வாழ்வு, சாவு இரண்டையும் வித்தியாசப்படுத்துவது உணர்வு!
உணர்வில்லையேல், வாழ்வும் இல்லை! சாவும் இல்லை!
உணர்வு வாழ்வையும், உணர்வின்மை சாவையும் குறிக்கிறது!
உணர்வும், உணர்வின்மையும், இரு எதிரெதிர் துருவங்கள் எனில்,
மூன்றாவது துருவம் ஒன்றும் உள்ளது; அதுதான் முழு-உணர்வு!
வாழ்வின் முடிவும் முழுமையும் பெரு-வாழ்வே தவிர சாவு அல்ல!
<•>
செடிகொடிகள், புழு பூச்சிகள், பறவைகள், பெருவிலங்குகள் இவை எதுவும்
"தாம் இருக்கிறோம்!" என்பதை உணர்வதில்லை! ஆகவே "மரண-பயம்" என்
பது அவற்றிற்கு இல்லை! ஆனால், "தாம் இருக்கிறோம்!" என்பதை உணரும்
மனித ஜீவிகளாகிய நாமோ தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கின்றோம்
மரண-பயத்தில் !
சாக்ரட்டீஸ், கி.மு 399-ல், தன் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த போது,
"தத்துவத்தை முறையாகப் பயிற்சி செய்து வருபவர்களின் ஒரு குறிக்கோள்
என்னவென்றால், இறப்புக்கும், இறப்பதற்காகவும் பயிற்சிசெய்தலே" என அறி
வித்ததாக பிளேட்டோ சொல்கிறார்.
அதற்கு 2000 வருடத்திற்குப்பிறகு, பிரெஞ்சு மறுமலர்ச்சி சிந்தனையாளரான
மாண்டேய்ன் (Michel de Montaigne) கூறியதென்னவென்றால், "எல்லா
ஞானமும், பகுத்தறிவுச் சிந்தனைகளும் முடிவில் இறப்பதற்கு அஞ்சாமல்
இருக்கும்படி நமக்குப் போதிப்பதற்கே" என்றார்.
ஒரு வகையில், அஞ்சாமல் மரணத்தைச் சந்திக்கும் தீரம்தான் தத்துவஞானிக்
கான அளவுகோல் எனச் சிலர் கருதினாலும், பல மகத்தான தத்துவஞானிகள்
என்று குறிப்பிடப்படுபவர்களின் தத்துவம் என்பது மரணம் குறித்த எதிர்வினை
களே என்றமையும் பட்சத்தில், அத்தத்துவச் சிந்தனையாளர்களின் எல்லாக்
கூற்றுகளையும் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்றுதான்
சொல்லத் தோன்றுகிறது! ஏனெனில், மரணத்தை மையப்படுத்துகிற, அல்லது
பிரதானப்படுத்துகிற எவ்வொரு தத்துவமும் குறைபாடுடையதே ஆகும்! ஏனெ
னில், 'மரணம்' என்பது இறுதியானதுமல்ல, ஒரு அடைவிடமும் (இலக்கும்)
அல்ல! (Neither death is something final, nor it is a desti
nation!)
அதே வேளையில், சாதாரணர்களின் மரணத்திற்கும், தத்துவச்சிந்தனையாளர்
களின் மரணத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது! எவ்வாறெனில், தத்துவ
வாதிகள் வாழ்ந்ததற்கான தடயமாக அவர்களது தத்துவங்கள் திகழ்கின்றன!
அதாவது, 2400 வருடங்களுக்குப் பிறகும் நாம் சாக்ரட்டீஸ் பற்றிப்பேசுகிறோம்,
ஆனால், அவருடைய அண்டைவீட்டுக்காரரைப் பற்றியோ, அவர் காலத்தில்
வாழ்ந்த பிற எண்ணற்றவர்களைப் பற்றியோ நாம் பேசுவது இல்லை! மேலும்,
சாக்ரட்டீஸ் பற்றிப் பேசும் போது அவரது சீடர் பிளேட்டோவையும், பிளேட்
டோவின் சீடரான அரிஸ்ட்டாட்டில் பற்றியும் பேசுகிறோம்! அதேவேளையில்,
அரிஸ்ட்டாட்டிலின் சீடரான அலெக்ஸாண்டர் பற்றிக் குறிப்பிட மட்டுமே
செய்கிறோமே தவிர அதிகம் பேசுவதில்லை! ஏனெனில், அலெக்ஸாண்டரிடம்
குறிப்பிடும் படியான தத்துவப் பங்களிப்பு எதுவும் இல்லை!
ஆக, தத்துவச் சிந்தனையாளர்களின் மரணம் சாதாரண வகையைச் சேர்ந்த
தல்ல; அவை தத்துவப்பூர்வமான மரணங்களாகும்! அதாவது, அவர்களது
வாழ்க்கையும் தத்துவப்பூர்வமானவையே; அவர்கள் சாதாரணர்களைப்போல,
ஏதோ பிறந்தோம், உயிர்-வாழ்ந்தோம், செத்தோம் என்றில்லாமல், வாழ்க்கை
யைப்புரிந்து கொள்வதையே வாழ்க்கையாக வாழ்ந்தனர் எனலாம்.
மரணம் குறித்த கிரேக்கத் தத்துவவாதி எபிக்யூரஸ்-ன் புகழ்பெற்ற ஒரு கூற்று,
"நாம் உயிரோடிருக்கும் வரை மரணம் என்பது நம்முடன் இல்லை; ஆனால்,
மரணம் வரும்போது, நாம் இருப்பதில்லை." என்றார். இதிலிருந்து எபிக்யூரஸ்
எடுக்கும் முடிவு என்னவென்றால், "மரணம் என்பது வாழ்பவர்களுக்கும், இறந்
தவர்களுக்கும் ஒரு பொருட்டு அல்ல என்பதே; அதாவது வாழ்பவருக்கு
மரணம் இல்லை, இறந்தவர் தற்போது இருப்பதில்லை!"
