மீகத்தின் வழியாக பெயர், புகழ், மற்றும் முக்கியத்துவம் அடைய விரும்புகின்றனர்! சிலர் தங்களது உள்ளீடற்ற சுயத்தை மறைக்கும் கவசமாக பயன்படுத்துகின்றனர்! சிலர் 'ஞானி' அல்லது 'மகான்' எனும் பட்டங்களைப் பெற விரும்புகிறார்கள். எண்ணற்ற பலர் தங்களது அர்த்தமற்ற வாழ்க்கையை அலங்கரிக்கும் அணிகலனாக அமையும் என எண்ணி ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றனர்!

உண்மையில், “நான் யார்?” என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனை, அதாவது ஒரு நபரை, அதாவது
உங்களைப் பற்றிய விசாரம் அல்ல! மாறாக, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சத்துடனான
தொடர்பில், அதாவது, பிரபஞ்சம் அளாவிய தன்மையில் மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதைப் பற்றியதாகும். அதாவது, முழுமை அல்லது இறுதி மெய்ம்மையுடன் தொடர்புபடுத்தாமல் (தொடர்பு கொள்ளாமல்), “நான்” என்பதைப்பற்றி திரட்டப்பட்ட அனைத்து அறிவும் பயனற்ற வீண் சுமையே தவிர வேறல்ல! “நான் யார்?” என்ற கேள்வி எவ்வொரு மனிதனின் சொந்த விவகாரத்தைச் ( Personal) சுட்டுவதில்லை! மாறாக, சொந்த விவகாரம் கடந்த (Trans-Personal) தன்மையை, மெய்ம்மையைச் சுட்டுகிறது

உண்மையில், உங்களுடைய “நான்” என்பதற்கு அதீதமான மதிப்பும், முக்கியத்துவமும் உள்ளது; அதை நனவிலி ரீதியாக நீங்கள் உணர்வதாலேயே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராகவும்,  நீங்களே இப்பிரபஞ்சத்தின் மையம் என்பது போலும் கருதிக்கொள்கின்றீர்; அதன் தொடர்ச்சியாக ஆணவம், செருக்கு, இறுமாப்பு யாவும் கொள்கிறீர்!
ஆனால், தன்னை உண்மையிலேயே அறிந்த ஒருவர் ஆரவாரமின்றி அமைதியாக இருக்கிறார்! ஒருவர் தனது அசலான மதிப்பையும், முக்கியத்துவத்தையும் அறிய, அவர் தனது “நான்” உணர்வை ஊடுருவி அதன் இறுதி ஆழம்வரை சென்று அறிந்தாக வேண்டும்!

தனது மூலத்தையும் அறியாத, தனது முடிவிடத்தையும் அறியாத மனிதனின் “நான்” என்பது   அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேரற்ற மரம் போன்றதாகும்! அவனது உடல் மரிக்கும்வரை அவனது “நான்” என்பதும் பிழைத்திருக்கும்! ஆனால், தன்னை அறிந்த மனிதன் மரணத்துடன் முடிந்து போவதில்லை!

அகந்தையின் முதல் சொல் “நான்” என்பதே; அதுவே அதன் முதல் பெயரும் ஆகும்! ஆனால் அதுவே அதன் இறுதிச் சொல்லாகவும், பெயராகவும் அமைந்திடின் அது பெரிதும் துரதிருஷ்டவச மானதாகும்! ஏனெனில், தன்னையறியாத “நான்” உள்ளீடற்றதாகும்!

