Tuesday, 29 July 2025

'பெரு வெடிப்பு'க்கு முன் என்ன இருந்தது?

 



 

 

 

 

 

 

"பெரு வெடிப்பு" [Big Bang Theory] என்பது பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும். ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் பொருண்மையும் [Matter], கனபரிமாணமற்ற ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அதன் உள்ளார்ந்த அழுத்தம் தாங்காமல் வெடித்து இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும், அவ்வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சம் இன்றளவும் பரந்து விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் கூறுகிறது.

இக்கோட்பாட்டின்படி, அவ்வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது எனப்படுகிறது. பெரு வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், அவ்வெடிப்பிற்கு முன் எந்த 'வெளி' [Space] யில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் யாவும் இருந்தன என்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

மேலும், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்டால், அப்படிக் கேட்பது அர்த்தமற்றது என பெரு வெடிப்புக் கோட்பாட்டாளர்கள் மிரட்டுகின்றனர்.  இந்த விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் திறந்த மனதுடன் மெய்ம்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக, பருப்பொருள் அதாவது சடப்பொருள்தான் முதன்மையான, சாசுவதமான, யாவற்றுக்குமான அடிப்படையான நிஜம் அல்லது மெய்ம்மை என அடித்துச் சொல்லும் கூச்சமில்லாத பொருள்முதல்வாதிகளாகத் திகழ்கின்றனர்.  

ஆனால், இந்தப் பொருள்முதல்வாதிகளின் கூச்சலைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. கேட்க வேண்டிய கேள்விகளை தர்க்கரீதியாக நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். ஆம், பெரு வெடிப்புக்கு முன் என்ன, எத்தகைய மெய்ம்மை இருந்தது? ஒரு வெடிப்பில் தான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், பெருவெடிப்புக்கு முன் ஒரு பொருளல்லாத [Non-Material]  மெய்ம்மை தான் இருந்திருக்க வேண்டும்! இனி அது எத்தகைய பண்பு கொண்ட மெய்ம்மை, என்பதைக் கண்டறிவதுதான் நம்முன் உள்ள சவாலாக இருக்கமுடியும்.

இதுவரை நாம் அறிந்த அம்சங்களுள் மனம் அல்லது உணர்வு [Consciousness] என்பது தான் பொருள் தன்மை கலவாத அம்சம் ஆகும். அதையும் கூட பொருள்முதல்வாதத்தினால் பீடிக்கப்பட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. மனம் அல்லது உணர்வு என்றோரு விசயமே இல்லை என்று சாதிக்கிறார்கள். ஆம் விஞ்ஞானத்தின் அனைத்துத் துறைகளிலும் இந்த பொருள்முதல்வாத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளைப்போல் ஊடுருவி விட்டுள்ளனர்!

அதே நேரத்தில், எவ்வித சார்பு நிலையும் கொள்ளாத, திறந்த மனதுடைய சில விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான்
மேக்ஸ் ப்ளாங்க் [Max Planck] எனும் விஞ்ஞானி; இவர் 1963-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர்தான் குவாண்டம் எந்திரவியலின் [quantum mechanics] தந்தை எனப்படுபவர். இவரது கூற்றுப்படி, "உணர்வு [Consciousness] தான் யாவற்றுக்கும் அடிப்படையான நிஜம். பொருள் என்பது உணர்விலிருந்து பெறப்பட்ட ஒன்று. உணர்வே ஒட்டு மொத்த பொருளாலான உலகிற்கும் அடியோட்டமான ஆழமான நிஜம்" என்றாகிறது.

அடுத்து, எர்வின் ஷ்ரோடிங்கர் [Erwin Schrödinger] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது பொருளின் ஒரு தயாரிப்போ/ விளை பொருளோ அல்ல; வெறுமனே மூளைச் செயல்பாட்டின் ஒரு துணை விளைவு,அல்லது இரண்டாம் பட்ச வெளிப்பாடோ அல்ல. மாறாக, உணர்வு தான் அடிப்படையான நிஜம் - பகுக்கவியலாத ஒற்றைத் தனி நிஜம் ஆகும்" என்றார்.

அடுத்து, யூஜின் விக்னர் [Eugene Wigner] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது ஒரு பொருளல்லாத [non-physical entity ] சுயாதீன இருப்பு கொண்ட அம்சம்; அது பௌதீக உலகுடன் வினைபுரியும் ஒன்று...." என்றார்.

அடுத்து, டொனால்ட் ஹாப்மேன் [Donald Hoffman], இவர் ஒரு Cognitive Science விஞ்ஞானி ஆவார். இவரும் உணர்வுதான் பௌதீக உலகின் அடிப்படையான நிஜம் என்றார்.

அடுத்து, க்ரிஸ்டோஃப் கோச் [Christof Koch], Neuroscientist; ராபர்ட் லேன்ஸா [Robert Lanza], Stem cell and regenerative medicine ;  ரோஜர் பென்ரோஸ் [Roger Penrose], Mathematical physics, David Chalmers, [philosopher]; Philip Goff, [philosopher]; Annaka Harris, [science editor] என இத்தனை விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் எடுத்துச்சொல்லியும் பொருள்முதல்வாதக் குட்டையில் ஊறிய விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் விஞ்ஞானப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் மறுத்து வருகின்றனர். இந்த அடாவடிக் காரர்கள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளைக் கூட மதிப்பதில்லை!

இந்த பொருள்முதல்வாதிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

இந்தக் குழப்பவாதிகளுக்கு மத்தியில் எவ்வாறு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் நிறுவுவது என்பது பெரும் சவாலான விசயமே!
நாம் மீண்டும் பிரதான விசயத்திற்கு வருவோம். ஆம், பொருளாலான பிரபஞ்சத்தின் பிறப்புக்கு முன்னர், அதாவது பெருவெடிப்புக்கு முன்னர் பொருளல்லாத ஒரு விசேட அம்சமான உணர்வே இருந்தது. இதை  நிறுவுவதற்கு நாம் பரிணாம வரலாற்றின் போக்கையும் அதன் அசலான இலக்கையும் புரிந்துகொள்வது அவசியமாகும். அதற்கு முன்னர் பொருள் என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதையும் ஆராய்ந்தறிந்தாக வேண்டியது முக்கியமாகும்.

முதன்முதலில், பெரு வெடிப்பில் தோன்றியது பொருள், பருப்பொருள், சடப்பொருள் எனப்படும், உயிரற்ற, உணர்வுமற்ற பொருள்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை! ஆனால், அப்பொருள் எப்படி வந்தது? பொருள்முதல்வாதிகள் சொல்வது போல், "பொருள் சுயம்புவாக தன்னில் தானாகத் தோன்றியதாக, என்றென்றும் சாசுவதமாக இருக்கும் ஒரு பொருள்" என்பதை நம்மால் ஏற்கவியலாது. அது தர்க்கவியலின் படி தவறானதாகும். பண்பளவில் உயிரற்ற, உணர்வுமற்ற பொருள் [பொருளும், சக்தியும் ஒன்றே என்றாலும் கூட] எவ்வாறு தன்னில் தானாகத் தோன்றிட இயலும்? முக்கியமாக, பெருவெடிப்பில்தான் இப்பொருள் தோன்றியது எனும் பட்சத்தில், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் பெறுவதாகிறது.

"கடவுள்தான் உலகைப் படைத்தவர்!" என்று இறையியலாளர்களும், ஆத்திகவாதிகளும் சொல்லும் போது, "அந்தக் கடவுளைப் படைத்தது யார், எது?" என பொருள்முதல்வாதிகளும், நாத்திகவாதிகளும் கேட்டு கொக்கரிக்கின்றனரே; அதேபோல் "பொருள் எவ்வாறு எங்கிருந்து வந்தது, அதைப் படைத்தது எது, யார்?" என்று கேட்டால் பொருள்முதல்வாதிகள் என்ன சொல்வார்கள்; அவர்கள் முகங்களை எங்கே புதைத்துக் கொள்வார்கள்?!

சரி, இந்த இரண்டு அணிகளும், அவர்களுடைய கூச்சல்களும் ஒரு புறம் இருக்கட்டும். ஆம், எந்தவகையிலும் பொருள் என்பது சுயம்புவாக தானே தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை.  நிச்சயமாக, பெரு வெடிப்புக்கு முன் பொருளல்லாத ஒரு மெய்ம்மை இருந்திருக்க வேண்டும். அதை நாம் உணர்வு என்கிறோம்; ஆனால், அது மனித உணர்வோ, அல்லது கடவுளோ அல்ல! நாம் கூறும் உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது!

இதை எவ்வாறு நாம் சொல்கிறோம் என்றால், பெருவெடிப்பின் போது பொருள் மட்டும்தான் தோன்றியது. காலம், வெளி என்பவையும் கூட பொருண்மையான அம்சங்களே என்பதால், இவற்றையும் நாம் பொருண்மை [Material] என்பதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், பெருவெடிப்பில் தோன்றிய இப்பொருளானது சும்மா இருக்கவில்லை. மாறாக அது ஒரு நீண்ட நெடிய பரிணாம நிகழ்வு முறைக்கு உட்படுவதாகிறது. அதாவது பொருளானது பரிணமித்து ஒரு கட்டத்தில் உயிராக(உயிரியாக)எழுகிறது! அந்த உயிரியானது மேன்மேலும் பரிணமித்து ஒரு கட்டத்தில் உணர்வுள்ள ஜீவியாக [அதாவது மனித ஜீவியாக] எழுகிறது! இப்போது மனித ஜீவிகளாகிய நாம் நம் மனதின் உணர்வைக் கொண்டு சிந்திக்கிறோம், நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுமுள்ள பரந்த பிரபஞ்சத்தையும் ஆராய்கிறோம். அப்படியானால், இந்த உணர்வு எங்கிருந்து வந்தது? பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்பது தெரியவில்லை என்று வைத்துக்கொள்வேம்; ஆனால், பெருவெடிப்புக்குப் பின் மாபெரும் பிரபஞ்சம் எழுந்தது மட்டுமல்ல, அதில் ஒரு கட்டத்தில் உயிர்ப் பண்பு அதாவது உயிருள்ள ஜீவிகள் தோன்றின; பிறகு ஒரு கட்டத்தில் உணர்வுப் பண்பு அதாவது உணர்வுள்ள ஜீவிகளான நாமும் தோன்றினோம்! இந்த உயிர்ப்பண்பும், உணர்வுப்பண்பும் சடப் பிரபஞ்சத்தில், எவ்வாறு, ஏன் தோன்றியது? பொருள், உயிர், உணர்வு இம்மூன்றும் துல்லியமாக தனித்த பண்புகளைக் கொண்டவையாகும். பண்பளவில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட அம்சங்களாகும். இம்மூன்று பண்புகளும் இப்பிரபஞ்சத்தில் ஒத்திசைவுடன் இணைந்திருக்கின்றன.

மனித ஜீவிகளாகிய நாம் தவளைகளைப் போல சிந்திக்கும் மனமோ, உய்த்துணரும் உணர்வோ இல்லாதவர்களாய் இருந்தால், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியே எழுந்திருக்காதல்லவா? ஆகவேதான், இவ்வாதங்களையும் தர்க்கங்களையும் வைத்துத் தான் சொல்கிறோம், "உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது! ஆகவே, பெரு வெடிப்புக்கு முன் ஒரு விசேட பெரும் உணர்வு தான் இருந்தது. அந்த பேருணர்வு தான் உருமாறி பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆனது. பிறகு அப்பொருளானது பரந்து விரியும் பிரபஞ்சமுமானது!" என்கிறோம்.

அறிவு குழம்பிய பொருள்முதல்வாத விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் சொல்கிறார்கள், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்பது அர்த்தமற்றது என்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், 'பெருவெடிப்பு' என்பது ஒரு 'நிகழ்வு' மட்டுமல்ல, அதையே அவர்கள் 'கடவுள்' என்பதாக வழிபட்டு வருகிறார்கள் போல!

பொருளை முதன்மையானதாகவும், யாவற்றுக்கும் அடிப்படையானதாகவும், சாசுவத பரம்பொருளாகவும்  கருதும் பொருள்முதல் வாதிகள் எவரும் "பொருள் என்றால் என்ன?" என்பதைப்பற்றி உருப்படியாக இதுவரையிலும் எதையும், எந்த முறையான தெளிவான விளக்கத்தையும்  தரவில்லை.

ஆனால், நம்மால் சொல்ல முடியும், 'பொருள்' என்பது உயிரற்ற, உணர்வுமற்ற ஒன்று; ஆனால், அப்பொருள் தன்னகத்தே அளப்பரிய உள்ளுறையாற்றலைக் கொண்ட ஒரு பரிணமிக்கும் பொருளாகும். பொருள் என்பது தன்னில் எவ்வகையிலும் முடிவானதோ, இறுதியானதோ அல்ல. அது ஒரு பரிணாமக் கருவி, ஒரு பரிணாம் ஊடகம், அல்லது கட்டுமானப் பொருள் என்கிறவகையில் பொருளானது முதன்மையானதாக இல்லாவிட்டாலும் முக்கியத்துவமான மெய்ம்மையாகும்.

பெருவெடிப்பில் தோன்றிய பொருளானது ஏன் அப்படியே பொருளாக, வெறும் அணுத் துகள்களாகவே இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு தனிமங்களாகவும், மூலகங்களாகவும் ஆயின. ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து பெரும் வாயுக்கூட்டமாக சுற்றிச் சுழன்று 'நெபுலா' வாகவும், அதிலிருந்து கேலக்ஸிகளாகவும், பிறகு எண்ணற்ற நட்சத்திரங்களாகவும், பிறகு கிரகங்களாகவும் ஆயின. பிறகு ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சூரியனைச் சுற்றிச் சுழலும் எட்டு கிரகங்களில் ஒன்றான பூமிக் கிரகத்தின் மீது ஏன் உயிருள்ள ஒரு 'ஸெல்'லாக எழ வேண்டும்?  பிறகு ஒரு ஸெல் உயிரியானது பரிணமித்து பல ஸெல் உயிரிகளாகவும், அடுத்து ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனவும் உருவாக வேண்டும். அப்பாலூட்டிகளில் ஒரு இனமாக சிந்திக்கும் திறனுள்ள, உணர்வு கொண்ட மனித ஜீவிகள் ஏன் உருவாக வேண்டும்? மொத்தத்தில், பொருள் ஏன் பொருளாகவே நில்லாமல் பல்வேறு பண்புகளில் அமைந்த ஜீவிகளாக ஆக வேண்டும்? அதாவது, பொருள் ஏன் பரிணமிக்கும் பொருளாக ஆனது?

ஏனென்றால், பொருளின் பொருண்மைப் பண்பு [Materiality] என்பது அதன் அசலான பண்பு அல்ல! ஆகவேதான் அது தனது அசலான முகத்தை, பண்பைத் தேடிச் செல்லும் நெடிய பரிணாமப் பயணத்திற்கு உட்படுவதாயிற்று! அதாவது, பரிணமிக்கும் பொருளாக, பரிணாமக் கருவியாக, ஊடகமாக, கட்டுமானப் பொருளாக ஆகியது. பொருளானது அதனுடைய பொருண்மைபண்பிலேயே நிலைகொண்டு நிற்க முடியாது! பரிணமிக்கும் பொருள் என்றவகையில் பொருளையும், பரிணாமத்தையும் பிரிக்கவியலாது. பரிணாமத்திற்கு வெளியே பொருளுக்கு யாதொரு அர்த்தமும் கிடையாது!

உண்மையில், உணர்வு தான் பொருளின் அசலான முகமும், பண்பும் ஆகும். அந்த அசலான உணர்வு நிலையை நோக்கியதாகத்தான் அதன் முழு விழைவும் உள்ளது. உணர்வின் ஆகச் சுருங்கிய நிலை தான் பருப்பொருள் என்பதாகும். தன்னைத்தானே மறைத்துக்கொண்ட, சுருக்கிக்கொண்ட உணர்வின் ஒரு வடிவம் தான் பொருள் என்பதாகும்!

இப்போது நாம் விஞ்ஞான ஆதியாகமத்தை மாற்றி எழுதிடுவோம். "இருள் என்பது மிகக் குறைந்த ஒளி!" என்று குறிப்பிடுவது போல, "பொருள் என்பது மிக மிகக் குறைந்த உணர்வு!" என்று சொல்லலாம். ஆம், ஆதியில் உணர்வு, ஒரு 'பேருணர்வு' இருந்தது! அது 'வெடித்து' உருமாறி பருப்பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆகியது! அந்த ஆதிப் பேருணர்வு தற்போது பரந்துவிரியும் இந்த பிரபஞ்சமாகவும், அதில் எண்ணற்ற உயிரினங்களாகவும், முக்கியமாக உணர்வில் பெருகி வளரும் மானுட ஜீவிகளாகவும் இருக்கிறது! ஆனால் மானுட ஜீவிகள் பரிணாம நிகழ்வுமுறையின் இறுதிச் சொல் அல்ல. ஏனென்றால், அவர்களுடைய உணர்வு இன்னும் சிற்றுணர்வாகவே உள்ளது. மானுடர்களில் 99.9% இன்னும் விழிப்படையாமலேயே தங்களது அன்றாடத்திலேயே அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றனர்! நீண்ட நெடிய ஒப்பற்ற பரிணாமத்தின் இறுதி இலக்கு, மனிதனின் உணர்வின் உள்ளேயும், ஊடேயுமாகச் சென்றுயர்ந்து மீண்டும் பேருணர்வை எட்டுவதே ஆகும். தன்னையிழந்து பிரபஞ்சமாக மாறிய பேருணர்வு தன்னை மீள் கண்டுபிடிப்பு செய்வதொன்றே ஆகும். பரிணாமமானது இந்த ஒப்பற்ற இலக்கை ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் அடையவிருப்பதுதான் பரிணாமம் மனிதனுக்கு அளித்துள்ள முக்கியத்துவமாகும்!
 
இந்த பரிணாமப் பொறுப்பைத் தாண்டி மனிதனுக்கு வேறு யாதொரு பெருமையும், தனியொரு வாழ்க்கையும் கிடையாது. மனிதன் என்பவன் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பரிணாமக் கருவியாவான்!

மா.கணேசன்/ 28.07.2025/ நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Tuesday, 3 December 2024

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .





 

 

 

 

 

அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான பேருணர்வைத் தேடிச் செல்கிறது. பயணம் இன்னும் முடியவில்லை. அணுவின் இந்த சுய அறிவுத் தேடலின் வரலாற்றைத்தான் பரிணாம வரலாறு என்கிறோம்.

சுய-அறிவு (Self-Knowledge) அல்லது தன்னையறிதல் (Self-Realisation) என்பது சாக்ரட்டீஸ் போன்ற விதி விலக்கான தத்துவ ஞானிகள் அல்லது பைத்தியக்காரர்களது ஆர்வக்கோளாறின் மிகுதியால் விளைந்த பிதற்றலோ அல்லது செயல் துறந்த சோம்பேறிகளின் சொர்க்கமோஅல்ல. மாறாக, சுய-அறிவுத் தேட்டம் என்பது அணுக் கருவினுள்ளும் அமைந்தியங்கும் அடிப்படையான படைப்புச் சக்தியாகும்.

அண்டத்துப் புதிரை விடுவிக்க விழைந்திட்ட விஞ்ஞானிகள் அப்புதிர் அணுக்கருவினுள் ஆழ்ந்து கிடப்பதாக எண்ணி அணுவைத் துளைத்து இறுதியான அந்த (ஒற்றை) அடிப்படைத் துகளைத் தேடிட, இதுதான் இறுதியானது என முடிவு செய்ய இயலாதபடிக்கு எண்ணற்ற பல துகள்கள் அணுக்கருவின் நுண் உலகில் அலைமோதிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ந்து போயினர்.