ஆனால், எபிக்யூரஸ்-ன் இக்கூற்று, குறிப்பாக, " நாம் உயிரோடிருக்கையில்
மரணம் என்பது நம்முடன் இல்லை" என்பது மேலோட்டமானதாகும்! ஏனெ
னில்,மரணம் என்பது வாழ்வின் இடையில் எப்போதோ,அல்லது இறுதியிலோ
சம்பவிக்கின்ற ஒரு 'தீமை' அல்ல! மாறாக, அது உயிர்-இருப்பின், வாழ்வின்
பின்புலத்தில் இடைவிடாது செயல்படும் ஒரு எதிர்-விசை (Counter-Force)
போன்றதாகும்! ஆக,நம் இருப்பின்மீது மரணத்தின் தாக்கம் என்பது எப்போதும்
இருந்துவரும் ஒன்றாகும்!
ஏனெனில், இருப்பு என்பது முதலிடத்தில், இன்மைக்கு (Non-Existence)
எதிராகக் கட்டியெழுப்பட்ட ஒன்றாகும்! ஆகவே, இறப்பு என்பது எப்போது
வேண்டுமானாலும் நிகழலாம். அதாவது, சற்று வழுக்கினாலும் இருப்பானது
(Existence),இன்மையில்(Non-Existence)தான் விழவேண்டியிருக்கும்!
மரணம் என்பது முடிவிற்கு வருதலைக் குறிக்கிறது; ஆனால், மனிதனில்
உண்மையில் எது முடிவிற்கு வருகிறது என்பது தான் முக்கியமான கேள்வி
யாகும்! ஆம், உயிரோடிருத்தல் என்பதும், உடலும், உடலுடன் தன்னை
அடையாளப்படுத்திக்கொண்ட மனமும், மனம் தொடர்புபடுத்திக்கொண்டுள்ள
அனைத்து விஷயங்களும், அம்சங்களும், பிணைப்புகளும், புற உலகுடனான
பந்தங்களும் தான் முடிவிற்கு வருகின்றன! சுருக்கமாகச் சொன்னால், உயி
ரோடு இருத்தல் என்பதைச் சார்ந்துள்ள உடலும், மனமும் தான் முடிவிற்கு
வருகின்றனவே தவிர, உணர்வு முடிவிற்கு வருவதில்லை! ஆம், உணர்வுக்கு
மரணமில்லை!
அதாவது, உண்மையில் 'தான்' யார் அல்லது, 'எத்தகைய நிஜம்' என்பதை
உணர்ந்தறிந்த மனிதனுக்கு மரணம் குறித்து அஞ்சவேண்டிய தேவை இராது!
எனினும், உணர்வாகிய மனிதன் உடலில் தங்கி வாழும் வரை, மரண பயத்தி
லிருந்து முற்றிலுமாக விடுபடுவதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல!
அதற்கு அதீதமான பக்குவம், அதாவது சாதுரியம் வேண்டும்!அதாவது, மரண-
பயத்தையும் ஒருவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்
வேண்டும்!
பயம், அது எவ்வகைப் பயம் என்றாலும், மறைமுகமாக ( நனவிலி ரீதியாக )
அது மரண-பயத்தையே குறிக்கிறது, அடிப்படையாகக்கொண்டது என்று சொல்
லப்பட்டாலும், பயம் என்பது முற்றிலும் எதிர்-மறையான ஒரு உணர்வு என்று
சொல்லிவிட முடியாது! பயம் என்பது பிரதானமாக ஒரு கவன - உணர்வே
ஆகும்; அதை நாம், எச்சரிக்கை உணர்வு, விழிப்புணர்வு, முற்காப்புணர்வு என்
றெல்லாம் விரித்துக் காணலாம்! 'பயம்' என்பது உணவுக்கு உப்பு போல அளவு
டன் இருப்பது அவசியமாகும்! பயம் என்பதில்லையெனில், எவ்வொரு உயிர்-
ஜீவியாலும் இப்பூமியில் உயிர் வாழவியலாது! அதாவது தன்னைக் காத்துக்
கொள்ளும் முனைப்பின் உணர்வு தான் பயம்! அது உயிர் ஜீவியின்
அடிப்படையிலேயே பின்னப்பட்டதொரு இழை போன்றதாகும்!
அதேநேரத்தில், மரணம் என்பது எதிர் கொண்டாகவேண்டிய, அவசியம் புரிந்து
கொண்டாகவேண்டிய, புரிந்து கொண்டு கடக்கப்படவேண்டிய ஒரு நிஜமாகும்!
ஏனெனில், உண்மையில் இறப்பது நாமல்ல; நமது உடல் தான், அதன் காலம்
முடிந்ததும் இறக்கிறது! மனித உடலானது நோய், மூப்பு ஆகியவற்றுக்கு உள்
ளாகி இறுதியில் இறப்பில்முடிவது என்பது உறுதியாகும்.ஆக ஒருவன் இவற்
றையெல்லாம் கணக்கில் கொண்டு உடலின் இறப்பை உணர்வுபூர்வமாகச்
சந்திக்கத் தயாராகிட வேண்டியது அவசியமாகும். இல்லாவிடில், உடலின்
இறப்புடன் இணைந்து உணர்வாகிய தானும் மடிய நேரிடும்! மேலும், இறப்பது
உடல் தானே நமக்கென்ன என்று எவரும் வாளாவிருக்கமுடியாது; ஏனெனில்,
உணர்வும், உடலும் வேறாயினும், உடலைச் சார்ந்துதான் உணர்வு வாழ்கிறது!
