✨
என்னுடைய பிரச்சினை, கடவுளை மறுப்பதோ, அபத்தமான விஞ்ஞானக் கோட்பாடுகளையும், கருதுகோள்களையும் கொண்டு கடவுளை தேவையற்ற ஒன்றாக நிரூபிப்பதோ அல்ல. மாறாக, மதவாதிகள் கூறும் உள்ளீடற்ற கடவுளுக்குப் பதிலாக, உண்மையான கடவுளை அதாவது மூல மெய்ம்மையைக் கண்டுபிடிப்பதே எனது நோக்கம்!
✨
இயற்கையின் படைப்போ, அல்லது கடவுளின் படைப்போ, மனிதஜீவிகளைப் படைப்பது அவ்வளவு அவசியமா, கட்டாயமா? முதலில் ஒரு விடயத்தை தெளிவு படுத்துக்கொள்வோம். மனிதஜீவிகள் இயற்கையின் படைப்பும் அல்ல, கடவுளின் படைப்பும் அல்ல! உரிய விளக்கம் வேண்டி காத்துக்கிடக்கும் கடவுளை விட, மிகப் பொருத்தமான, ஒரு மெய்ம்மையான "பேருணர்வு" (Super-Consciousness) தான் மனிதனை மட்டுமல்ல, எல்லா உயிரினங்கள் மற்றும் அனைத்தையும், இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்தது!
பேருணர்வானது பரிணாமம் எனும் வழிமுறையைக் கொண்டு முதல் உயிர் ஜீவியையும், எல்லா உயிரினங்களையும், பிறகு அனைத்து உயிரினங்களையும் விஞ்சிய சிறப்பியல்பைக் கொண்ட ஜீவியாக உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக மனிதனையும் படைத்தது.
ஆனால், உண்மையில், பேருணர்வானது உயிர்ஜீவியைப் படைக்கவேண்டுமென்றோ, மனிதனைப் படைக்கவேண்டுமென்றோ எண்ணி, திட்டமிட்டு படைக்கவில்லை. மாறாக, மூல மெய்ம்மையான பேருணர்வு தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட, கிட்டத்தட்ட ஒரு விபரீதமான பரிசோதனையின் விளைவாகத்தான் இந்த மாபெரும் பிரபஞ்சமும், அதிலுள்ள கோடானு கோடி கோடி கேலக்ஸிகளும், நட்சத்திரங்களும், கிரகங்களும், நம் பூமியின் மீது உயிரினங்களும், மனித ஜீவிகளும் தோன்றின.
அது என்ன விபரீதமான பரிசோதனை என்றால், மூலமெய்ம்மையான பேருணர்வானது, தனது எதிர்-நிலையான, 'தான்-அற்ற', 'தான்-இல்லாத', அந்த நிலை எப்படியிருக்கும் என்பதை அனுபவம் கொள்ள விரும்பி, தன்னைத்தானே குறைத்துக்கொண்டது, அல்லது நீக்கிக்கொண்டது! இதன் விளைவாக, அது 'பேருணர்வு' நிலையிலிருந்து வழுவி முற்றிலும் உணர்வற்ற சட நிலைக்குக் (State of Matter) கீழிறங்கியது. இந்த மாற்றத்தை, வழிமுறையை, நாம் "சுரிணாமம்" (Involution) என்றழைக்கலாம்.
இந்த சுரிணாம வழிமுறை நேரடியாக பொருண்மையான நிலைக்குக் கீழிறங்காமல், உணர்வுமில்லாத, பொருண்மையுமில்லாத ஒரு இடை நிலையை அடைந்தது. அந்நிலையை நாம் குவாண்டம் பௌதீகவியலின் சொற்களில் சொன்னால், "குவாண்டம் புலம்" (Quantum-Field) என்றழைக்கலாம். இந்த குவாண்டம் புலம் என்பது, பேருணர்வின், ஒருவகையான செறிவிழந்து பரவிச்சிதறிய (diffused and scattered state of Consciousness) "உணர்வுப் புலம்" (consciousness-field), ஆகும்.