அணு என்றால் என்ன? புரோட்டான் எனும் துகளை கருவாகக்கொண்டு அதனைச் சுற்றி வலம் வரும் எலக்ட்ரான் (எனப்படும்) துகள்களும் சேர்ந்த அமைப்புதான் அணு என்பது. சில தனிமங்களின் அணுக்கருவில் புரோட்டான் துகள்களோடு நியூட்ரான் (எனப்படும்) துகள்களும் இடம் பெறுகின்றன. புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் ஆகியவைகள் விஞ்ஞானிகளால் பொதுவாக  ஃபெர்மியான்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த ஃபெர்மியான்களே பொருளின், அதாவது பொருளின் ஆகச்சிறிய அணுவின் உட்கூறுகள். ஆக ஆதியாகமத்தை இவ்வாறு நாம் மாற்றி எழுதிடலாம். அதாவது, "ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன" என்று!

ஆனால், ஃபெர்மியான்கள் உண்மையிலேயே நம் விஞ்ஞானிகளை விடவும் கூரறிவு கொண்டவை. அவை தம்மையறியும் ஆன்மீகத் தேட்டத்தின் பயணத்தில் வெகு தொலைவு முன்னேறிச் சென்றுவிட்டன. புரோட்டான்களும். எலக்ட்ரான்களும், நியூட்ரான்கள்களும் பல்வித அமைப்பில் இணைந்து பிரிந்து மீண்டும் பொருந்தி யுகம் யுகமாக வினைபுரிந்து நியூட்டனாகவும், ஐன்ஸ்டீனாகவும், என்றிக்கோ ஃபெர்மியாகவும், ஹெய்சன் பெர்க்காகவும், ஷ்ரோடிங்கராகவும் ஆகிவிட்டிருந்தன! ஆம், ஃபெர்மியான்கள் பரிணமித்து வேதியியல், பௌதீகவியல் விஞ்ஞானிகளாக நிலைமாறி, தற்போது அவை ஃபெர்மியான்களைப்பற்றி (அதாவது தம்மைப்பற்றி)யே ஆராய்ந்துகொண்டுள்ளன என்பது வினோதம் தான்! ஆனால், இது ஃபெர்மியான்களின் தவறு அல்ல! மாறாக, தாங்கள் ஃபெர்மியான்களே என்பதையும், அவற்றின் ஆன்மீகத் தேட்டத்தையும் மறந்துபோன விஞ்ஞானிகளின் தவறே இது!

அடிப்படை அணுத்துகள்கள் விஞ்ஞானிகளாகப் பரிணமித்து அவ்விஞ்ஞானிகளின் வழியாக, மீண்டும்  அடிப்படை அணுத்துகள்களை ஆராய்ந்து கொண்டிருப்பது என்பது ஒருவகை விபரீத வட்டத்தில் சிக்குண்டுவிட்டது போன்றதுதான். ஏனெனில், ஆதி ஃபெர்மியான்கள் தம்மை அறியும் பொருட்டு தம்மைப் பிளந்து காணும் வீண் செயலில் ஈடுபடவில்லை. மாறாக, அதற்கு எதிர்த்திசையில், தம்மை விரித்துக்காணும் நெடும் பயணத்தை தேர்ந்திட்டன! விளைவு : இம்மாபெரும் உயிர் ததும்பும் உணர்வு பொங்கும் பிரபஞ்சம்!

தமது நெடும்பயணத்தின் முடிவில் அவை தம்மை அறிந்து கொண்டனவா? ஆம், அறிந்து கொண்டன; தாம் வெறும் ஃபெர்மியான் துகள்கள் அல்ல, தாம் ஒரு பிரபஞ்சம், வெறும் பிரபஞ்சம் மட்டுமல்ல; பிரபஞ்சத்தினுள் உலவும் உயிர்கள்; வெறும் உயிர்கள் மட்டுமல்ல, யாவற்றுக்கும் மேலாக தாம் உணர்வுள்ள (Conscious Beings) மானிட ஜீவிகள்; இன்னும் மேலுயர்ந்து தாம் ஒரு மகா உணர்வு (Super Consciousness)
என்ற பேருண்மையை அவை அறிந்துகொண்டன! இப்பேருண்மையை உணர, அவை, விஞ்ஞானிகளைக் கடந்து, புத்தனாகவும், ரமணராகவும் எழ வேண்டியிருந்தது!

*

மா.கணேசன்/நெய்வேலி / கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

 

Wednesday, 27 November 2024

வாழ்க்கையின் அழைப்பு

 





 

 

 

 

 

கோடை வரும் முன்னேயே அதன் முதல் தொடக்கத்தினை அதன் மென்மையான ஸ்பரிசத்தை மிகத் தெளிவாக உணர முடிந்தது. அன்று அந்தப் பகல் சரியாக 11.30 மணிக்கு (சனவரி 1991) கோடைக்காலம் தொடங்கியதாகத் தெரிந்தது. இதமான வெயில், இனம் புரியாத மணம் ஒரு கணம் தோன்றி மறைந்ததைப் போல் தெரிந்தது. அப்போது காலம் அகன்று விட்டிருந்தது. (கோடையின் தன்மை, அதிகரிக்கும் வெப்பம் மட்டுமல்ல!) அது ஒரு மந்திரக் கணம் போல் தோன்றியது. சுற்றுப்புறம் முழுவதும் ஒரு மந்திரக் கட்டுக்குள் சிக்குண்டிருந்தாற் போலிருந்தது. கோடை தொடங்கி விட்டது.

ஆனால், இந்த அனுபவத்தைக் கடனாகக் கொடுக்க முடியாது. அதிக விலை கொடுத்தும் வாங்கிட முடியாது. வாழ்க்கையின் இனிமைகளை அனுபவிக்க எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஏனென்றால், உண்மையான மகிழ்ச்சியையும், நிறைவையும் பெற்றிட காசு-பணம் தேவையில்லை என்பதை எல்லோரும் அறியமாட்டார்கள். ஆகவேதான் எல்லோரும் பணத்தின் பின்னே அலைகின்றார்கள்.

"பிரச்சினையற்றது வாழ்க்கை!" என்றால் பலரும் நம்ப மறுக்கிறார்கள். பிரச்சினைக்கும் வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. 'பிரச்சினை' என்பது மனித சமுதாயத்தின் கண்டுபிடிப்பாகும். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் அதற்கு பலவித அர்த்தங்களை செயற்கையாகக் கற்பித்துக்கொண்டதன் விளைவே பிரச்சினைகள்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிரச்சினைகளே வாழ்க்கையாகி விடுகின்றன. பிரச்சினைகளை தோற்றுவிப்பதும் பிறகு அவைகளைத் தீர்ப்பதுவுமான விபரீத விளையாட்டே வாழ்க்கை என்றாகிவிட்டது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்வரை, பிரச்சினைகளுக்கு முடிவுமில்லை, தீர்வுமில்லை!

ஆனால், வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ வேண்டுமென தீவிர ஆர்வம் கொள்ளும்போது, ஒருவன் புதிதாக பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதைத் தவிர்த்துவிடுகிறான். புரிந்துகொண்ட பிறகு, ஏற்கனவே பிரச்சினைகளாகிவிட்ட விடயங்களை விட்டு விலகிவிடுகிறான். ஆனால், வழக்கமான, பாரம்பரியமான வாழ்க்கையை விட்டு விலகுவது என்பது எல்லோராலும் இயலாத காரியமாகவே தோன்றுகிறது.

அர்த்தமற்ற விடயங்களை உதறித் தள்ளிவிட, உருப்படியான ஒரு காரியத்தை மேற்கொண்டிட ஒருவன் அடுத்தவனுக்காகக் காத்திருப்பது என்பது முட்டாள்தனமானதாகும். முயற்சியும், ஆர்வமும், துணிவும் உடையவன் தனித்தியங்குவதே சிறந்தது.

தனித்தன்மையுடையவன், வித்தியாசமானவன் சமுதாயத்திற்கு பயப்படவோ, பதில்சொல்லிடவோ அவசியமில்லை. மேலும் சமுதாயத்தின் பாராட்டையும், ஆதரவையும் ஒருவன் தனது கருத்துக்கும், செயலுக்கும் தேடி நிற்கத் தேவையில்லை. தனியனான ஒருவனுக்கு தனித் தன்மையே வழிகாட்டி. வாழ்க்கையுடனும், உண்மையுடனும், ஆழமானதொரு தொடர்பை அளிக்கக்கூடிய சுயமான ஒரு கருத்து, ஒரு காட்சி, அல்லது ஒரு உணர்வுதான் மற்ற எல்லாவற்றையும்விட ஒருவனுக்கு மிக முக்கியமானதாகும்.

வாழ்க்கையானது அகம், புறம் என இருமுகம் கொண்டது. சுற்றில் ( Routine)அமைந்த அன்றாட வாழ்க்கை ஆழமற்றது. காலையில் விழித்தெழுதல், உடற் தேவைகளை பூர்த்தி செய்தல், உத்தியோகத்திற்குச் செல்லுதல், அரசியல் பேசுதல், பொழுதுபோக்குதல், வீடு திரும்புதல், உணவு, உறக்கம், உறவுகொள்ளுதல் ஆகிய விடயங்களைச் சரிவரச் செய்து விட்டால்மட்டும் அது வாழ்க்கையாகிடாது. இவை புற அளவிலான விடயங்கள். இவை ஒரு நாளின் 24 மணி நேரத்தை உபயோகித்துக்கொள்கிற உத்திகள், அடிப்படையான ஆனால் மேலோட்டமான சடங்குகள்.

மனித சமுதாயத்தின் வரலாறு, நாகரீகம், பண்பாடு, விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் அனைத்து சாதனைகளும் புற அளவிலானவை. புற அளவிலான விடயங்களைக் கொண்டு வாழ்க்கையை நிரப்பிடும் முயற்சிகள் வீணானவை. அவை என்றுமே நிறைவை அளிக்கவியலாது. ஆனாலும், இந்த ஒரேவிதமான வாழ்க்கையை ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தும், இன்னமும் அதில் சலிப்பு தோன்றிடவில்லை நமது மனித சமுதாயத்திற்கு! இந்த சாதாரண, சராசரி வாழ்க்கை இன்னும் பிடிபடவில்லை. அதன் கரை காண முடியவில்லை!

ஆனால், இந்த நடைமுறை அல்லது அன்றாட வாழ்க்கை என்பதன் ஆழத்தைத் தொடாமல் அதை விரைவில் வாழ்ந்து அனுபவித்து அதை அதனுடைய தளத்தில், இடத்தில் வைத்துக் காணாமல் உண்மையான, கருவான வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்கவும் இயலாது. நடைமுறை அல்லது அன்றாட வாழ்க்கையானது அதனுடைய முறையான இடம், பங்கு, பாத்திரம்  ஆகியவைகளைக் கடந்து (மனித) வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திடும் அளவிற்கு அதை அனுமதித்தலாகாது,

நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதவிகிதத்தினர் புற அளவிலான விடயங்களில் சிக்குண்டுவிட்டனர். அந்த 99% சதவிகிதத்தினர் புதிய கருத்துக்களை, புதிய பார்வையுடைய  ஒரு (1 %) சதவிகிதத்தினருக்கு
பெரும் தலைவலியைக் கொடுப்பவர்களாக உள்ளனர். வித்தியாசமான, விதிவிலக்கான தனிமனிதர்கள் அன்னியர்களைப் போல இப்பூமிக்கிரகத்தில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள். அந்த ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான 'அன்னியர்கள்' எனப்படுபவர்கள் தான் உண்மையில் இப்பூமிக்கிரகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள், சொந்தமானவர்கள். இவர்கள்தான் இயற்கையுடனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும் இசைவுடன் இயங்குபவர்கள். ஏனென்றால், இந்த 'அன்னியர்கள்' மட்டுமே சமுதாய-பொருளாதார- அரசியல் களத்தினைக் கடந்ததான ஒரு பிரதேசத்தில் இயங்குபவர்களாக இருக்கிறார்கள். உண்மையான மனிதர்கள் இப்பூமியில் அன்னியர்களைப் போல வாழவேண்டியிருக்கிறது என்பது அவலமே.

ஆனால், உண்மையான அன்னியர்களான, அதாவது வாழ்க்கைக்கும், பூமிக்கும் தொடர்பில்லாதவர்களான அரசியல்வாதிகள், மதவாதிகள், அரசாங்க அதிகாரிகள், இன்னும் பலவிதமான எத்தர்கள், ஏமாற்றுக்காரர்கள், வீணர்கள், வியாபாரிகள், சமுதாயம் என்னும் பெயரில் மனித உறவுகளை ஏய்ப்பவர்கள், இன்னும் சாமானியர்கள் சராசரி மக்கள்..... ஆகியோர்கள் இப்பூமிக்கிரகத்திற்கு  மிகவும் நெருங்கியவர்களைப்போல சொந்தக்காரர்களைப்போல உலவிவருகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் எதிரிகள். ஆனால், இவர்கள் மத்தியில், தான் உண்மையான மனிதர்களும் தோன்றி வாழ்ந்திடவேண்டியுள்ளது. வாழ்க்கையை பிரச்சினையாக்கும் மனிதர்கள் தான் உண்மையான மனிதனுடைய ஒரே பிரச்சினை.

உண்மையான வாழ்க்கை என்பது சமுதாய - பொருளாதார -அரசியல் உலகைக் கடந்ததொரு பிரதேசத்தில்தான் மலரவேண்டியுள்ளது. சமுதாம், பொருளாதாரம், அரசியல் ஆகிய இம்மூன்று விடயங்களும் வாழ்க்கைக்கு பாலமாக அமையாமல் பெருந்தடைகளாக அமைந்துவிட்டன. ஆனால், இவை தாமாக அமைந்துவிடவில்லை. மாறாக, மனிதர்களின் வாழ்க்கை (அணுகு) முறையே இவைகளை அமைத்தது. ஆனால், மனிதர்கள் உண்மையான வாழ்க்கை வாழ விரும்பினால் இம்மூன்று விடயங்களையும் உடைத்து (அதாவது, முறையே அவற்றுக்குரிய அளவான இடங்களைக் கொடுத்து) வெளியே வந்திடவேண்டும்.

இன்றுவரை மனிதர்களுக்கு வாழ்க்கையின் ஒரு முகம் மட்டுமே பரிச்சயமாகி இருக்கிறது. அதிலும் கூட ஒரு ஒழுங்கை, இசைவைக் காண முடியவில்லை. ஓரிருவர் தவிர்த்து வாழ்க்கையின் இன்னொரு முகத்தை மனித சமுதாயம் இன்றளவும் கண்டறியவில்லை. ஆனால், வரலாறு நீண்டு கொண்டே செல்கிறது. அது எங்கு செல்கிறது என்று எவரும் கேள்வி எழுப்பியதில்லை. வரலாற்றுக்கு முடிவு உண்டா? பல்லாயிரம் தலைமுறைகள் பூமியில் தோன்றி மறைந்துவிட்டன, பல நூற்றாண்டுகள் ஓடிச் சென்றுவிட்டன. வரலாற்றின் முடிவைக் காண்பவர் யார்? அப்போது நிகழக் காத்திருப்பது என்ன? வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உள்ள தொடர்புதான் என்ன? எவ்விதத்தொடர்பும் இல்லை! வரலாறு, காலம் இவையுடன் தொடர்புடைய அனைத்தும் புறவயமானவைகள்.

ஆனால், வாழ்க்கை அகமயமானதும் கூட. அதற்குக் கால நிர்ணயம் ஏதுமில்லை. இந்தக் கணத்திலும் வாழ்க்கை முழுமையாகப் பொங்கி வழிகின்றது. வாழ்க்கையின் தரிசனம் காலத்தைப் போக்குவதில் இல்லை. காலத்தைக் கடப்பதில் தான் உள்ளது. வாழ்க்கையின் தரிசனத்தை காண்கையில் இந்தக்கணமும் இல்லாமல் போய்விடுவிடுகிறது. ஆனால், காலத்தைக்கடப்பதற்கு கால-எந்திரம் எதுவும் தேவையில்லை. ஒளியின் வேகமும் (3,00,000 கி.மீ/வினாடி) தேவையில்லை. உண்மையில் மனிதன் ஒரு கால -எந்திரமே. எண்ணங்கள் ஓய்ந்திடும் போது, மனம் அலைகளற்ற கடல் போல அமைதியுறுகிறது. அதற்குமேல் அல்லது கீழ் ஒன்றும் இல்லை. காலத்தைக் கடந்திட்ட நிலையில் இடம், அல்லது வெளி (Space)அல்லது உலகம் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மனிதனும் மறைந்து விடுகிறான். உண்மை (யாகிய வாழ்க்கை) மட்டுமே இருக்கிறது.

ஆகவே, நாளின் 24 மணி நேரத்தில், ஒரு மணி நேரமாவது, ஒருவன் அன்றாட வாழ்க்கை விவகாரங்களை கழற்றி வைத்துவிட்டு ஓய்வாக இருத்தல் அவசியமாகும். கூடவே, நாளைய தினத்தைப் பற்றிய ஆதங்கத்தையும், நேற்றைய தினங்களுடைய அவலங்களையும், களைந்தெறிந்து விடுவது நல்லது. மேலும் உள்ளூர் நடப்புகளையும், உலக நடப்புகளையும் மறந்திருத்தல் நல்லது.  ஏனென்றால், ஒருவனைச்சுற்றிலும் நடக்கின்ற விடயங்களனைத்தும் அப்படியொன்றும் உண்மையான வாழ்க்கையுடன் தொடர்புடையவைகள் அல்ல.

செய்தித் தாள்கள் தரும் செய்திகளில் மனிதர்களை உடனே மாற்றிவிடுகிற அம்சம் ஏதும் இல்லை. ஆகவே அவை தேவையில்லை. அனைத்து தொடர்பு ஊடகங்களும் அப்படித்தான். ஆகவே, அனைத்து உலக விடயங்களையும் எண்ணத்திலிருந்து உதறி எறிந்துவிட்டு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது அமைதியாய் இருப்பது அவசியம். ஆனால், இவ்விடயத்தை ஒரு பயிற்சியாக மேற்கொள்வதில் பயனில்லை. ஒருவன் உண்மையிலேயே உலக விடயங்களிலிருந்து சிறிது நேரமாவது விடுபட்டு இருப்பது தான் முக்கியமான விடயம். அநாவசியமாக ஒருவன் எப்போதும் உலக விடயங்களைத் தலையில் தாங்கிக் கொண்டிருப்பது அர்த்தமற்றதாகும். உலக விடயங்கள் என்றால், மனித சமுதாயத்தின் இன்றுவரையிலான கண்டுபிடிப்புகள், ஈடுபாடுகள், படைப்புகள் ஆகியவை. இவைகள் மனிதர்களது மேலோட்டமான தேவைகள் மற்றும் ஆசாபாசங்களின் தூண்டுதல்களினால் அம்மேலோட்டமான தேவைகளையும், ஆசாபாசங்களையும் திருப்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டவைகள்.