மிகச்சரியாகச்சொன்னால், உணர்வைத் தாங்குவதற்கான உகந்த பொறியமைப்
பாகத்தான் பரிணாமக் கிரமத்தில் உயிருள்ள உடல்ஜீவி முதலில் தோன்றியது!
மேலும், முறையான விழிப்பு பெறாத எண்ணற்ற மனிதர்கள் உடலுடன்
கொண்டுவிட்ட ஐக்கியத்தின் விளைவாக உடலின் இறப்பு அவர்களுக்குக்
கொடும் துன்பகரமான ஒருஅனுபவம் மட்டுமல்லாமல்,அழிவுகரமானதுமாகும்!
ஆனால், மரணத்தைப் புரிந்து கொள்வது, உடல் முடிவுக்கு வருவதை
உணர்வுப்பூர்வமாகச் சந்திப்பது என்றால் என்ன? ஆம், மனிதன் தன் அகந்தை
உணர்வைக் கடந்து வளராத வரையில், அவனால் மரணத்தை, அதாவது
தொடர்ந்து உடலில் இருந்தவாறே தன் உணர்வு- நிலை வாழ்க்கையைத்
தொடர முடியாத ஒரு நிலைமையைச் சந்திப்பதென்பது இயலாது! மேலும்,
மரணத்தை உணர்வுப் பூர்வமாகச் சந்திப்பது என்பது வெறும் அறிவுப்பூர்வ
மானதொரு விஷயமோ அல்லது கோட்பாட்டு ரீதியானதொரு விஷயமோ
அல்ல! ஆனால், அது பற்றிய விளக்கங்கள் யாவும் கோட்பாட்டு ரீதியான
விஷயங்களாகத்தான் பிறருக்குத் தோன்றும்! உடலின் மரணத்தை உணர்வுப்
பூர்வமாகச் சந்திப்பது என்பது உடலின் மரணத்தினூடே சென்று மரணத்தைக்
கடப்பது என்பதே! அதாவது, மரணத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே உபாயம்
மரணத்துடன் வாழ்வதே!
முக்கியமாக, ஒருவன் தன் உடலில் தங்கி வாழும் காலத்திலேயே உடலில்
இருந்து விலகி நின்று உணர்வாய் வாழும் வாழ்க்கையுடன் பரிச்சயம் பெற்
றிருத்தல் என்பது ஒரு அவசியமான முன்-தேவையாகும்! அதற்கு, தத்துவச்
சிந்தனைப்பயிற்சி என்பது ஒரு சிறந்த வழியாகும். பொதுவாக, காலத்தில்
தொடர்வதையே, பயணிப்பதையே அதாவது எவ்வளவு காலம் உயிரோடு
இருக்கிறோம் என்பதையே எல்லோரும் சிறப்பான வாழ்க்கை எனக் கருதிக்
கொண்டிருக்கிறோம்! ஆனால், இவ்விஷயத்தில், கடல்ஆமைகள் மனிதனை
மிகச் சுலபமாகத் தோற்கடித்துவிடும்; அவை சாதாரணமாக 350 அல்லது
400 வருடங்கள் உயிர்-வாழ்கின்றன! ஆனால், நீண்ட காலம் உயிர்வாழ்வதில்
யாதொரு அர்த்தமும் அடங்கியிருக்கவில்லை! மாறாக, எவ்வளவு உணர்-
வோடிருக்கிறோம் என்பதில்தான் வாழ்வின் அர்த்தமும்,முழுமையும்,இலக்கும்
யாவும் அடங்கியுள்ளன!
மேலும், 'காலம்' என்பது தொடக்கப்புள்ளியும் முடிவுப்புள்ளியும் அற்ற ஒரு
வட்டம் போன்றது; உண்மையில், காலம் என்பது காலத்தில் தோன்றிட
வில்லை! மாறாக, காலமில்லாப்புள்ளியில், காலாதீதத்திலிருந்து வெளிப்
பட்ட ஒரு சிறு குமிழியே காலம் என்பதாகும்; அக்குமிழி பெரிதாகி வெளி
யாக விரிந்து, கால-வெளி உலகம் என்பதாயிற்று! ஆக கால ஓட்டத்துடன்
சென்று ஒரு போதும் காலம் மொத்தத்தையும் வசப்படுத்த முடியாது!
மாறாக, காலத்தைக் கடப்பது, அல்லது காலத்தை முடிவிற்குக் கொண்டு
வருவதன் வழியாக மட்டுமே காலத்தை வெற்றி கொள்ளமுடியும்; அதற்கு,
கால ஓட்டத்துடன் பயணிப்பதை நிறுத்தி "இப்போதில்" நிலைக்கவேண்டும்!
கால ஓட்டத்துடன் பயணிப்பதை நிறுத்துவதுடன், வரலாற்று ஓட்டத்துடன்
இணைந்து செல்வதையும்; இன்னும் சமூகத்தின் எவ்வகைப் பந்தயத்திலும்
கலந்து கொள்வதையும் ஒருவர் நிறுத்திடவேண்டும்!
'இப்போதில் வாழ்வது', 'கால - ஓட்டத்தை நிறுத்துவது', 'எண்ணங்களைக்
காலிசெய்வது', 'தியானம்' போன்ற யாவும் உணர்வில் ஆழ்தல் என்பதையே
குறிக்கின்றன! இவற்றில் "உணர்வில் ஆழ்தல்" என்பதைத்தவிர பிறவற்றை
எவரும் பயிற்சியாக மேற்கொள்ளமுடியும்; ஆனால், அவற்றின் மூலமாக
எவரும் உணர்வில் ஆழ்ந்திடவோ, உணர்வில் நிலைத்திடவோ முடியாது!
