Wednesday, 11 March 2026

நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

 







 
 







பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர், 
அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே! 
இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்!

✨                                                                                                                        
 
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம், விஞ்ஞானிகள் சொல்வதுபோல், அதன் உள்ளார்ந்த பௌதீக விதிகளின்படி, ஒரு நாள் அழியத்தான் போகிறது என்றாலும், மனித ஜீவிகளாகிய நாம் தப்பித்துக் கரை சேருவதற்கு ஒரு அழிவில்லா ஒப்பற்ற இடம் அதாவது மெய்ம்மை ஒன்று உள்ளது.  ஆம், பேருணர்வு (Super Consciousness) தான் அந்த மெய்ம்மை! அந்த பேருணர்வை எட்டுவதற்கான வழியும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயே உள்ளது. நம்முடைய உணர்வு (Consciousness) தான் அந்த வழி! அதாவது, நாம் ஒவ்வொருவரும் நமது சிற்றுணர்வை மாற்றமுறச் செய்வதன் மூலம் அந்த பேருணர்வை அடைய முடியும்.

✨ 

இந்த உலகம், பிரபஞ்சம், யாவும் எப்போது, எவ்வாறு தோன்றியது என்பது தெரியாது! அனைத்தின் ஆரம்பம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற விஞ்ஞானக் கோட்பாடுகள், மாதிரிகள் [Models] மட்டும் தான் உள்ளன. எல்லாம் கடைசியில் எப்படிப்போய் முடியும் என முடிவு பற்றியும் வெறும் கோட்பாடுகள் மட்டுமே உள்ளன. ஆனால், தொடக்கம், முடிவு இரண்டுக்கும் நடுவே நாம் இருக்கிறோம், சிந்திக்கிறோம், வாழ்கிறோம் என்பது மட்டும் நிச்சயம். 

என்னைப் பொறுத்தவரை, இந்தக் கட்டுரை முழுவதும் ஒரு தனிமனிதனான என்னை, எனது பார்வையை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். எனக்கென்று சொந்தமாக ஒரு தனிப்பார்வையைக் கொண்டிருப்பதற்கு நான் எவரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை! ஏனென்றால், இப்பிரபஞ்சத்தில் நான் மிகவும் மையமானவன், முக்கியமானவன். இவை என்னைப்போன்ற சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் முற்றிலுமாகப் பொருந்தும். 

எனது சிந்தனை தனித்துவமானது தனிச்சிறப்பானது என்றால் அது மிகையாகாது! என்னைப்போலவே ஒவ்வொருவரும் விளங்க முடியும்! இந்த சுதந்திரத்தை ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே வரித்துக்கொள்ள வேண்டும். 

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் (அதாவது, 1380 கோடி ஆண்டுகள்) என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இப்பிரபஞ்சம், இன்னும் பல நூறாயிரம் கோடி ஆண்டுகள் நீடித்து, பிறகு படிப்படியாக தனது அழிவை, முடிவை அடைவது உறுதி என்பதாக பௌதீக விதிகளை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

என்னைப் பொறுத்தவரையில், பிரபஞ்சத்தின் இறுதி முடிவு, அது எப்பட்டிப்பட்டதாயிருந்தாலும் அது பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்? (ஏன், நீங்களும் கூட கவலைப்பட வேண்டியதில்லை! ) ஏனென்றால், என்னுடைய வாழ்காலம் என்பது 70 ஆண்டுகள், அல்லது 80 ஆண்டுகள் மட்டும் தான். அரிதாக சிலர் 100 ஆண்டுகள், அல்லது அதற்கு மேலும்கூட வாழக்கூடும். ஆக, மிகக் குறுகியதான என்னுடைய வாழ்காலம்தான் எவ்வளவு முக்கியமானது!  ஆம், 70 ஆண்டுகளோ, 80 ஆண்டுகளோ, எனது வாழ்காலத்திற்குள் வாழ்வின் அர்த்தத்தை, வாழ்வின் உண்மையை, வாழ்வின் அசலான குறிக்கோளை, இலக்கை நான் கண்டறிந்தாக வேண்டும். பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த வரலாற்றில், நான் வாழும் இந்தக் காலக்கட்டம் தான் அதிமுக்கியமானது என்பேன்! நான் வாழும் இந்த பொற் காலக்கட்டத்தில் நீங்களும் வாழ்கிறீர்கள் என்றால் அது உங்கள் நற்பேறு தான்! 

மேலும், பிரபஞ்சம் நூறாயிரம் கோடி ஆண்டுகள் கழித்து தனது அழிவைச் சந்திக்கும் என்பது ஒருபுறம் இருக்க, அதற்கு முன்பாகவே, நமது சூரியனும், அதனுடன் சேர்ந்து நமது பூமியும் அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆக, பிரபஞ்சம், சூரியன், பூமிக்கிரகம் என எதுவுமே சாசுவதமானதல்ல, நிரந்தரமானதல்ல எனும்போது, நமது கவலை, அக்கறை, நமது கவனக்குவிப்பு  யாவும் நாம் வாழ்கின்ற காலத்தைப் பற்றியும், அதில் நாம் நம் வாழ்க்கையை எவ்வாறு அர்த்தபூர்வமாக வாழ்வது என்பதைப் பற்றியும் தான் இருக்கமுடியும், இருக்கவும் வேண்டும். ஆகவேதான், "நடுவிலே நடனமாடும் அர்த்தம்!" என இக்கட்டுரைக்கு தலைப்பு கொடுத்துள்ளேன். 

விஞ்ஞானிகளின் அணுகுமுறையும், பார்வையும் கிறுக்குத்தனமான வகையில் அலாதியானது! விஞ்ஞானிகளில் சிலர், பூமியில் உயிர் ஜீவியின் தோற்றம் என்பது சாத்தியமற்றது, இயற்கையாக நிகழ முடியாதது என்கின்றனர். சிலர் உயிர் ஜீவியின் தோற்றம் முற்றிலும் விபத்து ரீதியானது என்கின்றனர். வேறு சிலர், உயிர் ஜீவியின் தோற்றம் என்பது சாத்தியமானதுதான்; ஆனால், இப்போதைக்கு உயிரற்ற சடப்பொருளிலிருந்து உயிருள்ள ஜீவி எவ்வாறு தோன்றியது என்பதை விளக்குவதற்கான பிரதான இயற்பொருள் சார்ந்த விஞ்ஞானக் கொள்கைகள் இல்லாதிருக்கின்றன, அதாவது இல்லை. ஆனால், வரும் காலங்களில் இக்குறையை போக்க முடியும் என்கின்றனர். 

விஞ்ஞானிகள் தொடர்ந்து கடுமையாக முயற்சித்து வருகின்றனர் என சொல்லப்படுகிறது, அதாவது உயிரற்ற வேதியியலுக்கும் (non-living chemistry ) தன்னைத்தானே மறுபதிப்பு செய்துகொள்ளக்கூடிய முதல் உயிரிக்குமான (the first self-replicating entity ) இடைவெளியை நீக்குவதற்காக முயற்சித்து வருகின்றனர். எனினும், உயிரியல் விஞ்ஞானத்தின் தீர்க்க முடியாத பெரும் புதிராகவே இப்பிரச்சினை இருந்து வருகின்றது. 

ஆனால், விஞ்ஞானத்திற்கு பெரும் சவாலாக, புதிராக இருப்பது இது மட்டுமல்ல . இது உண்மையில், இரண்டாவதான சவால்தான். வரிசைப்படி பார்த்தால் முதல் சவால் என்பது பிரபஞ்சத்தின் தோற்றம் (Origin) பற்றியது ஆகும். இரண்டாவது சவால், தீர்க்க வியலாத புதிராக இருப்பது மேலே விவரித்த உயிர் ஜீவியின் தோற்றம். மூன்றாவது சவால் என்பது மனித உணர்வின் (Consciousness ) தோற்றம் பற்றியதாகும். அதாவது, 

1. பிரபஞ்சத்தின் தோற்றம் (The Origin of the Universe)
2. முதல் உயிர் ஜீவியின் தோற்றம் (The Origin of Life)
3. மனித உணர்வின் (Consciousness )தோற்றம் The Origin of Consciousness)

இம்மூன்றும் விஞ்ஞானத்தால் தீர்க்கவியலாத பெரும் புதிர்களாக விளங்குகின்றன. 

ஆனால், என்னைப் பொறுத்தவரையில், புதிர்தான் -- பிரபஞ்சம், உயிர் ஜீவி, மனித உணர்வு, ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டு மொத்த இருப்பின் வழி[முறை]யாகும்! நான் சொல்பவை கூட கிறுக்குத்தனமானவையாகத் தோன்றலாம். ஆனால், விஞ்ஞானத்தைவிட, எனது கிறுக்குத்தனம் உண்மைக்கு மிக நெருக்கமானதாகும்!  

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக்கூடியது விஞ்ஞானம் மட்டுமே என்பதாகச் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், அடிப்படையான, அதி முக்கியமான பல கேள்விகளுக்கு விஞ்ஞானத்திடம் பதில் இல்லை. ஆனாலும் விஞ்ஞானத்தை நம்பிக்கொண்டு உலக மக்கள் பெரும்பாலானவர்கள் புரிதலின்றி வாழ்கின்றனர். விஞ்ஞானம் என்பது மதங்களின் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், விஞ்ஞானமும் ஒரு மதமாக மாறிவிட்டிருப்பது பற்றி என்ன சொல்ல! 

பொதுவாக, மக்களுக்கு, விஞ்ஞானத்திற்கும், விஞ்ஞானவாதத்திற்கும் (Scientism); விஞ்ஞானத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும் (Technology) உள்ள வித்தியாசம் புரிவதில்லை. விஞ்ஞானம் கண்டுபிடித்த பௌதீக/இயற்கை விதிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கருவிகள், சாதனங்கள் நமது அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக உள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், விஞ்ஞானமோ, தொழில் நுட்பமோ இரண்டுமே நமக்கு அர்த்தத்தை கண்டுபிடித்து வழங்கவில்லையே! விஞ்ஞானம் ஒருபுறம் பலவித நோய்களிலிருந்து விடுபட மருந்துகளை தந்தாலும், இன்னொரு புறம் பேரழிவை விளைவிக்கும் அணுகுண்டுகளையும் அல்லவா தந்துள்ளது !

'அரைகுறை அறிவு ஆபத்தானது' என்பது விஞ்ஞானத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது எனலாம். முழு அறிவை விஞ்ஞானத்தினால் எட்ட இயலுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், விஞ்ஞானமானது பொருள்முதல்வாதம், எந்திரவாதம், சுருக்கல்வாதம், இயற்கைவாதம் போன்ற பல வாதங்களால் பீடிக்கப்பட்டிருப்பதால், அதனால் ஒருபோதும் முழு-அறிவை அடைவது இயலாது. 

பிரதானமாக, விஞ்ஞானம் என்றால் மொத்தத்தில் வெறும் பௌதீகவியல் (Physics ) மட்டும்தான் எனலாம். இதற்குக் காரணம், அதன் கண்மூடித்தனமான பொருள்முதல்வாதச் சார்பு தானாகும். பௌதீகவியல் என்றால், கணிதவியல் (Mathematics )இல்லாமலா! ஆம், கணிதவியலை அதனுடன் சேர்த்துக்கொண்டுள்ளது.  அதையடுத்து, ரசாயணவியல் அல்லது வேதியியலை (Chemistry ) பௌதீகவியலின் அணியோடு சேர்த்துக்கொள்வதில் எந்தப்பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை. ஏனென்றால், பௌதீகவியல், கணிதவியல், ரசாயணவியல் இம்மூன்று இயல்களும் உயிரற்ற பௌதீகச் சடப்பொருளைப் பற்றித்தான் ஆராய்கின்றன. 
அடுத்தது, உயிரியல் (Biology). உயிரியல் என்பது ஒரு ஸெல் உயிரி தொடங்கி மனித ஜீவி வரை, உயிருள்ள அம்சங்களைப் பற்றியதாயிருந்தாலும், ஒரு எந்திரத்தை ஆராய்வது போலத்தான் விஞ்ஞானத்திற்குள் உயிரியலானது கையாளப்படுகிறது. அதாவது உயிரியலில், 'உயிர்' என்றால் என்ன? அது எவ்வாறு முதன்முதலில் தோன்றியது என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை . 
அடுத்து, மனவியல் அல்லது உளவியல் (Psychology ). உளவியல் என்பது மனிதனின் உளவியல் செயல்பாடுகளையும், அதன் வெளிப்பாடுகளான நடத்தைகளையும் ஆராய்வது. ஆக, உயிரியலில் 'உயிர்' என்றால் என்ன என்று தெரியாது! உளவியலில் 'மனம்' என்றால் என்ன என்று தெரியாது! இவை பற்றி விஞ்ஞானம் சிறிதும் அலட்டிக் கொள்வதுமில்லை! 