ஆனால், மனிதர்கள் தங்களுக்கு மிக மிக முக்கியமாக எது தேவை என்பதைப்பற்றி எண்ணிப்பார்த்தது கிடையாது. மேலும், வாழ்க்கையானது ஏதாவதொரு குறிக்கோளைக் கொண்டிருக்கக்கூடும் என்று சிந்தித்ததும் இல்லை. ஆனால், மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்த இலட்சியங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மனிதர்களது சொந்த இலட்சியங்களைப் பற்றி அதற்கு சிறிதும் அக்கறை கிடையாது. மேலும், அவைகளுக்கு வாழ்க்கையில் இடமும் இல்லை. ஏனென்றால், மனிதர்களது சொந்த இலட்சியங்கள்  வாழ்க்கையின் இலட்சியத்திற்கு முரணானதாகவே இருக்கும். அதாவது வாழ்க்கையின் இலட்சியத்தைத் தவிர்த்து மனிதர்கள் வேறெந்த  இலட்சியத்தையும் பிரதானமாகக் கொள்ள முடியாது.

இவ்வாறு உலக விடயங்களிலிருந்து விடுபட்டு தான் வாழ்ந்து வரும் விதத்தினை திரும்பிப்பார்த்து, அலசி, ஆராய்ந்து அவதானித்துப் பார்த்திடும் வேளையில், ஒருவன் உண்மையில் வாழ்க்கையுடன் சற்று தொடர்பு கொள்பவனாக ஆகிறான். உண்மையில், தான் வாழ்ந்து வருகின்ற வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து பார்த்தால்தான் ஒருவனுக்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது விளங்கும். இல்லாவிட்டால் தனது வழக்கமான வாழ்க்கையின் மட்டுப்படான தன்மை அறியாது ஒருவன் அதிலேயே அமிழ்ந்து வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்து போவான்.

ஒரு காலத்தில், அதாவது மனிதன் தோன்றிய போது அவனுக்கு கொஞ்சம் உணர்வு (Consciousness) உண்டான போது, அவனுக்கு இந்த பூமிக்கிரகமானது புதியதாகக் காட்சியளித்திருக்கக்கூடும். தன்னையும் புதியவனாகக் கண்டிருக்கக்கூடும். ஆனால், அந்த புதுத்தன்மையை மனிதன் மறந்தே போய்விட்டான். தான் படைப்பின் ஒரு அங்கம், அல்லது நீட்சி, அல்லது தொடர்ச்சி எனும் விடயம் இன்றைய மனிதனுக்கு அறவே தோன்றுவதில்லை. சமுதாய அமைப்புக்களை மனிதர்கள் உருவாக்கியதிலிருந்து, ஒருவித கூட்டு வாழ்க்கையைத் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு பூமியை ஒரு கிரகமாக, இயற்கையின் அங்கமாகக் காண்பதை அடியோடு நிறுத்திக்கொண்டுவிட்டனர். இன்று பூமியானது இயற்கையுடன் தொடர்புடையதாக, இயற்கைக்கு சொந்தமானதாக படைப்பின் விளைபொருளாக இல்லை. மாறாக, வல்லரசுகளுக்கும், இன்னும் பல பெயர்களைக்கொண்ட நாடுகளுக்கும் , அரசுகளுக்கும் சொந்தமாகவே உள்ளது. பூமியில், இன்று எந்தவொரு சிறு இடமும் இயற்கைக்குச் சொந்தமானதாக இல்லை; காடுகளும், மலைகளும், சமுத்திரங்களும், துருவப்பிரதேசங்களும்கூட - ஒவ்வொரு சதுர அடியும்- ஏதாவதொரு அரசுக்குச் சொந்தமானதாக இருக்கிறது. பூமியின் பரப்பானது நாடுகளுக்கிடையே அரசுகளுக்கிடையே பங்கு போடப்பட்டுவிட்டது. பூமியே ஒரு பெரிய மனைக்கட்டு வியாபாரம் (Real-estate)போலாகிவிட்டது. மனிதர்களுக்கு பூமியானது இன்றளவும் தட்டையாகவே தான் காட்சியளிக்கிறது! ஆனால், பூமியானது எந்தவொரு நாட்டிற்கும், அரசுக்கும் சொந்தமானதல்ல.

ஒருவன் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், மனிதர்களின் கட்டுக்கதையினின்றும் விடுபடவேண்டும் என்பதே. மனிதர்களின் இட்டுக்கட்டியதோர் உலகிலிருந்து ஒருவன் விடுபட்டு இயற்கையின், படைப்பின் உலகில் வாழ்ந்திடவேண்டும். இவ்வாறு மனிதர்களையும், சுற்றுப்புறத்தையும் மறந்து இருக்கும் வேளையில் ஒருவன் இயற்கையினுடைய பூமியின் மீது வாழ்பவனாக தன்னைக் காண்பான். தான் வேறு, பூமி, இயற்கை, பிரபஞ்சம் வேறு என்றில்லாமல் எல்லாவற்றுடனும் ஒன்றிப்போவான். இந்த அனுபவம் மிகவும் அடிப்படையானது, முக்கியமானது, இறுதியானது.

ஆனால், மனிதன்  இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்விற்கு சமுதாயத்தின் வாழ்க்கை (அணுகு) முறைகளில், அன்றாட கால அட்டவணையில் இடம் இல்லை. இயற்கையுடன் தனித்திருப்பதற்கு அவகாசமேயில்லாத வகையில் சமுதாய அலுவல்கள் மனிதனை சிதறடித்து விடுகிறது. ஆனால், மனிதன் வாழ்க்கையின் அழைப்பை கேட்பதற்கு இயற்கையுடன் தனித்திருக்க வேண்டும். இதற்கு முக்கியமாக ஒருவன் கூட்டத்திலிருந்து, அதன் கூச்சலிலிருந்து சிறிது நேரமாவது விலகியிருத்தல் அவசியம். இல்லாவிடில், ஒருவனைச்சுற்றியுள்ள கூட்டமானது அதனுடைய முட்டாள்தனமான கருத்துகளால் அவனை மூழ்கடித்துவிடும்.

* * *
உண்மையான முழுமையான வாழ்க்கையை எந்தவொரு பல்கலைக்கழகமோ, மத நிறுவனமோ, சமுதாய அமைப்போ, அரசோ ஒருவனுக்குப் போதிப்பதில்லை, போதிக்கவும் இயலாது. தனிமனிதன் ஒவ்வொருவனும் தானே, நேரே வாழ்க்கையுடன் தொடர்புகொண்டிடவேண்டும். உண்மையான வாழ்க்கையின் மீது ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், காலம் காலமாக தொடர்ந்திடுகிற, வரலாற்றின் வழி செல்கிற வாழ்க்கையின் மீது ஒவ்வொருவனும் சலிப்படைந்திருத்தல் வேண்டும். அதன் வெறுமையையும், அர்த்தமற்ற தன்மையையும் சகித்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருத்தல் வேண்டும். அதன் ஒரே விதமான மேலோட்டமான இன்பங்களுடன் திருப்தியடைந்து தேங்கிவிடாமல் இருத்தல் வேண்டும்.

முக்கியமாக ஒருவன் சமுதாயத்தின் வழிகளிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், வரலாறு என்பது வாழ்க்கையின் பாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டதொரு வழியாகும்.  வாழ்க்கையினை முழுமையாக அணுக இயலாமையினால் வாழ்க்கையின் நேர் பாதையில் மேலே செல்ல முடியாமல் தேங்கிப்போன மனிதக் கூட்டத்தின் வெளிப்பாடே வரலாறு. மனித சமுதாயம் தோற்றுவித்த தவறே வரலாறு. அது இன்றளவும் தொடருகிறது. ஆம், தவறுகளுக்கு மேல் தவறுகள், இவையே வரலாற்றை வழி நடத்திச் செல்கின்றன. ஆனால், வரலாறானது தவிர்க்க இய்லாத கதியில் அவ்வப்போது அதனுடைய இலக்கான போருக்கும், அழிவிற்குமே மனித சமுதயத்தை இட்டுச் செல்லும். உண்மையில் போர்கள் வரலாற்றை முடிவிற்கு கொண்டுவரவே முயற்சிக்கின்றன. வரலாற்றிற்கு இறுதி முடிவு என ஒன்றிருந்தால் அது மனித குலத்தின் ஒட்டுமொத்தமான இறுதியான அழிவாகவே அமையும்.

வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்யாமல் அதை மேலோட்டமாக வரையறை செய்தது சமுதாயத்தின் முதல் பெருந்தவறு. மேன்மேலும் செயற்கையான மதிப்பீடுகளை உருவாக்கியது முதல் தவற்றின் தொடர்ச்சி. . . . . ஆனால், வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து வாழ்ந்திடும் போது சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட செயற்கையான மதிப்பீடுகளுக்கு இடமில்லாமல் போய்விடும். செயற்கையும், போலியுமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், முரண்பாடுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும்.

உண்மையான, முழுமையான வாழ்க்கையில் எவ்வித போட்டிக்கும், இடமிருக்காது. போட்டிகள் இல்லையென்றால், வரலாறும் இல்லை. உண்மையான வாழ்க்கை காலமற்றது. ஆகவே என்றென்றும் அது ஒன்றானது. காலம் அற்ற நிலையில் வரலாற்றுக்கு இடமில்லை. வாழ்க்கை மட்டுமே இயங்கும். வாழ்க்கையானது அனாதியில் தொடங்கி அனாதியில் முடிகிறது.

உயிருடன் இருப்பதென்பதே ஒரு அதியற்புதமான விடயம்! வாழ்க்கையில், அதற்கு மேல் என்ன வேண்டும்? ஆனால், இந்த அதியற்புத அனுபவம் எத்தனை பேருக்குக் கிட்டுகிறது? ஒருவனைச் சுற்றி படைப்பு பொங்கி வழிகின்றது! சாலையில் செல்லும் போது இன்னொரு மனிதனைச் சந்திப்பது இன்னும் அற்புதமானது! ஆனால், நாம் சாலையில் சென்று கொண்டிருக்கையில் இன்னொரு அற்புதத்தைச் சந்திப்பதில்லை! மாறாக, நமது எதிரியை, உத்தியோகத்தில், வியாபாரத்தில், பொருளாதாரத்தில், அந்தஸ்தில் நம்முடன் போட்டியிடுகின்ற ஒரு எதிரியைத்தான் நாம் சாலையில் எதிர்கொள்கிறோம்! வாழ்க்கையிலிருந்து நாம் வெகுதொலைவு விலகிச் சென்றுவிட்டோம்! நாம் கண்டுபிடித்த மதிப்பீடுகள் நம்மை எங்கோ இழுத்துச்செல்கின்றன! நம்மிடையே பகைமையை, வெறுப்பை, பொறாமையை உருவாக்கி, நம்மைச் சிதறடித்து விட்டன நமது மதிப்பீடுகள்! நாம் அதியற்புதமான வாழ்க்கையை நழுவ விட்டுவிட்டு, வெற்று மதிப்பீடுகளைத் தழுவிக்கொண்டிருக்கிறோம்!

சீவித்தல் (உயிர்பிழைத்தல்), வாழ்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இன்னும் நாம் சீவித்தலைக் கடந்து வாழ்க்கை எனும் பிரதேசத்தில் நுழைந்திடவேயில்லை. இன்றுவரை நாம் உண்மையில் வாழ்ந்திடவேயில்லை என்பதே இதன் அர்த்தம். வெறுமனே சீவித்தல், அதாவது உடல், உயிர் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது மட்டுமே வாழ்க்கை ஆகிடாது. சீவித்தல் என்பது அனைத்துவிதமான உயிர்களுக்கும் பொதுவானது. மனிதனைத் தவிர்த்து மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் சீவித்தல் மட்டுமே முழு வாழ்க்கையாக இருக்கின்றது. மனிதன் மட்டுமே சீவித்தலைக் கடந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்திட பரிணாம ரீதியாக விதிக்கப்பட்டுள்ளான். உண்மையில் வெறும் சீவித்தலுடன் மனிதர்கள் திருப்தியடைந்திட இயலாது, நிறைவு பெற்றிட இயலாது. ஏனென்றால், மனிதன் என்பவன் ஒரு விலங்கைப்போன்றவனல்ல; மேலோட்டமான வகையில் உடல் பசிகளை தீர்த்துக்கொண்டு திருப்தியடைவதற்கு!

மனிதர்கள் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதுடன் நிற்பதில்லை. அதற்கு மேலாக அவர்கள் பலவித விளையாட்டுக்களில், போட்டிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். பெயர், புகழ், பணம், பலம், பட்டம், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகிய விளையாட்டுகள், போட்டிகள். மனிதர்கள் வெறுமனே சீவித்தலில் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் காண இயலாது. அதனால் அவர்கள் மேற்கூறிய விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி-தோல்வி முடிவுகளின் வழியே தங்களுக்கு அர்த்தம் தேடிக்கொள்ள முயல்கின்றனர். இவ்வழியே மனிதர்கள் முற்றிலும் தவறானதொரு திசையில் சென்றுவிட்டனர். ஏனென்றால், சீவித்தலைக் கடந்த வாழ்க்கையை - புறத்தே, சமுதாயத்தின் விளையாட்டுக்களத்தில், போட்டிக்களத்தில், மதிப்பீடுகளின் களத்தில் ஒருபோதும் காண இயலாது. பின்னர் வாழ்க்கையை எங்கே காண்பது? மனிதர்களுடைய அளவீடுகள், மதிப்பீடுகள் இல்லாத இடத்தில், இயற்கையின் அழகில், படைப்பின் உலகில், வாழ்க்கை மீதான மனிதனின் தீவிர காதலில் வாழ்க்கையைக் காணலாம். அப்போது சீவித்தலானது வாழ்தலின் அங்கமாக அமையும், அர்த்தம் பெறும். நாம் வாழ்வதற்காக சீவிக்கிறோம்; வெறுமனே சீவிப்பதற்காக ( = உயிர் வாழ்வதற்குகாக) அல்ல மனிதப் பிறப்பும், வாழ்க்கையும்.

உண்மையான வாழ்க்கையின் தரிசனத்தைப் பெறும்போது மனிதன் நிறைவு பெற்றவனாக வாழ்க்கையைத் தொடங்குகிறான். நிறைவு என்பது வாழ்க்கையின் முடிவில் வருவதல்ல! தொடக்கத்திலிருந்தே நிறைவு என்பது இருக்கின்றது! மனிதன் மட்டும் தன் இதயத்தை அகலத் திறந்தானெனில் வாழ்க்கை அவனுள் பொங்கி வழியும். வாழ்க்கையைத் தவிர வேறெதுவும் மனிதனை நிறைவு செய்திடாது. ஆனால், மனிதன் தன் இதயத்தை அகலத் திறந்திடும் வரையில் அவன் வாழ்க்கைக்கு அன்னியனாகவே இருப்பான்!

மேலும், சீவித்தலுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதுடன் நில்லாமல், மேற்கொண்டு சமுதாயத்தின் முட்டாள்தனமான பெயர், புகழ், பணம், பலம், பட்டம், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகிய போட்டிகளில் ஈடுபடாமல், இனியாவது இவற்றைக்கடந்து மனிதர்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பார்களாக!
*
மா.கணேசன்/ 02.02.1991/நெய்வேலி

<<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>>

Monday, 14 October 2024

இரண்டாவது விழிப்பு





 

 

 

 

 

1) விழிப்பு என்பது ஒருவன் தன்னுள்ளும், தன்னைச்சுற்றிலும் உள்ள இருப்பு எனும் அற்புதத்தைத் தரிசிப்பதாகும். ஒருவன் "இருக்கிறான்!" என்பது ஒரு அற்புதம் அல்லவா!  (11.02.2005)
                    
                      <<•>>

2) ஒருவன் உயிர்த்துடிப்புடன் இருக்கிறான் என்பதை அதனுடைய முழுமைக்கும் உணருவதற்கு வெறும் அன்றாட விழிப்புணர்வைக் கடந்த விழிப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால், அன்றாட விழிப்புணர்வுக்கு நாம் வெகுவாகப் பழகிப்போய்விட்டபடியால், அது ஒரு உறக்க நிலை போலாகிவிட்டது! ஆகவே, இப்போது ஒருவன் இந்த அன்றாட விழிப்புணர்விலிருந்தும் விழித்தெழ வேண்டியுள்ளது!

 (இது எத்தகையது என்றால், ஒருவன் காலையில் கண்களைத் தேய்த்துக்கொண்டு இரவு உறக்கத்திலிருந்து விழித்தெழுவது போல, இவ்வாறு விழித்த பிறகு, மீண்டும் ஒரு முறை விழிப்பதைப் போன்றதாயிருக்கும். இதுதான் "இரண்டாவது விழிப்பு"!)   (11.02.2005)

                     <<•>>

3)முதல் விழிப்பு என்பது ஒருவன் புறத்தேயுள்ள உலகை நோக்கி விழிப்பது. "இரண்டாவது விழிப்பு" என்பது ஒருவன் தன்னை நோக்கி, தனது அகத்திற்கு விழிப்பதாகும்!

                      <<•>>

4) விழிப்பு என்பது, இந்தக் கணத்தில், ஒருவன் உயிர்ப்புடன் இருக்கிறான், சிந்திக்கிறான் என்ற உண்மையை காணுதலும், உணருதலும் ஆகும். இந்தக் காணுதலும், உணருதலும் அவ்வளவு முழுமையாக இருப்பின், அது ஒரு பொங்கி வழியும் அனுபவமாக அமையும்.  அந்த அனுபவம் ஒருவனது மட்டுப்பாடான சுயத்தின் அனைத்து சுற்றுச் சுவர்களையும் தகர்த்துவிடும்; கிட்டத்தட்ட முதலும் முடிவாகவும். ஆனால், அந்த அனுபவத்தின் உண்மையை முழுத் தெளிவுடன் அவன் பிற்பாடு உணர்ந்தறியக்கூடும்.

5) சாதாரணமாக, நாம் நமது இருப்பை, முன்-அளிக்கப்பட்ட சுய- உணர்வின்* (pre-given state of Self-Consciousness) வழியாகத் தான் உணருகிறோம். ஆனால், இந்த உணர்வானது எவ்வளவு தானியங்கித்தனமானதோ அவ்வளவிற்கு உணர்வற்றதாகும்.