எவ்வொரு மனிதனும் பிறக்கும்போது முதலில் வெறும் உடல்-ஜீவியாகத்தான் பிறக்கிறான்! பிறகு அவனுள் அகந்தை உணர்வு  தோன்றி “நான்” என்று சொல்லும் போதுதான் அவன் ஒரு மனிதனாக எழத் தொடங்குகிறான்! அகந்தை என்பது உணர்வின் உதயத்தைக் குறிக்கிறது; அதாவது சூழ்ந்துள்ள இருளில்  ஒரு ஒளிப்புள்ளியாக அகந்தை உதிக்கின்றது! ஒட்டுமொத்தப் பிரபஞ்சப் பரிணாம வரலாற்றில் அகந்தையின் உதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தனிச்சிறப்பான நிகழ்வாகும்! ஏனெனில், அகந்தை- உணர்வுக்கு நிகராக இப்பிரபஞ்சத்தில் அதற்குமுன்னர்வரை வேறெதுவும் இல்லை! ஆனால், அகந்தை தோன்றிய பின்னர் தொடர்ந்து வளராமல், தனது மிகவும் அசலான தன்மைக்கு விழிக்காமல், அகந்தையாகவே நீடிக்குமானால், அது போன்ற ஒரு துரதிருஷ்டமும் வேறில்லை! ஏனெனில், அகந்தையின் தேக்கம் வீழ்ச்சியும் மரணமும் ஆகும்!

உணர்வு என்பது ஒரு நதியைப் போல பெருக்கெடுத்து பாய்ந்தோடிச் சென்று அதன் முடிவிடமான  என்றும் வற்றாத சமுத்திரத்தில் கலந்திடவேண்டும்! ஆம், அகந்தை உணர்வானது பெருக்கெடுத்துப் பாய்ந்தோடி அகண்ட உணர்வாகிய பேருணர்வுச் சமுத்திரத்துடன் சங்கமித்திட வேண்டும்!

அகந்தை-உணர்வு என்பது மனிதனின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அகந்தையுள்ள ஒரு மனிதன் அரைமனிதன் மட்டுமே ஆவான். அவன் ஒரு தவளை அல்லது எவ்வொரு விலங்கைவிடவும் மேலாவனாவான்!  ஆனால், அவனது அகந்தை மலர்ந்து அகண்ட உணர்வாக, முழு உணர்வாகப் பரிமளிக்கும் போது தான் அவன் முழு-மனிதனாகிறான்; அவனது அசலான வீட்டை அடையும் பேறு பெறுகிறான்! உடல் என்பது உணர்வு தோன்றுவதற்கான ஒரு கூடு மாத்திரமே தவிர அதில் அவன் நிரந்தரமாகத் தங்கி வசிக்கமுடியாது! முழு-உணர்வு, அல்லது பேருணர்வுதான் ஒரே சாசுவதமான, பாதுகாப்பான வசிப்பிடம் ஆகும்!

ஆன்மீகம் என்பது இவ்வுலக வாழ்வில் (இம்மையில்) இலாபம் அடைவதற்கான முதலீடு அல்ல! மாறாக, இவ்வுலகம் கடந்த, காலம் நீங்கிய (மறுமை) தனது அசலான மெய்ம்மையைச் சென்று சேர்வதற்கான ஒரு கால எந்திரம் போன்றதாகும்! ஏன் ஆன்மீகத்தில் ஈடுபடும் எல்லோராலும் அதன் இலக்கை அடையமுடிவதில்லை என்பதற்கான காரணம், அவர்கள் எல்லோரும் லௌகீகம் அல்லது உலகியலுக்காக ஆன்மீகத்தை ஏய்த்துச் சூறையாடிட முயற்சிப்பது தானாகும்! பலர் தங்களது அக-வறுமையைப் போக்கவே ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றனர்! ஏழையோ அகத்திலும், புறத்திலும் வறுமையில் உழல்கிறான்; பணக்காரனோ புறத்தில் செல்வந்தனாயிருப்பினும் தன் அகத்தில் படு வறுமையில் உள்ளான்! ஏழையோ, பனக்காரனோ, உலகியல் மதிப்புக்களைச் சுமப்பவனால் ஆன்மீக மதிப்பை ஒருபோதும் அறியவோ, அடையவோ இயலாது!

