Thursday, 9 May 2019

சமரசமற்ற ஆன்மீகவிசாரம்


             இது வழக்கமான மனிதர்களுக்கான வழக்கமான
ஆன்மீகம் பற்றிய கட்டுரை அல்ல! மாறாக, இது
வழக்கத்தை மீறிச் செல்லும் தேடலும், துணிவும்,
ஆர்வமும் கொண்ட வாசகர்களுக்கானது!


              உண்மை உண்மையில் எதனுடனும் சமரசம் செய்து
கொள்வதில்லை! அவ்வாறு சமரசத்துக்கு உட்படுமாயின்
அதன்பிறகு அது உண்மையாக இருக்க முடியாது!


ஆன்மீகம் என்றவுடன் இங்கு (விசார மையத்தில்*) தியானம் பற்றியும், ஆன்மா பற்றியும், இன்னும் ஆன்மீகம் தொடர்பான பல சொற்களைப்பற்றியும் பேசப்படும், விளக்கப்படும்; ஆன்மீகத்திற்கே உரிய பயிற்சிகள் சொல்லித்தரப்படும் என்று எண்ணி பலர் வந்தனர். ஆனால், இங்கு அவ்வாறான எதுவும் பேசப்படவில்லை; சொல்லித்தரப்படவில்லை! ஆகவே, இங்கு பலர் வந்தனர்; சிலர் மட்டுமே நிலைத்தனர். நிலைத்தவர்களில் பலர் திடீரென சொல்லாமல் கொள்ளமல் வராமல் நின்று போயினர்! ஆனால், “விசார மையம்” ,விசார இல்லம்”, பிறகு “விசார மார்க்கம்” என்று பெயர் மாற்றம் பெற்ற இந்த அமைப்பில்லா அமைப்பு, மார்க்கமற்ற மார்க்கம் இன்னும் தொடர்ந்து இங்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது - அதன் சொற்பமான பழைய, மற்றும் அவ்வப்போது வந்து சேரும் புதிய  பங்கேற்பாளர்களுடன்!

இந்த “விசார மார்க்கம்” எனப்படும் ஆன்மீக மார்க்கத்தில், அல்லது ஆன்மீக மையம் அல்லது ஆன்மீகப் பள்ளியில், நேரடியாக இதுதான் ‘ஆன்மீகம்’ என்றில்லாமல், சூரியனுக்குக் கீழாகவும், சூரியனைத்தாண்டியும் உள்ள அனைத்தையும் பற்றிப் பேசப்படுகிறது, விளக்கப்படுகிறது; விளக்கப்பட்டு அனைத்தும் விலக்கப்படுகிறது! அனைத்தும் விலக்கப்பட்டபிறகு எது எட்டப்படுகிறதோ அது தான் அனைத்தின் சாரமான ஆன்மீக உண்மை என சுட்டப்படுகிறது! இங்கு வந்தவர்களில், தொடர்ந்து வந்துகொண்டிருப்பவர்களில் எத்தனைபேர் அந்த உண்மையை கிரகித்துக்கொண்டனர், புரிந்துகொண்டனர், அதிலேயே நிலைக்கின்றனர் என்ற எண்ணிக்கை பற்றிய கேள்வி முக்கியமல்ல! ஆனால், இங்கு வருபவர்களிடம் ஏதோ ஒரு தாக்கம் தொற்றிக்கொள்கிறது! ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதில் சந்தேகமில்லை! அந்த தாக்கத்தை, மாற்றத்தைப் பற்றிச் சென்று இலக்கை அடைவது என்பது அவர்களுடன் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணியாகும்!

“இங்கு, உங்கள் மார்க்கத்தில் என்ன (பயிற்சி) செய்யச் சொல்லிக்கொடுக்கிறீர்கள்? என்று பலர் கேட்கின்றனர். “பயிற்சியாக எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை; நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - அது “விசாரம்” என்பதுதான்!” என்று தொடக்கத்திலும், திரும்பத்திரும்பவும் சொல்லப்படுகிறது. ஏனெனில், “விசாரம்” என்பது மட்டுமே எவ்வகை அறிதல், புரிதலுக்கும் -  அது சாதாரண அன்றாட விவகாரமாயினும், தத்துவமாயினும், விஞ்ஞானமாயினும், இன்னும் ஆன்மீகமாயினும் யாவற்றுக்கும் அடிப்படையான அம்சமாகும்! “விசாரம்” என்பது மிகத் தொன்மையானதும், என்றும் புதிதானதும் ஆகும் - அதற்கு தொடக்கம் என்பதேயில்லை; ஆனால், தெளிவான முடிவு உண்டு! இன்னும் முடிவைத் தாண்டியும் அலுப்பு சலிப்பின்றி தொடரக்கூடியது!

“விசாரம்”தான் மூலம், மற்றும் முடிவான மெய்ம்மையின், அதாவது, கடவுள், பிரம்மம், அகண்ட உணர்வு, பேருணர்வு,,, என்றெல்லாம் சொல்லப்படுவதன் சாரம் ஆகும்! “விசாரம்” என்பதற்கு இன்னொரு பெயர் “பேரார்வம்” என்பதே!

ஆர்வத்தையிழப்பவன் அனைத்தையும் இழப்பவனாகிறான்! ஆனால், ஆர்வம் என்பது எதன் மீதான ஆர்வம், யாருடைய ஆர்வம்? உங்களிடம் உள்ளார்ந்த இயல்பான ஆன்மீக வேட்கை, தூண்டுதல் இல்லையெனில், உங்களுடைய ஆர்வம் சிறியதாக, சிற்றார்வமாக இருக்கும்! நீங்கள் ஒரு சிறிய மனிதர்! உங்களுடைய ஆர்வம் சாதாரணப் பொருட்கள் மற்றும் மதிப்பீடுகளின் மீதானதாகவே இருக்கும்! உங்களுடைய ஆன்மீகம் சுயநல மையம் கொண்டது, ஆகவே, குறைபாடுடையது!

ஆர்வம் என்பது தேங்கி நிற்கும் குட்டை போன்ற ஒன்றல்ல; மாறாக, செயலூக்கமிக்க, எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு நதி போன்றதாகும்! தூய ஆர்வத்தினால் தூண்டப்பட்ட ஒருவன் ஒருபோதும் சோம்பியிருப்பதில்லை! எவ்வொரு வார்ப்பு, ரகம், மோஸ்தர், அல்லது வகைப்பாட்டிலும் சிறைப்படுவதில்லை! ஆர்வம் என்பது என்னுடையதோ, அல்லது உங்களுடையதோ அல்ல; அவ்வாறு சொந்தமாக்குவதன் வழியே அது சிற்றார்வமாக, உங்கள் சொந்த விருப்பத்தின் கருவியாக, குறுகிய நோக்கம் கொண்டதாக குறுகிப்போகிறது! ஆர்வம் என்பது சிந்தாமல் சிதறாமல் முழுமையாக இருக்கும்பட்சத்தில் அதைப் “பேரார்வம்” என்று குறிப்பிடலாம். அது தன்னில் தனிமுழுமையானது (Absolute).    

பேரார்வம் என்பதே மூல மெய்ம்மையாக, அதன் சாரமாக, அதன் கருவியாகவும் இருப்பதால், அதைப் பற்றுபவன் மெய்ம்மையைச் சென்று சேருபவனாக ஆகிறான்! ஆகவே, மெய்ம்மை நாட்டம் கொள்வது ஒன்றே மனிதனுக்கு அழகாகும்! அதற்குக்குறைவான நாட்டம், வேட்கை விருப்பம் யாவும் தனது உள்ளார்ந்த மனிதத்தை அவமதிப்பு செய்வதாகும், மனிதத் தரத்திற்குக் கீழானதாகும்!

தியானம், சுவாசப்பயிற்சி, யோகப்பயிற்சி, … போன்றவை ஆன்மீகத்திற்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான கருவிகள், உத்திகள் மட்டுமே! இப்பயிற்சிகளையும், இன்னும் வேறு பல பயிற்சிகளையும் மேற்கொள்வதே ஆன்மீகமாகாது! மின் சாதனங்கள் இருந்தால் மட்டும் போதாது; அவை இயங்கவேண்டுமென்றால், மின்சாரம் வேண்டும். அச்சாதனங்களுக்கு மின் -இணைப்பு தரப்படவேண்டும். அவ்வாறே, ஆன்மீகத்திற்கு மிகவும் அடிப்படையானது உணர்வு (Consciousness) ஆகும். ஆன்மீகத்திற்கு உணர்வு - இணைப்பு மிகவும் மையமானது. ஒருவர் உணர்வுக்கு வரவேண்டும் (One must become Conscious)! மேலும், தியானத்தின் உதவியின்றியே எவரும் நேரடியாக உணர்வுக்கு வர இயலும். அவ்வாறு உணர்வுக்கு வருவது என்பது ஆன்மீகத் தேவைக்காக  என்றில்லாமல், ஒரு மனிதனாக தன் வாழ்க்கையை முழுமையாக வாழும் தேவைக்காகவே ஒவ்வொருவரும் உணர்வுக்கு வருவது, விழிப்போடு இருப்பது, உணர்வை உணர்வுகொள்வது, என்பது அவசியமாகும்!

இங்கு, விசாரமார்க்கத்தில்,  ‘ஆன்மீகப் பயிற்சிகள்’ எனப்படும் எவையும் கற்றுத்தரப்படுவதில்லை, மேற்கொள்ளப்படுவதில்லை! இங்கு சிந்திப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும், தனக்காக, தன் வாழ்க்கையை அறிந்து, புரிந்து வாழ்வதற்காக; வாழ்வின் ஒப்பற்ற இலக்கை தன் வாழ்காலத்திற்குள்ளாகவே அடைவதற்காகச் சிந்தித்தாக வேண்டும். இங்கு சீடர்கள், சாதகர்கள், அப்பியாசிகள் எனப்படுபவர்களுக்காக ‘குரு’ என்ற ஒருவர் சிந்திப்பார் என்பது கிடையாது! இங்கு ஒரு விசார- நடத்துனர் இருக்கிறார்; அவருடைய ஒரே ஆன்மீகப்பணி, ஆன்மீகம் குறித்த விசாரப் பங்கேற்பாளர்களின் (அப்பியாசிகளின்) தவறான கருத்தாக்கங்களைக் (Misconceptions) களைவது என்பது மட்டுமேயாகும்!