பிரபஞ்சம் என்றால் விஞ்ஞானத்தின்படி பௌதீகப் பொருளினால் ஆன உயிரற்ற, உணர்வற்ற ஒரு மாபெரும் அமைப்பு, அதாவது காலம், வெளி, கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள், மற்றும் பலவித விண்வெளிப் பொருட்கள், நிகழ்வுகளைக் கொண்ட ஒரு மாபெரும் தொகுதி மட்டுமே! இப்பிரபஞ்சத்தில் உயிர்ஜீவி தோன்றியது வெறும் விபத்து போன்றது. அதில் மனித ஜீவியானவன் தோன்றியதும் ஒரு விபத்துதான்! பிரபஞ்சம் என்பது குறிக்கோள் மற்றும் இலக்கற்ற, யாதொரு திட்டமும் இல்லாத, ஒரு தாறுமாறான, தன்போக்கில் போய்க்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுமுறை. உயிர் என்பது பௌதீகப் பொருளின் (அணுத்துகள்களின்) மிகச் சிக்கலான (Complex ) வளர்ச்சி நிலை. மனம் அல்லது உணர்வு (Consciousness) என்பது சுமார் 1.3 முதல் 1.4 கிலோகிராம் (2.9 பவுண்டுகள்) வரை எடை கொண்ட மனித மூளையின் உள்ளே நடைபெறும் செயல்முறைகளின் (Processes ) ஒரு வெளிப்பாடு மட்டுமே. இவை எல்லாம் விஞ்ஞானத்தின் அலாதியான கண்டுபிடிப்புகள், கருத்துகள்.  

விஞ்ஞானத்தின்படி பரிணாமம் என்பது உயிருள்ள முதல் உயிரினம் உயிரற்ற சடப்பொருளிலிருந்து தோன்றி வளர்ந்ததென்ற கோட்பாடாகும். ஆனால், உயிர் தோன்றியதற்கு ஒரு குறிக்கோளும் இல்லை; ஏனென்றால், பரிணாமம் என்பது குறிக்கோள் ஏதுமற்ற ஒரு குருட்டாம் போக்கு நிகழ்வுமுறை என்று விஞ்ஞானம் கூசாமல் சொல்கிறது! 

கிடை மட்ட நிகழ்வுப்போக்கும், செங்குத்து நிகழ்வுப்போக்கும்

பௌதீகப் பிரபஞ்சத்தின் பிறப்பு கணத்தை ஒரு முனையாகக் கொண்டு, காலத்தில் அது பரிணமித்துச் செல்லும் போக்கை ஒரு நேர் கோடாகக் கொண்டோமெனில், அது ஒரு நெடிய கிடைமட்டக் கோடாக நீண்டுகொண்டே சென்று கடைசியில் பிரபஞ்சமானது, அதன் இறுதி முடிவை அடையும்! இப்போது, அந்த கிடை மட்டக்கோட்டின் நடுவே, ஒரு புள்ளியிலிருந்து செங்குத்தாக ஒரு கோட்டினை வரைவோமெனில்,  அந்த செங்குத்துக்கோடு தான் முதல் உயிரியின் தோற்றத்தையும், அடுத்தடுத்த பல ஸெல் உயிரிகளின் பரிணாமத்தையும், ஊர்வன, பறப்பன, பாலூட்டி என படிப்படியாக உயர்ந்து அந்த செங்குத்துக் கோட்டின் உச்சியில், மனித ஜீவியானவன் உதித்ததையும் குறிக்கும் கோடு ஆகும். 

அதாவது, கிடைமட்டக் கோடானது பௌதீகப் பிரபஞ்சத்தின் பிறப்பு கணத்தில் தொடங்கி, படிப்படியாக நெபுலாக்கள், கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் என பல்வேறு அண்ட வெளிப் பொருட்களாகவும் நிகழ்வுகளாகவும் வளர்ந்து விரிவடைந்து நீண்டு கொண்டே சென்று பல்லாயிரம் கோடி கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பௌதீகப் பிரபஞ்சமானது அதிகரிக்கும் சீர்குலைவுக்கு (Entropy) ஆட்பட்டு தனது அழிவைச் சந்திக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

ஆனால், உயிரின் தொடக்கமும், அதைத் தொடர்ந்த உயிரியல் பரிணாமமும், சீர் குலைவின் (Entropy) பிடியில் சிக்கிய பௌதீகச் சடப்பிரபஞ்சத்தின் கிடைமட்டப்போக்குக்கு எதிராக செங்குத்தாகச் செல்வதாய் உள்ளன. இதன் அர்த்தம், உயிரானது அதன் செயல், மற்றும் இயங்கு முறையின் உள்ளார்ந்த ஒரு விசேடத் தன்மை என்னவென்றால், அது சீர் குலைவை எதிர்த்து தன்னைத் தக்கவைத்துக்கொண்டு செங்குத்தாகப் பயணிக்கின்றது எனலாம்! இப்பிரபஞ்சத்தில் உயிர் ஜீவிகளைத் தவிர வேறு எந்த ஒரு பொருளும், அம்சமும் சீர் குலைவின் பிடியிலிருந்து தப்புவது இல்லை. ஆயினும், உயிரின் இந்த விசேடப் போக்கு நிரந்தமானதல்ல. ஏனென்றால், உயிரினங்களைச் சுற்றியுமுள்ள மொத்த பிரபஞ்சமும் ஒரு கட்டத்தில் முற்றாக அழிந்துவிடக்கூடியதாகையால், பூமியின் மீதான மனித இனம் மற்றும் பிறவனைத்து உயிரினங்களின் இருப்பும்  தற்காலிகமானதே எனலாம். 

அதாவது, இன்னும் 100 அல்லது 200 கோடி ஆண்டுகளில், நமது சூரியன் அதன் எரி பொருளை எரித்துத் தீர்த்துவிட்டு மடிந்துபோகும், அப்படி மடியும் போது, பூமி உள்பட ஒட்டுமொத்த சூரிய மண்டல கிரகங்களையும் அழித்துவிடும்! இன்னும் 100 கோடி ஆண்டுகள் வரை பூமியும், சூரியனும், பிற கிரகங்களும் அழியாமல் நிலைத்திருக்குமல்லவா, அப்படியானால், அது பற்றி நாம் இப்போதைக்குக் கவலைப்பட வேண்டாம் என நாம் எண்ணலாம். ஆம், ஒரு வகையில், மிகத் தொலைவான எதிர்காலத்தில், எப்போதோ அழியப்போகின்ற  பூமியையும், சூரியனையும், பிரபஞ்சத்தையும் பற்றி நாம் கவலைப்படாவிட்டாலும், நாம் ஒவ்வொருவரும் கவலைப் படுவதற்கு வேறொரு பெரும் பிரச்சினை உள்ளது. அதுதான், நம் ஒவ்வொருவருடைய சொந்த மரணம்! இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொன்றும் அதற்குரிய காலத்தில் மரணமடைந்தே தீரும். அதில் எதற்கும் விதிவிலக்கு கிடையாது. ஆம், இவ்வுலகமும் ஒரு நாள் மடிந்துபோகும் என்பதைத்தான் இன்றைய நவீன பௌதீக விஞ்ஞானம் ஆராய்ந்து கூறுகிறது. 

பிரபஞ்சத்தின் வாழ்காலத்துடன் ஒப்பிடுகையில், மனிதனின் வாழ்காலம் மிக மிகக் குறுகியது தான். பிரபஞ்சக் கால அளவில், மனித வாழ்காலம் என்பது ஒரு கண் சிமிட்டல் நேரம் கூட இல்லை எனலாம். மிகவும் மேலோட்டமான ஒரு பார்வையில், "எதுவும், நிரந்தரமானதல்ல.  மனிதனும், அவனது வாழ்வும் நிரந்தரமானதல்ல, இப்பிரபஞ்சமும் நிரந்தரமானதல்ல!" எனக் காணலாம். ஆனால், ஆழமான ஒரு பார்வை உள்ளது. அது தத்துவத்தின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான ஆணிவேர் போன்ற மீபௌதீகம் ( metaphysics ), மற்றும் ஆன்மீகம் சார்ந்த பார்வையாகும். அதன்படி, தோன்றி மறையக்கூடிய, பிறந்து இறந்துபோகக்கூடிய அனைத்தும் தற்காலிகமானவையே; ஆனால், தற்காலிகமானவற்றைக் கடந்த ஒரு நிரந்தர சாரம், மெய்ம்மை உள்ளது. அந்த சாரத்தின், அந்த மெய்ம்மையின் வெளிப்பாடுகளே (projections) இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள மனிதன் உள்பட அனைத்தும் ஆகும். அதாவது, பிரபஞ்சம் என்பது மெய்ம்மையை எட்டுவதற்கான பருப்பொருளாலான ஒரு கருவி அல்லது சாரக்கட்டுமானமே (Scaffolding) ஆகும். 

மூல மெய்ம்மையான பேருணர்வானது (Super Consciousness) தன்னை மறைத்துக்கொள்ளும் சுரிணாம வழிமுறையில் (Involutionary Process) உருவாக்கப்பட்ட மறைக்கும் திரை போன்ற அம்சம் தான் பருப்பொருள் (Matter) என்பதாகும். இந்த பாத்திரத்திற்கு மேல், பருப்பொருளுக்கு வேறு முக்கியத்துவம் ஏதும் கிடையாது எனலாம். ஆம், எவ்வகையிலும், பருப்பொருளானது பிரபஞ்சத்தின் அடிப்படையான மெய்ம்மையோ, அல்லது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றோ அல்ல. 

மேலும், விஞ்ஞானிகள் கூறுவது போல, பருப்பொருளாலான பிரபஞ்சம்,  கடைசியில், சில பல டிரில்லியன் ஆண்டுகளுக்குப் பின் ஒரு வெப்பச்சாவில் (Heat Death)  மடிந்து போய்விடும் என்றாலும், இப்பிரபஞ்சம் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை மனித ஜீவிகள் தங்களது உணர்வுப் பரிணாமத்தின் வழியாக, ஒருவர் பின் ஒருவராக வெகு விரைவில் (தோராயமாக இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே) வெற்றிகரமாக எட்டிவிடுவர் எனலாம்.  ஆகவே, என்றோ மிகத் தொலைவான எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரபஞ்ச அழிவு பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. இவ்வகையில், பருப்பொருளுக்கும், பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கும் யாதொரு இறுதி நிலை முக்கியத்துவமும் கிடையாது எனலாம்.

இந்த ஒட்டு மொத்த கட்டுரையில் நாம் கவனிக்க வேண்டிய, கருத்து செலுத்த வேண்டிய அதிமுக்கிய விடயம் என்னவென்றால், நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம், விஞ்ஞானிகள் சொல்வதுபோல், அதன் உள்ளார்ந்த பௌதீக விதிகளின்படி, ஒரு நாள் அழியத்தான் போகிறது என்றாலும், மனித ஜீவிகளாகிய நாம் தப்பித்துக் கரை சேருவதற்கு ஒரு அழிவில்லா ஒப்பற்ற இடம் அதாவது மெய்ம்மை ஒன்று உள்ளது.  ஆம், பேருணர்வு (Super Consciousness) தான் அந்த மெய்ம்மை! அந்த பேருணர்வை எட்டுவதற்கான வழியும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயே உள்ளது. நம்முடைய உணர்வு (Consciousness) தான் அந்த வழி! அதாவது, நாம் ஒவ்வொருவரும் நமது சிற்றுணர்வை மாற்றமுறச் செய்வதன் மூலம் அந்த பேருணர்வை அடைய முடியும். ஏற்கனவே, புத்தர், இயேசு, ஶ்ரீ ரமண மகரிஷி, இன்னும் பலர் அப்பேருணர்வு நிலையை அடைந்துள்ளனர். 