குவாண்டம் புலம் என்பது குவாண்டம் பௌதீகவியலின்படி, ஒரு அடிப்படையான, கண்ணுக்குத் தெரியாத நிலையாகும், இது அனைத்து வெளி- காலத்தையும் ஊடுருவி, துகள்கள் உருவாவதற்கான அடிப்படை அம்சமாக, அடித்தளமாகச் செயல்படுகிறது எனப்படுகிறது. நமது சுரிணாமக் கோட்பாட்டின்படி, அணுத்துகள்கள், பருப்பொருள் என்பது, பேருணர்வு சுருங்கியதால் உருவான அடிமட்ட நிலை என்றோம். இவ்விடத்தில், நாம் நமது கோட்பாட்டில் ஒரு திருத்தத்தை செய்வோம். அதாவது, பேருணர்வு சுருங்கி, குவாண்டம் புலமாகியது. குவாண்டம் புலத்திலிருந்து அடிப்படை அணுத்துகள்கள் (பருப்பொருள்), பிறகு பிரபஞ்சம் யாவும் தோன்றின, என்பதாகக் கொள்வோம்.
பேருணர்வானது சுரிணாம மாற்றத்திற்கு (Involutionary Process) உட்பட்டு குவாண்டம்-புலமாக மாறுகின்ற அந்த நிகழ்வை விஞ்ஞானமானது, "பெரு வெடிப்பு" (Big bang) என்கிறது. (1) பெருவெடிப்பிலிருந்து உயிரின் முதல் தீப்பொறி வரையிலான விஞ்ஞானம் கூறும் பரிணாமப் பயணக் கட்டங்களை அடிக்குறிப்பு (2) -ல் காணவும்.
ஆக, குவாண்டம் புலத்திலிருந்து, அணுத்துகள்கள் தோன்றத்தொடங்கிய கணத்திலிருந்து "பரிணாமம்" (Evolution) எனும் நீண்ட நெடிய வழிமுறை தொடங்கிவிடுகிறது. இந்த நெடிய வழிமுறையில் ஒரு கட்டத்தில், (அதாவது பிரபஞ்சம் தொடங்கி 1,000 கோடி ஆண்டுகளின் முடிவில்) முதல் உயிரி தோன்றுகிறது. பிறகு தொடர்ந்து நிகழ்ந்த 400 கோடி ஆண்டுகள் நெடிய உயிரியல் பரிணாம வழிமுறையில், சிந்திக்கும் திறன் கொண்ட, மனமுள்ள, சுய-உணர்வுள்ள மனித ஜீவிகள் தோன்றின. ஆம், இந்தக் கட்டம் வரை நாம் சொல்லும் பரிணாமக் கதையும், விஞ்ஞானம் கூறும் கதையும் ஒத்துப்போகிறது எனலாம். ஆனால், நாம் கூறும் பரிணாம வழிமுறைக்கு நோக்கம், குறிக்கோள், இலக்கு உள்ளன. டார்வினியப் பரிணாம வழிமுறைக்கு நோக்கம், குறிக்கோள், இலக்கு எதுவும் இல்லை எனப்படுகிறது.
இங்குதான் முரன்பாடுகளும், பிரச்சினைகளும் எழுகின்றன. முதலிடத்தில், நோக்கம் குறிக்கோள் ஏதுமற்ற குருட்டாம் போக்கிலான டார்வினிய பரிணாமத்தில், (உயிரும், உணர்வும் அற்ற சடப்பொருளிலிருந்து) உயிருள்ள ஜீவிகளும், உணர்வுள்ள மனித ஜீவிகளும் ஏன், எதற்காகத் தோன்ற வேண்டும்? அதே நேரத்தில், இறையியல் கோட்பாட்டின்படி, 'கடவுள்' என்பவர் ஏன், எதற்காக உயிர்களையும், மனிதர்களையும் படைக்க வேண்டும்? தொடர்ந்து செல்வதற்கு முன், இங்கு நம் முன்னே எதிரும் புதிருமான மூன்று பார்வைகள், அல்லது கோட்பாடுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் எதை அடிப்படையாக, மையமாகக் கொண்டு இயங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.
1. கடவுள் மையக் கோட்பாடு (God -Centered Theory) : இதில் கடவுள் தான் மையம், அடிப்படை மெய்ம்மை, மூலம், யாவும். ஆனால், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை முன்னிறுத்துவதால், அது பிரச்சினையை மேலும் தீர்க்கமுடியாததாய் ஆக்கிவிடுகிறது. பொத்தாம் பொதுவாகச் சொன்னால், கடவுள் என்பவர் ஒரு மந்திரவாதியைப் போன்றவர். அவர் எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர் என்று சொல்லப்படுகிறது. ................