தன்னை-அறிதல் (Self-Realization) என்பது தனது அசலான தன்மையை அறிய தன்னைக் கடந்து செல்லுதல் (Self-Transcending) , தன்னைத் தியாகம் செய்தல் என்பதேயாகும்! ஒரு மொட்டு தன்னை இழக்காமல், தனது மொட்டு  நிலையைக் கடக்காமல் மலராக எவ்வாறு ஆக முடியும்? எண்ணற்ற அகந்தை மனிதர்கள் ஆசைப்பட்டாலும் மலரத் துணியாத மொட்டுக்களே ஆவர்! மொட்டு மலராமல் தனது பரிமளத்தை, வசீகரத்தை எவ்வாறு பெற இயலும்?


உணர்வு தோன்றும்போது அடையாளமற்றதாக, பெயரற்றதாக, அநாமதேயமாகத்தான் தோன்றுகிறது! உணர்வு முதலில் புறம் நோக்கியே பாய்கிறது! அப்படிப்பாயும்போது அது தன்னை முதன்முதலாக அடையாளப்படுத்திக்கொள்வது, தான் தோன்றிய கூடான உடலுடன் தான்! உணர்வானது தனது உள்ளார்ந்த அடையாளத்தை உணர்வதற்குரிய முதிர்ச்சியில்லாத அந்த தொடக்க நிலையில், தனது உடலையும், அதன் மிக நச்சரிப்பான பசிகளையும், தேவைகளையும் தமதெனக் கொண்டு முழுமையாக தன் உடலைப் பிரதிநிதித்துவம் செய்யத் தொடங்கிவிடுகிறது. அதன்பிறகு (எண்ணற்ற மனிதர்களின் விஷயத்தில்) இந்த உடல்-மைய-அடையாளத்திலிருந்து உணர்வானது தன்னை விடுவித்துக்கொள்ளவே முடியாமல் போய்விடுகிறது!  ஒருவர், உணர்வாகிய தான் வேறு, தனது உடல் வேறு, என்பதை உணரத் தொடங்கும்வரை இந்த உடல்-மைய- அடையாள மயக்கம் கடைசிவரை தொடர்கிறது! இவ்வழியே, பலரது வாழ்வில் கடைசிவரை தன்னையறிதல் என்பது தொடங்குவதேயில்லை! தனது நோக்கில், சரியாக 180° பாகை சுழன்று அகம் நோக்கித் திரும்பாமல், “நான் யார்?” என்ற கேள்வியை ஒருவர் தன்னை நோக்கி கேட்க இயலாது; அப்படியே கேட்டாலும், அது ஒப்புக்கு அமைந்த வெற்றுக் கேள்வியாக பலனற்றுப்போகும்!

மேலும், நம்மில் பலரும் நம்மைப்பற்றி அறிவதெல்லாம், நம்மைச்சுற்றியுள்ளவர்கள் -  நம்முடைய பெற்றோர்கள், உறவினர்கள், அண்டைஅயலார், நண்பர்கள், மற்றும் பிறர் நம்மைப்பற்றிச் சொன்னவைகளைக் கொண்டும், மற்றும் நம்மைப்பற்றி நாமே புனைந்து கொண்டவைகளைக் கொண்டும் தான் அறிகிறோம்! நம்மில் வெகு சிலரே நேரடியாக நம்மை உணர்பவர்களாக, அறிகிறவர்களாக இருக்கிறோம்! பிரெஞ்சுத்தத்துவ ஞானி தெக்கார்த்தே, “நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்!” என்றார். நம்மில் பலரோ, “என் அண்டை வீட்டுக்காரன் இருக்கிறான், ஆகவே நான் இருக்கிறேன்!” என்கிறோம்! நம்முடைய எல்லாச் சிந்தனைகளும், பார்வைகளும், கருத்துக்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை, அதாவது, பிறரைச் சார்ந்ததாகவே; பிறரிடமிருந்து கடன் பெற்றவையாகவே உள்ளன! உங்கள் ஒவ்வொருவரிடமும், ஒரே ஒரு அசலான, உங்களுடைய சொந்தக் கருத்து, பார்வை என ஏதேனும் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்!