பொருள்முதல் வாதத்தினால் பீடிக்கப்பட்ட சில மந்த புத்திகொண்ட விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் உணர்வின் முதன்மைத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் மறுத்துப் பேசி விவாதம் புரிந்துகொண்டிருக்கட்டும். ஆனால், பருப்பொருளின் முதன்மைத்துவம் தகர்க்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆம், குவாண்டம் எந்திரவியல் தான் அந்த தகர்ப்பைச் செய்தது. இன்றளவும், பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றியும், உயிர் மற்றும் உணர்வின் தோற்றம் பற்றியும் பெரிதாக விஞ்ஞானத்தினால் புரிந்துகொள்ள இயலவில்லை. இம்மூன்று அம்சங்களும் பெரும் புதிர்களாகவும், பெரும் சவால்களாகவும் திகழ்கின்றன! 

விஞ்ஞானிகள் வெறுமனே ஒரு மரத்தை ஆராய்வது போல் பிரபஞ்சத்தை துருவித் துருவி ஆராய்ந்து கொண்டுள்ளனர். அதாவது, எந்த மரத்திற்கும் விதை என்ற ஒன்று இருக்கவேண்டுமே என்பது குறித்து அவர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர்! விதை மறைந்து மரம் உருவாகியது போலத்தான், இந்தப் பிரபஞ்சத்திற்கும் விதை போன்ற ஒரு மூல மெய்ம்மை இருந்திருக்க வேண்டுமல்லவா? விதை இல்லை, ஆனால் விருட்சம் (மரம்) இருக்கிறது. அதாவது, விதைக்கும், விருட்சத்துக்கும் இடையிலான தொடர்புப் பாலம் விதையின் மறைவினால் இல்லாமல் போய்விட்டது. இது குறித்த கற்பனைகூட இல்லாத விஞ்ஞானிகள் மரமானது அதன் வேரிலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும் என்பதாக எண்ணி வேரை [அதாவது அணுத்துகள்களைத்]  தோண்டித் துருவி ஆராய்ந்து கொண்டுள்ளனர்! பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பில் தோன்றியதாக கோட்பாடு பின்னும் அவர்கள் பெருவெடிப்புக்கு முன் எத்தகைய மெய்ம்மை இருந்திருக்கும் என்பது குறித்து விசாரிப்பது கூட, விலக்கப்பட்ட (Taboo) விடயமாகக் கருதுகின்றனர். இதே போன்ற இன்னொரு தொடர்பு அல்லது இணைப்பு அறுந்த ( Disjunction) இடம், உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருக்கும் இடையே உள்ள அதல பாதாள இடைவெளியாகும் (1). இன்னொரு மாபெரும் இணைப்பு இல்லாத (Disjunction) நிலை மனித மூளைக்கும் உணர்வுக்கும் இடையிலான மாபெரும்  இடைவெளியாகும்! அதாவது உணர்வின் தோற்றம் (The Origin of Consciousness) குறித்ததாகும். 

உண்மையில், பரிணாமமோ அல்லது டார்வினின் இயற்கைத் தேர்வு என்பதோ உணர்வை உருவாக்க வில்லை. மாறாக, பரிணாமத்தின் பணி, பிரபஞ்ச உணர்வை  உடலியல் அனுபவமாக மொழிபெயர்க்கும் திறன் கொண்ட  ஏற்பிகளை (receivers) உருவாக்குவதாகும். அதே போல,  உயிர் எனும் பண்பை அல்லது பரிமாணத்தை  பரிணாமம் உருவாக்கிடவில்லை. மாறாக உயிர் எனும் பரிமாணத்துடன் தொடர்புகொள்ளத்தக்க உடல் -ஜீவியை உருவாக்கியதில் தான் பரிணாமத்தின் பங்கு உள்ளது எனலாம். இந்த இடத்தில், உடல்-ஜீவி என்பதற்கும்  'உயிர்' என்பதற்கும் துல்லியமான வேறுபாடு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது  அவசியமாகும். (இது குறித்து, "உயிர் எனும் புதிர்!" எனும் தலைப்பில் எனது வலைத்தளக் கட்டுரை https://vicharamarg.blogspot.com/2016/10/blog-post_21.html காண்க)

மேலும், நான் எடுத்துச் சொல்லும் இதே வகையில்,   
"மூளை ஒரு பெறுவிப்பான், அல்லது ஏற்பி (receiver), உணர்வு என்பது சமிக்ஞை (signal). இதை புரிந்துகொள்வது, யதார்த்தத்தின் (மெய்ம்மையின்) உண்மையான தன்மையைப் புரிந்துகொள்வதற்கு அவசியமானதாக இருக்கலாம். இது நமது உள்ளுணர்வுக்கு முரணானது. நாம் அறிந்திருப்பதாக நினைக்கும் எல்லாவற்றையும் இது சவால் செய்கிறது. ஆனால் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுவது இதுதான். இந்த அண்டம், ஏதோ ஒரு வகையில் உணர்வை உருவாக்கும் பருப்பொருளால் ஆனது அல்ல. இந்த அண்டம், தன்னைத்தானே ஒழுங்கமைத்து (organizing itself into patterns ), நாம் பருப்பொருளாக உணரும் வடிவங்களாக மாறும் உணர்வால் ஆனது. மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பௌதீக உலகத்தை உணர்வு அனுபவிப்பதற்கான ஒரு வழிதான் மூளை. இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். அறிவியலும் இதை நோக்கியே சுட்டிக்காட்டுகிறது. இதை அங்கீகரிப்பது, யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதலில் அடுத்த மாபெரும் புரட்சியாக இருக்கலாம்." 
என்பதாக, விஞ்ஞானி லியோனார்ட் ஸஸ்கிண்ட் (Leonard Susskind)கூறுகிறார். 

விஞ்ஞானி லியோனார்ட் ஸஸ்கிண்ட்  போலவே, இன்னும் பல விஞ்ஞானிகள், அதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும், பல தத்துவ சிந்தனையாளர்களும் அடங்குவர். அவர்களின் பட்டியலை கீழே காணலாம்:

1. மேக்ஸ் ப்ளாங்க் கோட்பாட்டியற்பியலாளர் (Max Planck: Theoretical physicist) 
2,3. ஸர் ஆர்தர் எடிங்டன் மற்றும் சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், 20-ம் நூற்றாண்டு இயற்பியலாளர் (Sir Arthur Eddington & Sir James Jeans: Early 20th-century physicists) 
4. டேவிட் ச்சால்மர்ஸ் மனம் பற்றிய தத்துவவாதி (David Chalmers: Philosopher of mind )
5. டோனால்ட் ஹாஃப்மன்,  அறிதலியல் விஞ்ஞானி (Donald Hoffman: Cognitive scientist )
6. கிறிஸ்டோஃப் கோச்,  நரம்பியல் விஞ்ஞானி (Christof Koch: Neuroscientist )
7. ப்ரையன் ஜோஸப்சன் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி (Brian Josephson: Nobel Prize-winning physicist )
8. பிலிப் காஃப், தத்துவவாதி (Philip Goff: Philosopher and leading proponent of panpsychism)
9. பெர்னார்டோ காஸ்ட்ரப், தத்துவவாதி+விஞ்ஞானி  (Bernardo Kastrup: Philosopher/scientist )
10. கியூலியோ டோனோனி, நரம்பியல் விஞ்ஞானி  (Giulio Tononi (Neuroscientist)
11. மரியோ ஸ்டோரோம், பொருளியலறிவியலாளர் Maria Strømme (Materials Scientist): 
12. லியோனார்ட் ஸஸ்கைண்ட்,  கோட்பாட்டியற்பியலாளர் (Leonard Susskind,      )
13. ரிச்சர்ட்  ஃபெய்ன்மேன், நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டியற்பியலாளர் (Richard Feynman, Theoretical physicist)
14. பால் டேவிஸ், கோட்பாட்டியற்பியலாளர் (Paul Davies, Theoretical physicist)
15. ஜான் போல்கிங்ஹோர்ன், கோட்பாட்டியற்பியலாளர் (John Polkinghorne,Theoretical physicist )
16. வெர்னர் ஹெய்ஸன்பர்க், நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி (Werner Heisenberg, Theoretical physicist )
17. யூஜின் விக்னர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி  (Eugene Wigner, Theoretical physicist )
18. எர்வின் ஷ்ரோடிங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி (Erwin Schrödinger, Theoretical physicist )
இந்த பட்டியல் எதிர் வரும் காலங்களில் மேன்மேலும் நீண்டு கொண்டே செல்லும்.

அதாவது, இன்னும் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் பொருண்மைவாதம், எந்திரவாதம், சுருக்கல்வாதம், யாவற்றுக்கும் மேலாக விஞ்ஞான வாதம் யாவும் முற்றிலுமாக பின்னுக்குத் தள்ளப்பட்டு, உணர்வின் முதன்மைத்துவமும், முக்கியத்துவமும் அனைத்து விஞ்ஞானிகளாலும், தத்துவவாதிகளாலும் கொண்டாடப்படும் வகையில், விஞ்ஞானமானது தலை நேராக மாற்றப்பட்டுவிடும்! விஞ்ஞானிகள் வேறும் பௌதீகவியலாளர்களாக (Physicists) மட்டுமல்லாமல், மீபௌதீக வியலாளர்களாகவும் (Metaphysicists) திகழ்வார்கள்! விஞ்ஞானத்திற்கும், தத்துவத்திற்கும் இடையிலான மோதல் போக்கும், முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டு, தத்துவம் மீண்டும் அதன் அசலான ஆட்சிபீடத்தில் அமர்த்தப்படும். இனி வரும் காலங்களில், விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகள், விளக்கங்கள், சிக்கலான் சமன்பாடுகளாகவும், சூத்திரங்களாகவும் அல்லாமல் பெரிதும் தத்துவார்த்த கதையாடல்களில் அமைவதாயிருக்கும்.

முடிவுரையாக, நாம் புரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விடயம் இதுதான். அதாவது, பருப்பொருளாலான இப்பிரபஞ்சத்தை ஒரு பரிணாம நிகழ்வு முறை (Evolutionary Process) என்பதாகவும், ஒரு மாபெரும் பரிணாம வயல்  (Evolutionary Field) என்பதாகவும் , புரிந்துகொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். பருப்பொருள் என்பது ஒரு பரிணாம ஊடகம், அல்லது கருவி போன்றதே. ஆக, பருப்பொருள் எனும் கருவியை, ஊடகத்தை, சாரக் கட்டுமானத்தைக் (Scaffolding) கொண்டு, பரிணாமம் தனது இலக்கு நிலையை அடைந்த பிறகு, பருப்பொருளின் தொகுதியான பிரபஞ்சத்தின் பணியும் பாத்திரமும் கை விடப்படும். 

பிரபஞ்சம் என்பது ஒரு பிரும்மாண்டமான நாடக மேடை போன்றதாகும். நாடகம் முடிந்து, நடிகர்களும், கதாபாத்திரங்களும் சென்றுவிட்ட பிறகு, அந்த மேடையானது கைவிடப்படும்! பிரபஞ்சம் எனும் நாடக மேடையானது, பிரதான நடிகர்களும், உப, மற்றும் துணை கதாபாத்திரங்களும் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே அமைக்கப்பட்டதாகும். இப்போதைக்கு நாடகமானது, உயிர்ப்புடனும், உணர்வுப் பெருக்குடனும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு நிகழ்வதாயிருக்கும். அதன் பிறகு, பிரபஞ்சம் எனும் நாடக மேடையானது கைவிடப்படும். கைவிடப்பட்ட அது பல டிரில்லியன் ஆண்டுகளில் சீர்குலைவுக்கு (Entropy) உட்பட்டு, படிப்படியாக சிதிலமடைந்து இறுதியாக அழிந்து போகும்.  

ஆகவே, நாம் கவலைப்படவும், அக்கறை கொள்ளவும் வேண்டியது பிரபஞ்சத்தின் தலைவிதியைப் பற்றியல்ல! மாறாக, நாம் எதற்காக இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றினோமோ, அந்தக் குறிக்கோளை, இலக்கை உய்த்துணர்ந்து முறையாக, முழுமையாக நிறைவேற்றுவது மட்டுமே ஆகும். நமது வாழ்க்கை என்பது வெறுமனே உண்டு, உறங்கி, இனம் பெருக்கி உயிர்வாழ்வதற்கானதல்ல! உயிர் வாழ்தல் என்பது அடிப்படையானதுதான் என்றாலும், உயிர் வாழ்தலின் நோக்கத்தை இழந்துவிடும் அளவிற்கு நாம் உடலின் வாழ்க்கையில் விலங்குகளைப்போல (2)  முற்றாக அமிழ்ந்துவிடுதல் ஆகாது. 