*இந்த சுய-உணர்வானது நமது செயல்படும் மனம் அல்லது மூளையிலிருந்து எழுவதாகும். மனித மனமானது இரண்டிலிருந்து நான்கு வயதின்போது செயல்படத் தொடங்குகிறது எனலாம். அது தானியங்கித்தனமான ஒரு உணர்வாகும்.  (08.01.2005)

                     <<•>>

6) விழிப்பு என்பது, இருப்பின் அனைத்து உணர்த்துகோல்களையும் காணுதல், கணக்கில் கொள்ளுதல், நிறைவேற்றுதல் ஆகும். வெறுமனே மேலோட்டமாகத் தெரிகின்ற பக்கங்களையும், விடயங்களையும், நிபந்தனைகளையும் மட்டுமே எடுத்துக்கொள்வதோ, தெரிவுசெய்வதோ அல்லது சூட்சுமமான, அல்லது மறைவான பக்கங்களையும், விடயங்களையும், நிபந்தனைகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பதோ, விட்டுவிடுவதோ அல்ல. (11.02.2005)

                 <<•>>

7) விழிப்பு என்பது, ஒருவன் தனது இருப்பையும், தன்னைச் சுற்றிலுமுள்ள அனைத்தின் இருப்பையும் உணருவது; அதே நேரத்தில், இருப்பைப்பற்றி உடனடியாக யாதொரு கருத்துகளையும், அபிப்பிராயங்களையும்; குறிப்பாக, குறை-முதிர்வு நிலையிலேயே கொள்கைகளையும், கோட்பாடுகளையும், முடிவுகளையும் பின்னுவது கூடாது. ஏனென்றால், இவையனைத்தும் இருப்பின் அர்த்தத்தை, தரத்தைக் குலைப்பதோடு, அதன் புதிரை சாதாரண ஒன்றாகவும், வெறும் நடைமுறை விவகாரமாகவும் குறைத்து சிறுமைப்படுத்தி விடக்கூடும்.  (11.02.2005)

                     <<•>>

8) இங்கு எவரும் இருப்பை ஒரு புதிர் என்று அழைப்பதன் வழியாக அதைப் புதிராக ஆக்கிவிடவில்லை.
எவரும் ஏற்கனவே புதிராகத் திகழும் ஒன்றை இன்னும் புதிராக ஆக்க இயலாது. ஆகவே , புதிரை புதிராக்குவதனாலோ, அல்லது புதிரற்றதாகக் குறைப்பதனாலோ தீர்வு காண இயலாது. வழிபாடோ (மதம் ), அல்லது தருக்க விளக்கங்களோ (விஞ்ஞானம்) அதைத் தொடவோ, கிரகிக்கவோ இயலாது. மாறாக, இருப்பு எனும் புதிர் கூரறிவையும், மனித உணர்வின் மலர்வையும் கோருகின்றது - அம்மலர்வு தான் ஒரே நேரத்தில் அப்புதிரின் புரிதலும், முழுமையடைதலும் ஆகும்.   (18.02.2005)

                     <<•>>

9) எது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் மகோன்னதப் புதிரை நோக்கி மனதைத்  திறக்கச்செய்கிறதோ அது "வியப்புணர்வு" என்பதுதானாகும். ஆனால், எந்த மனம் எளிமையாகவும், கூருணர்ச்சியுடனும் (sensitive) இருக்கின்றதோ - எந்த மனம் சமுதாயத்தின் கருத்துக்களாலும், அபிப்பிராயங்களாலும், முடிவுகளாலும் கறைப் படுத்தப்படாமலும், கட்டுப்படுத்தப்படாமலும்; மேலும், இரண்டாம்-கை அறிவின் சுமையால் தாழ்ந்து, மந்தமாகாமலும் உள்ளதோ அந்த மனம்தான் வியப்பதற்கும், ஆச்சரியம் கொள்வதற்குமான ஆற்றலைக் கொண்டிருக்கும்.
 
                     <<•>>

10) விழிப்பு என்பது, சாதாரண உடல் ரீதியான உறக்கத்திலிருந்து எழுவது அல்ல. மாறாக, விலங்கியல்பிலிருந்து மனித இயல்பிற்கு விழித்தெழுவதாகும்.

                     <<•>>

11) விழிப்பு என்பது, பரிணாமத் திட்டத்தின் உள்ளார்ந்த அவசியத் தேவையாகும். ஆனால், அது தாமே இயற்கையாக நிகழ்வதில்லை. ஏனென்றால், மனிதனாயிருத்தல் என்பது இயற்கையானதல்ல. ஆகவே, ஒருவன் என்ன விலையானாலும், எவ்வளவு முரண்பாடாயினும், என்ன நிகழ்ந்தாலும் விழித்தேயாக வேண்டும்.    (16.02.2005)
                     <<•>>

12) விழிப்புக்கு மாற்றீடாக எதுவுமே இல்லை. அதனுடைய இல்லாமையை எதைக் கொண்டும் ஈடுசெய்திட இயலாது.

13) விழிப்பானது மனித சுயத்தின் தானியங்கித்தனமான இயக்கத்தின் தொடர்ச்சியில் ஒரு உடைப்பை ஏற்படுத்துவதைக் கோருகின்றது.

14) விழிப்படைதல் என்றால், புலன்களின் அனைத்து ஜன்னல்களையும் ; மனதின் அனைத்துக் கதவுகளையும் அகலத் திறந்து வைத்தல் ஆகும்.
                     <<•>>

15) விழிப்பானது மனதின் கதவுகளை இயற்கையுலகின் அழகு மற்றும் புதிரை நோக்கித் திறக்கவைக்கிறது. அத்துடன், இயற்கையுலகின் போதாமையைக் காண வைத்து அதன் புதிர் முடிச்சை ஆய்ந்தவிழ்க்கும்படி மனதைச் செலுத்துகிறது.

16) ஆனால், இயற்கையின் அழகைத் தரிசிப்பது அதனளவில் ஒரு முடிவு அல்ல. மாறாக, அந்த தரிசனம், ஐக்கியம் என்பது தொடக்கம்தான்- அதைத் தொடர்ந்து புரிந்துகொள்ளுதல் என்பது பின் தொடரவேண்டும். இயற்கையுடனான ஐக்கியம், இயற்கை அழகினைத் தரிசித்தல் என்பது இயற்கை உலகைப் புரிந்துகொள்வதற்கான கதவு போன்றதாகும்.

                     <<•>>

17) இயற்கையுலகின் அழகு என்பது விண்ணளவு ஆழம் மட்டுமே; அதோடு அதுவும் அதன் ஒரு பக்கம் அல்லது முகப்பு மட்டுமே.

18) ஆனால், மனிதனின் உள்ளிருந்து எது புறத்தேயுள்ள அழகைக் காணும்படி ஆர்வமூட்டுகிறதோ அழகுக்கு பதிலளிக்கிறதோ, அது அழகினின்றும் வேறானதல்ல! ஒருவன் அந்த ஆர்வ- உந்துதலின் மூலத்தை, அதன் ஊற்றுக்கண்ணை அடையும்படி தனது  உள்ளாழத்திற்குச் செல்ல வேண்டும். புறத்தேயுள்ள அழகு என்பது கண்ணுக்குத் தெரிகின்ற வெறும் ஒரு நினைவூட்டல் மாத்திரமே, அது அனைத்து-அழகின் ஊற்றை ஒருவன் அடைந்தாக வேண்டும் எனும் தேவையைத் தூண்டுவதற்கானது. அனைத்து-அழகு என்பது இந்த உலகின் மறுபுறத்தில் உள்ளது, அதுதான் உண்மை!

19) இயற்கையின் உலகம், பிரபஞ்சம், எந்த போதாமையைக் கொண்டிருக்கிறதோ,  மனிதன் தன்னுள்ளேயும் ஊடாகவும்  அதை நீக்கி நிறைவேற்றியாக வேண்டும்!  (19.02.2005)

                    <<•>>

20) விழிப்பு என்பது, அற ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை அல்ல. விழிப்புக்கு யாதொரு முன்-நிபந்தனையை நிறைவேற்றிட வேண்டிய தேவையில்லை, எந்த சுத்திகரிப்பும் தேவைப்படுவதில்லை, யாதொரு நம்பிக்கையும், சாதனாக்களும் (பயிற்சிகளும்)  தேவைப்படுவதில்லை - விழிப்புக்கு முன்னேயும் சரி பின்னேயும் சரி. ஏனென்றால், விழிப்புதான் அனைத்தும்.

21) ஒருவன் செய்யவேண்டியது அனைத்தும் - எவ்வாறு அவன் வாழ்கிறான், என்ன செய்கிறான், எத்தகைய குளறுபடியில் அவன் ஆழ்ந்திருக்கிறான், எத்தகைய அசிங்கத்தின் மீது நின்றுகொண்டிருக்கிறான்; இவ்வாறு தான் மேற்கொண்டிருக்கின்ற மேலோட்டமான, அர்த்தமற்ற வாழ்வின் அபாயங்களைக் காணுதல் மட்டுமே போதும்.

22) எப்போது ஒருவன் தான் வாழ்கின்ற வாழ்முறைகளில் அடங்கியிருக்கும் அபாயங்களைக் காண்கின்றானோ, அதுவே போதும்! விழிப்படைய வேண்டியது புத்தர்களல்ல;   பாவிகள் என்று சொல்லப்படுபவர்கள், சாதாரண மனிதர்கள், விபரமில்லாதவர்கள், வீணில் வாழும் பணக்காரர்கள், பணக்காரனாக ஆக ஏங்குபவர்கள், ஆக இவர்கள் தான் விழிப்படைய வேண்டியவர்கள்.   (20.02.2005)

                     <<•>>

23) விழிப்பு என்பது, ஒருவகை இருப்பிலிருந்து வேறுவகை இருப்பிற்குத் தாவுதல் போன்றது; விருப்பத்துடன் ஒரு வகையை முடிவுக்கொண்டு வந்து இன்னொரு வகையினுள் பிரவேசித்தெழுதல்; பெரிதும் அறியப்படாத உலகிற்காக அறிந்த உலகைத் தியாகம் செய்தல் - இவ்வாறு செய்தல் தற்கொலைக்கு ஒப்பானதும், உணர்வற்ற வகையிலான இருப்பைக் கொண்ட மனித ஜந்துவின் இயல்புக்கு எதிரானதுமாகும்.

24) ஆக, இவ்வகையான, அதாவது இருளுக்குப் பழகி தகவமைந்து போன ஒரு ஜந்துவிற்கு விழிப்பு என்பது தேவைப்படாதுதான்.   (21.02.2005)


                    <<•>>  

25) அன்றாட உடனடித் தேவைகளைத் தாண்டி, மனிதக் கும்பலின் பார்வைகளையும், வழக்கங்களையும் மீறி  வாழ்க்கையைப் பார்ப்பதற்கு அக்கறை கொள்ளாதவர்கள்  விரக்தியிலாழ்ந்த நிலையில்  விழிப்படைவதற்கான நெம்புகோல்கள், அதாவது, துன்பம், துயரம் போன்ற, அதிர்ச்சியூட்டி அவர்களுடைய ஆதி- உறக்கத்திலிருந்து அவர்களை உலுக்கிடும் வகையிலான தூண்டுகோல்கள் பற்றி பேசிக்கொண்டும் அவற்றைத் தேடிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால், அத்தகைய நெம்புகோல்கள் அவர்களது வாழ்வில் நிரம்பவேயிருந்தும் அவற்றால் ஒரு பயனுமில்லை.

26) உண்மையில், விழிப்படைவதற்கு யாதொரு நெம்புகோலும் தேவையில்லை - ஒருவன் இருக்கிறான், உயிர்ப்புடன் இருக்கிறான், சிந்திக்கிறான் என்ற உண்மையைத் தவிர. ஆம், மனித ஜீவியானவன் விழிப்படைவதற்குரிய முழு உள்ளுறையாற்றலையும் கச்சிதமாக தன்னகத்தே கொண்டுள்ளான், விழிப்படைவதற்கு யாதொரு நெம்புகோலும், சவாலும் தேவையில்லை. ஆம், விழிப்படைதல் ஒன்றுதான் சவால்.    (21.02.2005)

                      <<•>>

27) எது விழிப்படைதலைத் தடுக்கிறதென்றால், அது தொடக்க-கால வாழ்வின் நிலைமைகள், நெடுங்காலமாக வாழ்ந்து வந்த வாழ்முறைகள் மற்றும் தன்னைச்சுற்றியுள்ள மனிதக்கூட்டம் ஆகியவற்றுடன் ஒருவன் கொண்டுள்ள அடையாளப்படுத்துதலே.

                      <<•>>

28) ஆகவே, அனைத்து அடையாளப் படுத்திக்கொள்ளுதலும் - நனவிலி ரீதியாகவும், நனவு பூர்வமாகவும் கடந்த காலத்துடன் கொள்ளும்  அனைத்து அடையாளப் படுத்திக்கொள்ளுதலும் முடிவுற வேண்டும். அப்போதுதான் விழிப்படைதல் சாத்தியமாகும். ஏனென்றால், (பிறிதொன்றுடன்) அடையாளப் படுத்திக்கொள்ளுதல் என்பது தனது உண்மையான சுயத்தைக் காணவிடாமல் ஒருவனை மட்டுப்படுத்திவிடும்.

29) விழிப்படைதலைத் தடுக்கின்ற காரணிகள் புறத்தே உலகில், இயற்கையில் இல்லை; மாறாக அவை ஒருவனது அகத்தே தான் உள்ளன.

                      <<•>>

30) ஒருவனுடைய அனைத்துக் குறைபாடுகளுக்கும் சமுதாயத்தைக் குறைகூறுவது சுலபமானது. ஆனால்,  சமுதாயத்தின் மீது பழி கூறுவது என்பது ஒருவன் தன்மீதே பழி கூறுவதற்குச் சமமானதே. ஏனென்றால், தனி நபரிலிருந்து வேறானதல்ல சமுதாயம். தனிமனித நிலைமை புறவயமாக்கப்பட்டதும், பெருக்கப்பட்டதும் (The individual condition externalised and multiplied is society) தான் சமுதாயம். தனி மனிதன் என்பவன் சமுதாயத்திலிருந்து வேறுபட்டனல்ல - அவன் விழிப்படையும் வரை. உண்மையான ஆழமான வாழ்க்கையைப் பொறுத்தவரை ஒருவன் சமுதாயத்தை ஒரு நல்ல வழிகாட்டியாகவோ, நம்பகமான மாதிரியாகவோ கொள்ள முடியாது.

                      <<•>>

31) ஆகவே, ஒருவன் சமுதாயத்தின் ஆணைகளையும் (dictates) வழிகளையும் தாண்டி வாழ்க்கையைக் காணவும் வாழவும் வேண்டும். மேலும், ஒருவன் தனது மட்டுப்பாடான சுயத்தின் (அகந்தையின்) தெரிவுகளையும் கடந்து செல்லவேண்டும். ஒருவன் தனது அகத்தின் ஆழத்திலிருந்து அந்த  "வழிகாட்டும் -ஒளி" எழுவதற்காக வழிவிட்டு தன்னிலிருந்து தான் சற்று பின் தள்ளி நிற்பது அவசியம். அதாவது ஒருவன் தனக்குத்தானே "ஒளி" யாக மாறவேண்டும். பிறகு உரிய விழிப்பை அடைந்ததும் ஒருவன் தனக்குத்தானே "விதி"யாக மாறுகிறான் (one becomes a LAW unto oneself).(23.02.2005)

                      <<•>>

32) விழிப்பு என்பது வெற்றிடத்தில் ஏற்பட இயலாது. அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒரு ஜீவியினுள் தான் ஏற்பட்டாக வேண்டும். ஆனால், அந்த ஜீவியின் இச்சைகள், பசிகள், தூண்டுதல்கள், கவர்ச்சி நாட்டங்கள் யாவும் அகல விழித்திருக்கும்பட்சத்தில் அது ஏற்பட வாய்ப்பில்லை.

33) இயல்பூக்கிகளின் நச்சரிப்புகள், ஆசைகள், இன்பம் துய்ப்பதற்கான தேடல்கள் ஆகியவை மேலோங்கியிருக்கின்ற ஒரு ஜீவியினுள் விழிப்பு ஒருபோதும் நிகழாது.  இவ்வனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு கடக்கப்பட்டாக வேண்டும்.  (24.02.2005)


                      <<•>>

34) ஒருவனுள் விழிப்பு ஏற்படாத நிலையில் அவன் என்ன செய்தாக வேண்டும்?

35) எவ்வழியிலும் விழிப்பைத் தூண்டவோ, ஏற்படச் செய்யவோ இயலாது. அதோடு அது தானேயும் நிகழாது, ஒருவனுடைய  மனவுறுதிச் செயல்பாட்டினாலும் (by the action of will) அது நிகழாது. விழிப்படைவதைத் தடுக்கும் அனைத்துக் காரணிகள் - விருப்பச் சார்புகள், முன்-தீர்மானங்கள், முன்கணிப்புகள் ஆகியவை யாவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும், அவைகளை முடிவுறச்செய்ய.

                      <<•>>

36) தெரிவற்ற, குறிப்பான நோக்கமில்லாத, திசைப்படுத்தப்படாத பேரார்வ நிலையில் ஒருவன் நிலைக்கும் பட்சத்தில் ஒருவன் மிகுந்த கூருணர்ச்சியுடனும், திறந்த-ஏற்புடைமையுடனும் திகழ்வான்.

                      <<•>>

37) விழிப்பிற்குத் தடையாக விளங்கும் பிரதான காரணிகள் - மந்தத் தன்மை,  தானியங்கித் தனத்தில் சிக்கிய மனம், மனிதனுள் இருக்கும் விலங்கின் ஆதி-நனவிலித் தன்மை, கும்பலுடன் சேர்ந்து செல்லும் மந்தைத் தனம் ஆகியவையே.

                      <<•>>

38) ஆகவே, ஒருவன் தானியங்கித் தனமாக இயங்குவதை, உணர்வற்ற ரீதியில் தொடர்வதை, பிராணித் தனமான இச்சைகளாலும் இயல்பூக்கிகளாலும் செலுத்தப்படுவதை நிறுத்தியாக வேண்டும். கட்டாயமாக பழைய,  பழக்கத்திற்கு அடிமைப்பட்ட போக்கின் தொடர்ச்சியில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியாக வேண்டும்.

39) விசார ஆர்வம்கொண்ட, அதாவது, கேள்வி கேட்கும் மனதை ஒருவன் கொண்டிருப்பானேயானால், பெரிதும் அது அவனது தானியங்கித் தனமான இயல்பிலிருந்து அவனை விடுவித்திடும். ஆனால், ஏற்கனவே தனது சொந்த விருப்பு-வெறுப்புக்களிலும், சமுதாயத்தினால் கட்டுப்படுத்தப்பட்டும், சமுதாய நியதிகளுக்கு இணங்கிப் போவதிலும் தங்கி விட்ட சௌகரியமாக மரத்துப் போன ஒரு மனத்தினாலும்,  தனது அறிவுஜீவியச் செயல்பாட்டிலும், அறிவுச் சேகரத்திலும், அற்ப-திருப்தியிலாழ்ந்த ஒரு மனத்தினாலும் கேள்வி கேட்கவோ, மெய்ம்மைத் தேடலில் ஈடுபடவோ இயலாது.

40) ஆழமாகக் கேள்வி கேட்பது, அடிப்படையான கேள்விகளைக் கேட்பது என்பது  ஏற்கனவே நிலை பெற்ற மட்டுப்பாடுகளை நிலைகுலையச் செய்வதாகும், கட்டுத்தளைகளை அகற்றுவதாகும் - இவ்வழியே, பாதுகாப்பானதாகத் தோற்றம் தரும் நங்கூரம் மற்றும் சங்கிலிப் பிணைப்புகளை விட்டு ஒருவனை தனது
அசலான நிலைக்கு திரும்பச் செய்து மனதை விழிக்கச்செய்யும்.     (24.02.2005)

                    <<•>>

41) விழிப்பை தன்னுள் கொண்டு வருவதற்காக ஒருவன் முற்றிலுமாக எதையுமே செய்ய இயலாது. யாதொரு வழிமுறைகளும், பயிற்சிகளும், யோக முறைகளும், தியானங்களும் எதுவும் பயனளிக்காது. இத்தகைய தந்திரங்களில் ஈடுபடும் ஒருவன் தொலைந்து போவான், அல்லது என்றென்றைக்குமாக வழிதவறிப் போவான். ஏனென்றால், ஏற்கனவே ஒருவனது செயல்படு மூளையில் உதித்த மனத்தின் தானியங்கித்தனமான அறிநிலை  கொண்ட, பாதி-விழிப்பு பெற்ற சுய-உணர்வினால் திசை-திருப்பப்பட்டு வழிதவறிய நிலையில்தான் இருக்கிறான். இந்த அரைச் சுய-உணர்வினைக் கொண்டுதான் நாம் "இருக்கிறோம்!" என்பதை அறிகிறோம். ஆனால், அதைக்கடந்து, அது, " நாம் ஏன் இருக்கிறோம்?" என்பது குறித்தும் அல்லது இருப்பின் அர்த்தம் பற்றியும் யாதொரு அறிவூட்டலையும்  செய்வதில்லை.  