ஏனெனில், உணர்வுக்கு வருதல், விழிப்படைதல், உணர்வோடிருத்தல் ஆகிய
வற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் அடையவியலாது! மேலும் உணர்வுக்கு
வருதல் என்பது எவ்வாறு என்று எவரும் எவருக்கும் கற்றுத்தரவும் இயலாது!
இதை மிக எளிதாகச் சொல்லவேண்டுமானால், ஒருவன் தனது இருப்பை,
"தான் இருக்கிறேன்!" என்றுணரும் உணர்வதைத்தாண்டி, சற்றும் அகலாமல்
அதிலேயே நிலைப்பதையே உணர்வில் ஆழ்தல் என்று குறிப்பிடப்படுகிறது!
மேலும், ஒருவன் தனது இருப்பை உணர்வதற்காக மீண்டும் தன் குழந்தைப்
பருவத்திற்குச் செல்லத்தேவையில்லை! மாறாக, எந்த நேரத்திலும் உணர
லாம், எல்லா நேரத்திலும் உணரலாம்! ஏன், இப்போதே இக்கணத்திலேயே
ஒருவன் தன்னை, தனதிருப்பை, உணரத் தொடங்கலாம், அவ்வுணர்வில்
ஆழ்ந்திடலாம்! உண்மையில், எப்போது ஒருவன் தன்னை உணரத்தொடங்கு
கிறானோ அக்கணத்தில்தான் அவன் உண்மையில் பிறக்கிறான்! ஒருவன்
எவ்வளவு ஆழமாகவும், முழுமையாகவும் தனதிருப்பை உணர்கிறானோ,
அதாவது, உணர்வில் ஆழ்கிறானோ, அவ்வளவிற்கு அவன் தன்னில் ஆழ
மடைகிறான், முழுமையடைகிறான்!
உண்மையில், வாழ்வாயினும், சாவாயினும், இவ்விரண்டையும் கடந்த வேறு
வகை நிஜமாயினும், யாவற்றையும் உணர்வின் சொற்களில் மட்டுமே புரிந்து
கொள்ளமுடியும்! உணர்வே அனைத்தின் அளவீடு (Measure) ஆகும்! சற்று
எண்ணிப் பாருங்கள், நாம் மட்டும் 'சுய-உணர்வற்ற' தவளைகளாயிருந்தால்,
நமக்கு வாழ்வும் புரியாது, சாவும் தெரியாது! உயிரோடு இருக்கும்வரை புழு
பூச்சிகளை உண்டு, இனப்பெருக்கம் செய்து, பாம்புகளைக் கண்டு பதுங்கி,
மரணம் வந்ததும் எவ்வித புகாரும், புலம்பலும் இன்றி, என்ன ஏதென்று இனம்
புரியாத திகைப்புடன் மாண்டுபோவோம்!
ஆனால், நாம் சுய-உணர்வுள்ள ஜீவிகளாயுள்ளோம் என்பது தான் நம்மைப்
பிற விலங்குஜீவிகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அதே உணர்வு
தான் நம்முடைய வாழ்க்கையையும் பிற ஜீவிகளுடைய வாழ்க்கையிலிருந்
தும் வேறுபடச் செய்கிறது! முக்கியமாக, நாம் விலங்கு ஜீவிகளைப்போல
வெறுமனே உயிர் - பிழைத்திருப்பதற்காகத் தோன்றியவர்களல்ல; மேலும்,
உணர்வு என்பது உயிரோடிருப்பதை உணர்வுகொண்டு செவ்வனே நடத்திச்
செல்வதற்கான ஒரு கருவியும் அல்ல! மாறாக, நாம் உணர்வில் மேன்மேலும்
வளர்ந்து உயர்ந்து உணர்வின் முழுமையை அடைவதற்காகத்தோன்றியவர்கள்!
உணர்வின் முழுமையை நாம் ஏன் அடையவேண்டும்? நாம் தற்போது
அடைந்துள்ள இந்த அகந்தை-உணர்வு போதாதா? போதாது, ஏனெனில்
நாம் அடைந்துள்ள அகந்தை-உணர்வு என்பது உணர்வின் ஒரு தொடக்க
நிலை மட்டுமே! மேலும், நாம் வேறு, அகந்தை எனும் உணர்வு வேறு அல்ல;
பேச்சுவழக்கில் நாம் 'உணர்வுள்ளவர்கள்' என்றும், நமக்குக் கைகள், கால்கள்
உள்ளதைப்போல உணர்வும் உள்ளது என்றும் கூறுகிறோமே தவிர உண்மை
யில் அகந்தை எனும் சிற்றுணர்வு தான் நாம்! ஆம், உணர்வு தான் மனிதன்!
இன்னும் உணர்வுதான் வாழ்க்கை என்பதும்! ஆக, சிற்றுணர்வாக, அல்லது
அரையுணர்வாகத் தோன்றிய நாம் ஒவ்வொருவரும் முழு-உணர்வாய் மலர்
வது அதிமுக்கியமானதாகும்! ஏனெனில், உணர்வின் முழுமை அல்லது முழு-
உணர்வு தான் முழுமையான இருப்பும், வாழ்க்கையும் ஆகும்!
மேலும், முழு - உணர்வின் பரிமாணம் சாதாரண மனித உணர்விலிருந்து,
அதாவது, அகந்தை - உணர்விலிருந்து முற்றிலும் வேறானது! அது 'ஆக்கம்,
அழிவு', 'தொடக்கம், முடிவு', 'இயக்கம், இயக்கமின்மை', 'மாற்றம், மரணம்'
ஆகியவைகளைக் கடந்தது! அது கால-வெளி உலகைக்கடந்தது, ஆகவே அது
நித்தியமானது! அதுவே ஒருமையும் முழுமையுமான மெய்ம்மை! ஒருவன்
முழு-உணர்வை ஒரு முறை, ஒரு கணம் மட்டுமே தொட்டாலும் போதும்;
உணர்வாகிய அவனுக்கு மரணம் என்பதில்லை! இது வெறும் நப்பாசையோ,
அல்லது, நித்திய வாழ்வு குறித்த ஏக்கத்தின் கோட்பாடோ அல்ல! மாறாக,
புத்தர்கள், சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் ஞானிகள் அனுபவபூர்வமாக உணர்ந்
தடைந்த உண்மையாகும்!