2. பருப்பொருள் மையக் கோட்பாடு (Matter -Centered Theory) : இதில் பருப்பொருள் தான் மையம், அடிப்படை மெய்ம்மை, மூலம், யாவும். பருப்பொருள் என்பது தன்னில் தானே தோன்றியதான, சாசுவதமான பொருள் எனப்படுகிறது. இதற்கும் மந்திர சக்தி உள்ளது போலத்தான் சொல்லப்படுகிறது. இல்லாவிட்டால், உயிரும், உணர்வும் இல்லாத சடப்பொருள் எவ்வாறு உயிரைத் தோற்றுவிக்கவும், சிந்திக்கும் மனமுள்ள, உணர்வுள்ள மனித ஜீவிகளை உருவாக்கவும் முடியும்? முதலிடத்தில், பருப்பொருள் என்பது தன்னில் தானே தோன்றியதான, சாசுவதமான பொருளாக இருப்பதற்கான வாய்ப்புக்களே இல்லை எனலாம். மேலும், பருப்பொருளின் அடிப்படைப் பண்புகளைக் கொண்டு பார்த்தால், தர்க்க ரீதியாகவும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை! மேலும், குவாண்டம் பௌதீகவியலின்படி, பருப்பொருளின் ஆகச் சிறிய அடிப்படை அணுத்துகள் என்பது கூட பொருண்மையானதல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. .................
3. பேருணர்வு மையக் கோட்பாடு (Super-Consciousness - Centered Theory) : இது என்னுடைய பார்வையாகும். இதில் பேருணர்வு தான் மையம், அடிப்படை மெய்ம்மை, மூலம் (Source), யாவும். இந்தப் பேருணர்வை நம்மால் ஊகிக்கவும், சில நிபந்தனைகளுக்குட்பட்டு அதை உணரவும், அனுபவம் கொள்ளவும் முடியும். எவ்வாறென்றால், நாம் உணர்வுள்ள மனித ஜீவிகள், ஆகவே உணர்விலிருந்து பேருணர்வை ஊகித் தறியவும் முடியும், முயன்றால் அதைச் சென்றடையவும் முடியும்.............
முதலிடத்தில், எதுவும், எல்லாமும் தோன்றுவதற்கு மூல மெய்ம்மை என்று ஒன்று அவசியம். ஏனென்றால், ஒன்றுமில்லாததிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. நம்முன்னே இங்கே மூன்று மூல மெய்ம்மைகள் உள்ளன. அதாவது, கடவுள், பருப்பொருள், பேருணர்வு ஆகியன. இந்த மூன்றில் உண்மையில் எது மூல மெய்ம்மையாக அமையவியலும் என்பதை ஆராய்ந்து காண்போம்.
இப்போது நாம் இந்த மூன்றாவது பார்வையைக் கொண்டு, ஏன் உயிரினங்கள், ஏன் மனிதர்கள்? என்ற கேள்விக்கான பதிலை விளக்கமாகக் காண்போம்.
மூல மெய்ம்மையான பேருணர்வு தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட, கிட்டத்தட்ட ஒரு விபரீதமான பரிசோதனையின் விளைவாகத்தான் இந்த மாபெரும் பிரபஞ்சமும், அதிலுள்ள கோடானு கோடி கோடி கேலக்ஸிகளும், நட்சத்திரங்களும், கிரகங்களும், நம் பூமியின் மீது உயிரினங்களும், மனித ஜீவிகளும் தோன்றின என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
மூலமெய்ம்மையான பேருணர்வானது, தனது எதிர்-நிலையான, தான்-அற்ற, தான்-இல்லாத, அந்த நிலை எப்படியிருக்கும் என்பதை அனுபவம் கொள்ள விரும்பி, தன்னைத்தானே குறைத்துக்கொண்டது, அல்லது நீக்கிக்கொண்டது! இதன் விளைவாக, அது 'பேருணர்வு' நிலையிலிருந்து வழுவி முற்றிலும் உணர்வற்ற சட நிலைக்குக் (State of Matter) கீழிறங்கியது. இந்த மாற்றத்தை, வழிமுறையை, நாம் "சுரிணாமம்" (Involution) என்றழைக்கலாம் என்றோம்.