நமது வாழ்க்கை என்பது பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கும், அதன் முடிவு நிலைக்கும், அந்த நெடிய கிடைமட்டக் கோட்டின் நடுவே இடைப்பட்ட காலப் பகுதியில் செங்குத்துப் பாதையில் நிகழும் ஒன்றாக அமைந்துள்ளது! அதாவது பிரபஞ்சம் தோன்றி கிட்டத்தட்ட 1,000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதல் உயிர்-ஜீவி தோன்றியது. 1,400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அவதரித்தோம்! அதேபோல, பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிவதற்கு பல நூறு கோடி கோடியாண்டுகளுக்கு முன்பாகவே நாம், இப்பிரபஞ்சத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிடுவோம் எனலாம்!

நாம் நாடகக் கலைஞர்களையும், பார்வையாளர்களையும் போல, நாடகம் தொடங்கும் போது மட்டுமே முறையே மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் தோன்றுகிறோம்! நாடக அரங்கம் (பிரபஞ்சம்) அமைக்கப்படும் போதும், நாடகம் முடிந்து அரங்கம் பிரிக்கப்படும் போதும் நாம் இருப்பதில்லை! எது முக்கியமெனில், நாடகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதும், நாடக-விதிகளை அறிந்து, அவற்றை முழுமையாக நிறைவேற்றி, நமது (பரிணாமப்) பாத்திரத்தை முறையாக உணர்ந்து செயல்படுதல் மட்டுமே!
 
இவ்வளவு ஏன்? மனிதனின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள்தான்! அதற்குள்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் 50 ஆண்டுகளோ, 60, அல்லது 70 ஆண்டுகளோ,    எவ்வளவு ஆண்டுகள் வாழ்வோம் என்பதை முன்னறிய முடியாத நிலையில், நாம் ஒவ்வொருவரும் விரைவாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் வாழ்வின் இலக்கை  மரணத்துக்கு முன்னேயே அடைந்துவிட வேண்டும்! 

மனித வாழ்-காலம்  வரையறைக்குட்பட்டதுதான். ஆனால், அது பொதுவாகப் பலரும் எண்ணுவது போல,  மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமானதற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது! இந்த வரையறைக்குள்ளாகவே நம்மால் முழுமையாக வாழவும், வாழ்வின் ஒப்பற்ற இலக்கை முயன்றடையவும் முடியும் என்பதால்தான் நமது வாழ்-காலம் இவ்வாறு மிகவும் கச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

வாழ்வின் ஒப்பற்ற இலக்கு என்று இங்கு குறிப்பிடப்படுவது, நமது சிற்றுணர்வை பேருணர்வாக மாற்றமுறச் செய்திடல் என்பதே ஆகும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது என்னவெனில், முதலில் நாம் உணர்வுக்கு வர வேண்டும், அதாவது, நாம் வெறும் உடல் அல்ல, இன்னும் பலவித பிரமைகளுக்கு ஆட்படக்கூடிய மனமும் நாம் அல்ல; மாறாக உணர்வு தான் நாம் என்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும்  அடைந்தாக வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டபடி, மனித வாழ்க்கை என்பது வெறுமனே உண்டு, உறங்கி, இனம் பெருக்கி உயிர்பிழைப்பதற்கானதல்ல; அதாவது உயிர்பிழைத்தலுக்குரிய பொருட்களைப் பெறுவதற்கும், சௌகரியமாகவும், சொகுசாகவும் வாழ்வதற்கான பணத்தை, பொன் பொருளை, செல்வத்தை சேர்ப்பதிலேயே வாழ்காலத்தை விரயமாக்காமல், வாழ்வின் உட்பொருளை, அர்த்தத்தை, உண்மையை, இலக்கை அடையும் விதத்தில் ஆழமான விசாரத்தில் ஈடுபட வேண்டும். அத்தகைய ஆழமான விசார ஈடுபாட்டின் விளைவுதான் இக்கட்டுரையாகும். 

முக்கிய அடிக் குறிப்புகள் :

(1) ஒரு உயிருள்ள ஜீவி என்பது 99% பௌதீகச் சடப்பொருளால் ஆனதாகும். 1% 'உயிர்' எனும் பொருண்மையல்லாத பரிமாணத்துடன் தொடர்பில் இருக்கும் ஒரு விசேட அம்சமாகும். அதாவது, உயிருள்ள ஒரு ஜீவி என்பது பிரும்மாண்டமான இந்த மாபெரும் பௌதீகப் பிரபஞ்சத்தினுள் தோன்றிய இன்னொரு பிரபஞ்சம் எனலாம். எவ்வாறென்றால், ஒரு உயிர்ஜீவி அது ஒரு அமீபாவாக அல்லது ஒரு புழுவாக, அல்லது ஒரு மனிதனாக  இருக்கலாம். அதற்கு ஒரு அகத்தன்மை, ஒரு உட்புறம் (Interiority) உள்ளது. 
ஒரு உயிர்-ஜீவியின் முக்கிய பண்புகளாக செல்லமைப்பு (செல்களால் ஆனது), வளர்சிதை மாற்றம்,  இனப்பெருக்கம், புறத் தூண்டல்களுக்குப் பதிலளித்தல், தகவமைப்பு மற்றும் பரிணாமம், உள்ளகச் சமநிலை, இயக்கம் ஆகியவைகள் சொல்லப்படுகின்றன. ஆயினும், ஒட்டு மொத்தப் பௌதீகப் பிரபஞ்சமும் சீர்குலைவின் (entropy) பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், உயிர்ஜீவியின், சீர்குலைவுப் போக்குக்கு எதிராக தன்னுள்ளே சீர்குலையாமல் தன்னைப் பராமரிக்கும் பண்பும், தனது உள்ளகச் சம நிலையைப் பராமரிக்கும் பண்பும் பிரதானமாகப் பார்க்கப்பட வேண்டும். ஏனென்றால், ஒரு உயிர்ஜீவியானது "தான் வேறு, புறவுலகம் வேறு" என்ற பிளவை முதன் முதலில் இப்பிரபஞ்சத்தில் அறிமுகப்படுத்துகிறது. ஆம், முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் நுண்ணுயிரி தான், முதன்முதலில் இப்பிரபஞ்சத்தில் அகம், புறம் எனும் பிரிவினையை தன்னுடன் கொண்டு வந்தது. இவ்வாறு "தான்வேறு, உலகம் வேறு" என்ற பிரிவை உருவாக்கியதால்தான் அதனை இந்த மாபெரும் பௌதீகப் பிரபஞ்சத்தினுள் தோன்றிய இன்னொரு பிரபஞ்சம் என்பதாக நான் வருணித்துக் கூறுகிறேன். 
அடுத்து, முதன் முதலில், முதல் உயிரியான ஒற்றைச் செல் நுண்ணுயிரியின் வருகை தான் உலகை புறம் எனவும், அகம் எனவும் இரண்டாகப் பிரித்தது. என்றாலும், தான் ஒரு "அக-ஜீவி" (அகத்தைக் கொண்ட ஜீவி) என்பதை உணரும் அளவிற்கு அது தன் அகத்தில் (உணர்வில்) ஆழப்படவில்லை. அதற்கு "சுய உணர்வு" எனும் அந்த அரிய அம்சம் இல்லை. ஆகவேதான், அந்த அமீபா தான், நெடிய பரிணாமப் பயணத்தின் வழியாக தற்போது சுயவுணர்வையுடைய மனித ஜீவியாக எழுந்துள்ளது. ஆம், அகம் என்பது அதற்குரிய உணர்வுப் பரிமாணத்துடன் முதன் முதலில் மனிதனுடன் மட்டுமே தொடங்குகிறது. ஆகவே, மனிதனை மூன்றாம் பிரபஞ்சம் என்று காண்பது மிகப் பொருத்தமாயிருக்கும்.
உண்மையில், பரிணாமம் என்பது ஒற்றைச் செல் உயிரியிலிருந்து பல செல்லுயிரிகளையும், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகளையும், பிறகு மனித இனத்தையும், இவ்வாறு விதம் விதமான உயிரிகளை உருவாக்குவதல்ல. மாறாக, இவ்வுயிரிகளின் வழியாக அகத்தன்மையை, மேன்மேலும் ஆழமான உணர்வார்ந்த அகத் தன்மையை எட்டுவதே ஆகும். இவ்வகையில், மனிதனுள் வெளிப்பட்டிருப்பது தொடக்க நிலை உணர்வு மட்டுமே, ஆகவேதான், அதை "சிற்றுணர்வு" என இக்கட்டுரையில் கூறப்படுகின்றது. மனிதன் முழுமை பெற வேண்டுமெனில், அவன் உணர்வில் மேன்மேலும் பரிணமித்து அதாவது வளர்ந்து உணர்வின் உச்ச நிலையை அடைய வேண்டும். ஏனென்றால், பரிணாமம் என்பது அடிப்படையில், உணர்வுப் பரிணாமமே. பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வுதான். 
<>

(2) ஒரு விலங்கு ஜீவியின் சுயம் என்பது, வெறும் அதன் உடல் மட்டுமேயாகும். அது பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்பூக்கிகளினால் இயக்கப் படுவதாகும். அதற்கு உயிர் பிழைத்திருப்பது என்பது மட்டுமே வாழ்க்கையாகும். ஆனால், மனித ஜீவியானவன், உடல், மனம், ஆன்மா என மூன்று அடுக்குகளால் ஆன சுயம் ஆவான். அவனது உடல் என்பது அடிப்படைச் சுயம் ஆகும். அதை அவன் பராமரித்துத்தான் ஆக வேண்டும். அதாவது, விலங்குகளைப்போலவே, மனிதனும் பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்பூக்கிகளினால், இயக்கப்படுபவன் தான்!   ஆனால், மனிதனுக்கு அவனது உடல் எனும் சுயத்தை அடுத்து மனம் எனும் ஒரு இடைச் சுயமும் உள்ளது. ஆனால், 'மனம்' (Mind) என்பது எதற்காக இருக்கிறது, அதன் அசலான செயல்பாடு (function) என்ன என்பதை பெரும்பாலானோர், கிட்டத்தட்ட 99.9 % பேர் அறிவதேயில்லை. மனதின் உன்மையான செயல்பாடு, உடலின் தேவைகளை உணர்ந்து அவற்றை பூர்த்தி செய்வது மட்டும் அல்ல. அதாவது நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைப் பெறுவதற்காக பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. மாறாக, வாழ்வின் உட்பொருளை, அர்த்தத்தை, வாழ்வின் குறிக்கோளை, இலக்கை உணர்ந்தறிவது தான் மனதின் தலையான, முதன்மையான செயல்பாடு ஆகும். மேலும், மனதின் ஒரு பெரும் பிரச்சினை என்னவென்றால், அது பலவிதமான பிரமைகளுக்கு ஆட்படுவதுதான். முறையான மெய்ம்மை நாட்டம் என்பது இல்லாவிடில், மனமானது செயற்கையும், போலியுமான இலட்சியங்களை வகுத்துக்கொண்டு அவற்றின் பின் சென்று வாழ்க்கையைத் தொலைத்துவிடும் அபாயத்தில் சிக்கிக்கொள்ளும். அடுத்து ஆன்மா என்பது மனிதனின் உயர் சுயம் ஆகும். ஆனால், அது உடல், மனம் போல மனிதனுக்குத் தயார் நிலையில் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல ! மாறாக, மனிதனின் உணர்வார்ந்த தன்மையால் அடையப்பட வேண்டிய அம்சம் ஆகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், விழிப்படைந்த மனம் தான் ஆன்மா என்பதாகும். 
<>
மா.கணேசன்/ 10.01.2026 / அசோக் நகர், நெய்வேலி.
<>
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

Monday, 9 March 2026

ஏன் உயிர்ஜீவிகள்? ஏன் மனித ஜீவிகள்?