42) ஆக, இந்தக் கேள்விகளைப்  பின்தொடர்வதற்கும், அவிழ்ப்பதற்கும் முன்பே  (இக்கேள்விகள் மிகவும் தொலைவிலமைந்தவையாகவும், உடனடி இருப்பிற்குத் தொடர்பற்றதாகவும் தோன்றுபவைதானே!) நாம் உடனடி உயிர்-வாழ்தலின் உடனடித் தேவைகளினால் இழுத்துச் செல்லப்பட்டும், இன்னும் உயிர்-பிழைத்தலோடு தொடர்புகொண்ட பல்வேறு பிரச்சினைகளினால் உறிஞ்சப்பட்டும் அலைக்கழிக்கப் பட்டுள்ளோம். மொத்தத்தில், உயிர்-பிழைத்தலின் பிரச்சினைகளினால்  நிரந்தரமாக நாம் சிதறடிக்கப்பட்டுள்ளோம்.

                      <<•>>

43) மனித மனமானது, எந்திரத் தனமாக, அதனுடைய நினைவாற்றல், எண்ணம் ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட ஒருவன் 4 வயதை எட்டும் போது செயல்படத் தொடங்குகிறது. எது இச்செயல்பாட்டைத் தொடங்கி வைக்கிறது என்றால், "தேவை" என்பது தான் - உயிர் பிழைத்திருத்தலின் உடனடித் தேவைகளும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் தான். மனச்செயல்பாட்டின் பெருக்கம் நிறைந்த ( exponential), பகுத்தறிவார்ந்த வகையிலான வளர்ச்சியினால்,  விஞ்ஞான ரீதியிலான மனம்  தோன்றுகிறது. - ஆனால், அதில் விழிப்பு இல்லை! மனித மனமானது, ஒருபோதும் தனிச்சுதந்திரமான, தனித்துவமான ஒரு வியக்தியாக (entity) விழித்தெழாமலேயே, திறன்மிக்க தொரு அறிவு மற்றும் பயன்பாட்டு தொடர்பான ஒரு பொறியாகச் (faculty) செயல்பட இயலும்.

44) மனித மனமானது, விழிப்படையாவிட்டால், அது உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, உடலைப் பிரதிநிதித்துவம் செய்வதாயும், அதற்குச் சேவை புரிந்து கொண்டு மொத்தத்தில் உடலின் வாழ்க்கையை தனது வாழ்க்கையாக வாழ்ந்து செல்லும். அது எத்தகைய வாழ்க்கை என்றால், பிரதானமாக உடலின் இயல்பூக்கிகளினுடைய பசிகளை நிறைவேற்றிக் கொள்வதுதான். மனித உடல் என்பது அதனளவில் அது ஒரு விலங்கு போன்றதே, ஏனென்றால், பரிணாம ரீதியாக உடல் என்பது மனம் தோன்றுவதற்கு முந்தையது ஆகும்.

45) ஆனால், மனித மனமானது விழிப்படையும் போது அது தனது இருப்பிற்கு உடலைச் சார்ந்திருப்பினும், அதனால் தன்னை உடலிடமிருந்து வேறுபட்ட ஒரு தனித்துவமான அம்சமாகக் காணமுடியும். அதன் தொடர்ச்சியாக மனமானது தன்னை உடலுடன் அடையாளப் படுத்திக்கொள்வதிலிருந்தும், உடலின் தாக்கத்திலிருந்தும், மெதுவாக விடுவித்துகொண்டு தனது தன்னாட்சி உரிமையைப் பெறும். அதையடுத்து, மனமானது - பரிணாமத்திட்டத்தினால் உத்தேசிக்கப்பட்ட - தனது அசலான செயற்பாட்டைக் கண்டடையும். அச் செயற்பாடு என்பது மெய்ம்மையை ஆய்ந்தவிழ்ப்பதே ஆகும்.  (28.02.2005)

                      <<•>>

46) நம்மில் பெரும்பாலானவர்கள், கிட்டத்தட்ட 99% பேர்கள், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம்; அந்நிலையிலேயே, அதாவது தூக்கத்தில் நடக்கும் நோயில் வீழ்ந்தவர்களைப்போல எல்லாவற்றையும் தூக்கத்திலேயே செய்கிறோம், வாழ்கிறோம். விழிப்பு பற்றிய, உணர்வில் வளர்வது பற்றிய, அகத்தில் மலர்வதைப் பற்றிய யாதொரு உணர்வும் இன்றி.

47) நம்மில் சிலர், வெறும் 0.99 % பேர்கள், எவ்வாறோ நம்முடைய தூக்கத்தில் தொந்திரவு ஏற்பட்டு, இவ்விடயங்களைப் பற்றி கற்பனை செய்யத் தொடங்கியுள்ளோம். அதாவது, விழிப்படைதல் என்றால் என்ன என்றும், ஞானமடைதல் என்ன நன்மைகளைக் கொண்டுவரும் என்றும், இந்த அரிய நிகழ்வுகளின் விளைவுகள் அல்லது பரிசளிப்புகள் பற்றி கற்பனை செய்யத் தொடங்கியுள்ளோம்.

48) நம்மில் வெகு சிலர், வெறும் ஒரு கையளவு, 0.001 % பேர், விழிப்படைந்தவர்கள் இந்த விடயங்களைப் பற்றிப் பேசியும், எழுதியும் வருகிறார்கள். ஆனால், அவர்கள் முற்றிலுமாக (பிறரை) வழிதவறச் செய்யாவிட்டாலும், விஷயங்களை சிக்கலாக்கும் வேலையை செய்கின்றனர். ஏனென்றால், முதலிடத்தில் எந்த ஞானமடைந்த மனிதருக்கும் தான் விழிப்படைந்தது எவ்வாறு என்பது தெரிய வாய்ப்பில்லை. அவர்களுடைய மனித நேயமிக்க பேச்சுக்களும், கருணை வழியும் போதனைகளும் வெறும்  மறு -உருவாக்க (reconstructive) வகையிலமைந்த கதைகளே!

49) ஆனால், எது மிகவும் அவசரமானதும் அதி முக்கியமானதும் என்றால், நமக்கு நாமே சிந்திப்பதற்கும், உண்மைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் உடனடியாக இப்போதே தொடங்குவதுதான் ஆகும்.

50) அதே நேரத்தில், எது உள்ளத்திற்கு உற்சாகமளிக்கும் விடயம் என்றால், இன்றைய வினோத, நவீனத்துவ அல்லது பின் நவீனத்துவ காலங்களில், அதிகமதிகமான தனிமனிதர்கள் விழிப்படையவும், பரிணாம வளச்சியில் உயரவும் தொடங்கியுள்ளனர். இதை ஒருவர் தம்மைச் சுற்றியுள்ள காற்றிலேயே உணரமுடியும்
(02.03.2005)
                      <<•>>

51) எவர்களெல்லாம் விழிப்படையவில்லையோ, தொன்மைப்பண்புகெடாத, அந்த மாசற்ற வாய்ப்பைத் (pristine chance) தவறவிட்டவர்களோ, அவர்கள் எப்படியோ அந்த  தன்னெழுச்சியாக அடையப்படும் சுய- உள்ளக்களிப்பின் (Self Delight) கதவை தவறவிட்டுவிட்டார்கள். விழிப்படைவதற்கான அந்த பரவசம்-பொங்கும் வழியினை இழந்துவிட்டதால், இனி சுற்றிவளைத்துச் செல்லும் வழியில், சுய- அதிருப்தி அல்லது சுய -வெறுப்பு (Self-Disgust) எனும் கதவின் வழியாகச் சென்று விழிப்படைதலைச் சந்தித்தாக வேண்டும். அதற்கு அதிருப்தியின் நெருப்பு ஊடாக ஒருவன் சென்றாக வேண்டும்.

52) நீங்கள் விழிப்பதற்கான அந்த முதல் பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டீர்களென்றால், உங்களுக்கு எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு என்பது உள்ளது. நீங்கள் ஆன்மீக வளர்ச்சியில் எந்த மட்டத்தில் இருந்தாலும், எந்த வயதில் இருந்தாலும் - உங்களது 30 களில், 40 களில், 50 களில் . . .  இருந்தாலும்; உங்களால் புத்தம் புதிதாகத் தொடங்க முடியும்.

53) தனிமனிதச் சுயம் தன்னுடனும், இயற்கையுலகுடனும் கொள்ளும் ஐக்கியத்தினாலும் பெறும் தன்னெழுச்சியான சுய- உள்ளக்களிப்பின் (Self- Delight) கதவின் வழியாக அவர்கள் வந்திருப்பினும், அவர்கள் மீண்டும், "சுய- அதிருப்தி" (Self-Disgust) எனும் இரண்டாவது கதவின் வழியாகவும் செல்லவேண்டியுள்ளது. ஏனென்றால், அவர்கள் பெற்ற சுய- உள்ளக்களிப்பானது (தற்போது வைகறையின் மங்கிய ஒளியாகத் (Twilight Zone) தெரிய அல்லது மாறிவிட) விரைவில்  தொலைக்கப்பட்டுவிட்டது. அதாவது, சுற்றியுள்ள மக்களின் உலகமானது தனது முடமாக்கும் பாரம்பரியம், அறிவு, வழக்கங்கள், வாழ் முறைகள் மூலமாக தனிமனிதர்களின் வழியில் குறுக்கிடுவதனால்.
 
                      <<•>>

54) ஆகவே, உங்கள் மீதே நீங்கள் எரிச்சலடையுங்கள் (be disgusted with yourself), உங்களுடைய வெற்றிகள், தோல்விகள்; உங்களுடைய பூரணத்துவம் மற்றும் முழுமைக்குறைவின் மீது அதிருப்தி கொள்ளுங்கள். உங்களுடைய மேலோட்டமான சந்தோஷங்கள், மற்றும் உங்களுடைய அற்ப துன்பங்கள் மீது அருவருப்பு கொள்ளுங்கள். சமுதாயத்தின் வழிகள் மீதும், அதன் அற்பத்தனம், மற்றும் மேலோட்டமான தனம் மீதும் ; அதனுடைய முட்டாள் தனமான மதிப்புகள் பற்றியும் அருவருப்படையுங்கள். அன்றாட வாழ்வின் அர்த்தமற்ற சுற்று குறித்து சலிப்படையுங்கள். அறியப்பட்ட வாழ்வின் அனைத்து கோளங்கள் மீதும் அதிருப்தி யடையுங்கள்.

55) முழுவதுமாக (அரைகுறையாக அல்ல), மிக ஆழமாக, அடித்தளத்திலிருந்து உங்கள் மீதும், எல்லாவற்றின் மீதும் அதிருப்தி கொள்ளுங்கள். அனைத்து ஆன்மீகப் பள்ளிகள், பாதைகள், வழிகாட்டிகள், குருமார்கள், போதனைகள் எனப்படும் எல்லாவற்றின் மீதும் வெறுப்படையுங்கள் - இவற்றுடன் நீங்கள் தற்போது வாசித்துக்கொண்டிருக்கிற இந்த "தீவிரமிக்க போதனை" யையும் (Radical Teachings) சேர்த்தே எரிச்சலடையுங்கள். இந்த போதனையின் ஒரு நோக்கம் என்னவெனில், ஆர்வமிக்க ஆன்மீக அன்பர்களின் இதயங்களிலும், மனங்களிலும் வெறுப்பு அல்லது அதிருப்தியின் விதைகளை விதைப்பதே.

56) ஆகவே, இன்றே, நாளை அல்ல, வெறுப்படையுங்கள். ஆழமாகவும், முற்றாகவும் -அதாவது, மரணம் எனும் புள்ளியை எட்டும் வகையில், ஆமாம், உங்களுடைய பழைய மனத்தின், பழக்கத்து அடிமையாகிப்போன உங்கள் சுயத்தின்  மரணம். அப்போது நீங்கள் விழிப்படைவீர்கள்.    (03.03.2005)

                      <<•>>

57) விழிப்பு என்பது உங்களுடைய சொந்த வரலாற்றையும், கதையையும் முடிவுக்குக் கொண்டுவந்திடுகிறது. ஏனென்றால், விழிப்பு தான் உங்களுடைய அசலான அடைவிடம் ஆகும்.

                      <<•>>

58) விழிப்பு என்பது இக்கரையைச் (இந்த உலகை) சேர்ந்ததல்ல; அது மறுகரையைச் சேர்ந்தது.

                      <<•>>

59) விழிப்படைவதற்கு முன்னர் ஒருவன் அவனுடைய உடலையும், மனதையும் சேர்ந்தவனாக இருக்கிறான். விழிப்படைந்த பின்னர் அவன் விழிப்பைச் சேர்ந்தவனாகிறான் - விழிப்புற்ற நிலை - அது நித்தியம் ஆகும் -  உடல், மனம், காலம், வெளி ஆகியவற்றுக்கு அப்பால் அமைந்த உலகம்.

                      <<•>>

60) மனிதனின் மட்டுப்பாடான சிற்றுணர்வானது விழிப்படையும் பட்சத்தில், அவ்விழிப்பு வெளி-காலத்தின் விலங்குகளை உடைத்தெறிந்துவிட, உடனடியாக மனிதனின் மட்டுப்பாடான சிற்றுணர்வானது மட்டுப்பாடற்ற அகண்ட பிரபஞ்சமளாவிய பேருணர்வாக ஆகிவிடுகிறது.

                      <<•>>

61) விழிப்பு என்பது, புற-அளவிலும் சரி, அக -அளவிலும் சரி, யாதொரு ஆகுதலும் (becoming)அதாவது, மாற்றமும் தேவைப்படுவதில்லை என்ற ஆழமான உண்மைக்கு விழிப்பதாகும். மாற்றம் அனைத்தும் முடிவுற்ற முழுமை நிலையே விழிப்பு!

62) ஆம், விழிப்பானது அனைத்து ஆகுதலையும் (becoming) தேவையற்றதாக்கிவிடுகிறது!     (08.10.2005)

                      <<•>>

மா.கணேசன்/ நெய்வேலி


The Second Awakening
(These entries were originally recorded/written
between 11.02.2005 and 08.10.2005)

Originally written in English and Translated into Tamil by the Author
Translated and Typed between 08-10-2024 &  14-10-2024
and Uploaded onto the Blog on 14-10-2024

<<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>

Saturday, 5 October 2024

அகம் x புறம்





 

 

 

 

 

 

 

 

புறம் நிச்சயமாக இருக்கிறது!
மனித அகமே அதைக் கண்டு அறிந்து
அறிவிக்கிறது! ஆஹா!
அகம் எழாமல் புறத்திற்கு அர்த்தம்
யார் தருவது?
மூல -அகத்தின் அதிரடி உருமாற்றமே புறம்.
இது அதிகமானோருக்குப் புரியாது!
புறம் அகமாக மாறுவது தவிர்க்கவியலாத
பரிணாமம்!
இது ஒரு தொடர் சுழற்சியா?
அவசியமில்லை!
புறம் தோன்றுவதற்கு முன் இருந்தது
மூல -அகம்!
புறம் முடிவில் புகுவது மகா-அகம்.
இந்த முற்றுப்புள்ளி
முடிவைக் குறிக்கைவில்லை
முழுமையைக் கொண்டாடுகிறது!

              *

அகமுகமாகத் திரும்புதல், அகத்தாய்வு, அகமுகப் பயணம், அகத் தகவமைதல் என்றெல்லாம் அகத்தின் முக்கியத்துவம் பற்றிக் கேள்வியுறும் போது, நம்மால் அகமுகமாகத் திரும்ப முடியாமால் தடுமாறுவது  ஏன் ? மேலும், அது நம்மை அகமா? புறமா? என முடிவு செய்ய இயலாமல் பெரும் உளப்போராட்டத்தில் தள்ளி விடுவது எதனால்?

அல்லது, அகம் எனும் பரிமாணம் அவசியமற்றதா? நமது (அன்றாட) வாழ்க்கையுடன் அதற்கு யாதொரு தொடர்பும் இல்லையா?

அகம் என்பது நமக்கு அன்னியமானதா? அல்லது புறம் என்பதுதான் நமது பிறப்பிடம், புகலிடம், மற்றும் அனைத்துமா?

'அகம்' புறத்திற்கு எதிரானதா ? அல்லது,' புறம்' அகத்தைப் புறக்கணிக்கிறதா? புறம் என்பது என்ன, அது எதைக் குறிக்கிறது? அகம் என்பது என்ன, அது எதைக் குறிக்கிறது? முதலில் நாம் புறத்திலிருந்து தொடங்குவோம். ஏனெனில், நம்மை விட நமக்கு மிகவும் பரிச்சயமானது புறவுலகம் தான் - நெருங்கிய சொந்த பந்தங்களைக் கொண்ட குடும்பமும், அன்றாடச் சடங்குகளும், பொருட்களும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்களும்; ஆதரவும், வன்மமும், குரூரமும் நிறைந்த சமுதாயமும்; அழகு நிறைந்தததும், சில
சமயங்களில் சீற்றம் கொள்ளும் பூவுலகமும்; அதையும் கடந்து எல்லையற்றதாய்ப் பரந்து விரியும் - மிகச்சரியானதொரு தொடர்பு - கொள்ளல் இல்லாததினால்- இன்னும் புரிந்துகொள்ள இயலாத 'பிரபஞ்சம்' எனும் புதிருலகமும்தான்.

'பிரபஞ்சம்' குறித்து தனியே பிறிதொரு கட்டுரையில் காண்போம். நாம் பெரிதும் இயங்கும் புறவுலகம் என்பது அனைத்துக் குழப்பங்களுக்கும், பிரச்சனைகளுக்கும், முட்டாள்தனங்களுக்கும் , எல்லா அநீதிகளுக்கும் களமாக, காரணமாக விளங்குவதும், தனிமனிதர்களின் வாழ்க்கையைக் குலைக்கும் வகையில் துருத்திக் கொண்டிருப்பதுமான சமுதாயம் எனும் பாழுலகமே ஆகும். இச்சமுதாயம் குறித்தும் பிறகு பார்ப்போம். மொத்தத்தில், புறம் என்பது, பொதுவாக ஒருவருக்குப் புறத்தேயுள்ள புறவுலகமே எனலாம்.

அகம் என்பது அதன் மிகவும் சுருக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் ஒருவரது "மனம்" அல்லது அகந்தை உணர்வே எனலாம். அதன் மிக விரிவான, ஆழமான நிலையைக் குறிக்கும் வகையில் அகம் என்பது "ஆன்மா" அல்லது இறுதியும் முழுமையுமான "பேருணர்வே" எனலாம். மனம், அகந்தை, ஆன்மா, பேருணர்வு குறித்து விரிவாக பிறகு காண்போம்.

இப்போதைக்கு 'அகம்' என்பது  ( நமது) மனதைக் குறிக்கிறது. அதே வேளையில், மனித மனங்கள் ஒரு படித்தானதல்ல என்பதும்; மனத்திற்கு மனம் கனபரிமாணத்தில் வேறுபடுவதாய் உள்ளது என்பதும் உண்மையே என்றபோதிலும் மேலோட்டமான தன்மையிலும், மட்டுப்பாடான தன்மையிலும் , சுய சிந்தனையற்ற பாங்கிலும் நம் பெரும்பாலான மனங்கள் சேர்ந்து செல்வதாயுள்ளன. . . .

மொத்தத்தில், அகம் என்பது அதிகம் அறியப்படாத பிரதேசமான, இன்னும் தன்னை, தனது வீச்சையும், தனது உள்ளுறையாற்றலையும் உணராத மனத்தையே குறிக்கிறது.