அதாவது, சுரிணாமத்தின் வழியாக பேருணர்வானது தனது உணர்வுத்தன்மையை இழந்து பௌதீகச் சடப் பிரபஞ்சமாக மாறிய நிலையில், அந்த சடப் பிரபஞ்சம், அல்லது சடப்பொருள் என்ன செய்யும், அல்லது என்னவாகும்? ஆம், சுரிணாமத்தையடுத்து, அதனால் தோன்றிய சடப்பொருளானது, உடனடியாக, அடுத்த கணத்திலிருந்து ஒரு நீண்ட நெடிய பரிணாம வழிமுறைக்கு ஆட்படுவதைத்தவிர அதற்கு வேறு வழியில்லை.
மேலும், சடப் பொருளுக்கு யாதொரு நோக்கமோ, குறிக்கோளோ, இலக்கோ இருக்க வியலாது; நாமும் கற்பிக்க இயலாது. ஆனால், சடப்பொருளுக்கு, அதன் ஒவ்வொரு அணுத்துகளுக்கும் உள்ளார்ந்த ஒரு உந்துதல் மட்டும் இருக்கும் என நாம் ஊகிக்கலாம். அந்த உந்துதலின் விளைவாக, சடப்பொருளானது எவ்வாறேனும், பரிணாமத்தின் வழியாக தான் எதிலிருந்து தோன்றியதோ, அந்த மூல நிஜத்தினை, அதாவது பேருணர்வு நிலையை, கண்டடைந்திடும் எனலாம். அதாவது, ஒரு நதியானது தான் தோன்றிய மூல நிஜமான சமுத்திரத்தை சென்றடைவது போல! நதிக்கு தான் செல்ல வேண்டிய பாதை தெரியாது. ஆனாலும், புவியின் ஈர்ப்பு விசையை, உந்துதலாகக்கொண்டு எவ்வாறோ, அது சமுத்திரத்தை சென்றடைந்துவிடுகிறதல்லவா!
மேலும், மூலமெய்ம்மையான பேருணர்வானது தான் இழந்த தனது அசலான நிலையை மீண்டும் அடைந்தாக வேண்டும். அதாவது, பேருணர்வு தன்னை இழந்து, மீண்டும் தன்னை மீள்-கண்டுபிடிப்பு செய்வதுதான் 'சுரிணாமம்-பரிணாமம்' என்கிற வழிமுறையாகும். பேருணர்வு என்பது "சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை" (State of Infinite Possibilities) யாகும். இது பௌத்தம் கூறும் 'முடிவற்ற சாத்தியம்' என்பதற்கு இணையானது எனலாம். ஆம், பேருணர்வு, பேருணர்வைத் தான் படைக்க விரும்பும். கடவுளாக இருந்தால், அவர் தன்னைத்தான் மறுபடைப்பு செய்வார். எந்த உயிரினமும் தன்னினத்தைத்தான் மறுபடைப்பு செய்கிறது. ஒரு குதிரை ஒரு கழுதையை உருவாக்காது!
ஒரு வகையில், கடவுளை மூலமெய்ம்மையாகக் கொண்ட இறையியலானது, "கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தார்" என்று சொல்வதைப்போல, நாமும் பேருணர்வானது தன்னை மறுபடைப்பு செய்யும் வழிமுறையில், முதலில், உயிர்ஜீவிகளையும், பிறகு தனது சாயலில் அமைந்த சிற்றுணர்வுள்ள மனித ஜீவிகளையும் உருவாக்கியது எனலாம். ஆனால், பருப்பொருள் அல்லது சடப்பொருளை நாம் மூல மெய்ம்மையாகக் கொண்டால், அது மீண்டும் (தனது சாயலில்) சடப்பொருளைத்தான் படைக்கும் என்பது பொருத்தமற்றதாக உள்ளதால், பொருண்மைவாதம் அல்லது பொருள்முதல்வாதம் என்பதை நாம் முற்றாக புறந்தள்ளிவிடலாம். அதனுடன் சேர்த்து விஞ்ஞானவாதத்தையும் (Scientism), இன்னும் டார்வினிய பரிணாம வாதத்தையும் புறந்தள்ளிவிடலாம்.