 


 

 

 
 











என்னுடைய பிரச்சினை, கடவுளை மறுப்பதோ, அபத்தமான விஞ்ஞானக் கோட்பாடுகளையும், கருதுகோள்களையும் கொண்டு கடவுளை தேவையற்ற ஒன்றாக நிரூபிப்பதோ அல்ல. மாறாக, மதவாதிகள் கூறும் உள்ளீடற்ற கடவுளுக்குப் பதிலாக, உண்மையான கடவுளை அதாவது மூல மெய்ம்மையைக் கண்டுபிடிப்பதே எனது நோக்கம்!


இயற்கையின் படைப்போ, அல்லது கடவுளின் படைப்போ, மனிதஜீவிகளைப் படைப்பது அவ்வளவு அவசியமா, கட்டாயமா? முதலில் ஒரு விடயத்தை தெளிவு படுத்துக்கொள்வோம். மனிதஜீவிகள் இயற்கையின் படைப்பும் அல்ல, கடவுளின் படைப்பும் அல்ல! உரிய விளக்கம் வேண்டி காத்துக்கிடக்கும் கடவுளை  விட, மிகப் பொருத்தமான, ஒரு மெய்ம்மையான "பேருணர்வு" (Super-Consciousness) தான் மனிதனை மட்டுமல்ல, எல்லா உயிரினங்கள் மற்றும் அனைத்தையும், இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்தது! 

பேருணர்வானது பரிணாமம் எனும் வழிமுறையைக் கொண்டு முதல் உயிர் ஜீவியையும், எல்லா உயிரினங்களையும், பிறகு அனைத்து உயிரினங்களையும் விஞ்சிய சிறப்பியல்பைக் கொண்ட ஜீவியாக உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக மனிதனையும் படைத்தது. 

ஆனால், உண்மையில், பேருணர்வானது உயிர்ஜீவியைப் படைக்கவேண்டுமென்றோ, மனிதனைப் படைக்கவேண்டுமென்றோ எண்ணி, திட்டமிட்டு படைக்கவில்லை. மாறாக, மூல மெய்ம்மையான பேருணர்வு தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட, கிட்டத்தட்ட ஒரு விபரீதமான பரிசோதனையின் விளைவாகத்தான் இந்த மாபெரும் பிரபஞ்சமும், அதிலுள்ள கோடானு கோடி கோடி கேலக்ஸிகளும், நட்சத்திரங்களும், கிரகங்களும், நம் பூமியின் மீது உயிரினங்களும், மனித ஜீவிகளும் தோன்றின. 

அது என்ன விபரீதமான பரிசோதனை என்றால், மூலமெய்ம்மையான பேருணர்வானது, தனது எதிர்-நிலையான, 'தான்-அற்ற', 'தான்-இல்லாத', அந்த நிலை எப்படியிருக்கும் என்பதை அனுபவம் கொள்ள விரும்பி, தன்னைத்தானே குறைத்துக்கொண்டது, அல்லது நீக்கிக்கொண்டது! இதன் விளைவாக,  அது 'பேருணர்வு' நிலையிலிருந்து வழுவி முற்றிலும் உணர்வற்ற சட நிலைக்குக் (State of Matter) கீழிறங்கியது. இந்த மாற்றத்தை, வழிமுறையை, நாம்  "சுரிணாமம்" (Involution) என்றழைக்கலாம். 

இந்த சுரிணாம வழிமுறை நேரடியாக பொருண்மையான நிலைக்குக் கீழிறங்காமல், உணர்வுமில்லாத, பொருண்மையுமில்லாத ஒரு இடை நிலையை அடைந்தது. அந்நிலையை நாம் குவாண்டம் பௌதீகவியலின் சொற்களில் சொன்னால், "குவாண்டம் புலம்" (Quantum-Field) என்றழைக்கலாம். இந்த குவாண்டம் புலம் என்பது, பேருணர்வின், ஒருவகையான செறிவிழந்து பரவிச்சிதறிய (diffused and scattered state of Consciousness) "உணர்வுப் புலம்" (consciousness-field), ஆகும். 

குவாண்டம் புலம் என்பது குவாண்டம் பௌதீகவியலின்படி, ஒரு அடிப்படையான, கண்ணுக்குத் தெரியாத  நிலையாகும், இது அனைத்து வெளி- காலத்தையும் ஊடுருவி, துகள்கள் உருவாவதற்கான அடிப்படை அம்சமாக, அடித்தளமாகச் செயல்படுகிறது எனப்படுகிறது. நமது சுரிணாமக் கோட்பாட்டின்படி, அணுத்துகள்கள், பருப்பொருள் என்பது, பேருணர்வு சுருங்கியதால் உருவான அடிமட்ட நிலை என்றோம். இவ்விடத்தில், நாம் நமது கோட்பாட்டில் ஒரு திருத்தத்தை செய்வோம். அதாவது, பேருணர்வு சுருங்கி,  குவாண்டம் புலமாகியது. குவாண்டம் புலத்திலிருந்து அடிப்படை அணுத்துகள்கள் (பருப்பொருள்), பிறகு பிரபஞ்சம் யாவும் தோன்றின, என்பதாகக் கொள்வோம். 

பேருணர்வானது சுரிணாம மாற்றத்திற்கு (Involutionary Process) உட்பட்டு குவாண்டம்-புலமாக மாறுகின்ற அந்த நிகழ்வை விஞ்ஞானமானது, "பெரு வெடிப்பு" (Big bang) என்கிறது. (1)    பெருவெடிப்பிலிருந்து உயிரின் முதல் தீப்பொறி வரையிலான விஞ்ஞானம் கூறும் பரிணாமப் பயணக் கட்டங்களை அடிக்குறிப்பு (2) -ல் காணவும்.   
  
ஆக, குவாண்டம் புலத்திலிருந்து, அணுத்துகள்கள் தோன்றத்தொடங்கிய கணத்திலிருந்து "பரிணாமம்" (Evolution) எனும் நீண்ட நெடிய வழிமுறை தொடங்கிவிடுகிறது. இந்த நெடிய வழிமுறையில் ஒரு கட்டத்தில், (அதாவது பிரபஞ்சம் தொடங்கி 1,000 கோடி ஆண்டுகளின் முடிவில்) முதல் உயிரி தோன்றுகிறது. பிறகு தொடர்ந்து நிகழ்ந்த 400 கோடி ஆண்டுகள் நெடிய உயிரியல் பரிணாம வழிமுறையில், சிந்திக்கும் திறன் கொண்ட, மனமுள்ள, சுய-உணர்வுள்ள மனித ஜீவிகள் தோன்றின. ஆம், இந்தக் கட்டம் வரை நாம் சொல்லும் பரிணாமக் கதையும், விஞ்ஞானம் கூறும் கதையும் ஒத்துப்போகிறது எனலாம். ஆனால், நாம் கூறும் பரிணாம வழிமுறைக்கு நோக்கம், குறிக்கோள், இலக்கு உள்ளன. டார்வினியப் பரிணாம வழிமுறைக்கு நோக்கம், குறிக்கோள், இலக்கு எதுவும் இல்லை எனப்படுகிறது. 

இங்குதான் முரன்பாடுகளும், பிரச்சினைகளும் எழுகின்றன. முதலிடத்தில், நோக்கம் குறிக்கோள் ஏதுமற்ற குருட்டாம் போக்கிலான டார்வினிய பரிணாமத்தில், (உயிரும், உணர்வும் அற்ற சடப்பொருளிலிருந்து) உயிருள்ள ஜீவிகளும், உணர்வுள்ள மனித ஜீவிகளும் ஏன், எதற்காகத் தோன்ற வேண்டும்? அதே நேரத்தில், இறையியல் கோட்பாட்டின்படி, 'கடவுள்' என்பவர் ஏன், எதற்காக உயிர்களையும், மனிதர்களையும் படைக்க வேண்டும்? தொடர்ந்து செல்வதற்கு முன், இங்கு நம் முன்னே எதிரும் புதிருமான மூன்று பார்வைகள், அல்லது கோட்பாடுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் எதை அடிப்படையாக, மையமாகக் கொண்டு இயங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.

1. கடவுள் மையக் கோட்பாடு  (God -Centered Theory) : இதில் கடவுள் தான் மையம், அடிப்படை மெய்ம்மை, மூலம், யாவும். ஆனால், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை முன்னிறுத்துவதால், அது பிரச்சினையை மேலும் தீர்க்கமுடியாததாய் ஆக்கிவிடுகிறது. பொத்தாம் பொதுவாகச் சொன்னால், கடவுள் என்பவர் ஒரு மந்திரவாதியைப் போன்றவர். அவர் எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர் என்று சொல்லப்படுகிறது. ................

2. பருப்பொருள் மையக் கோட்பாடு (Matter -Centered Theory) : இதில் பருப்பொருள் தான் மையம், அடிப்படை மெய்ம்மை, மூலம், யாவும். பருப்பொருள் என்பது தன்னில் தானே தோன்றியதான, சாசுவதமான பொருள் எனப்படுகிறது. இதற்கும் மந்திர சக்தி உள்ளது போலத்தான் சொல்லப்படுகிறது. இல்லாவிட்டால், உயிரும், உணர்வும் இல்லாத சடப்பொருள் எவ்வாறு உயிரைத் தோற்றுவிக்கவும், சிந்திக்கும் மனமுள்ள, உணர்வுள்ள மனித ஜீவிகளை உருவாக்கவும் முடியும்? முதலிடத்தில், பருப்பொருள் என்பது தன்னில் தானே தோன்றியதான, சாசுவதமான பொருளாக இருப்பதற்கான வாய்ப்புக்களே இல்லை எனலாம். மேலும், பருப்பொருளின் அடிப்படைப் பண்புகளைக் கொண்டு பார்த்தால், தர்க்க ரீதியாகவும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை! மேலும், குவாண்டம் பௌதீகவியலின்படி, பருப்பொருளின் ஆகச் சிறிய அடிப்படை அணுத்துகள் என்பது கூட பொருண்மையானதல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. .................

3. பேருணர்வு மையக் கோட்பாடு (Super-Consciousness - Centered Theory) : இது என்னுடைய பார்வையாகும்.  இதில் பேருணர்வு தான் மையம், அடிப்படை மெய்ம்மை, மூலம் (Source), யாவும். இந்தப் பேருணர்வை நம்மால் ஊகிக்கவும், சில நிபந்தனைகளுக்குட்பட்டு அதை உணரவும், அனுபவம் கொள்ளவும் முடியும். எவ்வாறென்றால், நாம் உணர்வுள்ள மனித ஜீவிகள், ஆகவே உணர்விலிருந்து பேருணர்வை ஊகித் தறியவும் முடியும், முயன்றால் அதைச் சென்றடையவும் முடியும்.............

முதலிடத்தில், எதுவும், எல்லாமும் தோன்றுவதற்கு மூல மெய்ம்மை என்று ஒன்று அவசியம். ஏனென்றால், ஒன்றுமில்லாததிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. நம்முன்னே இங்கே மூன்று மூல மெய்ம்மைகள் உள்ளன. அதாவது, கடவுள், பருப்பொருள், பேருணர்வு ஆகியன. இந்த மூன்றில் உண்மையில் எது மூல மெய்ம்மையாக அமையவியலும் என்பதை ஆராய்ந்து காண்போம்.

இப்போது நாம் இந்த மூன்றாவது பார்வையைக் கொண்டு, ஏன் உயிரினங்கள், ஏன் மனிதர்கள்? என்ற கேள்விக்கான பதிலை விளக்கமாகக் காண்போம்.

மூல மெய்ம்மையான பேருணர்வு தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட, கிட்டத்தட்ட ஒரு விபரீதமான பரிசோதனையின் விளைவாகத்தான் இந்த மாபெரும் பிரபஞ்சமும், அதிலுள்ள கோடானு கோடி கோடி கேலக்ஸிகளும், நட்சத்திரங்களும், கிரகங்களும், நம் பூமியின் மீது உயிரினங்களும், மனித ஜீவிகளும் தோன்றின என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். 

மூலமெய்ம்மையான பேருணர்வானது, தனது எதிர்-நிலையான, தான்-அற்ற, தான்-இல்லாத, அந்த நிலை எப்படியிருக்கும் என்பதை அனுபவம் கொள்ள விரும்பி, தன்னைத்தானே குறைத்துக்கொண்டது, அல்லது நீக்கிக்கொண்டது! இதன் விளைவாக,  அது 'பேருணர்வு' நிலையிலிருந்து வழுவி முற்றிலும் உணர்வற்ற சட நிலைக்குக் (State of Matter) கீழிறங்கியது. இந்த மாற்றத்தை, வழிமுறையை, நாம்  "சுரிணாமம்" (Involution) என்றழைக்கலாம் என்றோம். 