உண்மையில், புறம் அல்ல பெரிதும் பிரச்சினைக்குரியது ! மாறாக, தனது அசலான ஆற்றலையும் தனது ஆழத்தையும் அறியாத அகமே, மனமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.

நாம் புறத்தே பயணிப்பதாயினும் அல்லது அகத்தே பயணிப்பதாயினும் அது பிரதானமாக நமது விருப்பத்தை, நோக்கத்தை, தேவையை - நாம் முக்கியமெனக் கருதி எவையெவற்றைத் தேடிச்செல்கிறோம் என்பதைப் பொறுத்ததேயாகும்.

அகம் நம்மை உட்பிரவேசிக்க விடாமல் விரட்டியடிப்பதும் இல்லை. புறம் நம்மை கட்டிப் போடுவதும் இல்லை. நமது நோக்கங்களும், விருப்பங்களும், மதிப்பீடுகளும் தான் நம்மை புறத்தையோ அல்லது அகத்தையோ நோக்கிச் செலுத்துவதாயுள்ளன.

நாம் எதனுடன், எவ்வெவற்றுடன் நம்மைப் பிணைத்துக்கொள்கிறோம், அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நம்மை அடிமைப்படுத்தவோ, அல்லது விடுதலைப்படுத்தவோ செய்கின்றது!

புறம் என்பது தீமையானதோ, விலக்கப்பட வேண்டியதோ அல்ல. அதனளவில் அது மட்டுப்பானது, அவ்வளவே. புறம் என்பது தவிர்க்கமுடியாதது. அதே வேளையில், நாம் புறத்தை முற்றிலுமாகச் சார்ந்திருப்பதும் கூடாது. அது நமது உய்விற்கு உதவிடாது. புறம் என்னவோ நமது " பிறந்த வீடு" தான். எனினும் புறத்தை மட்டுமே சார்ந்திருப்போமெனில், அதுவே நாம் "இறக்கும் வீடாக"வும் ஆகி விடும்.

புறமும் அகமும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்றாலும், நாம் புறவுலகைச் சார்ந்திருப்பதை விடவும் புறவுலகம்தான் நம்மை, நமது அகத்தைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. புறத்தின் (புறவுலகின்) பரிணாம வளர்ச்சியின் தவிர்க்கவியலாத ஒரு முக்கிய கட்டமாக வெளிப்பட்டுள்ள மனிதனின் (ஒவ்வொரு மனிதனின்) வழியேதான் அதன் இறுதிப் பரிமாண உச்சமானது எட்டப்படவேண்டும். உண்மையில் நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. மாறாக, பிரபஞ்சம் தான் நம்முள் வாழ்கின்றது! உண்மையில், நாமும் பிரபஞ்சமும் வேறு வேறு அல்ல. கூர்மைப்பட்ட, நுட்பம்கூடிய, சூக்கும நிலையடைந்த புறத்தின் புதிய முகமே அகம் என்பதாகும்!

ஆக, 'புறம்' எனச் சுருக்கி அழைக்கப்படும் இப்பிரபஞ்சமானது அகவயப்படுதலையே தனது பிரதான உள்-நோக்கமாக, பரிணாம இலக்காகக் கொண்டு இயங்கி வந்துள்ளது. அகவயப்படுதல்,  அல்லது அக நிலையடைதல் என்பது உணர்வடைதல், மேன்மேலும் உணர்வில் வளர்தல், பெருகுதல் என்பதே.

புறம் ஒருபோதும் அகத்துடன் முரண்படுவதில்லை. ஏனெனில், புறம் என்பது தொடர்ந்து தன்னைக் கடந்து வளர்ந்து செல்லும் உள்ளார்ந்த உந்து விசையைக் கொண்டதோர் இயக்கமாகும். ஆக, புறத்தின் வளர்ச்சியும், பரிணாமமும் மேலும் மேலும் அகவயமாவதாய் அகத்தின் ஆழத்தைத் தேடிச்செல்வதாய் இருக்கும் பட்சத்தில் நாம் புறத்தையே நோக்கிக் கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருப்பது முறையன்று.

புறவுலகை விரிவாகவும் எவ்வளவு எட்டமுடியுமோ அவ்வளவு தொலவு வரையும் ஆராய்கிற நாம் ஏன் நமக்கு அருகில் மிக நெருக்கமாக உள்ள அகத்தை, அகவுலகை ஆராயப்புகுவதில்லை?

பலவிதமான தேவைகளின் பொருட்டும் பயன் பாட்டு நோக்கங்களுக்காகவும் தான் நாம் புறவுலகை ஆராய்கிறோமே தவிர புறவுலகிற்கும், அகவுலகிற்கும்( நமக்கும்) உள்ள தொடர்புறவை நாம் இன்னும் அறிந்தபாடில்லை! தனது உயிர்-பிழைத்தலுக்கான தேவைகளைப்  பூர்த்தி செய்து கொள்வதுதான் தனது வாழ்க்கை, குறிக்கோள், நிறைவு, முழுமை, இலக்கு, யாவும் எனக் கொண்டு தனது வாழ்க்கையை மிகவும் மேலோட்டமாகவும், மட்டுப்பாடான வகையிலும் மனிதன் வாழ்ந்து செல்கிறான்.

அதாவது, மிகப் பரிதாபகரமாக அவன் தனது  மேற்புறச் சுயமான உடலின் தேவைகளை மட்டுமே உணர்ந்தவனாய், ஒரு விலங்காய்  வெறுமனே உயிர்-பிழைத்துச்செல்கிறான். இதைத்தான் அவன்  'வாழ்க்கை'  என்றழைக்கிறான். அவன் இன்னும் தனது உள்ளார்ந்த சுயத்தின் ஆழமான தேவையை உணர்ந்தவனாய், அசலான மனிதனாய் எழவில்லை!

மனிதனின் உண்மையான மகிழ்ச்சியும், நிரந்தர நிறைவும், அகலாத அர்த்தமும், முழுமையும், யாவும் அவனது உள்ளார்ந்த சுயத்தின் தேவையை நிறைவு செய்வதிலேதான் அடங்கியுள்ளது. ஆனால், இத்தகைய தேவையை நிறைவு செய்யக்கூடிய யாதொரு பொருளும், அம்சமும், கூறும், புறவுலகில் எங்கேயும் இல்லை! இதுதான் புறவுலகின் மட்டுப்பாடாகும்.

புறவுலகமானது  நமது  மேற்புறச் சுயமான உடலின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடும். ஏனெனில், நமது புறச்சுயமான உடலானது புறவுலகின் பௌதீகச் சடப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டதே யாகும். நமது உள்ளமைந்த அகச்சுயத்தின் தேவையை நாம் ஒவ்வொருவரும் நம்முள் ஆழ்ந்து செல்வதன் வழியாக மட்டுமே அடைய முடியும். நமது அகச்சுயத்தின் தேவையை அடைவது என்பது நமது அகச்சுயத்தை அதன் அடியாழத்திலிருந்து நேரடியாகக் கண்டடைவதே; நமது அகத்தில் மேன்மேலும் ஆழப்படுவதேயாகும்.

அதற்கு, முதலில் நாம் உண்மையில் ஒரு "அக ஜீவி" என்பதை உணர்ந்தறிய வேண்டும். இன்னும் உயிருள்ள எவ்வொரு சிறு புழு பூச்சியும் கூட அகஜீவிகளே. முதல் உயிரியான 'அமீபா'  தான் முதன்முதலில் இப்பிரபஞ்சத்தில் அகம், புறம் எனும் பிரிவினையை தன்னுடன் கொண்டு வந்தது.

கற்பனை செய்து பாருங்கள் : இப்பிரபஞ்சத்தில் ஒரு புழு பூச்சியும் தோன்றிடவில்லை என்றால்; யாதொரு அவதானிக்கும்  உணர்வுள்ள  (மனித) ஜீவியும்  இல்லை என்றால்; புறம் என்ற ஒன்றை உணர, காண, அறிய, அதைப்பற்றிப் பேச எதுவும், எவரும் இல்லையென்றால் புறத்தின்(புறவுலகின்) அர்த்தம் தான் என்ன?

உலகம், சடப்பிரபஞ்சம், தன்னைத்தானே பார்வை கொள்ளவும், உணரவும், அவதானிக்கவும் முடியாது! ஆனால்,  உலகிற்கு மாறான, அதன் பண்பிலிருந்து வேறான ஒன்று உலகை, புறத்தை, பார்வை கொள்ளவும், அவதானித்தறியவும் முடியும். ஆகவே தான், பிரபஞ்சம் எனும் சடத்துவம் உயிராகப் பரிணமித்தது.

உண்மையில், " உயிர்" என்பது எங்கோ கால-வெளி உலகிற்கு வெளியேயிருந்து வழி தெரியாமல் உலகிற்குள் வந்து சேர்ந்துவிடவில்லை. மாறாக, உயிர் என்பது பெளதீக(சட) பிரபஞ்சத்தின் மிக வித்தியாசமான, விசேடமான ஒரு வளர்ச்சி நிலையே, உலகின் நீட்சியே தவிர வேறில்லை!

உயிருள்ள ஜீவியாயினும், உணர்வுள்ள  (மனித) ஜீவியாயினும் அவை பரந்து விரியும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் இடம் பெறுகின்ற முக்கியத்துவம் ஏதுமற்ற விஷயங்களல்ல. மாறாக, அவை பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிப் படிகள் மாத்திரமல்ல; அவை பிரபஞ்சத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றவையும் பிரபஞ்சத்தின் மிக அசலான, சாரமான, இறுதிப் பண்பினை, தன்மையை வெளிப்படுத்தும் கருவிகளும், பிரதிநிதிகளும் ஆகும்.

பிரபஞ்சத்தின் மிக அசலான, சாரமான பண்பு அதன் சடத்தன்மை அல்ல. இன்னும் சடத்தன்மை கடந்த உயிரும் அல்ல; இன்னும் உயிர்த்தன்மை கடந்த மனித உணர்வும் அல்ல. மாறாக, மனித உணர்வையும் கடந்த, மனித உணர்வின் உள்ளேயும் ஊடேயுமாகச் சென்றடைய வேண்டிய மாபெரும் இறுதிப்" பேருணர்வு" தானாகும். இதுவே அகத்தின் இறுதி ஆழம் ,எல்லை, இன்னும் அனைத்தின் (அகம், புறம் இரண்டின்) முடிவும் முழுமையும் ஆகும்.

முதன் முதலில், முதல் உயிரியான அமீபாவின் வருகை தான் புறத்தை புறம் எனவும், அகம் எனவும் இரண்டாகப் பிரித்தது. என்றாலும், தான் ஒரு "அக-ஜீவி" (அகத்தைக் கொண்ட ஜீவி) என்பதை உணரும் அளவிற்கு அது தன் அகத்தில் (உணர்வில்) ஆழப்படவில்லை. அதற்கு "சுய உணர்வு" எனும் அந்த அரிய அம்சம் இல்லை. ஆகவேதான், அந்த அமீபா தான், நெடிய பரிணாமப் பயணத்தின் வழியாக தற்போது சுயவுணர்வையுடைய மனித ஜீவியாக எழுந்துள்ளது. ஆம், அகம் என்பது அதற்குரிய உணர்வுப் பரிமாணத்துடன் முதன் முதலில் மனிதனுடன் மட்டுமே தொடங்குகிறது.

ஆனால், மனித ஜீவிகளோ உணர்வு இருந்தும் தாம் ஒரு அக-ஜீவியே என்பதை உணராத அமீபாக்களாகத் தான் இன்னும் விளங்குகிறார்கள்! அதனால் தானே அவர்கள் அகம், புறம் எனும் பிரிவினையின் ஏற்பாட்டை , அதன் உள் நோக்கத்தை, புரிந்து கொள்ளாமல் அப்பிரிவினையை பிரச்சினையாக மாற்றிவிட்டதோடு அப்பிரச்சினையின் தாக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்.

உண்மையில், அகம் x புறம் பற்றிய பிரச்சினையை எழுப்புவதும், அதற்கான தீர்வைத் தேடுவதும் மனிதனின் சுருங்கிய ஆழமற்ற (இன்னும் ஆழப்படாத) அகமே; தன்னை நோக்கி விழிப்படையாத மனமே யாகும்.

இப்பிரச்சினைக்கான தீர்வென்பது, மனிதன் மேன்மேலும் தன் அகத்தே ஆழப்படுவதொன்றே; மேன்மேலும் தன் உணர்வில் வளர்வதொன்றே, பெருகுவதொன்றே ஆகும்.

ஆனால், மனித ஜீவிகளுக்கு அவர்களது இயல்பிலேயே  "சுயவுணர்வு" கொடுக்கப்பட்டிருந்தும் அவர்களில் விதிவிலக்கான ஒரு சிலரைத்தவிர ஏணைய பிறர் அவ்வுணர்வைத் தழுவிக் கொள்ளவில்லை. சிறு துளி அளவும் அவர்கள் தம் உணர்வில் தோயவில்லை. சிறிதளவும் அவர்கள் தம் உணர்வில் வளரவும் இல்லை.

விலங்குகளின் ஒரு பொதுப்பண்பு அவை பகலிலும் இரவிலும் எப்போதும் புறத்தையே - புற அசைவுகளை, நிகழ்வுகளை, பொருட்களை, பிற விலங்குகளையே கவனித்திருக்கும், கண்காணித்திருக்கும். அவற்றிற்கு அகப்பார்வை கிடையாது. உறங்கும் நேரம் தவிர விலங்குகள் தம்முள் அமிழ்வதில்லை!

இவ்வாறே மனித ஜீவிகளாகிய நாமும் எப்போதும் புறத்தையே, புற நிகழ்வுகளையே, புற  விஷயங்களையே; பிற மனிதர்களின் சொற்களை,செயல்களை, நடவடிக்கைகளையே கண்காணித்திருக்கிறோம். நமக்கும் பெரிதாக அகப்பார்வை எதுவும் கிடையாது. உறக்கத்தைத்தவிர நாமும் நம் அகத்துள் அமிழ்வதில்லை. நமது பெரிய, பெரிய கனவுகளும், கற்பனைகளும், நமது 'ஆழமான' சிந்தனைகளும் கூட, புற விடயங்களைப் பற்றிய அசைபோடுதலே தவிர, நாம் எண்ணுவது போல அவை "அகமுக யாத்திரை" களல்ல! ஆம், 'புறம்' பற்றிய குறிப்பு ஏதும் இல்லாத பிரயாசையோ, அகப்பார்வையோ, உள்-ஆழ்தலோ நம்மிடம் துளிர்க்கவேயில்லை! இன்னும் சொல்லப்போனால், நமது புறப்பார்வையும் கூட மட்டுப்பாடான, ஆழம் செல்லாத நமது அகத்தின் (மனத்தின்) குறுகிய நுகர்வுத் தேவைகளால் கட்டுப்படுத்தப்பட்டதேயாகும்.
 
உண்மையில் புறம் என்பது எதைக்குறிக்கிறது? அது எதற்காக இருக்கிறது? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு, உறவு என்ன? என்பன போன்ற கேள்வி எதுவும் நம்மிடம் எழுவதில்லை. நமது உடல் - மைய வாழ்க்கையின் நுகர்வுத் தேவைகளுக்கான வளங்களை, பொருட்களைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கிடங்கு என்பதற்கு மேல் நாம் புறவுலகைக் காண்பதில்லை, புரிந்துகொள்வதில்லை.

நம்மைப் பொறுத்தவரை புறம், புறவுலகம் என்பது நமது நுகர்வுத் தேவைகளைத்தான் பிரதிபலிக்கிறது, குறிக்கிறது. புறம் பற்றிய நமது பார்வையும், புரிதலும் பெரிதும் நமது ஆழமற்ற அகத்தினால் விகாரப் படுத்தப்பட்ட (குறுக்கப்பட்ட) ஒன்றாகவே உள்ளது. புறவுலகில் நாம் விழுந்து புரண்டு காரியமாற்றுவதாகத் தெரிந்தாலும், நாம் அதில் புழங்குகிறோமே தவிர, அதனுடன் ஒன்றி, ஐக்கியம் கொண்டு வாழ்வதில்லை. மாறாக, நாம் நமது ஆழமில்லாத (ஆகவே மன நோய் பீடித்த) அகத்தில்தான் வாழ்கிறோம்!

நாம் இயற்கையை இயற்கையாகவே பார்ப்பதில்லை. நமது குறுகிய நோக்கங்களுக்கேற்ப இயற்கையுலகை வளைத்து நெளித்து மாற்றியமைத்துக் கெடுத்து  நமது பொருளாதாரத் தேவைகளின் நிமித்தம் அதை மிகவும் கொச்சைப் படுத்தியே காண்கிறோம். நாம் இயற்கைக்காக (அதன் அழகுக்காக, அது நமக்கு உயிர் தந்து நம்மைப் பேணிப் பராமரித்திடும் " உயிர்க்கோளம்" என்பதற்காக) இயற்கையிடம் செல்வதில்லை!
 
மாறாக, அதனகத்தே மறைந்துள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற படிவ எரிபொருட்களுக்காகவும், உலோக மூலப்பொருட்களுக்காகவும், பசுங்காட்டு மரங்களை வெட்டிக் கொள்ளையிடவும், இன்னும் பிற வளங்களைச் சுரண்டவும், மொத்தத்தில் பொருளாதார பயன்களுக்காகவும் தான் இயற்கையிடம் செல்கிறோம். இல்லையென்றால், "சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல 'விலையுயர்ந்த' மரங்கள் எரிந்து போயின!"  என்பதாக நாம் சொல்வோமா? காட்டிலுள்ள தொன்மையான அரியவகை மரங்களுக்கு விலை குறிக்கும் முட்டாள்தனம் மனநோய் பீடித்த மனிதர்களின் சமுதாயத்திலிருந்தல்லாமல் வேறெங்கிருந்து வரும்.

புறம் பற்றிய நமது பார்வையைப் போலவே நமது அகம் பற்றிய பார்வையும் புரிதலும் மிகவும் குறுகியதே, மட்டுப்பாடானதே! உண்மையைச் சொன்னால், எந்தப் புள்ளியிலிருந்து அகம் தொடங்க வேண்டுமோ அந்தப் புள்ளியிலேயே நாம் தங்கித் தேங்கிக் கிடக்கிறோம். அப்புள்ளியிலிருந்து உள்முகமாக ஒரு சிறு அடியையும் நாம் இன்னும் எடுத்து வைக்கைவில்லை!

நமது அகம் மிகவும் சராசரியானது, சாமானியமானது, நமக்குப் பிடித்தவை, பிடிக்காதவை, விருப்பு, வெறுப்பு, பொறாமை, பேராசை, தன்னலம், தற்பெருமை, கீழ்மை ஆகிய உள்ளடக்கங்களால் கட்டமைக்கப் பட்டதாகும். உடலின் நச்சரிப்பான தேவைகளைத் தாண்டி உள்ளத்தின் உயர் தேவையை நாம் அறிந்ததில்லை, உணர்ந்ததில்லை.

ஒரு உணர்வற்ற விலங்கிற்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரு விலங்கு தன்னைத்தானே பிரதி நிதித்துவம் செய்யாமல் (அதற்கான வழிவகை இல்லாததால்) அது நேரடியாக முண்டுகிறது, முனைந்து நிற்கிறது. மனித ஜீவிகளாகிய நாமோ நமது முண்டுதலுக்கு முன்புறமாக "நான்" என்கிற ஒரு ஒட்டுச்சீட்டை ஒட்டியுள்ளோம் என்பதுதான் அந்த வித்தியாசம்! அந்த ஒட்டுச் சீட்டிற்குப் பின்னால் இருப்பது 'மனிதன்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு விலங்குதான். அரிஸ்டாட்டில் சொல்லியது போல ஒரு 'சமூக விலங்கு'. அதிலும் கூட மனிதன் தனியே தன்னில் தானே ஒரு சுதந்திரமான விலங்காகவும் இல்லை!