பேருணர்வானது தன்னை மறுபடைப்பு செய்யும் வழிமுறையில், முதலில், உயிர்ஜீவிகளையும், பிறகு தனது சாயலில் அமைந்த சிற்றுணர்வுள்ள மனித ஜீவிகளையும் உருவாக்கியது என்றோம். ஆனால், இவ்விடத்தில், நாம் முக்கியமாகவும், மிகத் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பேருணர்வின் உண்மையான நோக்கம் உயிர்ஜீவிகளையும், மனித ஜீவிகளையும் உருவாக்குவதல்ல! உயிர் ஜீவி என்பது உணர்வை ஏற்கும்/தாங்கும் ஒரு கட்டமைப்பின் முன்னேற்பாட்டுச் செயல்முறையின் ஒரு முன் வடிவம் மட்டுமே ஆகும். அதாவது, உணர்வை ஏற்பதற்கான ஒரு முறையான முழுமையான உறுப்பு/அங்கமான 'மூளை' யை எட்டுவதற்கான படிக்கற்களே (precursor) உயிர் ஜீவிகள் ஆகும். அத்தகைய ஒரு முறையான முழுமையான உறுப்பை (மூளையை)க் கொண்ட ஒரு ஜீவிதான் மனித ஜீவி என்பவன் ஆவான். உண்மையில், உயிர்ஜீவிகளாகட்டும், மனிதஜீவிகளாகட்டும் அவை வெறும் உணர்வுப் பரிணாமத்திற்கு உதவும் கருவிகள் மட்டுமே ஆகும்.
பேருணர்வானது, தனது விபரீத பரிசோதனை வழிமுறையான 'சுரிணாமம்' (Involution) வழியாக, தனது உணர்வை முற்றிலுமாக இழந்து, பருப்பொருள் நிலைக்குத் தாழ்ந்த பிறகு, 'பரிணாமம்' (Evolution) எனும் நீண்ட நெடும் வழிமுறை வாயிலாக படிப்படியாக உணர்வு நிலையில் உயர்ந்து இறுதியாக தனது பேருணர்வு நிலையை எட்டும் வழிமுறையின் இடை நிலைகள் தான் உயிர்ஜீவிகளும், மனித ஜீவிகளும் ஆகும். அதாவது உணர்வுப் பரிணாமத்தின் கருவிகள் மற்றும் பிரதிநிதிகள் என்பதற்கு மேலாக, உயிர்ஜீவிகளுக்கும், மனித ஜீவிகளுக்கும் வேறு பிரத்யேக முக்கியத்துவம் ஏதுமில்லை!
அதே நேரத்தில், மனிதனானவன் தனது பரிணாமப் பொறுப்பினை ஏற்கவும், நிறைவேற்றவும் தயாரானால், அவனது உய்விற்கான (நற்கதி) பெரும் வாய்ப்பு திறக்கும். இல்லாவிடில், அவன் இன்னொரு விலங்கு போலவே இப்பூமியின் மீது எலிகளையும், தவளைகளையும் போல வெறுமனே உயிர்பிழைத்து, அர்த்தமற்ற வகையில் மாண்டு மறைந்து போவான்!
மற்ற உயிரினங்களுக்கும், மனித ஜீவிகளுக்கும் இடையேயான வித்தியாசம், மனிதஜீவிகளிடம் 'உணர்வு' எனும் பரிமாணம் இருப்பதுதான். அதே நேரத்தில், மனித ஜீவிகளை உணர்வின் தொடக்க நிலையை எட்டுகிற அளவிற்கே பரிணாமம் கொண்டு சேர்த்துள்ளது. அதற்குமேல், பரிணாமமானது உச்ச உணர்வு, அல்லது பேருணர்வு நிலைக்கு மனிதஜீவிகளை தள்ளிக்கொண்டு போய் சேர்க்காது!
உணர்வின் உச்ச நிலையை எட்டவேண்டுமெனில், மனித ஜீவிகள் தாங்கள் (உடல், மனம் ஆகியவற்றைக் கடந்த) "உணர்வுஜீவிகள்" என்கிற உணர்வைப் பெற்றாக வேண்டும். அதாவது, மனிதஜீவிகள் ஒவ்வொருவரும் தங்களது உணர்வுக்கு விழித்தாக வேண்டும். உணர்வு கொண்டு தமது இருப்பை உணர்ந்தாக வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் உணர்வில் மூழ்கி நிலைத்து உணர்வு மயமாகிட வேண்டும். எவ்வாறேனும் ஒவ்வொரு மனிதனும் அந்த பேருணர்வை ஒரு கணமேனும் ருசித்தாக வேண்டும். ஏனெனில், இறுதியான அர்த்தம், உண்மை, அன்பு, கடவுள், அனந்தம், ஆன்மா ஆகியவை வெறும் சொற்களோ, குறியீடுகளோ, கோட்பாடுகளோ அல்ல! அவை நேரடியாக ஒவ்வொருவரும் அனுபவித்தறிய வேண்டிய மெய்ம்மைகள் ஆகும்!