ஞானம், பக்தி, கர்மம்

இங்கு சிந்திப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுவதால், இது ஏதோ அறிவு-ஜீவிகளின் குழு என்று அர்த்தமல்ல. மாறாக, மூளை, இதயம், கைகால்கள், நாடி-நரம்புகள் எல்லாமும் ஒருங்கே இசைவுடன், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்ற ஆன்மீக இலக்கிற்காகச் செயல்பட வேண்டும் என்பது முக்கியமாகும். ஏனெனில், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பதுதான் உண்மையான வாழ்தலும், ஆன்மீகமும் ஆகும்! வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாத நிலையில் வாழ்க்கையும் இல்லை, ஆன்மீகவும் இல்லை! அவ்வாறு இருக்க முடியுமெனில், அது விலங்குத்தனமான வெறும் ஜீவித்தல் என்பதாக மட்டுமே விளங்கமுடியும்.

நம் பலரிடையே, ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் பற்றிய துண்டுபட்ட, தவறான பார்வை நிலவி வருகிறது. அதாவது, ஞான மார்க்கம் என்பது கடினமானது எனவும், அது எல்லோருக்கும் ஒத்துவராது எனவும், பக்தி மார்க்கம் என்பது எளிதானது எனவும், சிலருக்கு கர்ம மார்க்கம்தான் சரியானது எனவும் ஓர்படிவார்ப்பாக (Stereotype) கருதிக்கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்கள்! இப்பார்வை தவறானது; ஏனென்றால், மனிதனை மூளை வேறாக, இதயம் வேறாக, கைகால்கள் வேறாக வெட்டிப்பிரித்தது யார்? எங்கோ, எவரோ, எப்போதோ ஏதோ காரணத்திற்காக சொல்லப்பட்ட முறையை அப்படியே கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டு வருவது பொருத்தமற்றது!

மனிதனை, மூளை வேறாக, இதயம் வேறாக, கைகால்கள் வேறாக வெட்டிப்பிரிக்க இயலாது; அவ்வாறே, ஞானம், பக்தி கர்மம் ஆகியவையும் தனித்தனியானவையல்ல; அவற்றை வெட்டிப்பிரிக்க இயலாது! அவ்வாறு வெட்டிப்பிரிக்கவும் கூடாது! ஒவ்வொருவரிடமும் ஞானம், பக்தி கர்மம் ஆகிய இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருப்பது அவசியம்! பொதுவாக பலர் எண்ணுவதுபோல் ஞானம் என்பது கடினமானதல்ல; அவ்வாறு கடினமாகத் தோன்றுவதற்குக் காரணம், நம்மில் அநேகருக்கு அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைத் தாண்டிய உயர்-வாழ்க்கைத் தேவைகள் குறித்த சிறு சலனமோ, உணர்வோ கிடையாது! அடுத்து, ‘பக்தி’ என்பது எல்லோரும் எண்ணுவதுபோல அப்படியொன்றும் எளிதான விஷயம் அல்ல! இன்னும் சொல்லப்போனால், பக்திதான் யாவற்றையும்விட மிகமிகக் கடினமானதாகும்! எவ்வாறெனில், சுயநல கோரிக்கைகள், வேண்டுதல்கள் எதுவும் இல்லாமல், “இறைவனுக்காகவே இறைவன்” என்பதான பக்தி மிக அரிதிலும் அரிதாகும்!

“வாழ்க்கை-விசாரம்”

இங்கு, விசாரமார்க்கத்தில், “நான் யார்?” விசாரத்திற்கு முன்பாக,  “வாழ்க்கை-விசாரம்” என்பதே முதலில் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால், எடுத்த எடுப்பிலேயே, எல்லோரும் “நான் யார்?” என்ற கேள்வியைக் கொண்டு தன்னை விசாரித்து ஒரே தாவலில், ‘ஆத்மா’ எனப்படும் உச்ச நிலை உணர்வை அடைந்துவிட முடியும் என்று சொல்வதற்கில்லை! அதற்குரிய ஒரு களம் தயார் படுத்தப்பட வேண்டும். அக்களம்தான் வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கைக்கு பிரத்தியேக அர்த்தம், குறிக்கோள், இலக்கு ஏதும் உள்ளதா? என்பன போன்ற முக்கியக் கேள்விகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் “வாழ்க்கை-விசாரம்” என்பதாகும்!

“வாழ்க்கை” என்பதைப் புரிந்துகொள்ள அதனுள் அடங்கியுள்ள மூன்று முக்கிய அம்சங்களை தெளிவாக அவற்றின் சாரத்தில் புரிந்துகொள்வது அவசியமாகும். அவை, பிரபஞ்சம், சமூகம், அகம் ஆகியவையே ஆகும். பிரபஞ்சம் என்பது இயற்கை, உலகம் ஆகிய புறவுலகம் பற்றியது. சமூகம் என்பது மனிதகுலம் மொத்தத்தையும் குறிக்கிறது. அகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் மனம், எண்ணம், மற்றும் அவனது ஒட்டுமொத்த உளவியல் அம்சங்களையும் பற்றியது. புறவுலகமாகிய பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்; இல்லாவிடில் அது தேவையில்லாமல் நம்முடைய கவனத்தை ஈர்த்துச் சிதறடித்தவண்ணம் இருக்கும்! ஒட்டுமொத்த இருப்பில், பிரபஞ்சத்தின் இடம், பங்கு, பாத்திரம், மற்றும் அதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து தெளிவாகப் புரிந்துகொண்டு அதை முடித்துவிட வேண்டும்!

அதேவேளையில், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் நேரடியாக விஞ்ஞான வகை வானவியலில் ( Astronomy)  ஈடுபடவேண்டும் என்பது அல்ல! மாறாக, பிரபஞ்சம் பற்றிய விஞ்ஞானத்தின் புரிதல்களையும், கோட்பாடுகளையும் அறிந்துகொள்வதுடன், அவை எவ்வாறு பிற அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன, ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைக் கொண்டு நாம் பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்துகொண்டாலே போதுமானது; அதற்கு நாம் அண்டவெளியில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள், மற்றும் பிற விண்பொருட்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு பட்டியலிட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையில்லை! ஏனெனில், விஞ்ஞான அணுகுமுறையின் வழியாக பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள இன்னும் பல நூற்றாண்டுகளும், இன்னும் பல நியூட்டன்களும்,  ஐன்ஸ்டீன்களும் தோன்றியாக வேண்டும்! ஆனால் நாம் ஒவ்வொருவரும் இப்பிரபஞ்சத்தையும், அனைத்தையும் நம் ஒவ்வொருவரின் வாழ்-காலத்திற்குள்ளாகவே புரிந்துகொண்டாக வேண்டியது அவசியமாகும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் ஐன்ஸ்டீனாகவும், புத்தனாகவும் இருப்பது அவசியம்!

ஆகவேதான், இங்கு விசாரமார்க்கத்தில், வழக்கமான ஆன்மீகச் சொல்லாடல்களையும், ஆன்மீகப் பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை! ஆம், உரிய அடிப்படைப் பாடங்களைக் கற்காமல், நமக்கு நாமே சிந்திக்காமல், நேரடியாக ஆன்மா, பிரம்மம், ஞானம், முக்தி, மோட்சம், … ஆகியவற்றை குறுக்குவழியில் அறியவோ, அடையவோ இயலாது! ஆம், சரியான தொடங்குபுள்ளிகளிலிருந்து தொடங்காத ஆன்மீகம் தன் இலக்கைச் சென்றடைவதில்லை!

விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, பலராலும் ஏற்கனவே திரட்டப்பட்ட அறிவைச் சேர்த்துக் கொண்டு நாம் நம் புரிதலைக் கட்டியெழுப்ப இயலும். “நான் பிறரைவிட அதிக தொலைவு முன்னோக்கிக் காண்கிறேன் என்றால், அதற்குக் காரணம் நான் முந்தைய ஜாம்பவான்களின் தோள்களின் மீது நின்று கொண்டு காண்கிறேன்!” என்று விஞ்ஞானி நியூட்டன் அவர்கள் கூறினார்!  ஆனால், அத்தகைய அணுகுமுறை ஆன்மீகத்தில் சாத்தியமில்லை! ஆன்மீகத்தில் நாம் எவருடைய முதுகிலும் ஏறிக்கொண்டு சவாரி செய்ய இயலாது! ஏனெனில், ஆன்மீகம் என்பது விஞ்ஞானத்தைப்போல, வெறும் அறிவு சார்ந்த துறை அல்ல! ஆன்மீகம் என்பது ஒவ்வொருவருடைய உணர்விலும் ஏற்பட வேண்டிய மாற்றத்தை, மலர்ச்சியைச் சார்ந்தது. ஒருவருடைய உணர்வோடு உணர்வாகக் கலக்காத எவ்வொரு அறிவும், அனுபவமும், புரிதலும்  ஒருவருடையதாக ஆகாது!

பலர் ஆன்மீக நூல்கள் பலவற்றை வாசித்துவிட்டு, “எல்லாம் புரிந்துவிட்டது!” என்ற பிரமையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது! இவர்களுடைய ஆன்மீகம் உணர்வில் வேர்கொள்ளாமல், இவர்களுடைய மூளையில், அறிவில்  வேர் கொண்டுள்ளது! அப்படியென்றால், ஆன்மீக நூல்களைக் கற்கக் கூடாது, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது; எவ்வொரு ஆன்மீக மையத்தையும், குருவையும் நாடக்கூடாது என்பதல்ல! மாறாக, இவ்வழிகளிலெல்லாம் நாம் ஆன்மீகம் தொடர்பான சில குறிப்புக்களை மட்டுமே பெறமுடியும்! அவை நம்மை நாமே தோண்டுவதற்கான கருவிகள் போன்றவையே என்பதை தெளிவாக உணர்ந்து செயல்பட வேண்டும்!

அடுத்து, நாம் ஆன்மீக மையங்களில், ஆசிரமங்களில் சேருவது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! ஏனென்றால், ஆன்மீகம் என்பது கும்பல் நிகழ்வுமுறை (Mass Phenomenon) அல்ல! மாறாக, ஆன்மீகம் என்பது தனிமனித நிகழ்வுமுறை (Individual Phenomenon) ஆகும். அது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான ஆழமான தொடர்புறவில் நிகழும் பரிமாற்றம் ஆகும்! அங்கே மூன்றாவது ஒரு நபருக்கு இடமில்லை! ஆகவேதான், வள்ளலார் அவர்கள் “தனித்திரு!” என்று சொன்னார். உங்களுடைய மையத்தைக் கண்டடையும்வரை நீங்கள் தனித்திருப்பது அவசியம்; அதன்பிறகு, நீங்கள் மானுடம் மொத்தத்தையும் தழுவிக்கொள்ளலாம். அப்போதும் கூட,வழியில் காணும் ஒவ்வொரு மனிதனையும் கட்டித் தழுவிக்கொள்ளவேண்டும் என்பதில்லை!