அகத்திற்குள் செல்வதற்கான வழிவகையும் வாய்ப்பும் இருந்தும் மனிதர்கள் அகம் புகுவதில்லை. அகத்தின் ஆழத்தில் ஞானப்பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், அதில் எவருக்கும் நாட்டமில்லை! ஆதலால் அகத்தின் வாயிற்படியிலேயே நாம் தங்கி விட்டோம். இந்தத் தேக்கத்திற்குக் காரணம் புறவுலகமோ, அதன் கவர்ச்சிமிகு அம்சங்களோ அல்ல. மாறாக, நமது உடலின் மீது நாம் கொண்டிருக்கும் அதீதப் பற்றுதலே. அதே வேளையில் உடலும் அதனுடைய அடிப்படையான உயிர்- பிழைத்தலுக்கான தேவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவைகளோ, துறக்கப்பட வேண்டியவைகளோ அல்ல! மாறாக, தவிர்க்கப்பட வேண்டியது நம் உடலுடன் நாம் கொள்ளும் அதீதப் பிணைப்பைத் தான்!

ஏனென்றால், மிக எளிமையானதொரு உண்மை என்னவென்றால் மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல. உடல் அவனது உடமை போன்றதே, அதைப் பேணிப் பராமரிப்பது அவனது கடமைகளில் ஒன்றே தவிர உடலின் ஊழியக்காரனாக அவன் மாறுவது முறையற்றதாகும்.

ஏனெனில், மனிதன் அடிப்படையில் ஒரு அக ஜீவியாவான். அவன் ஒரு உடலைக் கொண்டிருக்கிறான் என்பதைப்போல, சிந்திக்கும் மனத்தையும், தனது இருப்பை நேரே உணரும் சுய-உணர்வையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, சிந்திக்கும் மனம் தான் மனிதன்; சுய-உணர்வு தான் மனிதன்.

"நான்" என்று கூறும் அகந்தை உணர்வானது உண்மையில், தன்னைத்தான் குறிப்பிடுகிறது (குறிப்பிட வேண்டும்) . ஆனால், முற்றிலும் தவறாக இடம் மாற்றி (அல்லது ஆள் மாற்றி) தனது உடலைச் சுட்டுவதான பிறழ்ச்சி தொடக்க நிலையிலேயே துரதிருஷ்டவசமாக நிகழ்ந்து விடுகிறது.

இந்த துரதிருஷ்டத்தின் விளைவாக, நம்மைப்பற்றி நமக்குத் தெரிவதெல்லாம் நமது உடல் மட்டுமே. அதில், நமது உட்புறம் பற்றி நாம் அறிந்ததெல்லாம் பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்பூக்கிகளும், வேறு சில அடிமனத் தூண்டுதல்களும், அவற்றை நிறைவேற்றிக்கொள்வது குறித்து நம்முள் எழும் விருப்பங்களும் மட்டுமே! இவைதான் நம்மைச் செலுத்தி வருகின்றன பகலிலும், இரவிலும்.

மனம் என்பது உடலுடன் சேரவில்லை எனில், உடல் என்பது அதனளவில் ஒரு விலங்கு தான். அவ்வுடலின் ஒரே பிரதானமான,  மையமான முனைப்பான நோக்கம், குறிக்கோள், இலக்கு யாவும் 'சுய-பாதுகாப்பு',  'சுய-பாதுகாப்பு',  'சுய-பாதுகாப்பு', என்பதாக மட்டுமே அமையும்!

ஆனால், உடல் என்பது எத்தகைய "சுயம்"? அது ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? சரி, உடலானது எப்பாடுபட்டாயினும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகவே வைத்துக்கொள்வோம்! ஆதலால்தான் மனித மனமும் உடலின் பாதுகாப்பை சிரமேற்கொண்டு உடலின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது எனக் கொள்வோம். ஆனால், உடலுக்கு வேளை தவறாது உணவளித்து குளிப்பாட்டி சுத்தப்படுத்தி, ஆரோக்கியம் பேணி, எல்லாம் செய்தும் நோயிலிருந்தும், மூப்பிலிருந்தும், முடிவான மரணத்திலிருந்தும் காப்பாற்ற முடியாதெனும் பட்சத்தில், அது எவ்வகையில் உண்மையான, முழுமையான "சுய-பாதுகாப்பு" என்பதாக விளங்க முடியும்? இது ஒரு சுய- தோற்கடிப்பான பிரயத்தனமாகத் தெரியவில்லையா?

உயிருள்ள உடல் அது ஒரு புழுவினுடைய தாயினும், அல்லது ஒரு மனிதனுடையதாயினும், அதை ஏன் பெரு முயற்சி எடுத்துப் பாதுகாக்க வேண்டும்? ஒரு புழுவின் உடலைவிட ஒரு மனிதனின் உடல் சிறப்புடையதா, மேலானதா, மதிப்புடையதா? உடலின் பாதுகாப்பு என்பது மரணம் வரைக்கும் மட்டும்தான் சாத்தியம் என்றால் அது மிகவும் தற்காலிகமானது தானல்லவா? இந்த குறுகிய காலத்திற்கு பாதுகாக்கப்படுவதால் சாதிக்கப்படும் இலக்குதான் என்ன?

உண்மையில் "சுய-பாதுகாப்பு" என்றால் என்ன? எழுபது அல்லது என்பது ஆண்டுகளாக உடலைப்பேணி உயிரைக் காத்து முடிவில் மரணத்திடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் "சுய-பாதுகாப்பு" என்பதா? உடலுக்கு உணவளித்துப் பேணுவதோ, நோய் நொடிகளிலிருந்து காப்பதோ, ஆயுளை நீட்டிக்க பெருமுயற்சி செய்வதோ அல்ல "சுய-பாதுகாப்பு" என்பது!

உயிருள்ள எவ்வொரு ஜீவியின் பிரதான உந்துதல், உத்வேகம், ஊக்கம், யாவும் "சுய-பாதுகாப்பு" அல்லது சுய-தக்கவைப்பு என்கிற ஒன்று மட்டுமே. பிற தேவைகள், ஈடுபாடுகள், செயல்பாடுகள் யாவும் பிரதானமாக இந்த உந்துதலுக்குச் சேவை செய்யும் விதத்திலானவை மட்டுமே. ஒரு புழுவோ, எலியோ, தன்னில் எதை பாதுகாத்திட, தக்கவைத்திட முயல்கிறது? ஒரு புழுவின் 'சுயம்' என்பது அதன் மெல்லுடலா, அல்லது புழுவிற்கும் உணர்வு, ஆன்மா எதுவும் உள்ளதா? தனது எந்தச் சுயத்தைக் காத்திட அப்புழு துடிக்கிறது? தன்னில் எந்தச் சுயத்தைக் காத்திட மனிதனும் துடிக்கிறான்? அதே நேரத்தில், "மரணம்" என்பது நிச்சயம் எனும் நியதி  இருக்கும்போது  "சுய-பாதுகாப்பு" எனும் உந்துதலும் இருப்பது முரண்பாடில்லையா?

அப்படியானால்,  "சுய-பாதுகாப்பு" எனும் உந்துதலின் உண்மையான இலக்குதான் என்ன? உண்மையில், இந்த உந்துதலின் நோக்கமானது எவ்வொரு குறிப்பிட்ட ஜீவியையும் ( அது அமீபாவையோ, எலியையோ, தவளையையோ, இன்னும் மனிதனையோ ) பற்றியதல்ல. மாறாக, அது ஒட்டு மொத்தமாக அனைத்து ஜீவிகளுக்கும், இன்னும் உயிரற்ற சடப் பொருளையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கும் பொதுவானதாகும்.

ஒரு அமீபாவிற்கு, அதன் ஒற்றைச் செல் (Single Cell) உடல் தான் அதன் உடனடிச் சுயம். அதனுடைய உண்மையான இறுதியான சுயம் மிகத் தொலைவான பரிணாம வருங்காலத்தில் உள்ளது!

அந்த இறுதிச் சுயத்தை ஒரு குறிப்பிட்ட அமீபாவால் எட்டமுடியாமல்  போகலாம். அவ்வாறு நேரடியாக எட்டுவதற்கு அதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் பரிணாம வரலாறு காட்டும் உண்மை. ஆனால், மறைமுகமாக அதனால் எட்ட முடியும் என்பதும் அதே பரிணாம வரலாற்றின் உண்மையே! பரிணாமம் என்பது ஒரு "தொடர்- ஓட்டம்" (Relay Race) போன்றது. ஒரு ஜீவி விட்ட இடத்திலிருந்து இன்னொரு ஜீவி அவ்வோட்டத்தை தொடர்கிறது. இன்னொரு ஜீவியாக மாறியது அந்த அமீபா தான்! இவ்வாறு அமீபாவானது தற்போது மனித ஜீவியாக மாறியுள்ளது (அதாவது பரிணாம அவதாரம் எடுத்துள்ளது! ) ஆம், மனிதன் என்பவன், நெடிய பரிணாம ஏணியில் தோன்றிய அனைத்து ஜீவிகளின் ஏகப் பிரதிநிதியாவான்!

ஆக, அமீபாவினால் நேரடியாகவும், உடனடியாகவும் எட்ட முடியாத அதன் மிகத் தொலைவில் அமைந்த இறுதிச் சுயத்தை மறைமுகமாக எட்டும் வகையில் அப்பரிணாமத் தொடர் ஓட்டத்தில் தனது பங்கிற்கான பணியை நிறைவேற்ற வேண்டுமென்றால் அந்த அமீபா தனது உடனடிச் சுயமான ஒற்றைச் செல் உடலை பேணிப் பாதுகாத்திடத்தான் வேண்டும்.

ஏனெனில், படிகள் ஏதுமில்லாத ஏணி என்று ஒன்றிருக்க முடியாது. உயரத்தில் உள்ள ஒரு இலக்கை எட்ட வேண்டுமெனில் அதற்கு ஒரு ஏணி வேண்டும். அதற்கு படிகளும் இருக்க வேண்டும். அத்தகைய பரிணாமப் படிகள்தான் அமீபா, பாரமீசியம், யூக்ளினா, . . . .. புழு, பூச்சிகள், எறும்புகள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என எல்லாமும். ஏன், மனிதனும் அந்த ஏணியின் ஒரு படிதான்; மிகவும் முக்கியமான இறுதிப்படி! ஒப்பற்ற அந்த இறுதி மகா-சுயத்தை அடையும் வழிமுறையில் உதவுவதற்காக மனிதனும், முதலில் தனது மேற்புறச் சுயமான உடலை பேணிப் பாதுகாத்திடத் தான் வேண்டும். அதைவிட அவன் தனது உள்ளார்ந்த அகச் சுயத்தின் நலனைத் தான், பெரிதெனக் கொண்டு, அதை அடைந்திட வேண்டியே அவன் தன்  குறுகிய வாழ்காலம் முழுவதும் (அதை அடைந்திடும் வரை) சிரத்தையுடன் உழைத்தாக வேண்டும். ஏனெனில், மரணத்தைக் கடக்கும் ஒரே வழி உயிரோடிருக்கும் போதே, அழிவில்லாச் சுயமான "ஆன்மா" எனும் தூயப் பேருணர்வை அடைவதொன்றே யாகும்.

மிகவும் விசித்திரமான ஒரு உண்மை என்னவெனில், அழிவிலா ஆன்மா எனும் பேருணர்வுக்கு இட்டுச் செல்லும் ஒரே கதவு, "நான்" எனும் சிற்றுணர்வாகிய நம் அகந்தை-உணர்வு தான். அதுதான் உணர்வின் தொடக்கமும், தலைவாயிலும் ஆகும். அகந்தை மீதான அனைத்துப் பழிகளுக்கும், அவதூறுகளுக்கும் காரணம், அது 'நான்' எனும் மந்திரச்சொல்லைக் கொண்டு, தன்னை முன்னிலைப்படுத்தி, தனது சிற்றுணர்வைக் கடந்து வேறு "மெய்ம்மை" எதுவும் இல்லை என்பது போல, 'தான்-தோன்றித்' தனமாக நடந்து கொள்ளும் மட்டுப்பாடே ஆகும்.

மேலும், அகந்தை-உணர்வு என்பது உணர்வின் ஒரு தொடக்கப் புள்ளியே. உணர்வு-மாளிகையின் மிக இடுக்கமான முன்வாயில் மட்டுமே. அதன் வழியே உட்பிரவேசித்து மேன்மேலும், உணர்வு பெறுவதற்காகத்தான் ( மேன்மேலும் உணர்வில் பெருகி உயர்வதற்காகத்தான்), முதலிடத்தில் உணர்வு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, உணர்வு-மாளிகையின் வாயிற்படியிலேயே தங்கி வசிப்பதற்காக அல்ல.

அதே வேளையில், அனைத்துப் பழிகளையும், அவதூறுகளையும், ஒதுக்கிவிட்டுக் காணும்போது "நான்" எனும் அகந்தை உணர்வின் தனிச் சிறப்பான தன்மைக்கு ஈடாகவோ, மாற்றாகவோ,  இப்பிரபஞ்சத்தில் வேறெதுவுமில்லை! உணர்வற்ற, எங்கும் பரந்து சூழ்ந்திருக்கும் அந்தகாரப் பிரபஞ்சத்தில் முளைத்த உணர்வின் ஒளிப்புள்ளியே அகந்தை என்பதாகும். அது இல்லையெனில், நாமும் தவளைகளைப் போலத்தான் இருப்போம்! மேலும், நாம் "பேருணர்வு" , "பிரபஞ்ச உணர்வு", "பேரான்மா", "கடவுள்" என்றெல்லாம் பிரமாதமாகப் பேசலாம். ஆனால், நமக்கு எளிதில் எட்டக்கூடியதும், நெருக்கமானதும் அகந்தையுணர்வு மட்டுமே. அது இல்லாமல், ஒரு போதும் நாம் பேருணர்வு பற்றியும், கடவுள் பற்றியும் பேசவும் முடியாது. அதில் பேருணர்வை எட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை!

அதே நேரத்தில், அகந்தை உணர்வின் ஒரே பிரச்சினை, பெருங்குற்றம், அது முதலில் தன்னையும், அடுத்து தன்னைக் கடந்த பேருணர்வு நிலையையும் பிரதிநிதித்துவம் செய்வதை விடுத்து, தன்னை புறந்தள்ளி தனது கருவியான உடலை பிரதிநிதித்துவம் செய்திடும் தற்கொலைக்கு ஒப்பான செய்கையே ஆகும்.

ஏனெனில், எந்த உடலும் ஒரு போதும் "நான்" என்று சொல்வதில்லை. ஆனால், மனித அகந்தையோ  "நான்"  என்று மார்தட்டி அறிவிக்கும் வழியில் தலைகீழாக தனது உடலை முன்னிறுத்தி தன்னை பின்புலத்தில் மறைத்துக் கொள்கிறது. இந்த தவறான அடையாளம் தான் அகந்தையின் பெரும் மட்டுப்பாட்டிற்கும், அதன் அழிவிற்கும் காரணமாகும். இந்த அடையாள மாறாட்டம் தான் அதன் மரணத்திற்கும் ஏதுவாகிறது. உடலின் (தவிர்க்க இயலாத) மரணத்தை அகந்தை மனமானது தனது மரணமாகப் பாவித்துக்கொண்டு அல்லலுற்று தனது உணர்வை இழந்து உடலுடன் சேர்ந்து தானும் மாண்டுபோகிறது.

இந்த சாக்காட்டிலிருந்து விடுபடவேண்டுமெனில், அகந்தையானது "உண்மையில் 'தான்' யார்"? என்ற விசாரத்தை யாவற்றுக்கும் மேலாக முதலில் மேற்கொண்டாக வேண்டும்.

அதாவது, அகந்தையானது முதலில் தன்னை (தனது ஆற்றல்களையும், மிக முக்கியமாக தனது மட்டுப்பாடுகளையும்) புரிந்து கொள்ளவேண்டும். உடலுடன், தான் பிணைக்கப் பட்டிருப்பினும், தன்னளவில் தான் ஒரு தனிச்சுயமே என்கிற விசித்திரமான உண்மையை உணர்ந்திட வேண்டும்.

அகந்தை மனம், அல்லது அகந்தை உணர்வானது முதலில் தான் வேறு, தனது உடல் வேறு என்பதை தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டு விழிப்படைதல் வேண்டும். அகந்தை மனம் விழிப்படைய முனையாமல் மேற்சொன்ன வித்தியாசத்தை புரிந்து கொள்ள அதனால் இயலாது. அதாவது அவ்வாறு புரிந்து கொள்வதும் விழிப்படைதலும் ஒரு சேர நிகழ்ந்தாக வேண்டும். அதனையடுத்து அகந்தையுணர்வு தன்னைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபடல் வேண்டும்.

அகந்தை மனம் தான் பயணிக்கும் ஊர்தியான உடலின் உயிர்பிழைத்தலுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் ஒரு புறமிருக்க, அது பிரதானமாக தன்னைப் பற்றிய விசாரத்தில் ஆழ்ந்திட வேண்டும்.

அகந்தையானது வெறுமனே 'நான்', 'நான்' என்று மார் தட்டிக் கொண்டு புறத்தே வலம்வருவதை விடுத்து உண்மையில் "தான் யார்?" என வினவுவதன் வழியாகவும் அல்லது "உணர்வு என்றால் என்ன?" என்ற கேள்வியைக் கேட்பதன் வழியாகவும் ஏற்படுகிற பதிலற்ற "மௌனம்" அல்லது "வெறுமை" போன்றதொரு நிலை தான் உணர்வு ஆகும். அந்த மௌனத்தில், அமைதியில் நிலைத்து ஆழ்ந்திடல் வேண்டும். இவ்வாறு ஒருவர் தன்னுள் ஆழ்ந்திடும் போது அதனால் விளையக்கூடிய அற்புத அக-மாற்றங்களை, விவரிக்கவியலாத அனுகூலங்களை, தனது பிறவியின் இறுதிப் பயனை அடைந்திடுவார்.

அகந்தை மனம் அல்லது உணர்வானது தன்னில் மிக அடிப்படையானதொரு முழுமையான மாற்றத்திற்கு உட்படாமல் அது பேருணர்வை எட்டுவதோ, கடவுளை தரிசிப்பதோ, அல்லது 'இறைவனடி சேருவதோ' எதுவும் இயலாது. பேருணர்வு, பேரான்மா, அல்லது கடவுள் என்பது மனிதனின் அகந்தை உணர்வுக்கு புறத்தே வெளியே எங்கேயும் இல்லை. மாறாக, அகந்தை உணர்வு உட்பட்டாக வேண்டிய முழு மாற்றத்தினால் விளையும் மலர்ச்சியே பேருணர்வு அல்லது கடவுள் என்பதாகும். இந்த முழு-மாற்றம் என்பது, ஒரு கம்பளிப்புழுவானது அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாற்றமடைவதை ஒத்ததாகும்.

மனித உணர்வானது தன்னை முழுவதுமாக புறத்திற்குக் கொடுத்திடாமல், தன்முகமாக, அதாவது உள்முகமாகத் திரும்பி ஆழமடைவதன் வழியே மட்டுமே மேன்மேலும் உணர்வில் வளர்ந்து தனது உய்வை, மீட்சியை, முழுமையை எட்டவியலும்.

