என் சக மனிதனே! பரஸ்பரம் ஒட்டுமொத்தமாகக் கூண்டோடு நம்மை நாமே அழித்துக்கொள்வதைத் தடுப்பது எது?
முன்பொரு காலத்தில் நண்பன் என்ற பெயரில் உலா வந்து இன்று பிரிந்து போன ஒருவன், நண்பன் என்ற பெயரில் இன்றும் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொருவன் வழியாக வந்து சேர்ந்த கேள்வி, “அவர் (இக்கட்டுரையாளர்) கடைசியாக பதிவிட்ட, “தலித் பிரச்சினை தலித்துக்களின் தனிப் பிரச்சினையா” எனும் தனது கட்டுரையில், பார்ப்பனியம் பற்றி எதையும் குறிப்பிடாதது ஏன்?” என்பது தான். ஆனால், இது போன்ற எண்ணற்ற கேள்விகள் எல்லோரிடத்திலும் உள்ளன. அடுத்து ஒரு கட்டுரையிலேயே எல்லா விசயங்களையும் குறிப்பிடுவதற்கான பொருந்துமிடங்கள் அமைவதில்லை. மேலும், பார்ப்பனியத்தை ஒரு பொது எதிரியாகச் சித்தரிப்பது பெரிய காரியம் ஒன்றுமில்லை. அதே நேரத்தில், “பார்ப்பனியம் ஒழிக!” “பார்ப்பனியம் ஒழிக!” என்று எழுபது ஆண்டுகளாக முழங்கியதனாலும் ஒன்றும் மாறிவிடவும் இல்லை! மாறாக, பார்ப்பனிய நோய் விதிவிலக்கின்றி எல்லா சமூகங்களையும், எல்லா சாதிகளையும் தொற்றிப் பீடித்ததுதான் மிச்சம்.
முதலில், பார்ப்பனியம் என்பதை பலரும் பலவிதத்தில் புரிந்துகொண்டிருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனியம் என்பது அப்பட்டமான பிழைப்புவாதச் சூழ்ச்சி என்பதே தவிர வேறல்ல. பார்ப்பனர்கள் எனப்படும் ஆரியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவாக்கியதே நால்வர்ண அடுக்குமுறை. முக்கியமாக, பார்ப்பனர்கள் உருவாக்கிய ஒவ்வொன்றும் -- அவர்களது மொழியும், மதமும், சாஸ்திரங்களும், சடங்குகளும், யாவும் அவர்களுடைய மேலாதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்கான கருவிகளே ஆகும். அவர்களுடைய பிழைப்புவாதச் சூழ்ச்சியை செயல்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட உத்தி என்பது, இல்லாத கடவுளுக்கும் அப்பாவி மக்களுக்கும் இடையே தங்களைத் தரகர்களாக (பூசாரிகளாக) வெற்றிகரமாக நிறுவிக்கொண்டது தான்! பூசாரித்துவம் என்பதே பார்ப்பனர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக்கொண்ட வியர்வை சிந்தாமல் பிழைப்பதற்கான தொழிலாகும்.
அவர்களுடைய மொழியான சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு மொழியே அல்ல; அது தங்களுடைய வேத சாஸ்திரங்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பூட்டிவைப்பதற்காக, தங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட சங்கேதக் குறியீடுகளின் தொகுப்பே ஆகும்.
மேலும், ‘உயர்வு மனப்பான்மை’ எனும் மன நோய் பீடித்த அவர்கள் மனிதர்களின் பொதுவான அடிப்படை உளவியலை ஏய்க்கும் வழிகளையும் அறிந்திருந்தனர். தங்களை, நால்வர்ண அடுக்கில், மேலடுக்கிற்கு உரியவர்களாக வரித்துக்கொண்டு, அடுத்த அடுக்கில் வேறு சிலரை அமர்த்தி, “நீங்களும் உயர்ந்தவர்களே!” ஏனெனில், “உங்களுக்குக்கீழே இன்னும் இரண்டு அடுக்குகள் உள்ளன; அவர்களை ஆதிக்கம் செய்வது உங்களுடைய பிறப்புரிமை!” என்றனர். ஆக, தங்களுக்கும் ஒரு உயரிய இடம் ஒதுக்கப்பட்டது குறித்து அகமகிழ்ந்து போன ஷத்திரியர்கள் தங்களுக்குக்கீழே உள்ள அடுக்குகளைச் சேர்ந்தவர்களான, வைசியர்களையும், சூத்திரர்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது தங்களது பிறவிக் கடமையாகக் கொண்டுவிட்டனர். அடுத்து, நான்கு வர்ணம் போதாதென்று, ஐந்தாவதாக வர்ணமில்லாத வர்ணமாக - பஞ்சமர்கள், சண்டாளர்கள், அவர்ணர்கள், என்று பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.