ஆன்மீகம் என்பது, ‘எனது ஞானமடைதல்’, ‘எனது முக்தி’, ‘எனது மோட்சம்’ என்கிற ரீதியிலான சுயநலமான சொந்த விவகாரமும் அல்ல, அல்லது பொது நலம் விரும்பும் சமூக விவகாரமும் அல்ல! மாறாக, படைப்பில் தம்மை முழுமையாக முதலீடு செய்துள்ள அந்த மூலமெய்ம்மைக்கு நாம் ஒவ்வொருவரும் திரும்பச்செலுத்தவேண்டிய அம்சத்தைப் பற்றிய  விவகாரம் ஆகும்! ஆம், மெய்ம்மையை நாம் ஒவ்வொருவரும் கண்டடைவது ஒன்றே அதற்கு அசலாக அதைத் திருப்பித் தருவதாகும்!

உண்மையான ஒருங்கிணைந்த ஆன்மீகம்

சிலர், ஒருங்கிணைந்த ஆன்மீகம் (Integral Spirituality) என்ற பெயரில் எல்லாமும் ஆன்மீகத்தன்மை கொண்டவையே என்று கூறி எல்லாவற்றுக்கும் இடமளித்து, கொண்டாடி ஒரு கலவையான மசாலா ஆன்மீகத்தைக் கைக்கொள்வது பற்றி சிலாகித்துப் பேசி வருகின்றனர்; கடைப்பிடிக்கவும் செய்கின்றனர்! இயற்கையில் தோன்றிய அல்லது பரிணமித்த ஒவ்வொரு அம்சத்திற்கும், பண்பிற்கும் அதற்குரிய ஒரு முறையான இடமும், பங்கும், பாத்திரமும் உள்ளது. அதே நேரத்தில், எல்லாமும் ஆன்மீகத்தன்மை கொண்டவையே என்று சொல்வதற்கு இடமில்லை!

ஏனெனில், பிரபஞ்சம் என்பது பலவகைப்பட்ட பொருட்களும், அம்சங்களும், பண்புகளும் இடம்பெறும் மாபெரும் தட்டுமுட்டுச் சாமான்கள் கிடங்கு (Godown) அல்ல! அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும்;  அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கி முன்னேறிச் செல்லும்  பரிணாம நிகழ்வுமுறை (Evolutionary Process) ஆகும். பரிணாம நிகழ்வுமுறை என இங்கு நாம் குறிப்பிடுவது டார்வினின் உயிரியல் பரிணாம முறை அல்ல; அது வெறுமனே உயிரினங்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து வேறொன்றாக கிளைத்தன என்பது பற்றிய அனுமானக் கோட்பாடு மட்டுமே; ஆகவே அது மிகவும் மட்டுப்பாடானது; நாம் இங்கு குறிப்பிடும் பரிணாம வழிமுறையானது டார்வினின் பரிணாமத்தை  உள்ளடக்கியும் அதைக் கடந்தும் செல்லும் ஒன்றாகும்!

ஒட்டுமொத்த பரிணாம நிகழ்வுப் போக்கையும் நாம் ஆன்மீக நிகழ்வுமுறையாகக் கொள்ளலாம்! ஆனால், பரிணாமத்தில் என்ன நிகழ்கிறது, பரிணாமம் எதை நோக்கிச் செல்கிறது, அதில், தனது பங்கு, பாத்திரம் என்ன, என்பவற்றை யெல்லாம் உணர்வுகொள்ளக்கூடிய உணர்வுள்ள மனிதஜீவியுடன்தான் ஆன்மீகம் தொடங்குகிறது! அதே நேரத்தில், எண்ணற்ற மனிதர்களின் விஷயத்தில், ஆன்மீகம் என்பது இன்னும் சற்றும் துளிர்க்கவேயில்லை!

பரிணாம வரலாற்றில் உருவான அனைத்தும், ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில்  அமைந்து பரிணாமத்தின் மிகத் தொலைவான இலக்கை அடைவதற்குச் சேவை புரியும்வகையில் தோன்றிய படிகளே!  பரிணாமத்தின் அந்த ஒப்பற்ற இலக்கை நீக்கிவிட்டால், மனிதன் உட்பட பரிணாமத்தில் தோன்றிய அனைத்திற்கும், யாதொரு அர்த்தமும் இருக்காது! ஒவ்வொன்றும், தம்தம் மட்டுப்பாட்டினால், தனக்காகவே தான் இருப்பதாக கருதிக்கொண்டிருக்கலாம் அல்லது கருதாமலும் இருக்கலாமே தவிர உண்மையில், எதுவும் தமக்காக இல்லை; இன்னும், தனித்தனியே எதற்கும் யாதொரு அர்த்தமுமில்லை! அதாவது, ‘கலை கலைக்காகவே’, ‘கத்தரிக்காய்  கத்தரிக்காய்க்காகவே’, ‘காமம் காமத்திற்காகவே’, ‘உடல் உடலுக்காகவே’, அன்றாட வாழ்க்கை அன்றாட வாழ்க்கைக்காகவே’... என்பதாக உண்மையில் எதுவும் இல்லை! ஆம், உண்மையான ஒருமை, ஒருங்கிணைவு, ஒன்று கூடுதல் என்பது கீழ்ப்படிகளில் இல்லை; மாறாக, உச்ச உயர்-படியில் மட்டுமே சாத்தியமாகும்!

ஆம், மெய்ம்மையுடன் கலப்பது ஒன்றே உண்மையான கொண்டாட்டம்! மெய்ம்மை தொடர்பில்லாத பிறவனைத்தும் வெற்றுக் கேளிக்கைகளே அன்றி வேறில்லை. இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் உணவை ருசித்து, ரசித்துச் சாப்பிடக்கூடாது என்பதல்ல! அதே நேரத்தில், நீங்கள் முடிவில்லாது உணவை ருசித்து, ரசித்துச் சாப்பிடுவது, கலை, இலக்கியம், ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று மூழ்கியிருப்பது என்பது முறையாகாது! உங்களுக்கு உண்மையிலேயே உண்மை, மெய்ம்மை மீது நாட்டம் உள்ளதென்றால், உங்களை எதுவும், எவரும் வழிதவறிப் போகச்செய்ய முடியாது! ஆகவே, முதலில் மெய்ம்மையைத் தேடுங்கள், தேடிக்கண்டடையுங்கள் அதன் பிறகு, முடிந்தால் விருந்து, ஆடல், பாடல், கேளிக்கை கொண்டாட்டம் என்று இருங்கள்!

புதுயுக பாவனை ஆன்மீகம்!

எண்ணற்றவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் எதையெதையோ பயிற்சிக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள்! ஆனால், அவர்களிடம் ஆன்மீக ரீதியான யாதொரு மாற்றமோ, முன்னேற்றமோ எதுவும் ஏற்படுவதில்லை! ஏனெனில், அவர்களுடைய ஆன்மீகம் வெறும் பாவனை ரீதியிலமைந்ததாகும். அவர்கள், தமது உலகியல் அல்லது லௌகீகத்திற்குள் ஆன்மீகத்தை அடக்க முயற்சிக்கின்றனர்! ஏதோ, ஆன்மீகம் என்பது அனைத்தையும் அனுமதிக்கும் உரிமம் என்பதுபோல அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்!

நல்லெண்ணமும், தாராள மனமும் கொண்ட சிலர் ஆன்மீகத்தை பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்றனர். ஆனால், ஆன்மீகத்தை அக்கறையோடு பக்குவமாக தேக்கரண்டியால் ஊட்டவோ, அல்லது வலியத் திணிக்கவோ இயலாது! ஒவ்வொருவருக்கும் வயிற்றுப் பசியைப்போல, ஆன்மீகப் பசி என்பது ஏற்படவில்லையெனில், கொஞ்சிக்குலவி ஊட்டுவதாலோ, வலியத் திணிப்பதாலோ ஆன்மீகம் துளிர்க்காது!  ஒருவர் கடலளவு ஆன்மீக நூல்களை வாசித்தாலும்; ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் இணைந்து அம்மார்க்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றினாலும், அங்குள்ள குருவிடமே தொடர்ந்து பல வருடங்கள் பாடம் கற்றாலும், கடுகளவு ஆன்மீகம் கூட செழிக்காது!

பலருக்கு ஆன்மீகத்திற்குரிய உளப்பாங்கு என்பது துளியும் கிடையாது! ஒருவகை திமிர்த்தனமான தன்னம்பிக்கை, அல்லது, மட்டுமீறிய நம்பிக்கை, மிதப்பு (வீண்பெருமிதம்)….. இத்யாதி, இத்யாதி எல்லாம் சேர்ந்த கலவையின் விளைவாக ஆன்மீகம் என்பது வெறும் பாவனைரீதியான ஒன்றாக விளங்குகிறது! இவர்களிடம், மெய்ம்மை மீதான நாட்டம் என்பது ஒரு மாபெரும் ஏக்கமாக உருப்பெறாமல், ஒருவகை ‘ஏத்தம்’தான் மேலோங்கி நிற்கிறது!

சுற்றுவழி வேண்டாம், நேர்வழியில் செல்லுங்கள்!

அத்வைதம்,  விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், வேதாந்தம் என்பவையெல்லாம்  என்ன? உபநிடதங்கள் என்பவை வேதத்தின் பகுதியா, அல்லது வேதாந்தத்தின் பகுதியா? ஒவ்வொரு உபநிடதமும் ஒரு வேதத்துக்கு உரியதா? உதாரணமாக, எந்த உபநிடதம் எந்த வேதத்தின் உபாங்கம், அதாவது, துணைப்பகுதி? சாந்தோக்ய உபநிடதம் சாமவேதத்தின் துணைப்பகுதியா, அல்லது ரிக் வேதத்தின் துணைப்பகுதியா? என்பனபோன்ற ஆராய்ச்சிகள்,  (நீங்கள் வெறும் ஒரு பண்டிதராக ஆக விரும்பவில்லை; மாறாக, ஆன்மீகம் தான் உங்களுடைய இலக்கு எனும் பட்சத்தில்) தேவையற்றவை!