ஆம், "மனிதனால், தன் உடலை மரணத்திடமிருந்து காப்பாற்ற முடியாது;
ஆனால்,அவனால், மரணத்திடமிருந்து தன்னைக்காப்பாற்றிக் கொள்ளமுடியும்!"
அதே நேரத்தில், மனிதன் எப்போது தன்னுடன் தன் உடலையும் சேர்த்துக்
கரையேற்ற முயற்சிக்கிறானோ, அதாவது, தன்னைத் தன் உடலுடன் இணத்து
அடையாளப்படுத்திக்கொள்கிறானோ அப்போது யாவும் சிக்கலாகி விடுகின்றன!
ஏனெனில், மனிதன் என்பவன் மிகத்துல்லியமாக தன் உடலிலிருந்து வேறான
வன்! அதாவது, உண்மையில் "தான் யார்?" என்பதை உணர்ந்தறிவதன் மூலம்
தான் மரணத்தின் புதிர் முடிச்சு அவிழ்க்கப்பட இயலும்!
மரணம் என்பது 'அழிவின் கதவு' அல்ல! மாறாக, உண்மையில் அது புதிய
தொரு பிறப்பு அல்லது வேறொரு பரிமாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான கதவு
ஆகும்! அக்கதவின் வழியாகச் செல்வதற்கு ஒவ்வொருவரும் தம்மை உரிய
முறையில் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்! அதற்கு ஒருவன் முதலில்
"தான் ஒரு உணர்வுதான்!" எனும் உண்மைக்கு விழித்தாக வேண்டும்! "தான்
ஒரு உணர்வு தான்!" என்பதை உணர்ந்த ஒருவனுக்கு மரணமில்லை! ஏனெ
னில், உணர்வுதான் மனிதவாழ்வின் தொடக்கமும் முடிவும் ஆகும்! 'அகந்தை-
உணர்வு' மனிதனின், மற்றும் அவனது வாழ்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது
என்றால், 'முழு-உணர்வு' என்பது மனிதனின், மற்றும் அவனது வாழ்வின்
முழுமையைக் குறிக்கிறது!
"நீங்கள் பிறந்த அந்த மணி நேரத்திலிருந்தே நீங்கள் இறக்கத்தொடங்கிவிடு
கிறீர்கள்!" எனவும், "பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயுள்ள காலப்பகுதி
தான் வாழ்க்கை!" எனவும் சொல்லப்படுவது மேலோட்டமான கூற்றுக்களே
தவிர அவை இறுதியான உண்மைகள் அல்ல! மாறாக,அகந்தை-உணர்வாக
எழும் மனிதன், தனது இருப்பை உணரத்தொடங்கியதிலிருந்து அவன் மேன்
மேலும் உணர்வில் வளர வேண்டும் என்பது உணர்வுப் பரிணாமத்தின் விதி
ஆகும். உணர்வில் வளர்வது என்பது, வாழ்வில் உயர்வது, பெருகுவது என்
பதைக் குறிப்பதேயாகும்!
பரிணாமத்தில், உயிருள்ள உடலின் சேவை மகத்தானது என்பது பலருக்குத்
தெரியாது! உணர்வாக நீங்கள் பிறந்ததிலிருந்து, உணர்வில் நீங்கள் வளர்கிறீர்
களோ இல்லையோ உங்கள் உடல் வளர்ந்து பல பருவக் கட்டங்களைக்கடந்து
உழைத்துத் தேய்ந்து நோயுற்று நலிந்து முடிவில் இடுகாட்டுக்குக் கொண்டு
சேர்க்கப்படுகிறது! உடலின் வளர்ச்சி நிலைகளில் பங்கெடுத்து வாழும் நீங்கள்
உங்கள் உள்ளத்தில், உணர்வில் வளர்வதேயில்லை! ஒருவன் தன் உடலின்
வளர்ச்சிக்கு இணையாக உணர்விலும் வளர்வானெனில், அதாவது, குழந்தைப்
பருவம், வாலிபப்பருவம், நன்கு வளர்ந்த மனிதப்பருவம், வயோதிகப்பருவம்
ஆகியவற்றுக்கு இணையாக வளர்வானெனில், உடல் நோயுற்று, முதுமை
யடைந்து இறப்பைச் சந்திக்கும் தறுவாயில், உணர்வில் முதிர்ந்த மனிதன்
தன் உடலின் இறப்பை உணர்வுப்பூர்வமாகச் சந்திக்கும் பக்குவத்தைப் பெறு
வதோடு, தன் (உடலை இழந்தாலும்) உணர்வின் முழுமையில் அடைக்கலம்
புகுவான்!
அதாவது, நாம் ஒரு விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம், திடீரென
நடுவானில் அவ்விமானம் பழுதுபட்டுவிட்டது தெரிந்து பத்திரமாக அதில்
இருந்து "பாராச்சூட்" மூலமாகத் தப்பிப்பதைப்போல; உடல் மரணத்திற்குள்ளா
கும் தருணத்தில், உணர்வில் தரிப்பதன் மூலம் உடலிலிருந்து உணர்வின்
தளத்திற்குத் தாவிச்செல்வதன் வழியாக ஒவ்வொருவரும் உடலின் மரணத்தி
லிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்! ஆனால், ஏற்கனவே குறிப்
பிட்டவாறு உடலுடன் கொண்ட பிணைப்பிலிருந்து, அடையாளப்படுத்துதலி
லிருந்து தன்னைப் பிரித்தறிவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!