நாம் ஒவ்வொருவரும் தன்னில் தான் யார்? என்று அறிவதில்லை, சிந்திப்பதில்லை. மாறாக, சமூகத்தில் தான் யார், என்னவாக இருக்கிறோம் என்பதைப்பற்றித்தான் அதிகமாக அறிகிறோம், சிந்திக்கிறோம். இவ்வழியே, நாம் நம்முடைய கருவான மையத்தை, சாரத்தை தொடுவதோ, நெருங்குவதோ இல்லை! நாம் நம்மைப்பற்றி அறிவதில்லை, சிந்திப்பதில்லை. மாறாக, நம்மைப்பற்றி பிறர் சொல்வதைப் பற்றியே பெரிதும் அக்கறை கொள்கிறோம். அவற்றை ஒட்டியும், வெட்டியும் நம்மை இவ்வுலகிற்குக் காட்ட விரும்புகிறோம். நாம் நம்மைப்பற்றி அல்லாமல், பெரிதும் நம்முடையவற்றைப்பற்றியே - ‘என் தோற்றம்’, ‘என் புகழ்’, என் மதிப்பு, எனது மனைவி, மக்கள், குடும்பம், எனது வாழ்க்கை, எனது உத்தியோகம், வருமானம்….என எப்போதும் எண்ணுகிறோம்.

நாம் வாழும் வாழ்க்கையும் நம்மைப்போலவே ஆழமற்றது, சாரமற்றது; பிறரை, அதாவது சமூகத்தைப் பார்த்து நகல் செய்வது என்பதாகவே உள்ளது…...

பொதுவாக, எவ்வொரு மனிதனும் “நான்” எனக்குறிப்பிடும்போது அவர் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறார், எதை “நான்” என கருதுகிறார் என்பதைத் துல்லியமாக அறிவது அவசியமாகும். முதலில், “நான்” எனும் உணர்வு, பிறரால், நம்மைச்சுற்றியுள்ளவர்களால், குறிப்பாக, ஒருவர் குழந்தையாக இருக்கும்போது அவரது பெற்றோரால் அவருக்கு வழங்கப்படும் தனிக்கவனிப்பு, மற்றும் முக்கியத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் ஒன்றாகவே தொடங்குகிறது. மேலும், பெற்றோர் அவரைப்பற்றி சொல்பவைகளைக் கொண்டே அவர் தனது அடையாளத்தை, பிம்பத்தை கட்டியெழுப்பத் தொடங்குகிறார். பிறகு, மற்றவர்கள் சொல்பவைகளைக் கொண்டும்; அதோடு தன்னைப்பற்றி தான் புனைந்து கொள்ளும் விஷயங்களைக் கொண்டும் ஒருவர் தனது அடையாளத்தை, பிம்பத்தை தொடர்ந்து கட்டியெழுப்புகிறார்!

ஆனால், பொதுவாக பிறர் நம்மைக்காண்பது என்பது நம்முடைய புறத்தோற்றத்தையும், மேற்பரப்பிலுள்ள சில அம்சங்களையும் மட்டுமே என்பதால், அவர்கள் நம்மை அடையாளப்படுத்துவதைக் கொண்டு நம்முடைய அடையாளத்தை கட்டமைப்பது என்பது மிகவும் மேம்போக்கான ஒன்றாகத்தான் அமையும். உண்மையில் இவ்வாறு அமைந்த, அல்லது, அமைத்துக்கொண்ட,  நம்மைப் பற்றிய மிகவும் மேலோட்டமான அடையாளத்தையே நாம் எனக் கருதிக்கொண்டு பொதுவாக நாமெல்லோரும் உலவிக்கொண்டுள்ளோம்! உண்மையில், நம்மை நம்முடைய உள்ளாழத்திலிருந்து அறிவதோ, உணர்வதோ இல்லை! ஆகவேதான், நம்மில் அநேகர் தன்னையறிதல் என்பதற்கு மிகவும் அந்நியமாக இருக்கிறோம்.