இத்தகைய ஆராய்ச்சிகள்  பெரும் கால விரயம் ஆகும். அவை உங்கள் கவனத்தை முடிவில்லாமல் சிதறடித்துக் கொண்டே செல்லும். ஏனெனில், உலகமெங்கும் எண்ணிலடங்கா ஆன்மீகத் தத்துவங்கள், கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளன; அவற்றையெல்லாம் வாசித்து முடிப்பதற்கே ஒரு வாழ்-காலம் போதாது! அதில், அவற்றைப் புரிந்துகொள்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகும்! அதாவது ஒன்றை ஒன்று மறுக்கும் தத்துவங்களையும், கோட்பாடுகளையும்; ஒரு முரண்பாட்டை நீக்க முன்வைக்கப்பட்ட இன்னொரு முரண்பாட்டையும், இவ்வாறு சங்கிலித்தொடராக நீளும் தத்துவ விளக்கங்களின் அடர்ந்த கானகத்தில் நீங்கள் நிச்சயம் வழிதவறிக் காணாமல் போய்விடுவீர்கள்! இவ்வாறு சுற்றி வளைத்துச் செல்வதற்குப்பதிலாக நீங்களே நேரடியாக மெய்ம்மையைப் புரிந்துகொள்வது தான் உசிதமானதாகும்!

சமரசமற்ற ஆன்மீகவிசாரம்

இக்கட்டுரைக்கு தூய ஆன்மீகவிசாரம் என்று தலைப்பிட்டிருக்கலாம்; ஆனால், அது பிற வழக்கமான ஆன்மீக முறைகளை, மார்க்கங்களைப் புண்படுத்துவதாக அமையலாம் என்பதால், சமரசமற்ற ஆன்மீகவிசாரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.அதாவது, இந்த விசார மார்க்கத்தில் உதட்டளவு உபசாரம் போன்ற யாதொரு (இறை) வழிபாடும், குறியீட்டு முக்கியத்துவம்கொண்ட எவ்வகைச் சடங்கும் கிடையாது! அடுத்து, எவ்வொரு மத, வைதீகத் தரப்புடனும் சமரசம் செய்துகொள்வதுமில்லை! முக்கியமாக, எவ்வொரு ஞானமரபுடனும் இதற்குத் தொடர்பில்லை. எவ்வொரு மரபையும் இது பின்பற்றுவதுமில்லை! அதைவிட முக்கியமாக, இம்மார்க்கம் வெகுசனத்தளத்துடனும், மேட்டுக்குடித்தளத்துடனும் (Elites) சமரசம் செய்துகொள்வதில்லை! இம்மார்க்கத்தில் ஞானமும், எதுவும் விற்கப்படுவதுமில்லை, வாங்கப்படுவதுமில்லை!

அடுத்து, உண்மையானது இந்திய ஞானமரபில் உள்ளது, மேற்கத்திய ஞானமரபில் உள்ளது; வேதாந்தத்தில் உள்ளது; விவிலியத்தில் உள்ளது என்கிற கூப்பாடுகளில் இம்மார்க்கத்துக்கு நம்பிக்கையில்லை! ஏனெனில், உண்மை, எங்கே எவரால் சொல்லப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் நேரே உணர்வதும், கண்டடைவதும் மட்டுமே உண்மை! அதே நேரத்தில், உண்மை எந்தத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் அதிலுள்ள உண்மையை அங்கீகரிக்கத் தவறுவதுமில்லை! அவசியமிருப்பின், எல்லா உண்மைகளும் இங்கே ஆய்வுக்கு உட்படுத்தப்படும்!

'எளிய மக்கள்', 'வெகுஜனம்', 'சாதாரண மக்கள்', 'சராசரி மனிதன்',... என்றெல்லாம் வகைப்பாடுகள் உள்ளன என்று நம்புவதும், அவற்றை அங்கீகரிப்பதும், ஊக்குவிப்பதும்தான் எல்லாவித மட்டுப்பாடுகளையும் வளர்க்கிறது! 'மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் வழிபாடு தேவையாக
இருக்கிறது' என்பது ஒரு ஏமாற்று வேலை! ஏனெனில், அன்றாட வாழ்க்கை என்று தனியே ஏதுமில்லை! இருப்பது ஒரு வாழ்க்கைதான்; அது என்னவென்று அறியப்படாமல் உள்ளது; அறிந்தது மட்டுமே வாழ்க்கை என்று செல்வதுதான் எல்லா மட்டுப்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைகிறது! எந்தஒரு ஞானமரபும், தத்துவமும், ஆன்மீகமும் எந்த ஒரு வைதீகத் தரப்புடனும், வெகுசனத்தளத்துடனும் சமரசம் செய்துகொண்டால்தான் நடைமுறைக்கு வரமுடியும் என்ற விதி ஏதுமில்லை! ஆன்மீகத்திற்கு தன்னை முழுமையாகத் திறக்கவும், தன்னை முழுமையாகக் கொடுக்கவும் முன்வரும் ஒவ்வொரு தனிமனிதனின் வழியாக மட்டுமே ஆன்மீகம் வாழ்கிறது, நடைமுறைக்கு வருகிறது!

உலகிலுள்ள ஆன்மீக நூல்கள் அனைத்தும் அழிந்துபோயின என்றாலும், விலங்குத் தனமான அடிப்படை வாழ்க்கையைக் கடந்து வாழ்க்கையைத் தரிசிக்க விழைகிற, சிந்திக்கும் ஒரு மனிதன் இருந்தாலும் அவனுள், அவன் வழியாக ஆன்மீகம் துளிர்க்கும், வாழும்! அத்தகைய ஒரு தனிமனிதனான நீங்கள் இருப்பின், “வாழ்த்துக்கள்”!


குறிப்புகள்:

*விசாரமார்க்கம் (ஆன்மீக மையம்)
நெய்வேலி/அசோக் நகர்-2
தொடர்பு எண் : 94881 94381

‘ஏத்தம்’ : ‘ஏத்தம்’ என்பது ஏற்றம் = மேன்மை, என்பதன் பேச்சு வழக்கு
வடிவமாகும்; அதாவது, ‘ஏத்தம்’ என்பது இவ்விடத்தில் போலியான
மேன்மையுணர்வைக் குறிக்கும் ஒன்றாகும்.

மா.கணேசன்/ நெய்வேலி/ 03.05.2019 - 10.05.2019

***************************************************************************

Thursday, 2 May 2019

உண்மையிலேயே நீங்கள் யார்?





மனிதன்  இப்பிரபஞ்சம் முழுவதையும், அதிலுள்ள அனைத்தையும் அறியலாம்! ஆனால், அனைத்தையும் அறியும் மனிதன் தன்னை அறியவில்லையெனில், அதாவது அறிபவனாகிய “தான் யார்?” என்பதை அறியவில்லையெனில், அவனுடைய அறிதல் யாதொரு அடிப்படையும் அற்ற மேம்போக்கான ஒன்றே ஆகும்!
                                                           ✦ ✦ ✦

“நான் யார்?” எனும் விசாரத்தைத் தொடங்கும் உணர்வு இறுதியான உணர்வு அல்ல!
அவ்விசாரத்தின் முழுமையில் வெளிப்படும் உணர்வு ஒருவன் தொடங்கும்போதிருந்த அதே அகந்தை-உணர்வு அல்ல!
                                                           ✦ ✦ ✦


வழிதவறி ஆன்மீகத்தை வந்தடைந்த எண்ணற்ற பலரிடம், “உண்மையில் நீங்கள் யார்?” என்று கேட்டால், உடனே பளிச்சென்று, “நான் ஆன்மா!” என்றும், “நான் பிரம்மம்!” என்றும், அல்லது,
“நான் கடவுள்!” என்றும் சொல்லிடுவர்! இவர்கள் ஏட்டுச்சுரைக்காயை கறி சமைத்து உண்ணும் பிரமையில் ஆழ்ந்தவர்கள்! இவர்கள் கரை சேர்வது கடினம்!

பரிணாம வழிமுறையில் வெளிப்படும் ஒவ்வொரு அம்சமும் தம்மைத்தாமே இறுதியானது
என்பதுபோல நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றது! இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல. ஆகவேதான் ஒரு புழு கடைசிவரை ஒரு புழுவாகவும், ஒரு தவளை கடைசிவரை ஒரு தவளையாகவும் நீடிக்கிறது. இவ்வாறே, ஒவ்வொரு மனிதனும் தன்னை இறுதி நிஜம் என எண்ணிக் கொள்கிறான், அகங்காரத்தில் மூழ்கி தம் அகந்தையிலேயே சுருக்கிட்டுச் சாகிறான்!

ஒருவர் சதா "நான்", "நான்", "நான்" என்று தன்னை முன்னிறுத்துவது, சுயமுக்கியத்துவம் பாராட்டுவது, தன்னைக் கொண்டாடுவது,.... ஆகியவற்றின் வழியாக எதை, அல்லது யாரை
நிறுவுகிறார்? உண்மையிலேயே, அவரது "நான்" என்பது எதைக்குறிக்கிறது? அது எத்தகைய
மெய்ம்மை?

உங்களுடைய "நான்" என்பது என்ன சுயம்புவாக தன்னில் தானே தோன்றியதா? அல்லது அதுவே
இறுதியான நிஜமா? தனது மூலம் எது முடிவு எது என்பதை ஆராய்ந்தறியாத மனிதன் எதை
அடிப்படையாகக்கொண்டு தன்னைக் கொண்டாடுகிறான்?


"நான் யார்?" எனும் விசாரம் உண்மையிலேயே எதைக் குறிக்கிறது?

உண்மையில், "நான் யார்?" எனும் விசாரம் எவ்வொரு தனி நபரையும் பற்றியதல்ல! ஏனெனில், ஒரு தனி நபர் என்பவர் யார்? அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏதோவொரு ஊரில், நகரில், நாட்டில், ஒரு குறிப்பிட்ட தம்பதியர்க்கு மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம். அவர் ஒரு ஏழ்மையான, அல்லது பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம்; அவருடைய கல்வித்தகுதி எதுவாகவும் இருக்கலாம்; அவருடைய தனித்திறமையும் எதுவாகவும் இருக்கலாம். அவர் இருக்கும் சமூகத்தில் அவர் ஒரு பெரிய மனிதராக மதிக்கப்படலாம், அல்லது சாதாரண ஒருவராகவோ, எவராகவோ,  யாதொரு முக்கியத்துவமும் அற்றவராக இருக்கலாம்! இத்தகைய நபர்களைப் பற்றியதல்ல "நான் யார்?" எனும் விசாரம்!