அதாவது, சுரிணாமத்தின் வழியாக பேருணர்வானது தனது உணர்வுத்தன்மையை இழந்து பௌதீகச் சடப் பிரபஞ்சமாக மாறிய நிலையில், அந்த சடப் பிரபஞ்சம், அல்லது சடப்பொருள் என்ன செய்யும், அல்லது என்னவாகும்? ஆம், சுரிணாமத்தையடுத்து, அதனால் தோன்றிய சடப்பொருளானது, உடனடியாக, அடுத்த கணத்திலிருந்து ஒரு நீண்ட நெடிய பரிணாம வழிமுறைக்கு ஆட்படுவதைத்தவிர அதற்கு வேறு வழியில்லை. 

மேலும், சடப் பொருளுக்கு யாதொரு நோக்கமோ, குறிக்கோளோ, இலக்கோ இருக்க வியலாது; நாமும் கற்பிக்க இயலாது. ஆனால், சடப்பொருளுக்கு, அதன் ஒவ்வொரு அணுத்துகளுக்கும் உள்ளார்ந்த ஒரு உந்துதல் மட்டும் இருக்கும் என நாம் ஊகிக்கலாம். அந்த உந்துதலின் விளைவாக, சடப்பொருளானது எவ்வாறேனும், பரிணாமத்தின் வழியாக தான் எதிலிருந்து தோன்றியதோ, அந்த மூல நிஜத்தினை, அதாவது பேருணர்வு நிலையை, கண்டடைந்திடும் எனலாம். அதாவது, ஒரு நதியானது தான் தோன்றிய மூல நிஜமான சமுத்திரத்தை சென்றடைவது போல! நதிக்கு தான் செல்ல வேண்டிய பாதை தெரியாது. ஆனாலும், புவியின் ஈர்ப்பு விசையை, உந்துதலாகக்கொண்டு எவ்வாறோ, அது சமுத்திரத்தை சென்றடைந்துவிடுகிறதல்லவா! 

மேலும்,  மூலமெய்ம்மையான பேருணர்வானது தான் இழந்த தனது அசலான நிலையை மீண்டும் அடைந்தாக வேண்டும். அதாவது, பேருணர்வு தன்னை இழந்து, மீண்டும் தன்னை மீள்-கண்டுபிடிப்பு செய்வதுதான் 'சுரிணாமம்-பரிணாமம்' என்கிற வழிமுறையாகும். பேருணர்வு என்பது "சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை" (State of Infinite Possibilities) யாகும். இது பௌத்தம் கூறும் 'முடிவற்ற சாத்தியம்' என்பதற்கு இணையானது எனலாம். ஆம், பேருணர்வு, பேருணர்வைத் தான் படைக்க விரும்பும். கடவுளாக இருந்தால், அவர் தன்னைத்தான் மறுபடைப்பு செய்வார். எந்த உயிரினமும் தன்னினத்தைத்தான் மறுபடைப்பு செய்கிறது. ஒரு குதிரை ஒரு கழுதையை உருவாக்காது!

ஒரு வகையில், கடவுளை மூலமெய்ம்மையாகக் கொண்ட  இறையியலானது, "கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தார்" என்று சொல்வதைப்போல, நாமும் பேருணர்வானது தன்னை மறுபடைப்பு செய்யும் வழிமுறையில், முதலில், உயிர்ஜீவிகளையும், பிறகு தனது சாயலில் அமைந்த சிற்றுணர்வுள்ள மனித ஜீவிகளையும் உருவாக்கியது எனலாம். ஆனால், பருப்பொருள் அல்லது சடப்பொருளை நாம் மூல மெய்ம்மையாகக் கொண்டால், அது மீண்டும் (தனது சாயலில்) சடப்பொருளைத்தான் படைக்கும் என்பது பொருத்தமற்றதாக உள்ளதால், பொருண்மைவாதம் அல்லது பொருள்முதல்வாதம் என்பதை நாம் முற்றாக புறந்தள்ளிவிடலாம். அதனுடன் சேர்த்து விஞ்ஞானவாதத்தையும் (Scientism), இன்னும் டார்வினிய பரிணாம வாதத்தையும்  புறந்தள்ளிவிடலாம். 

பேருணர்வானது தன்னை மறுபடைப்பு செய்யும் வழிமுறையில், முதலில், உயிர்ஜீவிகளையும், பிறகு தனது சாயலில் அமைந்த சிற்றுணர்வுள்ள மனித ஜீவிகளையும் உருவாக்கியது என்றோம். ஆனால், இவ்விடத்தில், நாம் முக்கியமாகவும், மிகத் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,  பேருணர்வின் உண்மையான நோக்கம் உயிர்ஜீவிகளையும், மனித ஜீவிகளையும் உருவாக்குவதல்ல! உயிர் ஜீவி என்பது உணர்வை ஏற்கும்/தாங்கும் ஒரு கட்டமைப்பின் முன்னேற்பாட்டுச் செயல்முறையின் ஒரு முன் வடிவம் மட்டுமே ஆகும். அதாவது, உணர்வை ஏற்பதற்கான ஒரு முறையான முழுமையான உறுப்பு/அங்கமான 'மூளை' யை எட்டுவதற்கான படிக்கற்களே (precursor) உயிர் ஜீவிகள் ஆகும். அத்தகைய  ஒரு முறையான முழுமையான உறுப்பை (மூளையை)க் கொண்ட ஒரு ஜீவிதான் மனித ஜீவி என்பவன் ஆவான். உண்மையில், உயிர்ஜீவிகளாகட்டும், மனிதஜீவிகளாகட்டும் அவை வெறும் உணர்வுப் பரிணாமத்திற்கு உதவும் கருவிகள் மட்டுமே ஆகும்.

பேருணர்வானது, தனது விபரீத பரிசோதனை வழிமுறையான 'சுரிணாமம்' (Involution) வழியாக, தனது உணர்வை முற்றிலுமாக இழந்து, பருப்பொருள் நிலைக்குத் தாழ்ந்த பிறகு, 'பரிணாமம்' (Evolution) எனும் நீண்ட நெடும் வழிமுறை வாயிலாக படிப்படியாக உணர்வு நிலையில் உயர்ந்து இறுதியாக தனது பேருணர்வு நிலையை எட்டும் வழிமுறையின் இடை நிலைகள் தான் உயிர்ஜீவிகளும், மனித ஜீவிகளும் ஆகும். அதாவது உணர்வுப் பரிணாமத்தின் கருவிகள் மற்றும் பிரதிநிதிகள் என்பதற்கு மேலாக, உயிர்ஜீவிகளுக்கும், மனித ஜீவிகளுக்கும் வேறு பிரத்யேக முக்கியத்துவம் ஏதுமில்லை! 

அதே நேரத்தில், மனிதனானவன் தனது பரிணாமப் பொறுப்பினை ஏற்கவும், நிறைவேற்றவும் தயாரானால், அவனது உய்விற்கான (நற்கதி) பெரும் வாய்ப்பு திறக்கும். இல்லாவிடில், அவன் இன்னொரு விலங்கு போலவே இப்பூமியின் மீது எலிகளையும், தவளைகளையும் போல வெறுமனே உயிர்பிழைத்து, அர்த்தமற்ற வகையில் மாண்டு மறைந்து போவான்! 

மற்ற உயிரினங்களுக்கும், மனித ஜீவிகளுக்கும் இடையேயான வித்தியாசம், மனிதஜீவிகளிடம் 'உணர்வு' எனும் பரிமாணம் இருப்பதுதான். அதே நேரத்தில், மனித ஜீவிகளை உணர்வின் தொடக்க நிலையை எட்டுகிற அளவிற்கே பரிணாமம் கொண்டு சேர்த்துள்ளது. அதற்குமேல், பரிணாமமானது உச்ச உணர்வு, அல்லது பேருணர்வு நிலைக்கு மனிதஜீவிகளை தள்ளிக்கொண்டு போய் சேர்க்காது! 

உணர்வின் உச்ச நிலையை எட்டவேண்டுமெனில், மனித ஜீவிகள் தாங்கள் (உடல், மனம் ஆகியவற்றைக் கடந்த) "உணர்வுஜீவிகள்" என்கிற உணர்வைப் பெற்றாக வேண்டும். அதாவது, மனிதஜீவிகள் ஒவ்வொருவரும் தங்களது உணர்வுக்கு விழித்தாக வேண்டும். உணர்வு கொண்டு தமது இருப்பை உணர்ந்தாக வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் உணர்வில் மூழ்கி நிலைத்து உணர்வு மயமாகிட வேண்டும். எவ்வாறேனும் ஒவ்வொரு மனிதனும் அந்த பேருணர்வை ஒரு கணமேனும் ருசித்தாக வேண்டும். ஏனெனில், இறுதியான அர்த்தம், உண்மை, அன்பு, கடவுள், அனந்தம், ஆன்மா ஆகியவை வெறும் சொற்களோ, குறியீடுகளோ, கோட்பாடுகளோ அல்ல! அவை நேரடியாக ஒவ்வொருவரும் அனுபவித்தறிய வேண்டிய மெய்ம்மைகள் ஆகும்!  

ஆம், பேருணர்வு தான் உண்மையான கடவுள் அதாவது மூல மெய்ம்மை ஆகும்!  


முக்கிய அடிக்குறிப்புகள்:

1. பெரு வெடிப்பு கோட்பாடு (Big Bang Theory) என்பது சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிக அதிக வெப்பமான, அடர்த்தியான ஒரு புள்ளியில் (Singularity) இருந்து விரிவடையத் தொடங்கி, இன்றைய நிலையை அடைந்ததாகக் கூறும் முக்கிய அறிவியல் கோட்பாடாகும். இது அண்டத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை விளக்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியாகும். 
ஆனால், பெரு வெடிப்பு கோட்பாட்டில் சில பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. அதாவது, பிரபஞ்சம் மிக அதிக வெப்பமான, அடர்த்தியான ஒரு புள்ளியில் (Singularity) இருந்து வெடித்து விரிவடையத் தொடங்கியது என்கிறது. அந்தப் புள்ளி எங்கிருந்து வந்தது, ஏன் வெடித்து, பிரபஞ்சமாக விரிவடைய வேண்டும் என்பது போன்ற கேள்விகளை அது கேட்கவும் இல்லை, அதனிடம் அதற்கான பதில்களும் இல்லை! 