எல்லா விலங்குயிரினங்களையும் போலவே மனித இனமும், ரிச்சர்டு டாக்கின்ஸ் குறிப்பிட்ட சுயநலம் கொண்ட மரபணுக்களைக் கொண்டவனாக அமைந்து விட்ட நிலையில், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்தல், ஏய்த்தல், மேய்த்தல், அடக்குதல், ஒடுக்குதல், சுரண்டுதல் என்பவை எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக ஏற்படும் குணக்கேடுகளாக அமைந்துவிட்டன எனலாம். இக்குணக்கேடுகளுக்கு முதன்முதலில் விழித்தவர்கள் பார்ப்பனர்களே என்ற பெருமையை அவர்களுக்கு வழங்கிவிடுவது தான் நியாயம். பிறகு படிப்படியாக, எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குக் கீழ் உள்ள சாதிகளையும்; கடைசியாக, தலித்துகளும் தமது உட்சாதிகளை, ஆதிக்கம் செய்யும் நோயினால் பீடிக்கப்பட்டுவிடுகின்றனர்.1 இந்நிலையில் பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிய ஒன்று என்று சொல்வது சற்றும் பொருத்தமற்றதாகும்.
உண்மையில், ஆதிக்கம் என்பதுதான் சாதியின் சாரமாகும். சாதி என்பது வெறும் அடையாளம் அல்ல; அது அதிகார- ஆதிக்க அடுக்குகளில் தாம் பெற்ற விட்டுக்கொடுக்க இயலாத ஒரு இடம். ஆக, ஆதிக்கத்தை அழிக்காமல் சாதியை அழிப்பது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை! ஏனெனில், ஒருமுறை ஆதிக்க நிலையை அனுபவித்த பிறகு, எவரும் அதை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை! அவ்வாறே, ஆதிக்கத்தை சுவைத்துப் பார்க்க விரும்பாதவரும் எவருமில்லை! ஏனெனில், சுயநலம், பொறாமை, பேராசை,.... போன்ற கீழியல்புகள் எல்லோருக்குள்ளும்; வெவ்வேறு விகிதங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன!
ஒரு வகையில் எல்லா வாதங்களும், இசங்களும், இயங்களும் - பார்ப்பனியம், மதவாதம், அடிப்படைவாதம், முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம், பொதுவுடமைவாதம், பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதம், இருத்தலியல் வாதம், தலித்தியம், பெண்ணியம், தேசியவாதம், பிராந்திய வாதம், சிற்றினவாதம், பேரினவாதம், ….ஆகிய அனைத்து வாதங்களும் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்குமான வேட்கை கொண்டவைகளே!
பரஸ்பரம் ஒன்றுக்கெதிராக இன்னொன்று என்கிற ரீதியில் எல்லா வாதங்களும் முட்டி மோதிக்கொள்வதின் விளைவாக ஒரு இறுக்கம், அல்லது இழுவிசையானது நிலைமைகள் மேலும் மோசமடையா வண்ணம் தடுக்கிறது என்பதற்கு மேல், எந்த வாதமும், இயமும், இசமும் முழு வெற்றிபெறுவதில்லை. அதே நேரத்தில் எல்லா நேரங்களிலும் வெற்றி பெறுவதாயிருப்பது மனிதர்களின் கீழியல்புகளின் வாதம் மட்டுமே. அதில் ஒருவனுடைய கீழியல்புகளை விட இன்னொருவனுடைய கீழியல்புகள் போட்டிபோட்டுக் கொண்டு மேலோங்கியதாக, ஆதிக்கம் செலுத்துவதாக அமைவதும் இயற்கையானதே. முடிவில் எந்த வாதமும், இசமும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில், வாழ்க்கை எனும் சவால் எப்போதும் போலவே ஏற்கப்படாமல் அப்படியே தான் உள்ளது.
நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினால் போடப்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். “ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கே!” என்ற கொள்கையின் பேரில் ஹிட்லர் நடத்திய யூத இன அழிப்பு, மக்கள் அரசமைப்பு எனும் பெயரில் கட்டாய உழைப்பு முகாம்கள் வழியாக ஜோசப் ஸ்டாலின் சோவியத் நாட்டில் மேற்கொண்ட மாபெரும் களையெடுப்பு. 2
எல்லா வாதங்களும், இயங்களும், கொள்கைகளும் ஏதோவொன்றுக்கான எதிர்வினையாக உருவாக்கப்படுபவையே. அடிமைத்தனத்திற்கு எதிராக சுதந்திரத்தையும், தீமைக்கெதிராக நன்மையையும், கொடுங்கோன்மைக்கு எதிராக சனநாயகத்தையும், அநியாயத்திற்கெதிராக நியாயத்தையும் முன்னிறுத்துகிறோம். உயர்ந்த இலட்சியங்களை முன்வைத்தியங்கும் நாம் விரைவில் எந்தப் பண்பை, தீமையை எதிர்க்கிறோமோ அப்பண்பையே, தீமையையே சுவீகரித்துக் கொள்கிறோம். அதாவது, குறிக்கப்பட்ட உயர்ந்த இலக்கை எப்படியாவது அடைந்தாக வேண்டும் என்ற முனைப்பில் மோசமான வழிமுறைகளை நியாயப்படுத்துவதில், கைக்கொள்வதில் வீழ்ந்து விடுகிறோம்.
இதன் அர்த்தம் அநீதி, அநியாயம், அடிமைத்தனம், கொடுங்கோன்மை ஆகியவற்றை எதிர்க்கக் கூடாது என்பதல்ல. மாறாக, பிரச்சினை இதுதான், ஒடுக்குபவனின் அநியாயத்தை எதிர்க்கின்ற ஒடுக்கப்பட்டவனின் நியாயம் தன்னில் எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கிறது என்கிற அதீத நம்பிக்கை தான். இதன் எதிர் நிலையான அநியாயம் தன்னில் அனைத்து நியாயங்களையும் கொண்டுள்ளது என்பதுமல்ல. அநியாயத்தின் பலன் அல்லது இலக்கு எல்லா நலன்களையும் சுயநலமாக தான் மட்டுமே பெறுவது, அனுபவிப்பது என்பதே. அப்படியானால், அத்தகைய அநியாயத்தை எதிர்க்கும் நியாயத்தின் இலக்கு என்ன?
வர்க்கப் போராட்டம் முதல் எல்லாப் போராட்டங்களும் தங்களுக்குச் சேரவேண்டிய நலன்களில் நியாயமான பங்கு கோருவதுதான். இப் போராட்டங்களுக்கு முடிவு என்பது இருக்க முடியாது. “வரலாறு என்றாலே அது வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்று சொல்லப்பட்டது எவ்வளவு நிஜமானது! அதுமட்டுமல்ல; இனி வரலாறு முழுவதுமே போராட்டங்களின் வரலாறாகத்தான் தொடரும். வெற்றி என்பது எட்டாக்கனியாக இருந்தாலும் “வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!” என்பதில் நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை உந்தித் தள்ளுகிறது. ஆனால், வெற்றியைவிட, அதைப் பெறுவதற்கான விலை அதிகமாக இருப்பது குறித்து நாம் சிந்திப்பதில்லை.
நாம் மனிதம் பற்றியும், மனிதாபிமானம் பற்றியும் பேசுகிறோம். இவை இரண்டும் ஒன்றல்ல என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. ஒடுக்குபவனின் அநியாயத்தை, அவனுடைய மனிதாபிமானமற்ற செயலை நாம் எதிர்க்கிறோம். நாம் நியாயம் கோருகிறோம். இதன் அர்த்தம் ஒடுக்குபவனிடம் இல்லாத மனிதத்தன்மை ஒடுக்கப்பட்டவனிடம் இயற்கையாகவே உள்ளமைந்துள்ளது என்று கொள்வதற்கில்லை.