எவ்வொரு மனிதருக்கும் ஒரு உள்ளூர் அடையாளமும், (Local-Identity) சுய சரிதக் குறிப்புகளும் இருக்கும். அதே போல, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரபஞ்சமளாவிய அடையாளமும் (Universal Identity) இருக்கிறது. இவ்விரண்டில், இரண்டாவது சொல்லப்படும் விஷயம்தான்  அதிமுக்கியத்துவம் கொண்டதாகும்; ஏனெனில், அதில்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டிய பரிணாம முழுமை அடங்கியிருக்கிறது!

ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமலேயே பலர் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஆன்மீகத்தின் வழியாக பணக்காரராக ஆக விழைகின்றனர்! சிலர் ஆன்மீகத்தின் வழியாக பெயர், புகழ், மற்றும் முக்கியத்துவம் அடைய விரும்புகின்றனர்! சிலர் தங்களது உள்ளீடற்ற சுயத்தை மறைக்கும் கவசமாக பயன்படுத்துகின்றனர்! சிலர் 'ஞானி' அல்லது 'மகான்' எனும் பட்டங்களைப் பெற விரும்புகிறார்கள். எண்ணற்ற பலர் தங்களது அர்த்தமற்ற வாழ்க்கையை அலங்கரிக்கும் அணிகலனாக அமையும் என எண்ணி ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றனர்!

உண்மையில், “நான் யார்?” என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனை, அதாவது ஒரு நபரை, அதாவது
உங்களைப் பற்றிய விசாரம் அல்ல! மாறாக, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சத்துடனான
தொடர்பில், அதாவது, பிரபஞ்சம் அளாவிய தன்மையில் மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதைப் பற்றியதாகும். அதாவது, முழுமை அல்லது இறுதி மெய்ம்மையுடன் தொடர்புபடுத்தாமல் (தொடர்பு கொள்ளாமல்), “நான்” என்பதைப்பற்றி திரட்டப்பட்ட அனைத்து அறிவும் பயனற்ற வீண் சுமையே தவிர வேறல்ல! “நான் யார்?” என்ற கேள்வி எவ்வொரு மனிதனின் சொந்த விவகாரத்தைச் ( Personal) சுட்டுவதில்லை! மாறாக, சொந்த விவகாரம் கடந்த (Trans-Personal) தன்மையை, மெய்ம்மையைச் சுட்டுகிறது

உண்மையில், உங்களுடைய “நான்” என்பதற்கு அதீதமான மதிப்பும், முக்கியத்துவமும் உள்ளது; அதை நனவிலி ரீதியாக நீங்கள் உணர்வதாலேயே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராகவும்,  நீங்களே இப்பிரபஞ்சத்தின் மையம் என்பது போலும் கருதிக்கொள்கின்றீர்; அதன் தொடர்ச்சியாக ஆணவம், செருக்கு, இறுமாப்பு யாவும் கொள்கிறீர்!
ஆனால், தன்னை உண்மையிலேயே அறிந்த ஒருவர் ஆரவாரமின்றி அமைதியாக இருக்கிறார்! ஒருவர் தனது அசலான மதிப்பையும், முக்கியத்துவத்தையும் அறிய, அவர் தனது “நான்” உணர்வை ஊடுருவி அதன் இறுதி ஆழம்வரை சென்று அறிந்தாக வேண்டும்!

தனது மூலத்தையும் அறியாத, தனது முடிவிடத்தையும் அறியாத மனிதனின் “நான்” என்பது   அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேரற்ற மரம் போன்றதாகும்! அவனது உடல் மரிக்கும்வரை அவனது “நான்” என்பதும் பிழைத்திருக்கும்! ஆனால், தன்னை அறிந்த மனிதன் மரணத்துடன் முடிந்து போவதில்லை!

அகந்தையின் முதல் சொல் “நான்” என்பதே; அதுவே அதன் முதல் பெயரும் ஆகும்! ஆனால் அதுவே அதன் இறுதிச் சொல்லாகவும், பெயராகவும் அமைந்திடின் அது பெரிதும் துரதிருஷ்டவச மானதாகும்! ஏனெனில், தன்னையறியாத “நான்” உள்ளீடற்றதாகும்!

எவ்வொரு மனிதனும் பிறக்கும்போது முதலில் வெறும் உடல்-ஜீவியாகத்தான் பிறக்கிறான்! பிறகு அவனுள் அகந்தை உணர்வு  தோன்றி “நான்” என்று சொல்லும் போதுதான் அவன் ஒரு மனிதனாக எழத் தொடங்குகிறான்! அகந்தை என்பது உணர்வின் உதயத்தைக் குறிக்கிறது; அதாவது சூழ்ந்துள்ள இருளில்  ஒரு ஒளிப்புள்ளியாக அகந்தை உதிக்கின்றது! ஒட்டுமொத்தப் பிரபஞ்சப் பரிணாம வரலாற்றில் அகந்தையின் உதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தனிச்சிறப்பான நிகழ்வாகும்! ஏனெனில், அகந்தை- உணர்வுக்கு நிகராக இப்பிரபஞ்சத்தில் அதற்குமுன்னர்வரை வேறெதுவும் இல்லை! ஆனால், அகந்தை தோன்றிய பின்னர் தொடர்ந்து வளராமல், தனது மிகவும் அசலான தன்மைக்கு விழிக்காமல், அகந்தையாகவே நீடிக்குமானால், அது போன்ற ஒரு துரதிருஷ்டமும் வேறில்லை! ஏனெனில், அகந்தையின் தேக்கம் வீழ்ச்சியும் மரணமும் ஆகும்!

உணர்வு என்பது ஒரு நதியைப் போல பெருக்கெடுத்து பாய்ந்தோடிச் சென்று அதன் முடிவிடமான  என்றும் வற்றாத சமுத்திரத்தில் கலந்திடவேண்டும்! ஆம், அகந்தை உணர்வானது பெருக்கெடுத்துப் பாய்ந்தோடி அகண்ட உணர்வாகிய பேருணர்வுச் சமுத்திரத்துடன் சங்கமித்திட வேண்டும்!

அகந்தை-உணர்வு என்பது மனிதனின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அகந்தையுள்ள ஒரு மனிதன் அரைமனிதன் மட்டுமே ஆவான். அவன் ஒரு தவளை அல்லது எவ்வொரு விலங்கைவிடவும் மேலாவனாவான்!  ஆனால், அவனது அகந்தை மலர்ந்து அகண்ட உணர்வாக, முழு உணர்வாகப் பரிமளிக்கும் போது தான் அவன் முழு-மனிதனாகிறான்; அவனது அசலான வீட்டை அடையும் பேறு பெறுகிறான்! உடல் என்பது உணர்வு தோன்றுவதற்கான ஒரு கூடு மாத்திரமே தவிர அதில் அவன் நிரந்தரமாகத் தங்கி வசிக்கமுடியாது! முழு-உணர்வு, அல்லது பேருணர்வுதான் ஒரே சாசுவதமான, பாதுகாப்பான வசிப்பிடம் ஆகும்!

ஆன்மீகம் என்பது இவ்வுலக வாழ்வில் (இம்மையில்) இலாபம் அடைவதற்கான முதலீடு அல்ல! மாறாக, இவ்வுலகம் கடந்த, காலம் நீங்கிய (மறுமை) தனது அசலான மெய்ம்மையைச் சென்று சேர்வதற்கான ஒரு கால எந்திரம் போன்றதாகும்! ஏன் ஆன்மீகத்தில் ஈடுபடும் எல்லோராலும் அதன் இலக்கை அடையமுடிவதில்லை என்பதற்கான காரணம், அவர்கள் எல்லோரும் லௌகீகம் அல்லது உலகியலுக்காக ஆன்மீகத்தை ஏய்த்துச் சூறையாடிட முயற்சிப்பது தானாகும்! பலர் தங்களது அக-வறுமையைப் போக்கவே ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றனர்! ஏழையோ அகத்திலும், புறத்திலும் வறுமையில் உழல்கிறான்; பணக்காரனோ புறத்தில் செல்வந்தனாயிருப்பினும் தன் அகத்தில் படு வறுமையில் உள்ளான்! ஏழையோ, பனக்காரனோ, உலகியல் மதிப்புக்களைச் சுமப்பவனால் ஆன்மீக மதிப்பை ஒருபோதும் அறியவோ, அடையவோ இயலாது!

தன்னை-அறிதல் (Self-Realization) என்பது தனது அசலான தன்மையை அறிய தன்னைக் கடந்து செல்லுதல் (Self-Transcending) , தன்னைத் தியாகம் செய்தல் என்பதேயாகும்! ஒரு மொட்டு தன்னை இழக்காமல், தனது மொட்டு  நிலையைக் கடக்காமல் மலராக எவ்வாறு ஆக முடியும்? எண்ணற்ற அகந்தை மனிதர்கள் ஆசைப்பட்டாலும் மலரத் துணியாத மொட்டுக்களே ஆவர்! மொட்டு மலராமல் தனது பரிமளத்தை, வசீகரத்தை எவ்வாறு பெற இயலும்?


உணர்வு தோன்றும்போது அடையாளமற்றதாக, பெயரற்றதாக, அநாமதேயமாகத்தான் தோன்றுகிறது! உணர்வு முதலில் புறம் நோக்கியே பாய்கிறது! அப்படிப்பாயும்போது அது தன்னை முதன்முதலாக அடையாளப்படுத்திக்கொள்வது, தான் தோன்றிய கூடான உடலுடன் தான்! உணர்வானது தனது உள்ளார்ந்த அடையாளத்தை உணர்வதற்குரிய முதிர்ச்சியில்லாத அந்த தொடக்க நிலையில், தனது உடலையும், அதன் மிக நச்சரிப்பான பசிகளையும், தேவைகளையும் தமதெனக் கொண்டு முழுமையாக தன் உடலைப் பிரதிநிதித்துவம் செய்யத் தொடங்கிவிடுகிறது. அதன்பிறகு (எண்ணற்ற மனிதர்களின் விஷயத்தில்) இந்த உடல்-மைய-அடையாளத்திலிருந்து உணர்வானது தன்னை விடுவித்துக்கொள்ளவே முடியாமல் போய்விடுகிறது!  ஒருவர், உணர்வாகிய தான் வேறு, தனது உடல் வேறு, என்பதை உணரத் தொடங்கும்வரை இந்த உடல்-மைய- அடையாள மயக்கம் கடைசிவரை தொடர்கிறது! இவ்வழியே, பலரது வாழ்வில் கடைசிவரை தன்னையறிதல் என்பது தொடங்குவதேயில்லை! தனது நோக்கில், சரியாக 180° பாகை சுழன்று அகம் நோக்கித் திரும்பாமல், “நான் யார்?” என்ற கேள்வியை ஒருவர் தன்னை நோக்கி கேட்க இயலாது; அப்படியே கேட்டாலும், அது ஒப்புக்கு அமைந்த வெற்றுக் கேள்வியாக பலனற்றுப்போகும்!