நம்மைப் பற்றி நாம் அறிவதெல்லாம் நம்முடைய மேற்புறத்தை மட்டுமே! ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் நாமறியாத ஆழமானதொரு உட்புறமும் உள்ளது! இந்த உட்புறத்தை, அகத்தை, நோக்கியதே “நான் யார்?” எனும் கேள்வியும், விசாரமும் ஆகும். மனிதன் தன் மேற்புறத்தை மட்டும் அறிவதனால், அலங்கரித்துக்கொள்வதனால் மனிதனாவதில்லை! மாறாக, தன் உட்புறத்தின் அடியாழத்திலிருந்து தன்னை அறிவதன் மூலமாக மட்டுமே அவன் முழு-மனிதனாக மலர்கிறான்!

நாம் எல்லோரும் “நான்”, “நான்” என்று சதா நம்மைப்பற்றியே எண்ணுகிறோம்! நம்மைப்பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம், செருக்கடைகிறோம், ஆணவம் கொள்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் நம்மைத்தவிர இப்பிரபஞ்சத்தில்முக்கியத்துவம் கொண்ட வேறெதுவும் இல்லை என்பதுபோல நடந்துகொள்கிறோம்! ஆனால், “நான்” என நாம் உணர்வது நம்மில் எதை என்பதை நாம் அவ்வளவு தெளிவாக உணர்கிறோமா என்றால், இல்லை என்பதே நாம் அறியவிரும்பாத உண்மையாகும்!

உண்மையில், “நான்” என நாம் உணர்வது  உணர்வாகிய நம்மை அல்ல! மாறாக, நம்முடைய உடலையும், நம்முடைய ஒரு சில பண்புகள், திறமைகள், நேர்மறையான அம்சங்கள் ஆகியவைகளைக் கொண்டு நாம் உருவாக்கிய ஒரு அடையாளம், அல்லது பிம்பத்தையே “நான்” என நாம் குறிப்பிடுகிறோம்!

உண்மையில் ஒரு மனிதனின் “நான்” என்பது அவனது உணர்வைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும்! ஏனெனில், தனது சாரத்தில் மனிதன் என்பவன் அவனது உடலோ, மனமோ, மனதில் தோன்றும் எண்ணங்களோ அல்ல; மாறாக, உணர்வே ஆவான்! இன்னும் சொல்லப் போனால், உணர்வு இல்லையேல், மனத்தில் நான் என்ற எண்ணம் எழ வாய்ப்பே இருந்திருக்காது! மனிதனை விலங்கிலிருந்து வித்தியாசப்படுத்தும் அம்சம் உணர்வே ஆகும். மனம் என்பது உணர்வு வெளிப்படுவதற்கான ஒரு ஊடகம் ஆகும். ஆம், மனம் என்பது உணர்வின் ஒரு கருவியே. ஆக, இவ்வாறெல்லாம், மனிதன் தன்னைப் பிரித்து அறிவது என்பதும் தன்னையறிதலின் ஒரு பகுதியே ஆகும். மேலும், பகுதி பகுதியாக தன்னைப் பிரித்து அறிவதைப்போலவே, ஒருவன் தன்னைத் தொகுத்தும் அறிவது அவசியமாகும்!

மனிதன் தன்னைத் தொகுத்து அறியும் போதுதான் அவன் தனது பிரபஞ்சமளாவிய தன்மையை, அடையாளத்தை அறிபவனாகிறான். மனிதனுடைய பிரபஞ்சமளாவிய அடையாளம் என்பது என்னவென்றால், அவனே அனைத்தும்!  இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்தும், ‘கடவுள்’, அல்லது ‘பிரம்மம்’ எனப்படும் இறுதி மெய்ம்மை உட்பட, அனைத்துமாக தன்னை உணரும் முழுமையே மனிதன்!

“நான் யார்?” எனும் விசாரம் தனி நபரான உங்களைப்பற்றியதல்ல! உங்களின் வழியாக உங்களைக் கடப்பதன் விளைவாக வெளிப்படும் இறுதி மெய்ம்மை பற்றியது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-04-2019
*****************************************************************************


No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...