மேலும், மரணத்தின் போது, உணர்வு ஜீவியாகிய மனிதனிடமிருந்து உயிர்
ஜீவியான மனிதன் பிரிக்கப்படுவது என்பது வலி நிறைந்த ஒரு நிகழ்வே என
லாம்! ஆனால், உடலை ஆதாரமாகக்கொண்ட உயிர்-ஜீவியின் சேவைக்காலம்
முடிவுறுவது தவிர்க்கவியலாத தாகையால், ஒவ்வொருவரும் தமது வாழ்-
காலத்திற்குள் முழு-உணர்வடைவது என்பது துரிதமாகச் சாதிக்கப்பட்டாக
வேண்டும்!
உண்மையில், தத்துவம் என்பது, ஒரு சில தத்துவச் சிந்தனையாளர்கள்
குறிப்பிட்டபடி, மரணத்திற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதோ;
அல்லது, மரணம் குறித்து பயப்படாமல் இருப்பதற்கான பயிற்சியோ; அல்லது,
மரணத்தை மறுப்பதோ; அல்லது, துணிவுடன் மரணத்தை ஏற்றுக்கொள்வதோ
அல்ல! மாறாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் புனிதச்செயல்பாட்டின் ஒரு
முக்கிய பகுதியாக வாழ்வில் மரணத்தின் இடம், பொருத்தப்பாடு, மற்றும்
உணர்த்துகோள்களையும் புரிந்துகொண்டு மரணத்தைக்கடந்த பெரு-வாழ்வைச்
சென்றடைவதற்கான ஒரு உபாயமே தத்துவம் ஆகும்! ஏனெனில், மனிதஜீவி
களாகிய நாம் வாழ்வின் குழந்தைகள் ஆவோம்! சாவிற்காக நேர்ந்துவிடப்பட்ட
'காவு - விலங்குகள்' அல்ல நாம்! அதாவது, வாழ்வின் தளத்தில் தோன்றிய
நாம் சாவில் முடிந்துபோவது என்பது அபத்தமானது!
ஆகவே, 'மனிதன், தான் பிறந்த கணத்திலிருந்தே இறக்கத் தொடங்கி விடு
கிறான்!' என்பது தவறான புரிதலாகும்! உண்மையில், நதியானது தோன்றும்
போது சிறு நீர்க்கசிவாகத் தொடங்கி, போகப்போக நீரோடையாக அகன்று
மேன்மேலும் தண்ணீர் சேரச்சேர வெள்ளப்பெருக்கெடுத்துப் பாய்ந்து, முடிவில்
மாபெரும் சமுத்திரத்தைச் சென்றடைவதைப் போலவே, உணர்வாகிய மனித
னும் தன் உணர்வில் பெருகப்பெருக, அறிவிலும், புரிதலிலும் வளர்வதுடன்,
அவனது சுயமும், வாழ்க்கையும் வளர்கிறது, ஆழப்படுகிறது, முழுமைப்படு
கிறது! உண்மையில், உணர்வும், வாழ்க்கையும் வேறு வேறு அல்ல! நம்
இருப்பை, "நாம் இருக்கிறோம்!" என்பதை உணரும் சுய-உணர்வு மட்டும்
இல்லையெனில் நாம் இவ்வாறு வாழ்க்கைபற்றிய தத்துவம் எதையும் பேசிக்
கொண்டிருக்க மாட்டோம். நாம் அணில்களாய் இருந்தால் மரத்திற்கு மரம்,
கிளைக்குக்கிளைத் தாவிக்கொண்டு காய் கனிகளைத் தின்று கொண்டு உயிர்-
பிழைத்திருப்போம்! உயிர்-பிழைத்திருப்பதைப் பற்றி பெரிதாகத் தத்துவம் பேச
என்ன இருக்கிறது? அல்லது, உயிர்-போவதைப்பற்றிப் பேசவும் தான் என்ன
இருக்கிறது?
ஆக, பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் அடைபட்ட இருப்பு
அல்ல வாழ்க்கை என்பது! மாறாக, இறப்பதற்குள் இருப்பை எவ்வாறு உணர்வு
கொண்டு முழுமைப்படுத்துகிறோம் என்பதே வாழ்க்கையாகும்! இருப்புக்கும்,
இருப்பை உணர்வு கொள்ளும் உணர்வுக்கும் உள்ள தொடர்பு தான் என்ன?
இருப்பு தன்னைத்தானே உணர்வுகொள்ளும் பொருட்டு உருமாற்றம் பெற்ற
நிலையே உணர்வு என்பதாகும்! பிரபஞ்சஇயற்கை எனும் அடிப்படை(தொடக்க
நிலை) இருப்பானது பருப்பொருளால், அதாவது உயிரும் உணர்வுமற்ற
பௌதீகச்சடப்பொருளால் ஆனது தான் என்றாலும், ஒருகட்டத்தில் அது உயிர்
பெற்றெழுவதும், அதற்கடுத்த கட்டத்தில் உணர்வு பெற்றெழுவதும் தவிர்க்க
வியலாத பரிணாம நியதியாகும்! இறுதியில் அது என்னவாக எழுகிறது என்ப
தில்தான் இறுதி மெய்ம்மை அடங்கியுள்ளது! ஏனெனில், பிரபஞ்ச இருப்பு
என்பது தன்னைத்தானே கடந்து வளர்ந்து ஒப்பற்றதொரு இலக்கு நோக்கிச்
செல்லும் ஒரு பரிணாம நிகழ்வுமுறையாகும்!