எந்த மனிதன் தன் உடலைக் கடந்து தன்னை ஒரு உணர்வாய் உணர்கிறானோ, அதன் தொடர்ச்சியாக அவ்வுணர்வின் உச்சத்திற்கு எழுகிறானோ, அம்மனிதனால் மட்டுமே அகம், புறம் எனும் பிளவை, பிரச்சினையைக் கடக்க இயலும்.

உண்மையில் அகம், புறம் என இரண்டு மெய்ம்மைகள் இல்லை. பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிராகவும் அவை இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போன்று ஒரே மெய்ம்மையின் இரண்டு பக்கங்கள் தான் அகமும் புறமும். அதே வேளையில், ஒரு நாணயத்தின் பக்கங்களைப் போல ஒன்றுக்கொன்று தம் முதுகைக் காட்டியபடி அவை அமைந்திருக்கவில்லை. மேலும், அவை எதிரெதிர் துருவங்களாக நித்திய காலத்திற்கும் அப்படியே தத்தம் நிலையில் நீடிப்பவையும் அல்ல. அவை வெவ்வேறு நிலைகளாகத் தோற்றம் தந்தாலும், உண்மையில் அவை ஒன்று இன்னொன்றாக  மாற்றமடைந்திடும் பரிணாமச்சுற்றில் அமைந்த நிலைகளாகும். புறம் புறமாகவும், அகம் அகமாகவும் என்றென்றும் அவை நிலைபெறுபவை அல்ல!

ஆதியும் அந்தமுமான ஒரே மெய்ம்மை தான், ஒரு விசேட மாற்றத்தினால் புறமாகி; அடுத்து புறம் பிரிந்து அதில் ஒரு பகுதி இன்னொரு பகுதியை உணர்வு கொள்ளும் அகமாகி; அடுத்து அகம் தன்னைத்தானே உணர்வு கொள்ளும் சுய- உணர்வாகி, சுய-உணர்வு  மேன்மேலும் தன்னுள் ஆழ்ந்து முடிவில் அகம், புறம் எனும் இரு நிலைகளிலிருந்தும் தன்னை முழுமையாக மீட்டுக் கொள்ளும் பேருணர்வாகி, தான் தொடங்கி வைத்த சுற்றை தானே முடித்து வைக்கிறது!

ஆதியும் அந்தமுமான மெய்ம்மையான பேருணர்வு என்பது அகம், புறம் இரண்டையும் கடந்த இரண்டுமல்லாத ஒருமையாகும்.

புறம் மற்றும் அகம் பற்றிய நமது வழக்கமான பார்வையை, புரிதலை உடனடியாக நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தியாக வேண்டும்.

நமக்குப் புறத்தே ஒரு உலகம், ஒரு மாபெரும் பிரபஞ்சம் உள்ளது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால், அது நமக்குப் புறம்பானதாக, தொடர்பற்றதாக உள்ளதா?

அதற்கும், நமக்கும் (அகத்திற்கும்) உள்ள தொடர்பு எத்தகையது?

நாம் புறத்தை (புறவுலகை) சார்ந்திருக்கிறோமா அல்லது புறம் நம்மைச் சார்ந்திருக்கிறதா? அல்லது, அகமும், புறமும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா?

அகம் என்பது எத்தகைய தன்மையிலானது? புறம் என்பது எத்தகைய தன்மையிலானது?

அகம், புறம் முறையே அவற்றின் பணி, பாத்திரம் என்ன?

அகம் அதன் சாரத்தில் எதைக்குறிக்கிறது? புறம் அதன் சாரத்தில் எதைக்குறிக்கிறது?  . . . . . என்பன போன்ற கேள்விகள் அனைத்திற்கும் நாம் பதில்களைக் கண்டுபிடிப்பது அவசியமாகும்.

சந்தேகத்திற்கு இடமின்றி புறம், புறவுலகம் என்பது உள்ளது. அதே போல, மறுக்கவியலாத வகையில் அகம் என்பதும் உள்ளது. எவ்வாறெனில், புறம் உள்ளதென நமக்கு அறிவிப்பது நமது அகமே! அகம் என்பது உணர்வே (Consciousness). ஆம், அகத்தின் சாரம் உணர்வே. அகத்தின் பணியும், பாத்திரமும் அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவற்றின் வழியாக முதலில் புறத்தையும், அடுத்து பிரதானமாக தன்னையும் அறிந்து கொள்வதே.

முதலில், புறத்தை ஏன் அறிந்து கொள்ளவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும் என்றால், புறத்தை முதலில் புரிந்து கொள்ளவில்லை எனில், அது நம்மை அகம் நோக்கிச் செல்லவிடாமல் நமது கவனத்தைச் சிதறடித்த வண்ணம் பெரும் தடையாக நிற்கும்! உண்மையைச் சொன்னால், புறமல்ல தடையாக நிற்பது, மாறாக நாம் தான் புறத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லாததுபோல் எதையெதையோ தேடிக்கொண்டு புறத்திலேயே சுற்றித் திரிந்து, தொலைந்து, முடிவில், புறத்திலேயே புதைந்து போகிறோம்!

புறத்தைப் பற்றியதொரு அரிய உண்மை என்னவெனில், அது புறத்திலேயே தங்கியிருக்கவில்லை! புறம் என்பது முற்றிலும் புறமாகவேயில்லை! ஏனெனில், புறமல்ல புறத்தின் உண்மையான முகம். அதன் ஒரு முனை புறத்தே புறமாக உள்ளது; அதனுடைய இன்னொரு முனை மிகவும் முனைப்பாக முன்னேறி, அகமாக மாறி, அகமுகமாகி வெகு காலம் ஆகிறது! நாம் தான் புறத்தின் புதிய முகமான அந்த அகமுகம்!  ஒன்றல்ல, இரண்டல்ல, 825 கோடி அகமுகங்கள்! ஆனால் நாமோ இன்னும் நம்மைப் பற்றிய உணர்வுக்கு வராமல், புறத்தையே நோக்கிக் கொண்டும், புறத்திலேயே சுற்றித் திரிந்து கொண்டும் இருக்கிறோம்.

புறத்தின் சாரமான தன்மை "பொருண்மை"யே (சடத் தன்மையே) ஆகும். ஆனால், சடத் தன்மை, பொருண்மை என்பது மிகத் திடமாகவும், நமது புலன்களுக்குத் தட்டுப் படுவதாகவும் தெரிந்தாலும் அது ஒரு "மாய வஸ்து "வே ஆகும். ஏனெனில், அது வேறொரு நிரந்தரமான, மாறாத, நிலைபேறுடைய மெய்ம்மையின் நிலைகுலைவான மாற்றத்தின் விளைவாக வெளிப்பட்ட நிலையாகும். அதனால்தான், பொருண்மை (சடத் தன்மை) தொடர்ந்து தன்னைக்கடந்து வளர்ந்து செல்வதாக, பரிணமிப்பதாக உள்ளது. பொருண்மையானது தனது சடத் தன்மையிலேயே நிலைத்திருக்கவில்லை; அது ஒரு கட்டத்தில் "உயிர்" எனும் தன்மைக்குள் பிரவேசித்தது! பிறகு ஒரு கட்டத்தில் மனிதனுள் "உணர்வு" எனும் மிக நுட்பமான பரிமாணத்திற்குள் பிரவேசித்துள்ளது. தொடர்ந்து அது உணர்வின் மிகச் செறிவான "முழு-உணர்வு" நிலையை, தனது பொருண்மையை முற்றிலும் கடந்த நிலையை, புத்தர் போன்ற மனிதர்கள் வழியாக அது பல தடவை எட்டியுள்ளது!

புறத்தின் ஒரே நாட்டம், உந்துதல், தேடல் என்பது தனது அசலான முகத்தை, முடிவான அர்த்தத்தை, தனது மூலத்தைத் தேடியடைவதே! துல்லியமாகச் சொன்னால், புறத்தின் ஒரே நாட்டம், இலக்கு, அகமுகமாதல், அகவயமாதல், அதாவது உணர்வுமயமாதலே!

புறத்தின் பணி, பாத்திரம், அதன் இருப்பிற்கான ஒரே நியாயம் அகமயமாதல், உணர்வைத் தேடிச் செல்லுதல் என்பதே தவிர, புறத்திற்கு புறத்தே வேறு வேலை, செயல் நோக்கம் எதுவுமில்லை! (ஆதி )அகத்தின் அதிரடியான "சுய- மாற்றம்" தான் புறம்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, "புறம்" என்பது உள்ளது. அது போல, மறுக்கவியலாத வகையில், "அகம்" என்பதும் உள்ளது. அதாவது புறம் உள்ளதென அறிவது, அறியப்படுத்துவது (நமது) அகமே, மனமே, உணர்வே!

அகத்தின் தொடக்கமும், முடிவும், அதன் சாரமும் உணர்வு தான். மனிதனைப் பொறுத்தவரை, மிகக் குறைவான உணர்வு நிலையான அகந்தை உணர்வில் தொடங்கி, முழு-நிறைவான உணர்வு நிலையை அடைவதொன்றே அகத்தின் ஒரே நாட்டம், தேடல், குறிக்கோள், இலக்கு யாவும். அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவைதான் உணர்வின் செயல்பாடுகள். ஆனால், அகத்தின் இந்த பிரதான நாட்டத்தை, மனிதர்கள் அனைவரின் அகமும் தவறாமல் பின்பற்றிச்செல்வதில்லை!

ஏராளமானோர், கிட்டத்தட்ட 99% பேர் தாம் ஒரு அக ஜீவி என்கிற உணர்வுக்கே வருவதில்லை. இதற்குக்காரணம், வாழ்க்கையுடன் அவர்கள் மிகவும் மேலோட்டமானதொரு தொடர்பில், உறவில் பொருந்தியிருப்பதே! மனித ஜீவிகள் தாம் உயிரோடிருப்பதை மட்டுமே உணர்கிறார்கள். ஆகவே தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு "உயிர் பிழைத்தல்" மட்டுமே "வாழ்க்கை" என்பதாக வாழ்ந்து செல்கிறார்கள்! தமது உடலின் உள்ளமைந்த இயல்பூக்கிகளான பசி, தாகம், பாலுணர்வு, . . . .  ஆகியவற்றின் மூலம் மட்டுமே அவர்கள் வாழ்க்கையுடன் தொடர்பு கொள்கிறார்கள். இன்னும் அவர்கள் உடலின் ஜீவியாக மட்டுமே விளங்குகிறார்கள்; மனதின் உணர்வின் ஜீவியாக எழவில்லை!

ஆனால், அசலான மனித வாழ்க்கை, உயிர்-பிழைத்தலை (Survival) உள்ளடக்கியதே எனினும், அதைக் கடந்தும் செல்கிறது. மனிதர்கள் தங்கள் கைகள், கால்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ, அவ்வாறே மனத்தையும் இன்னொரு உறுப்பாகவே பாவிக்கிறார்கள். ஆகையால், தங்கள் மனத்திற்கு, ( அதாவது தங்களுக்கு) அகப் பரிமாணம் என்ற ஒன்று உள்ளது என்பதை அவர்கள் அறிவதே இல்லை. மேலும், மனத்தின் ஆற்றல்களான சிந்தனை, அறிவு ஆகியவற்றை உயிர்- பிழைத்தலின் தளத்தில் பிரயோகிப்பதற்கு மேல் வேறு எது குறித்தும் அவர்கள் நாட்டம் கொள்வதில்லை, ஆராய்வதில்லை. அவர்களது மனம் இயல்பூக்கிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப் படுவதாகவும், செலுத்தப்படுவதாகவும் மட்டுமே நிரலமைப்பு (Programme)செய்யப்பட்டதாய் விளங்குகிறது. சில சமயங்களில், அவர்களது மனம் ஒரு தானியங்கி எந்திரம் போல இயங்கி, எண்ணிச் சலித்து, அவர்களை அலைக்கழிப்பதாய்  உள்ளது. மேலும், அவர்களது உயிர்- பிழைத்தல்  தேவைகளுக்கான பொருட்கள் யாவும், புறத்தே உலகில் இருப்பதால், உறங்கும் நேரம் தவிர, அவர்கள் எப்போதும் புறத்தை நோக்கியவாறே, கண்காணித்தவாறே உள்ளனர்.

மனித ஜீவிகளான நாம் புறத்தை தவிர்க்கவியலாது. மேலும், புறத்துடன் (சமூகம், இயற்கையுலகத்துடன்) முறையாக தகவமைதல் என்பதும் அவசியமே. ஆனால், ஒரு விடயம் "தவிர்க்கவியலாதது" என்பதற்கும், அவ்விடயத்திற்குள்ளேயே 'சிக்குண்டு உழல்வது' என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது!

உண்மையில், நம்முடைய உயிர்-பிழைத்தலின் (உடலின் தேவைகள், அவற்றிற்கான) பொருட்கள் தான், அவற்றுடன் நாம் கொள்ளும் அளவு மீறிய பிணைப்புத் தான் நம்மை புறத்துடன் கட்டிப்போடுவதாக உள்ளது. நமது சிந்தனையும், ஈடுபாடும் எப்போதும் புற விடயங்களையே, புற விவகாரங்களையே சுற்றிச் சுழல்வதாயுள்ளது.

இந்நிலைமைகளில், மனிதர்கள் தம் உடலையும், அதன் தேவைகளையும் தாண்டி தமது அகத்தையும் மனத்தையும் அதன் தேவைகளையும் உணர்வதில்லையாதலால் அவர்கள் தமது அகம் நோக்கி விழிப்பதில்லை, அகத்துடன் தகவமைதலின் முக்கியத்துவத்தையும் உணர்வதில்லை!

அகத்தின் சாரமான உணர்வின் செயல்பாடுகளான அறிதல், ஆய்தல், தெளிதல், புரிதல் ஆகியவற்றை புறத்தை நோக்கியதாய், புறம் பற்றியதாய் மட்டுமே குறுக்கிவிட முடியாது, கூடவும் கூடாது. ஏனெனில், உணர்வின் முதன்மையான குறிக்கோள், இலக்கு, லட்சியம், யாவும் அதனுடைய முழுமை பற்றியதே.  ஏனெனில், அகத்தின், உணர்வின் உய்வு, மீட்சி, அதன் முழுமையடைதலில் தான் அடங்கியுள்ளதே தவிர புறத்தில் அல்ல!

நாம் நமது உயிர்-பிழைத்தலுக்காக மட்டுமே புறத்தைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நமது உய்விற்காக நாம் பிரதானமாக நம் அகத்தையே சார்ந்திருக்க வேண்டும். அகம் என்பது குறுகியதாக, அதன் தொடக்க நிலையில் சிற்றுணர்வாக விளங்கிடும் வரையில் மட்டுமே அது "நமது அகம்" அல்லது நமது "சொந்த சுயம்", "நான்" எனும் அகந்தை என்பதாய் அமையும்.  அகத்தின் ஆழம் கூடக்கூட, உணர்வு வளர, வளர, அது "நான்" எனும் வரையறைகளைக் கடந்து செல்லச் செல்ல, அது நமது சொந்த அகமாகவோ, உணர்வாகவோ, சுயமாகவோ நீடிக்க இயலாது! காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை மட்டுமே அதன் அடையாளம் "காவிரி" என்பதாய் விளங்கும்; கடலில் கலந்த பிறகு, அது காவிரி அல்ல 'கடல்' என்பது தான் அதன் புதிய அடையாளம்.

தன்னை உண்மையிலேயே அறிகிற, உணருகிற ஒரு மனிதனுக்கு அன்னியமாக, புறத்தே யாதொரு பிரபஞ்சமும் இல்லை! பிரபஞ்சம் என்பது அவனைப் பொறுத்தவரை அவனது 'முதுகுப்பகுதி' யாக மாறிவிடுகிறது. பிறரைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் என்பது அவர்களுக்கு ஒரு பெரும் சிறையே!

தன்னையறிதல், தன்னை உணர்தல் என்பது பிரபஞ்சத்தையும், அனைத்தையும் உள்ளடக்கியதொரு முழுமையாக தன்னை உணர்வதே!

இத்தகைய பார்வையும், புரிதலும் பலருக்கு அறிவு கலங்கிய பைத்திய நிலையாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் தோன்றலாம்.

ஆனால், "அணுத்துகள்களின் தொகுப்பே மனிதனும் யாவும்!""உலகம், பிரபஞ்சம் என்பது பொருண்மையின் (சடப் பொருளின்) மாபெரும் கட்டமைப்பே, வெளிப்பாடே!". "மனிதன் என்பவன் உயர் வளர்ச்சியடைந்த ஒரு விலங்கே!". "மனிதனது உணர்வு என்பது அவனது மூளையில் நிகழ்ந்திடும் மின்-ரசாயண வினையின் ஒரு விளைவே!"  என்றெல்லாம் காணும் தங்களின் மூளையின் பகுத்தறியும் திறனையும், இன்னும் காரண காரியத் தொடர்புபடுத்தி, அறிகிற கூர்மையும் கொண்ட பகுத்தறிவுவாதிகள், பொருள்முதல்வாதிகள், விஞ்ஞான வாதிகள் யாவரும் உண்மையில் தங்கள் வாதங்களை, புரிதல்களை  தங்கள் கால் கட்டைவிரல்கள் மூலம் தரையைக் கீறிக் கிளரி அகழ்ந்தெடுப்பதில்லை! மாறாக, தங்களது மூளையில் வெளிப்படும் - சோதனைக் குழாயில் இட்டு பரிசோதிக்க இயலாத; இருந்தும் இல்லாதது போலத் தெரிகிற, விளங்கியும் விளங்காப் புதிராகத் திகழும் அவர்களது சிற்றுணர்வின் உதவியினால் எட்டப்பட்ட தவறான, மட்டுப்பாடான கருத்துக்களே!

இந்நிலையில், தங்களது பகுத்தறிவுப் பூர்வமான கூற்றுக்களே, கண்டுபிடிப்புக்களே உண்மையானது, சரியானது என்று நம்பிக்கொண்டிருப்பதற்கும், மற்றவர்களையும் நம்பச் சொல்வதற்கும் யாதொரு அடிப்படையும் இல்லை!

பௌதீகச் சடப் பொருளை "கடவுளாக" வும், "பரம்பொருளாக"வும் பாவித்திடும் இவர்களுக்கு உணர்வின் மகத்துவத்தைப் புரியவைப்பது இயலாத காரியமே! உலகம், பிரபஞ்சம் இருக்கலாம், ஆனால், உணர்வு இல்லையேல், எதுவும் இல்லை! உலகம் இருக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியது - எப்போதெனில், அதை ஆச்சரியத்துடன் நோக்குகிற மனித உணர்வு  இருக்கும்போது தான்! அதைவிட ஆச்சரியமானது ஒரு ஜீவி "நான் இருக்கிறேன்!" என்று தன்னைத்தானே உணர்ந்தறியும் போதுதான் நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக "தானே இப்பிரபஞ்சமும் எல்லாமும்!" என்று நேரடியாக உணர்ந்தறிவதே இறுதி ஆச்சரியமும், அற்புதமும்! (இதையெல்லாம் சொல்லக் கேட்பதும், வாசித்தறிவதும் அற்புதத்தின் தொடக்கம் ஆகும்!).


மா.கணேசன்/ நெய்வேலி
Conceived earlier and completed on 13.01.2016 and Uploaded on 05-10-2024.
*
////////\\\\\\\\////////\\\\\\\////////\\\\\\\\////////\\\\\\\////////\\\\\\\\////////\\

நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...