மேலும், நம்மில் பலரும் நம்மைப்பற்றி அறிவதெல்லாம், நம்மைச்சுற்றியுள்ளவர்கள் -  நம்முடைய பெற்றோர்கள், உறவினர்கள், அண்டைஅயலார், நண்பர்கள், மற்றும் பிறர் நம்மைப்பற்றிச் சொன்னவைகளைக் கொண்டும், மற்றும் நம்மைப்பற்றி நாமே புனைந்து கொண்டவைகளைக் கொண்டும் தான் அறிகிறோம்! நம்மில் வெகு சிலரே நேரடியாக நம்மை உணர்பவர்களாக, அறிகிறவர்களாக இருக்கிறோம்! பிரெஞ்சுத்தத்துவ ஞானி தெக்கார்த்தே, “நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்!” என்றார். நம்மில் பலரோ, “என் அண்டை வீட்டுக்காரன் இருக்கிறான், ஆகவே நான் இருக்கிறேன்!” என்கிறோம்! நம்முடைய எல்லாச் சிந்தனைகளும், பார்வைகளும், கருத்துக்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை, அதாவது, பிறரைச் சார்ந்ததாகவே; பிறரிடமிருந்து கடன் பெற்றவையாகவே உள்ளன! உங்கள் ஒவ்வொருவரிடமும், ஒரே ஒரு அசலான, உங்களுடைய சொந்தக் கருத்து, பார்வை என ஏதேனும் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்!

நாம் ஒவ்வொருவரும் தன்னில் தான் யார்? என்று அறிவதில்லை, சிந்திப்பதில்லை. மாறாக, சமூகத்தில் தான் யார், என்னவாக இருக்கிறோம் என்பதைப்பற்றித்தான் அதிகமாக அறிகிறோம், சிந்திக்கிறோம். இவ்வழியே, நாம் நம்முடைய கருவான மையத்தை, சாரத்தை தொடுவதோ, நெருங்குவதோ இல்லை! நாம் நம்மைப்பற்றி அறிவதில்லை, சிந்திப்பதில்லை. மாறாக, நம்மைப்பற்றி பிறர் சொல்வதைப் பற்றியே பெரிதும் அக்கறை கொள்கிறோம். அவற்றை ஒட்டியும், வெட்டியும் நம்மை இவ்வுலகிற்குக் காட்ட விரும்புகிறோம். நாம் நம்மைப்பற்றி அல்லாமல், பெரிதும் நம்முடையவற்றைப்பற்றியே - ‘என் தோற்றம்’, ‘என் புகழ்’, என் மதிப்பு, எனது மனைவி, மக்கள், குடும்பம், எனது வாழ்க்கை, எனது உத்தியோகம், வருமானம்….என எப்போதும் எண்ணுகிறோம்.

நாம் வாழும் வாழ்க்கையும் நம்மைப்போலவே ஆழமற்றது, சாரமற்றது; பிறரை, அதாவது சமூகத்தைப் பார்த்து நகல் செய்வது என்பதாகவே உள்ளது…...

பொதுவாக, எவ்வொரு மனிதனும் “நான்” எனக்குறிப்பிடும்போது அவர் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறார், எதை “நான்” என கருதுகிறார் என்பதைத் துல்லியமாக அறிவது அவசியமாகும். முதலில், “நான்” எனும் உணர்வு, பிறரால், நம்மைச்சுற்றியுள்ளவர்களால், குறிப்பாக, ஒருவர் குழந்தையாக இருக்கும்போது அவரது பெற்றோரால் அவருக்கு வழங்கப்படும் தனிக்கவனிப்பு, மற்றும் முக்கியத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் ஒன்றாகவே தொடங்குகிறது. மேலும், பெற்றோர் அவரைப்பற்றி சொல்பவைகளைக் கொண்டே அவர் தனது அடையாளத்தை, பிம்பத்தை கட்டியெழுப்பத் தொடங்குகிறார். பிறகு, மற்றவர்கள் சொல்பவைகளைக் கொண்டும்; அதோடு தன்னைப்பற்றி தான் புனைந்து கொள்ளும் விஷயங்களைக் கொண்டும் ஒருவர் தனது அடையாளத்தை, பிம்பத்தை தொடர்ந்து கட்டியெழுப்புகிறார்!

ஆனால், பொதுவாக பிறர் நம்மைக்காண்பது என்பது நம்முடைய புறத்தோற்றத்தையும், மேற்பரப்பிலுள்ள சில அம்சங்களையும் மட்டுமே என்பதால், அவர்கள் நம்மை அடையாளப்படுத்துவதைக் கொண்டு நம்முடைய அடையாளத்தை கட்டமைப்பது என்பது மிகவும் மேம்போக்கான ஒன்றாகத்தான் அமையும். உண்மையில் இவ்வாறு அமைந்த, அல்லது, அமைத்துக்கொண்ட,  நம்மைப் பற்றிய மிகவும் மேலோட்டமான அடையாளத்தையே நாம் எனக் கருதிக்கொண்டு பொதுவாக நாமெல்லோரும் உலவிக்கொண்டுள்ளோம்! உண்மையில், நம்மை நம்முடைய உள்ளாழத்திலிருந்து அறிவதோ, உணர்வதோ இல்லை! ஆகவேதான், நம்மில் அநேகர் தன்னையறிதல் என்பதற்கு மிகவும் அந்நியமாக இருக்கிறோம்.

நம்மைப் பற்றி நாம் அறிவதெல்லாம் நம்முடைய மேற்புறத்தை மட்டுமே! ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் நாமறியாத ஆழமானதொரு உட்புறமும் உள்ளது! இந்த உட்புறத்தை, அகத்தை, நோக்கியதே “நான் யார்?” எனும் கேள்வியும், விசாரமும் ஆகும். மனிதன் தன் மேற்புறத்தை மட்டும் அறிவதனால், அலங்கரித்துக்கொள்வதனால் மனிதனாவதில்லை! மாறாக, தன் உட்புறத்தின் அடியாழத்திலிருந்து தன்னை அறிவதன் மூலமாக மட்டுமே அவன் முழு-மனிதனாக மலர்கிறான்!

நாம் எல்லோரும் “நான்”, “நான்” என்று சதா நம்மைப்பற்றியே எண்ணுகிறோம்! நம்மைப்பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம், செருக்கடைகிறோம், ஆணவம் கொள்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் நம்மைத்தவிர இப்பிரபஞ்சத்தில்முக்கியத்துவம் கொண்ட வேறெதுவும் இல்லை என்பதுபோல நடந்துகொள்கிறோம்! ஆனால், “நான்” என நாம் உணர்வது நம்மில் எதை என்பதை நாம் அவ்வளவு தெளிவாக உணர்கிறோமா என்றால், இல்லை என்பதே நாம் அறியவிரும்பாத உண்மையாகும்!

உண்மையில், “நான்” என நாம் உணர்வது  உணர்வாகிய நம்மை அல்ல! மாறாக, நம்முடைய உடலையும், நம்முடைய ஒரு சில பண்புகள், திறமைகள், நேர்மறையான அம்சங்கள் ஆகியவைகளைக் கொண்டு நாம் உருவாக்கிய ஒரு அடையாளம், அல்லது பிம்பத்தையே “நான்” என நாம் குறிப்பிடுகிறோம்!

உண்மையில் ஒரு மனிதனின் “நான்” என்பது அவனது உணர்வைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும்! ஏனெனில், தனது சாரத்தில் மனிதன் என்பவன் அவனது உடலோ, மனமோ, மனதில் தோன்றும் எண்ணங்களோ அல்ல; மாறாக, உணர்வே ஆவான்! இன்னும் சொல்லப் போனால், உணர்வு இல்லையேல், மனத்தில் நான் என்ற எண்ணம் எழ வாய்ப்பே இருந்திருக்காது! மனிதனை விலங்கிலிருந்து வித்தியாசப்படுத்தும் அம்சம் உணர்வே ஆகும். மனம் என்பது உணர்வு வெளிப்படுவதற்கான ஒரு ஊடகம் ஆகும். ஆம், மனம் என்பது உணர்வின் ஒரு கருவியே. ஆக, இவ்வாறெல்லாம், மனிதன் தன்னைப் பிரித்து அறிவது என்பதும் தன்னையறிதலின் ஒரு பகுதியே ஆகும். மேலும், பகுதி பகுதியாக தன்னைப் பிரித்து அறிவதைப்போலவே, ஒருவன் தன்னைத் தொகுத்தும் அறிவது அவசியமாகும்!

மனிதன் தன்னைத் தொகுத்து அறியும் போதுதான் அவன் தனது பிரபஞ்சமளாவிய தன்மையை, அடையாளத்தை அறிபவனாகிறான். மனிதனுடைய பிரபஞ்சமளாவிய அடையாளம் என்பது என்னவென்றால், அவனே அனைத்தும்!  இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்தும், ‘கடவுள்’, அல்லது ‘பிரம்மம்’ எனப்படும் இறுதி மெய்ம்மை உட்பட, அனைத்துமாக தன்னை உணரும் முழுமையே மனிதன்!

“நான் யார்?” எனும் விசாரம் தனி நபரான உங்களைப்பற்றியதல்ல! உங்களின் வழியாக உங்களைக் கடப்பதன் விளைவாக வெளிப்படும் இறுதி மெய்ம்மை பற்றியது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-04-2019
*****************************************************************************


Saturday, 27 April 2019

பாதை ஒன்றா? பலவா?



உங்களை எதுவாகவும்
அடையாளப்படுத்திக் கொள்ளாத போது
உங்கள் உண்மையான அடையாளத்தை நோக்கி
நீங்கள் நகர்வீர்!
ஒரு உணர்வுப் புள்ளியாக நீங்கள் உதிக்கிறீர்!
ஒரு மலரை அறியும்போது,
புள்ளியாக இருக்கும் நீங்கள் விரிந்து பரவி
அம்மலரைத் தழுவிக் கொள்கிறீர்;
அம்மலராகவே ஆகிவிடுகிறீர்!
நீங்கள் பிரபஞ்சத்தை அறியவிழையும்போது
பிரபஞ்சமாகவே நீங்கள் மாறிவிட வேண்டும்!
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்
இடைவெளியில்லாதவாறு!