(2)   பெருவெடிப்பிலிருந்து உயிரின் முதல் தீப்பொறி வரையிலான பயணம், 13.8 பில்லியன் ஆண்டுகால சிக்கலான வளர்ச்சியின் கதை: -
தூய ஆற்றலில் இருந்து துணை அணு துகள்கள், பின்னர் அணுக்கள், நட்சத்திரங்கள் மற்றும் இறுதியில் உயிரியல் வரை நகர்கிறது.
அந்த செயல்முறையின் காலவரிசை இங்கே:
1. ஆரம்பம்: ஆற்றல் மற்றும் பொருள் (0 முதல் 380,000 ஆண்டுகள் வரை)
ஒருமைப்பாடு & பணவீக்கம்: பிரபஞ்சம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெப்பமான, அடர்த்தியான புள்ளியாகத் தொடங்கியது. ஒரு நொடியின் ஒரு பகுதியிலேயே, அது "பணவீக்கத்திற்கு" உட்பட்டது, ஒளியின் வேகத்தை விட வேகமாக விரிவடைந்தது.
துகள் சூப்: அது சிறிது குளிர்ந்தவுடன், ஆற்றல் குவார்க்குகள் மற்றும் எலக்ட்ரான்களாக ஒடுங்கியது. பின்னர் குவார்க்குகள் ஒன்றிணைந்து புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை உருவாக்கின.
நியூக்ளியோசைன்தசிஸ்: முதல் 3 நிமிடங்களுக்குள், முதல் கருக்கள் (பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்) உருவாகின.
மறுசீரமைப்பு: 380,000 ஆண்டுகளுக்குப் பிறகு, எலக்ட்ரான்கள் கருக்களைச் சுற்றி வர போதுமான அளவு குளிர்ச்சியடைந்து, முதல் நடுநிலை அணுக்களை உருவாக்கியது. ஒளி இறுதியாக விண்வெளியில் பயணிக்க முடியும் (இந்த ஒளி இன்றும் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணியாகத் தெரியும்).
2. நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் சகாப்தம் (100 மில்லியன் முதல் 9 பில்லியன் ஆண்டுகள் வரை)
ஈர்ப்பு விசை ஆட்சி செய்கிறது: ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயு மேகங்கள் ஈர்ப்பு விசையின் கீழ் சரிந்து முதல் நட்சத்திரங்களை உருவாக்கின.
காஸ்மிக் சமையலறை: இந்த நட்சத்திரங்களுக்குள், அணுக்கரு இணைவு கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் இரும்பு போன்ற கனமான தனிமங்களை உருவாக்கியது. பாரிய நட்சத்திரங்கள் வெடித்தபோது (சூப்பர்நோவாக்கள்), அவை இந்த தனிமங்களை விண்வெளியில் சிதறடித்தன.
விண்மீன் பரிணாமம்: நட்சத்திரங்கள் விண்மீன் திரள்களாகக் கொத்தாக இருந்தன. நமது விண்மீன், பால்வீதி, உருவாகி, பல தலைமுறை நட்சத்திரங்கள் வாழ்ந்து இறந்தன, வாழ்க்கைக்குத் தேவையான "நட்சத்திர தூசி" மூலம் அண்டத்தை வளப்படுத்தின.
3. சூரிய மண்டலத்தின் பிறப்பு (9.2 பில்லியன் ஆண்டுகள் / 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு)
சூரியன்: அருகிலுள்ள ஒரு சூப்பர்நோவா அதிர்ச்சி அலை சூரிய நெபுலாவின் சரிவைத் தூண்டியிருக்கலாம். மையம் நமது சூரியனாக மாறியது.
குவிப்பு: மீதமுள்ள தூசி மற்றும் வாயு சூரியனைச் சுற்றி சுழன்று, மோதி ஒன்றாக ஒட்டிக்கொண்டு "கிரகங்கள்" உருவாகின, அவை இறுதியில் பூமி உட்பட கோள்களாக மாறின.
4. ஆரம்பகால பூமி (4.5 முதல் 4.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு)
ஹேடியன் யுகம்: பூமி ஆரம்பத்தில் உருகிய பாறையின் ஒரு பந்து. இது சிறுகோள்கள் மற்றும் வால்மீன்களால் வீசப்பட்டது, அவை நீர் மற்றும் கரிம மூலக்கூறுகளை வழங்கியதாக நம்பப்படுகிறது.
குளிர்ச்சி மற்றும் பெருங்கடல்கள்: மேற்பரப்பு குளிர்ந்தவுடன், ஒரு மேலோடு உருவானது, மற்றும் எரிமலை வாயு வெளியேற்றம் ஒரு வளிமண்டலத்தை உருவாக்கியது. நீராவி மழையாக ஒடுங்கி, முதல் பெருங்கடல்களை உருவாக்கியது.
5. வாழ்க்கைக்கு மாற்றம் (4.0 முதல் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு)
வேதியியல் உயிரியலாக மாறியது இங்குதான். சரியான வழிமுறை இன்னும் ஒரு மர்மமாக இருந்தாலும், விஞ்ஞானிகள் பல முக்கிய படிகளை சுட்டிக்காட்டுகின்றனர்:
கரிம மூலக்கூறுகள்: எளிய சேர்மங்கள் (ஹைட்ரஜன் சயனைடு மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்றவை) வினைபுரிந்து அமினோ அமிலங்கள் மற்றும் நியூக்ளியோடைடுகளை (புரதங்கள் மற்றும் டிஎன்ஏவின் கட்டுமானத் தொகுதிகள்) உருவாக்கின.
ஆதிகால சூப் / நீர் வெப்ப வென்ட்கள்: இந்த மூலக்கூறுகள் அலை குளங்களில் அல்லது ஆற்றல் மிகுதியாக இருந்த ஆழ்கடல் எரிமலை வென்ட்களைச் சுற்றி குவிந்திருக்கலாம்.
சுய-பிரதிபலிப்பு: ஒரு மூலக்கூறு - அநேகமாக RNA - தன்னைத்தானே நகலெடுக்கும் திறனைப் பெற்றது. இது "RNA உலகம்" கருதுகோள்.
முதல் செல்: இந்த சுய-பிரதிபலிப்பு மூலக்கூறுகள் ஒரு கொழுப்பு சவ்வில் (லிப்பிட் இரட்டை அடுக்கு) மூடப்பட்டு, சுற்றுச்சூழலிலிருந்து அவற்றைப் பாதுகாத்தன. இது முதல் புரோகாரியோட்களை (எளிய ஒற்றை செல் உயிரினங்கள்) உருவாக்கியது.
 ✨  

தொடர்புள்ள முக்கிய பதிவுகள்/கட்டுரைகள்
1. உயிர் எனும் புதிர்!  https://vicharamarg.blogspot.com/2016/10/blog-post_21.html
2. உணர்வு எனும் மகா புதிர்!  https://vicharamarg.blogspot.com/2016/11/blog-post.html


மா.கணேசன்/ 24.02.2026 / அசோக் நகர், நெய்வேலி.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><> 

Friday, 6 March 2026

எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing)

 

















"ஏன் இங்கே ஒன்றுமில்லாததற்குப் பதிலாக ஒரு பேரண்டமே இருக்கிறது?" என்பது குறித்து தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும் பல நூற்றாண்டுகளாக தங்கள் மண்டையை உடைத்துக்கொண்டு வந்துள்ளனர்! ஆனால், இன்றுவரையிலும் தெளிவான எந்த பதிலும் கிடைத்தபாடில்லை! 

சில கேள்விகளை தெளிவாக மனதிற்குள் உருவாக்கி, அக்கேள்வியை மனதில் இருத்தி அதற்கான பதிலை சிந்தித்து கண்டுபிடிக்க முயல்வது பெரும் சிரமமானது என்பது கனமாகச் சிந்தித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆம், கேள்விகளை சரியாகவும், தெளிவாகவும் உருவாக்கக்கூடியவர்களும், அக்கேள்வியை நெடு நேரம் தங்கள் மனதிற்குள் நிறுத்தி, சிந்திக்கக்கூடியவர்களும் தான் சிந்தனையாளர்களாகவும், தத்துவ ஞானிகளாவும் ஆகிறார்கள். 'சும்மா' சிந்திக்கிறவர்கள் எல்லாம் அவ்வாறு ஆவதில்லை!     

சில சமயங்களில், "ஒன்றுமே இல்லாதிருந்தால், அதாவது, நானும் இல்லாதிருந்தால் அந்நிலை எப்படியிருக்கும்?" என்று சிந்தித்து, ஒரு கணம் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடுமோ? என்கிற அளவிற்கு மனம் பேதலித்தாற்போல் உணர்வது, அதிர்ச்சியில், அதிலிருந்து உடனடியாக விடுபடுவதுமாக அவ்வப்போது நிகழ்வதுண்டு. சில சமயம்களில் மனம் ஒரு கணம் காலியாக, வெறுமையானது போல் இருப்பதுபோன்ற அனுபவங்களும் தேவைதான் என்று நான் கருதுகிறேன்.  

ஏற்கனவே, 2016-ம் ஆண்டில், "கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" எனும் தலைப்பில் மரணம் பற்றிய எனது ஆய்வுச் சிந்தனைகளின் தொகுப்பை எழுதிக்கொண்டிருந்த போது, கீழே காணும் வரிகளை எழுதியிருந்தேன். 

இருப்பில் இன்மையையும்
இன்மையில் இருப்பையும்
காண்பது முழு-புரிதல்!


அதாவது, இருப்பது, இல்லாமல் போவது; வாழ்வது, மரணிப்பது குறித்து ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்த போது, சட்டென ஒரு கணம் நானும், இந்த உலகம் மொத்தமும் ஒன்றுமில்லாததைப் போன்ற, ஒரு சூன்ய உணர்வைப் பெற்றேன். இந்த அனுபவத்திலிருந்துதான் மேலே காணும் வரிகளை எழுதினேன். 

இந்த பிரபஞ்சத்தின் உள்ளே [அனைத்துப் பொருட்களுக்கும், விடயங்களுக்கும் நடுவே] இருந்து கொண்டு, "ஆ, அனைத்தும் ஒன்றுமில்லாதது" என்று உணர்வது எதிர்மறையானதா, நேர்மறையானதா? என்றால், என்ன சொல்வது?  இரண்டும் தான் என்றும் சொல்லலாம்; அதனால்தான் என்னவோ, "இருப்பில் இன்மையையும் இன்மையில் இருப்பையும் காண்பது முழு-புரிதல்!" என்பதாக எழுதியுள்ளேன்!

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஃபிராங்க் வில்செக் (Frank Wilczek) அவர்கள், "வெறுமை(சூன்யம்) என்பது நிலையற்றது" என்பதாகக்கூறினார். ஆகவேதான் சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்றார். குவாண்டம் இயற்பியல் மற்றும் அண்டவியல் சூழலில், "எதுவும் இல்லை" என்பதற்குப் பதிலாக "ஏதோ" ஏன் இருக்கிறது என்பதை விளக்க வில்செக் இந்த சொற்றொடரைப் பயன்படுத்தினார். இந்தக் கண்ணோட்டத்தின்படி, முழுமையான "எதுவும் இல்லை" (எந்தப் பொருளோ அல்லது ஆற்றலோ இல்லாத ஒரு வெற்றிடம்) என்பது உண்மையில் ஒரு நிலையற்ற நிலையாகும், இது தன்னிச்சையாக துகள்கள் மற்றும் ஆற்றலை உருவாக்க ஏற்ற இறக்கமாக அதிர்ந்து, இறுதியில் பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பதாக சொல்லப்பட்டது. 

சாக்ரடீஸுக்கு முந்தைய தத்துவஞானி ஹெராக்ளிடஸ் "எல்லாம் 'ஃப்ளக்ஸ்'; எதுவும் அசையாமல் இருப்பதில்லை" என்று பிரபலமாக வாதிட்டார். பிரபஞ்சம் நிலையான மாற்ற நிலையில் இருப்பதாகவும், நிலைத்தன்மை ஒரு மாயை என்றும் அவர் நம்பினார். இதற்கு அவரது மிகவும் பிரபலமான உருவகம் "எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை கால் வைப்பதில்லை", ஏனெனில் தண்ணீரும் மனிதனும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

புத்தர் அனிச்சா (நிலையற்ற தன்மை) கோட்பாட்டைப் போதித்து, நிபந்தனைக்குட்பட்ட உலகில் எதுவும் நிலையானது அல்லது நிரந்தரமானது அல்ல என்று வலியுறுத்தினார். எல்லாம் தோன்றி மறைந்து போகும் உலகில் நாம் நிரந்தரத்தைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதால், துக்கம் (துன்பம்) "நிம்மதியாக இல்லை" அல்லது "நிலையற்றது" என்று அவர் அடையாளம் காட்டினார். பின்னர், தத்துவஞானி நாகார்ஜுனா இதை சூன்யதா (வெறுமை) என்ற கருத்துடன் விரிவுபடுத்தினார், அனைத்து நிகழ்வுகளும் மாறிவரும் நிலைமைகளைச் சார்ந்து இருப்பதால் அவை "நிலையான" அல்லது "நிலையான" உள்ளார்ந்த தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்று வாதிட்டார்.

ஜீன்-பால் சார்த்தர் தனது "இருப்பதும் ஒன்றுமில்லாததும்" (Being and Nothing) என்ற தலைப்பில், மனித உணர்வு (Consciousness) [அதை அவர் "ஒன்றுமில்லாதது" என்று அழைக்கிறார்] எவ்வாறு இயல்பாகவே நிலையற்றது என்பதை ஆராய்ந்தார். அவர் நனவை "நிரந்தரமாக உடைந்த சமநிலை" என்று விவரிக்கிறார், ஏனெனில் அது எப்போதும் ஒரு எதிர்காலத்தை நோக்கி தன்னைத்தானே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் ஒரு பொருளைப் போல ஒரு நிலையான, நிலையான "பொருளாக" ஒருபோதும் இருக்க முடியாது என்றார்.