மனிதாபிமானம், மனிதத்தன்மை என்பது இரக்கம், அன்பு போன்றவற்றை உள்ளடக்கிய மனித இயல்பு எனப்படுகிறது. பொதுவாக மனிதர்களைப் பொறுத்தவரை இரக்கம் அன்பு ஆகியவை சுயநலத்தை மையமாகக் கொண்டவையாதலால் அவை மிகவும் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே செயல்படக்கூடியவையாக உள்ளன. பருந்திடமிருந்து தனது குஞ்சுகளை போராடிக் காப்பாற்றும் ஒரு கோழியின் பாசம் எவ்வளவோ அதேயளவு பாசம் தான் மனிதர்களிடத்திலும் உள்ளது. அதாவது, மனிதனாய்ப் பிறந்துவிட்டாலே அவனிடம் மனிதத்தன்மை இயல்பாகவே அமைந்திருக்கும் என்ற பார்வை பிழையானது. அவ்வாறு இயல்பிலேயே அமைந்திருக்குமானால், ஒடுக்குபவன், ஒடுக்கப்படுபவன் எனும் நிலைகள் தோன்றியிராது.
மனிதன் விலங்கினத்திலிருந்து பரிணமித்தவனாகையால் அவன் பெரிதும் விலங்குத்தன்மைக்குத் தான் நெருக்கமாக இருக்கிறான். அவன் மனிதத்தன்மையை நோக்கி உயர்ந்தெழ வேண்டும். அதற்கு அவன் உளரீதியாக வளர்ந்தாக வேண்டும். மனித இயல்பு என்பது பிறப்பால் வருவதல்ல; விழிப்பால் (உணர்வுப் பரிணாமத்தில் உயருவதால்) அடையப்பட வேண்டியதாகும். இன்னும் இரக்கம் அன்பு, ஆகிய பண்புகள் கற்றுக்கொள்ளக் கூடியவையும் அல்ல; அவற்றை ஒருவர் இன்னொருவருக்குப் புகட்டவும் இயலாது! ஆக, ஒடுக்குபவனுக்கு அறநெறிப் பாடங்களைப் புகட்டி அவனிடத்தில் மனிதாபிமானத்தையும், மனிதத்தன்மையையும் உண்டாக்க இயலாத பட்சத்தில், ஒடுக்குபவனை ஒடுக்கும் வழிமுறையை நாம் கையிலெடுப்போமெனில், அது ஒரு விபரீத வட்டத்தில் நம்மை ஆழ்த்திவிடும்.
எவ்வாறோ, நாம் பூமியில் சமாதானத்தையும், சமத்துவத்தையும் நிறுவிவிட்டோம்; போட்டி, பொறாமை, பேராசை இல்லாத, ஏற்றத்தாழ்வற்ற உலகை ஏற்படுத்திவிட்டோம் என்றாலும், நாம் பரஸ்பரம் துன்பங்களைக் களைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் அற்புத மானிடர்களாக மாறிடினும் நம் வாழ்வு அர்த்தம் பெறாது. ஏனெனில், இவை எதுவும் மனித வாழ்வின் இலக்குகள் அல்ல; இவை யாவும் மானிட வாழ்வின் ஒப்பற்ற இலக்கினை அடையும் வழியின் உபவிளைவுகள் மட்டுமே!
மனிதம் என்பது பரஸ்பரம் அன்பு செலுத்துவதோ, மனிதனின் மீதான மனித நேயமோ அல்ல. மாறாக, மனிதனைக்கடந்த மெய்ம்மை மீதான நேயமே மனிதம். மனிதம் என்பது இறுதியில் மனிதனைப்பற்றியதல்ல!
*
குறிப்பு :
- “பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை. பிற உயர் சாதியினர் தொடங்கி இன்று தலித் மக்கள் வரை ஊடுருவத் தொடங்கி இருக்கின்றன. பார்ப்பனியத்தைவிட தலித் பார்ப்பனியம் என்பது கொடியதும் மிகக் கொடூரமானதுமாகும். தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்திக் கொள்கிற நிலையை தலித் மக்கள் ஒரு போதும் இனி அனுமதிக்க மாட்டார்கள். - விழி.பா. இதயவேந்தன் ( நூல்:தலித் இலக்கிய அரசியல்)
- ஆதார நூல் : The Gulag Archipelago, (1974) By Aleksandr Solzhenitsyn
மா.கணேசன்/ நெய்வேலி/ ( 23.08.2019 -28.08.2019)
ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்
ஒரு முறை படித்துவிட்டீர்களா !
ReplyDeleteமீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டியது.
நன்றிகள்
Delete