* * *

“எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் செல்கின்றன!” ("All Roads Lead to Rome") எனும் பழமொழி ரோம் நகருக்கு வேண்டுமானால் பொருந்தலாம். எவ்வாறெனில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் சாலை அமைப்பானது அதன் தலை நகரை மையமெனக்கொண்டு எல்லா பக்கங்களையும், அல்லது திசைகளையும் நோக்கிச் செல்வதாக அமைக்கப்பட்டதாகும்.

ஆனால், நம்மில் பலர், இதே கணக்கில், ஆன்மீக இலக்கான ஞானத்தை அடைவதற்கு பல பாதைகள் உள்ளன என்பதாக நம்பிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறோம். இந்தக் கணக்கு தவறானது! உண்மையில், ஆன்மீகத்தில் பல பாதைகள் என்பதில்லை! இன்னும் “உண்மை என்பது பாதையற்ற பிரதேசம்!” (“Truth is a Pathless Land!”) எனும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வாக்குப்படி பார்த்தால், ஆன்மீகத்திற்கு பாதை என்பதே கிடையாது என்பதுதான் உண்மை!

மேலும், ஞானமடைய ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த (தனி) வழி எனவும், அல்லது, பலர் சேர்ந்து பயணிக்கும் வகையிலான பொதுவான ஒரு அகலவழி ( நெடுஞ்சாலை) எனவும் எதுவும் கிடையாது! அல்லது, வெவ்வேறு குருமார்களால் போடப்பட்ட காப்புரிமைக்குட்பட்ட தனித்தனிப் பாதைகளும் கிடையாது!

ஞானமடைதல்  (Enlightenment) என்பதற்கு அடியோட்டமாக அமைந்துள்ள விசேடமான விஞ்ஞானத்தின்படி, ஞானமடைதல் என்பது மனித மனம் அல்லது உணர்வின் மலர்ச்சியைக் குறிப்பதாகும். ஆம், ஞானமடைதல் என்பது உணர்வில் (Consciousness) தொடங்கி உணர்வில் முடிவடைகிறது. உணர்வின் தொடக்கமான அகந்தையில் தொடங்கி, அதில் நிகழும் மாபெரும் மாற்றமுறுதலினால் (Transformation in Human Consciousness) விளையும் முழு-உணர்வு அல்லது அகண்ட உணர்வில் (Cosmic Consciousness) முற்றுப் பெறுகிறது!

'அறிவு' என்பது கொடுக்கப்பட்ட தொடக்க நிலை உணர்வை, அதாவது அகந்தை உணர்வைக் கொண்டு சேகரிக்கப்படும் ஒன்றாகும். ஒன்றைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு ஒருவர் தன்னிலையில் (தனது உணர்வில்) மாற்றமடைய வேண்டியதில்லை. அறிவு என்பது ஒருவரது நேரடி அனுபவத்தில் விளைவதாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இன்னொருவருடைய அனுபவத்தில் விளைந்த விபரங்களைக் கொண்டு நாம் நம்முடைய அறிவைக் கட்டமைக்க முடியும்.  ஆனால், 'ஞானம்' என்பது நேரடி அனுபவத்தில் மட்டுமே மலரக் கூடிய அரியவகை மலராகும். ஆம், உணர்வின் மலர்ச்சியே ஞானம்!

அறிவை ஒருவர் இன்னொருவருக்குப் புகட்ட முடியும்; ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெற்றுக்
கொள்ள முடியும். ஞானத்தை அவ்வாறு புகட்டவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ இயலாது!
அறிவைப் பகிர்ந்து கொள்ள முடியும்; ஞானத்தைப் பகிரவோ, கடன் கொள்ளவோ கொடுக்கவோ இயலாது!

உணர்வுதான் ஆன்மீகத்திற்கான ஒரே கருவியும், ஊடகமும் ஆகும். மனிதனிடம் உணர்வு
துளிர்க்காவிடில் அவன் ஒரு விலங்காகவே விளங்குவான்! விலங்குகளுக்கு இருப்பு பற்றிய
யாதொரு உறுத்தலும், கேள்வியும் ஏற்படுவதில்லை! ஆன்மீகம் என்பது மிகவும் விசேடமான ஒரு
உறுத்தலினால் மட்டுமே பிறக்கிறது; சிப்பிக்குள் முத்து தோன்றுவதைப் போல! பொதுவாக
விலங்குகளுக்கு இருப்பு பற்றிய உறுத்தல் ஏற்படுவதில்லை என்பதன் அர்த்தம் அவை தமது
இருப்பை நேரடியாக உணர்வதில்லை; மாறாக, அவை பசி, தாகம், பாலுணர்வு ஆகியவற்றின்
வழியாக, மிகவும் மறைமுகமாக மட்டுமே தமது இருப்பை உணர்கின்றன. இருப்பை உணர்வு
கொள்ளும்போது தான் வாழ்க்கை, குறிப்பாக, ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது!

விலங்குகளுக்கு வாழ்க்கை என்பது தொடங்குவதேயில்லை. மாறாக, அவை ஒருவகை இருப்பு நிலையில் இருக்கின்றன; அதிலேயே இயங்குகின்றன,  குதூகலிக்கின்றன, துன்பப்படுகின்றன; இருக்கும்வரை இருந்து பிறகு ஒரு நாள் மாண்டுபோகின்றன! இருப்பானது உறுத்தலாக மாறாதவரை, வாழ்க்கை என்பது தொடங்குவதில்லை! உணர்வுதான் உறுத்தலின் கருவியாகும்; உணர்வு என்பதே ஒரு மாபெரும் உறுத்தல் தான்! உறுத்தலின் வெளிப்பாடுதான் கேள்விகள். கேள்விகள் தான் அறிதல், புரிதல், சிந்தனை, இன்னும் ஆன்மீகம் மற்றும் அனைத்துவகைப்பட்ட  விசாரத்திற்குமான அடிப்படையுமாகும்.

ஆம், நமது இருப்பை, அதாவது, நாம் ஏன் இருக்கிறோம்? எதற்காக இருக்கிறோம்? எத்தகைய இலக்கை நோக்கியது நமது இருப்பு? இந்த இருப்புக்கு அர்த்தம், குறிக்கோள் ஏதேனும் உள்ளதா? என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை என்பதற்குள் நாம் பிரவேசிக்க இயலாது! ஆம், இருப்பை உணரத்தொடங்கும் ஒருவருக்கு இக்கேள்விகள், அதாவது இருப்பைச் சந்திக்கும் மனித உணர்வுக்கு ஏற்படும் இந்த உறுத்தல்கள் இல்லாமல்; அவ்வுறுத்தல்களுக்கான பதில்களை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கண்டுபிடிக்காமல், புரிந்துகொள்ளாமல் அவரால் மனிதனுக்கே உரிய தனிச்சிறப்பான வாழ்க்கையை வாழ இயலாது! மாறாக, எலிகளையும், தவளைகளையும் போலத்தான் இருப்பின் பொழுதுகளைக் கழித்துச் செல்ல முடியும்!   ஆம், இருப்பின் அனைத்து உணர்த்துகோள்களையும் (Implications) புரிந்துகொள்வதுதான் வாழ்க்கையாகும்!

‘இருப்பு’ (Existence) என்பதற்கும் ‘வாழ்க்கை’ (Life) என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டும் ஒன்றல்ல! இருப்பவை எல்லாம் இருப்பு தான்; அவை வெவ்வேறு நிலைகளில், தரங்களில் இருக்கின்றன. உயிரற்ற ‘சட’ இருப்பு; அடுத்து, உயிருள்ள இருப்பு, அதாவது  ‘உயிர்-இருப்பு’, அடுத்து, உணர்வுள்ள இருப்பு, ‘உணர்வு-இருப்பு’ என்பவையே அவை! இருப்பானது உணர்வு கொள்ளப்பட்டு புரிந்து கொள்ளப்படும் போது வாழ்க்கை மலர்கிறது முழு-உணர்வாக!

‘இருப்பு’ என்பது இருப்பவை அனைத்தையும் குறிக்கிறது; அதில் மனிதஜீவிகளாகிய நாமும் அடங்குவோம். இருப்பை உணர்தல் என்பது ஒட்டுமொத்தத்தையும் உணர்ந்தறிதலே. அதாவது, நம்மைச்சுற்றியுள்ள இயற்கை, உலகம், அல்லது பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் மட்டுமல்லாமல், அதில் உள்ளடங்கியுள்ள நம்மையும் உணர்ந்தறிதலாகும். நம்மை அறியும் கட்டத்தை எட்டும் போதுதான் “நான் யார்?” என்ற உறுத்தல், அதாவது கேள்வி முக்கியத்துவம் பெறும்! உண்மையில், நம்மைச்சுற்றியுள்ள இருப்பான இயற்கையை, உலகை, பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது என்பது, அனைத்தையும் அறிபவனாக எழும் மனிதன் (அதாவது உணர்வு) தன்னைப் புரிந்துகொள்ளும் வழியில், இடையில் அமைந்த விஷயமே தவிர, யாவற்றையும் விட அதி முக்கியமானது மனிதன் தன்னையறிதலே ஆகும். அதாவது, உணர்வு தன்னைத் தானே உணர்வு கொள்வதே, அறிவதே! ஆகவேதான், உணர்வு என்பதே ஒரு மாபெரும் உறுத்தல்தான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. மனிதன் என்பவன் அவனது சாரத்தில் உணர்வே தவிர வேறல்ல!

உண்மையில், “நான் யார்?” என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனை, அதாவது ஒரு நபரை, அதாவது உங்களைப் பற்றிய விசாரம் அல்ல! மாறாக, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் (பிரபஞ்சத்துடனான தொடர்பில்) மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதைப் பற்றியதாகும்.