இருப்பு என்பது ஒட்டு மொத்த உலகையே (பிரபஞ்சத்தையே) குறிக்கிறது.ஆம்,
உலகம் தன்னைத்தானே அறியும் விழைவின் பொருட்டே உயிர்-ஜீவியாகவும்,
உணர்வுள்ள மனித ஜீவியாகவும் அவதாரம் எடுத்தது! உலகம் மனிதஜீவியி
னுள் உணர்வாகி தற்போது தன்னையே ஆராய்ந்து கொண்டிருப்பதன் வழியாக
தனது அசலான விழைவின் ஒருபாதியை மட்டுமே நிறைவேற்றியுள்ளது; இன்
னொரு பாதி நிறைவேற வேண்டுமானால், உலகை ஆராய்வதிலேயே மூழ்கித்
தனை இழந்துவிட்ட மனித-உணர்வானது இனி தன்னையே உணர்வுகொண்டு
தனது உண்மையை அறிந்து முழுமையடைய வேண்டும்!
தன்னைத் தானே உணர்வுகொள்ளாத இருப்பு, இருந்தாலும் ஒன்று தான்,
இல்லாவிட்டாலும் ஒன்று தான்! ஒரு கூழாங்கல் இருக்கிறது; அதுவும்
ஒருவகை இருப்பு தான்; அதை நாம் "சட-இருப்பு" என வகைப்படுத்தலாம்.
அது தன்னையும் அறியாது, தனக்குப் புறத்தேயுள்ள வற்றையும் அறியாது,
உணராது! ஒரு தவளை இருக்கிறது; அதுவும் ஒருவகை இருப்பு தான்; அதை
நாம் "உயிர்-இருப்பு" என வகைப்படுத்தலாம். அது ஓரளவிற்கு தனக்குப்புறத்
தேயுள்ளவற்றை அறியக்கூடும்; ஆனால், அதனால், தன் இருப்பை, "தாம்
இருக்கிறோம்!" என்பதை உணரமுடியாது! அடுத்து, மனிதஜீவிகள் இருக்கிறார்
கள்! அவர்களதும் ஒரு வகை இருப்பாகும்; அதை நாம் 'உணர்வு - இருப்பு'
எனலாம்! மனிதஜீவிகள் புறவுலகான பிரபஞ்சத்தை எட்டிய தொலைவு வரை
ஆராய்ந்து அறிபவர்களாகவும், அதே வேளையில், தமது இருப்பையும் அறிப
வர்களாக உள்ளனர்!
ஆனால், மனிதர்கள் பொதுவாக "தாம் இருக்கிறோம்!" என்பதை மட்டுமே
அறிகின்றனர்! அதற்குமேல், தாம் ஏன்,எதற்காக இருக்கிறோம்; வாழ்க்கையின்
குறிக்கோள், அர்த்தம், இலக்கு என்ன என்பது குறித்து பரவலாக எல்லோரும்
அக்கறைப்படுவதில்லை! அறிவதில்லை! இன்னும் பெரும்பாலோர் நேரடியாக
தமது இருப்பை உணர்வதில்லை; மாறாக, "எனது அண்டை வீட்டுக்காரன்
இருக்கிறான், ஆகவே நான் இருக்கிறேன்!" என்கிற அளவிலேயே தங்களை
உணரும் அவல நிலையில் உணர்வில் மலராதவர்களாக உள்ளனர்!
பொதுவாக, மனிதர்கள் உயிர்-பிழைத்திருப்பதையே 'வாழ்க்கை' என கருதிக்
கொண்டிருக்கிறார்கள்! ஆகவே, உயிர்-பிழைத்திருப்பதிலேயே முழுமையாகத்
தம்மை முதலீடு செய்திடுகிறார்கள்! உயிர்-பிழைத்தல் என்பது உடலை மைய
மாகக் கொண்டதொரு மட்டுப்பாடான வாழ்க்கையாகும்! முக்கியமாக, உணர்
வாக எழுந்த (அதாவது,உணர்வுடைய) மனிதஜீவியைப் பொறுத்தவரை உடல்-
மைய-வாழ்க்கை என்பது உணர்வு-மைய-வாழ்க்கையை மேற்கொள்வதற்குச்
சேவை புரியும் ஒரு கருவியும், ஊடகமும் மாத்திரமேயாகும்!
'உயிர்-பிழைத்தல்' எனும் உடல்-மைய-வாழ்க்கை என்பது உடலுக்கு உணவு
அளிப்பது, உடலை ஆரோக்கியமாகப் பேணிக்காப்பது என்பதற்குமேல் விசேட
மாக வேறு எதுவுமல்ல! ஆனால், உணர்வுள்ள மனிதஜீவிகளுக்கு உணவு,
உடை, உறையுள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்துகொள்வதுடன் வாழ்க்கை
அர்த்தம் பெறுவதில்லை! புழு, பூச்சிகள், பிற விலங்குஜீவிகளுக்கு வேண்டு
மானால், சிறிதுகாலம் வெறுமனே உயிர்-வாழ்ந்திருந்து பிறகு மரித்துப்போகும்
இலக்கற்ற ஜீவிதம் அர்த்தமுள்ளதாகப்படலாம்! மனிதஜீவிகளைப் பொறுத்த
வரை அவர்கள் ஒன்றில் இரண்டு ஜீவிகளாக, அதாவது, உயிர்-ஜீவியாகவும்,
உணர்வு ஜீவியாகவும் விளங்குவதால் அவர்கள் உயிர்-வாழ்வதுடன், உணர்வு
வாழ்க்கையையே பிரதானமாக வாழ்ந்தாக வேண்டும்!