ஆம், பேருணர்வு தான் உண்மையான கடவுள் அதாவது மூல மெய்ம்மை ஆகும்!
✨
முக்கிய அடிக்குறிப்புகள்:
1. பெரு வெடிப்பு கோட்பாடு (Big Bang Theory) என்பது சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிக அதிக வெப்பமான, அடர்த்தியான ஒரு புள்ளியில் (Singularity) இருந்து விரிவடையத் தொடங்கி, இன்றைய நிலையை அடைந்ததாகக் கூறும் முக்கிய அறிவியல் கோட்பாடாகும். இது அண்டத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை விளக்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியாகும்.
ஆனால், பெரு வெடிப்பு கோட்பாட்டில் சில பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. அதாவது, பிரபஞ்சம் மிக அதிக வெப்பமான, அடர்த்தியான ஒரு புள்ளியில் (Singularity) இருந்து வெடித்து விரிவடையத் தொடங்கியது என்கிறது. அந்தப் புள்ளி எங்கிருந்து வந்தது, ஏன் வெடித்து, பிரபஞ்சமாக விரிவடைய வேண்டும் என்பது போன்ற கேள்விகளை அது கேட்கவும் இல்லை, அதனிடம் அதற்கான பதில்களும் இல்லை!
(2) பெருவெடிப்பிலிருந்து உயிரின் முதல் தீப்பொறி வரையிலான பயணம், 13.8 பில்லியன் ஆண்டுகால சிக்கலான வளர்ச்சியின் கதை: -
தூய ஆற்றலில் இருந்து துணை அணு துகள்கள், பின்னர் அணுக்கள், நட்சத்திரங்கள் மற்றும் இறுதியில் உயிரியல் வரை நகர்கிறது.
அந்த செயல்முறையின் காலவரிசை இங்கே:
1. ஆரம்பம்: ஆற்றல் மற்றும் பொருள் (0 முதல் 380,000 ஆண்டுகள் வரை)
ஒருமைப்பாடு & பணவீக்கம்: பிரபஞ்சம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெப்பமான, அடர்த்தியான புள்ளியாகத் தொடங்கியது. ஒரு நொடியின் ஒரு பகுதியிலேயே, அது "பணவீக்கத்திற்கு" உட்பட்டது, ஒளியின் வேகத்தை விட வேகமாக விரிவடைந்தது.
துகள் சூப்: அது சிறிது குளிர்ந்தவுடன், ஆற்றல் குவார்க்குகள் மற்றும் எலக்ட்ரான்களாக ஒடுங்கியது. பின்னர் குவார்க்குகள் ஒன்றிணைந்து புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை உருவாக்கின.
நியூக்ளியோசைன்தசிஸ்: முதல் 3 நிமிடங்களுக்குள், முதல் கருக்கள் (பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்) உருவாகின.
மறுசீரமைப்பு: 380,000 ஆண்டுகளுக்குப் பிறகு, எலக்ட்ரான்கள் கருக்களைச் சுற்றி வர போதுமான அளவு குளிர்ச்சியடைந்து, முதல் நடுநிலை அணுக்களை உருவாக்கியது. ஒளி இறுதியாக விண்வெளியில் பயணிக்க முடியும் (இந்த ஒளி இன்றும் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணியாகத் தெரியும்).
2. நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் சகாப்தம் (100 மில்லியன் முதல் 9 பில்லியன் ஆண்டுகள் வரை)
ஈர்ப்பு விசை ஆட்சி செய்கிறது: ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயு மேகங்கள் ஈர்ப்பு விசையின் கீழ் சரிந்து முதல் நட்சத்திரங்களை உருவாக்கின.
காஸ்மிக் சமையலறை: இந்த நட்சத்திரங்களுக்குள், அணுக்கரு இணைவு கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் இரும்பு போன்ற கனமான தனிமங்களை உருவாக்கியது. பாரிய நட்சத்திரங்கள் வெடித்தபோது (சூப்பர்நோவாக்கள்), அவை இந்த தனிமங்களை விண்வெளியில் சிதறடித்தன.