ஆன்மீகம் என்பது ஆன்மீகம் தொடர்பாகப் புழங்கும் பிரத்தியேக துறைச் சொற்களுடன், அதாவது, தியானம், சமாதி, யோகம், துவைதம், அத்வைதம்,  ஆன்மா, பிரம்மம், ஞானமடைதல்...…போன்ற எண்ணற்ற பிற சொற்களுடன் பரிச்சயம் பெறுவதும் அச்சொற்களைக் கொண்டு கதைப்பதும், வாத விவாதங்களில் ஈடுபடுவதும் அல்ல! அல்லது ஏதாவது ஒரு மார்க்கத்தில், ஆசிரமத்தில் சேர்ந்துகொள்வதோ, அல்லது ஒவ்வொரு ஆசிரமமாக, ஏறி இறங்குவதோ, வெவ்வேறு குருமார்களிடம் தீட்சை பெறுவதோ அல்ல! இருப்பை  ஒருவர் நேரடியாகத் தம்முள் ஒரு பெரும் உறுத்தலாக உணராதவரை, அவ்வுறுத்தலைத் தொடர்ந்து, இருப்பு குறித்த ஆழமான, இடையறாத விசாரத்தில் இறங்காதவரை, மேலே குறிப்பிடப்பட்ட பிரத்தியேக ஆன்மீகத்துறைச் சொற்கள் யாவும் அர்த்தமற்றவையே!

ஞானம் என்பது ஒவ்வொருவரும் தன்னைத்தோண்டிக் கண்டடைய வேண்டிய பொக்கிஷமாகும்! ஞானிகளின் உபதேசக் களஞ்சியத்திலிருந்து நாம் சில குறிப்புக்களையும், ஆன்மீக விசாரத்தில் தொய்வடையும் போது ஊக்கத்தையும், மேன்மேலும் முன்னேறிச் செல்வதற்கான உந்துதலையும் மட்டுமே பெறவியலும். தன்னைத்தோண்டுவது என்பது ஒவ்வொருவரும் தன்னுடன் தான்    மேற்கொள்ளவேண்டிய பணியாகும். பிறர் அதில் பெரிதாக உதவிட இயலாது. அதே வேளையில், உண்மையான ஒரு குரு, அல்லது ஞானி என்பவர் செய்யக்கூடிய பேருதவி ஒன்று உள்ளது என்றால், அது சாதகர்களிடமிருந்து பலவகைப்பட்ட பிரமைகளைப் பிடுங்கிக் களைவது என்பது மட்டுமே!

ஆன்மீகம் என்பது இருப்பிலேயே உள்ளடங்கிய பரிணாம உந்துதலாகும்; எனினும், இருப்பானது தன்னைத்தானே உணர்வதற்குரிய வளர்ச்சியைப் பெறாமல்; அதாவது, தன்னைத்தானே அறிவதற்குரிய கருவியைப் பெற்றெடுக்காமல், அக்கருவியாக மாற்றமடையாமல்  தன்னையறிதல் என்பது சாத்தியமில்லை! ஆகவே தான், சட இருப்பாக, இயற்கை, பிரபஞ்சம் எனத் தோன்றிய இருப்பானது உயிர் பெற்றெழுந்தது; அதாவது, உயிருள்ள ஜீவியாய்ப் பரிணமித்தது! பிறகு ஒரு கட்டத்தில், உணர்வுள்ள மனித ஜீவியாக, மனிதனுள் மனம் அல்லது உணர்வாக எழுந்தது! ஆம், உணர்வு என்பது இருப்பின் உயர் வளர்ச்சி நிலையாகும். இருப்பு என்பது என்றென்றும் ஒரே இருப்பாக இருக்கும் ஒன்றல்ல. மாறாக, வளர்ச்சிக்குட்பட்ட ஒரு நிகழ்வுமுறை ஆகும்; அதையே நாம் பரிணாம நிகழ்வுமுறை என்கிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள இருப்பை, இயற்கை, உலகம், பிரபஞ்சம் என்று பல பெயர்களைக் கொண்டு நாம் அழைக்கிறோம். அது மிகத் திண்மையானதும், நிரந்தரமானதுமான ஒரு அமைப்பு  என்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது! ஆனால், உண்மையில், இயற்கை, உலகம் என்பது வளர்ச்சிக்குட்பட்ட தொரு நிகழ்வுப் போக்கே ஆகும். அது சலனமற்று மிக அமைதியாக ஓடும் ஒரு நதியைப் போல ஆரவாரமின்றி தனது இலக்கு நோக்கி மெதுவாக முன்னேறிச் செல்கிறது! பல சமயங்களில், அது தேக்கமுற்று ஸ்தம்பித்து நிற்கிறது. இதற்குக் காரணம், பரிணாம வளர்ச்சியின் அம்புத்தலையாக விளங்கும் மனிதஜீவிகள், உணர்வு இருந்தும் உணர்வற்ற ஜீவிகளைப் போல வாழ்ந்து செல்வதால், உணர்வுப் பரிணாமம் தேக்கமுற்று நிற்கிறது!

மேலும், முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது ஏராளமானவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு பல்வேறு மார்க்கங்களையும், ஆசிரமங்களையும், குருமார்களையும் தேடிச் செல்கின்றனர்; எனினும், அகந்தையின் எல்லைகளுக்குள்ளாகவே அவர்களின் ஆன்மீகம் சுழன்று கொண்டுள்ளதே தவிர, உணர்வின் உள்ளார்ந்த உறுத்தலின் தேடலாக அமையாமல், செயற்கையாகத் தூண்டப்பட்ட தேடலாக; ஒருவகை புதுமைப்பாணியாக (Fashion or Fad), பலவகைப்பட்ட தியானம், பயிற்சிகள்; சத்சங்கங்கள் எனும் சடங்குகளாக மட்டுமே உள்ளன! இவர்களது ஆன்மீகம் வெறும் பேச்சாக மட்டுமே உள்ளது; அவர்களது நடையாக இன்னும் தவழத்தொடங்கவில்லை!

அகமுகமான ஆன்மீகப் பயணம் என்பது மூட்டை முடிச்சுக்களுடன் இன்பச் சுற்றுலா செல்வது  போன்றதல்ல. அகப்பயணத்தின்போது யாதொரு மூட்டை முடிச்சுக்களையும் - புத்தக அறிவு, அனுபவம், கொள்கை கோட்பாடுகள், முன்முடிவுகள், வரைபடங்கள்… போன்ற எதையும் உடன் கொண்டு செல்ல இயலாது. மாறாக, ஒவ்வொருவரும் தனியே நிராயுதனாகத்தான் செல்ல முடியும், செல்ல வேண்டும். நீங்கள் எதையேனும் எடுத்துச் சென்றால், அங்கே அகப்பயணம் என்பதே  தொடங்காது; மாறாக, ஒருவகைக் கற்பனைப் பயணமாகவே அது அமையும்; அதுதான் நம்மில் பலரது விஷயத்திலும் நிகழ்கிறது!

அதாவது, ஒருவர் இமாலயத்திற்குச் சென்று வந்து ஒரு நெடிய பயணக்கட்டுரை அல்லது ஒரு புத்தகமே எழுதுகிறார். ஆனால், எவரும் அப்பயணக்கட்டுரையை, அல்லது புத்தகத்தை வாசித்துவிட்டு, அது தமக்கு நன்றாகப் புரிகின்றது என்பதால், தாமும் இமாலயம் சென்றுவந்துவிட்டதாக பிரமை கொள்வதில்லை! மாறாக, தாமும் இமாலயம் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்; பிறகு அதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறார்; பிறகு ஒரு நாள் தம் வீட்டை விட்டு இறங்கி இமாலயம் நோக்கி பயணம் மேற்கொள்கிறார். ஆனால், ஞானமடைதல் பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு தாம் ஞானமடைந்துவிட்டதாக நம்மில் பலர் மிகச் சுலபமாக எண்ணிக்கொள்கிறோம்!    

ஆன்மீக சம்பந்தமான நூல்கள் யாவும் இனிப்பு செய்வது எப்படி என்பதைக் கூறும் செய்முறைக் குறிப்புக்கள் (Recipe) போன்றவையே தவிர வேறல்ல. ஆனால், நம்மில் பலர், அச்செய்முறைக் குறிப்புக்களையே தின்று மகிழ்கிறவர்களாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்! ஞானமடைதல் (Enlightenment) பற்றியும், விழிப்படைதல் (Awakening) பற்றியும் சில புத்தகங்களை வாசித்துவிட்டு; அவற்றில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தங்களுக்கு நன்றாகப் புரிகிறது என்பதாலேயே தாங்கள் ஞானமடைந்துவிட்டாற்போலவும், விழிப்படைந்துவிட்டாற் போலவும், நெடிய பிரமையில் ஆழ்ந்து போகின்றனர்! இந்நிலை அஞ்ஞானத்தைவிட ஆபத்தானது! எவ்வாறென்றால், ஒருவர் தனது அஞ்ஞானத்தை என்றாவதொரு நாள் கடந்துசென்றுவிடக் கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளார். ஆனால், போலி ஞானத்தை, ஞானமடைந்துவிட்டதான பிரமையைக் கடப்பது என்பது சாத்தியமேயில்லை!

ஆக, “எல்லா (ஆன்மீகப்) பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன!” என்கிற கூற்று ஆபத்தானது; ஏனென்றால், அது பொய்யான வாக்குறுதியைக் கொண்டதாகும்! அடுத்து, எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கு நோக்கித்தான் செல்கின்றன என்றால், ஒருவர் எந்தப் பாதையில் போவது? அல்லது எல்லாப் பாதைகளிலும் சிறந்தது எது? அடுத்து, பாதைகள் பலவாயினும் ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு பாதையில் மட்டும்தானே செல்லவியலும்; இடையில் பாதை மாற இயலுமா? மாற முடியுமானால் ஒருவர் பயணித்துவந்த பாதை அந்த இலக்கிற்குச் செல்லாதா? புதிதாக மாறிச்சென்ற பாதை அந்த இலக்கிற்குக் கொண்டு செல்லும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? ஆக, இவ்வாறு எப்படிப் பார்த்தாலும், “எல்லா (ஆன்மீகப்) பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன!” என்கிற கூற்று தோல்விகரமானதாகவே தெரிகின்றது!
சொல்லப்பட்ட பாதைகள் பலப் பல!
ஆனால், உணரப்படும் பாதை ஒன்றே!
பசியுள்ளவன் தன் உணவை
அடைந்தே தீர்வான்!
பாதையல்ல முக்கியம்
பயணத்தின் அவசியம் உணர்பவனுக்கு!
வழியறிந்தபின்னே பயணிப்பதில்லை நதி!
உள்ளிருந்து எழும் உத்வேகம்
உன்னை உந்திச் செலுத்தட்டும்!
வழியும், இலக்கும், உண்மையுமான
மையத்தை உன்னுள் கண்டுபிடித்திடு!

* * *

மா.கணேசன்/ நெய்வேலி/ 19-04-2019

*****************************************************************************

நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...