மனிதஜீவிகளைப் பொறுத்தவரை வாழ்க்கை, வாழ்தல் என்பது உணர்தல்,
அறிதல், புரிதல் என்பதையே மையமாகக் கொண்டதாகும்! இன்று இரவு
உணவாக எதைச் சாப்பிடலாம் என்பது பற்றி முன் கூட்டியே யோசிப்பதில்
தவறேதுமில்லை! ஆனால், வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொண்
டோமா, வாழ்வின் குறிக்கோளைக் கண்டறிந்தோமா, வாழ்வின் அசலான
இலக்கை முன்வைத்துத்தான் வாழ்கிறோமா என்பதையெல்லாம் கருதாமல்
அடுத்தடுத்த வேளைக்கான உணவு பற்றி மட்டும் முன்-யோசித்து திட்டமிட்டு
நிறைவேற்றுவதில் யாதொரு அர்த்தமுமில்லை! ஏனெனில், உணவு என்பது
உயிர்-வாழ்தலுக்குரிய அடிப்படைத் தேவைகளில் மிகவும் அடிப்படையானது
என்பதில் சந்தேகம் இல்லை! உணவு என்பது உடலின் இயக்கத்திற்கு அத்தி
யாவசியமான எரிபொருள் போன்றது; ஆனால், உணவு எனும் எரிபொருள்
அளித்து, எந்த இலக்கு நோக்கி உடலின் இயக்கம் முடுக்கிவிடப்படுகிறது?
ஆம்,மிகவும் வினோதமாக,மனிதஜீவிகளின் ஒட்டுமொத்த இயக்கம், உழைப்பு,
ஆற்றல் யாவும் உணவுப்பொருட்களை (எரிபொருள்) உற்பத்திசெய்வதிலும்,
அவற்றை உட்கொள்ளுதலிலும்தான் முடக்கப்படுகின்றன! அதாவது,வாழ்க்கை
என்பதே எரிபொருள் (உணவு) உற்பத்தி,பராமரிப்பு,மேலாண்மை என்பதுதானா?
இங்கு நாம் உணவு பற்றிய விஷயத்தை சர்ச்சைக்குள்ளாக்கவில்லை; மாறாக,
மனித வாழ்க்கையானது எவ்வளவு குறுகிய விவகாரமாக ஆக்கப்பட்டு கொச்
சைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையே குறிப்பிடுகிறோம்!
முடிவாகச் சொல்ல வேண்டுமானால், நாம் வாழ்வது சாவதற்காக அல்ல!
மாறாக, வாழ்விலிருந்து உயர்ந்து மேன்மேலும் உயர்-வாழ்விற்கு, பெருவாழ்
விற்குச் செல்வதற்குத்தான்! வாழ்க்கையை நாம் முறையாக முழுமையாகப்
புரிந்து கொள்ளும் பட்சத்தில், வாழ்க்கை ஒருபோதும் மரணத்தில் முடிவதற்
காகத் தோன்றியதல்ல என்பது நிதரிசனமாகும்!
இருப்பானது உணர்வு கொள்ளப்படும்போது மட்டுமே வாழ்க்கையாகிறது! ஒரு
கூழாங்கல் இருக்கிறது; ஆனால், அது வாழ்வதில்லை! ஒரு தவளை வெறு
மனே உயிர்-பிழைத்திருக்கிறது; அது தனது இருப்பை உணர்வதில்லை, எதை
யும் அறிவதில்லை! ஆகவே, தவளையும் உண்மையில் வாழ்வதில்லை! எண்
ணற்ற மனிதர்களும் தவளைகளைப் போலவே உயிர்-பிழைத்திருக்கிறார்கள்;
அதாவது, முடிவில் மரணத்திற்கு இரையாவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்
கள்! பெரும்பாலான மனிதர்கள் உண்மையான வாழ்க்கைக்குள் இன்னும்
பிரவேசிக்கவேயில்லை! உணர்வுக்கு வராமல் வாழ்க்கைக்குள் பிரவேசிப்பது
எவ்வாறு இயலும்? உணர்வுக்கு வந்தவர் தன்னைக் கண்டடைந்தவராவார்!
உணர்வைச் சுவைத்தவர் வாழ்க்கையைச் சுவைத்தவராவார்! வாழ்க்கையைச்
சுவைத்தவர் ஒருபோதும் மரிப்பதில்லை! வாழ்வின் முழுமையை, அதாவது
முழு-உணர்வை ஒரு கணம் தரிசித்தவர், அல்லது தொட்டவர் நித்தியத்தை
தரிசித்தவராவார்! அவருக்கு காலம், தொடர்ச்சி, உலகம், வாழ்வு, மரணம்
எதுவுமே ஒரு பொருட்டு அல்ல; யாவும் துச்சமே!
"மனிதன் இறந்த பிறகு எங்கே போகிறான்?" என்ற கேள்வி பாமரத்தனமானது!
ஏனெனில், அவன் எங்கேயும் போவதில்லை! மனிதவாழ்வின் ஒரே சவால்,
அவன் வந்து சேருவது மட்டுமே! மனிதர்கள் அநேகர் இன்னும் இங்கே,
வாழ்க்கையை, தங்களை முழுமையாக வந்தடையவேயில்ல! ஆக, இன்னும்
வந்தடையாத போது எங்கே போவது? . . .
நித்திய உலகம், சொர்க்கம், மோட்சம் என்பவை எங்குமில்லை; அவை இங்கு
இப்போதில் அடங்கியுள்ளன! அவற்றைத்தேடி எவரும் எங்கேயும் செல்ல
வேண்டாம்! உணர்வின் உச்சத்தில், முழுமையில் மட்டுமே அவை கண்டடை
யப்படவேண்டும்! அதுவும் ஒருவன் உயிரோடிருக்கும்போதே உடலின் மரணத்
திற்கும் முன்னேயே அவற்றைக் கண்டடைந்தாகவேண்டும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 07-04-2017
----------------------------------------------------------------------------