விண்மீன் பரிணாமம்: நட்சத்திரங்கள் விண்மீன் திரள்களாகக் கொத்தாக இருந்தன. நமது விண்மீன், பால்வீதி, உருவாகி, பல தலைமுறை நட்சத்திரங்கள் வாழ்ந்து இறந்தன, வாழ்க்கைக்குத் தேவையான "நட்சத்திர தூசி" மூலம் அண்டத்தை வளப்படுத்தின.
3. சூரிய மண்டலத்தின் பிறப்பு (9.2 பில்லியன் ஆண்டுகள் / 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு)
சூரியன்: அருகிலுள்ள ஒரு சூப்பர்நோவா அதிர்ச்சி அலை சூரிய நெபுலாவின் சரிவைத் தூண்டியிருக்கலாம். மையம் நமது சூரியனாக மாறியது.
குவிப்பு: மீதமுள்ள தூசி மற்றும் வாயு சூரியனைச் சுற்றி சுழன்று, மோதி ஒன்றாக ஒட்டிக்கொண்டு "கிரகங்கள்" உருவாகின, அவை இறுதியில் பூமி உட்பட கோள்களாக மாறின.
4. ஆரம்பகால பூமி (4.5 முதல் 4.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு)
ஹேடியன் யுகம்: பூமி ஆரம்பத்தில் உருகிய பாறையின் ஒரு பந்து. இது சிறுகோள்கள் மற்றும் வால்மீன்களால் வீசப்பட்டது, அவை நீர் மற்றும் கரிம மூலக்கூறுகளை வழங்கியதாக நம்பப்படுகிறது.
குளிர்ச்சி மற்றும் பெருங்கடல்கள்: மேற்பரப்பு குளிர்ந்தவுடன், ஒரு மேலோடு உருவானது, மற்றும் எரிமலை வாயு வெளியேற்றம் ஒரு வளிமண்டலத்தை உருவாக்கியது. நீராவி மழையாக ஒடுங்கி, முதல் பெருங்கடல்களை உருவாக்கியது.
5. வாழ்க்கைக்கு மாற்றம் (4.0 முதல் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு)
வேதியியல் உயிரியலாக மாறியது இங்குதான். சரியான வழிமுறை இன்னும் ஒரு மர்மமாக இருந்தாலும், விஞ்ஞானிகள் பல முக்கிய படிகளை சுட்டிக்காட்டுகின்றனர்:
கரிம மூலக்கூறுகள்: எளிய சேர்மங்கள் (ஹைட்ரஜன் சயனைடு மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்றவை) வினைபுரிந்து அமினோ அமிலங்கள் மற்றும் நியூக்ளியோடைடுகளை (புரதங்கள் மற்றும் டிஎன்ஏவின் கட்டுமானத் தொகுதிகள்) உருவாக்கின.
ஆதிகால சூப் / நீர் வெப்ப வென்ட்கள்: இந்த மூலக்கூறுகள் அலை குளங்களில் அல்லது ஆற்றல் மிகுதியாக இருந்த ஆழ்கடல் எரிமலை வென்ட்களைச் சுற்றி குவிந்திருக்கலாம்.
சுய-பிரதிபலிப்பு: ஒரு மூலக்கூறு - அநேகமாக RNA - தன்னைத்தானே நகலெடுக்கும் திறனைப் பெற்றது. இது "RNA உலகம்" கருதுகோள்.
முதல் செல்: இந்த சுய-பிரதிபலிப்பு மூலக்கூறுகள் ஒரு கொழுப்பு சவ்வில் (லிப்பிட் இரட்டை அடுக்கு) மூடப்பட்டு, சுற்றுச்சூழலிலிருந்து அவற்றைப் பாதுகாத்தன. இது முதல் புரோகாரியோட்களை (எளிய ஒற்றை செல் உயிரினங்கள்) உருவாக்கியது.
✨
தொடர்புள்ள முக்கிய பதிவுகள்/கட்டுரைகள்
1. உயிர் எனும் புதிர்! https://vicharamarg.blogspot.com/2016/10/blog-post_21.html
2. உணர்வு எனும் மகா புதிர்! https://vicharamarg.blogspot.com/2016/11/blog-post.html
✨
மா.கணேசன்/ 24.02.2026 / அசோக் நகர், நெய்வேலி.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

No comments:
Post a Comment