மாயா வாதம் (Mayavada)என்பது இந்திய தத்துவத்தில், குறிப்பாக அத்வைத வேதாந்தத்தில், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் தன்மையை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாடு ஆகும். கண்ணுக்குத் தெரியும் இந்த உலகம் உண்மையானது அல்ல; இது ஒரு தற்காலிகமான தோற்றம் அல்லது 'மாயை' (Illusion) ஆகும். "பிரம்மம் ஒன்றே சத்தியம், உலகம் மித்யா (பொய்)" என்பது இதன் அடிப்படை. நிலையான, மாறாத ஒன்றே (பிரம்மம்) உண்மையானது; மாறுதலுக்கு உட்படும் இந்த உலகம் உண்மையல்ல என்று இது கூறுகிறது.

இவ்வாறு, ஒன்றுமில்லாததற்கு ஒவ்வொரு தத்துவமும், பார்வையும் இவ்வளவு வெவ்வேறான விளக்கத்தை அளிக்கின்றன. ஆனால், ஒன்றுமில்லாததற்கும், நிரந்தரமற்ற தன்மைக்கும், மாறிக்கொண்டேயிருக்கும் தன்மைக்கும், 'மாயை' எனும் பொய்த்தோற்றத்திற்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு  தத்துவமும், பார்வையும் ஒவ்வொரு விதத்தில் உலக மெய்ம்மையைப் பற்றிச் சொல்கின்றன. ஆனால், 'சூன்யம்' அல்லது ஒன்றுமில்லாததன் சாரத்தை அவை தொட்டனவா? 

பௌத்தமானது, சூன்யம் என்பது "இல்லாமை" அல்ல, அது "முடிவற்ற சாத்தியம்" எனும் இக்கருத்து கிட்டத்தட்ட நவீன பௌதீகத்தின் கண்ணோட்டத்தின்படி, முழுமையான "எதுவும் இல்லை" (Nothing)  (எந்தப் பொருளோ அல்லது ஆற்றலோ இல்லாத ஒரு வெற்றிடம்) என்கிற நிலை உண்மையில் இல்லை எனும் கருத்துடன் ஒத்துப்போவதாக உள்ளது. மேலும், அந்த ஒன்றுமில்லாத நிலையை, நவீன பௌதீகமானது 'குவாண்டம் வெற்றிடம்' (Quantum Void) என்று அழைக்கின்றது, அதிலிருந்து, அடிப்படைத்துகள்கள் உருவாகி வெளிப்படுவதாகக் கூறுகின்றது.

மேலும், சூன்யம் என்பது "இல்லாமை" அல்ல, அது "முடிவற்ற சாத்தியம்" எனும் பௌத்தப் பார்வையானது, குறிப்பாக "முடிவற்ற சாத்தியம்" என்பது, மூல மெய்ம்மையான "பேருணர்வு" பற்றிய எனது கருத்துடன், அதாவது "பேருணர்வு என்பது சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை  (Super Consciousness is a State of Infinite Possibilities)" என்பதுடன் ஒத்துப்போகின்றது. மேலும், "முடிவற்ற சாத்தியம்"  எனும் கருத்து அத்வைத வேதாந்தம் கூறுகின்ற "பிரம்மம்" என்பதுடன் பொருந்திப்போகிறது எனலாம். "பிரம்மம் ஒன்றே சத்தியம், உலகம் மித்யா (பொய்)" இதையே, கீழ்க்காணும் சூத்திரத்தின் வழியாக இன்னும் விளக்கமாகக் காணலாம்.

பிரம்மம் உண்மையானது
உலகம் ஒரு மாயை
பிரம்மமே உலகம்


இந்த தொடர் கூற்றுகள் அத்வைத வேதாந்தத்தில் ரமண மகரிஷி போன்ற ஞானியர்களால் சுருக்கமாகக் கற்பிக்கப்பட்டு, புரிதலின் மூன்று கட்டப் பரிணாம வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
முரண்பாடாகத் தோன்றும் இந்த கூற்றுகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பது இங்கே:
பிரம்மம் உண்மையானது : இது "உண்மையானது" என்பதை நித்தியமானது, மாறாதது மற்றும் எப்போதும் இருப்பது என்று வரையறுக்கிறது. பிரபஞ்சத்திற்கு முன்பும், அதன் போதும், அதன் பின்னரும் இருப்பதால் முழுமையான உணர்வு (பிரம்மம்) மட்டுமே இந்த வரையறைக்கு பொருந்துகிறது.
உலகம் மாயை : மித்யா (பெரும்பாலும் மாயை என்று மொழிபெயர்க்கப்படுகிறது) என்ற வார்த்தையின் அர்த்தம் "உண்மையோ பொய்யோ அல்ல". உலகம் "உண்மையற்றது" ஏனெனில் அது தொடர்ந்து பாய்கிறது மற்றும் சுயாதீனமான இருப்பு இல்லை. ஒரு கனவு அல்லது ஒரு கானல் நீராக, அது இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் சொந்த நிரந்தர பொருள் இல்லை.
பிரம்மமே உலகம் : இந்த மூன்றாவது நிலை முதல் இரண்டையும் விளக்குகிறது. ஒரு களிமண் பானை களிமண்ணைத் தவிர வேறில்லை, அல்லது ஒரு அலை கடலைத் தவிர வேறில்லை, உலகம் பிரம்மத்திலிருந்து "தனி" அல்ல. "மாயை" என்பது உலகம் இல்லை என்பதல்ல, ஆனால் அது அடிப்படை யதார்த்தத்திலிருந்து சுயாதீனமாக அல்லது தனியே இல்லை என்பதாகும்.
மூன்றும் ஏன் சொல்லப்படுகின்றன?
தேடுபவருக்கு: சுயத்தை/பிரம்மத்தைக் கண்டுபிடிக்க முதலில் உலகத்தை (நேதி-நேதி) மறுக்க வேண்டும்.
உணர்ந்தவருக்கு: சுயம் அறியப்பட்டவுடன், உலகம் இனி ஒரு தனி "கவனச்சிதறலாக" பார்க்கப்படுவதில்லை, மாறாக பிரம்மத்தின் நேரடி வெளிப்பாடு அல்லது தோற்றமாகவே பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக: "உலகம்" என்று காணப்படும் உலகம் ஒரு மாயை; "பிரம்மம்" என்று காணப்படும் உலகம் உண்மையானது.

"வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" (Form is emptiness, emptiness is form), இது, 2-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி நாகார்ஜுனாவால் உருவாக்கப்பட்ட கோட்பாடு ஆகும். 
இவ்வாறு, இணையான பல்வேறு பார்வைகளையும், தத்துவனங்களையும் நாம் மேற்கோள் காட்டிக்கொண்டே போகலாம். ஆனால், இவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம். மேலே கடைசியாக குறிப்பிடப்பட்ட வாசகத்தைப் பார்ப்போம். அதாவது, "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் வடிவம் கொண்ட இந்த உலகத்தில் இருந்து கொண்டு, அதன் அடிப்படையை, உண்மையைப் பற்றி விசாரிக்கிறோம். அந்த விசாரத்தின் முடிவில், "வடிவம் என்பது உண்மையில் சூன்யம்" என்ற நிலையை வந்தடைகிறோம். சூன்யம் என்பது, ஒன்றுமில்லாத நிலையல்ல, மாறாக, அதை குவாண்டம் பௌதீகவியலின்படி "குவாண்டம் வெற்றிடம்" அல்லது, "குவாண்டம் புலம்" எனக் கொள்ளலாம். அந்த குவாண்டம் புலத்திலிருந்து (பொருளல்லாத நிலையிலிருந்து) அணுத்துகள்கள் உருவாகின்றன, அணுத்துகள்களின் பெரும் தொகுதி தான் இந்தப் பிரபஞ்சமும், அதில், நாமும், பல்வேறு உயிரினங்களும். 

அதாவது, சூன்யம், வெற்றிடம், குவாண்டம் புலம், என்பது பொருண்மையான அம்சங்கள் அல்ல. அவை பொருண்மை கடந்த அம்சங்கள் (Non-Physical) அல்லது நிலைகள் ஆகும். மேலும், 'உயிர்', 'மனம்', 'உணர்வு' ஆகியவையும் பொருண்மை கடந்த அம்சங்கள் அல்லது பரிமாணங்களே ஆகும். ஆகவே, அவற்றை சூன்யம், வெற்றிடம், குவாண்டம் புலம் எனக் கொள்ளலாம். மேலும், இவை யாவற்றுக்கும்,  "உணர்வு" (Consciousness)தான் அடிப்படையாகும்! ஆக, வடிவம் கொண்ட உலகத்தின் மூலம், அடிப்படை, உணர்வே ஆகும். ஆனால், மனிதனின் உணர்வு என்பது சிற்றுணர்வாகையால், அதிலிருந்து வேறுபடுத்திக் காணும் வகையில், யாவற்றுக்கும் அடிப்படையான மூல நிஜத்தை நாம் "பேருணர்வு" என்றழைப்பதே பொருத்தமாயிருக்கும். 

ஆக, தத்துவஞானி நாகார்ஜுனாவின் வாசகமான  "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" என்பதை, வடிவம் என்பது உண்மையில் சூன்யம்தான். அதாவது, சூன்யத்திலிருந்து தான் வடிவம் (வடிவம் கொண்ட உலகம்) தோன்றியது என்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்! இதை விடுத்து,  "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம், ஆகவே, வடிவம் என்பது சூன்யம், அதாவது சூன்யம் என்பது வடிவம்" என வட்டமடித்துக் கொண்டே போனால், அர்த்தம் மிஞ்சாது, குழப்பம்தான் மிஞ்சும்!  

மேலும், நமது புரிதல், அறிவு, ஞானம் ஆகியவற்றை உணர்வின் வழியாகத்தான் பெறுகிறோம். நமது உடல் பருப்பொருளால் (அணுத்துகள்களால்) ஆனதாயிருக்கலாம். ஆனால், நமது உயிரும், மனமும், உணர்வும், புரிதலும், அறிவும், ஞானமும் பருப்பொருளால் ஆனதல்ல! இதைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம்!

முடிவுரையாக, நாம் மீண்டும் இப்பதிவின் தலைப்புக்கு வருவோம். "எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing )" என்பதுதான் தலைப்பு. ஏற்கனவே நாம், குவாண்டம் பௌதீகவியலின்படி, சூன்யத்திலிருந்து தான் இப்பிரபஞ்சம் தோன்றியது எனக் கண்டோம். ஆனால், 'சூன்யம்' என்பது ஒன்றுமில்லாத வெற்றிடம் அல்ல எனவும் கண்டோம்.  'சூன்யம்' என்பது ஒன்றுமில்லாததைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டிருக்கிறதே தவிர, அது அளப்பரிய ஒரு உள்ளுறையாற்றல் செறிந்த நிலை (Pleroma) ஆகும். ஆகவே, அந்நிலையை, இனி நாம் 'சூன்யம்' என்றழைப்பதற்குப் பதிலாக, 'பூரணம்' என்றழைப்பதுதான் பொருத்தமாயிருக்கும். ஏனென்றால், 'பூரணம்' என்பது எல்லாற்றையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கின்றது. அதாவது, சூன்யம், வெற்றிடம், ஒன்றுமில்லாதது என்பவற்றையும் அது உள்ளடக்கியது. அது பௌதீகப் பொருளை உருவாக்கக்கூடியது, ஆனால், அது பௌதீகத் தன்மையைக் கடந்தது. 

ஆம், பூரணம், பூரணத்துவம் என்பது ஒருமையும், முழுமையுமான பேருணர்வு ஆகும். இப்பேருணர்வு நிலையை ஒரு கணமேனும் நம்முள் உணர்வது தான் நமது பிறவிப் பயன், முக்தி, மோட்சம், வீடுபேறு, ஞானம் இறுதி மெய்ம்மை, யாவும்! இவ்வாறு உணர்வதுதான் இறுதிப் புரிதல்! ஆனால், புரிதல் என்பது கருப்பும் இல்லை, வெள்ளையும் இல்லை. அது திடமாகவும் இல்லை, திரவமாகவும், இல்லை, புகை போலவும் இல்லை! அதே நேரத்தில், அப்புரிதல், முடிவில்லா நிறைவையும், பேரானந்தத்தையும் தருவதாயுள்ளது!  

மா.கணேசன்/ 25-02-2026, அசோக் நகர், நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><> 


நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...